சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 28, 2018

இருவேறு உலகம் – 89


மாணிக்கமும், சங்கரமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மாணிக்கம் அமைதியாக மனோகரிடம் சொன்னார். “ஹரிணியும் க்ரிஷும் காதலிக்கிறாங்க போல தெரியிது”

“உங்க மகனும் ஹரிணியைக் காதலிக்கிறானே?” மனோகர் சொல்ல மாணிக்கம் வருத்தத்துடன் தலையசைத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.

மனோகர் சொன்னான். “ஹரிணியோட அம்மா கிரிஜாக்கு க்ரிஷை விட உங்க மகன் மேல் தான் நல்ல அபிப்பிராயம். இப்போ நீங்க முதலமைச்சர். நீங்க போய் பொண்ணு கேட்டா அந்த அம்மாவுக்கு மறுக்க முடியாது”

எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறானே என்று வியந்த சங்கரமணி சொன்னார். “ஆனா மணீஷ் கல்யாணம் பண்ணிக்கப் போறது அந்தம்மாவை அல்லவே. அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே”

மனோகர் அந்த நகைச்சுவையை ரசிக்காமல் அவர் பக்கம் திரும்பாமல் மாணிக்கத்திடமே பேசினான். “நடுத்தர குடும்பங்கள்ல தான் இப்பவும் பாசம், கவுரவம், விட்டுக்கொடுக்கிற தன்மை எல்லாம் இருக்கு. அந்தம்மாவுக்கு ஹரிணி ஒரே பொண்ணு. அந்தம்மா உறுதியா சொன்னா அந்தப் பொண்ணு கேட்டுக்க வாய்ப்பிருக்கு. உங்க மகனும் அவளோட நண்பன் தான்….. பிடிக்காதவன் அல்ல…..”

நண்பன் என்கிற ஸ்தானத்திலிருந்து காதலன் என்கிற ஸ்தானத்திற்கான உயரம் சிலர் விஷயத்தில் சிறிதாக இருக்கலாம். சிலர் விஷயத்தில் தாண்ட முடியாத உயரமாகவும் இருக்கலாம். இந்த இரண்டாம் ரகத்தில் தாண்ட முயற்சி செய்வது நண்பன் என்ற ஸ்தானத்தையும் தவற வைத்து விடலாம். அப்படி அதையும் இழக்க மணீஷ் தயாராக இருப்பான் என்று மாணிக்கத்துக்குத் தோன்றவில்லை.

மனோகர் எழுந்தான். “எதற்கும் முயற்சி செய்து பாருங்கள். அவசரம்….”

அவசரம் என்றால் உத்தரவு என்று அர்த்தம். மாணிக்கம் தலையசைத்தார். அவன் போய் விட்டான். சங்கரமணி கேட்டார். “இவனுக்கென்ன மணீஷ் மேல இப்படி திடீர் அக்கறை?”

“அவன் கவனம் எல்லாம் க்ரிஷ் தான். க்ரிஷ் கிட்ட இருந்து ஹரிணியை விலக்கணும்னு ஏனோ நினைக்கிறான். அவ்வளவு தான்…..”

சங்கரமணி சொன்னார். “அவன் சொன்னபடி நடந்தா உன் பையன் சந்தோஷமா இருப்பான்…… இப்ப அவன் முகத்தைப் பார்க்கவே சகிக்கலை…..”


க்ரிஷ் ஹரிணி கைவிரலில் மோதிரம் போடுவது போல் காட்சியைக் கற்பனை செய்து அனுப்பினான். அவன் அனுப்பும் தகவலைப் பெறுவதில் கோட்டை விட்டு விடக்கூடாது என்று தீர்மானமாக அமைதியாகக் காத்திருந்த ஹரிணி க்ரிஷ் கையைப் பிடித்து விரலைத் தடவுவது போல் மட்டுமே உணர்ந்தாள். உண்மையில் அவன் அனுப்பிய முழுக்காட்சியைச் சொன்ன போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை….. “க்ரிஷ் முக்கால் வாசி எனக்கு வந்து சேர்ந்திடுச்சேடா… நாம இந்த பரிசோதனைல ஜெயிச்சோட்டோம்…... இதுக்கு நீ காரணமா, நான் காரணமா?”

“ரெண்டு பேருமே…. நமக்குள்ளே இருக்கும் அலைவரிசைகள் தடைப்படாமல் இருக்கு போல…..” என்றான் க்ரிஷ். கூடவே சொன்னான். “ஆனா இது போதாது. நாம ஃபீல் பண்ற விஷயத்தை சரியா ஃபீல் பண்றோம். ஆனா அனுப்பற தகவலை சரியா வாங்கிக்கலை. உன் திருக்குறள் எனக்கு வந்து சேரலை…… என் மோதிரம் உனக்கு வந்து சேரலை…..”

“உண்மை தான். ஆனா ஆரம்பத்துக்கு நாம நிறையவே முன்னேறிட்டோம்…. சரி நானும் வேற சில சமூக சேவகர்களும் சேர்ந்து  நாளைக்கு ஒரு முதியோர் இல்லத்துல ஒரு சிறப்பு நிகழ்ச்சி வச்சிருக்கோம். முழு நாள் அங்கேயே இருக்க வேண்டி வரும்…. நாளை மறுநாள் நீ அமெரிக்கா போறாய். அதனால நீ வந்தவுடனே நம்ம பரிசோதனையைத் தொடருவோம்…. ஜாக்கிரதையாய் போய்ட்டு வாடா…..”

க்ரிஷ் அன்றிரவும் மறு நாள் முழுவதும் ஸ்டீபன் தாம்சனின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்தான். அவரைச் சந்திக்கும் முன் அவர் துறையில் எதிரிக்கு ஆர்வம் ஏற்படுத்திய அம்சங்கள், அந்த நூலைத் தவிர வேறு என்னவெல்லாம் என்பதை யூகிக்க முயன்றான். அவரைச் சந்தித்துப் பேசும் முன் அவற்றை அவன் தெளிவாக அறிந்திருந்தால் நல்லது என்று தோன்றியது. ஆனால் உளவியலில் ஸ்டீபன் தாம்சன் கிட்டத்தட்ட எல்லா முக்கியங்களையும் தொட்டிருந்ததால் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் ஏராளமாக இருந்தன. அவருடைய ஆளுமை அவனைப் பிரமிக்க வைத்தது…. இதில் எதில் எல்லாம் எதிரிக்கும் ஈடுபாடு இருந்திருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தான்……  


மாணிக்கம் மணீஷிடம் மனோகர் சொன்னதைத் தெரிவித்த போது அவனுடைய வெறுமையான முகத்தில் எந்த மின்னலும் வெட்டவில்லை.  “அப்பா ஹரிணி யார் பேச்சையும் கேட்கற ரகம் இல்லை. அவள் மனதுக்குத் தோணினதைத் தான் செய்வாள்…” என்று சலிப்பான குரலில் சொன்னான்.

“ஆனாலும் முயற்சி செஞ்சு பார்க்க அவன் சொல்றான்…..”

“ஆனா எனக்குத் தெரிஞ்சு முயற்சி செய்யற மாதிரி சொல்லாதீங்க. அவ என்னை நட்பு லிஸ்டில் இருந்தும் எடுத்துடுவாள்”

“புரியுது” என்று சுருக்கமாகச் சொல்லி மகன் அறையில் இருந்து வெளியே வந்த மாணிக்கத்திற்கு மனம் வலித்தது. க்ரிஷ் உயிரோடு திரும்பி வந்த நாளில் இருந்து ஒரு முறை கூட அவர் மகன் புன்னகைக்கவில்லை….. சிரிக்கவில்லை….. எதையும் ரசிக்கவில்லை….. உயிரோடு பிணமாக உலா வருகிறான்……

எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் முதலமைச்சர் கார் வீட்டு வாசலில் நின்ற போது கிரிஜாவுக்கு பரபரப்பு தாங்கவில்லை. ஹரிணி ஏதோ முதியோர் இல்லம் போயிருக்கிறாள்….. அவரை எப்படி வரவேற்பது, உபசரிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து எட்டிப்பார்த்த தலைகளைப் பார்த்த போது பெருமிதம் தாங்கவில்லை.

“வாங்க…. வாங்க…… உட்காருங்க……” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். மாணிக்கத்துடன் சங்கரமணி மட்டுமே உள்ளே நுழைந்தார். காவல் அதிகாரிகள் மரியாதையாக வாசலுக்கு வெளியே நின்று கொண்டார்கள்.

மாணிக்கமும் சங்கரமணியும் சோபாவில் அமர்ந்து கொண்டார்கள். கிரிஜாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “ஹரிணி வெளியே போயிருக்கா…..” என்று  சொன்னாள்.

“பரவாயில்லை. நல்லது தான். நான் இங்கே வந்தது மணீஷுக்கும் தெரியாது” என்று மாணிக்கம் சொன்னார்.

என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் கிரிஜா குழப்பத்துடன் பார்த்த போது மாணிக்கம் சங்கரமணியைக் காட்டி சொன்னார். “என் மாமா ரொம்ப நாளா மணீஷுக்கு கல்யாணம் செய்து வைன்னு சொல்லிகிட்டிருக்கார். இப்ப எனக்கும் தோண ஆரம்பிச்சிருக்கு. நல்ல பொண்ணா பார்க்கணும்னு யோசிச்சப்ப எனக்கு ஹரிணி தான் ஞாபகத்துக்கு வந்தாள்…..”

முதலமைச்சர் வீட்டு சம்பந்தம் தேடி வருகிறது என்று நினைக்கையில் கிரிஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. அதே வேளையில் ஹரிணி ஒத்துக் கொள்ள மாட்டாள் என்பதிலும் அவளுக்குச் சந்தேகம் இல்லை. ஏக காலத்தில் சந்தோஷமாகவும், வருத்தமாகவும் அவள் உணர்ந்தாள்.

அதைக் கவனித்தாலும் காட்டிக் கொள்ளாமல் மாணிக்கம் தொடர்ந்தார். “அவங்க ரெண்டு பேரும் இப்ப நல்ல ஃப்ரண்ட்ஸா இருக்காங்க. அவங்க நட்புல தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். உங்க பொண்ணு கிட்ட பேசிப் பாருங்க. நானும் என் பையன் கிட்ட பேசிப் பார்க்கிறேன். அவங்களுக்கு உடன்பாடு இல்லைன்னா விட்டுடுவோம்…. ஓகேன்னா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வோம்…..”

அவர் முடித்தவுடன் சங்கரமணி மருமகனிடம் சொன்னார். “ஹரிணியை எனக்கு நல்லா தெரியும். நல்ல பொண்ணு. அம்மா சொன்னதை அவள் தட்டற ரகம் அல்ல….”

கிரிஜாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவர் இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கார். முதலமைச்சரோ ரொம்ப கண்ணியமாய் பிடிச்சா சம்பந்தியாகலாம்னு சொல்கிறார். ஹரிணி கேட்கணுமே…… தயக்கத்துடன் சொன்னாள். “நான் அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்…..”

தலையசைத்த இருவரும் எழுந்தனர். கிரிஜா வருத்தத்துடன் சொன்னாள். “முதல் தடவை வந்திருக்கீங்க. ஒன்னுமே சாப்பிடாம போறீங்களே…..”

சங்கரமணி சொன்னார். “நல்ல செய்தியா சொல்லுங்க. விருந்து சாப்பாட்டுக்கே வந்துடறோம்….”

அவர்கள் போய் விட்டார்கள். போலீஸ் பாதுகாப்பு, பரிவாரம் சூழ அவர்கள் போன பிறகு அக்கம் பக்கத்தினர் ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு வந்து முதலமைச்சர் வந்து விட்டுப் போன காரணம் கேட்டார்கள். சம்பந்தம் பேச வந்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லிப் பெருமைப்பட முடியாத வருத்தம் கிரிஜாவுக்கு வந்தது.

“அவர் பையனும், என் பொண்ணும் ஒரே காலேஜ்ல படிக்கறாங்க இல்லையா. ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ். நீங்க மணீஷை இங்கே பல தடவை பார்த்திருப்பீங்களே. பல தடவை ஹரிணி அவங்கள இங்கே வரக் கூப்பிட்டிருக்கா. இன்னைக்கு ஏதோ தோணி வந்திருக்காங்க. இன்னைக்குன்னு பார்த்து இவ இங்கே இல்லை…..”

அவர்கள் முகத்தில் தெரிந்த பிரமிப்பையும் பொறாமையையும் முழுவதுமாய் ரசிக்க விடாமல் தடுத்தது மகளின் போக்கு. சனியன் ஒத்துக்க மாட்டாளே….. அந்த க்ரிஷைத் தானே காதலிக்கிறா….. இப்போதைய அவர்கள் நிலைமைக்கு க்ரிஷும் அதிகம் தான். மந்திரியின் மகன். எம்.பியின் தம்பி…… ஆனாலும் முதலமைச்சர் மகனுக்கு இணையாகுமா? மணீஷ் அளவு க்ரிஷ் மதிக்கவும் மாட்டானே? பல யோசனைகள் மனதைத் தாக்க, கிரிஜா அன்று ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு சிந்திக்க ஆரம்பித்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்





Monday, June 25, 2018

சத்ரபதி – 26



தாதாஜி கொண்டதேவிடம் சுயராஜ்ஜியம் பற்றியோ தன் திட்டங்கள் பற்றியோ சிவாஜி பிறகு பேசவில்லை. அப்படி அன்றிரவு பேசினான் என்பதற்கான சுவடுகள் கூட அவனிடம் தெரியவில்லை. அப்படி எதுவுமே நடக்காதது போல் அவன் நடந்து கொண்டான். ஆனால் தன் மாணவனின் ஆழம் தெரிந்த தாதாஜி கொண்டதேவ் அவன் ஏதோ திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறான், சரியான சமயத்திற்காகக் காத்திருக்கிறான் என்பதை மட்டும் புரிந்து கொண்டார். அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அவர் காட்டவில்லை. தெரிந்து கொண்டால் அவர் தர்மப்படி ஷாஹாஜிக்கும், ஆதில்ஷாவுக்கும் தெரிவிக்க வேண்டும். அது சிவாஜியைப் பாதிக்கும். தெரியாத வரை அவர் மனசாட்சிக்கும் நிம்மதி. சிவாஜிக்கும் அனுகூலம்….

காலம் உருண்டோடியது. சிவாஜிக்கு ஒன்றன்பின் ஒன்றாக இரு திருமணங்கள் நடந்தன. சாய்பாய் என்ற பெண்ணை ஜீஜாபாய் தேர்ந்தெடுத்து அந்தத் திருமணம் பூனாவிலும், சொய்ராபாய் என்ற பெண்ணை ஷாஹாஜி தேர்ந்தெடுத்து அந்தத் திருமணம் பீஜாப்பூரிலும் நடந்தது. தாதாஜி கொண்டதேவ் கட்டிய மாளிகையில் சிவாஜி சகல சௌகரியங்களுடனும் வாழ ஆரம்பித்தான்.

தாதாஜி கொண்டதேவ் தன் வாழ்க்கையின் இறுதி நெருங்குவதை உணர்ந்து எல்லா நிர்வாக வேலைகளிலும் சிவாஜியை ஈடுபடுத்தினார். சிவாஜி அவரிடமிருந்து நிர்வாக சூட்சுமங்களை நிறையவே கற்றான். தாதாஜி கொண்டதேவ் வரிவசூலிப்பதில் காலத்திற்கேற்றாற் போல விதிகளை இறுக்கியும் தளர்த்தியும் தங்கள் குடிமக்கள் அதிகமாய் கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டார். வரி கொடுத்த பிறகு அந்தக் குடிமகனுக்கு என்ன மிஞ்சுகிறது, மிஞ்சுவது அவனுடைய அடிப்படை வசதி வாழ்க்கைக்குப் போதுமா என்று கவனிக்கும் பரந்த பார்வை அவருக்கு இருந்தது. அது அருகிலிருந்த பிராந்தியங்களில் இருக்கவில்லை. விளைச்சலில் இத்தனை பங்கு என்றால் அந்த அளவு கொடுத்தேயாக வேண்டும். கொடுக்கா விட்டால் தண்டனை, அபராதம் எல்லாம் இருந்தன.  மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்பவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு சலுகைகள் அதிகம் கொடுத்தார். மலைவாழ் குடியானவனை ஊக்குவிக்கா விட்டால் அவன் பழைய சோம்பல் நிலைக்கோ, திருட்டு வழிக்கோ போய்விடக்கூடும் என்ற கவலை அவருக்கிருந்தது.

நிர்வாகத்தின் மூலமாக ஆக வேண்டிய காரியங்களைச் செய்ய அவர் காலதாமதம் செய்ததே இல்லை. கோட்டைகளை அவ்வப்போது பழுதுபார்த்து நிவர்த்தி செய்து வலிமையான நிலையிலேயே வைத்திருப்பதற்கு அவர் அதிக முக்கியத்துவம் தந்தார். ஆபத்து சமயங்களில் நம்மைக் காப்பதும், வீழ்த்துவதும் அது தான் என்று சொல்வார். இந்தத் தொலைநோக்கும் அடுத்திருந்த பிராந்தியங்களில் இருக்கவில்லை. வரிவசூலில் கறாராக இருப்பவர்கள் நிர்வாகச் செலவினங்கள் செய்வதில் கஞ்சர்களாக இருந்தார்கள். பழுது பார்க்கும் வேலைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்கிற நிலை இருந்தது. எல்லாக் கோட்டைகளும் பீஜாப்பூர் சுல்தானின் ஆளுமைக்கு உட்பட்டே இருந்ததால் அதற்கு அவர்கள் பீஜாப்பூர் அரசிடமிருந்தே நிதி எதிர்பார்த்தார்கள். மனுக்கள் அனுப்புவதும், பதில் அனுப்புவதுமாகவே காலம் நிறைய வீணானது.

கொள்ளையர்களையும், திருடர்களையும் தங்கள் எல்லைக்கு நுழைவதைத் தடுக்க முக்கிய இடங்களில் முரட்டுக் காவலர்களை நிறுத்தினார். தண்டனைகளில் கண்டிப்பாக இருந்தார். உழைப்பை ஊக்கப்படுத்தினார். திறமைகளுக்குப் பரிசளித்தார். இவையெல்லாம் தக்காணப் பீடபூமியில் அதிகம் காண முடியாதவை. பல இடங்களுக்குச் சென்று வரும் யாத்திரிகர்கள் இந்த நிர்வாகத்தைப் புகழ்ந்தார்கள். சுற்றும் முற்றும் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வந்த சிவாஜிக்கும் தாதாஜி கொண்டதேவின் நிர்வாக முறைகள் ஒப்பற்றவையாகத் தோன்றின. கணக்கு வழக்குகளிலும் அவர் கறாராகவும், நேர்மையாகவும் இருந்தார். ஷாஹாஜிக்கு அவர் அனுப்பும் கணக்குகளில் சிறு பிழையைக்கூட சிவாஜியால் காண முடிந்ததில்லை. கண்டிப்பாக அவன் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறான் என்பதால் தன் நிர்வாகத்திற்கான முன்மாதிரியை அவர் அருகிலிருந்தே அவன் கற்றான்.

ஷாஹாஜி பீஜாப்பூரிலிருந்து கர்நாடகத்திற்குச் சென்று விட்டார். கர்நாடகத்தில் கெம்பே கவுடாவை அடக்க அவரும் வேறொரு படைத்தலைவனும் போனார்கள். பீஜாப்பூர் அரசுக்கு தஞ்சை நாயக்கன்மார்களிடமும் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் பீஜாப்பூர் சுல்தானின் கவனம் தெற்கிலேயே இருந்தது. வடக்கில் முகலாயர்களிடம் முன்பே ஒப்பந்தம் ஏற்பட்டு சமாதானம் ஆகி இருந்ததால் வடக்கே அவர் பயமில்லாமல் அலட்சியமாகவே இருந்தார்.

சிவாஜி முதலடி எடுத்து வைக்க இதுவே சிறந்த தருணம் என்று முடிவு செய்தான். இது போன்ற புரட்சிகரமான விஷயங்களை அவர்கள் தாதாஜி கொண்டதேவ் காதுபடும்படி பேசுவதில்லை என்று முன்பே முடிவெடுத்து இருந்ததால் நண்பர்களை மலைப்பிரதேசத்திற்கு அழைத்துப் போய் சிவாஜி பேசினான். “நாம் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது நண்பர்களே!”

அவர்கள் உற்சாகமடைந்தார்கள். ரோஹிதீஸ்வரர் கோயிலில் சபதம் எடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் சிவாஜி அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து வந்தான். ”அங்கு போய் அந்தக் கோட்டைத் தகவல்களைப் பெற்று வாருங்கள்”, “இங்கு போய் இந்தப் பகுதியின் படைபலத்தை அறிந்து வாருங்கள்” என்றெல்லாம் சொல்வான். அவர்களும் அப்படிச் சென்று வந்து அவனிடம் தகவல்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று கேட்டு வந்ததை வைத்து அவன் எதாவது நடவடிக்கை எடுப்பான் என்று எதிர்பார்த்த போதெல்லாம், “பொறுங்கள் நண்பர்களே, இந்தத் தகவல்கள் நமக்கு மூலதனம். ஆனால் இதை வைத்துச் செயல்பட காலம் கனிந்து விடவில்லை. காலம் கனியாமல் செய்யும் செயல்கள் வியர்த்தமே அதனால் காத்திருப்போம்…..” என்று சொல்வான்.

காத்திருப்பது எல்லாருக்கும் எளிதல்ல. அதுவும் இளைஞர்களுக்கு அது இயலாததே. அவர்கள் அந்த சமயங்களில் உற்சாகம் இழந்து விடுவதுண்டு. அந்த சமயங்களில் “ஒரு வேளை நாம் அந்தப் பகுதியை வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்பான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை உற்சாகத்துடன் சொல்வார்கள். அதைக் கேட்டு அதன் சாதக பாதகங்களை அவன் சொல்லும் போதெல்லாம் அவர்களுக்கு வியப்பாய் இருக்கும். எப்படியெல்லாம் யோசிக்கிறான் என்று பிரமிப்பார்கள். அவர்கள் சொல்லும் கருத்து அருமையாக இருக்குமானால் அதைத் தயக்கமில்லாமல் அவன் பாராட்டுவான். “நான் கூட அந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை” என்று சொல்வான்.

இப்படித்தான் இத்தனை நாட்கள் சென்றிருக்கின்றன. அவன் முதல் முறையாக உண்மையாகவே செயல்படும் நேரம் வந்து விட்டது என்று சொன்னதில் புத்துணர்ச்சி பெற்ற அவர்கள் அவனிடம் கேட்டார்கள். “சொல் சிவாஜி நாம் என்ன செய்யலாம்”

தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து தென்மேற்குப் பகுதியில் தூரத்தில் தெரிந்த டோரணா கோட்டையைக் காட்டி சிவாஜி சொன்னான். “அந்தக் கோட்டையை நாம் நம் வசமாக்கிக் கொள்ளப் போகிறோம்”


டோரணா கோட்டை அப்பகுதியின் பெரும்பாலான கோட்டைகளைப் போலவே பீஜாப்பூர் சுல்தான் வசமிருந்தது.  அந்தப் பகுதியில் அது தான் மிக உயர்ந்த கோட்டை. அங்கு பெரிய படைபலம் இல்லை. கோட்டைத் தலைவனுக்கு அங்கு பெரிய வருமானமும் இல்லை. அவன் தாதாஜி கொண்டதேவ் போல அதைப் பழுது பார்த்தும் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மந்தநிலையிலேயே அங்கு வாழ்க்கையை அவர்கள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

சிவாஜியின் நண்பன் தானாஜி மலுசரே சொன்னான். “அந்தக் கோட்டையில் பெரிய படைபலம் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் அதைப்பிடிக்க நம் படைபலம் போதுமா சிவாஜி?”

”படையா? இங்கு எதுவும் என் அதிகாரத்தில் இல்லை. என் ஆசிரியர் அதிகாரத்தில் தான் இருக்கிறது. அந்தக் கோட்டையைப் பிடிக்க நான் படை அனுப்பச் சொன்னால் அவர் முதலில் என்னை இங்கிருந்து அனுப்பி விடுவார். தவிரவும் இது போன்ற செயல்களில் அவரை எந்த விதத்திலும் நான் சம்பந்தப்படுத்தப் போவதில்லை என்று வாக்களித்திருக்கிறேன்”

“படையில்லாமல் எப்படி?...” இன்னொரு நண்பன் யேசாஜி கங்க் கேட்டான்.

“வாய்ப் பேச்சில் முடியும் வேலைகளுக்கு புத்திசாலிகள் வாளை எடுக்கக்கூடாது நண்பா!” என்று சொல்லி சிவாஜி புன்னகைத்தான்.

“புரிகிறபடிதான் சொல்லேன்” என்று இன்னொரு நண்பன் பாஜி பசல்கர் பொறுமையிழந்து சொன்னான்.

சிவாஜி அவர்களிடம் தன் திட்டத்தைச் சொன்னான். அவர்கள் திகைப்புடன் கேட்டுக் கொண்டார்கள். இறுதியில் தானாஜி மலுசரே கேட்டான். “அந்தக் கோட்டைத்தலைவன் ஒத்துக் கொள்வானா?”

“அது நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சரியான வார்த்தைகளை சரியான விதத்தில் சொன்னீர்களானால் அவன் நம் வழிக்குக் கண்டிப்பாக வருவான்.

”என்ன நாங்கள் சொல்வதா? நீ அங்கே வர மாட்டாயா?” யேசாஜி கங்க் திகைப்புடன் கேட்டான்.

“நான் வருவதானால் கண்டிப்பாக ஆசிரியரிடம் ஆசி பெற்றுத் தான் வர வேண்டும்.  சுயராஜ்ஜியம் நோக்கி நான் எடுத்து வைக்கும் முதல் அடி இது. பொய் சொல்லி ஆசி வாங்குவது சாபத்தை வாங்குவது போல. அதனால் அதையும் நான் விரும்பவில்லை. நான் இங்கே இல்லாமல் போனாலும் அவர் காரணம் கேட்பார். அவரிடம் பொய் சொல்ல என்னால் முடியாது. அதனால் நீங்கள் மூன்று பேர் செல்லுங்கள். நான் சொல்வது போல அங்கே பேசுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்”

என்ன சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவன் யேசாஜி கங்க், தானாஜி மலுசரே, பாஜி பசல்கர் என்ற நண்பர்களை டோரணா கோட்டைக்கு அனுப்பி விட்டு அமைதியாக தன் மாளிகைக்குத் திரும்பினான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Thursday, June 21, 2018

இருவேறு உலகம் – 88


மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை எல்லாம் முழு மனதுடன் முறையாகச் செய்து விட்டு மானசீகமாகவும் உயர் உணர்வு நிலைக்குச் சென்று அந்த நிலையிலேயே அமைதியாகச் சில நிமிடங்கள் க்ரிஷ் தங்கினான். எல்லாவற்றையும் உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்ல மகாசக்தியின் ஒரு அம்சம் என்று தன்னைத் திடமாக நினைக்க கூடுதல் முயற்சி எதுவும் அந்த நிலையில் அவனுக்குத் தேவைப்படவில்லை. அந்த பாவனையிலேயே சிறிது நேரம் இருந்தவன் மெல்ல தன் கவனத்தை எதிரியைப் பார்த்த மனக்காட்சியில் திருப்பினான்.

எதிரியைப் பார்த்த மனக்காட்சியில் எதிரிக்கு முன் பார்த்த பாழடைந்த காளி கோயிலில் இருந்து  க்ரிஷ் தன் மனத்திரைக்குக் காட்சியைக் கொண்டு வந்தான். இருட்டினூடே தெரிந்த ஒரு பாழடைந்த கோயில்..... உள்ளே அரைகுறை வெளிச்சத்தில் கோரமான தெரிந்த பத்ரகாளி சிலை..... உக்கிரமாகத் தெரிந் பத்ரகாளியின் நெருப்பு விழிகள் அசைவு... எட்டு கைகள்...   லக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி, . இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம்.... உடுக்கை சத்தம் ..... தாளலயத்துடன் காளியின் நடனம்....  அவளுடன் சேர்ந்து அண்டசராசரங்களே ஆடுவது போல் உணர்ந்தது... ஒவ்வொரு அசைவிலும் பிரம்மாண்ட அழகைப் பார்த்தது. எல்லாவற்றையும் மறுபடி நுணுக்கமாக உணர்ந்து க்ரிஷ் பார்த்தான். முன்பே பதிவான காணொளி மீண்டும் மறு ஒளிபரப்பு ஆவது போல் தானாகவே காட்சி மனத்திரையில் ஓடியது.  திடீரென்று உடுக்கை சத்தம் நின்று காளி மறுபடியும் சிலையானாள். மயான அமைதி நிலவ ஆரம்பித்தது. தூரத்தில் கோயிலைப் பார்த்துக் கொண்டிருந்தபடி எதிரி தெரிந்தான்….. இருட்டில் நின்றிருந்தான். க்ரிஷ் தன் முழுக்கவனத்தையும் எதிரியின் மீது வைத்துப் பார்த்தான். எதிரி மெல்ல காளி கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கோயிலை அவன் நெருங்கி உள்ளே நுழையும் முன் திரும்பிப் பார்த்தான்.

முன்பு கண்ட காட்சி இந்த இடத்தில் தான் அறுந்து போனது. ஆனால் இப்போது அந்தக் காட்சியை க்ரிஷ் அறுபட விடவில்லை. உறுதியான மனதுடன் எதிரியை அறிய முயன்றான்….. திரும்பிப் பார்த்த எதிரியின் கண்கள் இருட்டினூடே இப்போது அவனைப் பார்த்தன. அவனும் அந்தக் கண்களையே பார்த்தான். இருவர் விழிகளும் இப்போதே நேராகப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஊடுருவிப் பார்த்துக் கொண்டன. எதிரியின் கண்களில் திகைப்பு தெரிந்தது…. காட்சி அறுந்து போனது…….

பழைய காட்சியைத் தத்ரூபமாய் மீட்டுக் கொண்டு வந்ததோடு கூடுதலாக சில வினாடிகள் அதை நீட்டிக்கவும் முடிந்த திருப்தி க்ரிஷ் மனதில் வந்தது. இனி அந்தக் கண்களை எங்கே பார்த்தாலும் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்…. அந்தக் கண்களின் திகைப்பு என்ன சொல்ல வருகிறது…. உண்மையாகவே அவனும் க்ரிஷைப் பார்த்திருப்பானோ?....


தியம் சாப்பிடும் போது  பத்மாவதி க்ரிஷைக் கேட்டாள். “ஏண்டா ஹரிணி அப்புறமா வரலை….. நீ ஏதாவது அவ மனசு நோகற மாதிரி செய்துட்டியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று க்ரிஷ் சொன்னான். உதய் தம்பிக்கு ஆதரவாய்ச் சொல்வது போல் சொன்னான். “இவன் சொல்றது சரி தான்…. இப்ப எல்லாம் அவள் கட்டுப்பாட்டுல தான் எல்லாம். இல்லாட்டி….” குரலைத் தாழ்த்தி “கன்னம் பழுத்துடும்….. மத்ததெல்லாம் அப்புறம் தான்…..” என்று தம்பி காதில் விழுகிற மாதிரி சொன்னான்.

க்ரிஷ் ஒரு கணம் கட்டுப்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு அருகில் அமர்ந்திருந்த உதயின் தொடையை நன்றாகக் கிள்ளினான். “பாவி” என்று சொல்லி தம்பி கையை உடும்புப் பிடி பிடித்து உதய் இறுக்கினான்.

பத்மாவதி திட்டினாள். “அவன் கையை ஒடிச்சுடாதேடா தடியா. முதல்லயே அவன் நோஞ்சானாய் இருக்கான்…..”

“உன் நோஞ்சான் பையன் என்ன எல்லாம் செஞ்சான்னு தெரியுமா?” என்று உதய் தாயிடம் கேட்க க்ரிஷ் அண்ணனை முறைத்தான். “சரி சரி சொல்லலை….” என்று உதய் சிரித்தான்.

பத்மாவதிக்கு ஹரிணி வராமல் இருந்தது இன்னமும் இளைய மகன் மீது சந்தேகத்தையே தக்க வைத்தது. “எதுக்கும் நான் ஹரிணி கிட்டயே கேட்கறேன்” என்று சொன்னவள் அப்போதே ஹரிணியோடு போனில் பேசினாள். “ஏம்மா நீ இந்தப் பக்கமே மூணு நாளா வரலை…. க்ரிஷ் ஒன்னும் வர வேண்டாம்னு சொல்லலையே…. அலட்சியமா நடந்துக்கலையே…… ஓ அப்படியா….. சரி சரி. உன் வேலைகள் எல்லாம் முடிஞ்ச பின்னாடியே வா. இவன் எதாவது அலட்சியம் பண்ணினான்னா மட்டும் என் கிட்ட சொல்லு. இவனோட புஸ்தகங்கள் எல்லாத்தையும் கொளுத்திடறேன்…… அவன் என்ன கோவிச்சுட்டாலும் சரி….. சிரிக்காதம்மா…… நிஜமா தான் சொல்றேன்….. மனுசங்களுக்கும் மேலயா புஸ்தகங்கள்…..”

அவள் பேசி முடித்து இளைய மகனை ஓரக்கண்ணால் பார்த்தாள். புத்தகங்களைக் கொளுத்தி விடுவேன் என்று சொன்ன தாயை எரித்து விடுவது போல் க்ரிஷ் பார்த்தான். அவனுக்கு ஆட்களை எரிப்பது போலத் தான் புத்தகங்களை எரிப்பதும்…..

க்ரிஷ் பக்கம் திரும்பாமல் மும்முரமாக சாப்பிட ஆரம்பித்த பத்மாவதியைச் சீண்டும் விதமாக உதய் தம்பியிடம் சொன்னான். “பார்த்தியாடா…. மருமகள் மேல பாசமழை பொழியறதை……. அவ வந்து அதிகாரம் பண்றப்ப தெரியும்…..”

”அதிகாரம் பண்ணட்டும்டா எனக்கொரு  பொண்ணு இருந்து அவ அதிகாரம் பண்ற மாதிரி நினைச்சுட்டு போறேன்….. அப்படியாவது என் கிட்ட பேசிகிட்டிருப்பாளே…. பசங்க நீங்க ரெண்டு பேரு இருந்து என்னடா பிரயோஜனம்….. அம்மா கிட்ட பேசறதுக்குக் கூட உங்களுக்கு எங்கடா நேரம்….”

உதய் விடவில்லை. மேலும் சீண்டினான். “இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி டயலாக் பேச நல்லா இருக்கும். அவ வந்து அதிகாரம் பண்றப்ப தெரியும்….. அப்ப பேசறதே வேறயா இருக்கும்….”

“இத்தனை வருஷமாயும் காதலிக்க ஒரு பொண்ணு கூட உனக்கு செட் ஆகாததுக்குக் காரணம் இந்த வாய்த்துடுக்கா தாண்டா இருந்திருக்கணும்……”

உதய் ஒரு கணம் வாயடைத்துப் போய் தாயைப் பார்த்து விட்டு பொய்யான ஆத்திரத்துடன் தாய் காதைப் பிடித்து இழுத்தான்.

“நிம்மதியா சாப்பிடவாவது விடுடா தடியா…” என்று பத்மாவதி திட்ட உதய் பொய்க்கோபத்துடன் சாப்பாட்டுத் தட்டைத் தள்ளி விட்டு எழுந்து போய் விட்டான்.

ஒன்றுமே நடக்காதது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்மாவதியிடன் க்ரிஷ் கேட்டான். “என்னம்மா அவன் கோவிச்சுட்டு சாப்பிடாமயே போறான்…..”

“போய் ஊட்டி விட்டா சாப்பிடுவான்… சோம்பேறி… இப்படி எத்தனை தடவை நடந்திருக்கு” என்று பத்மாவதி புன்னகையுடன் சொன்னாள்.


ர்ம மனிதனுக்கு அது முதல் புதிய அனுபவம். பின்னால் இருந்து யாரோ அவனைப் பார்ப்பது போல் இருந்து அவனும் பின்னால் திரும்பிப் பார்த்த போது இரண்டு கண்களை அவனும் நேரடியாகப் பார்க்க முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்குக் காரணம் அந்த சமயத்தில் அவன் ஒரு அறையில் அமர்ந்திருந்ததும் அவனுக்குப் பின்னால் வெறும் சுவர் மட்டுமே இருந்ததும் தான்…..

அந்தக் கண்கள் க்ரிஷின் கண்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. சில நாள் முன் வரை இந்த அமானுஷ்ய சக்திகளைப் பொருத்த வரை ஒரு கற்றுக்குட்டியாக இருந்த க்ரிஷ் இன்று அவன் கண்களை எங்கிருந்தோ காண முடிவது சாதாரண விஷயமல்ல. இது எப்படி நிகழ்ந்தது என்பது அவனுக்குத் தெரியவில்லை. இத்தனை வேகமாக அவன் அந்த அமானுஷ்ய சக்திகளில் தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. இருந்தும் ஏதோ ஒரு அலைவரிசையில் இந்த அசாதாரண சம்பவம் நடந்திருக்கிறது. …. இது பயப்படும் அளவு பெரிய விஷயமல்ல…. ஆனாலும் இது கூட நடந்திருக்கக் கூடாது. …

மர்ம மனிதனுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. இவன் பெரிதாக என்ன செய்து விடப்போகிறான் என்று அலட்சியமாக இருந்து இப்படி நடக்க அனுமதி தந்திருக்கிறோமே என்று கோபப்பட்டான்.  க்ரிஷ் நிம்மதியாக இருப்பதால் அல்லவா இப்படி ஏதேதோ முயற்சிகளை வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு இருக்கிறான்…. இதில் எல்லாம் ஈடுபடும் அளவுக்கு இனி க்ரிஷ் நிம்மதியாக இருந்து விடக்கூடாது……

அடுத்த ஒரு மணி நேரத்தில் மனோகர் மாணிக்கத்தின் முன்னால் அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் மாணிக்கமும், சங்கரமணியும் இனம் புரியாத ஒருவகை பீதியை உணர்ந்தார்கள். இப்போது என்ன சொல்லப் போகிறானோ?

மனோகர் சொன்னான். “நீங்கள் ஏன் உங்கள் மகன் மணீஷுக்கு ஹரிணியைத் திருமணம் செய்து வைக்கக் கூடாது?”      

(தொடரும்)
என்.கணேசன் 


Monday, June 18, 2018

சத்ரபதி – 25



ம்மை நாமே ஆளும் சுயராஜ்ஜியம் என்பது எட்டமுடியாத கனவாகவே சிவாஜியின் நண்பர்களுக்கு, அவன் வார்த்தைகளில் பெரும் உற்சாகம் பெற்றிருந்த நிலையிலும் தோன்றியது. ஒரு நண்பன் அதை வாய்விட்டே சொன்னான். “சிவாஜி நான் சொல்வதை நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே. கேட்க மிக இனிமையாகத்தான் இருக்கிறது என்றாலும் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதாகவும் கூடத் தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை”

சிவாஜி கேட்டான். “ஏன் முடியாது?”

”செய்து முடிக்க நம்மிடம் என்ன இருக்கிறது?”

தந்தையிடம் “என்னுடன் இறைவன் இருக்கிறான்” என்று கூறிய பதிலை சிவாஜி நண்பனிடம் கூறவில்லை. அமைதியாகச் சொன்னான். “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று சொல்வார்கள். நமக்குப் புல் அல்ல. இந்த சகாயாத்திரி மலையே இருக்கிறது. இந்த மலையை நாம் அறிந்தது போல முகலாயர்களோ, பீஜாப்பூர் படையினரோ அறிய மாட்டார்கள். இங்கு அவர்கள் வந்தால் நாம் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவே அவர்களுக்கு மாதக்கணக்காகும். அப்படிக் கண்டுபிடித்து நெருங்குவதற்குள் நாம் அவர்கள் அறியாமல் வேறிடம் போய்விட முடியும். மறுபடி கண்டுபிடிக்கப் பலகாலம் ஆகும். இப்படி நாம் இந்த மலையில் இருக்கும் வரை அவர்கள் வெல்லவே முடியாது”

இன்னொரு நண்பன் கேட்டான். “நாம் எல்லா நேரங்களிலும் இந்த மலையிலேயே இருந்து விட முடியுமா?”

“முடியாது தான். நமக்காவது நினைக்கும் நேரத்தில் இந்த மலையிலிருந்து இறங்கி நம் இடத்திற்குப் போய்விட முடியும். ஆனால் நம் எதிரிகளுக்கு அதுவும் முடியாததால் அவர்கள் இங்கு எக்காரணத்தைக் கொண்டும் வரவே மாட்டார்கள்.”

”சரி நாம் வசிக்கும் பூனா பிரதேசம்?” ஒரு நண்பன் கேட்டான்.

“அதுவும் நமக்குச் சாதகமான இடத்திலேயே இருக்கிறது. முகலாயர்கள் தலைநகருக்கு அது மிகத் தொலைவான இடம். பீஜாப்பூருக்கும் இது அருகாமை இடமல்ல. நாம் என்ன செய்தாலும் படையெடுத்து அவர்கள் இங்கு வருவதற்கு காலம் அதிகமாகும். இப்போதைக்கு அவர்கள் படையெடுத்து வந்து தாக்கும் அளவுக்கு நாம் பெரிய ஆட்கள் அல்ல.  நமது இப்போதைய இந்த ஆரம்ப நிலையும் இந்த விதத்தில் சாதகமே. அருகில் உள்ள  கோட்டைகளில் கூட பெரிய படை எதுவும் இல்லை. படைபலத்தில் மட்டுமல்ல அறிவிலும் கூட நம்மை பயமுறுத்துகிற கூர்மையை அக்கம் பக்கத்தில் என்னால் பார்க்க முடியவில்லை. இந்த சாதகங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளா விட்டால் நாம் என்றென்றைக்குமே அடிமையாக இருக்க வேண்டியவர்கள் தான்…”

அவர்களுக்கு அவன் சொல்வதை எல்லாம் யோசிக்கையில் சரி என்றே தோன்றியது. அவர்கள் கண்களின் அக்னியைக் குறைத்திருந்த சந்தேக மேகங்கள் விலகி மறுபடி அக்னி ஜொலித்தது. சிவாஜி சொன்னான். “தயக்கத்துடனேயே இருப்பவர்கள் தாழ்ந்த நிலைகளிலேயே தங்கி விடுகிறார்கள். சிந்தித்து தயார்ப்படுத்திக் கொண்டு முன்னேறுபவனுக்கே விதி கூட சாதகமாகச் செயல்படுகிறது. நம்முடைய எல்லாப் பற்றாக்குறைகளுக்கும் அடிப்படை மனப்பற்றாக்குறையே. அதை இன்று நாம் விட்டொழிக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?”

அவன் வார்த்தைகளால் எழுச்சி பெற்ற இதயங்களுடன் அவர்கள் சொன்னார்கள். “என்ன செய்ய வேண்டுமென்று சொல் சிவாஜி. நாங்கள் தயார்”

அருகிலிருந்த ரோஹிதேஸ்வரர் கோயிலிற்கு சிவாஜி அவர்களை அழைத்துச் சென்றான். அந்த மலைப்பகுதிச் சிறுகோயிலில் சிவலிங்கம் இருந்தது. அதன் முன் நின்று சிவாஜி தீப்பிழம்பாய் சொன்னான். “இறைவன் ஆசி இருந்து மனிதன் முழு மனதுடன் இறங்கினால் முடியாதது எதுவுமில்லை.  வாருங்கள் இறைவனை வணங்கி சபதம் எடுப்போம்….”

ரோஹிதீஸ்வரரை  வணங்கி எழுந்த சிவாஜி தன் இடுப்பில் இருந்த குறுவாளை எடுத்துத் தன் கட்டை விரலைக் கீறி சிவலிங்கத்தை இரத்தத்தால் நனைத்தபடி சபதம் செய்தான். ”சுயராஜ்ஜியமே எனது குறிக்கோள். அதை அமைக்கும் வரை நான் ஓய மாட்டேன். இறைவா உன் மேல் ஆணை!”

அவன் நண்பர்களும் அப்படியே சபதம் செய்தார்கள். பாரத தேசத்தின் அந்த மலைக்கோயிலில் ஒரு பெருங்கனவுக்கான விதை விதைக்கப்பட்டது!

ன்றிரவு தாதாஜி கொண்டதேவ் பகவத்கீதையைப் படிக்க ஆரம்பித்திருந்ததால் அவரும் சிவாஜியும் மட்டுமே அங்கிருந்தார்கள். புராணக்கதைகள் கேட்பதில் இருக்கும் ஆர்வம் தத்துவார்த்த சிந்தனைகளைக் கேட்பதில் மாணவர்களுக்கு இருப்பதில்லை என்பதில் தாதாஜி கொண்டதேவுக்கு எப்போதும் வருத்தமே. ஆனால் நல்ல வேளையாக சிவாஜிக்கு தத்துவங்கள் கசப்பதில்லை. அவன் விரும்பிக் கேட்பதுடன் அது குறித்து விவாதங்களும் செய்வான். கர்மயோக சுலோகங்களைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிக் கொண்டே வந்த போது தான் சிவாஜியின் கட்டை விரலில் இருக்கும் காயத்தை தாதாஜி கொண்டதேவ் கவனித்தார். ”விரலில் என்ன காயம்?”

சிவாஜி உண்மையைச் சொன்னான். தாதாஜி கொண்டதேவ் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார். ”சிவாஜி உன் தந்தை உனக்கு அறிவுரை எதுவும் கூறவில்லையா?”

”கூறினார். அதை ஏன் என்னால் ஏற்க முடியாது என்று விளக்கினேன்” என்று சிவாஜி அமைதியாகச் சொன்னான்.

“அதைக் கேட்டு என்ன சொன்னார்?”

“ஆசி வழங்கினார்….”

தாதாஜி கொண்டதேவ் வாயடைத்துப் போனார். அவர் முகத்தில் வேதனை வெளிப்படையாகத் தெரிந்தது. சிவாஜி அவருக்கு வேதனை ஏற்படுத்தியதற்காக வருத்தப்பட்டான். இன்று அவன் கற்றிருந்த எத்தனையோ விஷயங்கள் அவர் போட்ட அறிவுப் பிச்சை. அவர் காட்டிய அன்புக்கு அவன் கைம்மாறு எதுவும் செய்ய முடியாது. மிக நல்ல மனிதர். ஆனால் அவரால் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாது. அது அவர் பிழையல்ல. அவர் வாழ்ந்த காலத்தின் பிழை. சூழலின் பிழை. அதைத் தாண்டி சிந்திப்பது கூடத் தவறு என்று போதிக்கப்பட்டு அதை உறுதியாக நம்புபவர். அந்த விஷயத்தில் அவனை அவர் மாற்ற முடியாதது போலவே அவரை அவன் மாற்றவும் முடியாது.

சிவாஜி பணிவுடன் மென்மையாக அவரிடம் பேசினான். “உங்களை வேதனைப்படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ஆசிரியரே. கர்மயோகத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். க்ஷத்திரிய தர்மம் என்னவென்று அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் சொன்ன உபதேசம் எனக்கும் பொருந்தும் என்றே நான் கருதுகிறேன். நானும் க்ஷத்திரியனே. அடிமைத்தளையிலிருந்து விடுபடாமல் இருப்பதும், போராடாமல் இருப்பதும் எனக்கும் அவமானமே. உங்களிடமிருந்து கற்ற கீதையும், வரலாறும் எனக்கு அதையே உணர்த்துகிறது. ஏதோ பழங்கதையாய் கேட்டு வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளாமல் நகர்வது நான் கற்ற கல்விக்கு நான் ஏற்படுத்தும் அவமரியாதை என்றே நான் நினைக்கிறேன்….. நான் எனது தர்மத்தைக் கடைபிடிக்க அனுமதியளியுங்கள் ஆசிரியரே!”

தாதாஜி கொண்டதேவ் பெரும் மனக்கொந்தளிப்பில் இருந்தார். மெல்லச் சொன்னார். “ஆனால் என் தர்மம் அதை அனுமதிக்க மறுக்கிறதே சிவாஜி! இந்த மண்ணை ஆள்கிற சுல்தானுக்கும், நான் கூலி வாங்கும் உன் தந்தைக்கும் செய்கிற துரோகமாக எனக்குத் தோன்றுகிறதே!”

“சரி. உங்கள் தர்மத்தை மீற நான் உங்களை வற்புறுத்தவில்லை. என் அந்தச்செயல்களில் உங்களைப் பங்கு கொள்ள அழைக்க மாட்டேன். ஆனால் என் தந்தையைப் போல நீங்களும் எனக்கு ஆசி வழங்குங்கள் ஆசிரியரே அது போதும்….”

அவர் அதற்கும் தயங்கினார். அவன் சொன்னான். “மாதா, பிதா, குரு, தெய்வம் ஆசியில்லாமல் எதுவும் வெற்றியடையாது என்பார்கள். நான் எடுத்துக் கொண்ட இந்தப் பணியில் என் தாயின் ஆசியை நான் என்றுமே உணர்ந்திருக்கிறேன் ஆசிரியரே. தந்தையும் அனுமதிக்கா விட்டாலும் ஆசிவழங்கியிருக்கிறார். இறைவனிடமும் ஆசி வாங்கி விட்டேன். உங்கள் ஆசி மட்டும் தான் மீதமிருக்கிறது. அது கிடைக்காமல் என் பணி பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. என் தர்மத்தின் பாதையில் நான் போக வேண்டும் என்று போதித்த நீங்கள் அப்படிப் போவதில் வெற்றியடைய ஆசி வழங்குவது தவறு என்று எந்த நீதியும் சொல்லாது. என்னை ஆசிர்வதியுங்கள் ஆசிரியரே!”

அவன் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து வணங்கினான். அவர் பேரன்புடன் அவனைப் பார்த்து விட்டு கண்களை மூடி மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார். ”இறைவன் உனக்குத் துணையிருந்து வெற்றி அடைய வைக்கட்டும்!”

சிவாஜி புது சக்திப் பிரவாகத்துடன் எழுந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, June 14, 2018

இருவேறு உலகம் – 87

னிதன் மிக உறுதியாக ஒன்றை நம்பும் போது எல்லாவற்றையும் அந்த நம்பிக்கையின்படியே மாற்றிக் கொண்டு காண்கிறான். அதன்படியே ஏற்றுக் கொள்கிறான் அல்லது ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஒவ்வொன்றையும் பிரபஞ்ச சக்தியின் அங்கமென்ற நிலையிலேயே இருந்து, விருப்பு வெறுப்பில்லாமல் அலசி ஆராய்ந்து உண்மையைத் தெரிந்து தெளிய வேண்டும் என்று மாணவனுக்குப் பாடம் நடத்தி இருந்த போதிலும், அதைத் தானே தவற விட்டு விட்டதாய் மாஸ்டர் முதல் முறையாய் உணர்ந்தார். அவர் நம்பியதற்கு எதிரான எதையும் தெரிந்து கொள்ளக்கூட ஆர்வம் காட்டவில்லை….

குற்றவுணர்ச்சியுடன் மாஸ்டர் க்ரிஷைக் கேட்டார், “க்ரிஷ் அந்த அமாவாசை ராத்திரிக்குப் பிறகு நீ திரும்பி வரும் வரை என்ன நடந்ததுன்னு உன்னால மறைக்காமல் சொல்ல முடியுமா?”

க்ரிஷ் எதையும் ஒளிக்காமல் அவரிடம் சொன்னான். வாரணாசி பாழடைந்த காளி கோயிலுக்கு எதிரி போனதையும், அவர் போனதையும் அவன் காட்சியாய்க் கண்டதைச் சொன்ன போது அவர் சிலையாய் சமைந்தார். ‘முதல் ஆள் உன் எதிரி. இரண்டாம் ஆள் உன்னை எதிரியின் ஆளாய் பார்க்கிறவர். முதல் ஆளுக்கு ரகசியம் முக்கியம், இரண்டாம் ஆளுக்கு முகூர்த்தம் முக்கியம்!......’ காளிகோயிலில் இருந்த அவர்களுடைய ரகசியக் குறிப்பை எதிரி எடுத்துச் சென்றதை அவர் வேறு ஒருவரிடமும் இது வரை சொல்லி இருக்கவில்லை. அவருக்கு முன்பே எதிரி அந்தக் கோயிலுக்குப் போன காட்சியை க்ரிஷ் கண்டிருப்பது தற்செயல் அல்ல…..

“ஒன்றே ஒன்றைச் செய்திருக்கிறேன். உன் எதிரி எல்லார் உள்ளங்களையும் படிக்க முடிந்த அளவு உயர்ந்த சக்தி படைத்தவன். அவன் கூட உன் மனதைப் படிக்க முடியாத அளவு உனக்குள் ஒரு மிக நுட்பமான ப்ரோகிராம் போட்டு சக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையம் போட்டிருக்கிறேன்.” க்ரிஷ் மனதை அவரால் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பது இப்போது புரிந்தது. க்ரிஷை லாரி விபத்திலிருந்து காப்பாற்றிய சில நிமிடங்களில் வேற்றுக்கிரகவாசி பூமி எல்லையைத் தாண்டிப் போனது உண்மையாகவே இருக்க வேண்டும். அப்படியானால் க்ரிஷை அவர் சந்தித்த முதல் சந்திப்பில் அவர் மனதை ஆக்கிரமிக்கப் பார்த்தது அந்த வேற்றுக்கிரகவாசியாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையான எதிரி வேறு…. அவர் தான் குழம்பி இருக்கிறார்…. ஆனாலும்  அதே தெளிவில் அவரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. பரஞ்சோதி முனிவர் சொன்னது க்ரிஷை எதிரி பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்த முயற்சிப்பது போல் தான் தோன்றியது….. குழப்பம் நீடித்தது.

க்ரிஷ் விடைபெறும் போது, முன்பே சொன்ன இரண்டாம் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்படி சொல்லிவிட்டு அவர் கண்களை மூடியபடி சொன்னார். “நீ வாரணாசி கோயிலில் இருட்டிலும் எதிரியை நிழலாகவாவது பார்த்திருக்கிறாய். அந்தக் காட்சியை அடிக்கடி உன் மனதில் கொண்டு வா. மேலும் நன்றாகக் கவனி. முதல் தடவை பார்த்த போது உன் மேல்மனம் கவனிக்க மறந்திருந்த எத்தனையோ விஷயங்களை கண்டிப்பாக உன்னால் தெரிந்து கொள்ள முடியும். உன் அலைவரிசைக்கு ஒரு தடவை கிடைத்த அவன் கண்டிப்பாக இனியும் கிடைக்காமல் போக வாய்ப்பில்லை……”

அவன் போய் அரை மணி நேரத்தில் ஹரிணி மாஸ்டருக்குப் போன் செய்தாள். ஐந்தே நிமிடம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டவள் க்ரிஷின் தாய் க்ரிஷை உணர்ந்தது போல, தான் உணராமல் போகக் காரணம் என்ன என்று கேட்ட போது மாஸ்டர் சத்தமில்லாமல் சிரித்தார். ஒரு ஆணின் வாழ்க்கையில் தாயிற்கும், மனைவிக்கும் போட்டி ஏற்படுவது எல்லா இடங்களிலும் நிகழக்கூடிய வேடிக்கையாகவே தோன்றியது.

“…அதுக்கு அவரை நான் நேசிக்கிறது கம்மிங்கற அர்த்தமா மாஸ்டர், அவங்கம்மா அளவுக்கு நான் அவனை நேசிக்கலையா….?”

மாஸ்டர் புன்னகையுடன் சொன்னார். “அப்போ அவன் மேலே நீ கோபமாகவும் இருந்தாயே ஹரிணி. அது உங்களுக்கிடையே அலைவரிசைகளை அடைச்சு நின்னுருக்கலாம்……”

அவளுக்கு ஓரளவு மனம் சமாதானமடைந்தது. ”சரி நாங்க ரெண்டு பேரும் தொலை தொடர்பு ஏற்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்ய உத்தேசிச்சுருக்கோம்….. அதுக்கு எனக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க மாஸ்டர்….”

மாஸ்டர் சில நிமிடங்கள் பேசினார். அவள் முழு ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டாள்.


ன்றிரவெல்லாம் யோசித்தும், மறுநாள் காலை யோசித்தும் க்ரிஷுக்கு என்ன தகவல் அனுப்புவதென்பதை ஹரிணியால் முடிவு செய்ய முடியவில்லை. மிக வித்தியாசமான, கண்டுபிடிக்கவே மிகவும் கஷ்டமான ஏதாவது ஒன்றை அனுப்பி அதை அவன் சரியாகப் பெற்று சொன்னால் தான் உண்மையான வெற்றி என்று அவளுக்குத் தோன்றியது.  பல வித்தியாசமான தகவல்களை யோசித்து ஒவ்வொன்றையும் ஒதுக்கி வைத்துக் கடைசியில் ஹரிணி திருக்குறளைத் தேர்ந்தெடுத்தாள்.

மாஸ்டர் எந்த ஆழ்மனசக்தியைப் பயன்படுத்துவதற்கும் அமைதியான பரபரப்பில்லாத மனநிலை முக்கியம் என்று சொல்லி இருந்தார். முதலில் உணர்வு ரீதியாக அவனை நெருங்கி இருந்தால் அனுப்பும் தகவல் வெற்றிகரமாகச் சென்றடையும் என்றும் சொல்லி இருந்தார். தியானம் எல்லாம் அவளுக்கு சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அதனால் அவளுக்கு மிகவும் பிடித்தமான வீணை இசையை அரை மணி நேரம் கேட்டாள். மனம் தானாக லேசாகியது. க்ரிஷை நினைத்தாள். உணர்வு ரீதியாக அவனை நெருங்கி இருப்பதாக நினைக்க முயற்சித்தாள். அவன் அருகிலேயே இருப்பது போலவும் காதலோடு அவனைப் பார்ப்பது போலவும் நினைத்தாள். நெருக்கம் என்றவுடன் அவனை முத்தமிடத் தோன்றியது. இதெல்லாம் சரியான வழியா  என்று தெரியவில்லை. ஆனாலும் முத்தமிடத் தோன்றியது. நெருக்கமாக உணர்வது தான் முக்கியம் என்பதால் அப்படி உணர கற்பனையில் முத்தம் தருவது தவறில்லை என்று தோன்றியது. முத்தமிட்டாள். முன்பே உணர்ந்ததைத் திரும்பவும் உணர்வது எளிதாக இருந்தது. ஆழமான முத்தத்திற்குப் பிறகு வழக்கம் போல் விலகிக் கொண்டு திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவனுக்குத் தருவது போல் கற்பனை செய்தாள். முன்பே நிச்சயித்தபடி சுமார் பத்து நிமிடம் ஆழமாக நினைத்து தகவல் அவனைச் சென்றடைவதாக மனதில் காட்சிப்படுத்திப் பார்த்தாள்.

அந்த நேரத்தில் அமைதியாக தனதறையில் அமர்ந்திருந்த க்ரிஷ் அவளிடம் இருந்து வரும் தகவல் என்ன என்பதை உணரக் கண்களை மூடிக் காத்திருந்தான். அவளையே நினைத்துக் கொண்டிருந்தான். அவள் எதிரில் இருப்பது போல நினைத்தான். அதொன்றும் கஷ்டமாக இல்லை. சுலபமாக அவள் அங்கு இருப்பதாக நினைக்க மட்டுமல்லாமல் உணரவும் முடிந்தது. தகவலுக்காக அவன் காத்திருந்தான். ஆனால் தகவலுக்குப் பதிலாக அவளே அருகில் வந்தாள். அவனைக் காதலுடன் பார்த்தாள். முத்தமிட்டாள்….. அவன் உதடுகள் அவள் உதடுகளைத் தெளிவாகவே உணர்ந்தது….. கண்களைத் திறந்து கொண்டான். மனம் தனியாகச் சுதந்திரம் வாங்கிச் செயல்பட்டது போல் இருந்தது….. முக்கியமான பரிசோதனைகள் நடக்கும் போதும் முரண்டுபிடிக்கும் மனதின் மீது கோபம் வந்தது. அதையும் ஒரு தடையாக எண்ணி விலக்கி மூச்சுப்பயிற்சிகள் செய்து மனதை அமைதியாக்கி அவன் தகவலுக்காக காத்திருந்தான்…… ஒன்றும் வந்து சேரவில்லை. மனம் கற்பனையாக எதையெல்லாமோ நினைக்க ஆரம்பித்தது…..

அவள் ஒரு மணி நேரம் கழித்து ஆர்வத்துடன் போன் செய்தாள். “என்னடா அனுப்பின தகவல் கிடைச்சுதா? என்னன்னு சொல்லு பார்க்கலாம்….”

“ஒன்னும் வரலை”

அவள் ஏமாற்றமடைந்தாள். “என்னடா இப்படிச் சொல்றே”

“நீ என்ன தகவல் அனுப்பினாய்?”

“திருக்குறள் படிக்கற மாதிரி…..”

“இங்கே நான் உணர்ந்தது என்ன தெரியுமா?” க்ரிஷ் குரலைத் தாழ்த்திக் கேட்டான்.

“என்ன?”

க்ரிஷ் தன் அறைக்கதவைப் பார்த்தான். உதய் இது மாதிரி சமயங்களில் மூக்கில் வியர்த்தது போல அங்கே வந்து சேர்வான்…. நல்ல வேளையாக அவன் ஹாலில் சத்தமாக யாரிடமோ போனில் பேசுவது கேட்டது…… க்ரிஷ் மெல்லச் சொன்னான். “நீ முத்தம் தர்ற மாதிரி தான் உணர்ந்தேன்……”

ஹரிணி ஆனந்தமாகக் கேட்டாள். “சத்தியமாவாடா….. நான் அதுல தான் ஆரம்பிச்சேன். நெருக்கமா இருக்கறதா உணர்றது அதுல சுலபமா இருந்துச்சு….. ஆனா அது ரெண்டு நிமிஷம் தான். அப்புறமா எட்டு நிமிஷம் திருக்குறளைத் தாண்டா நினைச்சேன்…. முத்தம் அளவுக்கு திருக்குறள் ஆத்மார்த்தமா நினைக்கல போல……”

க்ரிஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி எதையும் ஆரம்பிக்காதே….. என் கவனத்தைக் கலைக்காதே…..”

“சரி சரி பாடத்தை ஆரம்பிக்காதே. என்னோட முதல் பரிசோதனை பாதி வெற்றியடைஞ்சுடுச்சு. அது போதும் எனக்கு. சாயங்காலம் நீ அனுப்பற செய்தி எனக்கு கிடைக்குதா பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை அவசரமாக முடித்துக் கொண்டாள்.  

க்ரிஷ் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். எதிரியைப் பற்றி அவர் சொன்னது இப்போதும் அவன் காதுகளில் ஒலித்தது. ”உன் அலைவரிசைக்கு ஒரு தடவை கிடைத்த அவன் கண்டிப்பாக இனியும் கிடைக்காமல் போக வாய்ப்பில்லை……” அவர் சொன்னபடி உடனடியாக முயற்சி செய்யத் தோன்றியது….

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, June 13, 2018

முந்தைய சிந்தனைகள் 33

என் நூல்களில் இருந்து சில சிந்தனைத் துளிகள்....












என்.கணேசன்

Monday, June 11, 2018

சத்ரபதி – 24


ரண்டு நாட்கள் கழித்து ஜீஜாபாயும், சிவாஜியும் பூனாவுக்குக் கிளம்பினார்கள். அதற்கு முந்தைய நாள் சிவாஜி பீஜாப்பூர் அரண்மனைக்குச் சென்று ஆதில்ஷாவிடம் விடைபெற்றான். ஆதில்ஷா வியப்புடன் கேட்டார். “பீஜாப்பூர் போன்ற செழிப்பான நகரத்திலிருந்து அங்கு ஏன் செல்கிறாய் சிவாஜி. அங்கு உன்னைப் போன்ற இளைஞனுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?”

சிவாஜி நெருங்கிய நண்பர்கள் நினைவும், ஆசிரியர் நினைவும் தனக்கு நிறைய வருவதாகச் சொல்லிச் சமாளித்து அவரிடமிருந்து விடைபெற்றான். மீர் ஜும்லா போன்ற தந்தையின் நண்பர்களிடமும், அவனிடம் அன்பு பாராட்டிய மனிதர்களிடமும் சென்று அவர்களிடமும் விடைபெற்றான். கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே அவனை விட்டுப் பிரிவதில் வருத்தத்தை உணர்ந்தார்கள்.

ஷாஹாஜி அவர்கள் கிளம்புவதற்கு முந்தைய தினம் ஜீஜாபாயிடம் மனம்விட்டுப் பேசினார். “நாம் தான் கனவுகளைத் தொலைத்து விட்டோம், அவனிடமாவது கனவுகள் தங்கட்டும் என்று சொன்னாய் ஜீஜா. நானும் அதையே தான் அவனுக்காக ஆசைப்படுகிறேன். ஆனால் அவன் கனவுகளில் வாழ்க்கையைத் தொலைத்து விடாமல் கவனமாக நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உன் கண்காணிப்பில் அவன் இருக்கிறான் என்பதே என் ஒரே ஆசுவாசம்…. நான் அவனிடம் ’நீ என்ன செய்யப் போகிறாய்’ என்று விரிவாகக் கேட்கவில்லை. எதுவாக இருந்தாலும் அவன் கனவைப் போலவே அது பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அது பிரம்மாண்டமானதாக இருக்கும் பட்சத்தில் அதே அளவு ஆபத்தானதாகவும் இருக்கும் என்பதும் நிச்சயம் தான். அதையெல்லாம் தெரிந்து கொண்டு ஜீரணிக்கும் சக்தி எனக்கில்லை. அதனாலேயே கேட்காமல் விட்டு விட்டேன். புதிதாகச் சிந்திக்கவும், புரட்சிகரமாகச் செயல்படவும் வேண்டிய வயதையும், மனநிலையையும் நான் என்றோ தாண்டி விட்டேன் ஜீஜா. நம் சாம்பாஜிக்கும் இயல்பாகவே பெரிய பெரிய கனவுகள் இல்லை. குழந்தை வெங்கோஜிக்கும் அப்படி இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் நம் வம்சத்தில் சிவாஜியாவது உயரங்களை அடைய வேண்டும் என்று இரகசியமாய் நானும் ஆசைப்படுகிறேன். அவன் அப்படி உயரங்களை எட்டினால் உனக்கு இணையாகப் பேரானந்தம் அடையும் இன்னொரு ஜீவன் நானாகத் தான் இருப்பேன்…..”

ஷாஹாஜி சிறு மௌனத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார். “ஆனால் ஒரு உண்மையையும் நான் சொல்லியே ஆக வேண்டும். அவன் ஏதாவது புரட்சிகரமாக செயல்படும் பட்சத்தில் நான் எந்த வகையிலும் அவனுக்கு உதவ முடியாது. காரணம் எனக்கு வேறிரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் நலனை நான் அலட்சியப்படுத்திவிட முடியாது. ஆபத்தான சூழ்நிலையில் நான் அவர்களையும் இழுத்துவிட முடியாது. அதனால் அவன் ஆபத்தான செயல்களில் இறங்கும் போது அவனை மட்டுமே நம்பி இறங்க வேண்டி வரும். அவன் நம்பும் ஆண்டவன் அவனுக்கு உதவலாம். ஆனால் அவன் தந்தையான நான் தள்ளியே தான் இருப்பேன். இதை அவன் புரிந்து கொள்வானோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் நீ புரிந்து கொள்வாய் என்று நான் நம்புகிறேன். அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்ற நான்…..” ஷாஹாஜி லேசாகக் கண்கலங்கி, பேச முடியாமல் சிறிது தயங்கி, பின் தொடர்ந்தார். ”அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்ற நான் இதை அவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். ஒவ்வொரு செயலிலும் அவனுடன் துணை நிற்க வேண்டியவன் தான் நான்…. ஆனால் வேறு இரண்டு பிள்ளைகளையும் பெற்றதால் விலகி நின்று அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் நிற்கிறேன். என்றாவது ஒரு நாள் அவன் இதுவிஷயமாக என்னைக் குறைகூறினால் நான் மன்னிப்பு முன்னதாகவே கேட்டிருக்கிறேன் என்று நீ அவனுக்குத் தெரிவிக்க வேண்டும் ஜீஜா…”

ஷாஹாஜி உடைந்து போய் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு தன் துக்கத்தை மறைக்க முயற்சி செய்த போது ஜீஜாபாயும் கண்கலங்கினாள். அவர் கூறிய யதார்த்த நிலைகளை அவளும் உணர்ந்தே இருந்தாள். ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் போது வாழ்வும் சாவும் உன்னோடு என்று பெற்றவர்கள் ஒரே பிள்ளையின் பின் நின்றுவிட முடியாது……

ஜீஜாபாய் கரகரத்த குரலில் சொன்னாள். “உங்கள் பிள்ளை உங்கள் மீது என்றுமே குறை சொல்ல மாட்டான். கவலைப்படாதீர்கள். தன் நிலைக்கும், தன் சூழலுக்கும் அவன் என்றுமே யாரையுமே குறை சொன்னதில்லை. நம் இருவரையும் பிரிந்து சத்யஜித்துடன் சகாயாத்திரி மலையில் கடுமையான சூழல்களில் வாழ்ந்த போது கூட சிறு பிள்ளையானாலும் அவன் ஒரு முறை கூட முகம் கூடச் சுளித்ததில்லை என்று சத்யஜித் என்னிடம் கூறினான். அறியாத பருவத்திலும் கூட அந்தத் திடமனநிலையை அவனுக்கு இறைவன் அளித்திருக்கிறார்…..”

அவன் காணும் கனவுகளுக்கு இன்னும் ஆயிரம் மடங்கு திடமனநிலை தேவைப்படும் என்று ஷாஹாஜி மனதினுள் எண்ணிக் கொண்டார். மறுநாள் மகன் அவரை வணங்கி விடைபெற்ற போது அவரால் எதுவும் பேச முடியவில்லை. கனத்த மனம் வாயிற்குப் பூட்டுப் போட்டது. சாம்பாஜி நகர எல்லை வரை சென்று தாயையும், தம்பியையும் விட்டு வரக் கிளம்பினான். அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற ஷாஹாஜிக்கு இனி எப்போதும் அவர்கள் நால்வரும் ஒரு குடும்பமாக ஒரு கூரையின் கீழ் வாழ வாய்ப்பில்லை என்று உள்ளுணர்வு சொன்னது. சோகம் மனதில் படர ஆரம்பித்தது.

சாம்பாஜி திரும்பி வந்த போது அவர் இருந்த நிலை கண்டு பாசத்துடன் அருகில் அமர்ந்தான். “தம்பிக்காகக் கவலைப்படுகிறீர்களா தந்தையே?”

அவர் மெல்லத் தலையசைத்தார். “அவன் புத்திசாலி தந்தையே. அவன் எதையும் சமாளிப்பான்” என்று சாம்பாஜி அவருக்குத் தைரியம் சொன்னான். ஷாஹாஜி தனக்கு மிகவும் பிரியமான மகனைப் பார்த்துச் சொன்னார். “அவன் திறமைகளைப் பற்றி எனக்குச் சந்தேகம் இல்லை சாம்பாஜி. ஆனால் எதற்கும் விதி ஒத்துழைக்க வேண்டுமே என்று தான் கவலைப்படுகிறேன்….”


பூனா நோக்கிப் போகும் போது ஜீஜாபாயும் அதே கவலையில் ஆழ்ந்திருந்தாள். பெற்றோரின் கவலை சிவாஜிக்குச் சிறிதும் இருக்கவில்லை. ஆனால் அவன் வழிநெடுக மௌனமாயிருந்தான். பீஜாப்பூர் அவனுக்குப் பல பாடங்கள் நடத்தியிருந்தது. பல உண்மைகளை உணர்த்தியிருந்தது. அதையெல்லாம் மறந்து கிடைக்கக்கூடிய ஒரு சௌகரியமான எதிர்காலத்தை அவன் விரும்பவில்லை.   அவன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்து விட்டான். ஆனால் ஷாஹாஜியின் அறிவுரையை அவன் அலட்சியப்படுத்த விரும்பவில்லை. தயார்நிலையில் இல்லாமல் எந்த ஆபத்திலும் அவன் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. இனி என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்யலாம் என்கிற எண்ணங்களே பூனா சென்றடையும் வரை அவன் மனதை ஆக்கிரமித்திருந்தன.

தன் சிஷ்யனிடம் பெரிய மாற்றம் ஏதாவது தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்த தாதாஜி கொண்டதேவுக்கு வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. அவர் சொன்னதைக் கேட்டு ஷாஹாஜி அவனுக்குக் கண்டிப்பாக அறிவுரை வழங்கியிருந்திருப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது அவர் சிஷ்யனை எந்த அளவு மாற்றியிருக்கிறது என்பதைத் தான் அறிய அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் அழுத்தக்காரனான அவர் மாணவன் அவரை எதையும் அறிய விடவில்லை. அவன் அதிக நேரத்தை நண்பர்களுடன் கழித்தான். அவர்களுடன் சகாயாத்ரி மலைத்தொடருக்கு அதிகம் போனான்….

நண்பர்கள் பீஜாப்பூரைப் பற்றிக் கேட்டார்கள். அவர்களிடம் தன் பீஜாப்பூர் அனுபவங்களை சிவாஜி சொன்னான். அவர்கள் அவன் சொன்னதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள். அவன் அங்கு தைரியமாகவும், சாமர்த்தியத்துடனும் நடந்து கொண்ட விதத்தில் பெருமிதம் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் தான் சிவாஜி ஒரு பேருண்மையை உணர்ந்தான். அவர்களில் யாரும் பசுவதைக்காக அவன் அளவு ரத்தம் கொதித்து விடவில்லை. அவர்களைப் பொறுத்த வரை அது நடக்கக் கூடாத நிகழ்வு, ஆனாலும் நடக்கிறது, அதற்கு வருத்தம் இருக்கிறது அவ்வளவு தான். பீஜாப்பூரில் அவன் அண்ணனும், தந்தையும் காட்டிய அதே மனோபாவம்…. மனிதர்களுக்கு எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது கூட பெரும்பாலும் தெரிவதில்லை. இந்த மண்ணின் பிரச்னையே இது தான். உணர்வுநிலையில் கூட அழுத்தம் இல்லை, ஆழமில்லை….. பின் எப்படிச் செயல்நிலையில் அழுத்தமும் ஆழமும் அவர்களுக்கிருக்க முடியும்?

முதலில் ஆழமாய் உணர இவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும், எது சரி எது சரியல்ல என்பதில் சமரசம் செய்து கொள்ளாத ஞானம் வேண்டும். அது வரும் வரை எதுவும் இந்த மண்ணில் மாறாது…… இந்த ஞானோதயம்  சகாயாத்திரி மலைத்தொடரில் அன்று சிவாஜிக்குக் கிடைத்தது.

தன் நண்பர்களிடம் அவன் பீஜாப்பூரில் உணர்ந்த உணர்வுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். அடிமைத்தனம் எத்தனை தான் செல்வச்செழிப்பைத் தந்தாலும் அது எத்தனை கேவலம் என்று தன் உடலும் உள்ளமும், கூசியதைச் சொல்ல ஆரம்பித்தான். நம் சொந்த மண்ணில் அடுத்தவரைப் பயந்தும், அனுசரித்தும் வாழ்வது எத்தனை அவலம் என்று சொல்ல ஆரம்பித்தான்….. அவன் சொற்களில் வலிமை இருந்தது. அவன் சொன்ன விதம் நாடி நரம்புகளைத் துடிக்கச் செய்தது. அடிமைத்தனத்தின் கேவலத்தை அவர்களின் ஒவ்வொரு அணுவிலும் அவன் உணரச் செய்தான். முடிவில் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற பெருநெருப்பை அவர்களின் உள்ளத்தில் பற்ற வைத்தான்.

“இதற்கு என்ன தீர்வு சிவாஜி?” என்று அவர்கள் கண்களில் அக்னி தெரியக் கேட்டார்கள்.

சிவாஜி சொன்னான். “சுயராஜ்ஜியம். நம்மை நாமே ஆள வேண்டும்”    

(தொடரும்)
என்.கணேசன்