சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 28, 2022

யாரோ ஒருவன்? 74


க்யான் சந்த் காணாமல் போனதைக் கேள்விப்பட்டவுடன் நரேந்திரன் அதிர்ந்து போனான். “எப்போ? எப்படி?”

நேத்து ராத்திரி அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ற வரைக்கும் என் கண்காணிப்புலயே தான் சார் அவன் இருந்தான்அவன் வீட்டுக்குப் போனது பத்து மணிக்கு. பதினோரு மணி வரைக்கும் அவன் வீட்டுகிட்ட தான் நான் இருந்தேன். காலையில அஞ்சரைக்கு மறுபடி அவன் வீட்டுகிட்ட போயிட்டேன். சுமார் ஏழு மணிக்கு அவன் மனைவி வெளியில வந்து ரெண்டு பக்கமும் பாத்துகிட்டிருந்தா. பக்கத்து வீட்டுக்காரர் கேட்டப்ப க்யான்சந்தைக் காணோம். எங்கே போனார்னு தெரியலன்னு சொன்னது கேட்டுச்சு. அப்பவும் அவள் அவன் எங்கேயோ போயிருக்கிறான், வருவான்னு நினைச்ச மாதிரி தான் இருந்துச்சு. பத்து மணிக்கு மேல தான் பயப்பட ஆரம்பிச்சா. அவளும் அவ பையனும் போலீஸ்ல பதினோரு மணிக்குப் புகார் குடுத்திருக்காங்க. இப்ப வீட்ல அவங்க உறவுகளும், நண்பர்களும் வந்து குவிஞ்சிருக்காங்க. ஆளுக்கொரு பக்கம் தேடிகிட்டுமிருக்காங்க....”

நரேந்திரன் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த வழக்கில் வேறு இரண்டு பேர் ஏற்கெனவே காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களைக் கடத்திக் கொண்டு போய் வைத்திருப்பது அவன் தான். அவனாகவே அதற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு துணிச்சலுடன் செய்து முடித்திருந்தான். நாளை அது ஒரு பிரச்சினையானாலும் ரா உளவுத்துறை தங்களுக்குத் தெரிந்து நடந்ததல்ல என்று கைகழுவி விடும் என்று ஏற்கெனவே ரா தலைவர் அவனிடம் எச்சரித்திருந்தார். ஒரு அரசாங்க நிறுவனம் கண்டிப்பாக இதற்குப் பொறுப்பேற்க முடியாது என்பதை அவனும் அறிவான். ஆனால் நேர்வழியில் சில விஷயங்களைச் சாதிக்க முடியாது என்று தான் அவன் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தான்.

அவன் எதிரிகள் அவன் வழியிலேயே அடுத்த முக்கியமான சாட்சியைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது. ஏனென்றால் க்யான் சந்த் தானாக ஓடியொளியும் ரகம் அல்ல. அப்படி ஓடி ஒளிவது அவன் நோக்கமாய் இருந்திருந்தால் அவன் குடும்பத்திற்காவது ரகசியமாய் தெரிவித்து விட்டுத் தான் அவன் தலைமறைவாயிருப்பான். குடும்பம் இந்த அளவு பதறியிருக்காது...

நரேந்திரனுக்கு இதைச் செய்திருப்பது எந்த எதிரி என்று தான் தெளிவாய்த் தெரியவில்லை. ஜனார்தன் த்ரிவேதியா இல்லை அஜீம் அகமதா?   

கொடிவேரி நீர்வீழ்ச்சியில் தீபக்கும், தீபக்கின் நான்கு நண்பர்களும் ஆசைதீரக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அன்று விடுமுறை தினம் அல்ல என்பதால் பெரிய கூட்டம் இருக்கவில்லை. அங்கே அவர்கள் ஐந்து பேர்களைத் தவிர வேறு ஏழெட்டு பேர் தான் இருந்தார்கள். குளித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று காலம் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது போல் தீபக் உணர்ந்தான். அப்போது அவனும் அவன் நண்பர்களும் அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்ற ஏழெட்டு பேரும் அவன் காட்சியிலும் கருத்திலுமிருந்து மறைந்து போனார்கள். அதற்குப் பதிலாக இன்னொரு காட்சி அதே இடத்தில் தெரிந்தது. நீர்வீழ்ச்சியில் வேறு மூன்று இளைஞர்கள் குளித்துக் கொண்டிருப்பது போல் மங்கலாகத் தெரிந்தது. தீபக் திகைத்தான். அந்த மூன்று இளைஞர்களையும் அவன் கூர்ந்து பார்த்தாலும் நீர்வீழ்ச்சியினூடே அவர்கள் மூவர் முகங்களையும் அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. சில வினாடிகள் தெரிந்த அந்தக் காட்சி பின் மறைந்தது. குளித்துக் கொண்டிருக்கையிலேயே அவனுக்கு குப்பென்று வியர்த்தது போலிருந்தது. ஏன் இந்தக் காட்சி வருகிறது? யாரந்த மூவர்?

நல்ல வேளையாக நண்பர்களும் குளியலை அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவன் வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தாலும் அதை அவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லைஅந்தக் காட்சிக்குப் பிறகு தீபக் வேறெதாவது இப்படி வித்தியாசமாக நடக்கிறதா என்று மிகவும் கவனமாக இருந்தான். சுற்றிலும் கேட்கும் உற்சாகக் கூச்சல்களும், நீர்வீழ்ச்சியின் சத்தமும் எங்கோ கேட்பது போல் இருந்தது. அவன் கவனமெல்லாம் சற்று முன் பார்த்த காட்சியிலேயே இருந்தது. அவர்களைப் போலத் தான் அந்த மூன்று இளைஞர்களும் சந்தோஷமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியில் அந்த மூவரைத் தவிர வேறு யாருமே இருக்கவில்லை.

அதன் பின் குளித்த குளியலில் தீபக்கின் கவனம் பாதி தான் இருந்தது. மாலை நான்கரை மணிக்கு அங்கிருந்து கிளம்பினார்கள். நண்பர்களுடன் பேசிக் கொண்டே காரையோட்டிக் கொண்டு வந்ததில் தீபக் மெள்ள அந்தக் காட்சியை மறந்து போனான். காரில் சத்தமாக ஒலித்த பாடல்களும் நண்பர்கள் கூடப் பாடியதும் இயல்பான உற்சாக மனநிலையை ஏற்படுத்தி விட்டிருந்தது. கார் சத்தியமங்கலத்தை நெருங்கியது.

திடீரென்று அருகில் அமர்ந்திருந்த நண்பன் கேட்டான். “ஏண்டா, மெயின் ரோட்டுல இருந்து காரைத் திருப்பிட்டே?”

அப்போது தான் தீபக் பிரதான சாலையிலிருந்து காரை ஒரு குறுக்குத் தெருவிற்குத் திருப்பியிருப்பதை உணர்ந்து அவனே திகைத்துப் போனான். ‘என்ன ஆயிற்று எனக்கு?’

அசட்டுப் புன்னகை ஒன்றைப் பூத்தபடியே தீபக் சொன்னான். “தெரியலடா. பாடிகிட்டே வந்ததில எதோ ஒரு யோசனையில திருப்பிட்டேன்னு நினைக்கிறேன்.”

அருகிலிருந்த நண்பன் சொன்னான். “சரி விடு. அடுத்த கட்ல திரும்பி மெய்ன் ரோடுக்கு ஜாயின் பண்ணிட்டா போச்சு

தீபக் தலையசைத்தான். ஏன் இப்படி ஆகியது என்று யோசித்தபடியே தீபக் காரை ஓட்டினான். அப்போது தான் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது தெரிந்த காட்சியும் சேர்ந்து குழப்பியது.

திடீர் என்று ஒரு வீட்டின் முன் கார் நின்று விட்டது. “என்னடா ஆச்சு?” பின் சீட்டிலிருந்த நண்பன் ஒருவன் கேட்டான்

தீபக் குழப்பத்துடன் சொன்னான். “என்னன்னே தெரியலடாஇன்று ஏனோ நடப்பது எதுவும் சரியில்லை என்று எண்ணியபடியே அவன் கார் நின்ற இடத்திலிருந்த அந்த வீட்டைப் பார்த்தான். அது ஒரு சிறிய பழைய வீடு. வெளி கேட்டுக்கும் வீட்டு வாசலுக்கும் இடையில்  நிறைய காலி இடம் இருந்தது. காலி இடத்தில் ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது.

தீபக்கும் அவன் நண்பர்களும் பல விதங்களில் காரைச் சோதித்துப் பார்த்து விட்டார்கள். காரில் எந்த விதத்திலும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் காரைக் கிளப்ப முடியவில்லை.  தீபக்கின் ஒரு நண்பன் சொன்னான். “பக்கத்துல கார் மெக்கானிக் யாராவது இருக்கானான்னு விசாரிக்கலாண்டா

அப்போது தான் ஒரு முதிய தம்பதி அந்த வீட்டுக் கேட்டை நெருங்கினார்கள். தீபக் அந்த முதியவரிடம் கேட்டான். “தாத்தா பக்கத்துல கார் மெக்கானிக் யாராவது இருக்காங்களா?”

இந்தத் தெருக்கோடில ஒரு கார் மெக்கானிக் ஷாப் இருக்குப்பாஎன்று பரந்தாமன் கை காட்ட தீபக்கின் ஒரு நண்பன் அந்தத் திசையில் ஓடினான்.

என்ன பிரச்சினை?” பரந்தாமன் தீபக்கிடம் கேட்டார்.

தெரியல தாத்தா. கார்ல வந்துட்டிருந்தோம். திடீர்னு கார் இங்கே நின்னுடுச்சு...”

பரந்தாமனும், அலமேலுவும் தீபக்கைக் கூர்ந்து பார்த்தார்கள். அவன் பேசும் விதத்தில், முக்கியமாக பேசும் போது கைகளை அசைத்த விதத்தில் அவர்கள் மகன் மாதவனை நினைவுபடுத்தினான். அவர்கள் அங்கேயே நின்றார்கள். தீபக்குக்குத் தாகமாக இருந்தது. கார் ஜன்னல் வழியே உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அது காலியாய் இருந்தது

அதைக் கவனித்த அலமேலு கேட்டாள். “தண்ணி வேணுமாப்பா?”

அன்பான புன்னகையுடன் கேட்ட அந்தப் பாட்டியிடம் தீபக்ஆமாம் பாட்டிஎன்றான்.

வா தர்றேன்என்று சொல்லி அலமேலு உள்ளே போக தீபக் அவள் பின்னாலேயே போனான். அவனுக்கேனோ அந்தப் பாட்டியை மிகவும் பிடித்து விட்டது. பரந்தாமனும் உள்ளே போனார்.

தண்ணீர் தருவதற்குள் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள், அந்தப் பையனின் பெயர் தீபக், எல்லாரும் கோயமுத்தூரில் வசிப்பவர்கள், கொடிவேரி நீர்வீழ்ச்சிக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள, தீபக்கும் அந்த முதிய தம்பதி தனியாக வசிக்கிறார்கள் என்றும் அவர்களது ஒரே மகன் ஒரு விபத்தில் பல வருடங்களுக்கு முன் காலமாகி இருந்தான் என்பதைத் தெரிந்து கொண்டான். தனிமையில் மகன் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த முதியோர் இருவரையும் பார்க்கையில் பாவமாக இருந்தது.

அலமேலு கேட்டாள். “டீ சாப்டறீங்களா?”

தீபக்குக்கு அந்த வேளையில் டீ கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும் முன்பின் தெரியாத அந்த முதியோரைத் தொந்திரவு செய்வது மரியாதையல்ல என்று தோன்றஅதெல்லாம் வேண்டாம் பாட்டி.” என்றான்.

ஏன்?” என்று அலமேலு கேட்க தீபக் சொன்னான். “இப்ப மெக்கானிக் வந்துடுவான் பாட்டி. வண்டி ரெடியாயிடும்.”

அதுக்குள்ளே டீ பண்ணிடுவேன். எல்லாரும் டீ குடிப்பீங்க இல்லியா?”

தீபக் அந்தப் பாட்டியின் அன்பில் நெகிழ்ந்தவனாய் சொன்னான். “குடிப்போம். ஆனா சும்மா உங்களுக்கு எதுக்கு பாட்டி தொந்தரவு.”

தொந்தரவெல்லாம் இல்ல. நீங்கல்லாம் எங்க பேரன்கள் மாதிரிஎன்றபடியே அலமேலு  சமையலறைக்கு விரைந்தாள்.

தீபக் அங்கே சுவரில் பெரிதாக மாட்டி இருந்த அந்த முதியவர்களின் மகன் புகைப்படத்தைப் பார்த்தான். உற்சாகமும், சந்தோஷமும் நிறைந்ததாக அவர்கள் மகன் முகம் இருந்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த ஏதோ ஒன்று மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது. அது என்ன என்று தீபக்கால் யூகிக்க முடியவில்லை.  


(தொடரும்)
என்.கணேசன்


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அச்சகம் சந்திக்கும் எதிர்பாராத சூழல் காரணமாக மேலும் ஒரு வாரம் தாமதமாகும் போல் தெரிகிறது. வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்Thursday, February 24, 2022

இல்லுமினாட்டி 143ல்லுமினாட்டிக்கு விஸ்வம் ஒளிந்திருந்த இடத்தையும் அதன் சரித்திரத்தையும் கண்டுபிடிக்க அதிக காலம் தேவைப்படவில்லை. வாங் வே சொல்லியிருந்த பாழடைந்த சர்ச், இல்லுமினாட்டி உளவுத்துறை ஆட்கள் சாலமனைப் பார்த்திருந்த சர்ச் தான் என்று உடனே தெரிந்து விட்டது.  சாலமன் ம்யூனிக்கில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இல்லுமினாட்டியின் பழங்காலக் கோயில்கள் குறித்த புத்தகங்களில் ஒரு புத்தகத்தில் அவர் ஒரு பக்கத்தில் அவர் சிறிய அட்டை ஒன்றை வைத்துக் குறியிட்டிருந்தார். 1907 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அந்தப் புத்தகத்தில் அந்தப் பக்கத்தில் ஜெர்மானிய எழுத்தாளர் கதே ஒரு கவிதை எழுந்திருந்தார் என்ற செய்தியைப் பார்த்தவுடனே அந்தக் கோயிலின் 1907 வரை சரித்திரமும் தெரிந்து விட்டது. அதற்குப் பின் நடந்த நிகழ்வுகளையும் அறிவதில் அவர்களுக்குச் சிரமம் இருக்கவில்லை.

அடுத்து என்ன செய்வது என்று எர்னெஸ்டோ மற்றவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சாலமன், வாங்  வே என்ற களைகளைக் களைந்த பின் விஸ்வம் என்ற விஷ விருட்சத்தை வேரோடு பிடுங்க வேண்டி இருந்தது. அந்த சர்ச்சுக்கு ஒரு பெரும்படையையே அனுப்ப எர்னெஸ்டோ தயாராக இருந்தார்.  ஆனால் அது வரை விஸ்வம் அங்கிருக்க மாட்டான் என்பதை இம்மானுவல் சுட்டிக் காட்டினான். கண்டுபிடிக்கப்பட்டு விட்டோம் என்று தெரிந்தபின் கண்டிப்பாக அங்கிருக்க மாட்டான் என்று அவன் சொன்னான். மறுபடியும் ஆரம்ப சூழ்நிலையே திரும்பவும் வந்திருந்ததில் சலிப்பை உணர்ந்த எர்னெஸ்டோ க்ரிஷ் என்ன நினைக்கிறான் என்று கேட்க அவன் பக்கம் திரும்பிய போது அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்.

நீ என்ன யோசிக்கிறாய் க்ரிஷ்?”

க்ரிஷ் சொன்னான். “அந்த சர்ச் பற்றி யோசிக்கிறேன். அதில் ஏதோ சில அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அங்கு இல்லுமினாட்டிகளின் வழிபாடு நின்ற பின் வேறு யார் வழிபாடும் தொடர்ந்து நடக்க அந்தச் சக்திகள் அனுமதிக்கவில்லை என்று வெளிப்படையாகவே தெரிகிறது. சிறிது காலம் ஜெர்மன் எவாஞ்சலிக்ஸ், பின் ரோமன் கத்தோலிக்கர்கள், கடைசியாக  ப்ராட்டெஸ்டண்ட்ஸ் என எல்லோரும் சிறிது காலத்திற்கு மேல் அங்கு தொழ அனுமதிக்கவில்லை. ரகசிய தீட்சை நடந்த இடங்களில் அது போன்ற சக்திகள் வலிமையாக உலாவிக் கொண்டிருக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…”

ரகசிய தீட்சை என்றால் என்ன?” எர்னெஸ்டோ கேட்டார்.

க்ரிஷ் அவருக்குச் சுருக்கமாகச் சொல்வது எப்படி என்று யோசித்துச் சொன்னான். “தகுதியை வளர்த்துக் கொண்ட ஒருவருக்கு மேலான சக்திகளைத் தரும் உபதேச மந்திரங்களுடன் கூடிய சடங்குகளை ரகசிய தீட்சை என்பார்கள். பண்டைய எகிப்தியர்கள் கோயில்களில் இந்த ரகசியத் தீட்சைகளுக்கு ஒரு தனி இடம் சேர்ந்தே இருக்கும்அதை உங்கள் இல்லுமினாட்டி கோயில்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பின்பற்றி இருக்கலாம்…”

இம்மானுவல் சொன்னான். “விஸ்வம் இது போன்ற சக்திகளைத் தேடி அவனாய்ப் போகிறானா, இல்லை அந்தச் சக்திகள் அவனை இழுக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சரியாக இப்போது கடைசியாக அவன் போய்ச் சேர்ந்திருக்கும் இடமும் சக்திகளைச் சார்ந்தது என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.”

எர்னெஸ்டோ புன்னகையுடன் சொன்னார். “அது அவன் விதியாக இருக்கலாம். ஜான் ஸ்மித்திடம் திபெத்திய யோகி சொன்னது போல அது நம் கர்மாவாகவும் இருக்கலாம். வாங் வே சாவதற்கு முன் கண்டிப்பாய் கடைசியில் விஸ்வம் அங்கே நிறைய சக்திகள் பெறுவான் என்றும் முடிவில் அவன் தான் ஜெயிப்பான் என்றும் அந்த ரகசிய ஆவணத்தில் எழுதியிருந்ததை வைத்துச் சொன்னதாகச் சொன்னாய். அவன் எதில் எப்படி வெல்வான் என்று தெரியாது. ஆனால் இல்லுமினாட்டியின் தலைவனாக அவன் இனி எப்போதும் ஆக முடியாதபடி நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்த இலட்சியத்தில் அவன் இனி என்றுமே ஜெயிக்க முடியாது...”

எல்லோரும் அவரைத் திகைப்புடன் பார்த்தார்கள். எர்னெஸ்டோ சொன்னார். “அவனை இல்லுமினாட்டி உறுப்பினர் பதவியிலிருந்தே விலக்கி அந்த செய்தியை நான்  அவனுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். இந்தப் பத்து வருட காலத்தில் நானாக என் கைப்பட டைப் பண்ணி அனுப்பிய ஒரே மெயில் இது தான்...”


ஜிப்ஸி தான் அந்த மின்னஞ்சலை முதலில் படித்தவன். விஸ்வம் பாதாள அறையில் தியானத்தில் இருந்தான். அவனாக எழுந்து வந்தால் ஒழிய அவனை எழுப்ப முடியாது. இந்த முறை அவன் ஒரு முடிவை எட்டுவதில் தீவிரமாக இருக்கிறான். அவனுடைய எதிரிகளும் அதில் தீவிரமாக இருப்பது எர்னெஸ்டோவின் மின்னஞ்சலில் இருந்து தெரிகிறது.

எர்னெஸ்டோ எழுதியிருந்தார். “அன்பு விஸ்வம், தாங்கள் இதற்கு முன் எழுதிய கடிதமும், பின் அனுப்பிய மின்னஞ்சலும் கிடைக்கப்பெற்று தாங்கள் தங்கள் பக்கக் கருத்துக்கள் சொல்வதற்கு வரும் புதன் கிழமை அன்று ஒரு வாய்ப்பையும் தங்களுக்குத் தலைமைக்குழு தந்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தாங்கள் இந்த உயர்ந்த அமைப்பின் தலைவரையே கொலை செய்ய முயன்றதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. கண்டனத்திற்குரிய இந்தச் சதிச் செயலில் ஈடுபட்ட தங்களை இல்லுமினாட்டியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறோம். தங்களிடம் எந்த வகையான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அப்படித் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தால் அந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு
தலைவர்

விஸ்வத்தின் இல்லுமினாட்டி தலைவர் பதவியாசை குழிதோண்டி ஆழமாக என்றென்றைக்குமாய் புதைக்கப்பட்டு விட்டது என்பது ஜிப்ஸிக்குப் புரிந்தது.   இது தெரியாமல் அவன் தீவிரத் தியானத்தில் ஈடுபட்டிருக்கிறான்.

இந்தப் பூமியை விட்டுக் கிளம்பும் நேரத்தில் விஸ்வத்தின் வெற்றியைப் பார்த்து விட்டுப் போக வேண்டும் என்று ஜிப்ஸி ஆசைப்பட்டிருந்தான். இரண்டே நாளில் கிளம்பப் போகிறான் அவன். அவன் விஸ்வத்தின் மூலம் ஆசைப்பட்டது நடக்கவில்லை.   

சென்ற முறையாவது ஆரகிள் சொன்னதில் இரண்டு மூன்று அர்த்தங்கள் எடுக்க முடிந்தது போல் தான் வாசகங்கள் இருந்தன. ஆனால் இந்த முறை மிகத் தெளிவாகத் தான் எழுதியிருந்தது. அதில் சொல்லியிருந்த வர்ணனை விஸ்வத்தைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாதது போல் தான் இப்போதும் தோன்றுகிறது.

மனிதர்களின் எண்ணங்களையும் விதியின் போக்கையும் அவனால் நிறையவே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் முழுவதுமாக அவனால் அறிய முடியவில்லை. சிலவற்றை விதி முன்பாகவே தீர்மானித்து வைத்திருக்கிறது. சிலவற்றைச் சமயம் வரும் போது தான் தீர்மானிக்கிறது. விஸ்வத்தின் விதியின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவன் சரியாகவே கணித்து வைத்திருந்தான். ஆனால் விதியின் முடிவு எதிர்பாராத விதங்களில் கேள்விக்குறியாய் நின்றது.

அவன் ஆரம்பத்தில் விஸ்வத்தின் விதிப் போக்கைப் பார்க்கையில் அதில் க்ரிஷின் குறுக்கீடு தெரிந்திருக்கவில்லை. சொல்லப் போனால் க்ரிஷ் என்ற முக்கியமான மனிதன் இங்கே இருக்கிறான் என்றே கூட அவனுக்குத் தெரியவில்லை. அவன் சிறிதும் எதிர்பாராத விதமாய் அந்த இன்னொரு வேற்றுக்கிரகவாசி திடீரென்று நுழைந்து க்ரிஷை விஸ்வத்தின் பாதைக்கு நகர்த்தி வைத்து விட்டான். அதன் பின் அவர்கள் இருவர் விதியும் அடிக்கடி குறுக்கிட ஆரம்பித்தன.

இல்லுமினாட்டியின் பக்கம் விஸ்வத்தை ஜிப்ஸி நகர்த்திய போது அருமையான சாதகமான சூழல் இருந்தது. ராஜினாமா செய்யப் போகும் தலைவராக எர்னெஸ்டோ இருந்தார். வாங் வே போன்ற சிலர் அடுத்த தலைவர் பதவிக்குத் தயாராக இருந்தார்கள் என்றாலும் அவர்கள் யாருமே விஸ்வத்துக்கு இணையாகாதவர்கள். விஸ்வம் கிட்டத்தட்ட முடிசூடும் போது இல்லுமினாட்டிக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத க்ரிஷ் எப்படியோ அங்கு வந்து சேர்ந்தான். விஸ்வத்தைத் தடுத்ததோடு அல்லாமல் சாகவும் வைத்தான்.  

வேறொரு உடலில் புகுந்து விஸ்வம் மீண்டு வந்து எர்னெஸ்டோவையே தீர்த்துக் கட்டும் அளவு விஸ்வரூபம் எடுத்தான். அவரை விஸ்வத்திடமிருந்து காப்பாற்றும் சக்தி கண்டிப்பாக க்ரிஷிடம் இருக்கவில்லை. ஆனால் அமானுஷ்யனைப் பேசி அழைத்து வந்து க்ரிஷ் அவரைக் காப்பாற்றி விட்டான். க்ரிஷ் போய்ப் பேசியிருக்காவிட்டால் அமானுஷ்யன் கண்டிப்பாக இங்கே வந்திருக்க மாட்டான். அமானுஷ்யன் மட்டும் வராமல் இருந்திருந்தால் எர்னெஸ்டோ இன்னேரம் இறந்திருப்பார். அமானுஷ்யனின் பாதுகாவல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எர்னெஸ்டோ அந்தப் பங்களாவை விட்டு வெளியிலிருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அனாயாசமாக விஸ்வம் தாக்கிக் கொன்றிருப்பான். ஆனால் இப்போதைய சக்திகளை வைத்து அமானுஷ்யனைத் தாண்ட முடியாத நிலைமையில் இருந்ததால் விஸ்வம் அந்த முயற்சிக்கே போகவில்லை.  ஆனாலும் அருமையாகத் திட்டமிட்டு வாஷிங்டனில் அந்த ஒயினில் விஷத்தைச் சேர்த்தான். இல்லுமினாட்டியின் உளவுத்துறையும் கூட அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அமானுஷ்யன் அதைக் கண்டுபிடித்து அவரைப் பிழைக்க வைத்து விட்டான். அதோடு எத்தனையோ சேர்ந்து நடந்து விட்டது. 

ஜிப்ஸி இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆரகிள் சொன்னதாய் கர்னீலியஸ் எழுதி வைத்திருந்த குறிப்பும் பொய்யாகி விட்டது. அதில் சொல்லப்பட்டது போல விஸ்வம் கூடுதல் சக்திகள் பெற்றாலும் அதில் அவன் என்ன பலன் அடையப்போகிறான்? அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? அதிக பட்சமாய் எர்னெஸ்டோவையும் க்ரிஷையும் கொல்ல முடியும். சக்திகளின் அளவுகள் அதிகமாய் இருந்தால் அந்த அமானுஷ்யனையும் கொல்ல முடியும். அதன் பின்?

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இம்மாத இறுதியில் வெளியாகவிருந்த சாணக்கியன், அச்சகம் சந்திக்கும் சில எதிர்பாராத சூழல்களால் மேலும் ஒரு வாரம் தாமதமாகும் போலத் தெரிகிறது. சாணக்கியன் வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்

 
Monday, February 21, 2022

யாரோ ஒருவன்? 73


விசேஷ நாகரத்தினம் உதிர்க்கப்பட்ட அந்தக் கணத்தில் ரிஷிகேசத்தின் அருகிலிருந்த காட்டு காளிக்கோயிலில் காளிங்க சுவாமியும் ஒரு பிரத்தியேக அதிர்வை உணர்ந்தார். அந்த விசேஷ நாகரத்தினத்தோடு மானசீகமாகத் தொடர்பு வைத்திருக்கின்ற அவருக்கு அதை இயல்பாகவே உணர முடிந்தது.  உணர முடிவதற்கு தூரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றாலும் செல்ல முடிவதற்கு கோயமுத்தூர் நிறைய தூரமே. வேண்டுமென்றே நாகராஜ் அத்தனை தூரமாகப் போய் அமர்ந்து கொண்டிருக்கிறானோ? எவ்வளவு தூரத்தில் சென்று அவன் அமர்ந்து கொண்டால் என்ன, விசேஷ நாகரத்தினத்தால் அவன் எத்தனை சக்திகள் பெற்றால் தான் என்ன, அவனிடம் அந்த விசேஷ நாகரத்தினம் அதிக காலம் தங்கி விட முடியாது என்பது தான் விதி என்று காளியே தெரிவித்து விட்டாள். ’இனி அது எத்தனை காலம் அவனிடம் தங்க வேண்டும் என்பதை இந்த காளிங்கன் முடிவு செய்வான்’ என்று எண்ணிப் புன்னகைத்த காளிங்க சுவாமி அதைக் கைப்பற்றும் விதத்தையும், அதற்கேற்ற முகூர்த்தத்தையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.

ரத் அன்று வேலைக்குப் போகவில்லை. ரஞ்சனியை விசாரிக்க நரேந்திரன் வருகிறான் என்பதால் அந்த நேரத்தில் அவன் வீட்டிலிருக்க விரும்பினான்தீபக் கொடிவேரி நீர்வீழ்ச்சிக்கு அன்று காலையிலேயே கிளம்பிப் போயிருந்தான். நரேந்திரன் விசாரிக்க வருவதை தீபக்கிடம் சொல்ல வேண்டாம் என்று சரத் ரஞ்சனியிடம் சொல்லியிருந்ததால் அவள் அவனிடம் அதைச் சொல்லியிருக்கவில்லை என்பது சரத்துக்குத் திருப்தியாக இருந்தது. நரேந்திரன் விசாரிக்க வருவதை சரத் சொன்ன போது ரஞ்சனி ஆச்சரியத்துடன் கேட்டாள். “ஏன் இத்தனை வருஷம் கழிச்சு....?”

அந்த வெடிகுண்டு வெச்ச தீவிரவாதி பத்தி விசாரிக்கறாங்க போலருக்கு. அதனால நம்ம மாதவனுக்கும் அந்தத் தீவிரவாதிக்கும் இடையில ஏதாவது முன்பகை இருக்கலாமான்னு நினைக்கிறாங்க போலருக்கு. நாங்க இல்லைன்னு சொல்லியிருக்கோம். எதுக்கும் உன் கிட்டயும் கேட்கலாம்னு நினைக்கிறாங்க போலருக்கு...”

அவள் சோகத்துடன் தலையசைத்தாள். அவள் சோகம் சரத்தை என்னவோ செய்தது.

ரஞ்சனி சொன்னாள். “அவர் விசாரிக்க வர்றப்ப நீங்க இங்க இருக்கணும்னு இல்லைநான் பாத்துப்பேன்...”

பரவாயில்ல. இருக்கேன். எனக்கும் ஒருநாள் ரெஸ்ட் கிடைச்ச மாதிரியிருக்கும்.”

நரேந்திரன் தன் விசாரணையின் போது உடனிருக்க சரத்தை அனுமதிக்கவில்லை. தனியாகத்தான் ரஞ்சனியை விசாரித்தான். நரேந்திரன் ரஞ்சனியை மாதவனின் ஆத்மார்த்தமான சினேகிதியாக ஆரம்பத்திலேயே உணர்ந்தான். மாதவனைப் பற்றிப் பேசும் போது அடிக்கடி அவள் கண்கள் ஈரமாகின. குரல் மென்மையாகியது. முகத்தில் சோகம் படர்ந்தது. இந்த துக்கத்தை, இந்த அன்பின் மிகுதியை அவன் கல்யாணிடமும், சரத்திடமும் பார்த்திருக்கவில்லை. அதை அவன் பெண்களை விட ஆண்கள் துக்க உணர்வைக் குறைவாக வெளிப்படுத்தும் இயல்பாக எடுத்துக் கொள்ளவில்லைகாலப் போக்கில் குறைந்து விட்ட அன்பின் வெளிப்பாடாக அது இருக்கலாம். கூடவே எதையோ மறைக்கும் குற்றவாளிகளின் பதற்றத்தை அவர்களிடம் அவன் உணர்ந்திருந்தான். ரஞ்சனியிடம் இப்போதும் இறந்து போன நண்பன் மீதிருந்த அன்பு குறைவில்லாமல் வெளிப்பட்டது. மாதவன் இறந்து போன சமயத்தின் நிகழ்வுகளை அவளும் சரத், கல்யாணைப் போலவே சொன்னாள். அவர்கள் மூலமாகத் தான் அவளும் அதைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டான்.

விசாரணையின் இடையே திடீரென்று நரேந்திரன் கேட்டான். “உங்களுக்கு நாகராஜ்னு நண்பர் யாராவது இருந்தாரா?”

அவர்களைப் போல் ரஞ்சனி திடுக்கிடவில்லை. யோசனையுடன்இல்லையேஎன்றாள்.

மாதவனுக்கு விரோதிகள் யாராவது இருக்காங்களா?”

குரல் கரகரக்க ரஞ்சனி சொன்னாள். “அவனை யாராலும் வெறுக்க முடியாதுங்க. ரொம்ப நல்லவன். பெருந்தன்மையானவன்...”

மாதவனின் பெற்றோர் பற்றிக் கேட்ட போது மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள். “ரொம்ப நல்ல மனுஷங்க அவங்க ரெண்டு பேரும். அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாதவங்க. அவனோட அம்மா சமையலை நாங்க மூனு பேரும் நிறைய நாள் சாப்பிட்டிருக்கோம். அவ்ளோ நல்லா சமைப்பாங்க. அன்பா பரிமாறுவாங்க. அவங்களுக்கு கடவுள் இவ்ளோ பெரிய சோதனையைத் தந்திருக்க வேண்டாம்...”

நீங்க இப்பவும் அவங்களைச் சந்திக்கறதுண்டா?”

குற்றவுணர்வுடன் அவள் சொன்னாள். “இல்லை. அவங்களைச் சந்திச்சு அந்த துக்கம் பார்க்கற தைரியம் இவருக்கும் இல்லை. போய் அவங்களுக்கு அவனை ஞாபகப்படுத்தின மாதிரி இருக்க வேண்டாம்னு சொன்னார். அதுவும் சரின்னு தோணுச்சு. ஆனா என்னோட பிரார்த்தனையில அவங்க இல்லாத நாளில்லை... கடவுளே... இனி எந்தக் கஷ்டத்தையும் கூடுதலா அவங்களுக்குக் குடுத்துடாதேன்னு கேட்காத நாளில்லை.” சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது.

அந்த துக்கமும், அந்தப் பிரார்த்தனையும் உண்மை என்பதை நரேந்திரனும் உணர்ந்தான். திடீரென்று ரஞ்சனியின் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

நரேந்திரன் கேட்டான். “என்ன?”

ரஞ்சனி தயக்கத்துடன் மெல்லச் சொன்னாள். “திடீர்னு மாதவன் இங்கே இருக்கற மாதிரியும் நாம பேசறத கேட்டுகிட்டிருக்கற மாதிரியும் ஒரு தோணல்

அவளுக்கு அப்படி ஏன் தோன்றுகிறது என்று புரியவில்லை. ஒருவேளை பழைய நினைவுகளை நினைவுபடுத்தியதால் இருக்கலாம்.

மாதவன் உயிரோட இருந்தப்பவே உங்களுக்கும் சரத்துக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருந்ததா?”


ரஞ்சனி கண்கலங்க வேகமாகச் சொன்னாள். “இல்லை

இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று நரேந்திரன் முன்பே நினைத்திருக்கவில்லை. வாயிலிருந்து வந்த பின் தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறோம் என்பது அவனுக்குப் புலனாகியது. அவனும் திகைத்தான். அவனை மீறி அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பதாகத் தோன்றியதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஏதோவொரு அமானுஷ்யம் அங்கே சூழ்ந்திருப்பதாக அவனுக்கும் தோன்ற ஆரம்பிக்க அவன் வேறெதுவும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

நரேந்திரனுக்கு ரஞ்சனியிடம் நடத்திய விசாரணையின் கடைசி சில நிமிடங்களை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. அவள் மாதவன் அந்த அறையில் இருப்பது போலவும் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருப்பது போலவும் உணர்வதாகச் சொன்னது கற்பனையாக அவனுக்குத் தோன்றவில்லை. அதற்கேற்றாற் போல அவன் அதுவரை கேட்கவே நினைத்திருக்காத கேள்வியை அவன் கேட்டு முடித்ததும் அவனுக்கு இப்போதும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு சித்துவித்தை நடந்திருப்பது போலத் தோன்றுவது ஏன் என்று கேள்வியைக் கேட்டுக் கொண்ட போது நாகராஜின் நினைவு ஏனோ வந்தது அவனிடம் நிறைய நாகசக்திகள் இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். அவனிடம் கேட்டால் பதில் கிடைக்கலாம். ஆனால் அவனே மர்ம ஆசாமியாக இருக்கிறான். மாதவனின் நண்பனாக அவன் இல்லாமலிருந்த போதும் நண்பனாக நடித்தது ஏன் என்று அவனிடம் விசாரிக்க வேண்டும். அதற்கு  அவன் சொல்வானா, சொன்னாலும் என்ன பதில் சொல்வான் என்று தெரியவில்லை. அவனை மிரட்டி அதிகாரத்தைக் காட்ட வழியில்லை.... அவனிடம் பேசப்போவதற்கு முன்னால் அந்த நாகசக்தி விஷயமே உண்மை தானா என்று தெரிந்துகொள்ள வேண்டும். யாரிடம் கேட்பது என்று யோசித்த போது பரந்தாமனின் நண்பர் நாதமுனி நினைவுக்கு வந்தார். ஆராய்ச்சியாளரான அந்த மனிதரைப் பார்த்துப் பேசினால் சும்மா கதை சொல்லாமல் அறிவுபூர்வமான தகவல்களைச் சொல்லக்கூடும்.

நாகராஜைப் பார்த்துப் பேசுவதற்கு முன் சரத், கல்யாண் இருவரும் மாதவன் மரண விஷயத்தில் மணாலியில் ஏதாவது தகிடுதத்தம் செய்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்மதன்லாலிடமிருந்து உண்மைகளைக் கறக்க முடிந்தால் அன்று மணாலியில் நடந்தது என்ன என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அவன் அவ்வளவு சீக்கிரம் முழுஉண்மைகளைக் கக்குபவன் அல்ல... அடுத்ததாகச் சொல்ல முடிந்தவன் டாக்ஸி டிரைவர் க்யான்சந்த்...

இந்தச் சிந்தனைகளின் முடிவில்  நாதமுனியிடமும், க்யான் சந்திடமும் பேசுவது என்று நரேந்திரன் முடிவெடுத்தான். அந்த நேரத்தில் தான் மணாலியிலிருந்து அவன் ஆள் ஒருவன் போன் செய்தான்.

சார் க்யான் சந்த் திடீர்னு காணாமல் போயிட்டான்(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அச்சகம் சந்திக்கும் எதிர்பாராத சூழல் காரணமாக மேலும் ஒரு வாரம் தாமதமாகும் போல் தெரிகிறது. வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்