சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 13, 2020

சத்ரபதி 107


சிவாஜி யானை மேல் அமர்ந்து வந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் ராஜா ஜெய்சிங்குக்கு வந்து சேர்ந்தது. அவனுடன் அவன் காவலர்கள், அமைச்சர் ரகுநாத் பந்த் மற்றும் அதிகாரிகளும் வந்து கொண்டிருக்கிறார்களாம். தகவல் அறிந்து ராஜா ஜெய்சிங் நிம்மதி அடைந்தார். என்ன தான் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சிவாஜி ஒப்புக் கொள்வதாய் தகவல் அனுப்பி இருந்தாலும் சிவாஜி எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று யாருமே சரியாக யூகிக்க முடியாது என்று பலரும் கூறுவதால் அவன் வந்தால் தான் அது நிச்சயம் என்ற அபிப்பிராயத்தில் அவர் இருந்து வந்தார்.  

சிவாஜி அவருடைய முகாமை நெருங்கியவுடன் அவரே வெளியே சென்று மிகுந்த மரியாதையுடன் அவனை வரவேற்றார். அவனைப் பார்க்க அவரது முகலாயப்படையினர் பலரும் ஆவலாகக் காத்திருந்தனர். அவர்களில் பலர் அவனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்களே ஒழிய நேரில் பார்த்ததில்லை. பலரால் பல விதமாக வர்ணிக்கப்பட்டவன் நேரில் பார்க்க எப்படி இருப்பான் என்கிற ஆவல் அவர்களிடம் தெரிந்தது. அதைக் கவனித்த ராஜா ஜெய்சிங் புன்னகை பூத்தார். அவர்களைப் போலத் தான் அவரும் இருந்தார்.

சிவாஜி மிக எளிமையாகவும், வசீகரப்புன்னகையுடனும் இருந்தான். மிக மரியாதையாக வணங்கினான். மிகவும் பணிவாகத் தெரிந்தான். ஆனால் தோற்றங்கள் பல நேரங்களில் உண்மை நிலையை மறைத்துக் காட்டக்கூடிய தன்மை கொண்டவை என்பதை அறிந்திருந்த ராஜா ஜெய்சிங் அதை வைத்து எதையும் தீர்மானிக்க முனையவில்லை.

அவரும் மிகவும் மரியாதையுடனேயே அவனை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே இரு தரப்பு அதிகாரிகளின் பரஸ்பர அறிமுகங்கள் நடைபெற்றன. பின் இருவரும் தனியறைக்குச் சென்று பேசினார்கள்.

ராஜா ஜெய்சிங் அவனிடம் திறந்த மனத்துடனேயே பேச ஆரம்பித்தார். “நீங்கள் இங்கு வந்து சேரும் வரை இந்தச் சந்திப்பு நடைபெறும் என்கிற நிச்சயமான நம்பிக்கை என்னிடம் இருக்கவில்லை.” சிறிய புன்னகையுடன் தொடர்ந்து சொன்னார். “ஏனென்றால் தங்களுடைய கடந்த கால சரித்திரம் அப்படி”

சிவாஜி வாய் விட்டுச் சிரித்தான். “சரித்திரங்கள் சூழ்நிலைகளுக்குப் பொருத்தே அமைகின்றன. அதற்கு அடியேனைக் குற்றம் சாட்டக்கூடாது”

ராஜா ஜெய்சிங் சொன்னார். “சூழ்நிலைகளின்படி சம்பவங்கள் அமையலாம். ஆனால் சரித்திரம் சூழ்நிலைகளைத் தாண்டிச் செயல்பட முடிந்த மனிதர்களாலேயே உருவாகிறது அரசே.”

சிவாஜி அவர் சொன்னதை ரசித்தான். “உண்மை. உண்மை. ஆனால் சில நேரங்களில் சூழ்நிலைகள் தாண்ட முடியாதவையாகவும் அமைந்து விடுகின்றன”

அந்த வார்த்தைகளும், அவற்றைச் சொல்லும் போது ஒரு கணம் அவன் முகத்தைக் குறுக்கிட்ட சோகமும் ராஜா ஜெய்சிங்கை மனம் நெகிழச் செய்தன. சிவாஜி அவர் மூத்த மகன் ராம்சிங்கின் வயதிருப்பான் என்று தோன்றியது.

சிவாஜி மெல்லக் கேட்டான். “அரசே. முகலாயச் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக அல்லாமல், பாரதத்தின் மைந்தனாக, ராஜபுதன வம்சத் தோன்றலாக உங்களிடம் சில நிமிடங்கள் மனம் விட்டு நான் பேசலாமா?”

ராஜா ஜெய்சிங்கின் புருவங்கள் உயர்ந்தன. “பேசுங்கள் அரசே”

“இது நம்முடைய பூமி. வேதங்கள் பிறந்த புனித பூமி. நம் மூதாதையர்கள் ஆண்டு அனுபவித்து வந்த பூமி. இந்தப் பூமியை அன்னியர்கள் ஆக்கிரமித்து இப்போது ஆண்டு வருவதையும், தாங்கள் அவர்களுக்கு அடிபணிந்து சேவகம் செய்து வருவதையும் தங்கள் மனம் ஒப்புக் கொள்கிறதா?”

ராஜா ஜெய்சிங் சில கணங்கள் அமைதியாக அவனைப் பார்த்தார். பின் மெல்லச் சொன்னார். “பூமி யாருக்கும் உரிமையானதல்ல.  இன்று ஒருவனுடையது நாளை இன்னொருவனுடையதாகிறது. அந்த இன்னொருவனின் உரிமையும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது பெரிய கேள்விக்குறியே. இங்கு பிறந்த வேதங்களும் நமக்கு மட்டுமானதல்ல. பொதுவாய் மனிதகுலத்திற்கானது. நம் மூதாதையர்கள் இங்கேயே இருந்தவர்கள் தானா, வேறெங்கிருந்தாவது வந்தவர்களா என்பதையும் நாம் அறியோம். அப்படி இருக்கையில் எது நம்முடையது யார் அன்னியர்கள் என்று எப்படிச் சொல்வது”

சிவாஜி அவரை ஊடுருவிப் பார்த்தபடிச் சொன்னான். “நான் கேட்டவுடன் உங்கள் இதய ஆழத்தில் எழுந்த பதிலைத் தள்ளி வைத்து விட்டு தர்க்க ரீதியாகவும் சாமர்த்தியமாகவும் பதிலை உருவாக்கிச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறதே அரசே. என் கணிப்பு சரி தானா?”

ராஜா ஜெய்சிங் வாய்விட்டுச் சிரித்து விட்டார். அவருக்குச் சிவாஜியை மிகவும் பிடித்து விட்டது. அவன் கணிப்பு உண்மையே. ஆனால் அவர் அதை அவனுக்குத் தெரிவிக்கப் போவதில்லை. விட்டால் அவன், பேச்சையும், அவரையும் திசை திருப்பி விட முடிந்த கூர் அறிவு உள்ளவன்.

அவர் அவனிடம் அன்பு கலந்த உறுதியுடன் சொன்னார். “அரசே நாம் சித்தாந்தங்கள் பேச இங்கு வரவில்லை. சித்தாந்தங்கள் பேசும் சூழ்நிலையும் இங்கில்லை. தவிரவும் இப்போதைய முகலாயச் சக்கரவர்த்திக்குச் சேவகம் செய்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இவரது கொள்ளுத் தாத்தாவான சக்கரவர்த்தி அக்பருக்கு என் கொள்ளுத் தாத்தா மான்சிங் சேவகம் செய்தார். அந்தச் சேவகம் பாரம்பரியமாக இன்று வரை தொடர்கிறது. மேலும் நான் ஒருவருக்குச் சேவகம் செய்ய ஆரம்பித்த பின் அவருக்கு உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும் என்பது தான் எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட தர்மம். அந்தத் தர்மமே எனது அடையாளம். வேறெந்த தர்மத்திலும் எனக்கு நாட்டமில்லை”

இவரைக் குறித்து ரகுநாத் பந்த் சொன்னது மிகத் துல்லியமான கணிப்பு என்று சிவாஜி எண்ணிக் கொண்டான்.

ராஜா ஜெய்சிங் ஔரங்கசீப்பின் பிரதிநிதியாகப் பேச ஆரம்பித்தார். “அரசே. நீங்கள் சுபிட்சத்துக்கும், முன்னேற்றத்திற்கும் தனியாக நின்று போராடி வருகிறீர்கள். உண்மையில் அது அவசியமில்லை. முகலாய அரசில் அங்கம் வகித்தால் நீங்கள் பெறப்போகும் நன்மைகள் ஏராளம். உங்களைப் போன்ற மாவீரர் எங்கள் பக்கம் சேர்ந்தால் சுபிட்சத்தையும், முன்னேற்றத்தையும் நீங்கள் தேடிப் போக வேண்டியதில்லை. அவை உங்களைத் தேடி வரும்”

சிவாஜி உடனடியாகச் சொன்னான். “அடிமைத்தனத்தோடு சேர்ந்து வரும் எதையும் என்னால் சுபிட்சமாகவும், முன்னேற்றமாகவும் நினைக்க முடியவில்லை அரசே. சிங்கத்தின் வாலாய் இருப்பதை விட, ஒரு சுதந்திரமான எலியின் தலையாய் இருக்கவே நான் விரும்புகிறேன்”

சக்கரவர்த்தி ஔரங்கசீப்பும், மற்ற சிலரும் சிவாஜியை மலை எலி என்று வர்ணித்தது நினைவு வந்தது. இவனும் அந்த எலி உதாரணத்தையே சொல்கிறான். ராஜா ஜெய்சிங் அவரையும் மீறிப் புன்னகைத்தார்.

பின் அவர் மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னார். “அப்படியானால் முகலாயச் சக்கரவர்த்தியுடன் நட்போடாவது இருங்கள் அரசே. அதுவே உங்களுக்கு நல்லது. அதற்கு மறுத்தால் இந்தப் போர்கள் தொடரும். சில நாட்கள் அல்லது மாதங்கள் நீங்கள் தாக்குப்பிடிக்கலாம் நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இரு பக்கமும் பேரிழப்புகள் நீடித்துக் கொண்டே போகும். எத்தனை பேரிழப்புகள் வந்தாலும் முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு அது சமாளிக்க முடிந்த இழப்பாகவே இருக்கும். ஆனால் உங்களுக்கு அப்படி இருக்க வழியில்லை. முடிவில் வெல்வது எங்கள் பக்கமாகவே இருக்கும்”

சிவாஜிக்கு அவர் உண்மையையே சொல்கிறார் என்பது புரிந்தது. அது முன்பே புரிந்ததனால் தான் அவன் பேச்சு வார்த்தைக்கே வந்திருக்கிறான்.  சிவாஜி சொன்னான். “சரி. சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள உங்களது நிபந்தனைகள் என்ன?”

”முதலில் எங்களை எதிர்ப்பதை நிறுத்தி விட்டு உங்கள் கோட்டைகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்….”

இந்தக் கோரிக்கை கண்டிப்பாக வைக்கப்படும் என்று முன்கூட்டியே அறிந்திருந்தும் அதைக் கேட்கையில் சிவாஜியின் இரத்தம் கொதித்தது. ஒவ்வொரு கோட்டைக்கும் அவன் எடுத்திருந்த முயற்சிகள், பட்டிருந்த கஷ்டங்கள், அதற்காக எத்தனையோ பேர் செய்த உயிர்த்தியாகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. ராஜா ஜெய்சிங் சொல்லிக் கொண்டு போன மற்ற கோரிக்கைகள் அரைகுறையாகத் தான் அவன் மனதில் பதிந்தன.


அவன் முகம் போன போக்கையும், முகத்தில் தெரிந்த வேதனையையும் கவனித்த ராஜா ஜெய்சிங் ஒரு கணம் அவனுக்காகப் பச்சாதாபப்பட்டார். அவர் மிக மென்மையாக அவனிடம் சொன்னார். “முகலாயச் சக்கரவர்த்தி இந்த முறை மிகப்பிடிவாதமாக இருக்கிறார் அரசே. அவரை நான் மிக நீண்ட காலமாக அறிவேன் அரசே. ஒரு தேவை அவர் மனதில் பதிந்து விட்டால் என்ன விலை கொடுத்தாவது அதை நிறைவேற்றாமல் விட்டதில்லை. இந்த முறை அவர் தேவை உங்களை அடிபணிய வைப்பது அல்லது  நட்பாக்கிக் கொள்வதாக இருக்கிறது. அதற்காக அவர் எத்தனை படை இழப்பையும், செல்வத்தின் இழப்பையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார்.”

(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. Your unique style of writing is superbly illustrated in this episode. Both Sivaji and Raja Jaisingh are portrayed very well. Each person's thinking, intelligence and character is picturized in depth. Thanks sir.

    ReplyDelete
  2. ரேவதி மகாதேவன்January 15, 2020 at 2:26 AM

    சிவாஜி ஜெய்சிங் உரையாடல் அருமையிலும் அருமை. இருவர் பக்கத்து நியாயங்களையும் நடுநிலையோடு ஒரு சாட்சி போல சொல்லிய பாங்கை வியக்கிறேன்.

    ReplyDelete
  3. சிவாஜியின் கேள்வி மற்றும் பதில்கள்...
    ராஜா ஜெய்சிங்கின் கேள்வி மற்றும் பதில்...
    இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தல்ல....

    அதிலும் ஜெய்சிங் சொன்ன "எதுவும் நம்முடைதல்ல...அவை நாளை மற்றொருவனுடையதாகும்" என்ற உதாரணம் அருமை‌‌.... நம்மையும் சிந்திக்கவே வைக்கிறது...

    ReplyDelete