சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, January 25, 2020

சங்கீத மும்மூர்த்திகள் நூல் அமேசான் கிண்டிலில் வெளியீடு!




அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


என் சங்கீத மும்மூர்த்திகள் நூல் அமேசான் கிண்டிலிலும் தற்போது வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். லிங்க்-


நூலில் இருந்து சில பகுதிகள்:


சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் தான் சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்பட்டவர்கள். மூவரும் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூரில் பிறந்தவர்கள்.

ஜனனாத் கமலாலயே, தர்ஷனாத் அப்ரசதாசி

ஸ்மரணாத் அருணாசலம், காசி து மரணாந் முக்தி!


என்கிறது ஒரு சமஸ்கிருத சுலோகம். அதாவது கமலாலயம் இருக்கும் திருவாரூரில் பிறப்பதும், சிதம்பரத்தை தரிசிப்பதும், அருணாச்சலத்தை நினைப்பதும், காசியில் இறப்பதும் முக்தியைக் கொடுக்கும் என்பது இந்த சுலோகத்தின் பொருள். அதற்கேற்றாற் போலவே சங்கீத மும்மூர்த்திகளும் இதே திருத்தலத்தில் பிறந்து முக்திக்கு வழி வகுத்துக் கொண்டார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
.....

தியாகராஜரைத் தமது சபைக்கு அழைத்து தம்மைப் பற்றியும் பாடச் செய்ய வேண்டுமென சரபோஜி விரும்பினார். பட்டு, பீதாம்பரம், பொற்காசுகள் எல்லாம் கொடுத்தனுப்பி அரசவைக்கு வந்து தன்னைப் பாட மன்னர் தியாகராஜருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து ‘நிதிசால சுகமா” என்ற கிருதியைக் கல்யாண இராகத்தில் பாடினார்.

(நிதியும் செல்வமும் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா, அல்லது ஸ்ரீராமனின் சன்னிதியில் சேவை புரிவது அதிக சுகம் தருமா? மனமே, இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவை தருமா, அல்லது தசரத குமாரன் இராமனைத் தியானித்துப் பாடல் அதிக சுவை தருமா? அடக்கம், சாந்த குணங்கள் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா அல்லது நல்ல மனம் படைத்த தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகமா?)
......

“ப்ரோத்து பொய்யெனு” என்று துவங்கும் தோடி ராகக் கிருதியில் மனித வாழ்க்கை எப்படியெல்லாம் கழிகிறது என்று தியாகையர் சொல்லும் விதம் வெகு யதார்த்தம். ”பொழுது போனது- உறக்கத்துடன் சில நாள், விஷய எண்ணங்களுடன் சில நாள், அற்ப ஆசைகளுக்காக மனிதரைப் புகழ்ந்து சில நாள், பட்டி மாடு போல கண்ட இடங்களில் உண்டு கழித்து ஏதுமறியாமல் சில நாள், முறை தவறிய தீய மக்களிடம் மூடத்தனமாய் உரையாடி சில நாள், களிப்புடன் செல்வம், மக்கள் வீடுகளை செருக்குடன் நோக்கி சில நாள், முடிவில் அறிவு தவறிய முதுமையுடன் முன்பின் தெரியாமலே சில நாள்...” இப்படியெல்லாம் ராமனை அறியாமலே நாட்கள் சென்றன என்று ஆத்மவிசாரம் செய்கிறார் தியாகையர்.
......

ஓ மனசா என்று மனதைக் கேள்வி கேட்கும் விதமாக அவர் பல அருமையான பாடல்கள் பாடி உள்ளார். எத்தனை தான் ஞானம் பெற்றிருந்தாலும் பல சமயங்களில் அலைபாய்ந்து முரண்டு பிடிக்கும் இயல்புடையது மனித மனம். ஒரு நேரம் வசப்பட்டது போலத் தோன்றினாலும் இன்னொரு சமயம் மனம் கட்டுக்கடங்காமல் தன் போக்கில் செல்லக் கூடியது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம். தியாகையர் மனதிற்கு புத்தி சொல்லியும், நியாயம் சொல்லியும் பாடி இருக்கும் பாடல்கள் பலவும் நமக்காகவும், நம் மனதிற்காகவும் பாடப்பட்டது போலத் தோன்றும் அளவு இயல்பானவை.
......

ஏற்கெனவே அச்சில் வந்திருக்கும் இந்த நூல் அமேசான் கிண்டிலிலும் வெளியாகி உள்ளதால் வெளிநாடுகளில் உள்ள இசையார்வம் மிக்க வாசகர்களும் இதைப் படிப்பது எளிதாக இருக்கும். அச்சில் உள்ள இந்த நூலை வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். அச்சு நூலின் விலை ரூ.75/-

அன்புடன்
என்.கணேசன்.

2 comments:

  1. அற்புதம் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete