சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 29, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 26

ஆழ்மனசக்தியைப் பெறமுடியுமா?

ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.

ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.

இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.

அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே “விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய “இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)” , பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)” போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் “யோக சூத்திரங்கள்” என்ற நூலை எழுதினார்.
ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.

எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை எளிமையாக இனி பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
நன்றி:விகடன்

Wednesday, March 24, 2010

ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!
உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.

பரதனைப் போல் ஒரு உத்தமனை இலக்கியத்தில் காண்பது கூடக் கடினம். கைகேயி அவனுக்காக வரம் பெற்ற பிறகு அவன் படும் பாடு கொஞச நஞ்சமல்ல. முடிசூட்டிக் கொள்ள குலகுரு விசிட்டர் சொன்ன போது அவன் விஷம் சாப்பிடச் சொன்னது போல நடுங்கினான், பயந்தான், அயர்ந்தான், அருவி போலக் கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தான் என்கிறான் கம்பன்.

தஞ்சம் இவ்வுலகம் நீ ’தாங்குவாய்’ என
செஞ்சவே முனிவரன் செப்பக் கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன்; அயர்ந்தனன்; அருவிக் கண்ணினன்.


”தந்த வரத்திற்கு இழிவு வரக்கூடாது என்று  தந்தை இறந்தான். தந்தை சொல்லை ஏற்று நடப்பது தான் தர்மம் என்று அண்ணன் அரச பதவியைத் துறந்தான். அப்படிப் பட்ட அண்ணனோடு பிறந்தவன் தாயின் சூழ்ச்சியால் ஆட்சி பிரிந்தான் என்ற பெயரை என்னால் பெற முடியுமா?” என்று வருந்துகிறான்.

இறந்தான் தந்தை ஈந்த வரத்திற்கு இழிவு என்னா;
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான்; தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான், ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமோ?

உடனே பெரும்படையோடு அண்ணனை அழைத்து வர பரதன் கிளம்புகிறான். படையுடன் அவன் வருவதைப் பார்த்த குகன் ஆரம்பத்தில் அவனைத் தவறாக எண்ணிக் கோபப்படுகிறான். என்னை மீறி ஆற்றைக் கடந்து இவர்கள் எப்படி இராமனைச் சென்று அடைகிறார்கள் என்று பார்க்கிறேன்? (ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?) என்று கரையில் நின்று பார்க்கிறான்.

அருகில் வந்த பிறகு பரதனை அவன் கண்டதோ வேறு விதத்தில். கம்ப இராமாயணத்தில் மிக அற்புதமான இடம் இது. கம்பன் பரதனையும், அவனைப் பார்த்த குகன் மனநிலையையும் மிக அழகாக விளக்குகிறான்.

பரதன் கைகளோ தொழுத வண்ணம் இருக்கின்றன. உடலோ துவண்டு போயிருக்கிறது. கண்களோ அழுதழுது சிவந்திருக்கிறது. முகமோ துக்கம் என்பது இது தான் என்று வரையறுக்கும் படியாக இருக்கிறது. இதைக் கண்டவுடன் அவனை முழுதும் புரிந்து கொண்ட குகன் அவனை இன்னும் கூர்ந்து பார்க்கிறான்.


தொழுதுயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுதழி கண்ணினன்: அவலம் ஈதென
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்.


”பார்த்தால் இவன் என் நாயகனான இராமன் போல் இருக்கின்றான். அவனுடன் இருக்கும் தம்பியான இலக்குவனின் சாயலும் இருக்கின்றது. தவ வேடம் வேறு பூண்டிருக்கிறான். அவனுடைய துன்பத்திற்கோ முடிவிருப்பதாகத் தெரியவில்லை. இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றான். இவனைப் போய் தவறாக நினைத்தேனே எம்பெருமானின் பின்னால் பிறந்தவர்களால் தவறும் இழைக்க முடியுமோ?” என்று தன்னையே கடிந்து கொள்கின்றான்.

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான்;
துன்பம் ஒரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்றான்.


பரதன் வந்த காரணத்தை அறிந்து அவனிடம் பேசிய பின்னரோ அவன் மரியாதை பலமடங்கு அதிகரிக்கிறது. “உன்னுடைய தாயின் பேச்சைக் கேட்டு உன் தந்தை உனக்களித்த நாட்டை தீயதாக ஒதுக்கி, துக்கத்தை முகத்தில் தேக்கியபடி கிளம்பி இங்கே வந்திருக்கிறாய் என்பதைப் பார்க்கும் போது, புகழ்பெற்ற உன் தன்மையைக் காணும் போது ஆயிரம் இராமர்கள் சேர்ந்தாலும் உனக்கு இணையாவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை” என்று குகன் மனம் திறந்து சொல்கிறான்.


தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேள் ஆவரோ தெரியினம்மா!பின் பரதன் இராமனை சந்தித்து அவனை நாடு திரும்ப வற்புறுத்தி அவன் ஒத்துக் கொள்ளாததால் அண்ணனுடைய பாதுகைகளை அரியணையில் வைத்து ஆட்சி நடத்த பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு துயரத்துடன் நாடு திரும்புகிறான். அப்படித் திரும்புகையிலும் “சரியாகப் பதினான்கு வருடங்கள் தான். அதைத் தாண்டி ஒரு நாளும் அதிகமாக நான் தாங்க மாட்டேன்” என்று சொல்லி அண்ணனின் ஒப்புதலும் வாங்கிக் கொண்டு தான் போகிறான். அரியணையில் இராம பாதுகைகள் இருக்க பரதனோ துறவி போல் வாழ்க்கை நடத்துகிறான்.

குறித்த காலத்தில் இராமன் அயோத்தி வர முடியாத சூழ்நிலை உருவாகவே அவன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது கோசலை வந்து அவனைத் தடுக்கிறாள். தந்தை கேட்டுக் கொண்டதால் இராமன் 14 வருடங்கள் வனவாசம் போக வேண்டி இருந்தது. ஆனால் பரதனோ யாரும் கூறாமலேயே கிட்டத்தட்ட அண்ணனைப் போலவே வனவாசம் போலவே அங்கு வாழ்ந்ததைக் கடந்த 14 வருடங்களாகப் பார்த்து வந்த அவள் அவனிடம் சொல்கிறாள். ”அரசன் சொன்னதும், அவன் மகனான இராமன் இசைந்து காட்டிற்குச் சென்றதும் விதியின் செய்கையே. பின்னால் நடந்தவை எல்லாம் கூட யோசித்துப் பார்த்தால் அதன் தன்மையே. இப்படி இருக்கையில் உன் மேல் குற்றம் ஏற்றுக் கொண்டு என்ன செய்யத் துணிந்தாய் என் மகனே?”


மண் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்
மின் இழைத்த விதியின் முயற்சியால்
பின் இழைத்ததும் எண்ணில் அப்பெற்றியால்
என் இழைத்தனை என் மகனே என்றாள்


“உனக்கு உன் அருமை தெரியவில்லை, பரதா. உலகத்தில் பிரளயமே வந்தாலும் உன் பெருமை அழியுமோ?

(உன்) அருமை உணர்ந்திலை! ஐய நின்
பெருமை ஊழி தீயினும் பேருமோ?“எண்ணிப் பார்த்தால் கோடி இராமர்கள் சேர்ந்தாலும் உன் மனதிற்கு ஈடாவார்களோ? புண்ணியாத்மாவான உன் உயிர் போனால் மண்ணும், வானும், உயிர்களும் வாழ முடியுமோ?

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்(கு) அரு(கு) ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?


நல்ல வேளையாக இராமன் விரைவில் வந்து பரதனைத் தழுவிக் கொள்ள எல்லாம் சுபமாக முடிகிறது. இப்படி இராமனின் தாயான கோசலையும், பக்தனான குகனும் கூட மனம் நெகிழ்ந்து இராமனை விடப் பன்மடங்கு சிறந்தவன் என்று சொன்ன பெருமை கம்ப இராமாயணத்தில் வேறெந்த கதாபாத்திரத்திற்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, March 19, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-25

வியக்க வைக்கும் ஒன்பது வகை வெளிப்பாடுகள்

நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.


அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது. உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை –


1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.


8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

சரி. இந்த ஆழ்மன சக்திகள் எப்படி, எப்போது சாத்தியமாகின்றன என்பதைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)
நன்றி: விகடன்
-என்.கணேசன்

Monday, March 15, 2010

அன்பால் இணைவோம்

செல்லப் பிராணிகள் பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த சிடோ (Chito) என்றழைக்கப்படும் கில்பர்ட்டோ ஷெட்டென் Gilberto Shedden என்ற மீனவனுக்குச் செல்லப் பிராணி எது தெரியுமா? பதினேழு அடி நீளமுள்ள ஒரு முதலை தான். 52 வயதான சிடோ தண்ணீரில் அந்த பெரிய முதலையுடன் கட்டிப் பிடித்து விளையாடுவது கண் கொள்ளாக் காட்சி.

சுமார் இருபது வருடங்களுக்கு ஒருநாள் முன் பரிஸ்மினா என்ற நதியில் படகை ஓட்டிச் செல்லும் போது குற்றுயிராகக் கிடந்த அந்த முதலையை சிடோ கண்டார். அதன் இடது கண்ணில் யாரோ துப்பாக்கியால் சுட்டிருந்தார்கள். படுகாயமுற்றிருந்த அந்த முதலை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அவருக்கு விலங்குகள் மீது தனி அன்பு உண்டு. அதுவும் காயமுற்று உள்ள விலங்குகள் மீது அன்புடன் இரக்கமும் அதிகம். எனவே சிடோ இரக்கப்பட்டு அந்த முதலையைக் காப்பாற்ற நினைத்தார். அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொள்ள அவர் ஒருவரால் முடியவில்லை. நண்பர்களின் உதவியுடன் அந்த முதலையை இழுத்து தன் படகில் போட்டுக் கொண்டார்.

அதற்கு சிகிச்சை தந்து உணவும் தந்து ஆறு மாத காலம் சிடோ நன்றாகப் பார்த்துக் கொண்டார். அது பலவீனமாக இருந்த சமயங்களில் இரவு அதனுடனே படுத்துக் கொண்டார். ”அதற்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று உணர்த்த ஆசைப்பட்டேன். எல்லா மனிதர்களும் அதற்கு எதிரிகள் அல்ல என்று தெரியப்படுத்த விரும்பினேன்”

அந்த முதலைக்கு போச்சோ ( Pocho) என்று பெயரிட்டு அதன் காயம் குணமாகி உடல்நலம் முன்னேறும் வரை சிடோ அதனுடையே இருந்தார். பின் அதனை அவர் வீட்டருகே இருந்த குளத்தில் கொண்டு போய் விட்டார். அதை விட்டு விட்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தவர் சிறிது தூரம் சென்ற பிறகு திரும்பிப்பார்த்த போது அந்த முதலையும் அவர் பின்னால் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர் மனம் நெகிழ்ந்து போனார். சிறிது நாட்களில் அவர் அதனைப் போச்சோ என்று அழைத்தவுடன் அது உடனே அவரருகே வரக் கண்டார். சிறிது சிறிதாக அதனுடன் உள்ள நட்பு அதிகமாகியது. அதனுடன் நெருக்கமாக விளையாட்டுகளிலும் ஈடுபட ஆரம்பித்தார்.


சில நாட்களில் அவர் சொன்ன படியெல்லாம் அதைச் செய்ய வைக்கும் அளவு பழக்கினார். சாராபிகி (Sarapiqui) என்ற நகரில் வசித்து வரும் அவருக்கும் அந்த முதலைக்கும் இடையே உள்ள நட்பு பலர் கவனத்தைக் கவர ஆரம்பித்தது. இப்போது சிடோவையும் போச்சோ என்ற அந்த முதலையையும் சுற்றுலாப் பயணிகள் வந்து அவர்களுடைய விளையாட்டுகளைப் பார்த்து விட்டுப் போகும் அளவு பிரபலமாகி உள்ளது.

”போச்சோ எனது நண்பன். அவனை நான் அடிமை போல நடத்த விரும்பவில்லை” என்று சொல்லும் சிடோ அந்த முதலையிடம் பாராட்டும் அந்த அன்பு காண்பவர்களை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தனை நெருக்கமாக இருந்தும் அந்த சக்தி வாய்ந்த முதலையும் தன் நண்பனுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதும் அதிசயமே அல்லவா?

அந்தக்காலத்தில் முனிவர்கள் காடுகளில் தவமிருக்கச் சென்று அங்கேயே வசித்தாலும் அந்தக் காட்டின் கொடிய விலங்குகள் அந்த முனிவர்களுக்குத் தீங்கு செய்வதில்லை என்பார்கள். காரணம் அந்த முனிவர்கள் அஹிம்சையைப் பின்பற்றுபவர்கள், அன்பு மயமானவர்கள் என்பதனால் தான். அந்த அன்பு அலைகளை அந்த விலங்குகளும் உணர முடிந்ததா தான்.

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற புகழ்பெற்ற இங்கிலாந்து தத்துவஞானி இந்தியாவிற்கு வந்த போது தமிழகத்தில் திருவண்ணாமலையில் ரமணாசிரமத்தில் சில மாதங்கள் தங்கினார். அப்போது அவர் தங்கியிருந்த குடிசையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் புகுந்து விட்டது. அதைக் கொல்லப் பலரும் கம்புகளை எடுக்கையில் யோகி ராமையா என்பவர் அவர்களைத் தடுத்து அந்த நாகத்தைத் தன் கையில் பிடித்து தடவிக் கொடுத்து பிறகு அதனைக் கீழே விட அந்த நாகம் அவர் முன் தலை தாழ்த்தி விட்டு அங்கிருந்து யாரையும் உபத்திரவிக்காமல் சென்று விட்டது.

வியப்பின் உச்சத்திற்கே சென்ற பால் ப்ரண்டன் பின்னொரு சமயம் ‘எப்படி பயமில்லாமல் அந்த கொடிய நாகத்தைக் கையில் எடுத்தீர்கள்?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்கு யோகி ராமையா சொல்லியிருக்கிறார். “நான் அன்பு நிறைந்து அதைத் தொடுகையில் அது எப்படி எனக்கு தீங்கு செய்யும்?”. (நம்மைப் போன்ற மனிதர்களுக்கு நம் அன்பு அதற்குப் புரியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் வந்து விடும். ஆனால் அப்படி பயமில்லாமல் இருக்க வேண்டுமானால் அந்த அன்பு எவ்வளவு ஆணித்தரமாகவும், சந்தேகத்திற்கிடமில்லாமலும் இருந்திருக்க வேண்டும் பாருங்கள்)


மதம், மொழி, இனம், நாடு கடந்தும் அன்பு அனைவராலும் உணரப்படும் மொழியாகவும் மனிதர்களைப் பிணைக்கும் மேன்மையான பந்தமாகவும் இருக்கிறது. அது மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல் முதலை, நாகம் போன்ற கொடிய விலங்குகளைக் கூட மனிதர்களுடன் பிணைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பதற்கு உதாரணங்களைக் கண்டோம்.

தீவிரவாதம், கலவரம், சண்டை சச்சரவு, போர், பிரிவினைகள் முதலான எல்லா சமூக நோய்களும் பெருகி வரக் காரணமே அதற்கெல்லாம் அருமருந்தான அன்பு நம்மிடையே குறைந்து வருவது தான். கொடிய விலங்குகளைக் கூட நம்முடன் இணைந்து வாழ வைக்க முடியுமென்றால் மனிதர்களாகிய நாம் பிரிந்து நின்று இந்நோய்களுக்கு இரையாகி மடிவதேன்?

சிந்திப்போமா?


என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Wednesday, March 10, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-24

பெவர்லி ரூபிக்கின் ஆராய்ச்சிகள்டாக்டர் ஓல்கா வோரால் ”பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம்.” என்று கூறிய முடிவுக்கே பெவர்லி ரூபிக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் வந்தார். உயிர்வாழும் அனைத்திலும் மின்காந்த அலைகளை ஒத்த சக்தி சூழ்ந்து இருப்பதை அவரால் அறிய முடிந்தது.

உயிர்களை சூழ்ந்துள்ள மின்காந்த வெளிச்சக்தியில் சிறிது கூடினாலும் அது மிகப் பெரிய பலன்களைத் தருவதாக உள்ளது. ”Salamander என்ற ஒரு உடும்பு வகைப் பல்லி தன் முழுக் காலை இழந்தாலும் குறுகிய காலத்தில் அதைத் திரும்ப வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அதையே ஒரு தவளையால் இழந்த காலை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. அதற்குக் காரணம் அந்த இரண்டு விலங்கு வகைகளின் உடல்களைச் சூழ்ந்துள்ள மின்காந்த வெளியில் உள்ள சில மில்லிவால்ட் சக்தி வித்தியாசம் தான்” என்பதையும் பெவர்லி ரூபிக் 2000 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் ஆராய்ச்சி முடிவுகளில் கூறினார். மனிதர்களின் மின்காந்தவெளி குறித்து பல ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மனிதனைச் சுற்றியும் மின்காந்தவெளி உள்ளதென்றும் SQUID என்ற கருவிகள் மூலம் அவற்றை அளக்க முடிகிறதென்றும் முன்பே ஜான் சிம்மர்மன் (John Zimmerman) போன்ற அறிஞர்களின் ஆராய்ச்சியில் வெளியாகி இருந்தது. மனித உடலிலேயே மிக அதிக மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் உறுப்பாக இதயத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடுத்ததாக அதிகாலையில் விழித்தவுடன் கண்களும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகிறதாம். அதிசயமாக மனித மூளை தான் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகின்றன என்கின்றன ஆராய்ச்சிகள். அதை விட தசைகள் கூட தங்கள் செயல்பாடுகளின் போது அதிக மின்காந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஜான் சிம்மர்மன் SQUID கருவியை உபயோகித்து மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்தும் சக்திபடைத்தவர்களின் கைகளில் இருந்து அச்சமயத்தில் 7 முதல் 8 ஹெர்ட்ஸ் மின்காந்த சக்தி வெளிப்படுவதாகக் குறித்துள்ளார்.

எல்மர் க்ரீன் என்ற ஆராய்ச்சியாளர் சக்திகள் படைத்த குணப்படுத்தும் நபர்களை செம்பாலான தகடுகள் பதிந்த ஆராய்ச்சி அறைகளில் இருத்தி செய்த ஆராய்ச்சிகளில் சில சமயங்களில் நூறு வால்ட்ஸ் வரை சக்திகள் வெளிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அது போல டான் விண்டர் (Dan Winter) என்ற ஆராய்ச்சியாளர் மரங்களின் கீழ் அமர்ந்து செய்யும் தியானங்களின் போது வெளிப்படும் சக்திகள் குறித்து பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இது போன்ற பலருடைய ஆராய்ச்சிகளையும் பற்றிக் கூறும் அவர் ஃபாரடே கூண்டுகள் extra low frequency (ELF) என்று கூறப்படும் ஒரு நொடிக்கு 300க்கும் குறைவான அலைகளை வெளிப்படுத்துவனவாக உள்ள சக்திகளைத் தடை செய்வதில்லை என்றும் ஆழ்மனசக்திகளின் ஃபாரடே கூண்டு ஆராய்ச்சிகளின் போது அப்படிப்பட்ட அலைகள் தான் வெளிப்பட்டு அதிசயங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்றும் கருதுவதாகக் கூறினார். அந்த அளவு குறைந்த அலைவரிசை சக்திகள் உண்மையிலேயே சக்திவாய்ந்தனவாக இருப்பதாக அவர் கருதினார்.

இரண்டு புத்தகங்களையும், சுமார் அறுபது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள பெவர்லி ரூபிக் பல அறிவியல் கருத்தரங்கங்களிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் ஆராய்ச்சிகள் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல டெலிவிஷன் நிகழ்ச்சியான “Good Morning America” (ABC-TV)யில் டிசம்பர் 2000ல் அவர் ஆழ்மன ஆராய்ச்சிகள் பற்றிப் பேசிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

ஆழ்மன சக்திகளின் பிரம்மாண்டம் தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறும் பெவர்லி ரூபிக் இந்த ஆராய்ச்சிகளில் இருக்கும் சிக்கல்களையும் ஒத்துக் கொள்கிறார். இந்த ஆராய்ச்சிகள் வியப்பில் ஆழ்த்துகிற முடிவுகளைத் தெரிவித்தாலும் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஒன்று போலவே இருப்பதில்லை என்கிறார் அவர். விஞ்ஞானம் எத்த்னை முறை ஒரு ஆராய்ச்சி செய்தாலும் அது ஒரே மாதிரியான முடிவைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கையில் இந்த ஆராய்ச்சிகள் அது போன்ற ஒரே முடிவைத் தருவதில்லை என்பதுவே யதார்த்தமான உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் சக்தி வாய்ந்த மனிதர்களின் மனநிலை, தயார்நிலை போன்றவை அடிக்கடி மாறுவதால் இந்த ஆராய்ச்சிகளில் ஒரே விளைவைத் தரத் தவறுகிறது என்று கருத இடமிருக்கிறது என்கிறார் அவர்.

இன்றும் எத்தனையோ ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆராய்ச்சிகள் குறித்து ஓரளவு விளக்கமாகவே பார்த்து விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி ஆழ்மன சக்தியின் வகைகளையும், அந்த சக்திகளால் அற்புதங்கள் எப்படி சாத்தியமாகின்றன என்பதையும், அந்த ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதையும் விளக்கமாகக் காண்போமா?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, March 5, 2010

உண்மையான தலைவன்


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் போரில் காயமடைந்து சிகிச்சை பெறும் சிப்பாய்களைக் காண அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்வார். மருத்துவர்களிடம் அவர்களுடைய உடல்நல முன்னேற்றத்தைக் கேட்டு அறிந்து கொள்வார்.

அப்படி ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் பேசிய போது ஒரு மருத்துவர் ஒரு சிப்பாய் மரணத் தறுவாயில் இருப்பதாகச் சொன்னார். உடனே ஆப்ரகாம் லிங்கன் அந்த சிப்பாயின் அருகில் சென்று அமர்ந்தார். உற்றார் உறவினர் யாரும் அருகில் இல்லாமல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த சிப்பாயிடம் ஆப்ரகாம் லிங்கன் “உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார்.

அந்த சிப்பாயிற்கு ஜனாதிபதியை அடையாளம் தெரியவில்லை. ”என் தாயிற்கு ஒரு கடிதம் எழுத முடியுமா?” என்று கேட்டான்.

சம்மதித்த ஆப்ரகாம் அவன் சொல்லச் சொல்லக் கடிதம் எழுதினார். எழுதி முடித்த பின்னர் “தங்கள் மகனுக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன்” என்று கடைசியில் எழுதியதைப் பார்த்த பிறகு தான் அந்த சிப்பாயிற்குத் தனக்காகக் கடிதம் எழுதியது ஆப்ரகாம் லிங்கன் என்பது தெரிந்தது.

வியப்புடன் அந்த சிப்பாய் கேட்டான். “நீங்கள் ஜனாதிபதி தானே?”

“ஆம்” என்று அன்புடன் சொன்ன ஆப்ரகாம் லிங்கன் “தங்களுக்கு வேறெதாவது நான் செய்யக்கூடியது இருந்தால் சொல்லுங்கள்” என்றார்.

அந்த சிப்பாயின் மனநிலையை சொல்ல வேண்டியதேயில்லை. உற்றார் உறவினர் என்று யாரும் அருகில் இல்லாத போது அன்பைக் காட்டி அருகில் அமர்ந்திருப்பது ஜனாதிபதி என்கிற போது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

கடைசி மூச்சின் நேரம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட அந்த சிப்பாய் அவரிடம் வேண்டிக் கொண்டான். “தாங்கள் என் கைகளைப் பிடித்துக் கொண்டால் அது என் வாழ்வின் முடிவைப் பெருமையுடன் சந்திக்க உதவியாக இருக்கும்”

ஆப்ரகாம் லிங்கன் அவன் கையைப் பிடித்துக் கொண்டதும் அல்லாமல் அவனிடம் அன்பான இதமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்க அந்த சிப்பாயின் உயிர் அமைதியாகப் பிரிந்தது.

நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்த ஒரு போர் வீரனுக்கு அந்தத் தலைவர் காட்டிய அன்பையும் மரியாதையையும் பாருங்கள்.

உயர் பதவி கிடைத்து விட்டால் தங்களை ஏதோ தனிப் பெருமை வாய்ந்தவர்களாக நினைத்துக் கொள்ளும் தலைவர்கள் இருக்கும் காலக்கட்டத்தில் இது போன்ற உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா?


அரசியலிற்கப்பாற்பட்ட இன்னொரு தலைவரைப் பார்ப்போம். இந்தியாவின் Atomic Energy and Space Commission தலைவராக இருந்த பேராசிரியர் சதீஷ் தவான் 1973ல் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு முதல் விண்கலம் அமைக்கும் பணியைத் தந்தார். அப்துல் கலாம் தலைமையில் ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுனர்கள், சுமார் பத்தாயிரம் ஊழியர்கள், வேலையாட்கள் அந்த விண்கலத்திற்காக கடுமையாக உழைத்தனர். ஆகஸ்ட் 17, 1979 அன்று விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. ஆயிரக்கணக்கான பாகங்கள், கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் கொண்ட அந்த விண்கலம் கிளம்பிய ஒருசில நிமிடங்களில் பழுதடைந்து வங்காள விரிகுடாவில் விழுந்தது.

அன்று சதீஷ் தவான் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அந்தத் தோல்விக்கு Atomic Energy and Space Commission தலைவர் என்ற நிலையில் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். மிக அருமையான திட்டம் அது என்றும் சில எதிர்பாராத சிறு குறைபாடுகளால் தோல்வியடைந்தது என்றும் அவை சரி செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் மீண்டும் வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அப்துல் கலாம் அவர்கள் தான் அந்த விண்கலப்பணிக்கு இயக்குனர், எல்லா வேலைகளும் அவர் மேற்பார்வையில் தான் நடந்தது என்ற போதிலும் சதீஷ் தவான் தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

மறுபடியும் விண்கலம் பழுதுகள் நீக்கப்பட்டு வெற்றிகரமாக ஜுலை 18, 1980ல் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றியை அறிவிக்க பேராசிரியர் சதீஷ் தவான் டாக்டர் அப்துல் கலாமையே சென்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் சொன்னார். தோல்விக்குத் தான் பொறுப்பேற்று வெற்றிக்கான பேரையும் புகழையும் அதற்கென உழைத்தவருக்கே விட்டுக் கொடுத்த பெருந்தன்ன்மையைப் பாருங்கள். இவரல்லவோ உண்மையான தலைவர். இந்தச் செய்தியை அப்துல் கலாம் அவர்களே பல மேடைகளில் சொல்லித் தன் தலைவருக்கு உரிய புகழைச் சேர்த்திருக்கிறார்.

உண்மையான தலைவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருப்பார் என்ற அடையாளமே மறந்து போய் விட்ட காலக்கட்டத்தில் இருக்கிறோம் நாம். காமிராக்களுக்கு முன் மட்டுமே காட்டும் மனித நேயம், மேடைகளில் மட்டுமே காட்டும் வீரம், தன் புகழையும், சொத்தையும் வளர்க்க எதையும் யாரையும் செய்யும் தியாகம் என்ற பண்புகளுடன் இன்று புற்றீசலாகப் பெருகி வரும் தலைவர்கள் எல்லாம் உண்மையான தலைவர்கள் அல்ல. உண்மையான தலைவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதற்கு ஆப்ரகாம் லிங்கனும், சதீஷ் தவானும் மனதைத் தொடும் சிறந்த உதாரணங்கள்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Wednesday, March 3, 2010

ஆன்மிக முட்டாள்கள் ஆகாதீர்கள்!
இன்று தமிழகமெங்கும் நித்தியானந்த ஸ்வாமிகளின் லீலைகள் பற்றித் தான் பேச்சாக இருக்கிறது. கல்கி பகவான் என்பவரையும் பற்றியும் கதை கதையாகச் சொல்கிறார்கள். அவர்களுடைய ஆசிரமங்கள் சூறையாடப்படுகின்றன, முற்றுகையிடப்படுகின்றன. இது போன்ற போலிச் சாமியார்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பு வேண்டுமென்று வேறு ஒரு கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆன்மிகப் போர்வையில் ஆபாசம், கொள்ளை எல்லாம் நடப்பது இந்து மதத்தில் மட்டுமல்லாமல் மற்ற மதங்களில் கூட நடப்பதை தினமும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.

இது போன்று நடப்பதற்கெல்லாம் இந்தப் போலிச் சாமியார்கள் தான் காரணம் என்று பரவலாகக் கருத்து நிலவுகிறது. உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் என்பதை விட பெரும்பாலான மக்கள் ஆன்மிக முட்டாள்கள் ஆக இருக்கிறார்கள், ஏமாறத் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்வது தான் அதிகப் பொருத்தமாக இருக்கும். அவர்களுடைய அந்தத் தயார்நிலையையும், முட்டாள்தனத்தையும் ஒருசிலர் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்பது என்னவென்று பெரும்பாலானோருக்குத் தெளிவில்லாமல் இருப்பதே இதன் காரணம். கடவுளைப் பற்றி யாராவது பேசினால், அதுவும் மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நமக்குத் தெரியாத பல உயர்ந்த விஷயங்களையும் சொல்லி பிரசங்கம் செய்தால் அவர்கள் துறவாடைகளையும் அணிபவராக இருந்தால் உடனடியாக அவர்களை வணங்கிப் பின்பற்ற ஒரு கூட்டம் உடனடியாகத் தயாராகி விடுகிறது.

ஆன்மிக அறிவைப் பெற்றிருப்பதனாலே ஒருவர் பகவானோ, பரமஹம்சரோ ஆகிவிட முடியாது. நமக்குத் தெரியாத ஆன்மிக உயர்கருத்துகள் எல்லாம் ஒருவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதாலேயே அவர் மகானாகி விட முடியாது. அறிந்திருப்பது மிகப் பெரிய விஷயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அறிந்ததை வாழ்ந்து காட்டுவது தான் அற்புதம். அதுவே ஆன்மிக ஞானத்தின் உண்மையான அளவுகோல்.

கோபம் தவறு, கோபத்தை வெற்றி கொள்வது எப்படி என்றெல்லாம் நான் பிரமாதமாக மற்றவர் மனதைக் கவரும்படி சொல்லலாம். எழுதலாம். ஆனால் கேட்டு விட்டோ, படித்து விட்டோ யாராவது ‘சும்மா இருடா முட்டாள்’ என்று சொன்னால் எனக்குக் கோபம் வருமேயானால் நான் அறிந்ததை எல்லாம் நடைமுறைப்படுத்தும் பக்குவம் எனக்கு வரவில்லை என்பது தான் பொருள்.


எனவே ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்றெல்லாம் ஆன்மிகப் பெருமக்கள் பார்த்து அவரை முடிவு செய்வதை விட அவர் எப்படி வாழ்கிறார் என்று கவனித்து முடிவு செய்வது தான் ஏமாறாமல் தடுக்க உதவும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வது போல “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” என்கிற வகையில் கூட ஒருவர் இருக்கலாம். பெரிய பெரிய தத்துவங்கள் பற்றி மேடையில் பேசினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சிற்றின்பப் பிரியராக இருக்கலாம். அவரை ஆராய்ந்து தெளியாமல் ஆண்டவனாக யாராவது பார்த்தால் அது பேதைமை.

ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினால் ஏமாற்றுபவரின் குற்றத்தை விட, இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறிய குற்றமே பெருங்குற்றமாக இருக்கும்.


(இது சம்பந்தமாக “உண்மையான மகான் எப்படி இருப்பார்?” என்ற தலைப்பில் நான் எழுதியதை http://enganeshan.blogspot.com/2009/05/blog-post_19.html ல் படிக்கலாம்.
”ஆன்மிகவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை” என்று எச்சரித்ததை
http://enganeshan.blogspot.com/2009/02/blog-post_20.html ல் படிக்கலாம். ”எது நாத்திகம்” என்ற சிறுகதையிலும் நான் ஏமாற்று சாமியார்களைச் சுட்டிக்காட்டியுள்ளேன். அதை http://enganeshan.blogspot.com/2007/10/blog-post_1813.html ல் படிக்கலாம்)

- என்.கணேசன்

Monday, March 1, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-23

வியாதிகளைக் குணப்படுத்தும் ஓல்கா வோரால்1979 ஆம் ஆண்டு உயிர் இயற்பியல் (Biophysics) துறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற பெவர்லி ரூபிக் (Beverly Rubik) என்ற ஆராய்ச்சியாளர் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு மாறியது ஒரு சுவாரசியமான கதை. விளையாட்டுகளிலும், நடனத்திலும் கூட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு சமயம் மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டார். அப்போது டாக்டர் ஓல்கா வோரால் (Dr. Olga Worrall) என்ற சிகிச்சையாளர் தன் கைகளால் தொட்டே நோய்களையும், வலிகளையும் போக்க முடிந்தவர் என்று கேள்விப்பட்டு உடனே அவரை அணுகினார்.

நவீன கல்வியிலும், சிந்தனைகளிலும் வளர்ந்திருந்த ரூபிக்கிற்கு இது போன்ற சிகிச்சை முறைகளில் பெரியதொரு நம்பிக்கை இருந்திருக்க வய்ப்பில்லை என்றாலும் பலர் சொல்லக் கேட்டிருப்பதை சரிபார்க்க இதுவே வாய்ப்பு என்று அவர் கருதினார். டாக்டர் ஓல்கா வோரால் அவருடைய முழங்கால் மூட்டில் கை வைத்த சில நிமிடங்களில் மூட்டு வலி மிகவும் குறைந்து போனது. இது விஞ்ஞானியான ரூபிக் அவர்களுக்கு மிக ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் அறிந்திருந்த மருத்துவ முறைகளில் இது போன்ற அதிசயத்தை அவர் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் இது குறித்து விரிவாக ஆராய முற்பட்டார். தன் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா அன்று அவர் டாக்டர் ஓல்கா வோராலைக் கேட்க அவரும் ஒத்துக் கொண்டார்.

முன்பே பாக்டீரியாக்களை வைத்துப் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருந்த பெவர்லி ரூபிக் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளைத் தனக்கு நன்கு தெரிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்தே செய்து பார்க்கத் தீர்மானித்தார். பல நவீன உபகரணங்களை வைத்து நீரில் நீந்தும் பாக்டீரியாக்களைப் பல புகைப்படங்கள் ரூபிக் எடுத்து வைத்திருந்தார். அவற்றைத் தொடர்ச்சியாக கவனிக்கையில் அவை நீந்துவது கரடுமுரடில்லாத அமைதியான வளைவுகளாய் தெரிந்தன. சில வேதிப்பொருள்களை அவற்றுடன் சேர்த்தபோது அவை செயலிழந்து ஸ்தம்பித்துப் போவதை அவர் கவனித்தார்.

அப்படி அந்த பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்கிற வேதிப் பொருள்களைப் பெருமளவு அந்த நீரில் சேர்த்து அந்தக் கலவை உள்ள மைக்ராஸ்கோப் ஸ்லைடின் மீது டாக்டர் ஓல்கா வோராலின் கைகளைக் குவித்து வைக்கச் சொன்னார். பன்னிரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அந்த மைக்ராஸ்கோப் ஸ்லைடை சோதித்துப் பார்த்த போது அந்த பாக்டீரியாக்களில் ஐந்திலிருந்து பத்து சதவீதம் பாக்டீரியாக்கள் தங்கள் செயல்திறனை மீண்டும் பெற்றிருந்தன.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பாக்டீரியாக்களை வைத்து ஆராய்ச்சி செய்திருந்த ரூபிக்கிற்கு இது போல் முன்பு பாக்டீரியாக்கள் மீண்டும் செயல்திறனை அப்படி மீட்க முடிந்த சம்பவங்களைக் காண முடிந்ததில்லை. ஒருவேளை மனிதக் கைகளின் இளஞ்சூட்டில் அந்த பாக்டீரியாக்கள் அந்த வேதிப்பொருள்களின் செயல்பாட்டையும் மீறி செயல் திறன் திரும்பப் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழத் தன் கைகளையும், வேறுசிலர் கைகளையும் மைக்ராஸ்கோப் ஸ்லைடில் குவித்து ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர் ஓல்கா வோராலின் கைகள் குவித்ததால் ஏற்பட்ட விளைவுகள் மற்றவர்கள் கைகளைக் குவித்த போது ஏற்படவில்லை.

அந்தப் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல, அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல (antibiotic) நுண்பொருள்களை அந்த பாக்டீரியாக்களுடன் சேர்த்து மீண்டும் அந்த ஆராய்ச்சிகளை ரூபிக் தொடர்ந்தார். மிக அதிகமான அளவு அந்த நுண்பொருள்களைச் சேர்த்த போது டாக்டர் வோராலின் தொடுதலால் எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவு நுண்பொருள்களைச் சேர்த்த போது, அந்த பரிசோதனைக் குழாய்களை வோரால் சிறிது நேரம் தொட்ட போது அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெறவும் வளர்ச்சியடையவும் தொடங்கின. டாக்டர் வோராலின் கைகளுக்கும் அந்த சோதனைக் குழாயிலிருந்த பாக்டீரியாக்களுக்கும் இடையே ஏதோ நிகழ்கிறது என்பது மட்டும் ரூபிக் அவர்களுக்குத் தெரிந்தது. ஃபாரடே கூண்டு போன்ற நவீன கருவிகள் கூட கண்டு பிடிக்க முடியாத உயிர்மின்காந்த நுண்ணலைகள் (bioelectromagnetic subtle waves) உருவாகி இந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன என்ற கணிப்புக்கு வந்தார்.

(சிலர் நட்டால் செடிகளும், மரங்களும் நன்றாக செழித்து வளரும் என்று ஒருசிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஓரிருவர் நடும் தாவரங்கள் எல்லாம் மிகச் செழிப்பாக வளர்வதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி பெரிதாக அப்போது நினைக்கத் தோன்றியதுமில்லை. ஆனால் ரூபிக் அவர்களின் பரிசோதனைகள் பற்றிப் படிக்கையில் அவையெல்லாம் கூட சிந்திக்க வேண்டியவையாகவே தோன்றுகிறது. அந்த நபர்கள் ஆழ்மன சக்தியாளர்களாக இல்லாதிருந்தாலும் அந்தத் தாவரங்கள் வளர உதவுகின்ற ஏதாவது சக்தியை அந்த விதைகளுக்கோ, நாற்றுகளுக்கோ தர வல்லவர்களாக இருந்திருக்கலாம்)


பெவர்லி ரூபிக் அறிவியல் ரீதியாக ஆழ்மன சக்திகளுக்கு விடை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் டாக்டர் ஓல்கா வோராலோ தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியாகக் கூறினார். 1972ஆம் ஆண்டு இறந்த அவர் கணவர் அலெக்சாண்டர் அம்புரோஸ் வோராலும் அவர் போலவே சக்தி படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்கா வோராலும் 1985ஆம் ஆண்டு இறக்கும் வரை மனிதர்களை மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட விலங்குகளையும், தாவரங்களையும் கூடத் தன் சக்தியால் குணப்படுத்தி வந்தார்.

1982ல் Science of Mind என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குணப்படுத்தும் ஆழ்மன சக்தியை விவரிக்கும்படி பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார். “ஒரு பொறியியல் வல்லுனரான என் கணவர் அதை நுண்ணிய மின்னலை என்றார். இந்தியர்கள் ப்ராணன் என்று சொல்கிறார்கள். உயிர்சக்தி என்று சிலரும், ஆழ்மன சக்தி என்று சிலரும் கூறுகிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். அந்த சக்தியில் மின்னலைகள் இருப்பதாக என் கணவர் கடைசி வரை கூறி வந்தார். நாங்கள் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வதாகப் பல நோயாளிகள் சொன்னதைப் பார்க்கையில் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.”

“இறைவன் இந்த உலகத்தை குறைபாடில்லாமல் படைத்திருக்கிறார். மனிதன் சரியான விதத்தில் வாழாமல் பிறழும் போது நோய் உட்பட பல தீமைகளை வரவழைத்துக் கொள்கிறான். மனிதன் மீண்டும் தன் உயர்நிலையைத் திரும்பப் பெற இந்த இயல்பான சக்தியை உபயோகித்து மீளலாம். இதை நான் இறைசக்தி என்றே நினைக்கிறேன். ஒருவரைக் குணப்படுத்த நான் முயலும் போது இறைவனின் இந்த சக்தி என் மூலமாகச் சென்று பலனளிக்கிறது என்று கூறத் தோன்றுகிறது”
மேலும் பயணிப்போம்......

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: விகடன்