என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 16, 2025

யோகி 107

 

ஷ்ரவனுக்குத் தன்னைச் சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவன் புன்னகையுடன் சொன்னான். ”முதல் நாள் நீங்கள் கேட்டது, “உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?” சரி தானா?”

 

முக்தானந்தா அவனை சுவாரசியமாகப் பார்த்தது போலிருந்தது. “சரி தான்என்றார்.

 

என்ன கேள்விகள் இவை? உண்மையில் நீங்கள் யாரோ, அது தான் நானும். இருவரும் ஆத்மாக்களே! நீங்கள் எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதே நோக்கத்திற்காக நானும் வந்திருக்கிறேன். நம் இருவர் நோக்கமும் மெய்ஞானம் தான்.”

 

முக்தானந்தா கலகலவென்று சிரித்து விட்டார். “நீ சாமர்த்தியக்காரன். புத்திசாலி. அதனால் தான் நான் சந்தேகப்பட்டேன்.”

 

என்ன சந்தேகம்?”

 

இத்தனை புத்திசாலியாக இருப்பவன் எப்படி பிரம்மானந்தாவின் பரம பக்தனாக முடியும்?”

 

அதிலென்ன தவறு?”

 

நீ சில நாட்களுக்கு முன் பிரம்மானந்தாவின் பேச்சைக் கேட்டாயல்லவா? சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருள் அந்த ஆளுக்குக் கிடைத்த பிறகு அவர் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் அவரைப் பார்த்தவர்களுடைய கண்கள் கூசுமாம். அவர்கள் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொள்வார்களாம். அந்த அளவு அவருடைய யோகசக்தி அவரை ஒளிமயமாக்கி இருந்ததாம். அது அவருக்கே தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் அவர் கடவுளை வேண்டி அவரது யோகசக்தியின் வீச்சை குறைத்துக் கொண்டாராம். அவர் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால் அவர் எதிரே யாராலும் உட்கார்ந்திருக்க முடியாதாம். அறிவுள்ளவன் எவனாவது அதை நம்புவானா?”

 

ஷ்ரவன் சிரிக்காமல் முகத்தை இயல்பாய் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி நடந்தும் இருக்கலாம் அல்லவா?”

 

அப்படி நடந்திருந்தால் முப்பது வருஷத்துக்கு முன்னால் கண்கூசியவர்களே இந்த ஆளைப் பற்றிச் சொல்லியிருப்பார்களே. இத்தனை வருஷங்கள் கழித்து இந்த ஆளே அதைச் சொல்ல வேண்டியதில்லையே? ரமண மகரிஷியிடம் யோகசக்தி இருந்தது. பலர் அதை உணர்ந்தார்கள். அவர் இருந்த இடம் தேடி எங்கிருந்தெல்லாமோ வந்தார்கள். இங்கிலாந்தில் இருந்து எல்லாம் வந்து, அவர் பக்கத்தில் இருந்து, அந்தச் சக்தியை அனுபவித்துப் போய் எழுதினார்கள், பேசினார்கள். அவராக ஒரு வார்த்தை அதைப் பற்றிப் பேசவில்லை. அவர் இருக்கும் இடத்தை விட்டு எங்கேயும் போகவில்லை. போக்குவரத்தே மிகவும் கஷ்டமாக இருந்த காலம் அது. அப்போதே வாய் வார்த்தையாலேயே கடல் கடந்தும் அவருடைய யோக சக்தி பற்றிய புகழ் பரவி இருந்தது.  அவர் எங்கே! நூறு வருஷம் கழித்து இந்த விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்தும் சுயதம்பட்டம் அடித்தே  புகழ் பரப்ப வேண்டிய அவலநிலையில் இருக்கும் இவர் எங்கே! அதுவும் வரவரப் புதுப்புது கதைகளாய் அவர் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இப்படிப்பட்ட ஆளின் நிழலில் மெய்ஞானம் கிடைக்கும் என்று வந்திருப்பதாய், புத்திசாலியாகத் தெரிகிற நீ சொல்கிறாய். அதனால் தான் சந்தேகமாயிருக்கிறது.”

 

ஷ்ரவன் சொன்னான். “சுவாமிஜி. அதை ஐஐடி மாணவர்கள் முன் யோகிஜி பேசியிருக்கிறார். அவர் தன் பெருமையைச் சொல்வதற்காக அதை அங்கே சொல்லவில்லை. யோக சக்தியின் பெருமையைச் சொல்வதற்காகத் தன் சொந்த அனுபவத்தையே சொல்லி அந்த மாணவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”

 

இந்த ஆள் உண்மையான யோகியாய் இருந்தால் எதையும் சொல்ல வேண்டியதே இல்லையே. ரமண மகரிஷி அருகே போனவர்கள் உணர்ந்தது போல, இவர் அங்கு போனவுடனே வார்த்தைகள் இல்லாமலேயே அதை அந்த மாணவர்கள் உணர்ந்திருப்பார்களே.”

 

அவருடைய யோக வீச்சை இறைவனிடம் வேண்டிக் கொண்டு குறைத்திருப்பதாகத் தான் அவரே சொன்னாரே சுவாமிஜி. அப்படி அவர்  குறைத்திருக்காமல் இருந்திருந்தால் நீங்கள் சொன்னபடியே வார்த்தைகள் இல்லாமல் அந்த மாணவர்களை உணர வைத்திருக்கலாம்.”

 

முக்தானந்தா சிரித்தார். “சீக்கிரமாகவே பிரம்மானந்தாவின் பிரதான சீடன் ஆவதற்கு எல்லாத் தகுதிகளும் உனக்கிருக்கிறது. நீ அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறாயா?”

 

இல்லை சுவாமிஜி.”

 

முயற்சி செய்து பார். சுந்தர மகாலிங்கத்தைக் கூட நேராக நீ தரிசித்து விடலாம். ஆனால் அந்த சுந்தர மகாலிங்கத்தின் அருளைப் பெற்ற இவரை நீ அவ்வளவு சீக்கிரம் தரிசித்து விட முடியாது. நீ கடவுளைக் கண்டபடி திட்டலாம், வாயிற்கு வந்த பெயரை வைத்துக் கூப்பிடலாம். கடவுள் கோபப்படவோ, உன்னை விலக்கி வைக்கவோ மாட்டார். ஆனால் இந்த ஆளை நீ திட்ட வேண்டியதில்லை. யோகி என்ற அடைமொழி இல்லாமல் சும்மா பிரம்மானந்தா என்று கூப்பிட்டுப் பார். பின் உன்னால் யோகாலயத்தில் இருக்க முடியாது.”

 

என்ன சுவாமிஜி இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று ஷ்ரவன் முகத்தில் திகைப்பைக் காட்டினான். “நீங்கள் இங்கே நீண்ட காலமாய் துறவியாய் இருக்கிறீர்கள். யோகாலயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே வந்து சேர்ந்தவர் என்று உங்களை சித்தானந்தா சொன்னார். அப்படிப்பட்ட நீங்களே யோகிஜியைக் கடுமையாய் விமர்சிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.”

 

முக்தானந்தா முகத்தில் விரக்தி வெளிப்பட்டது. ”ஆமாம். நான் நெடுநாள் ஏமாளி. கிட்டத்தட்ட நானும், கல்பனானந்தாவும் ஒரே சமயத்தில் யோகாலயத்தில் சேர்ந்தோம். பிரம்மானந்தா பேச்சால் நாங்கள் கவரப்பட்டோம். அவரைத் தினமும் சந்திக்கும் அளவுக்கு நாங்கள் சுமார் இருபது பேர் நெருக்கமாகவே இருந்தோம். அப்போதெல்லாம் அவர் இந்த அளவு கதை விட்டதில்லை. அவர் அடக்கி வாசித்த காலம் அது. அவர் யோகா, தியானம் இரண்டையும் பத்மநாப நம்பூதிரியிடம் கற்றுக் கொண்டதையும், அதைத்தான் சொல்லிக் கொடுப்பதையும் வெளிப்படையாய் ஒத்துக் கொண்ட காலம் அது. அதை மேலும் மெருகேற்றி, கூடுதல் சிறப்புகளைச் சேர்த்து எல்லோருக்கும் கற்றுத்தர வேண்டும் என்று அவர் விரும்பினார். யோகாலயம் வளர்ச்சியடைந்தால் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று அவர் எத்தனையோ நல்ல காரியங்களைச் சொன்னார். அதனால் நாங்கள் பரிபூரணமாய் அவரை நம்பினோம். நானும் வேறுசிலரும் எங்கள் சொத்தை எல்லாம் யோகாலயத்திற்கு எழுதி வைத்து விட்டுத் தான் இங்கே வந்து சேர்ந்தோம். ஒரு மகத்தான இயக்கத்தில் எங்களை ஈடுபடுத்திக் கொண்ட நிறைவு எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. இந்த யோகாலயம் விரிவடைய விரிவடைய ஆன்மீகம் செழிக்கும், கோடிக்கணக்கானவர்கள் பலன் அடைவார்கள் என்ற கனவெல்லாம் எங்களுக்கு இருந்தது.”

 

இப்போது சத்சங்கம் என்று ஒன்று நடக்கிறதே. அது அன்றைக்கும் இங்கே நடந்தது. அப்போது இது மிகச்சிறிய இடம். ஆனால் எங்கள் மனம் பரந்திருந்தது. பிரம்மானந்தாவும், நாங்களும் சரிசமமாக உட்கார்ந்து பேசுவோம். நாங்கள் ஒவ்வொருவரும் படித்த, கேட்ட உயர்வான விஷயங்களைப் பற்றிச் சொல்வோம். புத்தர், ரமண மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், அன்னை, ஆதிசங்கரர், ராமானுஜர், வேதங்கள், உபநிஷத்துக்கள் பற்றி எல்லாம் பேசுவோம், அலசுவோம், விவாதிப்போம். அத்தனை ஞானமும் சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆன்மீகத்தின் ஆழம் சாதாரண மனிதனுக்குத் தெரியாததால் தான் அவன் தாழ்ந்து கிடக்கிறான், மோசமான வாழ்க்கை வாழ்கிறான். அவனுக்கும் அந்த ஞானத்தின் ருசி கிடைத்து விட்டால் பின் அவன் உயர ஆரம்பித்து விடுவான் என்று நம்பினோம். பிரம்மானந்தாவுக்கு யோகா பயிற்சிகள் தெரிந்த அளவுக்கு தத்துவங்களில் ஆழம் போதாது. ஆனாலும் அந்தக் காலத்தில் அவருக்கு அதையெல்லாம் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. வேத உபநிஷத்துக்களில் சொல்லப்படும் யோகியாக மாற வேண்டும் என்ற ஆசை உண்மையிலேயே இருந்தது என்று கூடச்  சொல்லலாம். அவருக்குப் பணமும், புகழும் வந்து சேர ஆரம்பித்த பிறகு ஆள் நேரெதிராக மாறிப்போனார்.”

 

திடீரென்று முக்தானந்தா மௌனமானார். அவர் அந்தப் பழைய காலத்தில் சஞ்சரித்ததை ஷ்ரவன் உணர்ந்தான். இந்த முதியவர் யோகாலயம் ஆரம்பித்த காலத்தில் பிரம்மானந்தாவுடன் சரிசமமாக அமர்ந்து பேசியவர்களில் ஒருவர் என்பதை நம்புவது அவனுக்கே சுலபமாக இல்லை.

 

இந்த யோகாலயமும் மாறிவிட்டது. இப்போது இந்த யோகாலயம் அவர் நினைத்தபடியும் இல்லை. நாங்கள் நினைத்தபடியும் இல்லை. பாண்டியன் நினைத்தபடி நடக்கிறது. இதில் என் பங்கும் இருக்கிறது. யோகாலயத்தை  நிர்வாகம் செய்ய ஒரு ஆள் வேண்டும் என்று பிரம்மானந்தா சொன்ன போது பாண்டியனைக் கூட்டிக் கொண்டு வந்தது நான் தான். அவன் எங்கள் ஊர்ப் பையன்….” என்று தொடர்ந்து முக்தானந்தா சொன்ன போது ஷ்ரவன் கண்கள் விரிய சுவாரசியத்துடன் அவரைப் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, June 12, 2025

சாணக்கியன் 165

 

னநந்தன் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இறுகிய முகத்துடன் சாணக்கியரை வெறித்துப் பார்த்தான்.

 

சாணக்கியர் அவனுக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். தனநந்தன் வறண்ட குரலில் சொன்னான். “நீ வென்று விட்டாய் சாணக்கின் மகனே. இப்போது மகிழ்ச்சியல்லவா?”

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “நீர்க்குமிழி வாழ்க்கையில் வெற்றியென்ன தோல்வி என்ன தனநந்தா. யாரேயானாலும் ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டையும் மாறி மாறியல்லவா சந்திக்க வேண்டியிருக்கிறது. வென்றவனானாலும், தோற்றவன் ஆனாலும்  எல்லோருடைய முடிவும் மரணமாகவே அல்லவா இருக்கிறது. அப்படியிருக்கையில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது?”

 

தனநந்தன் ஏளனமாகச் சிரித்தான். “மிக அழகாகத் தத்துவம் பேசுகின்றாய். ஆனால் உன் செயல்களோ சூழ்ச்சியும் திருட்டுத்தனமுமாக அல்லவா இருக்கின்றன.”

 

ஒவ்வொருவருடைய இயல்பைப் பொருத்தபடியே அவரவரிடம் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது தனநந்தா. மகான்களிடம் நடந்து கொள்வது போல உன்னிடம் நடந்து கொள்ள முடியுமா?”

 

அடக்கமாக இருப்பவர் போல் தத்துவத்தில் பேச்சை ஆரம்பித்த சாணக்கியரின் இந்த  வார்த்தைகள் ஏளனமாக இருப்பதை உணர்ந்த  தனநந்தன் சாணக்கின் மகன் கேலி பேசும் நிலைக்கு அவன் வந்து விட்டதில் மனம் புழுங்கினான்.  ”உன் தந்தை பேச்சில் மட்டும் கெட்டிக்காரனாக இருந்தான். நீ பேச்சிலும் செயலிலும் கெட்டிக்காரனாக இருக்கிறாய்.”

 

சாணக்கியர் தந்தையின் நினைவுகளில் அலைக்கழிக்கப்பட்டபடி சொன்னார். “பேச்சில் மட்டும் கெட்டிக்காரராக இருந்த என் தந்தை உன்னால் சிறைப்பிடிக்கப்பட்டு பின் என்ன ஆனார், எப்போது இறந்தார், இறந்தபின் எரிக்கப்பட்டாரா, புதைக்கப்பட்டாரா என்று இந்த நாள் வரை தெரியாமல் நான் இருக்கிறேன் தனநந்தா.. என் தந்தை சிறைப்பட்ட பின்  எனக்கு பிக்ஷையும் கிடைக்காமல், என் தாயும் இறந்து, நான் பட்டினியோடு இதே பாடலிபுத்திர வீதிகளில் வலம் வந்திருக்கிறேன் தனநந்தா. கல்வியும், பேச்சும், நீதி நேர்மையும் மட்டுமிருந்து ஒருவன் நல்லபடியாக பிழைத்து விட முடியாது என்ற பாடம் கிடைத்த பின் சாணக்கின் மகனுக்கு மற்றவற்றிலும் கெட்டிக்காரனாகும் கட்டாயம் அமைந்து விட்டது.”

 

தனநந்தன் விரக்தியுடன் சொன்னான். “கெட்டிக்காரனாகி எல்லாக் கணக்கையும் சரிபார்த்து பழி தீர்த்துக் கொண்டாய் வாழ்த்துக்கள்.”

 

சாணக்கியன் சொன்னார். “எல்லாக் கணக்குகளையும் சரிபார்க்கவும், தீர்க்கவும் முடிந்த சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு தனநந்தா. அதனால் அந்த முயற்சியில் நான் இறங்கவில்லை. சிலவற்றை உன் வழியில் பழி தீர்க்கவும் நான் விரும்பவில்லை. என் தந்தையின் பிணத்தைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. அவருக்கான ஈமச்சடங்குகள் செய்யும் பாக்கியமும் எனக்கு நீ தரவில்லை. ஆனால் அதே தீர்ப்பை உனக்கும் தர நான் விரும்பவில்லை. உன் பிள்ளைகளின் ஈமச்சடங்குகளைச் செய்ய உன்னை அனுமதிக்கிறேன். அதைச் செய்ய உன் குலகுருவை அழைத்திருக்கிறேன். அவை எதிலும் பங்குபெற உன் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. ஒரு தந்தையாக அந்தக் கடமையை முடி. பிறகு உன்னைச் சந்திக்கிறேன்.”  

 

சாணக்கியர் எழுந்து சென்று விட்டார்.

 

சின்ஹரனின்  ஈமச்சடங்குகளை சந்திரகுப்தனே செய்தான். அவனுக்கு ஒரு சகோதரனாக, போர்ப்பயிற்சிகளில் ஆசிரியனாக, கடந்த சில போர்களில் தோளோடு தோள் கொடுத்து நண்பனாக உடனிருந்தவன் சின்ஹரன்.  அதனால் அந்தச் சடங்குகளை மனப்பூர்வமாக சிரத்தையுடன் அவன் செய்யும் போது சாணக்கியரும் அவனுடன் இருந்தார். அந்தச் சடங்குகளை முடித்து விட்டு அவர்கள் கங்கைக்கரையிலிருந்து திரும்பிய போது ஒரு விரன் வேகமாக வந்து அவர்களை வணங்கி விட்டுச் சொன்னான். “ஹிமவாதகூட அரசர் தங்களைக் காண வேண்டும் என்று அவசரப்படுகிறார் ஆச்சாரியரே. தாங்கள் சிறிது நேரத்தில் வந்து விடுவீர்கள் என்று சொன்னாலும் அவர் கேட்காமல் உங்களை உடனே காண வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்கிறார்.”

 

ஆச்சாரியர் சந்திரகுப்தனை அர்த்தமுள்ள பார்வை பார்த்து விட்டுச் சொன்னார். “இதோ வருகிறோம் என்று சொல் வீரனே

 

ர்வதராஜன் கடும் அதிருப்தியில் இருந்தான். எதுவும் அவன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பதே அவன் அதிருப்தியின் முக்கிய காரணமாக இருந்தது. அவன் ஆரம்பத்தில் தன் சாமர்த்தியத்தால் சாணக்கியரை மடக்கி விட்டதாக எண்ணியிருந்தான். ஆனால் போகப் போக அவர் சாமர்த்தியத்திற்கு அவன் இசைந்து போய்க் கொண்டிருப்பதாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது. மகதத்தை அவர்கள் வென்று விட்ட போதும் அந்த வெற்றியை அவனால் உளமாரக் கொண்டாட முடியவில்லை. தனநந்தனின் படையினர் தோற்று சரணடைந்து விட்ட பின் எழுந்த முழக்கம் சந்திரகுப்தனின் வெற்றியைச் சித்தரித்த முழக்கமாக இருந்தது. யாருமே பர்வதராஜனை வாழ்த்தி முழக்கம் இடவில்லை. எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் ஹிமவாதகூட வீரர்களே கூட சந்திரகுப்தனை வாழ்த்தியே முழக்கமிட்டார்கள்.

 

காரணம் சந்திரகுப்தனின் வீரமும், திறமையும், ஆளுமையும் என்பதை பர்வதராஜனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த முற்றுகையின் போதும் பின் நடந்த போரின் போதும் அவனும் அவன் மகனும் தீவிரமாகப் பங்கேற்காமல் பக்கவாட்டில் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்கள் போலத் தான் அதிக நேரங்களில் இருந்தார்கள். அது பர்வதராஜனுக்குத் தவறாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் சந்திரகுப்தனும், சாணக்கியருமே தீர்மானித்து செய்வதால் இதையும் அவர்களே செய்யட்டும், தேவைப்பட்டால் மட்டுமே தீவிரமாகப் பங்கேற்பது என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான். தேவை வரவில்லை. அதனால் அவன் தீவிரமாய்ப் பங்கேற்கும் அவசியமும் ஏற்படவில்லை.  ஆனாலும் வாழ்த்து, முழக்கம், பாராட்டு, புகழ் எல்லாம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லை.

 

வெற்றிக்குப் பின்னும் எல்லாவற்றையும் சாணக்கியரும், சந்திரகுப்தனும் சேர்ந்து தான் தீர்மானித்தார்கள். யார் யார் எங்கு தங்குவது என்பதிலிருந்து முக்கிய வேலைகளில் காவலர்கள், வீரர்கள், அதிகாரிகள் நியமனம் முதல் அவர்கள் இருவருமே தீர்மானித்துக் கொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒப்பந்தப்படி அவனையும் அவர்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான்.  மேலும் பணியாளர்கள், வீரர்கள் முதற்கொண்டு சந்திரகுப்தனையே அரசனாகப் பாவித்துப் பேசியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. குறுகிய சமயத்தில் அனைத்தையும் முடிவு செய்து பிசிறில்லாமல் எல்லாக் காரியங்களையும் சாணக்கியர் அரங்கேற்றும் விதம் அவனைப் பயமுறுத்தியது. இப்படியே போக விட்டால் ஆச்சாரியர் தங்களைப் பூஜ்ஜியம் ஆக்கி விடுவார் என்று எண்ணிப் பயப்பட்ட அவன் இது குறித்து உடனே ஆச்சாரியரிடம் வெளிப்படையாகப் பேசி விடுவது என்று தீர்மானித்தான்.

 

ஆனால் பாடலிபுத்திரத்திற்கு வந்ததிலிருந்தே ஆச்சாரியரையும் சந்திரகுப்தனையும் காண்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.   அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பதே யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. அது பர்வதராஜனுக்குப் பீதியைக் கிளப்பியது. அவனுக்கு எதிராகவும் சாணக்கியர் ஏதாவது சதித்திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்கிறாரா என்று பயந்த அவன் அவனுக்கு அவர்கள் ஒதுக்கியிருந்த பணியாளர்களிடமும், காவலர்களிடமும்  ஆச்சாரியரையும், சந்திரகுப்தனையும் உடனே காண வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்தான்....

 

சாணக்கியரும், சந்திரகுப்தனும் அவனைக் காண வரும் வரை அவனுக்கு நிம்மதியிருக்கவில்லை.  அவர்கள் வந்ததும் அவன் மிக பவ்யமாக சாணக்கியரின் பாதம் தொட்டு வணங்க, மலைகேதுவும் அப்படியே வணங்கினான்.

 

ஆசி வழங்கிய சாணக்கியர் உனக்கு வசதிகள் எதிலும் குறையில்லை அல்லவா பர்வதராஜனேஎன்று கேட்டபடி அமர்ந்தார்.

 

ஏற்பாடு செய்திருப்பது தாங்கள் என்பதால் வசதிக்குறைவுக்கு வாய்ப்பே இல்லை அல்லவா ஆச்சாரியரே.”

 

நீ அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டதால் வசதிகளில் ஏதாவது குறையிருக்குமோ என்று எண்ணிப் பதறி விட்டேன்.”

 

இடியே விழுந்தாலும் பதறும் ஆளா நீர்?’ என்று மனதில் கறுவிய பர்வதராஜன் இனிமையாகச் சொன்னான். “ஆச்சாரியரே நான் உங்கள் இருவரையும் அழைத்தது இனி நடக்கவிருக்கும் காரியங்களைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காகத் தான். இந்த வெற்றியோடு எல்லாம் முடிந்து விடவில்லையே. நாம் சேர்ந்து தீர்மானிக்கவும், முடிவெடுக்கவும் இனியும் நிறைய இருக்கின்றதே

 

அவன் சொன்னதில் சேர்ந்துஎன்ற வார்த்தைக்குத் தந்த அழுத்தத்தை சாணக்கியரும், சந்திரகுப்தரும் கவனித்தாலும் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சாணக்கியர் சொன்னார். “நீ சொல்வது உண்மை. வெற்றிக்குப் பிறகு நாம் சேர்ந்து முடிவெடுக்க நிறைய இருக்கின்றது. ஆனால் நம் வெற்றியே இன்னும் முழுமையடைந்து விடவில்லை பர்வதராஜனே

 

பர்வதராஜன் குழப்பத்தோடு கேட்டான். “என்ன சொல்கிறீர்கள் ஆச்சாரியரே?”

 

(தொடரும்)

என்.கணேசன்    




  


Monday, June 9, 2025

யோகி 106

 

ன்று மாலை ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது, மொத்தமாக அனைவரது வேலையையும் மேற்பார்வை செய்து கொண்டே வந்த கல்பனானந்தா ஷ்ரவனை நெருங்கியவுடன் புன்னகையுடன் கேட்டாள். “இங்கே வந்து சேர்ந்த பின் எப்படி உணர்கிறீர்கள்?”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “இங்கே வந்த பின் அமைதியை உணர்கிறேன் சுவாமினி

 

இப்போதும் அது மாதிரியான காட்சிகள் தெரிகிறதா?”

 

நல்ல வேளையாக, இதுவரையில் இல்லை சுவாமினிஎன்று சொல்லி ஷ்ரவன் சிரித்தான்.

 

கல்பனானந்தா சொன்னாள். “எதையும் வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். வேண்டாம் என்றும் நினைக்காதீர்கள். இறைவன் தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். இறைவன் எதையும் காரணமில்லாமல் யாருக்கும் தருவதில்லை. அதைப் புரிந்து கொள்ளும் போது, நாம் நம் அபிப்பிராயங்களால் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.”

 

அவள் சொன்னதை ஷ்ரவன் ரசித்தான். உண்மை தான். வாழ்க்கை எளிமையாகத் தான் இருக்கின்றது. வாழ்க்கையை நம் அபிப்பிராயங்களால் நாம் தான் சிக்கலாக்கிக் கொள்கின்றோம். “அழகாகச் சொன்னீர்கள் சுவாமினிஎன்று ஷ்ரவன் மனதாரச் சொன்னான்.

 

அவள் புன்னகைத்து விட்டு நகர்ந்தாள்.

 

அன்று மாலை சித்தானந்தாவின் காய்ச்சல் தீவிரமடைந்தது. முக்தானந்தா சித்தானந்தாவிடம் கண்டிப்பான குரலில் சொன்னார். “இனியும் தானாகச் சரியாகும் என்று நினைக்காதே. பேசாமல் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டரைப் பார்.”

 

சித்தானந்தா தலையசைத்து விட்டு மெல்லக் கிளம்பினார்.  அவரைத் தனியாக அனுப்ப மனமில்லாமல் ஷ்ரவனும் அவருடன் சென்றான். அவனுக்கு யோகாலயத்தின் பின்புறப் பகுதிகளைப் பார்க்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. தோட்ட வேலையும் கூட அவனுக்கு முன்பக்கத்திலேயே இருந்தது. பின்புறத் தோட்டங்களைப் பராமரிக்கும் வேலை அதிகம் பெண் துறவிகளுக்குத் தான் கிடைத்தது. எனவே அவரை அழைத்துப் போகும் போது அவன் பின்புறக் கட்டிடங்களையும், சூழலையும் முடிந்த வரை மனதில் பதித்துக் கொண்டான்.

 

பெண் துறவிகள் வசிக்கும் பகுதியைத் தாண்டும் போது கண்ணுக்கு அறை எண் 206 தென்படுகின்றதா என்று பார்த்தான். வெளியே இருந்து பார்க்கையில் அறை எண்கள் தெரியவில்லை. ஆண் துறவிகள் தங்கும் கட்டிடத்தைப் போலவே தான் இந்தக் கட்டிடமும் இருந்தது. நுழைவாயில் ஆஸ்பத்திரி உள்ள பகுதியில் இருந்தது.  ஆனால் மேலும் கூர்மையாக நின்று பார்க்க முடியவில்லை. தூரத்தில் ஒரு கண்காணிப்பாளன் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிய ஷ்ரவன் சித்தானந்தாவைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

 

ஆஸ்பத்திரியில் டாக்டர் அறை, சிகிச்சை அறை தவிர ஐந்து தனியறைகள், இருபது படுக்கைகள் கொண்ட ஒரு பொது ஹால் இருந்தன. சித்தானந்தாவைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு டைப்பாய்டு காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார். அதனால் அங்கேயே அன்று தங்குவது நல்லது என்று சொன்னார். அதனால் அவரை அங்கேயே விட்டு விட்டு ஷ்ரவன் தங்கள் அறைக்குத் திரும்பினான்.

 

வரும் போது ஆண் துறவிகள் தங்கும் கட்டிடமும், பெண் துறவிகள் தங்கும் கட்டிடமும் ஒரே போல் இருப்பதைக் கவனித்தான். இரண்டுமே இரண்டு மாடிக் கட்டிடங்கள். இரண்டிலும் கீழே இரு பக்கமும் சேர்த்து முப்பது அறைகளும், மேலே இரு பக்கமும் சேர்த்து முப்பது அறைகளும் இருந்தன. அந்த அமைப்பில் இரண்டிலுமே மாற்றமில்லை. அப்படியென்றால் அறைகளுக்கு எண் ஒதுக்கியிருப்பதும் ஒரே மாதிரியாகத் தானிருக்க வேண்டும். ஆண்களுடைய அறை எண் 106 இருக்கும் பகுதியில் தான் பெண் துறவிகளின் கட்டிடத்தில் 206வது அறை இருக்கும் வாய்ப்பு அதிகம் 

 

இப்போது அவர்கள் இருக்கும் அறைகள் கீழ் தளத்தில் இடப்பக்கம் உள்ளவை. வலப்பக்கத்தின் மூலையிலிருந்து 101, 102 என்று ஆரம்பித்து இடப்பக்க மூலையில் 130 உடன் முடிகின்றன. ஷ்ரவன் தங்கியிருக்கும் அறை 128.  அவர்களுக்கு எதிர் வரிசையில் உள்ள பெண் துறவிகளின் கட்டிடத்திலும் அதே வரிசை எண் கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால் அவர்களது 130 வது எண்ணுக்கு எதிரில் உள்ள பெண் துறவிகளின் அறை எண் 201ஆக இருக்க வேண்டும். 129 க்கு எதிரில் 202, 128 க்கு எதிரில் 203, 127 க்கு எதிரில் 204, 126க்கு எதிரில் 205, 125 க்கு எதிரில் 206 ஆக இருக்க வேண்டும்.

 

ஆழ்ந்த யோசனையுடன் அவன் அறைக்கு வந்து சேர்ந்த போது முக்தானந்தா கேட்டார். “சித்தானந்தா எங்கே? டாக்டர் என்ன சொன்னார்?”

 

அவருக்கு டைப்பாய்டு காய்ச்சலாக இருக்கக்கூடும் என்று டாக்டர் சந்தேகப்படுகிறார். அதனால் இன்றைக்கு இரவு அவரை அங்கேயே தங்கச் சொன்னார்.”

 

சத்சங்கத்திற்கான மணி அடித்தது.  முக்தானந்தாவும், ஷ்ரவனும் கிளம்பினார்கள். அன்று சத்சங்கத்தில் கல்பனானந்தா பேசினாள். ’மனம் ஏன் எளிதாக ஒருமைப்படுவதில்லைஎன்ற தலைப்பில் அவள் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது.  அவளும் பேச்சினூடே மூன்று இடங்களில் பிரம்மானந்தாவை மேற்கோள் காட்டினாள் என்றாலும், மற்றவர்களைப் போல் மிகைப்படுத்தாமல் அது ஓரளவு பொருத்தமாகவே இருந்தது.

 

ஷ்ரவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த முக்தானந்தாவை அவ்வப்போது பார்த்தான். ஆனால் அவர் அன்று அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. சத்சங்கம் முடிந்து திரும்பி வருகையிலும் அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை.

 

அடுத்ததாக தியானத்திற்கான மணி அடித்த போது ஷ்ரவன் தன் வழக்கமான மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அவன் 1008 முறை ஜபித்து முடித்து கண்களைத் திறந்த போது முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

ஷ்ரவன் அவரிடம் சிரித்துக் கொண்டே கேட்டான். “நீங்கள் மணி அடிக்கையில் தியானம் செய்வது கிடையாதா?”

 

அவர் சொன்னார். “மணி அடிக்கையில் தியானம் செய்யும் மனம் இருந்தால் தியானம் செய்வேன். மனமில்லா விட்டால் தியானம் செய்வதில்லை. சும்மா கண்ணை மூடி உட்கார்ந்து, அதற்கு தியானம் என்று பெயர் வைத்து, நான் என்னையே ஏமாற்றிக் கொள்வதில்லை.”

 

ஷ்ரவன் புன்னகையுடன் கேட்டான். “மனம் அனுமதித்தால் தான் தியானம் செய்வது என்பது மனதிற்கு நாம் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போல ஆகி விடுமல்லவா. உங்களைப் போன்ற மூத்த துறவி அப்படிச் செய்யலாமா?”

 

முக்தானந்தாவும் அபூர்வமாகப் புன்னகைத்தார். “நானும் மனதோடு எத்தனையோ போராடிப் பார்த்து விட்டேன். ஜெயிக்க முடியவில்லை. அதனால் இப்போது போராடுவதை நிறுத்தி விட்டேன். வயதாகி விட்டது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் இந்தக் கடைசி காலத்தில் மனம் உட்பட யாருடனும் சண்டை போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.”

 

ஷ்ரவன் சிரித்தான். “அது சரி! ஏன் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

 

தியானம் செய்வதை விட உன்னைப் பார்ப்பது சுவாரசியமாய் இருக்கிறது. நீ எதோ வித்தியாசமான தியானம் செய்கிறாய். அப்படித் தியானம் செய்து நீ ஏதோ ஒரு மேலான சக்தியுடன் தொடர்பு கொள்வதை என்னால் உணர முடிகிறது.”

 

ஷ்ரவன் திகைத்தான். மனமிருந்தால் மட்டுமே தியானம் என்று அவர் வேடிக்கையாகச் சொன்னாலும், மனம் போனபடியெல்லாம் போகும் வெற்று மனிதர் அல்ல அவர் என்பது அவனுக்குப் புரிந்தது. இல்லா விட்டால் அவன் மேலான சக்தியுடன் தொடர்பு கொள்வதை அவரால் உணர்ந்திருக்க முடியாது.

 

இவ்வளவு யதார்த்தமாகவும், இவ்வளவு நீளமாகவும் அவர் இதுவரையில் அவனிடம் பேசியதில்லை. இப்போது சித்தானந்தா இல்லாததால் தான் அவர் தயக்கம் இல்லாமல் பேசுகிறாரோ?  இப்போது இவர் இப்படி பேசுகிறார் என்று நாளைக்கும் இப்படியே இவர் பேசுவார் என்று எதிர்பார்க்க முடியாது. இவருடைய பேச்சின்படியே பார்த்தால் மனமிருந்தால் பேசி, மனமில்லா விட்டால் மௌனமாக இருக்கும் நபர் இவர். சித்தானந்தா இல்லாத இந்த சந்தர்ப்பத்தை, இவருக்கு மனமிருக்கும் போதே, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.

 

உணவுக்கான மணி அடித்தது. சென்று இருவரும் சாப்பிட்டு வந்த பின் ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “இரவு நேரங்களில் நீங்கள் தீடீரென்று பேசுவது, தூக்கத்திலிருந்தாலும் என் காதில் விழுகிறது. அதைக் கேட்கும் போது நீங்கள் உங்களுக்குள்ளேயே தத்துவம் பேசுகிறீர்களா, இல்லை என்னிடம் ஏதாவது பேசுகிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.”

 

முக்தானந்தா அசராமல் சொன்னார். “பெரும்பாலும் நான் அப்படி மனதில் தோன்றிய தத்துவங்களை வாய்விட்டுச் சொல்பவன் தான். அது என்னுடன் அறையில் தங்குபவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உன் காதில் விழுந்தவை நான் உன்னிடம் பேசியவை தான்.”

 

ஷ்ரவன் திகைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்