என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 15, 2018

இருவேறு உலகம் – 110


விஸ்வம் மோசடி செய்து அனுப்பிய பணம் போன பாதையை  அனிருத் விவரித்தான். “பெரும்பாலான மோசடிப்பணம் ஒரே ஒரு அக்கவுண்டுக்குப் போய் அங்கேயே எடுத்து செலவு செய்யப்படறதில்லை.  ஒரு நாள்ல அது பல நாடுகள்ல இருக்கிற பல நிறுவனங்கள், பல ஆட்கள்னு கைமாறிப் போயிட்டே இருக்கும். அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் லெட்டர்பேட் கம்பெனிகளா பேருக்கு மட்டும் இருக்கும். ஆட்களும் போலியான அடையாளம், விலாசம் எல்லாம் தந்து அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினவங்களா இருப்பாங்க. கடைசியா தான் அது உத்தேசிச்சிருந்த சரியான அக்கவுண்ட் போய் சேரும். அதைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம். அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. இந்த இடைப்பட்ட அக்கவுண்ட்கள் இருக்கிற சில நாடுகளோட சட்டதிட்டங்கள், சர்வதேச இண்டர்நெட் நடைமுறைச் சிக்கல்கள்னு உதாரணத்துக்குச் சிலதைச் சொல்லலாம். அதனால நாம் தேடிட்டு போகிற வழித்தடம் அதிகபட்சமாவே மூணாவது அல்லது நாலாவது அக்கவுண்ட்லயே நின்னுடும். அதுக்கும் மேல பணம் பத்து கை மாறி இருக்கும். அதை முறையான வழியில கண்டுபிடிக்க வழி இல்லை. என்னை மாதிரி ஆளுக குறுக்கு வழி, சட்டரீதியல்லாத வழின்னு போய்க் கண்டுபிடிக்கிறோம். ஆனால் அது குறுக்கு வழி, சட்டத்துக்கு புறம்பான வழிங்கறதுனாலயே கண்டுபிடிச்சுச் சொல்ற விஷயங்கள் எந்த நாட்டுக் கோர்ட்லயும் எடுபடாது…. அதனால நான் கண்டுபிடிச்சுச் சொல்றதும் உங்க தனிப்பட்ட தகவலுக்காக தானே ஒழிய இது சம்பந்தப்பட்டவங்களை தண்டிக்கவோ, பணத்தைத் திரும்ப வாங்கவோ உதவாது……”

அனிருத் சொன்ன தகவல்கள் க்ரிஷ் மிக நன்றாக அறிவான் என்றாலும் மாஸ்டருக்கு அந்தத் தகவல்கள் புதிது என்பதால் அவர் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார்.

அனிருத் சொன்னான். “நம்ம இயக்கத்திலிருந்து திருடப்பட்ட பணமும் அப்படித்தான் போயிருக்கு….”

மாஸ்டர் கேட்டார். “கடைசியா எந்த பேர்ல இருக்கற அக்கவுண்டுக்குப் போயிருக்கு.?”

“போய்ச் சேர்ந்தது ஒரே அக்கவுண்டுக்கு அல்ல. ஆறு அக்கவுண்டுகளுக்குப் போயிருக்கு. அதுல அஞ்சு அக்கவுண்டுகள் தீவிரவாத இயக்கங்கள். அதுவும் ஒரே கொள்கையுள்ள தீவிரவாத இயக்கங்கள் அல்ல. ஒன்னுக்கு ஒன்னு எதிரான, எதிரும் புதிருமான அஞ்சு தீவிரவாத இயக்கங்களுக்குப் போயிருக்கு…”

மாஸ்டரும், க்ரிஷும் அதிர்ந்து போனார்கள். கனத்த சிறு அமைதிக்குப் பின் க்ரிஷ் கேட்டான். ”ஆறாவது அக்கவுண்ட்?”

”அதைத் தான் கண்டுபிடிக்க முடியலை. அந்த அளவு அந்த அக்கவுண்டை பாதுகாத்து வர்றாங்கன்னா அது அந்தத் தீவிரவாத இயக்கங்களையும் விட பயங்கரமானதாகவும், ரகசியமானதாகவும் இருக்க வாய்ப்பு இருக்கு. மத்த இடங்களுக்குப் போன தொகையை விட அந்த ஆறாவது அக்கவுண்டுக்குப் போன தொகை கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு அதிகம்.”

”அதைக் கண்டுபிடிக்க வழியே இல்லையா?” மாஸ்டர் கேட்டார்.

“வழியில்லாம இல்லை. மத்ததை  எல்லாம் விட அதிகமான பாதுகாப்போட அந்த அக்கவுண்ட் இருக்கு அவ்வளவு தான். எனக்கு இன்னும் ரெண்டு மூணு நாள் தந்தீங்கன்னா கண்டுபிடிச்சு சொல்லிடுவேன்.”

அப்படிக் கண்டுபிடிப்பதை க்ரிஷிடம் தெரிவிக்க மாஸ்டர் சொன்னார். அவருக்குச் சில நாட்கள் யோக சாதகங்கள் செய்து தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருந்தது. அதனால் இது போன்ற தகவல்களை க்ரிஷிடமே தரச் சொன்னார். க்ரிஷ் உதயின் அடியாளின் செல்போன் எண்ணை அவனுக்குத் தந்து அந்த எண்ணில் தொடர்பு கொள்ளச் சொன்னான்.

அனிருத் போன பிறகு அவன் தந்து விட்டுப் போன தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை  மாஸ்டர் ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார். ஐந்தில் மூன்று அவர் அறிந்த இயக்கங்கள். மீதி இரண்டை க்ரிஷ் அவருக்கு விவரித்தான். இவனுக்குத் தெரியாத விஷயங்களே மிகவும் குறைவு என்று மாஸ்டருக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் பற்றியும் அறிந்திருக்கிறான். முக்கியமாக அடிப்படை விஷயங்களைத் தவறில்லாமல் அறிந்திருக்கிறான். அது அவரை ஆச்சரியப்படுத்தியது. இப்போது அவன் சொன்ன இரண்டு இயக்கங்கள் பற்றியும் கூட அவர்கள் கொள்கை என்ன, கோரிக்கை என்ன, அவர்கள் எதிரி யார், அவர்கள் எந்த நாடுகளில் அதிகமாய் இருக்கிறார்கள், அவர்களது முக்கியத் தலைவர்கள் யார் என்பதை யோசிக்காமல், எந்த உதவியும் இல்லாமல் சொன்னான்…

க்ரிஷிடம் மாஸ்டர் சொன்னார். “விஸ்வம் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு பணம் அனுப்பியிருந்தால் அந்த இயக்கத்தோட கொள்கைல அவனுக்கு நம்பிக்கைன்னு சொல்லலாம். ஆனா  அனிருத் சொல்ற மாதிரி எதிரும் புதிருமாய் தான் இருக்கு. இந்த ஐந்தில் இரண்டுக்கு ஒன்று எதிரி. மீதி இரண்டும் கூட கொள்கை அளவில் மத்த இயக்கங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது. ஒன்னுமே புரியலயே க்ரிஷ்”

க்ரிஷ் சொன்னான். “அஞ்சுக்குமே ஒரு பெரிய ஒற்றுமை இருக்கே மாஸ்டர். தீவிரவாதம். அதை விஸ்வம் ஆதரிக்கிறான்….”

“ஆதரிச்சு இவனுக்கு என்ன லாபம் க்ரிஷ்…”

“எதோ இருக்கு மாஸ்டர். அது தெரிஞ்சுதுன்னா அவனை முழுசா புரிஞ்சுக்கலாம். இது வரைக்கும் அவனைப் புரிஞ்சுகிட்டதில் அவன் எதுவா இருக்கிறானோ அதுக்கு எதிர்மாறாய் தான் தன்னை மத்தவங்க கிட்ட காட்டிகிட்டு வாழ்ந்திருக்கிறான். உதாரணத்துக்கு உங்க கிட்ட அமானுஷ்ய சக்திகள் தனக்கு வராத விஷயம்னும், அதுல ஆர்வம் இல்லைன்னும் காண்பிச்சிருந்தான். அதே மாதிரி தான் அவன் ஸ்டீபன் தாம்சன் கிட்டயும் சொல்லியிருக்கான். ஆனா உண்மைல அவன் அதுல உங்களையும் விட மேலயே சக்தி வாய்ந்தவனா இருந்தான். அதனால அவன் ஒன்னு சொன்னா அதுக்கு எதிர்மாறான ஆள் தான் அவன்னு நாம சுலபமா முடிவுக்கு வரலாம். ஸ்டீபன் தாம்சன் கிட்ட அவன் சொல்லியிருக்கான் ”நான் சாதாரண மனிதன்….. எனக்கு அன்பும், கருணையும், இறை நம்பிக்கையும் நிறைந்ததாய் மனித மனம் இருக்க வேண்டும், இந்த உலகம் சமாதான பூமியாகத் திகழ வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு எதிலும் ஆர்வமும் இல்லை…..” அப்படின்னா உலகம் சமாதான பூமியாகக் கூடாதுங்கறது தான் அவனோட முக்கிய கொள்கைன்னு புரியிது. அதை நான் ஸ்டீபன் தாம்சன் கிட்ட பேசறப்பவே ஓரளவு உணர்ந்தேன். அதுக்குத் தகுந்த மாதிரி தான் அவன் தீவிரவாத இயக்கங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி இருக்கான்…. தப்பான மன ப்ரோகிராம்கள் மூலமா சமூகம் எப்படியெல்லாம் சீர்குலையுதுன்னு ஸ்டீபன் தாம்சன் கிட்ட விவரமா கேட்டுத் தெரிஞ்சிருக்கான்னா அதைத் தனக்கு சாதகமா பயன்படுத்தறதுக்குன்னு தோணுது. இதை எல்லாம் பயன்படுத்தி கடைசியா அவன் என்ன சாதிக்கப் போகிறான்னு மட்டும் புதிரா இருக்கு மாஸ்டர்…. அது அனிருத் சொன்ன ஆறாவது அக்கவுண்ட் மூலமா நமக்குத் தெரிய வந்தாலும் வரலாம்….”

’எல்லா அறிவையும் மனிதன் உயரவும் பயன்படுத்த முடியும், அழிக்கவும் பயன்படுத்த முடியும். அறிவுக்கென்று தனி ஒரு வழிப்பாதை இல்லை. அதனாலேயே ஞானம் சேராத அறிவை அந்தக்கால ரிஷிகள் போதிக்கவில்லை.’  மாஸ்டரின் மனம் கனத்தது. உலக நன்மைக்காக நல்ல உள்ளங்கள் அனுப்பி வைத்த பணம், சேர்த்த செல்வம் எல்லாம் இப்போது அழிக்கும் சக்திகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில் விளையும் அழிவுகளுக்கெல்லாம் அவரே அல்லவா பொறுப்பு ஏற்க வேண்டும். இதைத் தடுத்து நிறுத்தா விட்டால் அவரை அவரே மன்னிக்க முடியாது. அதைச் சாதிக்க வேண்டுமென்றால் சற்று முன் முடிவெடுத்தபடி யோக சாதகங்களைத் தொடர்ந்து தீவிரமாகச் செய்ய வேண்டும். யோக சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்….. மெல்ல எழுந்த மாஸ்டர் க்ரிஷிடம் சொல்லிக் கொண்டு தனிமையில் தியானத்துக்குச் சென்று விட்டார்.

க்ரிஷுக்கும் ஹரிணி ஏதாவது தகவல் அனுப்பி இருக்கிறாளா என்று பார்க்க இருந்தது. அவனும் அலைவரிசைகளில் ஹரிணியைத் தொடர்பு கொள்ள முயன்றான். ஹரிணியின் உதடுகளின் ஸ்பரிசம் அவன் உதடுகள் உணர்ந்தன. எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இவள் குறும்பு போக மாட்டேன்கிறது என்று தோன்றினாலும் மனம் ரசித்தது. மாஸ்டரின் குருவின் குடிலில் உட்கார்ந்து கொண்டு இந்த ரசனை தேவை இல்லை என்று எண்ணியவனாக வெளியே வந்து ஒரு மர நிழலில் அமர்ந்தான்.

மெல்ல பத்மாவதி அவன் நினைவில் வந்தாள். ஏன் இவள் அம்மாவை நினைக்கிறாள். அம்மாவிடம் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறாளோ?.... ”சே… முட்டாளே அவள் அவளுடைய அம்மாவை நினைத்திருக்க வேண்டும்.” என்று தன்னையே திட்டிக் கொண்டான். அம்மா என்றவுடனே அவனுக்கு அவன் அம்மா நினைவு வந்து விட்டது. அவளுக்கு அவள் அம்மா நினைவு அதிகம் வந்திருக்க வேண்டும். அவளைக் கவனிக்கவும், ஆறுதல் சொல்லவும் சொல்கிறாள் போல் இருக்கிறது…..

அவனும் அவளை மானசீகமாக முத்தமிட்டான். சரி என்ற தகவலை அனுப்பினான். அவளும் அதை ரசித்துப் பெற்றது போல் உணர்ந்தது கற்பனையா இல்லை நிஜமா தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அடுத்ததாக அவள் சொன்னதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.   நேரம் நிறைய போனது. படிகளில் கீழே இறங்குவது போல் கடைசியில் ஒரு காட்சி கண்முன் வந்து நின்றது. இது என்ன சுரங்கப் பாதையா? கீழே போக வேண்டுமா?

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, November 14, 2018

முந்தைய சிந்தனைகள் 38

என் நூல்களிலிருந்து சில சிந்தனைத்துளிகள்:என்.கணேசன்

Monday, November 12, 2018

சத்ரபதி 46ஞ்சிக்கப்பட்டதை உணர்வதற்கு முன் ஷாஹாஜி  இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். வெற்றி, தோல்விகளை வாழ்க்கையில் நிறைய பார்த்தவர் அவர். வஞ்சகமும் அவர் கண்டிருக்கிறார். ஆனால் இது வரை அவர் இப்படி சிறைப்படுத்தப்பட்டதில்லை. ஜாம்பவான்களிடம் கூட அவர் இது வரை சிக்கிக் கொண்டதில்லை. அப்படிப்பட்டவர் ஒரு சாதாரண ஒரு பகுதியின் சாதாரணத் தலைவனிடம் சிக்கி ஏமாந்திருக்கிறார். அது அவரை நிறையவே பாதித்தது.

கதவைத் திறந்து பாஜி கோர்படே சக மனிதன் ஒருவனிடம் சொல்வது போலச் சாதாரணமாகச் சொன்னான். “உங்களைக் கைது செய்து அழைத்து வரும்படி சுல்தானின் உத்தரவு. என்னால் மீற முடியவில்லை. தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்…..”

தலைவரே இல்லை, ஐயா இல்லை, ஏன் பெயரே இல்லை. வெறும் அறிவிப்பு மட்டும் செய்து விட்டு பாஜி கோர்படே போய் விட்டான். அவருடைய ஆட்களும் செயலற்றுப் போயிருப்பார்கள், சிறைப்பிடிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை ஷாஹாஜி யூகித்தார்.  விதியைக் கூட அவரால் இப்போது நொந்து கொள்ள முடியவில்லை. எல்லாம் அவருடைய முட்டாள்தனம்….

அடுத்த இரண்டு நாட்களில் அவரை பீஜாப்பூர் சுல்தானின் முன்னிலையில் பாஜி கோர்படே நிறுத்தினான். ஆதில்ஷா ஷாஹாஜியைப் பார்த்த பார்வையில் பழைய நட்பு தெரியவில்லை. எதிரியைப் பார்ப்பது போலவே பார்த்தார். ஷாஹாஜி அவருக்கு வணக்கம் தெரிவித்த போது அதையும் அவர் அங்கீகரிக்க மறுத்தார்.

ஆனால் அவர் பாஜி கோர்படேயை முதுகில் தட்டிப் பாராட்டினார். “சொன்னபடியே சாதித்து வந்திருக்கிறாய் பாஜி கோர்படே. நான் இவ்வளவும் வேகமாகவும் கச்சிதமாகவும் நீ காரியத்தை முடிப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை…. உன் திறமையை மெச்சுகிறேன்”

பாஜி கோர்படே முன்பு ஷாஹாஜியிடம் காட்டிய பணிவை இப்போது ஆதில்ஷாவிடம் காட்டினான். “தங்களுக்குப் பணிவிடையாற்ற முடிந்ததில் பெருமை அடைகிறேன் அரசே”

“நாளை அரசவைக்கு வா பாஜி கோர்படே. உனக்கு உரிய மரியாதையுடன் வெகுமதிகளும் காத்திருக்கின்றன.”

பிரகாசித்த முகத்துடன் அவரைப் பயபக்தியுடன் வணங்கி விட்டு பாஜி கோர்படே சென்று விட்டான். அவனை அனுப்பிய பிறகு சிறிது நேரம் ஷாஹாஜியையே ஆதில்ஷா கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஷாஹாஜியாக எதையாவது சொல்வார் என்று அவர் எதிர்பார்த்தது போல் இருந்தது. ஆனால் ஷாஹாஜி தன் வணக்கத்தையும் சுல்தான் அங்கீகரிக்காததால் இனி எதுவும் தானாகப் பேசுவதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து மௌனமாகவே நின்றார்.

பின் ஆதில்ஷாவே ஆரம்பித்தார். “உங்களை நான் என் நண்பராகவே நினைத்து வந்திருக்கிறேன் ஷாஹாஜி. அதனால் உங்களிடமிருந்து இந்த வஞ்சகத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை…”

“உங்களை வஞ்சிக்க நான் என்றுமே எண்ணியதில்லை அரசே. தாங்கள் என்னைச் சிறைப்படுத்தியது கூட எனக்கு வலிக்கவில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் பெரும் வேதனையை நான் உணர்கிறேன்.” ஷாஹாஜி உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

“உங்கள் மகன் என் கஜானாவுக்கு வந்து சேர வேண்டிய செல்வத்தை அபகரித்ததும், என் கோட்டைகளை அபகரித்ததும் வஞ்சகத்தில் சேர்ந்தது அல்லவா ஷாஹாஜி?” ஆதில்ஷா ஆக்ரோஷத்துடன் கேட்டார்.

“என் மகன் செய்த செயல்களுக்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் மன்னா?”

“அவன் வயதில் இத்தனையைத் திட்டமிட்டு செயல்படுத்த முடியாது என்பதால் எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்து அதன்படி தான் நடந்திருக்கிறது என்றும் எனக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன ஷாஹாஜி”

“அப்படி உங்களுக்குத் தகவல்கள் கிடைத்திருக்குமானால் அவை தவறான தகவல்கள் அரசே. என்னைப் பற்றியும் என் மகனைப் பற்றியும் முழுவதுமாக அறிந்திருக்கும் நீங்கள் அந்தத் தகவல்களை நம்புவது என் வேதனையை அதிகரிக்கிறது மன்னா?”

“உங்களைப் பற்றி நான் முழுவதுமாக அறிந்திருப்பதாக நம்பியே நான் ஏமாந்து போயிருப்பதாகவும் அனைவரும் கூறுகிறார்கள் ஷாஹாஜி”

“இப்படி அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதைக் காட்டிலும் உடனடியாக என் நெஞ்சில் ஒரு ஈட்டியைப் பாய்ச்சி விடுவது சிறந்தது அரசே” ஷாஹாஜி வேதனையுடன் சொன்னார்.

“உங்கள் மகன் சிவாஜி என் நிதியையும், கோட்டைகளையும் கைப்பற்றியது அபாண்டமா? நான் சொல்வது அபாண்டமா?” சினம் குறையாமல் ஆதில்ஷா கேட்டார்.

“என் மகன் உங்கள் நிதியையும், கோட்டைகளையும் கைப்பற்றியதில் என் பங்கு இருப்பதாக அனைத்தும் அறிந்த நீங்கள் சொல்வதைத் தான் அபாண்டம் என்கிறேன்”

“அனைத்தும் அறிந்திருந்தால் நான் ஏன் இப்படி ஏமாந்து நிற்கிறேன் ஷாஹாஜி! நான் என்ன அறிந்திருக்கிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?”

“நானும் என் மகன் சிவாஜியும் சேர்ந்து ஒரு கூரையின் கீழ் வாழ்ந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவன் நடவடிக்கைகளில் என் ஆதிக்கம் இருந்ததேயில்லை. அதற்கான வாய்ப்புகளை விதி எனக்கு ஏற்படுத்தித் தந்ததேயில்லை. இதுவே சாம்பாஜியோ, வெங்கோஜியோ இப்படி நடந்து கொண்டு நீங்கள் குற்றம் சாட்டினால் அவர்கள் நடவடிக்கைகளில் என் பங்கு இல்லா விட்டாலும் கவனக்குறைவாக இருந்த குற்றத்தையாவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். சிவாஜியைப் பொருத்தவரை அவன் ஆரம்பத்திலிருந்தே தான்தோன்றித் தனமாகவே நடந்து வருகிறான்…..”

ஆதில்ஷா ஷாஹாஜியையே பார்த்தபடி நின்றிருந்தார். ஷாஹாஜி சொன்னதில் உள்ள உண்மையை அவரால் மறுக்க முடியவில்லை. அவர் முகத்தில் சினம் குறைந்திருந்தது.

ஷாஹாஜி தொடர்ந்து சொன்னார். “தாதாஜி கொண்டதேவ் இருந்த வரையில் எனக்கு அங்கிருந்து செலவுகள் போக மீதமிருந்த வரிவசூல் தொகையாவது சரியாக வந்து கொண்டிருந்தது. அவர் இறந்தவுடனே அதை அனுப்புவதையும் என் மகன் நிறுத்தி விட்டான். அங்குள்ள மக்களின் நலத்திற்குத் தான் அதை செலவழிக்க முடியும் என்றும் என் செலவுகளை கர்னாடகத்தில் வரும் வருவாயிலேயே நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டான். இது என் ஆதிக்கத்தில் அவன் இருப்பதன் இலட்சணமா? தயவு செய்து கூறுங்கள்… “

ஆதில்ஷாவுக்கு கல்யாண் நிதியைப் பறிகொடுத்த வீரர்கள் ’அங்கு வசூல் செய்த நிதியில் சுல்தான் பீஜாப்பூரில் கட்டிடங்கள் கண்ட வேண்டியதில்லை’ என்ற வகையில் சிவாஜி சொன்னதாகத் தெரிவித்தது நினைவுக்கு வந்தது….. அவருக்கு எழுதிய கடிதத்திலும் ஷாஹாஜிக்கு தெரிவித்ததையே அவன் தெரிவித்திருக்கிறான். ஷாஹாஜி சொல்வதும் இதற்கு ஒத்துப் போவதால் இதில் ஷாஹாஜி பொய் சொல்லவில்லை என்பதை  அவர் உணர்ந்தார்….

ஷாஹாஜி தொடர்ந்து சொன்னார். “என் இளைய மனைவியின் சகோதரனை அங்கு சுபா பகுதியின் தலைவனாக நியமித்திருந்தேன். அவன் அங்குள்ள வசூலை சிவாஜிக்குத் தர மறுத்தான் என்பதற்காக அவனை அங்கிருந்து துரத்தி விட்டிருக்கிறான் சிவாஜி. இதிலும் என் சம்மதத்தை அவன் எதிர்பார்க்கவில்லை….. அரசே! இப்போதும் அவன் செயலைக் கண்டித்து நான் கடிதம் அனுப்பியதற்கு அவன் வளர்ந்து விட்டதாகவும், எது நல்லது எது கெட்டது என்பது தெரியும் என்றும் பதில் அனுப்பி இருக்கிறான்…..”

ஷாஹாஜியின் பங்கு இதில் இல்லை என்பது ஆதில்ஷாவுக்கு மெல்லப் புரிந்தது. இப்போது ஆதில்ஷாவுக்கு சிவாஜி பிரம்மாண்டமாகவே தெரிந்தான். இத்தனை சிறிய வயதில் இத்தனை துணிச்சலா? அதை நிறைவேற்றுவதில் இத்தனை சாமர்த்தியமா? அவனை இப்படியே விடுவது பேராபத்து என்பதும் அவருக்குப் புரிந்தது. சிறிது யோசித்தார்….

ஷாஹாஜி மீதுள்ள கோபம் தணிந்து விட்டிருந்தாலும் ஷாஹாஜி மீது ஆதில்ஷாவுக்குப் பச்சாதாபம் ஏற்பட்டு விடவில்லை. யோசனைக்குப் பின் அவர் கண்டிப்பான குரலில் உறுதியாகவே சொன்னார். “நீங்கள் சொன்னது உண்மையாகவே இருக்கலாம் ஷாஹாஜி. ஆனால் உங்கள் மகனை நான் சும்மா விட முடியாது. அவனை நான் தண்டிக்காமல் விட்டால் அவனைப் பார்த்து தைரியம் பெற்று ராஜ்ஜியம் முழுவதும் யாரும் கிளம்பி விடும் அபாயம் இருக்கிறது. அதை நான் அனுமதிக்க முடியாது. சிவாஜியை இங்கே வரவழைக்கவும் அவனைத் தண்டிக்கவும் எனக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு நீங்கள் தான். அதனால் உங்களை நான் விடுதலை செய்வதாக இல்லை….”

ஆதில்ஷா காவலர்களைப் பார்த்து சைகை காட்டி விட்டுப் போய் விட்டார். காவலர்கள் ஷாஹாஜியைச் சிறையில் அடைத்தார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, November 8, 2018

இருவேறு உலகம் – 109

க்ரிஷ் மாஸ்டரிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். “மாஸ்டர் பணம் தான் இலக்குன்னா அதுக்கு இவ்வளவு சக்திகளை அந்த ஆள் வசப்படுத்தி இருக்க வேண்டிய அவசியமே இல்லையே. பணம் சம்பாதிக்க அதைவிட சுலபமான வழிகள் எத்தனையோ இருக்கே?”

மாஸ்டர் யோசனையுடன் சொன்னார். “எனக்கும் அது தான் புரியலை க்ரிஷ். ஆனா பணம் கையாடல் நடந்திருக்கே…. வேற உத்தேசம் எதுவும் இருக்கற மாதிரி தெரியலையே.”

க்ரிஷ் யோசித்து விட்டுச் சொன்னான். “இந்தக் கையாடல் பணம் எங்கே போயிருக்குன்னு தெரிஞ்சுதுன்னா அதை வெச்சு ஏதாவது  கண்டுபிடிக்க முடியுமான்னு பார்க்கலாம்”

“அதுக்கு அனிருத்துன்னு எங்க இயக்கத்து இளைஞன் கிட்ட சொல்லி இருக்கோம். அவன் ஆன்லைன்ல நடக்கற மோசடிகளைக் கண்டுபிடிக்கறதுல பேர் போனவன். அவன் சர்வதேசப் பரிவர்த்தனைகள் மூலமா நடக்கிற மோசடிகளைக் கூட நிறைய கண்டுபிடிச்சிருக்கான். அவன் கருத்துக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன். அவன் நாளைக்கு நேர்லயே வந்து சொல்றதா சொல்லியிருக்கான்….. அவனை மாறுவேஷத்துல வரச் சொல்லி இருக்கேன்…. விஸ்வம் ஏமாத்திட்டு போனதுல நல்லது எதுவும் நடக்கலைன்னு சொல்ல முடியாது. அவன் எச்சரிக்கையா இருக்கணும்னு கத்துக்கொடுத்துட்டு போயிருக்கான்…” சொல்லும் போது மாஸ்டரின் முகத்தில் சின்னதாய் வருத்தம் கலந்த ஒரு புன்னகை வந்து போனது.


ரிணிக்குத் தாயின் நினைவு அதிகம் வந்தது. சண்டை போட்டு பேச்சு வார்த்தை நின்ற சமயத்தில் அவள் காணாமல் போனதால் அம்மாவின் வருத்தம் மிக அதிகமாய் இருக்கும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. அம்மாவின் வருத்ததில் குற்ற உணர்ச்சியும் நிறைய சேர்ந்திருக்கும். அம்மாவைக் கொஞ்சம் சமாதானப்படுத்து என்று க்ரிஷுக்கு அனுப்பிய முதல் தகவலில் சேர்த்து சொல்லி இருக்க வேண்டும் என்று தோன்றியது. முதல் தகவலே அவனுக்குக் கிடைத்ததா, அவன் சரியாகப் புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்றும் தோன்றியது. தகவலை முத்தத்துடன் அனுப்பி இருக்கிறாள். அடுத்த தகவலுடன் அம்மா பற்றியும் அவனுக்கு நினைவுபடுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்ததாக தகவல் அனுப்ப இந்த இடத்தையும் சூழலையும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தாள். மிஸ்டர் எக்ஸ் முழு நாளும் அவளைக் காத்துக் கொண்டு இருக்கவில்லை என்று கண்டுபிடித்தாள். ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். பகலிலும் இரவிலும்.  அவன் பகலில் உணவு கொடுத்து விட்டுப் போனவன் மறுபடி இரவு உணவு கொண்டு வரும் போது வருகிறான் என்பது தெரிந்தது. இரவு வருபவன் திரும்பப் போவதில்லை. மறுநாள் காலை தான் போகிறான். அவன் வரும் போது உள்ளே இருக்கும் இன்னொரு நபர் வெளியே போகிறான். எக்ஸ் போவதற்கு முன் அந்த இன்னொரு நபர் வந்து சேர்கிறான்.. இதை எல்லாம் அந்தக் கட்டிடத்தில் இருந்து ஒரு பைக்கும் ஒரு ஸ்கூட்டரும் கிளம்பும் சத்தம், வந்து சேரும் சத்தம் இரண்டையும் வைத்தும் கட்டிடத்தின் கீழ்க்கதவு திறக்கும் போதும், மூடும் போதும் வரும் கிறீச் சத்தத்தை வைத்தும் அவள் அனுமானித்தாள். எக்ஸும் அந்த இன்னொரு மனிதனும் மெல்லக்கூடப் பேசிக் கொள்ளவில்லை. எக்ஸ் கட்டிடத்துக்குள் வந்தவுடன் அவன் அவள் அறைக்கு வந்து விடுவதில்லை. சுமார் அரை மணி நேரமாவது கழித்து தான் வருவான். உள்ளே வந்தவுடன் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதைப் பார்த்து விட்டு பிறகு தான் அவள் இருக்கும் அறைக்கு வருகிறான் போல இருந்தது.

இரண்டாவது வேளை உணவு கொண்டு வரும் போதே மனோகர் கேட்டான். “நீ தியானம் செய்கிறாயா?”

“தியானமா? நானா? என்னை நீ ரொம்பவே உசத்திட்டே தேங்க்ஸ். தியானம் எல்லாம் க்ரிஷ் சப்ஜெக்ட். எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது. ரெண்டு நிமிஷம் தியானம் செய்ய உக்காந்தா ரெண்டாயிரம் எண்ணம் அந்த ரெண்டு நிமிஷத்துல வந்துடும்….” என்று சொல்லி ஹரிணி சிரித்தாள். அதே சமயம் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். ’க்ரிஷுக்குத் தகவல் அனுப்ப உக்காந்ததை சிசிடிவி கேமரால பாத்து தியானம்னு நினைச்சுகிட்டான் போல் இருக்கு. இனிமே கவனமா வேற விதமா அனுப்பணும்….’

மனோகர் அவள் பற்றி விசாரித்து நிறைய தெரிந்து வைத்திருந்தான். அதில் தியானம் அவளுக்குத் தெரிந்ததாய் யாரும் சொல்லவில்லை. கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் அவள் உடனே சொன்ன பதில் நீக்கி விட்டது.

அடுத்த நாள் காலையில் மனோகர் போய் அரை மணி நேரம் கழித்து  கட்டிடத்தின் கீழே பெரிய வாகனம் ஒன்று வந்து நின்ற சத்தம் கேட்டது. லாரியாக இருக்க வேண்டும்…. அதிலிருந்து இறங்கியவர்கள் சத்தமாக எதையோ பேசிக் கொண்டார்கள். லாரி டிரைவர் மற்றும் கூலி ஆட்கள் போல் தெரிந்தது. கீழ்க்கதவு கிறீச் சத்தத்துடன் திறக்கப்பட்டது. அவர்கள் வேறு யாரோ நபர் ஒருவரிடமும் பேசினார்கள். அந்த ஆள் தான் இந்தக் கட்டிடத்தில் எக்ஸ் இல்லாத போது தங்குபவனாய் இருக்க வேண்டும். சத்தமில்லாமல் பேசினதால் அவன் பேசியது என்ன என்று அவளுக்குக் கேட்கவில்லை. ஏதோ பொருட்களை இறக்கி வைக்கிறார்கள் என்பது கேட்ட சத்தங்களில் இருந்து தெரிந்தது.

இங்கிருந்து கத்தினால் அவர்கள் வந்து காப்பாற்றக்கூடுமோ என்கிற எண்ணம் அவளுக்கு உடனே வந்தது. ஆனால் அது ஆபத்தாகவும் தோன்றியது. எல்லாருமே  எதிரியின் ஆட்களாக இருக்கலாம். அதனால் தான் தைரியமாக அவளை அங்கே வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டாலும் இங்கு காவல் காக்கும் இன்னொருவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கலாம். எனவே இப்போது கத்துவது எக்ஸ் முன்பே எச்சரித்தபடி சித்திரவதையில் முடியலாம். அவசரப்படக்கூடாது என்று தீர்மானித்து ஹரிணி மௌனம் காத்தாள். நாற்பது நிமிடங்கள் கழித்து கிறீச் சத்தத்துடன் கதவு சாத்தப்பட்டது. லாரி கிளம்பிப் போன சத்தம் கேட்டது. மறுபடி கட்டிடத்தில் அமைதி. இப்போது தெருவில் போய் வந்து கொண்டிருந்த வாகனங்கள் சத்தம் மட்டும் தான் கேட்க ஆரம்பித்தது. அதுவும் அதிகம் இல்லை. போக்குவரத்து குறைவான தெருவாக இது இருக்க வேண்டும். இந்தக் கட்டிடம் ஒரு குடோனாக இருக்கக்கூடும். இந்த முதல் மாடியும் குடோனாகவே இருக்கலாம். அதனால் தான் ஜன்னல் எதுவும் இல்லை. இத்தனை உயரத்தில் மேல் சுவர். கடத்தலுக்காகவே கட்டியது போல் இருக்கிறது என்று முன்பு சந்தேகப்பட்டது தவறு. கட்டும் போதே அப்படி யாரும் கட்ட மாட்டார்கள். குடோனுக்காகத் தான் அப்படிக் கட்டி இருக்கிறார்கள். அது கடத்தலுக்காகவும் பொருத்தமாக இருப்பதால் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் அடிக்கடி திறக்காத எப்போதாவது திறக்கும் குடோன்.

இது குடோனாக இருக்கலாம் என்ற தகவலை க்ரிஷுக்கு எப்படி அனுப்புவது என்று ஹரிணி யோசிக்க ஆரம்பித்தாள்….


மாஸ்டருக்குத் தன் குருவைப் பற்றிச் சொன்ன அளவு சலிக்கவில்லை. பேரன்போடு குரு தனக்காகச் செய்த ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்தார். அவர் குருவும் அவரும் எங்கெல்லாம் அமர்ந்து பல விஷயங்களைப் பேசுவார்கள், அவர் எவ்வளவு எளிமையானவர், எவ்வளவு நல்லவர், அவர் போதித்திருந்த மறக்க முடியாத பெரிய உண்மைகள் என்னென்ன என்று அவர் சொல்ல க்ரிஷ் சுவாரசியத்தோடு கேட்டுக் கொண்டான். இப்படி நேசிக்கும் ஒரு சிஷ்யன் கிடைக்க இவர் குரு கண்டிப்பாக தவம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது….

அவனிடம் மனம் விட்டுப் பேசியதில் மாஸ்டர் மனம் மிக லேசானது. “உன் பயிற்சிகள் எப்படிப் போகிறது?” என்று கேட்டார்.

”சிலசமயம் நல்லா ஒழுங்கா போகுது. ஆனா சிலசமயம் மனசு முரண்டு புடிக்குது. ஹரிணியைக் காப்பாத்திட்டு மத்த எல்லாத்தையும் செய்னு கறாரா சொல்லுது…. அது சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு ‘இந்தப் பயிற்சிகள் எல்லாமே அவளைக் காப்பாத்தறதுக்காகவும் தான். முழு பலத்தோடு இருந்தால் தான் எதிரியை ஜெயிக்க முடியும்’னு பொறுமையா சொல்லி திரும்ப பயிற்சிகளுக்குக் கொண்டு போறேன். சில சமயம் மனசு ஒத்துழைக்குது. சில சமயம் புரிஞ்சுக்க மறுக்கற குழந்தை மாதிரி அழுது தகராறு பண்ணுது” என்று சொல்லி க்ரிஷ் வருத்தம் கலந்து சிரித்தான்.

க்ரிஷின் மிகப்பெரிய பலமே எதையும் எதிர்ப்பதில் தன் சக்திகளை அதிக விரயம் செய்யாமல் இருப்பது தான் என்று மாஸ்டர் நினைத்தார். உறுதியாக இருக்கும் அதே சமயம் தீவிரமாய், மூர்க்கமாய் எதற்கு எதிராகவும் அவன் மல்லுக்கட்டி நிற்பதில்லை….

இருவரும் நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தார்கள். மறு நாள் காலை அனிருத் தாடி, மீசை, சீக்கியர்களின் குல்லாய் எல்லாம் போட்டுக் கொண்டு அங்கு வந்தான். அவன் கண்டுபிடித்திருந்த தகவல்கள் அவர்களுக்குப் பேரதிர்ச்சியாகவும், தலைசுற்ற வைப்பதாகவும் இருந்தன.

(தொடரும்)


என்.கணேசன்

Wednesday, November 7, 2018

அறியாதவனும் கடைத்தேற முடியும்!


பிறப்பு இறப்பு என்ற முடிவில்லாத சக்கரவட்டத்திலிருந்து விடுபட்டு முக்தியடையும் வழிகளை விளக்கிக் கொண்டு வந்த ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகக் கூறுகிறார்.

பரமாத்மாவைச் சில மனிதர்கள் தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால் தியானத்தின் மூலமாக இதயத்தில் பார்க்கிறார்கள். மற்றும் சிலர், ஞானயோகத்தின் மூலமாகவும், வேறு சிலர் கர்மயோகத்தின் மூலமாகவும் கண்டடைகிறார்கள்.

மற்றும் சிலர் இதையெல்லாம் அறியாமல், அறிந்த பிறரிடமிருந்து கேட்டு, அதற்கேற்ப உபாசனை செய்கிறார்கள். அப்படிக் கேட்பதையே உயர்ந்ததாகக் கொண்டவர்களும் பிறவிப் பெருங்கடலைத் கடக்கிறார்கள். 

பரமாத்மாவை உணர்வதற்கு தியானம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகிய வழிகள் உதவி புரியும் என்று சொன்னதோடு நிற்காமல் இவை எவையுமே அறியாதவர்களும் அறிந்தவர்களிடமிருந்து கேட்டு அந்த வழியிலேயே உயர்ந்த முறையில் உபாசனை செய்தால் அவர்களும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடலாம் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

இது மிகவும் நுட்பமான பொருள் பொதிந்த சுலோகமாகும். தியானம் அறிந்தவன். ஞானம் அறிந்தவன், கர்மயோகம் அறிந்தவன் எல்லாம் அறிந்த காரணத்தினாலேயே பரம்பொருளை அடைந்து பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுவதில்லை. அறிந்ததை உள்ளூர உணர்ந்து, அதை அப்படியே பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே எல்லாம் பயன் அளிக்கின்றன. அறிவால் அறிந்து அதை உணர்வுக்கும், உள் மனதிற்கும், வாழ்க்கைக்கும் கொண்டு வராதவன் அறிவுஜீவியாகவே இருந்தாலும் முட்டாளாகவே கருதப்படுவான்.

இதைத் திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா
பேதையின் பேதையார் இல்.

உயர்நூல்களைப் படித்துப் புரிந்து கொண்டும், அவற்றை அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்தும் அந்த உயர்வழிகளின்படி நடக்கத் தவறுபவனைப் போன்ற முட்டாள் உலகத்தில் வேறில்லை என்பது வள்ளுவர் கூற்று. அதனால் அறிவது முக்கியம் அல்ல. அறிந்தது வாழ்க்கை முறையாக மாற வேண்டும். அதன் பின் தான் மனிதன் பிறவித் தளையிலிருந்து விடுபடுகிறான்.

இதையே தான் ஸ்ரீகிருஷ்ணரும் சூட்சுமமாகச் சொல்கிறார். தியான முறைகள் அறிந்திருப்பது பெரிதல்ல. தியானம் செய்து இறைவனை நுண்ணிய புத்தியால் இதயத்தில் பார்க்க முடிவது தான் வெற்றி. ஞானம் பற்றியும், கர்மாவைப் பற்றியும் அறிந்திருப்பது பெரிய விஷயமல்ல. அவை வாழ்க்கையின் பகுதிகளாகும் போது தான் ஞான யோகமும், கர்ம யோகமுமாகின்றன. அதன் பின் தான் பரமாத்மாவை அறிவது சாத்தியம். பிறப்பு இறப்பு சங்கிலித் தொடரிலிருந்து தப்பிப்பது சாத்தியம்.

தியானமும், ஞானமும், கர்மாவைக் குறித்த விளக்கங்களும் ஒருவனுடைய அறிவுக்கு எட்டவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவன் கடைத்தேற வழியுண்டா என்றால் உண்டு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.  அறிந்த சான்றோர்களிடம் கேட்டு அவர்கள் கூறிய படியே உயர்வழியில் நடந்து உபாசனை செய்தால் அவர்களும் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபட முடியும் என்கிறார் அவர்.

அதாவது, எந்த உயர்வழியையும் ஏன் எதற்கு என்று அறியாவிட்டாலும் எப்படி என்பதை அறிந்தவர்களிடம் கேட்டு அப்படியே சிரத்தையாகப் பின்பற்றுபவன் அறிந்து பின்பற்றி வாழ்பவர்களைப் போலவே பயன் அடைகிறான் என்கிறது பகவத் கீதை. மொத்தத்தில் அறிவதை விட அதிக முக்கியத்துவமும், மகத்துவமும். பின்பற்றுவதற்கே தரப்படுகிறது.   இதை ஆன்மீகத்தில் நாட்டமுள்ள ஒவ்வொருவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொரு எளிய உதாரணத்தையும் இங்கு கூறலாம். ஒரு அற்புதமான இடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே நடந்தும் செல்லலாம், காரிலும் செல்லலாம், பஸ்ஸிலும் செல்லலாம், ரயிலிலும் செல்லலாம், விமானத்திலும் செல்லலாம் என்று வைத்துக் கொள்வோம். வழிகளை மிக நன்றாக அறிந்தவர்களும், இந்த வாகன வசதிகளையும் நுட்பமாய் தெரிந்தவர்களும், அதற்காகச் செலவு செய்யும் வசதியும் படைத்தவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறிந்தும் அங்கே செல்லாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொருவர் இருக்கிறார். அவர் எதையும் அறியாத தற்குறி. ஆனால் அவருக்கு அங்கே போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதனால் அறிந்த பலரிடம் போகும் வழி, வாகன வசதிகள் பற்றி அறிந்து கொண்டு கஷ்டப்பட்டு அங்கே போய் விட்டும் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த அறியாத மனிதரே அல்லவா அறிந்தவர்களைக் காட்டிலும் சாதனையாளர். அவரே அல்லவா இலக்கை எட்டி இருக்கிறார். பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பலர் உதவிகளைக் கேட்டுப் பெற்று இருக்கலாம். ஆனால் அந்த இலக்கைப் பொறுத்தவரை அறிந்தவர்களை விட அவரே சிறந்தவர், வெற்றியாளர் என்று அல்லவா நாம் கருத வேண்டும்!

பதிமூன்றாம் அத்தியாயத்தின் இறுதியில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

பரதசிரேஷ்டனே! எத்தனை வகை தாவர, விலங்கு வகைகள் உண்டாகின்றனவோ அவை அனைத்தும் க்‌ஷேத்திரம், க்‌ஷேத்ரத்தக்ஞன் இவ்விரண்டின் சேர்க்கையாலேயே உண்டானதென்று அறிவாயாக.

எல்லா உயிர்களிலும் சமமாக நிற்பவனும், அழியும் பொருள்களில் அழியாமல் இருப்பவனுமான பரமேஸ்வரனைக் காண்பவனே உள்ளதை உள்ளபடி அறிந்தவனாவான்.

எல்லா உயிர்களிலும் சமமாக ஈஸ்வரன் அமர்ந்திருப்பதைக் கண்டவன், தனக்குத் தானே தீங்கிழைக்க மாட்டான். அதனால் அவன் உயர்ந்த கதியை அடைகிறான்.

இவ்வாறு க்‌ஷேத்திரம் க்‌ஷேத்திரக்ஞனுக்கு இடையே வேறுபாட்டையும், பிரகிருதி, பிரகிருதியின் செயல்களில் இருந்து விடுபடுவதையும் அவர்கள் ஞானக்கண்ணால் தத்துவரீதியாக அறிகிறார்களோ அந்த மகாத்மாக்கள் பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்.

க்‌ஷேத்திரம், க்‌ஷேத்திரக்ஞன் பற்றி முதலிலேயே விளக்கங்கள் பார்த்தோம். எல்லாம் ஜடப்பொருளுடன், உயிர்ப்பொருளின் சேர்க்கையே என்றும் எல்லா உயிர்களிடமும் அந்தர்யாமியாக பரமேஸ்வரன் உறைந்து கொண்டிருக்கிறான் என்றும் புரிந்த பின் யாரும் தோற்றங்களுக்கு அதிகம் மதிப்பும், முக்கியத்துவமும் தர மாட்டார்கள். அப்படி முக்கியத்துவம் தருபவர்கள் மேலே சொன்ன உண்மையினை உள்ளூர உணர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ள சாதாரண அறிவுள்ள மனிதர்கள் துணிய மாட்டார்கள். ஆனால் தன்னில் இருக்கும் பரம்பொருளே எல்லா உயிர்களிலும் சரிசமமாக இருக்கிறான் என்ற ஞானம் பெற்ற உயர்ந்த மனிதர்களோ அடுத்தவர்களுக்கும் தீங்கிழைக்கத் துணிய மாட்டார்கள். அது  தான் ஞானத்தின் அடையாளம் என்கிறது பகவத் கீதை.

மறுபடியும் இவ்வாறாக, இதுவரை இந்த அத்தியாயத்தில் சொன்ன உண்மைகளை ஸ்ரீகிருஷ்ணர் தொகுத்துச் சொல்லியிருப்பதுடன் 13வது அத்தியாயமான க்‌ஷேத்திர க்ஷேத்திரக்ஞ விபாக யோகம் நிறைவு பெறுகிறது.

பாதை நீளும்….

(தொடரும்)
என்.கணேசன்

Tuesday, November 6, 2018

இருவேறு உலகம் 108

 (தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

க்ரிஷ் ரிஷிகேசத்திற்குக் கிளம்புவதற்கு முன் ஹரிணியிடம் இருந்து வந்திருந்த தகவல்களை செந்தில்நாதனிடம் காட்டினான். அவன் காட்டிய படங்களையும், யூகித்த விஷயங்களையும் கேட்டுக் கொண்ட அவர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் ஹரிணியை வைத்திருக்க வாய்ப்புக் குறைவு என்றார். “கடத்தின ஆள யாருமே எல்லாரும் அடிக்கடி போறதும் வர்றதுமாய் இருக்கற ஒரு கட்டிடத்தில் அடைச்சு வெக்க மாட்டாங்க க்ரிஷ்அப்படிச் செய்யறது பல பேர் கவனத்துக்குக் கண்டிப்பா வரும். அதிகமா அவங்களோட முழுக் கட்டுப்பாட்டில இருக்கிற, அதிகம் வெளியாட்கள் போக்குவரத்து இல்லாத எதாவது இடத்தில் தான் அடைச்சு வச்சிருக்க வாய்ப்பு அதிகம். மசூதி ஏதோ பக்கத்துல இருக்குங்கறது சரியா இருக்கலாம்

க்ரிஷுக்கு அவர் சொல்வதும் சரியென்று பட்டது.  க்ரிஷ் கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். மனதில் அவள் அனுப்பியதாக அவன் எண்ணிய தகவல் மறுபடி வந்தது. அது அடுக்குகளாக இல்லையென்றால் படிகளாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. படிகளுக்கு ஏதாவது பிரத்தியேக அர்த்தம் இருக்கிறதா என்று யோசிக்கையில் படிகள் இல்லாமல் அவள் ஒன்று என்ற எண்ணை மட்டும் அனுப்பியிருந்தால் முதல் மாடியென்று புரிந்திருக்காது என்று தோன்றியது. செந்தில்நாதனிடம் அதைச் சொன்னான்.

“அப்படின்னா எதாவது ஒரு கட்டிடத்தில் முதல் மாடியா இருக்கலாம். முதல் மாடி, மசூதி இந்த இரண்டு தகவல்களை வெச்சு இடம் கண்டுபிடிக்கறது கஷ்டம். இனியும் ஏதாவது தகவல்கள் கிடைச்சா நல்லா இருக்கும்” என்று செந்தில்நாதன் சொன்னார்.

மேலும் அவளிடமிருந்து தகவல்கள் வரும் என்று க்ரிஷ் நம்பினான். இது போன்ற சின்னச் சின்ன நம்பிக்கைகளை வைத்தல்லவா வாழ்க்கையை நகர்த்துவது சுலபமாக இருக்கிறது!

ரிஷிகேசத்திற்கு அவன் தற்போது போவது உசிதம் தானா என்று செந்தில்நாதன் கேட்டார். போகும் போதோ வரும் போதோ அவனுக்கு ஆபத்து நேரலாம் அல்லவா என்ற கேள்வி அவர் கேட்டதில் மறைந்திருந்தது. “எதிரியைப் பத்தி நிறைய தெரிய வந்திருக்குன்னு மாஸ்டர் சொன்னார். அதை அவர் போன்ல விவரிக்க விரும்பல. அடுத்ததா என்ன செய்யலாம்கிறத தீர்மானிக்கறதுக்கு அந்த விஷயங்கள் உபயோகமா இருக்கும். உதயும் என்னை அனுப்பத் தயங்கினான். நான் இத சொன்னவுடனே தான் ஒத்துகிட்டு ஒரு பட்டாளத்தையே  பாதுகாப்புக்கு என் கூட அனுப்பறான்.”

எதிரியின் சக்தியை வைத்துப் பார்க்கையில் பாதுகாப்புப் பட்டாளமும் பலம் போதாது என்று செந்தில்நாதனுக்குத் தோன்றியது. ராஜதுரைக்கு இல்லாத பாதுகாப்பா? அப்படி இருக்கையில் க்ரிஷ் இங்கேயே கல்லூரிக்குப் போய் வருகிற போதே கூட எதிரியால் எத்தனையோ செய்ய முடியும்? ஆனாலும் செய்யாமல் இருக்கிறான் என்றால் ஏதாவது தகுந்த காரணம் இருக்க வேண்டும். லாரி விஷயத்தில் முயற்சி முறியடிக்கப்பட்டதால் அது போல மறுபடி நேரலாம் என்று கூட நினைத்திருக்கலாம். அல்லது வேறு எதாவது வலுவான காரணம் இருக்கலாம். அதனால் இங்கேயே க்ரிஷுக்கு ஏதும் ஆபத்தை ஏற்படுத்தாத எதிரி பயணத்தின் போதும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

செந்தில்நாதன் கேட்டார். “நீ இங்கே இல்லைன்னா ஹரிணி தகவல் அனுப்பறதுல சிக்கல் இருக்காதா?”

க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “இந்த வகைத் தகவல் ஆள் எங்கே இருந்தாலும் வந்து சேரும் சார். சக்தி அலைகள் விஷயத்துல வீட்டு விலாசம் கணக்குலயே இல்ல.”

செந்தில்நாதன் ஓய்வு பெற்ற பிறகு இதில் கண்டிப்பாக ஆழமாய் இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.


விஸ்வத்துக்கு க்ரிஷ் ரிஷிகேசம் போன தகவல் வந்தது. குருவுக்கு பிரிய சிஷ்யனாக இருந்த மாஸ்டர் இப்போது தன் பிரிய சிஷ்யனை குரு வாழ்ந்த குடிலுக்கே அழைத்துப் பேச ஆசைப்படுவது போல் இருந்தது. அவனுக்கு இணையாக வர முடிந்தவரான   மாஸ்டரின் மிகப் பெரிய பலவீனம் இது போன்ற ‘செண்டிமெண்ட்’கள் தான் என்று விஸ்வம் நம்பினான். அவனைப் பொறுத்த வரை தர்மம், உலக நன்மை, நேர்மை, நியாயம், பக்தி எல்லாமே கூட மனிதனுக்கு ஏதாவது விதங்களில் தடையாகும் செண்டிமெண்ட்களே. இந்த விஷயத்தில் க்ரிஷ் கூட அவரைப் போலத்தான் தெரிந்தான். ஆனால் மாஸ்டரை அவன் அளந்து வைக்க முடிந்த அளவு க்ரிஷை அவனால் சில சமயங்களில் கணிக்க முடியவில்லை. மிகவும் நெருக்கடியான நேரங்களில் எந்தக் கூடுதல் சக்தியையும் பயன்படுத்தாமலேயே க்ரிஷ் சிலவற்றை சாதித்துக் கொள்கிறான். இப்போதும் விஸ்வத்துக்கு க்ரிஷ் மாஸ்டரைத் தன் பக்கம் இழுத்த விதத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. மாஸ்டர் அவருடைய சக்தியால் அவன் மனதைப் படிக்க முடியாமல் தோல்வியடைந்த நேரத்தில், அவன் எதிரியின் ஆள், அவனிடம் தோற்றிருக்கிறோம் என்று அவமான உணர்வுடன் அவனை எதிரியாகவே பாவிக்க ஆரம்பித்த அந்தக் கணத்தில் அவருக்கு சிஷ்யன் என்ற ஸ்தானத்திற்கு அனாயாசமாய் நகர்ந்து, பின்  நெருக்கமாகியும் விட்டது தலைசிறந்த ராஜதந்திரம் என்று இப்போதும் விஸ்வம் நினைக்கிறான்.

ஹரிணி கடத்தப்பட்டவுடன் க்ரிஷ் செயலற்று முடங்கிப் போவான் என்று விஸ்வம் நினைத்ததும் எண்ணிய அளவுக்கு நடக்கவில்லை. செந்தில்நாதனைத் திரும்ப வரவழைத்து க்ரிஷ் விஸ்வம் பற்றிய கண்டுபிடிப்பு வேலைகளை நிறுத்திக் கொண்டானே ஒழிய முடங்கி விடவில்லை. இப்போது மாஸ்டரைச் சந்திக்க அவன் ரிஷிகேசம் போவதே அதற்கு உதாரணம். ஆனாலும் தன்னைப் பற்றிய இன்னும் அவர்கள் அறிந்திராத மிக முக்கியத் தகவல்கள் சிலவற்றை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன் தடுத்து நிறுத்தியதில் விஸ்வத்துக்குத் திருப்தி. அந்த மிக முக்கியத் தகவல்கள் தெரிந்தாலும் கூட அவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்ற போதிலும் அப்படி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். உலகமே அறியும் போது அவர்கள் அறியட்டும். அது போதும்….

இப்போதைக்கு க்ரிஷ் மனம் முழு வீச்சில் எதிலும் இறங்க முடியாதபடி ஹரிணி பற்றிய கவலைகள் பார்த்துக் கொள்ளும். இப்போது ஓரளவு இயங்கும் க்ரிஷ். மாஸ்டருடன் சேர்ந்து பேசி என்ன முடிவெடுக்கிறான், இனி என்ன செய்யப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டால் ஹரிணியை வைத்து அதையும் நிறுத்தி விடலாம். அதற்காகவே இன்னமும் க்ரிஷிடம் அவன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறான். எந்தத் தகவலும் கிடைக்காமல் க்ரிஷின் கவலையும், பயமும் அதிகமாகி அவன் மிகவும் பலவீனமாக ஆன பின் வேண்டியபடி அவனை இயக்குவது தான் உத்தமம்….

விஸ்வத்துக்கு சட்டர்ஜியின் மின்னஞ்சல் குறித்து அடுத்த தகவல் வந்து சேர்ந்தது. சட்டர்ஜி கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன் தான் மின்னஞ்சலைத் திறந்தே பார்த்திருக்கிறார். அது வரை தொடர்ச்சியாக அந்த மின்னஞ்சலை அதிகமாக அவர் பயன்படுத்தி வந்தது சூரத் நகர எல்லைக்குள். இரண்டு வருடங்களுக்கு பின் தான் மற்ற இரு மலையேற்ற வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்த சமயம் வரை தான் இந்த ஆளும் அந்த மின்னஞ்சலைப் பயன்படுத்தி இருக்கிறார். அதன் பின் புதிய மின்னஞ்சலை அவர் பயன்படுத்த ஆரம்பித்திருக்க வேண்டும்.  அது ஏன்?


லத்த பாதுகாப்புடன் ரிஷிகேசத்தில் குருவின் குடிலுக்கு வந்து சேர்ந்த க்ரிஷ் மாஸ்டரைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனான். அவருடைய வழக்கமான கம்பீரம், தேஜஸ் இரண்டும் மங்கி அவர் முகத்தில் கவலையும், வேதனையும் தான் தெரிந்தன. அவன் இது வரை அப்படி அவரைப் பார்த்ததே இல்லை…. “என்ன ஆச்சு மாஸ்டர்?” என்று அவன் பதறிப்போய் கேட்டான்.

பாதுகாப்புக்கு வந்தவர்கள் குடிலைப் பார்க்கும் தொலைவிலேயே இடங்கள் தேர்ந்தெடுத்து நின்று கொண்டதால் மாஸ்டருக்கு அவனிடம் மனம் விட்டுப் பேச முடிந்தது. “சாகலை அவ்வளவு தான். அதுவும் உன் புண்ணியத்துல” என்றார்.

திகைத்து நின்ற அவனிடம் அவர் தான் ஏமாந்த கதையையும் அதன் பின் நடந்தவைகளையும் சொன்னார். ”…ஆனதை மாத்த ஆண்டவனுக்கே சக்தி இல்லைன்னாலும், ஆனதை ஜீரணிக்கிற சக்தி மனுஷனுக்கும் சில சமயங்கள்ல இருக்கிறதில்லை க்ரிஷ். நான் இப்ப அந்த மாதிரி ஜீரணிக்க முடியாம தான் தவிக்கிறேன். ரொம்ப சாதாரணமா ஏமாந்து நிற்கிறமேன்னு உறுத்தலா இருக்கு”

க்ரிஷுக்கு அவர் வேதனை புரிந்தது. அவனுக்குப் புரியாதது ஒன்று தான். எதிரியைப் போல் இத்தனை சக்திகளைச் சேர்த்த ஒருவன் அத்தனையையும் வெறும் பணத்திற்காகச் செய்திருப்பான் என்று அவனால் நம்ப முடியவில்லை. பணம் இலக்கானால் அதற்கு இத்தனை அமானுஷ்ய சக்திகள் தேவையே இல்லையே. அதை எத்தனையோ சுலபமான வழிகளிலேயே அவனைப் போன்ற அறிவாளி கோடிக்கணக்கில் சேர்த்திருக்க முடியுமே? யோசிக்கையில் எங்கேயோ இடித்தது.

 (தொடரும்)

என்.கணேசன்Monday, November 5, 2018

சத்ரபதி – 45


ல கூடைகளில் பழங்களும் பரிசுப் பொருள்களும் கொண்டு வந்து தன்னைச் சந்தித்த பாஜி கோர்படேயை ஷாஹாஜி சந்தேகிக்கவில்லை. புதிதாக ஒரு மேல்நிலையை எட்டியவர்கள் முன்பே மேல் நிலையில் இருந்த மனிதர்களை மரியாதை கொடுத்துச் சந்திப்பதும் அவர்கள் நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புவதும் அக்காலத்திலும் இயல்பாகவே இருந்தது. பக்கத்தில் உள்ள முதோல் பிரதேசத்துப் புதிய தலைவன் அந்த எண்ணத்திலேயே தன்னைச் சந்திக்க வந்திருப்பதாய் எண்ணி அவனை அவர் வரவேற்றார். 

பாஜி கோர்படே அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து அன்பின் வடிவமாக எழுந்து நின்று ”இந்த அடியவனை ஆசிர்வதிக்க வேண்டும் தலைவரே” என்று பணிவாகக் கேட்டுக் கொண்டான். அவனுக்கு ஆசி வழங்கி அமர வைத்து உபசரித்த ஷாஹாஜி நலம் விசாரித்தார்.

“தங்களைப் போன்ற பெரியோரின் ஆசியால் நலத்திற்குக் குறைவில்லை தலைவரே. சமீபத்தில் தான் என் மாளிகையைப் புதுப்பித்தேன். சில ஹோமங்களும் செய்து முடித்தேன். தங்களை அந்தச் சமயத்திலேயே அழைக்க எண்ணியிருந்தேன். ஆனால் பணிச்சுமைகளால் தங்களை அப்போது அழைக்க முடியவில்லை. தாங்கள் அருள்கூர்ந்து என் வீட்டிற்கு வந்து கௌரவிக்கும்படி கேட்டுக் கொள்ளவே இங்கே வந்துள்ளேன்….”  பேசும் போது இருக்கையில் முழுமையாகச் சாய்ந்து கொள்வது கூட பெரியவர்கள் முன் கௌரவக்குறைவு என்று எண்ணியவன் போலக் காட்டிக் கொண்ட பாஜி கோர்படே அவர் பார்வைக்குப் பணிவின் உதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டான்.

ஷாஹாஜி சொன்னார். “பீஜாப்பூர் செல்லும் சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக உன்னுடைய இல்லத்தில் தங்கி இளைப்பாறிச் செல்கிறேன் பாஜி கோர்படே.”

“ஐயா அப்படி வழித்தடத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என் இல்லத்திற்கு வந்து செல்லலாம். அது எனக்கு மகிழ்ச்சியே. நான் என் இல்லத்தில் நாளை மறுநாள் ஒரு சிறு விருந்தைத் தங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கிறேன். முதலில் அதற்கு வந்து செல்லும்படி அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்….”

ஷாஹாஜி என்ன சொல்வதென்று யோசித்தார். அந்த நேரத்தில் முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொண்டு பாஜி கோர்படே சொன்னான். “ஐயா அரசர்களுடனும், அவர்களுக்கு இணையானவர்களுடனும் பழகும் உங்களுக்கு என்னைப் போன்ற எளியவன் இல்லத்திற்கு வரத் தயக்கமாக இருக்கலாம். மிக உயர்ந்த நிலையில் இருக்கும் தங்களை அழைக்கவும் எனக்கு அருகதை உள்ளதா என்ற கேள்வி என் உள்ளத்திலும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அன்பின் காரணமாக வந்திருக்கும் இந்த அடியவனின் அழைப்பை அலட்சியப்படுத்தி நிராகரித்து விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்…..”

மிக உருக்கமாக அவன் கேட்டுக் கொண்ட போது ஷாஹாஜிக்கு மறுக்க முடியவில்லை. அவர் சொன்னார். “நான் என்னை உயர்ந்தவனாகவும், மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் என்றைக்கும் நினைத்ததில்லை. எல்லாமே விதி ஏற்படுத்தித் தருபவை. நான் எல்லா நிலைகளிலும் சிறிது காலமாகவாவது இருந்திருக்கிறேன். அதனால் நான் வர யோசிக்கவில்லை. ஆனால் நாளை மறுநாளே வர வேண்டுமா என்று தான் யோசித்தேன். நீ இவ்வளவு தூரம் கேட்டுக் கொண்டதால் அந்தத் தயக்கத்தையும் விட்டேன். நீ கேட்டுக் கொண்டபடியே வருகிறேன். திருப்தி தானே….”

தன் இல்லத்திற்கு வரவழைக்க எண்ணிய திட்டம் பலித்ததில் பாஜி கோர்படேயின் முகத்தில் நிம்மதியும் ஆனந்தமும் தெரிந்தது. அந்த ஆனந்தத்தைக் கண்ட ஷாஹாஜி அதன் பின்னணி தெரியாததால் நெகிழ்ந்து போனார். பாஜி கோர்படே கைகளைக் கூப்பி குரல் தழுதழுக்கச் சொன்னான். “வருவதாகச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்தியதற்கு மிக்க நன்றி தலைவரே.”

அதன் பின்னும் சிறிது நேரம் அங்கு இருந்து நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகள் கேட்டு, சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்த பாஜி கோர்படே கிளம்புவதற்கு முன் அவருக்குப் பிடித்தமான உணவுகள் குறித்துக் கேட்டான்.

’இதென்ன அன்புத் தொல்லை’ என்று எண்ணிய ஷாஹாஜி தனக்குப் பிடிக்காத உணவுகள் இல்லை என்பதால் எந்த வகை உணவானாலும் தனக்குப் பிரச்னையில்லை என்றார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பாஜி கோர்படே வற்புறுத்தி அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளின் பட்டியல் அறிந்து விட்டே விடை பெற்றான்.

பாஜி கோர்படே மீது ஷாஹாஜிக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. பீஜாப்பூர் சுல்தான் அழைத்திருந்தாலும், சுல்தானுக்கு நெருங்கிய யாராவது அழைத்திருந்தாலும், அல்லது வேறு யாராவது பீஜாப்பூரில் இருந்து அழைத்திருந்தாலும் ஷாஹாஜி தற்போதைய நிலவரம் காரணமாக உஷாராகியிருப்பார். ஆனால் எந்த விதத்திலும் அவருக்கு இணையில்லாத ஒருவன், அடுத்த பகுதியின் தலைவன் தன்னைச் சிறைப்படுத்தக்கூடும் என்ற சிந்தனை அவருக்கு ஏற்படக் காரணம் எதுவும் இருக்கவில்லை. அப்படிச் சிறிய சந்தேகம் எதுவும் ஏற்பட்டுவிட முடியாதபடியே பாஜி கோர்படே நடந்து கொண்டான்.

குறிப்பிட்ட தினத்தில் சில பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஷாஹாஜி முதோல் பகுதியில் உள்ள பாஜி கோர்படேயின் மாளிகையை அடைந்தார். மாளிகையின் வெளியே இருந்த காவலர்கள் ஷாஹாஜியிடம் அவரது வாளை வெளியிலேயே விட்டு விட்டு உள்ளே செல்லச் சொன்னார்கள். மேலும் அவரது பணியாளர்களை வெளியிலேயே நிற்கச் சொன்னார்கள்.

ஷாஹாஜியின் முகம் கோபத்தில் சிவந்தது. அவர் வாளில் கை வைத்த போது பாஜி கோர்படே ஓடி வந்தான். “வாருங்கள் தலைவரே. ஏன் இங்கேயே நின்று விட்டீர்கள்?’

பாஜி கோர்படே அந்த நேரத்தில் அங்கு வராமல் இருந்திருந்தால் அவன் காவலர்கள் சிலர் மரணத்தை நிச்சயமாகத் தழுவியிருப்பார்கள் என்று அவன் புரிந்து கொண்டான். அவர் காலைத் தொட்டு அங்கேயே வணங்கினான்.

அவனை ஆசிர்வதித்த ஷாஹாஜி சினம் குறையாதவராகச் சொன்னார். “வாளைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே செல்லச் சொல்கிறார்கள். என் ஆட்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.”

பாஜி கோர்படே தன் காவலர்களைக் கோபித்துக் கொண்டான். “மூடர்களே. பொதுவாக மற்றவர்களை நடத்துவது போலவா தலைவரை நடத்துவது. அவர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? விலகி நில்லுங்கள்….”

பாஜி கோர்படேயின் காவலர்கள் தலைகுனிந்து விலகி நின்றார்கள். “தராதரம் தெரியாத இந்த மூடர்களை மன்னியுங்கள் தலைவரே. வாருங்கள் தலைவரே…. உங்கள் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்…. இந்த எளியவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு வந்ததற்கு நன்றி…. வாருங்கள்…”

பாஜி கோர்படேயின் பணிவான வார்த்தைகளால் ஷாஹாஜியின் கோபம் முழுவதுமாக மறைந்தது. பொதுவாக அனைவரிடத்திலும் காண்பிக்கச் சொன்ன வழிமுறைகளைக் காவலர்கள் பின்பற்றி இருக்கிறார்கள். அவ்வளவு தான். இது எல்லா இடங்களிலும் நடப்பது தான் என்று சமாதானம் அடைந்த அவர் பாஜி கோர்படேயின் மாளிகையினுள் தன் ஆட்களுடன் நுழைந்தார்.

உள்ளே பாஜி கோர்படேயின் மனைவியும், இரு பிள்ளைகளும் கைகூப்பி அவரை வரவேற்று காலில் விழுந்து வணங்கினார்கள். வெளியே காலைத் தொட்டு மட்டுமே வணங்கியிருந்த பாஜி கோர்படே குடும்பத்தினர் வணங்குகையில் தானும் அவர்களைப் போலவே தரையில் விழுந்து அவரை வணங்கினான். ஏதாவது சிறிய சந்தேகம் வெளியே ஏற்பட்டு அவரிடம் தங்கியிருந்தாலும் இந்த வணக்கத்தில் முழுவதுமாக நீங்கியிருக்கும் என்று பாஜி கோர்படே சரியாகவே கணக்குப் போட்டான்.

அமர்ந்து சிறிது நேரம் அளவளாவிய பின் விருந்துக்கு முன் பாஜி கோர்படே புதுப்பித்திருந்த தன் மாளிகையின் ஒவ்வொரு பகுதியாக ஷாஹாஜிக்கு காட்டினான். ஷாஹாஜி எத்தனையோ பெரிய பெரிய மாளிகைகளையும், அரண்மனைகளையும் பார்த்தவர். இந்தச் சிறிய மாளிகையில் சிலாகிக்க அவருக்குப் பெரிதாக இருக்கவில்லை என்றாலும் அவரவருக்கு அவரவர் வீடுகள் பெரிய அரண்மனைகள் தான் என்று உள்ளுக்குள் எண்ணியவராக பாஜி கோர்படேயின் பின்னால் சென்று அந்த மாளிகையைப் பார்வையிட்டார். சில அடிகள் தள்ளி அவருடைய ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

மாளிகையின் கடைக்கோடி அறைக்கு முன் வந்த போது அறைக்கு வெளியே தண்ணீர் கொட்டியிருந்தது. அதைப் பார்த்து முகம் சுளித்த பாஜி கோர்படே “பணியாளர்களுக்கு எத்தனையோ முறை தெரிவித்தாகி விட்டது. ஆனாலும் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள்” என்று சலித்துக் கொண்டு “நீங்கள் இந்த அறைக்குள் சென்று பாருங்கள் தலைவரே” என்று சொல்லி வெளியிலேயே நின்று கொண்டு கத்தினான். “யாரங்கே. விரைந்து வாருங்கள்”

ஷாஹாஜி அறைக்குள் நுழைந்தார். அறைக்கு வெளியே பாஜி கோர்படே நின்றிருந்தான். ஷாஹாஜியின் ஆட்கள் தண்ணீரையும், பாஜி கோர்படேயையும் தாண்டி பணியாளர்கள் வந்து தரையைத் துடைப்பதற்காகக் காத்து நின்றிருந்தார்கள். ஆனால் ஷாஹாஜிக்கும், ஷாஹாஜியின் ஆட்களுக்கும் “யாரங்கே விரைந்து வாருங்கள்” என்பது சமிக்ஞை என்று தெரிந்திருக்கவில்லை.

அந்த வாசகத்தைக் கேட்டவுடன் சிறிதும் எதிர்பாராத விதமாய் அறைக்குள் ஒளிந்திருந்த பாஜி கோர்படேயின் வீரர்கள் ஷாஹாஜி மேல் பாய பாஜி கோர்படே மின்னல் வேகத்தில் அறைக்கதவை மூடி வெளியே தாளிட்டான். அதே நேரத்தில் வெளியே இருந்த ஷாஹாஜியின் ஆட்கள் மீதும் மறைந்திருந்த வீரர்கள் பாய்ந்தார்கள்.

இரண்டே நிமிடங்களில் ஷாஹாஜியும் அவரது ஆட்களும் செயலற்று சிறைப்பிடிக்கப்பட்டார்கள். பாஜி கோர்படேயின் திட்டம் நிறைவேறி விட்டது.

(தொடரும்)
என்.கணேசன்

(தீபாவளி போனசாக நாளை (6.11.2018)  மாலை இருவேறு உலகத்தின் அடுத்த அத்தியாயம் அப்டேட் ஆகும்.)

Friday, November 2, 2018

நீங்கள் காந்தம்! எதை ஈர்க்கிறீர்கள்?

ரு விதத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தமாகவே இருக்கிறான். அந்தக் காந்தத் தன்மைக்கு ஏற்ற வகையிலேயே தன் வாழ்க்கையில் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் ஈர்த்துக் கொள்கிறான். அந்தக் காந்தத் தன்மையை நிர்ணயிப்பது எது? அந்தக் காந்தத்தன்மை எப்படி அமைகிறது? அதை மாற்ற முடியுமா? மாற்றுவதானால் எப்படி மாற்றுவது? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் இந்தக் காணொளியில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய மகத்தான உண்மைகள் இருக்கின்றன.  கண்டு, மனதில் பதித்து, பலன் அடையுங்கள்....
என்.கணேசன்