சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 29, 2016

இருவேறு உலகம் - 1
ந்த இளைஞன் அந்த மரத்தைக் கடந்து சென்ற போது மாலை மணி 5.35. மரத்தின் பின் ஒளிந்திருந்தவன் தன் அலைபேசியில் உடனடியாகத் தகவல் சொன்னான். “இப்ப தான் போறான்

பைக்கிலயா கார்லயா?வெற்றிலை பாக்கு மென்றபடி குரல் கேட்டது.

“பைக்ல

“அங்கயே இரு. வேற யாராவது அந்தப் பக்கம் போறாங்களான்னு மட்டும் கவனிச்சுட்டுரு

மரத்தின் பின் ஒளிந்திருந்தவன் அங்கேயே நின்று சலித்துப் போனான். மலையடிவாரத்திற்குச் செல்லும் அந்தப் பாதையில் அதற்குப் பிறகு வேறு யாரும் போகவில்லை. மெள்ள இருட்ட ஆரம்பித்தது. இருட்டிய பின் அந்த இடத்தில் ஒருவித அமானுஷ்ய அமைதி சூழ்ந்தது. அந்த அமைதியை அடிக்கடி கலைத்த பெருங்காற்றின் ஓசையும் கூடுதல் அமானுஷ்யமாகவே இருந்தது. லேசாகப் பயமும் கிளம்பியது.

பயத்துக்குப் பெரிதாகக் காரணம் இல்லை தான். சில மாதங்களுக்கு முன்பு வரை பேய்களும், ஆவிகளும் இங்கு இரவு நேரங்களில் உலாவுவதாகப் பேசிக் கொண்டார்கள். அதுவும் அமாவாசை நாட்களில் அவற்றின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாம். சில பத்திரிக்கைகளில் சிலர் தங்கள் பயங்கர அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் ஒரு பகுத்தறிவு அமைப்பைச் சேர்ந்த பத்து பேர், பேயோ, ஆவியோ சந்தித்தே விடுவது என்ற தீர்மானத்தோடு ஒரு அமாவாசை இரவு வந்து அந்தப் பகுதியில் தங்கினார்கள். அவர்கள் கண்ணுக்கு பன்னிரண்டு மணியளவில் வெள்ளை நிற உடையணிந்த இரு உருவங்கள் தென்படவும் செய்தன. நெருப்பு ஜுவாலையும் திடீரென்று தோன்றி மறைந்தது. அதைப் பார்த்து விட்டு பத்து பேரில் இரண்டு பேர் மயங்கி விழ,  ஒருவன் பயத்தில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விட்டான். மீதியுள்ளவர்களில் நான்கு பேர் தைரியமாக ஓடிச்சென்று ஆவிகளைப் பிடித்துக் கொண்டார்கள். பரிசோதனையில் அந்த ஆவிகள் உள்ளூர் இளைஞர்கள் தான் என்பதும், வேட்டித் துணியை புடவையாகக் கட்டிக் கொண்டு, சவுரியைத் தலையில் பொருத்திக் கொண்டு உலவியதும், கந்தகப்பொடியில் நெருப்பைப் பற்ற வைத்து ஊதி நெருப்பு ஜுவாலையை உருவாக்கினதும் தெரிய வந்தது. நையப்புடைத்து விசாரித்ததில் அந்தப் பகுத்தறிவு அமைப்பினரின் தைரியத்தைப் பரிசோதித்துப் பார்க்கும்  ஆவலில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இருவரும் சொன்னார்கள்.

அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் படித்ததை நினைவுபடுத்திக் கொண்ட போதும் அவன் மனதில் கிளம்பிய பயம் முற்றிலும் விலகி விடவில்லை. கும்பலாக அந்த அமைப்பினர் பத்து பேர் வந்ததால் ஆவிகளும், பேய்களும் விலகி இருந்திருக்கவும் கூடும் என்கிற எண்ணம் வந்து தொலைத்தது.  அந்த மரத்தில் சாய்ந்து கொண்டே சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த மலையை அவன் பார்த்தான். மாலையில் கடந்து போன அந்த இளைஞன் அந்த மலையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.... ஒவ்வொரு அமாவாசை இரவும் அந்த இளைஞன் அந்த மலையில் தான் கழிப்பதாகச் சொன்னார்கள். சில மணி நேரங்களுக்கே இப்படி பயமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது. எப்படித்தான் அந்த இளைஞன் அங்கே பயமில்லாமல் தங்குகிறானோ?... 

சாதாரணமாகத் தனிமையில் இருக்கும் போது அவன் செல் போனில் எஃப் எம் ரேடியோ கேட்பது வழக்கம். பாட்டு கேட்கும் போது நேரம் சீக்கிரம் நகரும். ஆனால் இப்போதோ அவனுக்கு சத்தமே இல்லாமல் கண்காணித்துக் கொண்டிருக்கவே கட்டளை இடப்பட்டிருக்கிறது. கட்டளையை மீறினால் நாளை அவன் உயிரோடிருப்பது கூட நிச்சயமில்லை. என்ன பிழைப்பு இது என்று தனக்குள்ளே சலித்துக் கொண்டான்...

திடீரென்று அவன் மேல் ஏதோ விழுந்தது. அவன் நடுநடுங்கிப் போய் டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்தான். அணில் ஒன்று வேகமாய் ஓடி ஒரு புதருக்குள் மறைந்தது. பந்தயத்தில் ஓடிய அவன் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் ஆகாயத்தில் ஏதோ ஒரு பெரிய கரிய பறவை மிக வேகமாகப் பறந்ததைப் பார்த்தான்.... கூர்ந்து பார்ப்பதற்குள் அது கண்ணில் இருந்து மறைந்து விட்டது.... இதயம் மறுபடி படபடக்க ஆரம்பித்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் மாரடைப்பு வந்து செத்தே விடுவோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.     

அவனைக் காப்பாற்றுகிற மாதிரி தூரத்தில் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டது. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி மறைவில் இருந்து வெளியே வந்தான். அவனருகே கார் வந்து நின்றது. வெண்பஞ்சாய் நரைத்த தலை வெளியே எட்டிப் பார்த்தது. “என்னடா வேற யாராவது போனாங்களா...கரகரத்த குரல் கேட்டது.

“இல்லைஎன்று சொல்ல நினைத்து வார்த்தை வராமல் தலையை மட்டும் அவன் அசைத்தான்.

“என்னடா பேயைப் பாத்த மாதிரி நிக்கறே. பேயின்னு ஒன்னு இருந்தாலும் நாம அதப்பாத்து பயப்படக்கூடாது. அது நம்மளப் பாத்து பயக்கணும்டா. போய் அடுத்த வேலயப் பார்

இந்த ஆள் இருக்கையில் இந்தப் பகுதிக்கு வர  பேய் கூடப் பயப்படும் என்று நினைத்த அவன் தைரியம் வந்தவனாய் தலையசைத்தான். அந்தக் கார் மலையடிவாரத்தை நோக்கி விரைய, அவன் சற்று தள்ளி ஒதுக்குப் புறத்தில் மறைவில் நிறுத்தியிருந்த தன் யமஹாவைக் கிளப்பிக் கொண்டு எதிர் திசையில் பறந்தான். இரண்டு கிலோ மீட்டர் பயணித்து மெயின் ரோட்டிற்கு வந்தவன் அங்கு ஓரமாய் வைத்திருந்த “சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற அறிவிப்புத் தடுப்புகள் இரண்டை எடுத்து, தான் வந்த பாதைக்குக் குறுக்கில் நிறுத்தினான். யாருமே இந்த நேரத்தில் அந்தப் பாதையில் செல்லப் போவதில்லை என்ற போதும் கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு அவனுக்கு அந்த வேலை தரப்பட்டிருந்தது.

அப்படி சாலைத் தடுப்புகளை நிறுத்தி விட்டு மறுபடி அங்கே ஒதுக்குப் புறத்தில் மறைந்து நின்று கொண்டான். ஓரிரண்டு வாகனங்களாவது அவ்வப்போது அந்த மெயின் ரோட்டில் போய் வந்து கொண்டிருந்தன. அமானுஷ்ய அமைதியும் அங்கில்லை. அதனால் பழைய இடத்தைப் போல அங்கே அவனுக்குப் பயம் இருக்கவில்லை....


ந்தக் கார் சத்தமில்லாமல் மலையடிவாரத்தை அடைந்த போது அங்கு அந்த இளைஞனது பஜாஜ் பல்சர் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.  காரை ஓட்டி வந்தவன் சற்று தூரத்திலேயே காரின் உள், வெளி விளக்குகளை எச்சரிக்கையோடு அணைத்திருந்தான். மலையடிவாரத்தில் காரை நிறுத்திய பின்னும் உடனடியாக இறங்கி விடாமல் உள்ளிருந்த படியே மலையின் உச்சியைக் கூர்ந்து கவனித்தான்.

பயப்படாதே.... பக்கத்துல போய் நின்னா கூட அவன் உடனே உன்னைக் கவனிப்பானாங்கறது நிச்சயமில்ல 

அருகிலிருந்து கரகரத்த குரல் அவனை தைரியமூட்டும் தொனியில் இருந்தது. அவன் தலையசைத்தாலும் பார்ப்பதை நிறுத்தவில்லை. சிறிது நேரம் கவனித்து விட்டு இறங்க அவன் முடிவெடுத்த போது அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கரகரத்த குரலில் சொன்னார்.

“எந்த வகையிலும் கொலையா யாருக்கும் தெரியக் கூடாது. அவன் சாதாரண குப்பனோ சுப்பனோ அல்ல. அவன் அப்பன் இந்த மாநிலத்தோட சக்தி வாய்ந்த மந்திரி. அவன் அண்ணன் எம்.பி. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் ஆபத்து தான். தெரியுமில்ல...

அவன் தலையசைத்தான். இந்த ஆள் தைரியமூட்டுவதும், இப்படி ஏழாவது முறையாக எச்சரிப்பதும் அவனுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அவன் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. மற்ற ஆட்களிடமாக இருந்தால் “யோவ் என்னை ஒழுங்கா வேலை செய்ய விடுய்யா. சும்மா தொண தொணன்னு பேசிட்டிருந்தா எனக்குப் பிடிக்காதுஎன்று எரிந்து விழுந்திருப்பான். ஆனால் இந்த ஆளிடம் அப்படிப் பேசுவது ஆபத்து. வாழ்நாள் முழுவதற்குமாய் ஒரு தீவிர எதிரியைச் சம்பாதிப்பதாக அது ஆகி விடும். இந்த ஆளின் எதிரிகள் எப்படியெல்லாம் நரக வாழ்க்கை அனுபவித்தார்கள் என்பதை அவன் பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறான்...

அவன் காரின் பின் சீட்டிலிருந்த ஒரு அட்டைப் பெட்டியை மிகவும் கவனமாக எடுத்துக் கொண்டான். பயமே அறியாதவராகப் பலரும் நினைக்கும் அந்தப் பஞ்சுத் தலையர் கூட அந்த அட்டைப் பெட்டி அவர் அருகே கொண்டு வரப்பட்ட போது வேகமாய் பின்னால் கதவோரத்தை ஒட்டி நகர்ந்தார். அவனுக்கு அவர் செய்கை சின்னதாய் ஒரு முறுவலை முகத்தில் வரவழைத்தது. ‘உயிர்ப்பயம் யாரை விட்டது!

அந்த முறுவல் அவர் கண்களுக்குத் தப்பவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்தார். அவன் முறுவல் வந்த வேகத்தில் மறைந்தும் போனது. அவன்  அந்த அட்டைப் பெட்டியோடு காரை விட்டு இறங்கினான். கார்க்கதவை இழுத்துச் சாத்தினால் அது கூட இந்த இரவின் அமைதியில் அந்த இளைஞனுக்குக் கேட்டு விடுமோ என்று எச்சரிக்கையோடு கதவை மெல்ல சாத்தினான்.  பின் வேகமாக அவன் மலையை நோக்கி நடந்தான். பார்வையிலிருந்து அவன் மறைகிற வரை அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்...

ஒரு பெருங்காற்று அமானுஷ்ய ஒலியோடு வீசியது. ஆனால் அவருடைய வேலையாள் சிறிது நேரத்துக்கு முன் பயப்பட்டது போல அந்த பஞ்சுத் தலையர் பயப்படவில்லை. இப்போது போனவன் வேலையை முடித்து விட்டு வருவதற்காக அவர் பரபரப்போடு காத்திருந்தார்.

(தொடரும்)

என்.கணேசன் 


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

Thursday, October 27, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 122

க்‌ஷய் கௌதமை கீழே வைத்து விட்டு பாறையின் பின் தெரிந்த காவலன் மீது பாய்ந்தான். கழுத்து திருகி அப்படியே கீழே விழுந்த அந்தக் காவலன் மலையில் இருந்து கீழே உருள ஆரம்பித்தான். அக்‌ஷய் கவலையோடு தூரத்தில் தெரிந்த ஆசானைப் பார்த்தான். ஆசான் முதுகில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் மூலிகைச் செடியை நெருங்கி விட்டிருந்தார். அந்த நிலையிலும் கஷ்டப்பட்டு அவர் மூலிகைச் செடியைப் பறிப்பதைப் பார்த்த அக்‌ஷய் மனமுருகி விட்டான். ”ஆசானே” என்று ஓடி வந்த அக்‌ஷயிடம் அந்த மூலிகையைத் திணித்து விட்டு கீழே சாய்ந்த ஆசான் சொன்னார். “இதை முதலில் கௌதம் வாயில் சாறு பிழிந்து விட்டு வா.”

அக்‌ஷய் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர் அன்பு பொங்கச் சொன்னார். “சீக்கிரம் போ. நீ வரும் வரை சாக மாட்டேன்.....”

அக்‌ஷய் மூலிகையோடு மகனை நோக்கி ஓடினான். மூலிகையைத் தன் நாகமச்சத்தில் தொட்டு விட்டு இறைவனைப் பிரார்த்தித்தபடி தன் மகன் வாயில் அதன் சாறு பிழிந்தான். அப்போது தான் குகைக்கோயிலில் இருந்து தீப்பிழம்பு பிரம்மாண்டமாக வெளிப்பட்டது. அது ஏதோ எரிநட்சத்திரம் போல மிகத் தொலைவில் போய் விழுந்தது. குகைக் கோயிலுக்கு உள்ளேயும் நெருப்பு தெரிந்தது. மைத்ரேயன் குகையிலிருந்து ஓடி வந்தான். அவன் வெளியே வந்த மறுகணம் குகையே தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

கௌதம் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். நீல நிற திரவத்துடன் ரத்தமும் கலந்து வெளியே வந்தது. மைத்ரேயன் அருகே வந்து அக்‌ஷயிடம் சொன்னான். “விஷம் வெளியே வந்து விட்டது. இனி பயமில்லை.”

கௌதம் அரை மயக்கத்தில் கண்களைத் திறந்தான். அப்பாவையும் நண்பனையும் பார்த்து புன்னகைத்தபடியே களைப்புடன் மறுபடி கண்களை மூடினான்.

அக்‌ஷய் கண்கலங்கி மைத்ரேயனிடம் தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்த ஆசானைக் காண்பித்தான். கௌதமை அப்படியே ஒரு இடத்தில் படுக்க வைத்து விட்டு இருவரும் ஆசானை நோக்கி ஓடினார்கள்.

கண்கள் நிறைய மைத்ரேயனைத் தரிசித்த ஆசான் இரு கைகளை கூப்பி வணங்கினார். “வணங்குகிறேன் மைத்ரேயரே.....”

மைத்ரேயன் பெருங்கருணையுடன் அவரை நெருங்கி அமர்ந்து அவர் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு புன்னகைத்தான். ஆசானின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பியது. “இப்படி உங்கள் மடியில் மரணிக்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்கிறேன் மைத்ரேயரே..... ஆனால் ஒரே ஒரு வருத்தம்...”

“என்ன?” என்று மைத்ரேயன் கேட்டான்.

“உங்களுடன் விளையாட எனக்கு கொடுத்து வைக்கவில்லையே மைத்ரேயரே....” என்று சொல்லி ஆசான் கண்ணடித்தார்.

அக்‌ஷய்க்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அக்‌ஷயை பேரன்போடு ஆசான் பார்த்தார். “நன்றி நண்பரே.....நன்றி” வார்த்தைகள் இதய ஆழத்திலிருந்து வந்தன. அதன் பின் ஆசானால் பேச முடியவில்லை. மைத்ரேயனைப் பார்த்தபடியே காலமானார். அவர் முகத்தில் பேரமைதி தெரிந்தது. உலகுக்கு வந்த வேலை நல்லபடியாக முடிந்து திரும்புபவனின் ஆத்மதிருப்தி அது என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது....வர்கள் திரும்பி வந்த போது கௌதம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மிகவும் பலவீனமாய்த் தெரிந்த மைத்ரேயன் அக்‌ஷயிடம் சொன்னான். “எனக்கும் மிகவும் களைப்பாக இருக்கிறது. இங்கேயே சிறிது இளைப்பாறலாமா?”

அக்‌ஷய் சம்மதித்தான். அவனும் பெருங்களைப்பில் இருந்தான். அவன் உட்கார்ந்து மகன் தலையை எடுத்து ஒரு மடியில் வைத்துக் கொள்ள மற்றொரு மடியில் மைத்ரேயன் தலை வைத்துப் படுத்துக் கொண்டு உறங்கியும் போனான். மகனைப் போலவே அவனும் உரிமை எடுத்துக் கொண்டு அப்படி உறங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது. அவனிடம் நிறைய கேட்பதற்கு இருந்தது. கண்விழித்த பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். தூரத்தில் குகை இப்போதும் எரிந்து கொண்டிருந்தது..... அதைப் பார்த்தபடியே அக்‌ஷயும் உறங்கிப் போனான். அவன் கண்விழித்த போது மைத்ரேயன் போயிருந்தான். அவன் சொல்லிக் கொள்ளாமலேயே போயிருந்தது அக்‌ஷய்க்கு மனதை என்னவோ செய்தது. ஒரு முறை மைத்ரேயன் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.

“நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சில பேரைச் சேர்க்கும், சில பேரை விலக்கும். இதில் விதி நம் அபிப்பிராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் என்று இருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்து விட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தானே புத்திசாலித்தனம்....”

ஆனால் அக்‌ஷய்க்கு இப்போதும் அந்த புத்திசாலித்தனம் வரவில்லை. இவ்வளவு அவனை நேசித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. ’இப்படித் தான் சலனமே இல்லாமல் போய் விடுவான் என்று முதலிலேயே தெரிந்தும் என் முட்டாள் மனம் ஏன் இப்படி துக்கப்படுகிறது’ என்று தன் மனதையே அவன் கடிந்து கொண்டான்.

”நீ சொல்லி விட்டுப் போயிருந்தால் நான் புரிதலோடு விடை கொடுத்திருப்பேன்...” என்று மனம் கனக்க அக்‌ஷய் வாய் விட்டுச் சொன்னான். அவன் தோளை பின்னாலிருந்து யாரோ தொட்டார்கள். தொடுதலிலேயே மைத்ரேயனை உணர்ந்து அக்‌ஷய் திரும்பினான்.

அக்‌ஷய் அப்படிச் சொல்வதற்கு வேண்டியே மறைந்து காத்திருந்தது போல் மைத்ரேயன் புன்னகையோடு சொன்னான். “சரி விடை கொடுங்கள்”

அக்‌ஷய் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான். பின் மெல்லக் கேட்டான். “எங்கே போவாய்?”

மைத்ரேயன் தூரத்தில் தெரிந்த பெரிய மலை முகடுகளைக் காட்டினான்.

“எப்போதாவது நாம் மறுபடி சந்திப்போமா?” கேட்கும் போது அக்‌ஷயின் குரல் உடைந்தது.

இல்லை என்று மைத்ரேயன் தலையசைத்தான். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அக்‌ஷய் கௌதமை எழுப்பப் போனான். மைத்ரேயன் தடுத்தான். “ஏன் அவனிடமும் சொல்லி விட்டுப் போ” அக்‌ஷய் சொன்னான்.

“போகும் போது அவன் கண்ணீரைப் பார்க்க நான் விரும்பவில்லை. எப்போதும் சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கும் கௌதமே என் மனதின் நினைவுகளில் தங்கி இருக்கட்டும்” என்று சொன்ன மைத்ரேயன் கையசைத்தான்.

அக்‌ஷயும் கையசைத்தான். மைத்ரேயன் போய் விட்டான். அவன் கண்களில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அக்‌ஷய் ’சொல்லி விட்டுப் போனாலும் சில நேரங்களில் புரிதலோடு விடை கொடுப்பது சுலபம் இல்லை’ என்று நினைத்தவனாய் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனுக்குச் சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமலேயே போய் விட்டது. மகாபோதி மரத்தின் அடியில் நடந்தது என்ன, குகைக்கோயிலின் உள்ளே நடந்தது என்ன, மாராவை மைத்ரேயன் எப்படி அழித்தான் என்பதெல்லாம் தெரியவில்லை. அதிக நேரம் இருந்தால் கேட்பேன் என்று நினைத்தே கேட்பதற்கு அவகாசம் கூடத் தராமல் போய் விட்டான். அதைக் கேட்டிருந்தாலும் அவன் பதில் சொல்லி இருக்க மாட்டான். தேவைக்கு அதிகமாகத் தெரிய வேண்டாம் என்று நினைப்பவன் அவன். கேட்டாலும் ஒன்றுமே புரியாதது போல் முழித்திருப்பான். அழுத்தக்காரன்....


ந்த கிராமத்து மக்கள் எரியும் அந்த மலையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அக்‌ஷய்க்கு ஆடுகளை விற்ற கிழவர் புகை மண்டலத்துக்கு நடுவே எரியும் அந்த நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தார். சைத்தான் குகைக் கோயில் தான் பற்றி எரிந்திருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அருகே போய்ப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இருக்கவில்லை. சைத்தான் வேடிக்கை பார்க்கப் போகிறவர்களையும் அந்த நெருப்பில் இழுத்து விடும் என்று பயந்தார்கள். புகை மண்டலம் மிகப்பிரம்மாண்டமாய் வானத்தையே பாதி மறைத்தபடி இருந்தது. திடீரென புகைமண்டலத்தின் வலது புற ஓரத்தில் அவர் இறந்த மகன் மறுபடியும் நிழலாய் தெரிந்தான். அவன் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்து தலையசைத்தது போல் இருந்தது. அடுத்த கணம் அந்த புகை மண்டலத்தில் அவன் மறைந்து போனான். நீண்ட காலம் கழித்து கிழவர் இனம் புரியாத நிம்மதியை உணர்ந்தார்.


க்‌ஷய் தலாய் லாமாவுக்குப் போன் செய்து நடந்ததை எல்லாம் தெரிவித்தான். ஆசான் மரணத்தைப் பற்றி சொன்ன போது தலாய் லாமாவுக்குச் சிறிது நேரம் பேச முடியவில்லை. பின் நெகிழ்ந்த குரலில் சொன்னார். “ஆசான் எப்படிப்பட்ட தர்மாத்மா என்பது அவர் மரணத்தில் இருந்தே தெரிகிறது அன்பரே. மைத்ரேயர் மடியில் இருந்தபடி மரணத்தைச் சந்திக்கும் வாய்ப்பு யாருக்கு தான் கிடைக்கும்....”

கடைசியில் மைத்ரேயன் போய் விட்டதைச் சொன்ன போது தலாய் லாமா சொன்னார். “இனி அவர் தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்து விடுவார் அன்பரே. தர்மமும் அமைதியும் கண்டிப்பாக நிலை நிறுத்தப்படும். நீங்கள் அதற்கு பேருதவி செய்திருக்கிறீர்கள். மைத்ரேய புத்தரின் நண்பராகவும் இருந்திருக்கிறீர்கள். எல்லா நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு வேறு காரணம் தேட வேண்டியதில்லை. நன்றி, அன்பரே. எங்கள் மனதிலும் வரலாற்றிலும் உங்களுக்கு பூஜிக்கப்படும் இடம் என்றும் உண்டு.”


டோர்ஜே மேடையில் அமர்ந்தபடி அந்த அரங்கில் நிறைந்திருந்த நிருபர்கள், காமிராக்கள், அறிஞர்களை எல்லாம் பிரமிப்புடன் பார்த்தான். மேடையில் வேறொருவர் மைத்ரேயர் என்ற புத்தரின் மறு அவதாரம் பற்றி பத்மசாம்பவா ரகசிய ஓலைச்சுவடிகளில் முன்கூட்டியே சொல்லியிருந்ததை விவரித்து விட்டு மேடையில் இருக்கும் இந்தச் சிறுவன் தான் அந்த மைத்ரேயன் என்று எப்படிக் கண்டுபிடித்தோம் என்பதையும் விவரித்துக் கொண்டிருந்தார்.....

நேற்றிலிருந்தே அவன் பேசுகையில் என்ன சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சில ஆட்கள் அவனுக்குப் பாடம் நடத்தி இருந்தார்கள். மூன்று முறை ஒத்திகையும் பார்த்து விட்டுத் தான் திருப்தி அடைந்தார்கள். நல்ல வேளையாக ஆசிரியர் ஒற்றைக்கண் பிக்குவையும் அவர்கள் அவனுக்கு முன்பே அந்த தங்குமிடத்துக்கு அழைத்து வந்திருந்தார்கள். அவர் கூட இருந்ததால் அவனால் அந்த மன அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடிந்தது.

அவனை அழைத்து வந்தவர்கள் காலையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் கவலையுடன் கூடிக்கூடி அவர்களுக்குள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை நடத்தலாமா கைவிட்டு விடலாமா என்று கூட யோசித்த மாதிரி தெரிந்தது. ”எல்லாரையும் அழைத்து விட்டு என்ன சொல்லி இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வது?” என்று அவர்களில் ஒருவர் சிறிது சத்தமாகவே கேட்டது டோர்ஜே காதில் விழுந்தது. மாரா சைத்தான் மலையில் வெற்றி பெற்று விடவில்லை என்பதை மட்டும் அவர்கள் கவலையை வைத்து அவனால் அனுமானிக்க முடிந்தது. தொடர்ந்து அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்டான்.

“அப்படியானால் மைத்ரேயன்?”

“போய் விட்டான்”

டோர்ஜேக்கு சந்தோஷமாக இருந்தது. மாரா தோற்று விட்டான் மைத்ரேயன் வென்று விட்டான்.....

மேடையில் பேசிய ஆள் பேச்சை நிறுத்திய பிறகு மைக் டோர்ஜே கையில் தரப்பட்டது. அரங்கில் முன்னால் அமர்ந்திருந்த ஒரு நிருபர் எழுந்து அவனிடம் கேட்டார். “மைத்ரேயரே நீங்கள் தான் மைத்ரேயர் என்று உணர்ந்த கணத்தை எங்களுக்கு விவரிக்க முடியுமா?”

டோர்ஜே சில வினாடிகள் அரங்கையே படபடக்கும் இதயத்துடன் பார்த்தான். பின் மைக்கில் மெல்லச் சொன்னான். “நான் மைத்ரேயர் அல்ல?”

அடுத்த கணம் அரங்கே ஸ்தம்பித்து அமைதியாகியது. நேரடி ஒளிபரப்பு என்பதால், உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதால் வேறு வழியின்றி அந்த நிருபர் தொடர்ந்தார். “அப்படியானால் நீங்கள் யார்?”

“என் பெயர் டோர்ஜே....” மனம் படபடத்தாலும் டோர்ஜே தயங்காமல் உண்மையைச் சொன்னான்.

அரங்கிலிருந்து இன்னொரு பெண் எழுந்து கேட்டாள். “அப்படியானால் மைத்ரேயர்?”

டோர்ஜே உணர்ச்சிவசப்பட்டு ஒருவித பரவசத்துடன் சொன்னான். “அவர் வேறொருவர். நான் அவரை சந்தித்திருக்கிறேன். எனக்கு நல்ல உபதேசம் செய்திருக்கிறார்..... அவர் உலகமக்களுக்கு ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். அதை மட்டும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்...."

எல்லோரும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாகப் பார்த்தார்கள். டோர்ஜே மனதில் மைத்ரேயனும், மாராவும் பேசிக் கொண்ட பகுதிகள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்திருந்தன. அதில் மைத்ரேயன் சொன்ன ஒரு பகுதி உலகமக்களுக்குத் தெரிவித்த செய்தியாக அவனுக்குத் தோன்றியிருந்ததால் அதை அவன் அப்படியே சொன்னான்.

“யாரும் யாரையும் யாரிடமிருந்தும் காப்பாற்ற முடியாது. ஒருவன் தன்னிடமிருக்கும் தீமையிலிருந்து விலகி தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான். தொடர்ந்து வரும் துன்பங்களை ஒருவன் எத்தனை காலம், எத்தனை பிறவிகள் தான் தாங்குவான். சலித்துப் போய் நிரந்தரமாய் துக்கத்திலிருந்து விடுபட ஆத்மார்த்தமாய் விரும்பும் இதயத்தில் நான் காலடி வைப்பேன். வழிகாட்டுவேன்” என்றார் அவர். இனியும் அறியாமையால் வழிதவறி நாம் கஷ்டப்பட வேண்டாம். நமக்கு வழிகாட்ட அவரைச் சரணடைவோம். புத்தம் சரணம் கச்சாமி!”

அரங்கில் ஒரு கண நேர அமைதிக்குப் பின் அமளி ஏற்பட்டது. டோர்ஜே நிம்மதியாக மேடையிலிருந்து இறங்கினான். ஒற்றைக்கண் பிக்கு அவனைப் பெருமிதத்துடன் பார்த்தார்.

நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் அது உலகமெங்கும் ஒளிபரப்பாகியது. பீஜிங்கில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த லீ க்யாங் பின் கண்களை மூடியபடி சிலை போல நிறைய நேரம் அசையாமல் அமர்ந்திருந்தான்.

க்‌ஷயும் லாஸா நகரில், காத்மண்டுக்கு விமான டிக்கெட் வாங்க ஒரு டிராவல் ஏஜெண்டிடம் போன போது, இந்த ஒளிபரப்பைப் பார்த்தான். தொலைக்காட்சியில் டோர்ஜேயைப் பார்த்ததும் ”அப்பா இது... “ என்று சொல்ல வந்த கௌதமை அக்‌ஷய் பார்வையாலேயே அடக்கினான்.

கௌதம் ”சரி அப்புறம் சொல்கிறேன்” என்று சொல்லி அந்த ஒளிபரப்பைப் பார்த்தான். மைத்ரேயன் விடுத்த செய்தியை பரவசத்துடன் டோர்ஜே சொன்ன போது அக்‌ஷய் தன்னுள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். அந்தச் சிறுவனின் தைரியத்தை மனதிற்குள் பாராட்டினான். லீ க்யாங் கெடுபிடி இல்லாததால் விமானத்திலேயே போவது என்று அக்‌ஷய் முடிவெடுத்திருந்தான். எதற்கும் இருக்கட்டும் என்று போலி பாஸ்போர்டகளையும் அவன் எடுத்து வந்திருந்தது இப்போது பயன்படுகிறது...

டிக்கெட் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் கௌதம் சொன்னான். ”டிவியில் பேசினானே அவன் தான் டோர்ஜே. அவன் பாம்பு ஏணி ஆட்டத்தில் ஒரு தடவை மேலே வரை வந்து விட்டான். கடைசியில் பகடையில் மூன்று போட்டு பெரிய பாம்பில் சிக்கி கீழே வரை போய்விட்டான்.... ...” தொடர்ந்து தங்கள் விளையாட்டை விவரித்துக் கொண்டே வந்த மகனைப் பார்த்து அக்‌ஷய் புன்னகைத்தான்....

இன்று காலை உறக்கத்திலிருந்து எழுந்தவன் ”மைத்ரேயன் எங்கே?” என்று கேட்டான். அக்‌ஷய் மைத்ரேயனை அவன் தாய் வந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார் என்றும் இனி இரண்டு வருடங்கள் கழித்து மறுபடி இந்தியா வருவான் என்றும் சொன்னான். அப்போதைக்கு கௌதம் கண்ணில் நீர் கோர்த்தது. ஆனால் மீண்டும் நண்பன் வருவான் என்ற நம்பிக்கையில் சிறிது நேரத்தில் அவன் இயல்பாகி விட்டிருந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அவன் நினைவு வைத்துக் கேட்பானா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டால் இன்னொரு கதை சொல்ல வேண்டும்....


லாஸா விமான நிலையத்தில் இயல்பான சோதனைகளே நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவன் சென்ற முறை வந்த போதிருந்த சோதனை அதிகாரிகளின் கும்பல் இருக்கவில்லை. அவன் பாஸ்போர்ட்டையும் கௌதமின் பாஸ்போர்ட்டையும் சோதித்த அதிகாரி அவனைக் கூர்ந்து பார்த்தார். அக்‌ஷய் ஆபத்தை உணர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் என்னேரமும் மகனைத் தூக்கிக் கொண்டு விமான நிலையத்திலிருந்து ஓடவும் தயார் நிலையில் தான் இருந்தான்.

“ஒரு நிமிடம்...” என்று சொல்லி விட்டு அந்த அதிகாரி தனக்குப் பின்னால் இருந்த அறைக்குப் போனார். அக்‌ஷய்க்கு ஓடித் தப்பிக்கலாமா என்ற யோசனை பலமாக எழுந்தது. அதிகாரி போன வேகத்திலேயே வந்தார். அவர் கையில் ஒரு பூங்கொத்தும் அதனுடன் ஒரு சீட்டும் இருந்தது.

“இதைத் தரச் சொன்னார்” என்று மட்டும் சொல்லி பூங்கொத்தையும் சீட்டையும் நீட்டினார். திகைப்புடன் வாங்கிய அக்‌ஷய் சீட்டைப் பிரித்துப் படித்தான்.

“வாழ்த்துக்கள். தங்கள் பயணம் இனியதாக அமையட்டும். எப்போதாவது சீனாவுக்கு வரும் சந்தர்ப்பம் அமைந்தால் என்னைக் கண்டிப்பாகச் சந்தியுங்கள். அதை ஒரு கௌரவமாக நான் நினைப்பேன். – லீ க்யாங்”

அக்‌ஷய் நெகிழ்ந்து போய் அந்த அதிகாரியைப் பார்த்தான். அவர் மெலிதாகப் புன்னகைத்து விட்டு அடுத்த பயணியின் பாஸ்போர்ட்டை சோதிக்க ஆரம்பித்தார். 


வர்களுடைய விமானம் திபெத்தின் மலைகளைக் கடக்கையில் அக்‌ஷயின் மனம் மைத்ரேயனை நினைத்தது. இதில் ஏதாவது ஒரு மலையில் மைத்ரேயன் தியானத்தில் அமர்ந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. இல்லை அங்கிருந்து அவன் இந்த விமானத்தைப் பார்த்துக் கொண்டும் கூட இருக்கலாம்....

மைத்ரேயனைச் சந்தித்த முதல் கணத்திலிருந்து கடைசியாய் அவன் விடை பெற்ற கணம் வரை அக்‌ஷய் மனதில் திரைக்காட்சிகளாக ஓடின. யோசிக்கையில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத் தான் நடந்திருக்கிறது. ஆனால் எதையும் எந்திரத்தனமாக ஆக விடாமல் மைத்ரேயன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தியானங்களில் ஆழ்வதும், காரியங்கள் ஆவதும் மட்டுமல்லாமல் அவன் சைத்தான் மலையில் ஆடுகளுடன் விளையாடியதும், இந்தியாவில் கௌதமுடன் விளையாடியதும், தன்னுடன் நெருங்கிப் பழகியதையும் நினைக்கையில் அக்‌ஷயின் நினைவுகள் கனத்தன.

ஆனால் எதுவும் முடிவுக்கு வருகையில் மைத்ரேயன் வருத்தப்படவேயில்லை. ஏனென்றால் எல்லாமே முடிவுக்கு வரக்கூடியவையே என்கிற ஞானம் ஆரம்பத்தில் இருந்தே அவனிடம் இருந்திருக்கிறது. அதனால் ஒரு அவதார புருஷனான அவன் எல்லாவற்றையும் தாண்டிப் பக்குவமாகவே நகர்ந்திருக்கிறான். ஆனால் இருக்கும் போது முழுமையாக அனுபவித்து, முடியும் போது புரிதலுடன் புன்னகையுடனேயே அதிலிருந்து நகர்வது எல்லாருக்கும் முடிவதில்லை....


மைத்ரேயன் இருக்கும் இமயமலைத்தொடர் கண்களில் இருந்து மறைய ஆரம்பித்த போது மனதில் கனம் கூடினாலும், அதை அக்‌ஷய் ஒதுக்கி வைக்கப் பார்த்தான். ’அவதார புருஷர்களைத் தனிமனிதர்கள் தங்கள் அன்பால் கட்டிப்போட நினைக்கக்கூடாது. அவர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள். தலாய் லாமா சொன்னது போல அவன் தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்யட்டும். தர்மத்தையும் அமைதியையும் இந்த உலகத்தில் நிலை நாட்டுவது சுலபமல்ல. மாரா மடிந்து விட்டாலும் அவன் சேனை மிக வலிமையோடு இன்னும் இருக்கிறது. உலகம் அஞ்ஞானத்திலும் அக்கிரமத்திலும் ஆழமாகவே அழுந்திக் கிடக்கிறது. அனைத்தையும் மாற்ற, மிக நீண்ட பாதையில் தனியனாக மைத்ரேயன் ஒரு தவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துப் போயிருக்கிறான். அன்பால் கூட அதில் குறுக்கிடக்கூடாது.... குறுக்கிடுவது தர்மம் அல்ல..’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

அவன் மனம் ஓரளவு அமைதியடைய ஆரம்பித்தது.

அவன் உதடுகள் முணுமுணுத்தன. ”புத்தம் சரணம் கச்சாமி!”

(’நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்’)என்.கணேசன்

இந்த நாவலுடன் இரண்டு வருடங்களுக்கும் மேல் பயணித்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்திய என் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  - என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, October 24, 2016

இதில் எந்தக் கஷ்டம் வேண்டும்? தீர்மானியுங்கள்!


வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இரண்டு கஷ்டங்களில் ஒன்றை அனுபவித்தே ஆக வேண்டும். ஒன்று நல்ல விளைவுகளுக்கான முறையான, ஒரு காலத்திய தொடர் உழைப்பு. மற்றது சோம்பலும் ஒழுங்கீனமுமான கட்டுப்பாடில்லாத வாழ்க்கை மூலம் பிற்காலத்தில் பெறும் கஷ்டங்கள். இந்த இரண்டையுமே தவிர்த்து சுகமாக வாழ்ந்து முடிக்கும் பாக்கியத்தை மனிதன் இன்னமும் பெற்று விடவில்லை.

இந்த இரண்டில் முதலாவது கஷ்டம் சிறியது. இரண்டாவது கஷ்டமோ பல மடங்கு கொடியது.

முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியத்திற்கான உணவுக்கட்டுப்பாடும் கஷ்டம் தான். உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதும், நாக்கு ருசியைக் கட்டுப்படுத்துவதும் சுகமாக விஷயமில்லை தான். ஆனால் இந்தக் கஷ்டத்தைத் தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழந்து நோய்வாய்ப்படும் பெருங்கஷ்டத்தை நீண்ட காலம் அனுபவித்தே ஆக வேண்டும். வாழ்க்கையில் வயோதிகம் கொடுமையான காலக்கட்டமாகி விடும்.  முதலாமவன் நல்ல ஆரோக்கியத்தோடு பல சந்தோஷங்களை இழக்காமல் வாழும் போது, இரண்டாமவன் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்து உடல் உபாதைகளால் தினமும் கஷ்டப்படுவதை நாம் காணலாம்.

ஒரு நல்ல நிலையை எட்டும் வரை இளமையில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதும், சோம்பலில்லாமல் புத்திசாலித்தனமாக உழைப்பதும் கஷ்டம் தான். ஆனால் அப்படி ஒருவன் கட்டுப்பாடாக வாழ்ந்து, கடும் உழைப்பு உழைத்துக் கொண்டிருக்கும் போது சோம்பி இருந்தும், கேளிக்கைகளிலும், வீண் பேச்சிலும், சுற்றித்திரிதலிலும் வேறொருவன் கழித்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். சுமார் பத்து வருடங்கள் உருண்டு சென்ற பின் அவர்கள் இருவர் நிலையையும் பார்த்தால் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, நன்றாக உழைத்தவன் உயர்ந்த நிலைக்குப் போயிருப்பதையும், இரண்டாமவன் வாழ்க்கையில் சொல்லும்படியான நிலையை எட்டாமல் அன்றாட வாழ்க்கையே பிரச்னைக்குரியதாய் கஷ்டப்படுவதையும் பார்க்க முடியும்.

முதலாமவன் முன்பு கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்பு அதற்கான பலனை பெருமளவில் பெற்று விடுகிறான். இரண்டாமவன் முன்பு கொஞ்சம் சுகப்படுவதாய் தோன்றினாலும் கடைசியில் தினசரி கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

இதற்கு ஆயிரம் உதாரணங்களை நீங்கள் பார்வைக்கு எட்டிய தூரங்களிலேயே பார்த்து விடலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் செல்வந்தரின் மகன். அவருக்குப் படிப்பு வரவில்லை என்று அவர் தந்தை அவருக்கு ஒரு கடை வைத்துக் கொடுத்தார். காலையில் பத்து மணிக்கு கடைக்குப் போய் ஒரு மணிக்குத் திரும்பி வீட்டுக்கு வந்து, சாப்பிட்டுத் தூங்கி, ஐந்து மணிக்குக் கடைக்குப் போய், இரவு எட்டுமணிக்கு வீடு திரும்பி விடுவார். இளமையில் அப்படி வாழ்ந்து நாளடைவில் எல்லாம் இழந்த அவர் இப்போது வயது எழுபதைத் தாண்டிய பின்னும் ஒரு சாதாரண வேலைக்குப் போய் அதில் வரும் சம்பாத்தியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்கிறார் என்பது கூடுதல் தகவல். உழைக்க வேண்டிய வயதில் சோம்பி இருந்ததற்கு இந்த வயதிலும் அவர் விலை தர வேண்டியிருப்பது தான் வருத்தமளிக்கும் விஷயம்.

ஆங்கிலத்தில் ஒரு அழகான பழமொழி உண்டு. “சோகமான வார்த்தைகளிலேயே உச்சக்கட்ட சோகமான வார்த்தை ‘அப்படி இருந்திருக்கலாம்என்று காலங்கழிந்து சொல்வது தான்”.  

அதைச் சொல்லும் துர்ப்பாக்கியசாலியாக நாம் இருந்து விட வேண்டாமே!

என்.கணேசன் 

Thursday, October 20, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 121


க்‌ஷய் ஜீப்பில் இருந்து இறங்கி மலையை நோக்கி ஓடினான். ஓடினான் என்று சொல்வதை விடப் பறந்தான் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆசான் அவன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு வேகமாகப் பின் தொடர்ந்தார்.


மாரா குகைக்கோயில் உள்ளே இருந்து தன் சக்திக்குவிப்பால் அக்‌ஷய் மலை ஏறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். உண்மையிலேயே வியந்தான். என்னவொரு வேகம், அந்த வேகத்திலும் என்னவொரு பதற்றமில்லாத ஒழுங்கு.... யார் மேலே வந்தாலும் சுட்டுத் தள்ள முன்பே காவலர்களிடம் மாரா சொல்லி இருந்தான். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் அவனுடைய கோப்பில் படித்த ஒரு தகவல் நினைவுக்கு வந்தது. இமயமலை உச்சியில் பல பேர் அவனைத் தொடர்ந்து சுட்டும் அவன் உடலில் ஒரே ஒரு குண்டு மட்டும் தான் பாய்ந்ததாகப் படித்திருந்தான். முன்பே சக்தி வாய்ந்தவன் மைத்ரேயன் எழுப்பி விட்டிருந்த கூடுதல் நாகசக்தியால் இப்போது மேலும் சக்தி வாய்ந்தவனாக விட்டிருக்கிறான். வெளியே இருந்த நான்கு காவலர்களில் ஒருவன் டோர்ஜேயை அழைத்துக் கொண்டு போய் விட்டான். மிஞ்சி இருக்கும் மூன்று பேரும் திறமையானவர்கள் தான். ஆனால்....


ஒருவேளை கூடுதல் சக்திகள் பெற்று விட்டிருந்த இந்த அமானுஷ்யனை நம்பி தான் மைத்ரேயன் கவலையில்லாமல் படுத்திருக்கிறானோ என்ற சந்தேகத்துடன் மாரா மைத்ரேயனைப் பார்த்தான். அவன் கண்கள் மூடியே இருந்தாலும் விழிப்பில் இருப்பதை அவன் அலைகள் மாராவுக்குத் தெரிவித்தன.அக்‌ஷயை மூன்று துப்பாக்கி வீரர்களும் பார்த்து விட்டனர். மூவரில் ஒருவன் குகைக் கோயிலைத் தாண்டி பல அடிகள் மேலே இருந்த பாறையின் அருகே நின்றிருந்தான். மற்ற இருவரும் குகைக் கோயிலுக்கும் சில அடிகள் கீழே இருந்தனர். வரும் எதிரிகளின் கண்களுக்கு குகைக் கோயில் தெரியாது என்பதால் அருகே இருந்து காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று புத்திசாலித்தனமாய் நின்றிருந்தார்கள். மூவரும் மேலே இருந்து அக்‌ஷயைப் பார்த்து சுட ஆரம்பித்தனர். ஒரு துப்பாக்கி ரவையும் அக்‌ஷய் உடம்பில் படவில்லை. அதற்குச் சிக்காமல் அக்‌ஷய் அனாயாசமாக காற்றில் அங்கும் இங்கும் பாய்ந்தது பறந்தது போல் இருந்தது. மூவரும் அப்படி மாரா ஒருவனைத் தான் பார்த்திருக்கிறார்கள். வருபவன் சாதாரணமானவன் அல்ல என்பது புரிந்த பாறையருகே இருந்த ஆள் தன் நண்பர்கள் இப்போதைக்கு சமாளிக்கட்டும் என்று எண்ணியவனாய் பாறைக்குப் பின்னால் சத்தமில்லாமல் பதுங்கிக் கொண்டான். இருவரின் துப்பாக்கி ரவைகளுக்கு ஆட்டம் காட்டி நெருங்கிய அக்‌ஷய் மின்னல் வேகத்தில் இருவரையும் சீக்கிரமே கீழே சாய்த்தான். இருவரும் கழுத்து திருகி அதிர்ச்சியுடன் கீழே விழுந்து கிடந்தார்கள். அதை ஒளிந்திருந்து பார்த்த மூன்றாவது ஆள் துப்பாக்கியை இப்போது உபயோகிப்பது தன் கழுத்தையும் திருகி விடும் என்று புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாய் அசையாமல் அங்கேயே இருந்தான். மூன்றாவது ஆள் எங்காவது தெரிகிறானா என்று பார்த்த அக்‌ஷய் அவன் தென்படாமல் போகவே குகைக் கோயில் எங்கே இருக்கிறது என்று பார்த்தான். வெளிப்பார்வைக்கு எங்கேயும் தெரியவில்லை.

முன்பு பார்த்த காட்சியை நினைவுபடுத்திப் பார்த்தான். வலதுபுறம் சற்றே பழுப்பேறிய ஒரு பாறை இருந்தது.... இடது புறம் வித்தியாசமாய் வளைந்து போய் இருந்த மரம் இருந்தது.... அந்த இரண்டையும் தேடினான். சிறிது மேலே இரண்டும் தெரிந்தது. ஆனால் நடுவில் காலி இடம் போலத் தான் தெரிந்தது. உண்மையில் அது காலி இடம் அல்ல என்று உணர்ந்தவனாய் வேகமாய் அதை நோக்கிச் சென்றான்.

சரியாக குகைக் கோயில் வாசலை நோக்கி அமானுஷ்யன் வருவதை மாரா பார்த்தான். இவனால் இந்த குகைக்கோயிலில் காலடி எடுத்து வைக்க முடியுமா என்ற சந்தேகம் மாராவுக்கு வந்தது. மைத்ரேயன் இவனிடம் நாகசக்தியை எழுப்பி இருக்கிறான்... அதனால் முடியலாம். அப்படியே வந்தாலும் இந்த அமானுஷ்யனை தன் சக்தி அலைகளால் தாக்குவது அவனுக்கு மிக சுலபம். அவன் மெல்ல எழுந்திருந்தான். அதே நேரத்தில் மைத்ரேயனும் எழுந்தான். அமானுஷ்யன் உள்ளே நுழையப் போகும் அதே நேரத்தில் மைத்ரேயன் எழுந்தது மாராவுக்கு அபாயத்தை உணர்த்தியது. மாராவின் கவனம் அமானுஷ்யன் மேல் பாயும் போது தன் நண்பனைக் காப்பாற்ற மைத்ரேயன் அந்த அபூர்வ அஸ்திரத்தைக் கையில் எடுப்பானோ? அமானுஷ்யன் மேல் கவனம் போனால் இங்கு கவனம் சிதறி விடுமே.

மாரா யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்‌ஷய் பழுப்பேறிய பாறைக்கும், வித்தியாசமாய் வளைந்த மரத்திற்கும் இடையே உள்ள காலி இடத்தை நெருங்கினான். நெருங்கி காலி இடத்தில் காலடி வைத்த போது குகைக்கோயிலின் வாசலாக அது இருந்து இப்போது பார்வைக்கும் தெரிந்தது. அக்‌ஷய் உள்ளே நுழைந்தான்.

உள்ளே அவன் மகன் கௌதம் சுயநினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தான். அவன் வாயில் நுரை தள்ளி இருந்தது. மைத்ரேயன் சில அடிகள் தள்ளி நின்றிருந்தான். அவன் நேர் எதிரில் மாரா நின்றிருந்தான். அக்‌ஷய் மாராவின் வலிமையைத் தன் உணர்வுகளில் அழுத்தமாக உணர்ந்தான். அவன் இது போன்றதொரு வலிமையைத் தன் வாழ்வில் என்றும் எங்கும் உணர்ந்ததில்லை.

மைத்ரேயன் குரல் பலவீனமாக ஆனால் தெளிவாக ஒலித்தது. “கௌதமைக் காப்பாற்றுங்கள். விஷ முறிவு மூலிகை ஆசானுக்குத் தெரியும். அதை நாகமச்சத்தைத் தொட்டு விட்டு உங்கள் கையால் கௌதம் வாயில் சாறுபிழியுங்கள்”

மாராவிடம் மைத்ரேயனைத் தனியாக விட்டுப் போவதா என்று அக்‌ஷய் ஒரு கணம் தயங்கினான். மைத்ரேயன் பார்வை அவனுக்குப் போய்விடு என்று கட்டளை இட்டது. அதற்கு மேல் அக்‌ஷய் தாமதிக்கவில்லை. ஓடிப்போய் கௌதமைத் தூக்கினான். மாரா தன் சக்திகளால் அக்‌ஷயை அப்படியே செயலிழக்க வைக்க எண்ணினான். ஆனால் அதே நேரத்தில் மைத்ரேயன் எதற்கோ தயாரானதை உணர்ந்தான். உடனே அக்‌ஷயை அலட்சியம் செய்து விட்டு மைத்ரேயன் மேல் மாரா தன் கவனத்தைக் குவித்தான். அக்‌ஷய் தன் மகனைத் தூக்கிக் கொண்டு வேகமாய் குகையை விட்டு ஓடினான்.

மைத்ரேயன் தன் சகல பலத்தையும் திரட்டுவது மாராவுக்குத் தெரிந்தது. இவன் என்ன செய்யப் போகிறான் என்று மாரா குழம்பினான்.

அவன் தெய்வம் அவசரமாக ஏதோ செய்தியை உள்ளுணர்வுக்கு உணர்த்துவது போல் இருந்தது. “உன் சக்திகள்... உன் சக்திகள்.....”

மாரா மைத்ரேயனிடம் இது வரை பார்த்ததில் அடுத்தவர் சக்தியை நகலெடுக்க முடிந்த சக்தி ஒன்று தான் வலிமையானது. இப்போது மாராவின் சக்திகளை மைத்ரேயன் நகல் எடுக்க முற்படுகிறானோ? அதைத் தான் தெய்வம் ”உன் சக்திகள்... உன் சக்திகள்...” என்று சுட்டிக் காட்டுகின்றதோ? இந்த மைத்ரேயன் அப்படி நகல் எடுத்து விட்டால் இருவர் சக்திகளும் இணையாகி விடுமே..... இந்த மைத்ரேயனிடம் என்னவொரு சில்லறைத்தனம். வேண்டுமென்றே கௌதம் பாதுகாப்பாக போகும் வரை ஒன்றும் செய்யாமல் காத்திருந்து விட்டு என் சக்திகளைத் திருடத் தயாராகும் இவன் தன்னையோ பிறரையோ காப்பாற்ற அல்லாமல் வேறெதற்கும் தன் அபூர்வ சக்தியைப் பயன்படுத்த மாட்டான் என்று நம் தெய்வமே தவறாக அன்று புரிந்து கொண்டு விட்டதே. இந்தத் திருடன் என்ன தான் செய்ய மாட்டான்! மாரா ஆத்திரமடைந்தான்.

கௌதமும் சாக வேண்டும், மைத்ரேயனும் சாக வேண்டும். மாரா அந்த இரண்டையும் சாதிப்பான். மாரா இருந்த இடத்தில் இருந்தே, பாறைக்குப் பின் ஒளிந்திருந்த காவலனுக்காக அசுரக்குரலில் கத்தினான். “ஆசானைக் கொல்”

மைத்ரேயன் நகலெடுக்கும் சக்தியைப் பயன்படுத்தும் முன் இயங்க வேண்டிய அவசரத்தை உணர்ந்தவனாய் அடுத்த வினாடியே தன் அனைத்து சக்திகளையும் சேர்த்துக் குவித்து எதிரே இருந்த மைத்ரேயனை அழிக்க மாரா ஏவி விட்டான். மைத்ரேயன் அந்தக் கணத்தில் மிக பலவீனமாகவே இருந்தான் என்றாலும் சகல பலத்தையும் திரட்டித் தயாரானான். அழிக்கும் அலைகள் பிரம்மாண்டமான வீச்சோடு மைத்ரேயனை நோக்கிச் சென்ற போது மைத்ரேயன் தன் முன்னால் வலிமையான கண்ணாடி போன்ற யோகசக்திச் சுவரை எழுப்பி இருந்தான். எதிரில் மைத்ரேயனுக்குப் பதிலாக அந்த யோகக் கண்ணாடியில் மாரா தன்னையே பார்த்தான். வந்த சக்திகள் அந்தச் கண்ணாடிச் சுவரில் மோதி அப்படியே அதே வேகத்தில் மாராவை நோக்கித் திரும்பின.

மாரா ஸ்தம்பித்து நின்றான். அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. ’நான் மைத்ரேயனின் சக்திகளை சூனியத்தையும் தாண்டித் துழாவிய போது என் பிம்பத்தையே காட்டியது இது தானா? இதை அஸ்திரமாய் அறிய நான் தான் தவறிவிட்டேனா? உன் சக்திகளே உன்னை அழிக்கப் போகிறது என்பதைத் தான் தெய்வம் சொல்ல வந்ததா? உன்னிடமிருந்தே நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மைத்ரேயன் சொன்னது இந்த அர்த்தத்தில் தானா’

மைத்ரேயன் அமைதியாகச் சொன்னான். “எவ்வளவு பலவீனனாக இருந்தாலும் சேர்த்து வைத்திருப்பது தர்மமாக இருந்தால் தக்க சமயத்தில் அதுவே அவனைக் காக்கும். எவ்வளவு பலவானாக இருந்தாலும் சேர்த்து வைத்திருப்பது தீவினை என்றால் அதுவே சமயம் பார்த்து அவனைக் கவிழ்த்து விடும். எத்தனையோ அறிந்த நீ இந்த எளிமையான சத்தியத்தை அறியத் தவறி விட்டாயே!”

அந்த எளிமையான சத்தியம் நாராசமாய் காதில் விழ மாரா கடைசி கணத்தில் சர்வ பலத்தையும் திரட்டி ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கப் பார்த்தான். அவன் அந்த வித்தையை அறிவான். ஆனால் அதற்குத் தேவையான காலம் அவனிடம் இருக்கவில்லை. அதற்குள் அந்த அழிக்கும் சக்திகள் அவனுள்ளே பாய்ந்தன. அடுத்த கணம் ஒரு பெரும் தீப்பிழம்பாய் மாரா குகையிலிருந்து வெளியே வீசப்பட்டான். குகையின் உள்ளும் மாரா தெய்வச்சிலை தீப்பிழம்பாய் பிளந்து விழுந்தது.கௌதமைக் காப்பாற்றும் விஷமுறிவு மூலிகையை வேகமாகத் தேடிப் போன ஆசான் தூரத்தில் ஓரிடத்தில் அதைக் கண்டுபிடித்தார். கௌதமின் நாடியைப் பார்த்திருந்த அவருக்கு அதிகமாய் தாமதித்தால் அவன் உயிர்பிழைக்க முடியாது என்பது புரிந்திருந்தது. முன்பே அக்‌ஷய்க்கு அவர் நிறைய கடன்பட்டிருக்கிறார். அந்த சிறுவனுக்கு ஏதாவது ஆனால் அவர்களுக்கு உதவிய அக்‌ஷய் தண்டிக்கப்பட்டது போல் ஆகி விடும். இந்த எண்ணத்தில் மூலிகைச் செடி நோக்கி அவர் வேகமாக ஓடிய போது தான் மேலே பாறையின் பின் மறைந்திருந்த காவலன் அவரைச் சுட்டான். அவர் முதுகில் இரண்டு துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன.

(அடுத்த வியாழன் முடியும்)


என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, October 17, 2016

என் புதிய நாவல் “இருவேறு உலகம்”


அன்பு வாசகர்களே,

வணக்கம்.

புத்தம் சரணம் கச்சாமி நாவல் 27.10.2016 வியாழனுடன் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து தீபாவளி போனசாக தீபாவளி(29.10.2016) அன்று காலை “இருவேறு உலகம்” என்ற புதிய நாவல் ஆரம்பமாகிறது. பின் வழக்கம் போல் வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும்.

 ஒரு மர்மநாவல் போல ஆரம்பிக்கும் இத் தொடர்கதை போகப் போக புதிய புதிய பரிமாணங்களைக் காட்டும் என்பதைத் தவிர அதிகமாக இது குறித்து நான் இப்போது ஒன்றும் சொல்லப் போவதில்லை. நாவலே உங்களிடம் பேசட்டும்.

அன்புடன் உங்கள்
என்.கணேசன்

Thursday, October 13, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 120

”உன் நண்பன் விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அது அவனை உடனே கொன்று விடாது. சிறிது சிறிதாகத் தான் கொல்லும். அவனைக் கொல்ல நாளை வரை நேரம் எடுத்துக் கொள்ளும்.” என்று மாரா மைத்ரேயனிடம் தெரிவித்தான். மைத்ரேயன் அமைதியை முறியடிப்பதன் அவசியத்தை அவன் மறுபடியும் உணர்ந்தான்.

மைத்ரேயன் இந்த முறை கண்களைத் திறக்கவும் இல்லை.

மாரா தொடர்ந்து சொன்னான். ”ஏன் அவனைத் தடுக்க மாட்டேன்கிறாய்?”

“இதைத் தடுத்தால் வேறு விதத்தில் அவனைக் கொல்லப் பார்ப்பாய். அவன் இறக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது....” கண்களைத் திறக்காமலேயே மைத்ரேயன் சொன்னான்.

“நண்பன் என்றால் உன்னைப் போல் இருக்க வேண்டும். நண்பனையே காப்பாற்ற முடியாதவன் உலகைக் காப்பாற்றுகிறானாம். என்ன ஒரு வேடிக்கை” மாரா ஏளனமாகச் சொன்னான்.

மைத்ரேயன் மௌனமாக இருந்தான். மாரா விடுவதாய் இல்லை. “உன் நண்பன் இப்படிச் சாவதில் உனக்கு வருத்தமே இல்லையா?”

“அவன் சட்டை மாற்றும் போது வருத்தப்படும் அவசியத்தை நான் உணராதது போலவே உடலை மாற்றும் போதும் உணரவில்லை. அவனைப் போன்ற தூய்மையானவன் மீண்டும் மிக நல்ல பிறப்பையே அடைவான்.”

மாராவுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. ’அடப்பாவி நீ என்னையே மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட மாரா அன்று மிகப்பெரிய பாடத்தை மைத்ரேயனிடமிருந்து கற்றான். இவனை யாரும் பேசி அமைதி இழக்கச் செய்ய முடியாது. அதற்கு முயற்சி செய்பவன் தான் மன அமைதி இழந்து தவிக்க வேண்டி வரும்.

இனி ஒரு வார்த்தை இவனிடம் பேசப்போவதில்லை என்று மனதில் திடமாய் மாரா முடிவெடுத்தான். இனி மனதை அமைதியாகவும், அறிவைக் கூர்மையாகவும் வைத்திருந்தால் தான் திட்டங்கள் நிறைவேறும். மாரா திடமாக முடிவெடுத்தபின் அவன் மனம் எந்தக் குறுக்கீட்டையும் ஏற்படுத்துவதில்லை. அவன் அனுமதித்ததுமில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌதம் அரைமயக்கத்தில் அப்படியே சாய்ந்ததை உணர்ச்சியே இல்லாமல் கவனித்து விட்டு மாரா கண்களை மூடினான்.

இந்த சில நாட்களில் மாரா பெற்று விட்டிருந்த சக்திகளின் காரணமாக அவன் உணர்வுகள் மிகவும் கூர்மையாகி விட்டிருந்தன. எந்த நவீனக் கருவிகளாலும் கூடக் கண்டுபிடிக்க முடியாத அதிநுட்பமான அலைகளையும் அவனால் ஆல்ஃபா, தீட்டா அலைகளில் சஞ்சரிக்கையில் கண்டுபிடிக்க முடியும். அவன் கண்களை மூடி இரண்டு நிமிடங்களில் ஆல்ஃபா அலைகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தான்....


சானும் அக்‌ஷயும் சைத்தான் மலை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். மிக விரைவாகக் கொண்டு போய் சேர்த்தால் இரண்டு மடங்கு பணம் தருவதாக அவர்கள் சொல்லி இருந்ததால் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த ஜீப் அதிகபட்ச வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. ஆசான் தலாய் லாமாவுக்கும், திபெத்தின் அனைத்து முக்கிய மடாலயங்களுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்து விட்டிருந்ததால் அவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட எல்லா மடாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை ஆரம்பமாகி இருந்தது.

லீ க்யாங்கின் திடீர்  தலைகீழ் மாற்றத்தை ஆசானால் இன்னமும் நம்ப முடியவில்லை. மைத்ரேயர் பிறந்த காலம் முதல் சிலமணி நேரங்கள் முன்பு வரை பரம எதிரியாக இருந்து மைத்ரேயரை அழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வந்த லீ க்யாங் எப்படி மாறினான் என்று அவருக்கு விளங்கவில்லை. ஆனால் எச்சரிக்கை விடுத்து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவு மாறியதற்குக் காரணம் மைத்ரேயரை அவன் சந்தித்தது தான் என்று முடிவுக்கு வந்தார்.

தற்போதைய நிலவரம் குறித்து மௌனலாமாவிடம் கேட்கச் சொல்லி அவர் மௌனலாமா இருக்கும் மடாலயத்தைக் கேட்டிருந்தார். சிறிது நேரத்திலேயே பதில் வந்தது. ’நாளை இரவுக்குள் மைத்ரேயரின் உயிர் பிரியாமல் பார்த்துக் கொண்டால் பின் எந்தக் கவலையும் இல்லை’ என்று மௌனலாமா எழுதிக்காட்டினாராம். அதிர்ந்து போன ஆசான் அதையும் உடனே தலாய் லாமாவுக்குத் தெரிவிக்க, தலாய் லாமா உடனே உணவு நீரின்றி முழு நேரப் பிராத்தனையில் இறங்கி விட்டார்.

ஆசானுக்கு அதிகபட்ச வேகத்துடன் ஜீப் போய்க் கொண்டிருந்தாலும் அந்த வேகமும் போதவில்லை. ‘இந்த வேகத்தில் போனால் தாமதமாகி விடாதா?’ என்று அக்‌ஷயிடம் குழந்தைத்தனமாய் கேட்டார். அக்‌ஷய் புன்னகையோடு சொன்னான். “அங்கே ஆபத்தில் இருப்பது மைத்ரேயன் மட்டுமல்ல ஆசானே, என் மகனும் தான். ஆனால் இதை விட வேகமாகப் போகச் சொன்னால் நாம் சைத்தான் மலைக்குப் போவதற்குப் பதிலாக நேராக சைத்தானிடமே போய்ச் சேர வேண்டி இருக்கும்”

ஆசான் அதைக்கேட்டு சிரித்தார். பின் மெல்லக் கேட்டார். “உங்களால் எப்படி இந்த நேரத்திலும் அமைதியை அதிகமாய் இழக்காமல் இருக்க முடிகிறது அன்பரே!”

அக்‌ஷய் சொன்னான். “ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும் ஆசானே. அந்த விதி எழுதும் கை நம் கதையை இப்போது எழுதிக் கொண்டிருக்கவில்லை. எப்போதோ எழுதி முடித்து விட்டது. அது நல்லதோ, கெட்டதோ நாம் இப்போது பதற்றப்படுவதால் மாறிவிடப்போவதில்லை”மாரா மைத்ரேயனின் அலைவரிசைகளை ஆராய்ந்தான். மைத்ரேயன் டெல்டா அலைகளில் இருந்தான். ஆல்ஃபா அலைகளை விட தீட்டா அலைகள் நுட்பமானவை என்றால் டெல்டா அலைகள் அதைக்காட்டிலும் அதிநுட்பமானவை. பெரும்பாலும் யோகிகள் சித்தர்கள் மட்டுமே சஞ்சரிக்கும் அலைகள் அவை. அந்த டெல்டா அலைகளுக்குப் போவது மாராவால் முடியாத காரியம் இல்லை. ஆனால் டெல்டா அலைகளுக்குப் போகும் போது மனம் தன் சொந்த அடையாளத்தைச் சுத்தமாக மறந்து விடுகிறது என்பது மாராவின் பழைய அனுபவம். சொந்த அடையாளத்தை மறந்தால் அவன் மாரா அல்ல. அவன் மாராவாக இல்லாமல் போனால் மைத்ரேயனைக் கொல்வது சாத்தியமல்ல. மேலும் அது செயலற்ற நிலை. எனவே அவன் டெல்டா அலைகளில் சிக்குவதைத் தவிர்த்தான். தீட்டா அலைகளில் இருந்து கொண்டே மைத்ரேயனை ஆராய்ந்தான். ஏதோ ஒன்று சரியில்லை என்று அவன் உள்மனம் சொன்னது.

அக்‌ஷய் மைத்ரேயனை தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றியவன். அக்‌ஷயின் மகன் கௌதமோ மைத்ரேயனின் நண்பன். அவனோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டது தான் தன் கடைசி ஆசை என்று மைத்ரேயனே ஒப்புக் கொண்டிருக்கிறான். எல்லாரிடத்திலும் பட்டும் படாமலும் இருந்த மைத்ரேயன் சிறிதாவது நெருக்கத்தைக் காண்பித்தான் என்றால் அது கௌதமிடம் மட்டும் தான். மைத்ரேயனின் தாய், சகோதரர்கள் எல்லாம் திபெத்திலேயே இருந்தாலும் கூட அவர்களைப் பயன்படுத்த அறிவுறுத்தாமல் கௌதமைப் பயன்படுத்திக் கொள்ள மாராவின் தெய்வம் அறிவுறுத்தியது அதை வைத்து தான். அதனால் தான் கௌதமைக் கொல்ல முயற்சித்து, அதை மைத்ரேயன் என்ன சக்தியால் தடுக்கிறான் என்று கண்டுபிடித்து, அந்த சக்திக்கு எதிர்சக்திகளைத் தேர்ந்தெடுத்து அவனை அழிக்கச் சொன்னது. அப்படிப்பட்ட நண்பனைக் காப்பாற்றுவதற்கு சின்ன முயற்சி கூட எடுக்காமல் உடலை மாற்றுவது சட்டையை மாற்றுவது போலத் தான் என்று தத்துவம் பேசியது மாராவுக்கு யதார்த்தமாய் தெரியவில்லை.

வேகமாக கௌதமைக் கொல்லாமல் நிதானமாகக் கொல்ல முற்பட்டதே மைத்ரேயன் தன் சக்தியைப் பயன்படுத்துவதும் அதே நிதானத்தில் இருக்கும், அந்த சக்தியை ஆராய்வதும் தனக்கு எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான். ஆனால் நண்பனைப் பற்றிய கவலையோ, துக்கமோ சின்ன அளவில் இருந்தால் கூட மைத்ரேயனால் டெல்டா அலைகளுக்குப் போக முடியாது என்பதால் எந்த சக்தியும் பயன்படுத்தும் எண்ணமே இல்லாமல் இருப்பது தெரிந்தது. தன் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒரு சூழ்ச்சி இதில் இருக்கிறது என்று மாரா நினைக்க ஆரம்பித்தான்.

தன் நுட்பமான சக்திகளை ஒன்று திரட்டி மனதைக்குவித்து மேலும் ஆழமாக மைத்ரேயனுக்குள்ளே என்னென்ன இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தான். அமைதி, அன்பு, கருணை போன்ற அலைகளை ஒதுக்கி விட்டு சக்தி, அறிவு வடிவில் இருப்பவைகளை ஆராய்ந்தான். அடுத்தவர் எண்ணங்களைப் படிக்க முடிந்த சக்தி, அடுத்தவர் மூளைகளில் பதிந்திருந்த தகவல்களை அறியவும் பயன்படுத்தவும் முடிந்த சக்தி இரண்டும் தென்பட்டன. இரண்டாவது சக்தியை வைத்து தான் கௌதமிடமிருந்தோ, அக்‌ஷயிடமிருந்தோ தமிழறிவை அப்படியே எடுத்துக் கொண்டிருப்பான். இந்த சக்தி தனக்கு அபாயமானது என்பதை மாரா உணர்ந்தான். இதை உபயோகித்து மாராவிடம் உள்ள எந்த சக்தியையும் கூட அவன் நகல் எடுத்துக்கொண்டு விட முடியும். ஆனால் அந்த சிரமத்தைக் கூட மைத்ரேயன் எடுக்கவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அலட்சியமா, அகங்காரமா? மேலும் மாரா ஆழமாய் போனான். வெறும் சூனியம் மட்டும் தெரிந்தது. எண்ணங்களின் பதிவுகள், நினைவுகள் எதுவுமே இல்லாத சூனியம்..... இனியும் எதாவது சக்தி இருக்கிறது என்றால் அது அந்த சூனியத்தையும் தாண்டி ஒளித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.... அதையும் ஆராய்ந்தான். அமைதியாக இருக்கிற நீரிலே எட்டிப்பார்ப்பவர் பிம்பம் தெரிவது போல கடைசியில் அவனே தெரிந்தான்.

இனி பார்க்க ஒன்றுமில்லை. மாரா மெல்ல பின் வாங்கினான். ஒன்றுமே இல்லையே. இப்போதே கூட மைத்ரேயனைக் கொன்று விடலாம் தான். ஆனாலும் அவன் அவசரப்பட விரும்பவில்லை. நாளை மைத்ரேயன் மிகப் பலவீனமாக இருக்கும் நாள். நாளை அலட்டிக் கொள்ளாமல் அவனை அழித்து விடலாம்.

ஆனாலும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்று தங்கள் இருவருடைய சக்தி நிலைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் அளந்து பார்த்தான். அவனது இயக்கத்தினர் அவரவர் இடங்களில் இருந்து தங்கள் சக்திகளைக் குவித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அவை எல்லாம் பெரும் பலமாக அவன் உணர்ந்தான். அவன் தனி சக்திகளோ உச்ச நிலையில் இருந்தன. அவன் வாழ்நாளில் இது வரை இந்த உச்சத்தை அடைந்ததில்லை. இது மைத்ரேயனுக்காகவே அவன் அடைந்த உச்சம்.....

மைத்ரேயனைச் சுற்றியும் நிறைய பிரார்த்தனை அலைகள் தெரிந்தன. பிக்குகள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மைத்ரேயனின் தனிப்பட்ட சக்தி மங்கலாகவே தெரிந்தது. அவன் சம்யே மடாலயத்திலிருந்து பார்த்ததை விட பலவீனமாக இருந்தது. அவன் மலையில் இருக்கிறான் என்றால் மைத்ரேயன் பாதாளத்தில் இருக்கிறான்.....

மாரா மனதில் இப்போது அதீத உற்சாகத்தை உணர்ந்தான். கண்களைத் திறந்து பார்த்தான். கௌதம் இப்போது சுயநினைவில் இல்லை. மைத்ரேயனோ செயலற்ற சூனியவெளியில் திளைத்திருந்தான். இப்போதைக்கு மைத்ரேயனுக்கு அது ஒருவிதத்தில் உதவியே என்று நினைத்தான். சக்தி விரயம் ஆகாது. இருக்கின்ற உடல் சக்தியும் விரயம் ஆகி நீங்கி விட்டால் அவனிடம் மீதி எதுவும் மிஞ்சி இருக்காது..... மைத்ரேயன் அங்கேயே படுத்துக் கொண்டான். உறங்கியும் போனான்.

ஆனால் மாரா உறங்கவில்லை. இளைப்பாறிய நிலையில் இருந்தாலும் எந்த நேரமும் மின்னல் வேகத்தில் இயங்கும் தயார் நிலையில் இருந்தான்.  அப்போது தான் மைத்ரேயனின் வலது பாத அடிப்பகுதியில் தர்மசக்கரத்தைப் பார்த்தான். அவன் பார்க்கையில் அந்த தர்மசக்கரம் மங்கலாக ஒளிர்ந்து ஒரு முறை சுற்றி நின்றது. இதுவே கடைசி சுற்றாக இருக்கும் என்று மாரா நினைத்தான்....

காலம் நகர்ந்தது. மாரா பொறுமையாகக் காத்திருந்த அடுத்த நாள் பிறந்தது. அப்போது மாரா புதியதொரு சக்தியின் வரவை உணர்ந்தான். நாகசக்தி. அமானுஷ்யன் சைத்தான் மலையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்....

மாரா முகத்தில் புன்னகை அரும்பியது. மகன் சவத்தைக் காண வந்திருக்கிறான்.


(தொடரும்)

என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, October 10, 2016

ஏன் வாசிக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்?


ன் வாழ்க்கையில் நான் ஏதாவது கற்றிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நூல்களே என்று தயங்காமல் கூறுவேன். ஒரு நல்ல நூல் சில சமயங்களில் நல்ல நண்பனாகத் துணை நிற்கிறது. சில சமயங்களில் நல்ல ஆசிரியனாகக் கற்றுத் தருகிறது. என் வாழ்வின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் இதை ஆத்மார்த்தமாக நான் உணர்ந்திருக்கிறேன். அந்த நூல்களை எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக இன்றளவும் நான் மானசீகமாக உணர்கிறேன். ‘எந்தரோ மகானுபாவலு அந்தரிகு வந்தனமுலு!

இன்று பாடப்புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்கள் படிப்பது வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் புத்தகங்கள் பிடித்திருந்த இடத்தை இன்று தொலைக்காட்சியும் அலைபேசியும் பிடித்துக் கொண்டு விட்டது. ஆனால் புத்தகங்கள் தரும் நிறைவையும், பயனையும் அவை தருமா என்று நடுநிலையோடு யோசித்தால் இல்லை என்பதே முடிவான பதிலாக இருக்கும்.

சீரியஸான புத்தகங்களை மட்டும் நான் கூறவில்லை. நல்ல கதைகள், நல்ல நாவல்கள் கூட நல்ல அனுபவங்களையே நமக்குத் தரும். பொன்னியின் செல்வன் படிக்கையில் சோழ மண்ணிற்கே போனதாக ஒரு உணர்வு வரும். வந்தியத்தேவன், அருண்மொழிவர்மர், நந்தினி போன்ற பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்களும் நம் மனக்கண் முன் உயிர்வடிவம் பெறுவார்கள். இங்கு கல்கியின் கற்பனையோடு நம் கற்பனையும் கைகோர்க்கும். அந்த கதாபாத்திரங்களோடு நாம் நீண்ட தூரம் பயணிப்போம். இப்படி மனக்கண்ணில் காட்சிகள் விரியும் போது, கற்பனா சக்திக்கும், ஆக்க சக்திக்கும் காரணமாக இருக்கும் வலது மூளையில் நல்ல அதிர்வலைகள் ஏற்படுவதாகவும், அந்தப் பகுதி சிறப்பாக இயங்க அது ஊக்கம் அளிக்கும் என்றும் மூளை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதையே நீங்கள் தொலைக்காட்சியிலோ, திரைப்படத்திலோ பார்க்கும் போது கற்பனைக்கு வேலையில்லை. மூளையின் வலது பாகத்திற்கும் வேலையில்லை. மேலும் புத்தகமாகப் படிக்கையில் மொழியறிவில் பாண்டித்தியம் தானாக நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பலன் தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. காட்சி ஊடகங்களில் ஒரு காட்சிக்கு அர்த்தம் ஒன்று தான். ஆனால் ஒரு உயர்ந்த நூலைப் படிக்கும் போதோ ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தம் நமக்குக் கிடைக்கும். இப்படி எத்தனையோ சிறப்பு அம்சங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.   

அறிஞர்களின் நூல்களால் கிடைக்கும் பலன்களோ அளப்பரியது. நான் தளர்வுறும் போதெல்லாம், குழப்பமடையும் போதெல்லாம் அறிஞர்களின் நூல்களே என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. தெளிவடையச் செய்திருக்கின்றன. ஒரு நல்ல நண்பனோ, ஆசானோ எல்லா நேரங்களிலும் நமக்கு அருகில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் மகத்தான நூல்கள் எந்த நேரத்திலும் நம்மிடம் இருக்க முடிந்தவை என்பதாலேயே அவற்றை நாம் வாங்கி நம்முடன் வைத்திருந்து நன்மைகள் பெற வேண்டும்.
  
ஒரு நூலகம் திறக்கப்படும் போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று மகாத்மா காந்தி கூறியது மிகை வாக்கியம் அல்ல. இளமையில் மற்ற சூழல்கள் குறைபாடுடையதாக இருந்தாலும் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் அந்தச் சூழல்களையும் மீறி ஒருவரை நல்நெறிப்படுத்தும். எனவே இளைஞர்களே மனதைக் குப்பையாக்காத  நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற எது கைவிட்டாலும் நல்ல புத்தகங்கள் உங்களைக் கைவிடாது.

எனவே எல்லோரும் நூல்களைப் படியுங்கள். உங்கள் குழந்தைகளையும் படிக்கத் தூண்டுங்கள். பரிசுப்பொருள்களாக நல்ல நூல்களையே கொடுங்கள். இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதே ஒரு மிக நல்ல சமூக மாற்றத்திற்கான அஸ்திவாரமாக இருக்கும்.

எழுத்தாளர்களுக்கும் மகத்தான பொறுப்புகள் உண்டு. எழுத்தாளர்களே, நல்லதை எழுதுங்கள். புரியும்படி எழுதுங்கள். சுவாரசியமாக எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களால் இளைஞர்களை வாசிப்புக்கு இழுத்து வாருங்கள். யதார்த்தம் என்ற பெயரில் கிளர்ச்சியாக எழுதுவதும், உண்மை என்ற பெயரில் மோசமான உணர்வுகளைத் தூண்டுவது போல் எழுதுவதும், அறிவுஜீவி என்ற பெயரில் எதுவும் எளிதில் விளங்காதபடி அலங்காரமாய் எழுதிக் குழப்புவதும் அந்தப் பெயர்களுக்கு நீங்கள் செய்யும் அவதூறே ஆகும்.
  
நூல்கள் கதைகளானாலும் சரி, கட்டுரைகளானாலும் சரி, கவிதைகளானாலும் சரி வாசித்து முடித்த பின் நல்ல உணர்வுகளை, படித்த வாசகனுக்கு ஏற்படுத்தித் தருகிறதா, நல்லுணர்வுகளை மனதில் தங்க வைக்கிறதா என்பது மட்டுமே நல்ல எழுத்தை நிர்ணயிக்கிறது. மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டும்படியும் அந்த நல்ல எழுத்து இருந்தால் அது தான் எழுத்தாளன் பெறும் சிறந்த அங்கீகாரம். ஒரு நூலைப் படித்து விட்டு இவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடி அந்த வாசகன் மற்ற புத்தகங்களையும் படிக்கத் தூண்டினால் அதுவே அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மகத்தான விருது.

மற்ற பாராட்டுகளும், விருதுகளும், அபிப்பிராயங்களும் வெறும் ஆரவாரமே!

சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

என்.கணேசன்


Thursday, October 6, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 119

”நீ தற்கொலை செய்து கொண்டால் நான் அவனைக் கொல்லாமல் விடுகிறேன்” என்று சொல்லி மைத்ரேயனை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தியதாக நினைத்த மாராவிடம் அமைதியாக மைத்ரேயன் சொன்னான். “தற்கொலை செய்து கொள்ள எனக்கு உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன். வேண்டுமானால் நீ என்னைக் கொன்று விட்டு பிறகு அவனை விடுவிக்கலாம்”

இதே கோயிலில் மகாசக்தி செய்த எச்சரிக்கை மட்டுமே மாராவை மைத்ரேயன் சொன்னதை உடனே முயற்சிக்காமல் தடுத்தது. வலை வீசிப் பார்க்கிறான் என்று மனதில் நினைத்த மாரா சொன்னான். “நானாக கொல்வதென்றால் இருவரையும் கொல்வேன். முதலில் அவனை. பின் உன்னை. நீயாகத் தற்கொலை செய்து கொண்டால் அவனை நீ காப்பாற்றலாம்.”

மைத்ரேயன் எதுவும் சொல்லாமல் அவனையே புன்னகையுடன் கூர்ந்து பார்த்தான். அவன் மனதில் உள்ளதை அவன் படித்து விட்டது தெரிந்தது. மைத்ரேயன் வாய் விட்டுச் சிரித்தான். கௌதம் கூட அவன் அப்படிச் சிரித்து பார்த்திராததால் விளையாடுவதை நிறுத்து விட்டு ஆச்சரியத்துடன் நண்பனைப் பார்த்தான். பின் டோர்ஜேவிடம் மெல்லக் கேட்டான். “அந்த ஆள் என்ன ஜோக் சொன்னார் என்று இவன் இப்படிச் சிரிக்கிறான்.”

டோர்ஜேக்கு கேள்வி புரிந்தாலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் பதில் சொல்லாமல் அவர்களையே பார்க்க, அவர்கள் பேச்சு புரியாத கௌதம் குகையின் மற்ற பகுதிகளை ஆராய ஆரம்பித்தான்.

மாரா முகம் சிவக்க மைத்ரேயனிடம் கேட்டான். “ஏன் சிரிக்கிறாய்?”

“உலகமே என் கையில் என்கிறாய், உலகில் நடப்பது எல்லாவற்றையும் தீர்மானிப்பவன் நான் என்கிறாய். அப்படிப்பட்டவன் என்னைப் பார்த்துப் பயப்படுகிறாயே என்று நினைத்து தான் சிரித்தேன்.”

அதிகபட்சமாய் புன்னகை அல்லது சின்ன சிரிப்பு மட்டுமே வெளிப்படுத்தும் மைத்ரேயன் இந்த ரகசியக் குகைக்கோயிலில் அவர்களது தெய்வச்சிலை முன்னால் இப்படி வாய் விட்டுச் சிரித்ததை பெருத்த அவமானமாக மாரா உணர்ந்தான்.

அவனுடைய கோபம் வெடித்தது. “நீ ஒரு துரும்பு. நான் மலை. உன்னைப் பார்த்து நான் பயப்படவில்லை. என் சக்தி என்ன என்று பார்க்கிறாயா. காட்டட்டுமா....” என்ற மாரா அந்தக் குகைக்குள் மேலே நன்றாகப் பதிந்திருந்த சின்னப் பாறையைக் கூர்ந்து பார்த்து தன் சக்தியைப் பிரயோகிக்க அந்தப் பாறை ஆட்டம் கண்டு கடைசியில் கீழே விழுந்தது.

அதைப் பார்த்து டோர்ஜே நடுங்க ஆரம்பிக்க கௌதம் கண்களை விரித்துச் சொன்னான். “ஓ இந்த ஆளுக்கு இத்தனை சக்தி இருக்கிறதா?”

மாரா மைத்ரேயனிடம் கேட்டான். “இனியும் என் சக்திகளை ஒவ்வொன்றாகக் காண்பிக்கட்டுமா? உன்னால் ஒரு சக்தியை இப்படிக் காட்ட முடியுமா? இல்லை சொல்லத்தான் முடியுமா”. அவன் மனதிற்குள் சின்ன ஆசை இருந்தது. ரோஷப்பட்டு அவன் தன்னிடமுள்ள அந்த அஸ்திரத்தைச் சொல்லிக் காண்பிப்பானா?

மைத்ரேயன் அவன் வலையில் சிக்கவில்லை. அவன் முதல் கேள்வி தவிர வேறு எதுவுமே காதில் விழாதது போல் அமைதியாக அதற்கு மட்டும் பதில் சொன்னான். “வேண்டாம் இது ஒன்றே போதும். இப்போது சொல். இந்தப் பாறை விழுந்து என்ன சாதித்தாய்? இந்த சக்தி உனக்கு எந்த விதத்தில் இப்போது உதவியிருக்கிறது?”

மாராவுக்கு ஆத்திரம் அதிகமாகியது. “அடுத்தவர் சாதனைகளை ஒத்துக் கொள்ளவும் பெருந்தன்மை வேண்டும் மைத்ரேயா. அது உனக்கில்லை”

மைத்ரேயன் சொன்னான். “நீ இது வரை சொன்னது, செய்தது, அடைந்திருப்பது எதுவுமே எனக்கு சாதனையாகத் தோன்றவில்லை. அப்படித் தோன்றி இருந்தால் கண்டிப்பாக ஒத்துக் கொண்டிருப்பேன். உதாரணத்திற்கு உன் செல்வத்தை எடுத்துக் கொள்வோம். உன்னிடம் இருக்கிற பல லட்ச கோடி சொத்தை பிரித்து கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தந்தால் அத்தனை பேரும் சந்தோஷமாக வாழ்வார்கள். ஆனால் அத்தனை கோடி பேருக்கு சந்தோஷம் தரும் செல்வத்தை ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்திருக்கும் நீ சந்தோஷமாக இல்லை. திருப்தியாக இல்லை. பெரிய நாடுகள் கூட நீ சொன்னபடி கேட்கும் என்கிறாய். தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், நிறுவனங்கள், லட்சக்கணக்கான ஊழியர்கள் என்று இந்த உலகமே என் கையில் என்கிற அளவு எல்லாவற்றையும் அடைந்திருக்கிற நீ இத்துடனாவது திருப்தி அடைந்து விட்டாயா? இல்லையே. இப்போது இப்படி இரண்டு சிறுவர்களை கடத்திக் கொண்டு அவர்களைக் கொன்று உன் சக்தியை நிரூபிக்க வேண்டிய நிலையில் அல்லவா இருக்கிறாய்?”

மாரா பெரும் கோபத்துடன், வெறுப்புடனும் கேட்டான். “நீ வெறும் சிறுவனா? சொல். வெறும் சிறுவனா? தர்மத்தை நிலை நாட்ட வந்திருக்கும் புத்தரின் அவதாரமல்லவா நீ மைத்ரேயா? நான் சொல்கிறேன் கேள். பணத்தில் மட்டுமல்ல மனித மனதிலும் இந்த உலகத்தை நான் எப்போதோ வென்றாகி விட்டது. உனக்கு இங்கே கால் பதிக்கவும் இடமில்லை. நினைவு வைத்துக் கொள். இன்றைக்கு தர்மம், நியாயம், நீதி, நேர்மை, சத்தியம், தூய்மையான அன்பு எல்லாம் எழுத்திலும் பேச்சிலும் மட்டும் தான் இருக்கிறது. மனிதர்களின் இதயங்களில் இல்லை. பேராசை, பொறாமை, சுயநலம், வஞ்சகம், வெறுப்பு இதெல்லாம் தான் அவர்களை ஆட்சி செய்கிறது. ஒவ்வொருவனும் அரசாங்கத்தையும், சமூகத்தையும், அடுத்தவரையும் குறை சொல்வான். ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கும் இடங்களில் இவன் மற்றவர்களை விட பத்து மடங்கு அதிகமாய் அயோக்கியத்தனம் செய்வான். முடிந்தவன், முடியாதவன் என்ற இரண்டே வகை தான் இப்போது உலகில் இருக்கின்றது. முடியாதவனுக்கு முடியும் போது அவனும் தன் கைவரிசையைக் காட்டுவான். இந்த அளவு இந்த உலகத்தை மாற்றி இருக்கிறோம் மைத்ரேயா. காப்பாற்ற உன்னால் மட்டுமல்ல யாராலும் முடியாது. யாரை யாரிடமிருந்து காப்பாற்றுவாய்?”

மைத்ரேயன் அவன் சொன்னதை இடைமறிக்காமல் கேட்டு விட்டுப் பொறுமையாகச் சொன்னான். “இன்றும் பொய் உண்மையின் வேடம் போட்டு தான் ஏமாற்ற வேண்டி இருக்கிறது. ஊரையே ஏமாற்றி பிழைப்பு நடத்துபவன் கூடத் தன் மனைவி, மக்கள், நண்பர்கள் தன்னிடம் தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். நீங்களே கூட உங்களிடம் மற்றவர்கள் உங்கள் சைத்தான் புத்தியைக் காட்டுவதை விரும்புவதில்லை. இதெல்லாம் நீங்களே தர்மத்தை உயர்ந்ததாக மதிப்பதையும், அதர்மத்தை இழிவாக நினைப்பதையும் தான் காட்டுகிறது. இது உங்களுக்குள்ளேயே தர்மம் வென்று நிற்பதைத் தான் காட்டுகிறது. நீ சொன்னது போல யாரும் யாரையும் யாரிடமிருந்தும் காப்பாற்ற முடியாது. ஒருவன் தன்னிடமிருக்கும் தீமையிலிருந்து விலகி தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான். தொடர்ந்து வரும் துன்பங்களை ஒருவன் எத்தனை காலம், எத்தனை பிறவிகள் தான் தாங்குவான். சலித்துப் போய் நிரந்தரமாய் துக்கத்திலிருந்து விடுபட ஆத்மார்த்தமாய் விரும்பும் இதயத்தில் நான் காலடி வைப்பேன். வழிகாட்டுவேன் ”

மாரா வாய் விட்டுச் சிரித்தான். “நீ மந்திரசக்தியில் பொருள்களைக் கொண்டு வந்தாலோ, உன் சக்திகளால் அவனுக்கு சில்லறை லாபங்களைத் தந்து கொண்டிருந்தாலோ மனிதன் நீயே தெய்வம் என்று கொண்டாடுவான். ஆனால் மனிதனிடம் அவனே தான் பிரச்னை என்றும் அவன் திருந்துவது தான் ஒரே தீர்வு என்றும் சொன்னாயானால் நீ இருக்கிற பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டான். சுட்டிக்காட்ட ஆளே இல்லாத போது கூட மனிதன் கடவுளையும், கிரகங்களையும் காரணம் காட்டுவானே ஒழிய தானே தன் பிரச்னை என்பதை உணர மாட்டான். ஒவ்வொருவனும் பார்க்க மறுக்கிற ஒரே இடம் அவனுக்குள்ளே தான் இருக்கிறது. அந்த நிலைக்கு மனிதனை நான் கொண்டு வந்திருக்கிறேன் மைத்ரேயா”

மைத்ரேயன் சொன்னான். “நீயே அப்படித்தானே இருக்கிறாய். உன் எதிரி நான் என்று நினைத்து அழிக்கத் துடிக்கிறாய். நான் அழிந்தால் நீ நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறாய். ஆனால் உனக்கு நான் எதிரியல்ல. உண்மையில் நான் யாருக்கும் எதிரியல்ல. நீயே தான் உனக்கு எதிரி. நீ தப்பிக்க வேண்டியது உன்னிடமிருந்தே. நீ உன்னிடம் இருப்பதாக ஒரு பட்டியலே சொன்னாயே அதில் நிறைவும் நிம்மதியும் இருக்கிறதா? உன் ஆட்களிடம் தான் இருக்கிறதா? அது இல்லாமல் எது இருந்து என்ன பயன்? இது எதனால் என்று சிந்தித்துப் பார்? காரணம் நானா. இல்லை நீ, உன் செயல்கள்... செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு. வினையைச் செய்துவிட்டு விளைவில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. அழிவு நெருங்கி விட்டதால் தான் ஒரு அப்பாவிச் சிறுவனைக் கொல்லத் துணியும் நிலைக்கு வந்து விட்டாய். அவனை விடுவித்து விட்டு தயவு செய்து உன்னைக் காப்பாற்றிக் கொள்....”


அழியப் போகும் மைத்ரேயன், மாராவுக்கே அழிவு நெருங்கி விட்டதெனச் சொல்லும் துணிச்சல் பெற்றதை மாராவுக்குத் தாங்க முடியவில்லை. அவன் உடல் கோபத்தில் லேசாக நடுங்க ஆரம்பித்தது.

அப்போது தான் தங்கள் தெய்வச்சிலையில் இருந்தும் நடுக்கத்தை மாரா கவனித்தான். மைத்ரேயனை அமைதி இழக்க வைக்க பேச்சுத் தரப் போய் மைத்ரேயன் சாமர்த்தியமாகத் தன்னை அமைதி இழக்க வைத்து விட்டதை மாரா உணர்ந்தான். இத்தனை நேரம் பேசியதிலும் ஒரு முறை கூடத் தன் பெயரை அழைத்துப் பேசாததையும் மாரா கவனித்தான். அவன் பெயர் அங்கீகாரம் கூடத் தனக்கு தரவில்லை என்பதை நினைக்கையில் மனம் கொதித்தது.... இனி அமைதியை மீட்டு பழைய சக்தி நிலையை எட்ட சிறிது நேரம் தேவைப்படும். இதைத்தான் அவன் எதிர்பார்க்கிறான் போலிருக்கிறது. மிக முக்கியமான இந்தக் கட்டத்தில் அவன் தன் சக்தியையும், நேரத்தையும் வீணாக்க முடியாது. உடனே எழுந்த மாரா மைத்ரேயனை முழுவதும் அலட்சியம் செய்து விட்டு டோர்ஜேவைத் தன்னருகே அழைத்தான். டோர்ஜே நடுங்கிக் கொண்டே வந்தான்.

“இரண்டு நாளில் நீ மைத்ரேயனாக உலகத்துக்கு அறிமுகமாகப் போகிறாய். அதற்கு நான் எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. நான் சொல்கிறபடி கேட்டு நடந்தால் உலகப்புகழும், ராஜ வாழ்க்கையும் அடையலாம். புரிகிறதா?”

டோர்ஜே தலையை ஆட்டினான்.

“சரி. இனி நம் தெய்வம் இது தான். வணங்கி விட்டுக் கிளம்பு” என்று தங்கள் தெய்வச்சிலையைக் காட்டினான்.

டோர்ஜே மைத்ரேயனை ஓரக்கண்ணால் பார்த்தான். மைத்ரேயன் அதற்குள் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். டோர்ஜே அந்தச் சிலையை வணங்கி எழுந்தான்.

மாரா கைகளைத் தட்ட வெளியே இருந்து துப்பாக்கி ஏந்திய ஒரு காவலன் வந்தான். அவனிடம் மாரா சொன்னான். “இவனை நீ கூட்டிக் கொண்டு போகலாம்....” டோர்ஜே அந்தக் காவலனுடன் நடந்தான். பார்வையிலிருந்து மறையும் முன் திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தான். மைத்ரேயன் கண் விழிக்கவில்லை. கௌதம் மட்டும் பரிதாபமாக கையசைத்தான். டோர்ஜேயும் கையசைத்தான். வெளியேறும் போது டோர்ஜேயின் கண்கள் கண்ணீர்க் குளமாகி இருந்தன.

கௌதமும் அந்த நண்பனைப் பிரியும் துக்கத்தை உணர்ந்தான். இனி எப்படி நேரம் போக்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பசித்தது. மாராவிடம் சொன்னான். “எனக்குப் பசிக்கிறது”

மாரா மைத்ரேயனிடம் கேட்டான். “உனக்கும் சாப்பிட ஏதாவது வேண்டுமா?”

மைத்ரேயன் கண்களைத் திறக்காமலேயே வேண்டாம் என்று சொன்னான். மாரா மறுபடி கைகளைத் தட்டினான். இன்னொரு காவலன் வந்தான். அவனிடம் மிகத் தாழ்ந்த குரலில் மாரா பேசினான். அவன் போய் விஷம் கலந்த உணவை கௌதம் சாப்பிடக் கொண்டு வந்தான்.

கௌதம் உட்கார்ந்து அந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

Monday, October 3, 2016

இறைவன் சித்தத்தை அறிந்து கொள்வது எப்படி?

றைவனது சித்தத்தை அறிந்து நடப்பதற்கான நிபந்தனைகள் நான்கு. அவையாவன :

முக்கியமான முதல் நிபந்தனை:
பரிபூரண நேர்மை.

இரண்டாவது நிபந்தனை: ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் வெல்லுதல்.

மூன்றாவது நிபந்தனை: மனதை மௌனமாக்கி விட்டுக் கவனமாகக் கேட்டல்.

நான்காவது நிபந்தனை: ஆணை கிடைக்கும் போது உடனே அதன்படி நடத்தல்.

நீ தொடர்ந்து இந்த நிபந்தனைகளின்படி நடந்து வந்தால் இறைவனது சித்தத்தை நீ மேலும் மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்வாய். ஆனால் அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே நீ உன்னுடைய இச்சா சக்தியை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்.  அப்படிச் செய்யும் போது நீ சரியான காரியத்தையே செய்யும்படியான எல்லாச் சூழ்நிலைகளும் உருவாவதை நீ காண்பாய்.

- அரவிந்தாஸ்ரமத்து அன்னை