என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label இல்லுமினாட்டி. Show all posts
Showing posts with label இல்லுமினாட்டி. Show all posts

Thursday, April 14, 2022

இல்லுமினாட்டி 150



ரு செயலையும் போக்கையும் முடிவு வரை சிந்திக்க வேண்டும் என்று க்ரிஷ் சொன்னது விஸ்வத்தின் வாழ்க்கை முறையாகவே இருந்தது. ஆனால் இலக்கை வைத்து செயல்களையும், போக்கையும்  நிர்ணயித்தவன் அந்த இலக்கையும் தாண்டி அந்த இலக்கினால் முடிவில் அவன் அடையப் போவதும் சாதிக்கப் போவதும் என்ன என்று யோசித்திருக்கவில்லை. ஒவ்வொரு சக்தி இலக்கிலும் அதைக் கற்றுக் கொடுத்த குருவையும் மிஞ்சாமல் அவன் திருப்தி அடைந்ததில்லை. அந்த வகையில் இது வரையில் அவன் பெற்றிருந்த எல்லா சக்திகளும் சில யோகிகள் சித்தர்கள் தவிர வேறு யாரும் மிஞ்சாதவையே. அந்த இலக்குகளையெல்லாம் மூலதனமாக வைத்து முடிவான இலக்கு என்று அவன் தேர்ந்தெடுத்த இல்லுமினாட்டியின் தலைமைப் பதவி, உலகச் சக்கரவர்த்தி போன்ற பதவி, வைத்தது தான் சட்டம் என்கிற உயர்வு, என்றெல்லாம் தோன்றியிருந்ததே தவிர க்ரிஷ் சொன்னதைப் போல அதற்குப் பின் என்ன என்று அவன் முடிவு வரை சிந்தித்திருக்கவில்லை. ஒருவர் சலிப்போடு சுமந்திருக்கும் பதவிக்கா இத்தனையும் என்று க்ரிஷ் கேட்ட போது அவரை விட அதிகம் சாதிப்பேன் என்ற வகையில் பதில் சொல்லிச் சமாளித்தாலும் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதாலும், உலக நிகழ்வுகளை அதிகாரத்தால் தீர்மானிப்பதாலும் எத்தனை காலம் சந்தோஷப்பட முடியும் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. எர்னெஸ்டோவுக்கே சலித்த பதவி அவனுக்கும் விரைவாகச் சலிக்கும். போதையில் சிக்குபவர்கள் சந்தோஷத்தை அதிகப்படுத்திக் கொள்ள அளவை அதிகப்படுத்திக் கொண்டே போவது போல அவனும் ஒரு வெற்றியாகவே தொடர்ந்து உணர, அதிகார அளவை அதிகரித்துக் கொண்டே போக வேண்டியிருக்கும். போதையின் முடிவைப் போலவே அகந்தையின் போக்கில் இந்த இலக்கின் முடிவும் அழிவாகத்தான் இருக்கும். க்ரிஷ் சொன்னது போல் எதையும் அழிக்க எந்த ஒரு முட்டாளும் போதுமே, விஸ்வம் வேண்டுமா? இலக்கின் முடிவில், வாழ்க்கையின் முடிவில் இதை நான் செய்திருக்கிறேன் என்று நிறைவாக அவன் உணர முடியுமா? க்ரிஷ் சொல்வது போல யாருக்கும் கிடைக்காத இரண்டாவது வாய்ப்பல்லவா அவனுக்குக் கிடைத்திருக்கிறது….

கதேயின் வரிகள் விஸ்வத்தின் மனத்திரையில் மறுபடி ஒளிர்ந்தன. ”Choose well; your choice is "Brief and yet endless; சரியாகத் தேர்ந்தெடு. நீ தேர்ந்தெடுப்பது சுருக்கமானது என்றாலும் முடிவில்லாதது விஸ்வம் முடிவெடுக்க வேண்டிய சமயம் வந்து விட்டது

ஜிப்ஸி விஸ்வத்தின் மனம் மாறிக் கொண்டு வருவதை உணர்ந்து அவசரமாகச் சொன்னான். “விஸ்வம் உன்னை இவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். அவமானப்படுத்தி இருக்கிறார்கள் மறந்து விடாதே. இவன் நோக்கம் உனக்குத் தெரிவது போல் தூய்மையானதல்ல

க்ரிஷ் மனித மனத்தை நிறைய ஆராய்ந்தவன். பல பெரிய முக்கிய முடிவுகள் சில்லறைத்தனமான விஷயங்களால் பல நேரங்களில் தீர்மானிக்கப்பட்டு விடுவதைக் கவனித்திருக்கிறான்.  இந்த அவமான உணர்வுகள் சாதாரணமாய் ஒதுக்கி விட முடிந்தவை அல்ல என்பதை அவன் அறிவான். அதற்கு மேல் யோசிக்காமல் மண்டியிட்டு விஸ்வத்தின் காலைப் பிடித்துக் கொண்டு சொன்னான். “நண்பனே. உன்னை அவமானப்படுத்தி இருக்கிறேன், ஏமாற்றியிருக்கிறேன் என்று நீ  நினைத்தால் நான் உன்னிடம் என் செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்தயவு செய்து என்னை மன்னித்து விடு.”

அக்ஷய் திகைத்தான். ஒரு மனிதன் இவ்வளவு நல்லவனாக இருக்க முடியுமா என்று தோன்றியது. விஸ்வம் அவன் மனக்கட்டுப்பாட்டையும் மீறிக் கண்கலங்கினான். அவன் முந்தைய உடலை விட்டு உயிர் பிரிந்த பின் உடல் எரிக்கப்படும் வரை அந்த உடலைச் சுற்றி நடப்பதையெல்லாம், சுற்றி இருந்தவர்கள் நினைப்பதையெல்லாம் கூட அவனால் உணர முடிந்திருந்தது. அவன் உடல் ம்யூனிக் மின்மயானத்தில் இருந்த போது அவனுக்காக உண்மையாகவே வருத்தப்பட்டவன் க்ரிஷ் ஒருவன் தான். க்ரிஷ் அப்போது மனதில் பிரார்த்தித்துச் சொன்ன வார்த்தைகள் விஸ்வத்துக்கு இப்போதும் நினைவு இருக்கிறது.  நண்பனே, நல்ல விளைவுகளை விரும்புபவன் நல்ல வினைகளையே செய்ய வேண்டும். எத்தனை சாமர்த்தியம் சக்தி இருந்தாலும் வினையை விதைத்து தினையை அறுவடை செய்ய முடியாது. அது மாற்ற முடியாத பிரபஞ்ச விதி!. அடுத்த பிறவியிலாவது எல்லாம் வல்ல இறைவன் உனக்கு இந்தப் பிறவியில் இருந்த அக்னி, உழைப்போடு நல்ல மனதையும் சேர்ந்து கொடுத்துப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கச் செய்யட்டும்”. அவன் இறந்து போன பிறகும் பிரார்த்தித்தவனை இப்போது சந்தேகப்பட எதுவுமில்லை. அவனுடைய இளகிய மனதைப் பலவீனமாக நினைத்தது சரியல்ல என்று விஸ்வம் இந்தக் கணம் உணர்கிறான்.

க்ரிஷ் சொன்னான். “அதுசரி, என் நோக்கத்தைச் சந்தேகப்படச் சொல்லும் உன் நண்பனின் நோக்கத்தை நீ இது வரை கேட்டிருக்கிறாயா? ஏன் நல்லது எதுவும் செய்வதற்கு உன்னை அனுமதிக்கவே மாட்டேன்கிறான்?”

விஸ்வம் ஜிப்ஸியைப் பார்த்தான். ஜிப்ஸி என்ன சொல்லலாம் என்று தடுமாறியது தெரிந்தது. விஸ்வம் க்ரிஷிடம் சொன்னான். “அதை நான் அவனிடம் கேட்டுக் கொள்கிறேன். நீ வந்தது எனக்கு அறிவுரை சொல்லத் தான் என்றால் உன் வேலை முடிந்து விட்டது க்ரிஷ். நான் யோசித்து முடிவெடுக்கிறேன். இனி நீங்கள் இருவரும் கிளம்பலாம்..…”

க்ரிஷ் மெல்ல எழுந்து நின்றான். விஸ்வத்தை ஸ்தம்பிக்க வைத்திருந்ததைச் சரி செய்யும்படி பார்வையால் அக்‌ஷயிடம் சொன்னான். அக்ஷய் திகைத்தான். வந்த வேலை முடிந்து விட்டது போல் அவனுக்குத் தெரியவில்லை. விஸ்வம் நல்ல முடிவெடுப்பான் என்று நம்பி க்ரிஷால் எப்படிக் கிளம்ப முடிகிறது என்றும் தெரியவில்லை. ஆனால் க்ரிஷின் பாதுகாப்பு அவன் பொறுப்பில் இருக்கிறது. அவன் யோசித்து விட்டுச் சொன்னான். “நீ போய் கார் பக்கம் நில் க்ரிஷ். நான் பின் வருகிறேன்…”

க்ரிஷ் தலையசைத்து விட்டு விஸ்வத்திடம் சொன்னான். “நான் கிளம்புகிறேன் நண்பனே

விஸ்வம் தலையசைத்தான். க்ரிஷ் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் சில அடிகள் நடந்தவுடன் விஸ்வம் கண்கள் ஈரமாகச் சொன்னான். “நன்றி க்ரிஷ்   

க்ரிஷின் கண்களும், மனமும் அந்த இரண்டு வார்த்தைகளில் நிறைந்தன. அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான். “நன்றி நண்பனே

அந்த சர்ச் சுவர்களின் ஓவியங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த இல்லுமினாட்டிச் சின்னங்கள் தீஜுவாலைகள் போல மிகப் பிரகாசமாய் ஒரு முறை ஒளிர்ந்து மெல்ல அணைந்தன. சர்ச்சில் மறுபடியும் இருள் சூழ்ந்தது. க்ரிஷ் மெல்ல வெளியேறினான். அவன் கார் வரை போயிருப்பான் என்று தோன்றியவுடன் அக்‌ஷய் விஸ்வத்தின் தோள்களில் பழைய வேகத்திலேயே கைகளை வைத்து எடுத்தான். விஸ்வம் உடலில் ஏதோ மின்னல் பாய்ந்தது போல் உணர்ந்தான். அடுத்த கணம் அக்‌ஷய் வாசலில் இருந்தான். விஸ்வம் மெல்ல உடலை அசைத்த போது அக்‌ஷய் கண்பார்வையிலிருந்து மறைந்திருந்தான்.

சிறிது நேரம் ஜிப்ஸியும் பேசவில்லை, விஸ்வமும் பேசவில்லை. அவர்களுக்கு இடையில் ஒரு கனத்த மௌனம் நிலவியது. பின் விஸ்வம் சொன்னான். “நீ இது வரை செய்த உதவிக்கெல்லாம் உனக்கும் நன்றி நண்பனே. நீ என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நான் அனாமதேயமாய் வாழ்ந்திருப்பேன். க்ரிஷ் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் அர்த்தமில்லாமல் அழிந்தும் அழித்தும் இருப்பேன்…”

விஸ்வம் ஜிப்ஸியிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. தன் செயல்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஜிப்ஸி சில நிமிடங்களில் ஒரு மனிதன் இப்படி அடியோடு மாறிவிட முடியுமா என்று திகைத்தான். அவனும் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. அவன் நிறைய பொருட்களைச் சேர்த்து பூமியில் அங்கங்கே பதுக்கி வைத்திருக்கிறான். அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு அமேசான் காடுகளில் ஒளித்து வைத்திருந்த விண்கலத்தில் போட்டுக் கொண்டு போவதற்கு இப்போது கிளம்பினால் தான் முடியும்.  அவன் ஆராய்ச்சியின் நோக்கம் என்னவாக இருந்த போதிலும் விஸ்வத்திடம் நெருங்கிப் பழகிய இந்த நாட்களில் ஒரு பிரத்தியேக நெருக்கத்தையும் அன்பையும் உணர்ந்திருந்த ஜிப்ஸி பிரிய வேண்டியிருந்த இந்தக் கடைசிக் கணத்தில் விஸ்வத்திற்கு நன்மையையே எண்ணினான். ”நானும் கிளம்புகிறேன் நண்பனே. க்ரிஷ் சொன்னது போல மனித இனத்தில் நீ ஒரு அபூர்வப் பிறவி. எந்தப் பாதையில் பயணித்தாலும் நீ நிறைய சாதிப்பாய். சாதனைகள் உன் வாழ்க்கையின் இறுதி வரை தொடரட்டும்…”


காரில் ம்யூனிக் நகரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் அக்‌ஷய்க்கு க்ரிஷ் நன்றி சொன்னான். “நீங்கள் மட்டும் வந்திருக்கா விட்டால் என் வாழ்க்கை அந்த சர்ச்சில் முடிந்திருக்கும் அக்‌ஷய். எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை…”

அக்‌ஷய் இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று உணர்த்தும் விதமாக க்ரிஷின் தோளைத் தட்டிக் கொடுத்தான். அவன் இப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனிதனைக் காப்பாற்ற முடிந்ததைத் தன் பாக்கியமாகவே நினைத்தான். மைத்ரேயனுக்குப் பிறகு அவன் பார்த்த மிக உயர்ந்த மனிதன் க்ரிஷாகவே இருந்தான். க்ரிஷ் அந்தச் சர்ச்சில் சிறிது கர்வம் காட்டியிருந்தாலும், சிறிது பணிவைக் குறைத்திருந்தாலும், விஸ்வத்தை மாற்றியிருக்க முடியாது என்று அவன் நம்பினான். சிறிதும் கவுரவம் பார்க்காமல் விஸ்வத்தின் காலில் விழுந்தது “நான்” என்ற அகந்தை அவனிடம் துளியும் இல்லாததைச் சொன்னது. அந்த ஒரு கணம் தான் விஸ்வத்தை நன்மையின் பக்கம் ஒரேயடியாய் நகர்த்திய அதிசயத் தருணம் என்று அக்‌ஷய் எண்ணினான்....

அக்‌ஷய் க்ரிஷிடம் கேட்டான். “நீ உண்மையில் அவனை மாற்றி விட முடியும் என்று நம்பினாயா?”

க்ரிஷ் சொன்னான். “முயன்று பார்க்கலாம் என்று நினைத்தேன். அவனிடம் நான் சொன்ன எதுவுமே பொய்யில்லை அக்‌ஷய். அவனைப் போன்ற ஒருவனை நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவன் அழிவின் பக்கம் போவதை என்னால் சகிக்க முடியவில்லை. அவனை மாற்றியது நான் என்று நினைக்கவில்லை. என் மாஸ்டரைப் போன்ற எத்தனையோ மகான்கள் மானுடத்தைக் காக்க தவமிருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய அன்பின் அலைகள் தான் அவனை மாற்றியிருக்கும் என்று நம்புகிறேன்...”

க்ரிஷ் மாஸ்டரைச் சொன்ன போது அக்‌ஷய்க்கு மைத்ரேயனின் நினைவும் வந்தது. க்ரிஷ் சொல்வதைப் போல இந்த உலகம் சிறிதாவது நன்மையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியாத இது போன்ற எத்தனையோ தன்னலமில்லாதவர்களின் தவ வலிமையால் இருக்கலாம் என்று அவனுக்கும் தோன்றியது!

முடிவில்...

·       க்ரிஷ் சொன்னதை நம்பி எர்னெஸ்டோவும் இம்மானுவலும் தங்கள் எச்சரிக்கையைக் கைவிட்டு விடவில்லை. விஸ்வத்தைப் போன்ற ஒருவன் மனமாற்றம் அடைய முடியும் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில் அவர்களிடம் இருக்கவில்லை.  ஒரு மாதம் கழித்து உதய்-சிந்து, க்ரிஷ்- ஹரிணி திருமணம் எந்தப் பிரச்னையுமில்லாமல் நடந்து முடிந்த பிறகு தான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது.

·       எர்னெஸ்டோ க்ரிஷின் திருமணத்திற்கு இந்தியா வந்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகப் பாதுகாப்போடு வந்து போன அவரை வெளிநாடு செல்லும் போது பரிச்சயமான நண்பர் என்ற அளவில் தான் க்ரிஷ் எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியிருந்தான்.

·       இந்தியா வந்து போன பின் எர்னெஸ்டோ இன்னும் மூன்று மாதங்களில் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து விட்டார். இல்லுமினாட்டியில் அடுத்த தலைவருக்கான போட்டி மும்முரமாக ஆரம்பித்து விட்டது. அந்த வேளையில் அகிடோ அரிமா தன் நண்பரை வருத்தத்துடன் நினைவுபடுத்திக் கொண்டார். வாங் வே தவறான முடிவுகளில் இறங்காமல் இருந்திருந்தால் இந்தத் தேர்தல் கண்டிப்பாக அவருக்குச் சாதகமாக அமைந்திருக்கும் என்று அவர் பச்சாதாபப்பட்டார்.

·       விஸ்வம் தங்கியிருந்த சர்ச்சை இல்லுமினாட்டி தன் வசப்படுத்திக் கொண்டது. வருடத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் இடமாக அது மாற்றப்பட்டது.   

·       உதய்-சிந்து திருமணத்தில் மிருதுளா, ரகு இருவரும் மணப்பெண்ணின் தாய் தந்தையாக இருந்து கன்யாதானம் செய்து கொடுத்தார்கள். தமிழக முதலமைச்சரின் மகனும், எம் பி யுமாக உதய் இருந்ததால் தொலைக்காட்சியில் அவன் திருமணம் காட்டப்பட்டது. சிந்துவின் தந்தையின் இரண்டாம் மனைவி அதைப் பார்த்து விட்டுக் கணவரை அழைத்துக் காட்ட அவர் உடனடியாக டி.வியை அணைத்து விட்டுப் போனார்.

·         அக்‌ஷயும் குடும்பத்தோடு க்ரிஷ்-ஹரிணி திருமணத்திற்கு வந்திருந்தான். இல்லுமினாட்டியின் தயவால் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் முழுவதுமாக நின்றிருந்தது. அதனால் எந்தப் பயமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் எல்லா இடங்களுக்கும் அவர்கள் போய் வர ஆரம்பித்திருந்தார்கள்.

·         திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அவன் தனியாக இருந்த ஒரு நேரத்தில் க்ரிஷின் மனதில் அவனுடைய வேற்றுக்கிரகவாசி நண்பன் “க்ரிஷ் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான். க்ரிஷ் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான். மானசீகமாகவே பேசிக் கொள்ள முடிந்த அவனுடைய நண்பன் நீண்ட காலம் கழித்து வந்திருக்கிறான். அவனிடம் சொல்ல நிறைய இருந்தது. ஆனால் சொல்ல அதிக நேரம் தேவைப்படவில்லை. சொல்லாமலேயே அவன் மனதில் பதிந்திருந்த நிகழ்வுகளை எல்லாம் படித்து விட்ட வேற்றுக்கிரகவாசி நண்பன் அவனைப் பாராட்டிச் சொன்னான். “நான் உன் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை க்ரிஷ். சில மிக நல்ல மாற்றங்களை ஆரம்பித்து வைத்திருக்கிறாய்”

க்ரிஷ் வேற்றுக்கிரகவாசியிடம் நிகோலா டெஸ்லாவிலிருந்து கூடுவிட்டு கூடு பாயும் வித்தை வரை பல விஷயங்களைப் பேசினான். பல சந்தேகங்கள் கேட்டு க்ரிஷ் அவனிடமிருந்து நிறைய தெரிந்து கொண்டான்.

திடீரென்று வேற்றுக்கிரகவாசி நண்பன் கேட்டான். “உன் எதிரி நண்பன் எங்கிருக்கிறான்? என்ன செய்கிறான்?”

க்ரிஷ் அன்புடன் சொன்னான். “எதிரியல்ல. நண்பன் மட்டும் தான். இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நல்லதைத் தான் செய்து கொண்டிருப்பான்.”

வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் லேப் டாப்பைத் திற”

க்ரிஷ் லேப்டாப்பைத் திறந்தான். வேற்றுக்கிரகவாசி நண்பனின் சக்தியால் அவன் லேப் டாப் திரையில் விஸ்வம் தெரிந்தான். அவன் ஒரு வீட்டறையில் பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தான். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். “உன் நிகோலா டெஸ்லா சொன்னபடி விஸ்வம் சக்தி அலைவரிசைகளைக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்.  அதில் அவன் ஏற்கெனவே நிபுணன் தான் என்றாலும் இப்போது  நன்மைக்குத் திரும்பியிருக்கிறான். நல்ல எண்ண அலைகளை மற்றவர்கள் மனதில் அனுப்பி வைத்து அவர்களை எந்த அளவு மாற்ற முடியும் என்று  ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். ஓரளவு நல்ல வெற்றியும் அடைந்து வருகிறான்”

வேற்றுக்கிரகவாசி ஒரு பார்வையிலேயே அறிந்து கொண்டு சொன்ன தகவல் க்ரிஷை சந்தோஷப்படுத்தியது. விஸ்வம் கண்டிப்பாக இதில் அற்புதங்கள் செய்வான் என்று நினைத்தபடியே அந்த அறையின் ஒரு சுவரில் ஏதோ எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தவன் அதைப் பெரிதாக்கிப் பார்த்தான். கதேயின் அந்தக் கவிதையின் கடைசி ஐந்து வரிகள். அந்தக் கவிதைக்கு மேல் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அது யார் புகைப்படம் என்று க்ரிஷ் அதையும் பெரிதாக்கிப் பார்த்தான். அது க்ரிஷின் புகைப்படம் தான்.  ஒரு வினாடி தான் க்ரிஷால் அதைப் பார்க்க முடிந்தது. மறுவினாடி எதையும் பார்க்க விடாமல் அவன் கண்களில் நீர் திரண்டது.


வேற்றுக்கிரகவாசி சொன்னான். “விஸ்வம் தன் விதியையும், உலகத்தின் விதியையும் மாற்றி எழுத ஆரம்பித்திருக்கிறான்”. அவன் வாயிலிருந்தே அதைக் கேட்டவுடன் க்ரிஷின் மனமும் நிறைந்தது. 

முற்றும்.    

என்.கணேசன்
.

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




அடுத்த வியாழன், 21.04.2022 சாணக்கியன் நாவல், இந்த வலைப்பூவில் ஆரம்பமாகிறது. பின் வியாழக்கிழமைகளில் வழக்கம் போல் தொடரும்.

Thursday, April 7, 2022

இல்லுமினாட்டி 149



க்ரிஷுக்கும் இந்த இல்லுமினாட்டி சின்னத்துக்கும் ஏதோ ஒரு ரகசியத் தொடர்பு இருப்பதாக விஸ்வத்துக்குத் தோன்றியது. அவன் எங்கே பேசினாலும் மிளிர்கிறதே...

விஸ்வம் சொன்னான். “உன் பேச்சுத்திறமை என்னை வியக்க வைக்கிறது க்ரிஷ். நான் அடுத்தபடியாக சிந்துவையும் உன் குடும்பத்தையும் கண்டிப்பாகத் தீர்த்துக்கட்டுவேன் என்று தெரிந்து பயந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக என்னை மாற்றி விட நீ எவ்வளவு சிரமப்படுகிறாய். உன் தீவிர முயற்சியைப் பாராட்டுகிறேன்.”
                          
க்ரிஷ் மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னான். “அவர்களைக் கொன்று தான் உன் ஆத்திரமும் வெறுப்பும் அடங்குமானால் அதைச் செய். என் உயிர் போவதை விட அது கொடுமை தான். ஆனால் பரவாயில்லை. அதையும் என் விதியாக ஏற்றுக் கொள்கிறேன் நண்பனே. நான் நேசிக்கும் என் குடும்பத்தை இழந்து நான் வாழ முடியாது. அதன் பின் நான் உயிர்வாழ விரும்ப மாட்டேன். அதனால் என்னையும் கொன்று விடு. அதையும் நான் தடுக்க மாட்டேன். ஆனால் அதை எல்லாம் செய்து விட்டு நீ நான் சொன்னதைச் சிந்தித்து முடிவெடுப்பாய் என்று மட்டும் எனக்கு வாக்கு கொடு போதும்... உலகம் அழிவதைக் கூட நான் பெரிதாக நினைக்கவில்லை.  என்றாவது ஒரு நாள் அழியும் உலகம் சிறிது சீக்கிரம் அழிவதால் கதறியழ ஒன்றும் இல்லை.  எனக்கு அதையெல்லாம் விடக் கொடுமையாகத் தோன்றுவது மனித இனத்துக்கே உதாரணம் காட்ட முடிந்த அளவு அறிவும், அக்னியும், கட்டுப்பாடும் உழைப்பும் இருக்கும் நீ அத்தனைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக யாராலும் சாதிக்க முடியாத ஒன்றைச் செய்து ஜொலிக்காமல் நாசமாய் போவது தான்.... என் நண்பன் வித்யாதர் அப்படி ஆனதையே என்னால் சகிக்க முடியவில்லை. உன்னைப் போல் எல்லா உச்சங்களுக்கும் போக முடிந்த ஒரு மனிதன் ஒரு கோமாளியாய், ஒரு பூஜ்ஜியமாய்ப் போவதை என்னால் தாங்க முடியவில்லை நண்பனே.”

க்ரிஷ் சொன்னதில் அக்ஷய் மட்டுமல்லாமல் விஸ்வமும் திகைத்தான். இருவரும் அந்த நேரத்தில் ஒரேபோல் எண்ணினார்கள். “இவனால் மட்டுமே இப்படி யோசிக்கவும் சொல்லவும் முடியும்.” விஸ்வம் அந்த எண்ணத்தில் தங்காமல் வேகமாக வெளியே வந்து சொன்னான். “நீ சொல்வதைப் போல் நான் மாறினாலும் பூஜ்ஜியமாகத் தான் இருப்பேன் க்ரிஷ். பழைய இலட்சியங்கள் எல்லாம் போய் விட்டால் என்னிடம் பூஜ்ஜியம் அல்லவா மிஞ்சும்?”

ஜிப்ஸி விஸ்வத்தின் குரலில் மென்மை தென்பட ஆரம்பிப்பதைக் கவனித்தான். க்ரிஷ் பேசியது விஸ்வத்தை லேசாக அசைத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. இதைத் தொடர விட்டால் ஆபத்து என்று நினைத்த ஜிப்ஸி சொன்னான். “சரியாகப் புரிந்து கொண்டாய் விஸ்வம். உன்னைப் பூஜ்ஜியமாக்குவது தான் அவன் குறிக்கோள். உன்னை ஆரம்பத்தில் கொன்றார்கள். நீ இன்னொரு உடலுக்கு வந்த பின்னும் உன்னை விடவில்லை. மீண்டும் உன்னைக் கொல்ல முயன்றார்கள். உன்னை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி  நீ உன் இலட்சியக் கனவை நிரந்தரமாகவே நிறைவேறாதபடி செய்து விட்டார்கள். அது மட்டுமல்லாமல் உன் கனவே தவறென்று இவன் சொல்கிறான். அவர்கள் உன்னை நடத்திய விதத்தையும், இத்தனை அவமானத்தையும் தாங்கிக் கொண்டு அவர்களைத் திருப்பித் தாக்காமல் பொறுமையான ஏமாளியாக மாறி ஓடிவிடு என்று சொல்வதற்காகத் தான் அவன் விவரமாக இங்கே வந்து மனமுருகப் பேசி நாடகமாடுகிறான். அதற்கு ஏற்ற மாதிரி இந்த இல்லுமினாட்டி சின்னமும் முன்பு செய்த சதியையே இப்போதும் செய்கிறது என்பதையும் நீ கவனி. இவனிடம் மறுபடி ஏமாந்து விடாதே”

மனித மனம் விசித்திரமானது. இரண்டு எதிர்ப்பட்ட நிலைகளில் மாறி மாறித் தங்கும் போது அன்பையும், நன்மையையும் மேலே கொண்டு வருவதற்கு முயற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்த சிறிய உந்துதல்களே போதுமானதாக இருக்கின்றன. அந்த வகையில் விஸ்வம் ஜிப்ஸியின் வார்த்தைகளால் பழைய அவமானங்கள் அத்தனையையும் உடனே மொத்தமாக உணர்ந்தான்.  ஜிப்ஸி சொன்னபடி அவன் மறுபடி ஏமாறத் தயாராயில்லை. சமீபத்தில் கூடுதலாகவும் பெற்றிருந்த சக்திகள் அத்தனையும் குவித்து இருவர் மீது ஒரே சமயத்தில் தாவத் தயாரானான். அவன் இரண்டு கைகளிலும் குவித்த சக்திகளில் இரண்டு கைகளும்  இரும்பு போல் உறுதியாயின. இடது கையால் க்ரிஷைத் தாக்கி காயப்படுத்தவும், வலது கையால் அக்‌ஷயைத் தாக்கிக் கொன்று விடவும் எண்ணினான். அக்‌ஷயைக் கொன்ற பின் மற்றவர்களைக் கொல்வது சுலபம்...

இல்லுமினாட்டி சின்னங்கள் ஒளிர்ந்தபடி இருந்ததால் க்ரிஷ் விஸ்வத்தைத் தெளிவாகவே பார்க்க முடிந்திருந்தது. அவனுள் குவியும் சக்திகளையும் க்ரிஷ் கவனித்தான். அதில் அபாயத்தை உணர்ந்த அவனுக்கு அதை அக்‌ஷயிடம் சொல்லுமளவு நேரமிருக்கவில்லை. அக்‌ஷயை எச்சரிக்கும் வகையில் மெல்லத் தொட்டான். அக்‌ஷயும் விஸ்வத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். விஸ்வத்தின் முகம் இறுக்கமாகவே இருந்தது. அவன் கைகள் மட்டும் இறுகுவதைக் கவனித்தான். க்ரிஷ் அவனை எச்சரிக்கும் விதமாகத் தொடவே விஸ்வத்தின் கைகள் இறுகுவது தாக்குவதற்குத் தான் என்றும் க்ரிஷ் கூடுதலாக ஏதாவது கவனித்திருப்பான் என்பதையும் உடனே உணர்ந்தான்.

அக்‌ஷய் மைக்ரோவினாடியில் இயங்கினான். விஸ்வம் அவர்களைத் தாக்கப் பாய்ந்த அதே கணம் அக்‌ஷய் ஒரு கையால் க்ரிஷை அந்தப் பக்கமாகத் தள்ளிவிட்டு அடுத்த கணம் இன்னொரு பக்கம் தாவிச் சில அடிகள் தள்ளி நின்றான்.  தன் இரு கைகளுக்கும் இருவரும் அகப்படாத திகைப்பில் விஸ்வம் நின்ற அந்தக் கணம், தள்ளிக் குதித்திருந்த இடத்திலிருந்து மீண்டும் பழைய இடத்திற்குத் தாவி வந்த அக்‌ஷய் விஸ்வத்தின் இரு தோள்களிலும் தன் இரு கைகளால் வேகமாக என்னவோ செய்தான். அடுத்த கணம் விஸ்வம் தோளிலிருந்து கால்கள் வரை அசைக்க முடியாமல் சிலையாக நின்றான். விஸ்வம் முதலில் கூவ நினைத்தான். இப்போதைக்கு அவனால் அது மட்டுமே முடியும். பின் அவமான உணர்வால் உந்தப்பட்டு அதைக்கூடச் செய்யாமல் இறுகிய முகத்துடன் சிலை போல் நின்றான்.

விழுந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்த க்ரிஷுக்கு விஸ்வத்தின் பாய்ச்சலும், அக்‌ஷயின் இரு தாவல்களும் பார்க்க ஏதோ சீனத் திரைப்படத்தில் வரும் காட்சிகள்  போல் இருந்தது.  அக்‌ஷய் க்ரிஷிடம் சொன்னான். “என்ன சொல்ல வேண்டுமோ சொல்லி முடி. உன் நண்பனுக்குக் காது கேட்பதில் பிரச்னை எதுவும் இல்லை”

ஜிப்ஸி அவர்களைத் தாக்க நெருங்கி இருந்தான். விஸ்வத்தின் உயிருக்கு ஆபத்து என்றால் அக்‌ஷயைக் கண்டிப்பாகத் தாக்கி இருப்பான். அக்‌ஷய் அப்படிச் சொன்ன பின் அதற்குத் தேவையும் வழியும் இல்லாமல் போனது. பின் மெல்ல சில அடிகள் விலகி நின்றான்.

க்ரிஷ் விஸ்வத்தின் அருகே வந்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து  சொன்னான். “நண்பனே நான் ஆத்மார்த்தமாகச் சொல்கிறேன். நான் என் தனிப்பட்ட லாபநஷ்டங்களைக் கணக்குப் பார்த்தோ, இல்லுமினாட்டியில் லாப நஷ்டங்களை எண்ணிப் பார்த்தோ உன்னிடம் பேச வரவில்லை. மானுடத்தின் ஒரு மகத்தான உதாரண புருஷனாய் மாற முடிந்தவன் நீ என்பதை நூறு சத்வீதம் நம்புவதாலேயே, எனக்கு ஆபத்து நேரலாம் என்ற  நிலையிருக்கும் போதும் உன்னிடம் பேச வந்திருக்கிறேன்.... நீ பூஜ்ஜியமாகி விடுவாய் என்றாயே. மைனஸில் இருப்பதை விடப் பூஜ்ஜியம் மேல் தான். மைனஸில் இருப்பவன் ப்ளஸிற்கு வர வேண்டும் என்றால்  பூஜ்ஜியத்தைக் கடந்தே போக வேண்டும். அதனால் இது கூட வளர்ச்சி என்று எடுத்துக் கொள்... உன் இந்த நண்பன் சொன்னபடி இங்கே உனக்கெதிராக யாரும் சதி செய்யவில்லை. இப்போது இந்தச் சின்னம் ஒளிர்ந்து யாரை வசியம் செய்யப் போகிறது? அன்றாவது அந்தச் சின்னம் ஒளிர்ந்தது இல்லுமினாட்டி உறுப்பினர்களை என் பக்கம் சாய்க்க என்று நீ நினைக்க வழி இருந்தது. இன்று அப்படி இல்லையே. இது இல்லுமினாட்டியின் சின்னம் ஆனது பிற்காலத்தில் தான். ஆரம்பத்தில் இருந்தே இது ஞானத்தின் சின்னம் விஸ்வம். எல்லாம் பார்க்கும் விழி காலங்கள் கடந்து அனைத்தையும் அறிய முடிந்த ஞானமாகவும், மௌன சாட்சியாகவும் தான் இருக்கிறது...”

விஸ்வம் அப்போது அடைந்திருந்த ஆத்திரத்தையும் அவமான உணர்வையும் மீறி க்ரிஷ் சொன்னதை ஆமோதிக்கும் வகையில் அவன் மனத்திரையில் கதேயின் கவிதை "Here eyes do regard you "In eternity's stillness;  "இங்கே கண்கள் உன்னைக் கணக்கிடுவது நித்தியத்தின் பேரமைதியில்”) என்ற வரி தனியாய் மிளிர்ந்தது. அந்தக் கவிதை சொன்ன கணம் இது தானோ? அதனால் தான் இத்தனை கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவோ?

க்ரிஷ் மனமுருகச் சொன்னான். “நண்பனே. உலகத்தில் இதுவரை வாழ்ந்த எந்த மனிதனுக்கும் உனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  வாழ்க்கையைக் கடைசி கணத்தில் திருத்தி எழுத யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இறைவன் உனக்கு மட்டும் அந்த வாய்ப்பு தந்திருக்கிறான். உன்னைப் போன்ற ஒரு அற்புத சிருஷ்டியைப் படைத்து விட்டு அது பாழாய்ப் போவதைப் பார்க்க அவனுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் உனக்கு மட்டும் அவன் இன்னொரு வாய்ப்பைத் தந்திருக்கிறான். கூடுவிட்டு கூடு பாயும் வித்தை நீ கற்றிருந்த கலையாக இருக்கலாம். ஆனால் உன் முயற்சியில் ஒரு வினாடி தவறியிருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்க வழியில்லை என்பதே உண்மை. அதனால் நீ சாதித்தாய் என்பதோடு இறைவன் அதை அனுமதித்திருக்கிறான் என்பதையும் சேர்த்தே நான் பார்க்கிறேன். இறைவன் உனக்கு மட்டுமே அளித்திருக்கும் இந்தச் சிறப்புச் சலுகையைத் தயவு செய்து நீ பயன்படுத்திக் கொள். புதிதாய் வாழ்க்கையை ஆரம்பி. இந்தப் புதிய உடலில் போதையின் தாக்கத்திலிருந்து நான்கே மாதத்தில் வெளிவரவும் பழையபடி சக்திகள் பெறவும் முடிந்த உனக்கு இனி புதிய பாதையில் உன் தகுதிக்கும் திறமைக்கும் பெருமை சேர்க்கிற எத்தனையோ சாதிக்க முடியும். சரியாகத் தீர்மானி நண்பா. உன் தீர்மானத்தில் நான் உன் விதியை மட்டும் பார்க்கவில்லை. மனித இனத்தின் விதியையும் சேர்த்தே பார்க்கிறேன்…”  

 
(அடுத்த வியாழன் முடியும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.





Thursday, March 31, 2022

இல்லுமினாட்டி 148



விஸ்வம் என்ன செய்வதென்று யோசித்தான். க்ரிஷின் பேச்சை விடக் காதில் நாராசமாக விழுவது இப்போதைக்கு அவனுக்கு வேறொன்றுமிருக்க முடியாது. அவனுடைய உபதேசம் கேட்டு விஸ்வம் மாறப் போவதுமில்லை.  ஆனாலும் இந்த முட்டாள் க்ரிஷ் எதோ சொல்ல ஆசைப்படுகிறான்.  கேட்க முடியாது என்றால் அவன் இங்கிருந்து போகவும் மாட்டான். அமானுஷ்யனும் கூடவே இங்கிருப்பான். இருவரும் சாக வேண்டியவர்களே. ஆனால் அதற்கு அவன் முயற்சி செய்ய இது உகந்த நேரமல்ல.

அமானுஷ்யன் விஸ்வத்தை விஸ்வத்தின் வேகத்திலேயே நெருங்க முடிந்தவன், செயல்பட முடிந்தவன் என்று காட்டியும் விட்டான். அவன் நினைத்திருந்தால் அவன் நிபுணனாக இருந்த வர்மக்கலை முடிச்சைப் போட்டு விஸ்வத்தைக் கோமாவிலும் ஆழ்த்தி இருக்க முடியும். தகராறுக்கு நின்றால் அடுத்த முறை அதைச் செய்யத் தயங்க மாட்டான். இத்தனை சக்திகள் பெற்று, செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்க கோமாவில் ஆழும் ஆபத்தில் சிக்குவது முட்டாள்தனம். அமானுஷ்யனின் சக்திகளை முழுவதுமாக அறிந்தாகி விட்டது. அதற்குத் தேவையானபடி பிற்காலத்தில் தயாராக்கிக் கொண்டு பின் அவனை வீழ்த்தலாம். பேசியே கொல்லும் இந்த எதிரி க்ரிஷையும் இப்போது கொல்வதை விட அவன் குடும்பத்தினரைக் கொன்ற பின் அந்த வேதனையை அனுபவிக்க வைத்த பிறகு கொல்வது தான் அவனுக்குச் சரியான தண்டனை. அதனால் இப்போதைக்கு இந்த முட்டாள் க்ரிஷ் பேச்சைக் கேட்டுத் தொலைப்போம் என்று விஸ்வம் முடிவெடுத்தான்.   

“சரி என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி விட்டுப் போய்த் தொலை” என்று சொன்ன விஸ்வம் இந்த முட்டாளின் பேச்சைக் கடைசியாக ஒரு முறை சகிக்கத் தயாரானான். ஜிப்ஸி விதி வலிது என்று நினைத்தான்.

க்ரிஷ் ஆரம்பித்தான். “நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஏன் அந்த முட்டாள்தனம் செய்கிறார்கள் என்று நிறைய யோசித்திருக்கிறேன். காரணம் என் பள்ளிக்காலத்தில் வித்யாதர் என்ற நண்பன் இருந்தான். அவன் குரலைப் போன்ற இனிமையானதொரு குரலை நான் இன்று வரை கேட்டதில்லை. ஜேசுதாஸ், பி பி ஸ்ரீனிவாஸ் இருவர் குரலையும் கலந்தது மாதிரியான குரல். அற்புதமாகப் பிசிறில்லாமல் பாடுவான். ஒரு காலத்தில் இசையுலகில் அவன் சக்கரவர்த்தியாக வருவான் என்று உறுதியாக நினைத்தேன். ஆனால் அவன் துரதிர்ஷ்டவசமாக போதைப் பழக்கத்தில் சிக்கி மாற்றிக் கொள்ள முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். சிகரம் தொட வேண்டிய குரல் வளமும், திறமையும் உள்ளவனைப் போதை இப்படிச் சீரழித்து விட்டதே என்று அவன் இறந்த நாள் முழுவதும் நான் அழுது கொண்டே இருந்தேன். நான் கடவுளிடம் பல நாள் கேட்டிருக்கிறேன். “இப்படியொரு குரல்வளத்தையும், திறமையையும் கொடுத்து அதைச் சிதைக்கிற ஒரு பழக்கத்தையும் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தாய் கடவுளே”. கடவுள் வழக்கம் போல பதில் சொல்லவில்லை. ஆனால் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் சில மாதங்களுக்கு முன்பு பதில் சொன்னான். “ஒருவன் என்ன ஆக வேண்டும் என்று அவனே தீர்மானிக்க வேண்டும் க்ரிஷ். உன் வித்யாதருக்கு இசை என்ற வரமும் இருந்தது. போதை என்ற சாபமும் கிடைத்தது. இந்த இரண்டில் ஒன்றைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை வந்த போது அவன் போதையைத் தேர்ந்தெடுத்தான். இசை அவனுக்கு முடிந்தது.” அந்தப் பதில் என்னை நிறைய யோசிக்க வைத்தது நண்பா. இசையை ஒதுக்கி வைத்து அவனால் போதையை எப்படித் தேர்ந்தெடுக்க முடிந்தது என்று எனக்குப் புரியவில்லை. அந்த இசையைப் பிடித்துக் கொண்டு போதையை அல்லவா அவன் மறந்தும் மறுத்துமிருக்கவேண்டும்?”

”அதற்குப் பிறகு நான்  நிறைய அது சம்பந்தமான மனோதத்துவ நூல்களைப் படித்து அந்த அடிமைப்பட்ட மனநிலையை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். அந்த மனிதர்கள் அந்தப் பழக்கத்தின் இறுதி விளைவு வரை என்றுமே சிந்திப்பதில்லை என்று தெரிந்தது. இப்போதைய சந்தோஷம் முக்கியம் அனுபவித்து விடு என்று மட்டும் சொல்லி அதில் திரும்பத் திரும்ப ஈடுபடுத்துகிறது. நாளைய வீழ்ச்சியை அது மறைத்து விடுகிறது. போதை மனிதனும் இதனால் ஒன்றும் பெரிதாக வந்துவிடப்போவதில்லை என்ற பொய்யான நம்பிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறான். ஒரு நாள் விளைவு பூதாகரமாக வருகிறது. அப்போது அதைத் தடுக்க வழியில்லாமல் மடிந்து போகிறான். ஆரம்பத்திலேயே இப்படியே போனால் எதில் கொண்டு போய் முடியும் என்று அவன் கடைசி வரை யோசித்திருந்தால் அந்த விபரீதப் பழக்கத்தை கஷ்டப்பட்டாவது நிறுத்தியிருக்கலாம்...”

இவன் எதற்கு இதைச் சொல்கிறான் என்பது விஸ்வத்துக்கு விளங்கவில்லை. ஆனால் தர்மம், நியாயம், அன்பு, பொதுநலம் என்று சொல்லிச் சித்திரவதை செய்யாதது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. க்ரிஷ் சொன்னதை அவனும் முழுமையாக மனதிற்குள் ஆமோதித்தான். அவனுக்கு நோக்குவர்மம் சொல்லிக் கொடுத்த இமயமலை சாதுவும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். சிறுவயதிலேயே நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்று விட்டிருந்த அவர் போதைப்பழக்கம் வந்த பின் வேறு எந்த உச்சத்தையும் அடையவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பின் தேர்ச்சி பெற்ற கலையைத் தக்க வைத்துக்கொள்ளவே அவர் நிறைய பாடுபட்டதைப் பக்கத்திலிருந்து விஸ்வம் பார்த்திருக்கிறான். இப்போதுள்ள இந்த உடலின் சொந்தக்காரன் எவ்வளவு மோசமாக தன்னை வருத்திக் கொண்டு இறந்தான் என்ற கதையை இந்த உடல் மூலம் அவன் அறிந்திருக்கிறான். உயர்வைத் தேர்ந்தெடுப்பவன் தாழ்வை விலக்க வேண்டும் என்பதில் அவனுக்கும் இரு கருத்தில்லை.  


க்ரிஷ் தொடர்ந்தான். “எதிலும் ஆழமாக ஈடுபடுபவன் தன் பழக்க வழக்கங்களின் விளைவுகளை, போக்கின் விளைவுகளைக் கடைசி வரை யோசித்துப் பார்க்க வேண்டும். அந்த முடிவுநிலை அவனுக்கு உயர்வு தானா, நிறைவு தானா, பெருமைப்படும் நிலை தானா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அது உயர்வாக இருந்தால் தொடர வேண்டும், வீழ்ச்சியாக இருந்தால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வேண்டும். அது தானே உண்மையான அறிவு நண்பா?”

அவன் சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும் அவன் பதிலை எதிர்பார்த்தது விஸ்வத்துக்குப் பிடிக்கவில்லை. எதற்கோ வலை விரிக்கிறான் என்று தோன்றியது. ஆனாலும் சீக்கிரம் முடித்துத் தொலையட்டும் என்று நினைத்தவனாக விஸ்வம் “ஆமாம்” என்றான்.

“நீ உன்னுடைய இப்போதைய இலக்கையும் போக்கையும் முடிவு வரை யோசித்துப் பார்த்திருக்கிறாயா நண்பா?” க்ரிஷ் கேட்டான்.

இனி இவனிடம் பதில் சொல்வது ஆபத்து என்று எண்ணிய விஸ்வம் இறுக்கமான முகத்துடன் மௌனமாக நின்றான்.

சில வினாடிகள் பதிலை எதிர்பார்த்து விட்டு க்ரிஷ் தொடர்ந்தான். “இறுதி நிலைக்கு நீ சிந்திக்க அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை நண்பா. எர்னெஸ்டோவைப் பார், போதும். ஏனென்றால் நீ ஆசைப்படும் ஒரு பதவியில்  இருபத்தைந்து வருடங்களாக முடிசூடா மன்னராக இருக்கும் அவருக்கு பிதோவனின் இசை சலிக்கவில்லை, ஆனால் அந்தப் பதவி சலித்து விட்டது என்று அவர் சொல்கிறார். ஒருவர் சலிப்புடன் சுமந்து வரும் பதவிக்கா நீ உன் இளமைக்காலத்திலிருந்து தயாராகி வருகிறாய்? இல்லுமினாட்டியின் பழைய தலைவர்களை எத்தனை பேர் நினைவு வைத்திருக்கிறார்கள். இவரையும் உலகம் எத்தனை காலம் நினைவில் வைத்திருக்கும். இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் அதல்லவா நிலைமை?”

விஸ்வம் இந்தப் பேச்சின் போக்கை ரசிக்கவில்லை. அவன் சொன்னான். “தலைமைப்பதவியை வைத்துக் கொண்டு ஒருவன் என்னவெல்லாம் சாதிக்க முடிகிறது என்பது தான் ஒரு தலைவனை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது க்ரிஷ். நான் அந்தப் பதவியில் இருந்திருந்தால் உலகத்தின் விதியை மிக வலிமையாய் எழுதியிருப்பேன். பதவி சலித்துப் போவது சாதனைகளை நிறுத்தும் போது தான். நான் கடைசி மூச்சு வரை சாதனைகளை நிறுத்தியிருக்க மாட்டேன்...”

க்ரிஷ் வருத்தத்துடன் புன்னகைத்தான். “இப்போதைய போக்கே உன்னிடம் தொடருமானால் வேகமாக நிறைய செய்வாய். ஆனால் அது சாதனையாக இருக்காது. உன்நான்என்ற கர்வத்துக்குத் தீனி போடும் காரியங்களைத் தான் நீ செய்திருப்பாய்பேரழிவுகளை வேகமாகவே கொண்டு வந்திருப்பாய். நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்தப் பேரழிவுகளைக் கொண்டு வர நீ வேண்டுமா? எந்த ஒரு முட்டாளும் கூட யோசிக்காமல் செய்து முடிக்கலாமே. போதை இப்போதைய சந்தோஷத்தைச் சொல்வது போல் நீயும் இப்போதைய வெற்றியில் பெருமை கொள்கிறாய். முடிவில் என்ன சாதிக்கப்போகிறாய்?  மனதில் தணியாத அக்னியோடு ஆரம்பித்தவன் நீ. ஒரு இலக்கை எடுத்துக் கொண்ட பின் அதை அடையாமல் இருந்தவன் அல்ல நீ. இலக்கை அடையும் வரை நீ இளைப்பாறியதில்லை, அரைகுறைகளில் நீ திருப்தி அடைந்ததில்லை. உதவாத விஷயங்களில் நீ உலாவப் போனதில்லை. ஒவ்வொன்றாக எத்தனையோ அமானுஷ்ய சக்திகளைப் பெற்ற நீ கடைசியாகச் சாதிக்கப் போவது எல்லாவற்றையும் வேகமாக அழிப்பது தானா? அழிப்பதற்கு இத்தனை சிரமங்கள், உழைப்பு வேண்டுமா? எதையும் உருவாக்கி வளர்ப்பதற்கல்லவா இத்தனையும் வேண்டும்!”

மெல்ல அந்தச் சர்ச்சில் இருந்த ஓவியங்களில் மறைந்திருந்த இல்லுமினாட்டி சின்னம் மின்ன ஆரம்பித்தது. அத்தனை ஓவியங்களில் இருந்தும் பிரமிடுக்குள் இருந்த கண் பார்ப்பது போலவே அனைவரும் உணர்ந்தார்கள். இருள் மண்டிக் கிடந்த சர்ச்சில் மெலிதான ஒளி பரவ ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.