சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 27, 2017

இருவேறு உலகம் – 27


ர்ச் பாதிரியார்களிடம் விசாரிக்கும் எண்ணம் எழுந்த வேகத்திலேயே புதுடெல்லி உயரதிகாரிக்கு அடங்கி மடிந்தது. அப்படி விசாரிப்பது அந்த ஆளுக்குக் கட்டாயம் தெரியாமல் போகாது. பாதிரியார்கள் உட்பட இங்குள்ளவர்கள் பலரும் அந்த ஆளின் ஆட்களாக இருப்பார்கள். இல்லா விட்டாலும் விசாரிக்கும் ஆளே அந்த ஆளாக இருந்தாலும் அந்தக் கருப்பு அங்கியை அந்த ஆள் அகற்றி விட்டிருந்தால் அடையாளம் தெரியாது. இப்படி இருக்கையில் விசாரிக்கச் செல்வது ஆபத்தை விலைக்கு வாங்குவது போலத் தான் ஆகி விடும்.

தெளிவு பெற்ற புதுடெல்லி உயரதிகாரி தன் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அங்கிருந்து காரில் போகையில் சர்ச்சுக்குள் அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மனம் அசைபோட்டது. பாவ மன்னிப்புக் கூண்டின் உள்ளே அவனை ஆக்கிரமித்த சக்தி அந்த ஆளின் சக்தியா இல்லை வேறு ஏதாவது சக்தியா என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை.

இப்போது நேரில் சொன்ன தகவலை அந்த ஆள் அவனிடம் போனிலே கேட்டு இருக்கலாமே. அப்படி இருக்கையில் அதைத் தவிர்த்து இங்கு வரவழைக்கக்  காரணம் என்னவாக இருக்கும். யோசித்துக் கொண்டே செல்கையில் அவன் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்து சேர்ந்தது. அவனுக்கு வர வேண்டிய தொகை அக்கவுண்டில் வரவு வந்ததைத் தான் அந்தத் தகவல் சொன்னது. வழக்கத்தை விடக் கூடுதலாகவே பணம் வரவாகி இருந்தது.

திருப்தியில் அனைத்துக் கேள்விகளையும் மறந்து போனான் அவன். க்ரிஷ் உயிரோடிருக்கிறான் என்று கேள்விப்பட்டு திகைத்த அவர்கள் அவன் எங்கே இருக்கிறான் என்பதைப் பார்த்துச் சொல்லச் சொன்னதும் மாஸ்டர் தன் கவனத்தை மேலும் குவித்துப் பார்ப்பது போலத் தெரிந்தது.  மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து மெல்லச் சொன்னார். “அவன் இந்த தேசத்தில் இல்லை. தொலைதூரத்தில் இருக்கிறான்..... உயிர் இருந்தாலும் மிகவும் பலவீனமாக இருக்கிறான்..... அவனைச் சுற்றிலும் இருட்டாக இருக்கிறது.....

சங்கரமணி பதற்றத்துடன் கேட்டார்.  “வேறென்ன தெரியுது சுவாமி?

மாஸ்டர் உடனே பதில் சொல்லாமல் தீவிர கவனக்குவிப்பில் இருந்தார். இது வரை பார்த்ததைச் சொன்ன அவர் இப்போது அறிந்ததைச் சொல்லவில்லை. கண்களைத் திறந்து அவர்களை வெறித்த பார்வை பார்த்து விட்டுச் சொன்னார். இதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. எல்லாம் மங்கலாய் இருக்கிறது. மணீஷ் மூலமாகப் பார்த்து இனி கூடுதலாக எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. இவனிடம் தங்கியிருக்கும் க்ரிஷின் அலைகள் போதவில்லை….”

மாணிக்கம் ஆவலுடன் கேட்டார். “வேறெதாவது வழியிருக்கா சுவாமி?

மாஸ்டர் அதிக ஈடுபாட்டைக் காண்பிக்காமல் ஒரு தகவல் சொல்வது போலச் சொன்னார். “க்ரிஷ் வீட்டுக்குப் போய் அவன் அறையில் இருந்து அந்த அலைகளோடு லயித்தால் தெளிவாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு....

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மாஸ்டர் கைகூப்பி விட்டுச் சொன்னார். “உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு...

அவர்கள் திகைத்து நிற்கையில் அவர் புன்னகையுடன் தலையசைத்து விட்டுப் பழையபடி தன் அறைக்குள் போய் விட்டார். திடுதிப்பென்று அந்தச் சந்திப்பு முடிவுக்கு வந்து விட்டதில் ஏமாற்றத்துடன் அவர்கள் நிற்கையில்   சுரேஷ் எங்கிருந்தோ  வேகமாக அங்கு வந்து சேர்ந்தான்.  அவர் நுழைந்த அறையின் கதவை வெளியிலிருந்தே சத்தமில்லாமல் சாத்தினான்.

நடராஜன் தான் அழைத்து வந்தவர்களின் ஏமாற்றத்தை நன்றாகப் புரிந்து கொண்டு மெல்ல சுரேஷ் அருகில் சென்று சொன்னார். “அவங்க அவர் கிட்ட இன்னும் பேச ஆசைப்படறாங்க. இனி எப்ப பேச முடியும்?

அவன் சொன்னான். “அவர்கிட்ட இனி இன்னைக்குப் பேச முடியாது. இன்னொரு நாள் பேசலாம். வேணும்னா நான் அவர் கிட்ட அப்புறமா கேட்டு சொல்றேன்

நடராஜன் பவ்யமாகத் தலையசைத்து கைகூப்பி வணங்கி விட்டு வந்தார். மாணிக்கத்திடம் போகலாம் என்று அவர் தலையசைத்து விட்டு வெளியேற வேறு வழியில்லாமல் மூவரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

சங்கரமணி வெளியே வந்தபின் தன் அதிருப்தியைச் சத்தமாய்த் தெரிவித்தார். “என்ன இந்த ஆள் கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவராய் இருக்கார். பேசிகிட்டிருக்கறப்பவே அவரா அதை முடிச்சுகிட்டு போறார்

மரியாதையைப் பற்றி இந்த ஆள் பேசறார்என்று ஏளனமாய் மனதில் எண்ணிக் கொண்ட நடராஜன் வழக்கத்திற்கு மாறாக வெளிப்படையாகவே சொன்னார். “பெரிய ஐயா. துறவிக்கு வேந்தன் துரும்புன்னு சொல்வாங்க. இவர் இத்தனை நேரமா அவர் சக்தியை வெளிப்படுத்திக் காட்டினாலும் ஒரு ரூபா உங்க கிட்ட இருந்து தட்சிணை வாங்கினாரா? இல்லை ஏதாவது காரியத்த நம்மகிட்ட சாதிச்சுகிட்டாரா? நமக்கு இனியும் ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா திரும்ப போகலாம். இல்லாட்டி விட்டரலாம்....

சங்கரமணி மௌனமானார். வீடு வந்து சேர்ந்து நடராஜன் விடைபெறும் வரை காத்திருந்து விட்டுப் பின் மாணிக்கத்திடம் கேட்டார். “அந்த ஆள் சொல்றதை வச்சு க்ரிஷ் எங்கே இருக்கான்னு உனக்கு யூகிக்க முடியுதா?

“இல்லை. எனக்கு அவன் இந்த தேசத்தில் இல்லைங்கறதையே நம்ப முடியல. பலவீனமா இருக்கறதா வேற சொல்றார். பலவீனமா இருக்கறவன் எப்படி நாட்டை விட்டே போயிட முடியும்?என்றார் மாணிக்கம்.

சங்கரமணி மண்டைக் குடைச்சலைத் தெறிக்க வைப்பது போல் வேகமாக இரண்டு முறை தலையை ஆட்டி விட்டு பேரனைக் கேட்டார். ஏன் மணீஷ் உன் ஃப்ரண்ட் மாயாஜாலம் எதாவது கத்துகிட்டானா என்ன?

மணீஷுக்கு அவர் கேள்வியே அபத்தமாய் பட்டது. அவன் சிறிது யோசித்து விட்டு உதயிற்குப் போன் செய்தான். “அண்ணா நான் மணீஷ் பேசறேன். க்ரிஷ் கிட்ட இருந்து அப்பறமா எதாவது மெசேஜ் வந்துதா? அவன் எங்கே இருக்கான்கிற தகவல் எதாவது கிடைச்சுதா?

உதய்க்கு மணீஷைச் சிறிதும் சந்தேகிக்க முகாந்திரம் இருக்காததால் அவன் தன் தம்பி மேல் அக்கறையும் அன்பும் கொண்ட, தம்பிக்கு நெருங்கிய நண்பனிடம் உண்மையைச் சொல்லத் தயங்கவில்லை. செந்தில்நாதன் சொன்னதைத் தெரிவித்து விட்டு “இதை நான் அம்மா அப்பா கிட்ட கூடச் சொல்லலை. அதனால விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்என்றான்.

மணீஷுக்குச் தலைசுற்றியது. தென்னமெரிக்காவா?என்று அசந்தவன் உதய் இதுபற்றி என்ன நினைக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டி சொன்னான். “என்னண்ணா ஒரே குழப்பமாய் இருக்கு  

“எனக்கு என்ன நினைக்கிறதுன்னே தெரியல. இன்னொரு தடவை அவன் கிட்ட இருந்து மெசேஜோ, போன்காலோ வந்தா தான் எதையும் நாம உறுதிப்படுத்திக்க முடியும். ஆனா நேர்ல வந்து சேர்ந்தா தான் நிம்மதி

“நீங்க சொல்றது சரி தான்ணா. நானும் அப்படியே தான் நினைக்கிறேன். ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லுங்கஎன்று சொல்லி இணைப்பைத் துண்டித்த மணீஷ் தந்தை, தாத்தா இருவருக்கும் அந்தத் தகவலைச் சொன்னான்.  

இருவரும் திகைப்பின் உச்சிக்கே போனார்கள். அப்படியானால் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட அந்த மகான் சொன்னது சரி தான். சங்கரமணி புலம்பினார். “இதே போக்குல போச்சுன்னா நான் சீக்கிரமே நெஞ்சு வெடிச்சோ மண்டை வெடிச்சோ போய்ச் சேர்ந்துடுவேன் போல இருக்கு. என்ன தான் நடக்குதுன்னு ஒரு இழவும் தெரியலையே

மணீஷ் சொன்னான். “தெரிஞ்சுக்க ஒரே வழி அந்த மாஸ்டரை க்ரிஷ் வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போறது தான்

“அந்த ஆள் ராங்கி புடிச்ச ஆளாயிருக்காரே. கூப்பிட்டா வருவாரா? பேசிகிட்டிருக்கறப்பவே திடீர்னு ரூமுக்குள்ள போயிடறார். கஞ்சா கிஞ்சா அடிக்கற கேஸ் மாதிரி தெரியுது. அபூர்வ சக்தி இருக்கற சில ஆளுங்களுக்கு போதைப்பழக்கம் இருக்கும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். எந்த மாதிரி ஆள்க வீட்டு வாசல்ல எல்லாம் போய் நிக்கவேண்டியிருக்கு பார்த்தியா? எல்லாம் நம்ம நேரம்என்று சங்கரமணி அங்கலாய்த்தார்.

மாணிக்கம் சொன்னார். “நட்ராஜ் சொன்ன மாதிரி நமக்கு வேலையாகணும்னா அவர் எப்படி இருந்தாலும் பணிஞ்சு தான் போகணும்...!


மாஸ்டர் தன் ஞானதிருஷ்டியில் தெரிந்த காட்சியை உடனடியாகத் தன் குருவிற்குத் தெரிவிக்கவே உடனடியாக அந்த அறைக்குள் போயிருந்தார். ஆனால் குருவைத் தியான அலைகளில் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அனுப்பிய அழைப்புகள் சுவரில் மோதி விட்டுத் திரும்பி வருவது போல அவருக்குத் தோன்றியது. அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும். அந்த அர்த்தம் அவரைப் பயமுறுத்தியது. நிலைமை தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டதாய்த் தோன்றியது. ஞான திருஷ்டியில் குருவைப் பார்க்க முயன்றார். சில நிமிடங்கள் கழித்து மங்கலாய்ப் புலப்பட்ட காட்சி மேலும் சில நிமிடங்கள் கழித்து தெளிவாய்த் தெரிந்த போது ஒருகணம் மனம் பதறியது. நினைத்தபடியே தான் ஆகியிருந்தது.  அவரது குருவின் சடலம் தெரிந்தது.... அருகில் யாரும் இல்லை..... மாஸ்டரின் கண்கள் லேசாகக் கலங்கின. இந்த மரணம் இயற்கையில்லை....

ரிஷிகேஷின் அருகே இருக்கும் காட்டில் தனியாக வசித்து வரும் அவர் குரு பரிபூரண ஆரோக்கியத்துடன் இருந்தார். பத்து நாட்களுக்கு முன் தான் அவரை மாஸ்டர் சந்தித்திருந்தார். ஒரு இரவெல்லாம் தூங்காமல் இருவரும் பேசியிருக்கிறார்கள். அதிகாலையில் மாஸ்டர் கிளம்பும் போது ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டவராய் அவர் குரு, மாஸ்டரிடம் தனக்கு திடீர் மரணம் நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார். அவரை அவர் உள்ளுணர்வு அன்று எச்சரித்திருக்கும் போலிருக்கிறது....

அதைக் கேட்டுவிட்டு மாஸ்டர் விளையாட்டாய் சொன்னார். “அப்படியெல்லாம் நீங்கள் சீக்கிரம் போய்ச் சேர்ந்து விட முடியாது குருவே! உங்களால் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன

எதையும் நானே நடத்தி முடிக்க வேண்டும் என்று நாம் யாருமே நினைக்கக் கூடாது. எதை யாரை வைத்து நடத்த வேண்டும் என்று தெய்வசித்தம் இருக்கிறதோ, நமக்கு என்ன தெரியும்”  என்று குரு புன்னகையுடன் சொன்னார்.

அவர் சொன்னது போல் தெய்வசித்தம் வேறாக இருந்திருக்கிறது. இல்லையில்லை.... அது தெய்வசித்தம் இல்லை. சைத்தானின் சித்தம். எதிரிகள் நேரடியாகவே அவர்கள் பாதையில் குறுக்கிட்டிருக்கிறார்கள்..... குருவை அப்புறப்படுத்தி, மீண்டும் காயை நகர்த்தி இருக்கிறார்கள்.... வேகமாக இயங்க ஆரம்பித்து விட்டார்கள்...

(தொடரும்) 


என்.கணேசன்Thursday, April 20, 2017

இருவேறு உலகம் – 26

                                     
மூவரும் நடராஜன் சொன்ன அந்த அற்புதமான மகானைச் சந்திக்கப் போன போது அவர் தனியறையில் தியானத்தில் இருந்தார். வரவேற்பறையில் தினசரிப் பத்திரிக்கை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த, பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த தாடிக்கார இளைஞனிடம் நடராஜன் நட்புடன் கேட்டார். “சுவாமி இருக்காரா சுரேஷ்?

மாஸ்டர் தியானத்தில் இருக்கார்என்று சொல்லி அவர்களை வரவேற்பறையில் உட்கார வைத்து விட்டு சுரேஷ் எழுந்து போனான்.

சங்கரமணி நடராஜனைக் கேட்டார். “ஏன் நட்ராஜ் நீ அவரை மகான்ங்கிறாய். இவன் அவரை மாஸ்டர்ங்கறான். அந்த ஆளோட சொந்தப் பேர் என்ன?

“தெரியலைங்க பெரிய ஐயாஎன்று ஒத்துக் கொண்ட நடராஜன் செல்போனைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் வந்திருந்த தகவல்களை மிகவும் சுவாரசியமாகப் பார்ப்பது போல் பாவிக்க ஆரம்பித்தார். ‘சும்மா இருந்தால் இந்த ஆள் பேசியே கொன்னுடுவார்’.

நிமிட முட்கள் நிதானமாக நகர்ந்தன. மாஸ்டர் தியானம் முடித்து வருவது போல் தெரியவில்லை. அதிகார வர்க்கத்தினராக மாறிய பிறகு இப்படிக் காத்திருந்து பழக்கப்படாத மூவரும் காத்திருப்பதில் சலிப்பையும் சிறு கோபத்தையும் உணர்ந்தார்கள். ஏதோ புத்தகத்தை எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் சுரேஷ் அங்கு வரவே சங்கரமணி அவனிடம் சொன்னார். “ஏம்ப்பா, நாங்க வந்திருக்கறதா உங்க மாஸ்டர் கிட்ட சொன்னாயா?

சுரேஷ் அவரை ஏதோ வினோதப் பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுச் சொன்னான். “அவர் தியானத்தில் இருக்கறப்ப தொந்தரவு செய்யறதை விரும்ப மாட்டார்

சங்கரமணியும் அவனை வினோதப் பிராணியைப் பார்ப்பது போலவே பார்த்தார். ஒரு அமைச்சர் வந்திருக்கிறார் என்கிற மரியாதையே இந்தப் பையனுக்குத் தெரியவில்லையே! நாங்க ஒரு முக்கியமான மீட்டிங்குக்குப் போகணும்ப்பா.....என்று சொல்லி விட்டு அவனைப் பார்த்தார்.

அவன் உடனே “சரிங்க ஐயா. போயிட்டு வாங்கஎன்று சொல்லிவிட்டு மறுபடி போய் விட்டான்.

கோபத்தில் முகம் சிவந்த சங்கரமணியிடம் நடராஜன் சொன்னார். “பெரிய ஐயா. இன்னைக்கு அவர் யாரையும் பார்க்கறதா இருக்கல. நான் தான் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினேன். காரியத்தைக் கெடுத்துடாதீங்க. அவருக்கு நம்ம கிட்ட ஆக வேண்டிய வேலை எதுவும் இல்ல. காசுபணம் கைல தொட மாட்டார். நமக்குத் தான் அவர் கிட்ட ஏதாவது வேலை ஆகலாம்....

சங்கரமணி மருமகனைப் பார்த்தார். மாணிக்கம் பொறுமையாயிருக்கும்படி பார்வையாலேயே சொல்ல சங்கரமணி உள்ளே கொதித்தாலும் வெளியே அடங்கினார்.

மேலும் அரை மணி ஆமை வேகத்தில் நகர்ந்தது. பின் மெல்ல மாஸ்டர் இருந்த அறைக்கதவு திறந்தது. மாஸ்டர் வெளியே வந்தார். கம்பீரமான தேஜஸான உயரமான ஒரு நடுத்தர வயது மனிதராக மாஸ்டர் இருந்தார். காவி வேட்டியும் அரக்கு நிற கதர் சட்டையும் அணிந்திருந்தார். அவர் தீட்சண்யமான கண்களால் மூவரையும் கூர்ந்து பார்க்க, தங்களையும் அறியாமல் மூவரும் மரியாதையுடன் எழுந்து நின்றார்கள்.

அவர்களுடன் பயபக்தியுடன் எழுந்து நின்ற நடராஜன் அவர்களை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தினார். “சுவாமி, இவர் தான் நான் சொன்ன அமைச்சர் மாணிக்கம். இது அவர் மகன் மணீஷ். இது அவர் மாமனார் சங்கரமணி

மூவரும் கைகூப்பி வணங்கினார்கள். மாஸ்டரும் கைகூப்பினார். “உட்காருங்கள்என்றார். அவர் பார்வையைப் போலவே குரலும் கம்பீரமாக இருந்தது.

அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்கள் எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் அவரும் உட்கார்ந்தார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்கள். பின் சங்கரமணி அமைதியைக் கலைத்தார். “வெளிப்படையா பேசறதுக்கு மன்னிக்கணும். நான் அந்தக் காலத்து மனுஷன். எனக்கு எதையும் மறைச்சு பேசத் தெரியாது.... நட்ராஜ் உங்களைப் பத்தி சொன்னப்ப நான் நம்பல. நான் இப்படிச் சொல்லிட்டு வர்ற எத்தனையோ சாமியார்களைப் பாத்திருக்கேன். சொல்ற அளவு சக்தி படைச்சவங்களா இருக்கல....

சங்கரமணியின் திமிர்ப் பேச்சால் நடராஜன் பதறிப் போனார். தர்மசங்கடத்துடன் மாஸ்டரைப் பார்த்தார். ஆனால் மாஸ்டர் முகத்தில் கோபம் தெரியாமல் புன்னகையே விரிந்தது.  “இவர் என் எந்த சக்தி பத்தி சொன்னார்?என்று புன்னகை மாறாமல் கேட்டார்.

ஓ இந்த ஆளிடம் பல சக்திகள் இருக்குதாக்கும்என்று மனதில் சொல்லிக் கொண்ட சங்கரமணி “மனசில் இருக்கறதைச் சொல்லிடுவீங்களாம்....என்று அசராமல் சொன்னார். தன்னைக் காக்க வைத்த மனிதனிடத்தில், பார்த்தவுடனே தன்னை அறியாமல் எழ வைத்த மனிதனிடத்தில் அவருக்கு இன்னும் கோபம் இருந்தது. ‘நீ உன்னை நிரூபி பார்க்கலாம்என்ற அலட்சிய பாவம் சொன்ன வார்த்தைகளில் தெரிந்தது.      

மாஸ்டர் புன்னகைத்தபடியே சொன்னார். “நாகலிங்கப்பூ, எருக்கம்பூ மனசுல நினைச்சதை சொல்லாத அந்த ஜோசியக்காரன் மாதிரி நானும் இருப்பேன்னு நினைச்சுட்டீங்க போல.....

சங்கரமணி நடராஜனைப் பார்த்தார். நடராஜன் பிரமிப்புடன் மாஸ்டரைப் பார்த்ததை வைத்து தான் அவர் அந்த விஷயத்தை மாஸ்டரிடம் சொல்லவில்லை என்பது தெரிந்தது. சொல்லாமலேயே அந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார் என்கிறார் என்றால் உண்மையாகவே சக்தி வாய்ந்தவர் தான் என்கிற பிரமிப்பு அவருக்குள் எழுந்தது. மாணிக்கமும், மணீஷும் கூட இந்த விஷயத்தை சங்கரமணி நடராஜனிடம் சொல்லும்போது மட்டுமே அறிந்தார்கள். அவர்கள் இருவரும்கூட அதே சிந்தனையுடன் மாஸ்டரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள்.

மாஸ்டர் அமைதியாகக் கேட்டார். “உங்களிடம் நிரூபித்து எனக்கு என்ன ஆகணும்?

சங்கரமணி சொன்னார். “இந்தக் கிழவனை நீங்கள் ஆச்சரியப்படுத்தலாமே

மாஸ்டருக்கு அவரை ஆச்சரியப்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. புன்னகைத்து விட்டுப் பேசாமல் இருந்தார். சங்கரமணி விடவில்லை. “நான் ஒரு பூ இப்போது நினைக்கட்டுமா

மாஸ்டர் குறும்பாய் சிரித்து விட்டு கடைசியில் ஒரு குழந்தையைத் திருப்திப்படுத்த முடிவெடுத்தவர் போல் சொன்னார். “பூவாகவே இருக்கணும்னு இல்லை. எதை வேண்டுமானாலும் நினையுங்கள்

சங்கரமணி ‘என்கிட்டயே சவாலாஎன்பது போல் பார்த்துத் தலையசைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தார். கடைசியில் நீர்மூழ்கிக் கப்பல் என்று நினைத்தார். இதெல்லாம் லேசில் கண்டுபிடிக்க முடிந்ததல்ல.

பின் சொன்னார். “நினைச்சுட்டேன்.... சொல்லுங்கோ பார்க்கலாம்

மாஸ்டர் கண்களை மூடிக் கொண்டார். சில வினாடிகளின் அமைதிக்குப் பின் சொன்னார். “தண்ணீர் சம்பந்தப்பட்டது..... மறைந்திருப்பது.... நீர்மூழ்கிக் கப்பல்

சங்கரமணி வாயைப் பிளந்தார். அவர் பிரமிப்பைக் கவனித்து மாஸ்டர் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்பதை அனுமானித்த மற்ற மூவர் முகத்திலும் பிரமிப்பு தெரிந்தது.

இத்தனை நிரூபணமான பின் மாணிக்கம் இனி மாமனார் எதாவது ஏடாகூடமாகப் பேசி நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று தீர்மானித்து தானே பேசினார். “மாமா பேசினதைத் தப்பா நினைக்காதீங்க சுவாமி. அவர் பழைய அனுபவங்கள் அப்படிங்கறதால் அவர் அப்படிக் கேட்டார். உண்மைல என் நண்பர் மகன் ஒருத்தன் திடீர்னு காணாமல் போயிட்டான். அவன் எங்கே இருக்கான்னு தெரியாமல் அவன் குடும்பமே கவலைல மூழ்கியிருக்கு.... அதான் உங்க கிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்.... அவன் உயிரோட தான் இருக்கானா, எங்கே இருக்கான்னு சொன்னா எங்களுக்குப் பெரிய உதவியாய் இருக்கும்....

மாஸ்டர் அமைதியாகக் கேட்டார். “அந்தக் காணாமல் போன பையன் பெயர் என்ன? அவன் கிட்ட உங்கள்ல அதிகமா நெருக்கமாய் இருந்தது யார்?....

மாணிக்கம் மணீஷைக் காண்பித்தார். “அவன் பேர் க்ரிஷ். இவன் தான் அவனுக்கு நெருங்கின நண்பன்....

மாஸ்டர் மணீஷிடம் சொன்னார். நீ அவனை மனசுல நினைச்சுக்கோ மணீஷ். அவன் நினைவுல மனசைக் குவிச்சுக்கோ....

மணீஷ் தலையசைத்தான். மனதில் க்ரிஷை நினைத்தான்.... அவனையே நினைத்தான். சிறிது நேரத்தில் காந்தமாய் மாஸ்டரின் சக்தி அவனுக்குள் ஊடுருவுவதை அவனால் உணர முடிந்தது. அவன் மனதை மெல்ல மெல்ல அவர் ஆக்கிரமிப்பது போல் இருந்தது. அவர்கள் திட்டம் அனைத்தையும் அவர் அறிவது போல் இருந்தது. அவன் பெரும்பயத்தை உணர்ந்தான். அந்தப் பயத்தையும் அவர் படித்தது போல் இருந்தது. அவன் அங்கிருந்து ஓடிவிட நினைத்தான். ஆனால் அவனால் நகர முடியவில்லை. கட்டுண்டது போல் நின்ற அவன் க்ரிஷ் மீது மறுபடி கவனத்தைத் திருப்பினான். அதற்கு மாஸ்டர் உதவியது போலத் தெரிந்தது. பயம் விலகியது. க்ரிஷ் அவன் மனதில் நிறைந்தான்....

மாஸ்டர் அவர்கள் திட்டத்தையும் அதன் பின்னால் இருந்த நோக்கத்தையும் இப்போது தெளிவாக அறிந்தாலும் அதில் தங்காமல் மணீஷ் மனதில் நிறைந்திருந்த க்ரிஷ் மீது தன் சக்தியைக் குவித்தார். அவருக்கு க்ரிஷ் பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களை விட அதிகமாய் இருக்கிறது......

மூன்று நிமிடங்கள் கழித்து மெல்லச் சொன்னார். “அவன் சாகலை. உயிரோடு தான் இருக்கிறான்....

மூவர் இடி விழுந்தது போல் உணர்ந்தார்கள். மாணிக்கம் தான் முதலில் சுதாரித்தவர். அவர் படபடப்புடன் கேட்டார். “அவன் எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க சுவாமி


பாவமன்னிப்புக் கூண்டில் அமர்ந்திருந்த புதுடெல்லி உயரதிகாரி ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை அறிந்த போதும் ஒன்றுமே செய்ய முடியாத ஜடநிலையில் இருந்தான். ‘என்னைக் காப்பாற்றுங்கள்என்று கத்த வேண்டும் வேண்டும் என்று நினைத்தான். அந்த எண்ணம் மன அளவிலேயே மந்தமாய் நின்றது. வாயே திறக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அவன் சுயநினைவிழந்தான். அப்படி எத்தனை நேரம் அவன் இருந்தானோ தெரியவில்லை. காலக்கணக்கு அவனுக்குக் கிடைக்கவில்லை.

“என்ன ஆயிற்று?என்று பக்கத்துக்கூண்டில் இருந்து கேட்ட அந்த அடித்தளக் குரல் அவனை மறுபடி சுயநினைவுக்கு வரவைத்தது.  அவனைப் பீடித்திருந்த அந்த சக்தி தன் பிடியைத் தளர்த்த ஆரம்பித்தது போல் இருந்தது.

கஷ்டப்பட்டு மீண்டவன் “ஒன்றுமில்லைஎன்று பலவீனமாகச் சொன்னான்.  

சரி. நன்றி. போகலாம்என்று சொன்ன அந்த ஆள் தடாலென்று எழுந்து சென்று விட்டான். சர்ச்சின் உட்பகுதியிலிருந்து வந்த அந்த ஆள் அந்த வழியாகவே போனதால் அவனுக்கு அந்த ஆள் போகும் போதும் பார்க்கவோ, அதிகமாய் அந்த ஆள் குறித்து அறிந்து கொள்ளவோ முடியவில்லை. ஆனால் அவனில் ஏதோ ஒரு பகுதியை அந்த ஆள் எடுத்துக் கொண்டு போனது போலவோ, இல்லை அந்த ஆளின் ஒரு பகுதியை அவனிடம் விட்டு விட்டுப் போனது போலவோ புதுடெல்லி அதிகாரி உணர்ந்தான். அவன் சுதந்திரமாயில்லை.

அவனுக்கு எழுந்திருக்கவே கஷ்டமாகவும், களைப்பாகவும் இருந்தது. கஷ்டப்பட்டு எழுந்தான். மெல்ல நடந்தான். நாலைந்து அடிகள் எடுத்து வைத்த பிறகு ஓரளவு சக்தி திரும்பக் கிடைத்தது. முடிந்த வரை வேகமாக வெளியே வந்தான். வெளியேயும் யாருமில்லை. நடந்ததெல்லாம் அவனுக்கு ஏதோ அமானுஷ்யத் திகிலாக இருந்தது.  சர்ச்சின் பாதிரியார்கள் தங்கும் பகுதி பின்புறம் தான் இருந்தது. அவர்களிடம் விசாரித்துப் பார்க்கலாமா என்று நினைத்தான்.....

(தொடரும்)
என்.கணேசன்                         


Monday, April 17, 2017

வூடூவின் திகில் நடனம்!


வூடூ வழிபாட்டுச் சடங்கில் தேவதைகளுக்கான சின்னங்கள் மட்டுமல்லாமல் அதற்கான மந்திரங்களும் மிக முக்கியம். அந்த வழிபாட்டை முன்னின்று நடத்தும் குரு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்றாலும் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள். வழிபாட்டை நடத்தும் குருவாவது எளிதல்ல. ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எல்லாமே போகப் போக கட்டுக்கடங்காமல் போகலாம். அப்போது அதற்குத் தகுந்தபடி வழிபாட்டை முன்னோக்கி நடத்திச் செல்வதற்கு நல்ல பாண்டித்தியம் தேவை என்பதால் பல காலப் பயிற்சிகளுக்கும், அனுபவங்களுக்கும் பின்னர் மட்டுமே அந்தத் தகுதி வழங்கப்படுகிறது. வூடூ சடங்கை நடத்தும் பெண்மணி வூடூ ராணிஎன்றழைக்கப்படுகிறார்.

ஆரம்பத்தில் தேவதைகளை வரவழைக்கும் பாடல்களைப் பாடியபடி இரு கைகளை பக்கவாட்டில்  அவர் அசைக்கும் விதம் காற்றில் மரக்கிளைகள் ஆடுவது போல் லயத்தோடு இருக்கும். அமானுஷ்ய சக்திகளை வரவழைப்பதும் அவர்களிடம் கோரிக்கைகள் வைப்பதும், பதில்களும், ஆலோசனைகள் பெறுவதும் இவருடைய பொறுப்பே. அதனால் இவர் அமானுஷ்ய சக்திகள் குறீயீடுகளோடு ஏதாவது சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் அளவு பாண்டித்தியம் பெற்றவராக இருக்க வேண்டும். புரியாதவற்றை அந்தந்த நேரத்திலேயே கேட்டுத் தெளிவு பெறும் வேகமும் அறிவும் படைத்தவராகவும் கூட இவர் இருக்க வேண்டும்.

வழிபாட்டில் மத்தள ஒலிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. மேலான சக்திகளுடன் தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் குறிப்பிட்ட தாள லயத்தோடு அது இருத்தல் வேண்டும். நடனம் ஆடுபவர்களும் அந்த தாள லயத்தோடு இணைந்து ஆட வேண்டும். அந்த நடனத்தில் ஒருவன் மீது அமானுஷ்ய சக்தி குறிப்பிட்ட நேரம் ஆட்சி செலுத்தும். அந்த சக்தியை உணரும் கூர் உணர்வையும், அதை அந்த குறிப்பிட்ட காலம் தாங்கிக் கொள்ளும் வலிமையும் அவன் பெற்றிருக்க வேண்டும். அவனை “குதிரைஎன்றழைக்கிறார்கள். அமானுஷ்ய சக்தி அவன் மீதமர்ந்து சவாரி செய்வதால் அந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள். அந்த அமானுஷ்ய சக்தி பெரும்பாலும் இறந்தவர் ஆவியாகவோ, ஆவிகளுக்கும் மேம்பட்ட ஒரு சக்தியாகவோ இருக்கிறது. அந்த ஆவி அல்லது சக்தி, தேவதைகளிடம் இருந்து பதில் அல்லது ஆலோசனை பெற்றுத் தருகிறது.

அந்த அமானுஷ்ய சக்தி ஒருவன் மீது குடியேற ஆரம்பிக்கும் போது அந்த மனிதன் தன்னை முழுவதுமாக மறக்க ஆரம்பிக்கிறான். அவனுடைய தனிப்பட்ட குணாதிசயங்களும், சக்திகளும் முழுமையாக மறைந்து போய் அந்த ஆவி அல்லது சக்தியின் குணாதிசயங்களும், சக்திகளும் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. ஒரு 90 வயதுக் கிழவனின் மேல் ஆக்கிரமித்திருப்பது இளைஞனின் ஆவியாகவோ, ஆக்ரோஷ சக்தியாகவோ இருக்குமானால் அந்த கிழவனின் உடல் முறுக்கேறி அவன் தோற்றத்திலும், குரலிலும், பேச்சிலும், செய்கைகளிலும் இளமையின் முறுக்கு தெளிவாகவே தெரியும். சாதாரணமாக அந்தக் கிழவருக்கு சாத்தியமாகவே இருக்காத செயல்களை எல்லாம் அந்த வேளையில் கிழவருக்கு சர்வ சாதாரணமாகச் செய்ய முடியும்.  வேகமாய் நடனமாடுவது, நீண்ட தூரங்களுக்குத் துள்ளிக் குதிப்பது எல்லாம் அந்த சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் வெகு இயல்பாக அந்தக் கிழவருக்கு முடியும். மாறாக ஒரு இளைஞனின் வயதில் குடியேறுவது கிழ ஆவியாக இருக்குமானால் எல்லாமே தலைகீழாகி விடும். நகர்வது கூட மிக நிதானமாக இருக்கும்.  சிறிது நேரத்திலேயே களைப்பு மேலிடும். மூச்சு வாங்கும். பேச்சு பலவீனமாக வரும்.

இந்த நேரங்களில் தனக்கு என்ன நடக்கிறது என்பதோ, என்ன பேசினோம், என்ன கேட்டோம் என்பதோ அந்த ‘குதிரைக்குத் தெரியாது. கடைசியில் மயங்கி விழும் அவனுக்கு விழிப்புணர்வு வரும் போது நினைவில் எல்லாமே வெறுமையாக இருக்கும். அவன் மீது குடியேறிய சக்தி வலிமையானதாக இருந்தால் அவன் மயங்கி விழும் போது அவன் உடலில் இருக்கும் இயல்பான சக்திகள் அனைத்தும் தீர்ந்து போயிருக்கும். அவன் விழிப்புணர்வு பெற்று பழைய நிலைக்குத் திரும்புவது சில மணி நேரங்கள் கழித்தே இருக்கும்.

இந்த வூடூ நடனம் முதன் முதலில் திரைப்படமாக எடுக்கப்பட்டது 1947ல். அதை எடுத்தவர் மாயா டெரென் (Maya Deren) என்பவர். இவர் ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். திரைப்படம் எடுப்பவராக மட்டுமல்ல இவர் எழுத்தாளராகவும், நடனக்கலைஞர் ஆகவும் கூட இருந்தார். வூடூவைப் பற்றி விரிவாகச் சொல்ல முடிந்த படைப்புகளில் இவருடைய பங்கு மிக முக்கியமானது.
இவர் கேதரைன் டன்ஹம் என்ற புகழ்பெற்ற நடனக்கலைஞரின் குழுவில் சில காலம் இருந்தார். அப்போது கேதரைன் டன்ஹம் ஆப்பிரிக்க நடனங்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வூடூ நடனம் பற்றி அறியும் வாய்ப்பு மாயா டெரெனுக்குக் கிடைத்தது. அப்போது கேள்விப்பட்டதெல்லாம் மாயா டெரெனுக்கு சுவாரசியமாக இருந்தது. பின் சில திரைப்படங்கள் எடுக்கும் வேலைகளில் மும்முரமாக இருந்த மாயா டெரெனுக்கு குக்கன்ஹீம் ஃபெல்லோஷிப் (Guggenheim fellowship) என்ற நிறுவனம் மூலமாக ஹைத்தி சென்று ஹூடூ பற்றி ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை அவர் நழுவ விடவில்லை.

1947 ஆம் ஆண்டு அவர் ஹைத்தி சென்று கண்ட முதல் வூடூ நடனம் அவரைக் காந்தமாகக் கவர்ந்தது. வூடூ நடனத்தில் ஆரம்பத்தில் பாடப்படும் லெக்பா தேவதை குறித்த பாட்டு ஆத்மார்த்தமாக இருந்தது.  
    
பாதையை எனக்காகத் திறப்பாய்
லெக்பா தேவதையே நான் கடந்து போக வேண்டும்.
கதவை எனக்காகத் திறப்பாய்
லெக்பா தந்தையே நான் இங்கு காத்திருக்கிறேன்.
கதவை எனக்காகத் திறப்பாய்
லெக்பா தலைவனே, நான் உள்ளே போக விரும்புகிறேன்.

லெக்பா தேவதை தான் சூட்சும மேல் உலகத்திற்கான வாயிற் காவலாளி என்பதையும், அந்தத் தேவதை அனுமதி இன்றி யாரும் மேலுலகத்தில் உள்ள சக்திகளை அணுகவோ, உதவி பெறவோ முடியாது என்பதையும் முன்பே சொல்லி இருந்தோம். அந்தப் பாடல் முடிந்தவுடன் அங்கிருந்த சூழலில் ஒரு லேசான மாற்றத்தை மாயா டெரென் உணர்ந்தார். 

அந்த சடங்கின் தொடர்ச்சியில் அக்வீ தேவதையும், தம்பல்லா என்ற நாக தேவதையும் வரும்படி வேண்டிக் கொள்ளப்பட்டன. சிறு சிறு மாற்றங்களை அங்கிருக்கும் சூழ்நிலையில் மாயா டெரென் உணர்ந்தார். தம்பல்லா தேவதையை வேண்டிய போதும் அதன் பின்னும் அங்கு நடனமாடியவர்கள் நடனம் பாம்பு போலவே வளைந்தும் நெளிந்தும் ஆடினார்கள். அந்த சூழலில் அமானுஷ்ய சக்திகளின் வரவை மாயா டெரென் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார்.

அதிலும் குறிப்பாக வூடூ நடனத்தில் ‘குதிரைஎன்று சொல்லப்படுபவன் தன் சுயநினைவை முற்றிலும் அமானுஷ்ய சக்தியால் பீடிக்கப்படும் அந்தக் கணம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கணமாகக் கூறுகிறார். மனித சக்தியும், அமானுஷ்ய சக்தியும் ஒரு உடலில் ஒரு சேர இருக்கும் அந்தக் கணத்தில், இரண்டு உலகங்களும் சந்திக்கும் அந்தக் கணத்தில், எத்தனையோ ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்று அவருக்குத் தோன்றியது.

அந்த நடனத்தில் என்ன கேட்கப்பட்டது, என்ன பெறப்பட்டது என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. அந்தத் தகவல்கள் பழங்கால மொழியிலும், குறியீடுகளிலும் இருந்திருக்க வேண்டும் என்பதால் அவை நடனத்தை நடத்திய வூடூ ராணிக்கு மட்டுமே விளங்கியிருக்க வேண்டும்.  ஆனால் குதிரை ஏற்றம் நிறைவு பெற்றவுடன் உடல் துடிதுடிக்க அந்தக் குதிரைஎன்றழைக்கப்படுபவன் மயங்கி விழுந்ததும் அதன் பின் எழுந்தவன் தன் பழைய சூழ்நிலையை உணரவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டதையும் மாயா டெரென் கவனிக்கத் தவறவில்லை.

அவருக்கு ஆவணப்படம் எடுக்கப் பணித்திருந்த நிறுவனம் அதை முடித்துக் கொடுக்க அவருக்குக் கொடுத்திருந்த காலம் மிகக்குறுகியது. அதற்குள் அந்த சடங்குகளைப் படம் பிடித்து முடித்து விட முடியும் என்ற போதும் வூடூவின் சூட்சுமப் பொருளைப் புரிந்து கொண்டு விட முடியாது என்பதால் அந்த நிறுவனத்தின் ஆவணப்படப் பொறுப்பில் இருந்து தன்னை மாயா டெரென் விடுவித்துக் கொண்டார். அவர் ஹைத்தியிலேயே மேலும் அதிக காலம் தங்கி வூடூ சூட்சுமங்களை அறிந்து கொண்டார். அவற்றை 1953 ஆம் ஆண்டு தெய்வீக குதிரைக்காரர்கள்: ஹைத்தியின் வூடூ கடவுள்கள் (Divine Horsemen: The Voodoo Gods of Haiti ) என்ற நூலில் விரிவாக எழுதினார். அந்த நூல் மிகவும் பிரபலமாகியது.

அவர் அப்போது எடுத்த படச்சுருள்களை வைத்து அந்த நூலை அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது கணவர் டெய்ஜி இடொ (Teiji Ito) 1981 ஆம் ஆண்டு ஆவணப்படமாக எடுத்து முடித்தார். அந்த ஆவணப்படம் பழங்கால வூடூ குறித்து எடுக்கப்பட்ட முதல் காணொளி என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இனி அடுத்த வாரம் ஒரு சுவாரசியமான வூடூ ராணியைப் பார்ப்போம்.

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி - 27.03.2017


Thursday, April 13, 2017

இருவேறு உலகம் – 25

   
 செந்தில்நாதனுக்கு மனம் சமநிலை அடைய சிறிது நேரம் தேவைப்பட்டது. அந்த நேரம் கடந்த பின் அவர் என்ன செய்வதென்று யோசித்து விட்டு முதலில் உதய்க்குப் போன் செய்தார்.

உதய் மிக ஆர்வத்துடன் கேட்டார். “ஏதாவது தெரிஞ்சதா சார்?

“க்ரிஷோட மொபைல் போன் எங்கே ஸ்விட்ச் ஆன் ஆயிருக்கு, அந்த மெசேஜ் எங்கேயிருந்து செய்யப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுது. ஆனா அது குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்கே ஒழிய நமக்கு ஆறுதலா இல்லை..

“ஏன் சார்?

க்ரிஷ் மொபைல் தென்னமெரிக்கால தான் ஆன் ஆயிருக்கு. அங்கே இருந்து தான் மெசெஜ் வந்துருக்கு

உதயும் பேச்சிழந்து போனது தெரிந்தது. சிறிய மௌனத்திற்குப் பின் அவன் சொன்னான். “சார்.... எதாவது டெக்னிகல் மிஸ்டேக் இருக்குமோ?

அதைத்தான் நானும் கேட்டேன். அவங்க இல்லைங்கறாங்க

உதய்க்குத் தலை சுற்றியது. இப்போது தான் வீட்டில் சந்தோஷம் திரும்பி வந்திருக்கிறது. அவன் பெற்றோர் இன்று தான் ஒழுங்காகச் சாப்பிட்டார்கள். அம்மா அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். இந்தத் தகவல் பழைய கேள்விக்குறி நிலைமையையே உருவாக்கி விடும் போல் இருக்கிறதே என்று எண்ணியவனாக அவன் மெல்லச் சொன்னான். “சார் நீங்க உங்க விசாரணையத் தொடர்ந்து செய்யுங்க.... உண்மை என்னன்னு தெரியற வரைக்கும் இந்த விஷயம் எங்க அப்பா அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்.... ப்ளீஸ்

“சரி  என்ற செந்தில்நாதன் “உங்க தம்பியோட பாஸ்போர்ட் இருக்கான்னு ஒருதடவை செக் பண்ணிப் பார்த்துடுங்களேன்என்றார். அவன் ஆராய்ச்சிக்குப் போவதாகச் சொல்லி வெளிநாட்டுக்கு விமானத்தில் போயிருப்பானோ என்கிற சந்தேகம் அவருக்கு வந்திருந்தது.

“அவன் பீரோல அவன் பாஸ்போர்ட், க்ரெடிட் கார்டு எல்லாம் இருக்கறத நான் நேத்து கூடப் பாத்தேன் சார்என்று உதய் சொன்னான்.

செந்தில்நாதன் அந்த சாத்தியக்கூறும் விலகியதை உணர்ந்தார். பின் மெல்லச் சொன்னார். “சரி இந்தத் தகவல் நமக்குள்ளேயே இருக்கட்டும். எத்தனை நெருங்கியவங்களானாலும் சரி மத்தவங்களுக்குத் தெரிய வேண்டாம்...

“சரி சார்என்றான் உதய்.


வார்த்தைகள் இல்லாமல் மாணிக்கத்தின் வீட்டில் மூவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.  சங்கரமணிக்கு க்ரிஷின் செல்போனில் இருந்து வந்திருந்த தகவல் சகிக்க முடியாததாய் இருந்தது. என்ன தான் மாணிக்கம் வாடகைக் கொலையாளியின் செல்போனை உபயோகிப்பவனே க்ரிஷின் செல்போனையும் உபயோகித்து மெசேஜ் அனுப்பியிருக்க வேண்டும் என்று அறிவுபூர்வமாக விளக்கி இருந்தாலும் அவருக்கு அந்த ஆள் ஆறுதல் செய்தியை க்ரிஷ் குடும்பத்திற்கு அனுப்பியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. எனக்கு மட்டும் திகிலை ஏற்படுத்தி விட்டு அங்கே மட்டும் ஆறுதலா?

மணீஷ் மெல்லச் சொன்னான். “க்ரிஷ் செல்போன் எங்கே ஆன் ஆயிருக்குன்னு இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பாங்க. அது எங்கேன்னு விசாரிங்களேன்

தன் செல்போனை எடுக்கப் போன சங்கரமணியை மாணிக்கம் சைகையால் தடுத்தார். “இதுல நாம அதிக ஈடுபாடு காட்டறதே வீண் சந்தேகத்தை ஏற்படுத்திடும்.... செந்தில்நாதன் லேசுப்பட்ட ஆள் இல்லை.... இப்போதைக்கு க்ரிஷ் விஷயத்துல நம்மள சந்தேகப்பட எதுவுமே இல்லை. அப்படியே அதை வச்சுக்கறது நல்லது. நாம கமலக்கண்ணன் குடும்பத்துல விசாரிக்காம தனியா இதை விசாரிக்கறோம்னு தெரிஞ்சா செந்தில்நாதன் கவனம் நம்ம பக்கம் திரும்பும். அது நல்லதல்ல.....

மணீஷ் ஏமாற்றத்துடன் தலையாட்டினான். அந்த சமயத்தில் மாணிக்கத்தின் உதவியாளர் வந்து சொன்னார். “நடராஜன் வந்திருக்கார்...

மாணிக்கம் அவரை உள்ளே அனுப்பச் சொன்னார். நடராஜன் செல்வாக்கு மிக்க காண்டிராக்டர். அவர் மூலம் மாதம் தோறும் மிகப்பெரியதொரு தொகை மாணிக்கத்துக்கு வந்து கொண்டிருந்ததால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து மாணிக்கத்தைச் சந்திக்க அனுமதி இருந்தது....

நடராஜன் உள்ளே வந்தார். வணக்கம் ஐயாஎன்று பெரியதாக மூவருக்கும் கும்பிடு போட்டார். சங்கரமணியைப் பார்த்துக் கண்களைச் சுருக்கிச் சொன்னார். “என்ன பெரிய ஐயா உங்களுக்கு உடம்பு சரியில்லையா. ரொம்பவே இளைச்சுட்ட மாதிரி தெரியுதே

“எல்லாம் என் நேரம் நட்ராஜ் வேறென்ன சொல்றதுஎன்று சங்கரமணி சொல்லி நிறுத்திக் கொண்டார்.

அவர் மேலும் ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்து விட்டுப் பின் மாணிக்கத்திடம் பரபரப்புடன் “ஐயா நீங்க ஒருத்தர சந்திச்சே ஆகணும்என்று சொன்னபடியே உட்கார்ந்தார்.

“யாரை?மாணிக்கம் கேட்டார்.

“அற்புதமான மகான் அவர். உங்க மனசுல என்ன நினைக்கிறீங்கன்னு நீங்க சொல்லாமலே அவர் சொல்லிடுவார்....

பஞ்சுத்தலையர் பழைய சங்கரமணியாய் மாறினார். “ஆமா இந்த மாதிரி ஆள்கள நான் நிறைய பாத்திருக்கேன். நெத்தில குங்குமம் வச்சுட்டு, ஜோல்னா பையை தோள்ல வச்சுட்டு ஜோசியம் பார்க்க வருவானுங்க. முதல்ல ரெண்டு பூவை நினையுங்கன்னு சொல்வானுங்க. நம்ம ஆளுகளுக்கு ரோஜா, மல்லி, தாமரைன்னு நாலஞ்சத் தவிர வேற எந்தப் பூ ஞாபகமும் வராது. நினைச்சத கரெக்டா சொல்லிடுவானுங்க. பின்ன ஜோசியம் பாக்கறேன்னு சொல்லி பழையதெல்லாம் கரெக்டா சொல்லி, எதிர்காலத்த பத்தி நாம ஆசைப்படறத சொல்லி பெரிய தொகையா கறந்துட்டு போயிடுவாங்க... அப்படி ஒருத்தன் என்கிட்டயும் போன வருஷம் வந்தான். ரெண்டு பூ நினைக்கச் சொன்னான். நான் நாகலிங்கப்பூவும் எருக்கம்பூவும் நினைச்சேன். அதைத் தவிர அத்தனை பூவும் சொல்லிட்டு அவன் ‘என்ன தான் நினைச்சீங்கன்னு கேட்டான். போடா போக்கத்தவனேன்னு சொல்லித் துரத்திட்டேன்

நடராஜன் அதிருப்தியுடன் முகத்தைச் சுளித்தார். பெரிய ஐயா நான் மகானப் பத்தி பேசறேன். நீங்க தெரு ஜோசியனப் பத்திப் பேசறீங்கஎன்றவர் மாணிக்கம் பக்கம் திரும்பினார். “ஐயா நான் முக்கியமான டாக்குமெண்ட் ஒன்னு காணோம்னு ரெண்டு மாசமா தேடாத இடமில்லைன்னு சொன்னேன். ஞாபகம் இருக்கா. இவர் கிட்ட போய் நின்னேன். நான் எதுவும் சொல்லலை. அவராவே சொன்னார். முக்கியமான பத்திரம் காணோம்னு வந்திருக்கேன்னார். நான் ஆமா சாமி வீடு முழுக்க தேடிட்டேன்னேன். அவர் கண்ணை மூடிட்டு ஒரு நிமிஷம் இருந்துட்டு சொன்னார். உன் மனைவியோட அரக்கு நிற பட்டுப்புடவைக்கு நடுவுல இருக்கு. போய்ப்பாரு” . உடனே வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்தா அந்த சனியனோட பீரோல மடிச்சு வச்சிருந்த அவளோட அரக்கு கலர் பட்டுப்புடவைக்குள்ள தான்  அந்த டாக்குமெண்ட் இருந்துச்சு”. அதை பத்திரமா என் பீரோல வெக்கச் சொல்லி அவ கிட்ட எப்பவோ குடுத்திருக்கேன். அவ ஏதோ யோசனைல மடிச்சுகிட்டிருந்த பட்டுப்புடவைக்குள்ளே வச்சிட்டா போல இருக்கு.... அப்புறமா ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். அப்புறமா விசாரிச்சா அவருக்கு இதெல்லாம் சாதாரணம்னு தெரிஞ்சுது. முக்காலமும் பார்க்கற சக்தி இருக்கறவராம். காணாமல் போன ஆள்கள், தொலைஞ்சு போன பொருள்கள் எல்லாம் இருக்கற இடம் சொல்வாராம். வெளியே தெரியாத மர்மங்கள் எல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியுமாம். ஆனா மனசு வந்தா தான் வாயத் திறந்து எதாவது சொல்லுவாராம். மனசில்லாட்டி கோடி ரூபா தந்தாலும் வாயத் திறக்க மாட்டாராம்...

நடராஜன் தன் தந்தையின் உயில் பத்திரம் காணாமல் போய் படாதபாடு பட்டுத் தேடியதை மாணிக்கம் அறிவார். யாருமே வழக்கமாக யூகிக்க முடியாத இடத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் என்றால் அந்த மகான் சக்தி வாய்ந்தவர் தான்.... மாணிக்கம் தன் மாமனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார்.

சங்கரமணி நடராஜனைக் கேட்டார். “நட்ராஜ். எல்லாமே தெரிஞ்ச ஆள்னா அது வில்லங்கமாச்சே. நம்ம மனசுல எத்தனையோ இருக்கும்.... அதெல்லாம் ஒரு ஆள் தெரிஞ்சுக்கறத ரசிக்க முடியலையே

நடராஜன் சங்கரமணியிடம் சொன்னார். “ஐயா நாம எதைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறோமோ அதை மட்டும் தான் அவர் தெரிஞ்சுகிட்டுச் சொல்வார். மனசுல ஆயிரம் குப்பை வச்சிருப்போம். அத்தனையும் அவர் கிளற மாட்டார். அதுவும் அவர் ஒருத்தர் கிட்ட பேசறப்ப சம்பந்தமில்லாத ஆள்க யாரும் பக்கத்துல இருக்கக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவார். தனியா ரகசியமா தான் எதையும் சொல்வார்....

சங்கரமணி சொன்னார். “எனக்கென்னவோ இன்னும் நம்பிக்கை வரலையே நட்ராஜ்...

“அப்படின்னா நீங்களே வந்து ஒரு தடவை அவரை நேரா பாருங்களேன்.... உங்களத்தவிர வேற யாருக்குமே தெரியாத ஏதாவது ஒரு விஷயம் கேட்டுப் பாருங்களேன்... நம்பிக்கை வந்துச்சுன்னா உங்களுக்கும் தெரியாத முக்கியமான விஷயம் இருந்தா கேட்டுத் தெரிஞ்சுக்கோங்களேன்.... என்ன நான் சொல்றது

மாணிக்கத்தையும் மணீஷையும் சங்கரமணி பார்த்தார். மூவருக்குள் பார்வையாலேயே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

கடைசியில் சங்கரமணி கேட்டார். “அவர் எங்கே இருக்கார் நட்ராஜ்புதுடெல்லி அதிகாரி பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பாவமன்னிப்புக் கூண்டில் அமர்ந்தான். அதன் அடுத்த பகுதியில் அமர்ந்திருந்த மனிதன் கறுப்பு நிற உடை அணிந்திருந்தான். அவன் தலையில் பெரிய கருப்பு நிறத் தொப்பி இருந்தது. அது அவன் முகத்தை மறைத்தது.  அவன் இளைஞனா, முதியவனா, கருப்பா, சிவப்பா, உடலமைப்பு எப்படி என்பது எதுவும் தெரியவில்லை.

“சொல்லுங்கள், புதிதாக என்ன தகவல்?என்று அந்த ஆள் கேட்டான். குரல் இயல்பானதாய் இல்லை. தொண்டையில் ஏதோ பிரச்னை போல் இருந்தது. அடித்தளக் குரலாய் இருந்தது. போனில் பேசும் போது ஆரம்பத்தில் ஹலோவும், கடைசியில் சரி என்றும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டுமே சொல்வதால் அந்த அடித்தளக் குரலின் வினோதம் தனக்கு தெரிய வரவில்லையோ என்று யோசித்தான் புதுடெல்லி மனிதன்.

பின் மெல்ல புனேயில் இருந்து டைரக்டர் சொன்னதைத் தெரிவித்தான்.  பாம்பு கடித்து இறந்தவன் சாவுக்கும், இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கலாம்கிறதை நான் ரகசியப் போலீசுக்கோ, உளவுத் துறைக்கோ தெரிவிக்க முகாந்திரம் இருக்குன்னு அவர் நினைச்ச மாதிரி இருக்கு..... மேலிடத்துல பேசி முடிவு செஞ்சுக்கோங்கன்னு மெயிலும் அனுப்பி இருக்கார்.... நான் உங்க கருத்தைத் தெரிஞ்சுகிட்டு முடிவெடுக்கலாம்னு தான் போன் செஞ்சேன்....

“அந்த ஆள் சாவுல எங்களுக்கு சம்பந்தமில்லை.... ஆனாலும் போலீஸோ, உளவுத்துறையோ இதுல நுழையறத நாங்க விரும்பல....என்றது அந்த அடித்தளக்குரல்.

சரி நான் அவங்களுக்குத் தெரிவிக்கலைஎன்றான் புதுடெல்லி மனிதன்.


அடுத்த கணம் தன்னை ஏதோ ஒரு பெரும்சக்தி சூழ்வதை புதுடெல்லி மனிதன் உணர்ந்தான். பயத்தில் சிலையானவனை அந்தச் சக்தி ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 


(தொடரும்)
என்.கணேசன்