சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 31, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 5
புதுடெல்லியில் தலாய் லாமா இறங்கிய கணம் முதல் தலாய் லாமாவைக் கண்காணிக்க ஆரம்பித்த லீ க்யாங்கின் ஆட்கள் அவனுக்கு தொடர்ந்து தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை அனுப்பிய வண்ணம் இருந்தார்கள். லீ க்யாங் தன் முழுக்கவனத்தையும் அவற்றில் செலுத்தி கவனித்து வந்தான். இடையிடையே தொலைக்காட்சிகளில் தலாய் லாமாவின் புதுடெல்லி விஜயம் குறித்து வந்து கொண்டிருக்கும் செய்தி ஒளிபரப்பையும் கூட அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தலாய் லாமாவிடம் புதுடெல்லி வந்த காரணத்தை நிருபர்கள் கேட்ட போது புதிய பிரதமரை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்து வாழ்த்த வந்தேன் என்றார். யாருக்கும் அதில் சந்தேகம் தோன்றவில்லை. அடைக்கலம் புகுந்த நாட்டின் புதிய பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துவது இயல்பு தானே. ஆனால் கடந்த வாரம் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர் இந்த வாரமே நேரில் சந்திக்க வந்த பின்னணி அறிந்த லீ க்யாங் சீனாவில் இருந்த போதும் நேரில் பார்ப்பது போல் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்மையாகப் பார்த்தான். ஏதாவது ஒரு சின்னத் தகவல் கிடைத்தாலும் புத்திசாலித்தனமாக முயன்றால் அதிலிருந்து முழு உண்மை நிலவரத்தையும் கூட பெற்று விட முடியும்....

இப்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ புதுடெல்லி விமான நிலையத்தில் அவர் இறங்கிய பின் எடுத்தது. அரசின் தரப்பில் இருந்து வந்திருந்த ஒரு மந்திரி அவரை வரவேற்று முடித்த பின் அவரை இந்தியாவில் வாழும் திபெத்தியர் கூட்டம் வணங்கி வரவேற்றது. அதை அடுத்து வேறு சில பார்வையாளர்களும் அவரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். எல்லோரிடமும் புன்சிரிப்புடன் ஒருசில வார்த்தைகள் பேசியபடி தலாய் லாமா நகர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது தான் சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு வழுக்கை மனிதர் தலாய் லாமாவை நெருங்கினார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது போல் இருந்தது. தலாய் லாமா புன்சிரிப்புடன் அவர் கைகளைக் குலுக்கி விட்டு எதோ கேட்டார். அந்த மனிதர் எதோ பதில் சொன்னார். தலாய் லாமாவின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு அப்படியே உறைந்தது....

அதை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த லீ க்யாங் நிமிர்ந்து உட்கார்ந்து முழுக்கவனமானான்.

அந்த மனிதர் தலாய் லாமாவிடம் மேலும் என்னவோ சொன்னார். தலாய் லாமா முகத்தில் இப்போது அதிர்ச்சி தெளிவாகவே தெரிந்தது. தலையை மட்டும் லேசாக அசைத்தார். அந்த நபர் அவரைக் கைகூப்பி வணங்கி விட்டு நகர்ந்தார். அதன் பின் வேறு சிலர் தலாய் லாமாவை வணங்கி விட்டு ஒருசில வார்த்தைகள் பேசினார்கள். ஆனால் அவர்கள் பேசியதில் தலாய் லாமாவின் கவனம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எந்திரத்தனமாய் புன்னகைத்து ஓரிரு வார்த்தைகள் பேசினார். பின் அவர் திரும்பி யாரையோ பார்த்தார். அவர் பார்த்தது பெரும்பாலும் அந்த வழுக்கைத் தலையரையாகத் தான் இருக்க வேண்டும் என்று லீ க்யாங் நினைத்தான். வந்திருந்த மற்றவர்களுடன் சம்பிரதாயமாகப் பேசிவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் போது தலாய் லாமா நிறையவே பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.         

தலாய் லாமா காரில் ஏறியவுடன் அந்த வீடியோ முடிந்தது. அந்த வீடியோவில் அவர் அந்த வழுக்கை ஆசாமியுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியை மட்டும் லீ க்யாங் பரபரப்புடன் பல முறை பார்த்தான். அந்த வழுக்கை ஆசாமி அதற்கு முன் தலாய் லாமாவுடன் அறிமுகமில்லாதவர் என்பதை லீ க்யாங் யூகித்தான். அவர் அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னது தலாய் லாமாவின் கவனத்தை ஈர்த்தது என்பதும் அவர் முகபாவனையில் இருந்து தெரிந்தது. அடுத்ததாய் தலாய் லாமா அந்த வழுக்கை மனிதரிடம் ஏதோ கேட்டதிலும் ஒரு ஆர்வம் தெரிந்தது. அதன் பின் வந்த பதில் தான் தலாய் லாமாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. கேட்ட கேள்விக்கு வந்த பதில் அவர் சற்றும் எதிர்பாராதது மட்டுமல்ல தூக்கிவாரிப்போட்ட பதிலாகவும் இருந்திருக்கிறது. வழுக்கை மனிதர் அவரிடம் பேசிய பேச்சு மைத்ரேய புத்தரைப் பற்றியதாக இருந்திருக்கலாமோ?

லீ க்யாங் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இந்தியத் தலைநகருக்கு தலாய் லாமா வந்து சேர்ந்து ஒரு மணி நேரம் 27 நிமிடம் ஆகியிருந்தது. போனில் வாங் சாவொவிடம் பேசினான்.

“புதுடெல்லி விமான நிலையத்தில் எடுத்த தலாய் லாமா வீடியோவில் 18.29 லிருந்து 19.47 வரை தலாய் லாமாவிடம் பேசுகிற ஆள் யார் என்று உடனடியாக கண்டுபிடிக்கச் சொல். அங்கிருந்து அவன் எங்கே போனான் என்றும் கண்டுபிடிக்கச் சொல்.... தலாய் லாமா இருக்கும் அறையிலிருந்து கொண்டு யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் பார்க்கச் சொல்.... இதே போல மாலை பிரதமரை சந்திக்கப் போகும் போதும் நம் ஆட்கள் பார்வை அவர் மேல் தொடர்ந்து இருக்க வேண்டும்.....

லீ க்யாங் தொடர்ந்து செய்தி தொலைக்காட்சிகளில் எங்காவது அந்த நபர் தெரிகிறாரா என்று பார்த்தான். எல்லா செய்திகளும் மந்திரி வரவேற்பதையும், திபெத்தியர்கள் வரவேற்பதையும் மட்டுமே திரும்பத் திரும்ப போட்டன. புகைப்படங்களைப் பார்த்தான். ஒரே ஒரு புகைப்படத்தில் அந்த வழுக்கைத் தலையர் கையில் ஒரு சூட்கேஸோடு இருப்பது தெரிந்தது. அந்த ஆளும் ஒரு பயணியாக இருக்கலாம். பயணம் செய்து விட்டு வந்தவனாகவோ, பயணம் போகப் போகிறவனாகவோ இருக்கலாம். தலாய் லாமாவை விமான நிலையத்தில் பார்த்த பிறகு பேசி விட்டுப் போக முடிவு செய்திருக்கலாம். யாரவன்?... என்ன பேசினான்?....

அந்த வீடியோவில் தலாய் லாமா திரும்பிப்பார்த்த காட்சியில் நிறுத்தி தலாய் லாமாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை மறுபடியும் அவன் கவனித்தான். இன்னும் அந்த முகத்தில் திகைப்பு இருந்தது. ஏதோ நம்ப முடியாத காட்சியைப் பார்த்த ஒருவன் பார்த்தது நிஜம் தானா என்று இன்னொரு முறை பார்த்து உறுதிப்படுத்துவது போல் இருந்தது அந்தப் பார்வை.

இன்னொரு முறை அந்த வீடியோவை 18.29 முதல் ஓட விட்ட லீ க்யாங் இந்த முறை தலாய் லாமாவின் பின்னால் மிக அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு புத்த பிக்குகளைக் கண்காணித்தான். ஒருவர் எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் தனக்கும் பின்னால் இருந்த இன்னொரு பிக்குவிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் கவனம் கூட அந்த வழுக்கைத் தலையர் தலாய் லாமாவிடம் பேசியதில் இருக்கவில்லை.

சிறிது நேரத்தில் வாங் சாவொ போன் செய்தான். அந்த வழுக்கைத் தலையர் பற்றி உடனடியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று சொன்னான். அந்த சமயத்தில் வந்து சேர்ந்திருந்த வேறு இரண்டு விமானங்களில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஆட்களும், அடுத்து கிளம்பவுள்ள மூன்று விமானங்களுக்குப் போகிற ஆட்களும் நிறையவே இருந்தார்கள் என்று வாங் சாவொ சொன்னான். அந்த வழுக்கைத் தலையர் வந்த பயணியாகவோ, போன பயணியாகவோ இருக்கலாம் என்றான்.

லீ க்யாங் உடனடியாகச் சொன்னான். “விமானநிலைய காமிரா பதிவுகளில் முழு விவரமும் இருக்கும்.... அதை பார்க்கச் சொல்.... ரகசியம் முக்கியம்...

ரகசியம் என்பது உளவாளிகளின் உயிர்நாடி என்பதை  வாங் சாவொ போன்ற அனுபவஸ்தனிடம் சொல்லத் தேவை இல்லை என்ற போதும் ரகசியம் முக்கியம் என்பதை லீ க்யாங் அழுத்திச் சொன்ன விதம் இதில் மேலும் கவனமாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதை வாங் சாவொ புரிந்து கொண்டான்.

தலாய் லாமா தான் தங்கி இருந்த இடத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு பிரதமரைச் சந்திக்கக் கிளம்பினார். ஆறு மணிக்கு பிரதமரைச் சந்தித்த அவர் 6.40 மணிக்கு சந்திப்பு முடிந்து வெளியே வந்தார். வரவேற்கவும், வழியனுப்பவும் பிரதமர் வெளியே வந்தது பிரதமர் தலாய் லாமா மீது வைத்திருந்த மிகுந்த மரியாதையைக் காட்டியதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன.

முதலில் தொலைக்காட்சியிலும் பின்னர் தனக்கு அனுப்பப்பட்ட வீடியோவிலும் லீ க்யாங் தலாய் லாமாவைக் கூர்ந்து கவனித்தான். காலையில் அந்த வழுக்கைத் தலையருடன் பேசி விட்டு ஏற்பட்ட அதிர்ச்சியை மாலைக்குள் தலாய் லாமா ஜீரணித்திருந்ததாகத் தோன்றியது. ஆனாலும் ஒருவித கவலை அவரை ஆக்கிரமித்திருப்பது அவனது கூரிய பார்வைக்குத் தப்பவில்லை....

லாய் லாமா உண்மையிலேயே கவலையுடன் தான் இருந்தார். தியானம் செய்ய அமர்ந்திருந்த அவருக்கு தியானம் கைகூடுவதாக இல்லை. எத்தனை தான் அறிந்திருந்தாலும் அந்த ஞானத்தை மனம் சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள ஏன் தான் மறுக்கிறதோ?...

அறைக்கு வெளியே இருந்த பாதுகாப்பு அதிகாரி மெல்ல கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். தலாய் லாமா என்ன என்று கேட்டார். பாதுகாப்பு அதிகாரி தன் கைபேசியை அவரிடம் நீட்டினார். ஆசான்....!

அந்த பாதுகாப்பு அதிகாரியின் தந்தை தலாய் லாமாவின் நெருங்கிய பக்தராக இருந்தவர். எனவே அந்த பாதுகாப்பு அதிகாரி தலாய் லாமாவின் நம்பிக்கைக்கு மிகவும் உகந்தவராய் இருந்தார். அதனால் ஆசான் தர்மசாலா வந்திருந்த போது அவசரத்திற்குப் போன் செய்ய அந்த பாதுகாப்பு அதிகாரியின் மொபைல் எண்ணை ஆசானுக்குத் தந்திருந்தார்.

வாங்கிக் கொண்ட தலாய் லாமா பாதுகாப்பு அதிகாரியைப் பார்த்து தலையசைக்க பாதுகாப்பு அதிகாரி வணங்கி விட்டு வெளியேறினார்.  

“ஹலோ

“டென்சின் இந்தியப்பிரதமர் என்ன சொல்கிறார்?

அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அவர்களுடைய உளவுத்துறையிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

“நீ சொன்னாயா அவசரம் என்று?

“சொன்னேன். இரண்டு நாளில் சொல்வதாகச் சொல்லி இருக்கிறார்

ஆசான் பெருமூச்சு விட்டார். “நிமிஷங்களே யுகங்களாகப் போய்க் கொண்டு இருக்கிறது.... இரண்டு நாட்கள் இப்போதைக்கு நமக்கு நீண்ட காலம் தான் டென்சின்... சரி பார்க்கலாம். இத்தனை நாள் இல்லாத ஆபத்து இனி திடீரென்று வருவதற்கு இதுவரை காரணம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சொன்னது மௌன லாமாவானதால் தான் யோசனை....

“மௌன லாமா சொன்னது எந்த நேரமும் நடக்கலாம், ஆசானே. ஆபத்து எந்த ரூபத்தில் வரப் போகிறது என்பதை போதிசத்துவர் இன்று காலையிலேயே உணர்த்தி விட்டார்.

ஆசான் குரல் பலவீனமாகக் கேட்டது. “டென்சின்...

தலாய் லாமா அன்று காலை அந்த வழுக்கைத்தலை ஆசாமியுடன் ஏற்பட்ட சந்திப்பைப் பற்றி விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார்....

லீ க்யாங் வாங் சாவொவிற்குப் போன் செய்தான்.

வாங் சாவோ சொன்னான். “நம் ஆள் இப்போது தான் விமான நிலைய பாதுகாப்பு காமிரா பதிவுகளைப் பார்க்கப் போயிருக்கிறான். இரவுக்குள் ஏதாவது தகவல் கிடைக்கும் சார். கிடைத்தவுடன் சொல்கிறேன்...

“சரி. நாளை காலை டெல்லியில் இருக்கும் நம் ஆள் ஒருவனை காலை ஏழு மணிக்கு லோடி கார்டனில் ஜாகிங் போகச் சொல். போகும் போது ரோஸ் கலர் டீ ஷர்ட்டும் பேண்ட் பாக்கெட்டில் வெளியே தெரிகிற மாதிரி வெள்ளை கர்சீஃப்பும் இருக்கட்டும்.... பிரதமர் அலுவலகத்து நிலவரத்தை ஒரு ஆள் அவனிடம் சொல்வான்.....

லீ க்யாங்கின் செல்வாக்கும் தொடர்பும் எங்கெல்லாம் இருக்கிறது என்று வாங் சாவொ வியந்தான்.


ன்றைய அனைத்து சந்திப்புகளும் முடிந்த பின்னும் இந்தியப் பிரதமருக்கு தலாய் லாமாவின் சந்திப்பின் தாக்கம் இருந்து கொண்டிருந்தது. தலாய் லாமா சொன்னதெல்லாம் ஒரு கதை போல் இருந்தது. ஆனால் அதை மிகவும் உணர்ச்சிபூர்வமாகச் சொன்ன தலாய் லாமா, அதை நூறு சதவீதம் நம்பியதாகத் தெரிந்தது.


எதுவாக இருந்தாலும் இது விஷயமாக நேரடியாக உதவி செய்து சீனாவுடன் மோதலுக்குத் தயாரில்லை என்றும் அண்டை நாடுகளுடன் நல்லுறவை நாடுவதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்ன போது தலாய் லாமா மறுக்கவில்லை. ஒரே ஒரு மனிதனை மட்டும் தங்கள் உதவிக்கு அனுப்ப தலாய் லாமா சொன்ன போது பிரதமருக்கு ஆச்சரியமாக இருந்தது. யார் என்று கேட்ட போது தலாய் லாமா ஒரு பெயரைச் சொன்னார்.


என்ன பெயர் என்று மறுபடியும் கேட்டு அந்தப் பெயரை உறுதி செய்து கொண்ட பிரதமர் “யாரது?என்று கேட்டார்.

“எனக்கும் அந்த மனிதரைப் பற்றி அதிகம் தெரியாது. உங்கள் உளவுத் துறை என்னை விட அதிக விவரங்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும்

பிரதமரின் ஆர்வம் அதிகரித்தது.(தொடரும்)
-          என்.கணேசன்


Monday, July 28, 2014

முழுமையாக இறைவனை சரணடையுங்கள்!


கீதை காட்டும் பாதை 32


மூன்று வகை குணங்களையும், நான்கு ரக மனிதர்களையும் விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் மனிதர்களின் ஆன்மிகத் தேடலை வேறு கோணத்திலும் இந்த ஏழாவது அத்தியாயத்தில் அலசுகிறார். தேவைகளைப் பூர்த்தி செய்ய சில நியம நிஷ்டைகளைச் செய்து குறிப்பிட்ட தேவதைகளை வணங்கி பலன் பெறும் மனிதர்களைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்:

மக்கள் தமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை இழந்து தம்முடைய சுபாவத்திற்குக் கட்டுப்பட்டு அந்தந்த நியமங்களைக் கடைபிடித்து மற்ற தேவதைகளை (வடிவங்களை)ச் சரணடைகிறார்கள்.

நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஒருவன் எந்த வடிவத்தைப் பூஜித்தாலும் அதே வடிவத்தில் அவனது நம்பிக்கை உறுதியாக இருக்கும்படி செய்கிறேன்.

அவன் அந்த சிரத்தையுடன் அந்த தேவதையைப் பூஜிக்கிறான். நானே அமைத்துத் தந்த பலனை அந்த தேவதை மூலமாகப் பெறுகிறான்.

ஆனால் அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்த பலன் அழியக்கூடியது. தேவதைகளை வழிபடுபவர்கள் அந்த தேவதைகளையே அடைகிறார்கள். என்னுடைய பக்தர்களோ எவ்விதம் வழிபட்டாலும் என்னையே அடைகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு காலத்தில் வர்ணன், வாயு, இந்திரன் போன்ற தேவதைகளை தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் வணங்கியதைச் சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். சில தீவிர கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு எந்தக் கடவுளை வணங்கினாலும் அது தேவதைகளை வணங்குவது போல் தான் என்றும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குவது மட்டுமே மிக உயர்ந்த வழிபாடு என்றும் கூட பொருள் கொள்கிறார்கள். ஆனால் பகவத் கீதையை ஆழமாக அறிவுபூர்வமாகப் படிப்பவர்களுக்கு அது பிழையான கருத்தென விளங்கும்.

தேவகி புத்திரனும், பார்த்தனுக்கு சாரதியுமான ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்த நேரத்தில் அந்தப் பாத்திரமாக இருக்கவில்லை. மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இறைசக்தியாகவே பரிபூரணமாக மாறிவிட்டிருந்த அவர் கீதையில் சொன்னதெல்லாம் பரம்பொருளாகச் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பகவத் கீதை முழுவதும் ஒலிக்கும் குரல் பரம்பொருளினுடையதே ஒழிய ஸ்ரீகிருஷ்ணர் என்கிற அவதார பாத்திரத்தின் உடையது என்று புரிந்து கொண்டால் வடிவங்களில் சிக்கிக் கொள்ளும் தவறை ஆன்மிக வாசகர்கள் செய்ய மாட்டார்கள்.

இந்த வடிவத்தில் இப்படிப் பிரார்த்தித்தால் என் இந்தத் தேவையை இந்தக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இறைவனைப் பிரார்த்திப்பவன் முழுமையான இறைவனைப் பிரார்த்திப்பதிப்பதில்லை. அந்தத் தேவையைத் தீர்த்து வைக்கும் பகுதியாகவே இறைவனைப் பார்த்து அதற்காகவே அந்தப் பகுதி-இறைவனை வணங்கவும் செய்கிறான். அந்த இறைவனுக்கு அந்தப் பகுதி தவிர வேறு எத்தனையோ சிறப்பு அம்சங்கள் இருக்கலாம், அவனுக்கு அதைப்பற்றிய அறிவும் இல்லை. அக்கறையும் இல்லை. ஆனால் அந்தத் தேவைக்காக எப்படிப் பிரார்த்திக்கச் சொல்கிறார்களோ அப்படி சிரத்தையுடன் அவன் பிரார்த்திப்பான். எல்லாம் வல்ல இறைவனைத் தன் தேவையைப் பூர்த்திசெய்யவல்ல தேவதையாக மட்டும் குறைத்துப் பார்க்கும் பிழை இது.

ஆசைத் தேவையால் முழுமையாக உந்தப்பட்டு இப்படி வணங்கும் மனிதனை ஆட்டுவிப்பது அந்த ஆசையே. அப்படி வணங்கி அவன் இறைவனிடம் இருந்து பெறுவதும் அந்த ஆசை பூர்த்தி அடைவதே. இப்படி ஆசையே முழுமையாக வியாபிக்கும் இடத்தில் இறைவனை உணரும் வாய்ப்பு ஏது?

அதைக் கொடுக்கும் கடவுள், இதைக் கொடுக்கும் கடவுள் என்று வணங்கும் போது கொடுக்கப்படுவது பிரதானமாய் போகிறதே அல்லாமல் கடவுள் பிரதானமாக ஆவதில்லையே. ஆசையே பிரதானமாக இருக்கும் போது அறிவு அந்த ஆசை சம்பந்தமாக கூர்மை பெற்றாலும் மற்ற விதங்களில் மழுங்கியே விடும். ஆசையினால் கட்டுப்பாடில்லாமல் ஒருவன் பீடிக்கப்படும் போது ஆசையின் சம்பந்தப்பட்ட ஓரறிவு ஜந்துவாகத் தான் இருப்பானே ஒழிய ஆற்றிவு மனிதனாக இருந்து விட முடியாது. அதனால் தான் அறிவை இழந்தவர்கள் என்றும் சிற்றறிவு படைத்தவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் இங்கு சரியாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இங்கும் சிரத்தையுடன் எதைச் செய்தாலும் அதற்கான பலன் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றும், அந்த நம்பிக்கை வீண் போகாது என்றும், அந்தப் பலனை ஏற்படுத்தித் தருபவன் தானே என்றும் ஸ்ரீகிருஷ்ணர் உறுதி அளிக்கிறார். இங்கு சிரத்தை பிரதானமாகிறது. அரைகுறை முயற்சிகள் அந்தப் பலனையும் தராது.

இங்கு இன்னொரு உண்மையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிரத்தையுடன் கேட்டு ஆசையை ஒருவன் பூர்த்தி செய்து கொள்ளலாமே ஒழிய அந்த ஆசை பூர்த்தியாவதன் மூலமாக எத்தனையோ பிரச்னைகள் உருவாகலாம். அதனால் எத்தனையோ கஷ்டப்பட வேண்டி வரலாம். அதற்கு இறைவன் உத்திரவாதி அல்ல. நீங்கள் அதைத் தான் கேட்டீர்கள். நான் அதைக் கொடுத்து விட்டேன். என் வேலை முடிந்தது என்று இறைவன் விலகியே இருப்பான்.

சின்ன உதாரணம் ஒன்று பார்ப்போம். கோடிக்கணக்கில் பணத்தை சிரத்தையுடன் வேண்டி ஒருவன் இறைவனிடமிருந்து பெறுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.  அந்தப் பணத்தைத் திருட பலரும் முயற்சிக்கலாம். அந்தப் பணத்திற்காக பலர் பல விதங்களில் அவனைத் தொந்திரவு செய்யலாம். பலர் அவனுக்கு எதிரிகளாகலாம். இப்படி ஒரு ஆசை நிறைவேறி பல புதிய பிரச்னைகள் உருவாகுவதற்கு அவன் விலக்கு பெற்று விட முடியாது.

ஆசையை மட்டும் வைத்து அழியக்கூடிய பலன்களை, அழிவு தரக்கூடிய பலன்களைக் கேட்டுப் பெற்று அதனால் வரும் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளாமல் தவிக்கும் மனிதர்கள் ஏராளம். பிறகு அவர்கள் அந்த ஒவ்வொரு பிரச்னையை விலக்கும் தேவைக்காக மட்டும் வழிபட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பிரச்னை விலகும் போதும் அதனால் ஒன்பது பிரச்னைகள் உருவாகலாம். இந்த பரிதாப நீட்சிக்கு முடிவே இல்லை.

சரி எது புத்திசாலித்தனமான வழி?

எல்லாமாக இருப்பவனை முழுமையாக ஆத்மார்த்தமாய் வணங்கி சரணடைந்தால் எல்லாமே நம்முடையதாகி விடுமே, இப்படி ஒவ்வொன்றிற்காகப் பிச்சை கேட்கும் அவசியம் நமக்கு இருக்காதே என்று உணர்வதே அறிவு. அப்படி உணர்ந்து வணங்கி முழுமையாகவே இறைவனை சரணாகதி அடைபவனையே தன்னுடைய பக்தன் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

அப்படிப்பட்ட பக்தன் இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதி எல்லாம் இல்லை. அவன் எப்படியும் வழிபடலாம். வழிபாட்டு முறைகள் சடங்குகள் மட்டுமே. வழிபடுபவன் மனமே முக்கியம். அந்த மனமெல்லாம் இறைவன் நிறைந்திருக்கும் போது எப்படி வழிபட்டாலும் அது ஆத்மார்த்தமானதே. இறைவனுக்கு உகந்ததே. அவன் இறைவனைக் கண்டிப்பாக அடைவான் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்Thursday, July 24, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 4சான் தலாய் லாமாவை சந்தித்ததும் பின்பு ரகசியமாக பேசியதும் மைத்ரேய புத்தர் சம்பந்தமாகத் தான் என்பது மட்டும் தான் லீ க்யாங்குக்கு இப்போதைக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயம். இல்லவே இல்லாத நபர் அல்லது இறந்து விட்ட நபர் என்று பல வருடங்களாக நம்பி இருந்த சீன உளவுத்துறைக்கு இப்படி மைத்ரேய புத்தர் பேசப்படுவதே பெரிய அதிர்ச்சி தான். சீனாவுக்கு அது பெரிய தலைவலி தான்.....

லீ க்யாங் கடவுளை நம்புபவனல்ல. நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று ஒத்துக் கொண்டாலும் கூட அது நம்மை எல்லாம் ஆட்டிப் படைக்கும் கடவுள் என்றோ அது மனித வடிவில் அவதாரம் எடுத்து வரும் என்பதை அவனுக்கு சிறிதும் நம்ப முடிந்ததில்லை.  அதனால் புத்தரின் அவதாரமாக மைத்ரேய புத்தர் என்ற தெய்வப்பிறவி உலகத்தின் கூரையாம் திபெத்தில் அவதாரம் எடுப்பார் என்று திபெத்திய பழங்காலச் சுவடிகளில் இருக்கின்றது என்று சொல்லப்பட்ட போது அவனுக்குத் தமாஷாகத் தான் இருந்தது. திபெத்திலும், பூடானிலும்  புத்தமத்தைப் பரப்பிய பத்மஷாம்பவா என்ற எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியத் துறவி மைத்ரேய புத்தர் அவதாரம் எடுக்கும் காலத்தைக்கூட துல்லியமாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்ற செய்தி காதில் விழுந்த போது அவன் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சரியாகப் பத்து வருடங்களுக்கு முன் மார்கழி மாத சுக்ல பக்‌ஷ (வளர்பிறை) காலத்தில் மைத்ரேய புத்தர் பிறக்கப் போகிறார் என்று திபெத்தில் எல்லா புத்த மடாலயங்களிலும் முன்கூட்டியே சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் எல்லாம் ஆரம்பித்த போது சீன அரசாங்கத்தால் சும்மா இருக்க முடியவில்லை.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அதிகார மையத்தில் முக்கியமானவருமான ஒரு சீனத்தலைவர் லீ க்யாங்கை அழைத்து இது குறித்து தன் கவலையைத் தெரிவித்தார். லீ க்யாங்குக்கு இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்று புரியவில்லை. திபெத்தில் மூட நம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை... தலாய் லாமாக்களே அப்படி அவதாரங்களாகத் தானே சொல்லப்படுகிறார்கள்

பொதுச்செயலாளர் தன் சோடாபுட்டிக் கண்ணாடி வழியாக அவனை வெறித்து பார்த்து விட்டு மெல்ல சொன்னார். “தலாய் லாமாக்கள் அவலோகிடேஸ்வரர் என்ற போதிசத்துவரின் மறுபிறவிகள் என்று சொல்லப்படுகிறார்கள். ஒரு தலாய் லாமா இறந்தால் இன்னொரு தலாய் லாமா பிறப்பார். மைத்ரேய புத்தர் அப்படியல்ல. ஒரு முறை மட்டுமே நிகழ்கிற அற்புத நிகழ்வு என்றும், கடவுள் தன்மை உள்ள ஒரு அவதாரமே அவர் என்றும் திபெத்திய மக்கள் நம்புகிறார்கள்.... அதை சீனாவில் உள்ள புத்தமதத்து ஆட்களும் நம்புகிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன....

அதனாலென்ன என்பது போல் லீ க்யாங் அவரைப் பார்த்தான். அறிவு கூர்மைக்குப் பெயர் போன இவனுக்கு அரசியல் புரியவில்லையே என்று எண்ணிய பொதுச் செயலாளர் தொடர்ந்து சொன்னார்.

“கடவுள் என்று ஏதோ ஒரு குழந்தையைக் கொண்டாடுவதில் நமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அந்தக் குழந்தையை இந்த லாமாக்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தி மக்களும் கடவுள் சொல்கிறாரே என்று அந்தக் குழந்தை பின்னால் ஒருமித்து நின்றால் அது நமக்குப் பிரச்னை தான்.... நம் மக்களில் கூட பலர் அந்தக் குழந்தையை கடவுளாக ஏற்றுக் கொண்டு விடலாம் என்கிற நிலைமையில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டி வருகிறது...... இந்தியாவையோ, அமெரிக்காவையோ நாம் எதிர்க்கையில் மக்கள் நம் பக்கம் தான் இருப்பார்கள். இந்தியாவையும் அமெரிக்காவையும் எதிரியாக நினைப்பார்கள். ஆனால் அந்தக் கடவுள் குழந்தையை நாம் எதிர்க்கையில் மக்களில் எத்தனை பேர் நம் பக்கம் இருப்பார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது.... அவர்கள் நம்மையே எதிரிகளாய் நினைத்தாலும் நினைக்கலாம்.... இது போன்ற விஷயங்களை முளையிலேயே வேரோடு பிடுங்கி விடுவது நல்லது...

லீ க்யாங் தலையசைத்தான். சீனத்தலைவர்கள் வல்லரசுகளையும் விட அதிகமாய் கடவுளுக்கு பயப்படுகிறார்களா என்ன?என்று தனக்குள் கேட்டுக் கொண்ட அவனுக்கு அவர் தன்னிடம் சொல்லாத வேறு ஏதோ இருக்கிறது என்று உறுதியாகத் தோன்றியது.

அன்று முதல் அவன் மைத்ரேய புத்தர் விவகாரத்தில் தன் முழுக் கவனத்தைத் திருப்பினான். திபெத்தின் புத்த மடாலயங்களில் சீன உளவுத் துறை ஆட்கள் ரகசியமாய் ஊடுருவினார்கள். மைத்ரேய புத்தர் பற்றிய எந்தப் பேச்சும், தகவலும் அவர்களிடமிருந்து தப்பவில்லை.

அந்த மார்கழி மாதத்து சுக்ல பட்சம் முழுவதும் பிரார்த்தனைகளும், சிறப்பு வழிபாடுகளும் புத்த மடாலயங்களில் தொடர்ந்து நடந்தன. அந்தக் காலம் முடிந்ததும் அந்தப் பிரார்த்தனைகள், சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் நின்றன. எதிர்பார்த்தது போல் மைத்ரேய புத்தர் யார் என்ற அடையாளம் காட்டும் சிரமத்தை லாமாக்கள் மேற்கொள்ளவில்லை. ஆர்வம் மிகுந்த பொதுமக்கள் லாமாக்களைக் கேள்விகளால் துளைத்த போது “தக்க சமயத்தில் காட்சி அளிப்பார்என்ற ஒரே பதில் தரப்பட்டது. தக்க சமயம் எது என்றும் அவர்கள் விளக்கம் அளிக்க முனையவில்லை. பதில் ஏதும் கிடைக்காத போதும் மக்கள் தாங்களாக சில யூகங்கள் செய்து அதையே உண்மைகளாக வெளியே உலவ விட்டனர்.

இதில் ஏதோ மூடுமந்திரம் இருப்பதாக சீன உளவுத்துறை எண்ணியது. மேலும் ஆழமாக விசாரித்த போது லாமாக்கள் ரகசியமாக ஒரு கூட்டம் கூட்டியதாகவும், அந்த கூட்டத்தில் பத்மஷாம்பவாவின் அந்த ரகசிய ஓலைக் குறிப்பு விவாதிக்கப்பட்டதாகவும்,  மைத்ரேய புத்தரின் உயிருக்கு சில காலம் ஆபத்து இருப்பதால் அவரைப் பற்றிய எந்த தகவலையும் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிந்தது. அந்த சில காலம் என்பது எப்போது வரை என்றும் தெரியவில்லை. அது பற்றி முற்றிலும் அறிந்த லாமாக்களின் உயர்மட்ட ஐவர் குழுவிற்குள் சீன உளவுத்துறை புக முடியவில்லை.

மைத்ரேய லாமாவின் உயிருக்கு ஆபத்து என்று கண்டு பிடித்து ரகசியம் காக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்த சீன உளவுத்துறை அந்த ஐவர் குழுவை ரகசியமாய் கண்காணிக்க ஆரம்பித்தது. அவர்கள் அந்த சுக்லபட்ச காலத்தில் பிறந்த குழந்தைகள் யாருடனாவது தொடர்பு கொள்கிறார்களா என்று கவனிக்க ஆரம்பித்தது. அப்படி தற்செயலாக நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் அந்த இரண்டு குழந்தைகளும் சீக்கிரமே விபத்துகளைச் சந்தித்தன. மூன்று வருடம் கழித்து ஒரு குழந்தை புத்தர் சிலை ஒன்றைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த சிலையை விட மறுப்பதாகவும் ஒரு செய்தி வந்தது.  அந்தக் குழந்தையைப் பார்க்க திபெத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆட்கள் வர ஆரம்பித்தனர். உளவுத்துறை ஆட்களும் போய் பார்த்தார்கள். ஒரு வாரத்தில் அந்த குழந்தை ஒரு விபத்தில் இறந்து போனது.

அந்த குறிப்பிட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளில் மூன்று குழந்தைகள் சாதாரண பள்ளிகளில் சேராமல் புத்த மடாலயங்களில் சேர்க்கப்பட்டன. உளவுத் துறை அவர்களையும் கூர்ந்து கண்காணித்தது. அந்த மூன்று குழந்தைகளும் மிகச் சாதாரணமாக இருந்தனர். அந்த மடாலய பிக்குகள் அவர்களை நடத்திய விதமும் ஒரு தெய்வக் குழந்தையை நடத்திய விதமாய் தெரியவில்லை. அதனால் அவர்கள் உயிரும் தப்பியது. அக்காலத்தில் பிறந்திருந்த மீதமுள்ள குழந்தைகள் சாதாரண அரசுப்பள்ளிகள் போய்ப் படித்து சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக எல்லாம் வைத்து யோசித்த போது புத்தர் சிலையை பிடித்துக் கொண்டிருந்த குழந்தை தான் கொஞ்சமாவது அவதார சம்பந்தக் குழந்தை போல் தோன்றியது. அதுவும் இறந்து போன பிறகு, வேறெந்த புது செய்தியும் கிடைக்காததால் சீன உளவுத் துறை அந்த விஷயத்தைக் கைகழுவியது.

திடீரென்று இப்போது மைத்ரேய புத்தர் பேசப்படுகிறார்.....

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த லீ க்யாங்கிடம் வாங் சாவொ அடுத்த செய்தியைச் சொன்னான். “ஆசான் போன பிறகு தலாய் லாமா இந்தியப் பிரதமரிடம் அவசரமாய் அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறார்

லீ க்யாங் கேட்டான். “எதற்காம்?

“அதைச் சொல்லவில்லையாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் அப்பாயின்மெண்ட் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறாராம். அவர் அவசரத்தைப் பார்த்தால் இந்த விஷயமாக இருக்கலாமோ என்று சந்தேகப்படுகிற மாதிரி இருக்கிறது என்று சோடென் சொல்கிறான்

சோடென் இன்னும் புத்திசாலியாகவும், தலாய் லாமாவிடம் நெருங்கிப் பழகுகிறவனாகவும் இருந்திருந்தால் எத்தனையோ அதிக விஷயங்கள் நமக்குக் கிடைத்திருக்கும்என்று லீ க்யாங் அபிப்பிராயப்பட்டான். சோடென் யாரிடமும் மிக நெருங்கி அன்பாகப் பழக முடியாத ஒருவன். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு யாரையும் அதிகம் பிடிப்பது கிடையாது.

தலாய் லாமாவை அவர் இருப்பிடக் கோயிலில் வேவு பார்க்க அவர்களுக்கு அவனை விடப் பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை. இந்திய உளவுத்துறையால் நன்கு பரிசோதிக்கப்பட்டு பிரச்னை இல்லாதவன் என்று தேர்வு செய்யப்பட்டு தலாய் லாமாவின் உதவியாளனாய் சேர்ந்திருந்த சோடென் திபெத்தியனாக இருந்த போதும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவன். தாய் நாட்டின் மீது பெரிய பற்றோ, பிடிப்புணர்வோ இல்லாதவன். உண்மையில் பணம், பகட்டு வாழ்க்கை தவிர வேறு எதிலும், எந்த மனிதரிடமும் அவனுக்கு பிடிப்பு இருக்கவில்லை. அவன் தலாய் லாமாவிடம் உதவியாளனாய் சேர்ந்து ஓராண்டு முடிவில் தன் கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்த போது சீன உளவுத்துறையினர் அவனை அணுகினார்கள். அவன் விலைபோனான்.

சோடென்னை கம்ப்யூட்டர், உளவுக்கருவிகள் பயன்படுத்துவதில் நல்ல தேர்ச்சி பெற வைக்க சீன உளவுத்துறைக்கு சீக்கிரமாகவே முடிந்தது. ஆட்களிடம் ஏற்படாத நெருக்கம் அவனுக்கு இது போன்ற எந்திரங்களிடம் ஏற்பட முடிந்தது.

லீ க்யாங் வாங் சாவொவிடம் சொன்னான். “தலாய் லாமாவிற்கு எப்போது அப்பாயின்மெண்ட் கிடைத்தாலும் உடனடியாகத் தெரிவிக்கச் சொல். வேறு யாராவது அவரை வந்து பார்த்தாலும், வேறு யாரையாவது அவர் தொடர்பு கொண்டாலும் கூட நமக்கு உடனே தெரிய வேண்டும்

வாங் சாவோ தலையசைத்தான். தயக்கத்துடன் லீ க்யாங்கிடம் கேட்டான். “அந்த ஆசானைப் பிடித்து வைத்துக் கேட்டால் எல்லாம் தெரிந்து விடாதா?

லீ க்யாங் சுவரில் இருந்த திபெத்திய வரைபடத்தைப் பார்த்தபடி சொன்னான். “அந்த ஆளைக் கஷ்டப்பட்டு பிடித்து விடலாம். ஆனால் பலன் எதுவும் கிடைக்காது. எத்தனை சித்ரவதை அனுபவித்தாலும் நமக்குத் தேவையான ஒரு தகவல் கூட அவர் வாயிலிருந்து வராது...

சீன உளவுத்துறையின் சித்ரவதைகள் சாதாரணமானவை அல்ல. அப்படி இருக்கையில் லீ க்யாங் இப்படிச் சொன்னது வாங் சாவொவிற்கு ஆசான் மீது ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியது. இது வரை ஹாங்காங் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அவனுக்கு திபெத்திய விவகாரங்கள் இரண்டு வருடப் புதிது.  லீ க்யாங் அளவுக்கு அவனுக்கு அதில் அனுபவம் போதாது....

லீ க்யாங் அவனுக்கு விளக்கினான். “திபெத்திய லாமாக்கள் ஆழ்மனசக்திகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். தங்கள் எண்ணங்களை வேறெங்கோ குவித்து உடல் உணர்வுகளை அவர்களால் முற்றிலும் அகற்றி விட முடியும். சாவது கூட அவர்களுக்கு ஒரு பிரச்னை அல்ல.....

வாங் சாவொ சொன்னான். “அந்த மாதிரி மனிதர்கள் நம் பக்கம் இருந்தால் நாம் இன்னும் எத்தனையோ சாதிக்கலாம் அல்லவா....

திறமைகளை சிலாகிப்பதில் சிறிதும் தயக்கம் இல்லாத லீ க்யாங் அவன் சொன்னதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

வாங் சாவொவின் கைபேசி குறுந்தகவல் வந்த சத்தத்தை ஏற்படுத்த வாங் சாவொ வந்திருக்கும் தகவல் என்ன என்று பார்த்தான்.

“தலாய் லாமாவுக்கு இந்தியப்பிரதமர் நாளை மாலை ஆறு மணிக்கு அப்பாயின்மெண்ட் தந்திருக்கிறார். தலாய் லாமா நாளை காலை விமானத்தில் புறப்படுகிறார்.

தகவலை வாங் சாவொ லீ க்யாங்கிடம் தெரிவித்தான்.

லீ க்யாங் சொன்னான். “தலாய் லாமாவை டெல்லி இறங்கிய நேரம் முதல் அங்கிருந்து கிளம்பும் வரை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய். நிருபர்கள், பக்தர்கள், திபெத் தனிநாடாக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்று நம் ஆட்கள் எல்லா வேஷங்களிலும் அவரைத் தொடர்ந்து சுற்றி இருக்கட்டும். முக்கியமாய் அவர் யாரை எல்லாம் சந்திக்கிறார், அவர்களிடம் என்னவெல்லாம் பேசுகிறார் என்பது நமக்குத் தெரிந்தாக வேண்டும்...

வாங் சாவொ சரியென்று தலையசைத்தான். லீ க்யாங் அவனை அனுப்பி விட்டு யோசனையில் ஆழ்ந்தான். இந்த விவகாரத்தில் இந்தியாவை எதற்காக தலாய் லாமா அணுகுகிறார்? எந்த வித உதவியை அவர் எதிர்பார்க்கிறார்?

(தொடரும்)
-          என்.கணேசன்Monday, July 21, 2014

அட ஆமாயில்ல! – 10·       இருவேறு உள்ளங்களாய் தனித்தனியாய் இருந்தவர்கள் திருமணத்தால் ஒன்றாகி விடுகிறார்கள். எந்த ஒருவன் ஆவது என்று அவர்கள் தீர்மானிக்க முடியாத போது தான் தொல்லையே தொடங்குகிறது
-       -    ஆன்வில் கோரஸ்


·         தீர்க்கதரிசிகள் தங்களுடைய நாக்கினால் பேசுவதில்லை. அவர்கள் வாழ்க்கையின் மூலமாகவே பேசுகிறார்கள்.
-          மகாத்மா காந்தி


·         அவனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் முடியும் போது அக்கலைஞனுக்கு ஒரு சின்ன அதிருப்தியாவது தோன்றத்தான் செய்கிறது. அப்படித் தோன்றுவது மிகவும் நல்லதாகும். ஏனென்றால் அடுத்த படைப்புக்கான கருவினை அது தான் உற்பத்தியாக்குகின்றது.
-          பெதோல்டு ஆபக்


·         இந்த உலகில் நாம் செய்து விட்ட தவறுகளுக்குத் தருகின்ற கௌரவமான பெயர் தான் அனுபவம்.
-          ஆஸ்கார் ஒயில்டு


·         ஆயிரமாயிரம் பணம் கொடுத்து ஒரு உயர்ந்த ரக நாயை வாங்கி விடலாம். ஆனால் அன்பு ஒன்றால் தான் அதன் வாலை அசைக்க முடியும்.
-          நில் ஒஷிரா

·         எந்த வேலையையும் செய்யாமல் உண்டு உறங்கி வாழ்பவன் மட்டும் சோம்பேறி அல்ல. தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து முடிக்க தன்னிடம் திறமை இருந்து, வசதி வாய்ப்புகள் காணப்பட்டாலும் அதனைச் செய்யாமல் இருக்கின்றானே அவனும் சோம்பேறி தான்.
-           சாக்ரடீஸ்

·         இந்த உலகமானது பலவித பயிற்சிகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிற பயிற்சிசாலை. நம்மை வலிமையுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் இங்கு வந்து பிறந்திருக்கிறோம்.
-          விவேகானந்தர்

*தன்னை விட சிறந்த அறிவாளி உலகத்தில் யாருமில்லை என்று  எண்ணுபவன் முட்டாளின் முதல் தரம் மட்டுமல்ல. மிக மிக ஆபத்தானவனும் கூட.
                                       - டைதர்

·         ஆயிரம் நன்றி கெட்ட மனிதர்களுக்குக் கூட நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன், அதன் மூலம் ஒரு நன்றியுள்ளவனை எனக்குக் கண்டு பிடிக்க முடியும் என்றால்.
-          செனகா

தொகுப்பு: என்.கணேசன்


Thursday, July 17, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 3


ழையில் நனைந்து கொண்டே செல்லும் ஆசானை தலாய் லாமா மாடி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றார்.

சில சின்னச் சின்ன சந்தோஷங்கள் குழந்தைப் பருவத்திற்கே உரியவை. வளர்ந்த பிறகு அவற்றில் இருந்து நீங்கி விடுகிறோம். சொல்லப்போனால் வளர்ந்திருக்கிறோம் என்பதற்கு சமூகம் எடுத்துக் கொள்ளும் அடையாளமே அந்த சின்னச் சின்ன சந்தோஷ ஈடுபடுதல்களை விட்டு நீங்குவதே. அப்படி ஈடுபட்டால் “என்ன இன்னும் சின்னக் குழந்தைகள் போலஎன்று சமூகம் கேட்டும் விடும். அப்படி ஈடுபடுபவன் குற்றவுணர்ச்சியோடு பின்வாங்க நேரும். ஆனால் 93 வயதானாலும் அந்த வகையில் வளராதவர்ஆசான். அவர் உடலும் அதற்கு ஒத்துழைக்கிறது. தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அவருடைய முகத்தைப் பார்க்க முடியா விட்டாலும் அந்த மழையை சிறு குழந்தையைப் போல் அனுபவித்து நனைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தோஷம் தெரியும் என்பதில் தலாய் லாமாவுக்கு சந்தேகம் இல்லை.

ஏழெட்டு வயது வரை அப்படித் தானும் நனைந்தது நினைவுக்கு வர தலாய் லாமா சின்னதாய் புன்னகை பூத்தார். அவர் பார்வை ஆசான் மறையும் வரை அந்த திக்கிலேயே இருந்தது. இந்த மாளிகைச் சிறையில் தான் இருக்கையில், நாடோடியாய் சுதந்திரனாய் ஆசான் இருக்கிறார் என்று எண்ணியவராய் மாடியில் இருந்து இறங்கி தனதறைக்கு வந்தார் தலாய் லாமா.

வந்ததும் இண்டர்காமில் சோடென்னை அழைத்தார். சோடென் வந்ததும் சொன்னார்.  பிரதமர் அலுவலகத்திற்கு போன் செய் சோடென். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு ஒரு அப்பாயின்மெண்ட் கேள்

சோடென் தலையசைத்து விட்டு ஒரு நிமிடம் அதிகமாக அங்கேயே நின்றான். எதற்காக பிரதமரிடம் அப்பாயின்மெண்ட் என்று அவராக விவரிப்பாரா என்று சோடென் எதிர்பார்த்தார். ஆனால் தலாய் லாமா விளக்கம் எதுவும் தராமல் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு சொல்என்று மேலும் சொல்லி அவனை அனுப்பி விட்டார்.

ஆசான் வந்து போனதற்கும், இந்தியப் பிரதமரிடம் தலாய் லாமா இந்த அப்பாயின்மெண்ட் கேட்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று சோடென் சந்தேகப்பட்டான்.  
                                                                           **********

சீன உளவுத்துறை MSS (Ministry of State Security of the People's Republic of China) தலைமையகம், பீஜிங்.

சோடென்னின் உயர் அதிகாரியான வாங் சாவொ MSSன் உப தலைமை அதிகாரியின் வரவுக்காக அலுவலகத்தில் காத்திருந்தான்.   

நேற்று இரவு அவன் உறங்கவேயில்லை. காரணம் சோடென் அவனுக்கு அனுப்பி வைத்த அந்த பேச்சுப் பதிவு தான். அது இந்தியாவில் இருந்து நேரடியாக அவனிடம் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து நேபாள் மெயில் ஐடிக்கு போய் அங்கிருந்து ஹாங்காங் மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சீனாவுக்கு அரை மணி நேரத்தில் வந்தது. அதன் பிறகு அதில் அவனுக்கும் இரண்டு கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கும் இன்று அதிகாலை ஆறு மணி வரை வேலை இருந்தது.

தலாய் லாமாவும் ஆசானும் பேசிய பேச்சுகளில் இடையே தெளிவில்லாமல் இருந்த சத்தங்களில் இருந்து பேச்சை பிரித்தெடுத்துக் கண்டு பிடிக்க நிறையவே அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தார்கள். கடைசியில் ஒருசில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. மிகத் தாழ்ந்த குரலில் அவர்கள் பேசியிருந்தபடியால், மழைச்சத்தத்தை மீறி அதற்கு மேல் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் MSS உப தலைமை அதிகாரியான லீ க்யாங்கிடம் காட்ட தான் வாங் சாவொ அங்கு காத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் தன் வாழ்நாளில் லீ க்யாங் போன்ற கூர்மதி படைத்த ஒருவனை சந்தித்ததில்லை. எந்த ஒரு விஷயத்தையும் மிகக் குறைவான நேரத்தில் அதன் ஆழம் வரை போய் அலசி ஆராயும் திறமை லீ க்யாங்குக்கு உண்டு.  ஆட்களையும் அப்படித்தான் சீக்கிரமாகவே துல்லியமாக லீ க்யாங் எடை போட்டு விடுவான். ஆனால் எதையும் லீ க்யாங் முக பாவனையில் இருந்து யாராலும் யூகிக்க முடியாது. உணர்ச்சிகளை அதிகம் காண்பிக்காத முகம் லீ க்யாங்குடையது. எதுவும் புரியாத மரமண்டை போல் தோற்றமளித்தாலும் லீ க்யாங் அறிவிற்கு எதுவும் தப்பாது.

சீனாவின் MSS அமைப்பில் தலைமைக்கு அடுத்த உயரதிகாரியாக இருக்கும் லீ க்யாங்கின் வயது 37. வாங் சாவொவை விட ஐந்து வயது தான் மூத்தவன். ஆனால் தலைமை அதிகாரி உட்பட எல்லோரும் லீ க்யாங்கை மிகவும் மதித்தார்கள். பலருக்கு மதிப்பையும் விட பயமே அதிகமாக இருந்தது. காரணம் தங்கள் வேலையில் தவறு செய்தவர்களை லீ க்யாங் கையாளும் விதம். அவர்களில் எத்தனையோ பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் விசாரணை கூட இருந்ததில்லை.  

உளவுத்துறையில் இருக்கும் தனிமனிதர்களின் தவறுகள் நாட்டின் தலையெழுத்தையே சில சமயங்களில் மாற்ற முடிந்தவை. அப்படி இருக்கையில் அதை அனுமதிப்பதே தேசத்துரோகம் என்று நம்புபவன் லீ க்யாங்.

அதே நேரம் கூடுதல் திறமையையும், கடும் உழைப்பையும் கவனித்து தகுந்த பதவி உயர்வையும், சன்மானத்தையும் கொடுப்பதிலும் லீ க்யாங் தாராளமானவன். அவனை முகஸ்துதி செய்து யாரும் எதையும் அவனிடம் சாதித்துக் கொள்ள முடியாது. அவனைப் பற்றித் தெரியாமல் அப்படி முயல்பவர்களிடம் வறண்ட குரலில் சொல்வான். “உன் திறமையைப் பேச்சில் காட்டாதே. செயலில் காட்டு. உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாய் செய்து காட்டு

வாங் சாவொ துப்புறவு பணியாளனாக அந்த அமைப்பில் வேலைக்குச் சேர்ந்தவன். அந்த வேலையை அவன் செய்த விதத்தையும், அவனிடம் கூடுதல் திறமைகள் இருப்பதையும் கவனித்த லீ க்யாங் அவனுக்குத் தகுந்த பயிற்சிகள் கொடுத்து அவனை ஒரு அதிகாரி நிலைக்கு உயர்த்தி இருக்கிறான். துப்புறவு தொழிலாளியாகவே இருந்திருக்க வேண்டிய தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய லீ க்யாங் மீது வாங் சாவொவுக்கு அளவு கடந்த பக்தி உண்டு....

லீ க்யாங் உள்ளே நுழைந்தான். வாங் சாவொ எழுந்து நின்று மரியாதை செலுத்தினான்.

தலாய் லாமாவும் ஆசானும் மைத்ரேய புத்தர் பற்றி என்ன பேசினார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்பாகவே வந்த லீ க்யாங் தனக்கும் முன்பாகவே வந்து காத்திருந்த வாங் சாவொவைப் பார்த்து திருப்தி அடைந்தாலும் அதைத் தன் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. தான் அமர்ந்து அவனையும் அமரச் சைகை செய்து விட்டு தலையை அசைத்தான்.

வாங் சாவொ தன் லாப்டாப்பை விரித்து இது சோடென் அனுப்பிய மாற்றப்படாத பதிவுஎன்று சொல்லி விட்டு அந்தப் பதிவை ஓட விட்டான்.

“சொல்லுங்கள் ஆசானே. என்ன விஷயம்? என்ற தலாய் லாமாவின் குரலுடன் ஆரம்பித்தது பதிவு. லீ க்யாங் கண்களை மூடிக் கொண்டு கூர்மையாகக் கேட்டான். 

இடையே பேச்சு மிகவும் தாழ்ந்து போய் மற்ற சத்தங்கள் பெரிதாகக் கேட்ட போதும் லீ க்யாங் கண்களைத் திறக்கவில்லை. கடைசியில் “நம்மிடம் காலம் அதிகமில்லை டென்சின்என்று ஆசான் சொல்லி “உடனடியாகப் பேசுகிறேன் ஆசானே”  என்று தலாய் லாமா சொன்னதுடன் அந்த பதிவு முடிவுக்கு வந்த பிறகு தான் கண்களைத் திறந்தான். வழக்கமாகவே கல் போல் இருக்கும் முகம் மேலும் இறுகிப் போயிருந்தது.

சோடென் என்ன சொல்கிறான்?

“தலாய் லாமா தன் தனியறையில் அந்த ஆசானை அழைத்துக் கொண்டு போய் பேசியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது....

“அந்த ஆசானைப் பற்றி என்ன சொன்னான்?

“அந்த ஆளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆள் மேல் கோபமாய் இருந்த மாதிரி தெரிந்தது... அந்த ஆள் எங்கே போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள மழையில் நீங்கள் எப்படிப் போவீர்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறான். அந்தக் கிழவர் இப்படித்தான் ஓடிக் காண்பித்து போயே விட்டாராம்....

லீ க்யாங்கின் முகத்தில் ஒரு சிறு புன்னகை வந்து வந்த வேகத்திலேயே மறைந்தது. வாங் சாவொவுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. லீ க்யாங் புன்னகை செய்தது போல் இருந்தது உண்மையா இல்லை பிரமையா?

லீ க்யாங் ஆசானை பதினைந்து வருடங்களாக அறிவான். திபெத்தில் உளவு பார்க்கும் யாரும் ஆசானை அறியாமல் இருக்க முடியாது. பெரிய லாமாக்களில் இருந்து தெருவில் லூட்டி அடிக்கும் பொடியன்கள் வரை பலதரப்பட்டவர்கள் நெருக்கமாக இருக்கும் ஆசானுக்குப் பல முகங்கள் உண்டு. அவர் ஒருவரை சமாளிப்பது ஒன்பது பேரை ஒருசேர சமாளிப்பது போலத் தான்.

திபெத்தில் உளவாளிகளுக்கு பயிற்சி காலத்தில் ஒரு பரிட்சை வைப்பது போல ஆசானை வேவு பார்க்க லீ க்யாங் சொல்வதுண்டு. வேவு பார்ப்பவர்கள் ஆசானை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி அவர் செய்து விடுவார்.

ஒரு உளவாளி அவரை வேவுபார்க்கச் செல்கையில் ஒரே இடத்தில் தொடர்ந்து 20 மணி 22 நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்து விட்டு, உளவு பார்ப்பவன் அலுத்துப் போய் அசந்திருந்த சமயத்தில்,  20 மணி 23வது நிமிடம், திடீரென்று ஓடிமறைந்தவர் ஆசான். இன்னொரு உளவாளி வேவு பார்க்கச் செல்கையில் பல இடங்களுக்கு நாள் முழுக்க ஓடியும் நடந்தும் சென்று ஒரே நாளில் 138 பேரை சந்தித்துப் பேசி உளவாளியின் கால்களை வீங்கச் செய்தவர் அவர். அந்த உளவாளிக்கு மறுநாள் படுக்கையில் இருந்து எழுந்து கால்களை நிலத்தில் ஊன்ற முடியவில்லை. இது போன்ற விளையாட்டுக்கள் ஆசானுக்கு சர்வ சகஜம். அந்த ஆசானிடம் சிறிதும் சளைக்காமல் ஈடுகொடுத்த ஒரே ஆள் லீ க்யாங் தான். சதா புன்னகைக்கும் ஆசானின் புன்னகை அந்த நேரத்தில் மறைந்து போய் பிரமிப்புடன் ஆசான் அவனைப் பார்த்த காட்சி இப்போதும் லீ க்யாங் கண்முன் நிற்கிறது ...

லீ க்யாங் கேட்டான். “அவர்கள் மெல்லப் பேசியது என்ன என்று கண்டுபிடிக்க முடிந்ததா?

வாங் சாவொ தொழில் நுட்பத்தின் உதவியுடன் மாற்றிய பதிவை ஓட விட்டான். முதலில் தெளிவாய் கேட்ட பேச்சுக்கள் அப்படியே கேட்டன. சரியாகக் கேட்காத பகுதி வந்த போது தலாய் லாமா குரலும், ஆசான் குரலும்  நீண்ட இடைவெளிகளில் ஓரளவு தெளிவாக, விட்டு விட்டு கேட்டது.

ஆசான்: ..... பத்து நாளுக்குள்.... வெளியே….

தலாய் லாமா: .........தெரியாமல் ....... எப்படி….

ஆசான்: ......... எனக்குத் தெரியும்..... ஒரு ஆள்....

தலாய் லாமா: ...இது என்ன காகிதம்.....

ஆசான்: ....... மௌன லாமா சொன்னது.....

தலாய் லாமா:.... யாரிது?...

ஆசான்: ....கண்டம்.... உயிருக்கு.... இந்தியா

தலாய் லாமா: ... எப்படி

ஆசான்: .... ஒரே வழி...

இந்தப் பகுதியை மட்டும் லீ க்யாங் மூன்று முறை கண்களை மூடிக் கேட்டான். கடைசியில் மொத்தமாக மறுபடியும் முழு பதிவையும் ஓட விட்டுக் கேட்டான்.

இந்தப் பதிவில் மூன்று அல்லது நான்கு நபர்கள் பற்றி அவர்கள் பேசி இருக்கிறார்கள். முதல் நபர் மைத்ரேய புத்தர். அவர் பற்றி பேசினார்கள் என்று நேற்று முதலில் கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட பேரதிர்ச்சி லீ க்யாங் சமீப காலத்தில் உணர்ந்திராதது. அவர் பற்றி அவர்கள் பேசியது என்ன என்று சுத்தமாகத் தெரியவில்லை. இரண்டாம் நபர் மௌன லாமா. ஒரு தனி உலகில் வாழ்வது போல வாழ்ந்து வரும் அந்த நபரின் அபூர்வ சக்திகள் திபெத்தில் மிகப்பிரபலம். அவற்றில் எத்தனை நிஜம், எத்தனை கற்பனை என்பது உளவுத்துறையால் இன்னும் கணிக்க முடியவில்லை. அந்த மௌன லாமா எச்சரிக்கை செய்ததாய்  சொன்னது கேட்டதே தவிர அந்த எச்சரிக்கை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. மூன்றாம் நபர் அவர்களால் தேடிக் கண்டுபிடிக்க முடியாத நபர். அந்த ஆளை எதற்காக அவசரமாய் தேடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பெயரும் நபரும் வித்தியாசமாக இருப்பதாகச் சொல்லப்படும் கடைசி நபர் மூன்றாவது நபரே தானா இல்லை நான்காவதாக வேறொரு நபரா தெரியவில்லை.

லீ க்யாங்கின் மூளை முன்பே அறிந்த தகவல்களுடன் கிடைத்திருக்கிற இப்போதைய தகவல்களை வைத்து நிலைமையைத் தெளிவாக யூகிக்க முயன்றது....


(தொடரும்)

- என்.கணேசன் 

Monday, July 14, 2014

பரிணாம வளர்ச்சியில் தசாவதாரம்


அறிவார்ந்த ஆன்மிகம்-44

ரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.  ஆரம்பத்தில் உயிரினங்கள் நீரினில் உருவாகின என்றும் காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டே சென்று முடிவில்  மனிதன் என்ற நிலையை அடைந்தது என்பது டார்வினின் கோட்பாட்டின் சுருக்கம். இந்தக் கோட்பாட்டை சார்லஸ் டார்வின் எளிதாக எட்டி விடவில்லை. தன் 22 ஆம் வயதில், 1831 ஆம் ஆண்டு, நண்பர் கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் உடன் சேர்ந்து HMS Beagle என்ற கப்பலில் தென் அமெரிக்கக் கரையோரமாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணிக்க கிளம்பினார்.  தற்போது காணவும் கிடைக்காத ஊர்வன, பறப்பன, நடப்பன என எல்லா உயிரினங்களின் எலும்புகளையும் சேகரித்து ஆராய்ந்தார். இரண்டு வருடப் பயணம் ஐந்து வருடப் பயணம் ஆக நீண்டது. இதன் முடிவில் தான் சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் முடிவுக்கு வந்தார்.   

உலக அறிஞர்களின் சிந்தனையையும், நம்பிக்கையையும் புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானதாக இதைச் சொல்லலாம். அப்படிப்பட்ட டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தில் பக்தி இலக்கியங்கள் சொல்லும் திருமாலின் தசாவதார வரிசை டார்வினின் கோட்பாட்டை ஒட்டி இருப்பது யோசிக்கத் தக்க சுவாரசியமான விஷயம்.


பக்தியுடன் மட்டுமே பார்க்கையில் விடுபட்டுப் போகும் பல சூட்சும உண்மைகளை நாம் அறிவுபூர்வமாகவும் அலசினால் எளிதில் கண்டு விட முடியும். இனி திருமாலின் அவதாரங்கள் பத்தையும், அவை டார்வின் கோட்பாட்டோடு எப்படி ஒத்துப் போகிறது என்பதையும், பார்ப்போம்.

1.  மச்ச அவதாரம்:  மச்ச என்றால் மீன் என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு. அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது. பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.


2. கூர்ம அவதாரம்:  கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் நீர் வாழும் உயிரினம் நீர், நிலம் இரண்டிலும் வாழும் உயிரினமாக மாற்றம் அடையும் என்று உள்ளது. எனவே நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடையும் போது மேரு மலையைத் தாங்கி நிறுத்த திருமால் இந்த கூர்மாவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
 
3. வராக அவதாரம்: வராகம் என்றால் பன்றி என்று பொருள். பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை நிலத்தில் வாழ்பவையாக ஒரு காலக் கட்டத்தில் இருந்தவை முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள். அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன.  

4. நரசிம்ம அவதாரம் நரனாகிய மனிதனும், சிம்மம் ஆகிய மிருகமும் சேர்ந்த கலவை நரசிம்மம்.  நிலவாழ்பவைகளாக இருந்த விலங்கினம் பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையாக சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது. இரணியன் என்ற அரக்கனை அழித்து உலகைக் காக்கவும், பிரகலாதன் என்ற பக்தனின் நம்பிக்கையை மெய்ப்படுத்தவும் திருமால் எடுத்த இந்த நான்காவது அவதாரத்தில் அவர் மனித உடலும், சிங்கத்தின் முகமும் கொண்டிருந்தார்.

5. வாமன அவதாரம் – பாதி மனிதன், பாதி மிருகம் என்ற நிலையைத் தாண்டி முழு மனிதனாக மாறுவது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. இதில் மனிதன் முழு வளர்ச்சி அடைந்து விடாத குள்ள உருவமாக வாமனர் காட்சி அளிக்கிறார். அசுரர்களின் அரசனான மகாபலியின் ஆதிக்கத்தில் இருந்து தேவர்களைக் காக்கவும், மகாபலியின் கர்வத்தை அழிக்கவும் திருமால் எடுத்த ஐந்தாவது அவதாரம் இது.

6. பரசுராம அவதாரம் ஆதிமனிதன் மிருகங்களையும் எதிரிகளையும் மூர்க்கமாகத் தாக்கி தன் சக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. தசவதாரத்தின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தில் திருமால் மிகவும் மூர்க்க மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். இந்த அவதாரத்தில் பரசுராமர் போர்க்குணம் கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

7. இராம அவதாரம் –  காட்டிலும், நாட்டிலுமாக மாறி மாறி வசித்தது மனிதனின்  அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. இராவணனைக் கொல்ல திருமால் எடுத்த இராமாவதாரத்தில் இராமர் அப்படியே காட்டிலும், நாட்டிலும் வாழ்ந்து வருகிறார். இந்த அவதாரத்தில் அறிவு கூர்மைக்கும், அசாத்திய பலத்திற்கும் பெயர் போன அனுமன் என்ற முக்கிய கதாபாத்திரம் மூலம் குரங்கினத்தின் அபார வளர்ச்சியும் சுட்டிக் காட்டப்படுகிறது.

(நீர் வாழ்வன, நீர்-நிலம் வாழ்வன, நிலம் வாழ்வன, மிருகம்-மனிதன் கலந்த இனம் என்று படிப்படியாய் தசாவதாரப் பரிணாம வளர்ச்சியில் அடுத்ததாக முழு மனிதன் என்று காட்டப்பட்டாலும், டார்வினின் குரங்கின் அபார வளர்ச்சி பின் மனிதனாக முடிந்தது என்னும் கோட்பாடு வேறு விதத்தில் இராமாவதாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் மனிதனான இராமனுக்கு இணையாகவும் உதவியாகவும் நடந்து கொள்ளும் சுக்ரீவன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களில் குரங்கினங்களின் மிக உயர்ந்த நிலை வெளிப்படுகிறது.)

8. பலராம அவதாரம்: காட்டை முழுமையாக விட்டு விட்டு நாட்டில் வாழ ஆரம்பித்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமர் விவசாயம் செய்வதைக் குறிக்கும் விதத்தில் கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.


9. கிருஷ்ண அவதாரம்: விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் மேய்த்து வாழும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டம். இராம அவதாரத்தில் முழுமையான மனிதன், அதாவது புருஷோத்தமன், என்ற நிலையை அடைந்த பின் பலராம அவதாரத்தில் சற்று இறை தன்மையை எட்டி, கிருஷ்ணாவதாரத்தில் முழுமையாக  இறை தன்மையைப் பெற்று விடுவதாக தசாவதாரத்தில் காட்டப்படுகிறது. மனிதனின் உணர்வின் உயர்வுகள் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அலசப்படவில்லை என்றாலும் தசாவதாரத்தில் இந்த உயர்வுகள் துல்லியமாய் வளர்ச்சி அடைவதும் காட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பு.

10. கல்கி அவதாரம்:  மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஒரு முடிவு இல்லை. கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலைநாட்டு அறிஞர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது வியப்பானதல்லவா?

-        -   என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 7.1.2014