சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 2, 2020

இல்லுமினாட்டி 30



லெக்சாண்டிரியா நகரின் எல்லைப்பகுதியில் வசித்து வந்த அந்த மூதாட்டியிடம் அந்த மனிதன் இரண்டு நாட்களுக்கு முன்பே போனில் பேசி இருந்தான். ”ஒருவன் தற்போது எங்கே இருக்கிறான் என்று தெரிய வேண்டும் என்று அவன் சொன்னவுடன் அந்த மூதாட்டி சொன்னாள். “அவன் பயன்படுத்தி இருந்த ஏதாவது பொருள் ஒன்றும், ஆறாயிரம் பவுண்டுகளும் கொண்டு வந்தால் சொல்லலாம்”

அவன் கேட்டான் “எப்போது வரட்டும்?”

”நாளை மறுநாள் காலை பத்து மணிக்கு வாருங்கள். வீடு எங்கே என்பது தெரியுமல்லவா?”

“தெரியும்” என்று அவன் அந்த வீட்டைக் கண்காணித்தபடியே சொன்னான். அந்த வீட்டை அவனும் அவன் ஆட்களும் மாற்றி மாற்றி நேற்றிலிருந்தே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பழங்கால வீட்டிலிருந்து அந்த மூதாட்டி ஒரு முறை கூட வெளியே வரவில்லை. வாரம் ஒரு முறை ஒரு பெண்மணி வந்து வீடு சுத்தம் செய்து கொடுத்து விட்டுப் போகிறாள் என்பதை அவர்கள் முன்பே தெரிந்து வைத்திருந்தார்கள். அதே போல் வாரம் ஒரு முறை பக்கத்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸிலிருந்து அவளுக்கு வேண்டிய பொருள்கள் வந்து சேர்கின்றன. அவள் எந்தச் செய்தித்தாளையும் வாங்குவதில்லை. அவள் வீட்டிலிருந்து ஒரு கருப்புப்பூனை தான் தினமும் இரண்டு மூன்று முறையாவது வெளியே வருவதும், உள்ளே போவதுமாக இருந்தது. அவள் ஒருநாளுக்கு ஒரு ஆளுக்குத் தான் குறி பார்த்துச் சொல்கிறாள் என்றும் அதற்கு மேல் யாரையும் வர அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். ஆனால் மாதம் குறைந்தது இருபது ஆட்களுக்காவது அந்த மூதாட்டி குறி சொல்கிறாள் என்றும் அதிகபட்சமாக 25 ஆட்களுக்குக் குறி சொல்கிறாள் என்றும் அவர்கள் சேகரித்திருந்த குறிப்புகள் தெரிவித்தன... நேற்று ஒரு ஆப்பிரிக்கப் பெண்மணி அந்த வீட்டுக்கு வந்து குறி கேட்டுப் போனாள். அவள் நேற்று மாலை நான்கு மணிக்கு வந்தவள் ஐந்தரை மணி வரை அந்த வீட்டுக்குள் இருந்தாள்.

இன்று காலை பத்து மணிக்கு அவன் அந்த வீட்டுக்குப் போனான். அழைப்பு மணி அடித்து விட்டு அவன் பொறுமையாகக் காத்திருந்தான். மூதாட்டியால் வேகமாக நடக்க முடிவதில்லை என்பதால் மெல்ல தான் வந்து கதவைத் திறப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். அவள் கதவைத் திறந்தவுடன் வணக்கம் சொல்லி அவன் முன்பே தெரிவித்திருந்த பெயரைச் சொன்னான். அவள் தலையசைத்து விட்டு அவனை உள்ளே அழைத்துப் போனாள்.

வீட்டில் இருந்த எல்லா பொருள்களும் பழையவையாகத் தானிருந்தன. ஹாலில் இருந்த சோபாவில் கருப்புப்பூனை படுத்திருந்தது. கண்களைத் திறந்து அவனை ஒரு முறை பார்த்து விட்டு சுவாரசியம் காட்டாமல் கண்களை மறுபடி மூடிக் கொண்டது. மூதாட்டி ஒரு பழைய மர மேஜைக்குப் பின்னால் இருந்த நாற்காலியில் கஷ்டப்பட்டு உட்கார்ந்து விட்டு எதிர்ப்புற நாற்காலியில் அவனை உட்காரச் சொன்னாள். அவன் அமர்ந்தவுடன் கையை நீட்டினாள். அவன் “என்ன?” என்பது போல் பார்த்தான்.

அவள் சொன்னாள். “பணம்”

அவன் ஆறாயிரம் எகிப்தியப் பவுண்டுகளை எண்ணித் தந்தான். அதை வாங்கிக் கவனமாக எண்ணி மேஜையோரம் இருந்த இரும்பு டப்பாவில் வைத்து இறுக்கமாக மூடினாள். பின் கேட்டாள். “என்ன பொருள் கொண்டு வந்திருக்கிறாய்?”

அவன் விஸ்வம் கடைசியாக உபயோகப்படுத்தியிருந்த கைக்குட்டையை ஒரு பிளாஸ்டிக் கவரின் உள்ளே வைத்துக் கொண்டு வந்திருந்தான். அதை அந்த ப்ளாஸ்டிக் உறையோடு அவளிடம் தந்தான். “இது அந்த ஆளின் கைக்குட்டை”

அந்த மூதாட்டி அந்த ப்ளாஸ்டிக் உறையிலிருந்து அந்த வெள்ளை நிறக் கைக்குட்டையை வெளியே எடுத்தாள். அந்தக் கைக்குட்டையைத் தொட்டவுடன் லேசாக அவள் உடம்பு ஒரு கணம் நடுங்கியது போலிருந்தது. அவன் திகைப்புடன் அவளைக் கேட்டான். “என்ன?”

அவள் சொன்னாள். “ஒன்றுமில்லை” ஆனால் அவள் அதற்குப் பிறகு அந்தக் கைக்குட்டையைக் கையில் வைத்துக் கொள்ளாமல் மேஜையில் வைத்து விட்டாள். அவளுடைய ஆள்காட்டி விரல் மட்டும் அதைத் தொட்டது. அவள் அதைத் தொட்டுக் கொண்டிருந்தபடியே கண்களை மூடினாள். அவன் கடிகாரத்தையும் அவளையும் பார்த்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தான். பதினைந்து நிமிடங்கள் கடந்த போது அவள் உறங்கி விட்டாளோ என்று கூட அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் அமைதியாகவே அவளைக் கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

பதினெட்டு நிமிடங்கள் முடிந்த போது மெல்ல அவள் சொல்ல ஆரம்பித்தாள். “இந்த ஆள் சாதாரணமானவன் இல்லை.  மிகவும் சக்தி வாய்ந்தவன்.”

அவன் தலையசைத்தான். அவள் தொடர்ந்து சொன்னாள். “இப்போது இந்தக் கைக்குட்டையைப் பயன்படுத்திய கை இல்லை, தீயில் கருகி விட்டது...”

அவனுக்கு அவள் சொன்னது திகைப்பாய் இருந்தது. மறுபடியும் தலையசைத்தான். அவள் சொன்னாள். “ஆனால் உயிர் இருக்கிறது..... உனக்கு இவனைப் பற்றி என்ன தெரிய வேண்டும்?”

“அவன் இப்போது எங்கே இருக்கிறான்? அவன் கூட யார் இருக்கிறார்கள்?”

அவள் கண்களைத் திறக்கவில்லை. அவள் தன் கவனத்தை எங்கேயோ குவிப்பது போன்ற பாவனை அவள் முகத்தில் தெரிந்தது. மறுபடியும் மௌனம். இந்த முறை இருபது நிமிடங்கள் நகர்ந்தன. பிறகு அவள் சொல்ல ஆரம்பித்தாள். “ஒரு அழகான வீட்டில் இருக்கிறான்.... அது ஒரு தனி வீடு..... வீட்டின் சுற்றுவட்டாரத்தில் நிறைய தூரத்திற்கு வேறு வீடோ, கட்டிடங்களோ இல்லை.. அவன் அந்த வீட்டு ஹாலின் தரையில் ஒரு சிறிய துணிவிரிப்பில் உட்கார்ந்திருக்கிறான்... ஏதோ மூச்சுப் பயிற்சி செய்கிற மாதிரி தெரிகிறது.... அவன் ஏதோ வேதனையை அனுபவித்து வருகிறான்... மிகவும் களைப்பாக இருக்கிறான்....”

அவன் கேட்டான். “அவனுடன் யார் இருக்கிறார்கள்? அதை விவரிக்க முடியுமா?”

“ஆள் யாரும் காணோம்.... ஒரு கிதார் மட்டும் அவன் உட்கார்ந்திருக்கும் ஹாலின் மூலையில் இருக்கிறது.... அந்தக் கிதார் சாதாரணமான கிதார் போலத் தெரியவில்லை. அதில் ஏதோ அமானுஷ்யமாய் இருக்கிறது....”

கிதார் பற்றிச் சொன்னதும் அவன் திகைப்பும், சுவாரசியமும் இரட்டிப்பாகியது. அவன் கேட்டான். “என்ன அமானுஷ்யம்?...”

அந்த மூதாட்டி அப்போது அந்தக் கிதாரைக் கூர்ந்து பார்ப்பது போல் தோன்றியது. அவள் மெல்லச் சொன்னாள். “சரியாகச் சொல்ல முடியவில்லை.... ஏதோ அபாயம்.... ஆபத்தான வசீகரம் அதில் தெரிகிறது....”

பின் மௌனமானாள். அவன் பரபரப்பாகப் பொறுமையிழந்து கேட்டான். “அது என்ன என்று முடிந்த வரை விளக்குங்களேன்......”

“பனிமூட்டம் அந்தக் கிதாரைச் சூழ்கிறது.... ஏதோ ஒரு நட்சத்திரம் அந்தப் பனிமூட்டத்தில் தெரிகிறது. இப்போது கிதார் மறைந்து விட்டது. தெரியவில்லை.....”

அவனுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது. அவன் கேட்டான். “இந்தக் கைக்குட்டைக்காரனையும் அந்த வீட்டையும் பார்க்க முடிகிறதா?”

அவள் முகம் சிறிது வலது புறமாகத் திரும்பியது. அவள் சொன்னாள். “முடிகிறது”

“அந்த வீட்டைக் கண்டுபிடிக்க ஏதாவது துப்பு கொடுங்கள். சுற்றிலும் இருப்பதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா?”

அவள் ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு சொன்னாள். “அந்த வீட்டிலிருந்து நூறடி தூரத்தில் ஒரு ஓக் மரம் இருக்கிறது. அதன் ஒரு கிளை மட்டும் தரையைத் தொட்டபடி இருக்கிறது. மிகப்பழைய மரம் அது. விரிந்திருக்கிறது..... அதன் ஒரு கிளை தீயால் கருகி விட்ட வடு மரத்தில் இருக்கிறது....”

அதற்கு மேல் அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சிரமத்துடன் சொன்னாள். “இப்போது அந்த மரத்தை கிதார் மறைக்கிறது..... கிதாரே வளர்ந்தது போல் பிரம்மாண்டமாய் தெரிகிறது..... இப்போது மூடுபனி வந்து விட்டது. அது எல்லாவற்றையும் மறைத்து விட்டது.... மூடுபனி மட்டுமே தெரிகிறது..... ஆனால் அது கூட அந்த ஒற்றை நட்சத்திரத்தை மறைக்க முடியவில்லை.... ஒற்றை நட்சத்திரம் மங்கலாகத் தெரிகிறது... அவ்வளவு தான்.”

அவள் கண்களைத் திறந்து விட்டாள். அவன் நன்றி தெரிவித்து விட்டு அந்தக் கைக்குட்டையை மறுபடி ப்ளாஸ்டிக் உறையில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.


வன் அனுப்பிய தகவல் ஐந்து நிமிடங்களில் இம்மானுவலுக்கு வந்து சேர்ந்தது.  சிறிது யோசித்தவனுக்கு அந்த மூதாட்டி சொன்ன இடம் ம்யூனிக் சுற்று வட்டாரத்திலேயே இருக்க வாய்ப்பு அதிகம் என்று உள்ளுணர்வு சொன்னது. உடனே ஒரு கிளை தரையைத் தொட்டபடியும், ஒரு கிளை தீயில் கருகியும் இருக்கும் ஓக் மரம் ம்யூனிக்கின் சுற்று வட்டாரத்தில் எங்காவது இருக்கிறதா என்று கண்டுபிடித்து உடனடியாகச் சொல்லும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்
  


13 comments:

  1. Each episode brings its own tension. Superb.

    ReplyDelete
  2. இரண்டு நாவல்களும் வாங்கி விட்டேன் சார். விதி எழுதும் விரல்கள் மினி நாவலாக இருந்தாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய் எதிர்பாராத அழகான முடிவில் முடிந்தது. இல்லுமினாட்டி படித்துக் கொண்டிருக்கிறேன். முதல் முறையாக ஒரு பெண் வில்லியை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அவள் க்ரிஷ் வீட்டுக்குள் நுழைவது வரை வந்து விட்டேன். முடிக்கிற வரை டென்ஷன் தான் போலிருக்கு. ஆனாலும் செம.

    ReplyDelete
  3. சென்னை புத்தகக் கண்காட்சி இன்னும் தொடங்கவில்லையே.. பின் எப்படி தங்கள் நாவல் வாசகர்கள் கைகளில்? வழக்கம் போல் இந்த வாரமும் சுவாரஸ்யம் குறையவில்லை..

    ReplyDelete
    Replies
    1. சென்ற சனியன்றே இரண்டு நாவல்களும் வெளியாகி விட்டன. தற்போது விற்பனையில் உள்ளதால் பலர் வாங்கி விட்டார்கள்

      Delete
    2. தகவலுக்கு நன்றி.. தாங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நேரில் வந்து வாசகர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா?

      Delete
    3. இல்லை. அடுத்த ஆண்டு முயற்சிக்கிறேன்.

      Delete
  4. Replies
    1. Soon it will be available in online stores. For further details please contact publisher (Mobile 9600123146 mail- blackholemedia@gmail.com)

      Delete
  5. அந்த மூதாட்டி கண்டறியும் போது கிதார் மூலம் மறைப்பதும்,மேகமூட்டம் சூழ்வதும்,இறுதியில் ஒரு நட்சத்திரம் தெரிவதும்.... பயங்கரமாக இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. பரம(ன்) ரகசியம் நாவலில் இமயத்திலிருந்து உதயன் சுவாமிகள் தமிழகத்தில் மானஸலிங்கம் செல்லும் காரினை பனிமூட்டத்தால் மறைத்தது ஞாபகம் வருகிறது.
      -சரவணகுமார்

      Delete
  6. Interesting epi....
    முழுக்க முழுக்க கிதார் மையம் தான்.....

    ReplyDelete
  7. i need it

    Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    ReplyDelete