சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 30, 2015

பாபாவின் பல ரூபங்கள், பல சக்திகள்!


மகாசக்தி மனிதர்கள் 43


ஷிரடி பாபா அஷ்டமகா சக்திகள் பெற்றிருந்த மகான்.  அவர் பல தெய்வங்களின் வடிவில் பக்தர்கள் சிலருக்குக் காட்சி அளித்தார் என்பதை முன்பு பார்த்தோம். அவர் தெய்வங்களின் ரூபத்தில் மட்டுமல்லாமல் பல வித மனிதர்கள் ரூபத்திலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்திருந்தார்.

ஒரு முறை நாச்னே என்ற பக்தரின் அண்ணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நாச்னே தன் அண்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்து அவர் குணம் அடைய வேண்டும் என்று பாபாவை ஆழ்ந்த பக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை நடந்த அந்த மருத்துவமனையில் ஒரு உருவத்திலும், அவர்கள் வீட்டில் வேறு ஒரு சாது உருவத்திலும் காட்சி அளித்தார். அந்த உருவங்களில் வந்தது பாபா தான் என்பதை நாச்னே அறிந்திருக்கவில்லை. ஷிரடி வந்து பாபாவை நேரில் தரிசித்த போது மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே விவரித்தார். அடுத்ததாய் பாபா “உன் வீட்டுக்கு நான் வந்த போது நீ வெண்டைக்காய் கறி எனக்குத் தரவில்லைஎன்று சொன்னார்.

அப்போது தான் நாச்னேக்கு ஒரு நாள் ஒரு சாது தனக்கு ரொட்டி வேண்டும் என்று கேட்டதும், அந்த சாதுவுக்கு அவருடைய அண்ணி ரொட்டி அளித்ததும் நினைவுக்கு வந்தது. வீட்டில் வெண்டைக்காய் கறி இருந்த போதும் அது மிக மலிவான ஒரு உணவாக அங்கு அக்காலத்தில் கருதப்பட்டதால் ஒரு சாதுவுக்கு மலிவான உணவுப் பொருளை அளிப்பதா என்று நினைத்த அண்ணி அந்த வெண்டைக்காய் கறியைப் பரிமாறாமல் மற்ற சமையலைப் பரிமாறினார். சாப்பிட்டு விட்டு அந்த சாது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று அவர்களிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.    

இன்னொரு முறை பி.வி.தேவ் என்பவர் தன் வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு வருமாறு பாபாவை வேண்டி பாபாவின் சேவையில் இருந்த ஷாமா என்பவருக்குக் கடிதம் எழுதி இருந்தார். பாபாவும் வருவதாக ஒத்துக் கொண்டார். ஆனால் அந்த விருந்துக்கு பாபா செல்லவில்லை என்பதில் பி.வி.தேவுக்கு நிறைய வருத்தம். அவர் மறுபடி ஷாமாவுக்குக் கடிதம் எழுதி பாபா விருந்துக்கு வராமல் ஏமாற்றி விட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டார்.

அந்தக் கடிதத்தை ஷாமா பிரித்துப் படிக்கும் முன்னேயே பாபா சொன்னார். “இவன் ஏன் நான் அந்த விருந்துக்குப் போகவில்லை என்று வருத்தப்படுகிறான். நான் தான் இரண்டு பேருடன் போய் “பணத்துக்காக நான் இங்கு வரவில்லை. சாப்பாட்டுக்காகத் தான் வந்திருக்கிறேன்என்று சொன்னேனே. அவனுக்கு நினைவு இல்லையா

ஷாமா அதை பி.வி தேவுக்குத் தெரிவிக்கையில் தான் ஒரு துறவி இரண்டு சீடர்களுடன் விருந்துக்கு வந்ததையும், பாபா சொன்ன அதே வார்த்தைகளை அந்தத் துறவி சொன்னதையும் நினைவு கூர்ந்தார். அப்போது தான் அந்தத் துறவி வடிவில் பாபா வந்து போயிருப்பது பி.வி.தேவுக்குத் தெரிய வந்தது.

மனித ரூபங்களில் மட்டுமல்லாமல் விலங்கு ரூபங்களிலும் ரூபா பக்தர்களிடம் சென்றிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம். ஹன்ஸ்ராஜ் என்ற பக்தர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் தயிர் சாப்பிட வேண்டாம் என்று பாபா கூறி இருந்தார். ஆனால் ஹன்ஸ்ராஜுக்கு தயிரைத் தவிர்ப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு முறை அவர் வீட்டுக்குத் தயிர் சாப்பிடப் பூனை ஒன்று போன போது அதை அவர் அடித்துத் துரத்தி விட்டார். பின்னர் அவர் பாபாவைப் பார்க்கச் சென்ற போது பாபா உடலில் காயம் இருந்தது. என்ன என்று கேட்ட போது நீ தயிர் சாப்பிடக்கூடாது என்பதற்காக பூனை வடிவில் வந்தேன்.  நீ என்னை அடித்துத் துரத்தி விட்டாய்என்று சொன்னவுடன் ஹன்ஸ்ராஜ் பதறி விட்டார். இது போல நடந்த நிகழ்ச்சிகள் ஏராளம்.

இனி பாபாவின் மற்ற அபூர்வ சக்திகள் சிலவற்றையும் பார்ப்போம்.

ஷிரடியில் நந்த்ராம் மார்வாடி என்பவர் வீட்டில் ஆரம்ப காலங்களில் பாபாவுக்கு பிச்சை இட்ட புண்ணியவான்களில் ஒருவர். ப்ளேக் நோய் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவரும் ப்ளேக் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டார். அவர் ஷிரடியை விட்டே ஓடிப்போய் எங்காவது இறந்து விட எண்ணிய போது பாபா அவரிடம் “நான் வாழும் வரை உங்களிடம் மரணம் நெருங்காது. நீங்கள் எங்கேயும் செல்ல வேண்டியதில்லைஎன்று சொன்னார். அது போலவே அந்த சமயத்தில் நந்த்ராம் மார்வாடி இறக்காமல் தப்பித்தது மட்டுமல்ல பாபா மறைந்த பிறகும் பல காலம் உயிர் வாழ்ந்தார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே நடந்த இன்னொரு சுவாரசியமான சம்பவம் பாபா முக்காலமும் அறிந்த யோகி என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறது. காகா தீக்‌ஷித் என்பவர் பாபாவின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இன்னொரு மகாபக்தர். ஆரம்ப காலங்களில் காகா தீக்‌ஷித் தன் குடும்ப விவகாரங்களுக்காகக் கவலைப்பட்ட போதெல்லாம் “நீ ஏன் கவலைப்படுகிறாய். உன் விவகாரங்களைச் சரிப்படுத்தும் முழுப் பொறுப்பும் என்னுடையதுஎன்று பாபா அவரிடம் சொல்வதுண்டு. காகா தீக்‌ஷித்தும் அதை முழுமையாக நம்பி ஷிரடியிலேயே தங்கி விட்டார்.

காகா தீக்‌ஷித்தின் மகன் மும்பையில் படித்துக் கொண்டிருந்தான். 1913 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு வந்த காய்ச்சல் என்ன மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை. அதனால் தீக்‌ஷித்தின் சகோதரர் தீக்‌ஷித்திற்கு உடனடியாக மும்பை வந்து மகனை நல்ல சிறப்பு மருத்துவரிடம் காட்டச் சொல்லிக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை காகா தீக்‌ஷித் பாபாவிடம் படித்துக் காட்டிய போது பாபா தீக்‌ஷித் மும்பை போவதற்குப் பதிலாக அவர் மகன் ஷிரடிக்கு வருவது உத்தமம் என்று கூறினார்.

பாபாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்கிற நிலையைக் கொண்டிருந்த காகா தீக்‌ஷித் அப்படியே தன் சகோதரருக்குக் கடிதம் எழுதினார். காகா தீக்‌ஷித்தின் சகோதரருக்கு அந்த மகனை ஷிரடிக்கு அனுப்புவதில் விருப்பம் இருக்கவில்லை. ஷிரடியில் படித்த டாக்டர்களும் இல்லை என்பதால் அரைமனதோடு தான் அவனை ஷிரடிக்கு அனுப்பினார். மும்பை போன்ற பெரிய நகர மருத்துவர்களாலேயே குணப்படுத்த முடியாத விசித்திரக் காய்ச்சல் ஷிரடி போனால் குணமாகும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவருடைய அவநம்பிக்கைக்கு எதிர்மாறாக காகா தீக்‌ஷித்தின் மகன் ஷிரடி வந்த பின் குணமாக ஆரம்பித்தான்.

காகா தீக்‌ஷித்தின் மகனுக்கு 2-11-1913 நடக்க உள்ளது என்றும் அவனை அதற்கு முன் மும்பை அனுப்பி வைக்கும்படியும் காகா தீக்‌ஷித்தின் சகோதரர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் கடிதம் அனுப்பினார். காகா தீக்‌ஷித் பாபாவுக்கு அதைப்படித்துக் காட்டினார். ஆனால் பாபா அந்தப் பையனை மும்பைக்கு அனுப்ப சம்மதிக்கவில்லை. இப்போது போக வேண்டாம் என்று சொல்லி விட்டார். பையனின் எதிர்காலமே இந்தத் தேர்வுக்குப் போகா விட்டால் பாதிக்கப்படும் என்று தோன்றிய போதும் காகா தீக்‌ஷித் பாபாவின் பேச்சை மீறி அவனை மும்பைக்கு அனுப்பவில்லை. தேர்வு நாள் அன்று ஒரு ப்ளேக் எலி தேர்வு நடக்கும் மையத்தில் செத்து விழுந்து கிடந்ததால் அந்தத் தேர்வு நடக்கவில்லை என்பதும் அந்தத் தேர்வு  6-11-1913 அன்று ஒத்திப் போடப்பட்டது என்பது தான் ஆச்சரியம். 6-11-1913 தேர்வுக்கு முன்பும் அந்தப் பையனை மும்பை செல்ல பாபா அனுமதிக்கவில்லை. அந்த முறையும் தேர்வு மையத்தில் இன்னொரு ப்ளேக் எலி செத்து விழுந்து கிடந்ததால் அந்த முறையும் தேர்வு நடக்காமல் 13-11-13 தேதிக்கு ஒத்துப் போடப்பட்டது. அந்த தேதிக்கு முன்னால் போக பாபா ஆணை இட்டார். அந்தப் பையன் மும்பைக்குச் சென்று அந்தத் தேர்வை எழுதி மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்.

காகா தீக்‌ஷித் போன்ற பரம பக்தர்கள் பாபா மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கைக்கும், அந்த நம்பிக்கை என்றுமே வீண் போகாது என்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல உதாரணம்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 12-6-2015


Thursday, November 26, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 74


க்‌ஷயின் சந்தேகப்பார்வையை மைத்ரேயன் பார்க்கவில்லை. அவன் அமைதியாக தூரத்தில் தெரிந்த பனிபடர்ந்த மலைமுகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். அக்‌ஷய் என்ன பார்க்கிறான், கீழே ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகள் எல்லாம் அது போன்றதொரு சூழ்நிலையில் இயல்பாக ஒருவன் மனதில் எழ வேண்டியவை. அவை எதுவும் மைத்ரேயன் மனதில் எழுந்ததாகத் தெரியவில்லை.

அக்‌ஷய் மைத்ரேயனிடம் சொன்னான். சம்யே மடாலயத்தில் உன்னைத் தேடி வந்தவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்...

அந்தத் தகவல் மைத்ரேயனைத் திடுக்கிட வைக்கவில்லை. எங்கேயோ மழை பெய்கிறது என்று அக்‌ஷய் சொல்லி இருந்தால் எப்படிப் பார்த்திருப்பானோ அப்படித்தான் பார்த்தான்.

அக்‌ஷய் தொடர்ந்து சொன்னான். “ஆனால் இந்தத் தடவை உன்னைத் தேடுவது போல தெரியவில்லை. ஏதோ குகையைத் தேடுவது போல் இருக்கிறது.. நான் எனக்குத் தெரிந்ததாய் அப்போது சொன்னேனே அந்தக் குகையாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது....

மைத்ரேயன் முகத்தில் சலனமேயில்லை.  ஒரு பெருமூச்சு விட்ட அக்‌ஷய் மறுபடி அந்த பைனாகுலர் மூலம் வாங் சாவொ கோஷ்டியைக் கவனிக்க ஆரம்பித்தான். அவர்கள் மும்முரமாக சந்தேகப்படும் இடங்களை எல்லாம் சோதித்துப் பார்த்திக் கொண்டிருந்தார்கள்.

அக்‌ஷய்க்கு ஒரு இடத்தை ஒரு முறை பார்த்தால், அதுவும் முக்கிய அனுபவம் ஏற்பட்ட இடமாக அது இருந்தால் அந்த இடத்தின் அமைப்பும், அதன் சூழ்நிலைகளும் அவன் மனதில் நன்றாகவே பதிந்து விடும். அந்த வகையில் அவன் குகையைப் பார்த்த இடம் வாங் சாவொ குழு சோதித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுமார் ஐநூறு அடிகள் மேலே இருந்தது. இப்போதும் அந்த இடத்தில் குகை எதுவும் தெரியா விட்டாலும் அந்த இடம் எது என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.

அவர்கள் அந்த இடத்தைச் சோதிக்கும் போது அவர்களுக்கு குகை அகப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள்ளே எழுந்தது. ஆனால் லேசாக இருட்டிக் கொண்டு வரவே என்ன செய்வார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் மலை மேல் இருந்து நீலக்கரடிகளின் வரவு நிகழ்ந்து விடுவோமா என்று பயந்தான். அவற்றுக்காக சில தற்காப்பு சாதனங்கள் முன்பே கொண்டு வந்திருந்தான் என்றாலும் வாங் சாவொவும் அவன் குழுவும் அந்த மலையில் இருக்கும் வரை, அவற்றை உபயோகப்படுத்துகிற சூழ்நிலை இல்லை. அக்‌ஷய் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

நல்ல வேளையாக வாங் சாவொவும் நீலக்கரடிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டி முன்பே தயாராக வந்திருந்தான். அதே போல் இரவு நேர சோதனைக்காகவும் தயாராகவே வந்திருந்தான். இருட்ட ஆரம்பித்தவுடன் தாங்கள் கொண்டு வந்திருந்த சில ஒளிவிளக்குகளை அவர்கள் பிரகாசிக்க விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஒரு பெரிய மூட்டையுடன் மேலே வர ஆரம்பித்தான். அக்‌ஷய் மைத்ரேயனைத் தொட்டு ஜாக்கிரதை என்று சைகை செய்ய மைத்ரேயன் அக்‌ஷயை ஓட்டி ஒளிந்து நின்று கொண்டான். ஆடுகள் அதையும் அவன் விளையாட்டாய் எண்ணி அவனை ஓட்டிக் கொண்டன.

அக்‌ஷயும் மைத்ரேயனும் இருக்கும் இடத்தையும் தாண்டி முன்னேறி சுமார் இருபது அடிகள் போன அந்த நபர் மூட்டையை அவிழ்த்து நன்றாக உலர்ந்த  மரக்கட்டைகளைக் கொட்டினான். அவற்றை நான்கு பிரிவுகளாய் பிரித்து சில அடிகள் இடைவெளியில் வைத்து அவற்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்தான். பெரும் நெருப்பு ஜுவாலைகள் எரிய ஆரம்பித்தன. நீலக்கரடிகள் நெருப்பு இருக்கும் இடங்களுக்கு அருகில் வருவதில்லை.... அக்‌ஷய் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

மறுபடி கீழே இறங்கிப் போய் அந்த ஆள் தன் சகாக்களுடன் சேர்ந்து கொள்ள சோதனைகள் தொடர்ந்தன. அக்‌ஷய் குகை பார்த்த இடத்திற்கு அவர்கள் வந்து சேர மேலும் ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது.  அவர்கள் நெருங்க நெருங்க அக்‌ஷய் ஆவல் அதிகரித்தது. என்ன ஆகும்? அவர்கள் குகையைக் கண்டுபிடிப்பார்களா, மாட்டார்களா?

ஒருவழியாக அந்த இடத்தை அவர்கள் நெருங்கினார்கள். அந்த இடத்திலும் குகை இருந்த சரியான பகுதி எது? அக்‌ஷய் தன் முந்தைய அனுபவத்தை மனத்திரையில் மறுபடி ஓட விட்டான். அந்தக்குகை தெரிந்த இடத்திற்கு வலதுபுறம் சற்றே பழுப்பேறிய ஒரு பாறை இருந்ததும் இடது புறம் வித்தியாசமாய் வளைந்து போய் இருந்த மரம் இருந்ததும் மனத்திரையில் தெரிந்தது. இப்போது ஆர்வத்துடன் அந்தப் பாறையையும், வித்தியாசமாய் வளைந்த மரத்தையும் பார்த்தான். அவை அப்படியே தான் இருந்தன. ஆனால் இடையே வெற்றிடம் தான் தெரிந்தது.

வாங் சாவொ தான் அந்த இடத்தைச் சோதித்தவன். பழுப்பேறிய பாறையைத் தட்டிப் பார்த்தான். அதன் இடுக்கில் ஏதாவது துளை உள்ளதா என்று விளக்கின் ஒளியில் பரிசோதித்தான். வித்தியாசமாய் வளைந்த மரத்தின் வேரைக் கூட கையிலிருந்த இருப்புக்கழியால் தட்டினான். ஆனால் வெற்றிடத்தைத் தட்டிப் பார்க்க என்ன இருக்கிறது.... அவன் நகர்ந்தான்.

மேலும் இரண்டு மணி நேரம் அந்த மலையில் அவர்கள் இருந்தார்கள். அக்‌ஷய் மறைந்திருந்த பகுதி வரை கிட்டத்தட்ட வந்து விட்டார்கள்.  அந்த நேரத்தில் வாங் சாவொ தன் மனதில் தோல்வியை ஒப்புக் கொண்டான். அவன் முன்பே சேகரித்த தகவல்களின் படியும், கீழே கிராமத்துக் கிழவர் சொன்ன தகவலின் படியும் அந்த ரகசியக்குகை இந்த இடத்திற்கு முன்பாகவே அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். இது வரை கிடைக்கவில்லை என்றால் இனி மேல் கிடைக்க வாய்ப்பில்லை.

வாங் சாவொ வறண்ட குரலில் சொன்னான். “போதும். போகலாம்

முதலில் நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் உள்ளூர் போலீஸ்காரன் தான். அவன் தங்களில் ஓரிருவர் அல்லது அனைவரும் ஏதாவது விஷப்பாம்பு கடித்து சாகலாம் என்றும் அல்லது வேறெதாவது விபத்துக்குள்ளாகலாம் என்றும் எதிர்பார்த்திருந்தான். சைத்தான் மலை என்று சும்மாவா சொன்னார்கள். அதுவும் இவர்கள் சைத்தானின் குகைக் கோயிலையே தேடிப் போகிறார்கள் என்றால் சைத்தான் சும்மா இருக்குமா? இப்படியெல்லாம் பயந்து போனவன் ஓட்டமும் நடையுமாக அவர்களுக்கும் முன்பாக கீழிறங்க ஆரம்பித்தான்.      


வாங் சாவொவிடம் பேசி முடித்த பின் லீ க்யாங் அபூர்வமான களைப்பை உணர்ந்தான். அறிவுக்கும் எட்டாத சக்திகளிடம் எப்படி மோதுவது என்பது அவனுக்குப் புரியவில்லை. வாங் சாவொ போகாமல் வேறு ஆட்கள் அந்த மலைக்குப் போயிருந்தால் கூட, தேடிய விதம் சரியில்லை என்று அவன் எண்ணி இருப்பான்.  இப்போது அப்படி நினைக்கவும் வழியில்லை.  “மைத்ரேயனை மட்டுமல்ல மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுபவனையும் நான் கண்டுபிடித்து சிறைப்படுத்துவேன்என்று உளவுத்துறையின் முந்தைய தலைவரிடம் சூளுரைத்தது நினைவுக்கு வந்தது. இடம் மாற வழி இல்லாத அந்தக் குகைக்கோயிலையே கண்டுபிடிக்க முடியவில்லை, பின் எப்படி எங்கிருக்கிறான் என்றே தெரியாத, எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிந்த என் அவதாரத்தைக் கண்டுபிடிப்பாய் என்று சைத்தான் சிரிப்பது போல் அவனுக்குத் தோன்றியது. புத்தரின் அவதாரமும், சைத்தானின் அவதாரமும் ஒரே சமயத்தில் மறைவாய் இருப்பதும், மறைந்திருந்தே இயங்குவதும் பெரிய சவாலாகவே அவனுக்கு இருந்தன.

ஆனால் அவன் கடக்க முடியாத தடைகள் உலகத்தில் இல்லை. எதுவும் தெரியாதென்று அவன் இது வரை வெட்கப்பட்டதில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமாய் அவன் உணர்ந்ததை இது வரையில் எப்பாடு பட்டாவது அவன் தெரிந்து கொள்ளாமல் விட்டதில்லை. அது அவன் வாழ்வின் இறுதி மூச்சு உள்ள வரை நடக்கும். மனதில் உறுதியோடு அவன் நிமிர்ந்து உட்கார்ந்த போது அவன் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினான். “ஹலோ

“சார். ஆசான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்”.  இந்தியாவில் அவன் ஏற்பாடு செய்திருந்த ஆள் பரபரப்பாய் சொன்னான்.

லீ க்யாங் புன்னகைத்தான். சின்னதாய் அந்தச் செய்தி அப்போதைய மனநிலைக்கு ஆறுதல் தந்தது. “எங்கே இருக்கிறார்?

“கர்னாடகாவில் குடகு மலையில் இருக்கும் ஒரு புத்தமடாலயத்தில் இருக்கிறார்.

“நல்லது. அவர் உங்கள் பார்வையில் இருந்து தப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவரைச் சாதாரணமாக நினைத்து குறைவான ஆட்களை வைத்துக் கண்காணிக்காதே. தேவை என்று நினைப்பதற்கு இரண்டு மடங்கு ஆட்களை வைத்துக் கண்காணி. அவரை யார் சந்திக்கிறார்கள், யாரிடம் அவர் பேசுகிறார், என்ன பேசுகிறார், என்ன செய்கிறார், எங்கே போகிறார் என்கிற எல்லாத் தகவல்களும் நமக்கு வேண்டும். சொல்வது நினைவிருக்கட்டும். கிழவர் தானே என்று அலட்சியமாய் இருந்து விடாதே. அதிகமான ஆட்களை வைத்துக் கண்காணி

கட்டளையிட்டு விட்டு லீ க்யாங் யோசிக்க ஆரம்பித்தான். மைத்ரேயனுடன் அந்தப் பாதுகாவலன் திபெத்தைக் கடக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு அதிசயம் நடந்தாலும் பின் அவன் அந்தச் சிறுவனை ஆசானிடம் தான் ஒப்படைப்பான். அப்படி நடக்கும் பட்சத்தில் ஆசான் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால் மைத்ரேயனைப் பிடிப்பது கஷடமான காரியம் அல்ல...  


திர் வீட்டை சலிப்பில்லாமல் கண்காணித்துக் கொண்டிருந்த சேகரின் அலைபேசி பாடியது. சேகர் அலைபேசியில் தெரிந்த எண்ணைப் பார்த்தான். பரிச்சயம் இல்லாத எண். எச்சரிக்கையுடன் எடுத்துப் பேசினான். “ஹலோ

“எஸ். நான் தான் பேசுகிறேன்பெயர் தெரிவிக்கா விட்டாலும் குரல் பேசுவது யார் என்று சொன்னது.

சேகர் நட்புடன் சொன்னான். “சொல்லுங்கள்

“எங்கிருக்கிறாய்?

“கோயமுத்தூரில்

“வேலையாகவா...

“இல்லை. இது என் தனிப்பட்ட வேலை. என்ன விஷயம் சொல்லுங்கள்?

“கர்னாடகாவில் மைசூர் அருகே ஒரு வேலை இருக்கிறது. வருகிறாயா என்று கேட்கத்தான் போன் செய்தேன்.....

“என்ன வேலை....

“ஒரு திபெத்தியக்கிழவரைக் கண்காணிக்கும் வேலை... பணம் நிறைய கிடைக்கும்....


“எப்போது வரை வேலை இருக்கும்?

“தெரியவில்லை.... குறைந்த பட்சம் இருபது நாளாவது இருக்கும் என்று தலைவர் சொல்கிறார்

“இங்கே என் வேலை ஒரு வாரத்திற்குள் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்..... அதன் பிறகு வரவா?

“சரி. ஒரு வாரம் கழித்து நானே உன்னைக் கூப்பிடுகிறேன்

அலைபேசியைக் கீழே வைத்த போது சேகருக்கு எதிர் வீட்டுக்கும், கர்னாடகாவில் இருக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சத்தியமாய் தெரியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்Monday, November 23, 2015

கடைசி வரை பாபா!

மகாசக்தி மனிதர்கள் 42

ஷிரடி பாபாவின் பக்தரான நானா சாஹேப் சந்தோர்கர் என்ற டெபுடி கலெக்டர் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களைப் பார்த்தோம். நானாவிற்கு எதிர்மாறாய் படிப்பறிவே இல்லாமல் பக்தி மட்டுமே இருந்த இன்னொரு பக்தரான மல்சபதி வாழ்வில் நடந்த நிகழ்வுகளை இனி பார்ப்போம். பாபா ஷிரடியில் வந்த போது ஒரு கோயிலின் உள்ளே செல்ல முற்பட்ட போது முஸ்லீமான பக்கிரி இந்து கோயிலுக்குள்ளே நுழையக்கூடாது என்று மறுத்தவர் மல்சபதி. “இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும், ஏன் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் ஒருவனே. அப்படி இருக்கையில் என்னை ஏன் தடுக்கிறாய்?என்று கேட்டு விட்டு பாபா வேறிடம் சென்றார்.

தத்துவ ஞானமோ, உயர் உண்மை நுணுக்கங்களோ புரியும் அளவு அறிவு படைத்தவர் அல்ல மல்சபதி. அதனால் பாபா சொன்னது அவர் அறிவை அப்போது எட்டவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர் பாபாவின் பரம பகதராக மாறியது தான் ஆச்சரியம். 1886 ஆம் ஆண்டு உடலை விட்டு மூன்று நாட்கள் பிரிந்து போகும் முன்னர் பாபா இவரிடம் தான் தன் உடலை ஒப்படைத்துப் போனார் என்கிற அளவு மிக நெருங்கிய பக்தராக மாறி இருந்தார்.

துவாரகமயியில் பாபாவிற்கு சேவகம் செய்வதையே தன் பாக்கியமாக நினைத்திருந்த மல்சபதி அதற்குப் பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்கவில்லை. பிற்காலத்தில் ஷிரடி பாபா பிரபலமாக ஆரம்பித்து அவருடைய பக்தர்கள் தட்சிணையாகப் பெரிய தொகைகளைக் கொடுக்க ஆரம்பித்த போது மிக ஏழ்மையான நிலையிலேயே இருந்த மல்சபதிக்குப் பணம் தந்து உதவ பாபா முன் வந்தார். மூன்று ரூபாயாவது தினமும் எடுத்துக் கொள். வறுமையில் இருந்து நீ மீள்வாய். சவுகரியமாய் வாழ்வாய். ஏழை என்பதால் உன்னைத் துச்சமாய் நினைப்பவர்கள் எல்லாம் உன்னை மரியாதையுடன் நாடி வருவார்கள்என்று சொல்லிப் பார்த்தார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்று ரூபாய் தினசரி கிடைப்பது என்பது பெரிய தொகை தான். மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்க்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த போதும் அந்தத் தொகையை வேண்டாம் என்று மல்சபதி வாங்க மறுத்து விட்டார்.    
உங்கள் சேவையைச் செய்து கொண்டிருக்கும் பாக்கியமே போதும்”  என்று இருந்து விட்டார்.

மூன்று மகள்கள் மட்டும் இருந்த மல்சபதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்க வேண்டும் என்று விரும்பிய பாபா அதை ஒரு ஜென்மாஷ்டமி அன்று மல்சபதியிடம் தெரிவித்தார். துவாரகமயியே கதியாய் இருக்கும் அவரைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அவ்வப்போது அனுப்பியும் வைத்தார். அடுத்த ஜென்மாஷ்டமி அன்று, 1897ல் மல்சபதிக்கு ஒரு மகன் பிறந்தான். மகனை எடுத்துக் கொண்டு மல்சபதி பாவாவிடம் வந்தார். அந்தக் குழந்தையை ஆசிர்வதித்த பாபா உன் மகனை 25 வருட காலம் பார்த்துக் கொள். அது போதும்என்றார். உண்மையில் இனி 25 ஆண்டு காலம் தான் மல்சபதிக்கு ஆயுள் உள்ளது என்பதை உணர்ந்து சொன்ன வார்த்தைகள் அது. “என்னுடைய சக்தியில் எதுவுமில்லை. எல்லாம் உங்கள் அருளாலேயே நடக்க வேண்டும்என்று பணிவோடு மல்சபதி கூறினார்.

சில காலம் கழித்து மல்சபதி துவாரகமயியிலேயே வசிக்க ஆரம்பித்தார். இரவில் ஷிரடி பாபா ஒரு பழந்துணியினை விரித்துப் பாதித் துணியில் படுத்துக் கொள்வார். மல்சபதி மறு பாதியில் படுத்துக் கொள்வார். சில நாட்கள் பாபா எழுந்து ஜபம் செய்ய ஆரம்பித்து விடுவார். அப்போது மல்சபதி தானும் எழுந்து உட்கார்ந்து கொள்வார்.  பாபா மல்சபதியிடம் சொல்வார். “நான் இறை நாமத்தை ஜபிக்கும் போது நீ என் நெஞ்சில் கை வைத்து என் இதயத்துடிப்பைக் கவனித்துக் கொண்டே வா. நான் ஜபித்துக் கொண்டே உறங்கி விட்டால் என் இதயத்துடிப்பில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி ஏற்பட ஆரம்பித்தால் நீ என்னை எழுப்ப வேண்டும்”.

அவர் சொன்னபடியே மல்சபதி செய்து வந்தார். பாபா தன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை ஜபிப்பார். அவர் அப்போது உறங்கி விட்டால் அவரை மல்சபதி எழுப்புவார். இப்படி தன்னலம் இல்லாமல் சேவை செய்து வந்த சேவகன் பாபா மனதில் எப்படிப்பட்ட இடத்தைப் பெற்றிருப்பார் என்று சொல்லத் தேவை இல்லை.

ஒரு முறை மல்சபதியின் மனைவி வெளியூரில் இருந்த தன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்கு தொண்டையில் கட்டி வந்து அவதிப்பட்டார். கணவருக்கு அதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அதை ஞான திருஷ்டியால் அறிந்த பாபா “உன் மனைவி தொண்டையில் கட்டி வந்து அவதிப்படுகிறாள். அதை நான் சரி செய்கிறேன்என்று கூறி தன் சக்தியால் ஷிரடியில் இருந்தே குணப்படுத்தியும் விட்டார். சில நாட்களில் மனைவி தனக்குத் தொண்டையில் கட்டி வந்ததையும் அது தன்னாலேயே குணமானதையும் தெரிவித்து கணவருக்குக் கடிதம் எழுதினார்.

ஞான மார்க்கத்தில் மல்சபதிக்குப் புரிகிற மாதிரி உபதேசங்கள் சொல்ல முடியாதென்று உணர்ந்த பாபா அவருக்கு வேறு வழியில் சில விஷயங்களைப் புரிய வைப்பார். ஒரு அழகான உதாரணம் பார்க்கலாம்.  எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கும் மல்சபதி சில சமயங்களில் கோபப்படுவதும் உண்டு.   ஒரு நொண்டி நாயிற்கு இரவு தினமும் அவர் உணவளிப்பது வழக்கம். சாப்பிட்ட பிறகு போகச் சொன்னால் அந்த நாய் போய் விடும். ஆனால் ஒரு நாள் சாப்பிட்ட பின் அவர் போகச் சொன்ன பிறகும் போகாமல் அங்கேயே அது அமர்ந்திருந்தது. கோபத்தில் தடியால் அடித்துத் துரத்தினார். வலி தாளாமல் கத்திக் கொண்டே அந்த நாய் ஓடிப் போனது.

அன்று பாபாவின் பாத பூஜை அவர் செய்த போது பாபா தன் அருகில் இருந்தவர்களிடம் சொன்னார். “இந்த ஊரில் என்னைப் போலவே உடம்பு சரியில்லாத ஒரு நாயும் இருக்கிறது. அதை எல்லாரும் அடிக்கிறார்கள்

மல்சபதிக்கு சுருக்கென்றது. மிகச்சிறிய விஷயம் தான். ஆனால் ஆன்மிகத்தில் பண்பட்டு மேம்பட்டு வரும் போது சின்னச் சின்ன குறைகளையும் கூட ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதையும், எந்த உயிரினத்திற்கும் சிறிய அளவில் கூடத் தீங்கிழைக்கலாகாது என்பதையும் சொல்லாமல் பாபா சொன்னார். எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாய் இறைவன் இருக்கையில் எந்த உயிருக்குத் தீங்கிழைத்தாலும் அது இறைவனுக்கே இழைக்கின்ற தீங்கல்லவா? அதைப் புரிந்து கொண்ட  மல்சபதி அது போன்ற சின்னக் குறைகளையும் தவிர்த்து வாழ ஆரம்பித்தார்.

1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்த பாபா அதைத் தன் பக்தனுக்கு குறிப்பால் உணர்த்தினார். அவருக்கு மல்சபதி சேவை செய்து கொண்டிருந்த போது இன்னும் சில நாட்களில் நான் எங்கோ சென்று விடுவேன். அதன் பின் இரண்டு அல்லது நான்கு ஆண்டுகள் இரவு வந்து கொண்டிருஎன்று அவர் சொன்னார். அப்போது அவர் சொன்னதன் உள் அர்த்தம் மல்சபதிக்குப் புரியவில்லை. சில நாட்களில் பாபா காலமான போது தான் மல்சபதிக்கு அர்த்தம் புரிந்தது. பாபாவின் மறைவைத் தாங்க முடியாமல் 13 நாட்கள் மல்சபதி உண்ணாவிரதம் இருந்தார். மற்றவர்கள் வற்புறுத்தலுக்குப் பின் உண்ண ஆரம்பித்த மல்சபதி பாபா கூறியபடி தினமும் இரவு வந்து பாபாவுக்கு பூஜை செய்து வந்தார்.

நான்கு ஆண்டுகள் பூஜை செய்த பின் பாபா முன்கூட்டியே சொன்னபடி மல்சபதியின் அந்திமக்காலமும் வந்தது. 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏகாதசி அன்று தன் ஊன்று கோலை மகனிடம் கொடுத்து மல்சபதி சொன்னார். “உன்னதமான பக்தி மார்க்கத்தில் உன் காலத்தைக் கழி”. பின் ராமநாமத்தை ஜபித்தபடியே அவர் உயிர் நீத்தார்.

பகவத் கீதையில் எட்டாம் அத்தியாயத்தில் ஆறாம் சுலோகத்தில் ‘மரணகாலத்தில் எதை நினைத்தபடி ஒருவன் உயிரை விடுகிறானோ அந்த நிலையையே அவன் அடைகிறான்என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். அதன்படி புண்ணியமான ஏகாதசி நாளில் ராம நாமத்தைச் சொன்னபடி உயிர் பிரிந்த மல்சபதி வைகுண்டத்திற்கே சென்றிருப்பார் என்பது பலரின் நம்பிக்கை. பாபாவிற்கு கடைசி வரை சேவை செய்ததன் பலன் அல்லவா அது!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 5-6-2015

  

Thursday, November 19, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 73


புதிய ஆள் அந்தக் கிராமத்திற்கு இந்த இரண்டு நாட்களில் வந்திருந்தான் என்கிற செய்தி வாங் சாவொவை உஷார்ப்படுத்தியது. ஆட்டிடையன் என்ற கூடுதல் அடையாளம் அவனது எச்சரிக்கை உணர்வைக் குறைக்கவில்லை. அந்தப் பாதுகாவலன் எந்த வேடத்தையும் அனாயாசமாகப் போட முடிந்தவன். அதனால் கிழவரைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டான். “எப்போது?

“இன்று தான். சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னால். ஆடு வாங்க வந்திருந்தான்

“எங்கிருந்து வந்தவனாம்?

கிழவர் அக்‌ஷய் சொல்லி இருந்த கிராமத்தின் பெயரைச் சொன்னார்.

வாங் சாவொவின் சந்தேகம் குறையவில்லை. “ஆடு நிஜமாகவே வாங்கினானா? இல்லை விலை விசாரித்து மட்டும் போனானா?

இரண்டு ஆடுகள் வாங்கினான்

“அவனுடன் சிறுவன் யாராவது இருந்தானா?

“இல்லை ஐயா. அவன் தனியாகத் தான் வந்திருந்தான்.

வாங் சாவொவின் சந்தேகம் தீர்ந்தது. அந்த ஆளுடன் சிறுவன் இல்லாததும், அந்த ஆள் உண்மையாகவே ஆடு வாங்கிப் போனதும், வந்தவன் பாதுகாவலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தியது.  அவர்களே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழ்நிலையில் ஆடுகளையும் வாங்கிக் கொண்டு போவார்களா என்ன!

வாங் சாவொ கேட்டான். அந்தக் குகைக்கோயில், மலையில் எந்தப்பகுதியில் பார்த்ததாக உங்கள் மகன் சொல்லிக் கொண்டிருந்தார்?

கிழவர் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்பது போல பார்த்தார். வாங் சாவொ எரிச்சலுடன் விளக்கினான். “மலையில் அந்தக் குகைக்கோயிலை உச்சியில் பார்த்தாரா? மத்தியில் பார்த்தாரா? கால்வாசிப் பகுதியிலேயே பார்த்தாரா?

“கால்வாசிப்பகுதியிலேயே தான் பார்த்ததாய் சொல்லிக் கொண்டிருந்தான்....  சிறு வயதில் நான் எத்தனையோ முறை மலை ஏறி இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை....என்றவர் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு குரலடைக்கச் சொன்னார். “சாகும் காலம் நெருங்கி விட்டதால் மட்டுமே அவன் கண்ணில் அந்தக் குகைக் கோயில் பட்டதோ என்னவோ!

வாங் சாவொவுக்கு அந்த பீஜிங் இளைஞன் நினைவுக்கு வந்தான். அவன் கண்ணிலும் அந்த சைத்தான் கோயில் பட்டு அதுவே அவனுடைய அகால மரணத்திற்குக் காரணமானதும் நினைவுக்கு வந்தது....

வாங் சாவொ கேட்டான். உண்மையாகவே உங்கள் மகன் அந்த ரகசியக் கும்பலால் கொல்லப்பட்டிருந்தார் என்றால் அதற்குப் பழி வாங்க வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா?அப்படி இருந்தால் இந்த ஆளை எதாவது விதத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணமாய் இருந்தது.

கிழவர் முகம் சோகத்தில் ஆழ்ந்தாலும் கூடவே வறண்ட சிரிப்பொன்று அவரிடம் எழுந்தது. “கோபம், பழி வாங்கும் எண்ணம் எல்லாம் என்னை விட்டுப் போய் பல காலம் ஆகி விட்டது ஐயா. விதியுடன் போராட திராணி இல்லை.... இருக்கும் பிள்ளைகளாவது நல்லபடியாக இருந்தால் போதும் என்று மட்டுமே இறைவனிடமே வேண்டுகிறேன்.....

வாங் சாவொ கிளம்பினான். அப்படி ஒரு குகைக்கோயில் இருந்தால்  நாங்கள் அதைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டோம்....என்று அவன் கிழவரிடம் கடைசியாகத் தெரிவித்த போது கிழவர் ‘அட பைத்தியக்காராஎன்பது போல் பார்த்தார். வாங் சாவொ அதை ரசிக்கவில்லை. அவன் வேகமாக நகர்ந்தான்.

அவன் ஜீப் அருகே வந்த போது உள்ளூர் போலீஸ்காரன் அவன் முகபாவனையைப் படிக்க முயன்றான். கண்டிப்பாக மலையேறச் சொல்வானா என்ற பயம் அவனுக்கு இருந்தது. நீலக்கரடிகள் அதிகம் இருக்கும் அந்த சைத்தான் மலையில் ஏற அவனுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் வாங் சாவொவின் முகம் கல்லைப் போல இருந்தது.

“அடுத்தது என்ன சார்?என்று மெல்ல போலீஸ்காரன் கேட்டான்.

“மலை ஏறலாம். அந்த ரகசிய குகை இருப்பது உண்மை என்றால் அதைக் கண்டு பிடிக்காமல் இன்று திரும்பப் போவதில்லை.....

உள்ளூர் போலீஸ்காரன் மனம் நொந்தான். “நீலக்கரடிகள் அதிகம் இருக்கிற மலை சார் இது....என்று மெல்ல இழுத்தான்.

வாங் சாவொ பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னான். “மலையின் மேல் பகுதியில் தான் நீலக்கரடிகள் பகலில் இருக்கின்றன. நாம் அந்த அளவுக்குப் போகப் போவதில்லை. அப்படி ஒன்றிரண்டு நீலக்கரடிகள் கீழே வந்தால் நம் ஆறு பேரிடமும் துப்பாக்கி இருக்கிறது. இதில் பயப்பட என்ன இருக்கிறது?

உள்ளூர் போலீஸ்காரன் தலையை அசைத்தான். அவன் அந்த மலையைப் பற்றி எத்தனையோ வதந்திகள் கேள்விப்பட்டிருக்கிறான்.  நீலக்கரடிகள் பற்றி வெளிப்படையாகச் சொன்னது போல அதை எல்லாம் வாங் சாவொவிடம் சொல்ல முடியாது. சீனாவில் இருந்து வந்த வாங் சாவொவுக்கு திபெத்தின் ஆபத்தான சில விஷயங்களைச் சொன்னாலும் புரியாது. கூட இருக்கும் மற்ற நான்கு ஆட்களும் உள்ளூர் ஆட்கள் அல்ல. அவர்களுக்கும் புரியாது. விதி வலிது, நடக்கிற படி நடக்கட்டும் என்று அவன் நினைத்தான்.

அவர்கள் ஜீப்பில் மலையடிவாரத்திற்குக் கிளம்பினார்கள்.


மாராவின் போன் இசைத்தது. உடனடியாகப் பேசினான். “ஹலோ

“நான் போவதற்கு முன்பே அங்கே வாங் சாவொ தன் ஆட்களுடன் இருக்கிறான்.....

மாரா ஆச்சரியப்பட்டான். மைத்ரேயனும் அவன் பாதுகாவலனும் அங்கிருப்பதை வாங் சாவொவும் கண்டுபிடித்து விட்டானா?...

வாங் சாவொ அங்கே மைத்ரேயனைத் தேடி வரவில்லை. அந்த மலையில் இருக்கும் ரகசியக் குகையைக் கண்டு பிடிக்க வந்திருக்கிறான்.....

மாரா சாதாரணமாக எதற்கும் அசந்து போகிறவன் அல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அவன் அசந்து போனான். லீ க்யாங்கின் வேகம் அவனைப் பிரமிக்க வைத்தது. எத்தனை வேகமாக நெருங்கி விட்டான்....

மெல்ல மாரா கேட்டான். “அங்கே நடப்பதை ஒன்று விடாமல் சொல்...

“வாங் சாவொ அந்தக் கிராமத்துக் கிழவன் ஒருவனிடம் தனியாக விசாரித்து விட்டு இப்போது அந்த மலையில் ஏறப் போய்க் கொண்டிருக்கிறான். அவனுடன் உள்ளூர் போலீஸ்காரனும், வேறு நான்கு ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் அதிரடிப்படை ஆட்கள் போல் தெரிகிறார்கள். மலைஏற்றத்திலும் நல்ல தேர்ச்சி உடையவர்கள் என்பது பார்த்தாலே தெரிகிறது..... “

“உன்னை அவர்கள் யாராவது பார்த்தார்களா?

இல்லை, நான் அவர்கள் கண்ணில் படவில்லை....

“நல்லது. உடனடியாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடு. மலைக்குப் போக வேண்டாம். அந்தக் கிராம எல்லையில் மறைவாய் இரு. வாங் சாவொவும் அவன் ஆட்களும் எப்போது அங்கிருந்து போகிறார்கள் என்பதைத் தெரிவி... 

பேசி முடித்து மாரா யோசித்தான். அந்த மலையும், குகைக் கோயிலும் லீ க்யாங் கவனத்துக்கு இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் கூட மைத்ரேயன் இருக்கும் இடத்திற்கு வாங் சாவொ போய்க் கொண்டிருப்பது ஒரு நல்ல செய்தியாகத் தான் தோன்றியது. நீலக்கரடிகள் ஒரு பக்கம், வாங் சாவொ இன்னொரு பக்கம் நெருங்கும் போது அந்த மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் என்ன செய்வார்கள் என்று யோசிக்கையில் சின்னதாய் புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்தது.


வாங் சாவொவின் வரவை அக்‌ஷய் விரைவிலேயே உணர்ந்தான். வந்திருப்பது வாங் சாவொவும், அவன் ஆட்களும் தான் என்பது ஆரம்பத்தில் அக்‌ஷய்க்குத் தெரியவில்லை. மலையில் தங்களைத் தவிர வேறு ஆட்கள் பிரவேசித்து விட்டார்கள் என்பதை சிறு சிறு சத்தங்களால் அவன் அறிந்தான். அந்த சமயத்தில் மைத்ரேயன் ஆட்டுக்குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்‌ஷய் உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கச் சொல்லி அவனை எச்சரித்தான். அந்தக் கணமே மைத்ரேயன் விளையாட்டை நிறுத்தி விட்டு அவன் அருகே வந்து நின்றான். அவன் பின்னாலேயே அந்த ஆட்டுக்குட்டிகளும் வந்தன.

விளையாட்டை அப்படி உடனடியாக நிறுத்த முடிந்த சிறுவர்களை அக்‌ஷய் அது வரை கண்டதில்லை. கௌதம் விளையாட்டை நிறுத்த குறைந்த பட்சம் மூன்று தடவையாவது சொல்ல வேண்டி இருக்கும்.... அக்‌ஷய் தன் பள்ளியிலும் எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்திருக்கிறான். அவர்களும் அப்படித்தான். சொன்ன கணமே ஒன்றை விட்டு விலகி வருவது பெரியவர்களுக்கே கூட சுலபமல்ல. வியப்புடன் மைத்ரேயனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னுடனேயே நெருங்கி வருமாறு சைகையால் தெரிவித்து விட்டு அக்‌ஷய் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து மெல்ல கீழே இறங்கி வர ஆரம்பித்தான். மைத்ரேயனும் பின்தொடர்ந்தான். ஆடுகளும் மைத்ரேயனுடனேயே சத்தமில்லாமல் வந்தன.

சத்தம் வந்த இடத்தைப் பார்க்கும் வசதியான ஒரு பாறைக்குப் பின்னால் நின்று கொண்ட அக்‌ஷய் தன் தோல்பையில் இருந்து ஒரு உயர்தர பைனாகுலரை எடுத்துக் கொண்டு பாறை இடுக்கில் இருந்து பார்த்தான். வாங் சாவொவைப் பார்த்தவுடன் அவன் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. இவன் எப்படி அறிந்தான் என்ற திகைப்பு அவனுக்கு ஏற்பட்டது.   

ஆனால் வாங் சாவொவின் நடவடிக்கையை மேலே இருந்து கவனிக்க கவனிக்க அவனது திகைப்பு வேறு மாதிரியாக மாறியது. வாங் சாவொ அவர்களைத் தேடி வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏன் ஆட்களையே தேடுவதாகத் தெரியவில்லை. அங்கங்கே பாறைகளில் தட்டினார்கள். சில செடிகொடிகளை வெட்டினார்கள். அடர்த்தியாக தாவரங்கள் படர்ந்திருந்த பகுதிகளிலும் மறைவாய் இருக்கும் பகுதிகளிலும் மிகவும் கவனமாக அவர்கள் ஆராய்ந்தார்கள். என்ன தேடுகிறார்கள்? மைத்ரேயனைத் தேடுவதை விட்டு விட்டு வேறெதையோ தேடுகிறார்கள் என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கேள்விப்பட்ட வரையில் லீ க்யாங்கின் கவனம் அப்படி எல்லாம் திசை திரும்பாதே என்று யோசித்தபடியே அக்‌ஷய் அவர்களைக் கண்காணித்தான்.

ஒரு இடத்தில் அடர்த்தியாக இருந்த தாவரங்களை வாங் சாவொவின் ஆட்கள் வெட்டிய போது ஒரு பள்ளம் தெரிய அவர்கள் சற்று தள்ளி வேறு பக்கத்தை ஆராய்ந்து கொண்டிருந்த வாங் சாவொவை அழைத்தார்கள். “சார் இங்கே பாருங்கள்

ஆர்வத்துடன் விரைந்து வந்த வாங் சாவொ அந்தப் பள்ளத்தை சந்தேகத்துடன் பார்த்து விட்டு “எதற்கும் இங்கே கொஞ்சம் தோண்டிப் பாருங்கள். குகையை மண் போட்டு அவர்கள் மறைத்து வைத்திருந்தாலும் இருக்கலாம்என்று சொல்ல அவர்கள் தோண்ட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திலேயே குகை அங்கே இல்லை என்பது தெரிந்து வேறு பக்கம் அவர்கள் நகர்ந்தார்கள்.

அக்‌ஷய்க்கு அவர்கள் மெல்ல பேசிக் கொண்டது காதில் விழவில்லை என்றாலும் கூட அவர்கள் தேடிய விதத்தைப் பார்க்கையில் அவர்கள் தேடுவது அவன் பார்வையில் ஒரு முறை பட்டு மறைந்த குகையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது. அப்படி இருக்குமானால் பார்த்த காட்சியில் பிழை இல்லையா?....

பைனாகுலரை கண்களிலிருந்து எடுத்து விட்டு சந்தேகத்தோடு அக்‌ஷய் மைத்ரேயனைப் பார்த்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 
Monday, November 16, 2015

வாழ்க்கையைக் கடவுள்மயமாக்கலாம்!


கீதை காட்டும் பாதை 38

மூடர்களின் மற்ற லட்சணங்களை ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

வீணான ஆசைகளையும், வீணான செயல்களையும், வீணான அறிவையும் வைத்துக் கொண்டு விவேகமற்றவர்களாய் ராக்‌ஷஸீம், ஆஸரீம், மோஹினீம் என்ற தன்மைகளைக் கொண்டவர்களாகிறார்கள்.

மூடர்களின் கச்சாப் பொருள் என்ன தெரியுமா? வீணான ஆசைகள், வீணான செயல்கள், வீணான அறிவு இந்த மூன்றும் தான். இந்த மூன்றையும் வைத்துத் தான் தங்கள் வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொண்டு, மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். தாங்களே வீணாகிப் போகிறார்கள். எது எதற்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்கிற அடிப்படை ஞானம் கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதே விவேகம். அந்த விவேகம் இல்லாத போது தான் வீணானவற்றில் மனம், செயல், அறிவு ஆகியவை செயல்பட ஆரம்பிக்கிறது. அதனால் உருவாகும் மூன்று வகைத் தன்மைகளை ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

ராக்‌ஷஸீம் என்கிற அரக்க குணம் காரணமே இல்லாமல் பகைமை பாராட்டி அடுத்தவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

ஆஸரீம் என்கிற அசுரகுணம் காமத்தாலும் பேராசையாலும் உந்தப்பட்டு தன் சுயநலத்திற்காக அடுத்தவர்க்குத் துன்பம் விளைவிக்கவும், பிறர் பொருளை அபகரிக்கவும் முயலும் தன்மை  கொண்டது.

மோஹினீம் என்ற குணம் மோகத்தின் வசப்பட்டு துன்பம் ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டது.

இந்த மூன்று தன்மைகளாலும் எக்காலத்திலும் நாசம் அல்லாமல் நன்மைகள் யாருக்கும் விளையப்போவதில்லை. அறிவை மங்க வைத்து, தவறான ஆசைகளை அதிகரிக்க வைத்து, தறிகெட்டு ஓடும் செயல்களைச் செய்ய வைத்து யாருக்குத் தான் நன்மைகள் விளைய முடியும்?

மூடர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்லியாகி விட்டது. ஞானமுள்ளவர்கள் எப்படி இருப்பார்கள், என்ன செய்வார்கள் என்று சொல்ல வேண்டும் அல்லவா? அதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

தெய்வீக இயல்புடைய மகாத்மாக்களோ எல்லா உயிரினங்களுக்கும் மூலமாய், அழிவில்லாதவனாய் என்னை அறிந்து வேறு எதிலும் நாட்டமில்லாத மனத்துடன் இடைவிடாது வழிபடுகிறார்கள்.

அவர்கள் இடைவிடாது என்னைப்பற்றிப் பாடிக்கொண்டும், கடினமான விரதங்களால் முயற்சி செய்து கொண்டும், என்னைப் பக்தியுடன் நமஸ்கரித்துக் கொண்டும், எப்போதும் என்னுடைய தியானத்தில் நிலைத்திருந்தும் உபாசனை செய்கிறார்கள்

சிலர் ஞான யக்ஞத்தினால் என்னை உபாசிக்கிறார்கள்.  சிலர் என்னை இரண்டற்ற ஒரே தெய்வமாகவும், சிலர் வெவ்வேறு உருவங்களாகவும், சிலர் எங்கும் பரவியுள்ள என்னை மற்றும் பல விதமாகவும் உபாசிக்கிறார்கள்.

அழிகின்ற வெளிப்புறத் தோற்றங்களில் தெரிகிற வித்தியாசங்களையே உண்மையாக நம்பி விடாமல் அவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் மூலமான அழிவில்லாத இறைவனை ஒவ்வொன்றிலும் அடையாளம் காண முடிந்தவனே உண்மையான ஞானி. அழிவேயில்லாத மூலப்பொருளை உணர முடிந்தவனுக்கு அறிந்து கொள்ளவோ, வழிபடவோ வேறு என்ன இருக்கிறது? இறைவனால் ஈர்க்கப்பட்டவனை வேறு என்ன தான் ஈர்க்க முடியும்? எனவே தெய்வீக இயல்புள்ள மகாத்மாக்களின் நாட்டம் முழுவதும் இறைவனிடத்திலேயே இருக்கிறது. இடைவிடாது இறைவனையே வழிபடுகிறான்.  

வழிபடும் விதங்கள் அவரவர் தன்மைக்கேற்ப மாறுபடலாம். இறைவனைப் பாடிக் கொண்டும், இறைவனை எண்ணி விரதங்கள் இருந்து கொண்டும், இறைவனைப் பக்தியுடன் வணங்கிக் கொண்டும், இறைவனைத் தியானித்துக் கொண்டும் வழிபடலாம். ஒருவருக்கு இயல்பாக லயிக்க முடிவது மற்றவர்க்கு கடினமாக இருக்கலாம். இந்த வழிபாட்டு விதங்களில் உயர்வு தாழ்வு இல்லை.

அவர்கள் இறைவனை ஒருவனாகப் பார்க்கலாம், இரண்டாகப் பார்க்கலாம், இருபதாகப் பார்க்கலாம், இருநூறாகவும் பார்க்கலாம். யக்ஞங்களால் வழிபடலாம், ஞான மார்க்கமாகத் தியானித்து அந்த சுகானுபவத்தில் நிலைக்கலாம். இப்படி காணும் விதங்களிலும் உயர்வு, தாழ்வு இல்லை. காணப்படும் பொருள் இறைவனாக இருக்கும் வரையில் காணும் விதம் எதுவாகவும் இருக்கலாம். காணும் விதமும், வழிபடும் விதமும் ஆத்மார்த்தமாக இருக்கும் வரையில் எல்லாமே இறைவனுக்கு உகந்ததே.

இந்த சுலோகங்களில் இடைவிடாது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்துவதைப் பார்க்கும் போது சிலருக்கு ஒரு யதார்த்தமான சந்தேகம் வரலாம். இடைவிடாது இறைவனை நினைப்பது எல்லோருக்கும் சாத்தியமா? உலக வாழ்க்கையைத் துறந்தவன் இறைவன் நினைவாகவே இருக்க முடியும். மற்றவர்களால் முடியுமா? மெய்ஞான ஈடுபாடு இருந்தாலும், ஆத்மார்த்தமான தேடுதல் இருந்தாலும் இல்வாழ்க்கையைத் துறக்காதவனுக்கு இது முடிகிற காரியமா?

வாழ்க்கையைத் துறக்காமலேயே ஒருவருக்கு இது முடிகிற காரியம் தான். செய்கின்ற எதையும் நீங்கள் இறை மயமாக்கலாம். ஏன் வாழ்க்கையையே இறை மயமாக்கலாம்.  எப்படி என்று கேட்கிறீர்களா? வினோபா பதில் சொல்கிறார், கேளுங்கள்!

நம் அன்றாட வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு கணமும் சாதாரணமாகத் தோன்றினாலும் உண்மையில் அது சாதாரணமானதல்ல. அதில் பெரிய பொருள் பொதிந்திருக்கிறது. வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய யக்ஞ கர்மமே. உனது உறக்கம் என்பதென்ன? அது ஒரு சமாதி நிலை. எல்லா வகைப் போகங்களையும் நாம் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டுத் தூங்கினால் அத்தூக்கம் சமாதி நிலை அல்லாமல் வேறென்ன? குளிக்கும் போது புருஷ சுக்தம் சொல்லும் வழக்கம் நம் முன்னோரிடத்தில் இருந்து வந்தது. குளியலுக்கும் புருஷ சுக்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணிப் பாருங்கள். பார்க்க விரும்பினால் நிச்சயம் புலனாகும்.

ஆயிரம் கைகளும், ஆயிரம் கண்களும் உள்ள விராட புருஷனுக்கும், உன் குளியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நீ எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்ளும் அந்தச் செம்பு நீரில் ஆயிரக்கணக்கான துளிகள் இருக்கின்றன. அத்துளிகள் ஆண்டவனது ஆயிரம் கைகளில் இருந்து உன் மீது பொழியும் நீர்த்துளிகளாக எண்ணிக் கொள். இத்துளிகள் மூலமாக உன் தலையின் உள்ளே உள்ள அழுக்கையும் சேர்ந்து ஆண்டவன் கழுவிக் கொண்டிருக்கிறான். இத்தகைய தெய்வீக பாவனையை உன் குளியலில் புகுத்துவாயானால் அந்தக் குளியல் ஆண்டவனின் ஆசி பொழிவது போலாகி அதில் அளவிட முடியாத சக்தி வந்து சேரும்”.

எவ்வளவு அழகாக வினோபா சொல்கின்றார் பார்த்தீர்களா?

எல்லாவற்றிலும் இறைவனையும், இறைவனின் செயல்பாட்டையும் உணர முடிவது மிக உயர்ந்த மெய்ஞானம். தினசரி வாழ்க்கையில் இறைவனை சில நிமிட வழிப்பாட்டு சமாச்சாரமாக மட்டும் ஆக்கி விடாமல் ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் மனதாரப் பற்றிக் கொண்டு இருப்போமானால் அதற்கு மேல் அடைய வேண்டிய நிலை என்ன இருக்கிறது?

பாதை நீளும்.....
என்.கணேசன்