சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, March 31, 2015

தினமலரில் “இங்கே நிம்மதி” நூல் விமர்சனம்!

தினமலர் திருச்சி பதிப்பில் என் நூல் “இங்கே நிம்மதி”பற்றிய விமர்சனம்  26-03-2015 அன்று வந்து உள்ளது.
இந்த நூலை வாங்கவும், தங்கள் ஊரில் கிடைக்கும் இடங்களை அறியவும் பதிப்பாளரை 9600123146, 7667886991 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, March 30, 2015

உணவின்றி நீரின்றி எழுபது ஆண்டுகள்!

17. மகாசக்தி மனிதர்கள்


83 வயதான ஒரு முதியவர் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உணவோ நீரோ உட்கொள்ளாமல் நம் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார் என்று யாராவது சொன்னால் நமக்கு அது அண்டப்புளுகாகவே தோன்றும். ஆனால் அவர் பற்றிய தகவல்கள் மேலை நாடுகளையும் எட்டி 2006ஆம்  ஆண்டு  டிஸ்கவரி சேனலில் “தெய்வீக சக்திகளுள்ள சிறுவன்”  (The Boy with Divine Powers) என்ற ஒரு ஆவணப்படத்தில் அவரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? அது மட்டுமல்ல 2010 ஆண்டு Independent Television Network (ITN) என்ற தொலைக்காட்சி 2010 ஆம் ஆண்டில் அவரை வைத்து நடத்திய ஆராய்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதே ஆண்டு “ஆரம்பத்தில் ஒளி இருந்தது”( In the Beginning There Was Light)  என்ற ஆஸ்திரிய நாட்டு ஆவணப்படத்தில் அவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். யாரவர்?

அவர் பெயர் பிரஹலாத் ஞானி (Prahlad Jani). ராஜஸ்தானில் பிறந்த அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி காடுகளில் வசித்தவர். அவருடைய எட்டாம் வயதில் ஒரு தெய்வீக சக்தியுடைய பெண் (அவர் அம்பாள் என்று கூறுகிறார்) நேரில் வந்து அவர் நாக்கைத் தொட்டுப் போனதாகவும் அதற்குப் பின் அவருக்கு உணவோ, நீரோ தேவைப்படவில்லை என்றும் கூறுகிறார். அதற்குப் பிறகு அவர் ஒரு பெண்ணைப் போலவே சிவப்பு சேலை உடுத்திக் கொண்டு பெரிய மூக்குத்தி குத்திக் கொண்டு வளையல் அணிந்து கொண்டு வாழ ஆரம்பித்திருக்கிறார். 1970 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் காட்டுப்பகுதியில் உள்ள அம்பாள் கோயில் ஒன்றின் அருகே பிரஹலாத் ஞானி வசித்து வருகிறார். அவரை அப்பகுதியினர் மாதாஜி என்றழைக்கிறார்கள்.

அவர் தொண்டைப் பகுதியில் ஒரு துளை இருக்கிறது. அது அம்பாள் ஏற்படுத்தியது என்றும் அதன் மூலம் உடல் தனக்கு வேண்டிய சக்தியை உள்ளே ஈர்த்துக் கொள்கிறது என்றும் பிரஹ்லாத் ஞானி கூறுகிறார். முக்கியமாய் சூரிய ஒளியில் உள்ள சக்தியை ஈர்த்துக் கொள்வதால் தான் தன்னால் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடிகிறது என்று அவர் கூறுகிறார்.


உணவின்றி மனிதன் ஓருசில வாரங்கள் உயிர்வாழ முடியும், நீரின்றி ஓருசில நாட்கள் உயிர்வாழ முடியும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதற்கு மேல் மனிதன் உயிவாழ்வதென்பது முடியவே முடியாது என்று உடலியல் மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. ஏனென்றால் மூளை இயங்கத் தேவைப்படும் க்ளுகோஸ் உணவில் இருந்தே கிடைக்கிறது. க்ளூகோஸ் மூளைக்குக் கிடைக்க சில வினாடிகள் தடைப்பட்டாலும் அது உடலுக்கும் உயிருக்கும் அபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவ உண்மை. அப்படி இருக்கையில் வருடக்கணக்கில் ஒருவரால் அப்படி இருக்க முடிகிறது என்பதைக் கேள்விப்பட்ட போது அது உண்மை தானா, இல்லை இதில் பித்தலாட்டம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய அவரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்த சில மருத்துவர்கள் முன் வந்தார்கள்.Defense Institute of Physiology and Allied Sciences (DIPAS) என்கிற மருத்துவ அமைப்பு அஹமதாபாதில் ஸ்டெர்லிங் ஆஸ்பத்திரியில் (Sterling Hospital in Ahmedabad) 2003 ஆம் ஆண்டு சுதிர் ஷா (Sudhir Shah) என்ற மருத்துவர் தலைமையில் மற்றும் சில மருத்துவ நிபுணர்களின் துணையோடு அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். மருத்துவ பரிசோதனை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்றது. ஒரு மூடப்பட்ட அறையில் அவரைத் தங்க வைத்து முழு கண்காணிப்பில் வைத்து நடத்திய பரிசோதனையின் முடிவில் அவருடைய எடை சற்று குறைந்ததே ஒழிய மற்றபடி எல்லா விதங்களிலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

இந்த செய்தி வெளியான பின்னர் தான் 2006 ஆம் ஆண்டு டிஸ்கவரி சேனலில் அவர் பற்றிய செய்தி வெளியாகியது. சில மருத்துவ நிபுணர்கள் இந்த பத்து நாள் பரிசோதனை முழுமையானது அல்ல என்றும் அவருடைய எடை குறைந்தது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூற ஆரம்பித்தார்கள்

அதனால் DIPAS அமைப்பு 2010 ஆம் ஆண்டு அதே மருத்துவர் சுதிர் ஷா தலைமையில் 35 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழு மூலம் மறு பரிசோதனை செய்ய முடிவெடுத்தது. அதற்கு பிரஹலாத் ஞானி ஒத்துக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 6 ஆம் தேதி வரை பரிசோதனை நடைபெற்றது. இந்த முறை பரிசோதனை முறை முழுமையான விஞ்ஞான பூர்வமாக இருந்தது. அவர் தங்கி இருந்த அறையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அவரை தினமும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் முதலான எல்லா பரிசோதனைகளும் செய்தார்கள். அவர் தன் உடலுக்குத் தேவை என்று சொன்ன சூரிய ஒளியில் அவரை இருக்க வைத்த சமயத்தில் கூட காமிரா அவரை விட்டு விலகவில்லை. எல்லாம் வீடியோவில் பதிவானது.

சிறுநீர் மலம் கழிக்கத் தேவை இருக்காத காரணத்தால் பரிசோதனை நாட்களில் அவருடைய அறையை ஒட்டி இருந்த கழிவறையையும் பூட்டி வைத்திருந்தார்கள். அத்தனையும் அனில் குப்தா என்ற வேறொரு அமைப்பைச் சேர்ந்த ஒரு மருத்துவ பேராசிரியர் கண்காணிப்பில் நடைபெற்றது.பதினைந்து நாட்கள் பரிசோதனை முடிவில் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, சிறுநீரகம், இதயம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மற்ற உடல்நலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளில் பிரஹலாத் ஞானியின் உடல் நலம் அவர் வயதில் பாதி மட்டுமே உள்ள, தினசரி உண்டு, நீரருந்தி வாழும் சராசரி மனிதனின் உடல்நலத்தை விட பலமடங்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் அந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பதை அந்த மருத்துவ ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. DIPAS  அமைப்பு அந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியமான காரணம் பிரஹலாத் ஞானி உண்மையா போலியா என்பது மட்டுமல்ல, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது எப்படி என்று அறிந்தால் பல நாள் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையில் இருக்கும் விண்வெளி வீரர்கள், இயற்கை சீற்றங்களால் சில இடங்களில் சிக்கிக் கொள்ளும் மனிதர்கள், இராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு அதைப் பயன்படுத்தலாம் என்கிற காரணத்தால் தான். ஆனால் அந்த சக்தியை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தை அவர்களால் பிரஹலாத் ஞானி மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்குப் பிறகு தான் ITN தொலைக்காட்சியும், ஆஸ்திரிய ஆவணப்படமும் அவரைப்பற்றி விரிவாகச் சொல்லி  பிரபலப்படுத்தின.


யோகக்கலையில் உண்மையாக தேர்ச்சி அடைந்த இந்திய யோகிகள் காற்று, சூரிய ஒளி இரண்டினால் மட்டுமே வாழ முடிந்தவர்கள் என்று கூறுவார்கள். அவர்களுடைய யோகசக்திகளின் சாத்தியக்கூறுகளை பதஞ்சலியின் யோக சூத்திரங்களை படித்தவர்கள் மிகவும் நன்றாக அறியக்கூடும். அது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பிடியில் அடங்கக்கூடியவை அல்ல.

இங்கு நாம் குறிப்பிட்ட பிரஹலாத் ஞானி இந்த யோகசக்தி அல்லாமல் வேறெந்த அபூர்வ சக்தி படைத்தவராகவோ, மேலான ஆன்மிக ஞானம் பெற்றிருந்தவராகவோ நமக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்குத் தானே என்று அடிக்கடி சொல்லும் நமக்கு அந்த ஒரு சாண் வயிற்றின் தேவைகளில் இருந்து விடுபட்ட ஒருவரைப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுவது இயல்பே அல்லவா?.


-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 2.1.2015


Thursday, March 26, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 39

d

ம்யே மடாலயம் நோக்கி தான் மைத்ரேயன் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை லீ க்யாங்குக்குத் தெரிவிக்கலாம் என்ற சீனரின் ஆலோசனையை மாரா உடனடியாக மறுத்தான்.

“லீ க்யாங் இருமுனைக்கத்தி. அவனைக் கையாள்வது ஆபத்தானது... நம் அமைப்பு பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருக்கிற அவனுக்கு நாம் எந்த அளவு வளர்ந்திருக்கிறோம் என்பது சுத்தமாகவே தெரியாது. அப்படி இருக்கும் போது அவன் கவனத்திற்கு வராமல் இருப்பதே நமக்கு நல்லது

“எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் இப்போதைக்கு லீ க்யாங் நமக்கு நண்பன் தானேஆங்கிலேயர் சொன்னார்.

“அது பொதுவான எதிரியை வீழ்த்துகிற வகையில் தான். அது முடிந்த பின் லீ க்யாங் நம்மைப் போன்றவர்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டான். நம்மையும் எதிரியாகவே நினைப்பான். அதனால் இப்போதைய பலனை மட்டும் நினைத்து செயல்படுவது புத்திசாலித்தனம் அல்ல. அதற்குப்பின்னும் யோசிக்க வேண்டும்....

நாம் அனாமதேயமாக அழைத்துத் தெரிவிக்கலாம் என்று தான் சொன்னேன்சீனர் மெல்ல சொன்னார்.

அப்படித் தெரிவித்தால் கூட மைத்ரேயனுக்குத் தங்களைத் தவிர வேறு எதிரியும் இருப்பதை அவன் தெரிந்து கொள்வான். லீ க்யாங்குக்கு சின்ன இழை கிடைத்தால் போதும் அவன் அதை வைத்து முழுவதுமே தெரிந்து கொள்ளாமல் திருப்தி அடைய மாட்டான். தகுந்த காலம் வரும் வரை அவன் நம்மைத் தெரிந்து கொள்வது நல்லதல்ல...

அவர்கள் மூவரும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. அவன் சொன்னது சரியாகவே அவர்களுக்கும் தோன்றியது.

திபெத்தியக் கிழவர் கேட்டார். “அப்படியானால் நேரடியாக நாமே மைத்ரேயனை ஏதாவது செய்ய வேண்டாமா...?அவருக்கு அந்தச் சிறுவன் காட்டிய அலட்சியம் இன்னும் வலித்தது. உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் துடித்தது.

மாரா அவர் அளவு உணர்ச்சிகளால் உந்தப்படாமல் அமைதியாகச் சொன்னான். மைத்ரேயன் தன்னை யார் என்று வெளிப்படுத்தி விட்டிருக்கிறானே ஒழிய அவன் எந்த அளவு சக்தியோடு இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தவில்லை. அவனைக் காக்க வந்தவன் பற்றியும், அவன் சக்தி பற்றியும் நமக்கு எதுவுமே தெரியாது. எதிரியின் பலம் பலவீனம் தெரியாமல் நேரடியாக மோதப் போவது தோல்விக்கு நாம் போடும் அஸ்திவாரம் ஆகி விடும். பொறுங்கள். லீ க்யாங்கை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்ப்போம்... பிறகு யோசிப்போம்....

மைத்ரேயன் பற்றிய பேச்சு அத்துடன் நின்றது. நால்வரும் தாழ்ந்த குரலில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். முக்கால் மணி நேரம் கழிந்து திபெத்தியக் கிழவர் தான் வந்த வழியே திரும்பினார். ஆங்கிலேயரும் சீனரும் மலையிலேயே வேறு பாதையில் சென்றார்கள். கடைசியாக வெளியே வந்த போது மாரா மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞனின் உடையில் இருந்தான். அவனிடம் மலை ஏறும் உபகரணங்களும் இருந்தன. சிறிது நேரத்தில் அவன் அனாயாசமாக மலையின் செங்குத்தான பகுதியில் மேலே ஏற ஆரம்பித்தான்.

ஓரிடத்தில் அவனுக்கு சற்று உயரத்தில் ஒரு திபெத்திய நீலக்கரடி தெரிந்தது. அந்த நீலக்கரடி பசியோடு இருந்த்தை அவனால் உணர முடிந்தது. அவனைக் கண்டதும் வேகமாக அவனை நோக்கி அது வர ஆரம்பித்தது. அதன் கண்களில் இரையைக் கண்ட திருப்தியும் பசியும் தெரிந்தன. ஒவ்வொரு வருடமும் நீலக்கரடிகள் நூற்றுக் கணக்கான மனிதர்களைக் கொன்று தின்றிருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மாரா அந்த நீலக்கரடியையே கூர்ந்து பார்த்தான். கரடி ஒரு கணம் சிலையாக நின்று பிறகு பின் வாங்கியது. பின் வேகமாக அங்கிருந்து ஓடியது. மாரா அது கண்ணில் இருந்து மறையும் வரை அதைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுடைய இடத்தில் மைத்ரேயன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்  என்று யோசித்து பார்த்தான். அவனால் கச்சிதமாக யூகிக்க முடியவில்லை. இனி ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் அவனால் மைத்ரேயனை நினைக்காமலும் தன்னுடன் அவனை ஒப்பிடாமலும் இருக்க முடியாது.....

    

காதல் வந்து விட்டாலே ஒருவன் எப்படி எல்லாம் மாறிவிடுகிறான் என்று சஹானா ஆச்சரியப்பட்டாள். வருண் எதிர் வீட்டின் கீழ் பகுதிக்கு குடி வந்திருக்கும் தன் காதலி குடும்பத்திற்காக சாமான்கள் எல்லாவற்றையும் லாரியில் இருந்து இறக்கி கொண்டு போய் வீட்டின் உள்ளே வைத்துக் கொண்டிருந்தான். சாதாரணமாக ஏதாவது வேலை சொன்னால் அது அக்‌ஷய் வாயிலிருந்து வந்தால் ஒழிய அந்த வேலையை அவன் உடனடியாகச் செய்ய மாட்டான். கூடுமான வரை தாமதித்து அந்த வேலையைத் தவிர்க்கப் பார்த்து வேறு வழியில்லாமல் போகும் போது சலிப்போடு செய்வது தான் அவனது வழக்கம். வேலை சொல்வது அம்மாவோ பாட்டியோவாக இருந்தால் அவர்கள் மேல் எரிந்து விழுவதும் உண்டு. அப்படிப்பட்டவன் காதலி வந்தனா வீட்டில் பம்பரமாய் சுழன்று வேலை செய்வது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

அக்‌ஷய் போவதற்கு முன் வருண் வந்தனா என்று ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண் எதிர்வீட்டில் குடிவரப் போவதாகச் சொன்னதாகவும் சொல்லி விட்டுப் போயிருந்தான். காதலைக் கூட மகன் தன்னிடம் முதலில் சொல்லாமல் அக்‌ஷயிடம் சொல்லி வைத்திருப்பது அவன் அக்‌ஷய் மேல் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை மறுபடியும் கோடிட்டுக் காட்டியது போல இருந்தது. சில சமயங்களில் வருண் அக்‌ஷயின் குழந்தை என்றும் அவள் தான் மாற்றாந்தாய் என்பது போலவும் கூட அவளுக்குத் தோன்றும்....

கௌதம் வந்து ஆச்சரியப்பட்டான். “என்ன அண்ணன் அதிசயமாய் எதிர் வீட்டில் இப்படி வேலை செய்கிறான்?

சஹானா பதில் சொல்லாமல் மாமியாரைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். மரகதமும் புன்னகை செய்தாள். கௌதம் அவர்கள் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே விளையாட ஓடி விட்டான். அவனையே மரகதம் பாசத்துடன் பார்த்தாள். மாமியாரும் வருணை விட அதிகமாக கௌதம் மேல் பாசம் வைத்திருக்கிறாள் என்பதைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் காரணம் அக்‌ஷய் தான் என்று தோன்றியது. அக்‌ஷயுடன் பழகிய பிறகு யாராலும் அவனை நேசிக்காமல் இருக்க முடியாது..... அக்‌ஷய் திபெத்தில் என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான், பாதுகாப்பாக வந்து சேர்வானா என்ற கேள்விகள் மனதில் ஒவ்வொன்றாய் எழ அவள் மனம் லேசாகக் கலக்கமடைந்தது.

மருமகளையே பார்த்துக் கொண்டிருந்த மரகதம் சொன்னாள். “பயப்படாதே சஹானா அக்‌ஷய் பத்திரமாய் வந்து சேர்வான்.

சஹானா எதோ சொல்ல வாய் திறந்த போது வருண் வியர்வை வழிந்தோட வேகமாக வந்தான். சஹானாவிடம் சொன்னான். “அம்மா நான் வந்தனாவையும் அவங்கம்மா, அப்பாவையும் நம் வீட்டுக்கே சாப்பிட வரச் சொல்லி விட்டேன்.... சாமான்களை சரியாக எடுத்து வைக்காமல் எப்படி அவர்களால் சமைக்க முடியும்.....

சஹானா புன்னகையுடன் தலையசைத்தாள். அவன் சந்தோஷமாய் மறுபடியும் எதிர்வீட்டுக்கு ஓடினான். மாமியாரும் மருமகளும் எழுந்து சமையலுக்குத் தயாரானார்கள்.

வந்தனாவும், அவள் பெற்றோரும் சாப்பிட வந்த போது சஹானாவுக்கு அவர்களை நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. வந்தனா அழகாக இருந்தது மட்டுமல்லாமல் தைரியமான, கறாரான, சுறுசுறுப்பான பெண்ணாகவும் இருந்தாள். அவள் பெற்றோரும் நல்ல மனிதர்களாய் தெரிந்தார்கள். தந்தை மாதவன் அதிகம் பேசாத நபர் என்றாலும், தாய் ஜானகி அவருக்கும் சேர்த்து நிறைய பேசுபவளாகத் தெரிந்தாள். பல நாட்கள் பழகியவர்கள் போலப் பேசினார்கள். அவர்கள் இருவரும் தங்கள் மகள் மேல் உயிரையே வைத்திருப்பது தெரிந்தது.

வருண் விழுந்து விழுந்து அவர்களை உபசரித்தான். அவன் வந்தனாவைப் பார்த்த விதமும், வந்தனா அவனைப் பார்த்த விதமும் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த காதலை சத்தமாக பிரகடனப்படுத்தியது. காதலை அடக்கி வாசிப்பது அத்தனை சுலபமல்ல என்று நினைத்த சஹானா தனக்குள் புன்னகைத்தாள்....

அவர்கள் சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் எதிர் வீட்டு மாடியில் புதிதாய் குடி வந்திருந்தவன் பைனாகுலர் மூலம் அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய சந்தோஷம், அன்னியோன்னியம் எல்லாம் அவனை ஆத்திரம் கொள்ளச் செய்வதாய் இருந்தது. அவனுடைய எண்ணம் எல்லாம் அங்கே இருக்காத இன்னொருவன் மீது அடிக்கடி போய் வந்தது.  எங்கே அவன்?வாங் சாவொ மைத்ரேயனின் குடும்பத்தாரைப் பற்றி  ஒரு புத்தகமே எழுதக்கூடிய அளவு அறிந்து முடித்திருந்தான். மைத்ரேயனின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவன் தன் மனதினுள் அறிந்ததை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தான்.

ஏழ்மையும், எளிமையும் தவிர அந்தக் குடும்பத்தினர் பற்றிப் பெரிதாகச் சொல்ல எதுவுமே இருக்கவில்லை. மைத்ரேயனை அவன் குடும்பத்தினர் அடையாளம் தெரிந்து வைத்திருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. மைத்ரேயனைப் பற்றியோ தகவல்கள் நிறைய கிடைத்தன என்றாலும் அந்தத் தகவல்களை வைத்து தீர்மானமான அனுமானத்திற்கு அவனால் வர முடியவில்லை. பள்ளியில் அவன் சாதாரணமாய் தான் படிப்பவனாக இருந்தான். மற்ற பிள்ளைகளுடன் சாதாரணமாய் எல்லோரும் விளையாடுவது போல் தான் விளையாடுபவனாக இருந்தான். அவனைப் பலரும் மந்த புத்திக்காரன் என்று அழைத்தார்கள். சொல்வது அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் புரியாது என்று சொன்னார்கள். ஆனால் அவன் மைத்ரேயனாக இருக்கும் பட்சத்தில் அப்படி இருக்க சாத்தியமே இல்லை என்று தோன்றியது. அப்படி மற்றவர்கள் நினைக்கும் அளவு நடித்திருக்கிறான் என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அடிக்கடி தனியாகப் பல இடங்களுக்குப் போய் நேரம் காலம் தெரியாமல் அமர்ந்திருப்பான் என்கிற தகவல் துறவு மனப்பான்மைக்கு உகந்ததாகத் தோன்றினாலும் அவன் சேடாங்கில் இருந்த புத்த மடாலயத்துக்குக் கூட சென்றதில்லை என்பது அவனுக்கு முரண்பாடாகத் தோன்றியது.

அதை அவன் லீ க்யாங்கிடம் தெரிவித்த போது லீ க்யாங் சொன்னான். “அவன் புத்தரின் அவதாரமாக இருந்தால் அவனுடைய ஆலயத்துக்கு அவனே போவதில் அர்த்தம் என்ன இருக்கிறது

வாங் சாவொ தன் இன்னொரு சந்தேகத்தையும் லீ க்யாங்கிடம் சொன்னான். “அவன் உடலில் புனிதச்சின்னம் எதுவும் இருந்ததாக அவனைத் தெரிந்த யாருமே சொல்லவில்லை.

லீ க்யாங் உடனடியாகச் சொன்னான். “அது அவன் உடலில் மற்றவர்கள் பார்க்க முடிந்த இடத்தில் இல்லாமல் இருக்கலாம்

வாங் சாவொ தன் பலத்த சந்தேகத்தை வெளிப்படுத்தினான். “அவன் பார்க்க புத்தரின் மறு அவதாரம் மாதிரி இல்லையே

லீ க்யாங் கேட்டான். “நீ புத்தரைப் பார்த்திருக்கிறாயா?

வாங் சாவொ இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “இல்லைஎன்றான்.

“பின் எதை வைத்து  இவன் புத்தரின் மறு அவதாரம் அல்ல என்கிறாய்?

புத்தரின் பல ஓவியங்களையும், சிலைகளையும் பார்த்திருக்கிறேன் என்றால் அவை நேரில் பார்த்தவர்கள் உருவாக்கியதா என்று கேட்பான். அவன் கேள்வியில் உண்மை இல்லாமல் இல்லை என்று தோன்றவே வாங் சாவொ வேறு எதுவும் சொல்லத் துணியவில்லை. ஒட்டு மொத்தமாக யோசிக்கையில்,
எத்தனையோ பேர் மத்தியில் பத்து வருடங்களாக மைத்ரேயன் வாழ்ந்திருந்தாலும் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் புதிராகவே இருந்திருக்கிறான் என்றே அவனுக்குத் தோன்றியது.....

வாங் சாவொ மைத்ரேயன் வீட்டை வந்தடைந்து கதவைத் தட்டினான்.

(தொடரும்)
என்.கணேசன்

  

Sunday, March 22, 2015

அமெரிக்காவில் மழை வர வைத்த யோகி!

16 .மகாசக்தி மனிதர்கள்


காஷ்மீரத்தில் 1907 ஆம் ஆண்டு பிறந்த சுவாமி லக்‌ஷ்மண்ஜு ரைனா (Swami Lakshmanjoo Raina )வுக்கு சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அளவுகடந்த ஆர்வம் இருந்தது. அவர் மூன்று வயதில் மண்ணிலேயே சிவலிங்கத்தை உருவாக்கி வணங்கும் விளையாட்டில் ஈடுபட்டவர். ஐந்து வயதில் தியானத்தில் ஈடுபட முடிந்தவர்.   தங்கள் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல இல்லாமல் இப்படி இருந்தது அவர் பெற்றோரைக் கவலை கொள்ள வைத்தது. அவர்கள் தங்கள் குலகுருவிடம தங்கள் கவலையைத் தெரிவித்த போது அவர் ‘உங்கள் மகன் முப்பிறவியில் யோகப்பயிற்சியிலும், ஆன்மீகத்திலும் ஆழமான நாட்டம் உடையவனாக இருந்திருக்க வேண்டும். அந்த மார்க்கத்தில் இன்னும் முன்னேறவே இந்தப் பிறவி எடுத்திருக்க வேண்டும்என்றார்.

முதுமை வரையில் ஆன்மிகத்தில் ஈடுபட்டு தியானம் செய்து வந்தால் கூட மனம் அதில் லயிக்க மறுக்கிற நிலைமையில் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிற போது ஐந்து வயதில் தியானத்தில் ஆழ்ந்து போக முடிவது ஒரே பிறவியில் முடியக்கூடிய காரியமல்ல அல்லவா? ஒரு முறை பள்ளியிலும் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டு சுற்றியுள்ள அனைத்தையும் மறந்து போன லக்‌ஷ்மண்ஜூ தியானத்திலிருந்து மீண்டு வந்த பிறகு ஒரு ஆசிரியர் ஆர்வத்துடன் தியானத்தில் என்ன உணர்ந்தாய்?என்று கேட்டதற்கு அவர் “பிரம்மாண்டமான இறைவனை உணர்ந்தேன்என்று சொல்லி இருக்கிறார்.   

இப்படி சிறு வயதிலிருந்தே இருந்த ஆன்மீகத் தேடல் வளர வளர சுவாமி லக்‌ஷ்மண்ஜூவிற்கு அதிகரித்துக் கொண்டே வந்தது. பெரும்பாலான யோகிகள் பண்டிதர்களாக இருந்ததில்லை. ஆனால் நிறைய படித்தும், பல யோகிகளிடம் பயிற்சிகள் எடுத்தும் லக்‌ஷ்மண்ஜூ யோகியாகவும், பண்டிதராகவும் இருந்து தனிமுத்திரை பதித்தார். கிட்டத்தட்ட அனைவராலும் மறக்கப்பட்டிருந்த காஷ்மீர சைவ சமய சித்தாந்தம் லக்‌ஷ்மண்ஜூவால் உயிர்ப்பிக்கப்பட்டது.  அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்க இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வந்தார்கள்.

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ யோகசக்திகளையும் பெற்றிருந்தார் என்ற போதிலும்  அவற்றை மிக அத்தியாவசியமான போதும் பொதுநலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினார். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அவர் அமெரிக்காவில்  லாஸ் ஏஞ்சல்ஸில் மழை வரவழைத்த நிகழ்ச்சியைச் சொல்லலாம்.

1991 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில் சுவாமி லக்‌ஷ்மண்ஜூ சென்ற போது லாஸ் ஏஞ்சல்ஸ் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக மழை இல்லாமல் வறட்சியில் இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நதி சுத்தமாய் வரண்டு போயிருந்தது. அதனால் தண்ணீர் பஞ்சம் அங்கு கடுமையாக இருந்தது. விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீருக்கு கூட கட்டுப்பாடு விதிக்கின்ற நிலை இருந்தது. அந்த மாநிலத்தில் அவர் சென்றிருந்த தெற்கு கலிபோர்னியா பகுதியில் உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் வழியில்லாமல் இருந்தது.  ஏனென்றால் கோடை காலத்தில் அங்கு எப்போதுமே மழை பெய்வது கிடையாது.

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ சென்று தங்கிய வீட்டுக்காரர் அவருடைய பக்தர். அவர் அந்தப் பகுதியில் ஐந்தாவது வருடமாக சரியாக மழை பெய்யாததால் ஏற்பட்டிருந்த தண்ணீர் பஞ்சத்தைப் பற்றிக் கூறினார். அதைக் கேட்ட லக்‌ஷ்மண்ஜூ மழை பெய்ய உடனே ஏற்பாடு செய்வதாகச் சொன்ன போது பக்தருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் இந்தியாவில் ஒரு முறை இது போல சுவாமி லக்‌ஷ்மண்ஜூ மழை வரவழைத்ததை நேரில் கண்டவர். சிறிது கூட மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்த வானில் சுவாமி லக்‌ஷ்மண்ஜூ கருமேகங்களை ஏற்படுத்தி மழை வரவழைத்ததை அவர் மற்றவர்களிடம் நினைவுகூர்ந்தார். ஆனால் அவருடன் இருந்தவர்களுக்கு சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. மழை பெய்ய வேண்டிய காலத்திலேயே மழை பெய்யவில்லையே. அப்படி இருகையில் இவர் மழை எப்போதுமே மழை பெய்யாத காலத்தில் மழை பெய்ய வைப்பதாகச் சொல்கிறாரே. யோகியாக இருந்தாலும் இயற்கைக்கு எதிராக இயங்குவது எப்படி சாத்தியம்?என்று அவர்கள் எண்ணினார்கள்..

அபூர்வ சக்திகள் பெற்றிருந்தாலும் அதை மந்திரம் போல் செய்து காட்டாமல் முறைப்படியான ஒரு நிகழ்வாக செய்து காட்ட விரும்பிய சுவாமி லக்‌ஷ்மண்ஜூ ஒரு ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். 22-06-1991 சனிக்கிழமை அன்று ஹோமம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கிளம்பிய புகையைப் பார்த்தவுடன் பயந்து போன அண்டை வீட்டுக்காரர்கள் தீயணைப்புத் துறையில் புகார் தந்து விட்டார்கள். உடனே வந்த தீயணைப்புப்படை அந்த ஹோமத்தை நிறுத்தியது தீயணைப்புத் துறையில் முன் அனுமதி வாங்காமல் இது போல் ஹோமம் வளர்த்தக்கூடாது என்று அவர்கள் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள்.   

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ தன் பக்தர்களுடன் தீயணைப்புத் துறை அலுவலகம் சென்று ஹோமம் செய்ய அனுமதி வேண்டினார். தீயணைப்புத் துறை மார்ஷல் எதற்காக குடியிருப்புப்பகுதியில் தீயை மூட்டுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு லக்‌ஷ்மண்ஜூ இப்பகுதியில் மழை பொழிய வைக்கத் தான் நாங்கள் ஹோமம் நடத்த அனுமதி கோருகிறோம் என்றார்.

நவீன காலத்தில் இது போன்ற காரியங்களா என்கிற வகையில் அந்த மார்ஷல் சிந்தித்திருக்க வேண்டும். அப்படி நாட்டில் மழை பெய்வதானால் பெய்யட்டும் என்பது போல லேசான சிரிப்புடன் மார்ஷல் ஹோமம் நடத்த அனுமதி வழங்கினார். 30-06-1991 ஞாயிற்றுக்கிழமை அன்று மறுபடி ஹோமத்தை சுவாமி லக்‌ஷ்மண்ஜூ நடத்தினார்.  சுமார் ஒரு மணி நேரம் ஹோமம் நடந்தது. ஹோமத்தில் பூக்களும், மற்ற பொருள்களும் ஆவாஹனம் செய்யப்பட்டது.

ஹோமத்தின் போது அங்கிருந்த ஒருவர் சுவாமி லக்‌ஷ்மண்ஜூவைக் கேட்டார். “இங்கு ஹோமம் செய்வதால் இந்தப் பகுதி முழுவதும் எப்படி மழை பெய்யும்?

சுவாமி லக்‌ஷ்மண்ஜூ சொன்னார். “இந்த ஹோம அக்னியில் உள்ள ஜூவாலைகளும் சூரியனின் ஜூவாலைகளும் ஒன்று தான். இந்த சிறிய ஜூவாலை அந்த சூரிய ஜூவாலைகளுக்கு செய்தி அனுப்பும். சூரியன் தான் தன்னைச் சுற்றும் எல்லா கிரகங்களையும் கட்டுப்படுத்தும் வலிமை பெற்றிருக்கிறது. அது இங்கு மழை பொழிய ஏற்பாடு செய்யும். விளைவுகள் ஏற்பட சில காலம் ஆகலாம். ஆனால் சிரத்தையுடன் சுயநலமில்லாமல் நாம் செய்வதால் கண்டிப்பாக இங்கு மழை பொழியும்

அந்த நபர் சொன்னார். “இங்கு கோடையில் மழை பொழிவதில்லை. அப்படி ஒரு வேளை நீங்கள் கூறுவது போல மழை பெய்தால் அது கண்டிப்பாக அதிசயம் தான்.

ஆனால் அந்த அதிசயம் நிகழவே செய்தது. சரியாக எட்டாவது நாளில் அதாவது 08-07-1991 அன்று பெய்ய ஆரம்பித்த மழை சாதாரண தூறலாக இருக்கவில்லை. சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே போய் பெருமழையாகப் பெய்ய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த மழையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நதி நிறைந்து மணிக்கு முப்பது மைல் வேகத்தில் கடலுக்குச் செல்ல ஆரம்பித்தது.  அங்குள்ள முக்கிய அணைக்கட்டான செபுல்வெடா அணைக்கட்டு (Sepulveda dam ) நிரம்பி வழிந்தது. சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. மோட்டார் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் பலர் திடீர் வெள்ளத்தை எதிர்பார்க்காமல் சிக்கிக் கொண்டு அவர்களை ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் பஞ்சம் ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்தது.

வானிலை ஆய்வாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள்.  1877 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பதிவு செய்திருந்த கோடைகால வானிலை அளவுகளில் இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கவேயில்லை என்பதே அவர்கள் வியப்பிற்கு காரணம்.

 

வின்சண்ட் ஜே. டாக்சின்ஸ்கீ (Vincent J. Daczynski)  என்ற அமானுஷ்ய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் எழுத்தாளர், லக்‌ஷ்மண்ஜூ நடத்திய ஹோமத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அவர் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார். அந்த அபூர்வ மழை பெய்த நிகழ்வை டெய்லி ந்யூஸ் என்ற பத்திரிக்கை  வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பின் புகைப்படத்தை இங்கே காணலாம். மழையே பெய்யாத ஒரு கோடை காலத்தில் மழை பெய்து பஞ்சம் நீங்க காரணம் அங்கு நடந்த ஒரு மணி நேர ஹோமம் அல்ல, சுவாமி லக்‌ஷ்மண்ஜூவின் யோகசக்தியே காரணம் என்று வின்சண்ட் ஜே. டாக்சின்ஸ்கீ போன்றவர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு சுவாமி லக்‌ஷ்மண்ஜூ நீண்ட காலம் உயிர் வாழவில்லை. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல் மாண்ட பிறகும் அவருடைய சொற்பொழிவுகளுக்காகவும், எழுதிய காஷ்மீர சைவசமயம் சம்பந்தமான புத்தகங்களுக்காகவும், அவருடைய யோகசித்திக்காகவும் உள்நாட்டு அறிஞர்கள் மட்டுமல்லாமல் மேனாட்டு அறிஞர்கள் பலரும் அவரை நினைவு வைத்திருக்கிறார்கள்!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 26-12-2014


Thursday, March 19, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 38


ஜீப் தன் பார்வையிலிருந்து மறையும் வரை மைத்ரேயனையே பார்த்துக் கொண்டிருந்த திபெத்திய கிழவர் இன்னொரு வாகனம் வரும் வரை அந்த சாலைப்பிரிவிலேயே நின்றிருந்தார். நாற்பது நிமிடம் கழித்து ஒரு மினிபஸ் வந்தது. அதில் ஏறி சில மைல் தூரங்கள் பயணித்து விட்டு ஒரு கிராமத்தில் இறங்கிக் கொண்டார். அவரோடு அந்தக் கிராமவாசி ஒருவனும் இறங்கினான். தன் கிராமத்தில் இறங்கும் பரிச்சயமில்லாத அந்தக் கிழவரை அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். அந்தக் கிழவர் அவனையே வெறித்துப் பார்த்தவுடன் பயந்து போய் வேகமாக நடையைக் காட்டினான். சில அடிகள் சென்ற பின் அவன் மெல்லத் திரும்பிப் பார்த்த போது கிழவரைக் காணவில்லை. திகைப்புடன் அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தான்.  அந்தக் கிழவரைக் காணவே காணோம்...

உண்மையில் அவன் ஆரம்பத்தில் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தக் கிழவர் அந்தச் சாலையிலிருந்து பிரிந்த ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதையில் வேக வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தார். இருமருங்கும் மரங்கள் சூழ்ந்திருந்த அந்தக் குறுகலான பாதை ஒரு பாழடைந்த வீட்டை அடைந்து முடிந்தது. கிழவர் அந்தப் பாழடைந்த வீட்டின் பின்பகுதிக்குப் போனார். பின்பகுதியில் அடர்த்தியாக வளர்ந்திருந்த செடிகொடிகள் பகுதிக்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் அவரைக் கவனித்துக் கொண்டு இல்லை. செடிகொடிகளை ஒரு இடத்தில் இரு கைகளாலும் விலக்கினார். சின்னதாய் ஒரு பாதை தெரிந்தது. உள்ளே புகுந்தவர் பழையபடி செடிகொடிகளை சேர்த்து விட்டு பாதையை மறைத்து விட்டார். பிறகு அந்தச் சின்னப் பாதையில் நடக்க ஆரம்பித்தார்.

பாதையில் ஒரு காட்டு நரியும், ஒரு விஷப்பாம்பும் கிடைத்தன. எந்தப் பயமும் இல்லாமல் அவற்றைக் கடந்து கிழவர் முன்னேறினார். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்த பின் மலையடிவாரத்தை வந்து சேர்ந்தார். கவனமாக பாறைகளில் ஏற ஆரம்பித்தார். சுமார் நூறடிகள் மேலே ஏறிய பிறகு ஒரு குகை வாசல் வந்தது. சுமார் மூன்றடி மட்டுமே அகலம் இருந்த அந்த குகை வாசலில் மண்டியிட்டபடியே உள்ளே சென்றார். ஐம்பதடிகள் சென்ற பின் பிரம்மாண்டமாய் குகை விரிந்தது. எழுந்து நின்றார்.

ஒரு பெரிய அறை போல் அங்கே இடம் விசாலமாய் இருந்தது. நடுவில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க அதைச் சுற்றி மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். மூவரில் ஒருவன் அழகான இந்திய இளைஞன். இடுப்பில் கருப்பாடை மட்டும் அணிந்திருந்தான். அவன் சிவந்த முகமும், உடலும் செதுக்கினது போல் இருந்தன. இன்னொருவர் நடுத்தர வயது ஆங்கிலேயர். கோட்டு சூட்டில் இருந்தார். மூன்றாமவர் வயதான சீனாக்காரர். சீனப் பழங்கால உடையில் இருந்தார். உள்ளே நுழைந்த திபெத்தியக் கிழவரை மூவரும் பார்த்து லேசாய் தலை சாய்த்து வணக்கத்தைக் காண்பித்தார்கள். திபெத்தியக் கிழவரும் அப்படியே  வணக்கம் தெரிவித்தார்.

அந்த அழகான இளைஞன் திபெத்திய மொழியில் அவரிடம் கேட்டான். “ஏன் பதட்டமாய் இருக்கிறீர்கள்?

அவர் பதட்டமாய் இருந்தது மைத்ரேயனைப் பார்த்த போது தான். அந்தப் பதட்டம் குறைந்து நிறைய நேரம் ஆகி விட்டிருந்தது. இப்போது வெளிப்பார்வைக்கு அவர் அமைதியாகவே இருந்தார். இருந்த போதிலும் அவர் மனதினுள்ளே ஆழத்தில் இருந்த பதட்டத்தை அவனால் உணர முடிந்தது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் சக்தி சாதாரணமானதில்லை.  அவன் சக்தியின் எல்லையைச் சோதித்து அறிந்தவர்கள் யாருமில்லை. அதனால் தான் உலகெங்கிலும் பிரதிநிதிகள் உள்ள அந்த ரகசியக் குழுவுக்கு இந்த இளம் வயதிலேயே அவன் தலைவனாகி இருக்கிறான். அவனுடைய நிஜப்பெயர் என்ன என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள் எல்லோரும் வணங்கும் தெய்வத்தின் பெயரையே வைத்து அவனை மாரா என்றே அழைத்தார்கள்.

திபெத்தியக் கிழவருக்கு அவனைச் சோதித்துப் பார்க்கத் தோன்றியது. சில சமயங்களில் அப்படிச் சோதித்துப் பார்க்கையில் அவன் எரிச்சலடைவதும் உண்டு. அப்படி அவன் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று எண்ணியவராக அவனிடம் சொன்னார். “உண்மை மாரா. என்னைப் பதட்டமடையச் செய்தது என்ன என்பதைச் சரியாகச் சொல் பார்ப்போம்

மாரா அவரையே கூர்ந்து பார்த்தான். அவன் பார்வை அவரை ஊடுருவியது. அவனுக்குக் கிடைத்த பதில் அவனை ஆச்சரியப்படுத்தியது போல இருந்தது. திகைப்புடன் கேட்டான். “மைத்ரேயன்?

அந்தப் பெயரைக் கேட்டவுடன், கூட இருந்த மற்ற இருவர்களும் திபெத்தியக் கிழவரை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.  திபெத்தியக் கிழவர் ஆமென்று தலையசைத்தார்.

மாரா ஒருவித இறுக்கமான அமைதியாகச் சொன்னான். “ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்

மைத்ரேயனைப் பார்த்த முதல் கணத்திலேயே அவன் தான் மைத்ரேயன் என்று தன் உள்ளுணர்வு ஓலமிட்டதிலிருந்து அவர் சொல்ல ஆரம்பித்தார். மூவரும் முழு கவனத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள். அவர் முடித்த பிறகும் சிறிது நேரம் அங்கு பலத்த அமைதி நிலவியது. அந்த ரகசியக் குழு அங்கத்தினர் அனைவரும் உள்ளுணர்வு கூர்மைப்படுத்தப்பட்டவர்கள்.  அந்த நுட்ப நிலையை எட்டாதவர்கள் அந்தக் குழுவின் அங்கத்தினராக முடியாது. அதனால் மூத்த உறுப்பினரான அவர் தன் உள்ளுணர்வு சொன்னதை அவர்கள் சந்தேகப்படவில்லை.  

இனி என்ன என்பது போல மாராவை மூவரும் பார்த்தார்கள். மாரா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்....

மைத்ரேயனின் அவதார காலம் பற்றி பத்து வருடங்களுக்கு முன் பேசப்பட்ட போதிருந்து அவர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால் லாமாக்கள் மௌனமாகிய பிறகு எல்லாம் அமுங்கிப் போனது. மைத்ரேயர் என்று நம்பப்பட்ட மூன்று குழந்தைகளையும் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சென்று மரணத்திற்கு முன்பே ரகசியக்குழு உறுப்பினர்கள் சிலர் சந்தித்தனர். அக்குழந்தைகள் மைத்ரேயன் அல்ல என்பதை உணர அவர்களுக்கு ஓரிரு நிமிடங்கள் கூடத் தேவைப்படவில்லை.  சந்தேகத்தின் பேரில் கொன்று விட்டு மைத்ரேயன் ஒழிந்தான் அல்லது பிறக்கவே இல்லை என்று சீன உளவுத்துறை எண்ண ஆரம்பித்தாலும் அந்த ரகசியக்குழு அந்தத் தவறான அனுமானத்திற்கு வந்து விடவில்லை. அவர்கள் பத்மசாம்பவாவின் கணிப்பு பொய்யாகும் என்று நம்பவில்லை.

மாராவிற்கு முன் அந்தக்குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த எகிப்திய குரு பல அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்தியவர். அவர் மூன்றாண்டுகளுக்கு முன் இறக்கும் வரை தன் அத்தனை சக்திகளையும் பயன்படுத்தி மைத்ரேயனைக் கண்டுபிடிக்கப் பார்த்தார். முடியவில்லை.

அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன் தான் எகிப்தில் ஒரு ரகசியக் கட்டிடத்தில் அந்தக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் கூட்டத்தில் மாராவை தனக்கு அடுத்த தலைவனாக நியமித்தார். ஏனிந்த திடீர் நியமனம் என்று ஒரு உறுப்பினர் கேட்ட போது தன் அந்திம காலம் நெருங்கி விட்டதென்று மட்டும் சொன்ன அவர் பிறகு, இறக்கின்ற நாளுக்கு முந்தைய நாள் வரை யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

கடைசி நாளில் அவர் மாராவை மட்டும் அழைத்துப் பேசினார். நம் ரகசியக் குழுவின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் பொறுப்பும் வாய்ப்பும் உனக்குத் தான் வாய்த்திருக்கிறது மாரா. மைத்ரேயனைக் களத்தில் நீ தான் சந்திக்கப் போகிறாய். இந்தக் குழுவில் இது நாள் வரை இருந்த யாருமே அடைந்திராத சக்திகளை எல்லாம் நீ அடைந்திருக்கிறாய்.  அத்தனையும் உனக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். …. கலிகாலம் நமக்குத் தான் சாதகமாக இருக்கப் போகிறது என்றாலும் கூட எதிரியைக் குறைத்து மதிப்பிட்டு விடாதே.... ஜாக்கிரதையாய் இரு....

அவருக்கு மூச்சிறைக்க ஆரம்பிக்கவே சிறிது நேரம் பேச்சை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு மறுபடி தொடர்ந்தார்.  “பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி நமக்கும் உபகாரமாகவே இருக்கிறது. பத்து வயது முடிந்த பிறகு ஒருவருட காலம் மைத்ரேயனுக்கு ஆபத்தான காலம் என்று அவர் சொல்லி இருப்பதன் மூலம் எந்தக் காலத்தில் அவனை நாம் வீழ்த்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் என்றே எடுத்துக் கொள்ளலாம். என் அனுமானம் சரியாக இருந்தால் அந்த ஆபத்தான காலம் ஆரம்பிக்கும் போது தான் மைத்ரேயன் வெளிப்படுவான். அந்த ஒரு வருட காலத்தில் அவனை வீழ்த்த முடியவில்லை என்றால் பின் என்றென்றும் அவனை நம்மால் வீழ்த்த முடியாது. அதனால் அந்த ஒரு வருட காலம் நமக்கு மிக முக்கியமான அனுகூலமான காலம் என்பதை நினைவு வைத்திரு மாரா...

அன்று எகிப்திய குரு சொன்னது போலவே இத்தனை நாட்கள் மறைவாய் இருந்த மைத்ரேயன் இன்று வெளிப்பட்டிருக்கிறான்...என்று நினைத்த மாரா திபெத்தியக் கிழவரிடம் மைத்ரேயனுடன் இருந்த மனிதனைப் பற்றி விவரிக்கச் சொன்னான்.

“கூட இருந்த ஆளுக்கு வயது சுமார் 35 இருக்கலாம்.... மூங்கிலாய் வளைய முடிந்த உடம்பு..... புத்த பிக்கு உடையில் இருந்தாலும் குடும்பஸ்தன் என்று அவனைச் சுற்றி உள்ள அலைகள் சொல்கின்றன. ஆனால் புத்த மதத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.....

மாரா அவரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “அவன் குடும்பஸ்தன் என்று மட்டும் தான் அவனைச் சுற்றி உள்ள அலைகள் சொல்கின்றனவா வேறேதும் சொல்லவில்லையா?

திபெத்தியக் கிழவருக்கு அதற்கு மேல் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் கவனம் முழுவதும் மைத்ரேயன் மீதே இருந்தது தான் என்பது மாராவிற்குப் புரிந்தது.

அவன் அடுத்த கேள்வியை அமைதியாக எழுப்பினான். “மைத்ரேயனைச் சுற்றி இருந்த அலைகள் என்ன தெரிவித்தன? எந்த விதமான சக்திகளை அவன் பெற்றிருக்கிறான்?  

“அவன் தான் மைத்ரேயன் என்பதைத் தவிர வேறெந்த தகவலையும் என்னால் அறிய முடியவில்லை மாரா. எல்லாவற்றையும் அவன் ரகசியமாய் தன்னுள்ளே பூட்டி வைத்திருக்கிறது போலவே தோன்றியது... என்னை மிகவும் பாதித்தது என்ன தெரியுமா மாரா. என்னை, அதன் மூலம் நம்மை, இருப்பதாகக் கூட அவன் அங்கீகரிக்கவில்லை. நாமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் அலட்சியமாய் இருந்தான்.... அதைத்தான் தாங்க முடியவில்லை.....

மாரா புன்னகையுடன் சொன்னான். “ஒரு காலம் விரைவில் வரும்.... அவன் நம்மைத் தவிர வேறெதையும் யோசிக்க முடியாத காலமாய் அது இருக்கும்....

திபெத்தியக் கிழவரும் மற்ற இருவரும் புன்னகைத்தார்கள். மாரா வெற்று வார்த்தைகளை வீசுபவன் அல்ல.... சொன்னால் கண்டிப்பாகச் செய்து காட்டுவான்.

சீனர் சிறிது யோசனைக்குப் பிறகு சொன்னார். “அதெல்லாம் பிறகு பார்ப்போம். மைத்ரேயனை அவன் எதிரியான லீ க்யாங் இப்போது தேடிக் கொண்டிருக்கிறான். சம்யே மடாலயம் நோக்கி தான் மைத்ரேயன் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை லீ க்யாங்குக்குத் தெரிவித்தால் என்ன? மீதியை அவன் பார்த்துக் கொள்வான்....

(தொடரும்)
என்.கணேசன்Monday, March 16, 2015

பாபாஜியின் அருள் வேண்டுமா?


15. மகாசக்தி மனிதர்கள்

ரணத்தை வென்ற ஒரு மகாயோகியை நேருக்கு நேராக சந்தித்த பேரனுபவத்தில் லாஹிரி மஹாசாயாவின் மொராதாபாத் நண்பர்கள் பெரிதும் மனம் மகிழ்ந்தார்கள். அந்த அனுபவத்திற்குப் பின் அவர்களில் ஒருவரான மைத்ரா என்பவர் லாஹிரி மஹாசாயாவின் சீடராக மாறி விட்டார். மைத்ரா மஹாசாயா என்ற பெயரில் பெரிய ஆன்மிக குருவாக மாறியிருந்த அவரை பரமஹம்ச யோகானந்தர் பிற்காலத்தில் சந்தித்த போது மொரதாபாதில் பாபாஜியை சந்தித்த நிகழ்ச்சியை அவர் உறுதிபடுத்தியிருக்கிறார்.

லாஹிரி மஹாசாயா பிற்காலத்தில் அலகாபாத்தில் கும்பமேளா நடந்த போது சென்றிருந்தார். இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் சாதுக்கள் பலரும் அங்கு வந்திருந்தார்கள். அலகாபாதில் காணும் இடமெல்லாம் அவர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சாது உடலெல்லாம் திருநீறு பூசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடனேயே அவர் போலி சாது என்ற எண்ணம் லாஹிரி மஹாசாயாவுக்கு வந்தது. வெளிப்புற வேஷத்திற்குப் பொருத்தமில்லாத மனம் உடையவராக அந்த சாதுவை நினைத்தார். அந்த எண்ணம் வந்த போதே அந்த சாதுவின் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்து லாஹிரி மஹாசாயா துடுக்குற்றார். வணங்கிக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல பாபாஜியே தான்.    

அவரைக் கண்டதும் வியந்து போன லாஹிரி மஹாசாயா பாபாஜியிடம் விரைந்தார். “குருவே நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

“இந்தத் துறவியின் பாதங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறேன். இது முடிந்தவுடன் அவருடைய உணவுப்பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து வைப்பேன்என்று அமைதியாக பாபாஜி சொன்னார். தன்னுடைய நடவடிக்கையின் மூலம் பாபாஜி அறிவுறுத்துவது என்ன என்பது லாஹிரி மஹாசாயாவுக்கு நன்றாகப் புரிந்தது. “யாரைப்பற்றியும் விமர்சனம் செய்யாமல், உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ எல்லோரிடமும் குடிகொண்டுள்ள இறைவனை வணங்குவது முக்கியம்!

பாபாஜி லாஹிரி மஹாசாயாவிடம் சொன்னார். ஞானிகளுக்கும், அஞ்ஞானிகளுக்கும் சேவகம் செய்வது மூலம் இறைவனுக்குப் பிடித்த நற்குணங்களிலேயே தலையாய பண்பான பணிவைநான் கற்றுக் கொள்கிறேன்”  வியக்கத்தக்க மகாசக்திகளைப் பெற்றிருந்த போதும் பாபாஜியிடம் கர்வம் சிறிதும் இருக்கவில்லை என்பதற்கு இந்த நிகழ்வை உதாரணமாகச் சொல்லலாம்.

கர்மவினைப் பலன்களும் கூட பெரிதாகத் தன் பக்தர்களையும், சீடர்களையும் பாதிக்காதபடி கவனமாக அவர்களைப் பாதுகாத்து அருள்புரிகிறார் என்று சொல்லப்படுகிறது. லாஹிரி மஹாசாயா ஒரு நிகழ்ச்சியை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்.

இமயத்தில் ஒரு இரவு தீயை மூட்டி அவரும் அவருடைய சீடர்களும் குளிர்காய்ந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு எரியும் கொள்ளியை எடுத்து தன் சீடன் ஒருவரின் தோள்பட்டையில் பாபாஜி சொருகினாராம். அருகில் இருந்த லாஹிரி மஹாசாயா தாங்க முடியாமல் “என்ன ஒரு குரூரமான செய்கை இதுஎன்று வாய் விட்டுச் சொன்னாராம்.

இவனது முந்தைய கர்மவினைப்படி இவன் தீயில் வெந்து போய் விட வேண்டி இருந்தது. முற்றிலும் விளக்க முடியாத கர்ம வினையை ஓரளவு அனுபவித்து இவன் முடித்து விடத் தான் அப்படிச் செய்தேன்என்று பாபாஜி விளக்கம் தந்திருக்கிறார்.  

மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு சிகிச்சை அளித்தவர் என சொல்லப்படுகிற டாக்டர் ராம் போஸ்லே (Dr Ram Bhosle) விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மும்பையைச் சேர்ந்த அவர் ஆங்கிலேயர் சிறைப்பிடித்தி விடுவார்கள் என்று பயந்து இமயமலைக்குத் தப்பித்து ஓடியவர். இமயமலையில் அவர் பதுங்கி இருந்த போது மகா அவதார் பாபாஜியைச் சந்தித்து அவருடைய சீடரானவர். 2005 ஆம் ஆண்டு காலமான அவர் இறுதி வரை மிகுந்த துடிப்புடன் செயல்பட்டவர். அவரும் பாபாஜியுடனான தன் அனுபவங்களை விரிவாகக் கூறியிருக்கிறார். பாபாஜி செய்து காட்டிய பல அற்புதங்களைக் கூறியிருக்கும் அவர் அந்த அற்புதங்கள் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தினாலும் அவை எல்லாமே சூட்சும விஞ்ஞான அடிப்படையைக் கொண்டவையே என்று கூறுகிறார்.  அந்த விஞ்ஞான அடிப்படைகள் புரியாத போது தான் எல்லாமே அற்புதங்களாகத் தெரிகின்றன என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது.   

இப்படி நமக்குத் தெரிந்து 19 ஆம் நூற்றாண்டு லாஹிரி மஹாசாயாவிலிருந்து 21 ஆம் நூற்றாண்டு ரஜினிகாந்த் வரை ஏராளமான பக்தர்களைக் கொண்டிருக்கிற மகா அவதார் பாபாஜியை நம்பி வணங்கினோர் கைவிடப் படமாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை பலரிடத்தும் இருக்கிறது. லாஹிரி மஹாசாயா மகா அவதார் பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் உச்சரித்தாலும், உச்சரித்தவர்களுக்கு உடனடியாக அவர் அருள் வந்து சேரும்என்று கூறி இருக்கிறார்.

பாபாஜியின் உபதேசமான கிரியா யோகா, மூச்சுப்பயிற்சியுடன் தியானப் ப்யிற்சி கலந்த ஒரு யோக முறை. இக்காலத்திற்குத் தகுந்தாற்போல் எளிமையாக அமைக்கப்பட்டதென்று கூறுகிறார்கள்.  பீகாரில் உள்ள ராஞ்சியில் பரமஹம்ச யோகானந்தர் அமைத்துச் சென்ற யோகதா சத்சங்க சொசைட்டி மூலமாக கிரியா யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. பாபாஜியை நம்பிக்கையோடு வணங்குபவர்களுக்கும், கிரியா யோகா பயிற்சியை முறையாக சிரத்தையோடு பின்பற்றுபவர்களுக்கும் அவர் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவ உண்மை என்று மகா அவதார் பாபாஜியின் அருளுக்குப் பாத்திரமான பலரும் இன்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.   

சமீப காலங்களில் இமயமலையில் இருக்கும் மகா அவதார் பாபாஜியின் குகை மிகவும் பிரபலமாகி வருகிறது. அங்கு நிறைய பேர் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பாபாஜி குகை துனகிரி (Dunagiri) மலையில் குகுசினா (Kukuchina) என்ற இடத்தில் இருக்கிறது.  அங்கு செல்பவர்கள் கத்கொடம் (Kathgodam) என்கிற இடம் வரை ரயிலில் சென்று அங்கிருந்து ராணிகேத் வழியாக த்வாரஹத் (Dwarahat) என்ற இடம் வரை கார் அல்லது ஜீப் அல்லது பஸ்ஸில் செல்கிறார்கள். த்வாரஹத்தில் இருந்து குகுசினா சுமார் 15 கிமி தொலைவில் உள்ளது. அங்கு செல்ல ஜீப் அல்லது கார் கிடைக்கிறதாம் குகுசினாவில் இருந்து பாபாஜி குகைக்கு நடந்து செல்ல வேண்டுமாம். சுமார் ஒரு மணி நேரம் நடந்தால் பாபாஜி குகையை அடைந்து விடலாம் என்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று ஆட்கள் மட்டுமே நுழைய முடிந்ததாக மட்டுமே இருக்கும் பாபாஜியின் அந்தச் சிறிய குகையில் சில நிமிடங்கள் தியானம் செய்து விட்டு வருவதை அவர் பக்தர்கள் ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவமாகச் சொல்கிறார்கள்.

அந்தக் குகையில் மகா அவதார் பாபாஜியை நேரடியாக பார்க்க முடிந்த அனுபவம் கிட்டத்தட்ட இக்காலத்தினரில் யாருக்கும் இல்லை என்றாலும் அங்கு சூட்சும சரீரத்தில் அவர் இருக்கிறார் என்பது போல பலரும் உணர்வதாகச் சொல்கிறார்கள். யோகிகளும் சித்தர்களும் மனித உருவில் மட்டும் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் எந்த உருவிலும் இருக்க முடிந்தவர்கள். உருவமே இல்லாமல் சூட்சும சரீரத்திலும் இருக்க முடிந்தவர்கள் என்பதால் அந்த பக்தர்கள் அவரை உணர முடிந்தது உண்மையாகவும் இருக்கக்கூடும்.

ஆனால் செல்லும் இடங்களை விட அணுகும் மனநிலையின் தூய்மை தான் எல்லாவற்றையும் விட முக்கியம். அந்தத் தூய்மை மனத்தில் இருந்தால் மகா அவதார் பாபாஜி போன்ற யோகிகளின் அருளை இருக்கும் இடத்தில் இருந்தே ஒருவர் பெற்று விட முடியும்!

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி : 19-12-2014