சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 29, 2018

சத்ரபதி- 44



ஷாஹாஜியை கைது செய்து தான் சிவாஜியைப் பயமுறுத்தி நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்த ஆதில்ஷா எப்படி அதை நடமுறைப்படுத்துவது என்று ஆலோசிக்க தனக்கு மிக நெருங்கிய ஆலோசகர் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ஷாஹாஜியின் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் இல்லாமல் அவர் பார்த்துக் கொண்டார்.  ஆலோசனைக்கூட்டத்தில் பலரும் கர்னாடகத்தில் ஷாஹாஜியைக் கைது செய்வது அவ்வளவு சுலபமல்ல என்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.

கூர்மதி படைத்த ஒருவர் சொன்னார். “அரசே! ஷாஹாஜி அதிர்ஷ்டக்குறைவால் இப்போது இந்த நிலையில் இருக்கிறாரேயொழிய திறமைக்குறைவால் வீரக்குறைவாலோ அல்ல. கர்னாடகத்தில் ஷாஹாஜி படை ஆதரவுடனும், மக்கள் ஆதரவுடனும் இருக்கிறார். அவருக்கு எதிராக அவர்களை இயங்க வைப்பது நடவாத காரியம். பலம் பிரயோகித்தால் கூட நமக்கு எதிராகப் பலர் திரும்பும் சாத்தியமும் உள்ளது. அதனால் வழக்கமான முறையில் ஷாஹாஜியை அங்கு கைது செய்து இங்கு கொணர்வது முடியாத காரியம் என்றே நான் சொல்வேன்…..”

ஆதில்ஷா ஆலோசித்தார். இந்தக் கருத்து உண்மை என்றே அவருக்கும் புரிந்திருந்தது. அவர் யோசனையுடன் சொன்னார். “அப்படியானால் ஷாஹாஜியை இங்கு வரவழைத்து தான் கைது செய்ய வேண்டும்….”

இன்னொருவர் சொன்னார். “வரவழைப்பதும் சுலபம் என்று தோன்றவில்லை மன்னா. சூழ்நிலை சரியில்லை என்பதை அறிய முடியாத முட்டாள் அல்ல அவர். அதனால் அழைத்தாலும் உடல்நிலை சரியில்லை என்பது போன்ற ஏதாவது காரணம் சொல்லி அவர் தவிர்க்கவே பார்ப்பார்….”

“அப்படியானால் என்ன வழி?” ஆதில்ஷா கேட்டார்.

ஷாஹாஜியின் மேல் அளவு கடந்த பொறாமை வைத்திருந்தவனும், இதுவரை ஆதில்ஷாவுக்கு ஷாஹாஜியைப் பற்றி எதிரான அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தவனுமானவன் இந்த ஒரு கேள்விக்காகவே காத்திருந்தான். அவன் அதற்குப் பதிலை முன்பே யோசித்து வைத்திருந்தான். “அரசே தந்திரமாக அங்கேயே கைது செய்து பின் இங்கே அவரைத் தருவிப்பது தான் புத்திசாலித்தனமான வழி”

ஆதில்ஷா அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். அவன் சொன்னான். “மன்னா, ஷாஹாஜி சிறிதும் சந்தேகப்படாத ஒரு ஆள் மூலமாக திடீரென்று அவரைக் கைது செய்து இங்கு கொணர்வது தான் புத்திசாலித்தனம். அந்த ஆள் தந்திரசாலியாக இருந்தால் தான் இது சாத்தியம்…..”

அப்படிப்பட்ட ஆள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்த ஆதில்ஷாவுக்கு பாஜி கோர்படே என்ற ஆள் நினைவுக்கு வந்தான். அவன் முதோல் என்ற பகுதிக்குச் சமீபத்தில் தான் தலைவனாக உயர்ந்திருக்கிறான். கர்னாநாடகத்திற்கு சமீபத்தில் உள்ள பகுதி அது. பாஜி கோர்படே சூட்டிப்பானவன் மட்டுமல்ல. அறிவாளியும் கூட. சொல்கிற வழியில் சொன்னால் அவன் கண்டிப்பாக சாதித்துக் காட்ட முடிந்தவன். அவன் நிர்வாக விஷயமாக அவர் அனுமதி கேட்டு நேற்று தான் பீஜாப்பூர் வந்திருக்கிறான்…… ஆதில்ஷா அவனை ரகசியமாகத் தருவித்தார்.

பாஜி கோர்படே நிர்வாக விஷயத்தில் அவன் கேட்டிருந்த விஷயமாகத் தான் பேச சுல்தான் அழைக்கிறார் என்ற அபிப்பிராயத்துடன் தான் அங்கு வந்தான். ஆனால் ஆதில்ஷா அந்த விஷயமாக அவனிடம் பேசாமல் ஷாஹாஜியைப் பற்றிப் பேசினார். “பாஜி கோர்படே நீ ஷாஹாஜியை நன்றாக அறிவாயா?”

குழப்பத்துடன் ஆதில்ஷாவைப் பார்த்த பாஜி கோர்படே “ஓரளவு பரிச்சயம் இருக்கிறது அரசே” என்றான்.

“அவரை நீ கைது செய்து இங்கே கொண்டு வர வேண்டும். முடியுமா உன்னால்?”

குழப்பம் திகைப்பாக மாறி அதிர்ச்சியாக முடிந்து அப்படியே தங்கியது. சுல்தானின் நன்மதிப்பு பெற்ற மேலிடத்து மனிதராகவே ஷாஹாஜியை பாஜி கோர்படே கருதி வந்திருக்கிறான். திடீரென்று சுல்தான் இப்படிக் கேட்பது ஆழம் பார்க்கவா, நிஜமாகவே ஷாஹாஜி மேல் கோபம் கொண்டிருக்கிறாரா என்று புரியாமல் யோசனையுடன் சுல்தானைப் பார்த்தான்.

ஆதில்ஷா அமைதியாகச் சொன்னார். “நான் திறமையானவர்களைத் தான் எந்தப் பகுதிக்கும் தலைவராக நியமிப்பது வழக்கம். என் அரசவையில் வேறு இரண்டு பேர் முதோல் பகுதிக்குத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் அறிந்த பின்னும் நான் உன்னை நியமனம் செய்ததில் அவர்கள் இருவருக்கும் என் மேல் வருத்தமும், உன் மேல் பொறாமையும் கூட உண்டு. உன்  தகுதியையும்  திறமையையும் நீ நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முடியுமா உன்னால்?”

பாஜி கோர்படே புத்திசாலி. முடியாது என்ற பதிலில் தன் இப்போதைய பதவியே பறிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தான். பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த அவனிடம் வேறு பதில் இருக்கவில்லை. “முடியும்” என்று உடனே உறுதியாகச் சொன்னான். வழிகளைப் பின்பு ஆலோசிப்போம்….

ஆதில்ஷா புன்னகைத்தார். ஆனால் அந்தப் புன்னகை வந்த வேகத்திலேயே மறைந்தது. அவர் எச்சரிக்கும் தொனியில் சொன்னார். “ஷாஹாஜி அறிவாளி. வீரர். அதனால் தகுந்த திட்டத்துடன் போய் இதைக் கச்சிதமாகச் சாதிக்க வேண்டும். இல்லா விட்டால் நீ சிறைப்படுத்தப்படலாம். அல்லது கொல்லவும் படலாம். அதனால் நீ மிக மிக எச்சரிக்கையுடன் சிறிய சந்தேகமும் ஏற்படாதபடி கச்சிதமாகத் திட்டமிட்டால் ஒழிய வெற்றி காண முடியாது. அதனால் தான் மீண்டும் கேட்கிறேன். உண்மையாகவே இதில் வெற்றி பெற முடியுமா? நன்றாக யோசித்துச் சொல்”

பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிந்த பாஜி கோர்படே “உங்கள் ஆணை என் பாக்கியம் அரசே! யோசித்து விட்டே நான் சொல்கிறேன். விரைவில் உங்கள் ஷாஹாஜியைக் கைது செய்து உங்கள் எதிரில் கொண்டு வந்து நிறுத்துகிறேன்….” சிறிதும் தயங்காமல் சொன்னான்.

ஆதில்ஷா சொன்னார். “நல்லது. இனி ஷாஹாஜியோடு வந்து நீ என்னைச் சந்தித்தால் போதும். சென்று வா”

பாஜி கோர்படே சுல்தானை வணங்கி விட்டுக் கிளம்பினான். அவன் கர்நாடக எல்லையிலேயே அதிகம் இருந்ததால் சிவாஜி அடுத்தடுத்து கோட்டைகளைக் கைப்பற்றிய தகவல் அவனை எட்டியிருக்கவில்லை. பீஜாப்பூரில் அவன் நண்பர்களை விசாரித்ததில் தற்போதைய நிலவரங்களை முழுமையாக அறிந்தான். சுல்தானுக்கு இப்போது ஷாஹாஜி எதிரியாக ஆனது எப்படி என்று புரிந்த அவனுக்கு அந்த எதிரியைக் கைது செய்து சுல்தானிடம் ஒப்படைத்தால் மேலும் பெற முடிந்த ஆதாயங்களும் ஏராளமாக இருக்கும் என்பதும் புரிந்தது. அவன் மனம் அதை எல்லாம் எண்ணுகையில் படபடத்தது.

ஆனால் சுல்தான் அவனிடம் எச்சரித்த வார்த்தைகளும் நூறு சதவீதம் உண்மை என்பதை அவன் அறிவான். “தகுந்த திட்டத்துடன் போய் இதைக் கச்சிதமாகச் சாதிக்க வேண்டும். இல்லா விட்டால் நீ சிறைப்படுத்தப்படலாம். அல்லது கொல்லவும் படலாம்.” அதை நினைக்கையில் மனதில் பதட்டத்தையும் உணர்ந்தான்.

தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பி வருகையில்  வழியெல்லாம் அவன் மனம் பல திட்டங்களைப் போட்டு அவற்றின் சாதக பாதகங்களையும், அலசிக் கொண்டே வந்தது. ஷாஹாஜியின் பலம் பலவீனங்களையும் அவரது  கடந்த கால சரித்திரத்தை வைத்து யோசித்துப் பார்த்தான்.. அவர் பிரபலமானவர் என்பதால் அவரைப் பற்றிப் பலர் மூலம் நன்றாக அவன் அறிவான். மனிதர் வீரர், அறிவாளி என்பதில் எல்லாம் சந்தேகம் இல்லை… ஆனால் அவருக்கு பாஜி கோர்படேயைப் பற்றி அந்த அளவு ஆழமாகத் தெரியாது. அவன் அவரளவு பிரபலமில்லாதவன், பழக்கப்படாதவன் என்பதால் அவனைப் பற்றி முழுமையாக அறியும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அதுவே தன் பலம் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு சாதாரண பிரதேசத்தின் சாதாரணத் தலைவனாகிய அவன் மூலம் அவருக்கு ஆபத்து வர முடியும் என்ற எண்ணமே அவருக்குத்  தோன்ற வாய்ப்பில்லை….. அந்த எண்ணமே அவனுக்குப் பெரிய மனபலத்தை ஏற்படுத்தியது.

நன்றாக யோசித்து ஒரு திட்டத்தைப் போட்டு அதற்கு இரகசியமாய் சில ஏற்பாடுகள் செய்ய அவனுக்கு பத்து நாட்கள் தேவைப்பட்டன. கச்சிதமாய் அந்த ஏற்பாடுகளைச் செய்து விட்டு என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று பல கோணங்களில் ஆராய்ந்து விட்டு அத்தனைக்கும் வழி ஏற்படுத்திக் கொண்டு விட்ட பின்பே திருப்தியுடன் அவன் பெங்களூருக்கு ஷாஹாஜியைச் சந்திக்கச் சென்றான்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 25, 2018

இருவேறு உலகம் – 106


விஸ்வத்தின் சக்திகளுக்கான பயணம் இனிமையாய் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தேடிப் போன குருவே அவனை சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை. மவுண்ட் அபுவில் சதானந்தகிரி சுவாமிஜியிடம் ஆர்வத்துடன் வேண்டி நின்ற தருணம் இப்போதும் அவன் மனதில் பசுமையாகவே இருக்கிறது. அவர் மறுத்து விட்டார். அவரது மறுப்பு ஏமாற்றமாக இருந்தாலும் கூட அவன் தேடலைத் தடுத்து நிறுத்தி விடவில்லை. வாழ்க்கையில் ஒரு கதவு மூடியவுடன் எல்லாமே முடிந்து விட்டது என்று ஓய்ந்து போகும் ரகம் அல்ல அவன். அடுத்தடுத்த கதவுகளைத் தட்டிப் பார்ப்பதில் அவனுக்குச் சலிப்போ தயக்கமோ இருக்கவில்லை. சில கதவுகள் திறந்தன. ஒவ்வொரு இடத்திலும் உள்ளே நுழைந்தவன் தனக்குச் சொல்லிக் கொடுத்தவரை விட ஒரு படி உயராமல் வெளியே வந்ததில்லை.

ஒரு நாளுக்கு அவன் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உறங்கியதில்லை. காலத்தை அவனுக்குப் பயனில்லாத விஷயங்களில் வீணாக்கியதில்லை. தேவைக்கு அதிகம் பேசியதில்லை. தேவைக்கு அதிகமாகப் பேசியதைக் கேட்டதும் இல்லை. சிந்தித்தான். பேரறிவாளர்களின் சிந்தனைகளைப் படித்தான். அந்த சிந்தனையைத் தன் சிந்தனையாகப் பதியவைத்துக் கொண்டு மறுபடி அதிகம் சிந்தித்தான். அந்த சிந்தனை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் வரை அந்த சிந்தனையாகவே வாழ்ந்தான். அந்த ஜிப்ஸி பற்ற வைத்து விட்டுப் போன அக்னி எரிமலை ஜுவாலையாய் எரிந்து கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை கூடிக் கொண்டே வந்ததே ஒழிய தணிந்ததோ குறைந்ததோ இல்லை.

ஓரளவு உயர்சக்திகளைத் தன் வசமாக்கிக் கொண்ட பின் மவுண்ட் அபுவுக்கு மறுபடி போனான். சதானந்தகிரி சுவாமிஜியின் ஆசிரமத்தில் அவரையே அவன் சக்திகளால் கட்டிப்போட்டான். மனிதர் பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவரை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. முடிவில் முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு முயற்சியை நிறுத்திக் கொண்ட பின் தான் அவரைக் கட்டவிழ்த்து விட்டு வந்தான். தன் சக்தியை அடுத்தவர்களுக்கு நிரூபிக்க அவன் அதன்பின் எப்போதும் விளையாட்டாய் முயற்சி எடுத்ததில்லை.


அவன் இப்படி  வளர்ந்து வரும் சமயத்தில் பலரும் இன்னொரு மனிதரைப் பற்றிப் பேசினார்கள். ‘மாஸ்டர்’ என்றே அவரை அழைத்தார்கள். அவர் இருந்த சக்தி வாய்ந்த ரகசிய ஆன்மிக இயக்கத்தைப் பற்றிப் பேசினார்கள். அந்த இயக்கத்தின் அங்கத்தினர்கள் பெரிய பெரிய பதவிகளிலும், பெரிய பெரிய நிலைகளிலும் இருப்பதைச் சொன்னார்கள். அறிவுஜீவிகள் இருக்கும் இயக்கம் என்றும் இந்த உலகத்தின் நன்மைக்காகவே இயங்கும் இயக்கம் என்று சொன்னார்கள். ஏகப்பட்ட சொத்துக்கள் அந்த இயக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். முக்கியமாய் அறிவு, அதிகாரம் என்ற இரு வார்த்தைகள் அவனை மிகவும் ஈர்த்தன.

விஸ்வத்தின் அடுத்த இலக்காக அந்த இயக்கம் அமைந்தது. ஒரு மாத காலம் அந்த இயக்கத்தைப் பற்றியும் மாஸ்டரைப் பற்றியும் அறிய வேண்டிய தகவல்கள் எல்லாவற்றையும் அறிந்தான். பின் ஒரு நாள் மாஸ்டரை தூரத்தில் இருந்து கவனிக்கப் போனான். மாஸ்டர் அப்போது ரிஷிகேசத்தில் தன் குருவுடன் தங்கியிருந்தார். அந்தக் குடிலுக்கு அருகில் ஒரு அழகான தோட்டத்தை மாஸ்டர் அமைத்திருந்தார். அந்தச் செடிகளுக்கு அவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கையில் தான் விஸ்வம் மாஸ்டரை முதல் முதலில் பார்த்தான். அவன் பார்த்த அடுத்த கணமே மாஸ்டர் அவன் இருந்த பக்கம் திரும்பினார். மின்னல் வேகத்தில் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்ட விஸ்வம் மாஸ்டரின் உணர்வுகளின் நுட்ப நிலையை முதல் பார்வையிலேயே உணர்ந்து கொண்டான். சாதாரணமாய் பார்த்த முதல் கணத்திலேயே தான் பார்க்கப் படுவதை அறிய முடிந்த அவர், அவன் தன் சக்தி அலைகளைப் பிரயோகப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக அவனை அந்த சக்தி அலைகளிலேயே ஊடுருவி முழுவதுமாய் அறிந்திருப்பார். வாழ்க்கையில் முதல் முறையாகத் தனக்கு இணையான ஒரு மனிதரை விஸ்வம் சந்தித்திருப்பதாய் உணர்ந்தான்.

அந்த இயக்கத்தில் சேர்வதற்கு முன் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக் கொண்டு தான் வந்தான். இயக்கத்தின் ஒரு ஆன்மிக உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஆன்மிகத்தில் மிக ஈடுபாடு இருப்பதாகவும், உலக நன்மைக்கே ஆன்மிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அவரிடம் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் தங்கள் இயக்கத்தின் நிலைப்பாடுகளாகவே இருப்பதை உணர்ந்த அந்த உறுப்பினர் தங்கள் இயக்கத்தில் அவனைச் சேர்த்து விட்டார். முதல் முறை மாஸ்டர் இல்லாத சமயமாகத் தான் அந்த உறுப்பினருடன் குருவைச் சந்திக்கப் போனான். அங்கு போவதற்கு முன் தன் எண்ண அலைகளையும், சக்தி அலைகளையும் மறைத்துக் கொண்டு போனான்.

தாமிரத் தாம்பாளத்தில் பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டு, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு பரமசாதுவாய் வந்த விஸ்வத்தை குரு சந்தேகப்படவில்லை. அதற்குக் காரணமும் இருக்கவில்லை. அவரும் ஓரளவு சக்தி அலைகளில் தேர்ச்சி பெற்றவர் தான் என்றாலும் அவனைச் சந்தேகப்படாததால் அவனை அலசப் போகவில்லை. அப்படி அலசியிருந்தாலும் கண்டுபிடித்திருக்க முடியாதபடி விஸ்வம் மறைத்து தான் வைத்திருந்தான். அவனுக்கு ஆசி வழங்கி இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார்.  

இந்த அலைகளைப் படிக்கும் சக்தி படைத்தவர்கள் கூட, கவனத்தோடு அதற்கு முயன்றால் தான் படிக்க முடியும். இல்லாவிட்டால் அவற்றை அறிந்து கொள்ள முடியாது. எதிரே ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தாலும், அது எழுதப்பட்டிருக்கும் மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதைத் திறந்து படித்தால் மட்டுமே ஒருவர் அதில் எழுதியிருப்பதை அறிய முடியும் அல்லவா? அதே போல் தான் அடுத்தவரை அறிய முடிவதும். எத்தனை தான் யோகசக்திகளே பெற்றிருந்தாலும் கவனத்தை அதன் பக்கம் திருப்பாத வரை அதன் முழுத்தன்மையை அறிய முடியாது. இதை விஸ்வம் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். முக்கியமாய் மாஸ்டரை நெருங்கி வரும் போதெல்லாம் அவர் கவனம் முழுமையாய் தன் பக்கம் வராதபடி பார்த்துக் கொண்டான். ஓரளவாவது வந்தே தீரும் என்ற முக்கியமான சூழ்நிலைகளில் மேலான சக்தி கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டே வந்தான். இயல்பிலேயே நுட்பமான உணர்வுகள் கொண்ட அவர் அவன் விஷயத்தில் சந்தேகமோ, ஆர்வமோ கொள்ளாதபடி விஸ்வம் மிகவும் கவனமாக இருந்தான். அவனுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு முறையாவது அவர் முழுமையான கவனத்தோடு சக்தி அலைப் பிரயோகத்தை அவன் மீது ஏற்படுத்தியிருந்தால் அது அந்தக் கவசத்துடன் மோதித் திரும்புவதை அவர் கண்டிருப்பார். மிக மிகக் கவனத்துடன் அப்படி நடந்து விடாதபடி விஸ்வம் பார்த்துக் கொண்டான்.

பெரும்பாலும் மாஸ்டரின் கவனம் எல்லாம் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும், இயற்கையின் ரகசியங்களை அறிவதிலுமேயே இருக்கும். குருவிடம் அவர் இருக்கும் போது அதிகமாய் அவர் பேசுவதும் ஆர்வம் காட்டுவதும் அவற்றில் தான். தவறியும் அது சம்பந்தமாக அவரிடம் அவன் பேசியதில்லை. அந்த ஆர்வம் மூலமாகத் தன் மீது அவர் கவனம் திரும்புவதை அவன் விரும்பவில்லை. சில நாட்கள் பலரோடு ஒருவனாகவே அந்த இயக்கத்தில் இருந்து வந்த விஸ்வம் மெல்ல அவர்கள் இயக்கத்தின் கணக்கெழுதும் போது சேர்ந்து கொண்டான். காலப் போக்கில் தன்னிடமே முழுக்கணக்கு எழுதும் வேலையும் வருமாறு பார்த்துக் கொண்டான்.

மிகச்சில சந்தர்ப்பங்களில் மாஸ்டருடன் நெருங்கி இருக்க வேண்டிய சூழல்களில் அவன் தன் அலைகளை அவருக்கு அடையாளம் காட்டி விடாமல் இருக்க தீவிர சக்தி சாதகம் செய்து விட்டு பின்னரே அவரிடம் வருவான். பின் அடுத்த கட்டமாக மாஸ்டர் ஏதாவது ஒன்றில் ஆழமாக இருக்கையில் அவர் அறியாமல் அவர் எண்ண அலைகளை சில வினாடிகள் படிக்க ஆரம்பித்தான். வினாடிகள் நிமிடங்களின் அளவில் நீண்டால் அவர் அதை உணர்ந்து விடுவார். அந்த அளவு அவர் உணர்வுகள் சூட்சுமமானவை. எனவே மிக கவனமாக அவரிடம் வினாடிகளின் அளவில் மட்டுமே அவன் பரிசோதனைகளை நடத்தியிருக்கிறான். அவன் தன் வாழ்க்கையில் மிக அதிகமாக சக்திகளை செலவிட்டது மாஸ்டர் விஷயத்தில் தான்.

ஒவ்வொரு சக்தியையும் செலவிடுவது பெரிதல்ல. அதை மீண்டும் நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு சாதகம் செய்ய வேண்டும். அதனாலேயே அனாவசியமாய் தன் சக்திகளை அவன் விரயம் செய்ததில்லை. சாதாரண வழியிலேயே ஒன்றைச் செய்ய முடியுமானால் அதை அந்த சாதாரண வழியிலேயே செய்வான். ஒருபோதும் சக்திப் பிரயோகம் செய்து சக்தியை வீணாக்கியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே, தேவைப்படும் அளவில் மட்டுமே சக்தியைச் செலவு செய்தவன் மீண்டும் சாதகம் செய்து சக்தியைத் தன்னில் நிரப்பிக் கொள்ளாமல் உறங்கச் சென்றதில்லை.  அதைச் செய்வதில் அவன் களைத்துப் போனதில்லை.   

இந்த சக்திகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம், உன் கடைசி இலக்கு தான் என்ன என்று எத்தனையோ ஆசிரியர்கள் அவனிடம் கேட்டிருக்கிறார்கள். அவன் தன் கடைசி இலக்கை அவர்களிடம் சொன்னதில்லை. அவர்களிடம் மட்டுமல்ல அவன் யாரிடமும் சொன்னதில்லை. அவன் மட்டுமே அதை அறிவான். அவன் இலக்கு நிறைவேறும் போது இந்த உலகமும் அதை அறியும். அவன் விதியை எழுதிக் கொண்டிருக்கும் அவன் ஒரு நாள் இந்த உலகத்தின் விதியையும் எழுத ஆரம்பிப்பான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Monday, October 22, 2018

சத்ரபதி – 43


“நம் கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சிவாஜி என்ற பெயர் அந்த அளவு அச்சத்தை அவன் மனதில் உண்டாக்கி இருந்தது…..

“அவன் பிடித்த கோட்டைகள் அளவு நம் கோட்டை பெரியதோ, முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லையே…” என்று பலவீனமாகச் சொன்னான். அவன் குரல் அவனுக்கே கிணற்றிலிருந்து கேட்பது போலத் தான் இருந்தது.

“அவன் நம் கோட்டையைப் பிடிக்க வரவில்லை தலைவரே. ஹரிஹரேஸ்வரர் கோயில் வந்து வணங்கியவன் போகும் வழியில் இளைப்பாறுகிறான் அவ்வளவு தான்…”

கோவல்கர் சாவந்தின் இதயத்தில் ஏறியிருந்த இமயம் இறங்கியது. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

தலைமை அதிகாரி தொடர்ந்து சொன்னார். “நானும் அந்தச் சமயத்தில் தான் அந்தக் கோயிலிற்குச் சென்றிருந்தேன். அப்போது சிவாஜியின் நண்பன் யேசாஜி கங்க் அறிமுகம் ஆனான். அவன் உங்களிடம் உள்ள பவானியின் வீரவாள் பற்றிக் கேட்டான். சிவாஜி அன்னை பவானியின் பரம பக்தன் என்று சொன்னான்…..”

மறுபடி கோவல்கர் சாவந்தின் மனதில் கவலை புகுந்தது. ”அந்த வாளுக்காக அவன் கோட்டையை ஆக்கிரமிக்க வருவானோ?” என்று தலைமை அதிகாரியிடம் கேட்டான்.

”நானும் அப்படியே சிறிது பயப்பட்டேன். ஆனால் சிவாஜி அப்படி வரமாட்டான். வற்புறுத்தவும் மாட்டான் என்று யேசாஜி கங்க் சொன்னான்.”

மறுபடி நிம்மதியடைந்த கோவல்கர் சாவந்திடம் தலைமை அதிகாரி சொன்னார். “தலைவரே. இப்போது இந்தப் பிராந்தியத்தில் சிவாஜியே தலையாய சக்தியாக இருக்கிறான். மக்களின் ஆதரவும் அவனுக்குப் பெருக ஆரம்பித்திருக்கிறது. அவனுக்கு நாமும் நம் கோட்டையும் ஒரு பொருட்டே அல்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு அவனைப் போன்ற ஒரு வீரனுடன் நட்பும், இணக்கமும் இருப்பது மிகச் சிறந்த பலமாக இருக்கும். அவன் ஆதரவு நமக்கு இருக்கிறது என்றால் நம்மிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்…..”

கோவல்கர் சாவந்த் கேட்டான். “என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“உங்களுக்கு அந்த வீரவாள் விலை உயர்ந்த ஒரு குடும்பச் சொத்து அவ்வளவு தான். சிவாஜிக்கு அது அவன் வணங்கும் தெய்வத்தின் ஆயுதம். அவனுக்கு அதை நீங்களாகவே சென்று பரிசளித்தால் வாழ்நாள் முழுவதும் அவன் அதை மறக்க மாட்டான். அவனுக்குத் தற்போது கல்யாண் நிதியும் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு அதன் மதிப்பை விட அதிகமாகவே அவன் திரும்பப் பரிசளிக்கும் வாய்ப்பும் இருக்கிறது…”

கோவல்கர் சாவந்த் யோசித்தான். சிவாஜியைப் போன்ற மாவீரனின் நட்பு நிரந்தரமாகவே கிடைக்கும் என்றால், அவனிடம் பல உதவிகளை அதன் மூலம் பெற முடியும் என்றால் அந்த வீரவாளைத் தந்து விடுவது அவனுக்குப் பெரிய இழப்பாகத் தெரியவில்லை…..

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் சிவாஜி முன் இருந்தான். பெரும் மரியாதையுடன் வணக்கம் தெரிவித்து விட்டு அந்த வீரவாளை வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து சிவாஜியிடம் நீட்டியபடி சொன்னான். “தாங்கள் பவானி மாதாவின் பக்தன் என்று கேள்விப்பட்டேன். அதனால் எங்கள் குடும்பச் சொத்தாக பல தலைமுறைகள் பாதுகாத்து வந்த பவானி மாதாவின் வீரவாளைத் தங்களுக்குப் பரிசாகத் தர விரும்புகிறேன். தயவு செய்து இதைப் பெற்றுக் கொண்டு அடியேனை கௌரவிக்க வேண்டும்….”

கைப்பிடியில் நவரத்தினங்கள் பதித்த அந்த நீண்ட வீரவாளைப் பார்க்கையில் இனம் புரியாத சிலிர்ப்பை சிவாஜி உணர்ந்தான். அன்னை பவானியே அந்த வீரவாளை அவனுக்குத் தர கோவல்கர் சாவந்திற்கு உத்தரவிட்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் நீர் திரையிட சிவாஜி அந்த வாளைத் தொட்டு வணங்கி விட்டு அதை வாங்கிக் கொண்டு சொன்னான். “சகோதரரே. கோட்டைகள் பல அடைந்த போதும் அடையாத ஒரு பேரானந்தத்தை அன்னையின் இந்த வீரவாளைப் பெறுகையில் நான் உணர்கிறேன். என் வாழ்நாள் உள்ள வரை உங்களது இந்தப் பெருந்தன்மையை நான் மறக்க மாட்டேன்……”

யேசாஜி கங்க் நண்பனின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு மனம் நெகிழ்ந்தான். நண்பனுக்குத் தெரியாமல் அந்த அதிகாரியின் காதில் சில வார்த்தைகளைப் போட்டு வைத்தது மிக நல்லதாகவே போயிற்று என்று மகிழ்ந்தான்.

சிவாஜி கோவல்கர் சாவந்துக்கு அந்த வீர வாளின் இருமடங்கு மதிப்பிற்குப் பொன்னும் பொருளும் பரிசளித்தான். “இந்த வீரவாளுக்கு என் அத்தனை செல்வத்தையும் நான் தந்தாலும் அது ஈடாகாது சகோதரரே. ஆனால் என் அன்பின் அடையாளமாக நான் தரும் இந்தச் சிறுபரிசுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.”

கோவல்கர் சாவந்த் பெருமகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்து விட்டு சிறிது அளவளாவி விட்டு மகிழ்ச்சியுடன் திரும்பினான். சிவாஜியோ அந்த வீரவாளுடன் அன்னை பவானியின் பரிபூரண ஆசிர்வாதம் வந்து சேர்ந்தது போல் பேரானந்தத்தில் மூழ்கினான்.



தில்ஷா சிவாஜியின் பதிலில் கடுங்கோபம் கொண்டார். இது வரை அவன் கடிதங்களில் தெரிந்த தொனி வேறு இப்போது தெரியும் தொனி வேறு. பெயருக்குத் தான் பெருவணக்கத்துடன் சிவாஜி கடிதத்தை ஆரம்பித்திருந்தானேயொழிய மீதியில் சமமானவர்களிடம் பேசுவது போலவே தன் பக்கத்து நியாயத்தைத் தெரிவித்திருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை. பீஜாப்பூருக்கு நேரில் வரச் சொன்னால் ‘நான் கைப்பற்றிய பகுதிகளுக்கு நானே தலைவன் என்று அறிவித்தால் தான் வருவேன்’ என்று நிபந்தனை விதிக்கிறானே இந்தப் பொடியன் என்று அவருக்கு ஆத்திரம் வந்தது.

அடுத்ததாக வந்த ஷாஹாஜியின் கடிதமும் அவர் ஆத்திரத்தைக் குறைக்கவில்லை. ஷாஹாஜியும் முதல் பத்து வரிகளில் அவருக்கு பெருவணக்கம் தெரிவித்து விட்டு சிவாஜி அவருக்கு எழுதிய பதிலையும் தெரிவித்து விட்டு எழுதியிருந்தார். “அரசே. அவன் என் பிள்ளையாக இருந்தாலும் என் சொற்படி நடக்க மறுக்கிறான். அவனை விட்டு நான் தொலைவிலேயே இருந்தது தவறு என்று நான் இப்போது உணர்கிறேன். ஆனாலும் கடந்த காலத்தைச் சரிசெய்யும் வல்லமையோ, இப்போது அவனைத் திருத்தும் வழியோ அறியாமல் நான் தவிக்கின்றேன். வேறு வழி தெரியாததால், ஒரு படையை அனுப்பி என் மகனை அடக்கிப் பணிய வைக்கும்படி தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்….”

ஷாஹாஜியின் கடிதம் மகனை அடக்க முடியாத ஒரு தந்தையின் யதார்த்த நிலையாக ஆதில்ஷா உணர்வதற்கு முன் ஷாஹாஜியின் எதிரியாக ஆதில்ஷா மனதில் முன்பு நஞ்சை விதைத்தவன் கடகடவென்று சிரித்தான்.

“மன்னா ஷாஹாஜியும் அவர் மகனும் சேர்ந்து நன்றாக நாடகம் ஆடுகிறார்கள்.  மகனை மறைமுகமாக இயக்கி விட்டு நம்மிடம் ஷாஹாஜி முடிந்தால் அவனை அடக்கு என்று விண்ணப்பம் என்கிற பெயரில் சவாலைத்தான் முன் வைக்கிறார். சகாயாத்ரி மலைத்தொடரில் என்னேரமும் சென்று ஒளிந்து கொள்ளும் சௌகரியத்தில் தான் சிவாஜி இருக்கிறான். சகாயாத்ரி மலைத்தொடர் அவர்களுக்கு வீட்டைப் போல். அதன் மூலை முடுக்குகளை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஷாஹாஜி அங்கு பதுங்கியிருந்த போது முகலாயச் சக்கரவர்த்தியால் கூட ஷாஹாஜியைக் கைது செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பாதுகாப்பான சூழலில் மகன் உள்ளதால் தான் ஷாஹாஜிக்கு உங்களுக்கே சவால் விடும் துணிச்சல் வந்திருக்கிறது……”

ஆத்திரத்தில் இருந்த ஆதில்ஷா இதைக்கேட்டு மேலும் ஆத்திரமானார். “நான் என் நண்பனைப் போலத் தான் ஷாஹாஜியை நினைத்திருந்தேன். அந்த மரியாதையையே அவருக்கு என்றும் தந்துமிருக்கிறேன். அப்படி இருக்கையில் அவர் இப்படி துரோகம் செய்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை…. இனி என்ன செய்யலாம்?

“ஷாஹாஜி சொன்னது போல் அவனிருக்கும் இடம் சென்று சிவாஜியைக் கைது செய்ய முடியாது மன்னா. சிவாஜி பீஜாப்பூர் வந்தால் மட்டுமே நம்மால் அவனைக் கைது செய்ய முடியும். அவனை அடக்க ஒரே வழி ஷாஹாஜியைக் கைது செய்வது தான். அவரைப் பணயக்கைதியாக வைத்தால் சிவாஜி பிடித்த கோட்டைகளை ஒப்படைக்கவும் செய்வான். தந்தையைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் இங்கு வந்து சரணடையவும் செய்வான்”

ஆதில்ஷாவுக்கு அந்த ஆலோசனை சரியென்றே தோன்றியது.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 18, 2018

இருவேறு உலகம் – 105


ர்ம மனிதனாகிய விஸ்வம் ஹரிணியின் வார்த்தைகளைச் சலனமே இல்லாமல் கேட்டான். ‘எனக்காக என் காதலன் என்ன வேண்டுமானாலும் செய்வான்’ என்று பெருமை பேசும் காதலியாக இல்லாமல், “எனக்காகக் கூட என் காதலன் சரியானதைச் செய்யாமல் இருக்க மாட்டான்” என்று வித்தியாசமாக பெருமைப்பட்ட ஹரிணியைப் பார்த்து அவன் மனோகரைப் போல் அசந்து விடவில்லை. பல வகை கிறுக்குகளில் இதுவும் ஒரு வகை என்று எண்ணியவன் அதையும் தான் பார்ப்போம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கவனத்தை அடுத்த விஷயத்திற்குத் திருப்பினான். சட்டர்ஜியிடம் இருந்து மின்னஞ்சலில் பதில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான். வரவில்லை.

ஒரு எண்ணிற்குப் போன் செய்து சட்டர்ஜியின் மெயில் ஐடி தந்து இதைக் கடைசியாக எப்போது எங்கே திறந்து படித்திருக்கிறார்கள் என்றும் வழக்கமாக இந்த மெயில் எந்த ஊரில், எந்த இடத்திலிருந்து திறந்து பார்க்கப்படுகிறது என்றும் கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னான். நவீன விஞ்ஞான வளர்ச்சி அதைக் கண்டுபிடித்துச் சொல்லி விடும்….

அடுத்ததாக ஒரு எண்ணில் இருந்து போன்கால் வந்தது. உறுப்பினர் கூட்டத்தில் மாஸ்டர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை அப்படியே பதிவு செய்திருந்த ஒலிபரப்பு வந்தது. அதை உணர்ச்சியே இல்லாமல் விஸ்வம் கேட்டான். தொடர்ந்து மூத்த துறவியும், கிருஷ்ணவேணியும் பேசியதும், பல உறுப்பினர்கள் ஆதரித்ததையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். இத்தனை காலம் அவரைக் கூர்ந்து கவனித்து வந்திருந்ததால் மாஸ்டர் கிட்டத்தட்ட இதைத் தான் செய்வார் என்று முன்பே கணித்திருந்தான். இந்தக் கட்டத்திலாவது அவர் ராஜினாமாவை வேறு வழியில்லாமல் ஏற்பார்கள், ஏதாவது ஒரு கிழத்திடம் தலைமைப் பதவி ஒப்படைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்த்தான். அது நடக்கவில்லை. ஒரு கிழவனும், கிழவியும் சேர்த்து அதைத் தடுத்து விட்டார்கள். க்ரிஷைப் போலவே மாஸ்டரும் அவன் வழியில் இருந்து விலகுவதாக இல்லை.     

யோசித்துப் பார்த்தால் மாஸ்டரின் வாழ்க்கையும், அவனுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்திருக்கிறது. மாஸ்டர் தன் பெற்றோரைப் பற்றி அதிகம் பேசியதில்லை. விஸ்வத்தின் பெற்றோரும் அவனைப் பெற்றதைத் தவிர வேறு பெரிதாகப் பேசும் அளவு எதையும் செய்து விடவில்லை. மாஸ்டரைப் போலவே விஸ்வமும் இளமையில் இலக்கில்லாமல் தான் சுற்றியிருக்கிறான். மாஸ்டர் குருவைச் சந்தித்த பிறகு வாழ்க்கை முற்றிலுமாக மாறி விட்டது. விஸ்வமும் தன் இளமைக்காலத்தில் ஒரு ஜிப்ஸியைப் பார்த்த பிறகு வாழ்க்கை ஒரேயடியாக மாறி விட்டது.

அந்த ஜிப்ஸி இளைஞனை அவன் சந்தித்தது ஒரு பெருமழைக்கால ஞாயிற்றுக்கிழமையில். தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த இருவரும் மழையில் இருந்து தப்பிக்க வேண்டி ஒரு பெரிய கட்டிட வாசலுக்கு ஓடி வந்தார்கள். ஞாயிறு அந்தக் கடைக்கு விடுமுறை என்பதால் கடை பூட்டி இருந்தது. இவர்கள் இருவரையும் தவிர அங்கு வேறு யாருமில்லை. அந்த ஜிப்ஸியின் கையில் கிதார் இருந்தது. மழை நிற்பதாகத் தெரியவில்லை. மெல்ல அந்த ஜிப்ஸி கிதாரை வாசிக்க ஆரம்பித்தான். இசை இனிமையாக இருந்தது. விஸ்வம் அந்த ஜிப்ஸியைப் பார்த்தபடி இசையைக் கேட்டுக் கொண்டு நின்றான்.

ஜிப்ஸியும் அவனைப் பார்த்துக் கொண்டே கிதார் வாசித்தான். ஆனால் அவன் பார்வை நிமிடத்துக்கு நிமிடம் கூர்மையாகியது. அவன் முகத்தில் ஆச்சரியம் அதிகமாக ஆரம்பித்தது. விஸ்வத்துக்குத் தன் தோற்றத்தில் என்ன வித்தியாசத்தைப் பார்த்து இந்த ஆள் ஆச்சரியப்படுகிறாரன் என்பது புரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஜிப்ஸி கிதார் வாசிப்பதைக்கூட நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தான். விஸ்வத்துக்கு அந்த ஜிப்ஸி பைத்தியமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. மழை தீவிரம் குறைந்திருந்தால் கூட அங்கிருந்து வேறு இடம் பார்த்து ஓடியிருப்பான்….
திடீரென்று அந்த ஆள் விஸ்வத்தின் பெயர், அம்மா, அப்பா பெயர் எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். சொல்ல ஆரம்பித்தான் என்பதை விட அவன் மேல் எழுதி இருந்ததைப் படிக்க ஆரம்பித்தான் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். பார்த்துப் படிப்பது போலத் தான் படித்தான். ஆனால் அவன் சொல்வது எல்லாம் சரியாக இருந்தது. பின் கடந்த கால நிகழ்வுகள் இரண்டைச் சொன்னான். அந்த இரண்டு நிகழ்வுகளும் அவன் மட்டுமே அறிந்திருந்த நிகழ்வுகள். அதுவும் சரியாக இருந்தது. பின் எதிர்காலம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

“நீ எதிர்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவனாய் ஆகப் போகிறாய். பல அமானுஷ்ய சக்திகள் உன் வசமாகப் போகின்றன….. சக்திகளைப் பொறுத்த வரை நீ நிறுத்திக் கொள்வது தான் எல்லை…… “

விஸ்வம் நம்பவில்லை. உண்மையில் அவனுக்கு சிறு வயதில் இருந்தே மாயா ஜாலக்கதைகள் மிகவும் பிடிக்கும். அந்தக் கதைகளில் மந்திரவாதி சொன்னபடி எல்லாமே மாறுவது படிக்கப் பிடிக்கும். இது போல் நாமும் ஒரு மந்திரவாதியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவன் பலமுறை கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டிருக்கிறான்.  அப்படி இருக்கையில் கடந்த காலத்தில் நடந்ததையெல்லாம் சரியாகச் சொன்ன இந்த ஆள் எதிர்காலத்தில் பல அமானுஷ்ய சக்திகள் நம் வசமாகும் என்று சொல்கிறாரே என்ற எண்ணம் எதிர்பார்ப்பும், சந்தேகமும் கலந்த சிரிப்பை விஸ்வத்திடமிருந்து வரவழைத்தது. “எனக்கா? அமானுஷ்ய சக்தியா?” என்று சொல்லிச் சிரித்தான்.

“எதாவது வித்தியாசமாய் நடக்க ஆசைப்பட்டுச் சொல்லேன்” என்றான் அந்த ஜிப்ஸி.

விஸ்வத்துக்கு உடனே என்ன நினைப்பது என்று தெரியவில்லை. “இந்த மழை நிற்கட்டும்” என்றான். தீவிரமாய் பெய்து கொண்டிருந்த மழை வேகமாகக் குறைய ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் நின்றே விட்டது. விஸ்வத்திற்கே நம்ப முடியவில்லை. திகைத்து நின்றான்.

ஜிப்ஸி சொன்னான். “இது உனக்கு நிரூபிக்க மட்டும் நடந்த விஷயம். இனி நீ முறைப்படி அமானுஷ்ய சக்திகளைக் கற்றுக் கொண்டால் தான் ஒவ்வொன்றாய் உனக்குக் கிடைக்கும். ஆனால் நீ அதைச் சாதிப்பாய். உன் விதியில் அது தெரிகிறது..”

“என் விதியில் வேறென்ன தெரிகிறது?” விஸ்வம் ஆர்வத்துடன் கேட்டான்.

“நீ இது வரை கற்பனை செய்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் உனக்குக் கிடைக்கப் போக்கின்றன. பல பேரைப் பிரமிக்க வைக்கப் போகிறாய். பல பேர் உன்னைப் பார்த்துப் பயப்படப் போகிறார்கள். கணக்கில்லாத செல்வம் உன்னிடம் சேரப்போகிறது. உன் கனவுகளை நோக்கி வேகமாக முன்னேறப் போகிறாய்…..” பார்த்து சொல்லிக் கொண்டே வந்தவன் திடீரென்று நிறுத்திக் கொண்டான்.

“ஏன் நிறுத்தி விட்டாய்?” என்று விஸ்வம் கேட்டான்.

“உனக்கு எதிராக சில சக்திகளும் உருவாகி வருவதும் தெரிகிறது. ஆனால் பார்வைக்கு உன் சக்திகளுக்கு இணையான சக்தியாகத் தெரியவில்லை. அதற்கு மேல் முடிவில் என்ன ஆகும் என்பது தெளிவாய் தெரியவில்லை”

“ஏனப்படி?”

“விதியே அதை இன்னமும் தீர்மானிக்கவில்லை போல இருக்கிறது. எல்லாம் மங்கலாய் இருக்கிறது”

மிகச் சுவாரசியமான துப்பறியும் கதை ஒன்றின் கடைசி அத்தியாயம் படிக்கக் கிடைக்காமல் போன அதிருப்தி விஸ்வத்தின் முகத்தில் தெரிந்தது. “முடிவைக் கொஞ்சம் கூர்மையாய் பார்த்து விட்டு தான் சொல்லேன்?”

“அது தான் மங்கலாய் இருக்கிறது என்றேனே. கவலைப்படாதே. எல்லாமே ஒரு மாறாத விதியின்படியே நடக்கிறது. அந்த விதி என்ன தெரியுமா? இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ அது தான் எப்போதும் ஜெயிக்கும்….”

விஸ்வத்திற்கு அவனிடம் கேட்க நிறைய இருந்தது. ஆனால் அந்த ஜிப்ஸி போய் விட்டான். அதன் பின் விஸ்வம் அவனைப் பல இடங்களில் தேடினான். ஆனால் அவனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் விஸ்வம் அன்றிலிருந்து அடியோடு மாறிவிட்டான். ஜிப்ஸி சொன்ன வெற்றியின் மாறாத விதியை அவன் ஒரு கணம் கூட அதன் பின் மறந்ததில்லை. “இரண்டு சக்திகளுக்குள் மோதல் வருமானால், இரண்டில் எது கூடுதல் சக்தியோ, எது அதிக சக்தியோ எப்போதும் அது தான் ஜெயிக்கும்”

அதன் பின் சக்தி என்ற வார்த்தையே அவன் வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்தது. அதையே தேடினான். அதற்காகவே வாழ்ந்தான். அதைப் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தான். மனம், வாக்கு, செயல் எல்லாமே அந்த சக்திக்காகவே செயல்பட்டன. ஒரு சக்தியை  அடைந்த பின் அடுத்த சக்தியைத் தேடினான், அதற்காகவே வாழ்ந்தான்….. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு சக்தியாக அவன் சேர்த்து வைத்துக் கொண்டே முன்னேறினான்…..

(தொடரும்)
என்.கணேசன் 

Monday, October 15, 2018

சத்ரபதி 42



டுத்தவர்களால் முட்டாளாக்கப்படுவது சாமானியர்களுக்கே கூட அதிக அவமானத்தைத் தரக்கூடியது. அப்படியிருக்கையில் முட்டாளாக்கப்படுபவர் அரசராக இருந்தால் அது சாதாரண அவமானமல்ல, சகிக்க முடியாத அவமானமாகவே இருக்கும். கல்யாண் நிதியைச் சிவாஜி கைப்பற்றிய தகவல் ஒற்றன் மூலம் முதலில் கேள்விப்பட்ட போது பீஜாப்பூர் சுல்தான் முகமது ஆதில்ஷா அதை அப்படிச் சகிக்க முடியாத அவமானமாகவே உணர்ந்தார். அவர் பார்த்து வளர்ந்த சிறுவன், அவர் பதவி கொடுத்து கௌரவித்து அவருடைய சேவகத்திலேயே இருக்கும் ஒருவரின் மகன் எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் அவர் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய செல்வத்தை அபகரித்திருக்கிறான்….. அந்தக் கோபத்திலிருந்து அவர் மீள்வதற்கு முன் அடுத்தடுத்து செய்திகள் வர ஆரம்பித்தன. சிவாஜி அந்தக் கோட்டையைக் கைப்பற்றி விட்டான்….. இந்தக் கோட்டையை சிவாஜி கைப்பற்றி விட்டான்…….

கோபம் அதிகரித்து ஆத்திரமாகி அவர் கொந்தளித்துக் கொண்டிருந்த போது முல்லானா அகமது வந்து சேர்ந்தான். முல்லானா அகமது வாயிலாக நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஆதில்ஷா கேட்டுத் தெரிந்து கொண்டார். முல்லானா அகமதுக்குத் தன் பதவியும் அனுப்பி வைத்த நிதியும் பறிபோன துக்கத்தை விடத் தன்னை உயிரோடு விட்டதற்கும் மருமகள் கௌரவமாக அனுப்பப்பட்டதற்குமான நிம்மதி மேலோங்கி இருந்தது. அதனால் தகவல்களைச் சொன்ன போது கூட ஆதில்ஷா எதிர்பார்த்த கோபம் முல்லானா அகமதுக்கு சிவாஜி மேல் வெளிப்படவில்லை. ஆதில்ஷா அதைக் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்து தொடர்ந்து வந்த தகவல்களும் சிவாஜிக்கு அவன் கைப்பற்றிய இடங்களில் கிடைத்த மதிப்பு, மரியாதையும், குடிமக்கள் அவனை மிக உயர்வாக நினைப்பதைப் பற்றியதாகவே இருந்தன. எல்லாருக்கும் நல்லவனாக மாறிவிட்ட சிவாஜி இப்போது அவருக்கு மட்டுமே குற்றவாளியாகத் தெரிந்தான். ஆதில்ஷா உடனே முக்கியஸ்தர்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அவனிடம் ஆரம்பத்திலேயே கண்டிப்பைக் காட்டி இருந்தால் அவன் இந்த அளவு அட்டகாசம் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை நாசுக்காகச் சிலர் தெரிவித்தார்கள். ஷாஹாஜிக்கு ஆகாத ஆட்கள் ஷாஹாஜியே இதற்குப் பின்னால் இருக்கிறார், இந்த அளவு சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்பட சிவாஜிக்கு வயதோ அனுபவமோ கிடையாது என்று சுட்டிக் காட்டினார்கள். ஆதில்ஷாவுக்கும் அது சரியென்றே தோன்ற ஆரம்பித்தது.

அவர் மனநிலையை உணர்ந்த ஒருவன் ஷாஹாஜிக்கும், சிவாஜிக்கும் அவர் முன்பு தந்திருந்த உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் எண்ணிப் பலகாலம் மனம் புழுங்கியவன். அவன் இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொன்னான். “அரசே. உடனே கைப்பற்றிய அனைத்தையும் திருப்பித் தந்து மன்னிப்புக் கேட்கும்படி சிவாஜிக்குக் கட்டளையிடுங்கள். அதற்கு சிவாஜியை சம்மதிக்க வைக்கும்படி ஷாஹாஜிக்கும் கட்டளையிடுங்கள். அப்படி ஒப்படைக்கா விட்டால் இரண்டு பேரையும் சிறைப்படுத்துவது தான் ஒரே வழி! இதை இப்படியே விட்டால் சிவாஜி போல எத்தனை பேர் தைரியம் பெற்றுக் கிளம்புவார்கள் என்று சொல்ல முடியாது. அவனுக்கு நீங்கள் சொல்லும் செய்தி அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

ஆதில்ஷாவுக்கு அவன் சொன்னது மிகச்சரியென்றே தோன்றியது. உடனே சிவாஜிக்கும், ஷாஹாஜிக்கும் அவன் சொன்னபடியே கடிதங்கள் அனுப்பினார்.


கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தன் வசமானது இறைவனின் அருளாலேயே என்று சிவாஜி நம்பினான். கைப்பற்றிய பகுதிகளில் அனைத்தும் சரியான நிர்வாகத்திற்கு தகுந்த ஆட்களை நியமித்து விட்டுத் திரும்பும் வழியில் இருந்த ஹரிஹரேஸ்வரர் கோயிலில் நீண்ட நேரம் அமர்ந்து பிரார்த்தித்தான். அவனுடைய பிரார்த்தனைகள் சில சமயங்களில் இறைவனோடு செய்த சம்பாஷணைகளாகவே இருந்தன. சில சமயங்களில் இறைவனோடு மௌனமாக மானசீக அளவில் கலந்த நேரங்களாக இருந்தன. அந்த நேரங்களில் அவன் இந்த உலகையே மறந்திருப்பான். இன்றைய பிரார்த்தனை இரண்டாவது வகையில் அமைந்திருந்தது. சுமார் ஒன்றைரை மணி நேரம் கழித்து மனம் லேசாகி இறையருளால் நிறைந்து அவனாக எழுந்து கிளம்பிய போது அவன் நண்பன் யேசாஜி கங்க் சொன்னான்.

“சிவாஜி அன்னை பவானியின் வீரவாள் ஒன்று பக்கத்திலிருக்கும் கோட்டையில் இருக்கிறது தெரியுமா?”

அன்னை பவானியின் வீரவாள் என்றதும் சிவாஜி ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தான். இறையருளால் மனம் லேசாகி பரவசத்தில் இருக்கையில் இந்த வீரவாளைப் பற்றிக் கேள்விப்பட்டது தேவியின் நிமித்தமாகவே அவனுக்குத் தோன்றியது.

அவன் முகத்தில் தெரிந்த ஒளியைக் கண்ட யேசாஜி கங்க் உற்சாகத்துடன் விவரித்தான். “அருகில் இருக்கும் சின்னக் கோட்டையின் தலைவன் கோவல்கர் சாவந்திடம் இருக்கும் அந்த வீரவாள் மிகவும் நீளமானது. அது அவன் மூதாதையர் மூலம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. நீ போய்க் கேட்டால் அவன் தந்து விடுவான். அவனாகத் தராவிட்டால் இத்தனை கோட்டைகளைக் கைப்பற்றிய நமக்கு அந்த வீரவாளைக் கைப்பற்றுவது பெரிய விஷயமல்ல….”

சிவாஜி முகத்தில் சின்ன ஏமாற்றம் தெரிந்தது. நண்பனிடம் சொன்னான். “யேசாஜி, பரம்பரை பரம்பரையாக ஒருவரிடம் இருக்கும் அது போன்ற ஒரு புனிதப்பொருளை நாம் கட்டாயப்படுத்தி வாங்குவதோ, அபகரிப்பதோ தர்மமல்ல…. ”

யேசாஜி கங்க் சொன்னான். ”கோவல்கர் சாவந்திற்கு அது வெறும் குடும்ப சொத்து மட்டுமே சிவாஜி. அவன் உன் அளவுக்கு பவானியின் பக்தனும் அல்ல. அந்த வீரவாள் நீ பூஜிக்கும் அளவுக்கு அவனுக்கு வணங்கி வரும் பொருள் அல்ல….”

ஆனாலும் சிவாஜி சம்மதிக்கவில்லை. ”நம் உரிமைகளை அடுத்தவர் பறிக்கும் போது நமக்கு எத்தனை ஆத்திரம் வருகிறது. அப்படி இருக்கையில் அடுத்தவர்களின் உரிமைகளை நாம் அபகரிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?....”

யேசாஜி கங்க் பெருமூச்சு விட்டான். சற்று முன் அந்த வீரவாள் பற்றிச் சொன்ன போது நண்பனின் முகம் பிரகாசித்தது இப்போதும் அவன் மனக்கண்ணில் தங்கியிருக்கிறது…..

சிவாஜி அந்தப் பகுதியில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது தான் ஆதில்ஷாவின் கடிதமும், ஷாஹாஜியின் கடிதமும் வந்து சேர்ந்தன. ஆதில்ஷா கடுமையான வார்த்தைகளில் சிவாஜியின் செயல்களைக் கண்டித்திருந்தார். ராஜத்துரோகம், திருட்டு, கொள்ளை என்ற சொற்களைத் தாராளமாகப் பயன்படுத்தியிருந்த அவர் அனுமதியில்லாமல் அவன் கைப்பற்றியிருந்த அனைத்தையும் திரும்பவும் ஒப்படைத்து விடும்படியும் உடனடியாக பீஜாப்பூருக்கு வந்து சேரும்படியும் சொல்லியிருந்தார்.  ஷாஹாஜியும் மகன் செயல்களைக் கண்டித்து எழுதியதுடன் கைப்பற்றிய அனைத்தையும் திரும்ப சுல்தானிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரும்படியும், திருந்தும்படியும் எழுதியிருந்தார்.

சிவாஜி அந்தக் கடிதங்களைக் கொண்டு வந்தவர்களிடமே பதில் கடிதங்களை அனுப்பினான். ஆதில்ஷாவைப் புகழ்ந்து வாழ்த்தி எழுதி விட்டு ”நான் கைப்பற்றியிருக்கும் கோட்டைகள் அனைத்தும் உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொந்தமானதல்ல. ஒரு காலத்தில் என் தந்தைக்கும், அகமதுநகர ராஜ்ஜியத்திற்கும் சொந்தமான அவை எல்லாம் பின்னர் நீங்களும் கைப்பற்றியதும், முகலாயர்கள் மூலம் உடன்படிக்கை மூலம் பெற்றுக் கொண்டதும் தான்.  இப்போது நான் கைப்பற்றிய பின் மட்டும் நீங்கள் அதை ராஜத்துரோகமாகச் சொல்வது வேடிக்கையே அல்லவா? கல்யாண் பகுதி நிதியும் அப்பகுதிக்கும், சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கும் நன்மை விளையும் வண்ணம் பயன்படுத்தப்படும். இப்பகுதி மக்களின் பணம், இங்குள்ளவர்களின் நன்மைக்கே பயன்படுத்தப்படுவது நியாயமும், தர்மமுமே ஒழிய தாங்கள் குறிப்பிட்டது போல திருட்டோ, கொள்ளையோ ஆகாது. இதற்கு முன் என் தந்தை இங்கு வரிவசூலித்தத் தொகையைப் பெறுவதற்கு ஆள் அனுப்பிய போது கூட இதே நிலையை நான் எடுத்து அவருக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறேன். தாங்கள் அழைத்தது போல எனக்கும் பீஜாப்பூர் வரவும், தங்களுடன் முன்பு போல பல விஷயங்கள் குறித்து அளவளாவவும் மிகவும் ஆர்வமாகவே இருக்கிறது. அதனால் நான் கைப்பற்றிய பகுதிகளை நானே தலைவனாக நிர்வாகம் செய்ய அனுமதித்து நீங்கள் அறிவிப்பு வெளியிட்டால் விரைவிலேயே வந்து தங்களைத் தரிசிக்கக் காத்திருக்கிறேன்.” என்று ஆதில்ஷாவுக்கு எழுதி அனுப்பினான்.

தந்தைக்கு எழுதிய கடிதத்தில் சிவாஜி சுருக்கமாகச் சொல்லியிருந்தான். “தந்தையே நான் வளர்ந்து பெரியவனாகி விட்டேன். எது சரி எது தவறு என்பதைச் சிந்திக்கவும், அதன்படி நடக்கவும் நான் அறிவேன். மதிப்பிற்குரிய பீஜாப்பூர் சுல்தான் அவர்களுக்கு முறையான விளக்கங்கள் நான் அனுப்பியுள்ளேன். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை”

பீஜாப்பூர் மன்னர் தன் பதிலில் மேலும் ஆத்திரமடைந்து ஏதாவது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார் என்பதை சிவாஜி அறிந்தே இருந்தான். ஏனென்றால் இந்த முறை அவன் நடவடிக்கைகளிலும் சரி அவன் கடிதத்திலும் சரி சுற்றி வளைக்கும் குழப்பங்கள் எதுவுமில்லை. ஆமாம் அப்படித்தான் நீ முடிந்ததைச் செய்து கொள் என்ற தொனியே வார்த்தைகளுக்கு இடையே இழைந்தோடியிருக்கிறது. இதைப்படித்து விட்டு அவர் இனி என்ன செய்யப் போகிறார் பார்ப்போம் என்று சிவாஜி காத்திருந்தான்…

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, October 11, 2018

இருவேறு உலகம் – 104



ர்ம மனிதன் கேட்டான். “சட்டர்ஜி?”

“சட்டர்ஜி சில காலமாய் எங்கள் தொடர்பில் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது… அவருடைய மெய்ல் ஐடி மட்டும் தான் எங்களிடம் இருக்கிறது……”

அந்த மெயில் ஐடியை வாங்கிக் கொண்டு மர்ம மனிதன் மெல்லச் சொன்னான். “எனக்கு அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் ஏறிய மலைப்பகுதி எது என்று தெரிய வேண்டியிருந்தது. அவர்கள் உங்கள் க்ரூப்பில் பகிர்ந்து கொண்டதில் அந்தத் தகவல் இருக்கவில்லை. அது தான் கேட்டேன்…..”

“அவர்கள் எல்லாம் மலையேற்ற வீரர்கள். எழுத்தாளர்களோ, எல்லா விவரங்களையும் முறைப்படி தந்து பதிவு செய்து பழகியவர்களோ கிடையாது.. எங்கள் குழுவில் அனைவரிடமும் நாங்கள் தொடர்ந்து எல்லாத் தகவல்களும் கொடுத்து அனுபவங்களைப் பகிரச் சொல்லி வருகிறோம். பாதி பேர் இப்படித்தான் தலை கால் இல்லாமல் எழுதுகிறார்கள்…….”

மர்ம மனிதன் சட்டர்ஜிக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அவர் மூன்று வருடங்களுக்கு முன் ரிச்சர்ட் டவுன்செண்ட் மற்றும் டேவிட்சனுடன் போன மலையேற்றப் பகுதி எது என்றும் ரிச்சர்ட் டவுன்செண்ட் பார்த்ததாகச் சொன்ன பகுதி எது என்றும் தெரிவிக்க முடியுமா என்றும் கேட்டிருந்தான். அந்தத் தகவல் மிக அவசரமாகத் தேவைப்படுவதாகவும், உடனடியாகத் தெரிவித்தால் என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் எழுதினான்.

கிருஷ்ணவேணி சொன்னதையே கூட்டத்தினரில் பலரும் ஆதரித்ததால் மாஸ்டர் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள, மூத்த துறவி அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கிழிந்தது ராஜினாமா கடிதம் மட்டுமல்ல தன் கௌரவமும் தான் என்று மாஸ்டரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.  இது வரை அவருக்கிருந்த கௌரவம் அடுத்தவர் தந்து வந்ததல்ல. அவராக ஏற்படுத்தி வைத்திருந்தது. இப்போதும் அவர்கள் யாரும் அவரை கௌரவக்குறைவாகப் பார்க்கவில்லை….. ஆனால் அவராக அதை இழந்து விட்டார். இழந்தது பணமும், கௌரவமும் மட்டுமல்ல, அவருடைய அருமைக் குருவின் உயிரும் தான். முதலிரண்டைத் திருடியவன் அதையுமல்லவா சேர்த்து எடுத்து விட்டிருக்கிறான். மனம் கொதித்தது. மனம் அந்தக் கணத்தில் இந்தக் கணக்கைத் தீர்க்காமல் சாகக்கூடாது என்று உறுதி பூண்டது.

இந்தக் கூட்டத்திலும் ஓரிருவர் அவனுடைய ஆட்களாக இருக்கலாம். அவர்கள் யார் என்று யோகசக்தியால் கண்டுபிடிப்பது அவரைப் பொறுத்த வரை கஷ்டமான செயல் அல்ல. ஆனால் கண்டுபிடித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. இது வரை அவனைப் பற்றி அறிந்தது எல்லாம் வைத்துப் பார்க்கையில், கண்டுபிடித்தாலும் அவர்கள் மூலம் அவனை அடைய முடியாது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

கூட்டம் முடிந்த பின் மூத்த துறவி, கிருஷ்ணவேணி, மேலும் இரண்டு தலைமைக்குழு உறுப்பினர்களுடன் தனியாக மாஸ்டர் பேசினார். பேசும் போது அவர்கள் இயக்கத்தில் இருந்த அனிருத் என்ற கம்ப்யூட்டர், நெட்வர்க் விஷயங்கள், சர்வதேச ஆன்லைன் மோசடிகள் துப்பு துலக்குவது ஆகியவற்றில் மிகவும் தேர்ச்சி பெற்ற அனிருத் என்ற இளைஞன் உதவியை விஸ்வம் செய்த மோசடிகள் கண்டுபிடிக்க  நாடுவது என்று தீர்மானித்தார்கள்.  பின் மாஸ்டர் அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார். திருவனந்தபுரத்தில் சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்ததையும் அவர் சொன்னதையும் தெரிவித்தார். கடைசியில் சொன்னார்.  “எதிரி எங்க ரெண்டு பேர் ஜாதகத்தை சேர்த்தே கொண்டு போய் விசாரிச்சிருக்கறதுல இருந்து, நடந்த மத்ததயும் யோசிச்சா .விதி என்னையும் க்ரிஷையும் ஏதோ ஒரு வகைல சேர்த்து முடிச்சுப் போட்ட மாதிரி தெரியுது. ஒவ்வொரு சமயத்துலயும் நான் தப்பா எதையாவது செய்யப் போறப்ப அவன் தான் என்னை சரிப்படுத்தறான். எதிரியோட ஆளாகவே அவனைப் பார்த்து அப்படியே அவனை நடத்த இருந்த என்னை குரு ஸ்தானத்துக்கு உயர்த்தி நட்பு வளையத்துல கொண்டு வந்தான். அப்புறமா ’எதிரியோட கைப்பாவையா நீங்களும் கூட இருக்கலாம்’னு சொல்லி விஸ்வத்தை அடையாளம் கண்டுபிடிக்கவும் அவன் தான் காரணமாய் இருந்தான். கடைசியா நான் சாகத் தீர்மானிச்சப்ப கூட ஏதோ ஒரு உள்ளுணர்வுல என் கிட்ட பேச போன் செஞ்சு நான் சாகாம தடுத்ததும் அவன் தான்…..”

கிருஷ்ணவேணி சொன்னார். “அடுத்த நடவடிக்கை என்னன்னு தீர்மானிக்கறதுல இனிமே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தே யோசிக்கிறது தான் சரின்னு தோணுது மாஸ்டர்…. “

மற்றவர்களும் ஒத்துக் கொள்ளவே மாஸ்டர் தலையசைத்தார். முடிவில்  க்ரிஷுக்குப் போன் செய்து ரிஷிகேசத்திற்கு வர முடியுமா என்று கேட்டார். அவன் உடனே சம்மதித்தான். அவருக்கு அவருடைய குரு வாழ்ந்த குடிலில் இரண்டு நாள் இருக்க வேண்டும் என்று தோன்றியது. மனபாரத்தை அவன் வருவதற்குள் அந்தக் குடிலில் அழுது இறக்கிவிட வேண்டும்… அவனுக்கும் அவருடைய குரு வாழ்ந்த குடிலைக் காண்பிக்க வேண்டும். அந்தக் குடிலில் உட்கார்ந்து அவர்கள் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துத் தீர்மானிக்க வேண்டும்…..


ரிணிக்கு மயக்கம் தெளிந்த போது ஒரு அரையிருட்டு அறையில் இருந்தாள். தலை மிகவும் பாரமாக இருந்தது. தற்போதைய நிலையைத் தெளிவாக உணர சில நிமிடங்கள் தேவைப்பட்டன…..  நீல்கிரீஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அருகே போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அதை அடுத்திருந்த சிறிய தெருவில் ஸ்கூட்டியைத் திருப்பியதும், அந்தத் தெருவில் இருந்து குறுக்குத் தெருவுக்குத் திரும்பிய போது ஒரு மாருதி வேன் தெரு நடுவில் நிறுத்தப்பட்டு இருந்ததும், அதைத் தாண்டிப் போக முயற்சித்த போது ஒருவன் ‘ஒன் மினிட் ப்ளீஸ்’ என்று சொல்லி அதில் இருந்து இறங்கி அவளை நெருங்கியதும் நினைவுக்கு வந்தது. அதன் பின் ஒன்றும் நினைவில்லை. இப்போது இருக்கும் அறை அவளுக்குப் பரிச்சயம் இல்லாதது. கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

அடுத்த நிமிடம் மனோகர் அந்த அறைக்குள் நுழைந்தான். ஒன்றுமே பேசாமல் அவளையே பார்த்தபடி அவன் நின்றான். அவளும் ஒன்றுமே பேசாமல் அவனையே பார்த்தாள். வழக்கமாக கடத்தப்பட்ட ஆட்கள், “நான் எங்கே இருக்கேன், யார் நீங்க, என்னை எதுக்காக கடத்துனீங்க என்றெல்லாம் பயந்து போய் கேட்பார்கள்’. ஒன்றுமே பேசாமல் அவனையே எடைபோடுகிற பார்வை பார்க்கும் இவள் அழுத்தமானவள், வித்தியாசமானவள் என்று அவன் எண்ணிக் கொண்டான்.

கடைசியில் அவன் தான் அவளிடம் பேசினான். ”இந்த இடத்துல இருந்து தப்பிக்கற எண்ணம் எதாவது இருந்துச்சுன்னா அதை இந்த நிமிஷமே விட்டுடு. உன்னால முடியாது. வீட்டை சுத்தி காவல் இருக்கு. நீயா பிரச்சனை பண்ணாத வரைக்கும். எங்களால  உனக்கு எந்த ஆபத்தும் வராது. பிரச்சனை பண்ண நினைச்சா உன்னை கடவுள் கூட காப்பாத்த முடியாது…”

“நீ யாரு? முதல்ல அதச் சொல்லு” என்றாள் ஹரிணி. அவள் குரலில் பயமோ, நடுக்கமோ இல்லை.

“இப்போதைக்கு என்னை எக்ஸ்ன்னு வெச்சுக்கோயேன்” என்றான் மனோகர்.

“சரி எக்ஸ். உனக்கு என்ன ப்ரச்சன. என்னை ஏன் கடத்தினே?”

இது கடத்தப்பட்ட பெண் பேசுவது போல் இல்லை. என்ன நடந்தது என்று அறிய ஆசைப்படும் மூன்றாம் நபர் பேசுவது போல் இருக்கிறது…. நடப்பது ரகசியமாய் நேர் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருப்பதால் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்  ‘தலைவன்’ எதிர்வினை எப்படி இருக்கும் என்று புரியாமல் மனோகர் நெளிந்தான்.

“எங்களுக்கு உன் கிட்ட ப்ரச்சன இல்லை. உன் காதலன் கிட்ட தான் ப்ரச்சன?”

“என்ன ப்ரச்சன?”

மனோகருக்கு இந்தக் கேள்வி-பதில் ஆரம்பமான விதமே பிடிக்கவில்லை. இதை நிறுத்த நினைத்தான். “நாங்க அதை அவன் கிட்ட பேசிக்கிறோம்…..”

“பேசியாச்சா, இல்லை இனிமே தான் பேசணுமா?”

“சமயம் பாத்து பேசறோம். அது ஒரு முடிவுக்கு வர்ற வரை நீ கலாட்டா பண்ணாம ஒத்துழைச்சா உனக்கு நல்லது.”

”அவன் எப்பவுமே சரியானதை மட்டும் தான் செய்வான். அதை நான் உட்பட அவன் யாருக்காகவும் மாத்திக்க மாட்டான்…..” அவள் சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் என்ற உலக உண்மையைச் சொல்வது போல் இதைச் சொன்னது மனோகருக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“ஆனால் உன்னைக் கடத்தினது தெரிஞ்சவுடனேயே துடிச்சுட்டான்னு கேள்விப்பட்டேன்.”

“அதெல்லாம் துடிப்பான். ஆனா அவன் தன்னை மாத்திக்க மாட்டான்” அவள் நிச்சயமாகச் சொன்னாள்.

”இப்படிப்பட்டவன காதலிக்கிறோமேன்னு வருத்தமாய் இல்லயா?” மனோகரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“நான் அவனைக் காதலிக்கிறதே அந்த கேரக்டருக்காகத் தான்”


“நல்லது. நாங்க சொல்றத அவன் கேட்கலைன்னா நீ இங்கே சித்திரவதை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதைப் படமாவோ, வீடியோவாகவோ நாங்க அவனுக்கு அனுப்பி வைக்க வேண்டி வரும். பார்க்கலாம்” சொல்லி விட்டு குரூரமாய் புன்னகைத்து விட்டு மனோகர் போனான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, October 10, 2018

முந்தைய சிந்தனைகள் 37

என் நூல்களில் இருந்து சில சிந்தனைகள் -














என்.கணேசன்

Monday, October 8, 2018

சத்ரபதி 41


வெற்றி பலருக்கும் ஒரு போதையாகவே இருக்கிறது. அதைக் கொண்டாடும் மனநிலையில் வெற்றி பெற்றுத் தந்தவர்களை நினைத்துப் பார்க்கவும் பெரும்பாலும் பலருக்கு நேரமிருப்பதில்லை. சிவாஜி அதற்கு விதிவிலக்காக இருந்தான். கல்யாண் நிதியைத் தன் கஜானாவில் சேர்த்தவன் அடுத்ததாகக் கவனித்த காரியம் இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களையும், காயப்பட்ட வீரர்களையும் தான். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்குத் தாராளமாக நிதி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தியவன். காயப்பட்டவர்களின் சிகிச்சைக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் கூட அதே பெருந்தன்மையைக் காட்டினான். இது அந்தக்கால அரசாட்சியில் சற்று அபூர்வமாகவே இருந்தது. பெயருக்கு ஏதாவது தந்த அரசர்கள் அது அந்தக் குடும்பத்துக்குப் போதுமானதா என்றெல்லாம் கவனித்ததில்லை. தங்களுக்குத் தோன்றியதைத் தருவார்கள். கிடைப்பதைப் பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தாங்களாகவே தங்களுக்குத் தகுந்த வேலைகளைத் தேடிக் கொண்டு சமாளித்து வாழ வேண்டியிருந்தது. அதனால் சிவாஜி உடனடியாகக் காட்டிய பெருந்தன்மை வீரர்கள் மத்தியில் பெருத்த விசுவாசத்தைக் கூட்டியது. இவனுக்காக நாம் உயிரையும் தரலாம். நம் குடும்பத்தை இவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையான மனநிலை பெரும் சக்தியாக வீரர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி நியமித்திருந்த ஒன்பது தலைவர்களும் தங்கள் திட்டப்படி கோட்டைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். அந்த ஒன்பது ஆக்கிரமிப்புகளிலும் கூட உயிர்ச்சேதம் அதிகம் இருக்கவில்லை. தந்திரங்களும் யுக்திகளும் உடனடிப் பிரயோகங்களும் சேர்ந்து எளிதிலேயே வெற்றி வாகையைச் சூடித்தந்தன. அக்காலக் கோட்டைக் காவலர்கள் குறைந்த ஊதியத்தில் பணி புரிபவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேலைச்சூழலும் எளிதாக இருக்கவில்லை. பெருமழைகளில் நனைந்தும், கடும் வெயிலில் உலர்ந்தும், பாடுபடும் அவர்களுக்கு உகந்த ஊதியமும், அங்கீகாரமும் ஆள்பவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. அதனால் நல்ல தொகைகளுடன் சிவாஜியின் ஆட்கள் அவர்களை அணுகிய போது அவர்கள் கோட்டைகளின் பலவீனங்களையும், உள் ரகசியங்களையும் சொல்லப் பெரிய தயக்கம் காட்டவில்லை. அத்துடன் வணிகர்களாகவும், வேலையாட்களாகவும் சிவாஜியின் வீரர்களை கோட்டைக்குள் அனுமதிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. ரகசியங்களைப் பெற்று, உள்ளே புக அனுமதியும் பெற்ற பிறகு தாக்குதல்களில் வெற்றி பெறுவது சிவாஜியின் ஆட்களுக்குக் கடினமாக இருக்கவில்லை. காவலர்களுக்குத் தலைவர்களான அதிகாரிகளும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் பணிபுரிந்ததால் அவர்களும் விலைபோகிறவர்களாகவே இருந்தார்கள். அதனால் திட்டப்படியே கோட்டைகள் மளமளவென்று சிவாஜியின் ஆதிக்கத்திற்குள் வந்தன.

அபாஜி சோன் தேவ் கல்யாண் பகுதியில் வெற்றிகரமாக நுழைந்து முல்லானா அகமதைச் சிறைப்படுத்தினான். கல்யாண் அப்பிராந்தியத்தின் சக்தி மிகுந்த பகுதியாகக் கருதப்பட்டதால் தகவலைக் கேள்விப்பட்டு சிவாஜி தன் வீரர்களுடன் உற்சாகமாகக் கிளம்பி கல்யாண் நகருக்குள் நுழைந்தான். சிவாஜியின் வீரமும், பெருந்தன்மையும், உயர்குணங்களும் முன்கூட்டியே அப்பகுதிகளில் பரவியிருந்ததால் சிவாஜி தங்கள் பகுதிகளை வென்றதை அப்பகுதிக் குடிமக்களும், அதிகாரிகளும் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்ததாகவே கருதினார்கள். கல்யாண் நகரும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஒரு அரசனுக்குரிய உற்சாகமான வரவேற்பு சிவாஜிக்குக் கிடைத்தது.

மக்களது உற்சாகத்திலும், வரவேற்பிலும் மனம் நெகிழ்ந்த சிவாஜி தாதாஜி கொண்டதேவை நினைத்துக் கொண்டான். அவர் சொன்னது போல் இவர்களின் நலத்தைப் பேணுவதாலேயே இறைவனின் ஆசியைப் பெற முடியும் என்பதை என்றைக்கும் மறக்கக்கூடாது என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டான்.

கல்யாண் தலைவன் முல்லானா அகமதை உரிய மரியாதையுடன் பீஜாப்பூருக்கு சிவாஜி அனுப்பி வைத்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். தோற்றவர்களிடம் பெருந்தன்மை காட்டுவது அவர்களுக்குப் புதிது. சிறைப்படுத்துதல். அவமானப்படுத்துதல், அடிமையாக்கி விற்கப்படுதல், துரத்தப்படுதல் இவை எல்லாம் தான் அவர்கள் இது வரை பார்த்திருந்தவை. ஆனால் சிவாஜி, எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம் எதிரிகள் என்று எண்ணவில்லை. பலமிழந்தவர்களைத் துன்புறுத்தி இன்பம் காணவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்து செல்லும் போது முல்லானா அகமதுவும் மானசீகமாகவே சிவாஜிக்குத் தலை தாழ்த்தி வணங்கி விட்டுச் சென்றான்.

கல்யாண் பகுதியின் நிர்வாகப் பொறுப்பை அபாஜி சோன் தேவுக்கே தந்த சிவாஜி அங்கு நிர்வாகத்திலும் தங்கள் பகுதிகளின் முறைகளையே பின்பற்ற உத்தரவு பிறப்பித்தான். தாதாஜி கொண்டதேவின் வழிமுறைகளாக இருந்த நியாயமான ஊதியம், நியாயமான வரிகள், தகுதிக்கும் திறமைக்கும் உரிய மரியாதை, ஏற்ற பதவிகள் அங்கும் ஏற்படுத்தப்பட்டன. அங்குள்ள அதிகாரிகள், பிரபுக்களுடன் இது குறித்து அவன் பேசி முடித்த போது அபாஜி சோன் தேவ் சிவாஜியிடம் சொன்னான். “சிவாஜி. வெற்றி மீது வெற்றி கண்ட உங்களுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் பரிசு ஒன்றைத் தர நினைக்கிறேன்”

சிவாஜி சிரித்துக் கொண்டே சொன்னான். “பரிசு என்பதை மட்டும் சொல். அது பிரமிக்க வைப்பது தானா என்று நான் தான் தீர்மானிக்க வேண்டும்”

அபாஜி சோன் தேவ் கண்களால் சமிக்ஞை செய்ய வீரர்கள் பேரெழில் கொண்ட பெண் ஒருத்தியை சிவாஜி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்த அழகு சிவாஜியை உண்மையாகவே பிரமிக்க வைத்தது. அவன் அப்படி ஒரு அழகை இது வரை பார்த்ததில்லை. 

சிவாஜி கேட்டான். “யாரிந்தப் பெண்?”

”முல்லானா அகமதின் மருமகள்….” என்று அபாஜி சோன் தேவ் சொன்னான்.

வென்ற நாட்டின் செல்வங்கள் மட்டுமல்ல அழகான பெண்களும் கூட வென்றவனுக்கே சொந்தம் என்பது அக்காலத்தின் நியதியாக இருந்தது. அது வெற்றியின் உரிமையாகக் கருதப்பட்டது. அழகான பெண்கள் வென்ற அரசனின் அந்தப்புரத்திற்கு அனுப்பப்படுவார்கள். அதனால் அபாஜி சோன் தேவ் அப்படிப்பட்ட ஒரு பேரழகியைப் பார்த்த பின் தன் இளம் தலைவனுக்குச் சொந்தமாக வேண்டியவள் என்று முடிவெடுத்திருந்தான்.

சிவாஜி ஒன்றும் பேசாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள். சிவாஜி புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். “உன் அழகில் ஒரு பகுதி என் தாயிடம் இருந்திருந்தால் நானும் அழகனாய் பிறந்திருப்பேனோ என்னவோ?”

அந்தப் பெண் திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை…..

சிவாஜி அபாஜி சோன் தேவிடம் சொன்னான். “உன் அன்புக்கு நன்றி அபாஜி. ஆனால் பெண்கள் பரிசுப் பொருள்கள் அல்ல. வெற்றியில் பெண்களை ஒருவனுக்கு எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பதையும் என் மனோதர்மம் மறுக்கிறது. அடுத்தவன் மனைவியை அபகரித்துச் சென்ற இராவணன் அந்த ஒரு பாவச்செயலாலேயே தன் அனைத்து பலங்களையும் இழந்து அழிந்து போன கதையைக் கேட்டு வளர்ந்தவன் நான். இத்தனைக்கும் அவன் வேதங்களைக் கரைத்துக் குடித்தவன், பத்து தலை அவனுக்கு. அத்தனையும் அறிவு. உடல் பலம். பணபலம் எதிலுமே அவனிடம் குறைவிருக்கவில்லை. அத்தனையும் இழக்க வைத்தது சீதா பிராட்டியின் கண்ணீர். நான் என் கணக்கில் இந்தப் பெண்ணின் கண்ணீர் சேர்வதை விரும்பவில்லை…”

அபாஜி சோன் தேவ் மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை பேரும் சிவாஜியை வியப்புடன் பார்த்தார்கள். சிவாஜி அபாஜி சோன் தேவை அருகில் அழைத்து அவன் காதுகளில் ஏதோ சொன்னான். உடனடியாக விரைந்து சென்ற அபாஜி சோன் தேவ் ஒரு பெரிய வெள்ளித் தட்டில் பட்டாடைகளும், தங்க நகைகளும் வைத்துக் கொண்டு வந்து தந்தான்.

சிவாஜி எழுந்து சென்று அவற்றை அந்தப் பெண்ணிடம் தந்தான். “இதை உன் சகோதரன் கொடுப்பதாக எண்ணிப் பெற்றுக் கொள் பெண்ணே. உன்னை உன் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்க இப்போதே ஏற்பாடு செய்கிறேன். போய் வா”

அதைப் பெற்று கொண்ட போது அந்தப் பெண் கண்கள் கலங்கியிருந்தன. அவனை பிரமிப்பு தீராமல் அவள் பார்த்தாள். சிவாஜி கைகூப்பி அவளை வணங்கி தகுந்த துணையுடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான். அவளும் கூப்பிய கைகளைப் பிரிக்காமலேயே அவனைத் திரும்பிப் பார்த்தபடி போனாள்.

அந்தச் செய்தி நாடெங்கும் தீயாகப் பரவ ஆரம்பித்தது. சிவாஜி வீரன் மட்டுமல்ல, பெருந்தன்மையானவன் மட்டுமல்ல, பெண்களையும் மதிக்கும் உத்தமன், மிக நல்லவன் என்ற அபிப்பிராயம் அனைவர் மனதிலும் வேரூன்ற ஆரம்பித்தது.. அப்படி ஒருவனை யாரும் இது வரை பார்த்ததில்லை. அப்படி ஒருவன் உண்மையில் இருக்கக்கூடும் என்று கூட நம்பியிருக்கவில்லை. கதைகளில் மட்டுமே கேள்விப்பட்ட உன்னதங்களை நேரில் பார்க்க முடியும் போது ஏற்படும் பிரமிப்பே பலருக்கும் ஏற்பட்டடது.

(தொடரும்)
என்.கணேசன்