சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 30, 2020

இல்லுமினாட்டி 34


ம்மானுவல் தன் ஆட்களிடமிருந்து விஸ்வத்தைக் கண்டு பிடித்த செய்தி சொல்லும் போன்கால் வரும் என்று காத்திருந்து சலித்துப் போனான்அவன் எதிர்பார்த்த போன்கால் வரவேயில்லை. அலெக்சாண்டிரியாவின் குறி பார்த்துச் சொல்லும் கிழவி அவர்களுக்குத் தகவல் தந்து அரை மணி நேரத்திற்குள் விஸ்வமும், அவன் கூட்டாளி அல்லது கூட்டாளிகளும் அந்த வீட்டை விட்டுப் போயிருக்கிறார்கள் என்பதைத் தடயங்கள் தெரிவித்தன. அந்த வீட்டின்  அருகில் வேறு வீடுகளோ, ஆட்களின் போக்குவரத்தோ இல்லாததால் அவர்கள் போன திசையைக் கூட யூகிக்க முடியவில்லை. அங்கே சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் டேனியலின் புகைப்படத்தை அனுப்பி இருந்தான். கூடவே மீசை, தாடி, கண்ணாடி, தலைமுடி ஆகியவற்றை கூட்டி, குறைத்து, மாற்றி பலவிதமான படங்களையும் அனுப்பி இருந்தான். எப்படி வேடம் போட்டாலும் கண்டு பிடித்து விடும்படியான பல விதமான புகைப்படங்கள் ரயில்நிலையங்கள், விமானநிலையங்கள் ஆகியவற்றிற்கும் கூட அனுப்பப்பட்டிருந்தன. எங்கிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. அதனால் விமானம், ரயிலில் அவர்கள் போகவில்லை என்பது மிக உறுதி.   அதே போல் ஓட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றிற்கும் அந்தப் புகைப்படங்கள் அனுப்பப் பட்டிருந்தன. அங்கிருந்தும் தகவல் இல்லாததால் அங்கெங்கும் கூடப் போகாமல் விஸ்வம் கவனமாக இருந்திருக்கிறான் என்பதும் தெரிந்தது. பின் எங்கே போனார்கள், எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மறுபடி அலெக்சாண்டிரியா கிழவியைத் தொடர்பு கொண்ட போது அந்தக் கையெழுத்திட்ட காகிதம் மூலமாக இனித் தெரிந்து கொள்ள முடியாது என்றும் விஸ்வம் சமீபத்தில் அணிந்திருந்த உடைகள், உபயோகப்படுத்திய கைக்குட்டைகள் இருந்தால் அவற்றைத் துவைப்பதற்கு முன் கொண்டு வந்து தந்தால் கண்டுபிடித்துச் சொல்ல முடியும் என்று அவள் சொன்னாள். கடைசியாக விஸ்வம் அணிந்திருந்த ஆடைகள், கைக்குட்டை எல்லாம் கூட அவன் இறந்த போதே லேசாகக் கருகி விட்டிருந்ததால் அவர்கள் அவற்றை அன்றே அப்புறப்படுத்தி இருந்தார்கள். விஸ்வம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அடி நீளமுள்ள காளி வெண்கலச்சிலை ஒன்றை ஃப்ராங்பர்ட்டில் உள்ள இல்லுமினாட்டி செயற்குழு உறுப்பினருக்குப் பரிசளித்திருந்தான். அதை வைத்து ஏதாவது சொல்ல முடியுமா என்று கூடக் கேட்ட போது அவள் மூன்று நாட்களுக்கு முன்பு வரையாவது அதை விஸ்வம் அவன் கையில் வைத்திருந்தால் தான் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டாள். அதனால் விஸ்வத்தை அந்த வகையில் கண்டுபிடிக்கும் முயற்சியை இம்மானுவல் கைவிட வேண்டி வந்தது.    

இனி என்ன வழி என்று இம்மானுவல் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.


ந்த சர்ச்சில் தூசியும், குப்பைகளும் மண்டியிருந்தன. உள்ளே நுழைந்த பத்து நிமிடங்களில் ஏழெட்டு முறை விஸ்வம் தும்மி விட்டிருந்தான். அந்தத் தும்மல் ஒலி கூட சர்ச்சின் உள்ளே அமானுஷ்யமாக எதிரொலித்தன. ஜிப்ஸி டார்ச் விளக்கொளியில் அந்தச் சர்ச்சின் ஒரு மூலையை வேகமாகச் சுத்தம் செய்தான். பெரிய இரண்டு தரை விரிப்புகளை விரித்து இருவரும் தூங்கினார்கள். களைப்பின் காரணமாக விஸ்வம் படுத்தவுடனே உறங்கிப் போனான். அவன் மறுநாள் காலை எழுந்த போது பக்கத்துத் தரைவிரிப்பில் ஜிப்ஸியைக் காணவில்லை. தரைவிரிப்பு மடித்து ஒழுங்காக அங்கேயே வைக்கப்பட்டிருந்தது. அவன் எழுந்து காலைக்கடன் கழிக்கப் போயிருப்பான் என்று எண்ணியபடி விஸ்வம் எழுந்து உட்கார்ந்தான். காலை நேரமானபடியால் சர்ச்சுக்குள் உடைந்த ஜன்னல் வழியே சூரிய ஒளி உள்ளே புகுந்து இப்போது எல்லாம் தெளிவாகத் தெரிந்தன.

விஸ்வம் மெல்ல எழுந்து சர்ச்சை ஆராய்ந்தான். அவன் பார்வையில் முதலில் பட்டது சர்ச்சின் உள்ளே மேட்டுப்பகுதியில் இருந்த ஏசு கிறிஸ்துவின் பிரதான உடைந்த சிலை. அந்தச் சிலையின் கை உடைந்திருந்தது. சிலுவையில் விரிசல் விட்டிருந்தது. அந்தப் பிரதான சிலை உடைந்த பிறகு அங்கு வழிபாடுகள் நின்றிருக்கலாம் என்று நினைத்த விஸ்வம் நின்ற இடத்திலிருந்தே சுற்றிலும் பார்த்தான். சுவரெல்லாம் பைபிள் நிகழ்வுகள் ஓவியங்களாக நிறைந்திருந்தன.

உடைந்த பிரதான சிலையின் பின்புறச் சுவரில் இருந்த ஓவியம் ‘லாஸ்ட் சப்பர்” ஓவியமாக இருந்தது. மிகவும் அழகாக வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக அவன் உள்ளுணர்வு சொல்ல அதைக் கூர்ந்து கவனித்தான். ஏசு கிறிஸ்துவும், சீடர்களும் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தார்கள். அந்த உணவு மேஜையும் அதன் மீதிருந்த பாத்திரங்களும் கூட அப்படித்தான் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. கீழே வரைந்தவரின் பெயர் ஜெர்மானிய எழுத்தில் இருந்தது. லாஸ்ட் சப்பர் ஓவியங்கள் ஏராளமாக இருக்கின்றன என்றாலும் எல்லாம் ஒரே மாதிரி வரையப்பட்டிருப்பதில்லை. லியார்னாடோ டாவின்ஸி ஓவியமும், மற்ற ஓவியங்களும் சிறிய விதங்களில் நிறையவே வித்தியாசப்பட்டு இருப்பதை விஸ்வம் கவனித்திருக்கிறான். இந்த ஓவியத்தில் அவன் உள்ளுணர்வைத் தொட்ட அம்சம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தான். மூன்று நிமிடங்களில் அவன் அதைக் கண்டுபிடித்தான்.

ஏசு கிறிஸ்துவின் வயிற்றுப்பகுதியும் மேஜைப் பகுதியும் இணையும் இடத்தில் மெலிதாக இல்லுமினாட்டி சின்னமான பிரமிடு நெற்றிக்கண் தெரிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏசு கிறிஸ்துவின் சால்வையின் வேலைப்பாடு போலவும், மேஜையின் வேலைப்பாடு போலவும் தோன்றும்படி வரையப்பட்டிருந்தாலும் கூர்ந்து பார்த்துக் கண்டுபிடித்த பின் தெளிவாகவே அந்த இல்லுமினாட்டி சின்னம் தெரிந்தது. இது வரை அவன் பார்த்திருந்த லாஸ்ட் சப்பர் ஓவியம் எதிலும் இந்தச் சின்னம் இல்லை. அவன் இல்லுமினாட்டியின் ஆபத்திலிருந்து தப்பிக்க அடைக்கலம் வந்து சேர்ந்திருக்கிற அந்த சர்ச்சில் இருக்கும் ஓவியத்தில் அந்தச் சின்னம் இருப்பது அவனுக்குப் பாதுகாப்பா, அபாய எச்சரிக்கையா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சின்னத்தைப் பார்த்தபடி அவன் யோசனையோடு நின்றான்...


கூர்ந்து கவனிப்பது விஸ்வமாக இருக்குமோ என்று தோன்றி இதயத்தின் படபடப்பும் கூடியவுடன் கர்னீலியஸ் மெல்ல ஓரமாகக் காரை நிறுத்தினார்இப்போது உயிரோடு இருக்கும் ஆட்களில் அவரைத் தவிர யாருக்கும் அந்த இரகசிய ஆவணம் இருப்பது தெரியாது. அதில் அவருக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. அந்த ஆவணம் இருப்பதே தெரியாத போது அந்த ஆவணத்தை வங்கி லாக்கரில் அவர் வைத்திருப்பதையோ, தற்போது அவர் அதை எடுக்கப் போவதையோ கூட யாரும் அறிந்திருக்க வழியில்லை. பின் யார் எதற்காக அவரைக் கண்காணிக்கிறார்கள்?
          
அவர் இல்லுமினாட்டி உறுப்பினர் என்றாலும் அதன் முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை. சொல்லப் போனால் இல்லுமினாட்டியில்  அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி வருடத்திற்கு ஒரு முறை இல்லுமினாட்டி கோயிலில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி தான். கலப்பு மொழியில் எழுதப்பட்டிருக்கும் அவர்களுடைய பழங்காலச் சுவடியிலிருக்கும் உறுதிமொழியை உறுப்பினர்களுக்குப் படித்துக் காட்டும் வேலை ஒன்று தான் அவர் அத்தனை பேரும் பார்க்கச் செய்கிற வேலை. அந்த மொழியில் வல்லுனர் அவர் என்பதும், மூத்த உறுப்பினர் என்பதும் தான் அந்த வேலையை அவருக்கு ஒதுக்கி இருக்கக் காரணமேயொழிய வேறெந்த முக்கியத்துவமும் இல்லை. பின் ஏன் யார் அவரைக் கண்காணிக்க வேண்டும். யாரும் பின் தொடரவும் இல்லை என்பதும் தெரிந்து விட்டது. யாரும் ஒரே இடத்திலிருந்து கண்காணிக்க வழியில்லாமல் அவர் நெடுந்தூரம் பயணித்தும் விட்டார். ஆனாலும் அந்த அசாதாரண உணர்வு இருக்கிறது என்றால் அந்த நபர் விஸ்வமாகவே இருக்க வேண்டும் என்று மறுபடியும் தோன்றியது. அவன் அசாதாரணமானவன், அவனிடம் இருக்கும் எத்தனையோ சக்திகளின் காரணமாக அவர் மனதில் ரகசியமாக வைத்திருக்கும் அந்த இரகசிய ஆவணம் பற்றியும் அவன் தெரிந்து கொண்டிருக்கலாம்...
 .

கண்களை மூடிக் கொண்டு கர்னீலியஸ் யோசித்தார். அவர் நினைக்க நினைக்க அவர் எண்ணங்களை யாரோ படிப்பது போல் தோன்றியது. அதற்கும் மேலாக அந்த இரகசிய ஆவணத்தில் எழுதியிருக்கும் முழு விவரங்களை அறிய அந்த ‘யாரோ’ ஆசைப்படுவது போலவும் உள்ளுணர்வு சத்தமில்லாமல் அவரை எச்சரித்தது.

கர்னீலியஸ் வங்கி லாக்கரில் இருந்து அந்த இரகசிய ஆவணத்தை இப்போது எடுக்கும் எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டார். திரும்பவும் வீட்டுக்கே போய் விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. காரைத் திருப்பிக் கொண்டு வந்த வழியே செல்ல ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்  

Wednesday, January 29, 2020

Monday, January 27, 2020

சத்ரபதி 109


சிவாஜிக்கு ஔரங்கசீப்பின் கடிதம் வந்து சேர்ந்தது. சிவாஜி முகலாய தர்பாருக்கு வர விரும்பியதற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் அவனை சகல மரியாதைகளுடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும் ஔரங்கசீப் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். பின்பு விருப்பப்பட்டால் முகலாய அரசவையில் இடம் பெறலாம் என்றும் தக்காணத்திற்கே திரும்பவும் செல்ல விருப்பமானால் அதற்கும் ஆட்சேபணை இல்லை என்றும் எழுதியிருந்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன் ஷாஜஹான் காலமாகியிருந்தார். அவர் மரணத்திற்குப் பின் ஏனோ முகலாய தர்பாரை ஔரங்கசீப் டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கே மாற்றி இருந்தான். அதனால் சிவாஜி ஆக்ராவுக்குக் கிளம்பத் தீர்மானித்தான்.

ஆக்ரா செல்வதற்கு சிவாஜியின் ஆலோசகர்களும், நண்பர்களும், ஜீஜாபாயும் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஔரங்கசீப்பை அவர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. சிவாஜி அமைதியாகச் சொன்னான். “நான் போயே ஆக வேண்டும். இல்லா விட்டால் இந்த சமாதானம் நீடிக்காது. நானும் முகலாயச் சக்கரவர்த்தியை நம்பவில்லை. ஆனால் நான் ராஜா ஜெய்சிங்கை நம்புகிறேன். வாக்கு மாறாத மனிதர் அவர். அவர் என் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளார்.  எல்லாவற்றிற்கும் மேலாக அன்னை பவானி என்னைக் காப்பாற்றுவாள். கவலைப்படாதீர்கள்”

ஆனால் அவர்களால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. சிவாஜி கிளம்புவதற்கு முன் தன் ஆலோசகர்களையும், அமைச்சர்களையும், நண்பர்களையும், தாயையும் அழைத்துப் பேசினான். அவன் இல்லாத சமயத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு, என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று மிக விரிவாக அவன் எடுத்துரைத்த போது மகன் எல்லாவற்றையும் யோசித்து வைத்திருப்பதைக் கவனித்த ஜீஜாபாய் மகன் மீது பெருமை கொண்டாள்.

கடைசியில் சிவாஜி சொன்னான். “என்னுடைய இடத்தில் என் தாயை அமர்த்தி விட்டுச் செல்கிறேன்.  எல்லோரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி என்ன செய்திருக்கிறீர்கள் என்று என் தாயிடம் தெரிவித்தபடி இருக்க வேண்டும். அவருடைய ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

அனைவரும் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்கள். ஜீஜாபாய் கனத்த மனத்துடன் மகனுக்காகப் பிரார்த்தனை செய்யச் சென்றாள்.

அவள் சென்ற பின் சிவாஜி மெல்லச் சொன்னான். “ஒருவேளை நான் திரும்பி வராவிட்டால்….”

அனைவர் முகங்களிலும் திகைப்பும், கவலையும் தெரிந்தன. யேசாஜி கங்க் கேட்டான். “இப்போது தானே சொன்னாய், அன்னை பவானி உன்னைக் காப்பாற்றுவாள் என்று, பின் ஏன் இந்த அபசகுன வார்த்தையைச் சொல்கிறாய்?”

சிவாஜி அமைதி மாறாமல் சொன்னான். “தனிமனிதனாக நான் என் தெய்வத்தைத் திடமாக  நம்புகிறேன். ஆனால் தலைவனாக நான் அனைத்துக் கோணங்களிலும் முன்கூட்டியே சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறேன். இது என் ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம். யார் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி நிர்வாகம் எங்கும் எப்போதும் தங்கு தடையில்லாமல் சீராக நடந்து கொண்டிருக்க வேண்டும். என் மக்கள் என்றும் எப்போதும் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது.”

யேசாஜி கங்கும் மற்றவர்களும் கண்கலங்கினார்கள். சிவாஜி தாயிடம் விடைபெறச் சென்றான். ஜீஜாபாய் மனமாரப் பிரார்த்தித்து மகனுக்கு வெற்றித் திலகமிட்டு அனுப்பினாள். அவனிடம் சொன்னாள். “மகனே சீக்கிரம் திரும்பி வா. ராஜ்ஜிய பாரம் நீண்ட காலம் சுமக்கும் வலிமை உன் தாய்க்கு இல்லை.”

சிவாஜியின் மகன் சிறுவன் சாம்பாஜியும் தந்தையுடன் கிளம்ப, பாட்டியை வணங்கினான். அவன் தாய் மறைவிற்குப் பின் ஜீஜாபாய் தான் அவனை வளர்த்து வருகிறாள். ஜீஜாபாய் பேரனுக்கு நிறைய புத்திமதி சொல்லி அனுப்பினாள். எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு விளையாட்டுத் தனமாக அவன் ஓடி ஒரு குதிரையில் ஏறிக் கொண்டான்.

சிவாஜி வியப்புடன் கேட்டான். “எனக்கு நினைவு தெரிந்து நீங்கள் என் சிறுவயதிலும் கூட இப்படி  நிறைய புத்திமதியெல்லாம் சொல்லி அனுப்பியதேயில்லை. ஏன் உங்கள் பேரனுக்கு மட்டும்?”

ஜீஜாபாய் மகனைப் பெருமிதத்துடன் பார்த்தபடி சொன்னாள். “உனக்கு புத்திமதி அவசியம் இருந்ததில்லை. மகனே. பார்த்தும், உணர்ந்துமே நீ கற்றது அதிகம். ஆனால் என் மகன் அளவுக்கு உன் மகன் போதாது. அவன் வளர்கையில் அது அவசியமில்லாமல் இருந்தது கூட அதற்குக் காரணமாய் இருக்கலாம்…… அதனால் தான் அறிவுரை சொல்லி அனுப்புகிறேன்….”

சிவாஜி ஒரு படையுடன் புறப்பட்டான். சிவாஜிக்கு முன்னதாகவே அமைச்சர் ரகுநாத் பந்த் மற்றும் சில அதிகாரிகள், வீரர்கள் கொண்ட குழு ஆக்ராவுக்குக் கிளம்பியிருந்தது. சிவாஜி முகலாயப் பேரரசரின் அழைப்பில் செல்வதால் அங்கங்கே முகலாய அதிகாரிகளிடம் பேசி பயணத்தில் சிவாஜிக்கு வேண்டிய வசதிகளை வழிநெடுகச் செய்யும் வேலையை அந்தக் குழுவினர் மேற்கொண்டார்கள். 

சிவாஜி செல்கையில் ராஜா ஜெய்சிங்கையும் சென்று சந்தித்தான். அவர் முகலாயச் சக்கரவர்த்தியிடமிருந்து தனக்கும் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார். “உங்கள் வழிச்செலவுக்கு ஒரு லட்ச ரூபாயைத் தரச் சொல்லி சக்கரவர்த்தி உத்தரவிட்டிருக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு சென்று வாருங்கள் அரசே. இந்தப் பயணம் உங்களுக்கு இனியதாய் அமையட்டும்.”

சிவாஜி சின்னதாய் முறுவலித்தான். அவர் பெரிய விஷயமாய் சொன்ன தகவல் அவனைப் பெரிதாய் உற்சாகப்படுத்தி விடவில்லை என்பதை ராஜா ஜெய்சிங் கவனித்தார். அவன் மனநிலையை அவரால் படிக்க முடிந்தது.

அவர் அவனிடம் அன்பான குரலில் சொன்னார். “உற்சாகமாகப் போய் வாருங்கள் அரசே. இங்குள்ள உங்கள் பகுதிகளின் பாதுகாப்பும் நலனும் உங்கள் ஆட்களின் பொறுப்பு மட்டுமல்ல. என்னுடைய பொறுப்பும் கூட. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்….” கூடவே தன் மகன் ராம்சிங்குக்கு முன்பே எழுதி வைத்திருந்த கடிதத்தையும் ராஜா ஜெய்சிங் சிவாஜியிடம் கொடுத்தார். ”உங்கள் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் கொடுத்திருப்பதாக என் மகனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அங்கு அவன் உங்களைப் பாதுகாப்பான்….”

சிவாஜி திறமையும், பொறுப்பும் மிக்க ஒரு மிக நல்ல மனிதரைத் தன் முன் கண்டான். மனம் நெகிழ்ந்து அவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.

அது மிக நீண்ட பயணமாக அமைந்தது. ஆக்ரா சென்று சேர இரண்டு மாத காலம் தேவைப்பட்டது. அந்தக் காலத்தையும் அவன் மிக நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொண்டான். .பாரதத்தின் பல்வேறு புதிய பகுதிகள், மக்கள், பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அவன் அந்தப் பயணத்தை எடுத்துக் கொண்டான்.  போருக்குப் போகின்ற காலங்களில் கவனம் எதிரிகளின் மீதும், தற்காப்பின் மீதுமே அதிகமிருக்கும். அதனால் பலவற்றைக் கவனித்துப் புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அன்னை பவானி இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாளோ என்றும் அவனுக்குத் தோன்றியது.

சாம்பாஜியையும் அவனால் தொடர்ந்து கூர்ந்து கவனிக்க முடிந்தது. வீரம் அவன் இரத்தத்தில் இருந்தது. பயம் அறியாதவனாகவும் இருந்தான். விளையாட்டுகளிலும் மிக ஆர்வமாக இருந்தான். ஆனால் வீரத்திற்கும், விளையாட்டிற்கும்  இணையாக கூர்நோக்கும், கவனிக்கும் தன்மையும் மகனிடம் இருக்கவில்லை என்பதையும் சிவாஜி கண்டான். தந்தை அழைத்துச் சொல்கின்ற போதெல்லாம் சாம்பாஜி தந்தை கவனிக்கச் சொன்னதைக் கவனித்தான். கேள்விகள் கேட்ட போது பார்த்துப் புரிந்து கொண்டு பதிலும் அளித்தான். ஆனால் அடுத்த முறையும் சிவா கவனிக்கச் சொன்னால் தான் கவனித்தான். பார்க்கச் சொன்னால் தான் பார்த்தான். அவனுடைய அறிவு கூர்மை நன்றாகவே இருந்தது. ஆனால் எதிலும் அவன் ஆழத்திற்குப் போக விருப்பம் இல்லாதவனாகவும், தானாக ஆர்வத்தோடு கவனிக்க வேண்டிய விஷயங்களைக் கவனிக்காதவனாகவும் இருந்தான்.  சிறுவன் தானே. போகப் போக எல்லாம் வந்து விடும் என்று சிவாஜி நினைத்தான். அவசியங்கள் வரும் போது அனைத்தையும் ஒருவன் கற்றுக் கொண்டே ஆக வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.

வழி நெடுக வசதிகளுக்குக் குறைவிருக்கவில்லை. செல்வச் செழிப்பில் இருந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அரச விருந்தினர்களுக்கு உபசாரங்களும் நன்றாகவே நடந்தன. ஆனால் ஒருசில இடங்களில் அவனுக்கு அரச விருந்தினர் மரியாதை மட்டுமே கிடைத்தது. அரசனுக்குரிய மரியாதை கிடைக்கவில்லை. சில மரியாதைகளைக் கேட்டுப் பெற வேண்டி இருந்தது. கேட்ட பிறகும் வேண்டா வெறுப்பாகத் தான் அதிகாரிகள் செய்து கொடுத்தார்கள். அரசர்களும் சக்கரவர்த்தியின் சேவகர்களே என்று வார்த்தைப்படுத்தாமல் புரிய வைக்கும் செயல் முறை இருந்தது.


இனி சந்திக்க வேண்டியிருக்கும் ஒரு நிலைப்பாட்டுக்கு முன்னோடியோ இது என்று சிவாஜிக்குத் தோன்ற ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்