சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 29, 2009

கைகேயி இராமன்கைகேயியிற்கும் இராமனுக்கும் இடையே உள்ள பந்தம் ஆழமானது. கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டவள் அவள். கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவள் பட்ட கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால் கைகேயி அவளை ஏசுகிறாள்.

"எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல" (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசுகிறாள்

(எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!).


இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்த கூனி 'கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்' என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது. தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். "என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு" என்று கதறுகிறான்.

('கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற' என்றான்


'நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நய' என்றான்.)


கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் பந்தத்தை அழகாய் விளக்குகிறது. "இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது" என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்

(தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார்.)


இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. "மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்"

(மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்)

தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் "நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல" என்று தசரதன் மனம் வெறுத்து கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு "நீ என் தாயே அல்ல" என்று சொல்லி விட்டுப் போன பின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

எந்த மகனுக்காக அவள் அரசபதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப் போல் வாழ ஆரம்பித்த போது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவறை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தை காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனதில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள் மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாதது.

தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாகும். ஆனால் இராமன் கைகேயி மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை. அதனால் தசரதனிடம் "தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்" என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை 'தெய்வம்' என்று உயர்த்துகிற பண்பைக் கவனியுங்கள்.

(தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான்.)


அதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். ஆக இராமன் கடைசி வரை கைகேயி இராமனாக இருந்தான் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?

-என்.கணேசன்


நன்றி: ஈழநேசன்

Friday, December 25, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-15


ஆவியுலகைத் தொடர்பு கொள்ள முடிந்த மனிதர்கள் அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் உலகெங்கும் கணிசமாக இருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் ஆழ்மன சக்திகளைப் பற்றி நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிலா (நிர்மலா) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரே ஆவிகளைத் தொடர்பு கொள்ள முடிந்த ஒரு 'மீடியம்' என்று சொன்ன போது எனக்கு வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் அவரிடம் அவரது அனுபவங்களைக் கேட்டேன்.


ஒரு முறை இங்கிலாந்தில் ஒரு 'மீடியம்' மூலமாக தன் இறந்து போன மாமியாரைத் தொடர்பு கொள்ள முடிந்தது அவருடைய ஆவியுலக முதல் அனுபவம் என்று சொன்னார். அதில் அவருக்கு கிடைத்த தகவல்கள் நம்பிக்கை ஏற்படுத்துவனவாக இருக்கவே அவருக்கு அது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது. அந்த ஆர்வமும், ஈடுபாடும் விரைவிலேயே அவரையும் ஒரு 'மீடியமா'க்கியது. எதிர்பாராத விதங்களில் ஆவிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குத் தகவல்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் உதவவும் செய்கின்றன, சில அற்புதங்களையும் நிகழ்த்துகின்றன என்பதற்கு சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை அவர் உதாரணமாகக் கூறினார். அதில் ஒன்று -


"ஒரு சமயம் எனது தோழியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இறந்து போன அவளது மாமியார் அவளது வயிற்றைத் தொட்டு வலி போன்ற உணர்ச்சியைக் காட்டினார். அவளிடம் வயிற்றில் வலி இருக்கிறதா என நான் கேட்டபோது அவள் ஆச்சர்யத்துடன் ஒப்புக் கொண்டாள். பின் அவளை நிறைமாத கர்ப்பிணியாக என்னால் காணமுடிந்தது. அவளிடம் அதைக் கூறியபோது, கருப்பையில் கட்டிகள் இருப்பதால் கருவுறுவது சாத்தியமல்ல என மருத்துவர்கள் கூறியதை வருத்தத்துடன் கூறினாள். ஆனால் அவளது மாமியார் அவள் வயிற்றிலிருந்து எதையோ அப்புறப்படுத்தி மீண்டும் அவள் நிறைமாத கர்ப்பிணியாகத் தோன்றும் காட்சியை எனக்குக் காட்டினார். சில வாரங்களில் அவள் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவளது கருப்பையில் கட்டிகள் இல்லாதது கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் கருவுறுவதற்கான சாத்தியக் கூறுகளில்லை என்றே கூறி இருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தைக்கு இப்போது மூன்று வயதாகிறது. அவள் தன் தாயின் கருப்பையில் உருவாவதற்கு முன்பே எனக்குப் பரிச்சயமானதால் எங்களுக்குள் ஒரு விசேஷப் பிணைப்புண்டு.

கருப்பையில் இருந்த கட்டிகள் மறைந்ததற்கும், கருவுறுதலே சாத்தியம் இல்லை என்ற பெண் கருவுற்றதற்கும் மருத்துவர்களிடம் விஞ்ஞான ரீதியான பதில்கள் இல்லை என்பதனை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.


ஆவியுலகில் இருந்து தகவல்கள் பெற முடிந்தது அதிசயம் என்றால் அவற்றை அவர்களுடைய குரலிலேயே கேட்க முடிவது பேரதிசயம் அல்லவா? அதையும் கேட்க வைத்தார் லெஸ்லி ·ப்ளிண்ட் (1911-1994) என்ற ஆங்கிலேயர். வின்ஸ்டன் சர்ச்சில், பெர்னார்ட் ஷா, மகாத்மா காந்தி போன்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ஆவிகள் அவரவர் குரலில் பேசக் கேட்ட போது பலரும் அதிசயித்தனர்.


அவரை ஆழ்மன ஆராய்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகளும், சண்டே எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளும் தனிமனித ஆராய்ச்சியாளர்களும் பல வழிகளில் ஆராய்ந்தார்கள். லெஸ்லி ·ப்ளிண்ட் இருட்டான அறைகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் குரலின் மூலம் ஆவிகள் பேசுவதில்லை. அவர் தலைக்கு மேல் இருட்டில் இருந்து பேசுகின்றன என்று அவர் தெரிவித்தார். மற்றவர்கள் போல் அவர் அரை மயக்க நிலைக்கும் செல்லவில்லை.


இதில் ஏதாவது தில்லுமுல்லு உள்ளதா என்றறிய ஆராய்ச்சியாளர்கள் அவர் வாயை துணி வைத்து உறுதியாகக் கட்டிப்போட்டார்கள். அதோடு சிலர் அவரை நாற்காலியோடு கட்டி அவர் நகரவோ, குனியவோ முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். ஒரு ஆராய்ச்சியாளர் அவ தொண்டையில் ஒரு கருவியை வைத்து அதில் சின்ன அதிர்வு வந்தாலும் தெரியும்படி பார்த்துக் கொண்டார். இன்னொருவர் இன்னும் ஒருபடி மேலே போய் இளஞ்சிவப்பு திரவத்தை அவர் வாயில் ஊற்றி பின் வாயில் ப்ளாஸ்திரி போட்டு கட்டிப் பார்த்தார். எல்லாம் முடிந்த பிறகு அதே அளவு இளஞ்சிவப்பு நீரை உமிழ்ந்து அந்த ஆராய்ச்சியாளரை லெஸ்லி ·ப்ளிண்ட் திருப்திப்படுத்தினார். இத்தனைக்குப் பின்னும் ஆவிகள் வித விதமான குரல்களில் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் சொன்னதை பார்வையாளர்கள் கேட்டனர். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1955 முதல் 1970 வரை 500 நிகழ்வுகளை டேப்பில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.


அந்த குரல்களில் ஒருசில குரல்கள் உயிரோடிருக்கும் போது கேட்ட குரல்களோடு ஒத்துப் போகவில்லை என்று ஒருசில விமரிசனங்கள் இருந்தாலும் பெரும்பாலான குரல்களும், சொன்ன செய்திகளும் இறந்து போன மனிதர்களின் குரல்களுக்கும், தன்மைகளுக்கும் ஒத்துப் போனதாக ஆராய்ச்சியாளர்களும், சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் கருதுகின்றனர். உதாரணத்திற்கு ·ப்ளிண்ட் மூலமாக ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பேசக் கேட்ட அவருடைய நண்பர், கேட்ட குரலும் சொன்ன விதமும் பெர்னார்ட் ஷாவினுடையதாகவே இருந்தது என்று ஒத்துக் கொண்டார்.

லெஸ்லி ·ப்லிண்டின் மறைவுக்குப் பின் ஒரு பிரபல பத்திரிக்கையாளரான அலெக்சாண்டர் வாக்கர் சொன்னார். "நான் ஒரு முறை அவருடைய நிகழ்ச்சி ஒன்றிற்கு சந்தேகத்தோடு சென்றிருக்கிறேன். அப்போது எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரின் தந்தையின் ஆவி ·ப்ளிண்ட் மூலமாக என்னிடம் பேசியது. நான் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய பல கேள்விகள் கேட்டேன். சொன்ன குரலும், சொன்ன விஷயங்களும் சரியாகவே இருந்தன என்பதை நான் ஒத்துக் கொண்டு தானாக வேண்டும்"

கற்பனைக்கும் எட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா இவை!

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

நன்றி: விகடன்

Monday, December 21, 2009

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்


வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.

உலகில் மாறுதல் ஒன்றே மாறாத நியதி என்று சொல்வார்கள். மாறுதல் உலகம் இயங்குவதன் அறிகுறி. உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வரை மாறுதலும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் யாருடைய தனிப்பட்ட கருத்தின்படியும் இயங்குவதில்லை. அவர்கள் கருத்தைப் பொருட்படுத்துவதுமில்லை. அது பிடிக்காதவர்கள் உலகில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மாறுகின்ற காலத்தில் மாறுகின்ற தேவைகளுக்கேற்ப தங்கள் வழி முறைகளை மாற்றிக் கொண்டு செயல்படும் மனிதர்கள் மட்டுமே வெற்றியடைகிறார்கள். நேற்றைய தேவைகளுக்கேற்ப உங்களது இன்றைய செயல்பாடுகள் இருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும்?

அல்கெமிஸ்ட் என்ற பிரபல நாவலில் இதற்கு ஒரு அழகான உதாரணத்தைக் காணலாம். ஒரு சிறிய மலை மேல் அழகான கண்ணாடிப் பொருள்க¨ள் விற்கும் கடை ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் மிக நன்றாக வியாபாரம் நடந்த கடையில் காலம் செல்லச் செல்ல வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மலை அடிவாரத்திலேயே நிறைய கடைகள் வந்து விட யாரும் கண்ணாடிப் பொருட்களை வாங்க அந்த மலைக்கு மேல் வருவதை நிறுத்தினர். அந்த கடைக்காரருக்கோ அந்த வியாபாரம் தவிர வேறு வியாபாரமும் தெரியாததால் வேறு வழியில்லாமல் அதையே நடத்திக் கொண்டு வந்தார்.

சாண்டியாகோ என்ற இளைஞன் அவர் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் மிகக் குறைவாகவே தந்த கடைக்காரர் நடக்கும் விற்பனையில் அதிக கமிஷன் தருவதாகச் சொன்னார். வியாபாரமே இல்லாததால் கமிஷன் எங்கே தரப் போகிறோம் என்ற எண்ணம் அவருக்கு. இரண்டே நாளில் உண்மை நிலவரத்தை சாண்டியாகோ உணர்ந்தான். வேறு கடைகளே இல்லாத காலத்தில் செய்த வியாபார முறையையே இப்போதும் கடைக்காரர் பின்பற்றுகிறார் என்று புரிந்தது. அவன் அவரிடம் கடைக்கு வெளியே ஒரு ஷோ கேஸ் வைத்து அழகான புதிய பொருட்களைப் பார்வைக்கு வைத்தால் கீழே செல்பவர்களில் சிலரை அது ஈர்க்கக்கூடும் என்று சொன்னான். கடைக்காரருக்கு பெரிய ஆர்வம் இல்லா விட்டாலும் அப்படியே செய்தார். புதியவர்கள் பலரும் வர ஆரம்பிக்க விற்பனையும் அதிகரித்தது.

ஒரு நாள் மலையேறிய ஒருவர் குடிக்க நல்ல தேநீர் கடை கூட இல்லை என்று அங்கலாய்த்தது சாண்டியாகோ காதில் விழுந்தது. அவன் கடைக்காரரிடம் சொன்னான். "நாம் தேநீரும் தயாரித்து நம்முடைய அழகான கண்ணாடிக் கோப்பைகளில் தந்தால் தேநீரும் விற்கலாம். பலரும் வீடுகளிலும் அது போல் குடிக்க கண்ணாடிக் கோப்பைகளை வாங்கிக் கொண்டு போவார்கள்" என்றான். அவருக்கு அதிலும் பெரிய பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் சம்மதித்தார்.

அவன் சொன்னபடியே பலரும் வந்து தேநீர் குடித்து அது போன்ற அழகான கோப்பைகளை வாங்கிக் கொண்டு போனார்கள். நாளடைவில் அந்தக் கடை பிரபலமாகி வியாபாரமும் அதிகரித்து மேலும் இரண்டு பேரை வேலைக்கு எடுத்துக் கொண்டு கூட்டத்தை சமாளிக்க வேண்டி இருந்தது. சாண்டியாகோ வந்திராவிட்டால், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப புதிய வழிகளைப் பின்பற்றியிரா விட்டால் அந்தக் கடையை அவர் விரைவில் மூடி விட வேண்டி இருந்திருக்கும்.

மாறுதல் இயற்கை என்றாலும் அது ஏற்படுத்தும் புதிய சூழல் நமக்குப் பிடிபடாமலும், புரியாமலும், சிறிது அசௌகரியமாகவும் இருப்பது இயல்பே. ஆனால் மாறுதல் ஏற்படும் போது இது வரை கிடைத்திராத வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற ஞானத்தோடு மாறுதல்களை எதிர்கொள்வதே அறிவு.

சில சமயங்கள் மாறுதல்கள் நம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பனவாகவும் இருப்பது உண்மையே. இருப்பவை அனைத்தையும் இழக்க நேர்வது போன்ற மாறுதல்கள் பூதாகாரமாக இருக்கலாம். ஆனால் கவலையில் ஆழ்வதும், விதியை நொந்து கொள்வதும் அதற்குத் தீர்வாகாது. மாறுதல்கள் உணர்த்தும் பாடங்களைப் படித்து, தரும் வாய்ப்புக¨ளை முறையாகப் பயன்படுத்தி மீண்டு வருவதே வெற்றி. சிலவற்றை இழந்தால் ஒழிய நம் பார்வை வேறுபக்கம் திரும்பாது என்பதற்காகவே கூட விதி நம்மை சிலவற்றை இழக்க வைக்கலாம். ஒருவிதத்தில் அது நமக்கு அனுகூலமே ஒழிய நஷ்டமல்ல.

சொய்சீரோ ஹோண்டா என்ற இளைஞர் படிக்கும் காலத்திலேயே கார்களுக்குப் பயன்படுத்தும் புதிய பிஸ்டன் ஒன்றை உருவாக்கி அதை டயோட்டா கார் கம்பெனிக்கு அனுப்பினார். அந்த வகை பிஸ்டனைப் பயன்படுத்தினால் பல விதங்களில் காரோட்டம் மேம்பாடடையும் என்று அவர்களுக்குத் தெரிவித்தார். அது தங்களுடைய தேவைகளைப் பூரணமாகப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்து டயோட்டா கம்பெனியினர் திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் இரண்டு வருடங்கள் கழித்து அந்தப் பிஸ்டனை மேம்படுத்தி வடிவமைத்து அதை டயோட்டாவுக்கு மறுபடி அனுப்ப அந்தப் புதிய பிஸ்டனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தயாரித்துத் தரும் உரிமை ஹோண்டாவுக்கு அளிக்கப்பட்டது.

ஹோண்டா தன்னிடம் இருப்பவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார். தொழிற்சாலை கட்டும் பணி முடியும் தருவாயில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமாகியது. ஹோண்டா தன் மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடனை வாங்கி மீண்டும் தொழிற்சாலை கட்டத்துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடம் முடிவடையும் நேரம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. எதிரிகளின் விமானத் தாக்குதலால் அந்தக் கட்டிடமும் தவிடுபொடியானது.

இதையெல்லாம் மாற்றம் என்று சொல்வதை விட நாசம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றாலும் ஹோண்டா விதியை நொந்து கொண்டு முடங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கடுமையான பெட்ரோல் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஜப்பானைத் தாக்கியது. கார்களை இயக்க முடியாமல் பலரும் அவதியுற்றனர். ஹோண்டாவும் எங்கும் காரை எடுத்துச் செல்ல முடியாமல் தத்தளித்தார். வேறு வழி இல்லாமல் தன் சைக்கிளுக்கு மோட்டார் ஒன்றைப் பொருத்திக் கொண்டு வீட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் தங்களுக்கும் அது போன்ற ஒரு மோட்டார் பொருத்திய சைக்கிள் செய்து தருமாறு கேட்க ஆரம்பித்தனர். ஹோண்டா செய்து தர ஆரம்பித்தார். சீக்கிரமே அவரிடமிருந்த மோட்டார்கள் எல்லாம் தீர்ந்து போயின.

தன் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஹோண்டா மீண்டும் ஒரு தொழிற்சாலை கட்ட எண்ணினார். இந்த முறை பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, தன் புதிய கண்டுபிடிப்பான மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையாக. ஆனால் இருப்பதையெல்லாம் முன்பே இரு முறை தொழிற்சாலை கட்டித் தொலைத்திருந்த அவருக்கு முதலீடு செய்யப் பணம் இருக்கவில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவெடுத்தார்.

ஜப்பான் முழுவதும் இருந்த 18000 சைக்கிள் கடைக்காரர்களுக்கு தன் புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கடிதம் எழுதினார். அன்றைய சூழ்நிலையில் மிகவும் சுலபமாக விலை போகும் பைக்கைத் தயாரிக்க அவர்களால் முடிந்த அளவு முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று அவர் விவரித்தார். 18000 கடைக்காரர்களில் சுமார் 5000 பேர் முதலீடு செய்ய முன் வந்தனர். அவருடைய கனவுத் தொழிற்சாலை உருவாகியது.

முதலில் அவர்கள் தயாரித்த மோட்டார் பைக் பெருமளவில் விலை போகவில்லை. காரணம் அதன் எடையும், பெரிய வடிவமும். எனவே ஹோண்டா அந்த இரண்டையும் சரி செய்து சில மாற்றங்களுடன் புதிய மோட்டார் பைக்கை உருவாக்கினார். அது உடனடியாக வெற்றி பெற்றது. பின் வெற்றி அவரை நிழலாகப் பின் தொடர்ந்தது. கார்களையும் உருவாக்க ஆரம்பித்தார். இன்று ஹோண்டா கார்ப்பரேஷன் உலகப் புகழ் பெற்ற பெரிய நிறுவனமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை ஆழமாக உணர்ந்திருங்கள். வழக்கம் என்கிற சுகமான சங்கிலி புதியன வரும் போது அதிருப்தி கொள்ளக் கூடும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கையில் சிறைப்பட்டு இருந்து விடாதீர்கள். மேற்போக்காகப் பார்க்கையில் பிரச்னைகள் போலத் தோன்றினாலும் எல்லா மாற்றங்களும் தங்களுடன் வாய்ப்புகளையும் சேர்த்தே அழைத்து வருகின்றன. வரும் மாற்றங்கள் நம் அபிப்பிராயங்களுக்கேற்ப மாறிவிடுவதில்லை. மாற்றங்கள் காலடி மண்ணையே அசைக்கிறதாகக் கூட சில நேரங்களில் இருக்கலாம். செயலிழந்து மட்டும் போய் விடாதீர்கள். அது கண்டிப்பாய் தோல்வி என்னும் புதைகுழியில் உங்களை ஆழ்த்தி விடும். எனவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ உங்கள் அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு வாய்ப்புகளைக் கவனியுங்கள். எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்படுங்கள். கண்டிப்பாக வெற்றிவாகை சூடுவீர்கள்.

-என்.கணேசன்

நன்றி: விகடன்

Wednesday, December 16, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-14ஆழ்மனதின் அற்புத சக்திகள்-14

டி.டி.ஹோமைப் போலவே லியொனாரா பைப்பர் (1859-1950) என்பவருக்கும் எட்டு வயதில் ஆழ்மன சக்தியின் முதல் அனுபவம் ஒரு மரணச்செய்தி மூலமாகவே ஏற்பட்டது. 'அத்தை சாரா இறக்கவில்லை. இன்னும் உங்களுடன் தான் இருக்கிறாள்' என்ற செய்தி செவிப்பறையை அறைந்து தெரிவிப்பது போலிருக்க லியொனாரா பைப்பர் ஓடிச்சென்று தாயிடம் அதைத் தெரிவித்தார். மகளின் பைத்தியக்காரத்தனமான கற்பனை என்று கருதிய அந்தத் தாய் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாள் அந்த அத்தை சாரா இறந்து போன செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. இறந்த நேரம் லியொனாரா பைப்பர் காதில் அறைந்த செய்தியின் அதே நேரம் தான். அதன் பிறகு பதினான்கு வருடங்கள் அது போன்ற அனுபவங்கள் லியொனாரா பைப்பருக்கு ஏற்படவில்லை. மீண்டும் ஏற்பட்ட ஒரு அனுபவம் அவர் வாழ்வையே மாற்றி அமைத்தது.

கடுமையான வயிற்று வலியால் அவதியுற்ற லியொனாரா பைப்பர் அதைக் குணப்படுத்த டாக்டர் ஜே ஆர் காக் என்பவரிடம் சென்றார். அந்த டாக்டர் குருடர். தன் கையை நோயாளியின் தலையில் வைத்து நோயைக் குணமாக்கக் கூடியவர். அவரிடம் இரண்டாவது முறை சென்ற போது அவர் லியொனாராவின் தலையில் கையை வைத்தவுடன் திடீரென்று தன் முன் ஒரு ஒளிவெள்ளத்தையும் அந்த ஒளிவெள்ளத்தில் பல்வேறு முகங்களையும் லியொனாரா கண்டார். அதன் பின் கிட்டத்தட்ட அரை மயக்க நிலையை அடைந்த அவர் சுயநினைவில்லாமல் எழுந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதி அதை அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவரிடம் சென்று தந்து மறுபடி தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்தமர்ந்தார்.

அவர் அந்தக் கடிதத்தைத் தந்தது கேம்ப்ரிட்ஜைச் சேர்ந்த நீதிபதி ·ப்ராஸ்ட் என்பவரிடம். அந்தக் கடிதம் அவரது இறந்து போன மகன் எழுதுவது போல எழுதப்பட்டது. லியொனாராவுக்கு அந்த நீதிபதியைப் பற்றியோ, அவரது இறந்து போன மகனைப் பற்றியோ தகவல்கள் ஏதும் தெரியாததாலும், கடிதத்தின் தன்மையாலும் அந்தக் கடிதம் தன் மகனுடைய ஆவியாலேயே எழுதப்பட்டது என்று அந்த நீதிபதி நம்பினார். மயக்க நிலையிலிருந்து மீண்ட லியொனாராவுக்கு தான் செய்தது எதுவும் நினைவிருக்கவில்லை.

இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. பலரும் தங்களுக்கு நெருங்கிய அன்பான இறந்து போனவர்களிடம் இருந்து செய்திகளைப் பெற லியொனாரா பைப்பரை மொய்க்க ஆரம்பித்தார்கள். அப்படி லியொனாராவைத் தேடி வந்தவர்களில் ஒருவர் அமெரிக்க மனோதத்துவ மேதை வில்லியம் ஜேம்ஸின் மாமியார். அவருக்கு லியொனோராவின் மூலமாகக் கிடைத்த தகவல்கள் நம்பிக்கை தரும் வண்ணம் இருக்கவே அவர் தன் மருமகன் வில்லியம் ஜேம்ஸிற்குக் கடிதம் எழுதினார். மாமியாரிடம் பணம் பறிக்க யாரோ ஒரு பெண் ஏமாற்றுவதாக எண்ணிய வில்லியம் ஜேம்ஸ் அந்தப் பெண்ணைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி தானும் நேரில் வந்தார். மிகக் கவனமாகக் கண்காணித்தும் ஏமாற்று வேலைகள் எதையும் வில்லியம் ஜேம்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லியொனாரா பைப்பர் ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு ஆவியின் ஆதிக்கத்தில் இருந்ததாகக் கூறினார். அந்த ஆவி சம்பந்தப்பட்ட மற்ற ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் சொல்வதாகச் சொன்னார். அவர் சொல்வதற்கேற்றாற் போல் அந்தந்தக் கட்டங்களில் அவர் ஆவியின் ஆதிக்கத்தில் இருக்கையில் பேசும் பேச்சுகளின் குரல்கள் வித்தியாசப்பட்டன.

வில்லியம் ஜேம்ஸ் இதைப் பற்றி ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தெரியப்படுத்தினார். அந்த ஆராய்ச்சிக் கழகத்தின் டாக்டர் ரிச்சர்டு ஹோட்சன் என்ற ஆராய்ச்சியாளர் பல போலிகளை போலிகள் என்று நிரூபித்த பெருமையுடையவர். எதையும் உடனடியாக நம்ப மறுத்த அவர் லியொனாரா பைப்பரை ஆராய்ச்சி செய்ய வந்தார்.

ரிச்சர்டு ஹோட்சன் துப்பறியும் நிபுணர்களை எல்லா சமயங்களிலும் லியொனாரா பைப்பரைப் பின் தொடரச் செய்தார். யாரிடமாவது பேசித் தகவல்கள் தெரிந்து கொள்கிறாரா என்று கண்காணித்தார். அவராகவே லியொனாராவிற்கு அறிமுகமே இல்லாத நபர்களை வரவழைத்து லியொனாரா பைப்பர் முன் அமர வைத்து அவர்களுக்கு வேண்டிய இறந்த மனிதர்கள் சம்பந்தமாகக் கேட்க வைத்தார். எல்லா விவரங்களும் திருப்தி தருபவையாக இருந்தன. 1888 இறுதியில் ஹோட்சனுடன் டாக்டர் ஜேம்ஸ் ஹிஸ்லாப் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் லியொனாரா பைப்பர் 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டரா'ல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தாலும் லியொனாராவிற்கு முன்பின் தெரியாத இறந்தவர்களின் தகவல்கள் எல்லாம் எப்படித் தெரிகின்றன என்பதை அவரால் அறிவியல் பூர்வமாகச் சொல்ல முடியவில்லை.

ரிச்சர்டு ஹோட்சனும், ஹிஸ்லாப்பும் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய லியொனாராவை இங்கிலாந்துக்கு அழைத்தார்கள். லியொனாரா சம்மதித்தார். இங்கிலாந்தில் அவர் ஆழ்மன ஆராய்ச்சிக் கழகத் தலைவர் எ·ப்.டபுல்யூ.எச்.மயர்ஸ் வீட்டில் தங்கினார். மயர்ஸ் லியொனாரா வருவதற்கு முன் வீட்டில் அனைத்து வேலைக்காரர்கலையும் நீக்கி புதிய வேலைக்காரர்களை நியமித்தார். எனவே லியொனாரா வேலைக்காரர்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ளுதல் சாத்தியமிருக்கவில்லை. மயர்ஸ் லியொனாராவுக்கு உதவ ஏற்பாடு செய்த வேலைக்காரி ஒரு கிராமத்திலிருந்து தருவிக்கப்பட்டார். அவர் வீட்டை விட்டு செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆராய்ச்சிக் கழகத்தின் நபர் ஒருவரும் கண்காணிக்க கூடவே சென்றார்.

மயர்ஸ் மற்றும் சர் ஆலிவர் லாட்ஜ் கண்காணிப்பில் நவம்பர் 1889 முதல் பிப்ரவரி 1890 வரை லியொனாரா 88 முறை முன்பின் தெரியாத நபர்களின் குடும்பத்தில் இறந்தவர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுத் தந்தார். லியொனாராவிற்கு வந்தவர்களை சில சமயங்களில் தவறான பெயரில் அறிமுகப்படுத்தியதும் உண்டு. சில சமயங்களில் லியொனாரா அரை மயக்க நிலைக்குச் சென்ற பிறகு சிலரை திடீரென்று அழைத்து வந்ததும் உண்டு. ஆனால் லியொனாரா பைப்பர் தருவித்துத் தந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான தகவல்களாகவே இருந்தன. மயர்ஸ¤ம், ஆலிவர் ஸ்காட்டும் 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எந்த விதத்திலும் லியொனாரா பைப்பர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்க சாத்தியமே இல்லை என்றும் அவர் நாணயமும், நம்பகத் தன்மையும் சந்தேகத்திற்கப்பால் பட்டது என்பதையும் தெரிவித்தார்.

மீண்டும் அமெரிக்கா திரும்பிய லியொனாரா பைப்பர் 1909ல் மீண்டும் ஆராய்ச்சிகளுக்காக இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார். 1915ல் சர் ஆலிவர் ஸ்காட் இறந்து விடப்போவதாகத் தனக்கு ஆவியுலகில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக லியொனாரா தெரிவித்தார். அதன் படியே ஸ்காட் இறந்து போனார். பின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்த லியொனாரா இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

பல ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் எந்த வித தயக்கமும் இன்றி இது போன்ற பல அதிசயங்களை செய்து காட்டிய லியொனாரா பைப்பர் இன்றும் ஒரு அற்புதப் பெண்மணியாகவே ஆழ்மன ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறார். ஆவியுலகைப் பற்றி நம்பிக்கை இல்லாத ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அவர் சொன்ன தகவல்களின் உண்மை தன்மையை உணர்ந்த போது பிரமித்துப் போனார்கள்.

மேலும் பயணிப்போம்......

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: விகடன்

Friday, December 11, 2009

ஒழுக்கம் அவசியமா?


ழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...

கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும் நன்கு பாதுகாக்கிறவன். அவன் ஒரு முறை தங்கள் யோகா வகுப்பினர் நடத்தும் ஒரு சொற்பொழிவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க ஒரு புகழ்பெற்ற மருத்துவரைக் காணச் சென்றான். அந்த மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரைக் காண அவன் காத்திருந்தான்.

அப்போது அந்த மருத்துவமனைக்கு தள்ளாத வயதுடைய முதியவர் ஒருவர் நுழையக் கண்டான். அந்த வயதிலும் அந்த முதியவர் கைத்தடி எதுவும் இல்லாமல் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அவனுக்கு வியப்பை அளித்தது. அவர் அவனருகே அமர்ந்தார். மருத்துவரைப் பார்க்க நேரம் அதிகமானதால் பொழுதைப் போக்க இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்த முதியவர் அவனிடம் ஒரு கட்டத்தில் கேட்டார். "நீ புகை பிடிப்பதுண்டா?"

கதிர் பெருமையாகச் சொன்னான். "இல்லை"

அவர் சொன்னார். "நான் தினமும் மூன்று பேக்கட் சிகரெட்டுகள் புகைப்பேன். பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்த பழக்கம் அது. நீ மது குடிப்பதுண்டா?"

கதிர் சொன்னான். "இல்லை"

அவர் பெருமையாகச் சொன்னார். "நான் பதினாறாம் வயது முதல் மது குடிக்கிறேன். தற்போது தினந்தோறும் இரண்டு முறை இரண்டு புட்டி மதுவைக் காலையிலும், இரவிலும் குடிப்பேன்."

கதிருக்கு வியப்பாக இருந்தது.

முதியவர் மிகவும் ரகசியமாகக் கேட்டார். "உனக்கு பெண்களுடன் அனுபவம் எப்படி?"

கதிர் சொன்னான். "எனக்கு இன்னும் திருமணமாகவில்லை....."

முதியவர் புன்னகையுடன் சொன்னார். "நானும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பதினெட்டாம் வயது முதல் கணக்கில்லாத பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறேன்....."

முதியவருடன் பேசிக் கொண்டே போனதில் அவருக்கு இல்லாத தீயபழக்கங்கள் இல்லை என்று கதிருக்குத் தெரிந்தது. முதியவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவராகத் தெரிந்தார். எதிலும் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த அவர் அவனை ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடோடு வாழ்ந்ததன் மூலம் நிறைய இழந்து விட்டோமா என்று கூட கதிருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

"இப்போது எதற்காக மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்று கதிர் கேட்டான்.

சில நாட்களாக மூச்சுத் திணறல், நரம்புத்தளர்ச்சி, பலவீனம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியவர் கூறினார். இந்த வயதில் இது பெரிய விஷயமல்ல என்று நினைத்த கதிர் ஆவலுடன் அவர் வயதைக் கேட்டான்.

அவர் சொன்னார். "27"

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் முதியவரே அல்ல, இளைஞர் தான் என்று தெரிந்த கதிர் அதிர்ச்சி அடைந்தான். இது தான் ஒழுக்கமில்லாத வாழ்க்கையின் முடிவு.

திருவள்ளுவர் ஒழுக்கத்தின் அவசியத்தை ரத்தினச் சுருக்கமாக பல குறள்களில் கூறியுள்ளார். அவற்றுள் சில-

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பைத் தரும்.
(நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத் தரும்)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ·தே துணை.
(ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெரிந்தாலும் உண்மையில் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக நிற்கும்)

இந்தக் குறள்களின் கருத்துகளுக்கு எத்தனையோ உயிருள்ள உதாரணங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் கூட ஒழுக்கம் என்ற ஒரு விஷயத்தில் தவறி விட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையையே கோட்டை விட்டு நிற்பதை நம்மால் காண முடியும். அவர்களை விடக் குறைந்த அறிவிருந்தாலும், குறைந்த கல்வியே பெற்றிருந்தாலும் ஒழுக்கமாக இருப்பவர்கள் எத்தனையோ நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ்வதையும் நாம் காணலாம்.

ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் முடிவில் அது பெரிய பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே போல் ஒழுக்கமின்மை ஆரம்பத்தில் கிளர்ச்சிகளைத் தரலாம். கடைசியில் அது எத்தனையோ பிரச்னைகளுக்கு வேராக நின்று துன்புறுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை ஏதோ உப்புசப்பில்லாத வாழ்க்கை என்பது போல் சிலர் உருவகப்படுத்தி விடுகிறார்கள். அதில் சிறிதும் உண்மை இல்லை. ஒழுக்கமான வாழ்க்கையில் உண்மையான ஆனந்தத்திற்குக் குறைவில்லை. நல்ல வழியிலேயே இங்கு ஆனந்தம் ஏராளமாக இருக்கிறது. நல்ல இசையிலும், நல்ல புத்தகத்திலும், நல்ல வாழ்க்கைத் துணையிலும் கிடைக்காத ஆனந்தமா புகையிலும், மதுவிலும், தவறான உடலுறவிலும் கிடைத்து விடப்போகிறது? அழகான இயற்கைக் காட்சிகளிலும், மழலைகளின் பேச்சுகளிலும் கிடைக்காத மகிழ்ச்சியா போதையில் கிடைத்து விடப்போகிறது?

மேலும் நல்ல வழிகளில் கிடைக்கும் ஆனந்தம் முடிவில் மனிதனை உயர்த்தி விடுகிறது. தீய வழிகளில் கிடைக்கும் கிளர்ச்சிகள் கடைசியில் மனிதனின் தரத்தை தாழ்த்தி விடுகிறது. இன்னொரு உண்மை என்னவென்றால் ஒழுக்கமாக வாழ்பவன் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் கூட நிறைவாக இருக்க விடுகிறான். அதே சமயம் ஒழுக்கமில்லாதவன் தன் குடும்பத்தினருக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறான்.

நம்மையும் உயர்த்தி, நம்மைச் சார்ந்தவர்களையும் நிம்மதியாக இருக்க விடும் ஒழுக்கம் மேன்மையா? இல்லை நம்மை சீரழித்து, நம்மைச் சேர்ந்தவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஒழுக்கமில்லாத வாழ்க்கை தேவையா?

சிந்தித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். ஒழுக்கம் அவசியமா? இல்லையா?

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, December 7, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-13


டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர். ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிற்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய 17ஆம் வயதில் தாய் "டேன், 12 மணி" என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள். ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

தனக்கு கிடைத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்த அபூர்வ சக்திகள் இறைவனால் அளிக்கப்பட்டது என்று நம்பிய ஹோம் தன் சேவைகளுக்கு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் அவர் பெரிய செல்வந்தர்கள் தாங்களாகத் தந்த பரிசுகளையும், பண உதவிகளையும் மறுக்கவில்லை. அரசர்களும், பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் அவரை ஆதரித்தனர்.

1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார். லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள் ஆகியவற்றை கண்டதாகவும்/ கேட்டதாகவும் கூறினார்கள்.

ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.

இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள். (விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது).
ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன. ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ·ப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார். பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எ·ப். எல். பர் என்ற நிருபரை அனுப்பியது.

அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். "ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றோம்...."

1868 டிசம்பரில் லார்ட் அடாரே, லார்ட் லிண்ட்சே, கேப்டன் வின்னே என்ற மூன்று பிரபலங்கள் முன்னிலையில் லார்ட் அடாரேயின் மாளிகையில் மூன்றாவது மாடியில் ஒரு அரை ஜன்னல் வழியாக அந்தரத்தில் வெளியே சென்று மறு அறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த செய்தி பல பேரை பிரமிக்க வைத்தது என்றால் பலரை கடுமையாக விமரிசிக்க வைத்தது. அந்த மூன்று நபர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்கள், ஹோமிற்கு கள்ள சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களை ஹிப்னாடிசம் செய்து ஹோம் இதை நம்ப வைத்திருக்கலாம் என்று சிலர் விமரிசித்தார்கள்.

அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். 'என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான்" என்றார். மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார். "இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை..."

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
- என்.கணேசன்
நன்றி: விகடன்

Wednesday, December 2, 2009

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல


பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை "நீயா, மாடலா?" என்று பரிகசித்தார்கள். "ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி" என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு "மர்லின் மன்றோ" என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் "இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல" என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. "இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை" என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

"மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது" என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

"ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்" என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ஒரு செய்தித்தாளில் "கார்ட்டூனிஸ்டா"கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் "உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை" அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் - மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

- என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்