சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 31, 2015

பரிட்சையிலும் பாஸ் செய்ய வைத்த மகாசக்தி!

மகாசக்தி மனிதர்கள்-35 

யோகானந்தருக்கு படிப்பில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஒரு பட்டப்படிப்பு அவசியம் என்று வலியுறுத்தி படிப்பை யோகானந்தர் நிறுத்தி விடாமல் பார்த்துக் கொண்டார். கல்லூரிப் படிப்பு ஆன்மிகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருந்ததால் அப்படிப்பு வேம்பாக யோகானந்தருக்கு கசந்த போதிலும் குருவின் வற்புறுத்தலுக்காகக் கல்லூரிக்குப் போய் வந்தார்.

யோகானந்தர் அடிக்கடி குரு தங்குமிடத்திற்குப் போய் ஒருசில நாட்கள் தங்கி சேவை செய்து விட்டு வருவார். ஒரு முறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் ஆசிரமத்தில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். அதிகாலை ஆரம்பித்து இரவு வரை பஜனை, ஆன்மிகச் சொற்பொழிவு, சங்கீதம் முதலான நிகழ்ச்சிகள் இருந்தன. அதில் எல்லோரும் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.

அத்தனை பேருக்கும் சமையல், பரிமாறுதல், உபசரிப்பு வேலைகள் எல்லாம் யோகானந்தருக்கும், மற்ற சீடர்களுக்கும் இருந்தன. சமையலும், பாத்திரங்கள் கழுவுவதுமாகவே முழு நாள் வேலை இருந்ததால் யோகானந்தரால் அந்த நிகழ்ச்சிகளில் கூடக் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையை யோகானந்தர் மகிழ்ச்சியாகவே செய்தார்.

வெளியூரில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தங்கள் ஊருக்கு பஸ்களிலும் ரயில்களிலும் செல்லக் கிளம்பிய பிறகு களைத்துப் போய் யோகானந்தர் படுக்கச் சென்றார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் படுத்து விட்டார். ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் எழுந்து விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட யோகானந்தர் “ஏன் எழுந்து விட்டீர்கள் குருவே?என்று கேட்டார்.

இன்று வந்த நண்பர்களில் சிலர் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். அவர்கள் பசியோடு வருவார்கள். அவர்களுக்காக சமைக்க வேண்டும். அதனால் தான் எழுந்தேன்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். யோகானந்தருக்கு அந்த நண்பர்கள் ரயிலைத் தவற விட்டாலும் திரும்பவும் அந்த நள்ளிரவு நேரத்தில் ஆசிரமத்திற்கு வருவார்கள் என்று தோன்றவில்லை. அதை வெளிப்படையாக அவர் குருவிடம் சொன்னார்.

“அவர்கள் வருவார்கள். நீ இன்று நிறைய வேலைகள் செய்து களைத்துப் போயிருக்கிறாய். அதனால் உறங்கு. நான் சமைக்கிறேன்என்று சொல்லி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சமையலறைக்குச் சென்றார். களைத்துப் படுத்திருந்த மற்ற சீடர்களையும் அவர் எழுப்ப விரும்பவில்லை. என்னவொரு உயர்ந்த உள்ளம் பாருங்கள்!

தன் குரு வேலை செய்யும் போது படுத்திருக்க மனம் வராமல் யோகானந்தரும் சமையலறைக்குச் சென்றார். இருவரும் சேர்ந்து எளிய உணவு சமைத்தார்கள். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னது போலவே அந்த அன்பர்கள் ரயிலைத் தவற விட்டு சிறிது நேரத்தில் ஆசிரமத்திற்கே திரும்பி வந்தார்கள்.

அவர்களை வரவேற்க விரைந்த யோகானந்தரிடம் அவர்கள் “தொந்திரவுக்கு மன்னியுங்கள் அன்பரே. ரயிலைத் தவற விட்டு விட்டோம். ரயில் நேரம் பற்றி நாங்கள் குறித்துக் கொண்டது தவறாக இருந்திருக்கிறதுஎன்று சொன்னார்கள்.

“பரவாயில்லை வாருங்கள். நீங்கள் பசியோடு வருவீர்கள் என்று நம் குருநாதர் உங்களுக்காக சமைத்தும் வைத்திருக்கிறார். வாருங்கள். பசியாறுங்கள் என்று சொன்ன போது அந்த அன்பர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பசியோடு இருந்த அவர்கள் குரு சமைத்த ருசியான உணவை உண்டு மகிழ்ந்தார்கள்.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் கூடச் சேவை செய்யும் குருவின் அருகிலேயே இருப்பதில் ஆர்வம் கொண்டிருந்த யோகானந்தருக்கு பரிட்சை நெருங்கும் போது தான் அது குறித்த பயம் வந்தது.

பரிட்சைக்கு ஐந்தே நாட்கள் இருந்த போது அவர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் சென்று இந்த முறை பரிட்சை எழுதப் போவதில்லை என்று தெரிவித்தார். ஏன் என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி கேட்ட போது “நான் ஒன்றுமே படிக்கவில்லை. இனி படிக்க ஐந்து நாட்கள் போதவே போதாதுஎன்று யோகானந்தர் தெரிவித்தார்.

“நீ பரிட்சை எழுதாவிட்டால் எனக்கும் சேர்த்து தான் கெட்ட பெயர் வந்து சேரும். உன் வீட்டார் நான் தான் உன்னைப் படிக்க விடாமல் செய்து விட்டேன் என்று ஏசுவார்கள். அதனால் கண்டிப்பாக பரிட்சை எழுது.என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.

“எழுதி என்ன பயன்? நான் தான் ஒன்றும் படிக்கவில்லையே. நான் எழுதுவதானால் எல்லா பரிட்சைகளிலும் உங்கள் அருமை பெருமைகளைப் பற்றியும் உங்கள் உபதேசங்களைப் பற்றித் தான் எழுத வேண்டும்என்றூ யோகானந்தர் சொன்னார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சிரித்துக் கொண்டே “முடிந்த வரை படி. பரிட்சை முடிகிற வரை இங்கே வராதே. படிப்பில் கவனம் செலுத்து. நீ சோம்பலால் படிக்காமல் இருந்து விடவில்லை. ஆன்மிக ஆர்வம் காரணமாகவே நீ படிக்க முடியாமல் போயிருக்கிறது. அதனால் கவலைப்படாதேஎன்று சொன்னார்.

யோகானந்தர் சரியென்றார். ஒரு நிமிட மவுனத்திற்குப் பின் உன் வகுப்பில் மிக நன்றாகப் படிக்கும் ரமேஷ் சந்திர தத்தின் உதவியை நாடு.என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். ரமேஷ் சந்திர தத் அந்தக் கடைசி நேரத்தில் போனால் உதவுவானா என்ற இயற்கையான சந்தேகம் வந்த போதும் சரியென்று சொல்லி விட்டு யோகானந்தர் சென்றார்.

ரமேஷ் சந்திர தத் யோகானந்தரை வரவேற்றான். ஆனால் வருடம் முழுவதும் படிக்காமல் கடைசி ஐந்து நாட்களில் ஒரு சப்ஜெக்ட் மட்டுமல்லாமல் அனைத்து சப்ஜெக்ட்களும் படிக்க உதவுவது என்பது அந்த மாணவனையும் மலைக்கத் தான் வைத்தது. ஆனாலும் ஒவ்வொரு சப்ஜெக்டிலும் முக்கியமான கேள்விகளாகத் தேர்ந்தெடுத்து யோகானந்தருக்கு முடிந்த வரை விளக்கினான்.

முதலிரண்டு சப்ஜெக்ட்களில் அவன் தேர்ந்தெடுத்த முக்கியக் கேள்விகள் அந்தந்த பரிட்சைகளில் பாஸ் ஆகும் அளவு வந்திருந்தன. யோகானந்தருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ரமேஷ் சந்திர தத் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டிருந்ததை எழுதினார்.

ஆங்கில இலக்கியப் பரிட்சையில் அதே போல் கேள்விகள் வந்திருந்த போதும் ஒரு பெரிய தவறை யோகானந்தர் செய்தார். அந்த வினாத்தாளில் A அல்லது B, C அல்லது D கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று இருந்தது. யோகானந்தர் அதைக் கவனிக்காமல் ஏதோ இரண்டு எழுத வேண்டும் என்று எண்ணி A B இரண்டு வினாக்களையும் எழுதி விட்டு C D இரண்டு வினாக்களையும் எழுதாமல் விட்டு விட்டார். அதை பரிட்சை முடிந்து வெளியே வந்த பிறகு தான் அவர் உணர்ந்தார்.

இந்தத் தவறால் அவருக்குப் பாஸாக குறைந்த பட்ச மதிப்பெண்களுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தது. தன் குருவின் அருளால் தெரிந்த கேள்விகளே வந்தும் கவனக்குறைவால் இப்படி தவறு இழைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அவர் குருவிடம் ஓடோடி வந்து நடந்ததைத் தெரிவித்தார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “கவலைப்படாதே. நீ இந்தப் பரிட்சையில் பாஸ் ஆவது உறுதிஎன்று சொல்லி விட்டார்.

கடைசி பரிட்சையான வங்காள மொழிப் பரிட்சையில் இரண்டு பெரிய கேள்விகளுக்குப் பக்கம் பக்கமாக பதில் எழுத வேண்டும். எந்தக் கேள்வி கேட்பார்கள் என்று அனுமானிக்க முடியாத அளவு கேட்க நிறைய விஷயங்கள் இருந்தன. ரமேஷ் சந்திர தத், விதயாசாகர் என்கிற வங்காள சமூகம், மற்று கல்வி சீர்திருத்தவாதி ஒருவரைப் பற்றிய விவரங்களைச் சொன்னான். மறு நாள் பரிட்சையில் அவர் பற்றியே ஒரு கேள்வி இருந்தது. இரண்டாவது கேள்வி பொதுவானதாக இருந்தது உன்னை மிகவும் கவர்ந்த ஒரு உயர்ந்த மனிதரின் வாழ்க்கையைப் பற்றி எழுது”. முதல் கேள்விக்கு ரமேஷ் சந்திர தத் சொன்னதையும், இரண்டாவது கேள்விக்குத் தன் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி பற்றியும் பக்கம் பக்கமாய் எழுதிய யோகானந்தருக்குத் தன் குருவிடம் ஆரம்பத்தில் “உங்களைப் பற்றித் தான் எழுத வேண்டும்என்று சொன்னதும் பலித்தது குறித்து அவருக்குப் பரம சந்தோஷம்.

ஆங்கிலப் பாடத்தின் குறைந்த பட்ச மதிப்பெண்ணை அந்த முறை அரசாங்கம் திடீரென்று குறைக்க யோகானந்தர் அது உட்பட எழுதிய அனைத்து பரிட்சைகளிலும் பாஸானார்.

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி- 17.04.2015




  

Thursday, August 27, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 60



லாரிக்காரன் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் பரிசோதனைச் சாவடியில் லாரியை நிறுத்தியது ஒடிசல் இளைஞனை ஆச்சரியப்படுத்தியது. என்ன நடக்கிறது என்பதை ஜீப்பைப் பின்னால் நெருக்கமாகவே நிறுத்த வைத்து கவனிக்க ஆரம்பித்தான்.

பரிசோதனை அதிகாரிகளைப் பார்த்து மிகுந்த மரியாதையுடன்  சல்யூட் அடித்தபடியே லாரியை நிறுத்திய டிரைவர் கதவைத் திறந்து அவர்கள் முன் கீழே குதிக்கவும் செய்தான்.

“வணக்கம் சார்... நான் தான்....

பரிசோதனைச் சாவடி அதிகாரி அவனை உற்றுப் பார்த்தார். அவருக்கு அவனை  இப்போது அடையாளம் தெரிந்தது. சில மணி நேரங்களுக்கு முன் சம்யே மடாலயம் போன லாரிக்காரன்...

“என்னப்பா சம்யே போய் வந்து விட்டாயா?

“ஆமாம் சார்

“வழியில் இவர்களை எங்காவது பார்த்தாயா?

அவர் அக்‌ஷய், மைத்ரேயன் புகைப்படங்களை மறுபடியும் காட்டினார்.

“இல்லை சார்....

பரிசோதனைச் சாவடி ஆட்களில் ஒருவன் லாரியின் முன்புறம் ஏறி எட்டிப் பார்த்தான். லாரி டிரைவரின் உடன் இருந்தவன் அவனைப் பார்த்து சல்யூட் அடித்தான்.

இரண்டு ஆட்கள் லாரியின் பின் பக்கம் போய் கதவைத் திறந்து பார்த்தார்கள். உள்ளே பெட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஆனால் ஏறும் இடத்திலும் பெட்டிகள் இல்லாத காலி பகுதிகளிலும் எண்ணை முழுவதுமாகச் சிந்தியிருந்தது.  

பின்பக்கம் வந்த பரிசோதனைச் சாவடி அதிகாரியும் அதைப் பார்த்தார். “என்ன இது....

லாரி டிரைவர் சொன்னான். “மடாலயத்துக்குக் கொண்டு போன தீப எண்ணெய் பாக்கெட்டுகளில் இரண்டு ஓட்டையாகி இப்படிக் கொட்டி இருக்கிறது. அந்த லட்சணத்தில் எண்ணெய் தயாரிப்பாளர்களின் ‘பேக்கிங்இருக்கிறதா இல்லை, நாங்கள் போகும் போது உங்கள் ஆட்கள் பரிசோதனை செய்தார்களே அப்போது அந்தப் பாக்கெட்கள் ஓட்டையாகி விட்டதா என்று தெரியவில்லை சார்..... பொருள்களை எல்லாம் மடாலயத்திற்குள் இறக்கி வைப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. இரண்டு தடவை வழுக்கி விழுந்து விட்டேன்.... என் ஆள் மூன்று தடவை விழுந்தான்.....

தாங்களும் வழுக்கி விழப் பிரியப்படாத பரிசோதனை ஆட்கள் அதிகாரியைப் பார்த்தார்கள். “சிறிது முன்பு தானே முழுவதாய் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தோம். மறுபடி பார்க்க என்ன இருக்கிறதுஎன்று சொன்ன அதிகாரியின் கவனம் லாரிக்குப் பின்னால் இருந்த ஜீப் மீது போய் விட்டது.

பரிசோதனை ஆட்கள் லாரியின் பின் கதவை மூடினார்கள். அதிகாரி லாரி டிரைவரிடம் “போகலாம்என்று சைகை காட்டி விட்டு பின்னால் இருந்த ஜீப்புக்கு வந்தார். பார்த்துக் கொண்டே இருந்த ஒடிசல் இளைஞனுக்கு இக்கட்டான நிலைமையை எதிரிகள் சமாளித்திருக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் புத்திசாலித்தனம் மைத்ரேயனுடைய பாதுகாவலனுடையதாக இருக்க வேண்டும்!

ஒடிசல் இளைஞன் கண்கள் லாரி மீதே பதிந்திருந்தது. பரிசோதனை அதிகாரிக்குப் பதில் சொல்லும் பொறுப்பை அவன் முன்பே ஜீப் டிரைவரிடம் ஒப்படைத்திருந்தான்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?அதிகாரி கேட்டார்.

தன் ஊரின் பெயரையே ஜீப் டிரைவர் சொன்னான்.

“எங்கே போகிறீர்கள்?

சுமார் இருபது மைல் தூரத்தில் இருக்கும் ஊரைச் சொன்னான்.

“ஏன் இந்த நேரத்தில் பயணிக்கிறீர்கள்

“அந்த ஊரில் என் மாமாவுக்குப் பக்கவாதம் வந்து விட்டது. எங்கள் ஊரில் ஒரு கைராசிக்கார வைத்தியர் இருக்கிறார். 24 மணி நேரத்தில் இந்த மருந்தைத் தந்தால் அவர் குணமடைந்து விடுவார் என்று சொன்னார். அதனால் தான் நேரம் பார்க்காமல் என் நண்பனுடன் கிளம்பி விட்டேன்...என்று ஒரு பாட்டில் மருந்தையும் காண்பித்தான். முன்பே அவர்களும் தயாராகி இருந்தார்கள்.

லாரி கிளம்பி விட்டது. ஒடிசல் இளைஞன் உள்ளுக்குள் பதறினான். இவர்கள் எப்போது விடுவார்கள்?

பரிசோதனை ஆட்கள் ஜீப்பின் பின் புற இருக்கைகளின் அடியில் கம்பை விட்டுப் பார்த்தார்கள். எல்லாம் காலியாகவே இருந்தன. வேறு பொருள்கள் எதுவும் ஜீப்பினுள் இருக்கவில்லை.

அதிகாரி அவர்களிடமும் இரண்டு புகைப்படங்களைக் காண்பித்தார். “இவர்களை வழியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

டிரைவர் பார்க்கும் போது ஒடிசல் இளைஞன் தானும் சேர்ந்து கூர்ந்து பார்த்தான். இல்லா விட்டால் அவனிடம் தனியாகக் கேட்பார்கள். அதற்குக் கூடுதல் நேரம் ஆகும்..

இருவரும் சேர்ந்து “இல்லைஎன்றார்கள். அதிகாரி போகலாம்என்று தலையசைத்தார். அதற்குள் லாரி அவர்கள் பார்வையிலிருந்து மறைந்திருந்தது.

சாதாரண வேகத்தில் ஜீப்பைக் கிளப்பிய டிரைவர் பரிசோதனைச் சாவடி கண் பார்வையில் இருந்து மறைந்தவுடன் வேகத்தைப் பல மடங்காய் கூட்டினான். எதிரில் ஒரே சாலையாக இருந்ததால் ஐந்தே நிமிடங்களில் லாரிக்குப் பின்னால் வந்து விட்டார்கள்.

இந்த ஐந்து நிமிடங்களில் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் வழியில் எங்காவது இறங்கி விட்டிருப்பார்களா என்ற சந்தேகம் ஒடிசல் இளைஞனுக்கு வந்தது. பரிசோதனைச் சாவடியை அடுத்திருக்கும் பகுதியில் மைத்ரேயனின் பாதுகாவலன் இறங்கி விட்டிருக்க மாட்டான் என்று அறிவு சொன்னது. அவன் மகா புத்திசாலி. இந்தக் கடுங்குளிரில் இந்த வெட்ட வெளியில் அவன் இறங்கி இருந்தால் விரைவில் வாங் சாவொவின் ஆட்களின் கண்களில் படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அதனால் இறங்கி விட்டிருக்க மாட்டான்.....'

ஆனாலும் மனம் அமைதி அடையாமல் அவன் இருபக்கமும் பார்த்தான். ஒருபக்கம் மலைப் பகுதி. இன்னொரு பக்கம் பள்ளத்தாக்கு.....

அவன் சந்தேகத்துடனேயே எதிரில் செல்லும் லாரியைப் பார்த்தான். லாரி முன்பு போலவே ஊர்ந்தும், பறந்தும், கண்டபடி வளைந்தும் போனது. கண்டிப்பாக மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் உள்ளேயே தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் லாரிக்காரன் இந்த அளவு வித்தை காண்பிக்க மாட்டான்.

இரு வாகனங்களும் ஒரே சீரான இடைவெளியில் பயணித்துக் கொண்டிருந்தன.



லீ க்யாங் திபெத்தில் இருந்து சீனா வந்து சேரும் வரை ஒற்றைக்கண் பிக்கு சொல்லி இருந்த தகவல்களை பல விதங்களில் அலசிக் கொண்டே வந்தான். மைத்ரேயன் அல்லாத ஒரு புதிய தலைவலி வந்து சேர்ந்திருப்பதை அவனால் ரசிக்க முடியவில்லை.

பீஜிங் விமான நிலையத்தில் வந்திறங்கியவன் தன் வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ போகவில்லை. தன் காரில் பீஜிங்கின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் சீன உளவுத் துறையின் முந்தைய தலைவர் வீட்டுக்குச் சென்றான்.

அவன் மதிக்கும் மிகச்சில மனிதர்களில் சீன உளவுத் துறையின் அந்த முந்தைய தலைவரும் ஒருவர். மிக நேர்மையானவர், அதி புத்திசாலி, யாருக்கும் தலைவணங்காதவர், எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான தேச பக்தர். இதெல்லாமே அவன் மிகவும் மதிக்கும் விஷயங்கள். உண்மையை உரத்துச் சொல்லத் தயங்காதவர், தலை வணங்காதவர் போன்ற அவருடைய குணங்கள் இன்றைய சீனத் தலைவர்களுக்கு பல சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் பதவிக்காலம் முடிந்தவுடன் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

பொதுவாக அவரைப் போன்ற அனுபவமும், கூர்மையான அறிவும் உள்ளவர்களுக்குப் பல முறை பதவி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர்களாக விலக விரும்பும் வரை நிர்வாகம் விடுவதில்லை. ஆனால் அவரால் ஏற்படும் நன்மைகளை விடத் தலைவலிகள் அதிகம் என்பதால் அவர் செல்ல அனுமதித்ததை லீ க்யாங் நாட்டுக்கே ஏற்படும் நஷ்டம் என்று நினைத்தான். ஆனால் அவர் ஒரு முறை கூட யாரிடமும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. தாவோயிஸம், ஜென் பௌத்தம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உள்ளவரான அவர் அந்த வழிகளில் ஆழமாய் படித்துக் கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

லீ க்யாங் அவர் வீட்டு அழைப்பு மணியை அடித்தவுடன் கதவைத் திறந்த அவர் அவனைப் பார்த்து முகம் சுளித்தார்.

“ஒருவரைப் பார்க்கப் போவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீன உளவுத் துறையின் உபதலைவனுக்கு இல்லாமல் போனது வருத்தப்பட வேண்டிய விஷயம்கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் சொன்னார்.

போன் செய்து கேட்டிருப்பேன். இப்போது இரவு பத்தரை மணி ஆகி விட்டது, நாளைக்கு வா என்று சொல்லி இருப்பீர்கள். வர வேண்டாம் என்று சொன்ன பின் வந்தால் நன்றாக இருக்காது. அதனால் தான் கேட்காமல் விமான நிலையத்தில் இருந்து அப்படியே நேராக உங்கள் வீட்டுக்கு வந்து விட்டேன்.””’என்று லீ க்யாங் புன்னகையுடன் சொன்னான்.

அவரும் புன்னகைத்தார். “உள்ளே வா. உட்கார். விமான நிலையத்தில் இருந்து நேராக வருவதாகச் சொல்கிறாயே எங்கே போயிருந்தாய்?

“லாஸா....என்றபடியே லீ க்யாங் அமர்ந்தான்.

“சரி வந்த விஷயத்தைச் சொல். சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்பு. நான் உறங்க வேண்டும்என்று சொல்லியபடியே அவரும் அவன் எதிரில் அமர்ந்தார். அவனிடம் அவ்வளவு கறாராக சீனக் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் பேசியதில்லை.

அவன் அவருடைய கறார்ப் பேச்சுக்குப் பழக்கப்பட்டவன். அதனால் சற்றும் சங்கடப்படாமல் புன்னகையுடன் கேட்டான். “திபெத்தில் மாராவை வணங்கும் ரகசியக்குழு ஒன்று இருக்கிறது என்கிற வதந்தி உண்மையா?

அவரை அந்தக் கேள்வி ஆச்சரியப்படுத்தியது போல் இருந்தது. அவனைக் குறும்பாகப் பார்த்துக் கொண்டே சொன்னார். “உன் கேள்வியிலேயே முரண்பாடு உள்ளது. வதந்தி எப்போதும் உண்மையாக முடியாது. உண்மையானால் அது வதந்தியாக இருக்க முடியாது

“சரி முரண்பாட்டைத் தவிர்க்க வழி காட்டுங்கள். அது வதந்தியா, உண்மையா?

உடனடியாக அவர் அதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்ந்த அவர் ஒரு நிமிடம் கழித்துச் சொன்னார். “அது வெறும் வதந்தி அல்ல

அப்படி ஒரு குழு இருந்தால் அது ஏன் நம் கவனத்துக்கு வரவில்லை... அது குறித்த எந்த ஆதாரபூர்வமான குறிப்புகளும் நம்மிடம் ஏன் இல்லை

“இது போன்ற ரகசிய குழுக்கள் பற்றி நமக்கு அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு அல்லவா? அவற்றில் நீயே சந்தேகப்பட்டது போல வதந்திகளே அதிகம். அவர்கள் ஏதாவது வகையில் நம் கவனத்தைக் கவரும் வகையில் இயங்கினால் ஒழிய அவர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நீயே அது இருக்கிறதா என்று சந்தேகத்தில் கேட்கிறாய் என்பதில் இருந்தே தெரிகிறது – அவர்கள் நேற்று வரை நம் கவனத்தைக் கவரும் வரை இயங்கவில்லை.

லீ க்யாங் கேட்டான். “அது என்ன நேற்று வரைஇயங்கவில்லை?”

“இன்று அவர்கள் உன் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இப்போது இயங்கி இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. சரி தானே!

லீ க்யாங் அசந்து போனான்.

(தொடரும்)

என்.கணேசன் 



Monday, August 24, 2015

அடுத்தவர் மனதிலும், இயற்கையிலும் யோகியின் ஆதிக்கம்!


மகாசக்தி மனிதர்கள்-34

ரமஹம்ச யோகானந்தர் தன் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் பூரி ஆசிரமத்திற்குச் சென்றிருந்த ஒரு சமயத்தில் தன் கையால் நட்டு வளர்த்த செடியில் காய்த்த ஆறு காலிபிளவர்களை ஒரு கூடையில் எடுத்துச் சென்றிருந்தார். குருவிடம் கொடுத்து இது என் அன்பான கண்காணிப்பில் விளைந்த காய்கறி என்று சொன்னார். சரி உன் அறையில் வைத்திரு. நாளை சமையலுக்கு இதைப் பயன்படுத்தலாம்என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொல்ல யோகானந்தரும் அதை எடுத்துக் கொண்டு போய் தன் அறையில் வைத்துக் கொண்டார்.

பூரி கடற்கரை நகரமானதால் அங்கு இருக்கும் போது தன் சீடர்களுடன் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். மறுநாள் காலை குரு அழைத்தவுடன் நடைபயிற்சிக்குக் கிளம்பிய யோகானந்தர் தான் ஆசையாகக் கொண்டு வந்திருந்த காலிபிளவர்களை பத்திரமாக கட்டிலுக்குக் கீழே தள்ளி  விட்டுப் போனார்.

போகின்ற வழியில் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி யோகானந்தரிடம் கேட்டார். “நீ நம் ஆசிரமத்தின் பின்வாசலைப் பூட்டினாயா?

“ஆம். பூட்டியதாகத் தான் ஞாபகம்என்றார் யோகானந்தர். சிறிது நேரம் மௌனமாக இருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “இல்லை நீ ஆசிரமத்தின் பின் வாசலைப் பூட்டவில்லைஎன்றார்.

தன் குரு ஞானதிருஷ்டியால் அதைக் கண்டு தெரிவிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் யோகானந்தர். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி புன்னகையுடன் சொன்னார். “உன் அஜாக்கிரதைக்குத் தண்டனையுண்டு. நீ கொண்டு வந்திருந்த ஆறு காலிபிளவர்கள் ஐந்தாகக் குறையப் போகிறது

யோகானந்தருக்குப் புரியவில்லை. நடைபயிற்சி முடிந்து குருவும் சீடர்களும் ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள். ஆசிரமத்திற்கு அருகே வந்தவுடன் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் சீடர்கள் அனைவரையும் அப்படியே நிற்கச் சொன்னார். பின் யோகானந்தரிடம் சொன்னார். “தெருவின் இடது புறத்திலிருந்து ஒருவன் வருவான். அவன் தான் உனக்கு தண்டனையைத் தருபவன்

யோகானந்தருக்கு என்ன நடக்கப் போகிறது என்கிற ஆவல் அதிகரித்தது. அவர் தன் குரு சொன்னபடியே தெருவின் இடக்கோடியையே பார்த்துக் கொண்டிருந்தார்.  ஒரு ஏழை குடியானவன் அங்கிருந்து வந்து கொண்டிருந்தான். அவன் வினோதமாக கைகளை அசைத்து ஆடிக் கொண்டே வந்தான். அப்படியே அவர்களைக் கடந்து போகவும் செய்தான். தெருவின் மறு கோடி வரை போயும் விட்டான்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “இப்போது அந்த ஆள் திரும்பி வருவான் பார்”. அவர் சொல்லி முடித்தவுடன் அந்தக் குடியானவன் சடாரென்று திரும்பினான். திரும்பியவன் அதே பழைய ஆட்டத்தோடு நடந்து சென்று ஆசிரமத்தின் பின்வழியாகச் சென்று சிறிது நேரத்தில் கையில் ஒரு காலிபிளவருடன் வெளியே வந்தான். இப்போது அவனிடம் ஆட்டமில்லை. அமைதியாக நடந்து சென்று கடைசியில் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து  போனான்.

யோகானந்தர் திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்ற விதத்தைக் கண்டு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரிக்குச் சிரிப்பு தாள முடியவில்லை. அவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். திகைப்பு குறையாமல் யோகானந்தர் தன் அறைக்கு விரைந்தார். அவர் அறையில் மேசையின் மேலேயே அவரது தங்க மோதிரம், கடிகாரம், பணம் எல்லாம் இருந்தது. அந்த காலிபிளவர் திருடன் அதை எல்லாம் தொடக்கூட இல்லை. ஆனால் கட்டிலுக்கு அடியில் அவர் ஆசையாக மறைத்து வைத்திருந்த காலிபிளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறான்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “பாவம் அந்தக் குடியானவன். காலிபிளவர் சாப்பிட வேண்டுமென்று நிறைய நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான். நீ கொண்டு வந்திருந்த காலிபிளவர்களில் ஒன்று அவனுக்குக் கிடைத்தால் அவன் சந்தோஷப்படுவான் என்று நினைத்தேன்

காலிபிளவர் மீது ஆசை கொண்ட ஒருவன் வந்து கொண்டிருப்பதை அறிந்து, அவன் அறியாமலேயே காலிபிளவர் இருக்குமிடத்தை அவனுக்கு உணர்த்தி, அங்கு செல்ல வைத்து, அதை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேற வைத்த இந்த சம்பவத்தில் தன் குரு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் சக்திப் பிரயோகம் யோகானந்தரைப் பிரமிக்க வைத்தது. 

ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி இது போன்ற சக்திகளை சில்லரை விஷயங்களுக்குப் பயன்படுத்துவதை என்றுமே விரும்பியதில்லை. இந்த காலிபிளவர் நிகழ்ச்சி நடந்து சில தினங்களில் ஆசிரமத்தின் மண்ணெண்ணெய் விளக்கு ஒன்று காணாமல் போயிற்று. அதைத் தேட யோகானந்தர் பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. குருவைக் கேட்டால் அவர் தன் ஞான திருஷ்டியால் பார்த்துச் சொல்வார் என்று நினைத்தார். அதைப் புரிந்து கொண்ட ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சீடர்களிடம் அந்த விளக்கு பற்றி விசாரித்தார். ஒரு சீடர் முந்தைய நாள் இரவு கிணற்றருகே அந்த விளக்கைக் கடைசியாகக் கொண்டு சென்றதாகச் சொன்னார். “அங்கேயே தேடுங்கள் என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். யோகானந்தர் ஓடிச் சென்று அங்கே விளக்கைத் தேடினார். அங்கு அந்த விளக்கு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் யோகானந்தர் திரும்பி வந்த போது வாய்விட்டுச் சிரித்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி  அதை ஞான திருஷ்டியால் கண்டுபிடிக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை. இதுவும் யோகானந்தருக்கு ஒருவிதத்தில் பாடமாக அமைந்தது.

ஒரு முறை பூரி ஆசிரமத்தின் சார்பாக ஒரு ஆன்மிக பாதயாத்திரைக்கு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏற்பாடு செய்தார். அது கடுமையாக வெயில் இருந்த கோடைகாலம். ஆன்மிக பாதயாத்திரை என்பதால் சீடர்கள் காலில் செருப்பில்லாமல் செல்ல வேண்டும். யோகானந்தர் “குருவே இந்த சுட்டெரிக்கும் வெயிலில் எப்படி செருப்பில்லாமல் சீடர்களை அழைத்துச் செல்வது? என்று கேட்டார்.

“கவலைப்படாதே கடவுள் மேகங்களைக் குடையாக அனுப்பி வைப்பார். நீங்கள் நிழலிலேயே நடந்து செல்லலாம் என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். யோகானந்தர் ஆகாயத்தைப் பார்த்தார். மழையின் அறிகுறியே இல்லை. ஆனாலும் குரு சொன்ன பின் சந்தேகப்பட ஏதுமில்லை என்று யோகானந்தர் ஒத்துக் கொண்டார்.

அவர்கள் பாதயாத்திரைக்குத் தயாரானார்கள். அவர்கள் ஆசிரமத்தை விட்டுக் கிளம்பிய போது திடீரென்று கருமேகக் கூட்டம் வானில் திரண்டது. சீடர்கள் அனைவரும் குதூகலமாயினர். சிறிது மழை தூற்றலும் விழுந்தது. வானிலை மிகவும் ரம்யமாயிருக்க அனைவரும் பாத யாத்திரை கிளம்பினார்கள். பாதயாத்திரை சென்று அவர்கள் ஆசிரமத்திற்குத் திரும்பி வர  இரண்டு மணி நேரங்கள் ஆனது. அது வரை அப்படியே வானிலை நீடித்தது. அவர்கள் ஆசிரமம் வந்து சேர்ந்ததும் பழையபடி வெயில் கொளுத்த ஆரம்பித்தது.

யோகானந்தர் தன் குருவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று வாயால் மட்டும் தெரிவிப்பவராக இல்லாமல் மனதார எண்ணுபவராகவும் இருந்தார். அவர் யோகானந்தரிடம் சொன்னார். “எல்லாம் வல்ல இறைவன் எப்போதுமே ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளுக்கு அருள்பவராக இருக்கிறார். எந்த அளவு அவர் நம் பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்க்கிறார் என்பதை நாம் பல நேரங்களில் அறிவது கூட இல்லை. சிலருக்கு மட்டுமே சாதகமாகவும், மற்றவர்களை கண்டு கொள்ளாமலும் கடவுள் இருப்பதில்லை. நம்பிக்கையோடு அணுகுபவர்கள் அனைவருக்கும் அவர் அருள்கிறார்.

கடவுளைப் பெயருக்கு முன்னால் நிறுத்தி விட்டு அந்தக் கடவுளுக்கு இணையானவராகத் தன்னை காட்டிக்கொண்டோ அல்லது கடவுளே நான் தான் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பறைசாற்றிக் கொண்டோ பல குருமார்கள் மலிந்து வரும் இக்காலத்தில் எத்தனையோ அற்புதங்கள் செய்து காட்டிய பின்பும் கூட அதற்கு தனக்கென்று எந்தப் பெருமையையும் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி ஏற்றுக் கொள்ளாதது உண்மையான உயர்வே அல்லவா?

அவர் செய்து காட்டிய மேலும் பல அதிசயங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி- 10.04.2015

Thursday, August 20, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 59


 ம்யே மடாலயத்தை ரகசியமாய் கண்காணித்துக் கொண்டிருந்த ஒடிசல் இளைஞனுக்கு உள்ளே சென்ற லாரி டிரைவரும், உடன் சென்றவனும் நீண்ட நேரம் வெளியே வராததால் மடாலயத்துக்குள்ளேயே உறங்கத் தீர்மானித்து  விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.  ஆனால் பைனாகுலரை அவன் கீழே வைக்கவில்லை. ஒரு கணமும் கண்காணிப்பைத் தளர்த்த விரும்பவில்லை. ஜீப்பை ஓட்டி வந்து பாறைக்குப் பின் நிறுத்தியவனுக்கு அவனளவு பொறுமை இல்லாததால் அவன் ஜீப்பில் இருந்து இறங்கி சோம்பல் முறித்து விட்டு ஜீப்பில் சாய்ந்து நின்று கொண்டான். நான் வேண்டுமானால் சிறிது நேரம் பார்க்கட்டுமா?என்று ஒடிசல் இளைஞனிடம் கேட்டான்.

‘ஒரு இடத்தில் தொடர்ந்தாற்போல சில நிமிடங்கள் உட்கார முடியாதவனுக்கு பாறை உடலை உறுத்த சாய்ந்து கொண்டு, வைத்த கண் எடுக்காமல் பைனாகுலரில் கண்காணிப்பது முடிகிற காரியமா என்று நினைத்த ஒடிசல் இளைஞன் “வேண்டாம்என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி தன் கண்காணிப்பைத் தொடர்ந்தான். ஜீப்பில் வந்தவன் அவர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல. திபெத்திய மலைப்பகுதிகளில் அனாயாசமாகவும், அதிக வேகத்துடனும் ஜீப்பை ஓட்ட வல்லவன் என்ற காரணத்திற்காக தற்காலிக வேலைகளுக்கு அவனை ஒடிசல் இளைஞன் பயன்படுத்தி வருகிறான். அவனிடம் உள்ள மிக நல்ல பழக்கம் அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து விட்டால் அனாவசியக் கேள்விகள் கேட்க மாட்டான், என்ன வேலையைக் கொடுத்தாலும் செய்வான். இந்த வேலைக்கே சம்யே மடாலயத்தில் இருந்து ரகசியமாய் வெளியே வரும் ஒரு இளைஞனையும் ஒரு சிறுவனையும் பின் தொடர்ந்து அவர்கள் போகும் இடத்தை அறிந்திருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தானே ஒழிய மற்ற விஷயங்களை அவனிடம் தெரிவித்திருக்கவில்லை....

திடீரென்று சம்யே மடாலய வாயிலில் லாரி டிரைவரும் அவனுடன் சென்றவனும் தெரிந்தார்கள். ஒடிசல் இளைஞன் முழுக் கவனமானான். லாரி டிரைவரும் மற்றவனும் உள்ளே இருந்து திரும்ப எடுத்துக் கொண்டு வந்தக் காலி பெட்டிகளை லாரியில் கொண்டு வந்து ஏற்ற ஆரம்பித்தார்கள். ஒடிசல் இளைஞன் அவர்களுடன் திடீர் என்று மைத்ரேயனும், அவனுடைய பாதுகாவலனும் ஏறுவார்கள் என்று எதிர்பார்த்தான். மாரா கணிப்பு பொய்க்காது.....

தலைமை பிக்குவும், அவரது பிரதான சீடனும் திடீரென்று வாசலில் தெரிந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தலைமை பிக்கு தலையசைக்க மின்னல் வேகத்தில் ஒரு உருவம் சம்யே மடாலயத்தில் இருந்து லாரிக்குள் போய்ச் சேர்ந்தது. ஒடிசல் இளைஞன் அசந்து போனான். என்ன வேகம் இது. போனது ஒருவன் மட்டுமா? அவனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.

லாரிக்குள் சென்றது மைத்ரேயனின் பாதுகாவலனாகத் தான் இருக்க வேண்டும். கழுத்து திருகி இறந்த அவர்கள் இயக்க ஆள் நினைவுக்கு வந்தான். அவனை இவன் இப்படித் தான் நெருங்கி இருக்க வேண்டும். என்ன நடக்கின்றது என்று உணர்வதற்குள் கழுத்து திருகி விழுந்திருக்கிறான் அவன்.

ஒடிசல் இளைஞன் மெல்ல சொன்னான். “தயாராகிக் கொள்

ஜீப்பில் சாய்ந்திருந்தவன் உடனடியாக ஜீப்பில் ஏறினான். ஒடிசல் இளைஞன் தலைமை பிக்கு கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தான். பிரதான சீடனும் சோகமாகவே பார்த்தபடி நின்றிருந்தான். சந்தேகமில்லாமல் பாதுகாவலன் மைத்ரேயனையும் தூக்கிக் கொண்டே லாரிக்குள் ஏறி இருக்க வேண்டும் என்பதை ஒடிசல் இளைஞன் ஊகித்தான்.

லாரி டிரைவர் கடைசியில் தலைமை பிக்குவிடம் ஏதோ பேசி தலையசைத்து விடை பெற்றான். தலைமை பிக்குவும் தலையசைத்தார். லாரியில் ஏறி டிரைவர் அமர்ந்தவுடன் ஒடிசல் இளைஞன் சொன்னான். “அவர்கள் கிளம்பப் போகிறார்கள்.அப்போதும் அவன் பைனாகுலரில் இருந்து கண்களை எடுக்கவில்லை. கடைசி நிமிடத்தில் ஏதாவது நடந்து அதைக் காணாமல் இருந்து விட அவன் விரும்பவில்லை.

லாரி கிளம்பியது. ஒடிசல் இளைஞன் பாறையில் இருந்து குதித்து ஜீப்பில் வேகமாக ஏறிக் கொண்டான். லாரி அந்தப் பகுதியினைக் கடக்க அவர்கள் காத்திருந்தார்கள்.



லாரி கிளம்பியவுடன் கனத்த மனத்துடன் தலைமை பிக்குவும் பிரதான சீடனும் உள்ளே திரும்பினார்கள். தனதறைக்கு வந்த பின் தலைமை பிக்கு மைத்ரேயன் கழற்றிப் போட்டிருந்த காவி ஆடையை கையில் எடுத்தார். இதுவும் ஒரு புனிதப் பொருளே அல்லவா என்று அவருக்குத் தோன்றியது. பத்மசாம்பவாவின் தலைமுடியும், கைத்தடியும் இருக்கும் இடத்தில் ஒரு நாள் இதுவும் இருக்கப்போகிறது. மைத்ரேயர் பிழைத்திருந்து உலகம் அவரை அறியும் பாக்கியம் செய்திருந்தால்....

அன்று அவர் நீண்ட நேரம் உறங்கவில்லை.  


வரைப் போலவே ஒற்றைக்கண் பிக்குவும் அன்றிரவு உறக்கம் வராமல் தவித்தார்.  அவருடைய உறக்கம் லீ க்யாங்கோடு விடை பெற்றுப் போயிருந்தது.  அவன் செல்வதற்கு முன் எந்தெந்த வகையில் எல்லாம் டோர்ஜே இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டி இருக்கிறது என்று பாடம் நடத்தி விட்டுப் போய் இருந்தான். நிஜ மைத்ரேயனோடு போட்டி இட வேண்டி இருக்கும் என்பதால் இப்போதிருக்கும் திறமைகள் போதவே போதாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி இருந்தான். இத்தனைக்கும் தோற்றத்தில் டோர்ஜேயைத் தான் மைத்ரேயனாக உலகம் நம்பும் என்று ஆரம்பத்திலேயே சொன்னவன் அவன் தான். ஆனால் கிளம்புவதற்கு முன்னால் உண்மையான மைத்ரேயனிடம் இருக்கும் சரக்கு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதால் அலட்சியமாய் இருந்து விடக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டுப் போயிருந்தான்.

கடைசி வரை அவன் உண்மையான மைத்ரேயனை அப்புறப்படுத்தி விடுவேன் என்ற வகையில் ஒரு உத்திரவாதம் தராமல் இருந்தது அவருக்கு உள்ளுக்குள் ஒரு பிரத்தியேக கிலியை ஏற்படுத்தி இருந்தது. மைத்ரேயனாக இருக்கலாம் என்று நம்பி பத்து வருடங்களுக்கு முன்பே சில குழந்தைகளைக் கொன்று விட ஆணை இட்டவன் இப்போது கண்டிப்பாக சும்மா இருக்க மாட்டான் என்பது அவருடைய அறிவுக்குப் புரிந்தாலும் கடைசி வரை அவன் டோர்ஜேயுடன் போட்டியில் இருப்பான் என்கிற வகையிலேயே லீ க்யாங் பேசி விட்டுப் போனது நெருடலாக இருந்தது.....

உறக்கம் வரவில்லையா ஆசிரியரே?டோர்ஜேயின் குரல் கேட்டது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தார். டோர்ஜே எழுந்து அமர்ந்திருந்தான்.

“இல்லை டோர்ஜே. ஏதேதோ யோசனைகள்....

“நீங்கள் கவலைப்படுவது போல் தெரிகிறது. ஏன் ஆசிரியரே?

“நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது டோர்ஜே. இது வரை சாதித்திருப்பது எதுவும் போதாது என்று லீ க்யாங் சொல்லி விட்டுப் போயிருக்கிறான்.... நீ ஜெயிக்க வேண்டுமானால் இன்னும் கடுமையாக பயிற்சிகள் செய்ய வேண்டும்.  ஒப்பிட்டுப் பார்க்கும் போது நீ ஜொலிக்க வேண்டும்

“யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆசிரியரே

ஒற்றைக்கண் பிக்கு ஒரு கணம் தயங்கினார். இன்றில்லா விட்டாலும் பின் என்றாவது அவன் தெரிந்து கொள்ளப் போகும் உண்மை தான் என்பதால் இப்போதே தெரிவித்து அவனைத் தயார்ப்படுத்தி விடுவது நல்லது என்று தோன்றியது. மெல்லச் சொன்னார். “இன்னொரு மைத்ரேயன் இருக்கிறான் டோர்ஜே

டோர்ஜேயின் முகம் போன போக்கைப் பார்க்கவே ஒற்றைக்கண் பிக்குவுக்குக் கஷ்டமாக இருந்தது. தாங்க முடியாத அதிர்ச்சியில் அந்தச் சிறுவன் உறைந்து போனான். பலவீனமான குரலில் மெல்லக் கேட்டான். “யாரவன் ஆசிரியரே?

லீ க்யாங் காட்டிய மைத்ரேயன் புகைப்படத்தை ஒற்றைக்கண் பிக்கு தன்னிடமேயே வைத்திருந்தார் என்ற போதும் அதை அவனிடம் காட்ட அவர் விரும்பவில்லை. யாரென்று தெரியவில்லை. இருக்கிறான் என்று மட்டும் லீ க்யாங் சொல்லித் தெரியும்

அந்த இன்னொரு மைத்ரேயனுக்கு என்னை விட அதிகம் தெரியுமா ஆசிரியரே?வெகுளித்தனமாய் கேட்ட டோர்ஜேயைப் பாசத்துடன் ஒற்றைக்கண் பிக்கு பார்த்தார். என்னவென்று அவர் சொல்வார். மெல்ல சொன்னார். அவனுக்கு என்னவெல்லாம் தெரியும், எவ்வளவு தெரியும் என்பதெல்லாம் இன்னும் லீ க்யாங்குக்கே தெரியவில்லை....

லீ க்யாங்குக்குத் தெரியாத விஷயங்களும் உலகத்தில் இருக்கும் என்பதை டோர்ஜேயால் நம்ப முடியவில்லை. ஆனால் லீ க்யாங் முக்கியத்துவம் தரும் ஆள் ஒன்றுமில்லாதவனாய் இருப்பான் என்று மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. தன் மனதில் ஆழமாய் எழுந்த சந்தேகத்தை டோர்ஜே தன் ஆசிரியரிடம் கேட்டான்.

“அவன்.... அவன்.... நிஜமான மைத்ரேயனா ஆசிரியரே?

ஒற்றைக்கண் பிக்குவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. “தெரியவில்லைஎன்று மட்டும் சொன்னார்.

அந்தச் சிறுவனும் அன்று தூக்கத்தைத் தொலைத்தான்.


லாரி அவர்கள் இருந்த பாறைப்பகுதியைக் கடந்து சில அடிகள் போனதும் ஒடிசல் இளைஞன் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பும் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது. லாரிக்காரன் பின்னால் வரும் ஜீப் தாண்டிப் போக இடைவெளி விட்டபடி மெல்லப் போனான். ஜீப் லாரியைத் தாண்டிப் போவதற்குப் பதிலாக வேகம் குறைந்து அதே இடைவெளியில் பின் தொடர்ந்தது.

அது லாரிக்காரனை கோபப்படுத்தி இருக்க வேண்டும். லாரியைப் படுவேகமாக ஓட்ட ஆரம்பித்தான். ஜீப்பை ஓட்டுபவனும் அதே வேகத்தில் பின் தொடர்ந்தான். சில இடங்களில் ஜீப்பை அவன் ஓட்டிய லாவகம் ஒடிசல் இளைஞனைப் பிரமிக்க வைத்தது.

பல மைல் தூரம் அப்படியே இரு வாகனங்களும் சென்றன. கடுங்குளிர் நிறைந்த அந்த இரவு நேரத்தில் அந்த மலைப்பகுதியில் வேறு எந்த வாகனங்களும் இருக்கவில்லை. லாரிக்காரன் வேண்டுமென்றே வேகத்தைக் கூட்டியும், குறைத்தும் சென்றதோடு மலை வளைவுகளில் சாகசம் செய்தபடி ஓட்டினான். சற்று ஏமாந்தாலும் பின் தொடரும் வாகனம் பாதாளத்தில் விழும் வாய்ப்பு இருந்தது.  ஆனால் ஜீப்பை ஓட்டியவன் அதற்கெல்லாம் ஈடு கொடுத்தே பாதுகாப்பாக ஓட்டிப் பின் தொடர்ந்தான்.

சிறிது தூரத்தில் வாங் சாவொவின் ஆட்கள் அமைத்திருந்த பரிசோதனைச் சாவடி தெரிந்தது. லாரி தானாக வேகம் குறைத்துக் கொண்டு பரிசோதனைச் சாவடியை நெருங்கியது. ஒடிசல் இளைஞன் ஜீப்பை ஓட்டுபவனிடம் சொன்னான். இப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். நீ எதற்கும் ஜாக்கிரதையாக பின்னாலேயே இரு

பரிசோதனைச் சாவடி ஆட்கள் கையைக் காட்டி முன்னால் வரும் லாரியை நிறுத்தினார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்   


Monday, August 17, 2015

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 12



·       மலை இலக்கானால் குருடனும் அம்பெய்துவான்.


·       மரம் சுட்டுக் கரியாக வேண்டுமே அல்லாமல் மயிர் சுட்டுக் கரியாகப் போகிறதா?


·       வணங்கின புல் பிழைக்கும்


·       முட்ட நனைந்தவனுக்கு ஈரமில்லை. முழுதும் கெட்டவனுக்குத் துக்கமில்லை.


·       முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்.


·       வலிமைக்கு வழக்கில்லை.


·       கல்யாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?


·       மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல.


·       ஒரு ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறுவென்று சுற்றுகிறது.


·       வளர்ந்த உயரத்தை வாசற்படியிலா காட்டுவது?


·       வியாதிக்கு மருந்து உண்டு. விதிக்கு மருந்து உண்டா?




தொகுப்பு: என்.கணேசன்

Thursday, August 13, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 58


லாரியில் இருந்து இறக்கிய பெட்டிகளை சம்யே மடாலய பிக்குகளும், வேலையாட்களும் உள்ளே கொண்டு போக ஆரம்பித்ததை ஒடிசல் இளைஞன் பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாம் உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட பிறகு லாரியின் டிரைவரும் அவன் உடனே இருந்தவனும் உள்ளே சென்றார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் வண்டிக் கூலி வாங்கப் போகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு உள்ளே வேறு கட்டளைகள் காத்திருக்கலாம் என்று அவன் சந்தேகப்பட்டான்.

ஒடிசல் இளைஞன் இன்னொரு எண்ணிற்கு போன் செய்தான். “இப்போது வந்திருக்கும் லாரி மூலமாகத் தான் அவர்கள் தப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் நீ வண்டியோடு இங்கே வந்து விடலாம். விளக்கைப் போடாமல், சத்தம் செய்யாமல் வா

இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் மறைவான இடத்தில் நிறுத்தி வைத்து இருந்த ஜீப்பை ஓட்டிக் கொண்டு இன்னொருவன் சத்தமில்லாமல் இருட்டிலேயே வந்தான். வாங் சாவொ அடிக்கடி சம்யே மடாலயம் வந்து கொண்டிருந்ததால் அவனுக்கு சந்தேகம் ஏற்படுத்த வேண்டாம் என்று தொலைவிலேயே அந்த ஜீப்பை மறைவாக நிறுத்த ஒடிசல் இளைஞன் ஏற்பாடு செய்திருந்தான். ஜீப் வந்து பாறைக்குப் பின்புறம் மறைந்து நின்றது. தயாராக இரு என்று ஜீப்பை ஓட்டி வந்தவனுக்கு சைகை செய்து விட்டு பாறையில் இருந்தபடியே மறுபடி சம்யே மடாலயத்தை பைனாகுலர் மூலம் ஒடிசல் இளைஞன் கவனிக்க ஆரம்பித்தான். சம்யே மடாலயத்தின் முன் எந்த இயக்கமும் இல்லை.

பொறுமையாக காத்திருந்தார்கள்.


ம்யே மடாலயத்தின் உள்ளே அக்‌ஷயும், தலைமை பிக்குவும் தாங்கள் கண்ட காட்சியின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் சிறிது நேரம் அப்படி நின்றிருந்தார்கள். லாரி வந்து நின்ற சத்தம் கேட்டு முதலில் மீண்டவன் அக்‌ஷய் தான்.  தலைமை பிக்குவை அவன் கேள்விக்குறியுடன் பார்த்தான். அவர் அக்‌ஷயிடம் கரகரத்த குரலில் மெல்லச் சொன்னார். “நம் வண்டி தான் அன்பரே 

அக்‌ஷய் மைத்ரேயனை மெல்லத் தட்டி எழுப்பினான். “நாம் கிளம்பும் நேரமாகி விட்டது. எழுந்திரு

மைத்ரேயன் உடனே விழித்துக் கொண்டான். எழுந்து அமர்ந்த அவனைப் பார்க்கையில் தலைமை பிக்குவுக்கு ஒரு புறம் பக்தி மேலிட்டது. மைத்ரேயன் தான் அது என்று தர்மசக்கரம் வேறு உறுதிமொழி அளித்து விட்ட நிலையில், இவரை நேரில் பார்த்துப் பழகிய பாக்கியம் கிடைத்துள்ளதே என்று சந்தோஷமாகவும் இருந்தது. இன்னொரு புறம் அவருக்கு பெருங்கவலையும் ஆட்கொண்டது. எல்லா பக்கங்களிலும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் அக்‌ஷயும் மைத்ரேயனும் எத்தனை தூரம் தாக்குப் பிடிப்பார்கள் என்று சந்தேகமாக இருந்தது.  

அக்‌ஷய் மைத்ரேயன் அருகில் வந்தமர்ந்தான். “போகத் தயார் தானே?

மைத்ரேயன் முகமலர்ச்சியுடன் தயாரென்று தலையசைத்த போது அவன் மனம் நெகிழ்ந்தது. புத்தரின் மறு அவதாரம் என்பதாலேயே எத்தனையோ கஷ்டங்களைச் சந்திக்கப் போகிறானே இந்தச் சிறுவன் என்று மனம் சங்கடப்பட்டது. சற்று முன் ஜொலிப்புடன் அவன் காலில் சுழன்ற தர்மசக்கரத்தை நினைத்துக் கொண்டான். தர்மம் நிறைய சோதனைகளைச் சந்திப்பது யுக யுகங்களாக பூமியில் நடக்கின்ற சமாச்சாரம் அல்லவா?

ஆட்டிடையன் அணியும் உடையை மைத்ரேயனிடம் எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் சற்று சங்கடத்துடனேயே சொன்னான்.  இதை அணிந்து கொள்ள வேண்டும். நான் போட்டிருக்கும் திட்டத்திற்கு இது தேவையாக இருக்கிறது.

மைத்ரேயன் முக மலர்ச்சியில் சிறிதும் மாற்றமில்லை. அதை வாங்கிப் பார்த்து சின்ன குதூகலத்துடன் “நன்றாய் இருக்கிறதுஎன்றவன் புத்தபிக்கு உடையைக் கழற்றி விட்டு அந்த உடையை அணிந்து கொண்டான்.

தலைமை பிக்குவுக்கு அதைப் பார்க்கையில் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கதறி அழுதார். புனித ஆடையில் இருந்து ஆட்டிடையன் அணியும் ஆடையா?

மைத்ரேயன் தலைமை பிக்குவிடம் கேட்டான். ஏன் எனக்கு நன்றாக இல்லையா?அந்தக் கேள்வி அவரை மட்டுமல்லாமல் அப்போது தான் அந்த அறைக்குள் நுழைந்திருந்த அவரது பிரதான சீடனையும் துக்கப்படுத்தி விசும்பலை அவனிடம் ஏற்படுத்தியது. தலைமை பிக்கு குமுறிக் குமுறி அழுதார். அவர்களது துக்கத்தைப் பார்க்கையில் அக்‌ஷய்க்குக் கஷ்டமாய் இருந்தது.  அவனும் மௌனமாக இடையர்கள் அணியும் ஆடைக்கு மாறினான்.

பிரதான சீடன் மெல்லச் சொன்னான். “லாரி டிரைவர் அறைக்கு வெளியே காத்திருக்கிறான் குருவே

தலைமை பிக்கு பெரும் சிரமத்துடன் துக்கத்தை அடக்கிக் கொண்டார். “வரச்சொல்

லாரி டிரைவர் உள்ளே நுழைந்தான். அவனுக்கு சுமார் 28 வயதிருக்கும். நல்ல ஆஜானுபாகுவாக இருந்தான். “நாங்கள் சொன்னபடியே செய்துவிட்டுத் தானே வந்திருக்கிறாய்என்று அவனிடம் தலைமை பிக்கு கேட்டார். அவன் ஆமாம் என்றான்.

அக்‌ஷய் முன்னால் வந்தான். “நீ என்ன செய்தாய் என்பதை விவரித்துச் சொல்ல முடியுமா?

பெரும்பாலான ஆபத்துகள் கிடைத்திருக்கும் தகவல்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் அல்லது தவறாகப் புரிந்து கொள்வதால் தான் ஏற்படுகின்றன என்பது அவனுடைய அசைக்க முடியாத அபிப்பிராயம். அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை பிக்கு மூலமாக முன்பே தெரிவித்திருந்தான். இப்போது அதைச் செய்திருக்கிறேன் என்று லாரி டிரைவர் சொன்னாலும் நடந்ததை அனுமானத்தினால் அல்லாமல் தெளிவாக அவன் வாய்வழியாகவே எதை எப்படிச் செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம் என்று நினைத்தான்.

லாரி டிரைவர் சொன்னான். “நீங்கள் சொல்லி இருந்தபடி இருட்டிய பிறகு தாமதமாகவே லாரியோடு கிளம்பினோம். நீங்கள் சொன்னபடியே போலீசார் வழிமடக்கி லாரியை நிறுத்தினார்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்டார்கள். சம்யே மடாலயத்திற்கு என்றேன். ஏன் இந்த இருட்டும் வேளையில் போகிறீர்கள் என்று கேட்டார்கள். வண்டி வழியில் பழுதாகி விட்டதால் சரி செய்ய இவ்வளவு நேரமாகி விட்டது என்று சொன்னேன். லாரியில் என்னவெல்லாம் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். மளிகை சாமான்கள், துணிமணிகள், பூஜா சாமான்கள் என்றேன். நம்பிக்கை வராமல் முழுவதும் சோதனை இட்டார்கள். பிறகு திருப்தி அடைந்து எங்களை அனுப்பினார்கள்.

திருப்தியுடன் அக்‌ஷய் தலையசைத்தான்.  தலைமை பிக்கு லாரி டிரைவரிடம் சொன்னார். “நல்லது. நீ வெளியே காத்திரு. இவர்கள் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள்.

லாரி டிரைவர் போய் விட்டான். தலைமை பிக்கு மைத்ரேயன் பக்கம் திரும்பினார். அவர் கண்கள் மறுபடியும் நிறைந்தன. அவர் அப்படியே மண்டியிட்டு மைத்ரேயனைத் தொழுதார். “எத்தனையோ ஜென்மங்களின் நல்வினைப் பயனால் உங்களைச் சந்தித்தேன் மைத்ரேயரே!  இந்த நாட்களை நான் என் இறுதி மூச்சு வரை நினைவு வைத்துக் கொள்வேன். கிளம்புவதற்கு முன் உங்கள் வாயால் எனக்கு ஏதாவது உபதேசம் செய்வீர்களா? சொல்லும் போதே ஆட்டிடையனின் உடையில் மைத்ரேயனைப் பார்க்க நேர்ந்த துக்கம் மறுபடி அவரை ஆட்கொண்டது. பொங்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றார். முடியவில்லை. பிரதான சீடனும் தான் இருந்த இடத்திலிருந்தே மண்டியிட்டு வணங்கினான்.

மைத்ரேயன் அதிசயமாகத் தொலைதூரப் பார்வையோ, மந்தமான பார்வையோ பார்த்து, பேசுவதைத் தவிர்க்காமல் தலைமை பிக்குவைப் புன்னகையுடன் பார்த்துச் சொன்னான். “வெளியே எப்படித் தெரிகிறோம் என்பதை விட உள்ளே எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியமானது புனிதரே. அதுவல்லவா நம்மைக் காப்பாற்றுவதும் வீழ்த்துவதும்.

தலைமை பிக்கு கைகள் இரண்டையும் கூப்பித் தலை வணங்கினார். மைத்ரேயனின் வார்த்தைகள் அவர் அந்தராத்மாவைத் தொட்டு நின்றன. புறத்தில் இருந்து அகத்துக்கு கவனத்தைத் திருப்புவதன் முக்கியத்துவத்தை எவ்வளவு அழகாய் மைத்ரேயர் சொல்கிறார் என்று வியந்தார்.

அக்‌ஷய் மைத்ரேயனை பிரமிப்புடன் பார்த்தான். ஆட்டிடையன் தோற்றத்தில் இருப்பதால் வருத்தப்பட்ட பிக்குவுக்கு சொல்கின்ற ஆறுதலாயும், உள்ளே மனிதன் என்னவாக இருக்கிறான் என்பது தான் அவனைக் காப்பாற்றவோ, வீழ்த்தவோ செய்யும் என்ற உபதேசமாயும் சொன்ன விதம் மாறுபட்ட மைத்ரேயனை அவனுக்கு அறிமுகப்படுத்தியது.

ஆச்சரியப்படவும் நேரமில்லை என்று உணர்ந்தவனாக அக்‌ஷய் தலைமை பிக்குவிடம் சொன்னான். “நாங்கள் கிளம்புகிறோம் புனிதரே. உங்கள் உதவிக்கு நன்றி

தலைமை பிக்கு உடைந்த குரலில் சொன்னார். “உங்களுக்கு நாங்கள் தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் அன்பரே. இந்தப் பிறவியில் அந்தக் கடனைத் தீர்க்கமுடியும் என்று தோன்றவில்லை. ஒரே ஒரு வேண்டுதல் மட்டும் உள்ளது. மைத்ரேயரை இனியும் நீங்கள் தான் காக்க வேண்டும்.

“அதை நீங்கள் நினைவுபடுத்த வேண்டியதில்லை புனிதரே. நான் முன்பே ஏற்றுக் கொண்ட வேலை அது. மைத்ரேயனை என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன். பயப்பட வேண்டாம்

தலைமை பிக்கு பேச வார்த்தைகள் இல்லாமல் அவன் முன்னும் மண்டி இட்டு வணங்கினார். உடனே பின் வாங்கிய அக்‌ஷய் “என்ன இது புனிதரேஎன்று பதறினான். தலைமை பிக்கு மனதாரச் சொன்னார். “இப்பிறவியில் மட்டுமல்ல எத்தனை பிறவியிலும் நீங்கள் என் வணக்கத்திற்கு உரியவரே அன்பரே

அக்‌ஷய் மனம் லேசானது. மைத்ரேயனைப் பார்த்தான். மைத்ரேயன் ஒரு மௌன சாட்சியின் பாவனையோடு நின்றிருந்தான். அவன் முகத்தில் அமைதியைத் தவிர வேறு எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. முன்பே தயார்ப்படுத்தி வைத்திருந்த தோலான ஒரு பையை எடுத்துக் கொண்டு அவன் மைத்ரேயனைப் பார்த்துத் தலையசைத்தான். மைத்ரேயன் அவனருகில் வந்து நின்றான். இருவரும் கிளம்பினார்கள்.

திபெத்தின் வரைபடம் அங்கேயே விழுந்திருந்ததைக் கண்ட தலைமை பிக்கு அதை எடுத்துக் கொண்டு அக்‌ஷய் அருகில் வந்தார். “அன்பரே இதை மறந்து இங்கேயே விட்டு விட்டுப் போகிறீர்களே

அக்‌ஷய் சொன்னான். “இது எங்களிடம் இருந்தால் ஆபத்து என்று தான் விட்டு விட்டுப் போகிறேன். ஆட்டிடையர்களிடம் இது இருந்தால் அது சந்தேகத்துக்கு வழி வகுக்கும். இதை என் மனதில் பதித்திருக்கிறேன். அதனால் இது தேவையும் இல்லை

தலைமை பிக்குவுக்கு மனதினுள் அவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை. எல்லாம் முன் கூட்டியே யோசித்து வைத்திருக்கும் இவன் போல ஒரு பாதுகாவலன் மைத்ரேயருக்கு கிடைக்க முடியாது. ஆனால் ஆபத்தின் உயரமும் அளவும் இவனை விஞ்சி இருப்பது தான் அவருக்கு அச்சமாக இருந்தது.    

தலைமை பிக்கு தன் பிரதான சீடனைப் பார்த்து சமிக்ஞை செய்தார். அவன் போய் சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.  “வாசலில் வேறு யாரும் இல்லை குருவே

அக்‌ஷயும் மைத்ரேயனும் கிளம்பினார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்