சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 29, 2021

இல்லுமினாட்டி 100
மிருதுளா தன் வாழ்க்கைக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. செல்லமா வளர்ந்தேன். நல்லா படிப்பேன். பள்ளிக்கூடத்துல எல்லாப் போட்டிகள்லயும் கலந்துக்குவேன். ஒவ்வொன்னுலயும் ஏதாவது ஒரு பரிசு வாங்காம இருக்க மாட்டேன். அப்பா என்னைப் பையன் மாதிரி வளர்த்தார். சுதந்திரம் கொடுத்தார். பத்தாம் வகுப்புல நான் மாவட்டத்துல முதல் மார்க் வாங்கினேன். ஆனால் ரிசல்ட் வந்த நாள் தான் என் அப்பா மாரடைப்புல காலமானார். அப்புறம் அம்மாவோட தம்பி வீட்டுல அடைக்கலம்... அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. என்னை விட வயசுல சின்னவங்க. கல்லூரிப் படிப்பு மாமா தயவுல கிடைச்சுது. அங்கே படிக்கறப்ப தான் கூடப்படிச்ச ரகு கூட காதல் வந்தது...”

வீட்ல மாமா எங்க காதலை ஏத்துக்கல. ஜாதி மாத்தி எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தா அவரோட பொண்ணுங்களுக்கு நல்ல வரன் கிடைக்காதுன்னு அவர் கவலைப்பட்டார். யாரும் இல்லாத காலத்துல ஆதரவு தந்தவர், படிக்க வச்சவர்ங்கற நன்றிக் கடன்ல காதலை மறந்து அவர் பார்க்கிற பையனைக் கட்டிக்க நான் தயாரானேன். ரகுவுக்கு அதில் வருத்தம்னாலும் என்னைப் புரிஞ்சுகிட்டு நாகரிகமா ஒதுங்கிட்டார்...”

உன் அப்பாவோட என் கல்யாணம் ஆச்சு. ஒரு வருஷத்துல நீயும் பிறந்துட்டே. உன் அப்பாவுக்கு ஈகோ அதிகம். நான் அவரை விடப் புத்திசாலியாயிருந்ததும், துணிச்சலாயிருந்ததும் அவருக்குச் சுத்தமா பிடிக்கலை.  மனைவிங்கறவ கணவனைக் கேட்டு தான் எல்லாம் செய்யணும், அடங்கி நடக்கணும், தானா சின்ன முடிவு கூட எடுக்கக்கூடாது, வெளியாள்கள் கிட்டப் பேசக்கூடாது, அழகா டிரஸ் பண்ணிக்கக்கூடாது, அவர் கூட இருந்தால் மட்டும் தான் வெளியே போகணும், இல்லாட்டி போகக் கூடாதுன்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவருக்கு இருந்துச்சு. என்னால அது முடியல சிந்து. ஒரு ஜெயில் வாழ்க்கையை விடக்கொடுமையாய் நான் உணர்ந்தேன். ஏதாவது நியாயம் கேட்டாலோ, எதிர்த்துப் பேசினாலோ அப்புறம் ஒரு மாசம் மனுஷன் பேச மாட்டார். என் கிட்டே மட்டுமல்ல குழந்தை உன்னைக் கூட எடுத்துக்க மாட்டார். எங்க மாமாவைக் கூப்பிட்டனுப்பி புகார் சொல்வார். என் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சாலும் மாமா அவரைத் திருப்திப்படுத்த எனக்கு புத்திமதி சொல்லிட்டு போவார் ...”

ஒரு தடவை என் மாமாவுக்கே சலிச்சுப் போச்சு. அவர் சொல்ற புகார் மகா அபத்தமாய் பட்டுடுச்சு. ”எந்தக் காலத்துல இருக்கீங்க மாப்பிள்ளை. படிச்சவங்க நீங்க இப்படிச் சொல்றதே தப்பில்லையான்னு அவர் கேட்டுட்டார். அதுல இருந்து அவர் மேல கூட உன் அப்பாவுக்குக் கோபம் வந்துடுச்சு. அப்ப இருந்து மாமாவுக்கு என் வீட்டுக்கு வர அனுமதி இல்லை. அதே மாதிரி எனக்கும் அவர் வீட்டுக்குப் போக அனுமதியில்லை... எங்கம்மா இறந்தப்ப மட்டும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வர அனுமதி கொடுத்தார். ஆனால் மாமா வீட்டில் அம்மா பிணம் இருந்ததால உங்கப்பா அவளைப் பார்க்கக்கூட வரலை... எங்கம்மா கருமாதி சடங்குகள் எதுக்கும் போக எனக்கும் அனுமதி இல்லை.”

அதுக்கப்புறம் எனக்கு ரொம்பவே வெறுத்துப் போச்சு.  அந்த ஆள் கூட வாழ எனக்குப் பிடிக்கலை. அவரை விவாகரத்து பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்குத் தெரிஞ்ச ஒரே வக்கீல் ரகு தான்... ரகு அப்ப தான் ப்ராக்டிஸ் ஆரம்பிச்சு இருந்தார். அவர் கிட்ட போய் என் நிலைமையைச் சொன்னேன். அவர் விவாகரத்து வாங்கித் தர்றது மட்டுமில்லாமல் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னார்.  உன்னையும் சேர்ந்தே ஏத்துக்கறதா சொன்னார்.  அந்தப் பெருந்தன்மையை நான் எதிர்பார்க்கலை.”

வீட்டுக்கு வந்து உன் அப்பா கிட்ட எங்கள் முடிவைச் சொன்னேன். அவர் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஆத்திரத்தில் கண்டபடியெல்லாம் கேவலமாய் பேசினார், அதுக்கெல்லாம் நான் அசராததைப் பாத்து பிறகு அமைதியானார். பிறகு உன்னையும் என்னையும் மாறி மாறி ரொம்ப நேரம் பார்த்தார். கடைசில  அவர்நீ வேணும்னா போய்க்கோ. நான் என் குழந்தைய விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னார்.”

ரகு கூட வீட்டுக்கு வந்து உன் அப்பா கிட்ட பேசினார். அவரையும் கேவலமா பேசி உன் அப்பா வெளிய அனுப்பிச்சிட்டார்.  நான் என்ன ஆனாலும் சரி அவர் கூட வாழ மாட்டேன்னு உறுதியா நின்ன பிறகு அவரும் உறுதியாவே சொன்னார். ”விவாகரத்து வேணும்னா தர்றேன். ஆனா எனக்குன்னு இந்த உலகத்துல இருக்கிறது என் பொண்ணு ஒருத்தி தான். அவளை மட்டும் விட்டே தர மாட்டேன். எவ்வளவு வருஷமானாலும் சரி, எத்தனை செலவானாலும் சரி சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்னு பிடிவாதமா சொன்னார்.”

ரெண்டு பேரும் சம்மதிச்சு விவாகரத்து கேட்டால் ஓரளவு சீக்கிரமே விவாகரத்து கிடைக்கும். அப்படியில்லாட்டி விவாகரத்து கிடைக்க குறைந்தது ஏழெட்டு வருஷமாவது ஆகும்ங்கற நிலைமை இருந்தது. அது வரைக்கும் அந்த ஆள் கூட வாழ்றதுல எனக்கு உடன்பாடு இருக்கலை. ஆனாலும் கடைசி வரைக்கும் தொடர்ந்து அந்த ஆள் கிட்ட உன்னை எடுத்துட்டு போறேன்னு கெஞ்சியிருக்கேன் சிந்து. அந்த ஆள் ஒத்துக்கலை. அது மட்டுமல்ல. அந்த ஒரு மாசம் உன் மேல உயிரையே வெச்சிருக்கற மாதிரி நடிச்சார்; எப்பப் பாரு உன்னை அவரே தூக்கி வெச்சிருப்பார்.... விவாகரத்துக்குக் கையெழுத்துப் போடணும்னா உன் தலை மேல கை வெச்சு எப்பவுமே உனக்காக உரிமை கொண்டாடி வர மாட்டேன்னும், உன்னைப் பார்த்துப் பேச நான் எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன்னும் சத்தியம் பண்ணித் தரச் சொன்னார்.”

எனக்கு அந்த ஆள் கூட அதுக்கு மேல மல்லுக்கட்ட முடியல. யோசிச்சுப் பார்த்தப்ப உன் மேல எனக்கு இருக்கிற உரிமை அவருக்கும் இருக்குன்னு தோணுச்சு. மனைவியைக் கொடுமை பண்றவன் கூட அவன் ரத்தம்கிறதால குழந்தைகள் கிட்ட நல்லபடியா இருக்கிறதை நானும் பல இடங்கள்ல பார்த்து இருக்கேன். அதையெல்லாம் நினைச்சு அழுதுகிட்டே உன் வாழ்க்கைல நான் எப்பவும் எந்த விதத்துலயும் குறுக்கிட மாட்டேன்னு உன் தலை மேல் சத்தியம் பண்ணிக் குடுத்தேன் சிந்து.... பிறகு தான் விவாகரத்துக்குக் கையெழுத்துப் போட்டார். விவாகரத்து கிடைச்சவுடனேயே யார் கிட்டயும்  சொல்லிக்காமல் உன்னைத் தூக்கிட்டு ஊரை விட்டும் போயிட்டார்.... எங்கே போனீங்கன்னும் தெரியல. அதே ஊர்ல இருந்திருந்தா தெரிஞ்சவங்க மூலமா என்ன நடக்குதுன்னாவது எனக்குத் தெரிஞ்சிருக்கும்... சத்தியமும் செஞ்சு குடுத்திருந்ததால நான் உன்னைத் தேடவும் முயற்சி எடுக்கல. எங்கேயோ நீ நல்லாயிருப்பாய்னு நம்பிக்கையோட இருந்துட்டேன்.. அப்படி உன் மேல வெறுப்பிருக்கிற ஆள் நான் கெஞ்சினப்ப என் கூடவே அனுப்பிச்சு அந்த ஆளோட அடுத்த குடும்பத்தோட நிம்மதியாய் இருந்திருக்கலாமே. அதை ஏன் செய்யலன்னு எனக்கு இன்னும் புரியல சிந்து....”

இன்னைக்கு உன்னைப் பார்த்தப்ப கூட அம்மாவை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிறதாய் நினைச்சேனே ஒழிய ஒரு ஓடிப்போன அம்மா கிட்ட நியாயம் கேட்கற மகளாய் வந்திருப்பாய்னு நினைச்சே பார்க்கலை...”

மிருதுளா மகள் தோளில் சாய்ந்து அழுதாள். அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கையில் அவள் மகள் ஒவ்வொரு நிமிடமும் சித்திரவதைப் பட்டு வாழ்ந்து கொண்டிருந்ததை அவளால் தாங்க முடியவில்லை. சிந்துவின் கண்களும் மெல்லக் கலங்க ஆரம்பித்தன.

சிந்துவுக்கு நடந்திருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் தந்தையின் மகாமட்டமான குணத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் காரணத்தை உளவியல் நிபுணர்கள் கூட்டாக ஆராய்ந்தாலும் கண்டுபிடிக்க முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளே காரணங்களை யோசித்துப் பார்த்தாள். ஆரம்பத்தில் இருந்தே அம்மாவைப் பற்றி ஒரு முற்றிலும் பொய்யான பிம்பத்தை அப்பா அவள் மனதில் மட்டுமல்ல, மற்றவர்கள் மனதிலும் உருவாக்கி வைத்தது தன் மேல் குற்றமில்லை என்று காண்பித்துக் கொள்வதற்காக இருக்கலாம். சிந்துவிடமே அந்தப் பொய்யைச் சொல்லி நம்ப வைத்து தாயை வெறுக்க வைத்ததும், மிருதுளாவுடன் மகளை அனுப்பாமல் இருந்ததும் மிருதுளாவைத் தண்டிக்கும் முயற்சியாக இருந்திருக்கலாம். மிருதுளாவின் தோற்றத்திலேயே வளர்ந்து வந்த மகள் அவளைப் போலவே புத்திசாலியாகவும் இருந்தது அவர் மனதில் மேலும் வெறுப்பை வளர்த்தியிருக்கலாம்...

காரணங்கள் என்னவாக இருந்தாலும் அவரால் அவள் இழந்தது ஏராளம். இழக்கவிருந்ததும் ஏராளம்.... க்ரிஷ் மட்டும் நெருக்கடியைத் தந்து அவளைக் கிளப்பியிருக்காவிட்டால் இங்கு வந்திருக்க மாட்டாள். அவள் தாயைப் பற்றிய தவறான அபிப்பிராயத்திலேயே வாழ்ந்து இறந்துமிருப்பாள்.

(தொடரும்)
என்.கணேசன்
Monday, April 26, 2021

யாரோ ஒருவன்? 29


சில மனிதர்களிடம் சில தகவல்களைச் சொல்வது குளவிக் கூட்டில் கல் எறிவதைப் போன்றது. அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருக்கும் யாருமே நிம்மதியாக இருக்க முடியாது. வேலாயுதம் தர்ஷினி தீபக்கிடம் பக்கத்து வீட்டுத் தகவலைச் சொன்னதை அந்த வகையிலேயே எடுத்துக் கொண்டார்.  தர்ஷினி சொன்னதைக் கேட்டு தீபக் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. தர்ஷினிசரிஎன்று சொல்லி அலைபேசியைக் கீழே வைத்தவுடன் லேசான பயத்துடன் அவர் பேத்தியைக் கேட்டார். ”என்னம்மா சொன்னான்?”

அவன் நேர்லயே வர்றானாம்என்று தர்ஷினி சாதாரணமாகச் சொன்னாள்.

வேலாயுதம் பேத்தியைக் கடிந்து கொண்டார். “நீ ஓட்டை வாய்ம்மா. அவன் கிட்ட போய் இதையெல்லாம் சொல்லுவாங்களா? அவனுக்குச் சில சமயங்கள்ல இங்கிதமே போதாது. அவன் நேரா பக்கத்து வீட்டுக்குப் போய்உங்கள் வீட்டுல பாம்பு இருக்கான்னு கேட்டாலும் கேட்டுடுவான்...”

போங்க தாத்தா அவன் அப்படியெல்லாம் கேட்க மாட்டான்என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்ன தர்ஷினி அங்கிருந்து போய் விட்டாள்.

அவனும் அவளும் சிறு வயதிலிருந்தே மிக நெருங்கிய நண்பர்கள். அந்த நெருக்கம் இப்போது காதலாகவும் மாறியிருந்ததுசிறு வயதிலிருந்த சம அந்தஸ்து இப்போது இல்லை என்பதால் வேலாயுதத்துக்கு அந்தக் காதலில் உடன்பாடு இல்லை. சரத் கல்யாணின் நண்பன் என்றாலும் இப்போது கல்யாணுக்கு வேலைக்காரன் தான். வைஸ் பிரசிடெண்ட் என்று அந்த வேலைக்கு பெயரைக் கௌரவமாகச் சொன்னாலும், அவர்களே கொடுத்த அந்தப் பதவி அவனைச் சம அந்தஸ்துக்கு உயர்த்தி விடாது.  தீபக்கின் கல்வியையும் வேலாயுதம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது தெருவுக்குத் தெரு பல டாக்டர்கள் இருக்கிறார்கள். சரத்துக்கு ரேஸ் கோர்ஸிலேயே சொந்த வீடு இருக்கிறது என்றாலும் அந்த ஒரு சொத்து தான் அவனிடம் இருக்கிறது. அதுவும் வங்கியில் கடன் வாங்கிக் கட்டியது. இன்னும் அதில் கடன் கொஞ்சம் பாக்கி இருக்கிறதாகப் போன வாரம் கூட சரத் சொன்னது அவருக்கு நினைவிருக்கிறது.  இப்போது கல்யாணுக்கு அந்த வீடு மட்டுமல்லாமல் வேறொரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸும், கோத்தகிரியில் ஒரு எஸ்டேட்டும் சொந்தமாக இருக்கிறது.

இந்தக் காரணங்களால் தீபக்தர்ஷினி காதலை அவர் தன் மகனிடம் தீவிரமாக எதிர்த்து வந்தார்.  ஆனால் மகள் மீது அதீத பாசம் வைத்திருந்த கல்யாண் ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தான்அவர் ஏதாவது செய்து அந்தக் காதலைக் கத்தரித்து விடச் சொன்ன போதெல்லாம்அந்தச் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்என்று மட்டும் சொல்லி வந்தான்.  

அவர் மருமகள் மேகலாவிடம் இதைச் சொல்லியும் பயனும் இல்லை. அவளுக்கும் தீபக் மீது பிரியம் இருப்பதால் அவள் இந்தக் காதலுக்கு மறுப்பு சொல்லப் போவதில்லை. அவளுக்கு அந்தஸ்து ஒரு பிரச்சினையே அல்ல. பெருஞ்செல்வந்தரின் ஒரே மகளாகப் பிறந்த அவளுக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.  

அந்தஸ்து கவுரவம் பார்க்கும் விஷயத்தில் அவள் மகள் தர்ஷினியும் அவளைப் போலவே இருந்தாள். அதனால் அவளிடம் அந்தஸ்தைக் காரணம் காட்டி காதலை நிறுத்த வழியில்லை. “ஏன் தாத்தா பணம் பணம்னு அலையறீங்க?” என்று அவள் அடிக்கடி அவரிடம் சலித்துக் கொள்பவள். பணக்காரியாகவே பிறந்து செல்வச்செழிப்பிலேயே வளர்ந்து வரும் அவளுக்கு  பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. ஏழ்மை என்ன என்று உணர்ந்து போராடி இருக்கும் அவருக்கு அதன் அருமை நன்றாகவே தெரியும்...  

இப்போது அவர் கவலை அவர்கள் காதலைத் தாண்டி பக்கத்து வீட்டு விஷயத்தில் தீபக் வந்து என்ன செய்வான் என்பதில் தங்கியது. தீபக் பல விதங்களில் அவருக்கு மாதவனை நினைவூட்டினான்.  எதிலும் ஒரு வேகம், அதீத ஆர்வம், உற்சாகமான ஈடுபாடு....

என்னப்பா தீவிர யோசனை?” என்று கல்யாண் அருகே வந்து கேட்ட போது பரபரப்புடன் அவர் நடந்ததைச் சொன்னார். “இத்தனைக்கும் உன் பொண்ணு கிட்ட பாம்பு சீறல் சத்தம் அடிக்கடி பக்கத்து வீட்டுல இருந்து கேட்குதுன்னு மட்டும் தான் சொல்லியிருந்தேன். மத்த எதையும் சொல்லலை. அதுக்கே அந்த ஓட்டை வாய் அவனைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாள்....”

முதலில் கல்யாணும் நெற்றியைச் சுருக்கினாலும் பின் அவன் புன்னகையுடன் சொன்னான். “சில சமயங்களில் நம்மள மாதிரி ஆள்களோட அணுகுமுறையை விட அவன் மாதிரி ஆள்களோட அதிரடி நடவடிக்கை பலன் தரும். பக்கத்து வீட்டுக்காரன் கவனத்தை நம்மால் இன்னும் நம் பக்கம் திருப்ப முடியலை. அவன் எப்படியாவது அங்கே உள்ளே நுழைஞ்சுட்டா, அப்பறமா நாமளும் அவன் பின்னாலயே போய் சேர்ந்துக்கலாம். விடுங்கள். நடக்கறது எல்லாம் நல்லதுக்குத் தான்...”

கல்யாண் சொல்வதும் சரியாகவே தோன்ற இருவரும் தீபக்கின் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.


க்யான் சந்த் நரேந்திரன் போன பிறகு கவலையில் மூழ்கினான். கடந்த காலத் தவறுகள்  இத்தனை காலம் கழித்து மறுபடியும் கேள்விகளை எழுப்பும் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.  வந்து போன ரா அதிகாரி லேசுப்பட்டவனாகத் தெரியவில்லை. அவன் பார்த்த பார்வையே அவனை உறுதியானவனாகக் காட்டியிருந்தது. எதற்கும் அவன் வந்து போனதைப் பழைய இன்ஸ்பெக்டர் மதன்லால் காதில் போட்டு வைப்பது நல்லதென்று தோன்றியது. மதன்லாலின் போன் நம்பர் அவனிடம் இருக்கவில்லை. தொடர்பு வைத்திருக்கும்படியான நல்ல மனிதன் அல்ல அவன். ஆனால் விதி மறுபடி தொடர்பைத் தொடரக் கட்டாயப்படுத்துகிறது. அவன் என்ன செய்ய முடியும்? இரண்டு போலீஸ் நண்பர்களைத் தொடர்பு கொண்டு மதன்லாலின் அலைபேசி எண்ணை வாங்கிய க்யான் சந்த் உடனே மதன்லாலை அழைத்தான்.

நமஸ்தே மதன்லால்ஜி. மணாலியிலிருந்து க்யான் சந்த் பேசறேன்....”

மதன்லாலுக்கு அவனை உடனடியாக நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. “க்யான் சந்தா? எந்த க்யான் சந்த்?” என்று தன் கட்டைக் குரலில் கேட்டான்.

ஜீ. டாக்சி டிரைவர்  க்யான் சந்த்ஜீ.... என்னோட டாக்சில தான் வெடிகுண்டு வெடிச்சி....” என்று க்யான் சந்த் குறிப்பு காட்டி நிறுத்தினான்.

மதன்லால் உடனே நினைவு கூர்ந்தான். “ம்ம்ம்…. சொல்லு என்ன விஷயம்?”

ஜீ!  ரால இருந்து ஒரு அதிகாரி அந்தப் பழைய விபத்து விஷயமாய் என்னை விசாரிக்க இன்னைக்கு வந்திருந்தார்உங்களையும் விசாரிக்க வரலாம்…. அதைச் சொல்ல தான் போன் செஞ்சேன்…”

மதன்லால் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கும் அந்தத் தகவல் அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்க வேண்டும்…. பின் மெல்லக் கேட்டான். “அந்த ஆளுக்கு என்ன தெரிய வேண்டுமாம்? எதை முக்கியமாய் கேட்டான்?”

அஜீம் அகமது பத்திக் கேட்டார். அப்பறம் டாக்சியில் யாருக்காக வெடிகுண்டு வைக்கப்பட்டது எந்த நேரத்தில் வைக்கப்பட்டதுன்னு கேட்டார்.”

நீ என்ன சொன்னாய்?”

எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன்

சரி தான். வரட்டும் நானும் அதையே சொல்லிடறேன். நமக்குத் தெரியாததை நாம எப்படிச் சொல்ல முடியும்?(தொடரும்)
என்.கணேசன்     

Friday, April 23, 2021

சாத்தான் நடனமும், யோக சக்திகளும்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்25

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மற்றும் கர்னல் ஓல்காட்டின் இலங்கைப் பயணம் தியோசபிகல் சொசைட்டியை அந்த நாட்டு மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக இருந்தது. சென்ற இடங்களில் எல்லாம் தியோசபிகல் சொசைட்டி குறித்து சொற்பொழிவு ஆற்றி ஆன்மிகத்தை இருவரும் பரப்பியதோடு நின்று விடாமல் அந்த இடத்தில் பின்பற்றப்பட்ட ஆன்மிகத்தையும், வித்தியாசமான சடங்குகளையும் கவனித்து அதன் சாராம்சத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு பலனடைந்தார்கள். இலங்கையில் அவர்கள் கண்ட வித்தியாசமான சடங்கு சாத்தான் நடனமாக இருந்தது.

 

அந்த சாத்தான் நடனம் தீர்க்க முடியாத, கடும் வியாதிகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது.  அந்த நடனத்தை ஆட தேர்ச்சி பெற்ற சிலர் வரவழைக்கப்பட்டார்கள். கொடிய நோய்களால் தாக்கப்படுவதை அவர்கள் சாத்தானால் அல்லது தீய சக்திகளால் ஆட்கொள்ளப்படுவதாகவே கருதினார்கள். அந்த நோயைக் குணப்படுத்த சாத்தான் அல்லது தீயசக்திகளை வியாதியஸ்தர்களின் உடல்களில் இருந்து விரட்ட வேண்டும் என்று எண்ணினார்கள். அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விரதமிருந்து அந்தச் சடங்கை மேற்கொள்வார்கள். சில மந்திரங்கள் சொல்லிப் பின் அந்தச் சடங்கு ஆரம்பிக்கப்படும். ஆடுபவர்கள் ஒரு கையால் தென்னங்கீற்றுகளால் ஆன நீண்ட ரிப்பன்களைச் சுழற்றிக் கொண்டும், மறு கையால் தீப்பந்தங்களை ஆட்டிக் கொண்டும் இருப்பார்கள், ஒரு கட்டத்தில் சில மூலிகை மருந்துகள் எரிக்கப்படும். நடனமும் துரிதப்படுத்தபடும். புகைமண்டலத்திற்கு நடுவே வியாதிகளுக்குத் தீர்வும் நடனமாடுபவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். அதன்படி அவர்கள் இயங்குவார்கள்.  முடிவில் அருகே இருக்கும் மரங்கள் ஏதாவதிலிருந்து ஒரு கிளை முறிந்து விழும். அது முறிந்து விழுகையில் நோய்வாய்ப்பட்டவரின் உடலில் இருந்து நோய் விடைபெற்றிருக்கும். அந்தச் சடங்கை நேரில் பார்க்கையில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அந்தச் சடங்குகளுக்குப் பின்னால் இருந்த சூட்சும விஷயங்களைக் கூர்ந்து கவனித்தார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது எத்தனையோ காரணம் தெரியாத வினோதமான நோய்கள் எல்லாம் இந்த வித்தியாசமான சடங்கில் குணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது.

 

அடுத்த நாள் மாலை தியோசபிகல் சொசைட்டியின் ஆன்மிகக் கருத்துகள் குறித்து  கர்னல் ஓல்காட் சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் நீண்ட சொற்பொழிவாற்றினார். அவர் சொன்னதை எல்லாம் மிகவும் கவனமாக அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்ட போதிலும் பேச்சை அவர் முடித்த  போது ஒரு கைத்தட்டலோ, பாராட்டோ ஒருவரிடமிருந்தும் வரவில்லை. கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் தாழ்ந்த குரலில் கேட்டார். “என் பேச்சு நன்றாக இருக்கவில்லையா?”

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “அருமையாகப் பேசியிருந்தீர்கள்என்று சொன்னார்.

 

கர்னல் ஓல்காட்பின் ஏன் இவர்கள் இப்படி அமைதியாக இருக்கிறார்கள். ஒரு கைத்தட்டல் கூட இல்லையே

 

அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்களர் சொன்னார். “ஐயா தாங்கள் சொன்ன ஆன்மிகக்கருத்துகளை உள்வாங்கி அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த உள்வாங்கலையும், சிந்தனைகளையும் பாதிக்கக்கூடிய எந்தச் செயலிலும் ஈடுபடுவது சரியல்ல என்று நாங்கள் நம்புகிறோம்...அதனால் கைத்தட்டல் கூட ஒரு இடையூறு என்று நினைத்துத் தான் அமைதியாக இருக்கிறோம்.”   

 

இது கர்னல் ஓல்காட்டுக்கு இலங்கை மக்களின் வித்தியாசமான மனப்பக்குவத்தை அறிமுகப்படுத்துவது போல இருந்தது. சில நாட்கள் அங்கே தங்கி அங்கிருந்த ஆன்மிக ஞானத்தைப் பெற்றும், தாங்கள் அறிந்திருந்த ஆன்மிக ஞானத்தைப் பரப்பியும் இருந்துவிட்டு இருவரும் மறுபடியும் இந்தியா திரும்பினார்கள்.

 

மும்பை திரும்பியவர்கள் பின் அலகாபாத் சென்று அங்கு இயங்கி வந்த ஆரிய சமாஜ அமைப்புடன் இணைந்து யோகக்கலை மற்றும் யோகசக்திகள் குறித்த ஞானத்தை விரிவாக்கிக் கொண்டார்கள். அப்போது ஆரிய சமாஜின் தலைவராக இருந்த தயானந்த சரஸ்வதி அது குறித்த ஆழ்ந்த தெளிவான ஞானம் பெற்றிருந்தார்.. ஒரு பாமர மனிதனின் பார்வையில் எழுந்த சந்தேகங்களை கர்னல் ஓல்காட் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பதில்களை தங்கள் தியோசபிகல் சொசைட்டி பத்திரிக்கையில் பிரசுரமும் செய்தார். யோகசக்திகளின் இயல்புகளை இதை விடத் தெளிவாக யாரும் புரிந்து கொள்ள முடியாது என்று கர்னல் ஓல்காட் நினைக்குமளவு அந்தக் கேள்வி-பதில்கள் அமைந்திருந்தன. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

 

கேள்வி: யோகா என்பது விஞ்ஞானமா அல்லது உயர்சக்திகள் குறித்த அனுமானமா?

 

பதில்: யோகா என்பது இயற்கையின் விதிகளைத் துல்லியமாகச் சொல்லும் விஞ்ஞானமே. பதஞ்சலி முனிவர் அவற்றை ஒருங்கிணைத்துத் தந்திருக்கிறார்.

 

கேள்வி:: யோக சக்திகளை இக்காலத்திலும் ஒருவர் பெற முடியுமா?

 

பதில்: இயற்கையின் விதிகள் காலத்திற்கேற்ப மாறுபவை அல்ல. அவை அன்றிலிருந்து இன்று வரை ஒன்று தான். எனவே அதை முறையாகப் பின்பற்றினால் இன்றும் அந்த மகாசக்திகள ஒருவர் பெற முடியும்.

 

கேள்வி: நீங்கள் இந்த யோகசக்திகளை யாருக்காவது சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்களா? அவர்களால் அவற்றைப் பூரணமாகக் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறதா?

 

பதில்: என்னிடம் இது வரை மூன்று மாணவர்கள் யோகக்கலையைக் கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர். ஆனால் யாருமே யோக்ககலையைப் பூரணமாய் கற்றுக் கொண்டு விடவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. காரணம் யோகக்கலைக்கான பயிற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டியவை. அவற்றைக் கற்றுக் கொள்வதில் சலிப்போ, அவசரமோ இருக்கக்கூடாது. ஆனால் கற்றுக் கொள்ள வருபவர்கள் உடனடி விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதில் சீக்கிரமே சலிப்படைந்து விடுகிறார்கள்.

 

கேள்வி: அப்படி இந்த அரிய யோகக்கலையில் முடிவு வரை சென்று சக்தி பெற்றவர்கள்  இருக்கிறார்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

 

பதில்: யோகக்கலையை முழுமையாகக் கற்றுக்  கொண்டு சக்திகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் குறைவாகத் தான் இருப்பார்கள். அவர்கள் இமாலயம் போன்ற இடங்களில் மறைவாக இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்கள் பார்வையில் அதிகம் தங்க விரும்புவதில்லை. தங்களை வெளிப்படுத்துவதில் அவர்களுக்குத் தயக்கம் உண்டு.

 

கேள்விஇந்த யோகசக்திகளுக்கு எல்லை தான் என்ன?

 

பதில்: யோகிகளின் விருப்பத்தின் எல்லையே அவர்களுடைய சக்திகளின் எல்லையாக இருக்கிறது;

 

கேள்வி: யோகிகள் பொதுவாக எந்தெந்த சக்திகளைப் பெற்றிருக்கிறார்கள்?

 

பதில்: யோகிகள் மற்ற யோகிகளுடன் எந்நேரமும் மானசீக அளவில் தொடர்பில் இருக்க முடியும். அவர்களால் மற்றவர்கள் மனதில் உள்ளதை சொல்லாமலேயே படிக்க முடியும். அவர்களால் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் உடலிலிருந்து வேறு உடலுக்குச் சென்று வேறு உடலில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

 

கேள்வி: ஒரு யோகி எந்தக் காலம் வரை இந்த அபூர்வ சக்திகளை வெளிப்படுத்த முடியும்?”

 

பதில்: ஒரு யோகி தன் உடலில் இருக்கும் கடைசி மூச்சு வரை இந்த அபூர்வ சக்திகள் வெளிப்படுத்த முடியும். யோகிக்கு அந்தக் கடைசி மூச்சின் காலம் கூட முன்கூட்டியே தெரிந்து விடும். அது வரை யோகியால் சக்திகளை வெளிப்படுத்த முடியும்.

 

கேள்வி: ஒரு யோகி அடுத்தவர் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து வாழ முடியுமா? தன்னுடைய உடலின் அந்திமக்காலத்தில் வேறு உடலில் புகுந்து வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள முடியும்.

 

பதில்: முடியும்.

 

கேள்வி: எத்தனை வகை யோகக்கலைகள் இருக்கின்றன?

 

பதில்: இரண்டு. ஒன்று ஹத யோகம் இது உடலை வலிமைப்படுத்துவது. இன்னொன்று ராஜ யோகம். இது அபூர்வ சக்திகளைப் பெறுவது.

 

கேள்வி: யோக சக்திகளில் ஏராளமான ஏமாற்றுப் பேர்வழிகளும் இருக்கிறார்களே. இதில் உண்மை, போலி இரண்டையும் பிரித்தறிவது எப்படி.

 

பதில்யோகசக்திகளில் போலிகள் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று கண்கட்டு வித்தை. கண நேரத்தில் வேகமாக இயங்கி ஏமாற்றுவது. இன்னொன்று சில வெளி சக்திகள் அல்லது மனிதர்களின் உதவியுடன் செய்யப்படும் சில குறிப்பிட்ட வித்தைகள். இரண்டுமே உண்மையான யோகமாகச் சொல்ல முடியாது. உண்மையான யோகி எந்த வெளி உதவியும் பெறாமல் தன் எண்ண வலிமையாலேயே எல்லாவற்றையும் செய்ய முடிந்தவனாக இருக்கிறான்.

 

கேள்வி: ஒரு யோகிக்குத் தேவையான குணங்கள் என்னென்ன?

பதில்: எல்லையில்லாத ஆர்வம், தன் எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் பரிபூரண கட்டுப்பாடு. மனதை எண்ணிய சமயத்தில் குவிக்க முடிவது, மனதிலும், புலன்களிலும் தூய்மையாக இருப்பது போன்றவை முக்கியமானவை.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி