சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 29, 2010

அன்பே தீர்வு
பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் மாணவர் குழு ஒன்றை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சிப் பணியை ஒப்படைத்திருந்தார். ”பின் தங்கிய குடிசைப் பகுதி ஒன்றிற்குச் செல்லுங்கள். 12 வயது முதல் 16 வயது வரை உள்ள 200 சிறுவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரியுங்கள். பின் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்கள் அனுமானத்தைச் சொல்லுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.

அந்த மாணவர்கள் குழு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றது. அந்த மாணவர்கள் அங்குள்ள 12 முதல் 16 வயதுடைய ஒவ்வொரு இளம் வயதினரிடமும் நீண்ட நேரம் பேசினார்கள், கேள்விகள் கேட்டார்கள். தாங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டதையும், பேசாமலேயே கவனித்து அறிந்து கொண்டதையும் வைத்து அந்த ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “இந்த சிறுவர்களில் 90 சதவீதம் பேர் எதிர்காலத்தில் சிறிது சமயமாவது சிறைச்சாலையில் கழிப்பார்கள்”.

அந்த முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாக இருந்தது அந்த சிறுவர்களின் மனப் போக்கில் அவர்கள் சில தீய பண்புகள், தீய ஆர்வங்கள், சமூகப் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றைக் கண்டது தான்.

அந்த மாணவர் குழு சமர்ப்பித்த தகவல்களையும், அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவையும் பத்திரமாகப் பாதுகாத்த அந்த பேராசிரியர் பல வருடங்கள் கழித்து அந்த குடிசைப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பெரியவர்களாக ஆன பின்னர் மீண்டும் வேறொரு மாணவர் குழுவை அதே பகுதிக்கு அனுப்பினார். “இந்த 200 பேரும் தற்போது எப்படி இருக்கிறார்கள், அதில் எத்தனை பேர் முந்தைய குழு எண்ணியது போல் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்ப்பதை அறிந்து வாருங்கள்”

அந்த வேலை இரண்டாவதாகப் போன குழுவிற்கு சுலபமானதாக இருக்கவில்லை. அந்த 200 பேரில் சிலர் இடம் பெயர்ந்திருந்தார்கள். சிலர் இறந்திருந்தார்கள். இடம் பெயர்ந்தவர்களில் சிலரது தற்போதைய விலாசம் கிடைக்கவில்லை. ஆனாலும் இரண்டாவது மாணவர் குழுவின் விடாமுயற்சியால் 200 பேரில் 180 பேரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களில் நான்கு பேர் மட்டுமே சிறைக்குச் சென்றிருந்தார்கள்.

பேராசிரியருக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் குழுவிற்கும் அந்தத் தகவல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. முதல் குழுவின் கருத்து எந்தத் தகவல்களின் அடிப்படையில் எழுந்ததோ அந்தத் தகவல்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அன்றைய அனுமானம் இன்றைக்கும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. குற்றம் புரியத் தேவையான மனநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் தான் அன்று அந்த சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படியானால் இப்படி இந்த 176 பேரும் சிறைக்குச் செல்லாமல் இருக்கக் காரணம் என்ன என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

மீண்டும் சென்று சிறைக்குச் செல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த 176 நபர்களிடமும் அவர்கள் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் போகவிருந்த அழிவுப்பாதையில் இருந்து அவர்களைக் காத்தது என்ன என்ற கேள்வியைப் பிரதானமாக வைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு பதிலையே சொன்னார்கள். “எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய ஆசிரியை வந்தார்....”

உடனே பெரும்பாலானோர் சொன்ன அந்த ஆசிரியையைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் சென்றனர். இத்தனை பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்த அந்த ஆசிரியை எந்த வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை அறிய அவர்களுக்கு ஆவலாக இருந்தது.

அந்த ஆசிரியை தற்போது ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரிடம் அவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ”உங்களுடைய அந்தப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் உங்களை இன்றும் நினைவு வைத்திருக்கிறார்கள். அதன் காரணம் என்ன?” “அவர்கள் உங்களுடைய தாக்கத்தால் நிறையவே மாறி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கல்வி புகட்டிய முறை என்ன?”

அந்த முதிய ஆசிரியைக்கு குறிப்பிடும்படியாக எதையும் சொல்லத் தெரியவில்லை. ஒரு நீண்ட பதிலை எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒரே ஏமாற்றம். அந்த ஆசிரியை தன் பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கினார். வந்தவர்களுக்குச் சொல்வது போலவும், தனக்குள்ளேயே பேசிக்கொள்வது போலவும் அவர் மிகவும் கனிவுடன் சொன்னார். “அந்தக் குழந்தைகளை நான் நிறையவே நேசித்தேன்.......”

பெரிய பெரிய சித்தாந்தங்களையும், வித்தியாசமான கல்வி நுணுக்கங்களையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அந்த தகவலில் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

எல்லா சீர்திருத்தங்களுக்கும் அன்பே மூலாதாரம். அன்பினால் மட்டுமே முழுமையான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வருவது சாத்தியம். சட்டங்களாலும், கண்டிப்புகளாலும், தண்டனைகளாலும் எந்த மிகப்பெரிய மாற்றத்தையும் உலகில் கொண்டு வரமுடிந்ததில்லை. இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

உளமார, உண்மையாக அந்த ஆசிரியை அந்த சிறுவர்களை நேசித்தார். குற்றங்கள் மலிந்த சூழலில் வளர்ந்த அந்த சிறுவர்களின் வரண்ட இதயங்களில் அந்த ஆசிரியையின் மாசற்ற அன்பு ஈரத்தை ஏற்படுத்தி நற்குணங்களை விதைத்திருக்க வேண்டும். அதை அவரே உணர்ந்திருக்கா விட்டாலும் அந்த அற்புதம் அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையினை நல்ல பாதைக்கு திருப்பி விட்டிருக்கிறது. இந்த நிகழ்வு சிந்தனைக்குரியது.

இது வீட்டிலும், ஊரிலும், சமூகத்திலும், நாட்டிலும் அனைவராலும் உணரப்பட வேண்டிய ஒன்று. குறை கூறுவதிலும், விமரிசனம் செய்வதிலும் பெருமை இல்லை. சட்டங்களைக் கடுமையாக்குவதிலும், கண்டிப்பை அமலாக்குவதிலும் வலிமை இல்லை. அன்போடு அணுகுவதிலேயே பெருமையும் வலிமையும் இருக்கின்றது.

மாற்றம் எங்கு வரவேண்டும் என்று நினைத்தாலும் அங்கு அன்பு செலுத்துவதில் இருந்து ஆரம்பியுங்கள். அந்த அன்பு சுயநலம் இல்லாததாக இருக்கும் பட்சத்தில், அந்த அன்பு குறுகியதாக இல்லாத பட்சத்தில் அற்புதங்கள் நிகழ்த்த வல்லது. சமூகத்தில் இன்று புரையோடிருக்கும் சண்டை, சச்சரவு, கொலை, கொள்ளை, தீவிரவாதம், சகிப்பற்ற தன்மை, அநீதி முதலான அத்தனை நோய்களுக்கும் அன்பே மருந்து. இந்த பிரச்னைகளுக்கு அன்பே தீர்வு.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Wednesday, November 24, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-54
ஆழ்மனதின் அபார சேவை

ஆழ்மனதில் ஆழமாகப் பதிபவையே நம்மை உண்மையில் இயக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்மனம் தன் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி நமக்கு எப்படியெல்லாம் அபார சேவை புரிகிறது என்பதையும், அதனிடம் அந்த வேலை வாங்குவது எப்படி என்றும் பார்ப்போம்.

மேல்மனம் உறக்கத்தின் போது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. ஆழ்மனம் உறக்கத்தின் போதும் கூட ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை. இதை பல ஆராய்ச்சிகள் செய்து உதாரணங்களுடன் டாக்டர் ஏ.ஸ்மித் என்ற இங்கிலாந்து மனவியல் அறிஞர் தன்னுடைய நூலில் (Does Brain Think, When I Sleep?) எழுதியுள்ளார். முன்பே கூறியது போல அது தான் சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களுடன் புதிதாகப் பெற்ற தகவல்களைச் சேர்த்து தக்க விதத்தில் சரி செய்தும், ஒழுங்குபடுத்தி, புதுப்பித்து வைத்துக் கொள்கிறது. மேல்மனம் எப்போதோ நினைத்து மறந்த சின்னத் தகவல் கூட ஆழ்மனதில் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும்.

இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து தேவைப்பட்ட தகவல்களை எல்லாம் தேர்ந்தெடுத்து இணைத்து தொகுத்து புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய சித்தாந்தங்களையும், புதிய கோட்பாடுகளையும், பேருண்மைகளையும் முடிவாக நமக்கு உணர்த்த வல்லது ஆழ்மனம். எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும், வாழ்வையே திசை திருப்ப வல்ல பேருண்மையையும் ஆழ்மனதின் உதவி இல்லாமல் யாரும் பெற்று விட முடியாது.

சர் வில்லியம் ஆர். ஹேமில்டன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை, வானவியல் அறிஞர், மற்றும் இயற்பியல் அறிஞர். அவர் ஒரு முக்கிய கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது என்ன முயன்றும் அவரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. 1843 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அவர் தன் மனைவியுடன் ஒரு பாலத்தின் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று பதில் தானாக அவர் மனதில் உதித்தது. அந்தத் தீர்வை மறந்து விடக்கூடும் என்று பயந்து அந்த பாலத்தின் சுவரில் கல்லால் கீறி அந்த சமன்பாட்டை அவர் பதித்தார்.
அவர் கண்டுபிடித்த க்வார்டெர்னியன்ஸ் ( ) என்ற தீர்வு இன்றும் கணிதத் துறையில் மிக முக்கிய விதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பாலத்தின் சுவரில் இருந்த கீறல் பிற்காலத்தில் மறைந்து விட்டிருந்தாலும் அயர்லாந்து அரசாங்கம் அதே இடத்தில் அந்த தீர்வை ஒரு குறிப்புடன் கல்வெட்டாக இன்றும் வைத்திருக்கிறது.

டாக்டர் தாம்சன் என்ற மனோதத்துவ மேதை “System of Psychology” என்ற நூலை எழுதத் துவங்கியிருந்த போது அதற்காக நிறைய படித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ஆனால் எழுதுகின்ற சமயத்தில் நிறைய விஷயங்கள் கோர்வையாக இல்லாமல் தனித் தனியாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது அது கோர்வையாக வராமல் இப்படி சம்பந்தமில்லாத தனிக் கருத்துகளாக இருந்தால் அது முழுமையாக இருக்காது என்று நினைத்த டாக்டர் தாம்சன் என்ன தான் அதைக் கோர்வைப் படுத்த முயன்றும் முடியாது போகவே அவர் எழுதுவதை சுமார் ஒரு மாதத்திற்கு நிறுத்தியே வைத்திருந்தார். பிறகு ஒரு நாள் எழுதியதை எடுத்துப் படிக்கையில் விடுபட்டதாய் நினைத்த விஷயங்கள் அவர்
மனதில் தானாக பளிச்சிட்டன. உடனடியாக அவற்றை எழுதி அந்த நூலை அவர் முடித்தார். இது போன்ற நிகழ்வுகள் பல முறை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

Synthetic Chemistry ஐ கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்த்லாட் அவர்களும் தன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களில் முறையாக சிந்திக்கும் போது வந்தவை அல்ல என்றும் திடீரென்று தானாக வானில் இருந்து வந்தவை போல வந்தவை தான் என்று கூறுகிறார்.

மோசார்ட் என்ற இசை மேதை தன் 35 வருட வாழ்க்கையில் பத்து ஓபரா என்னும் இசை நாடகங்கள், 41 ஸிம்ஃபனி என்னும் விரிவான இசை நாடகங்கள், நூற்றுக் கணக்கான சிறிய இசைச் சித்திரங்கள் உருவாக்கிய மேதை. அவர் தன்னுடைய பெரும்பாலான புதிய இசைப் படைப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக தானாக மனதில் தோன்றியவை என்றும், மனதில் கேட்டவற்றை அப்படியே திரும்ப உருவாக்கியது தான் அவர் செய்த வேலை என்றும் கூறுகிறார். நம் கணித மேதை ராமானுஜம் தன்னுடைய எல்லா கணக்குகளுக்கும் விடையை நாமகிரிப் பேட்டை அம்மன் கொண்டு வந்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

இது போல் எத்தனையோ காலத்தை வென்று நின்ற எழுத்துக்களையும், இசையையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றைத் தங்கள் முயற்சியால் வந்ததென அந்த அறிஞர்களால் சொல்ல முடியவில்லை. தானாக வந்ததாகவும், தாங்கள் நம்பும் இறைவன் கொண்டு வந்து தந்ததாகவும் அவர்கள் சொன்ன போதிலும் அவற்றை அவர்கள் மேல்மனதிற்குத் தந்தது அவர்களுடைய ஆழ்மனமாகவே இருக்க வேண்டும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எத்தனையோ முறை ஏதாவது ஒரு பெயர் மறந்து போயோ, ஒரு பொருளை வைத்த இடம் மறந்து போயோ நாம் அனைவருமே மூளையை கசக்கி இருந்திருக்கக் கூடிய தருணங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பிறகு வேறெதோ நாம் செய்து கொண்டிருக்கையில் தானாக அது நம் நினைவில் பளிச்சிடுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். இது நம் ஆழ்மன செயல்பாடே.

நாம் பல விதங்களில் சிந்தித்தும் விடை கிடைக்காத அல்லது நினைவுக்கு வராத விஷயங்களில் இருந்து சிந்தனையை மேல்மனம் கை விட்டு வேறு விஷயங்களுக்கு நகர்த்தும் போது அந்த பழைய தேடலை ஆழ்மனம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது. அது தன்னிடம் உள்ள தகவல் களஞ்சியத்தில் இருந்து நமது அறிவுக்கெட்டாத முறையில் பிரம்மாண்டமான விதத்தில் விடையைக் கண்டுபிடித்து வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும் மேல்மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. நாம் அதை ‘திடீர்’ என்று வந்ததாக நினைத்து வியக்கிறோம்.

சிறு வயதில் நாம் பூதம் அல்லது தேவதைக் கதைகள் நிறைய படித்திருப்போம். பாவப்பட்ட ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு கொடுமைக்காரர்கள் இரவில் ஏராளமான வேலைகளைத் தந்து மறு நாள் காலையில் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த பாவப்பட்ட ஜீவன் மீது அன்பும், இரக்கமும் கொண்ட பூதமோ, தேவதையோ அந்த வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு அனைத்தையும் அசுர வேகத்தில் நேர்த்தியாக செய்து தந்து விடும் என்பதைப் படித்திருப்போம். உண்மையில் நம் ஆழ்மனம் அது போன்ற ஒரு சக்தி படைத்த தேவதையே.

சிக்கலான ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வோ, அல்லது சிக்கலான ஒரு கேள்விக்கு விடையோ அறிய நாம் எந்த விதத்தில் யோசித்தும் நமக்கு பதில் கிடைக்கவில்லையானால் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தாங்கள் அறியாமலேயே ஆழ்மனதைப் பயன்படுத்தி விடை கண்டு பிடித்தது போல நாமும் ஆழ்மனதின் உதவியை நாடலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் பிரச்னைக்கோ, கேள்விக்கோ சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் ஆழ்ந்து யோசித்துக் கொள்ளுங்கள். அதன் தீர்வு அல்லது விடை உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதை மிக முக்கியமானது என்று நீங்கள் மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். எல்லா விதங்களிலும் சம்பந்தப்பட்ட விஷயங்களை யோசித்து விட்டு ஆழ்மனதிடம் ‘இதைக் கவனி’ என்று கட்டளையிடுங்கள். பின் அதை மறந்து விடுங்கள்.

இதைச் செய்யப் பொருத்தமான நேரம் இரவு தூங்குவதற்கு சிறிது நேரம் முன் என்கிறார்கள். மேல்மனம் உறங்க ஆரம்பித்தவுடன் 24 மணி நேரமும் விழித்திருக்கும் ஆழ்மனம் நீங்கள் தந்த அந்த வேலையை, தான் சேகரித்து வைத்திருக்கும் பல்லாயிரம் தகவல்களையும் பல விதங்களைலும் மிக நேர்த்தியாக அலசி மிகச் சிறந்த ஒரு தீர்வையோ, பதிலையோ மறு நாள் உங்களுக்குத் தந்து விடும். ஆரம்பத்தில் நீங்கள் தந்திருக்கும் வேலையின் சிக்கல் தன்மையின் கடுமைக்கேற்ப ஒரிரு நாட்கள் அதிகமாகக் கூட அது எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் இந்த விதத்தில் மிகச் சிறப்பான பதில் கிடைத்தே தீரும் என்பது பலரின் அனுபவம்.

இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முதலாவது அது உண்மையாகவே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அது சம்பந்தமாக நிறைய தேவையான தகவல்களை அலசி இருக்க வேண்டும். (தகவல்கள் என்ற பெயரில் கவலைகள், பயங்களை ஆழ்மனதிற்கு அனுப்பி விடாமல் இருப்பது முக்கியம்). மூன்றாவது ஆழ்மனதிடம் ஒப்படைத்து விட்ட பின் விரைவில் அதனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கக் கூடாது.

(ஒன்பதாவது அத்தியாயத்தில் மைக்கேல் க்ரிஸ்டன் என்ற பிரபல ஆங்கில சினிமா டைரக்டர் ஸ்பூன்களைப் பார்வையாலேயே மடக்கும் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் நன்றாக கவனத்தைக் குவித்து விட்டு பிறகு கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பின பிறகு தான் இந்த சக்தி வேலை செய்கிறது என்பதை வியப்புடன் சொல்லி இருப்பதைக் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள். அதற்கும் காரணம் இது தான். மேல்மனம் நன்றாக முயன்று விட்டு பின் அதிலிருந்து கவனத்தை திருப்பி விட்ட பின் ஆழ்மனம் அதைத் தன் பணியாக எடுத்துக் கொண்ட பிறகு தான் சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது)

இரவு உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓரிரு மணி நேரம் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அதிகமாக நாம் எண்ணும் எண்ணங்களே பெரும்பாலும் நம் உறக்கத்தில் ஆழ்மனதால் அதிகம் அலசப்படுகின்றன. அதனால் அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், துக்ககரமான அல்லது வன்முறை சீரியல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. அந்த நேரத்தில் நல்ல புத்தகங்கள் படித்தல், மனதிற்கு இதமான இசை கேட்டல், நமக்குப் பயன்படும் விஷயங்களில் ஈடுபாடுடைய செயல்கள் செய்வது எல்லாம் மிக நல்லது.
முக்கியமாக நம்முடைய இலட்சியங்கள், குறிக்கோள்கள் குறித்து அந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளுவதும், அது சம்பந்தமான செயல்களில் அந்த நேரத்தில் ஈடுபடுவதும் நாம் விரைவில் இலக்கை அடைய மிகவும் உதவும்.

இனி ஆழ்மனதின் சக்தியை அதிகரித்து பயன்பெற முக்கியமான அடுத்த பயிற்சியைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, November 19, 2010

தனியே ஒரு குரல்

பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.

தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.


அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.

கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.

அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.

அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.

கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவர் சொல்வதாகக் காரணம் சொல்லி அவரை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.

கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை "Dialogue" புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.

கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய "Dialogue" நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.

சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.

எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, November 15, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 53


ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!

பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்திற்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.

இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.

துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் “என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?” என்று கேட்கிறான். நம் ஆள் “இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன்” என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் “என்ன உடம்பு சரியில்லையா?” என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.

நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். ”நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது” என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். “நான் பலவீனமானவன்”, ”என்னால் இது முடியாது”, “எனக்கு ஆரோக்கியம் சரியில்லை” என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.

என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். “எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்”. அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது.
ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.

இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். “ஏன்?” என்று கேட்ட போது ”அது தவறு” என்ற பதில் வந்தது.

நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ”இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். ”என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” அவர்கள் கூறினார்கள். “ஆமாம் பிரபு”
இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். “உங்கள் நம்பிக்கையின் படியே உங்களுக்கு ஆகக் கடவதாக!”. அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)”. (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.

இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: விகடன்

Wednesday, November 10, 2010

இவை உங்களுடையவை அல்ல!

ஜென் குரு பான்காய் என்பவரிடம் அவர் சீடர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார். “குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் போக்க நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்”

ஜென் குருக்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் புனித நூல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டுவதோ, மணிக்கணக்காய் புத்தி சொல்வதோ இல்லை. பான்காய் சொன்னார். “உன்னுடைய கோபத்தை நீ கொஞ்சம் காட்டினால் அதைப் போக்க என்னால் வழி சொல்ல முடியும்”

சீடர் சொன்னார். “தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை. எனவே கோபத்தை என்னால் காட்ட முடியாது”

பான்காய் பொறுமையாகச் சொன்னார். “பரவாயில்லை. உன்னிடம் கோபம் இருக்கும் போது நீ அதை என்னிடம் கொண்டு வந்து காட்டுவாயாக”

சீடருக்கு ஒரே தர்மசங்கடம். கோபத்தை எப்படி ஒருவரிடம் கொண்டு போய் காட்ட முடியும்? திடீரென்று வந்து திடீரென்று போகும் கோபம் குருவிடம் வருகிற வரை இருக்குமா? அவன் தன் பிரச்னையைச் சொன்னான். “குருவே, கோபத்தை என்னால் கொண்டு வர முடியாது. கோபம் திடீரென்று ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் கோபம் உங்களிடம் வரும் வரை இருக்காது. காணாமல் போய் விடும்”

பான்காய் சொன்னார். “அப்படியனால் அது உன்னுடைய கோபமாக இருக்க முடியாது. அது உன் உண்மையான இயல்பாக இருந்தால் அது உன்னிடம் எப்போதும் இருக்கும். அதை நீ எப்போது வேண்டுமானாலும் அடுத்தவருக்குக் காண்பிக்க முடியும். கோபம் நீ பிறந்த போது இல்லை. உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை. எனவே அது வெளியே இருந்து தான் உன்னிடம் வர வேண்டும். உன்னுடையதல்லாததை, வெளியே இருந்து வருவதை விரட்டியடிப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? இனி அப்போது உன்னுள்ளே நுழைய முயன்றாலும் கவனமாக இருந்து அதைப் பிரம்பால் அடித்துத் துரத்து”

பான்காய் மிக அழகாக ஒரு பேருண்மையை இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார். சீடர் ‘என் கோபத்தைப் போக்க வழி சொல்லுங்கள்’ என்று கேட்டதறகு ‘என் கோபம்’ என்று சொல்வதே தவறு என்று மிக அழகாகச் சொல்கிறார். பிரச்னையே கோபத்தை தன்னுடன் இணைத்து தன்னுடையதாக பாவிப்பதில் தான் உருவாகிறது என்று கூறுகிறார்.

பான்காய் சொல்வதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் கோபத்துடன் பிறக்கவில்லை. நம் கை, கால்களைப் போல, கண் காது மூக்கு போல நாம் பிறக்கும் போதே அது தரப்பட்டதல்ல. நம் உறுப்பு போல அது நம்முடன் ஒட்டி நாம் பிறந்திருந்தால் அதை நம்மிடம் இருந்து பிரிப்பது இயலாது. உடன் பிறந்தவற்றைத் துண்டித்து எறிவது கஷ்டம். அது பிரிவதே உடலுக்கு ஆபத்து அல்லது ஊனம் என்பதே உண்மை. ஆனால் இடையில் வந்து போகிற உணர்ச்சிகளை எல்லாம் நம்முடையது என்று பாவிப்பதனால் தான் அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்படுகிறோம்.

இது கோபத்திற்கு மட்டுமல்ல நம்மை அலைக்கழிக்கும் வெறுப்பு, பொறாமை, வருத்தம் போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும். இது போன்ற உணர்ச்சிகள் எல்லாம் துன்பத்தைப் பெருக்குபவை. அவற்றை நம்முடையதாக பாவிக்கும் போது, அவற்றை நம்மை அறியாமல் வளர்த்து வலுவாக்குகிறோம். அவை வலிமையாகும் போது அதன் விளைவுகளும் வலிமையாக நம்மைத் தாக்குகின்றன. அந்தத் தாக்குதலால் பாதிக்கப்படும் போது நாம் மூன்று உண்மைகளை நினைவில் வைத்தால் அவற்றின் பிடியில் இருந்து விலகி விடுதலையாகலாம்.

1. இந்த உணர்ச்சிகள் என்றுமே என்னுடைய மன அமைதிக்கோ, மகிழ்ச்சிக்கோ வழி வகுப்பதில்லை. மாறாக இவை கவலைக்கும், துக்கத்திற்குமே வழி வகுக்கக் கூடியவை.

2. இந்த உணர்ச்சிகள் தவறான அபிப்பிராயங்களாலும், கணிப்புகளாலும் ஏற்படுபவை. இவை என்னிடம் வர முயற்சிக்கும் உணர்ச்சிகள். ஆனால் இவை என்னுடையவை அல்ல.

3. இவற்றை என்னுடையவை என்று நான் அங்கீகரித்தால் ஒழிய, அப்படி நினைத்து பற்றிக் கொண்டிருந்தால் ஒழிய இவை என்னைப் பாதிக்க முடியாது.

இந்த உணர்ச்சிகளை பான்காய் கூறுவது போல புறத்தில் இருந்து வருபவை என்று உணருங்கள். இதற்கெல்லாம் கோபப்பட வேண்டும், இதையெல்லாம் வெறுக்க வேண்டும், இதற்கெல்லாம் பொறாமைப் பட வேண்டும் என்று நாம் யாரோ போட்ட பாதையில் போக வேண்டியதில்லை. அதை நம் பாதையாக முட்டாள்தனமாய் ஆக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அப்படி போய் அவதிப்பட வேண்டியதில்லை.

இது போன்ற உணர்ச்சிகள் வரும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். அவை வரும் போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுங்கள். உங்களுக்குள்ளே விடாதீர்கள். “எனக்கு இயல்பானவன் போன்ற தோற்றத்தில் வந்தாலும் நீ அன்னியன். என்னுடையவன் அல்ல. எனவே போய் விடு” என்று அனுப்பி விடுங்கள்.

இந்த உணர்ச்சிகளை உங்களுடையது என்று நீங்களாகப் பற்றிக் கொண்டு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தீய பாதிப்புகள் ஏற்படும். அவற்றை உங்களுடையது அல்ல என்று கை விட்டு விடுங்கள். உதறித் தள்ளி விடுங்கள். அவை உங்களை கஷ்டப்படுத்துவது தானாக முடிந்து விடும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Friday, November 5, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 52
தீய பழக்கங்களில் இருந்து விடுபட ஆழ்மனப்பயிற்சி

ஆழ்மனதின் அற்புத சக்திகளை ஆரம்பத்தில் இருந்து விளக்கமாகப் பார்த்தோம். அந்த சக்தியை அடைய உதவும் பயிற்சிகளை அறிந்து வரும் இந்த வேளையில் ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் உணர வேண்டும்.

ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
ஆனால் அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.

ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.

இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.

தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை
என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.

மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.

நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.

’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.

நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.

எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.

சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.

முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.

பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.

அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.

இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள். இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)

எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, November 1, 2010

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமும்

ஹாலிவுட்டில் எடுத்த ஒரு ‘அனிமேஷன்’ படத்தில், அதுவும் விலங்குகளை நாயக நாயகியராக சித்தரிக்கும் ஒரு படத்தில் மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்ல முடியும் என்பதை குங்க்ஃபூ பாண்டா (Kungfu Panda) திரைப்படம் நிரூபித்திருக்கிறது. கதை ஒன்றும் பிரமாதமானதில்லை. சாதாரணமானது தான்.

பண்டைய சீனத்தில் நடப்பதாகக் காட்டப்படும் இத்திரைப்படத்தில் போ (Po) என்ற கரடி தான் கதாநாயகன். தந்தையின் நூடுல்ஸ் கடையில் சர்வராக வேலை பார்க்கிறது. ஆனால் அதன் மனதில் ஒரு பெரிய குங்க்ஃபூ வீரனாக வர வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் குங்க்ஃபூ வீரனாகக் கூடிய உடலமைப்போ திறமையோ அதனிடம் இருக்கவில்லை. எப்போதும் தின்பதிலேயே மிக ஆர்வமாக இருக்கும் போவுக்கு உடலும் பருமனாக இருந்தது. அந்த ஊரில் அதன் தந்தையின் நூடுல்ஸ் சுவைக்குப் பெயர் பெற்றதாக விளங்கியது. அதன் சுவைக்கு அவர் ரகசியமாக எதையோ சேர்க்கிறார் என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். அவரோ போ உட்பட யாருக்கும் அந்த ரகசியச் சேர்க்கை விவரத்தை சொல்லாமல் இருந்தார்.

ஊருக்கு அருகே உள்ள மலையில் குங்க்ஃபூ கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் எல்லோருக்கும் குரு போன்ற ஊக்வே (Oogway) என்ற வயதான ஆமை இருக்கிறது. ஊரையே அழிக்கக்கூடிய, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாய் லூங் (Tai Lung) என்ற சிறுத்தைப் புலி சிறையிலிருந்து தப்பித்து வரும் என்றும் அது ஊரை அழிக்காமல் காப்பாற்ற ஒரு புதிய மாவீரனால் மட்டுமே முடியும் என்று ஊக்வே ஆருடம் சொல்கிறது.

அந்த புதிய மாவீரன் யார் என்பதில் ஐந்து விலங்குகளுக்குள் போட்டி இருக்கிறது. அவை பெண் புலி, நாரை, ஒரு வகை நீண்ட பூச்சி, பாம்பு மற்றும் குரங்கு. அந்த ஐந்துமே ஒவ்வொரு விதத்தில் திறமையும் சக்தியும் வாய்ந்தவை. அந்த ஐந்துக்குமே குரு ஷிபு என்ற சிறுத்த செங்கரடி. குங்க்ஃபூ கோயிலில் அந்த ஐந்தில் யார் ஊரைக் காக்க வல்ல மாவீரன் என்று போட்டிச் சண்டை நடக்கிறது. அதைக் காண ஊரே திரண்டு கோயிலுக்குபொ போகிறது. போவும் ஆர்வமாக மலையேறிச் செல்கிறது. அது நடக்க முடியாமல் நடந்து போவதற்குள் போட்டி ஆரம்பிக்க கோயில் கதவு சாத்தப்பட்டு விடுகிறது. எப்படியாவது அந்த போட்டியைப் பார்க்க வேண்டும் ஆர்வத்தில் அருகில் இருந்த ஒரு மரமேறி கோயிலுக்குள் போ குதித்து விட அது வந்த விதத்தில் அதுவே ஊரைக் காக்க வல்ல மாவீரன் என்று ஊக்வே தீர்க்கதரிசனம் சொல்கிறது. இது ஷிபுவையும் அது பயிற்றுவித்த ஐந்து விலங்குகளையும் ஆத்திரமூட்டுகிறது. போவும் தன்னை ஒரு மாவீரனாக ஒத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. அந்த ஐந்து விலங்குகளும், ஷிபுவும் அந்த போவைத் துரத்த முயற்சிக்கின்றன.

ஊக்வேயின் மரணக் கட்டத்தில் ஷிபு, தனக்கும் குருவான ஊக்வேயின் தீர்க்கதரிசனத்தை ஏற்றுக் கொண்டு போவுக்கு குங்க்ஃபூ பயிற்சியைச் சொல்லித் தருகிறது. எல்லா சக்திகளுக்கும் ரகசியத்தை எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஓலையை தக்க சமயத்தில் போவுக்குத் தருமாறு ஷிபுவை ஊக்வே பணித்து விட்டு இறந்து விடுகிறது. ஊக்வே தீர்க்கதரிசனத்தின்படிகடும் எதிரியான டாய் லுங் சிறையில் இருந்து தப்பித்து ஊருக்கு வருகிறது. அதை வர விடாமல் தடுக்க தங்களை மாவீரர்களாக நினைத்துக் கொண்டிருந்த ஐந்து விலங்குகளும் முயற்சித்து தோற்றுப் போகின்றன.

டாய் லுங் வரும் முன் ஷிபு போவிடம் அந்த ரகசிய ஓலையைத் தந்து பிரித்துப் படிக்குமாறு சொல்கிறது. அதைப் போ பிரித்துப் பார்த்தால் அது வெறுமையாக இருக்கிறது. அது கண்ணாடி போல் பார்ப்பவர் முகத்தைக் காட்டுகிறது. டாய் லுங்கும் கோயிலுக்கு வந்து ரகசிய ஓலையை ஷிபுவிடம் கேட்க போ அதில் ஒன்றுமில்லை என்று சொல்கிறது. ஆனாலும் நம்பாத டாய் லுங் அதைப் பிரித்துப் பார்த்து கோபம் கொள்கிறது.

ஊக்வே சொன்ன மாவீரன் யார், அவனை இப்போதே அழித்துக் காட்டுகிறேன் என்று டாய் லுங் சவால் விடுகிறது. பாண்டா நான் தான் அந்த மாவீரன் என்று சொல்ல இந்த வலுவில்லாத குண்டுக்கரடியா மாவீரன் என்று டாய் லூங் எள்ளி நகையாடுகிறது. ஆனால் நடக்கும் சண்டையில் போ டாய்லுங்கை அழித்து வெற்றி கொண்டு ஊரைக் காப்பாற்றுகிறது. இது தான் கதை.

ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில், அங்கங்கே பேசப்படும் வசனங்களில், வாழ்க்கையின் தத்துவங்கள் அழகாக சொல்லப்படுகின்றன.

போ குங்க்ஃபூ கோயிலுக்குள் போட்டியின் போது வந்த விதத்தை வைத்து ஊக்வே அதை மாவீரனாக ஆருடம் சொல்ல ஷிபு தனக்கும் குருவான ஊக்வேயிடம் போ வந்த விதம் ஒரு தற்செயல் தான் என்று சொல்ல ஊக்வே அமைதியாகச் சொல்கிறது. ”உலகில் எதுவுமே தற்செயல் இல்லை”. உலகத்தில் எல்லாமே ஒரு காரண காரியத்துடன் தான் நடக்கிறது என்று உறுதியாக அது சொல்கிறது.

இன்னொரு இடத்தில் ஷிபுவிற்கும், ஊக்வேயிற்கும் ஒரு தெய்வீகக் கனிமரத்தின் முன் சர்ச்சை நடக்கிறது. ஊக்வே ஷிபுவிடம் அந்த மரத்தைக் காட்டிச் சொல்கிறது. “பார் ஷிபு. இந்த மரத்தை நாம் நினைக்கிற காலத்தில் பூப்பூக்க வைக்கவோ, கனிகளைத் தாங்க வைக்கவோ முடியாது”

ஷிபு: ஆனால் குருவே சில விஷயங்களை நாம் நம் விருப்பப்படி செய்விக்க முடியும். இந்தக் கனிகளை எப்போது கீழே விழ வைப்பது, எங்கு இந்த மரத்தை நடுவது போன்ற விஷயங்கள் நம் கையில் தானே இருக்கின்றன.

ஊக்வே: அது சரி தான்! ஆனால் நீ என்ன தான் செய்தாலும் இந்த விதையிலிருந்து நீ இந்தக் கனியைத் தான் பெற முடியும். வேறு கனியைப் பெற முடியாது.

இப்படி சரியே ஆன இருவேறு வகை விவாதங்களும் இதில் உண்டு.

தான் தான் அந்த மாவீரன் என்று நம்பாமல் அங்கிருந்து ஒரு இரவு வேறு வழியாக வெளியேறப் பார்க்கும் போவிடம் ஊக்வே சொல்கிறது. “எந்தப் பாதையை நாம் தவிர்க்க நினைக்கிறோமோ, பெரும்பாலும் அந்தப் பாதையில் தான் நாம் நம் விதியை சந்திக்கிறோம்”

நேற்று வரை எந்தப் பயிற்சியும், திறமையும் இல்லாத தன்னால் எப்படி மாவீரன் ஆக முடியும் என்று சந்தேகப்படும் போவிடம் ஊக்வே சொல்கிறது. “நேற்று என்பது வரலாறு. நாளை என்பது ஒரு புதிர். இன்று மட்டுமே உனக்கு பரிசாக வழங்கப்படுகிறது. ஆகவே தான் ஆங்கிலத்தில் இன்று என்பதை ‘present’ என்று சொல்கிறார்கள்.”

எனவே நேற்றைப் பற்றி கவலைப்படாமல், நாளை பற்றி பயப்படாமல், பரிசாகக் கிடைத்திருக்கும் இன்றைய நாளை நல்ல முறையில் பயன்படுத்தி சாதனை புரியச் சொல்கிறது ஊக்வே.

மற்ற விலங்குகளைப் பயிற்றுவித்தது போல் போவையும் பயிற்றுவிக்க முயன்று முடியாமல் போகவே ஷிபு ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறது. தின்பதில் மிக ஆர்வம் உள்ள போவிடம் ஒரு தட்டு நிறைய தின்பண்டங்களை வைத்து அதனிடம் தருகிறது. அதைச் சாப்பிட போ முயற்சிக்கும் போது அதைத் தட்டி விடுகிறது. ஒவ்வொரு முறையும் போ முயற்சிக்க, ஷிபு விதவிதமாகத் தட்டி விட்டு அந்த அசைவுகள் மூலமாகவே குங்க்ஃபூ பயிற்சியைச் சொல்லித் தருகிறது. கடைசியில் நிஜமாகவே அந்த அசைவுகளில் போ தேர்ச்சி பெற்றவுடன் கடைசியில் தின்பண்டத்தை சாப்பிடத் தருகிறது. ஆனால் தேர்ச்சி பெற்ற மனநிறைவில் போ அதைச் சாப்பிடாமல் சொல்கிறது. “எனக்கு பசிக்கவில்லை”

வாழ்க்கையில் நாம் மிக முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம், நாம் பெரும் சாதனை புரிந்து மனநிறைவில் இருக்கும் கால கட்டங்களில் அவ்வளவாக முக்கியம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம் என்பதை இந்த சிறிய காட்சி அழகாகச் சொல்கிறது.

சக்திகளுக்கு மந்திரமாகக் கருதப்பட்ட அந்த ரகசிய ஓலை வெறுமையாக இருப்பது அழகான வாழ்க்கைத் தத்துவம். அதில் பார்ப்பவர் முகம் தெரிகிறது. எல்லா சக்திகளுக்கும் ரகசியச்சாவி நீ தான் என்பதை அழகாக அந்த காட்சி சொல்கிறது. அதே போல் போ தன் தந்தையிடம் சென்று நூடுல்ஸின் ரகசிய சேர்க்கை பற்றி கேட்கும் போது அந்த தந்தையும் ரகசியமாக போவிடம் ஒத்துக் கொள்கிறார். ”அப்படி ஒரு ரகசியக் சேர்க்கையே இல்லை”

போ ஆச்சரியத்துடன் கேட்கிறது. “பின் எப்படி அது பிரத்தியேக ருசியுடன் இருக்கிறது”

தந்தை சொல்கிறார். ”எதற்கும் சிறப்பு கூடுவதே அதற்கு சிறப்பு இருப்பதாக எல்லோரும் நம்பும் போது தான்.”

எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. எண்ணங்களே எதையும் எப்படியும் உருவாக்குகின்றன என்பதை போ உணர்கிறது. பின் அந்த ரகசிய ஓலையின் வெறுமையையும் பார்த்த பின்னர் போ ஞானம் பெறுகிறது. “எல்லாம் நீ தான்”. இந்த உண்மையை வெறுமையான ரகசிய ஓலையைப் பார்த்துக் கோபம் அடைந்த டாய் லூங்கிடம் கூட ஒரு கட்டத்தில் போ சொல்கிறது. ஆனால் அழியப் போகும் டாய் லூங் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அழியப் போகிறவர்கள் உண்மையை உணர மறுப்பார்கள் என்பதற்கு இன்னொரு நல்ல உதாரணம்.

இப்படி குழந்தைகள் பார்க்கும் படம் போல் இருந்தாலும், மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களை ஆங்காங்கே உள்ளடக்கி இருக்கிற விதம் அருமை.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்