சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 28, 2013

பரம(ன்) ரகசியம் – 33பார்த்தசாரதி ஈஸ்வரைக் கேட்டார்.  பெரியவர் பல வருஷமா சிவலிங்கத்தை வச்சு பூஜை செய்துகிட்டு தியானத்துல ஈடுபட்டதால இங்கே தியான அலைகள் இருக்குன்னு சொன்னீங்க. அதை நீங்க இங்கே உணர்ந்ததாவும் சொன்னீங்க... இங்கே கொலையும் நடந்திருக்கு. கொலைகாரனும் வந்து போயிருக்கான். சிவலிங்கத்தை கடத்தினவங்களும் வந்து போயிருக்காங்க. அவங்க இருந்தது இங்கே கொஞ்ச நேரம் தான்னாலும் அவங்க சம்பந்தப்பட்ட அலைகள் இங்கே இருக்காதா?

ஈஸ்வர் சொன்னான். “கண்டிப்பா இருக்கும்....

“உங்களால அந்த அலைகளை கண்டு பிடிக்க முடியாதா?

ஈஸ்வர் பொறுமையாகச் சொன்னான். அதுக்கேத்த மாதிரி சென்சிடிவிட்டி இருக்கிற ஆட்களால அது கண்டிப்பா முடியும். நாய்க்கு மோப்ப சக்தி இருக்கற மாதிரி சில பேருக்கு சில நெகடிவ் அலைகளை கிரஹிச்சு சொல்ற சக்தி இருக்கும். அவங்களால அதை வச்சு ஏதாவது தகவல்கள் சொல்ல முடியும். எனக்கு அந்த வகையான சென்சிடிவிடி இல்லாததால் சொல்ல முடியாது....

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஈஸ்வர் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை வைத்திருப்பது கூட அவருக்கு இன்னமும் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

அதைப் புரிந்து கொண்டது போல புன்னகைத்தபடி ஈஸ்வர் விளக்கினான். “சார். சில கோயில்களுக்கோ, மகான்கள் இருக்கும் இடத்துக்கோ போறப்ப சில சமயங்கள்ல அங்கே நம்மையும் அறியாம நாம ஒரு விதமான அமைதியை உணரலாம். சில வீடுகளுக்குள்ளே நுழையறப்பவே ஏதோ ஒரு அசௌகரியத்தை சில சமயம் உணரலாம். அங்கே இருக்கிற மனிதர்களோட மோசமான குணங்கள், தினசரி நடக்கற சண்டை சச்சரவுகள், கொடுமைகள் எல்லாம் சேர்ந்து நமக்கு அந்த விதமான அனுபவத்தை தரும். அங்கே இருந்து சீக்கிரமா வெளியே போயிட்டா தேவலைன்னு தோணும். சில பேர் நம்ம பக்கத்துல வந்தாலே காரணம் இல்லாமலேயே கொஞ்சம் விலகத் தோணலாம், அவங்களைப் பிடிக்காமல் போகலாம். அதுக்குக் காரணம் நம்ம அலைகளுக்கும் அவங்க அலைகளுக்கும் ஒத்துப் போகாம இருக்கறது தான் காரணம். இந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஏற்படற உணர்வுகள் காரணம் புரியாததால நாம் அப்படியே விட்டுடறோம். ஆனா உண்மைல இந்த மாதிரி அலைகள் அந்த இடங்களைச் சுத்தியும் மனுசங்களை சுத்தியும் இருக்குங்கறது தான் காரணம். இது சாதாரண மனுஷங்களுக்கு ஏற்படற அனுபவங்கள். கொஞ்சம் சென்சிடிவிடி அதிகமா இருக்கற ஆள்களுக்கு அவங்களோட சென்சிடிவிடி தன்மையப் பொறுத்து அதிகமான தகவல்கள் கிடைக்கும்..

அவன் சொன்னது அறிவுபூர்வமாகவே அவருக்குப் பட்டது. சுவாரசியத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் சொன்னான். “அமெரிக்கால கூட சில சமயங்கள்ல துப்பு துலக்கவே முடியாத கேஸ்கள்ல எதாவது துப்பு கிடைக்குமான்னு சில போலீஸ்காரங்க சில குறி சொல்ற ஆள்கள் கிட்ட போகறதுண்டு. அவங்க எல்லாருமே சரியா உபயோகமான தகவல்கள் கொடுப்பாங்கன்னு சொல்ல முடியாட்டியும் அப்படி ஒன்னு ரெண்டு பேர் சொன்ன சில தகவல்கள் உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவி இருக்கு. அது ரொம்பக் கம்மியான சதவீதம்னே வச்சுகிட்டா கூட அதை அலட்சியப்படுத்த முடியாது இல்லையா. அப்படி ஒரு சக்தியும் இல்லாட்டி ஒரு கேஸ்ல கூட சரியான தகவல் கிடைச்சிருக்கக் கூடாது இல்லையா.

அவன் சொன்னதை நம்ப அவருக்கு சிரமமாகத் தான் இருந்தது. அவன் சொன்னான். “இதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கு. இந்த மாதிரி சில ஆதாரபூர்வமான சம்பவங்கள் பத்தி தமிழ்ல “ஆழ்மனதின் அற்புத சக்திகள்”  புத்தகத்துல கூட தந்திருக்காங்க   

பார்த்தசாரதி கேட்டார். “அப்படின்னா இந்த கேஸ்ல கூட அந்த மாதிரி ஆள்களை வச்சு கேட்கலாமா?ஆர்வத்தில் சொல்லி விட்டாரே ஒழிய உண்மையில் அப்படி சொன்னது அவருக்கே ஒருமாதிரியாக இருந்தது. ஒரு அறியாமையான மூடநம்பிக்கையான செயலில் நாமே இறங்குவதா என்ற கூச்சம் ஏற்பட்டது.

ஆனால் அவனிடம் எந்த தயக்கமோ சந்தேகமோ இருக்கவில்லை. அவன் சொன்னான். “அமெரிக்காவாக இருந்தால் நானே ஒன்னு ரெண்டு பேரை சிபாரிசு செஞ்சிருப்பேன். இங்கே எனக்கு யாரையும் தெரியாது....

பார்த்தசாரதி சிந்தனையில் ஆழ்ந்தார். பின் சொன்னார். “இங்கே பத்து மைல் தூரத்துல குறி சொல்ற ஒரு கிழவி இருக்கா.  ஒரு தடவை என் தங்கையோட நாத்தனார் குழந்தையோட கைல இருந்த தங்க மோதிரம் காணாமல் போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கிடைக்கலை. யாரோ சொல்லி என் தங்கையோட நாத்தனார் இந்த குறி சொல்ற கிழவி கிட்ட போயிருக்கா. அந்தக் கிழவி கிட்ட போறவங்க வெத்திலை பாக்கும், 101 ரூபாயும் தரணுமாம். அந்தக் கிழவி அந்த வெத்திலைய தடவிகிட்டே கண்ணை மூடிகிட்டு மோதிரம் பாத்ரூம்ல வச்சிருக்கிற ஒரு தண்ணிக் குடத்துல இருக்கிறதா சொல்லி இருக்கு. போய் பார்த்தா அப்படியே இருந்திருக்கு. அதுல எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ஆனால் அதுக்கடுத்து அவங்க சொல்லி நாலஞ்சு பேர் வேற வேற விஷயங்களுக்கு அந்த கிழவி கிட்ட போய் இருக்காங்க. ஆனா அப்ப எல்லாம் கிழவி சொன்னது ஒன்னு கூட சரியாகலை....

ஈஸ்வர் சொன்னான். “அதான் சொன்னேனே. சக்தி இருக்கறதா சொல்ற ஆயிரம் பேர்ல நாலு பேர் தான் தேறுவாங்க. அப்படி அந்தக் கிழவி நாலுல ஒரு ஆளா இருக்கலாம்.... அந்தக் கிழவிக்கும் தொடர்ச்சியா சக்தி இருந்திருக்காது. விட்டு விட்டு அந்த சக்தி வரலாம். அதை சொல்லாம கிழவி காசுக்கு ஆசைப்பட்டு பிறகு வாய்க்கு வந்தபடி சொல்லி இருக்கும். அதனால சரியாக இருந்திருக்காது...

அப்படின்னா அந்தக் கிழவி கிட்ட சும்மா போய் கேட்டா என்ன?

“இந்த மாதிரி விஷயங்களை சம்பவம் நடந்த இடத்துல வரவழைச்சு கேட்டா அந்தக் கிழவிக்குத் தெளிவா தெரிய வாய்ப்பு இருக்கு....

சிறிது தயங்கி விட்டு முயற்சி செய்வதில் என்ன தப்பு என்று நினைத்தவராக பார்த்தசாரதி போன் செய்து யாரிடமோ தாழ்ந்த குரலில் பேசினார்.

பின் ஈஸ்வரிடம் சொன்னார். “கிழவியை கூட்டிகிட்டு வந்துடுவாங்க. ஆனா உண்மையை சொல்லணும்னா இந்த விஷயத்துல எனக்கு முழு நம்பிக்கை வரலை....

ஈஸ்வர் அமைதியாக சொன்னான். “ஏதாவது தெரிய கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு மட்டும் இப்போதைக்கு நினைக்கலாம். அவ்வளவு தான். ஒரு வேளை கிழவிக்கு எதுவுமே தெரிய வராமலும் போகலாம். ஆனாலும் நமக்கு நஷ்டம் இல்லை. நம்ம நாட்டுல என்ன பிரச்சினைன்னா இந்த மாதிரி ஆளுகளை சாமியாராக்கியோ, சாமி ஆக்கியோ ஏமாந்துடறது தான். நம்ம கிட்ட இல்லாத சக்தி ஒருத்தன் கிட்ட இருக்குங்கறதாலயே அப்படி ஒருத்தரை அப்படி நம்பிடறது முட்டாள்தனம். நான் அப்பவே சொன்ன மாதிரி ஒரு தடவை சொன்னது சரியாச்சுன்னா அவங்க சொல்றது எல்லாமே சரியா இருக்கும்னு முடிவு செய்துக்கறதும் முட்டாள்தனம்....

விஞ்ஞான யுகத்தில் இப்படி பின்னால் போகிறோமே என்று பார்த்தசாரதிக்குத் தோன்றினாலும் அவன் சொன்னதில் அறிவுபூர்வமான அணுகுமுறையே தெரிந்தது. ஒரு கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். கிழவி வரும் வரை இருவரும் தோட்டத்தில் காத்திருந்தார்கள்.

முக்கால் மணி நேரத்தில் கிழவியை ஜீப்பில் கொண்டு வந்து சேர்த்தார்கள். கிழவிக்கு கிட்டத்தட்ட எண்பது வயதாகவாவது இருக்கும் என்று ஈஸ்வர் கணக்கிட்டான். கிழவி உயரமாகவும் அகலமாகவும் இருந்தாள். காதுகளில் வெள்ளி தொங்கட்டான்கள் தொங்கின. முகமெல்லாம் சுருங்கி ரேகைகள் தெரிந்தன. கிழவி போலீஸ் அழைத்து வந்ததில் பயந்து போயிருந்தாள்.

பார்த்தசாரதி முன்னால் அவளை நிறுத்திய போது “சாமி நான் எந்த தப்பும் செய்யலை. அந்த மாரியாத்தா மேல சத்தியமா சொல்றேன்...என்று புலம்பினாள்.

“எல்லார் கிட்டயும் 101 ரூபாய் வசூலிச்சுகிட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்றேன்னு நிறைய புகார் வந்துருக்கு கிழவி. நீ என்னடான்னா மாரியாத்தா மேல சத்தியம் செய்யறே...

கிழவி முகம் வெளுத்தது. 101 ரூபாய்க்காக போலீஸ் வரை போய் புகார் சொல்லும் மனிதர்கள் இருப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

சாமி யாரோ எனக்கு வேண்டாதவங்க உங்ககிட்ட இப்படி புகார் செஞ்சுருக்காங்க...என்று பலவீனமான குரலில் கதறினாள்.

பார்த்தசாரதி போலீஸ் பாணியில் அவளை நிறையவே பயமுறுத்தி விட்டால் அவளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சென்சிடிவிடியும் போய் விடும் என்று நினைத்த ஈஸ்வர் அவருக்கு கண்ணால் சமிக்ஞை செய்து விட்டு அவளிடம் சொன்னான்.

“பயப்படாதீங்க. இங்கே இந்த வீட்டுல ஒரு கொலையும் திருட்டும் நடந்திருக்கு. உங்களுக்கு ஏதாவது தெரியுதான்னு கேட்க தான் கூப்பிட்டோம். முயற்சி செய்து பார்க்கறீங்களா?

அவள் பார்த்தசாரதியை ஒரு நிமிடம் பயத்துடன் பார்த்தாள். அவர் ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நிற்கவே அவள் ஈஸ்வரையே கூர்ந்து பார்த்தாள். அவள் பயம் சற்று குறையவே மெல்ல கேட்டாள். “இது யாரோட வீடுங்க?

“என்னோட பெரிய தாத்தா வீடுங்க

அப்படின்னா உங்க கையால எனக்கு வெத்தல பாக்கு குடுங்கஎன்றாள். பார்த்தசாரதி பக்கம் மறந்தும் அவள் திரும்பவில்லை. 101 ரூபாய் பற்றியும் பேசவில்லை.

ஈஸ்வர் தன் கையால் வெற்றிலை பாக்கையும் 101 ரூபாயும் தர பணத்தை சற்று தயக்கத்துடன் தான் அவள் வாங்கினாள்.

ஈஸ்வர் சொன்னான். “ஏதாவது தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க. தெரியலைன்னா விட்டுடுங்க. பரவாயில்லை. கற்பனையா மட்டும் எதுவும் சொல்ல வேண்டாம்.

அவள் அவனை வித்தியாசமாய் பார்த்தாள். அவளிடம் இப்படி ஒரு கோரிக்கையை யாரும் வைக்கவில்லை போல் இருந்தது. மெல்ல தலையாட்டினாள்.

அவளை இருவரும் வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள். கிழவி உள்ளே போனவுடன் கண்களை சுருக்கிக் கொண்டு வீட்டை நோட்டமிட்டாள். பின் சாக்பீசால் குறியிட்டிருந்த பசுபதி சடலம் இருந்த இடத்தை வெறித்து பார்த்தாள். பின் பூஜையறையைப் பார்த்தாள். பின் ஹாலில் ஒரு மூலையில் அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டு ஈஸ்வர் தந்த வெற்றிலையை வருட ஆரம்பித்தாள்.

சரியாக ஆறு நிமிடங்கள் 20 வினாடிகள் மௌனமாய் இருந்த கிழவி பின் மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. நிறுத்தி நிறுத்தி பேசினாள். “இள வயசு பையன்... ஈரத்துண்டை உடுத்தி இருக்கான்.... உடம்பெல்லாம் திருநீறு பூசி இருக்கான்.... சிவலிங்கத்தை தூக்கறான்.... யாரோ ரெண்டு பேர் அவனை பார்த்திட்டு இருக்காங்க.... அவன் பயப்படறான்... அவன் உடம்பெல்லாம் நடுங்குது....அவன் பயப்படறான்... ரொம்பவே பயப்படறான்.... ஏதோ ஜெபிச்சுகிட்டே இருக்கான்.... சிவலிங்கத்தை தூக்கிட்டு வெளியே போறான்.....

சொல்லும் போதே அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. பின் மௌனமானாள். கண்களைத் திறந்தாள். ஈஸ்வரைக் கேள்விக்குறியுடன் சரி தானா என்பது போல பார்த்தாள்.

ஈஸ்வர் கேட்டான். “அந்த ரெண்டு பேரையும், சிவலிங்கத்தையும் பத்தி அதிகமா ஏதாவது சொல்ல முடியுமான்னு பாருங்களேன்

அவள் தலையாட்டி விட்டு கண்களை மூடிக் கொண்டாள். “மங்கலாயிடுச்சு.. சிவலிங்கமும் தெரிய மாட்டேங்குது... அந்த ரெண்டு பேரும் தெரிய மாட்டேங்குறாங்க. அப்பவே கூட அவங்க மங்கலா தான் தெரிஞ்சாங்க...என்றவள் சிறிது நேரம் கஷ்டப்பட்டு எதையோ பார்ப்பது போல பார்த்து சொன்னாள். “அந்த பையன் மட்டும் தெரியறான்... அவன் இப்ப ஒரு பெரிய சிவன் கோயில்ல இருக்கான்.....

ஈஸ்வர் சொன்னான். “அந்த இடத்தைப் பத்தி இன்னும் ஏதாவது சொல்ல முடியுதான்னு பாருங்களேன்.

கிழவி முயற்சித்தாள். “அந்த சிவன் கோயில்ல அம்மன் சன்னதிக்கு முன்னாடி பெரிய குளம் இருக்கு.... குளத்தை சுத்தி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டு இருக்கு..... அந்தப் பையன் அந்த படிக்கட்டுல உட்கார்ந்துட்டு இருக்கான். போய் அப்பப்ப குளிச்சிட்டு வருவான் போல இருக்கு. அவன் உடம்பெல்லாம் நனைஞ்சுருக்கு. அந்த ஈரத்துண்டுலயே தான் இருக்கான். எதையோ இப்பவும் ஜெபிச்சுகிட்டிருக்கான்.... அந்தக் குளத்துக்கு முன்னாடி ஒரு  தோரணம் மாதிரி வளைவு இருக்கு. அதுல என்னவோ எழுதி இருக்காங்க.....

அவள் சிறிது நேரம் அமைதியாகவே இருக்கவே பார்த்தசாரதி கேட்டார். “அந்த வளைவுல என்ன எழுதி இருக்கு?

“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்களே...

“அது தமிழ் தானா இல்லை வேற எதாவது மொழியா?

“தமிழ் தான்....

அதற்கு மேல் அவளுக்கு அந்தக் காட்சி தெரியவில்லை போல் இருந்தது. ஆனாலும் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் பேசாமல் இருந்து விட்டு அவள் கண்களைத் திறந்தாள். எழுந்து பூஜை அறைக்குப் போய் தரையில் இருந்து தூசியைத் தடவி எடுத்து திருநீறு போல் பூசிக் கொண்டு ஈஸ்வர் அருகே வந்தாள். அவன் தந்த 101 ரூபாயை அவனிடமே திருப்பித் தந்தாள்.

ஈஸ்வர் திகைப்புடன் கேட்டான். “வச்சுக்கோங்க. ஏன் திருப்பித் தர்றீங்க?

அவள் பதில் எதுவும் சொல்லாமல், வேண்டாம் என்று சைகை செய்தாள். இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டி விட்டு அவனைப் பார்த்து கைகூப்பி வணங்கினாள். பின் விறு விறு என்று வேகமாக அங்கிருந்து கிளம்பி வெளியே சென்றவள் தோட்டத்தில் ஜீப் அருகே சென்று நின்று கொண்டாள்.

இருவரும் கிழவியின் செய்கையால் திகைப்படைந்தார்கள். பார்த்தசாரதி ஈஸ்வரிடம் கேட்டார். “இது சம்பந்தமா இனியும் ஏதாவது கிழவி கிட்ட இருந்து தெரிஞ்சுக்க முடியுமா?

இனி எதுவும் தெரிஞ்சுக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அந்தக் கிழவியோட சென்சிடிவிடி அந்த பையனோட அலைகளுக்கு தான் ட்யூன் ஆயிருக்கு. அதுல தெரிஞ்சதெல்லாம் சொல்லி இருக்கு. இனியும் வற்புறுத்திக் கேட்டா கிழவி கற்பனையா எதாவது சொல்ல ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்...

“அப்படின்னா இப்ப சொன்னது எல்லாம் கற்பனை இல்லைன்னு நினைக்கிறீங்களா?...

ஆமா. நாம சிவலிங்கம் பத்தி சொல்லவே இல்லை... ஆனாலும் அந்தக் கிழவி சரியா சிவலிங்கத்தை அந்தப் பையன் தூக்கிட்டு போறது பத்தி சொல்லி இருக்கிறதைப் பாருங்க...

இங்க கொலை நடந்து சிவலிங்கம் திருட்டு போனதை கிழவி பேப்பர்ல படிச்சு இருக்கலாம்...

“கிழவிக்கு தான் எழுதப்படிக்கத் தெரியாதே...

டிவில பார்த்து இருக்கலாம்...

அவர் சந்தேகம் அவ்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது. “இருக்கலாம். ஆனா கிழவி பார்த்து சொன்ன காட்சி சரியா இருக்கலாம்னு தான் என் உள்ளுணர்வு சொல்லுது. ஏன்னா அந்த சிவலிங்கத்தை குற்றவாளிகள் நேரடியா தூக்கிட்டு போக வாய்ப்பே இல்லைன்னு நான் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டேன். யாரோ ஒரு பூஜை புனஸ்காரம் செய்யற ஆள் கையால தான் எடுத்துகிட்டு போக வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன். கிழவி சொல்றது அதுக்கு ஒத்துப் போகுது....

பார்த்தசாரதி சிறிது யோசித்து விட்டு கேட்டார். “சரி அந்தக் கிழவியை அனுப்பிச்சிடலாமா?

அனுப்பி விடலாம் என்று ஈஸ்வர் சொல்ல பார்த்தசாரதி ஜீப்பருகே இருந்த போலிஸ்காரருக்கு சமிக்ஞை செய்ய கிழவியுடன் ஜீப் கிளம்பியது.

பார்த்தசாரதி ஈஸ்வரிடம் கேட்டார். “அப்படின்னா அந்தப் பையன் இப்ப இருக்கிற இடம் பத்தி கிழவி சொன்னதும் சரியாய் இருக்கும்னு நினைக்கிறீங்களா?

“ஆமா..

பார்த்தசாரதி யோசித்தார். ‘பெரிய சிவன் கோயில்...  அம்மன் சன்னிதிக்கு முன்னால் பெரிய குளம்.... குளத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தோரண வளைவு... அதில் தமிழில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது.... குளத்தை சுற்றி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டுகள்... அந்தப்படிக்கட்டில் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான்....

எந்தக் கோயிலாக இருக்கும்?

(தொடரும்)

-          என்.கணேசன்
  

Monday, February 25, 2013

உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!கீதை காட்டும் பாதை  23
உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

டுத்ததாக தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது கலப்படமில்லாத சத்தியமுமாகும். அவர் சொல்கிறார்:

தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

தன்னை வசப்படுத்திக் கொண்டவனுக்கு தானே நண்பன். தன்னை வசப்படுத்திக் கொள்ளாதவனுக்கு தானே சத்ருவாகி தனக்குக் கேட்டை உண்டாக்கிக் கொள்கிறான்.

ஒவ்வொருவருக்கும் மிக உயர்ந்த நிலைக்குப் போக இயல்பாகவே ஆசை இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரும் அதை யாராவது தங்களுக்காக செய்து தர ஆசைப்படுகிறார்கள். கடவுளோ, குருவோ, தலைவனோ, நண்பனோ, அல்லது வேறு யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படி உயர்ந்த நிலைக்குப் போகும் பொறுப்பை அடுத்தவர் தலையில் கட்டுவது ஒருவர் தாழ்ந்த நிலையிலேயே தங்கி விடுவதற்கு நிரந்தரக் காரணமாகி விடுகிறது.

எனவே தான் தன்னை உயர்த்திக் கொள்ளும் பொறுப்பு அவரவருக்கே உள்ளது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். நான் பலவீனமானவன், சக்தியற்றவன், என்னால் இதெல்லாம் முடியாது, அதெல்லாம் முடியாது என்பதெல்லாம் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளும் வழிகள். தன்னைக் குறைத்துக் கொண்டு யாரும் உயர முடியாது என்பதால் அதை எப்போதும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

ஒரு சிறு விதை நான் எப்படி பெரிய மரமாகப் போகிறேன் என்று தன்னை இழிவாக நினைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. அது தளிராகி, செடியாகி, மரமாகத் தேவையான எல்லாமே காலா காலங்களில் கிடைக்கும். கிடைப்பதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.  அது தான் முறை. அது தான் இயற்கையான வளர்ச்சி. அது தன் ஆரம்ப நிலையில் தாழ்வு மனப்பான்மை கொண்டு தன்னை இழிவாக நினைத்துக் கொண்டு வருத்தத்தில் இருந்து விட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு உயரும் நம்பிக்கையையும், தெம்பையும் இழந்து விட்டு அழிந்து தான் போகும்.

இது மனிதனுக்கும் முற்றிலும் பொருந்தும். இலக்கை அடையும் ஆவலை இயற்கையாகவே அவனிடம் ஏற்படுத்திய இறைவன் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியையும், சந்தர்ப்பங்களையும் அவனுக்கு ஏற்படுத்தித் தராமல் இல்லை. எது நல்லது எது கெட்டது என்றும், இலக்கை அடைய எது தேவை, எது தேவையில்லை என்றும் பகுத்தறியும் அறிவும் அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவன் அதற்கேற்றாற் போல தன் மனதும், நடவடிக்கைகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளா விட்டால் அவன் தன்வசமில்லை என்று பொருள். உயர வேண்டும் என்ற நோக்கமும் இருந்து, அதற்கான வழியும் தெரிந்து, அதன் படி அவனால் நடக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு அவனே பகைவன் ஆகி விடுகிறான். அதனால் அவன்  இலக்கு ஒரு கற்பனையாகவே இருந்து விடும். அது மட்டுமல்ல ஆரம்பித்த இடத்தில் கூட நிற்க முடியாமல் தன் முட்டாள்தனமான செயல்களால் அதல பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறான்.

இது அவன் அவன் தவறுகளுக்கான தண்டனை இல்லை. யாரோ எங்கோ அமர்ந்து தீர்ப்பு வழங்குவதில்லை. தண்டிப்பதில்லை. சுவாமி ராமதீர்த்தர் மிக அழகாகச் சொல்வார். “மனிதன் தவறுகளாலேயே தண்டிக்கப்படுகிறான். தவறுகளுக்காகத் தண்டிக்கப் படுக்கப்படுவதில்லை”. இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கடலளவு பெரிது.  அந்தத் தவறுகள் தங்கள் இயல்பான விளைவுகளிலேயே வந்து முடிகிறது. அது தண்டனையாகத் தோன்றினாலும் மனிதனை வேறு யாரும் தண்டிப்பதில்லை. அவன் தன் செயல்களால் தன்னையே தண்டித்துக் கொள்கிறான் என்பதே உண்மை.  

உயர வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று நோக்கம் இருந்து அதற்கான வழிகளை அறிந்து அதற்கேற்றாற் போல் தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் மனிதன் வழிமாறிப் பயணிப்பதில்லை. தேவையற்றவற்றில் ஈடுபட்டு அவசியமானவற்றை புறக்கணித்து விடுவதில்லை. எது அவன் முன்னேற்றத்திற்கு உதவாதோ அதை ஆரம்பத்திலேயே தள்ளி விட்டு அவசியங்களில் மட்டும் மனதை நிறுத்தி செயல்களும் அது சார்ந்தே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறான். அவன் தன்னை வசப்படுத்திக் கொண்டவன். அதனால் அவன் தனக்கு நண்பனாகவே செயல்படுகிறான். அவன் உயரவும் செய்கிறான்.

எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் தனக்குத் தானே நண்பன் என்றும் தனக்குத் தானே பகைவன் என்றும் உறுதியாகக் கூறுகிறார். எனவே நாம் காரணங்களை வெளியே தேட வேண்டியதில்லை. புறநானூறும் மிக அழகாகச் சொல்கிறது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”.  எனவே லௌகீகம் ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், வெற்றி பெறவும், கடைத் தேறவும் மனிதன் முதலில் தன்னையே சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவன் சரியானால் பின் அவனுக்கு உலகமே சரியாகி விடும்.   

சரி-தவறு, நல்லது-கெட்டது தெரிந்தும் மனிதன் நல்வழிப்பாதையில் செல்லாமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. உடலில் கட்டுப்பாடு இல்லை, மனதில் கட்டுப்பாடு இல்லை, சம நோக்கு இல்லை, மனத் திருப்தி இல்லை, பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை, ஆன்ம சிந்தனை இல்லை என்ற பல இல்லாமைகள் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

மிக உயர்ந்த நிலையாக  பரமாத்ம நிலை அல்லது யோக நிலை பற்றிச் சொல்லும்  ஸ்ரீகிருஷ்ணர் அதைப் பெற்றிடும் வழியை அடுத்ததாகக் கூறும் போது இவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

தன்னை வென்றவனும், குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம், மானம்-அவமானம் எல்லாவற்றையும் சமமாகக் கருதி அமைதியாக இருப்பவன் பரமாத்ம நிலையைப் பெற்றிடுவான்.

ஞானத்தினாலும், பகுத்தறிவினாலும் மனத்திருப்தி அடைந்தவனும் எதற்கும் அசைந்து கொடுக்காதவனும் புலன்களை வென்றவனும், மண்-கல்-பொன் மூன்றையும் ஒரே விதமாக மதிப்பவனும் யோகி என கூறப்படுகிறான்.

யோகியானவன் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, ஆசைகளையும் உடைமைகளையும் கைவிட்டு தனிமையில் இருந்து கொண்டு இடைவிடாத ஆன்மசிந்தனையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

சமநோக்கு பற்றி எல்லா இடங்களிலும் சலிக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் சொல்ல மிக முக்கிய காரணம் அது இல்லா விட்டால் எதையும் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியாது என்பது தான். சரியாகப் புரிந்து கொள்ளாத போது தவறாக நடந்து கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பின் விளைவுகள் அதற்குத் தகுந்தவாறு தொடர நமக்கு நாமே துன்பம் விளைவித்துக் கொள்கிறோம்.

இதில் புதிதாக ஸ்ரீகிருஷ்ணர் வலியுறுத்தும் விஷயம், தனிமையில் ஆன்மிக சிந்தனை. இனிது இனிது ஏகாந்தமினிது என்ற ஔவையாரின் கூற்றில் பலருக்கும் உடன்பாடில்லை. தனிமை என்பது இக்காலத்தில் ஒரு கொடுமையான விஷயமாகவே பலராலும் கருதப்படுகிறது. சிறிது நேரம் தனிமை கிடைத்தாலும் அது சகிக்க முடியாததாகி விடுகிறது. அந்த நேரத்தில் யாரிடமாவது போன் செய்து பேசினால் என்ன என்று தோன்றுகிறது. எங்காவது போகத் தோன்றுகிறது. இல்லா விட்டால் டிவியையாவது பார்த்துக் கொண்டு பொழுது போக்கத் தோன்றுகிறது.

ஆனால் பல நேரங்களில் ஆழமான உண்மைகளை உணர மனிதனுக்குத் தனிமை தேவைப்படுகிறது. வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் இருந்தும், உலகின் இடைவிடாத கருத்துத் திணிப்புகளில் இருந்தும் விலகித் தனியாக யோசிக்க அவகாசம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்க்கை சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறதா, சொந்த வாழ்க்கை தான் வாழ்கிறோமா, இல்லை யாரோ எவரோ வகுத்த வாழ்க்கை வாழ்கிறோமா,  இப்படியே போகும் வாழ்க்கை தான் நம் லட்சியமா, முடிவில் வாழ்ந்த வாழ்க்கையில் உண்மையான திருப்தியை உணர்வோமா என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கும்.

யோசிக்கவே நேரமில்லாமல் போவது தான் தவறான வாழ்க்கை முறைகளுக்கு முக்கியமான காரணம். யோசித்தால் நம் வாழ்க்கையின் பல குறைபாடுகள் நம் நிம்மதியைக் குலைத்து விடும் என்பதால் பலரும் யோசிக்காமல் இருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் மருத்துவரிடம் போனால் வியாதியைக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார் என்று பயந்து கொண்டு அவரிடம் போகாமல் இருந்து விடும் முட்டாள்தனம் போலத் தான். அவரிடம் போனால் வியாதி கண்டுபிடிக்கப்பட்டு குணமடைய வாய்ப்பு உண்டு. போகாமலே இருந்து வியாதியை முற்ற வைத்துக் கொண்டு சீக்கிரமாகவே அழிந்து போவது முட்டாள்தனம் தானே!

எனவே தனிமையும் சிந்தனையும் எந்த நல்ல மாற்றத்திற்கும் சுயமுன்னேற்றத்திற்கும் அத்தியாவசியம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல இடைவிடாத ஆன்ம சிந்தனை அனைவருக்கும் உடனடியாக முடியக்கூடியதல்ல என்ற போதும் ஆன்ம சிந்தனையே இல்லாமல் யாரும் உலக வாழ்வில் அமைதியை அடைந்து விட முடியாது என்பது நிச்சயம்.

அடுத்ததாக தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் விளக்க ஆரம்பிக்கிறார். பார்ப்போம்....

பாதை நீளும்...

என்.கணேசன்Thursday, February 21, 2013

பரம(ன்) ரகசியம் – 32
ந்தனின் அனுபவத்தை ஈஸ்வரிடம் சொல்லி விட்டு பார்த்தசாரதி “நீங்க என்ன நினைக்கிறீங்க?என்று கேட்டார். அவர் அவன் அபிப்பிராயத்தைப் பெரிதும் மதித்தார். நல்ல புத்திசாலி, இது போன்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்து வருபவன், விருப்பு வெறுப்பு இல்லாமல் அலசக் கூடியவன் என்பதெல்லாம் அவன் கருத்துகள் மீது நல்ல மதிப்பை அவருள் ஏற்படுத்தி இருந்தது.

எல்லாமே சுவாரசியமா இருக்குஎன்றான் ஈஸ்வர்.

“நிஜமாவே அவன் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தால் முனுசாமியும் அவனும் பார்த்தது அந்த சித்தரைத்தான்னு வச்சிக்கலாமா?

“அப்படித் தான் தோணுது

அந்த மூணாவது ஆள் யாராய் இருக்கும்? அந்த ஆளும் ஒரு சித்தரா இருப்பாரோ?

எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடம் பதில் இருக்கும் என்பது போல் அவர் கேள்விகள் கேட்பது அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது. “தெரியலைஎன்றான்.

“அந்த சிவலிங்கம் பத்தி கூடுதலா ஏதாவது தெரிஞ்சா மேற்கொண்டு துப்பு துலக்கறது சுலபமாய் இருக்கும்....என்று ஏதோ யோசித்தபடியே பார்த்தசாரதி சொன்னார்.

ஈஸ்வருக்கு அந்த சிவலிங்கம் பற்றி படித்த அந்த தாள் பற்றி சொன்னால் என்ன என்று தோன்றியது. மேற்கொண்டு துப்பு துலக்குவதற்கு அது உதவலாம். ஆனால் அதைச் சொன்னால் கண்டிப்பாக அந்தத் தாளை அவர் கேட்பார். தந்தால் அது திரும்பக் கிடைப்பது கஷ்டம். வழக்குக்கு வேண்டிய முக்கிய ஆவணம் என்று அவர் வைத்துக் கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது. தகவலையும் தெரிவிக்க வேண்டும், அந்தத் தாளையும் தரக்கூடாது, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அவன் சாமர்த்தியமாக சொன்னான்.

ஆன்மிக பாரதம் (Spiritual India) என்கிற பழைய புத்தகத்தில் விசேஷ மானஸ லிங்கம்னு சித்தர்கள் பூஜித்து வந்த சக்தி வாய்ந்த சிவலிங்கம் இந்தியாவில் இருக்கிறதை படிச்சதாக எங்கப்பா கிட்ட யாரோ ஒரு நண்பர் எப்பவோ சொன்னாராம். அந்த சிவலிங்கமும், இந்த சிவலிங்கமும் ஒன்றாய் இருக்குமோன்னு எங்கப்பா சந்தேகப்பட்டார்...

விசேஷ மானஸ லிங்கம் என்ற பெயரை இரண்டு முறை சொல்லிப் பார்த்துக் கொண்ட பார்த்தசாரதி ஆவலுடன் கேட்டார். “அது ஆங்கில புத்தகமா, இல்லை தமிழ் புத்தகமா?

ஆங்கிலம்னு தான் நினைக்கிறேன்

எழுதின ஆள் பெயர் ஏதாவது அந்த நண்பர் சொன்னாரா?

ஈஸ்வர் ஆழமாய் யோசிக்கிற மாதிரி நடித்தான். பின் சொன்னான். “நீலகண்ட சாஸ்திரின்னு சொன்ன மாதிரி ஞாபகம்...

எந்த வருஷம் எழுதினது, பிரசுரம் செய்தது யார்ங்கிறது தெரியுமா?

ஈஸ்வர் உண்மையாகச் சொன்னான். “தெரியலை

பார்த்தசாரதி விசேஷ மானஸ லிங்கம், ஆன்மிக பாரதம், நீலகண்ட சாஸ்திரி என்று குறித்துக் கொண்டார். பின் கேட்டார். “பின் ஏன் நீங்கள் இதைப்பத்தி முதல்லயே சொல்லலை

அந்த புத்தகத்துல சொல்லி இருக்கற சிவலிங்கமும், இந்த சிவலிங்கமும் ஒன்னு தானான்னு அப்பாவுக்கே குழப்பமா இருந்தது. இருக்கலாம்னு சந்தேகப்பட்டார் அவ்வளவு தான்... சரியா தெரியாததை ஏன் சொல்வானேன்னு நினைச்சேன்....

பார்த்தசாரதி ஒன்றும் சொல்லவில்லை. அவன் சொன்னது போல் இந்த சிவலிங்கம் நீலகண்ட சாஸ்திரி தன் புத்தகத்தில் எழுதிய விசேஷ மானஸ லிங்கம்  என்ற பெயர் பெற்றதாக இருந்தால் அதை வைத்து மேலும் பல தகவல்களைப் பெற்று விட முடியும் என்று நினைத்தார்.

“நெட்டுல அந்த புத்தகம் பத்தியோ, ஆசிரியர் பத்தியோ தேடிப் பார்த்திருக்கீங்களா?

நேற்று இரவு முழுவதும் அவன் மணிக்கணக்கில் தேடிப்பார்த்திருக்கிறான். ஒரு பயனும் இல்லை. அவன் சொன்னான். “அமெரிக்கால இருக்கறப்பவே தேடிப்பார்த்திருக்கேன். பிரபலமான புத்தகம் இல்லை போல இருக்கு. நீலகண்ட சாஸ்திரின்னு தேடினா கே.ஏ. நீலகண்ட சாஸ்திரின்னு ஒருத்தர் பெயர் தான் அதிகமா நெட்டுல இருக்கு. அவர் வரலாற்று நூல்கள் நிறைய எழுதியிருக்கார். சோழர்கள் காலம், தென்னிந்தியா பத்தியெல்லாம் நிறைய எழுதியிருக்கார். ஆனா ஆன்மிக பாரதம் பேர்ல எதுவும் எழுதினதா குறிப்பு இல்லை. அதனால இந்த நீலகண்ட சாஸ்திரி வேற ஆளா தான் இருக்கணும்...

பார்த்தசாரதி சொன்னார். “அதை என் கிட்ட விடுங்க. எங்க டிபார்ட்மெண்ட்ல சிலர் கிட்ட சின்ன நூல் முனை அளவு தகவல் கிடைச்சாலும் அதை வச்சு அவங்க மொத்த விஷயத்தையும் தோண்டி எடுத்துடுவாங்க. அதனால நான் பார்த்துக்கறேன்.... உங்களுக்கு வீட்டுக்குள்ளே போய் பார்க்கணும்கிற ஆவல் இருக்கா?

ஈஸ்வர் சொன்னான். “இருக்கு. ஆனா பூட்டி வச்சிருக்கீங்களே

“சாவி என் கிட்ட இருக்கு. வாங்க பார்க்கலாம்....என்ற பார்த்தசாரதி அவனை அழைத்துச் சென்றார். போகும் போது சொன்னார். “எதையும் தொடாமல் பாருங்க. ரேகைகள் எல்லாமே எடுத்தாச்சுன்னாலும் விடுபட்டுப் போனது எதோ இருக்குங்கற மாதிரி ஒரு எண்ணம் எனக்கு தொடர்ந்து இருக்கு. அதனால தான் இன்னும் பூட்டியே வச்சிருக்கேன்....

அவன் சரியென்றான். செருப்பை வெளியே கழற்றி விட்டு அந்த வீட்டினுள் நுழையும் போது அவனுக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது.  முனுசாமி அவனிடம் சொன்னது போல அந்த வீடு ஒரு கோயிலைப் போல் தான் இருந்து வந்திருக்கிறது. அறுபது வருடங்களாக அந்த சிவலிங்கம் இருந்த இடத்தில் கண்டிப்பாக அந்த சக்தி அலைகள் இருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

அவனுக்கு முன்பே செருப்போடு நுழைந்திருந்த பார்த்தசாரதி அவனைப் பார்த்து மீண்டும் வெளியே சென்று செருப்பை கழற்றி விட்டு வந்தார். அவரைப் பொருத்தவரை அது கொலை நடந்த சம்பவ இடம்’. ஆனால் அவனைப் பொருத்த வரை அது சிவலிங்கம் பூஜிக்கப்பட்டு வந்த புனித இடம். எனவே அவன் உணர்வுக்கு மதிப்பு தரத் தோன்றியது.

ஈஸ்வர் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அந்த வீட்டினுள் சுற்றிப் பார்த்தான். ஹாலில் பசுபதி இறந்து கிடந்த இடத்தை சாக்பீசால் குறித்து வைத்திருந்தார்கள். ஹால், சமையலறை, படுக்கையறை என ஒவ்வொரு இடமாய் சென்று பார்த்தான். அந்தத் திருடன் குறைபட்டுக் கொண்டதில் தவறே இல்லை என்று தோன்றியது. விலை உயர்ந்த பொருள் என்று அங்கு எதுவுமே இருக்கவில்லை. எல்லாம் அடிப்படைத் தேவைகளுக்கான விலை குறைந்த, விலை போகாத பொருள்களாகவே இருந்தன.

பூஜையறைக்குள் நுழைந்தான். எல்லோரையும் குழப்பிய தேவார, திருவாசக, ஸ்தோத்திர புத்தகங்கள் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன. பெரிதாய் இரண்டு விளக்குகள், விளக்குத்திரிகள், எண்ணெய் பாட்டில், தீப்பெட்டி, கற்பூர டப்பா இருந்தன. துடைக்கும் துணி ஒன்றும் இருந்தது. எல்லாம் சாதாரணமாய் ஒரு பூஜை அறையில் இருக்கக்கூடியவையே. அவனுக்குப் புதியதாய் தகவல் தரக்கூடிய ஏதோ ஒன்று அங்கிருக்காதா என்று மிகவும் கவனமாய் அந்த அறையை அலசினான். அப்படி எதுவும் இருக்கவில்லை....

பார்த்தசாரதியைப் பார்த்து ஈஸ்வர் கேட்டான். “இங்கே நான் கொஞ்ச நேரம் கண்ணை மூடிட்டு உட்கார்ந்துக்கலாமா?

“தாராளமா

அவன் அங்கே சுவரை ஒட்டினாற்போல் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்ட பின் பார்த்தசாரதி அவனையே சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார். தியானம் செய்கிறானா என்ன?

உண்மையில் ஈஸ்வர் அங்கு நிலவி இருந்த அலைகளை உணர முயன்று கொண்டிருந்தான். மூன்று நிமிடங்களில் அவன் மனம் ஓரளவு அமைதியாகியது. வார்த்தைகளில் அடங்காத ஒரு பேரமைதியை அவன் உணர ஆரம்பித்தான். அவ்வப்போது அந்தரத்தில் தொங்கினாற்போல் காட்சி தந்து அவனைத் திகைக்க வைத்த சிவலிங்கம் அது அறுபது வருடங்களாக இருந்த இடத்தில் அவன் அமர்ந்திருக்கையில் ஏனோ அவனை எந்தத் தொந்திரவும் செய்யவில்லை. உண்மையில் அவன் அந்த சிவலிங்க தரிசனத்தை அங்கே எதிர்பார்த்தான் என்று கூட சொல்லலாம். ஆனால் ஆரம்பத்தில் பேரமைதி மட்டும் அவனை சூழ்ந்தது. அவன் காலத்தை மறந்தான்....


பார்த்தசாரதிக்கு அவனைப் பார்க்கும் போது சிறிது ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவனுடைய அழகான முகத்தில் தெரிந்த அமைதி அவர் அஜந்தா குகைகளில் பார்த்த ஒரு புத்தரை நினைவுபடுத்தியது. அமெரிக்காவில் வளர்ந்த பையன் இந்த அளவு தியானத்தில் ஆழப்பட முடிவது பெரிய விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டார். அவரும் பல தடவை முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு தடவை தியானம் செய்ய உட்காரும் பொழுதும் நூற்றுக் கணக்கான விஷயங்கள் என்னைக் கவனி, என்னைக் கவனி என்று படையெடுத்து வந்து மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனவே ஒழிய தியானம் என்னவோ அவருக்கு கைகூடினதே இல்லை.....

ஈஸ்வர் அனுபவித்து வந்த அமைதியினூடே திடீர் என்று சிவலிங்கம் தத்ரூபமாக அவன் எதிரில் அந்தரத்தில் காட்சி அளித்தது. சிவலிங்கத்தில் இருந்து ஒரு கண் திறந்து அவனைப் பார்த்தது. பின்னணியில் வேத கோஷம் கேட்டது.  

ஓம் பூர்ண மதப் பூர்ண மிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாயப்
பூர்ண மேவா வசிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

சில வினாடிகள் நீடித்த அந்தக் காட்சி வந்தபடியே திடீர் என்று மறைந்தது. அவனுக்கு மயிர்க்கூச்செரிந்த்து. குப்பென்று வியர்த்தது. அவன் கண்களைத் திறந்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி கேட்டார். “என்ன ஆச்சு?

அவன் தன் அனுபவத்தை அவரிடம் சொல்லவில்லை. “ஒரு அழகான மன அமைதியை நான் அனுபவிச்சேன்...

உங்களுக்கு தியானம் இவ்வளவு சுலபமா வருமா?

“சுலபமாவா? எனக்கா? இது வரைக்கும் இப்படி வந்ததில்லை. முதல் தடவையா இங்கே தான் இப்படி ஒரு அனுபவம் கிடைச்சிருக்குஈஸ்வர் உண்மையைச் சொன்னான்.

அப்படின்னா இந்த இடத்தோட மகிமை தான் அதுன்னு சொல்றீங்களா?

“ஆமா. அறுபது வருஷமா ஆத்மார்த்தமா எந்த கள்ளங்கபடமும் இல்லாம இந்த இடத்துல சிவலிங்கத்தை வச்சு அந்தப் பெரியவர் பூஜை நடத்தி இருக்கார். அந்த தியான அலைகள் இங்கே நிறையவே இருக்கு. அதனால தான் இங்கே எனக்கு தியான மனநிலை சீக்கிரமாவே வந்ததுன்னு நினைக்கிறேன்.

ஆனா எனக்கு இங்கே எந்த ஒரு தியான மனநிலையும் வரலையே

“ஒவ்வொருத்தனும் எதைத் தேடிட்டு போறானோ அதுக்கேத்த மாதிரி தான் அவன் அனுபவமும் அமையுது சார். நீங்க இங்கே போலீஸ்காரரா தான் வந்திருக்கீங்க. அதனால உங்களுக்கு எதாவது தடயம் இங்கே கிடைக்கலாமே ஒழிய இந்த மாதிரி தியான அனுபவம் கிடைக்காது....

அவனது வார்த்தைகள் அவரை யோசிக்க வைத்தன. அவர் சிறிது மௌனமாக இருக்க அவனும் சற்று முன் மனக்கண்ணில் அந்தரத்தில் சிவலிங்கம் தோன்றிய விதத்தையும் ஒரு கண் திடீர் என்று திறந்து அவனைப் பார்த்த விதத்தையும், பின்னணியில் கேட்ட வேத கோஷத்தையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.  கண் (நெற்றிக் கண்ணாக இருக்குமோ?) திறந்ததும், வேத கோஷமும் அவனுக்குப் புதிதான அனுபவங்கள். இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்தான். ஆனால் அவன் மனக்கண்ணில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்து வேத கோஷம் கேட்ட அதே நேரத்தில் அந்த வேத பாடசாலையில் ஓம் பூர்ண மதப் பூர்ண மிதம்...என்ற சுலோகத்தை மாணவர்கள் சேர்ந்து உச்சஸ்தாயியில் சொல்லிக் கொண்டு இருந்ததையும் அதை சிவலிங்கம் முன்பு அமர்ந்தபடி கணபதி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததையும் அவன் அறிய மாட்டான்...

ந்த மனிதன் சிலமணி நேரங்களாகவே ஒரு அசௌகரியத்தை உணர்ந்து கொண்டிருந்தான். வாய்விட்டுச் சொல்ல முடியாத பிரச்சினையில் தனியாகத் தவிப்பது ஒரு கொடுமையான அனுபவம் என்று தோன்றியது. குருஜியை உடனடியாக சந்தித்து அந்தத் தகவலைச் சொல்ல முடியாதது அவனுக்கு தலையை வெடிக்கச் செய்து விடும் போல் தோன்ற வைத்தது. தன்னுடைய சகாவிடம் தன் எண்ணங்களை எல்லாம் சொல்ல அவனுக்கு முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் சகாவினுடைய அறிவுகூர்மைக்கு சில விஷயங்கள் எட்டாது என்பது தான். எல்லாம் கேட்டு விட்டு அடிப்படை விஷயங்களிலேயே சந்தேகம் கேட்கக் கூடியவன் அவன். அதனால் அவனிடம் சிக்கலான, ஆழமான விஷயங்களைப் பேசக்கூடாது என்பதை அவன் என்றோ கற்றுக் கொண்டிருந்தான்.....

செல்போன் அவன் சிந்தனைகளைக் கலைத்தது. ஜான்சனின் நம்பர். பரபரப்புடன் எடுத்தான். ஹலோ

என்ன ஆச்சு குருஜிக்கு. நான் அவரைக் கூப்பிட்டால் ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் தான் வருகிறது

அவர் தனிமைல இருக்கார். பூகம்பமே வந்தாலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்கார். சாப்பாடு கூட வேண்டாம்னு சொல்லி இருக்கார். யாரும் மறந்து கூட தொந்திரவு செய்துடக் கூடாதுன்னு வீட்டுக்கு வெளியே காவலுக்கு ஒரு தடியனை வேற நிறுத்தி இருக்கார். அவன் அந்த வீட்டுக்கு நூறடி தூரத்துலயே எல்லாரையும் நிறுத்தி அப்படியே அனுப்பிச்சுடறான்...

“என்ன திடீர்னு...?

“நாளைக்கு அவர் சிவலிங்கத்தைப் பார்க்கப் போகப் போகிறார்...

ஜான்சன் பரபரப்பானார். “அப்படியா வெரி குட். ஆமா அவர் வீட்டுக்குள்ளே என்ன செய்துட்டு இருக்கார்னு எதாவது ஐடியா இருக்கா?

இல்லை...

“மத்தபடி எல்லாம் நல்லபடியா தானே போயிட்டிருக்கு...

அப்படி நல்லபடியா போக சிவலிங்கம் விடற மாதிரி தெரியலை.

“என்ன ஆச்சு?

“அந்த ஈஸ்வர் வேதபாடசாலைக்கு வரப் போறதா தகவல் வந்திருக்கு. யாரோ அவன் நண்பன் போய் பார்த்துட்டு வரச் சொன்னானாம்....

ஜான்சன் ஒரு நிமிடம் பேச்சிழந்தார். பின் படபடப்புடன் கேட்டார். எப்ப வர்றானாம்?

அது தெரியலை. எப்ப வேணும்னாலும் வரலாம். இதை குருஜி கிட்ட சொன்னா எப்படி சமாளிக்கிறதுங்கறதை அவர் பார்த்துக்குவார். ஆனா அவரை இப்போதைக்கு பார்க்க முடியாதுங்கறது தான் பிரச்சினையே....

ஜான்சன் சொன்னார். “என்ன ஆனாலும் சரி அந்த சிவலிங்கத்தையோ, கணபதியையோ அவன் பார்த்துடாம பார்த்துக்கோங்க. அதே மாதிரி அவனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் வராமல் பார்த்துக்குங்க. அவன் எமகாதகன். ஜாக்கிரதை....

முதலிலேயே உணர்ந்து வந்த அசௌகரியம் ஜான்சனின் எச்சரிக்கையால் இப்போது வளர்ந்து பெரிதாகி விட அன்றிரவெல்லாம் அந்த மனிதன் உறங்காமல் விழித்திருந்தான். அவன் மூளை ஓவர் டைம் வேலை செய்ய ஆரம்பித்தது.

(தொடரும்)

-என்.கணேசன்

  

Tuesday, February 19, 2013

தினமலரில் ‘ஆழ்மன சக்தி’ புத்தக மதிப்புரை
அன்பு வாசக நண்பர்களுக்கு,
வணக்கம்.
தினமலரில் என் நூல் “ஆழ்மனதின் அற்புதசக்திகள்”க்கு எழுதப்பட்ட புத்தக மதிப்புரை இது.  என்னை எழுதவும், நூல் வெளியிடவும் ஊக்குவித்த   வாசகர்கள் பலருக்கும் இந்த மதிப்புரையின் பாராட்டு உரித்தானது என்று நினைப்பதால் இங்கு அதைப் பதிவு செய்கிறேன். மிக்க நன்றி.
அன்புடன்
என்.கணேசன்


Monday, February 18, 2013

அடுத்தவர் குறைகள்!
ந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்

கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும்  சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள். “அப்பாடா. இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..

கணவன் அமைதியாகச் சொன்னான். “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்

இப்படித்தான் பல முறை நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை. நம் குறைகளுக்கோ காரணங்கள் மட்டும் தான் வலுவாக வைத்திருக்கிறோம். அந்தக் காரணங்கள் இல்லா விட்டால் நாம் பத்தரை மாற்றுத் தங்கம் தான்.

சோவின் யாருக்கும் வெட்கமில்லை படத்தில் ஒரு அழகான பாடல் உண்டு.
“சுட்டும் விரலால் எதிரியைக்
காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினைக் காட்டுமடா.
மூடர்களே பிறர் குற்றத்தை
மறந்து முதுகைப் பாருங்கள்
முதுகில் இருக்கு ஆயிரம்
அழுக்கு, அதனைக் கழுவுங்கள்  

திருவள்ளுவரும் அழகாகச் சொல்வார்.

“ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

அடுத்தவர் குறைகளைக் காண்பதில் உள்ள ஆர்வத்தை நாம் நம் குறைகளைக் காண்பதிலும் வைத்துக் கொண்டால் இந்த உலகில் தீமை இருக்க முடியுமா? அடுத்தவர்கள் குறைகளைக் காண்பதில் தான் நமக்கு எத்தனை அக்கறை? எத்தனை வேகம்? அந்த நேரத்தில் தான் நம் கவனிப்பு எத்தனை கூர்மை பெற்று விடுகிறது.  ஆனால் நம் விஷயம் என்று வரும் போது அதெல்லாம் காணாமல் போய் விடுகிறது. குறை கூறுபவர்கள் நோக்கத்தில் குறை காண ஆரம்பித்து விடுகிறோம். இப்படிப்பட்ட சுபாவம் நம்மிடம் இருக்கும் வரை நாம் குறைகளை நீக்கிக் கொள்ளவோ, திருந்தவோ வாய்ப்பே இல்லை.

அடுத்தவர் திருந்தி பெரிதாக நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை. மாறாக குறைகளை நீக்கிக் கொண்டு நாம் திருந்தினால் நம் வாழ்க்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை. மேலும் நாம் நம் குறைகளை நீக்கிக் கொண்டு சிறப்பாக வாழும் போது அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் நல்ல உதாரணமாகவும் இருப்பதால், குறையுள்ள மற்றவர்களும் நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு.

எனவே விமரிசனம் தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழிகாட்டுவோம்.!

-          என்.கணேசன்