சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 30, 2012

நாணயம்


(இந்த வார தினமலர்-வார மலரில் வெளியான எனது சிறுகதை)

  
நாளைக்கு பீசு கொண்டாரலைன்னா டியூசனுக்கு வர வேண்டாம்னு சார் சொல்லிட்டார்

ஏழு வயது தங்கராசு அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி வருத்தத்தோடு காலண்டரைப் பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில் அட்வான்சாக இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு எசமான் வேலைக்கு சேரும் போதே அட்வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார்.

அவள் கணவன் குடிகாரன். ஜேப்படித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாதமாகும். ஆனால் வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாகப் போகிறதில்லை. அவனுக்கும் சேர்த்து அவள் தான் செலவு செய்ய வேண்டும். ஒரே மகன் தங்கராசு படிப்பில் கொஞ்சம் மக்கு. டியூசன் போனால் நல்ல மார்க் வாங்குகிறான். போகா விட்டால் எல்லா பாடங்களிலும் நாற்பதைத் தாண்டுவதே கஷ்டம் தான். அவனாவது நன்றாகப் படித்து உருப்பட வேண்டும் என்று அவளும் படாத பாடு படுகிறாள். ஆனால் மொத்த மாதவருமானத்தில் கிட்டத்தட்ட பாதி வீட்டு வாடகைக்கே போய் விடுகிறது. மீதியில் வீட்டு செலவை சமாளிக்க இன்றைய விலைவாசி ஒத்துழைக்க மறுக்கிறது.

ஒன்றாம் தேதி தர வேண்டிய டியூசன் பீசு நூறு ரூபாயை இருபத்தைந்தாம் தேதி வரை தரா விட்டால் அந்த டியூசன் வாத்தியார் தான் என்ன செய்வார் பாவம். அவருக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறதே என்றும் அருக்காணிக்குத் தோன்றியது. அவர் மேல் தப்பு சொல்ல அவளுக்குத் தோன்றவில்லை.

“இந்தப் பாழா போன மனுசன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி ஒவ்வொண்ணுக்கும் நான் கஷ்டப்பட வேண்டியதில்லைஎன்று விரக்தியுடன் வாய் விட்டுச் சொன்னாள்.

தங்கராசு இந்தக் காலக் குழந்தைகளுக்கே உரிய சுட்டிப்புடன் அவளைக் கேட்டான். “நான் நாளைக்கு டியூசன் போகலாமா வேண்டாமா அதை சொல்லு முதல்ல

அருக்காணி பெருமூச்சு விட்டாள். வேறு வழியில்லை. அட்வான்ஸ் தர முடியாது என்று சொன்ன அந்த மூன்றாவது வீட்டுக்கார எசமானைத் தான் ஏதாவது மன்றாடி அட்வான்ஸ் பணம் வாங்கி இவனை நாளைக்கு டியூசனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இரண்டு வருஷமாய் அவர் வீட்டில் வேலை பார்க்கிறாள். இந்த ஒரு தடவையாவது அவர் உபகாரம் செய்தால் நன்றாக இருக்கும். அவரைக் காட்டிலும் அவருடைய மனைவி கொஞ்சம் நல்ல மாதிரி. ஆனால் அந்த அம்மாள் ஊரிற்குப் போயிருக்கிறாள். இப்போது போய் அந்த வீட்டில் பாத்திரம் கழுவி விட்டு வர வேண்டும். எதற்கும் பையனையும் அழைத்துக் கொண்டு போய் கேட்டுப் பார்க்கலாம், பிஞ்சு முகத்தைப் பார்த்தால் அந்த மனிதர் சிறிது இரக்கம் காண்பித்தாலும் காண்பிக்கலாம் என்று அருக்காணிக்குத் தோன்றியது.  மகனையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குக் கிளம்பினாள்.

போகும் போதே தங்கராசு கேட்டான். “அந்த ஆள் தர மாட்டேன்னு சொன்னா என்ன செய்யறது?

“சனியனே. வாயை மூடிட்டு வாடா. போறப்பவே அபசகுனமாய் பேசாதடா

அந்த வீட்டு சொந்தக்காரர் வராந்தாவில் உட்கார்ந்து அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவள் தங்கராசுவைக் கூட்டிக் கொண்டு வந்ததைப் பார்த்தவுடனேயே அவர் முகம் சுளித்தார். “உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது பையனை எல்லாம் கூட்டிகிட்டு வரக் கூடாதுன்னு

இல்லை எசமான். ஒரு ஓரமா சும்மா உக்காந்துக்குவான். குறும்பு செய்ய மாட்டான்.

வேண்டா வெறுப்பாய் அவர் தலையசைத்தார். மகனை வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே சென்று அவனை ஒரு இடத்தில் தரையில் உட்கார வைத்தாள். சமையலறையில் இருந்த பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் இரண்டு காபி தம்ளர்களைக் கழுவப் போட அந்த வீட்டுக்காரர் உள்ளே வந்தார். தனியாகப் பேசக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் அருக்காணி மெல்ல கேட்டாள். “எசமான். ஒரு சின்ன உதவி

“என்ன?

“அட்வான்சா ஒரு நூறு ரூவா குடுத்தீங்கன்னா உதவியா இருக்கும். பையனுக்கு டியூசன் பீசு தரணும்

“ஆமா உன் பையன் படிச்சு பெரிய கலெக்டர் ஆகப் போறான். டியூசன் ஒண்ணு தான் குறைச்சல். நான் முதல்லயே உன் கிட்ட சொல்லி இருக்கேன். அட்வான்சு, கடன்னு எல்லாம் என் கிட்ட கேட்கக் கூடாது, மாசம் முடியாம ஒரு நயா பைசா நான் தர மாட்டேன்னு.....அவர் நிற்காமல் சத்தமாகச் சொல்லிக் கொண்டே போய் விட்டார்.

அருக்காணிக்கு அவர் பேசினது வேதனையாக இருந்தது. இத்தனை பெரிய பங்களாவில் வசிக்கிற அந்த மனிதருக்கு மனம் தான் சிறுத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். எதிர்காலத்தின் மீதிருந்த நம்பிக்கை முழுவதும் அவளுக்கு அவள் மகனை வைத்துத் தானிருந்தது. அதனால் பணம் தராததை விட அவள் மகன் படித்து ஒன்றும் சாதித்து விடப் போவதில்லை என்கிற விதமாய் அவர் சொன்னது அவளுக்குத் தாங்கவில்லை. ஆனால் அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் பாத்திரம் கழுவி முடித்தாள்.

மகனை அழைத்துக் கொண்டு அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள். போகிற வழியில் அவள் கண்களைத் துடைத்துக் கொண்ட போது தங்கராசு கேட்டான்.

“அழறியாம்மா?

“இல்லடா. கண்ணுல தூசி

“நீ எதுக்கும்மா கவலைப்படறே. இதைப் பாத்தியா?என்ற தங்கராசு நூறு ரூபாய் தாள் ஒன்றை அவளிடம் காண்பித்தான்.

அருக்காணி திகைப்புடன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டே கேட்டாள். “இது எங்கடா கிடைச்சுது?

“அந்த வீட்டுல கீழே விழுந்து இருந்துது. அந்த ஆளுக்கு தெரியாம அதை எடுத்து ஜோபுல போட்டுகிட்டேன்

அருக்காணி அந்த இடத்திலேயே மகன் முதுகில் மாறி மாறி அடித்தாள். “இது என்ன திருட்டுப் பழக்கம்? எப்ப இருந்து ஆரம்பிச்சது? அப்பன் புத்தி அப்படியே வந்திருக்கா உனக்கு சனியனே? ஏழையா இருந்தாலும் கவுரமா பொழைக்கணும்னு தானடா இவ்வளவு கஷ்டப்படறேன். என்ன காரியம் செய்திருக்கே!

அப்படியே திரும்பி மகனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றாள். இன்னமும் அந்த வீட்டுக்காரர் அந்த நண்பரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தார். அவளைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் கேட்டார். “என்ன?

“என் மகன் தெரியாத்தனமா தப்பு செய்துட்டான் எசமான். கீழே விழுந்து கிடந்ததாம் இந்த நூறு ரூபா. அதை எடுத்து வச்சுகிட்டான்

அந்த நூறு ரூபாயை அவள் அவரிடம் நீட்டினாள். அவர் தங்கராசுவை சுட்டெரிக்கிற மாதிரி பார்த்துக் கொண்டே அந்த நூறு ரூபாய்த் தாளை வாங்கினார். உன் புருசன் பிக்பாக்கெட்டு, அதனால வேலையிலே சேர்த்துக்க வேண்டாம்னு அன்னைக்கே பல பேரு சொன்னாங்க. இன்னைக்கு உன் பையனும் அதையே செய்திருக்கான்

வார்த்தைகள் சுட்டெரிக்க அருக்காணி துடித்துப் போனாள். அதுவும் முன்பின் தெரியாத ஒரு மனிதர் முன்னால் இப்படி அவமானப்படுத்துகிறாரே என்று அழுகை அழுகையாக வநதது. “என்ன எசமான். குழந்தை ஏதோ தெரியாத்தனமா செய்ததை இப்படி சொல்றீங்க. அதான் அவனுக்குப் புத்தி சொல்லி நான் திருப்பிக் குடுத்துட்டேனில்ல.

அவர் தன் நண்பர் முன்னிலையில் அவள் அப்படிக் கேட்டதைக் கௌரவக் குறைவாக நினைத்தார். கோபத்துடன் சொன்னார். “நீயா கொண்டு வந்து தந்திருக்கலைன்னா உன் வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கும். திருட்டுத்தனம் செய்யலாமாம். நான் சொல்லக் கூடாதாம். இப்படிப்பட்ட ஆள் வேலைக்கு வேண்டாம். நாளையில் இருந்து நீ வேலைக்கு வராதே

அருக்காணி கூனிக் குறுகிப் போனாள். என்ன மனிதரிவர்? ஆனால் ஒரு வீடு இல்லையென்றால் வேலைக்கு ஆயிரம் வீடு என்று எண்ணியவளாக சொன்னாள். “சரி எசமான். நாளையில் இருந்து நான் வேலைக்கு வரலை. இந்த 25 நாள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுத்துடுங்க. போயிடறேன்

வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதைக் கேட்டு அவள் அதிர்ந்து போய் கெஞ்சிக் கூத்தாடுவாள் என்று நினைத்த அவருக்கு அவள் அதை ஏற்றுக் கொண்டு செய்த வேலைக்கு சம்பளம் கேட்பது அவர் கோபத்தை அதிகப்படுத்தியது. “முதலில் என் வீட்டுல என்ன எல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து கணக்கு போடாமல் உனக்கு நயாபைசா தர மாட்டேன்...

மனசாட்சி இல்லாமல் பேசும் அந்த மனிதரை அருக்காணி கண்கலங்க பார்த்தாள்.  அவர் அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தார். அருக்காணி பக்கத்தில் இதை எல்லாம் பார்த்தபடி நின்றிருந்த அவர் நண்பரை நியாயம் கேட்கும் பாவனையில் பார்த்தாள். அவர் ஆழ்ந்த ஆலோசனையுடன் வேறெங்கோ பார்த்தார். ஏழைக்கு யாரும் துணை இல்லை என்ற எண்ணம் அவள் மனதில் மேலோங்கி நின்றது. ஓரிரு நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

திரும்பி வருகிற போது அவள் மனமெல்லாம் ரணமாக இருந்தது. தங்கராசு அழவில்லை. அவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் அவளைப் பார்த்த பார்வை ‘நீ முட்டாள்என்று குற்றம் சாட்டுவது போல தெரிந்தது. அவளுக்கு அதைத் தாங்க முடியவில்லை. அவளுடைய நாணயத்திற்குக் கிடைத்திருக்கிற மரியாதையை மட்டுமே அவள் மகன் எண்ணிப்பார்ப்பது போல் இருந்தது. மனம் வலித்தது.

சிறிது தூரம் அவர்கள் போயிருப்பார்கள். அவர்கள் பக்கம் ஒரு கார் வந்து நின்றது. பயத்துடன் அருக்காணி பார்த்தாள். அந்த வீட்டுக்காரரின் நண்பர் காரில் இருந்து இறங்கினார். அவரைப் பார்க்கவே அவளுக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்து நின்றாள்.

அவர் ஒன்றும் சொல்லாமல் தன் விசிட்டிங் கார்டை நீட்டினார். “பக்கத்து ரோட்டில புதிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்னு வந்திருக்கில்லையா. அது என்னோடது தான். அங்கே இந்த கார்டைக் கொண்டு போய் நாளைக்கு காலைல காண்பி. அப்பவே உனக்கு கண்டிப்பா நல்ல சம்பளத்துல தகுந்த வேலை போட்டுக் கொடுப்பாங்க. நான் சொல்லி வைக்கிறேன்.

அவளால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அந்தக் கார்டை வாங்கியபடியே அவரைத் திகைப்புடன் பார்த்தாள். அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மூன்று மாடிக் கட்டிடம். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அண்ணாந்து பார்த்து இருக்கிறாள். அதிலெல்லாம் ஒரு வேலை கிடைக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அவர் அவளைப் பார்த்துக் கனிவாகச் சொன்னார். நாணயமான ஆள்கள் வேலைக்கு கிடைக்கிறது இப்பவெல்லாம் கஷ்டம்மா. ஒரு நல்ல ஆளைக் கண்டுபிடிக்கறதுக்கு பத்து பேரை வேலைக்கு சேர்க்க வேண்டி இருக்கு. பல ஊர்கள்ல தொழில் செய்கிற என்னோட அனுபவம் இது. பணத்தேவை இருக்கறப்பவும், எடுத்தது மகன்னும் பார்க்காமல் அந்தப் பணத்தோட திரும்பி வந்தே பாரு, உன்னை மாதிரி ஒரு வேலையாள் கிடைக்கணும்னா அது ஆயிரத்துல ஒண்ணு தேர்றது கூட கஷ்டம். நாளைக்கு கண்டிப்பா வா”.  சொன்னவர் ஒரு சில நூறு ரூபாய்களை எண்ணிப்பார்க்காமல் சட்டைப்பையில் இருந்து எடுத்து அவள் கையில் திணித்தார். “ஏதோ அவசரத் தேவைன்னு சொன்னாயே. அதுக்கு வச்சுக்கோ

அவள் கண்கலங்கி கை கூப்பி நிற்கையில் அவர் மறுபடி காரில் ஏறிப் போய் விட்டார். எதிர்பாராமல் மிக நல்ல வேலை கிடைத்ததை விட மகன் நாணயத்தை துச்சமாக நினைக்கப் போன தருணத்தில் அவர் கடவுள் போல வந்து நாணயத்திற்கு உள்ள மதிப்பை உணர்த்தி விட்டுப் போனது அவளுக்கு அதிக நிறைவாக இருந்தது.


-என்.கணேசன்
நன்றி: தினமலர்-வாரமலர்


Thursday, July 26, 2012

பரம(ன்) ரகசியம்! - 2


                          
அந்தக் கொலைகாரனிடம் போனில் தெரிவித்தபடி ஆட்கள் மூன்று பேர் இரண்டு கார்களில் சொன்ன நேரத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த போது அவன் தோட்டத்தின் முன் இரும்புக் கதவு பாதி திறந்து கிடந்தது. மறுபாதிக் கதவின் கீழ்க்கம்பிகளில் ஒன்றைப் பிடித்தபடி அவன் கீழே உட்கார்ந்திருந்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தால் கூட இப்படியா தெருவிளக்கின் ஒளியில் அலட்சியமாக உட்கார்ந்திருப்பது என்று நினைத்தவனாய் முதல் காரில் இருந்து இறங்கியவன் அவனை நெருங்கினான்.

கார்கள் வந்து நின்ற சத்தம் கூட அந்தக் கொலைகாரன் கவனத்தைத் திருப்பவில்லை.  அதனால் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த முதல் கார் ஆசாமி குனிந்து அந்தக் கொலைகாரனை உற்றுப்பார்த்தான். பின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். மூச்சில்லை. அப்போது தான் அந்தக் கொலைகாரன் இறந்து போயிருந்தது உறைத்தது. திகைப்புடன் அவனை முதல் கார் ஆசாமி கூர்ந்து பார்த்தான். உடலில் எந்தக் காயமும் இல்லை. முகத்தில் மட்டும் எதையோ பார்த்து பயந்த பீதி பிரதானமாகத் தெரிந்தது. ஏதோ அதிர்ச்சியில் இறந்து போயிருக்க வேண்டும்....

இரண்டாவது காரில் இருந்து ஒருவன் தான் இறங்கி வந்தான். “என்னாச்சு

“செத்துட்டான்

“எப்படி?

“தெரியல. முகத்தப் பார்த்தா ஏதோ பயந்து போன மாதிரி தெரியுது

“பயமா, இவனுக்கா....என்று சொன்ன இரண்டாவது கார் ஆசாமி அருகில் வந்து இறந்தவனை உற்றுப்பார்த்தான். அவன் சொன்னது உண்மை என்று தெரிந்தது. தேர்ந்தெடுக்கும் போதே பயமோ, இரக்கமோ, தயக்கமோ இல்லாத ஆளாகப்பார்த்துத் தான் அவர்கள் அவனைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட அவனையே இந்தக் கோலத்தில் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருகணம் இரண்டாவது கார் ஆசாமி பேச்சிழந்து போனான்.

“என்ன செய்யலாம்?முதல் கார் ஆசாமி கேட்டான்.

ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தாலும், இந்த சூழ்நிலையை சிறிதும் எதிர்பாராமலிருந்தாலும் கூட இரண்டாவது கார் ஆசாமி தன்னை உடனடியாக சுதாரித்துக் கொண்டான். ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டவன் அமைதியாகச் சொன்னான். “முதலில் இவனுக்கு நாம் கொடுத்த செல்லை எடு

முதல் கார் ஆசாமி இறந்தவன் சட்டைப்பையில் வைத்திருந்த இரண்டு செல் போன்களை வெளியே எடுத்தான். ஒன்று கொலைகாரனுடையது. இன்னொன்று அவர்கள் அவனுக்குக் கொடுத்தது.

“நம் செல்போனில் வேறு யாரிடமாவது எங்காவது பேசியிருக்கிறானான்னு பார்

முதல் கார் ஆசாமி தாங்கள் கொடுத்திருந்த செல்போனில் ஆராய்ந்து விட்டுச் சொன்னான். “நம்மிடம் மட்டும் தான் பேசியிருக்கான். வேற எந்தக் காலும் இதுக்கும் வரல. இவனை என்ன பண்ணறது?

இவனை சுவரின் மறைவுக்கு இழுத்து விடு. வெளியே இருந்து பார்த்தால் தெரியாதபடி இருந்தால் போதும்

கவனமாக பிணத்தை சுவர்ப்பக்கம் அவன் இழுத்துப் போட்ட பிறகு இரண்டாம் கார் ஆசாமி சொன்னான். “போய் உள்ளே என்ன நிலவரம்னு பார்க்கலாம் வா

அவர்கள் இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தார்கள்.  நடக்கும் போது முதல் கார் ஆசாமி கேட்டான். “அவன் பயத்துலயே செத்திருப்பானோ? என்ன ஆகியிருந்திருக்கும்?

தெரியல. எனக்கு சந்தேகம், நாம சொன்னதையும் மீறி அந்த பூஜையறைக்குள்ளே நுழைஞ்சிருக்கலாம். ஏதாவது செய்திருக்கலாம்.....

“அது அவ்வளவு அபாயமானதா?

இரண்டாம் கார் ஆசாமி பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் வீட்டை எட்டி விட்டிருந்தார்கள். சர்வ ஜாக்கிரதையுடன் வாசலிலேயே நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். பத்மாசனத்தோடே கவிழ்ந்திருந்த முதியவர் பிணம் அவர்களை வெறித்துப் பார்த்தது. முகத்தில் இரத்த வரிகள் இருந்தாலும் அவர் முகத்தில் இருந்த அமைதியையும் அவரைக் கொன்றவன் முகத்தில் இருந்த பீதியையும் ஒப்பிடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை....

“இதென்ன இந்த ஆள் பத்மாசனத்துலயே இருக்கார். இது இயல்பா தெரியலயே... முதல் கார் ஆசாமிக்குத் தன் திகைப்பை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

“உன்னால கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க முடியுமா?என்று குரலை உயர்த்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்ன இரண்டாம் கார் ஆசாமி ஹாலை ஆராய்ந்தான். கிழவரின் பிணத்தைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவில்லை.

உள்ளே அவன் நுழைந்தான். படபடக்கும் இதயத்துடன் பூஜையறையைப் பார்த்தான். சிவலிங்கம் இன்னும் அங்கேயே இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் அவன். அவனைத் தொடர்ந்து முதல் கார் ஆசாமியும் உள்ளே நுழைந்தான்.

இரண்டாம் கார் ஆசாமி எச்சரித்தான். “எதையும் தொட்டுடாதே. கவனமா இரு

முதல் கார் ஆசாமி தலையசைத்தான். இருவரும் மெல்ல பூஜையறைக்கு இரண்டடி தள்ளியே நின்று பூஜையறையை நோட்டமிட்டார்கள். பூஜையறையில் திருநீறு டப்பா கவிழ்ந்து திருநீறு தரையில் கொட்டிக் கிடந்தது. ஹாலின் விளக்கொளியில் அதற்கு மேல் பூஜையறையில் வேறு அசாதாரணமானதாக எதுவும் தெரியவில்லை.

இரண்டாம் கார் ஆசாமி தன் கைக்குட்டையை எடுத்து அதைப்பிடித்தபடி ஹாலில் இருந்த பூஜையறை ஸ்விட்ச்சைப் போட்டான். ஓரடி தூரத்தில் இருந்தே பூஜையறையை மேலும் ஆராய்ந்தான். அப்போது தான் பூஜையறையின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேவார, திருவாசகப் புத்தகங்கள் சரிந்து கிடந்தது தெரிந்தது.

“முட்டாள்... முட்டாள்.... அவன் உள்ளே போயிருக்கிறான் இரண்டாம் கார் ஆசாமி ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட அவன் அடுத்தவனிடம் சொன்னான். “அவனை வரச் சொல்...

முதல் கார் ஆசாமி அவசரமாகப் போனான். வெளியே இருந்த முதல் காரின் பின் கதவைத் திறந்து அங்கு அமர்ந்திருந்தவனை “வாங்கஎன்றான்.

இடுப்பில் ஈரத்துண்டை கச்சை கட்டிக் கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான இளைஞன் காரில் இருந்து இறங்கினான். அவன் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் இருந்தான். அவன் நெற்றியிலும், கைகளிலும், புஜங்களிலும், நெஞ்சிலும் திருநீறு பூசி இருந்தான். அவன் வாய் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

இருவரும் உள்ளே போனார்கள். அந்த இளைஞன் அக்கம் பக்கம் பார்க்காமல் நேர் பார்வையுடன் சீரான வேகத்தில் சென்றான். வீட்டினுள்ளே நுழையும் போது முதியவரின் பிணத்தைப் பார்க்க நேர்ந்த போது மட்டும் அவன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவனையும் அந்த விலகாத பத்மாசனம் திகைப்பை அளித்திருக்க வேண்டும்.

தாமதமாவதை சகிக்க முடியாத இரண்டாம் கார் ஆசாமி அவனுக்கு பூஜையறையைக் கை நீட்டி காண்பித்தான். அந்த இளைஞன் திகைப்பில் இருந்து மீண்டு பூஜையறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தான். மந்திரங்களை உச்சரித்தபடியே அந்த சிலையை அவன் பயபக்தியுடன் தொட்டு வணங்கினான். ஏதோ ஒரு லேசான மின் அதிர்ச்சியை உணர்ந்தது போல அவனுக்கு உடல் சிலிர்த்தது.

அதைக் கவனித்த முதல் கார் ஆசாமி “என்ன?என்று சற்றே பயத்துடன் கேட்டான்.

அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை. இரண்டாம் கார் ஆசாமி தன் சகாவிடம் அவசரமாய் தாழ்ந்த குரலில் எச்சரித்தான். “அவன் கவனம் இப்போது எதிலும் திரும்பக்கூடாது. நீ எதுவும் கேட்காதே....பேசாமலிரு

முதல் கார் ஆசாமி அதற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.

அந்த இளைஞன் கை கூப்பி ஒரு முறை வணங்கி விட்டு அந்த சிவலிங்கத்தைத் தூக்கினான். அந்த சிவலிங்கம் மிக அதிக கனம் இல்லை. சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தான் இருக்கும். அதைத் தூக்கிக் கொண்டு அந்த இளைஞன் வெளியே வந்தான். அவன் உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தன.

அவன் வேகமாக சிவலிங்கத்துடன் வெளியே செல்ல மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் தன் கையில் இருக்கும் சிவலிங்கம் கனத்துக் கொண்டே போவது போல் உணர்ந்தான். அவன் ஆரம்பத்திலேயே எச்சரிக்கப்பட்டிருந்தான். அந்த சிவலிங்கம் இங்கு வந்து சேர்வதற்குள் நீ எதிர்பாராத எத்தனையோ நடக்கலாம். சிவலிங்கம் உன் கையில் இருக்கும் போது பிரளயமே ஆனாலும் சரி, இந்த மந்திரத்தை சொல்வதை மட்டும் நீ நிறுத்தி விடக்கூடாது. இது தான் உன் பாதுகாப்பு கவசம். அதே போல சிவலிங்கத்தைக் கீழே போட்டு விடவும் கூடாது....

அந்த நள்ளிரவுக் குளிரிலும் அந்த இளைஞனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சிவலிங்கம் அநியாயத்திற்கு எடை கூடிக்கொண்டு போனது. ஏதோ ஒரு அசௌகரியத்தை உடலெல்லாம் அவன் உணர்ந்தான். முன்பே அறிவுறுத்தப்பட்டபடி அவன் அந்த மந்திரத்தை மட்டும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, காரை வந்தடைந்தான்.

முதல் காரின் பின் சீட்டில் முன்பே புதிய பட்டுத்துணி ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது.  அதில் மிகக் கவனமாய் அந்த சிவலிங்கத்தை வைத்து விட்டு அதன் அருகில் அந்த இளைஞன் தானும் அமர்ந்தான். இறக்கி வைத்த பின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கார் வேகமாகக் கிளம்பியது.

முதல் காரைத் தொடர்ந்தே இரண்டாவது காரும் வேகமாகத் தொடர்ந்தது. இரண்டாவது கார் ஆசாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டான். வந்த வேலை நன்றாகவே முடிந்து விட்டது. அந்தக் கொலைகாரன் தான் தேவை இல்லாமல் உயிரை விட்டு விட்டான்.... அவன் எப்படி இறந்தான்? பயமே அறிந்திராத அவன் எதைப்பார்த்து பயந்தான்? கிழவரைக் கொன்று விட்டு தெரிவித்த போது கூட அவன் சாதாரணமாகத் தானே இருந்தான்! பிறகு ஏதோ ஒரு உந்துதலில் அவன் பூஜையறைக்குள் நுழைந்திருக்க வேண்டும். பின் என்ன ஆகியிருந்திருக்கும்?... மனதின் நீண்ட கேள்விகள் செல் போன் சத்தத்தில் அறுபட்டன. செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ

முதல் கார் ஆசாமி தான் பேசினான். “ஏ.சி போட்டுக்கூட இவனுக்கு அதிகமா வியர்க்குது. ஏதோ ஜுரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இவ்வளவு நேரமா மந்திரத்தை மெல்ல உச்சரிச்சிட்டு இருந்தவன் சத்தமாய் சொல்ல ஆரம்பிச்சிருக்கான்.  ஏதோ பைத்தியம் பிடிச்சிட்ட மாதிரி தோணுது. என்ன செய்யறது?அவன் குரலில் பயம் தொனித்தது.

இரண்டாம் கார் ஆசாமி காதில் அந்த இளைஞன் சத்தமாகச் சொல்லும் மந்திரம் நன்றாகவே கேட்டது. இரண்டாம் கார் ஆசாமி அமைதியாகச் சொன்னான். “இதுல நாம் செய்யறதுக்கு எதுவுமில்லை. சீக்கிரமா அந்த சிலையை அங்கே சேர்த்திட்டா போதும். மீதியை அவர் பார்த்துக்குவார். நீ கண்டுக்காதே

ஆனால் முதல் கார் ஆசாமிக்கு அப்படி இருக்க முடியவில்லை. நடக்கிற எதுவுமே இயல்பானதாக இல்லை.... ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.


(தொடரும்)


- என்.கணேசன்


Monday, July 23, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்-2


  
 • காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
  
  * அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


 • ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.

 • சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.

 • இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.

 • வாய் நல்லதானால் ஊர் நல்லது.

 • கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.

 • காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.

 • மயிர் சுட்டுக் கரியாகாது.

 • ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.

 • விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)

 • திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)

 • பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)

 • ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.

 • ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.

 • ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

 • தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.

 • அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.

 • அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

 • தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.

 • எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.

 • வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.

- தொகுப்பு: என்.கணேசன்

Thursday, July 19, 2012

பரம(ன்) ரகசியம்! - 1

புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு.  சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரையும், முன்னால் இருந்த பெரிய இரும்புக் கதவையும் அவன் ஒருவித அலட்சியத்துடன் ஆராய்ந்தான். இரும்புக் கதவை ஒட்டிய சுவரில் ஒட்டியிருந்த கரும்பலகையில் சர்வம் சிவமயம் என்ற வாசகம் கரும்பலகையில் தங்க எழுத்துகளில் மின்னியது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. உள்ளே நாய்கள் இல்லை என்ற தகவலை அவனுக்கு அந்த வேலையைக் கொடுத்தவர்கள் முன்பே சொல்லி இருந்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் அனாயாசமாக அந்த இரும்புக் கேட்டில் ஏறி உள்ளே குதித்தான்.

வீட்டினுள்ளே அந்த நேரத்திலும் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும் பயப்படவும் இல்லை. அவன் தன் சிறிய வயதில் இருந்து அறியாத ஒரு உணர்ச்சி பயம் தான். பன்னிரண்டு வயதில் திருடவும், பதினேழு வயதில் கொலை செய்யவும் ஆரம்பித்தவன் அவன். எத்தனை கொள்ளை அடித்திருக்கிறான், எத்தனை கொலை செய்திருக்கிறான் என்ற முழுக்கணக்கை அவன் வைத்திருக்கவில்லை. போலீசாரிடமும் அதன் முழுக்கணக்கு இல்லை. அத்தனை செய்த போதும் சரி, அதில் சிலவற்றிற்காக பிடிபட்ட போதும் சரி அவன் பயத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.

ஒரு அமானுஷ்ய அமைதியைத் துளைத்துக் கொண்டெழுந்த சுவர்க்கோழியின் சத்தம் தவிர அந்த இடத்தில் வேறெந்த ஒலியும் இல்லை. அவன் சத்தமில்லாமல் வீட்டை நோக்கி முன்னேறினான்.  வீட்டை முன்பே விவரித்திருந்தார்கள். ஒரு ஹால், படுக்கையறை, பூஜையறை, சமையலறை,  குளியலறை, கழிப்பறை கொண்டது அந்த வீடு. வீட்டின் முன் கதவு மிகப்பழையது, மரத்தினாலானது, பழைய பலவீனமான தாழ்ப்பாள் கொண்டது, அதனால் உள்ளே நுழைவது அவனுக்கு அத்தனை கஷ்டமான காரியம் அல்ல என்று சொல்லி இருந்தார்கள்.

ஹாலில் தான் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஹால் ஜன்னல் திறந்து தான் இருந்தது. மறைவாக நின்று கொண்டு உள்ளே பார்த்தான். முதியவர் ஒருவர் ஹாலில் ஜன்னலுக்கு நேரெதிரில் இருந்த பூஜையறையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். பூஜையறையில் இரண்டு அகல்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பூஜையறையில் ஒரு சிவலிங்கத்தைத் தவிர வேறு எந்த விக்கிரகமோ, படங்களோ இல்லாதது விளக்கொளியில் தெரிந்தது.

இந்த சிவலிங்கம் தான் அவர்கள் குறி. அந்த சிவலிங்கத்தை அவன் உற்றுப்பார்த்தான். சாதாரண கல் லிங்கம் தான். இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு உடல் வலிமையும், மன தைரியமும் இருந்த அளவுக்கு அறிவுகூர்மை போதாது. அதனால் அவன் அதைத் தெரிந்து கொள்ளவும் முனையவில்லை.

அந்த முதியவர் மிக ஒடிசலாக இருந்தார். அவரைக் கொல்வது ஒரு பூச்சியை நசுக்குவது போலத் தான் அவனுக்கு. இந்த வேலையை முடிக்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது பேரம் பேசுவார்கள் என்று நினைத்து இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டான். அவர்கள் மறுபேச்சு பேசாமல் ஒத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. மூன்று லட்சமாகக் கேட்டிருக்கலாமோ?

ஆனால் பண விஷயத்தில் பேரம் பேசாதவர்கள், முன்னதாகவே ஒரு லட்ச ரூபாயையும் முன்பணமாகக் கொடுத்தவர்கள், மற்ற சில நிபந்தனைகள் விதித்தார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த முதியவரை பூஜையறையில் கொல்லக் கூடாது, எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் அந்த பூஜையறைக்குள் நுழையவோ,  சிவலிங்கத்தைத் தொடவோ கூடாது என்று உறுதியாகச் சொல்லி இருந்தார்கள். அவன் அறிவுகூர்மை பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களோ என்னவோ, சொன்னதை அவன் வாயால் திரும்பச் சொல்ல வைத்துக் கேட்டார்கள். அந்த லிங்கத்தில் ஏதாவது புதையல் இருக்குமோ? தங்கம் வைரம் போன்றவை உள்ளே வைத்து மூடப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்கு இப்போது வந்தது. அப்படி இருந்தால் கேட்ட இரண்டு லட்சம் குறைவு தான்.

கிழவர் அந்த பூஜையறையில் அமர்ந்திருப்பது இப்போது அவனுக்கு அனுகூலமாக இல்லை. முன்னால் சிவலிங்கம் சிலையாக இருக்க, முதியவரும் இன்னொரு சிலை போல அசைவில்லாமல் உட்கார்ந்திருந்தார். மனதுக்குள்ளே கிழவரிடம் சொன்னான். “யோவ் சாமி கும்பிட்டது போதும்யா. வெளியே வாய்யா

அவன் வாய் விட்டுச் சொல்லி அதைக் கேட்டது போல் முதியவர் கண்களைத் திறந்து அவனிருந்த ஜன்னல் பக்கம் பார்த்தார். அவனுக்கு திக்கென்றது. அவனை அறியாமல் மயிர்க்கூச்செரிந்தது. ஒருசில வினாடிகள் ஹால் ஜன்னலைப் பார்த்தார் அவர். கண்டிப்பாக இருட்டில் நின்றிருந்த அவனை அவர் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. என்றாலும் அவர் பார்வை அவனைப் பார்ப்பதாக அவன் உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு பயம் வந்து விடவில்லை. அவனைப்பார்த்து மற்றவர்கள் தான் பயப்பட வேண்டுமே ஒழிய அவன் யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கிழவர் முகத்தில் லேசானதொரு புன்னகை அரும்பி மறைந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவர் அமைதியாக எழுந்து நின்று சாஷ்டாங்கமாக விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார். வணங்கி எழுந்து அவர் திரும்பிய போது அவர் முகத்தில் அசாதாரணமானதொரு சாந்தம் தெரிந்தது. அவர் பூஜையறையை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் பத்மாசனத்தில் அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடியே ஹாலில் அமர்ந்தார்.

அவன் உள்ளுணர்வு சொன்னது, அவன் அங்கே இருப்பது அவருக்குத் தெரியும் என்று. அவனுக்கு சந்தேகம் வந்தது. வீட்டுக்குள் வேறு யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ? அதனால் தான் அவர் அவ்வளவு தைரியமாக அப்படி உட்கார்கிறாரோ? மெல்ல வீட்டை சத்தமில்லாமல் ஒரு சுற்று சுற்றி வந்தான். எல்லா ஜன்னல்களும் திறந்து தான் இருந்தன. அதன் வழியாக உள்ளே நோட்டமிட்டான். இருட்டில் பார்த்துப் பழகிய அவன் கண்களுக்கு உள்ளே வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபடி அவன் பழைய இடத்திற்கே வந்து ஹால் ஜன்னல் வழியாக அவரைப் பார்த்தான். அவர் அதே இடத்தில் பத்மாசனத்திலேயே இன்னமும் அமர்ந்திருந்தார். பூஜையறையில் அகல்விளக்குகள் அணைந்து போயிருந்தன.

இனி தாமதிப்பது வீண் என்று எண்ணியவனாக அவன் வீட்டின் கதவருகே வந்தான். கதவு லேசாகத் திறந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். அவனுக்கு இது எல்லாம் இயல்பாகத் தெரியவில்லை. அவனுக்குப் புரியாத ஏதோ ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக அங்கே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் மெல்ல கதவைத் திறந்து ஒரு நிமிடம் தாமதித்தான். பின் திடீரென்று உள்ளே பாய்ந்தான். அவனை ஆக்கிரமிக்க அங்கே யாரும் இல்லை.

அவன் பாய்ந்து வந்த சத்தம் அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் தியானம் கலையவும் இல்லை. அவனுக்கு அவர் நடவடிக்கை திகைப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. என்ன இழவுடா இது. இந்த ஆள் மனுசன் தானா?என்று தனக்குள்ளே அவன் கேட்டுக் கொண்டான்.  உடனடியாக வேலையை முடித்து விட்டு இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது.

அதற்குப் பின் அவன் தயங்கவில்லை. மின்னல் வேகத்தில் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்திருந்த அவர் கழுத்தை அசுர பலத்துடன் நெரித்தான். அவர் உடல் துடித்தாலும் அவரது பத்மாசனம் கலையவில்லை. அவர் அவனைத் தடுக்கவோ, போராடவோ இல்லை. அவர் உயிர் பிரியும் வரை அவன் தன் பிடியைத் தளர்த்தவில்லை.  அவர் உயிர் பிரிந்த அந்த கணத்தில் பூஜையறையில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது. அவன் திகைத்துப் போனான். ஒளி தோன்றியது பூஜை அறையின் எந்த விளக்காலும் அல்ல, அந்த சிவலிங்கத்தில் தான் என்று ஏதோ ஒரு உணர்வு வந்து போனது. யாரோ சிவலிங்கத்தில் வெள்ளை ஒளியை பாய்ச்சியது போல, ஒரு மின்னல் ஒளி அந்த சிவலிங்கத்தில் வந்து போனது போல, அந்தக் கிழவரின் உயிரே ஒளியாகி அந்த சிவலிங்கத்தில் சேர்ந்து மறைந்தது போல... அதே நேரத்தில் அவனை வந்து ஏதோ ஒரு சக்தி தீண்டியதைப் போலவும் உணர்ந்தான். அது என்ன என்று அவனுக்கு விளக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் ஒரு அசௌகரியத்தை உணர்ந்தான்.

முதல் முறையாக இனம் புரியாத ஒரு பயம் அவனுள் எட்டிப்பார்த்தது. யோசித்துப் பார்க்கையில் அந்த முதியவர் சாகத் தயாராக இருந்தது போலவும் அதற்காகக் காத்துக் கொண்டு இருந்தது போலவும் அவனுக்குத் தோன்றியது.  கடவுளை நம்பாத அவனுக்கு, அமானுஷ்யங்களையும் நம்பாத அவனுக்கு, சிவலிங்கத்தில் வந்து போன ஒளி கண்டிப்பாக வெளியே இருந்து யாரோ டார்ச் மூலம் பாய்ச்சியதாகவோ, அல்லது ஃப்ளாஷ் காமிராவில் படம் எடுத்ததாகவோ தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும்ப வேகமாக வெளியே ஓடி வந்து வீட்டை சுற்றிப் பார்த்தான். யாரும் இல்லை. தோட்டத்தில் யாராவது ஒளிந்து இருக்கலாமோ? அவனுக்கு இந்த வேலை தந்தவர்களில் யாராவது ஒருவரோ, அவர்கள் அனுப்பிய ஆள் யாராவதோ  இருக்கலாமோ என்றெல்லாம் சந்தேகம் வந்தது.  ஆனால் அதே நேரத்தில் அவனை வந்து தீண்டியதாக அவன்  உணர்ந்த சக்தி என்ன? அது பிரமையோ?

அவனுக்கு குழப்பமாக இருந்தது. தலை லேசாக வலித்தது. அவர்கள் ஒரு மொபைல் போனைத் தந்து அதில் ஒரு எண்ணிற்கு வேலை முடிந்தவுடன் அழைக்கச் சொல்லி இருந்தார்கள். அவன் வெளியே வந்து அவர்கள் சொன்னபடியே அந்த மொபைல் போனை எடுத்து அந்த எண்ணிற்கு அழைத்துச் சொன்னான்.

“கிழவனைக் கொன்னாச்சு

“பூஜையறைக்கு வெளிய தானே?

“ஆமா

“நீ பூஜையறைக்குள்ளே போகலை அல்லவா?

“போகலை

“அந்த சிவலிங்கத்தை தொடலை அல்லவா?

அவனுக்குக் கோபம் வந்தது. “உள்ளே போகாம எப்படி அதைத் தொட முடியும்? என் கை என்ன பத்தடி நீளமா

அந்தக் கோபம் தான் அவன் உண்மையைச் சொல்கிறான் என்பதை அந்த மனிதருக்கு உணர்த்தியது போல இருந்தது. அமைதியாகச் சொன்னார். “அங்கேயே இரு. கால் மணி நேரத்தில் என் ஆட்கள் அங்கே வந்து விடுவார்கள்

அவன் காத்திருந்தான். காத்திருந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் மிக மிக மந்தமாக நகர்ந்தது போல இருந்தது.  வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தான். முதியவரின் உடல் சரிந்து கிடந்தாலும் கால் பத்மாசனத்திலேயே இருந்தது இயல்பில்லாத ஒரு விஷயமாகப் பட்டது. அப்போது தான் அந்தக் கிழவரின் முகம் பார்த்தான். மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்திருந்தாலும் அந்த முகத்தில் வலியின் சுவடு கொஞ்சம் கூட இல்லை. மாறாக பேரமைதியுடன் அந்த முகம் தெரிந்தது. உள்ளே நுழைந்து ஹாலில் இருந்தபடியே அந்த சிவலிங்கத்தைக் கவனித்தான். சிவலிங்கம் சாதாரணமாகத் தான் தெரிந்தது.

அதைத் தொடக்கூடாது, பூஜையறைக்குள் நுழையக் கூடாது என்று திரும்பத் திரும்ப அவர்கள் சொல்லி இருந்ததும், இப்போதும் கூட அதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதும் ஏதோ ஒரு ரகசியம் இந்த சிவலிங்கத்தைச் சூழ்ந்து இருப்பதை அவனுக்கு உணர்த்தியது. சிறு வயதிலிருந்தே செய்யாதே என்பதை செய்து பழகியவன் அவன்.... அவன் கடிகாரத்தைப் பார்த்தான். அவர் சொன்ன கணக்குப்படி அவர்கள் வர இன்னும் பன்னிரண்டு நிமிடங்கள் இருக்கின்றன. அதற்குள் அந்த சிவலிங்கத்தில் அப்படி என்ன தான் ரகசியம் புதைந்து இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் வலிமையாக அவனுக்குள்ளே எழ அவன் அந்தப் பூஜையறைக்குள் நுழைந்தான்.


(தொடரும்)   

- என்.கணேசன்


(பரம(ன்) இரகசியம் நாவல் புத்தக வடிவில் வெளியாகி பரபரப்பான விற்பனையில் உள்ளது. கையில் புத்தகத்தை வைத்துப் படிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனி அல்லவா? நாவலை வாங்கிப் படிக்க விருப்பம் உள்ளவர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்)

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGVதற்போது முதலிரண்டு பதிப்புகள் முடிந்து மூன்றாம் பதிப்பு வெளியாகியுள்ளது.  


Monday, July 16, 2012

மனதில் சுமக்கும் கனங்கள்ரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்? என்று கேட்டார்.

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?

“ஆமாம்என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகாது மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்

“கை வலிக்கும்என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்

தாங்க முடியாத வலி ஏற்படும்,  “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”,  ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்
என்று பதில்கள் வந்தன.

அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்

இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ஐயோ இதுவுமாஎன்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!

- என்.கணேசன்   

Friday, July 13, 2012

என் புதிய நாவல் - பரம(ன்) ரகசியம்


அன்பு வாசக நண்பர்களுக்கு,

வணக்கம்.

என்னுடைய மூன்றாவது நாவலான “அமானுஷ்யன்ஐத் தொடர்ந்து அடுத்த நாவல் ஒன்றை எழுதும் படி பல வாசகர்கள் தொடர்ந்து என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி என் வலைப்பூவிலேயே பரம(ன்) ரகசியம் என்ற சுவாரசியமான நாவலைத் தொடங்குவதாக உத்தேசித்து இருக்கிறேன்.

அமானுஷ்யம், அறிவியல், ஆழ்மனசக்தி, ஆன்மிகம், நாத்திகம், பிரபஞ்ச சக்தி ஆகியவற்றோடு குடும்பம், காதல், நினைவில் நிற்கக் கூடிய வித்தியாசமான கதாபாத்திரங்களை இணைத்து சஸ்பென்ஸ், விறுவிறுப்பும் கலந்ததாக இந்த நாவல் இருக்கும்.

என்னுடைய வலைப்பூவில் 400 பதிவுகளுக்கு மேல் இருந்தும் பயனற்ற ஒரு பதிவும் இருந்ததில்லை. பல நேரங்களில் எத்தனையோ கட்டுரைகளில் விளக்க முடியாத விஷயங்களை கதை மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் விளக்க முடியும். அப்படி விளங்குவது மனதிலும் நிரந்தரமாகத் தங்கும் என்ற காரணத்தினாலேயே இந்த வலைப்பூவிலேயே இந்த நாவலை எழுதத் தீர்மானித்தேன். ஜனரஞ்சக விஷயங்கள் மாத்திரமே அல்லாமல் ஆழ்மனதின் அற்புத சக்திகளிலும், மற்ற ஆன்மிகக் கட்டுரைகளிலும் சொன்ன சிலவற்றையும் அவற்றில் சொல்லாத பலவற்றையும் சேர்த்து நான் தரவிருக்கும் இத்தொடர் அடுத்த வியாழன் (ஜுலை 19, 2012) முதல் ஆரம்பமாகும். பின் ஒவ்வொரு வியாழனும் ஒவ்வொரு அத்தியாயமாக இந்தத் தொடர்கதை இந்த வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு வாரமும் அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் விதமாகவும், சிந்தனைக்கு விருந்தாகவும், இதயத்தில் நிற்பதாகவும், அனைத்து தரப்பினருக்கும் சிறந்த வாசிப்பனுபவமாகவும் இந்த நாவல் இருக்கும் என்று  உறுதியளிக்கிறேன்.

என் மற்ற படைப்புகள் வழக்கம் போல ஒவ்வொரு திங்கள் அன்றும் பதிவு செய்யப்படும்.

வழக்கம் போல உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, July 9, 2012

ரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன?


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 17
ரகசிய தீட்சை பெற தகுதிகள் என்ன?

சிரிஸ் கோயில்களில் மட்டுமல்லாமல் பழங்கால எகிப்தில் வேறுசில கோயில்களிலும் ரகசிய தீட்சை முறைகள் இருந்தன. அங்கும் தகுதி இருப்பதாக நினைப்பவர்களுக்கு மட்டுமே ரகசிய தீட்சை தரப்பட்டது. மதம், மொழி, இனம், சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டே, தனிமனித பக்குவத்தைப் பொறுத்தே, தகுதி நிர்ணயிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் ரகசிய தீட்சைக்காகச் சென்ற போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரகசிய தீட்சை பெற்றவரும், தத்துவாசிரியரும், கணித மேதையுமான பித்தகோரஸ் அக்காலத்தில் சிறப்பு கல்வி பயிற்றுவிக்க ஒரு அகாடமி நடத்தி வந்தார். அக்காலத்தில் அங்கு கல்வி பயில தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயமாக கருதப்பட்டது.  பலர் சென்றாலும் சிலர் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டார். காரணம் கேட்ட போது ஒரு முறை பித்தகோரஸ் சொன்னார். “எல்லா மரங்களும் சிற்ப வேலைக்குப் பொருத்தமாக இருக்காது”.
அவர் சொன்னது அந்த சிறப்புக்கல்வியை விட ரகசிய தீட்சைக்கு மிகவும் பொருத்தமான பதிலாக இருந்ததாக பால் ப்ரண்டன் நினைத்தார்.

ஒரு ரகசிய தீட்சை முறையில் தீட்சைக்கு பெறுவதற்கு முன் கடைசியாக சொல்லி அனுப்பும் வாக்கியம் இதுவாக இருந்தது. “இது வரை அனுபவித்திராத ஒரு புதிய அனுபவத்தைப் பெறப் போகிறாய். மனிதனாக இருந்தவன் தெய்வமாக மாறப் போகிறாய். போய் வா”.

பல ரகசிய தீட்சை முறைகளில் தெய்வீக நிலைக்கு முன் சில அபூர்வ சக்திகளைத் தந்து பயங்கரமான மோசமான நிலைகளைக் காண வைத்தனர் என்றும் அதில் தளர்ந்து விடாமல் தாக்குப் பிடிப்பவர்களையே அடுத்த தெய்வீக நிலைக்குத் தேர்வு செய்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அது போன்ற சில பயங்கரமான அனுபவங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலை கூட இருக்கும் என்றும் சரியான தகுதி இல்லாத நபர்கள் நிலை குலைந்து போகவோ, பைத்தியமாக மாறி விடவோ, இறக்கவோ கூட வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார்கள். அந்த அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்தும் திறமையோ, தகுதியோ இல்லாதவர்களுக்கு அதைக் கற்றுத் தந்தால் கண்டிப்பாக அந்த மனிதர்களுக்கும், மற்றவர்களுக்கும் நல்லது நடக்காது என்கிற ஞானம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது.

(இதையெல்லாம் படிக்கையில் மிக உறுதியும், வலிமையும் உள்ள மனிதர்கள் தான் இந்த தீட்சை முறைகளைப் பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது. ஞானமல்லாத வேறு நோக்கத்தோடு செல்பவர்கள், பலவீனர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்க்ள் என்பதால் கிடைக்கும் ஞானம் கலப்படமில்லாமல் தூய்மையாகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதில் தேர்ந்த பின் தான் இறைநிலையை ஒருவரால் அடைய முடிகிறது. அந்த நிலை வார்த்தைகெட்டா நிலை, பேரமைதியும், பேரானந்தமும் உள்ள நிலை என்று கிட்டத்தட்ட எல்லா தீட்சை முறைகளிலும் பல விதமான வர்ணனைகளில் சொல்கிறார்கள்.)

தீட்சை முறையில் கிட்டத்தட்ட ஹிப்னாடிச முறையில் மயக்க நிலைக்கு ஒருவரை அழைத்துச் சென்று தான் வேறுபல அனுபவங்களையும், மேலான உணர்வு நிலைகளையும் அடைய வைக்கிறார்கள் என்றாலும் சாதாரண, நவீன ஹிப்னாடிசத்திற்கும், அக்கால தீட்சை முறை ஹிப்னாடிசத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இன்றைய ஹிப்னாடிச முறையில் ஹிப்னாடிசம் செய்பவர் தான் செயல் புரிபவராகவும், ஹிப்னாடிசம் செய்யப்படுபவர் முன்னவர் விருப்பப்படி செயல்பட முடிபவராகத் தான் இருக்கிறார். ஹிப்னாடிசம் முடிந்த பின் என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமல் தான் ஹிப்னாடிசம் இருக்கிறார். ஆனால் அக்கால தீட்சை முறையில் உபயோகப்படுத்திய ஹிப்னாடிசத்தில் ரகசிய தீட்சை பெறுபவர் கிட்டத்தட்ட மரண நிலையிலேயே உடலளவில் ஆழமாகச் செல்லக்கூடிய அளவில் இருக்கிறார். ஆனாலும் கூட அவர் நடப்பவை அனைத்தையும் மிகத் தெளிவாக உணர முடிபவராகவும், அந்த அனுபவங்களில் முழுப்பங்கு வகிப்பவராகவும் இருக்கிறார். நவீன ஹிப்னாடிசத்தில் ஹிப்னாடிசம் முடிந்த பிறகு முன் போலவே ஹிப்னாடிசம் பெற்றவர் இருக்கிறார். ஆனால் ரகசிய தீட்சை ஹிப்னாடிசத்தில் எல்லா அறியாமைகளும் நீங்கி புது ஜென்மம் எடுத்தவராக தீட்சை பெற்றவர் நினைவு திரும்புகிறார். எல்லா விஷயங்களிலும் மேம்பட்டவராகவும், ஞானியாகவும் மாறுகிறார். சாக்ரடீஸ் சொல்கிறார். “இது போன்ற ரகசிய ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையான மரணம் வரும் போது கூட நம்பிக்கையோ, தைரியமோ இழக்காமல் சற்றும் வருத்தமில்லாமல் இனிமையாக மரணத்தை சந்திக்கிறார்கள்”.  உண்மைக்காக விஷம் தரப்பட்டு சாக முன் வந்த மனிதர் வாயால் அதைக் கேட்கும் போது அதில் உள்ள நூறு சதவீத உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  

பால் ப்ரண்டன் இந்த இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் அனுபவத்தையும் கூறுகிறார். அவருடைய நண்பர் விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆத்மா, இறந்த பின் உள்ள வாழ்க்கை என்பதில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர். அப்படிப்பட்டவருக்கு ஒரு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து தரப்பட்டது. அது அவருக்கு நூதன அனுபவத்தை ஏற்படுத்தியது. உடல் உணர்ச்சிகள் அனைத்தும் அற்றுப் போன அவர் காற்றில் மிதப்பது போல உணர்ந்த பின்னர் தன்னுடைய அறுவை சிகிச்சையையே அடுத்தவர் அறுவை சிகிச்சையைப் போல அமைதியாகப் பார்க்க முடிந்ததாம். அந்த அனுபவம் அவரை முற்றிலும் புதியவராக மாற்றியதாக அவர் கூறுகிறார். இப்படி நம்மால் விளக்க முடியாத அபூர்வ நிகழ்வுகளிலும் அரைகுறையாக சில அனுபவங்கள் கிடைப்பதுண்டு.

ரகசிய தீட்சை விஷயத்தில் இன்னொரு உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். ரகசிய தீட்சை பெற்றவர்கள் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கணிசமாக இருந்திருக்க வேண்டும். முன்பு சொன்ன அக்கால ஞானிகள் மட்டுமல்லாமல் பெயரே தெரியாத, பிரபலமல்லாத எத்தனையோ பேர் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை பெற்றிருந்த போதும் அத்தனை பேரும் அந்த ரகசியத்தைக் காத்த விதம் பிற்கால வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது.

மொத்தத்தில் அன்றைய ரகசிய தீட்சை பெற்றவர்களிடம் தூய்மை, பொறுமை, மன வலிமை, ரகசியம் காக்கும் தன்மை ஆகிய நான்கும் பிரதானமாக இருந்ததாகத் தெரிகிறது.

அப்படி புனிதக் கோயில்களில் கிடைத்த ரகசிய தீட்சை என்ற ஆன்மிக ஞானம் காலம் செல்லச் செல்ல மறைந்தே போகிற அளவு ஆகக் காரணம் ஆன்மிகம் அமைப்புகள், மற்றும் மதம் சார்ந்த விஷயமாக பிற்காலத்தில் மாறியது தான் என்கிறார் பால் ப்ரண்டன். கலப்படம் ஆரம்பித்து  உண்மையின் சாராம்சம் அதில் மிகவும் குறைந்து விட்டது என்று அவர் நினைத்தார்.

அடுத்த நூற்றாண்டில் இருக்கும் நமக்கும் அதை மறுக்க முடியவில்லை அல்லவா?

(தொடரும்)

- என்.கணேசன்

Monday, July 2, 2012

அட ஆமாயில்ல! – 4
முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள்.                   

-         ஆண்டிஸ்தினீஸ்


சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
-         ஹெர்பர்ட்


போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும்.
-         நெப்போலியன்


அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்.
-         செஸ்டர்ஃபீல்டு


இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு புரிந்து கொள்வதில்லை.
-         பாஸிட்


இயற்கையின் விதிகள் நீதியானவை. ஆனால் பயங்கரமானவை.
                           - லாங்ஃபெல்லோ


இழிவான அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாக இருப்பதைக் காட்டும், மேலும் பலவீனப்படுத்தும்.
-         கௌப்பர்


வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம்.
-         ஹம்போல்ட்


உலகின் இயல்பு இறந்து போன திருத்தொண்டர்களைப் புகழ்தலும் உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துவதும் தான்.
-         என்.ஹேர்


உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள்.  அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ


உலகில் நமக்குள்ள ஒரே வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
                           - லாக்
      

களைப்பு கல்லின் மீதும் குறட்டை விடும். அமைதி இல்லாத சோம்பலிற்குத் தலையணையும் உறுத்தும்.
                            - ஷேக்ஸ்பியர்


தொகுப்பு: என்.கணேசன்