சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, March 29, 2011

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்

முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.

இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன்படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்பதாக பயன்படுத்தி பலன் கண்டவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.

ஞான முத்திரை

கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.

நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக்குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

வருண முத்திரை

பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கிறார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.

சூன்ய முத்திரை

கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும் போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.

இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
ப்ராண முத்திரை

கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.

இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்தமான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.

அபான முத்திரை

கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது.

இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.

அபான வாயு முத்திரை

அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது

இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

லிங்க முத்திரை

படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.

சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகுவாகக் குறைக்கிறது.

இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.

முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.

பின் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.

இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.


ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பாக இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச்சைக்கு இணை என்று சொல்லும் அளவு பரிசோதனைகள் முடிவு விஞ்ஞான பூர்வமாக முழுமையாக வெளியாகி விடவில்லை. ஆனால் நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரிசோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?

- என்.கணேசன்

Friday, March 25, 2011

நிஜ மரணம்
மூச்சு நிற்கும்
இந்தக் கணம்
எந்தன் மரணம்
நிகழவில்லை, மகனே!
முன்பே உன்னால்
முதியோர் இல்லத்தில்
மனம் ரணமாக
முதலடி வைத்த போதே
நிஜ மரணம் எனக்கு
நிகழ்ந்து விட்டது.
எனவே என் மரண நாளாக
அதையே நீ குறித்துக் கொள்!


-என்.கணேசன்

Monday, March 21, 2011

எல்லாம் தகரும் தருணங்களில்....!


விதி வலியது. அது சில சமயங்களில் நம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடும். அந்த சமயங்களில், இருந்தது எல்லாம் தகர்ந்து போய் ஒரு பூஜ்ஜியமாய், எதிர்கால வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாய் போய் விடுவதுண்டு. இனி ஒன்றுமில்லை, வாழ ஒரு வழியுமில்லை என்கிற நிலைக்கு வந்து நமக்கு நேர்ந்ததை ஜீரணிக்கவும் முடியாமல் நம்மை திகைக்க வைத்து விடுவதும் உண்டு. அது போன்ற ஒரு நிலை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் நல்ல கதை ஒன்றில் முக்கியப் பாத்திரத்திற்கு வந்து விடுகிறது.

அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான். சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.

அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார். இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.

அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.

சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.

அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.

தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.

“எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.

இது என் மனதில் நின்ற ஒரு கதை. நான் ஆரம்பத்தில் சொன்னது போல தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.

இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.

உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. ஒரு வேலையோ, ஒரு உதவியோ நம்மிடமிருந்து பறிக்கப்படும் போது வாழ்க்கையே பறிக்கப்பட்டு விடுவது போல உணர்வது உடனடி மனித சுபாவம் என்றாலும் அதை அப்படியே நம்பி ஸ்தம்பித்து விடுவது விவேகமல்ல. இறைவன் ஒரு கையால் நம்மிடமிருந்து ஒன்றைப் பறிக்கையில் இன்னொரு கையால் இன்னொரு நல்ல சந்தர்ப்பத்தை நீட்டாமல் இருப்பதில்லை. எனவே ஒன்று பறிக்கப்படும் போது கண்களை மூடிக்கொண்டு எல்லாம் அஸ்தமித்து விட்டது என்று முடிவுக்கு வருவதற்கு பதிலாகக் கண்களைத் திறந்து அந்த இன்னொரு சந்தர்ப்பம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்ற நம்பிக்கையோடு சுற்றும் முற்றும் பார்ப்பது அவசியம்.

ஒரு தம்ளரில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் பாலை நிரப்ப வேண்டுமென்றால் நீங்கள் அந்தத் தண்ணீரைக் கொட்டியே தீர வேண்டும். பின்னர் தான் அந்த தம்ளரில் பாலை நிரப்ப முடியும். அப்படி தண்ணீரைக் கொட்டும் போது அதை ஒரு இழப்பாக நாம் கருதினால் எப்படி அது அறிவீனமாய் இருக்குமோ அது போல தான் சில சில்லறை இழப்புகளை நாம் பேரிழப்பாகக் கருதுவதும். அதை இழக்க வைத்து கடவுள் நம்மிடம் நிரப்ப முன் வருவதென்ன என்ற கவனமாகப் பார்த்தால் கண்டிப்பாக உங்களால் அதற்கு கண்டிப்பாக நன்றி சொல்ல முடியும்.

நாம் முன்பு பார்த்த கதையில் தேவாலயப் பணியாளன் தனக்கு தெரிந்த ஒரே வேலையை இழந்ததும், தம்ளரில் இருந்த தண்ணீர் கொட்டப்பட்டது போல உண்மையில் நல்ல நிகழ்வே. ஏனென்றால் அப்படி இழக்காமல் இருந்திருந்தால் அதை விட பன்மடங்கு மேலான உன்னதமான ஒரு நிலையை அவன் அடைந்திருக்க முடியாது.

எனவே எல்லாம் தகரும் தருணங்களில் நிலைகுலைந்து போய் விடாதீர்கள். நடப்பதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடாதீர்கள். எதையும் நம்பி யாரும் இல்லை என்று தைரியமடையுங்கள். இறைவன் ஒன்றை எடுத்துக் கொண்டால் இன்னொன்றைத் தராமலிருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை வைத்திருங்கள். அமைதியாக அந்த இன்னொன்றைத் தேடுங்கள். அந்த நேரங்களில் அமைதியிழக்காமல், நம்பிக்கை இழக்காமல் நீங்கள் அப்படித் தேடுவீர்களானால் பெறுவது இழப்பதற்கு முன்னிருந்த நிலையை விட உயர்வான நிலையாகவே இருக்கும், அல்லது உயர்வான நிலைக்குப் போகும் பாதையின் துவக்கமாக இருக்கும்.!

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Wednesday, March 16, 2011

உயர்ந்த செயலின் ரகசியம்


கீதை காட்டும் பாதை – 6

உயர்ந்த செயலின் ரகசியம்

கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.

“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்), பற்றின்றியும் யோகத்தில் உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும் செயல் புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.

தனஞ்செயா, செயல் பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது. ஆகையால் பற்றற்ற நிலையையே தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது

பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த ஆனந்த நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத் தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல் புரிய ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை என்பதும் ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் என்பது விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது. விளைவில்லாத செயல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே விளைவும் மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை. விதைத்தது அவரை என்றால் விளைவது துவரையாக முடியாது. எனவே அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற கவலையில் ஆழ்வது அர்த்தமற்றது.


ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மன ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல் திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனது ஆற்றலும், அறிவுக்கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த செயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற விடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக நிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல் செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது.

ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த செயலிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன் கலையில் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில் அவனுக்கு கிடைக்கக் கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள் இதை எப்படி விமரிசிப்பார்கள் என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது பாதிக்காமல் இருக்காது. அது ஒரு உன்னதப் படைப்பாக இருக்காது.


அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும், உபநிடதங்களும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை எல்லாம் படைத்தவர்கள் எந்த பாராட்டையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது போல தங்கள் பணிகளைச் செய்தது தான். இவை எவற்றிலும் அதைப் படைத்தவர்கள் பெயர் இல்லை. எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய முனிவர்களுக்கோ இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக வந்திருக்கின்றன என்கிற ஆத்ம திருப்தி மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய செயலுக்கும் பெரிய விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில் அவர்கள் சிரமங்கள் எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த படைப்புகள் முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு இருக்கும். எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே கும்மிருட்டு கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை எல்லாவற்றிலும் வியக்க வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள் ஒன்றிலும் கூட முன்பு குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை. (காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து மறைந்து கிடந்த அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன. பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு வந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி தள்ளியே நின்று தான் பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும் ஆசாமிகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக் குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது குறைந்து போனால் கூட அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள் செய்யப் போகிற அடுத்த செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ் கிடைப்பதற்கேற்ற படி உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே தான் பலன் மீது அதீத அக்கறை வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன் தானாக வரும் என்கிறது கீதை.


குரானில் ஒரு வாசகம் வருகிறது. “என்னுடைய ஊதியம் அல்லா ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன் தருபவன் இறைவன். இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து கணக்கை சரி செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும், விளைவையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய் கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ வெளிப்படையான அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு நிருப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச் சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக் கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து செல்லலாம் என்கிறது கீதை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும் விளக்கமாகப் பார்ப்போம்.)

தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன 18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?

பாதை நீளும்....

(தொடரும்)


என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, March 11, 2011

பயத்தை வெல்வது எப்படி?


யம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.

பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.


அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.

அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”

அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-

முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா
என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.

ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.

மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது
ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?

நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.


அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.


-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, March 7, 2011

அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!


கீதை காட்டும் பாதை 5

அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!

சாங்கியம் என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம். வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான “சாங்கிய யோகத்தில்” தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.

சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும் வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில் புரட்சிகரமானவை என்றே சொல்ல வேண்டும்.

“அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான அர்த்தம் கொண்டு அதைத் தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர். இவர்கள் சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள் போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள். அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய் விடுகிறது”

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம் என்று முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும், சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் உறுதியான வார்த்தைகளால் சாடுகிறார்.

இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய ஒரு விஷயம். எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்து அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும், சண்டை சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.

மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்திலேயே உருவாக்கப் படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம் உயர்ந்ததே. மத உபதேசங்களில் பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய சூழ்நிலைகளிற்கும், தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத் தூய்மையாகவும், உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை அடைய ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச்செருகல்களாகும் வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள் செய்யப்பட்ட பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மேலும் உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில் இக்கால மொழியாக இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள் வழியாக மொழி பெயர்க்கப்பட்டு இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன் ஆரம்பத் தூய்மை மாறாமல் இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.

ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால் முதலில் சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தி விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும் இந்தக் கலையில் வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக நம்மிடையே பார்க்கலாம்.

இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை மிக ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப்பட்டவற்றின் நோக்கத்தையும், உண்மையான அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஆழமாகச் செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து பாலை மட்டுமே உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து உண்மையைப் பிரித்து அறிய முடியும். எனவே அந்த நூலில் இருந்து அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப் படித்துக் கொண்டு அதை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது பேதைமையே.


அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல சொர்க்கம், அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது. அதை அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள், சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக சடங்குகள், சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை விட்டு சக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக் கண்மூடித்தனமாகச் செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கிறார். புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத் தேவையான தெளிவோ, உறுதியோ இருப்பதில்லை என்கிறார் அவர்.

ஸ்ரீகிருஷ்ணர் எதையும் சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி சொன்னாய், இப்போது இப்படி சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம் சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார். நான் கடவுள், எல்லாம் அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற ரீதியில் அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களில் இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம் இருப்பதுமே கீதையின் மிகப்பெரிய சிறப்பம்சம்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் மனிதனை நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட கால சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில் இருக்கக் கூடும். அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப் பொருத்தமற்றதாகக் கூட இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு இருந்தால் மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவனவற்றை தேர்ந்தெடுத்துப் பின்பற்றி பலனடைய முடியும்.

மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும் வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட எப்போதுமே முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின் பயனும் இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும் தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உவமையைக் கூறுகிறார். “நாலா புறமும் தண்ணீர் இருக்கையில் கிணற்றின் பயன் எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை உணர்ந்தவனுக்கு வேதச் சடங்குகளாலும்”.

இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித நூல்களின் முக்கிய நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள் போல கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள். இல்லாவிட்டால் நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற பயம், சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம் அடைவோம் என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும் முட்டாள்தனம் என்கிறார்.

வெறுமனே வேதங்களைப் படித்து வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே மதிக்கப்பட வேண்டிய ஒரு தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன். அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி வைக்கப் படுகிறான். தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக இருக்கக்கூடும் என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு கசாப்புக் கடைக்காரனாக இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது. இறைச்சி விற்பவனாக இருந்தாலும் தர்மவியாதன் தான் செய்கின்ற தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு சிரத்தையுடன் சேவை செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால் கௌசிகன் என்ற பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.

அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன் ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம் அனுப்புகிறார். ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில் வேதங்கள் அனைத்தும் கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும் இல்லை என்கிற அளவு கற்று முடிந்தவுடன் அவன் தந்தையிடம் திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம் வேதங்கள் அனைத்தையும் கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து துக்கத்தில் ஆழ்கிறார்.

எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம் இல்லை என்றல்லவா அர்த்தம்? நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக நிற்கும் கதிர் நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல உண்மையான ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக அல்லவா வந்து விட வேண்டும்?

வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும் ஆனந்தமடைவதற்கு பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய ஸ்வேதகேது காரணம் கேட்டறிந்து பின் மீண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து கற்று ஞானியாக மாறுவதாகச் செல்கிறது கதை.

ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும் புனித நூலறிவு பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும் முட்டாள்தனம் நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம் இன்றைய மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான் இன்றைய பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக இருப்பதில்லை. இந்த உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இனி கீதையில் மிக முக்கியமான அம்சமான கர்மயோக இரகசியத்தைப் பார்ப்போம்.

பாதை நீளும்.....

என்.கணேசன்
நன்றி: விகடன்

Thursday, March 3, 2011

வெறுப்பு என்பது விஷமாகும்!
சோதனைகள் சில சமயங்களில் தனித்து வருவதில்லை. ஒருவர் வாழ்விலேயே அவை கூட்டமாகவும், அடுக்கடுக்காகவும் தொடர்ந்து வந்து விடுகின்றன. அப்படி வருகையில் சிலர் உடைந்து போகிறார்கள், சிலர் தங்கள் சுற்றத்தின் பாசத்தையும், நட்பின் ஆழத்தையும் அளந்து பார்க்கிறார்கள், சிலர் புடம் போட்ட தங்கமாக ஜொலித்து எழுகிறார்கள். அப்படி ஜொலித்து எழுந்த ஒருவர் தான் பாலஸ்தீனிய டாக்டரான இஸ்ஸெல்டின் அப்யுலைஷ் (Izzeldin Abuelaish) என்பவர்.

திடீரென்று மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அப்யுலைஷ் வாழ்க்கை அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் வீட்டு முழு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மனைவி நான்கு மகள்கள், ஒரு மகன், இரண்டு மருமகள்களை வளர்க்கும் பொறுப்பை அவர் தலையில் போட்டு விட்டு இறந்த போது இடி விழுந்ததைப் போல அவர் உணர்ந்தார். ஆனாலும் குழந்தைகள் மேல் உயிரையே வைத்திருந்த டாக்டர் அப்யுலைஷ் அந்தப் பொறுப்பை நன்றாகவே நிறைவேற்றி வந்தார். ஆனால் நான்கே மாதங்களில், அதாவது ஜனவரி 2009ல் அவர்கள் வாழ்ந்த காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்ததில் அவருடைய மூன்று மகள்கள், ஒரு மருமகள் ஆகியோர் உயிரிழந்தனர். அவர் சிறிது நேரத்திற்கு முன் தான் அந்த மகள்களிடம் பேசி விட்டு அவர்களுடைய அறையை விட்டு வெளியே வந்திருந்தார். உயிர் தப்பிய ஒரு மகளும் தன் ஒரு கண்ணையும், இரு விரல்களையும் இழந்திருந்தாள்.

அவர் தன் உயிரில் பெரும்பகுதியையே இழந்தது போல உணர்ந்தார். அவருடைய சோகத்திற்கு எல்லை இருக்கவில்லை. அவருடைய 12 வயது மகன் ஒரு நாள் அவரை சமாதானப் படுத்தினான். தன் மூன்று சகோதரிகளும் தாயுடன் சொர்க்கத்தில் இணைந்து விட்டார்கள் என்றும் அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதை தன்னால் காண முடிகிறது என்றும் சோகப் பெருங்கடலில் ஆழ்ந்திருந்த தந்தையிடம் சொன்னான்.

மகனின் வார்த்தைகள் அவரை ஓரளவு ஆறுதலடைய வைத்தது. இறந்தவர்கள் இறைவனை அடைந்தவர்கள். அவர்களைப் பற்றி வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இருப்பவர்களைப் பற்றி யோசிக்க அவர் முடிவெடுத்தார். ஒரு மகன், ஒரு மகள், ஒரு மருமகள் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள், அவர்களை மிக நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட மறுபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார். ஆனாலும் அவ்வப்போது அற்பாயுசில் இறந்து போன மகள்கள் நினைவு அவரை வருத்தாமல் இல்லை.

இறந்து போன மகள்கள் நினைவாக “Daughters for Life” என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். மத்திய கிழக்கு நாடுகளில் படிக்கும் ஏழைப் பெண்களின் மேற்படிப்புக்கு நிதி உதவி செய்வது தான் அதன் முக்கிய நோக்கம். அந்த மத்திய கிழக்கு நாடுகளில் அவர் மகள்கள் இறக்கக் காரணமான இஸ்ரேலையும் அவர் உதவி செய்யச் சேர்த்திருந்தார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

பலரும் அவரிடம் “உங்கள் மகள்களையும் அவர்களைப் போன்ற பல்லாயிரக் கணக்கான உங்கள் பகுதி மக்களையும் கொன்று குவித்த இஸ்ரேல் மீது தங்களுக்கு வெறுப்பும் கோபமும் இல்லையா?” என்று கேட்டார்கள்.

“தவறு நடக்கும் போது கோபப் படுதல் அவசியம். ஆனால் கோபம் வெறுப்பாக மாறி விட அனுமதிப்பது சரியல்ல. ஏனென்றால் வெறுப்பு என்பது விஷத்தைப் போன்றது. யார் வெறுக்கிறார்களோ அவர்களை எரித்து விடக் கூடிய நெருப்பு அது. அது யாருக்கும் நல்லது செய்து விடுவதில்லை. நான் வெறுப்பதால் என் மகள்களை உயிரோடு மீட்டு விட முடியாது....... பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் அருகருகே வசிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்குவது எந்த நல்ல தீர்வையும் ஏற்படுத்த முடியாது.”

இப்போதும் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடி வரும் எத்தனையோ பாலஸ்தீனர்களில் அப்யுலைஷும் ஒருவர். மகள்களின் மரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் ஒரு அங்கம். அந்த விடுதலை பெறுவது தான் மகள்களின் நினைவுக்காக தான் செய்யும் ஒரு பெருஞ்செயலாக இருக்கும் என்று உறுதியாக அப்யுலைஷ் நம்புகிறார். தன் வாழ்வின் லட்சியமாகவும் அவர் அதையே தான் எண்ணுகிறார். ஆனாலும் ஒரு அரசாங்கமும், அதிகாரத்தில் இருக்கும் ஒருசிலரும் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மக்களையே குற்றம் சாட்டி வெறுக்காதிருக்கும் பக்குவம் அவருக்கு இருக்கிறது.

கடந்த ஜனவரி 23 அன்று ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது அப்யுலைஷ் தன் ஒரு மகளின் மறைவுக்கு அவளுக்குப் பழக்கமான ஒரு இஸ்ரேலியர் அனுப்பியிருந்த அஞ்சலிக் கவிதை ஒன்றைப் படிக்கையில் அழுதே விட்டார்.

மனிதர்கள் நாடு, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்தும் மனிதர்களே. இந்த மகத்தான உண்மையை அவர் மகள்கள் இறந்து இரண்டாவது ஆண்டு நினைவாக அந்த நிகழ்ச்சியில் அந்த இஸ்ரேலியரின் கவிதையை அவர் படித்த போது அந்த விழாவில் கலந்து கொண்ட, அதைப் படித்து அறிந்து கொண்ட அனைவராலும் உணர முடிந்திருக்கும். அந்த நிகழ்ச்சியில் தன் இழப்புகளையும், தன் உணர்வுகளையும், தன் நம்பிக்கைகளையும் அவர் விவரித்தார். அதையெல்லாம் கேட்டு விட்டு பலரும் கண்கலங்கினர். நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் ரிச்சர்ட் சில்வர்ஸ்டீன் கூறினார். “இன்றிரவு நான் ஒரு உயர்ந்த மனிதனின் பேச்சைக் கேட்டேன். நான் நேசத்தையும், பண்பட்ட சிந்தனைகளையும் கேட்டேன். அந்த நேசம் வெறுப்பை வெல்ல வல்லது. மனித குல குற்றங்களையும் போக்க வல்லதாக அந்த நேசம் இருக்கட்டுமாக!”

வெறுப்பு என்பது குற்றங்களை மட்டுமே பட்டியல் போடுவதால் ஏற்படுவது. அப்யுலைஷ் தன் மகள்களைக் கொன்றவர்களாக இஸ்ரேலியர்களை வெறுக்க முடியவில்லை. காரணம் அவர் மகளிற்காக அஞ்சலிக் கவிதை அனுப்பி அவருடைய சோகத்தில் பங்கு கொண்ட நபரும் ஒரு இஸ்ரேலியரே. பெரும்பாலான மனிதர்கள் அவர்கள் எந்த நாடானாலும், மதமானாலும், இனமானாலும், மொழியானாலும் அமைதியையே விரும்புகின்றனர். தீமைகளைக் காண நேரும் போது வருத்தமே அடைகின்றனர். அவர்கள் தீர்மானிக்க முடியாதவர்களாகவும், சக்தி அற்றவர்களாகவும் இருக்கலாம். சக்தி வாய்ந்த தலைவர்களின் செயல்களை எதிர்த்து நிற்க சக்தியற்றவர்களாக இருக்கலாம். ஒரு சிலரின் அராஜகங்களுக்கு அவர்களை சார்ந்த சமூகத்தையே வெறுக்கத் துணிவது அறிவுடைமை அல்ல.

அப்யுலைஷின் மனப்பக்குவம் அனைவருக்கும் ஒரு பாடம். தவறுகளை எதிர்ப்பது என்பது வேறு, தவறு செய்தவர்களின் இனத்தையே வெறுப்பது என்பது வேறு என்பதை அவர் அழகாக வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறார். வெறுப்பு என்பது விஷம் தான். அதை உட்கொண்டால் அது கண்டிப்பாக நம்மை அழித்து விடும். பின் நல்லது எதுவும் நம்மிடம் மிஞ்சி விடாது. மானுடம் அன்பால் மட்டுமே காக்கப்பட முடியும், பண்படவும் முடியும்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் அந்தக் குடும்பத்தினரையே வெறுப்பது, ஒரு மதத்தவரில் சிலர் தவறு செய்தால் ஒட்டு மொத்தமாய் அந்த மதத்தினரையே வெறுப்பது, ஒரு இனத்தனவரில் சிலர் தவறு செய்தால் அந்த இனத்தவர் முழுவதும் அப்படித்தான் என்று வெறுப்பது போன்ற நியாயமும், அறிவுமற்ற முட்டாள் தனத்தை நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். அந்த வெறுப்பு விஷத்தை நம்மில் இருந்து அகற்றி நாம் நம்மையும், மானுடத்தையும் காப்பாற்றிக் கொள்வோமா?

- என்.கணேசன்

நன்றி:ஈழநேசன்