சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 28, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 109


ந்த ஆள் ஏன் முகத்தைக் கடுகடுவென்று வைத்திருக்கிறார்” என்று கௌதம் தாழ்ந்த குரலில் மைத்ரேயனைக் கேட்டான். இருவரையும் லீ க்யாங் ஜீப்பில் அழைத்துப் போய்க் கொண்டிருந்தான். பின்னாலும் முன்னாலும் போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்தன. லீ க்யாங் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தான் கௌதம் அப்படிக் கேட்டான்.

“அப்படிக் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தால் தான் நாம் பயந்து அவர் சொன்னபடி நடந்து கொள்வோம் என்று நினைக்கிறார்” என்றான் மைத்ரேயன்.

லீ க்யாங்குக்கு அவர்கள் இருவரும் தமிழில் பேசிக் கொண்டது புரியவில்லை. பின்னால் திரும்பி மைத்ரேயனிடம் கேட்டான். “அவன் என்ன கேட்டான்? நீ என்ன சொன்னாய்?”

மைத்ரேயன் இரண்டையும் மாற்றாமல் அப்படியே திபெத்திய மொழியில் மொழிபெயர்த்துச் சொன்னான். லீ க்யாங் அவன் சொன்னதை ரசிக்கவில்லை. அந்தப் பையன் கேட்டதிலும் தப்பில்லை, இவன் சொன்னதிலும் தப்பில்லை, ஆனால் கேட்டவுடன் கொஞ்சமும் பயப்படாமல் அப்படியே மொழி பெயர்த்துச் சொன்ன துணிச்சல் லீ க்யாங்கை அசர வைத்தது. இருவரையும் முறைத்துப் பார்த்தான். கௌதம் கண்களைத் தாழ்த்திக் கொண்டு ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாய் லீ க்யாங்கைப் பார்க்க லீ க்யாங் முகம் கடுமையை இழந்தது. ஒன்றுமே பேசாமல் லீ க்யாங் திரும்பிக் கொண்டான்.

டோர்ஜேயையும், ஒற்றைக்கண் பிக்குவையும் தங்க வைத்திருந்த வீட்டை ஜீப் அடைந்தது. ”இங்கேயே இருங்கள்” என்று சொல்லி விட்டு லீ க்யாங் இறங்கினான். அசலும் நகலும் சந்தித்துக் கொள்வதற்கு முன் சில விஷயங்களைச் சொல்லி நகலைத் தயார்ப்படுத்துவது நல்லது என்று அவன் நினைத்தான்.


லீ க்யாங் வந்து சேர்ந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்த ஒற்றைக்கண் பிக்கு ஓடிச் சென்று டோர்ஜேயிடம் சொன்னார். “லீ க்யாங் வந்திருக்கிறான்...”

டோர்ஜே படித்துக் கொண்டிருந்த காமிக்ஸ் புத்தகத்தை வேகமாக மூடி ஒளித்து வைத்து விட்டு பிக்குவுடன் வேகமாய் முன்னறைக்கு வந்தான். டோர்ஜே கலவரத்துடன் கேட்டான். “ஏன் திடீரென்று....”

ஒற்றைக்கண் பிக்கு ”தெரியவில்லை...” என்று பதற்றத்துடன் சொன்னார்.

படிகளேறி வந்து கொண்டிருந்த போது லீ க்யாங்கின் அலைபேசி அடித்தது. பீஜிங்கில் அவசர வேலை வந்து சேர்ந்து விட்டிருந்தது. அவன் இன்று சில மணி நேரங்களாவது இங்கிருக்க வேண்டும் என்றெண்ணி வந்தது இனி நடக்க சாத்தியம் இல்லை. அவசர அவசரமாக அவன் படியேறினான்.

உள்ளே வந்த லீ க்யாங் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த ஒற்றைக்கண் பிக்குவின் வணக்கத்தை சின்ன தலையசைப்போடு ஏற்றுக் கொண்டான். பின் லேசாக நடுங்கிக் கொண்டிருந்த டோர்ஜேயைப் பார்த்துக் கேட்டான். “என்ன செய்து கொண்டிருந்தாய்?”

எப்போதுமே டோர்ஜேயை “வணங்குகிறேன் மைத்ரேயரே” என்று ஆரம்பத்திலேயே பொய் வணக்கமாவது சொல்லும் லீ க்யாங் இன்று வணக்கம் தெரிவிக்காததுடன் இப்படி ஒருமையில் கேட்டது இருவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. டோர்ஜேக்கு நாக்கு வாயினுள் ஒட்டிக் கொண்டது போல் இருந்தது. பேச வரவில்லை.

“சூத்திரங்கள் படித்துக் கொண்டிருந்தான்.” ஒற்றைக்கண் பிக்கு சமாளித்துக்கொண்டு சொன்னார்.

லீ க்யாங் இருக்கையில் அமர்ந்து அவர்கள் இருவரையும் எதிர் இருக்கைகளில் அமரச் சொன்னான். பின் ஒற்றைக்கண் பிக்குவிடம் சொன்னான். “இவனை உலக அரங்கில் அரங்கேற்றும் நேரம் நெருங்கி விட்டது பிக்குவே”.

ஒற்றைக்கண் பிக்கு மெல்ல கேட்டார். “அந்த... அந்த மைத்ரேயன்....?”

”வெளியே ஜீப்பில் அமர்ந்திருக்கிறான்”

இருவர் முகங்களும் ரத்தம் வடிந்து வெளுத்தன.

லீ க்யாங் சொன்னான். “இது வரை உங்களிடம் இவன் நிறைய கற்றுக் கொண்டாகி விட்டது. இனி அவனிடமும் சில நாட்கள் கற்றுக் கொள்ளட்டும். இவனை மைத்ரேயனாக நாம் அறிமுகப்படுத்தும் போது யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது”

“அசல் இருக்கிற வரை நகல் நிம்மதியாக இருக்க முடியாது” என்று சூசகமாகச் சொல்லி அசலுக்கு இப்போது ஆபத்துக் காலம் என்று பத்மசாம்பவாவின் ஓலை சொல்கிறது என்று குறிப்பும் கொடுத்து அனுப்பினால் சொன்னதைச் செய்யாமல் அந்த அசலையே அங்கு அழைத்துக் கொண்டு வந்து அவனிடமிருந்தும் இந்த நகல் கற்றுக் கொள்ளட்டும் என்று சொல்கிறானே இந்த பாழாய் போனவன் என்று ஒற்றைக்கண் பிக்கு மனதிற்குள் திட்டினார். ஆனால் அவர் தலை மட்டும் சரியென்று அசைந்தது.

ஆனால் டோர்ஜே முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. லீ க்யாங் டோர்ஜேயைப் பார்த்து நம்பிக்கை ஊட்டும் தொனியில் சொன்னான். ”அவனை சிலர் மைத்ரேயன் என்று நம்புகிறார்களே ஒழிய அவனே அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அவனிடம் கற்றுக் கொள்ளவும் உனக்கு நிறைய இருக்கிறது. முக்கியமாக தியானத்தைக் கற்றுக் கொள். அதிகபட்சம் ஒருவாரம் அவன் இங்கே இருப்பான். அதற்குப் பிறகு போய் விடுவான். பின் என்றைக்குமே வர மாட்டான். உன் வழியில் குறுக்கிட மாட்டான். அதனால் நீ பயப்பட வேண்டியதில்லை. இந்த ஒரு வாரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கற்றுக் கொள். அவன் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதைக் காட்டிலும் நீ அவனைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. புரிகிறதா?”

டோர்ஜேக்கு தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. திடீரென்று லீ க்யாங் ஏற்றுகிற பாரம் அவனுக்குத் தாங்க முடிகிறதாய் இல்லை. ஆனாலும் அவன் ஆசிரியரைப் போலவே தலையசைத்தான்.

லீ க்யாங் ஒற்றைக்கண் பிக்குவிடம் சொன்னான். “நீங்கள் இவன் அவனிடமிருந்து படிக்க வேண்டியதைப் படிக்கிறானா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவனும், அவனுடன் இருக்கும் இன்னொரு பையனும் இன்னும் ஒரு வாரம் இங்கிருப்பார்கள். அப்புறம் போய் விடுவார்கள். அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் இவனை அரங்கேற்றப் போகிறோம். அந்த நேரத்தில் நானே வருகிறேன்.... அந்த மைத்ரேயன் இங்கே இருக்கும் வரை சிறப்புக்காவல் இந்த வீட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆயுதம் ஏந்திய ஐந்து பேர் வெளியே காவலுக்கு இருப்பார்கள்.... யாராவது இங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தாலோ, வெளியாட்கள் இங்கே நுழைய முயற்சி செய்தாலோ யோசிக்காமல் சுட்டுக் கொல்லச் சொல்லி இருக்கிறேன்.....”

அவசர அவசரமாகச் சொல்லி விட்டு லீ க்யாங் கிளம்பினான். கிளம்பும் போது அங்கு வந்த சமையற்கார ஒற்றனைப் பார்த்து சமிக்ஞை செய்யவே அவனும் பின்னாலேயே சென்றான். பாதிப்படிகள் இறங்கிய பின் லீ க்யாங் அவனிடம் சில கட்டளைகள் இட சமையல்காரன் தலையசைத்தான். பின் வேகமாகப் படிகள் இறங்கிய லீ க்யாங் ஜீப்பில் இருந்த மைத்ரேயனிடம் சொன்னான். “இனி சுமார் ஒரு வாரம் நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்கப் போகிறீர்கள். இங்கே தான் மைத்ரேயன் இருக்கிறான். அவனுக்குத் தியானம் கற்றுக் கொடு. தெரியாததைக் கேட்டால் கற்றுக் கொடு. எந்தக் காரணம் கொண்டும் வீட்டை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்யாதீர்கள். உயிர் மிஞ்சாது. புரிகிறதா?”

”புரிகிறது”என்று அமைதியாக மைத்ரேயன் பதில் அளித்தான். இப்போது அவன் அமைதியும், அனுசரணையும் லீ க்யாங்குக்கு ஏதோ வில்லங்கமாகத் தோன்ற ஆரம்பித்தது. சந்தேகத்துடன் அவனைக் கூர்ந்து பார்த்தபடியே லீ க்யாங் கேட்டான். “நீ எனக்குத் தெரியாமல் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?”

மைத்ரேயன் சொன்னான். “மனிதன் போடும் திட்டங்களைப் பார்த்து இறைவன் சிரிப்பதாகச் சொல்கிறார்கள். எனவே நான் திட்டம் எதுவும் போடுவதில்லை....”

தன் திட்டங்களையும் மறைமுகமாக கேலி செய்கிறானோ என்ற சந்தேகம் லீ க்யாங்குக்கு வந்தது. இது வரை இவனைப் பற்றிப் படித்ததில் இந்த எகத்தாளம் பற்றி எந்த தகவலும் இல்லையே. சொல்லப் போனால் இப்போது இருக்கிற தைரியம், வெளிப்படையான துணிச்சலான பேச்சு பற்றி கூடப் படிக்கவில்லையே... கூர்மையாக அவன் மைத்ரேயனைப் பார்த்தான். அந்த முகத்தில் கேலியோ, ஏளனமோ தெரியவில்லை. மகத்தான உண்மை ஒன்றைச் சொல்லி நிற்கிற பணிவே தெரிந்தது. அடிக்கடி ஐயா என்று சொன்னவன் லீ க்யாங் வேண்டாம் என்ற பின் ஒரு வாக்கியத்துக்குக் கூட ஐயா என்று சொல்லவில்லை என்பதையும் லீ க்யாங் கவனித்தான். இவனை எல்லாம் அரை மணி, ஒரு மணி நேரத்தில் எல்லாம் புரிந்து கொள்வது கஷ்டம்....

பெருமூச்சு விட்ட லீ க்யாங் ஜீப்பின் முன்பகுதியில் வைத்திருந்த ஒரு பையை மைத்ரேயனிடம் நீட்டினான். “உங்கள் இரண்டு பேருக்கும் இதில் உடைகள் இருக்கின்றன்....”

வாங்கிக் கொண்ட மைத்ரேயன் “மிக்க நன்றி” என்று தலை வணங்கினான். லீ க்யாங்கின் ஜீப் அங்கிருந்து பறந்தது. வரும் போது ஜீப்பைப் பின் தொடர்ந்து வந்த போலீஸ் வாகனம் இப்போது பின் தொடரவில்லை. அதிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் அந்த வீட்டுக் காவலுக்குத் தயாரானார்கள்.

மைத்ரேயனும், கௌதமும் படியேறினார்கள். மேலே இருந்து ஒற்றைக்கண் பிக்குவும், டோர்ஜேயும், சமையல்காரனும் அவர்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.


மாராவுக்கு மைத்ரேயன் இருக்கும் இடம் பற்றிய தகவல் போய் சேர்ந்தது. “.... ஆரம்பத்தில் அந்த வீட்டைக் காவல் காக்க துப்பாக்கி ஏந்திய ஐந்து போலீஸ்காரர்களை ஏற்பாடு செய்திருந்த லீ க்யாங் பீஜிங் விமானம் ஏறுவதற்கு முன் கூடுதலாக ஐந்து பேரைத் தெருவையே கண்காணிக்க ஏற்பாடு செய்து விட்டுப் போயிருக்கிறான்.... அதனால் மைத்ரேயன் இருக்கும் தெருவுக்கே கூட அவர்கள் அறியாமல் போய் விட முடியாது.... ”

மாரா புன்னகைத்தபடி தன் மற்ற வேலைகளில் ஆழ்ந்தான். திடீரென்று அவன் மேசையில் வைத்திருந்த பழங்கால மரப்பெட்டியின் இடுக்கிலிருந்து நீல நிற ஒளி ஒளிர ஆரம்பித்தது. அவசரமாக திறந்து பார்த்தான். கருப்புத் துணியால் போர்த்தி வைத்திருந்த மாராவின் சிலை தான் ஒளிர்ந்தது. மாரா திகைத்தான். ரகசியச்சடங்கில் ஈடுபட்டு பிரார்த்திக்கும் போது மட்டுமே ஒளிரக்கூடிய அவர்கள் தெய்வத்தின் சிலை இப்போது ஒளிர்வதன் காரணத்தை அவனால் உணர முடியவில்லை. கவனத்தை அந்தச் சிலையில் குவித்தான். ஒளிர்வது நின்றது. அவர்களுடைய மகாசக்தி ஏதோ அவசர எச்சரிக்கை உள்ளது என்று சொல்லி விட்டுப் போனதாக உள்ளுணர்வு சொன்னது.

ஆழமாக யோசித்து விட்டு சைத்தான் மலையில் அவர்கள் இயக்க உள்வட்ட ஆட்களை உடனடியாகக் கூட்டி, ரகசியச்சடங்கை மறுபடி ஒருமுறை நடத்தி அந்த அவசர எச்சரிக்கை என்ன என்பதையறியவும், மைத்ரேயன் விஷயத்தில் இறுதி முடிவெடுக்கவும் மாரா தீர்மானித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில்ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடக்கும் ஆன்மிகக் கண்காட்சியில் கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்ற அரங்கில் “புத்தம் சரணம் கச்சாமி”, “பரம(ன்) இரகசியம்” நாவல்களை சிறப்புத் தள்ளுபடியில் பெறலாம்.

Tuesday, July 26, 2016

உலகப் பழமொழிகள் – 14


131. மனிதன் தனக்குத் தெரிந்ததை மட்டும் பேசுவானானால் உலகில் பூரண அமைதி நிலவும்.

132. கப்பலின் சிறுதுளை கப்பலையே சாய்த்து விடும்.

133. தங்கத்தை விட்டெறிபவன் நாளை செம்பைப் பொறுக்குவான்.

134. ஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்க சிறந்த வழி, அது ரகசியமான விஷயம் என்பதை ரகசியமாக வைத்திருப்பது தான்.

135. தவறான லாபங்கள் உண்மையில் நஷ்டங்கள்.

136. தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான்.

137. நாயிடம் கடன்பட்டால் அதை ஐயா என்றழைக்க வேண்டும்.

138. நல்லவர்கள் இறைவனை இழந்துவிடக்கூடாது என்று அஞ்சுகிறார்கள். தீயவர்கள் இறைவனைக் கண்டு கொள்ளக்கூடாதே என்று என்று அஞ்சுகிறார்கள்.

139. ஒருவரிடம் காட்டும் அன்பு அவர்கள் குறையை மறைக்கும் போர்வையாக இருந்து விடக்கூடாது.

140. சொர்க்கத்தின் வாயில்கள் அரசர்களது அரண்மனை வாயில்கள் போல உயரமாய் இருப்பதில்லை. அங்கு நுழைபவர் குனிந்து பணிந்து செல்ல வேண்டியிருக்கிறது.

தொகுப்பு: என்.கணேசன்


Thursday, July 21, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 108


மைத்ரேயனின் இரண்டாவது கேள்வி லீ க்யாங்கை கேலி செய்வது போல இருந்தது. உன் வாழ்க்கையையே நீ தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக உன்னால் சொல்ல முடியவில்லை. அப்படி இருக்கையில் என் வாழ்க்கையை தீர்மானிப்பவன் என்று என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது என்று நாசுக்காகக் கேட்கிறானோ?

குரலில் கடுமையைக் கொண்டு வந்து லீ க்யாங் சொன்னான். “என் வாழ்க்கையை நான் தீர்மானிக்க முடியுமோ முடியாதோ ஆனால் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறேன். அது சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் சிறப்பில்லாத காரியங்களைச் செய்வதில் எந்த சங்கடமும் படாதவன். புரிகிறதா?”

மைத்ரேயன் புன்னகையுடன் சொன்னான். “புரிகிறது ஐயா”

லீ க்யாங்குக்கும் புன்னகைக்கத் தோன்றியது. ஆனால் வரவிருந்த புன்னகையை அப்படியே நிறுத்தி விட்டு கடுமையாகச் சொன்னான். “இங்கே நான் சொல்கிறபடி நடக்கிற வரை என்னால் எந்தப் பிரச்னையும் வராது. அப்படி நடக்கா விட்டால் உனக்கு மட்டுமல்ல, வெளியே ஒரு பொடியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே அவன், உன் அம்மா, உன் இரண்டு அண்ணன்கள் அத்தனை பேருக்கும் நரக வாழ்க்கையை ஏற்படுத்தி விடுவேன். மரணமே பரவாயில்லை என்று நீங்கள் நினைக்கும்படி செய்து விடுவேன். இதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?”

“இல்லை ஐயா. நான் இது வரை மற்றவர்களை அனுசரித்தே வாழ்ந்தவன். நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான்.

“இது வரை அனுசரித்து வாழ்ந்திருந்தால் திபெத்தை விட்டுப் போயிருக்க மாட்டாயே” லீ க்யாங் சந்தேகத்தோடு கேட்டான்.

“ஒரு அன்பர் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டுக்கு வந்து என்னை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அங்கிருந்து ஒருவர் என்னைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கு வரை திரும்பக்கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அவரிடமும் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது நீங்கள் சொல்வதற்கும் நான் மறுக்கப் போவதில்லை. இதில் அனுசரணைக் குறைவு எங்காவது இருக்கிறதா ஐயா”

லீ க்யாங் மெல்லப் புன்னகைத்தான். “நீ முன்பு அதிகம் பேசாதவனாயிற்றே. இப்போது இவ்வளவு பேசுகிறாயே”

“நான் எப்போதும் அதிகம் பேசாதவன் தான். ஆனால் நீங்கள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல் இருந்தால் அதை நீங்கள் அனுசரணைக்குறைவாக நினைத்து விடுவீர்களோ என்று தான் விளக்கினேன் ஐயா”

லீ க்யாங் மீண்டும் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டான். “நீ தான் புத்தரின் அவதாரமான மைத்ரேயனா?”

“எனக்கு இந்தப் பிறவி தவிர வேறு பிறவி நினைவு எதுவும் இல்லை ஐயா” உடனே வந்தது பதில்.

“நல்லது. புத்தரின் அவதாரமான மைத்ரேயன் என் பாதுகாப்பில் தான் இருக்கிறான். அவன் தான் உலகம் அறியப்போகும் மைத்ரேயன். புரிகிறதா?” என்று கேட்டு கூர்ந்து பார்த்தான் லீ க்யாங்.

“அப்படியே ஆகட்டும் ஐயா” என்று சிறிதும் வருத்தமோ, தயக்கமோ இல்லாமல் மைத்ரேயன் சொன்னான்.

“நீ அவனுக்கு தியானம் எல்லாம் சொல்லித் தர வேண்டும். சரியா?”

“சரி ஐயா”

லீ க்யாங் இப்படிப்பட்ட ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. புத்தரின் அவதாரத்திற்கு நான் சொல்லித் தர என்ன இருக்கிறது ஐயா என்று கிண்டலாகக் கேட்டாலும் கேட்பான் என்று நினைத்திருந்தான்.... ஆனாலும் திருப்தியை வெளிக்காட்டாமல் கடுமையாக சொன்னான். “இப்படி ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஐயா போட்டுப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை”

“சரி”



தேவ் லீ க்யாங்கிடம் சொன்னபடி அமெரிக்காவுக்குத் தான் சென்றான். நியூயார்க் நகர விமான நிலையத்தில் இறங்கியவன் உடனடியாக மாராவைச் சந்தித்தான்.

மைத்ரேயனைக் கடத்தி வரும் வேலையை லீ க்யாங் ஒப்படைத்த மறு நாளே மாரா அவனைத் தொடர்பு கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இருந்து லீ க்யாங்கிடம் ஒப்படைக்கும் கணம் வரை மைத்ரேயன் குறித்த சின்னச் சின்ன தகவல்களையும் ஒன்று விடாமல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் அவன் கொடுத்த வேலை.

தேவுக்கு இதற்கு முன்பும் மாரா சில வேலைகளைத் தந்திருக்கிறான். அதற்கு தாராளமாகவே பணமும் தந்திருக்கிறான். மாராவை ஒரு உலகப்பணக்காரன் என்று மட்டுமே அறிந்திருந்த தேவுக்கு அவன் மைத்ரேயன் விஷயத்தில் காட்டும் இந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்து மாரா மத ஆதரவாளனோ, மத எதிர்ப்பாளனோ அல்ல. வியாபாரம், பணம் தவிர வேறு எதிலும் ஆர்வம் இருப்பவன் அல்ல. அப்படிப்பட்டவன் புத்தரின் அவதாரம் என்று சிலரால் நினைக்கப்படும் ஒருவனைப் பற்றி சின்னச் சின்ன தகவல்கள் கூட ஒன்று விடாமல் தெரிந்து கொள்வது ஏன் என்று புரியவில்லை. ஆனால் அதைக் குறித்து அவன் அதிகம் குழப்பிக் கொள்ளவும் இல்லை. ஒரு வேலையில் இரண்டு இடங்களில் பணம் வருகிறதென்றால் சரி தான் என்று நினைத்தான்.

மாராவிடம் ஆரம்பத்தில் இருந்து கடைசியில் லீ க்யாங்கிடம் ஒப்படைத்து பேசி விட்டு வந்தது வரை எல்லாவற்றையும் சொன்னான். மாரா இடைமறிக்காமல் மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்தான். மயக்க மருந்து கொடுத்து கூட மயங்காமல் விழித்துக் கொண்டே வந்ததைச் சொல்லும் போது ஆச்சரியத்தை எதிர்பார்த்தான். ஆனால் மாரா ஆச்சரியத்தை அதில் மட்டுமல்ல அவன் சொன்ன எதிலுமே காட்டவில்லை. கடைசியில் கேட்க ஆரம்பித்தான்.

“மயக்கமில்லாமல் விழித்திருந்தும் ஏன் அவன் கத்தவில்லை, நீ கடத்துவதைத் தடுக்கவில்லை என்று நினைக்கிறாய்”

“நான் அது பற்றி தான் நிறைய யோசித்தேன். கடைசியில் அவனும் திபெத் வருவதைத் தான் விரும்புகிறானோ என்று கூட சந்தேகம் வந்தது.....”

“திபெத்திற்குத் தான் அழைத்துப் போகிறாய் என்று அவனுக்கு எப்படித் தெரியும்”

“அவனுக்கு நம் மனதில் இருப்பதெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறதால் அதுவும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.... நான் மயக்க ஊசி போடலாம் என்று நினைத்தவுடனே அது வேண்டாம் என்று நேரடியாகப் பேசியவன், என் சூட்கேஸில் இரண்டு பாட்டில் மயக்க மருந்து இருப்பதைத் தெரிந்து கொண்டவனுக்கு மற்றதெல்லாம் கூடத் தெரியாதா என்ன?”

”அந்த சக்தி இருப்பதால் அவன் புத்தரின் அவதாரமாகவே இருப்பான் என்று நம்புகிறாயா?” மாரா மைத்ரேயன் பற்றி அதிகமாய் எதுவும் தெரியாதவன் போலவும், ஏதோ ஒரு விஷயத்திற்காக இப்போது தெரிந்து கொள்ள விரும்புபவன் போலவும் கேட்டான்.

“அந்த விளையாட்டு ஆர்வத்தைப் பார்த்தால் புத்தராக நினைக்க முடியவில்லை. திறமையான விளையாட்டுப் பையனாகத் தான் தெரிகிறது. ஆனால் விளையாட்டில் அடுத்தவனுக்கு விட்டுக் கொடுப்பதைப் பார்த்தால், ஜெயித்து வரும் விளையாட்டை தடால் என்று முடித்து விட்டு தியானம் செய்ய உட்கார்வதைப் பார்த்தால் இதெல்லாம் சாதாரணமானவர்கள் செய்யக்கூடிய காரியம் அல்ல என்றும் தோன்றுகிறது. அவன் புத்தரின் அவதாரமோ இல்லையோ சாதாரணமானவன் அல்ல என்பது மட்டும் நிச்சயம்....”

இன்னும் நிறைய கேள்விகள் மாரா கேட்டான். எவ்வளவு நேரம் தியானம் செய்தான், அப்போது அவன் முகம் எப்படி இருந்தது, நீ எப்படி உணர்ந்தாய், அவன் என்னவெல்லாம் சாப்பிட்டான், எவ்வளவு சாப்பிட்டான், வாய் விட்டு சிரிப்பதுண்டா, உணர்ச்சி வசப்பட்டதுண்டா, அவனாகப் பேசிய போதெல்லாம் எதைப் பற்றிப் பேசினான், என்பது போல் ஏராளமான கேள்விகள்..... சில கேள்விகளுக்கு தேவ் நினைவுபடுத்தி யோசித்துச் சொல்ல வேண்டி இருந்தது.... சில கேள்விகள் இதையெல்லாம் கூட கேட்பார்களா என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின. ஆனால் மாரா கேட்டான். எல்லாவற்றிற்கும் தேவும் பதில் சொன்னான்.

”அவன் யாரிடமாவது நெருங்கிப் பழகினானா?”

“அந்தப் பையன் கௌதமிடம் நெருக்கமாகப் பழகினான். மற்றவர்களுடன் ஒரு தூரத்தை எப்போதுமே தக்க வைத்துக் கொண்டான்....”

“உன்னிடமும், கௌதமிடமும் என்ன மொழியில் பேசினான்....”

“தமிழில் தான். தமிழில் நன்றாகவே பேசுகிறான்.... அவனுக்கு முன்பே தமிழ் நன்றாக வரும் போல....”

“நீ அவனுடன் இரவு கப்பலின் மேல் தளத்திற்குப் போன போது அற்புதமான அமைதியை அனுபவித்தேன் என்றாய். அந்த அனுபவத்தை விவரித்துச் சொல்லேன்...”

தேவுக்கு அதை உடனே விவரிக்கத் தெரியவில்லை. யோசித்து விட்டுச் சொன்னான். ” சொந்த ஊர் கடலூர், வாழும் ஊர் மும்பை என்பதால் சமுத்திரம் எனக்குப் புதியதில்லை. நிலா, நட்சத்திரம், காற்று, இருட்டு இதையும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவனுடன் அங்கே உட்கார்ந்திருந்த போது அதெல்லாமே புதிதாய் அழகாய் பிரம்மாண்டமாய் தெரிந்தது. கேட்ட சின்னச்சின்ன சத்தம் கூட தேவ லோக சங்கீதம் மாதிரி இருந்தது. அவனாய் கூப்பிட்டிருக்காவிட்டால் நான் மணிக்கணக்கில் அந்த அமைதியையும் அழகையும் அனுபவித்திருப்பேன்.... எனக்கு.... எனக்கு அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை..... ஆனால் பத்து லட்ச ரூபாய் கொடு. அந்த அனுபவத்தை இன்னொரு முறை தருகிறேன் என்று சொன்னால் சந்தோஷமாக பத்து லட்சம் கொடுக்கத் தயங்க மாட்டேன்....”

மேலும் நிறைய கேள்விகள் கேட்டு மாரா அவனை அனுப்பி விட்டான். இப்போது மைத்ரேயனைக் கடத்திய கணத்திலிருந்து லீ க்யாங்கிடம் சேர்த்த கணம் வரை கூடவே தான் இருந்த ஒரு உணர்வை மாரா பெற்று விட்டான். தன் ஆள் அனுப்பி இருந்த கராச்சி துறைமுகப் புகைப்படத்தையும் நீண்ட நேரம் பார்த்தான். மாலுமிகள், கேப்டன் கையசைப்பு, முக பாவம் எல்லாம் பார்த்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டான்.

கடைசியில் ஒரு கேள்வி மேலோங்கி நின்றது. “திபெத்திற்கு மைத்ரேயன் திரும்புவது லீ க்யாங்கின் திட்டமா? மைத்ரேயனின் திட்டமா?”

(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, July 18, 2016

பணம் அதிகம் வந்தால் படுத்தும் பாடு!


வாழ்க்கையில் பணம் இல்லா விட்டால் பெரும்பாடு தான். அன்றாட வாழ்க்கையே தினசரிப் போராட்டமாக மாறி விடும். ஆனால் பணம் அதிகம் வந்தாலும் பிரச்னை தான். அதிக பணம் மனிதனை அடியோடு மாற்றி விடும் தன்மை கொண்டது. பழைய ஆள் அடியோடு காணாமல் போய் விடுவார். அதிக பணம் வந்தும் மாறாத மனிதர்கள் அபூர்வம்.

வில்லி பாரதத்தில் துரியோதனனின் போக்கை விவரிக்கும் விதமாக விதுரர் கூறுகிறார்.

செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்
சொல்வன அறிந்து சொல்லார், சுற்றமும் துணையும் நோக்கார்
வெல்வதே நினைவது அல்லால் வெம்பகை வலிது என்று எண்ணார்
வல்லினை விளைவும் ஓரார், மண்ணில் மேல் வாழும் மாந்தர்.

(உலகத்தில் வாழும் மனிதர்கள் செல்வம் வந்து சேர்ந்த காலத்தில் அதைத்தந்த கடவுளைக் கொண்டாட மாட்டார்கள். ஆராய்ந்து பேச மாட்டார்கள். உறவினரென்றும், நண்பரென்றும் பரிவு காட்ட மாட்டார்கள். தங்கள் வெற்றி பற்றியே நினைப்பார்களே ஒழிய எதிராளியின் வலிமையை யோசித்துப் பார்க்க மாட்டார்கள். வலிமையான ஊழ்வினையின் விளைவுகள் பற்றி ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்)

காலத்திற்கும் பொருந்தும் வரிகள் இவை. பணம் அதிகமாய் வர வர மனிதனின் குணாதிசயங்கள் மாறுவதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைத்திருக்கும். அந்த மனிதன் சேர்ந்திருக்கும் செல்வத்திற்கு இறைவன் அருளும், சாதகமான நேரமும் காரணம் என்று நினைக்காமல் எல்லாவற்றிற்கும் தன்னுடைய அறிவும், திறமையும் தான் காரணம் என்று தன்னையே அதிகம் மெச்சிக் கொள்வான். அதே நேரத்தில் மற்றவர்களைக் குறைவாக நினைக்க ஆரம்பிப்பான். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகள் அலட்சியமாகவும் கூர்மையாகவும் வரும். நண்பன் நட்புக்காகவும், உறவினர் உறவுக்காகவும்,  இருவரும் அன்புக்காகவும் மதிக்கப்பட மாட்டார்கள். ஏதேனும் வகையில் சம அந்தஸ்து இல்லாவிட்டால் நண்பன் என்றோ உறவு என்றோ சொல்லிக்கொள்ள லேசாக தயக்கம் கூட வரலாம்.

இனியும் எப்படி சம்பாதிக்கலாம், செல்வத்தை எப்படிப் பெருக்கலாம் என்கிற எண்ணமே சதா அவன் மனதில் இருக்கும். பண சம்பாத்தியமல்லாத மற்ற எல்லாமே மறந்து போகும். யாராவது குறை கண்டு சுட்டிக் காட்டினால் அவன் செல்வத்தைப் பார்த்துப் பொறாமையால் அதைச் சொல்வதாகத் தோன்றுமே ஒழிய, சொல்வது உண்மை தானா என்று ஆராய்ந்து பார்க்கத் தோன்றாது.

(வில்லிபாரதம் சொன்னதில் ஒன்றை மட்டும் என்னால் காண முடிந்ததில்லை. தெய்வத்தைப் பேண மாட்டார்கள் என்று சொன்னது தான் அது. செல்வம் அதிகம் வந்த மனிதர்களில் பெரும்பாலோர் மனிதர்களை அலட்சியப்படுத்துகிற அளவு கடவுளை அலட்சியப்படுத்தி நான் பார்த்தது இல்லை. கொடுக்கிற தெய்வம் நிறுத்தி விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதனால் கோயிலுக்குப் போவதிலும், கோயிலுக்குக் கொடுப்பதிலும் தாராளமாகவே இருக்கிறார்கள்.)

காலச்சக்கரம் சுழலும் போது கீழ் இருப்பவர் மேல் நிலைக்கும், மேல் இருப்பவர் கீழ் நிலைக்கும் வருவது சகஜமாக இருந்தாலும் அது தன் வாழ்வில் நேரலாம் என்கிற எண்ணம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதனாலேயே பலருக்கு பணிவும் வருவதில்லை. விதியாக தலையைத் தட்டுகிற வரை ‘என்னை மிஞ்ச ஆளில்லைஎன்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.

பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள். பத்தில் ஏழும் வைத்திருப்பவனையே அது என்னென்னவோ செய்வதாகவே இருக்கிறது. ஆனால் பணத்தையே தன் அடையாளமாகவும், தன் அளவுகோலும் நினைக்காத தன்மை விதிவிலக்காக சிலரிடம் இருக்கிறது. அவர்கள் பணத்தை அதற்குரிய இடத்திலேயே வைத்துப் பார்க்க முடிந்தவர்கள். மற்றவர்கள் பணத்தைத் தங்களுக்கு மேலாக வைத்துப் பார்க்கிறவர்கள். அதனால் அதன் அடிமையாக தாழ்ந்து இருக்கிறார்கள். அப்படி இருந்து இருந்து தாழ்ந்தே போய் விடுகிறார்கள். பெரியதாக ஒரு அடி விழுந்தால் ஒழிய அவர்கள் நிஜத்தை உணர்வதில்லை. அப்படி உணரும் போது அது சில சமயம் காலம் தாழ்ந்த உணர்தலாக இருக்கலாம். அந்த நேரத்தில் உண்மையான நண்பர்களும், பாசமான உறவுகளும் வெகுதூரம் விலகிப் போயிருக்கலாம்.

எனவே பணம் அதிகமாக வரும் போது எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாக மனிதனாகவே இருங்கள்.  


என்.கணேசன்

Thursday, July 14, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 107


 க்‌ஷய் அதிகாலையில் வாசற்கதவைத் திறந்த போது ஒரு காகித உறை படியில் கிடந்தது. அக்‌ஷய் எடுத்து அந்த உறையைப் பிரித்தான். உள்ளே தட்டச்சு செய்யப்பட்டிருந்த ஒரு கடிதம் இருந்தது.

“நீங்களோ, உங்கள் மகனோ எங்களுக்கு எதிரிகள் அல்ல. உங்கள் மகனுக்கு எதாவது தீங்கு விளைவித்து நாங்கள் எந்த லாபமும் அடையப்போவதும் இல்லை. அதனால் நீங்கள் முட்டாள்தனமாக எதாவது செய்யாமல் இருக்கும் வரை உங்கள் மகனுக்கு எந்தக் கெடுதலும் வராது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் மகன் நிச்சயமாக சில நாட்கள் கழித்து பத்திரமாக உங்கள் வீடு வந்து சேர்வான். உங்கள் மகனையோ, மற்றவனையோ கண்டுபிடிப்பதற்காக ஏதாவது சாகசம் புரிய நீங்கள் நினைத்தால் உங்கள் சாகசத்தில் நீங்கள் வெற்றி பெறவும் கூடும். ஆனால் அழைத்துக் கொண்டு போக கண்டிப்பாக உங்கள் மகன் உயிரோடு இருக்க மாட்டான். இது வெறும் மிரட்டல் அல்ல என்பது உங்கள் உள்மனதிற்குத் தெரியும் என்று நம்புகிறோம்.”

அந்தக் கடிதத்தில் கையெழுத்தில்லை. அக்‌ஷய் படித்து முடித்து விட்டு அதை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தான். நேற்று தான் கராச்சியில் எடுக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் மகன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து சஹானா சிறிது நிம்மதி அடைந்திருக்கிறாள். அந்த நிம்மதியைக் குலைக்க அவன் விரும்பவில்லை.



லாஸாவுக்குப் போகும் தனிவிமானத்தில் அமர்வதற்கு முன்பே சேகர் பற்றிய தகவல் தேவுக்கு வந்து சேர்ந்தது. “முட்டாள்.... படுமுட்டாள்” என்று மனதினுள் தேவ் சேகரைத் திட்டினான். வேலை முடிந்தவுடன் அந்தப் பகுதியிலேயே தங்காமல் தூரமாகப் போய் விடும்படி அவன் முன்பே தெரிவித்திருக்கிறான். வருணை விடுவித்து விடும்படி ஒரு ஆள் மூலம் தெரிவித்த போதும் சீக்கிரம் ஊரை விட்டே போய் விடும்படி மறுபடி சொல்லி இருக்கிறான். அப்படிச் சொல்லியும் சேகர் கேட்கவில்லை. அல்பன்.... முட்டாள்.... மூர்க்கன்..... அவன் மூலம் இன்னேரம் தன்னைப் பற்றியும் அக்‌ஷயும், உளவுத்துறையும் அறிந்திருப்பார்கள் என்பதில் தேவுக்கு சந்தேகமில்லை. அந்த முட்டாளை வேலைக்கு எடுத்துக் கொண்டதற்காக தேவ் நிஜமாகவே வருத்தப்பட்டான்.

விமானத்தில் செல்லும் போது கௌதமின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் முதலில் கப்பலில் பிரயாணம் செய்தாகி விட்டது. இப்போது விமானத்திலும் பயணம் செய்கிறான். நண்பன் மைத்ரேயன் சொன்னது போல எல்லாவற்றிலும் ஏதோ நல்லது இருக்கத்தான் செய்கிறது.....

லாஸா விமான நிலையத்தில் லீ க்யாங் அவர்களுக்காகக் காத்திருந்தான். மைத்ரேயன் விமானத்தில் அமைதியாக இறங்குவதைப் பார்த்தான். பின்னாலே அமானுஷ்யனின் மகன் விரிந்த கண்களுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே இறங்குவதைப் பார்த்தான். அவர்களுக்கும் பின்னால் தேவ் இறங்கினான். லீ க்யாங்கின் கண்கள் மறுபடியும் மைத்ரேயனையே கூர்ந்து கவனித்தன. இப்படிப் பல முறை விமானங்களில் பயணித்திருந்தவன் போல அவன் பரபரப்பில்லாமல் இருந்தான். பின்னால் வந்த சிறுவனின் ஆச்சரியமோ, பரவசமோ, புதிய இடம் என்கிற தயக்கமோ எதுவும் இல்லாமல் அவன் இருந்தது லீ க்யாங்குக்கு மைத்ரேயனின் முதல் நேரடி அறிமுகமாக இருந்தது.

லீ க்யாங் தன் அருகே இருந்த ஒரு அதிகாரியின் காதில் ஏதோ சொல்லி விட்டு விமான நிலையத்தில் இருந்த தனியறைக்குப் போய் விட்டான். அந்த அதிகாரி சிறுவர்கள் இருவரையும் அந்த தனியறையின் வெளி இருக்கைகளில் அமர வைத்து விட்டு தேவை அறைக்குள் அனுப்பி வைத்தான்.

அறையில் லீ க்யாங் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருப்பதை தேவ் கண்டான். தேவைப் பார்த்தவுடன் “வாழ்த்துக்கள் தேவ்” என்று லீ க்யாங் சொன்னபடி எதிர் நாற்காலியில் உட்காரக் கைகாட்டினான்.

உட்கார்ந்தபடியே “நன்றி சார்” என்றான் தேவ்.

“பிரயாணம் எப்படி இருந்தது?”

”நன்றாக இருந்தது சார்”

”பையன்கள் பிரச்னை எதுவும் செய்யவில்லையே?” கேட்டு விட்டு லீ க்யாங் தேவை கூர்மையாகப் பார்த்தான்.

எல்லாவற்றையும் இன்னேரம் லீ க்யாங் அறிந்திருப்பான் என்று தேவுக்குத் தெரியும். தேவ் புன்னகையுடன் சொன்னான். “இது வரை எந்தக் கடத்தல்காரனுக்கும் இப்படிப்பட்ட ஒத்துழைப்பு கிடைத்திருக்காது சார்.”

லீ க்யாங் முகத்தில் கேள்விக்குறி எழுந்தது. தேவ் சொன்னான். “கப்பலுக்கு வந்த பிறகு மயக்கமருந்து பயன்படுத்த வேண்டியிருக்கவில்லை. மைத்ரேயன் மயக்க மருந்து வேண்டாம், நாங்கள் தப்பிக்க முயற்சி செய்ய மாட்டோம். சமர்த்தாய் நீங்கள் சொல்கிறபடி கேட்கிறோம் என்றான். அப்படியே இருந்தான். அமானுஷ்யனின் பையனையும் அப்படியே இருக்க வைத்தான். அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் பிரச்னை இருக்கவில்லை....”

சொல்லி விட்டு தேவ் லீ க்யாங்கின் எதிர்வினை என்ன என்று பார்த்தான். லீ க்யாங் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை....

“மைத்ரேயனிடம் ஏதாவது பிரத்யேக சக்தி இருப்பதாக நினைக்கிறாயா?” என்று லீ க்யாங் கேட்டான்.

“அவன் அப்படி பிரத்யேக சக்தி எதுவும் காட்டவில்லை” என்று தேவ் சொன்னான். லீ க்யாங் இந்த தகவல்களுக்கு விலை பேசி இருக்கவில்லை. அதனால் சொல்லத் தேவை இல்லை என்று தேவ் அபிப்பிராயப்பட்டான். அவன் அந்த கூடுதல் தகவல்களுக்கு இன்னொரு இடத்தில் முன்பே விலைபேசி விட்டிருந்தான்....

லீ க்யாங் அதற்கு மேல் அதுபற்றிக் கேட்கவில்லை. “உன் பணத்தை உன் கணக்கில் போட ஐந்து நிமிடங்களுக்கு முன் சொல்லி இருக்கிறேன்.... இன்னேரம் வரவு வந்திருக்கும்....”

தேவின் அலைபேசியில் அதற்கான தகவல் அப்போது வந்து சேர்ந்தது. அலைபேசியை எடுத்து அந்தக் குறுந்தகவலைப் படித்துப் பார்த்து தேவ் “வந்து விட்டது. நன்றி சார்” என்றான்.

தலையசைத்த லீ க்யாங் கேட்டான். “திரும்பவும் இந்தியா போகிறாயா?”

தேவ் சிரித்து விட்டான். “எனக்கென்ன பைத்தியமா? அமானுஷ்யனின் பையன் வீடு போய் சேரும் வரை இந்தியா அல்ல ஆசியாவிலேயே இருக்க மாட்டேன். இங்கிருந்து நேராக அமெரிக்கா தான் போகிறேன்.... உங்களுக்கு மைத்ரேயனின் புகைப்படம் அனுப்பி எனக்கும் உதவி செய்தவன் இப்போது மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் பிணம் மாதிரி தான் இருக்கிறான் என்ற செய்தி வந்தது.”

”அவன் முட்டாள்” என்ற லீ க்யாங் முகத்தில் இகழ்ச்சி படர்ந்தது. “வேலை வேலையாகத் தான் இருக்க வேண்டும். தனி விருப்பு வெறுப்புகளை எல்லாம் இது போன்ற வேலையில் சேர்த்துக் கொண்டால் இப்படித் தான் முடியும்...”

தேவ் தலையாட்டி ஆமோதித்தான். சில வினாடிகள் கழித்து மெல்ல எழுந்தான். “நான் கிளம்பட்டுமா?”

லீ க்யாங் தலையசைத்தான். தேவ் அங்கிருந்து வெளியேறினான். வெளியேறியவன் இரண்டு சிறுவர்களையும் கடந்து சில அடிகள் தாண்டியபிறகு திரும்பி இருவரையும் பார்த்து கையசைத்தான். இருவரும் கையசைத்தார்கள். தேவ் போய் விட்டான்.

கௌதம் மெல்ல மைத்ரேயனைக் கேட்டான். “என்ன அந்த ஆள் நம்மை விட்டு விட்டே போய் விட்டார்....”

மைத்ரேயன் சொன்னான். “அவர் வேலை முடிந்து விட்டது.”

“அப்படியானால் இங்கிருந்து நாம் எங்கே போவது?”

“அதை வேறு ஆட்கள் முடிவு செய்வார்கள்...”

கௌதமுக்குக் குழப்பமாய் இருந்தது. ஆனால் நண்பன் மைத்ரேயன் கூட இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்தவனாக பேசாமல் விமான நிலையத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு ஆள் வந்து மைத்ரேயனை மட்டும் அறைக்குள் அனுப்பினான்.

மைத்ரேயனையே கூர்ந்து பார்த்தபடி லீ க்யாங் அமர்ந்திருந்தான். மைத்ரேயன் அவனையே பார்த்தபடி அருகில் சென்றான். லீ க்யாங் உட்காரச் சொல்லவில்லை. மைத்ரேயன் உட்கார முயற்சிக்கவும் இல்லை. நிறைய நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

லீ க்யாங்கின் பார்வையை முழுமையாக சந்திக்க முடிந்தவர்கள் குறைவு. மைத்ரேயன் பயம் சிறிதும் இல்லாமல் பார்வையை விலக்காமல் பார்த்ததை லீ க்யாங் ரசிக்கவில்லை.

லீ க்யாங் கடுமையான குரலில் கேட்டான். “நான் யார் என்று தெரியுமா?”

மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “தெரியாது”

“நீ எப்போது எங்கே எப்படிச் சாக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவன் நான். புரிகிறதா?” கடுமை குறையாமல் லீ க்யாங் கேட்டான். இந்தச் சிறுவனுக்குப் பயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்தான்.

“புரிகிறது. உங்களை ஒன்று கேட்கலாமா?” மைத்ரேயன் தயக்கமில்லாமல் அமைதியாகக் கேட்டான்.

“கேள்”

“நீங்கள் எப்போது எங்கே எப்படிச் சாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களால் தீர்மானிக்க முடியுமா?”

மேலேயிருந்து செங்கல் ஒன்று தலையில் நச்சென்று விழுந்தது போல் அதிர்ச்சியை லீ க்யாங் உணர்ந்தான்.

மைத்ரேயனின் குரலில் கேலியோ, எகத்தாளமோ லேசாகத் தெரிந்திருந்தாலும் லீ க்யாங் அவனைக் கோபத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்திருப்பான். ஆனால் ஒரு முக்கிய கேள்விக்குப் பதில் அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே மைத்ரேயனிடம் தெரிந்தது.

லீ க்யாங் பதில் சொல்லாமல் போகவே மைத்ரேயன் அன்பாகக் கேட்டான். “அடுத்தவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதை விட அவரவர் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடிவதல்லவா ஒருவருக்கு சிறப்பு?”


(தொடரும்)

என்.கணேசன்



(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, July 11, 2016

சுட்டெரிப்பது எதற்காக?


ரு இளைஞன் ஒரு வெள்ளிக்கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்கவும் ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கு அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான்.

அதையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது.  அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன.

இதை எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும்?இளைஞன் கேட்டான்.

இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும். வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும்என்று அதிலிருந்து பார்வையை எடுக்காமல் கொல்லன் சொன்னான்.

ஓ இந்த வேலையில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதாஎன்று எண்ணிய அந்த இளைஞனுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்தது. “அது சுத்தமாகி விட்டது, சூடு செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?

எப்போது என் முகம் தெளிவாக வெள்ளியில் பிரதிபலிக்கிறதோ அப்போது வெள்ளி முழுமையாகத் தூய்மையாகி விட்டது என்று தெரிந்து விடும். உடனடியாக நிறுத்தி விடுவேன்என்றான் கொல்லன்.

இறைவனாகிய கொல்லனிடம் நம் வாழ்க்கையை மிக அழகான நிலைமைக்கு மாற்றச் சொல்லி நாம் ஒப்படைக்கிறோம்.  நம் வாழ்வின் பொருளே அது தான். இந்த உலகில் நாம் ஜென்மம் எடுப்பதே ஒரு உயர்வான நிலைக்கு மாறத் தான். வந்த படியே உலகில் இருந்து விடை பெற்றால் அப்படிப்பட்ட வாழ்வில் என்ன அர்த்தம் இருக்கிறது?

ஆனால் எந்தப் பெரிய மாற்றமும் சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல.  இறைவன் நம் வாழ்க்கையை அழகானதொரு ஆபரணமாக்கி ஒளிரச் செய்ய சுட்டெரிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கையின் சூடு நம்மிடமுள்ள தவறுகளையும், குறைகளையும் போக்குவதற்காகவே. எத்தனையோ குறைகளையும் பாவங்களையும் நம்மிடம்  ஜென்ம ஜென்மங்களாக நாம் சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். அவற்றை எல்லாம் போக்கிக் கொள்ளாமல் நம்மால் ஜொலிக்கும் ஆபரணமாக மாற முடியாது.

இன்று ஒரு நிலைமையில் இருக்கின்றோம் என்றால் இதற்கான அத்தனை முயற்சிகளையும், அத்தனை வேலைகளையும் அறிந்தோ அறியாமலோ நாம் முன்பே செய்திருக்கிறோம் என்று பொருள். காரணமில்லாமல் காரியமில்லை. இதிலிருந்து மாற வேண்டுமென்றால், மேலானதொரு நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்த நிலைமைக்கு நம்மைக் கொண்டு வந்த காரணங்களை முதலில் நீக்க வேண்டும். நாம் விரும்பும் புதிய நிலைமைக்கு ஒவ்வாத விஷயங்கள் நம்மிடம் இருக்குமானால் அவற்றைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

சேர்த்து வைத்திருக்கும் குற்றங்களையும் குறைபாடுகலையும் போக்குவது சுகமான விஷயம் அல்ல. அவை நம்மில் ஒரு பகுதியாகவே மாறி விட்டிருக்கும் போது நம்மை வருத்தாமல் அவற்றைக் களைய முடியாது. நம்மில் பெரும்பாலானோரிடம் உள்ள மிகப் பெரிய அறியாமை இந்த யதார்த்த உண்மையை உணராமல் இருப்பதே.

நாம் நம்மை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ளாமல் நம்மை உயர்ந்த நிலைக்கு இறைவன் மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சிறிது சிறிதாக, காலம் காலமாக, ஜென்ம ஜென்மங்களாக சேர்த்து வைத்துக் கொண்டவற்றை நாம் நோகாமல் இறைவன் ஒரே கணத்தில் நீக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். உயர்ந்த மாறுதலுக்கு ஆசைப்படும் நாம் அதே நேரத்தில் அந்த மாறுதலுக்குத் தேவையான சஞ்சரிப்பில் சலித்துக் கொள்கிறோம். இதில் நம் ஆசையும், நம் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே அல்லவா இருக்கிறது?

ஆனால் இறைவனாகிய கொல்லன் அனைத்தும் அறிந்தவன். நம் வேண்டுகோளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு நன்றாகத் தெரியும். சுட்டெரிக்காமல் எந்த உலோகத்தையும் ஆபரணமாக்க முடியாது என்பதை நன்கு அறிவான். அவன் சுட்டெரிப்பது நம்மை தண்டிப்பதற்காக அல்ல. அவன் சுட்டெரிப்பது நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே.

மேலும் இறைவன் எப்பொழுதும் கவனக் குறைவாக இருப்பதில்லை. நாம் தூய்மையாகி இறைவனை நம்மில் பிரதிபலிக்கும் வரை சுட்டெரிப்பவன் தொடர்ந்து அதற்கு மேலும் சுட்டெரித்து நாம் அழிந்து போக எக்காலத்திலும் அனுமதிப்பதில்லை. பக்குவப்பட்டு தூய்மையாகி அவனை நம்மில் நாம் பிரதிபலிக்க ஆரம்பித்தவுடன் நாம் விரும்பிய மாற்றத்திற்கு ஏற்றபடி நம்மை உருவகப்படுத்த ஆரம்பித்து விடுகிறான். எனவே இந்த சோதனைகளிலும், கஷ்டங்களிலும் நாம் அழிந்து போய் விடுவோமோ என்ற அச்சம் நமக்குத் தேவையே இல்லை.

இதையே அல்லவா திருவள்ளுவரும் ஒரு குறளில் அழகாகச் சொல்கிறார்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
(நெருப்பிலே இட்டுச் சுடச் சுடத் தங்கம் ஒளி விடுவது போல துன்பம் வருத்த வருத்த தவம் செய்பவரின் மெய்யறிவு மிகும்)

எனவே வாழ்க்கையின் வெப்பம் தாளாமல் வருத்தப்படும் போதெல்லாம் இந்த உவமையை நீங்கள் நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கணமும் நம் வாழ்க்கை இறைவன் கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வெப்பம் நம் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்ல, ஒரு அழகான ஆபரணமாக்குவதற்காகத் தான். இது புரியும் போது வெப்பத்தில் சுருண்டு விட மாட்டோம். நாம் ஆபரணமாகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிதலுடனும், நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக் கொள்வோம்.

-       -   என்.கணேசன்


Thursday, July 7, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 106


ராச்சி சென்று சேர்வதற்குள் மாலுமிகளும், சிறுவர்கள் இருவரும் மிக நெருக்கமாகி விட்டிருந்தனர். பொதுவாக சரக்குக் கப்பலில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் அவர்கள் வேலை சுவாரசியமானதல்ல. மந்தகதியில் நகரும் காலத்தை ஓட்டுவது இன்னொரு துறைமுகத்தைச் சேரும் வரை அவர்களுக்கு கஷ்டமாகவே இருக்கும். ஆனால் இந்த சிறுவர்களின் வரவு அவர்களுக்கு காலத்தை மறக்க வைத்தது.


கப்பலில் இரண்டு சிறுவர்கள் கடத்தப்படுவார்கள், அந்த ரகசியத்தை எங்கேயும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கசிய விடக்கூடாது, கசிய விட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அடைத்து வைக்கப்படும் அந்தச் சிறுவர்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விட வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் சிறுவர்கள் எந்தப் பிரச்னையும் செய்யாமல் இருந்த போது, கப்பலில் இருந்து அவர்கள் தப்பிக்கவும் முடியாது என்ற நிலை இருந்த போது அவர்களை அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை என்றே தேவ் வெளியே விட்டான். அப்படி வெளியே வந்து விளையாடிய அந்தச் சிறுவர்களின் உற்சாகம் அந்த மாலுமிகளையும் தொற்றிக் கொண்டது.


தொடர்ந்த இரண்டு நாட்களும் என்னென்னவோ விளையாட்டுகளைக் கண்டுபிடித்து விளையாடினார்கள். தூரத்தில் வேறு ஏதாவது படகோ, கப்பலோ வரும் போது மட்டும் தேவ் சிறுவர்கள் கப்பலின் மேல் தளத்தில் இல்லாமல் பார்த்துக் கொண்டான். தூரத்தில் இருந்து பைனாகுலரில் பார்த்தாலும் சிறுவர்கள் தெரிவதை அவன் விரும்பவில்லை. மற்றபடி சுதந்திரமாகச் சிறுவர்களை விட்டு, அவர்களைக் கண்காணிப்பதில் மட்டும் அலட்சியம் செய்யாமல் இருந்தான்.


செஸ் விளையாட்டு மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது விளையாடப்பட்டது. தேவ் அதில் ஆர்வம் கொண்டவன் என்பதால் பெரும்பாலும் ஆட்டத்தைக் கவனித்தான். மைத்ரேயன் ஒரு ஆட்டத்தை தான் வென்றால் மறு ஆட்டத்தை அந்த மாலுமியை ஜெயிக்க வைத்தான். அதற்காக வேண்டும் என்றே சில தவறுகள் செய்கிறான் என்பதை தேவால் கண்டுபிடிக்க முடிந்தது. வெல்வது கூட கௌதமுக்காக, அவனுடைய உற்சாகத்துக்காக அவன் செய்வது போல இருந்தது. அதனால் ஒரு முறை வெற்றி ஆர்ப்பாட்டம் கௌதமுடையதாகவும், இன்னொரு முறை மாலுமிகளுடையதாகவும் தினம் இருந்தது. இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்ளாத மைத்ரேயன் முகத்தில் அந்த நேரங்களில் புன்னகை மட்டுமே பூத்திருக்கும்...


இரவு நேரமும் அதிகாலை நேரமும் மைத்ரேயனின் தியானம் தவறாமல் நடந்தது. ஒவ்வொரு நளையும் தியானத்தில் ஆரம்பித்து தியானத்தில் முடிப்பது அவன் தவறாத வழக்கமாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்கப் போகும் முன் கௌதம் வீட்டு நினைவு வந்து வாட்டத்துடன் இருப்பான். கப்பலில் கடைசி நாள் இரவு “என் அம்மா நான் அங்கே இல்லை என்று அழுது கொண்டிருப்பார்களா?” என்று கௌதம் மைத்ரேயனிடம் கேட்டான்.

மைத்ரேயன் சொன்னான். “வருத்தப்படுவார்கள். ஆனால் உன் அப்பா எப்படியாவது உன்னைக் காப்பாற்றி விடுவார் என்பது தெரியும். அதனால் சிறிது தைரியமாகவும் இருப்பார்கள்

கௌதம் சிறிது நேரம் கழித்துக் கேட்டான். “என் அப்பா காப்பாற்ற எப்போது வருவார்

“அவர் எப்போது வருவதானாலும் வரட்டும். அது வரை நாம் ஜாலியாக இருப்போம். நம்மைக் கடத்தி இருக்கவில்லை என்றால் நம்மால் இப்படி கப்பலில் எல்லாம் வந்து ஆடி இருக்க முடியுமா? எல்லாவற்றிலும் ஒரு நல்லது இருக்கும். அந்த நல்லதை நாம் முழுவதுமாய் பயன்படுத்திக் கொள்வோம்...

“சரிஎன்று சொன்ன கௌதமுக்கு மைத்ரேயன் சொல்வது  புத்திசாலித்தனமாகவே பட்டது. பின் சீக்கிரமே உறங்கி விட்டான்.

சிறிது நேரம் கழித்து மைத்ரேயன் தேவிடம் கேட்டான். “நாம் கப்பலின் மேல் தளத்திற்குப் போய் சிறிது நேரம் இருப்போமா? இரவு நேரத்தில் சமுத்திரம் பிரத்தியேக அழகு...

தேவ் தயங்கினான். தனியாக இந்த இரவில் அவனை கப்பலின் மேல் தளத்திற்கு அழைத்துப் போவது உசிதம் தானா என்று எண்ணினான். மைத்ரேயன் சொன்னான். “நான் கண்டிப்பாக தப்பிக்கவோ கடலில் குதித்து விடவோ மாட்டேன்....

தேவ் அவனுடன் கடலின் மேல் தளத்திற்குப் போனான். இரவு நேர சமுத்திரம் அன்று நிலவொளியில் தனி அழகுடன் இருந்தது. காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள். அவனைத் தூரத்தில் தனியாக விட தேவ் விரும்பவில்லை. மைத்ரேயன் அமைதியாக அந்த சமுத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். சிறிது சிறிதாக பேரமைதியை தேவின் மனம் உணர ஆரம்பித்தது.  மனம் மிக லேசானது. பார்க்கும் எல்லாமே தனி அழகுடன் மின்னியது. ஆகாய நட்சத்திரங்கள், நிலா, சமுத்திரம், தூரத்தில் தெரிந்த ஒரு கப்பலின் விளக்குகள்... சின்னச் சின்ன சத்தங்களும் சங்கீதமாயின.... காலம் மறந்து தேவ் நிறைய நேரம் அமர்ந்திருந்தான்.

“போகலாமாஎன்று மைத்ரேயன் கேட்ட போது தான் நிகழ்காலத்துக்கு தேவ் வந்தான். இருவரும் அறையை நோக்கி நடந்தனர். தேவ் தன் வாழ்நாளில் இப்படியொரு அற்புதமான அனுபவத்தை அனுபவித்திருந்ததில்லை. கோடிக்கணக்கில் சம்பாதிப்பவன் என்பதால் செலவையும் அவன் தாராளமாகவே செய்பவன். உலகத்தில் பல இடங்களுக்குப் போயிருக்கிறான். பணத்தை நீராக இறைத்து பல வித களிப்புகளைப் பெற்றிருக்கிறான். ஆனால் இது போன்றதொரு அமைதியையும், அழகையும் அவன் எங்குமே உணர்ந்து அனுபவித்தது இல்லை. 
    
நிறைந்த மனதுடன் மைத்ரேயனிடம் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “நன்றிஎன்றான்.

மைத்ரேயன் புன்னகைத்தான்.


று நாள் மதியம் கப்பல் கராச்சி துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் இருந்து சிறுவர்கள் இறங்கிய போது மாலுமிகள் பிரியாவிடை அளித்தார்கள். செஸ் ஆடிய மாலுமி மைத்ரேயனிடம் சொன்னான். “நீ மிக நன்றாய் செஸ் விளையாடுகிறாய். இந்த வயதிலேயே இப்படி ஆடுகிறவன் இன்னும் பயிற்சி செய்தால் கண்டிப்பாக சர்வதேச போட்டிகளில் கூடக் கலந்து கொள்ளலாம்.

சொன்ன பிறகு தான் இந்தச் சிறுவன் கடத்தப்பட்டவன், இவனை அவர்கள் என்ன செய்வார்கள், இவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியாதே, இவனிடம் போய் இதைச் சொல்கிறோமே என்று அவனுக்கு உறைத்தது.... மைத்ரேயன் அவனைப் பார்த்து புன்னகைத்தான். இறங்கும் சிறுவர்களைப் பார்த்து மாலுமிகள் கையசைத்தார்கள். சிறுவர்களும் கையசைத்துக் கொண்டே போனார்கள். கடைசியில் கையசைப்பில் அந்தக் கேப்டனும் கலந்து கொண்டது தேவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் காட்சியை இரு மனிதர்கள் தனித்தனியாக ரகசியமாய் புகைப்படம் எடுத்தார்கள். 

கராச்சி துறைமுகத்தில் ஒரு அதிகாரி தேவை வரவேற்றார். சிறுவர்கள் மயக்க மருந்து தரப்பட்டு மயக்கமாய் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தள்ளுவண்டி தயாராக இருந்தது. சிறுவர்கள் நடந்து வருவதைப் பார்த்து கண்களை விரித்த அவர் வெளியே தயாராக நிற்க வைக்கப்பட்டிருந்த கார் வரை அழைத்துச் சென்றார். தேவ் சிறுவர்களுடன் அமர்ந்து கொள்ள கார் அங்கிருந்து நேராக கராச்சி விமான நிலையத்திற்குச் சென்றது. கராச்சியில் தயாராக இருந்த ஒரு தனி விமானம் அவர்களை லாஸாவுக்கு அழைத்துச் சென்றது. அவர்களுக்காக லாஸா விமான நிலையத்தில் லீ க்யாங் காத்திருந்தான்.


கராச்சி துறைமுகத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களில் ஒன்று இந்திய உளவுத்துறைக்கு அனுப்பப்பட்டது. இன்னொன்று மாராவுக்கு அனுப்பப்பட்டது.    
  

க்‌ஷய் கையில் அந்தப் புகைப்படம் கிடைத்த போது அவனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. படத்தைப் பெரிதாக்கி மிக உன்னிப்பாகப் பார்த்தான். அவன் மகனும், மைத்ரேயனும் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்கள். மைத்ரேயன் முகத்தில் வழக்கமான அமைதி, கௌதம் முகத்தில் மகிழ்ச்சி, கப்பல் மேல்தளத்தில் கையசைத்துக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஆத்மார்த்த அன்பு, நிறைந்திருந்தது... அவர்களுடைய குடும்பக்குழந்தைகளை வழியனுப்புவது போல் இருந்தது.
அவனிடம் அந்தப் புகைப்படத்தைத் தந்த உளவுத்துறை அதிகாரி சொன்னார். “இந்தப் படத்தைப் பார்த்தால் பையன்கள் கடத்தப்பட்ட மாதிரியே இல்லை. நாம் தான் அவர்களைச் சுற்றுலாப் பயணத்திற்கு அனுப்பி வைத்த மாதிரியும் அவர்கள் தங்கள் பயணத்தை சந்தோஷமாக அனுபவிக்கிற மாதிரியும் இருக்கிறது

மகன் அழாமல் சந்தோஷமாய் தான் இருக்கிறான் என்பதை அறிந்த அக்‌ஷய் கண்கள் நிம்மதியுடன் ஈரமாயின. அவன் ஆசானிடம் சொன்னான். “காரணம் மைத்ரேயனாகத் தான் இருக்க வேண்டும்

ஆசான் அந்தப் படத்தில் மைத்ரேயனின் முகத்தில் தெரிந்த நிறைந்த அமைதியைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த அமைதியைப் பார்த்து திருப்தி அடைய முடியவில்லை. அந்த அமைதிக்கு ஆபத்தில்லை என்று அர்த்தமல்ல என்பதை அவர் அறிவார்......

அந்த அதிகாரி வந்திருந்த அடுத்த தகவலைச் சொன்னார் கராச்சியில் இருந்து லாஸா போகிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. லீ க்யாங் முன்பே அங்கு போய் விட்டான் என்று பீஜிங்கில் இருந்தும் நமக்குத் தகவல் வந்திருக்கிறது....

ஆசான் முகத்தில் கவலை படர்ந்தது.

(தொடரும்)
என்.கணேசன்
 
(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Tuesday, July 5, 2016

பக்தன் என்றும் அழிவதில்லை!


கீதை காட்டும் பாதை 41


லகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் கர்மத்தில் இருந்து தப்பிக்க முடியாது. மரணம் வரை மனிதன் எந்த வகையிலாவது செயல் புரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கிறான். மரணம் மாத்திரமே கர்மம் என்கிற சங்கிலியில் இருந்து அவனை விடுவிக்கிறது. சாங்கிய யோகத்திலும், கர்ம யோகத்திலும் கர்மம் பற்றி நிறையவே அலசி இருக்கிறோம் என்றாலும் மீண்டும் சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோம்.

செயல் புரிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள மனிதனுக்குப் பிரச்னையே அதன் விளைவுகள் தான். நல்ல விளைவு வந்தால் என்னைப் போல் புத்திசாலி யார் என்று இறுமாந்து திரிகிறான். மோசமான விளைவு வந்தால் ஏன் விதி என் விஷயத்தில் சதி செய்கிறது புலம்பி முடங்குகிறான். விளைவுகளால் சில செயல்களைச் செய்ய வேண்டி வருகிறது. அதிலும் நல்லதும் கெட்டதுமான விளைவுகள். சந்தோஷம் துக்கம் இரண்டும் மாறி மாறி அனுபவிக்க வேண்டிய சூழல். செயல்-விளைவு-செயல்கள்-விளைவுகள் என்கிற சங்கிலித்தொடரில் அவன் இன்ப துன்ப அலைகளில் சிக்கி அவன் சந்திக்க வேண்டி இருப்பது தான் எத்தனை? ஒரு கட்டத்தில் அவனுக்கு போதுமடா சாமிஎன்று தோன்றுகிறது. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று நினைக்கிற அளவுக்கு எல்லாப் பக்கங்களிலும் ஏகப்பட்ட பிரச்னைகள். இது தான் சராசரி மனிதனின் இயல்பான அனுபவம். இதிலிருந்து எப்படி தான் தப்பிப்பது?

ஸ்ரீகிருஷ்ணர் பதில் சொல்கிறார்.    

குந்தி மகனே! எதையெல்லாம் நீ செய்கிறாயோ, எதையெல்லாம் உண்கிறாயோ, எதையெல்லாம் படைக்கிறாயோ, எதையெல்லாம் தருகிறாயோ, எந்த தவங்களெல்லாம் செய்கிறாயோ அதையெல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்வாயாக!

இவ்விதமாக நீ கர்ம பந்தங்களில் இருந்தும், அதன் நல்ல தீய விளைவுகளிலிருந்தும் விடுபடுவாய். துறவின் இந்தக் கொள்கையின் மூலம் நீ முக்தி பெற்று என்னிடமே வருவாய்.

உனக்காக ஒன்றைச் செய்யும் போது தான் அதன் லாபநஷ்டங்கள் உன்னுடையது. உனக்காக ஒன்றைச் செய்யும் போது தான் அதனால் வரும் பெருமையும், அவமானமும் உன்னைச் சார்ந்த்து. செய்வது அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடு. அவன் பிரதிநிதியாக நீ எல்லாவற்றையும் செய். அவன் கொடுத்திருக்கும் கதாபாத்திரம் நீ. அவன் கருவியாக நீ செயல்படு. இந்த பாவனையில் செய்யும் போது விளைவுகள் உன்னுடையதல்ல. அந்த பரமாத்மனைச் சேர்ந்தவை. என்ன விளைவு வந்தாலும் அது அவன் வரவழைத்துக் கொண்டது. உனக்கு அதில் எதுவுமில்லை. இதுவே துறவின் அம்சம். இதுவே துறவின் நிம்மதியும் கூட. செயல்கள் புரிந்தாலும் விளைவுகளால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்க இது ஒன்றே மார்க்கம்.

மேலும் இந்த பாவனையுடன் செயல்புரியும் போது செயலின் தன்மையே மாறிவிடும். விளைவுகளால் உனக்கு பாதிப்பில்லை என்பதால் மன அமைதி மாறாமல் செய்யும் போது, இது இறைவனின் செயல் என்ற மேம்பட்ட உணர்வில் ஈடுபாட்டுடன் செய்யும் போது செயல் சிறப்பாகவே இருக்கும். பெரும்பாலும் விளைவுகளும் சிறப்பாகவே இருக்கும். வாழ்நாள் எல்லாம் இறைவனின் வேலைகளையே செய்த மனிதன் இறுதியில் இறைவன் அடிகளையே சேர்வான். இந்த உத்திரவாதத்தைத் தான் பகவான் இங்கு தருகிறார்.   
அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

சகல உயிர்களிடத்தும் நான் சமமாகத் தான் இருக்கிறேன். எனக்குப் பகைவனோ, அன்பனோ இல்லை. ஆனால் பக்தியுடன் என்னை எவர்கள் வழிபடுகிறார்களோ என்னிடம் அவர்கள் இருப்பார்கள். அவர்களிடமும் நான் இருப்பேன்.

ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும் அவன் பக்தியில் பிறழாமல் ஈடுபட்டிருந்தால் அவனை சாதுவாகவே  கருத வேண்டும். ஏனெனில் அவன் நல்ல முடிவை எட்டியிருக்கிறான் அல்லவா?

அவன் வெகு விரைவில் தர்மாத்மாவாகி நித்தியமான அமைதியை அடைகின்றான். குந்தியின் மகனே என் பக்தன் என்றும் அழிவதில்லை என்பதைத் தைரியமாக அறிவிப்பாயாக!

இறைவன் பாரபட்சம் உள்ளவனாக இருக்க முடியாது. அப்படி இருப்பவன் இறைவனாக இருக்கவும் முடியாது. ஏனென்றால் விருப்பு வெறுப்பைக் கடந்தவன் இறைவன். அதைக்கடந்து இயங்குங்கள் என்று அறிவுறுத்துபவன் அவன். அப்படி இருக்கையில் இறைவனே விருப்பு வெறுப்பு கொண்டிருந்தால் அது போலித்தனத்தின் உச்சமாகவே இருக்க முடியும். எனவே தான் சகல உயிர்களிடத்தும் தான் சமமாக இருப்பதாக பகவான் சொல்கிறார். ஆனால் அடுத்த வரிகள் சிலருக்கு முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் பக்தியுடன் என்னை எவர்கள் வழிபடுகிறார்களோ என்னிடம் அவர்கள் இருப்பார்கள். அவர்களிடமும் நான் இருப்பேன்.

இதற்கு சின்மயானந்தர் அருமையான உதாரணத்துடன் விளக்கம் சொல்கிறார். சூரியன் எல்லோருக்குமே சமமாகவே ஒளிர்கிறான். ஆனால் கல்லில் அவன் பிரதிபலிப்பதில்லை. கண்ணாடியிலோ தத்ரூபமாக பிரதிபலிக்கிறான். சூரியனுக்கு கல், கண்ணாடி என்கிற பாரபட்சம் இல்லை. ஆனால் உள்வாங்கி பிரதிபலிக்கிற இயல்பு கண்ணாடிக்கே இருக்கிறது, கல்லுக்கு இல்லை. எவ்வளவு அழகான உதாரணம் பாருங்கள்!

பக்தன் இறைவனிடம் மானசீகமாக இணைந்து இருப்பதால் இறைவன் பக்தனிடத்தும், பக்தன் இறைவனிடத்தும் இருப்பது இயற்கையே அல்லவா? இப்போது பகவான் சொன்னதில் முரண்பாடு இல்லையே.

ஆனால் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது மறுபடி அறிவார்ந்த மனிதர்கள் மனதில் ‘இது சரியல்லவேஎன்கிற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும். மோசமான செயலைச் செய்திருந்தாலும் பகதியில் பிறழாதவனாக இருந்தால் அவனை சாதுவாகவே கருத வேண்டும் என்றால் பக்தி கொண்டிருப்பவன் மோசமான செயலைச் செய்யலாமா? அது மட்டும் தவறாகாதா? மோசமான செயலை எவன் செய்தாலும் சாது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

இன்றைய உலகில் எத்தனையோ பேர் பக்தர்கள் தோற்றத்திலேயே இருந்து கொண்டு கொள்ளை கூட அடிக்கிறார்கள். அவர்கள் பகவானுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டு இருப்பது போல, கொள்ளையடிப்பதில் ஒரு பகுதியை இறைவனுக்கு காணிக்கை செலுத்தி விடுகிறார்கள். கீதை சொல்வது போல் பார்த்தால் இவர்களும் சாதுக்கள் தானா? அல்ல என்பது தான் உறுதியான பதில்.

இங்கே பிறழாமல் என்கிற சொல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வார்த்தை தான் தவறான யூகங்களை களைகிறது. பக்தியில் பிறழாமல் இருப்பவனால் தெரிந்து மோசமான செயல்களைச் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை வேண்டுபவனால் அடுத்தவனைக் கொள்ளை அடிக்கவோ, ஈனச்செயல்களில் ஈடுபடவோ முடியாது. இறைவனை வேண்டுபவனுக்கு அதற்குக் கீழானவற்றுக்கு இறைவனை விட அதிக முக்கியத்துவம் தர முடியாது. அதனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர் குறிப்பிடுவது அறியாமலும், சந்தர்ப்பவசத்தாலும் செய்யப்படும் மோசமான செயல்களாகத் தான் இருக்க முடியும். இறை எண்ணம் நிறைந்த மனதில், செய்த தவறுக்குப் பரிகாரம் செய்யும் வழியும் புலப்படும். கோணலை நேர் செய்து கொண்டு மறுபடி திருந்திய வாழ்க்கைக்கு பகதனால் திரும்ப முடியும். இறைவனிடம் பிறழாத பக்தி என்பதே பக்தன் எட்டியிருந்த நல்ல முடிவு என்பதால் தற்காலிகத் தவறுகள் திருத்தப்பட்டு நல்வழிக்கு சீக்கிரமே பக்தன் திரும்புவான்.

திருந்திய உள்ளத்தில் அமைதி மறுபடி குடிகொள்ளும். தற்காலிகத் தவறுகளால் பக்தன் நிரந்தரமாக தண்டிக்கப்படுவதில்லை. மாறாக தர்ம வழியில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் அவன் மனதின் அமைதி நிரந்தரமாக இருக்கும். எனவே தூய்மையான, இடைவிடாத பக்தியே பக்தனை அவ்வப்போது நல்வழிப்படுத்துவதால் இறைவனின் பக்தனுக்கு என்றும் அழிவேயில்லை என்பது கீதை நாயகனின் பிரகடனமாக இருக்கிறது.

பாதை நீளும்.....

என்.கணேசன்