இம்மானுவல் தன் ஆட்களிடமிருந்து விஸ்வத்தைக் கண்டு பிடித்த செய்தி சொல்லும் போன்கால் வரும் என்று காத்திருந்து சலித்துப் போனான். அவன் எதிர்பார்த்த போன்கால் வரவேயில்லை. அலெக்சாண்டிரியாவின் குறி பார்த்துச் சொல்லும் கிழவி அவர்களுக்குத் தகவல் தந்து அரை மணி நேரத்திற்குள் விஸ்வமும், அவன் கூட்டாளி அல்லது கூட்டாளிகளும் அந்த வீட்டை விட்டுப் போயிருக்கிறார்கள் என்பதைத் தடயங்கள் தெரிவித்தன. அந்த வீட்டின் அருகில் வேறு வீடுகளோ, ஆட்களின் போக்குவரத்தோ இல்லாததால் அவர்கள் போன திசையைக் கூட யூகிக்க முடியவில்லை. அங்கே சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் டேனியலின் புகைப்படத்தை அனுப்பி இருந்தான். கூடவே மீசை, தாடி, கண்ணாடி, தலைமுடி ஆகியவற்றை கூட்டி, குறைத்து, மாற்றி பலவிதமான படங்களையும் அனுப்பி இருந்தான். எப்படி வேடம் போட்டாலும் கண்டு பிடித்து விடும்படியான பல விதமான புகைப்படங்கள் ரயில்நிலையங்கள், விமானநிலையங்கள் ஆகியவற்றிற்கும் கூட அனுப்பப்பட்டிருந்தன. எங்கிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. அதனால் விமானம், ரயிலில் அவர்கள் போகவில்லை என்பது மிக உறுதி. அதே போல் ஓட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றிற்கும் அந்தப் புகைப்படங்கள் அனுப்பப் பட்டிருந்தன. அங்கிருந்தும் தகவல் இல்லாததால் அங்கெங்கும் கூடப் போகாமல் விஸ்வம் கவனமாக இருந்திருக்கிறான் என்பதும் தெரிந்தது. பின் எங்கே போனார்கள், எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
மறுபடி அலெக்சாண்டிரியா கிழவியைத் தொடர்பு கொண்ட போது அந்தக் கையெழுத்திட்ட காகிதம் மூலமாக இனித் தெரிந்து கொள்ள முடியாது என்றும் விஸ்வம் சமீபத்தில் அணிந்திருந்த உடைகள், உபயோகப்படுத்திய கைக்குட்டைகள் இருந்தால் அவற்றைத் துவைப்பதற்கு முன் கொண்டு வந்து தந்தால் கண்டுபிடித்துச் சொல்ல முடியும் என்று அவள் சொன்னாள். கடைசியாக விஸ்வம் அணிந்திருந்த ஆடைகள், கைக்குட்டை எல்லாம் கூட அவன் இறந்த போதே லேசாகக் கருகி விட்டிருந்ததால் அவர்கள் அவற்றை அன்றே அப்புறப்படுத்தி இருந்தார்கள். விஸ்வம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அடி நீளமுள்ள காளி வெண்கலச்சிலை ஒன்றை ஃப்ராங்பர்ட்டில் உள்ள இல்லுமினாட்டி செயற்குழு உறுப்பினருக்குப் பரிசளித்திருந்தான். அதை வைத்து ஏதாவது சொல்ல முடியுமா என்று கூடக் கேட்ட போது அவள் மூன்று நாட்களுக்கு முன்பு வரையாவது அதை விஸ்வம் அவன் கையில் வைத்திருந்தால் தான் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டாள். அதனால் விஸ்வத்தை அந்த வகையில் கண்டுபிடிக்கும் முயற்சியை இம்மானுவல் கைவிட வேண்டி வந்தது.
இனி என்ன வழி என்று இம்மானுவல் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
அந்த சர்ச்சில் தூசியும், குப்பைகளும் மண்டியிருந்தன. உள்ளே நுழைந்த பத்து நிமிடங்களில் ஏழெட்டு முறை விஸ்வம் தும்மி விட்டிருந்தான். அந்தத் தும்மல் ஒலி கூட சர்ச்சின் உள்ளே அமானுஷ்யமாக எதிரொலித்தன. ஜிப்ஸி டார்ச் விளக்கொளியில் அந்தச் சர்ச்சின் ஒரு மூலையை வேகமாகச் சுத்தம் செய்தான். பெரிய இரண்டு தரை விரிப்புகளை விரித்து இருவரும் தூங்கினார்கள். களைப்பின் காரணமாக விஸ்வம் படுத்தவுடனே உறங்கிப் போனான். அவன் மறுநாள் காலை எழுந்த போது பக்கத்துத் தரைவிரிப்பில் ஜிப்ஸியைக் காணவில்லை. தரைவிரிப்பு மடித்து
ஒழுங்காக அங்கேயே வைக்கப்பட்டிருந்தது. அவன் எழுந்து காலைக்கடன் கழிக்கப் போயிருப்பான் என்று எண்ணியபடி விஸ்வம் எழுந்து உட்கார்ந்தான். காலை நேரமானபடியால் சர்ச்சுக்குள் உடைந்த ஜன்னல் வழியே சூரிய ஒளி உள்ளே புகுந்து இப்போது எல்லாம் தெளிவாகத் தெரிந்தன.
விஸ்வம் மெல்ல எழுந்து சர்ச்சை ஆராய்ந்தான். அவன் பார்வையில் முதலில் பட்டது சர்ச்சின் உள்ளே மேட்டுப்பகுதியில் இருந்த ஏசு கிறிஸ்துவின் பிரதான உடைந்த சிலை. அந்தச் சிலையின் கை உடைந்திருந்தது. சிலுவையில் விரிசல் விட்டிருந்தது. அந்தப் பிரதான சிலை உடைந்த பிறகு அங்கு வழிபாடுகள் நின்றிருக்கலாம் என்று நினைத்த விஸ்வம் நின்ற இடத்திலிருந்தே சுற்றிலும் பார்த்தான்.
சுவரெல்லாம் பைபிள் நிகழ்வுகள் ஓவியங்களாக நிறைந்திருந்தன.
உடைந்த பிரதான சிலையின் பின்புறச் சுவரில் இருந்த ஓவியம் ‘லாஸ்ட் சப்பர்” ஓவியமாக
இருந்தது. மிகவும் அழகாக வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக
இருப்பதாக அவன் உள்ளுணர்வு சொல்ல அதைக் கூர்ந்து கவனித்தான். ஏசு கிறிஸ்துவும், சீடர்களும்
நேர்த்தியாக வரையப்பட்டிருந்தார்கள். அந்த உணவு மேஜையும் அதன் மீதிருந்த பாத்திரங்களும்
கூட அப்படித்தான் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. கீழே வரைந்தவரின் பெயர் ஜெர்மானிய
எழுத்தில் இருந்தது. லாஸ்ட் சப்பர் ஓவியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றாலும் எல்லாம்
ஒரே மாதிரி வரையப்பட்டிருப்பதில்லை. லியார்னாடோ டாவின்ஸி ஓவியமும், மற்ற ஓவியங்களும்
சிறிய விதங்களில் நிறையவே வித்தியாசப்பட்டு இருப்பதை விஸ்வம் கவனித்திருக்கிறான். இந்த
ஓவியத்தில் அவன் உள்ளுணர்வைத் தொட்ட அம்சம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தான். மூன்று
நிமிடங்களில் அவன் அதைக் கண்டுபிடித்தான்.
ஏசு கிறிஸ்துவின் வயிற்றுப்பகுதியும் மேஜைப் பகுதியும் இணையும் இடத்தில் மெலிதாக
இல்லுமினாட்டி சின்னமான பிரமிடு நெற்றிக்கண் தெரிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏசு
கிறிஸ்துவின் சால்வையின் வேலைப்பாடு போலவும், மேஜையின் வேலைப்பாடு போலவும் தோன்றும்படி
வரையப்பட்டிருந்தாலும் கூர்ந்து பார்த்துக் கண்டுபிடித்த பின் தெளிவாகவே அந்த இல்லுமினாட்டி
சின்னம் தெரிந்தது. இது வரை அவன் பார்த்திருந்த லாஸ்ட் சப்பர் ஓவியம் எதிலும் இந்தச்
சின்னம் இல்லை. அவன் இல்லுமினாட்டியின் ஆபத்திலிருந்து தப்பிக்க அடைக்கலம் வந்து சேர்ந்திருக்கிற
அந்த சர்ச்சில் இருக்கும் ஓவியத்தில் அந்தச் சின்னம் இருப்பது அவனுக்குப் பாதுகாப்பா,
அபாய எச்சரிக்கையா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சின்னத்தைப் பார்த்தபடி அவன்
யோசனையோடு நின்றான்...
கூர்ந்து கவனிப்பது விஸ்வமாக இருக்குமோ என்று தோன்றி இதயத்தின்
படபடப்பும் கூடியவுடன் கர்னீலியஸ் மெல்ல ஓரமாகக் காரை நிறுத்தினார். இப்போது உயிரோடு இருக்கும் ஆட்களில் அவரைத் தவிர யாருக்கும்
அந்த இரகசிய ஆவணம் இருப்பது தெரியாது. அதில் அவருக்குச்
சிறிதும் சந்தேகம் இல்லை. அந்த ஆவணம் இருப்பதே தெரியாத போது அந்த ஆவணத்தை வங்கி லாக்கரில்
அவர் வைத்திருப்பதையோ, தற்போது அவர் அதை எடுக்கப் போவதையோ கூட யாரும் அறிந்திருக்க
வழியில்லை. பின் யார் எதற்காக அவரைக் கண்காணிக்கிறார்கள்?
அவர் இல்லுமினாட்டி உறுப்பினர் என்றாலும்
அதன் முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை. சொல்லப்
போனால் இல்லுமினாட்டியில் அவருக்கு
முக்கியத்துவம் இருக்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி வருடத்திற்கு ஒரு முறை இல்லுமினாட்டி கோயிலில்
அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி தான். கலப்பு
மொழியில் எழுதப்பட்டிருக்கும் அவர்களுடைய பழங்காலச் சுவடியிலிருக்கும் உறுதிமொழியை
உறுப்பினர்களுக்குப் படித்துக் காட்டும் வேலை ஒன்று தான் அவர் அத்தனை பேரும் பார்க்கச்
செய்கிற வேலை. அந்த மொழியில் வல்லுனர் அவர் என்பதும், மூத்த உறுப்பினர்
என்பதும் தான் அந்த வேலையை அவருக்கு ஒதுக்கி இருக்கக் காரணமேயொழிய வேறெந்த முக்கியத்துவமும்
இல்லை. பின் ஏன் யார் அவரைக் கண்காணிக்க வேண்டும். யாரும்
பின் தொடரவும் இல்லை என்பதும் தெரிந்து விட்டது. யாரும்
ஒரே இடத்திலிருந்து கண்காணிக்க வழியில்லாமல் அவர் நெடுந்தூரம் பயணித்தும் விட்டார். ஆனாலும்
அந்த அசாதாரண உணர்வு இருக்கிறது என்றால் அந்த நபர் விஸ்வமாகவே இருக்க வேண்டும் என்று
மறுபடியும் தோன்றியது. அவன் அசாதாரணமானவன், அவனிடம்
இருக்கும் எத்தனையோ சக்திகளின் காரணமாக அவர் மனதில் ரகசியமாக வைத்திருக்கும் அந்த இரகசிய
ஆவணம் பற்றியும் அவன் தெரிந்து கொண்டிருக்கலாம்...
.
கண்களை மூடிக் கொண்டு கர்னீலியஸ் யோசித்தார். அவர் நினைக்க நினைக்க அவர் எண்ணங்களை
யாரோ படிப்பது போல் தோன்றியது. அதற்கும் மேலாக அந்த இரகசிய ஆவணத்தில் எழுதியிருக்கும்
முழு விவரங்களை அறிய அந்த ‘யாரோ’ ஆசைப்படுவது போலவும் உள்ளுணர்வு சத்தமில்லாமல் அவரை
எச்சரித்தது.
கர்னீலியஸ் வங்கி லாக்கரில் இருந்து அந்த இரகசிய ஆவணத்தை இப்போது எடுக்கும் எண்ணத்தை
உடனடியாகக் கைவிட்டார். திரும்பவும் வீட்டுக்கே போய் விடலாம் என்று அவருக்குத் தோன்றியது.
காரைத் திருப்பிக் கொண்டு வந்த வழியே செல்ல ஆரம்பித்தார்.
(தொடரும்)
என்.கணேசன்