சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 30, 2022

யாரோ ஒருவன்? 87


ஞ்சய் ஷர்மாவாலும், மதன்லாலாலும் தடியன் என்று அழைக்கப்படும் தாமோதர் அன்றிரவு தன் வழக்கமான நேரத்தில் அவர்களுக்கு வறண்ட சப்பாத்தி எடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் பைக் அந்த நெடுஞ்சாலையில் திரும்பும் போதே அவர்களை அடைத்து வைத்திருக்கும் அந்தப் பழைய ஃபேக்டரிக்கு எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆட்களை அவன் கவனித்து விட்டான். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதும் அவர்கள் இருவர் பார்வையும் அந்த ஃபேக்டரி மீது தான் இருப்பது பௌர்ணமி நிலவொளியில் தெளிவாகவே தெரிந்தது.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு நெடுஞ்சாலையில் அந்த நேரத்தில் காணக் கிடைக்கும் காட்சி அல்ல அது.  அந்த நேரத்தில் வாகனங்கள் வந்து போகுமேயொழிய ஆட்கள் நின்று பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன் பைக்கின் வேகத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்ட தாமோதர் அவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தான். ஒரு பழைய ஸ்கூட்டரில் சாய்ந்து கொண்டே ஒருவன் நின்று கொண்டிருக்க, அதன் பின் சீட்டைப் பிடித்தபடியே அருகில் நின்று இன்னொருவன் பேசிக் கொண்டிருந்தான். இருவரும் சும்மா வெட்டிப் பேச்சு பேசிக் காலம் கழிக்கும் ஆட்கள் போலத் தெரியவில்லை. அவர்கள் நின்று கொண்டிருக்கும் விதம் பார்த்தால் நிறைய நேரம் நின்று கொண்டிருப்பவர்கள் போலவே தோன்றியது. நின்று சலித்து தான் ஒருவன் சாய்ந்தும், இன்னொருவன் சீட்டைப் பிடித்தபடியும் நின்று கொண்டிருக்கிறான் என்பதை தாமோதரால் எளிதில் கணிக்க முடிந்தது.  

தாமோதர் எச்சரிக்கையடைந்து அந்த ஃபேக்டரிக்கு நூறு அடிகள் முன்பாகவே பைக்கை நிறுத்தி அதில் ஏதோ பிரச்சினை இருப்பது போலவும், அந்த பைக்கை ஆராய்வது போலவும் காட்டிக் கொண்டு ஓரக்கண்ணால் அவர்கள் இருவரையும் கவனித்தான். அவர்கள் இருவர் பார்வையும் இப்போது அவன் மேல் தங்கியது. பைக்கைத் தட்டி வயர்களை இழுத்துப் பார்த்து இரண்டு நிமிடங்கள் அங்கே நின்ற அவன் பெருமூச்சு விட்டு பிரச்சினையைப் பின்பு சரிசெய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தவனைப் போல் காட்டிக் கொண்டு மறுபடியும் பைக்கைக் கிளப்பி மெல்ல ஓட்ட ஆரம்பித்தவன் அந்த ஃபேக்டரியைத் தாண்டிப் போனான். அப்போதும் அந்த ஆட்கள் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு குறுக்குத் தெருவில் திரும்பி பின் தெரு வழியாக வீட்டுக்குப் போன தாமோதர் ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் கிளம்புவதற்காக வெளியே வந்தான். அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. அந்த இருவரும் ஏற்கெனவே அவனைக் கவனித்திருக்கிறார்கள். திரும்பவும் அவன் அதே இடத்திற்கு இரவு நேரத்தில் போவது சந்தேகத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று தோன்றவே அவன் தன் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து அந்த ஃபேக்டரி பக்கம் போகச் சொன்னான். ”எதிரில் இப்போதும் அந்த ஆட்கள் இருக்கிறார்களா?” என்பதைப் பார்த்துச் சொல்லச் சொன்னான். ஒருவேளை அவர்கள் இருந்தார்களானால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களை உற்றுப் பார்க்கவோ, அதிக நேரம் பார்க்கவோ வேண்டாம் என்று சொன்னான்.

அரை மணி நேரத்தில் அவன் நண்பன் போன் செய்து அந்த இரண்டு ஆட்களும் ஃபேக்டரிக்கு எதிர்ப்பக்கத்தில் இப்போதும் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் இருவர் பார்வையும் ஃபேக்டரியின் மீது தான் இருக்கிறது என்றும் தெரிவித்தான்.

தாமோதர் உடனடியாக நரேந்திரனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

நரேந்திரன் யோசனையுடன் கேட்டான். “அவங்க நீ மத்தியானம் போனப்ப இருக்கலை இல்லயா

இருக்கலை சார். நான் ரெண்டரை மணிக்கு அங்கேயிருந்து கிளம்பிட்டேன். அதுக்குப் பிறகு எந்த நேரத்துலயும் அவங்க வந்திருக்கலாம். அப்போலருந்து ஃபேக்டரியை கண்காணிச்சிட்டிருக்கலாம்னு தோணுது….”

ஃபேக்டரியை நீ நல்லா பூட்டியிருக்கே அல்லவா?”

பூட்டியிருக்கேன். பூட்டும் பெருசு. காம்பவுண்ட் சுவரும் உயரமா தான் இருக்கு. அதுல கண்ணாடித் துண்டுகள் நெருக்கமா பதிச்சிருக்கோம்…. ஆனா உள்ளே போயேயாகணும்னு நினைச்சா அவங்க எதாவது வழி கண்டுபிடிச்சு போக முடியாதுன்னு சொல்ல முடியாதுஇப்ப என்ன பண்றது சார்?”

நான் யோசிச்சு என்ன பண்ணனும்னு சொல்றேன் தாமோதர். நீ அவனுக முன்னாடி பூட்டைத் திறந்து உள்ளே போகாம இருந்தது ரொம்ப நல்லதாப் போச்சு.” என்று அமைதியாகச் சொல்லி செல்போனைக் கீழே வைத்தாலும் நரேந்திரன் முழுமையான ஆபத்தை உணர்ந்தான்.

யோசித்த போது நடக்கும் நிகழ்வில் அஜீம் அகமதின் முத்திரை தெரிந்தது. நாகராஜ் சொன்னது போல் அஜீம் அகமது இந்தியா வந்து சேர்ந்திருக்க வேண்டும். அவன் டெல்லியில் உத்தேசமாக எங்கெல்லாம் நரேந்திரன் சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் அடைத்து வைத்திருப்பான் என்று சில இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கண்காணிக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த இரண்டு ஆட்களும் உள்ளே போய் உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அங்கேயிருந்து போக மாட்டார்கள் என்பது புரிந்தது. உள்ளே அவன் அவர்களை அடைத்து வைத்திருப்பது மட்டும் வெளியே தெரிந்தால் பின் நரேந்திரன் ராவில் வேலை செய்ய முடியாமல் ஜனார்தன் த்ரிவேதி கண்டிப்பாகப் பார்த்துக் கொள்வார். அவன் உத்தியோகத்துக்கு மட்டுமல்லாமல் அவன் உயிருக்கும் கூட ஆபத்து நேரலாம். ரா அதிகாரிகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியாது. என்ன செய்வதென்று நரேந்திரன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

நரேந்திரனுக்கு இன்றிரவே அந்த ஆட்கள் ஃபேக்டரிக்குள் எப்படியாவது நுழைந்து பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது. பகலில் இருக்கும் எச்சரிக்கை உணர்வு இரவில் அவர்களுக்குக் கண்டிப்பாக இருக்காது. இப்போதைக்கு அவர்கள் போகாதபடி எதாவது செய்ய முடியும். ஆனால் நாளை, நாளை மறுநாள் என்று தொடர்ந்து தவிர்க்க முடியாது. அவர்கள் சந்தேகம் வலுக்கும்.... அது ஆபத்து....

நிறைய யோசித்து இன்றைக்கு அவர்களுக்குச் சந்தேகம் வராதபடியும், இன்றைக்கு அவர்கள் ஃபேக்டரிக்குள் புகாதபடியும் பார்த்துக் கொண்டு நாளை என்ன செய்வதென்று பிறகு சிந்திக்கலாம் என்ற முடிவுக்கு நரேந்திரன் வந்தான்.

அவனுடைய நண்பன் போலீஸ் ரோந்துப் பிரிவில் இருந்தான். அவனிடம் போன் செய்து பேசினான்...


டந்த பத்து மாதங்களாகப் பூட்டப்பட்டிருக்கும் அந்த ஃபேக்டரி அஜீம் அகமது தேர்ந்தெடுத்திருந்த இடங்களில் ஒன்றாக இருந்தது. ஃபேக்டரி முதலாளி இறந்து போய் அவரது மகன்கள், மகள்களுக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஃபேக்டரி இழுத்து மூடப்பட்டிருந்தது. அந்த ஃபேக்டரியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆட்கள் மதியம் மூன்றரையிலிருந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், அங்கே யாரும் போகவோ, அதனுள்ளே இருந்து வரவோ இல்லை என்றும் தங்களை நியமித்த தலைவனுக்குப் போன் செய்து இரவு ஒன்பதரைக்குச் சொன்னார்கள்.

 ”பதினொன்றரை மணி வரைக்கும் பாருங்கள். பின் உள்ளே போய் பார்த்து விட்டு வந்து விடுங்கள்என்று உத்தரவு வந்தது.

பத்தரை மணியளவில் இருவரில் ஒருவன் எதிரே நின்று பார்த்துக் கொண்டிருக்க, மற்றவன் தெருவைக் கடந்து போய் ஃபேக்டரியின் பெரிய மெயின் கேட்டின் பூட்டைக் கவனமாக ஆராய்ந்தான். பழங்காலப் பூட்டு என்றாலும் அவ்வளவு சீக்கிரம் திறக்க முடியாத பூட்டாக அது இருந்தது. கேட்டின் மீது ஏறிப் போவது முடியாத காரியம். கால் வைத்து ஏற வசதி இல்லை....  சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அதுமட்டுமல்லாமல் சுவர்களின் மேல் விளிம்பில் உடைந்த கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. எளிதாக இல்லாவிட்டாலும்  பூட்டைத் தான் எப்படியாவது திறந்து கொண்டு உள்ளே போக வேண்டும்... வேறு வழியில்லை.

அவன் மறுபடி சாலையைக் கடந்து வந்து தன் சகாவிடம் சொன்னான். “பூட்டைத் தான் திறக்கணும்...”

அது பிரச்னையில்ல. கம்பி இருக்கு...” என்ற சகா ஸ்கூட்டரிலிருந்து ஒரு வளைந்த கம்பியை வெளியே எடுத்த போது தான் தூரத்தில் போலீஸ் ரோந்து வாகனம் வருவது தெரிந்தது.


(தொடரும்)
என்.கணேசன்
   
  

Thursday, May 26, 2022

சாணக்கியன் 6

 

விஷ்ணுகுப்தர் கங்கையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். தனநந்தனின் அரசவையில் நுழைந்ததற்கு கங்கையில் மூழ்கி தான் அவர் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அவருக்குள் கொழுந்து விட்டு எரியும் ஆத்திரத்தையும் கங்கையே அணைக்க வேண்டும். என்ன தான் உணர்ச்சிகளை அடுத்தவர்க்குக் காட்டாமல் மறைத்தாலும் கோபம் அவருக்குள் நிறைந்திருந்தது. கோபாலன் சொன்னது போல் காகம் தன் கருமையைக் காலப்போக்கிலும் இழப்பதில்லை. விஷ்ணுகுப்தருக்கு அவருடைய தந்தையின் நினைவும் வந்து மனதைக் காயப்படுத்தியது. தனநந்தனைப் பார்த்த முதல் கணத்திலிருந்து அந்தப் பழைய நினைவுகள் மேலோங்க ஆரம்பித்ததையும் அவரால் தடுக்க முடியவில்லை. இதையெல்லாம் மீண்டுமொரு முறை அனுபவிக்கத் தானா அவருடைய அந்தராத்மா அவரைப் பாடலிபுத்திரத்திற்கு வரவழைத்திருக்கிறது?  

 

கால்கள் முன்னோக்கிப் போக, மனம் பின்னோக்கிப் போக நேரம் போவது தெரியாமல் நடந்து கொண்டிருந்த விஷ்ணுகுப்தரை நிகழ்காலத்திற்கு வரவழைத்தது ஒரு சிறுவனின் கணீரென்ற குரல். “அரசர் சந்திரகுப்தர் அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார்...”

 

விஷ்ணுகுப்தர் ஆச்சரியத்துடன் நின்று சத்தம் வந்த திசையில் பார்த்தார். தலையில் ஒரு தலைப்பாகை கட்டி அதில் ஒரு மயிலிறகைச் செருகி இருந்த ஒரு சிறுவன் ராஜநடை நடந்து வந்து ஒரு பாறையின் மீது லாவகமாக ஏறி உட்கார்ந்தான். அவன் தான் அரசர் சந்திரகுப்தன்போலிருக்கிறது என்று விஷ்ணுகுப்தர் புன்னகை செய்தபடி நினைத்துக் கொண்டார். அவன் வருவதை அறிவித்த உயரமான நிறுவன் அந்தப் பாறை அருகே நின்று கொள்ள ஆறு சிறுவர்கள் தரையில் அமர்ந்து கொண்டார்கள். அப்போதிருந்த மனநிலையின் கனத்தை இந்தச் சிறுவர்களின் விளையாட்டு குறைக்கும் என்று நினைத்தவராக ஓரமாக நின்று அவர்கள் விளையாட்டை விஷ்ணுகுப்தர் கவனிக்க ஆரம்பித்தார்.

 

சந்திரகுப்தன் கம்பீரமாக உயரமான சிறுவனிடம்ஆரம்பிஎன்பது போல கையை அசைத்தான். அந்தச் சிறுவன் கணீர் குரலில் சொன்னான். “மக்கள் தங்கள் குறைகளை அரசரிடம் முறையிடலாம்

 

ஒரு சிறுவன் எழுந்து வந்து சொன்னான். “வணக்கம் அரசே. நான் என் அடுத்த வீட்டுக்காரனிடம்  கிணறை வாங்கினேன். அதற்கான பணம் வாங்கிக் கொண்ட பின்னும் அவன் என் கிணற்றிலிருந்து தான் தினமும் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறான் அரசே.”

 

உன் அடுத்த வீட்டுக்காரன் சபையில் இருக்கிறானா?” சந்திரகுப்தன் அரச தோரணையிலேயே கேட்டான்.

 

ஆம் அரசேஎன்று சொல்லியபடி இன்னொரு சிறுவன் எழுந்து முன்னுக்கு வந்து நின்றான்.

 

நீ இவனிடம் உன் கிணற்றை விற்றுப் பணம் பெற்றுக் கொண்டது உண்மையா?”

 

ஆம் அரசே

 

பின் ஏன் இன்னும் நீ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கிறாய்?”

 

அந்தச் சிறுவன் குறும்புப் புன்னகையுடன் சொன்னான். “அரசே நான் கிணற்றைத் தான் அவனிடம் விற்றேன். அதில் இருக்கிற நீரை விற்கவில்லை.”

 

சந்திரகுப்தன் ஒரு கணம் அந்தச் சிறுவனையே யோசனையுடன் பார்த்தான். பின் அவன் சொன்னான். “நல்லது அப்படியானால் அந்தக் கிணற்றிலிருக்கும் நீரை நீ முழுவதுமாகக் காலி செய்து விடு. இல்லா விட்டால் அவனுடைய கிணற்றில் நீ வைத்திருக்கும் உன் தண்ணீருக்கு நீ வாடகை தர வேண்டி இருக்கும்...”

 

அந்தக் குறும்புச் சிறுவனின் முகத்தில் இதை எதிர்பார்த்திராத திகைப்பு தெரிந்தது. விஷ்ணுகுப்தர் சந்திரகுப்தனின் தீர்ப்பில் இருக்கும் புத்திசாலித்தனத்தை வெகுவாக ரசித்தார். மனம் சற்று லேசானதில் அவருக்கும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் ஒரு யோசனை தோன்றியது.

 

வணக்கம் அரசேஎன்று சொன்னபடி அவர் அவர்களை நெருங்க சந்திரகுப்தனைத் தவிர மற்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்கள். அவன் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

 

அவர் நெருங்கியவுடன் என்ன வேண்டும் அந்தணரே?” என்று கம்பீரமாகவே கேட்டான்.

 

எனக்கு வேள்விகள் செய்ய நெய் வேண்டியிருக்கிறது. அதற்கு எனக்கு ஒரு பசு வேண்டும்.” என்று விஷ்ணுகுப்தர் வணங்கிய நடிப்புடன் சொன்னார்.

 

சந்திரகுப்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் அவன் நண்பர்கள் யாரும் இல்லாததால் சற்றுத் தள்ளி தரையில் இருந்த ஒரு கல்லைக் காட்டிச் சொன்னான். “அந்தப் பசுவை நீங்கள் ஓட்டிக் கொண்டு போகலாம் அந்தணரே

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதற்குத் தர என்னிடம் பணம் இல்லை அரசே

 

சந்திரகுப்தன் பெருந்தன்மையுடன் சொன்னான். “பணம் வேண்டியதில்லை அந்தணரே

 

தனநந்தன் நினைவுக்கு வர விஷ்ணுகுப்தர் சொன்னார். “இதனால் உங்கள் கஜானாவுக்கு நஷ்டம் வந்து விடாதா அரசரே

 

சந்திரகுப்தன் சொன்னான். “இந்தப் பசுவிலிருந்து கிடைக்கும் நெய்யினால் நீங்கள் வேள்விகள் செய்தால் நாட்டில் நன்றாக மழை பெய்யும். நாட்டில் நன்றாக மழை பெய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். நல்ல விளைச்சல் இருந்தால் வரிவசூலும் நன்றாக இருந்து கஜானா நிறையவும் செய்யும். அதனால் இந்தப் பசுவைத் தானம் தருவதால் கஜானாவுக்கு லாபமே ஒழிய நஷ்டம் வராது அந்தணரே

 

வயதுக்கு மீறிய அறிவும், சமயோசிதமும், இந்தச் சிறுவனிடம் தெரிவதுடன் இந்தச் சிறுவன் மற்றவர்கள் போல் ஓடாமல் துணிச்சலுடன் அமர்ந்திருக்கும் விதம் அவன் தைரியத்தையும் வெளிப்படுத்தியதைக் கண்ட விஷ்ணுகுப்தர் அவனை மனதிற்குள் மெச்சினார்.  

 

அந்தச் சிறுவன் காட்டிய கல்லைக் கையில் எடுத்துக் கொண்டுஅரசே உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்என்று அவர் வாழ்த்தினார்.

 

சந்திரகுப்தன் தங்கள் விளையாட்டில் இணைந்து கொண்ட அந்த அந்தணரைப் பார்த்து புன்னகைத்தபடி பாறையில் இருந்து மெள்ளக் கீழே இறங்கினான். இறங்கியவன் மிகுந்த மரியாதையுடன் தலைதாழ்த்தி கைகூப்பி வணங்கினான். “வணக்கம் அந்தணரே

 

நலமுண்டாகட்டும் சிறுவனே உன் பெயரே சந்திரகுப்தன் தானா, இல்லை இது இந்த நாடகத்திற்காக நீ வைத்துக் கொண்ட பெயரா?”

 

பெயரே சந்திரகுப்தன் தான் ஐயா

 

அவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் அவனுக்குத் தந்தை இல்லையென்றும் அவன் தாய் மற்றும் தாய்மாமனுடன் அருகில் இருக்கும் குடிசையில் வசித்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. அவனுக்கு மாடு மேய்ப்பது தான் தொழில் என்றும் தெரிய வந்த போது விஷ்ணுகுப்தர் கேட்டார். “நீ கல்வி கற்கவில்லையா சந்திரகுப்தா?”

 

எனக்கு கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் எங்கள் குலத்துச் சிறுவர்களுக்கு யாரும் கல்வி கற்பிப்பதில்லை அந்தணரே. இருந்த போதிலும் நான் பாடசாலைகளுக்கு வெளியே அதிகம் பொழுதைப் போக்குவேன். அவர்கள் சொல்வது அரைகுறையாய் காதில் விழும்…” அந்தச் சிறுவனின் முகத்தில் ஏக்கம் தெரிந்தது.  

 

மனித இயல்பை எடைபோடுவதில் இணையற்றவரான விஷ்ணுகுப்தருக்கு இந்தச் சிறுவனிடம் இருக்கும் சிறப்புகள் ஒரு அரசனுக்குத் தேவையானவை என்று தோன்றியது. சரியாக வழிநடத்தினால் இந்தச் சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்துடன் பாரதத்தின் எதிர்காலமும் இணைந்திருக்கலாம் யார் கண்டது! சற்று நேரத்திற்கு முன் அந்தராத்மாவிடம் கேட்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்தது போலிருந்தது. ’இவனைச் சந்திக்கத் தான் என்னை என் அந்தராத்மா இங்கே வரவழைத்திருக்கிறதோ?”

 

இது போன்ற விஷயங்களில் உள்ளுணர்வுக்கு அதிக முக்கியத்துவம் தரும் விஷ்ணுகுப்தர் மேலும் அந்தச் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தார். நிறைய கனவுகளுடனும் துடிப்புடனும் இருந்த சந்திரகுப்தன் அவரிடம் மனம் விட்டுப் பேசினான். அவன் பேசப் பேச விஷ்ணுகுப்தருக்கு அவருடைய கணிப்பு சரியென்று மீண்டும் மீண்டும் உறுதியாகியது.

 

நீ என்னுடன் தட்சசீலம் வருகிறாயா சந்திரகுப்தா. உனக்கு நான் எல்லாமே கற்பிக்கிறேன். உன் கனவுகளின் படி உன்னை ஒரு அரசனாக்கவோ, அல்லது அரசனுக்கு இணையானவனாகவோ ஆக்குவது என் கடமை.”

 

சந்திரகுப்தன் அவரை நம்ப முடியாத பிரமிப்புடன் பார்த்தான்.  விஷ்ணுகுப்தரின் குரலில் தெரிந்த உறுதி அவனுடைய கனவுகளுக்குச் சிறகுகள் தருவது போலிருந்தது. ஆனாலும் உறுதிப்படுத்திக் கொள்ள அவன் கேட்டான். “அந்தணரே. நீங்கள் விளையாட்டாகச் சொல்லவில்லையே

 

இல்லை சந்திரகுப்தா. எனக்கு விளையாட நேரமுமில்லை. உண்மையாகவே தான் கூறுகிறேன். நீ சம்மதித்தால் உன் தாயிடமும், தாய்மாமனிடமும் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என் கடமை.”

 

சந்திரகுப்தன் அவரை நம்பினான். அவர் அவனுக்கு அந்த நேரத்தில் கடவுளைப் போல் தோன்றினார்.  அவர் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட சந்திரகுப்தன் சொன்னான். “எனக்குச் சம்மதம் அந்தணரே

 

சரி. நான் இப்போது கங்கைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். திரும்பி வருகையில் நள்ளிரவாகி விடும். அதனால் நான் நாளை வந்து உன் வீட்டாருடன் பேசுகிறேன். எது உன் வீடு

 

சந்திரகுப்தன் சற்றுத் தள்ளித் தெரிந்த தன் குடிசையைக் கைகாட்டினான்.

 

சரி நாளை சந்திப்போம் சந்திரகுப்தா.”

 

(தொடரும்)

என்.கணேசன்

 

 இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


Monday, May 23, 2022

யாரோ ஒருவன்? 86


ஜீம் அகமது தொடர்ந்து சொன்னான். “இதுல ஒவ்வொரு இடத்தையும் கண்காணிக்கிற பொறுப்பை ரெண்டு ரெண்டு பேருக்கு ஒதுக்குங்க. அவங்க ஒரே வேலை அந்த இடங்களைக் கண்காணிக்கிறது. மூனு நாட்களுக்குள்ள அவங்க கண்காணிக்கிறதோட மட்டுமில்லாமல், உள்ளே ஆட்களை மகேந்திரன் மகன் ஒளிச்சி வெச்சிருக்கலாம்னு சந்தேகம் வந்தால், உள்ளே போய் பார்த்துட்டு வந்து உறுதியாய் உண்டு அல்லது இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க. மூனு நாள் முடியறதுக்குள்ளே நாம அந்த இடத்தைக் கண்டுபிடிச்சாகணும். சரியான திறமையான ஆள்களை உடனே இதுக்கு ஒதுக்கி வேலையை முடிங்க....”

அஜீம் அகமது அவர்கள் போன மறுகணம் ஆப்கானிஸ்தான் பகுதியில் அவன்  இயக்கத்து ஆட்களுக்கு ஏற்பட்டிருந்த புதிய பிரச்னை குறித்த தகவல்களைத் தன் லாப்டாப்பில் படிக்க ஆரம்பித்தான்.  இனி மகேந்திரன் மகன் பிரச்னைக்கு மூன்று நாட்கள் கழித்து தான் அவன் வருவான். அதன் பின் அப்பன் கதையை ஒரேயடியாய் முடித்தது போலவே மகன் கதையையும் பொருத்தமான விதத்தில் முடித்து விட்டுத் தான் மற்ற வேலைகளை அவன் பார்க்கப் போகிறான் என்பதால் முன்கூட்டியே அவன் அந்த மற்ற வேலைகள் குறித்துச் செய்ய வேண்டியதைச் செய்தாக வேண்டும்...


ணி வீட்டில் அவன் ஆட்கள் ஆறு பேர் கூடியிருந்தார்கள். மணி டீப்பாய் மீது நாகராஜின் வீட்டின் வரைபடத்தை வைத்து வீட்டின் அமைப்பை அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். அந்த ஆறு பேர் பார்வையும் மணி மீதும், வரைபடத்தின் மீதும் மாறி மாறி விழுந்து கொண்டிருந்தது. அவர்கள் முழுக்கவனமும் அவன் சொல்கின்ற வார்த்தைகளில் தங்கியிருந்தது.

வீட்டின் வரைபடத்தை விளக்கி முடித்த மணி அவர்கள் திட்டத்தை அவர்களிடம் விளக்க ஆரம்பித்தான்.     

இந்த வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற கேஜி காம்ப்ளக்ஸ்ல இருக்கற நாலு தியேட்டர்கள்லயும் ஓடற படங்கள்ல கடைசியா முடியற படம் ராத்திரி 1.15க்குத் தான் முடியுது. படம் முடிஞ்ச பிறகு டீக்குடிச்சுட்டு கிளம்பற ஆட்களும் கூட இந்த வீட்டுப் பகுதியை 1.45க்குள்ளாற கடந்து போயிடறாங்க. அதுக்கப்பறம் இந்தப் பகுதில ஏதாவது பைக்கோ, காரோ, ஆம்புலன்ஸோ அப்பப்ப வந்து போகும்னாலும் யார் கவனமும் இந்த வீட்டு மேல இருக்கப் போறதில்லை. இங்கே போலீஸ் ரோந்தும் இருக்குன்னாலும் அவங்க ராத்திரி 12.30 மணி சுமாருக்கு ஒரு தடவையும், காலைல நாலரை மணி சுமாருக்கு ஒரு தடவையும் தான் வந்து போவாங்க. நாலரை மணிக்கு மேல வாக்கிங் போறவங்க சிலரும் வர ஆரம்பிச்சுடுவாங்க. அதனால நம்ம ஆபரேஷன் ராத்திரி ரெண்டிலிருந்து மூனே முக்காலுக்குள்ளார முடிஞ்சு நாம அந்த இடத்தை நாலு மணிக்குள்ளே காலி செய்துடணும். வழக்கமா நம்ம வேலைக்கு ஒன்னே கால் மணி நேரம் போதும்னாலும் எதிர்பாராத பிரச்சன எதாவது வந்தாலும் அதைச் சமாளிக்க நமக்கு கூடுதலா கிட்டத்தட்ட அரை மணி நேரம் கிடைக்குதுங்கறது நமக்கு சாதகமான அம்சம்...”

அந்த வீட்டுக்குள்ளே பாம்பு சீறுற சத்தம் கேட்கறதா நம்ம கஸ்டமர் சொல்றார். அது பாம்பு தானா இல்லை வேற எதாவது சத்தமான்னு நமக்குத் தெரியாது. ஆனாலும் நாம ஜாக்கிரதையாய் இருக்கறது நல்லது. அதுக்காக ஒரு மூலிகை எண்ணெய் வாங்கிட்டு வந்திருக்கேன். இந்த எண்ணெயை பூசிகிட்டா இந்த நெடிக்கு எந்தப் பாம்பும் நம்மள கிட்ட நெருங்காது.  இது பாம்புகள் நிறைஞ்ச பகுதில வேலை செய்யறவங்க பயன்படுத்த எண்ணெய்ங்கறதால நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இது. நம்மள்ள அந்த வீட்டுக்குள்ளே நுழையப் போற நாலு பேரும் பூசிக்குவோம். மத்தவங்க பூசிக்க வேண்டியதில்லை.... நாம சரியா ரெண்டு மணிக்கு அந்த இடத்துக்குப் போய் சேர்றோம்....”

அவர்கள் ஆறுபேரும் தலையசைத்தார்கள். மீதியை அறுவரில் ஒருவனாக இருந்த மணியின் பிரதான கூட்டாளி சொல்ல ஆரம்பித்தான். அவன் அந்த ஆட்களில் மிகவும் குள்ளமாகவும், ஒல்லியாகவும் சிறு பையனைப் போலிருந்த ஆளைப் பார்த்து முதலில் சொன்னான். “நீ வழக்கம் போல முதல்ல  மொட்டை மாடி ஏறி கதவை உடைச்சிட்டு சிக்னல் அனுப்பினா நம்ம விக்டர் மயக்க மருந்தோட மேல வந்து சேர்வான். ரெண்டு பேரும் உள்ளே போய் வீட்டுக்குள்ளே இருக்கிற ரெண்டு பேரையும் மயக்கமடையச் செஞ்சுடுங்க. பிறகு கீழே கதவைத் திறந்தீங்கன்னா நானும் மணியண்ணாவும் வர்றோம். நமக்கு வேலை முடிக்க அதிகபட்சமா முக்கால் மணி நேரம் தான் ஆகும்.... நம்ம கஸ்டமர் சொல்றதைப் பார்த்தா அந்த வீட்டுல வேற சாமான்கள் அதிகமிருக்காது. அவர் கேட்ட ரத்தினங்களோட நகைநட்டு எதாவதோ, விலையுயர்ந்த வேற பொருள்களோ கூடக் கிடைச்சுதுன்னா நம்ம அதிர்ஷ்டம். நாம கிட்டத்தட்ட வேலையை முடிச்சுட்டு மூனே காலுக்கு வந்துட முடியும்னு தான் தோணுது. ஒரு வேளை ஏதாவது லேட் ஆனாலும் மூனரைக்கு கண்டிப்பா வெளியே வந்துடலாம். நாங்க வெளியில வர்ற வரைக்கும் சுப்பன் வீட்டு வாசல்ல நின்னு காவல் காக்கனும். பழனியும், துரையும் ரெண்டு பக்கமும் நூறு மீட்டர் தொலைவுல நின்னு ஏதாவது பிரச்சன வருதான்னு பார்த்துட்டு நிக்கனும்.  அப்படி வந்துச்சுன்னா சிக்னல் தரணும். பழனி நிக்க வேண்டியது இந்த இடத்துல, துரை நிக்க வேண்டியது இந்த இடத்துல...” என்று வரைபடத்தில் அந்த இடங்களை அவன் காட்டினான்.

அனைவரும் முழுக்கவனத்துடன் கேட்டுக் கொண்டார்கள். கடைசியில் மணி கேட்டான். “யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லையே...”

இல்லை என்று தலையசைத்தார்கள்.


வேலாயுதத்துக்கு நேரம் மிக மெள்ள நகர்வதாகத் தோன்றியது. மாலை நேரம் முடிந்து இருட்ட ஆரம்பித்ததிலிருந்தே  ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரம் பார்த்து சலித்தார். எல்லாம் திட்டப்படி நடந்தால் நாளை இன்னேரம் அதிர்ஷ்டம் இடம் மாறியிருக்கும்... அதற்குப் பின் கோயமுத்தூரில் இருப்பதா, பம்பாய் அல்லது டெல்லியிலிருப்பதா இல்லை அமெரிக்காவுக்கே போய் தங்கி விடலாமா என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவர் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்தன.

அவர் மகன் இரவில் வந்தவுடன் தாழ்ந்த குரலில் கேட்டார். “அவனுக எத்தனை மணிக்கு வருவானுகன்னு கேட்டியாடா?”

கல்யாண் பொறுமையிழந்து சொன்னான். “அதையெல்லாம் நாம கேட்கக்கூடாதுப்பா. கேட்டா அவனுக வெளிப்படையா சொல்லவும் மாட்டானுக. நமக்கு வேலையாகணும். அவனுக நாம கேட்ட பொருளை எடுத்துகிட்டு வந்தா காசு தருவோம். அவ்வளவோட நாம நிறுத்திக்கணும். நமக்கு அவனுக எப்படி பண்றானுக எப்ப பண்றானுகங்கறதெல்லாம் அனாவசியம்....”

வேலாயுதம் ஏமாற்றத்துடன் தலையசைத்தார். அதுவும் சரி தான் என்று தோன்றினாலும் அந்த நேரம் சரியாகத் தெரிந்தால் அதற்கு முன்னாலேயே சிறிது தூங்கி விட்டுப் பின் முழித்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

அவர் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்த்த கல்யாண் சொன்னான். “பெரும்பாலும் இந்த மாதிரி வேலைகள் எல்லாம் ராத்திரி ஒரு மணிக்கு மேல நாலு நாலரைக்குக்குள்ள தான் நடக்கும்... ஆனா நான் சொன்னது நினைவு இருக்கில்ல. வெளியே என்ன சத்தம் கேட்டாலும் நீங்க வெளியே போய் பார்க்கிறது மட்டும் வேண்டாம்...”

வேலாயுதம் சொன்னார். “இடியே விழுந்தாலும் நான் வெளியே போய் பார்க்க மாட்டேன். கவலைப்படாதே.”

வேலாயுதம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி இப்போது தான் ஒன்பதே கால் ஆகிறது. ஒரு மணி ஆக இனியும் மூனேமுக்கால் மணி நேரம் இருக்கிறதே. இந்த நேரம் சீக்கிரத்தில் நகராதே.... சிறிது கண்ணயர்ந்து விட்டு சுமார் பன்னிரண்டரை வாக்கில் எழுந்தால் பின் அவர்கள் வேலை முடிக்கிற வரை வேடிக்கை பார்க்க சரியாக இருக்கும் என்று எண்ணியவராகத் தனதறைக்குக் கிளம்பினார்.

கல்யாணுக்கு அன்றிரவு உறக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஆனால் அவன் உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் மேகலா காரணம் கேட்பாள்.... ’வர வர உங்கப்பா மாதிரியே ஆயிட்டு வர்றீங்கன்னு சொல்வாள்.. என்று எண்ணியவன் அவள் உறங்க ஆரம்பிக்கும் வரையாவது உறங்குவது போல நடிக்கலாம் என்று முடிவு செய்தான்....

அன்றைக்கென்று பார்த்து மேகலா வழக்கமான நேரத்தில் உறங்கவில்லை. அவள் உறங்க ஆயத்தமான போது அமெரிக்காவிலிருந்து அவள் சினேகிதி ஒருத்தி போன் செய்தாள். நேரம் போவது தெரியாமலேயே அவளிடம் மேகலா பேச ஆரம்பிக்க, படுக்கையில் சாய்ந்தபடி வாட்சப் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாண் எப்போது கண்ணயர்ந்தான் என்றே தெரியவில்லை.



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.