சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, September 30, 2017

முந்தைய சிந்தனைகள்- 22

நான் எழுதியவற்றிலிருந்து சில சிந்தனைத்துளிகள் -என்.கணேசன்

Thursday, September 28, 2017

இருவேறு உலகம் – 49


வேற்றுக்கிரகவாசி பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று சொன்ன போது க்ரிஷ் உடனடியாக இனம் புரியாத சோகத்தை உணர்ந்தான். வேற்றுக்கிரகவாசியின் உருவம் அறியாத போதிலும் அவன் அறிவுக்காகவும், கருத்துக்களுக்காகவும் க்ரிஷ் அவனை மதிக்க ஆரம்பித்து, முடிவில் நேசிக்கவும் ஆரம்பித்திருந்தான். பிரிவு நிச்சயம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த போதிலும் பிரிவு வலிக்காமல் இருப்பதில்லை…..

ஆனால் வேற்றுக்கிரகவாசிக்கு மனிதர்களின் பலவீனங்கள் இருக்கவில்லை. அவனுக்கு மட்டும் தானா இல்லை அவன் கிரகவாசிகளுக்கே உணர்ச்சிகளே இல்லையோ என்று கூட க்ரிஷ் சந்தேகப்பட்டிருக்கிறான்ஆனால் தங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்றும் அவை தனிப்பட்டவை என்றும்அறிவின் படி மட்டுமே இயங்கிப் பழக்கப்பட்டவர்கள் தாங்கள் என்றும் வேற்றுக்கிரகவாசி சொல்லி இருந்தான். மனிதர்கள் உணர்ச்சிகளின் ஆதிக்கத்துக்குட்பட்டவர்கள், அதன்படியே நடப்பவர்கள் என்பது அவர்களின் மிகப்பெரிய பலமும், பலவீனமும் என்று நினைப்பதாகத் தெரிவித்திருந்தான்…..

உணர்ச்சிகளே இல்லாவிட்டால் மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்று க்ரிஷ் ஒரு முறை கேட்டிருக்கிறான்.

உணர்ச்சியும் அறிவும் கலந்த ஒரு உன்னத முன்னேற்ற நிலை இருக்கிறது. இரண்டிலுமே பலவீனங்களை விலக்கி பலங்களை மட்டுமே எடுத்துக் கொண்ட கலவை நிலை அது. அதில் சாதனைகளும் உண்டு, சந்தோஷங்களும் உண்டு. மனிதர்கள் அடைய வேண்டிய அடுத்த நிலை அதுஎன்று வேற்றுக்கிரகவாசி சொன்னதை க்ரிஷ் வெகுநேரம் யோசித்திருக்கிறான்…. 

க்ரிஷ் சொன்னான். “உன்னைப் பிரிவது கஷ்டமாயிருக்கு?”

எதனால்?”

உன்னை நேசிப்பதால்

ஏன் என்னை நேசிக்கிறாய்?”

இந்தக் கேள்விக்கு யாராலும் சரியாகப் பதில் சொல்ல முடியாது என்றே க்ரிஷுக்குத் தோன்றியதுநேசிப்பதற்கும், வெறுப்பதற்கும் யோசித்து  ஒருசில காரணங்களைச் சொல்லலாம்  என்றாலும்  அறிவுக்கு எட்டிய காரணங்களையும் மீறி வேறெதோ சிலதும் இருக்கவே செய்கின்றனஆனாலும் சமீபத்திய வலுவான காரணத்தைச் சொன்னான். “நீயில்லாமல் இருந்திருந்தால் நான்  இன்னேரம் இறந்திருப்பேன்…”

நானில்லாமல் இருந்திருந்தால் நீ இந்த மலைக்கே அமாவாசை இரவுகளில் வந்திருக்க மாட்டாய். நீ இங்கே தனியாக வந்ததால் தான் சங்கரமணிக்கு உன்னைக் கொலை செய்து அதை விபத்தாக்கி விடும் யோசனை வந்தது.  அதனால் நானில்லாமல் இருந்திருந்தால் காப்பாற்ற வேண்டிய அவசியமே வந்திருக்காது

அவன் உண்மையை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் சொன்னது க்ரிஷுக்குப் பிரமிப்பாக இருந்தது. விருப்பு வெறுப்பில்லாமல் உள்ளதை உள்ளபடியே காணவும் சொல்லவும் முடிந்த அந்தத் தன்மையை வியந்தபடி க்ரிஷ் கேட்டான். “நீ திரும்பி பூமிக்கு வருவாயா? வருவதானால் எப்போது வருவாய்?”

உங்கள் காலக்கணக்குப்படி சுமார் எட்டு மாத காலம் என்னால் வர முடியாது….. என் பயணத்திட்டம் அப்படி இருக்கிறதுஎட்டு மாதம் கழித்து நான் வரும் போது பூமி இருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம்…..”

அவன் சந்தேகத்தோடு சொன்னது க்ரிஷுக்குச் சுருக்கென்றது. உண்மை பல சமயங்களில் அப்படித்தான் இருக்கிறது. என்ன செய்ய?

க்ரிஷ் புன்னகையுடன் கேட்டான். “அப்படியானால் நீ திரும்பவும் வரும் போது மனித இனம் இருக்குமா இருக்காதா என்ற சந்தேகம் உன்னிடம் பலமாக இருக்கிறது. அல்லவா?”

நல்லதும் கெட்டதும் எப்போதுமே எங்குமே இருக்கிறது. அவை ஓரளவாவது சரிசமமாகவாவது இருக்கும் வரை அழிவில்லை. நல்லது மிகவும் பலமிழந்து, தீமை உச்சத்தில் போகும் போது அழிவு நிச்சயம்……”

அதர்மம் மேலோங்கும் சமயங்களில் எங்கள் பகவான் எங்களைக் காக்க அவதாரம் எடுப்பார் என்று எங்கள் புராணங்கள் சொல்கின்றன நண்பாக்ரிஷ் புன்னைகையோடு சொன்னான்.

காப்பாற்ற நல்லவர்களும், தகுந்தவர்களும் ஓரளவாவது இருந்தால் தான் அவரும் வருவார். அப்படி இல்லா விட்டால் உங்கள் கடவுள் யாரைக் காப்பாற்ற அவதாரம் எடுப்பார்?”

ஏனிப்படி பயமுறுத்துகிறாய்?” என்று பாதி விளையாட்டாகவும், பாதி சீரியசாகவும் க்ரிஷ் கேட்டான்.

உண்மையைச் சொன்னேன் அவ்வளவு தான். க்ரிஷ். தனிமனிதனில் இருந்து முடிவில்லாத பிரபஞ்சம் வரை ஒரு நியதி இருக்கிறது. அந்த நியதியின்படியே எல்லாம் நடக்கின்றது. ஒவ்வொரு மனிதனிடமும் நன்மைகள், ஆக்கபூர்வமான தன்மைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, சேர்ந்தே தீமைகள், அழிக்கின்ற தன்மைகள் எல்லாம் மறுபுறம் இருக்கின்றன. இதில் எதை அவன் மேலோங்க வைக்கிறான் என்பதை வைத்தே அவன் உயர்வதும் அழிவதும் இருக்கிறது. அதே விதி தான் உன் உலகத்திற்கும். அது நல்ல சக்திகளை மேலோங்க வைக்கிறதா, தீய சக்திகளை மேலோங்க வைக்கிறதா என்பதை வைத்தே தன் விதியை எழுதிக் கொள்கிறது…. எதன் அவசியத்தை அது உணர்வதில்லையோ, எதன் மகத்துவத்தை அது அங்கீகரிப்பதில்லையோ அது குறைய ஆரம்பித்து மறைந்தே போகிறது…… அதன் விளைவுகளிடமிருந்து அது விலகி விட முடியாது…..”

வேற்றுக்கிரகவாசி கணிதக் கோட்பாடு போலவும், தத்துவம் போலவும் சொன்னான். அந்த நேரத்தில் க்ரிஷுக்கு அவன் பள்ளிக்கூட நண்பன் வித்யாதர் நினைவுக்கு வந்தான். வித்யாதர் நன்றாகப் படிப்பவன். மிக இனிமையான குரல் அவனுக்கு. ஜேசுதாஸ், பி.பி ஸ்ரீனிவாஸ் குரல்களின் கலவை போல் அவன் குரல் இருக்கும். பள்ளியில் பாட்டுப் போட்டிகளில் எப்போதுமே முதல் பரிசு அவனுக்குத் தான். சங்கீதம் முறைப்படி படிக்காதவன் என்றாலும் ஓரிரு முறை ஒரு பாட்டைக் கேட்டாலே சின்ன பிசிறு கூட இல்லாமல் அற்புதமாகப் பாடிக் காட்டுவான். பல நேரங்களில் க்ரிஷ் உட்பட பலரும் அவனைப் பாடச் சொல்லிக் கேட்டு மெய்மறந்து இருப்பதுண்டு.

அப்படிப்பட்ட வித்யாதர் பத்தாம் வகுப்பு வரும் போது போதைப் பழக்கத்திற்கு அடிமையானான். படிப்பது குறைந்தது. பள்ளிக்கு வருவது குறைந்தது. தீய சகவாசம் ஏற்பட்டு மற்ற வேண்டாத பழக்கங்களும் அவனிடம் வந்து சேர்ந்தன. கண்முன் அவன் நாசமாவதைப் பார்க்கப் பொறுக்காமல் க்ரிஷ் அவனைத் தேடிப் போய் ஒரு பார்க்கில் கண்டுபிடித்து தனியாக அழைத்துப் போய் வேண்டிய அளவு உபதேசம் செய்தான்.

இசையில் எத்தனையோ உயரங்களுக்குப் போக வேண்டியவன் நீ, யாருக்கும் கிடைக்காத அற்புதமான குரல் வளம் உனக்குக் கிடைத்திருக்கிறது, வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே.” என்ற வகையில் ஆத்மார்த்தமாய்  அறிவுரை சொன்னான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு வித்யாதர் வருத்தத்துடன் சொன்னான். “பல சமயம் நானும் மாற நினைக்கிறதுண்டு க்ரிஷ். பல தடவை முயற்சி செஞ்சிருக்கேன்…. ஆனா விட முடியல.”

அதுக்கு உதவ இப்ப நிறைய செண்டர்ஸ் இருக்கு வித்யாதர்…… எங்க ஃபேமிலி ஃப்ரண்ட் ஒருத்தரே ஒரு செண்டர் வச்சிருக்கார். அதுல நிறைய பேர் விடுபட்டிருக்காங்க…. நான் உன்னைக் கூட்டிகிட்டு போறேன்….. கண்டிப்பா நீயும் விடுபடுவே. ஒரு பெரிய பாடகனாக வேண்டியவன் நீ. எத்தனையோ பேரை உன் இசையா பரவசப்படுத்த முடியும்…. அதுக்காகவாவது நீ இந்தப்பழக்கத்துல இருந்து வெளிய வரணும்…”

அவன் ஆத்மார்த்தமாய் சொன்னது வித்யாதரை நிஜமாகவே பாதித்தது. அவன் சம்மதித்தான். மறுநாள் காலையே அந்த செண்டருக்கு வருவதாய் வாக்களித்து விட்டுப் போனான். மறுநாள் காலை க்ரிஷ் அந்த செண்டரில் வித்யாதருக்காகக் காத்திருந்தான். வித்யாதர் வரவில்லை. போன் செய்து பார்த்தான். போன் ஸ்விட்ச்டு ஆஃப் ஆகியிருந்தது. வீட்டுக்குப் போய் பார்த்தான். வீட்டிலிருந்து அதிகாலையே போய் விட்டதாய் சொன்னார்கள். என்ன ஆனான் என்றே தெரியவில்லை. ஒரு மாதம் கழித்து செல் போனில் அவனிடமிருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்தது. “என்னை மன்னித்து விடு நண்பா”. அடுத்த நாள் அவன் தற்கொலை செய்து கொண்ட தகவலும் வந்தது

க்ரிஷ் உடைந்து போனான். அவனால் அந்தத் துக்கத்தைத் தாங்கவே முடியவில்லை. அழுது தீர்ந்த பின்னரும் மனதின் கனம் குறையவில்லை. சிகரம் தொட வேண்டிய குரல் வளம் உடையவனை ஒரு போதைப்பழக்கம் இப்படி சூறையாடி விட்டதே என்று பச்சாதாபம் வந்தது. இப்படியாக அனுமதித்த கடவுள் மீது அடங்காத கோபம் வந்தது. ’இப்படியொரு குரல்வளத்தையும், திறமையையும் கொடுத்து அதைச் சிதைக்கிற ஒரு பழக்கத்தையும் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தாய் கடவுளே?’ என்று கடவுளிடம் பலமுறை கேட்டிருக்கிறான். கடவுளிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

ஆனால் இப்போது அவன் நினைவுகளைப் படித்த வேற்றுக்கிரகவாசி பதில் சொன்னான். ”ஒருவன் என்ன ஆக வேண்டும் என்று அவனே தீர்மானிக்க வேண்டும் க்ரிஷ். அதை அடுத்தவனோ, ஆண்டவனோ கூடத் தீர்மானிக்க விடக்கூடாது. உன் வித்யாதருக்கு இசை என்ற வரமும் இருந்தது. போதை என்ற சாபமும் இருந்தது. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் அவன் போதையைத் தேர்ந்தெடுத்தான். இசை முடிந்தது. உன் உலகமும் இப்போது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறது…..”

க்ரிஷ் சொன்னான். “உலகம் தனிமனிதன் அல்ல. அது பல கோடி தனிமனிதர்களால் ஆனது. இதில் யார் முடிவெடுக்க முடியும்? பெரும்பான்மையான மனிதர்களா?”

உங்கள் பெரும்பான்மை மனிதர்கள் என்றும் ஆட்டுமந்தைக் கூட்டமே. குறைவாக இருந்தாலும் சக்தி வாய்ந்த மனிதர்களே எதையும் தீர்மானிக்கிறார்கள்

க்ரிஷ் பெருமூச்சு விட்டான். மறுபடியும் அவன் அதே ’சக்தி’ மையத்திற்குத் தான் வருகிறான். எதிரி சக்தி பெற்று மேலோங்கி வருகிறான். உன்னைப் போன்ற நல்லவர்கள் அவனுக்கு இணையாக உயர வேண்டும் என்று இப்போதும் சொல்லாமல் சொல்கிறான்.

“சரி. இந்த விஷயத்தில் நீ எனக்காகவோ, இந்த பூமிக்காகவோ எதையும் செய்ய மாட்டாயா?”

“ஒன்றே ஒன்றைச் செய்திருக்கிறேன். உன் எதிரி எல்லார் உள்ளங்களையும் படிக்க முடிந்த அளவு உயர்ந்த சக்தி படைத்தவன். அவன் கூட உன் மனதைப் படிக்க முடியாத அளவு உனக்குள் ஒரு மிக நுட்பமான ப்ரோகிராம் போட்டு சக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையம் போட்டிருக்கிறேன். மீதி உன் கையில்….. சரி க்ரிஷ் கிளம்புகிறேன்……”

க்ரிஷுக்கு நிறைய சொல்ல இருந்தது. நிறைய கேட்கவும் இருந்தது. ஆனால் கனத்த மனத்துடன் ‘நன்றி” என்ற ஒரு சொல்லை மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது.

அடுத்த கணம் ஒரு பெரிய கரிய பறவையாக மாறி வேற்றுக்கிரகவாசி பறந்து மறைந்தான். சிறிது நேரம் சிலையாக நின்றிருந்த க்ரிஷ் செல்போனை எடுத்து அண்ணனுக்குப் போன் செய்தான்.

(தொடரும்)
என்.கணேசன்