சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 30, 2011

உண்மையான யோகியைக் காணல்
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-4

பால் ப்ரண்டன் சந்தித்த இன்னொரு சித்தர் விசுத்தானந்தர். அவரது சக்திகள் வித்தியாசமானவை. அவர் எந்த ஒரு பூவின் நறுமணத்தையும் தானிருந்த இடத்தில் ஏற்படுத்த முடிந்தவராக இருந்தார். ஒரு பூதக் கண்ணாடியின் மூலம் ஒரு கைக்குட்டையில் சூரிய ஒளியைக் குவித்து மற்றவர்கள் நினைத்த எந்த நறுமணத்தையும் ஏற்படுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் திபெத்தில் மட்டுமே மலரக் கூடிய ஒரு மலரை எண்ண, அவர் அந்த மலரின் நறுமணத்தையும் வரவழைத்துக் காட்டி பால் ப்ரண்டனை ஆச்சரியப்படுத்தினார்.

வேறெதாவது சக்திகள் அவரிடம் உள்ளதா என்று பால் ப்ரண்டன் கேட்க விசுத்தானந்தர் ஒரு சிட்டுக் குருவியை அவர் முன்னாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுறது இறந்து விட்டது என்பதை பால் ப்ரண்டனை உறுதிபடுத்திக் கொள்ளச் சொன்னார். பின் தன் கையிலிருந்த பூதக் கண்ணாடி மூலம் சூரிய ஒளிக்கதிர்களை ஒன்றாகக் குவித்து இறந்த சிட்டுக் குருவியின் ஒரு கண்ணில் குவித்து மறுபடியும் உயிர்ப்பித்துக் காட்டினார். சிட்டுக் குருவி மறுபடி உயிர்பெற்று அசைந்து நடந்து சிறிது தூரம் பறந்து சென்றதைக் கண்ணால் பார்த்த பால் ப்ரண்டன் பிரமித்துப் போனார். அந்த உயிர் பெற்ற பறவை அரை மணி நேரம் வாழ்ந்து பின் இறந்து போனது.

மரணத்தையும் வெல்ல முடிந்த சக்தி படைத்த விசுத்தானந்தர் பால் ப்ரண்டன் இந்தியா வந்த காரணத்தை அறிந்து சொன்னார். "தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை..."

அதே செய்தியைத் தான் பால் ப்ரண்டன் சந்தித்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களும் சொன்னார். பால் ப்ரண்டனைப் பல இடங்களில் தொடர்ந்த ஒரு மனிதர் "நீங்கள் தேடும் யோகியை நான் காட்டுகிறேன். அவரை எனக்குத் தெரியும்" என்று அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் அவர் வார்த்தையில் பால் ப்ரண்டனுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மனிதர் தொடர்வதை நிறுத்தவில்லை. கடைசியில் பால் ப்ரண்டன் அவர் சொன்ன நபரையும் சந்திப்பதில் தனக்கு நஷ்டமேதும் இல்லை என்று நினைத்து "நீங்கள் சொல்லும் யோகி எங்கிருக்கிறார்?" என்று கேட்க அவர் திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியைப் பற்றி சொன்னார்.

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றார்.

ரமணாசிரமத்தின் ஒரு சிறிய ஹாலில் ரமண மகரிஷி அமர்ந்திருக்க அவர் முன் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். ரமண மகரிஷி பால் ப்ரண்டனைப் பார்த்தார். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்ட ரமண மகரிஷியின் பார்வை சாதாரணமானதாக இருக்கவில்லை. அவர் பார்வை காந்தத் தன்மை கொண்டதாக இருந்தது. பால் ப்ரண்டன் தன் பார்வையை மகரிஷியிடமிருந்து விலக்க முடியாதவராக இருந்தார். திடீரென்று தன் பார்வை பால் ப்ரண்டனிடமிருந்து விலக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் பால் ப்ரண்டன் தான் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுடன் தானும் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒருவித அசாதாரண சக்தியலை அவரை ஆட்கொண்டது. தன்னை மகரிஷி புறக்கணித்ததாக எண்ணிய எண்ணம் மெள்ள விலகியது. ரமண மகரிஷி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருடைய ஞான சக்தி அந்த இடமெல்லாம் வியாபித்திருந்ததாக பால் ப்ரண்டன். அவர் மனதில் ரமண மகரிஷியிடம் கேட்க எண்ணியிருந்த கேள்விகள் கூட அவர் மனதில் இருந்து தானாக உதிர்ந்தன. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரமைதியை பால் ப்ரண்டன் அந்த இடத்தில் உணர்ந்தார். கேள்விகள் இல்லாத பதில் தேவைப்படாத எதனாலும் பாதிக்கப்படாத ஒரு ஆனந்த நிலையை பால் ப்ரண்டன் அனுபவித்தார்.

மற்றவர்கள் காட்டிய அபார சக்திகள் எல்லாம் இந்த அமைதியின் முன் ஒரு பொருட்டாகவே பால் ப்ரண்டனுக்குத் தோன்றவில்லை. தான் தேடி வந்த யோகியை அந்தக் கணமே பால் ப்ரண்டன் அடையாளம் கண்டார். அவருடைய தேடல் முடிவுக்கு வந்ததாக அவர் உணர்ந்தார். அங்கேயே சில காலம் தங்க பால் ப்ரண்டன் தீர்மானித்தார்.

முதல் முதலில் ரமண மகரிஷியிடம் பேச வாய்ப்பு கிடைத்த போது பால் ப்ரண்டன் சொன்னார். "ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் நகர சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

மகரிஷி புரிகிறது என்பது போல் தலையசைத்தார்.

பால் ப்ரண்டன் தயக்கமில்லாமல் தனக்கு மனதில் பட்டதை அப்படியே சொன்னார். "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

அருகிலிருந்த சிலர் பால் ப்ரண்டனுடைய வெளிப்படையான கேள்வியைக் கேட்டு திகைத்தனர். மகரிஷி அவரையே பார்த்தாரே ஒழிய பதிலேதும் சொல்லவில்லை. பால் ப்ரண்டன் தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"

"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள். ரமண மகரிஷி அவர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

ரமணாஸ்ரமத்தில் இருக்கும் போது பால் ப்ரண்டனுக்கு யோகி ராமையா என்னும் ஆந்திர சித்தரின் அறிமுகம் கிடைத்தது. வருடத்தில் ஒரு முறை வந்து சுமார் ஒரு மாதம் அங்கு இருந்து விட்டுப் போவார் அந்த சித்தர். ஒரு முறை பால் ப்ரண்டன் இருந்த அறையில் ஒரு கொடிய விஷமுள்ள நாகம் வந்து விட பலரும் ஓடி வந்து அதைக் கொல்ல கம்புகளை எடுக்க யோகி ராமையா அங்கு வந்து அவர்களைத் தடுத்து தன் இரு கைகளாலும் அந்த நாகத்தை எடுத்து அதை அன்புடன் பார்க்க, தன் விஷ நாக்குகளை வெளியே நீட்டினாலும் அவரை தீண்டாமல் அந்த நாகம் சீற்றம் தணிந்து அவருக்கு தலை வணங்கியது. ராமையா அதை கீழே விட யாரையும் உபத்திரவிக்காமல் அந்த நாகம் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டது. ஆச்சரியத்துடன் "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று பால் ப்ரண்டன் கேட்டதற்கு ராமையா சொன்னாராம். "நான் மனதில் வெறுப்பு சிறிதும் இன்றி முழு அன்புடன் அதை அணுகியிருக்கும் போது பயப்பட என்ன இருக்கிறது?". மனித எண்ணங்களை உணரும் சக்தி விலங்குகளுக்கும் உண்டு என்பதையும் அவை அதன்படியே நடந்து கொள்கின்றன என்பதையும் அந்த நிகழ்ச்சி தெரிவிக்கிறதல்லவா?

ரமண மகரிஷி பெரும்பாலும் மௌன நிலையிலேயே இருப்பார். அவர் முன் வந்தமர்ந்து செல்லும் பல மனிதர்களுக்கு அந்த வார்த்தைகளற்ற சூழ்நிலையிலும் தேடி வந்ததற்கு ஒரு பதில் அல்லது கிடைத்தது. சில சமயங்களில் மட்டுமே அவர் பேச இசைந்தார். பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."


ரமண மகரிஷியைக் கண்டு அவர் காலடியில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவத்தை ஆழமாக உணர்ந்த பால் ப்ரண்டன் இந்த தேசத்தில் வந்து தேடியதைக் கண்ட திருப்தியில் தன் நாடு திரும்பினார்.

(முடிந்தது)

என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்

Wednesday, May 25, 2011

சயனைடு சாப்பிட்டும் உயிர் வாழ்ந்தவர்
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-3

பால் ப்ரண்டன் இந்தியாவில் கண்ட அபூர்வசக்திகள் படைத்தவர்கள் அனைவருமே யோகிகள் அல்ல. இங்கிலாந்தில் அவரிடம் அந்த இந்தியர் சொன்னபடி முறைப்படி ஏதாவதொரு விதத்தில் அந்த சக்திகளைப் பெற்றிருந்த, யோகிகள் வரிசையில் சேர்க்க முடியாத மனிதர்களும் இருந்தார்கள். அப்படி ஒரு பக்கிரியை அவர் பர்ஹாம்பூரில் பார்த்தார். பணம் கேட்டு வந்த அந்தப் பக்கிரி தன்னிடம் விசேஷ சக்தி இருப்பதாகச் சொல்ல பால் ப்ரண்டன் அதைக் காண்பிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கிரி பால் ப்ரண்டனின் முன்னிலையில் தன் வலது கண்ணைத் தோண்டி எடுத்தார். அதைக் காண சகிக்காத பால் ப்ரண்டன் திரும்பவும் வைத்துக் கொள்ளச் சொல்ல அந்தப் பக்கிரி அப்படியே அந்தக் கண்ணைத் திரும்பவும் சுலபமாகப் பொருத்திக் கொண்டார். கண்ணுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எந்த உபகரணங்களும் இல்லாமல் சர்வ சகஜமாக அப்படி எடுக்கவும் திரும்ப பொருத்திக் கொள்ளவும் முடிந்த அந்தப் பக்கிரியிடம் "இது எப்படி சாத்தியமாகிறது?" என்று பால் ப்ரண்டன் கேட்க அந்தப் பக்கிரி அதை விளக்க மறுத்து விட்டார். "ஐயா, இது ஒரு குடும்ப ரகசியம். இந்த வித்தை தந்தை மகனுக்கு, மகன் தன் மகனுக்கு என பரம்பரை வழிகளில் மட்டுமே கற்றுத் தரப்படுகிறது" என்றார்.

இது போன்ற வித்தைகளால் யாருக்கு என்ன பயன் என்ற கேள்வி பால் ப்ரண்டன் மனதில் எழுந்தது. அவர் தன்னிடமிருந்த பணம் சிறிது கொடுத்து அவரை அனுப்பி விட்டார். இது போன்ற காசு பணத்திற்காக வித்தை காட்டும் மனிதர்கள் இருக்கும் இந்த தேசத்தில் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்ற மகா சித்தர் இருந்திருக்கிறார் என்பதை அறிந்த பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நேரடி சீடர்களில் ஒருவரான மஹாசாயா என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மஹாசாயாவிற்கு மிகவும் வயதாகியிருந்தது. மஹாசாயா கல்கத்தா கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், வரலாறு, அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அப்படிப்பட்ட ஒரு உயர் கல்வியாளர் ராமகிருஷ்ணர் என்ற கல்வியறிவில்லாத ஞான சித்தரிடம் ஈர்க்கப்பட்டு சீடராக மாறியது பால் ப்ரண்டனுக்கு ராமகிருஷ்ணரின் ஞான சக்தியின் மேன்மையை உணர்த்தியது. ராமகிருஷ்ணரைப் பற்றி அந்த நேரடி சீடரிடம் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மஹாசாயா தன் குருவைப் பற்றிப் பேசும் போது புதிய மனிதராகவே மாறி விட்டார். ".....ராமகிருஷ்ணர் பணம், பதவி, புகழ், கர்வம், சொத்துக்கள் எல்லாம் ஆத்ம ஞானத்தின் முன் தூசுகளே என்பதை எங்களுக்கு கற்றுத் தந்தார். அந்த நாட்கள் அருமையானவை. அந்த மகான் யோக நிலைக்குச் சென்று அமர்ந்திருப்பார். சுற்றியுள்ள நாங்கள் அவரைக் குருவாக அல்லாமல் இறைவனாகவே கண்டோம்....அப்படிப்பட்ட சக்தி அவர் இருக்கும் அந்த அறையெங்கும் பரவியிருக்கும். அவர் ஒருவரிடம் இறையுணர்வு ஏற்படுத்த, தானிருக்கும் யோக நிலைக்கு இழுத்துச் செல்ல பெரிதாக எதுவும் செய்யத் தேவையிருக்கவில்ல. அவர் லேசாகத் தொட்டால் போதும். அந்த தெய்வானுபவம் கிடைத்து விடும். அந்த அனுபவத்தின் பேரானந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை......"

ஜென்ம ஜென்மங்களாக தவமிருந்து பெறக் கிடைக்கும் அனுபவத்தை தன் தொடுதலாலேயே ஏற்படுத்த முடிவது ஒரு ஒப்பற்ற சக்தியல்லவா? விவேகானந்தருக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்தி அல்லவா அவர் தன் வழிக்கு இழுத்தார். ஒரு நரேந்திரனை விவேகானந்தராக்கிய பெருமை அதனாலல்லவா கிடைத்தது.? ராமகிருஷ்ணரை நேரில் சந்திக்க முடிந்த காலத்தில் இந்தியா வராவிட்டாலும் மஹாசாயா போன்ற அவரது நேரடி சீடரைச் சந்திக்க முடிந்ததில் பால் ப்ரண்டன் மனம் நிறைவாக இருந்தது.

கல்கத்தாவில் மருத்துவராக இருந்த டாக்டர் பாண்ட்யோபாத்யாயா என்பவர் பால் ப்ரண்டனுக்கு யோகிகள், யோக சக்திகள் மேல் இருந்த ஆர்வத்தை அறிந்து யோகி நரசிங்கஸ்வாமி பற்றி சொன்னார். சர் சி வி இராமன் உட்படப் பல விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் முன்னிலையில் ப்ரசிடென்ஸி கல்லூரி இயற்பியல் அரங்கத்தில் நரசிங்கஸ்வாமி செய்து காட்டிய அற்புதத்தை டாக்டர் பாண்ட்யோபாத்யாயா சொன்னார்.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு நரசிங்கஸ்வாமிக்கு கந்தக அமிலம், கார்பாலிக் அமிலம், பொட்டாசியம் சயனைடு மூன்றும் கலந்த கலவையை ஒரு பாட்டிலில் தர அவர் அதை அவர்கள் முன்னிலையில் குடித்தார். இதில் ஒன்றே கொடிய விஷம். மூன்றும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? பிறகு கண்ணாடியைப் பொடி செய்து தந்தனர். அவர் அதையும் விழுங்கினார். என்ன தான் செய்து காட்டுவேன் என்று நரசிங்கஸ்வாமி சொல்லியிருந்தாலும் இந்த மூன்றைக் குடித்து அவருக்கு ஏற்படப் போகும் உயிராபத்திற்கு உதவ மருத்துவர் குழு தயாராகவே இருந்தது. ஆனால் நரசிங்கஸ்வாமி எந்த வித பாதிப்பும் இல்லாமல் சகஜமாகவே இருந்திருக்கிறார். மருத்துவக் குழுவினரின் உதவி தேவையிருக்கவில்லை.

அவர் முன்னால் இருந்த குழுவினர் எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தனர். மூன்று மணி நேரமாகியும் பாதிக்கப்படாமல் இருந்த நரசிங்கஸ்வாமி ஏதாவது கண்கட்டு வித்தை செய்து அந்த அமிலக்கலவையைக் குடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் அவர் வயிற்றுக்குள் இருந்தவற்றை பம்ப் செய்து வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அத்தனை விஷங்களும் இன்னமும் இருந்தன. மறு நாள் அவர் மல பரிசோதனை கூட செய்து பார்த்திருக்கின்றனர். கண்ணாடித் துகள்கள் அவற்றில் இன்னமும் இருந்திருக்கின்றன.

தன் உடல் மீது இப்படியொரு கட்டுப்பாட்டை ஒருவரால் வைத்துக் கொள்ள முடியும் என்பதை அதுவரை கண்டிராத அந்தக் குழுவினர் "எப்படி இந்தக் கொடிய விஷங்கள் உங்கள் உடலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறீர்கள்?" என்று நரசிங்கஸ்வாமியைக் கேட்ட போது அவர் சொன்னாராம். "நான் உடனடியாக யோக நித்திரைக்குப் போய் என் மனதை ஒருமைப்படுத்தி இந்த விஷங்களுக்கு எதிர்ப்பு சக்தியை என் உடலில் உருவாக்கி விடுவேன்.."

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பால் ப்ரண்டன் நரசிங்கஸ்வாமியை சந்திக்க முயன்றார். ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் யோக சக்தியை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எப்போதும் பயணத்தில் இருந்த அவரை பால் ப்ரண்டனால் சந்திக்க முடியவில்லை.

(பால் ப்ரண்டன் 1932ஆம் ஆண்டு நரசிங்கஸ்வாமியின் மரணத்தை பத்திரிக்கைகளில் பார்க்க நேர்ந்தது. ரங்கூனில் நரசிங்கஸ்வாமி இப்படி ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டி முடித்த பிறகு பல பத்திரிக்கையாளர்கள், அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோருமாய் அவரை சூழ்ந்து கொள்ள அவரால் உடனடியாக யோக நித்திரைக்குச் செல்ல முடியாததால் விஷ முறிவுக்கான சக்தியை உடலில் ஏற்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அதனால் அவர் உடனடியாக அங்கேயே அவர் இறந்து போனார். இயற்கைக்கு மாறாக மனிதனால் எத்தனையோ செய்து காட்ட முடியும் என்றாலும் அதில் அதிகக் கவனம் வேண்டும். கவனக் குறைவும், சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் அலட்சியமும் உயிரையும் குடித்து விடும் என்பதற்கு நரசிங்கஸ்வாமி ஒரு நல்ல உதாரணம்)

பால் ப்ரண்டன் சந்தித்த மற்ற சக்தியாளர்களையும் அவர் மனதில் இருந்த யோகிகளின் குணாதிசயங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர் கண்ட மஹா யோகியையும் அடுத்த பதிவில் காணலாமா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:கோவை இமேஜஸ்

Friday, May 20, 2011

கொல்லனின் தேனீர் சட்டி


ஒரு தாவோ கதை ...

பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த தேநீர் சட்டியில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான். அவன் மிக அமைதியாக உணரும் தருணங்கள் அவை. அவன் தொடர்ந்து வேலை செய்யத் தேவையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தருணங்கள் அவை.
அவன் வாழ்க்கை இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் அவன் அப்படி அந்த தேனீர் சட்டியில் இருந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கையில் ஒரு வழிப்போக்கன் அவனையே உற்றுப் பார்த்தான். கொல்லன் அவனிடம் கேட்டான். “ஐயா என்ன பார்க்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?”

”உங்களின் தேனீர் சட்டியைப் பார்த்தேன். மிக வித்தியாசமாக இருக்கிறது”

கொல்லன் சொன்னான். “இந்த தேனீர் சட்டி மிகப் பழையது. என் தந்தை இருக்கும் வரை இதில் தான் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து குடிப்பார். அவருக்குப் பின் நான் இதை உபயோகித்து வருகிறேன். களைப்பும் தாகமும் ஏற்பட்டால் நான் இதிலிருக்கும் தண்ணீரைக் குடித்து சற்று இளைப்பாறுவேன்”

“அதை நான் சற்று ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டான் அந்த வழிப்போக்கன்.

இந்த பழைய சட்டியை ஆராய என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக கொல்லன் அந்த தேனீர் சட்டியை அந்த வழிப்போக்கனிடம் தந்தான். வழிப்போக்கன் அந்த தேனீர் சட்டியைக் கையில் பிடித்து அதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தான். பின் சொன்னான். “ஐயா, இந்த தேனீர் சட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு புராதனப் பொருள்”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் அங்கு கூடி விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஏளனமாகச் சொன்னான். “இந்தப் பழைய சட்டியைப் போய் இப்படிச் சொல்கிறீர்களே. பார்த்தால் சாதாரணமானதாகத் தானே இருக்கிறது”

வழிப்போக்கன் சொன்னான். “இதற்கு முந்தைய மன்னர் பரம்பரையினர் காலத்தில் இது போன்ற ஒரே மாதிரியான மூன்று தேனீர் சட்டிகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன. இரண்டு தேனீர் சட்டிகள் இன்றும் நம் அரசவையில் இருக்கிறது. மூன்றாவது தொலைந்து போய் விட்டதாகக் கருதப்பட்டு வந்தது. இதைப் பார்த்த பின்பு தான் இது இன்னமும் இருப்பது புரிந்தது. இந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் இதன் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.”

இதைக் கேட்ட அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். உடனடியாக கொல்லன் அந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தான். பின் பார்த்த போது வழிப்போக்கன் சொன்னது போல அந்த சட்டியின் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருந்தது. இது வரை யாரும் அப்படிப் பட்ட முத்திரை உள்ள பாண்டங்களைப் பார்த்ததில்லை.

வழிப்போக்கன் கேட்டான். “ஐயா இந்த அபூர்வ சட்டியை நீங்கள் விற்க விரும்பினால் நானே வாங்கிக் கொள்கிறேன். நூறு பொற்காசுகள் வரை தர நான் தயாராக இருக்கிறேன்”

கொல்லனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அக்காலத்தில் நூறு பொற்காசுகள் என்பது மிகப் பெரிய செல்வம். கொல்லன் தன் வாழ்நாள் எல்லாம் கடுமையாக உழைத்தாலும் அந்த அளவு செல்வத்தை சம்பாதிக்க முடியாது. கொல்லன் சம்மதித்தான்.

வழிப்போக்கன் இன்னும் சில நாட்களில் பொற்காசுகளுடன் வந்து அந்த தேனீர் சட்டியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு சென்றான்.

கூடியிருந்தவர்களுக்கும் நடந்ததெல்லாம் மிக ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரும் அந்த தேனீர் சட்டியைக் கையில் எடுத்துப் பார்க்க விரும்பினார்கள். அந்த அரச முத்திரையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அந்த சட்டியின் மதிப்பை இப்போது உணர்ந்திருந்த கொல்லன் எல்லோரையும் எட்ட நின்றே பார்க்கச் சொன்னான்.

அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது. அந்த தேனீர் சட்டியை முன்பு போல வெளியே வைக்க முடியவில்லை. மேசை, நாற்காலி, தேனீர் சட்டி மூன்றையும் வீட்டுக்குள்ளே வைத்தான். வேலை முடிந்த பின் முன்பு போல நிம்மதியாக வெளியில் காற்றாட அமர்ந்து குளிர்ந்த நீரை அந்த சட்டியில் குடிக்க முடியவில்லை. உள்ளே அமர்ந்து குடித்தால் புழுக்கமாக இருந்தது. அந்த சட்டியைத் தூக்கி அப்படியே அதிலிருந்து தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. சட்டியை உயரத் தூக்கும் போது கை தவறி விழுந்து உடைந்து விடுமோ என்ற பயம் வந்தது.

அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள். அதற்கு அந்த வழிப்போக்கன் என்ன விலை கேட்டான் என்பதை கொல்லன் வாய் வழியாகவே அறிந்து கொள்ள பலரும் ஆசைப்பட்டார்கள். ‘இந்தக் கொல்லன் எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன்’ என்று அவர்கள் அவன் முன்னாலேயே வியந்தார்கள்.

இப்படி அவனுடைய தேனீர்சட்டி பிரபலமடைந்த பின் இன்னொரு பயமும் கொல்லனை ஆட்கொண்டது. யாராவது இதைத் திருடிக் கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் எப்போதும் அதன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். அவனுடைய வழக்கமான வேலைகள் எதுவும் சரியாக நடக்கவில்லை. இரவும் திருட்டு பயம் காரணமாக அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

இப்படியே நாட்கள் சென்றன. சில நாட்களில் வருவதாகச் சொன்ன வழிப்போக்கன் மூன்று மாத காலமாகியும் வரவில்லை. ஆனால் ஆட்களோ அந்த தேனீர் சட்டியைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள். அவனிடம் அது பற்றி கேட்ட வண்ணம் இருந்தார்கள். ஒரு நாள் வெளியூர்களில் இருந்தும் ஆட்கள் அதனைப் பார்க்க வந்து விட்டார்கள். அவனிடம் “நீ உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி தான்” என்றார்கள்.

அவனோ பொறுக்க முடியாமல் சொன்னான். “உண்மையில் நான் துரதிர்ஷ்டசாலி தான். ஒரு காலத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி நிம்மதியாக நான் இருந்தேன். இந்த மூன்று மாதங்களாக இந்த தேனீர் சட்டி என் நிம்மதியைக் குலைத்து விட்டது. பகலில் நிம்மதியாக வெளியே உட்கார்ந்து இதில் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஒரு கணம் கூட என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. இதை யாராவது திருடிச் சென்று விடுவார்களா என்ற பயத்தில் இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை.”

அவர்கள் சொன்னார்கள். “அப்படிச் சொல்ல வேண்டாம். அந்த வழிப்போக்கன் கண்டிப்பாக வருவான். அதை விற்று நூறு பொற்காசுகளோடு நீ நிம்மதியாக இருக்கலாம்”

அவன் சொன்னான். “இத்தனை நாட்கள் வராதவன் இனி வருவானா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது நூறு பொற்காசுகள் தேவையில்லை. என் பழைய நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைத்தால் போதும். அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்”

மற்றவர்கள் அவனைத் தடுப்பதற்குள் அந்த சட்டியை சுத்தியலால் ஒரே போடாகக் கொல்லன் போட்டுடைத்தான். அந்த தேனீர் சட்டி பல துண்டுகளாக சிதறியது. மற்றவர்கள் திகைத்துப் போய் நிற்க கொல்லனோ மாபெரும் நிம்மதியை உணர்ந்தான்.

இந்தக் கதையில் கொல்லன் முன்பு வாழ்ந்த வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. அவனுக்குக் கிடைத்த வருமானம் அவன் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருந்தது. அவனுக்குப் பெரிய கவலைகளோ, பயமோ இருக்கவில்லை. ஆனால் அந்த தேனீர் சட்டி மிக அதிக விலை மதிப்புடையது என்று ஊரார் அறிந்தவுடன் எல்லாமே அவனுக்கு தலைகீழாக மாறிவிட்டது. அவன் அது திருட்டுப் போய் விடுமோ என்ற பயத்தை உணர்ந்தான். பழைய வாழ்க்கையின் கவலையற்ற தன்மையை இழந்தான். அவனுக்காக அவனை மதிப்பது போய் அந்த தேனீர்சட்டிக்காக அவனை மனிதர்கள் மதித்தார்கள். மற்றவர்களுக்கு அவனை விட தேனீர் சட்டி மிகவும் மதிக்கத் தக்க விஷயமாக மாறி விட்டது. எல்லோரும் அவனை அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் மட்டுமே உள்ளுக்குள்ளே ஒரு துரதிர்ஷ்டசாலியாக இருந்தான்.

இந்த தாவோ கதை செல்வமும், புகழும் அதிகரிக்கும் போது அதனுடன் கூடவே வரும் பிரச்னைகளைச் சொல்கிறது. அவனுடைய கடைசி முடிவு மிகப் பெரிய முட்டாள்தனமாகப் பலருக்கும் தோன்றலாம். இக்கதை செல்வம், புகழ் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது ஆழமாகத் தெரிவிக்கும் செய்தி வேறு.

என்றுமே மனிதனை விட அதிகமாக அவனுடைய செல்வமும், புகழும் முக்கியத்துவம் பெற்று விடுமானால் அவனால் உண்மையான நிம்மதியைக் காண முடியாது. பிரச்னை செல்வத்திலும், புகழிலும் இல்லை. உண்மையான பிரச்னை அவனால் அவற்றை விட்டு இருக்க முடியாத அடிமைத்தனத்தில் தான் இருக்கிறது. இந்த அடிமைத்தனம் அவனை சின்ன சின்ன எளிமையான சந்தோஷங்களை அனுபவிக்க அனுமதிக்காது. அடுத்தவர்களை எல்லாம் சந்தேகக் கண்ணோடே பார்க்க வைக்கும். அவற்றை இழந்து விடுவோமோ, மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்கிற பயம் சதா உடன் இருக்க ஆரம்பித்து விடும். எப்படிப் பாதுகாப்பது என்ற கவலையும் சேர்ந்தே இருக்கும். அவை அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடும். அவன் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றையும் தீர்மானிக்க ஆரம்பித்து விடும். இந்த அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தால் ஒழிய ஒருவன் நிம்மதியடைய முடியாது என்பதைத் தான் கொல்லன் தேனீர் சட்டியை உடைத்த பின் பெற்ற நிம்மதி மூலமாக இந்தக் கதை சொல்கிறது.

சிந்திப்போமா?

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, May 16, 2011

ஏழு நிமிடங்கள் இதயத்துடிப்பை நிறுத்தியவர்!
சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-2

ஒருவனுக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் உண்டோ, எதில் அதிகத் தேடல் உண்டோ அதற்குத் தகுந்த மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையில் அவன் காண்கிறான். பால் ப்ரண்டன் அமானுஷ்ய சக்தி படைத்தவர்களையும், அவர்களில் உண்மையான ஒரு யோகியையும் கண்டுவிட வேண்டும் என்றும் கடல் கடந்து இந்தியாவுக்கு வந்தது வீண் போகவில்லை. பல அற்புத மனிதர்களைக் கண்டார்.

அவர்களில் ஒருவர் ப்ரம்மா என்ற இளைஞர். சென்னைக்கு அருகே அவரைச் சந்தித்தவுடன் ஏதோ ஒரு விசேஷ சக்தி அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பால் ப்ரண்டன் அவரிடம் வலிய சென்று பேசினார். ஆரம்பத்தில் ப்ரம்மா அவர் வந்து பேசியதை அவ்வளவாக விரும்பவில்லை. ஹத யோகியான ப்ரம்மா அவரை ஒரு இடைஞ்சலாகவே நினைத்தார். ஆனால் பால் ப்ரண்டனுடைய உண்மையான ஆர்வத்தையும், அவர் இந்தியா வந்த காரணத்தையும் அறிந்த பின் ப்ரம்மா அவரிடம் யோகாவைப் பற்றிப் பேசினார்.

பால் ப்ரண்டன் அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்பினார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதில் என்ன நஷ்டம்?"

ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."

பால் ப்ரண்டனுக்கு ப்ரம்மா சொன்னது வித்தியாசமாக தெரிந்தாலும் உண்மை என்றே தோன்றியது. (இன்று தகுதியில்லாதவர்கள் பெற்ற விஞ்ஞான ஞானம் எத்தனை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைப் பார்க்கும் போது நம் முன்னோர்களின் சிந்தனை சரியென்றே நமக்கும் தோன்றுகின்றன அல்லவா). தன்னுடைய ஆர்வம் வெறும் பொழுது போகாதவனின் தற்காலிக ஆர்வம் அல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார் பால் ப்ரண்டன். ப்ரம்மா அவருடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்குப் பல யோக நுணுக்கங்களை விவரித்தார். முக்கியமாக ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி இந்தியர்களின் யோகா முறையில் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அது ஏன் என்பதையும் விளக்கினார். ".... இயற்கை மனிதனுக்கு ஒரு நாளுக்கு 21600 மூச்சுகளை அளந்து தந்திருக்கிறது. அதை அவசரமாகவும், தவறான முறையுடனும் பயன்படுத்துகிறவன் அந்த அளவையும் கடந்து மூச்சுக்களை உபயோகித்து தன் ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான். ஆனால் நிதானமாக, ஆழமாக, தாளலயத்துடன் மூச்சு விடும் மனிதன் அந்த மூச்சால் ஆரோக்கியத்தை வளப்படுத்திக் கொள்வதோடு வாழ்நாளையும் அதிகப்படுத்திக் கொள்கிறான்"

பின் ஒரு நாள் ப்ரம்மா பால் ப்ரண்டனுக்குத் தான் கற்றிருந்த வித்தைகளைக் காண்பிக்க ஒப்புக் கொண்டார். ப்ரம்மா பால் ப்ரண்டனிடம் தன் நெஞ்சில் கை வைத்து இதயத் துடிப்பைக் கண்காணிக்கச் சொன்னார்.

பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். ப்ரம்மாவின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் ஏழு நிமிடங்கள் ப்ரம்மாவின் இதயத்துடிப்பே நின்று போனது. பால் ப்ரண்டன் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். அவர் அறிவின்படி இது மரணமே. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரம்மா சிறிது நேரம் மூச்சு விடுவதையே நிறுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் வியப்பு அதிகமாகிக் கொண்டே போனாலும் பால் ப்ரண்டனுக்கு இது நிஜம் தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. அங்கிருந்த கண்ணாடி ஒன்றைக் கொண்டு வந்து ப்ரம்மாவின் மூக்கருகே வைத்துப் பார்த்தார். ஒருவேளை லேசாகவாவது மூச்சு விட்டால் கண்ணாடியில் ஆவி படியும் அல்லவா? ஆனால் என்ன ஆச்சரியம். கண்ணாடியிலும் மூச்சுக் காற்று படியும் தடயம் இல்லை. சிறிது நேரம் கழித்து ப்ரம்மாவின் இதயம் மறுபடி துடிக்க ஆரம்பித்தது. ப்ரம்மா இயல்பாக மூச்சு விட ஆரம்பித்தார்.

பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியம் என்று ப்ரம்மாவிடம் கேட்டார். இது இயற்கைக்கு எதிர்மாறாக இருக்கிறதே என்ற சந்தேகம் அந்த ஆங்கிலேயர் மனதில் பிரதானமாக இருந்தது.

ப்ரம்மா சொன்னார். "இமயமலையில் சில வௌவால்கள் இருக்கின்றன. அவை பனிக்காலத்தில் இமயமலையில் உள்ள குகைகளில் தொடர்ந்து சில காலம் அடைந்து கிடக்க நேரிடும். அப்போது பனித்தூக்கம் என்றழைக்கப்படும் உறக்கத்தில் ஆழ்ந்து விடும் அந்த வௌவால்கள் அந்த உறக்க காலத்தில் மூச்சு விடுவதை நிறுத்தி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை விழிப்பது வெளியே போகக் கூடிய அளவு சீதோஷ்ணம் மாறுகையில் தான். அவை மூச்சு விட ஆரம்பிப்பதும் அப்போது தான்.

அதே போல் இமயமலையின் பனிக்கரடிகள் அதிக பனிக்காலத்தில் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று விடுகின்றன. அப்போது அந்தப் பனிக்கரடிகள் உயிரற்ற சடலங்களாகவே காட்சியளிப்பனவாக இருக்கும். அதே போல் சில வகைப் பனிநாய்கள் உறைபனிக்காலங்களில் உணவு கிடைக்காத நிலை ஏற்படும் போது பதுங்குகுழிகளில் மாதக்கணக்கில் உறங்குவனவாக இருக்கின்றன. அப்போது அவை மூச்சு விடுவதில்லை அல்லது நீண்ட இடைவேளைக்கு ஒரு முறை மூச்சு என்று விடுகின்றன். அப்படி அந்த விலங்குகள் கூட மூச்சு விடுவதைச் சில காலம் நிறுத்தி வைக்க முடியும் போது மனிதனால் ஏன் முடியக் கூடாது?"

இமயமலையில் வாழும் விலங்குகளுக்கு அந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இயற்கை அளித்த அந்த வரப்பிரசாதம் அந்த மூச்சு விடாமல் இருக்கும் காலம். ஆனால் மனிதன் விஷயம் அப்படியில்லையல்லவா? ஆனால் உண்மையில் முன்பொரு காலத்தில் லாகூரில் பக்கிரி ஒருவர் மகாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் ஒரு சமாதிக்குள் இருந்து பின் உயிர்த்து வந்தது அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றும் ப்ரம்மா தெரிவித்தார்.

பால் ப்ரண்டன் விசாரித்ததில் அந்தச் செய்தி உண்மை என்று தெரிந்தது. 1837 ஆம் ஆண்டு அந்தப் பக்கிரி உயிரோடு சமாதி ஆக ஒப்புக் கொண்டார். லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங், சர் க்ளாட் வேட், டாக்டர் ஹோனிக்பெர்ஜர் போன்ற முக்கியமான சாட்சிகள் மற்றும் பலர் முன்னிலையில் உயிரோடு சமாதி செய்யப்பட்டார். மஹாராஜா ரஞ்சித் சிங் ஏமாற்று வேலை எதுவும் இதில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சீக்கிய சிப்பாய்கள்கள் மாறி மாறி ஒருவராவது அந்த சமாதியில் இரவும் பகலும் காவல் காக்குமாறு பார்த்துக் கொண்டார். நாற்பது நாட்கள் கழிந்து சமாதியைத் தோண்டிய போது அந்தப் பக்கிரி உயிரோடு வெளிவந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது சில ஆதாரபூர்வ களஞ்சியங்களில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. முழு விவரங்கள் கல்கத்தாவில் உள்ள வரலாற்றுக் களஞ்சியத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது.

பால் ப்ரண்டனின் தேடல் காட்டிய மற்ற மனிதர்கள் இன்னும் வித்தியாசமான சக்திகள் பெற்றிருந்தார்கள். அதை அடுத்த பதிவில் பார்ப்போமா?

(தொடரும்)

- என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்

Wednesday, May 11, 2011

உண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?
(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1)

"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இருக்கிறார்களா?"

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவஞானி ஒரு இந்தியரிடம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இப்படிக் கேட்டார். இங்கிலாந்தில் தற்செயலாகச் சந்தித்த அந்த இந்தியரிடம் ஏதோ ஒரு வசீகர சக்தியால் ஈர்க்கப்பட்ட பால் ப்ரண்டன் அவரிடம் பேச்சுக் கொடுக்க பேச்சு இந்தியா பக்கமும், இந்தியாவின் யோகிகளைப் பற்றியும் திரும்பியது. இந்திய யோகிகளிடம் இருந்த மகா சக்திகளைக் கேட்டு பிரமித்த பால் ப்ரண்டன் அப்போது தான் இந்தக் கேள்வியை ஆவலுடன் கேட்டார்.

"இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஏனென்றால் யோகிகளாகத் தெரிபவர்களில் பலர் போலிகளாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. மலிந்திருக்கும் போலிகளின் கூட்டத்தின் மத்தியில் உண்மையான யோகிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. உண்மையான யோகிகள் எத்தனை சக்திகள் பெற்றிருந்தாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவற்றை உபயோகிப்பதில்லை. பணமும், புகழும் அவர்களுக்கு பொருட்டல்லாததால் அவர்கள் மற்றவர்களைக் கவர எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அவர்களுக்கு ஆத்ம ஞானமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் யோக சக்தியை முறைப்படியான பயிற்சியில் அடைந்த யோகிகளல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பல அபூர்வ சக்திகள் இருந்தாலும் உண்மையான யோகிகள் என்று கூறிவிட முடியாது....." என்றார் அந்த இந்தியர்.

அந்த இந்தியர், இந்தியாவின் யோகிகளைப் பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு ஆவல் அதிகமான பால் ப்ரண்டன் அப்படிப்பட்ட உண்மையான ஒரு யோகியையாவது சந்தித்து விட வேண்டும் என்று பேராவலுடன் உடனே இந்தியாவுக்கு வந்தார்.இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில்.அந்த இந்தியர் சொன்னது போல் பல அபூர்வமான சக்தி படைத்தவர்களை பால் ப்ரண்டன் இந்தியாவில் சந்தித்தார். அவர் தனது இந்திய ஆன்மீகப் பயண அனுபவங்களை இரகசிய இந்தியாவில் ஒரு தேடல் (A search in secret India) என்ற நூலில் 1934 ஆம் ஆண்டில் சுவைபட எழுதியுள்ளார். அவரது இந்திய அனுபவங்களில் சுவாரசியமான சிலவற்றை இங்கே பார்ப்போமா?

உண்மையான யோகியைத் தேடி பம்பாயில் வந்திறங்கிய பால் ப்ரண்டன் முதலில் கண்ட அபூர்வ சக்தி மனிதர் இந்தியரல்ல. எகிப்தைச் சேர்ந்த ஒரு மேஜிக் நிபுணர். பால் ப்ரண்டன் தங்கியிருந்த ஓட்டலிலேயே தங்கி இருந்தார் அவர். அவர் சக்திகளைப் பற்றி ஓட்டலில் பலரும் உயர்வாகச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அவரைச் சந்தித்தார். அந்த எகிப்தியர் பால் ப்ரண்டனிடம் சொன்னார். "ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை பென்சிலால் எழுதிக் கொள்ளுங்கள்"

பால் ப்ரண்டன் அப்படியே ஒரு கேள்வியை ஒரு வெள்ளைத்தாளில் எழுதினார்.

"அந்தத் தாளை நான்காக மடியுங்கள்....". பால் ப்ரண்டன் மடித்தார். மேலும் நான்கு நான்காய் முடிகிற வரை மடித்து வைத்துக் கொள்ளச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே முடிகிற வரை மடித்தார். கடைசியில் அந்தத் தாளையும், பென்சிலையும் சேர்ந்தாற்போல கெட்டியாக வலது கையில் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். அப்படியே செய்தார் பால் ப்ரண்டன்.

பின் சிறிது நேரம் அந்த எகிப்திய மேஜிக் நிபுணர் கண்களை மூடிக்கொண்டு ஒருவித தியான நிலைக்குச் சென்றார். சில நிமிடங்கள் கழிந்து கண்களைத் திறந்த அவர் "நீங்கள் அந்தத் தாளில் எழுதிய கேள்வி இது தானே?" என்று கேட்டு அவர் எழுதிய கேள்வியை அப்படியே சொன்னார். பால் ப்ரண்டன் திகைத்துப் போனார்.

அந்த மேஜிக் நிபுணர் அந்தத் தாளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அதைப் பிரித்துப் பார்த்தார். அந்தக் கேள்வியின் கீழ் அதற்கான பதில் பென்சிலில் எழுதியிருந்தது. பால் ப்ரண்டனிற்கு பிரமிப்பாக இருந்தது. இது என்ன கண்கட்டு வித்தையோ என்று நினைத்த அவரை மேலும் சில கேள்விகள் எழுதிக் கொள்ளச் சொன்னார் அந்த எகிப்தியர். பால் ப்ரண்டன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், பெயர்கள், தேதிகள் குறித்து மிகவும் கடினமான கேள்விகளாகத் தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டார். அந்தத் தாளையும் மடித்து முன்பை விட இறுக்கமாக பென்சிலோடு பிடித்துக் கொண்டார். ஆனால் அவை எல்லாவற்றையும் அந்த எகிப்தியர் சொன்னதோடு அந்தத் தாளைப் பிரித்துப் பார்த்த போது அந்தக் கேள்விகளின் கீழே பென்சிலால் சரியான பதில்கள் எழுதப்பட்டிருந்தன.

பிரிக்க முடியாதபடி தன் கையிலேயே மிக இறுக்கமாக மடித்துப் பிடித்து வைத்துக் கொண்ட தாளில் உள்ள கேள்விகள் அந்த எகிப்தியரால் எப்படி அறியப்பட்டன என்பதும் எந்த விதத்திலும் தன் வாழ்க்கையில் நெருங்கியவர்கள் கூட அறிந்திராத அந்தப் பதில்கள் எப்படி அறியப்பட்டன என்பதும் பென்சிலை மடித்து வைத்திருந்த தாளுடன் இறுக்கிப் பிடித்திருந்த போதும் அந்த பென்சிலால் அந்தப் பதில்கள் அந்தத் தாளில் எப்படி எழுதப்பட முடியும் என்பதும் பால் ப்ரண்டனுக்குப் புரியாத புதிராக இருந்தது.

வியப்பின் எல்லைக்கே போன பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்ட போது அந்த எகிப்தியர் அந்த இரகசியத்தைச் சொல்ல மறுத்து விட்டார். பால் ப்ரண்டன் வற்புறுத்திய போது "இந்த இரகசிய வித்தையை வெறும் ஆர்வமுடையவர்களுக்கு சொல்லித் தர முடியாது. நீங்கள் என் உதவியாளராக மாறி என்னுடனேயே வருவதாக இருந்தால் மட்டுமே நான் உங்களுக்கு இந்த இரகசிய வித்தையைக் கற்றுத் தர முடியும்." என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்திலிருந்து தான் இந்தியா வந்த உண்மையான காரணத்தை அந்த எகிப்தியரிடம் சொல்லிப் பின் வாங்கினார்.

தன் தேடலில் அவர் கண்ட இன்னொரு சுவாரசியமான நபர் சென்னைக்கு அருகே இருந்த ஒரு ஹத யோகி. அவரது அபூர்வ சக்திகள் பற்றி அடுத்த பதிவில் காண்போமா?

(தொடரும்)
நன்றி: கோவை இமேஜஸ்

Friday, May 6, 2011

ஆசையிலிருந்து அழிவு வரை ...
கீதை காட்டும் பாதை 8

ஆசையிலிருந்து அழிவு வரை ...


நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.

”புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது. மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்”

எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உயர்விற்கும் அழிவிற்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.

விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.

எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும். எனவே கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கிறது.

புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம் கூறுகிறார். இங்கு விழிப்புணர்வு தான் விளக்காக உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள் நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

விழிப்புணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். “புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது.” இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்.


கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். “சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன”

இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். ‘ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே’ என்று கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.

சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார். “மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்”.

ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம் ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.

சில சமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்திற்கும், அழிவிற்கும் மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.

மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.

எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது. கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள் நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.

பாதை நீளும்.....

- என்.கணேசன்
- நன்றி: விகடன்

Monday, May 2, 2011

அன்றும் இன்றும் ஆறு தவறுகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus Tullius Cicero) (கி.மு106 –43) ஒரு மிகச்சிறந்த பேச்சாளர், வக்கீல், அரசியலறிஞர், எழுத்தாளர், கவிஞர், தத்துவஞானி மற்றும் விமரிசகர். அவர் அன்றைய மனிதர்களின் ஆறு தவறுகளை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது என்பது வருத்தத்திற்குரியது தான்.

சிசரோ அவருடைய கூர்மையான அறிவால் அன்று கண்டுணர்ந்து இன்றும் நம்மிடையே இருக்கின்ற அந்த தவறுகள் இவை தான்:

1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:
இது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போலத் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும் போது மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல நம் வளர்ச்சியும் இந்த வழியில் நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும், சக்தியும் முழுவதும் செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி வரும். மேலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ நீண்ட காலத்திற்கு முடிகிற விஷயம் அல்ல. எந்தத் துறையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது புத்திசாலித்தனம்.


2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது:
ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர் விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப்போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு எதுவும் மாறி விடப் போவதில்லை. மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு மனம் இல்லா விட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே இருந்து விடும்.


3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:
நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று இருக்கும் எத்தனையோ அறிவியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும் கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்திருக்கின்றன. சிசரோவின் காலத்தில் ரேடியோ, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண சமாச்சாரங்கள் ஆகி விட முடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம் நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது என்று நினைப்பது கற்பனையான கர்வமாகவும், அறிவின் குறைபாடாகவே தான் இருந்து விட முடியும்.

4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் தள்ளி வைக்க முடியாதது:
உலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. சமீபத்திய ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வத்தை இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம். மனித வாழ்க்கையின் நிலைமை அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கையில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை, இவன் என்னை மதிக்கவில்லை, என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை, என்னை அனாவசியமாக சிலர் விமரிசிக்கிறார்கள், சொன்ன நேரத்தில் வேலை நடக்கவில்லை என்ற சில்லறை விஷயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே அல்லவா? நான் பெரியவன், அதை எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும், என்னைக் கவனிக்க வேண்டும், என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்களை ஒதுக்கி வைக்க முடியாதது குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்னைகள் இல்லா விட்டாலும் இந்த மனோபாவம் இருந்து விட்டால் அது போகும் சுகவாழ்வையும் நரகமாக மாற்றுவதற்கு.


5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:
வாழ்க்கையில் சௌகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ள மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது. மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின் பக்குவத்தை மட்டுமே பொருத்தது. சேர்த்த செல்வமும், அடைந்த புகழும் அடுத்தவர்கள் கண்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை. கல்வியும் பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும் பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது. சிசரோ அன்று ரோமானியர்களிடம் கண்ட இந்தக் குறை ரோமாபுரியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பதை வரலாறு சொல்கிறது. எனவே வீழ்ச்சியை விரும்பாத மனிதன் எல்லா விதங்களிலும் மனதைப் பண்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.


6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது:
’நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை’ என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே நினைக்கவும், நடந்து கொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக் குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது கிட்டத் தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத் திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக உலகம் இருக்க முடியாது, இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள் நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால் அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக் கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்