சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 30, 2019

இருவேறு உலகம் – 138


விஸ்வம் கத்தியதும் அவன் இருந்த பகுதியில் ஒரு சிறு விளக்கும் எர்னெஸ்டோ முன்னால் இருந்த மெல்லிய விளக்கும் எரிந்தன. அவர் அவனை அமரும்படி சைகை செய்தார். பிறகு பேச உனக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் கையால் சைகை செய்தார். வேறு வழியில்லாமல் விஸ்வம் அமர்ந்தான். இரு விளக்குகளும் அணைந்தன.

க்ரிஷ் விஸ்வத்தின் கத்தலால் பாதிக்கப்படாமல் அப்படி ஒரு குரலே கேட்கவில்லை என்பது போல் தொடர்ந்தான்.  ”…. பிறகு அந்த அகஸ்டின் தவசியின் சமாதியில் ஒரு அதிசயம் நடந்தது. எங்கிருந்தோ ஒரு கருப்புப்பறவை அங்கே வந்தமர்ந்தது. சிறிது நேரம் இருந்து விட்டுப் போனது. அது போகும் போது ஒரு முக்கோணக் கல் நடுவில் கண் இருப்பதை விட்டுப் போனது. மாஸ்டர் ஆச்சரியப்பட்டு அதை எடுத்துக் கொண்டு போய் அந்தச் சிவன் சிலையில் பொருத்திப் பார்த்தார். அது பொருந்தியிருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கும் உங்களுக்கு இதை நம்பக் கஷ்டமாய் இருக்கலாம். ஆனால் யோகத்தின் உச்ச நிலையில் யோகிகள் சித்தர்கள் பல வடிவங்கள் எடுக்க முடிவது சகஜம் என்பதையும் அது எப்படி என்பதையும் நம் நண்பர் உண்மை பேசும் மனநிலையில் இருக்கும் போது கேட்டால் என்னைவிட நன்றாக அவர் சொல்லக்கூடும். ஏனென்றால் இது போன்ற சக்திகளில் அவர் அறியாதது எதுவுமிருக்க வழியில்லை. அப்படிப் பறவை வழியில் வந்தது அகஸ்டினே தானா, இல்லை வேறு எதாவது சித்தரா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அந்த அற்புதம் நடந்திருக்கிறது…..” அவன் சொல்லி முடிக்கையில் நெற்றிக் கண் ஒளிர்ந்தது. அது அவன் சொன்னதை ஆமோதிப்பதாக இங்கு சில பைத்தியங்கள் நினைக்கக்கூடும் என்ற எண்ணம் விஸ்வத்தின் மனதை அரித்தது.

க்ரிஷ் சொன்னான். “அங்கே அந்த நெற்றிக்கண்ணைப் பொருத்தியவுடன் மாஸ்டர் சக்தி வீச்சை நிறையவே உணர்ந்ததால் அங்கேயே சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கிறார். சக்தியின் உச்சமும், அமைதியின் உச்சமுமான நிலையை அடைந்திருக்கிறார். புதிய மனிதராக மாறியிருக்கிறார். அதன் பாதிப்பு அவருக்கு எந்த அளவு இருந்ததென்றால் ஒரே ஒரு முறை அங்கிருந்து வந்து எங்கள் எல்லோரிடம் இருந்தும் விடைபெற்றுத் திரும்பிப் போய் விட்டார். அந்தக் குகையில் இன்னொரு தவம் தொடர்ந்து வருகிறது.  அதே குகை, யோக நிலையில் அதே சிவன், அந்த நெற்றிக் கண்ணும், அந்தத் தவசியும் மட்டும் வேறு வேறு….. உலக நன்மைக்காக, அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக நம் நண்பர் முட்டாள்தனம் என்று சொல்லும் தவம் அகஸ்டின் விட்ட இடத்திலிருந்து மறுபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது….”

விஸ்வத்துக்கு க்ரிஷின் யுக்தி இப்போது புரிந்தது. யாரையோ விஸ்வம் அலட்சியப்படுத்தினான், ஏமாற்றினான், கொன்றான் என்றால் இல்லுமினாட்டிக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இல்லுமினாட்டியின் மதிப்பிற்குரிய ஒரு தவசியை அவன் அதன்  உறுப்பினராக இருந்து கொண்டு அவமதித்திருக்கிறான் என்றால்….? விஸ்வத்தை இறக்கி மாஸ்டரை அகஸ்டினுக்கு இணையாக உயர்த்தி க்ரிஷ் வார்த்தை ஜாலம் புரிகிறான்….. அவன் எண்ணத்தைப் படிக்க முடிந்தது போல அந்தக் குகையில் இருந்த மாஸ்டர் அவரைப் பார்த்துப் புன்னகைப்பதைப் பார்த்து விஸ்வம் ஆத்திரமடைந்தான்.

விஸ்வம் தனிமனிதர்களின் மனங்களையும், கூட்ட மனிதர்களின் மனங்களையும் ஆழமாய் அலசி ஆராய்ந்தவன்.  ஸ்டீபன் தாம்சனின் நூலைப் படித்ததோடு அல்லாமல் அவருடன் மணிக்கணக்கில் அதைப் பற்றி விவாதித்து அறிந்தவன். அந்த மனோதத்துவத்தை வைத்து தான் அவன் தன் உரையைத் தயாரித்திருந்தான். இல்லுமினாட்டியிடம் க்ரிஷ் பேசக்கூட எதுவுமே இல்லை என்னும் அளவுக்குக் கச்சிதமாக அவன் உரையும் அமைந்திருந்தது. ஆனால் க்ரிஷும் ஸ்டீபன் தாம்சன் படித்தவன். அவனும் எதிலும் ஆழமாய்ப் போக முடிந்தவன்….. இல்லுமினாட்டியைக் கவரும்படி எதுவுமே பேச விஷயமில்லாதவன் அகஸ்டின் என்ற ஒற்றைக் கிளையை வைத்து உயர எழும்பிக் கொண்டிருக்கிறான். இந்த முட்டாள்களும் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…. சதாசிவ நம்பூதிரியின் ஒரு விதைக்குள் எத்தனை மரம், எத்தனை காடுகள் உதாரணம் நினைவு வந்து தொலைத்தது…..

க்ரிஷ் தொடர்ந்தான். “நான் நம் நண்பர் சொன்ன ஒரு விஷயத்தை நூறு சதம் ஒத்துக் கொள்கிறேன். அவனவன் நலத்தை அவனவனே அதிகம் விரும்ப வேண்டும். அவனே அதற்கு அதிகம் உழைக்க வேண்டும். அது தான் சரி. ஆனால் அடுத்தவன் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தைகளை நினைப்பீர்களா, உங்கள் உயிருக்குயிரானவர்களை நினைப்பீர்களா? அவர்களுக்காக நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா? அப்படியானால் அகஸ்டின் உங்கள் இயக்கத்துக்காக தவமிருந்ததை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? முட்டாள்தனமா? உங்களைச் சோம்பேறிகளாகக் குறைக்கும் முயற்சியா? உங்கள் மீது அக்கறையும் அன்பும் இருந்ததாலும், இந்த உயர்வு மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று நினைத்ததாலும் அல்லவா அவர் இவ்வளவு காலம் தன்னுடைய வாழ்வை அதற்காக அர்ப்பணித்தார்?”

“நம் நண்பர் மனதில் அக்னியோடு பிறந்து ஒவ்வொன்றையும் கற்றதையும், மேலும் மேலும் உயர்ந்து வளர்ந்ததையும் சொன்னார். இந்த விஷயத்தில் அவரை இனி என் உதாரண புருஷனாக நான் வைத்துக் கொள்வேன். அந்த அக்னி, அந்த உழைப்பு, அந்தத் தீவிரம் எல்லாம் தான் எந்த வெற்றிக்கும் தாரக மந்திரம். ஆனால் எல்லா வளர்ச்சியிலும் நோக்கம் அல்லவா முக்கியம். நோக்கம் நன்றாக இருந்தால் அல்லவா எல்லா வளர்ச்சியும் பயன் அளிக்கும். வெறும் சக்திக்குவிப்பு உங்களுக்குப் பாதுகாப்பு தருமா? அணுகுண்டின் சக்தி எல்லையில்லாதது. அதைப் பார்த்து நாம் வியக்கலாம். அதன் சக்தியை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதைத் தலையணைக்கு அடியில் வைத்து நிம்மதியாக நீங்கள் உறங்க முடியுமா?”

“நம் நண்பர் தன் வாழ்நாள் கதையைச் சொன்னார். அருமையான வெற்றிக் கதை தான். ஆனால் அந்தக் கதையில் அவர் நன்றியோடிருந்த காட்சியும், நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருந்த காட்சியும் இல்லவே இல்லையே. அவர் ஒரு குருவையாவது நினைவு வைத்து பூஜித்திருக்கிறாரா? யாரையாவது வழிகாட்டியாய் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறாரா? எல்லாம் நான்…. நான்….. நான்…… அது போகட்டும். அவரையே முழுவதுமாய் நம்பி தங்கள் கஜானாவையே ஒப்படைத்திருந்த ஒரு இயக்கத்தை வஞ்சித்து விட்டு உங்களிடம் வந்திருக்கிறார். அவரை நீங்கள் நம்பி ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நிறுவனத்தை ஒருவன் ஏமாற்றி விட்டு வந்திருப்பது தெரிய வந்தால் வேறெந்த நிறுவனமும் அவனைச் சேர்த்துக் கொள்ளாது. அந்த சாதாரண அறிவை இல்லுமினாட்டி எப்படித் தவற விட்டது? அதில் திருடிய பணத்தில் பாதி வந்து சேர்ந்ததாலா? அந்த ஆன்மிக இயக்கத்தை ஏமாற்றியது போல் இல்லுமினாட்டியையும் ஏமாற்ற மாட்டார் என்பது எப்படி நிச்சயம்? ஏமாற்றிய பின் எத்தனையோ காரணம் சொல்லலாம். இந்தியாவின் ஆன்மிக இயக்கத்தை முட்டாள்தனம், சோம்பேறித்தனம் என்று சொன்னது போல உங்களையும் பதவி வெறியர்கள், அகங்காரிகள் என்றெல்லாம் கூட வேறொரு இயக்கத்தில் சொன்னால் அவர்களுக்கு எதிராக இல்லாத வரையில் அவர்களும் நம்பக்கூடும் அல்லவா?”

விஸ்வம் இந்தப் பேச்சு போகும் போக்கை வெறுத்தான். ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீசர் நாடகத்தில் ப்ரூட்டஸின் பேச்சைப் பாராட்டிப் பாராட்டிப் பேசியே மார்க் ஆண்டனி கழுத்தறுப்பது போல் அல்லவா இவன் பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அவன்  எத்தனை அழகாய் இவர்கள் மனதில் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கி விட்டிருந்தான். இவன் அதன் அஸ்திவாரத்தையே அல்லவா தகர்த்துக் கொண்டிருக்கிறான். இல்லுமினாட்டி மேடையில் அவர்களே முட்டாள்தனமாகவும், சுயநலமாகவும் அவனை நம்பிச் சேர்த்திருக்கிறார்கள் என்றல்லவா வெளிப்படையாகச் சொல்கிறான். இந்த இல்லுமினாட்டி மடையர்களும் மகுடி முன் பாம்பாக அல்லவா அதை மயங்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் க்ரிஷை வெறுத்தான். அகஸ்டினை வெறுத்தான். க்ரிஷ் தொடும் போதெல்லாம் மின்னும் அந்தச் சின்னத்தை வெறுத்தான். அது மின்னி மின்னிக் கழுத்தறுத்து விட்டது. இவன் பேச்சையாவது ஏதாவது விதத்தில் கடைசியில் மறுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவனைத் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக அடையாளம் காட்ட முற்பட்டிருக்கும் இந்த ஒளிரும் சின்னத்தை யோக சக்தியால் அணைத்து விட வேண்டும். அந்தச் சின்னத்திலிருந்து தான் அவனுக்குப் பேச விஷயங்கள் கிடைப்பது போல அவனுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்தச் சின்னம் இருப்பதால் தான் அதன் மூலமாக மாஸ்டர் அங்கிருந்து இங்கு நடப்பதைத் தொலைக்காட்சி பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் இனி மின்னாதபடியாகவாவது பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து….. பிறகு அது ஒளிர நிறுத்தியதை மையமாக வைத்து விஸ்வம் பிறகு பேசலாம்……  விஸ்வம் தன் சக்திகளைக் குவிக்க ஆரம்பித்தான்.

க்ரிஷ் சொன்னான். “ஐந்து தீவிரவாத இயக்கங்களுக்குத் திருட்டுப்பணம் தந்து, அவர்களுக்குத் தகுந்த மாதிரி பேசி ஏமாற்றி என் பிடியில் வைத்திருக்கிறேன் என்று நம் நண்பர் பெருமை பேசினார். இப்போது  அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் தீவிரவாதிகளின் தேவைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும். தொடந்து அவர்களைத் திருப்திப்படுத்த யாராலும் முடியாது. ஒரு தீவிரவாதக்கூட்டத்தையே தொடர்ந்து சமாளிக்க முடியாத நிலை வரும் என்ற யதார்த்த நிலை இருக்கையில் இவர் ஐந்து எதிரெதிர் இயக்கங்களை தொடர்ந்து திருப்திப்படுத்த முடியவே முடியாது.. தீவிரவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை வளர்த்த தலைவர்கள் காலப்போக்கில் அவர்களாலேயே செத்து மடிந்த வரலாறு வேண்டுமளவு இருக்கிறது. சம்பந்தப்படும் அனைவரையும் தீவிரவாதம் அழித்தே தீரும். பணம், அதிகாரம், சாமர்த்தியம் எல்லாம் எத்தனை இருந்தாலும் அது ஏற்படுத்த முடிந்த அழிவில் இருந்து தப்பிக்கப் போதவே போதாது. செய்து விட்டுத் தான் சொல்வேன் என்று பெருமை பேசிய நண்பர் சிந்தித்து விட்டுத் தான் செய்வேன் என்று சொல்லியிருந்தால் மெச்சியிருப்பேன்…. முட்டாள்தனத்தைச் செய்து விட்டுத் தெரிவிப்பது படுமுட்டாள்தனம்.”

விஸ்வத்துக்கு பேச்சு நாராசமாகக் காதில் விழுந்தது. இவனை இப்படிப் பேச விட்டு உட்கார்ந்து கேட்கும் நிலைமை வரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. விஸ்வத்தின் பேச்சை அரை மணி நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அதில் சொல்லியிருந்த ஒவ்வொன்றிலும் இருக்கும் ஓட்டைகளை இப்படி எடுத்துக் காட்டி காட்டி கிழித்து வீசுகிறானே. தலைவனாக உயர்ந்து கொண்டிருந்தவனை திருடனாகக் காட்டி இப்போது கோமாளி போலவும் காட்ட ஆரம்பித்து விட்டானே….. இந்த எண்ணங்கள் எல்லாம் அலைமோதி அவன் மனம் ஒருநிலையில் குவிய மறுத்தது. இத்தனை காலம் தேவையான நேரத்தில் நினைத்தபடியெல்லாம் ஒத்துழைத்த மனம் அவன் வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் க்ரிஷ் பேச்சால் நிலை குலைந்து குவிய மறுப்பதை அவனால் சகிக்க முடியவில்லை.

இது க்ரிஷ் தயாரித்துக் கொண்டு வந்த பேச்சாய் தோன்றவில்லை. ஏன் என்றால் விஸ்வம் என்ன பேசுவான் என்று பெரிதாய் அவன் யூகித்திருக்க வழியில்லை. இதை எல்லாம் அவனுக்கு எடுத்துத் தருவது அவன் தொடும் போதெல்லாம் மின்னும் அந்த பிரமிடு கண் சின்னமாகவே இருக்க வேண்டும் என்பது இப்போது அவனுக்கு உறுதியாகவே தெரிந்து விட்டது. எல்லாம் இந்தச் சின்னத்தின் சித்து வித்தை தான். இனி இந்தப் பேச்சு தொடரக்கூடாது. தீர்மானித்த விஸ்வம் சகலமும் மறந்து தீவிர உறுதியோடு மனதை ஒருமைப்படுத்தினான். தன் சகல சக்திகளையும் ஒருமுனைப்படுத்திக் குவித்தான். அந்தச் சின்னத்தைச் சுற்றி சக்தி வாய்ந்த ஒரு அரணை ஏற்படுத்தி அதன் எந்த சக்தியும் அந்த அரணைத் தாண்டிப் பரவாதபடி சிறைப்படுத்த  முடிவு செய்து, குவித்த சக்திகளை அந்த பிரமிடு நெற்றிக்கண் சின்னத்தில் விஸ்வம் பிரயோகித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, May 29, 2019

விடாது துரத்தி விதியை வென்றவர்!


சிகரம் தொட்ட அகரம் - 8

விதி சிலரது வாழ்வில் குரூரமாக விளையாடி விடுவதுண்டு. திறமையும், உழைப்பும் இருந்தால் முன்னேறி விடலாம் என்ற நியாயமான எதிர்பார்ப்பைப் பார்த்து அது எள்ளி நகையாடுவதுண்டு. எதிர்மாறான சூழல்களை உருவாக்குவதுண்டு. விபத்துகளை ஏற்படுத்துவது உண்டு. திறமைக்கு ஏற்ப வரும் வாய்ப்புகளை விதி தட்டிப் பறித்துக் கொள்வதும் உண்டு.

இப்படி விதியால் பாதிக்கப்படும் போது பலர் ஓரளவு போராடிப் பார்த்து கடைசியில் விதி வலிது என்று புரிந்து வேதனையுடன் பின் வாங்கி விடுவதுண்டு. எத்தனை வலிமையாக விதி விளையாடினாலும் விதிக்குத் தலைவணங்காமல் கடைசி வரை எதிர்த்துப் போராடி முடிவில் வெற்றி பெற்றே ஓயும் அபூர்வ மனிதர்களும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர் தான் கரோலி டாகாக்ஸ் என்ற ஹங்கேரி நாட்டுக்காரர்.

1910ஆம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் பிறந்த கரோலி டாகாக்ஸ் இளம் வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். துப்பாக்கி சுடுவதில் அபாரமான திறமை உள்ள அவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட்டால் கண்டிப்பாக தங்கப் பதக்கம் பெறுவார் என்று விளையாட்டு வல்லுனர்கள் கணித்தார்கள். அவரும் 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தன்னைக் கடுமையாகத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹங்கேரி நாட்டு சட்டப்படி இராணுவ சார்ஜெண்டுகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தடை இருப்பது பின்னர் தான் சார்ஜெண்டான அவருக்குத் தெரிய வந்தது. அதனால் 1936 பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில் அவரால் பங்கு கொள்ள முடியவில்லை.

ஒலிம்பிக் விளையாட்டுகள் முடிந்த பின் ஹங்கேரி அரசாங்கம் அந்தத் தடை ஷரத்தை ரத்து செய்தது.  மறுபடியும்  கரோலி டாகாக்ஸ் உற்சாகமடைந்து அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் மேற்கொண்டார். 1939 ஆம் ஆண்டு ஒரு இராணுவப் பயிற்சியின் போது கை எறிகுண்டு ஒன்றைக் கையாளும் போது அது அவர் வலது கையிலேயே வெடித்து விட்டது.

வேறொருவராக இருந்தால் விதியின் இந்தக் குரூரச் செயலில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பார்கள். ஆனால் கரோலி டாகாக்ஸ் அவர்களில் ஒருவரல்ல. சில நாட்கள் வேதனைப்பட்ட அவர் வலது கை போனால் என்ன இடது கை இருக்கிறதல்லவா என்று அதில் பயிற்சிகளை ஆரம்பித்தார். ஆனால் வலது கைக்கு கைகூடிய அந்த அசாத்தியத் திறமை இடது கைக்குக் கைகூடவில்லை. ஆனாலும் கரோலி டாகாக்ஸ் விடாமல் பயிற்சி எடுத்தார்.

சில மாதங்களில் ஹங்கேரியில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற போது கரோலி டாகாக்ஸ் அங்கே சென்றார். போட்டியாளர்கள் அவரிடம் வந்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிலைமையிலும் வருத்தப்பட்டு ஒதுங்கி விடாமல் துப்பாக்கி  சுடுதல் போட்டியில் உள்ள ஆர்வம் காரணமாகப் பார்வையாளராக வர முடிந்த அவர் தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் பாராட்டினார்கள்.

கரோலி டாகாக்ஸ் சொன்னார். “நான் பார்வையாளனாக வரவில்லை. போட்டியாளனாகத் தான் வந்திருக்கிறேன்”

அவர்கள் ஆரம்பத்தில் திகைத்துப் பின் இரக்கத்துடன் அவரைப் பார்த்தார்கள். ஆனால் அவர் அந்தப் போட்டியில் இடது கையால் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்து சுடுவதில் முதலிடம் பெற்று அவர்களைப் பிரமிக்க வைத்தார்.


தேசிய அளவில் சாதித்ததை உலக அளவில் ஒலிம்பிக்ஸிலும் சாதித்து விட வேண்டும் என்று ஆவலோடு 1940 ஆண்டின் ஒலிம்பிக்ஸை எதிர்பார்த்து இருந்தவருக்கு மறுபடி ஏமாற்றம் 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் இரண்டாம் உலகப்போரின் காரணமாக நடைபெறவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகளில் இளம் வயதில் வெல்வது எளிது. வயதாக வயதாக வெற்றி வாய்ப்புகள் குறைவு என்பதே யதார்த்த நிலையாக இருந்தது.

ஆனால் கரோலி டாகாக்ஸ் யதார்த்தவாதி அல்ல. மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளையும், 12 ஆண்டுகளையும், வலது கையையும் இழந்தும் அவர் ஊக்கத்தையும், தன் லட்சிய தாகத்தையும் இழந்து விடவில்லை. 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்ஸில் உற்சாகம் குறையாமல் கலந்து கொண்டார். அதில் தங்கம் பெற்று வெற்றி வாகை சூடினார். அதோடு அவர் விட்டுவிடவில்லை. அடுத்ததாக 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக்ஸிலும் துப்பாக்கி சுடுதலில் தங்கம் பெற்று வரலாறு படைத்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி “ஒலிம்பிக் கதாநாயகர்கள்” என்ற பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டது.

சின்னத் தடங்கல் வந்து விட்டாலே விதியை நொந்துப் பின்வாங்கி வாழ்நாள் பூராவும் புலம்பி நிற்கும் மனிதர்கள் ஒருகணம் கரோலி டாகாக்ஸை நினைத்துப் பார்க்க வேண்டும். எத்தனை தடைகள் அவருக்கு வந்தன!. ஆரம்பத்தில் சட்டம் சதி செய்தது. பிறகு அவர் திறமைக்கு அடிப்படையான வலது கையே பறி போனது. பின் உலகப் போர் காரணமாக அவர் பங்கேற்க ஆசைப்பட்ட விளையாட்டுப் போட்டிகளே நடைபெறாமல் போயின. பன்னிரண்டாண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அந்த மிக நீண்ட காலத்தில் தாக்குப் பிடித்து நின்று, முழு முயற்சியுடன் பயிற்சிகள் எடுத்து வென்று காட்டிய அந்த மன உறுதியும், உழைப்பும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியவை அல்லவா?

என்.கணேசன்


Monday, May 27, 2019

சத்ரபதி 74


ழுத்து நெறிக்கப்பட்டு மயங்கி விழப் போகும் தருணத்தில், கண் பார்வைக்கு எல்லாக் காட்சிகளும் மறைந்து கருத்துப் போன நேரத்தில், அன்னை பவானி சகல தேஜஸுடன் சிவாஜியின் கண்களுக்குத் தெரிந்தாள். அப்சல்கான் திருகிய கழுத்துடன் இறக்கப் போகும் சிவாஜியின் உயிர் மிச்சமிருந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இடது கையால் கழுத்தை நெறித்தவன் வலது கையால் தன் வாளை எடுத்து சிவாஜியின் வயிற்றில் மின்னல் வேகத்தில் குத்தினான்.

அது வரை அருகிலேயே இருந்த போதும், சிவாஜியின் முகம் தெரியாததால் ஜீவ மஹல்லா நடப்பது என்ன என்பதை உணரவில்லை. ஏதோ வித்தியாசமாக இருப்பதை உள்ளுணர்வு எச்சரித்த போதும் சிவாஜி தான் எதோ விளையாடுகிறான் என்று நினைத்தான். ஆனால் அப்சல்கான் தன் வாளை எடுத்து சிவாஜியின் வயிற்றில் வேகமாகக் குத்தியவுடன் தான் அபாயத்தை உணர்ந்தான். சிவாஜி சையத் பாண்டா மீது மட்டுமே கவனம் செலுத்தச் சொல்லியிருந்ததால் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் ஒரு கணம் தடுமாறினான்.

ஆனால் அப்சல்கானின் வாள் சிவாஜியின் ஆடையைக் கிழித்ததேயொழிய அவன் உடலை நெருங்கவில்லை. சிவாஜி இரும்புக் கவசம் அணிந்திருந்ததால் சத்தமாக முனை மழுங்கியது. அன்னை பவானியைக் கண்ட பின் சிவாஜி அவளிடமிருந்து எல்லையற்ற பலத்தைப் பெற்றவனாக உணர்ந்தான். அசுர பலத்துடன் அவன் திமிறியபடியே தன் கையில் அணிந்திருந்த ரம்பப் புலி நகத்தால்  அப்சல்கானின் வயிற்றைக் கீறியவன், இன்னொரு கையில் மறைத்திருந்த பிச்சுவாக் கத்தியால் அப்சல்கானை சரமாரியாகக் குத்தினான்.
       
அப்சல்கான் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்பாராத பேரதிர்ச்சிகளை உணர்ந்தான்.  முதலாவதாக அவன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்த பிறகு இது வரை யாரும் தப்பியதில்லை. அந்த அளவு பலமுள்ள ஆளை அவன் சந்தித்ததில்லை. ஆரம்பத்தில் தளர்ந்த சிவாஜி திடீரென்று அசுர பலம் பெற்றதெப்படி என்பது அவனுக்குப் புரியாததால் அதிர்ச்சி அடைந்தான். அடுத்தபடியாக அவன் சிவாஜி இப்படி ரகசிய ஆயுதங்களுடன் வருவான் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி வந்தவன் அவனைக் காயப்படுத்தும் அளவு சக்தியை வைத்திருப்பான் என்பது இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த அதிர்ச்சி சிவாஜி இரும்புக் கவசம் அணிந்திருந்ததும், குத்திய வாளின் முனை மழுங்கியதும் ஏற்பட்டது. ஆனாலும் அவன் தளர்ந்து விடவில்லை. வலியால் துடித்த போதும் அவன் தன் வாளால் ஓங்கி சிவாஜியின் உச்சந்தலையை வெட்டினான்.  அந்த வாள் சிவாஜியின் தலைப்பாகையை வெட்டி தலையில் அணிந்திருந்த இரும்புக் குல்லாயைத் தாக்கிய வேகத்தில் சிவாஜியின் தலையில் சிறு காயம் ஏற்பட்டதே ஒழிய அப்சல்கான் எதிர்பார்த்தபடி சிவாஜியின் தலை பிளந்து விடவில்லை.

ஒவ்வொரு உறுப்புக்கும் இப்படி பாதுகாவலை ஏற்படுத்திக் கொண்டு அவன் வந்திருப்பான் என்று எதிர்பாராத அப்சல்கானின் பிடி சிவாஜியின் தாக்குதல்களால் தானாகத் தளர்ந்தது. ஆனால் தளர்வதற்கு முன் சிவாஜியின் பிச்சுவா கத்தியைப் பிடுங்கி வீசினான். உடனே சிவாஜி அருகில் இருந்த ஜீவ மஹல்லாவின் இரண்டு வாள்களில் ஒன்றை உருவி அப்சல்கானைத் தோள்பட்டையில் தாக்கினான். படுகாயம் அடைந்த அப்சல்கான் அலறியபடி உதவிக்கு சையத் பாண்டாவை அழைத்தான்.

மிக வேகமாக ஓடி வந்த சையத் பாண்டா தீவிரமாக சிவாஜியைத் தன் நீண்ட வாளால் தாக்க ஆரம்பித்தான். அவன் வாள் தன்னைத் தீண்டி விடாமல் சிவாஜி வாளால் தடுத்து தற்காத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஜீவ மஹல்லா அந்த நேரத்தில் தன் வாளால் சையத் பாண்டாவின் வலது கையை வெட்டி வீழ்த்தினான். ஜீவ மஹல்லாவின் அடுத்தபடியான வாள் பிரயோகத்தில் சையத் பாண்டா இறந்து வீழ்ந்தான்.

அதிர்ந்து போன அப்சல்கான் தப்பி ஓட முயற்சிக்கையில் பின்தொடரப் போன சிவாஜியை கிருஷ்ணாஜி பாஸ்கர் தன் வாளை எடுத்துக் கொண்டு இடைமறித்தார். சூழ்ச்சி வலையிலிருந்து சிவாஜி தப்பித்தால் அப்சல்கானைத் தாக்கக்கூடும் அல்லது கொல்லவும் கூடும் என்று முன்கூட்டியே அறிந்திருந்தாலும் அது நிகழும் சூழல் ஏற்பட்ட போது அந்த மனிதரால் செயலற்று இருக்க முடியவில்லை. அப்சல்கானிடம் பல வருடங்களாக ஊழியம் புரிந்தவர் அவர்…

அப்சல்கான் தப்பித்து வெளியே ஓடினான். ஏந்திய வாளுடன் இடைமறித்த கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் சிவாஜி மரியாதை கலந்த புன்னகையுடன் சொன்னான். “என் வாளில் நல்லவர்களின் இரத்தம் படிவதை நான் விரும்பவில்லை பெரியவரே. தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்”. சொன்னபடியே சிவாஜி பலம் பிரயோகித்து அவர் வாளைத் தன் வாளால் தட்டி விட கிருஷ்ணாஜி பாஸ்கர் கையிலிருந்த வாள் பறந்து போய் ஓரத்தில் விழுந்தது. இனி செய்ய முடிந்தது எதுவுமில்லை என்று எண்ணியவராக கிருஷ்ணாஜி பாஸ்கர் ஒதுங்கினார்.

அப்சல்கான் காயங்களுடன் ரத்தம் வழிய வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அவனுடைய பல்லக்குத் தூக்கி வீரர்கள் அவனைத் தூக்கிச் செல்லப் பல்லக்குடன் வேகமாக ஓடி வந்தார்கள். அதே சமயம் சம்பாஜி காவ்ஜியும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். அப்சல்கானின் அந்த பல்லக்குத் தூக்கி வீரர்களும், அந்த இடத்தில் இருந்த சிவாஜியின் வீரர்களும் சேர்ந்து சிறிது நேரம் போரிட்டார்கள். அப்சல்கானின் சில வீரர்கள் போராட, மீதமுள்ளவர்கள் அப்சல்கானைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல விரைந்தார்கள். ஆனால் சம்பாஜி காவ்ஜி அவர்களை நூறடிகள் கூடத் தாண்ட விடவில்லை. பல்லக்குத் தூக்கி வீரர்களை அவன் காயப்படுத்தியதால் அவர்கள் வேறு வழியில்லாமல் பல்லக்கை இறக்கி வைக்க வேண்டியதாயிற்று. சம்பாஜி காவ்ஜி பல்லக்கிலிருந்தும் தப்பி ஓட யத்தனித்த அப்சல்கானின் தலையை வெட்டிக் கொன்றான்.

சம்பாஜி காவ்ஜி அப்சல்கானின் தலையை எடுத்துக் கொண்டு சிவாஜியை நோக்கி வந்தான். அவனையே பார்த்தபடி நின்ற சிவாஜி மானசீகமாக அன்னை பவானியை வணங்கினான். சொந்த சக்தி மட்டுமே வைத்துக் கொண்டு அவன் அப்சல் கானை வென்றிருக்க முடியாது. அன்னை பவானி மட்டும் அருள் புரிந்திருக்கவில்லை என்றால் துண்டிக்கப்பட்டிருக்கும் தலை அப்சல்கானுடையதாய் இல்லாமல் அவனுடையதாக இருந்திருக்கும். அவன் கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்ட நிலையில் அவள் அல்லவா காப்பாற்றினாள்….

சம்பாஜி காவ்ஜி அப்சல்கானின் தலையை நீட்டியபடி சொன்னான். “மன்னரே. உங்களுக்கு இந்த அடியவனின் அன்புப் பரிசு….”

சிவாஜி சொன்னான். “வாழ்த்துக்கள் சம்பாஜி. இந்த உலகம் உன்னை இனி என்றென்றும் நினைவு வைத்திருக்கும். ஏனென்றால் சூழ்ச்சிகள் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தவனின் சூழ்ச்சிகளுக்கு நீ முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாய். இந்தத் தலையை ராஜ்கட்டில் இருக்கும் என் தாயிற்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்……”

சம்பாஜி காவ்ஜி கேட்டான். “அப்சல்கானின் உடலை என்ன செய்வது அரசே”

“தகுந்த மரியாதையுடன் அவன் மத வழக்கப்படியே அந்திமக்கிரியைகள் செய்து புதைக்க ஏற்பாடு செய் சம்பாஜி. இதற்கு நம் இஸ்லாமிய நண்பர்களின் உதவியைப் பெற்றுக் கொள். அப்சல்கான் சூழ்ச்சிக்காரன் ஆனாலும் மாவீரனும் கூட… அதனால் அவனது அந்த உரிமையை நாம் மறுத்து விடக் கூடாது....”

சம்பாஜி காவ்ஜியால் சிவாஜியை வியக்காமல் இருக்க முடியவில்லை. வெற்றியின் தருணங்களில் எதிரியிடம் பெருந்தன்மையாக இருக்க எத்தனை பேருக்கு முடியும்? அதுவும் அவனைச் சூழ்ச்சியால் கொல்ல முயன்றவனுக்கு, முன்னமே அவன் அண்ணனைக் கொன்ற சூழ்ச்சியிலும் பங்கிருந்தவனுக்கு, பெருந்தன்மை காட்டுவது யாருக்காவது சாத்தியமா?

சிவாஜி பிரதாப்கட் கோட்டைக்கு விரைந்தான். நுழைந்தவுடன் அங்கு தயாராக இருந்த வீரர்களிடம் அவன் சைகை செய்ய, மேளங்கள் மிகச் சத்தமாகக் கொட்டப்பட்டன. இது முன்பே அவர்கள் திட்டமிட்டுத் தீர்மானித்திருந்த சமிக்ஞை. இந்தச் சத்தம் கேட்டவுடன் நேதாஜி பால்கர் தலைமையில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தயாராக விரிந்து காத்திருந்த சிவாஜியின் படை பீஜாப்பூர் படையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

பீஜாப்பூர் படை இந்தத் திடீர்த் தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை. மேளச்சத்தம் கேட்டவுடன் சிவாஜி- அப்சல்கான் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததைக் கொண்டாடுகிறார்கள் என்று தான் நினைத்திருந்தார்கள். பல பக்கங்களிலிருந்தும் சிவாஜியின் படை தாக்குதல் ஆரம்பித்த போது அவர்களால் உடனடியாகச் சுதாரிக்க முடியவில்லை. ஒருவழியாக அவர்கள் சுதாரித்துப் போராட ஆரம்பித்த போது அப்சல்கானின் தலை வெட்டப்பட்ட செய்தி அவர்களை வந்து சேர்ந்தது.

கிட்டத்தட்ட எல்லாப் போர்களுமே வீரர்களின் மனங்களின் தீவிரத்தைப் பொறுத்தே வெற்றி தோல்விகளில் முடிகின்றன. பீஜாப்பூர் படைவீரர்கள் முன்பே பல அபசகுனங்களைக் கண்டவர்கள். அப்சல்கானைத் தலையில்லாத முண்டமாக ஒரு பரதேசி சொல்லியிருந்ததும், அப்சல்கானின் யானை முன்பே முன்னோக்கி நகர மறுத்ததும் தோல்விக்கான சகுனமாக அவர்களில் பலரைப் பாதித்திருந்தது. இப்போது பரதேசி சொன்னது போல அப்சல்கானின் தலையும் துண்டிக்கப்பட்டு விட்டது. அப்சல்கானுக்கு அடுத்தபடியாக அவர்களைத் தலைமை தாங்கிப் போரிட ஆளில்லை. அப்சல்கானின் மூன்று மகன்கள் அங்கு இருந்தார்கள் என்றாலும் அவர்கள் அப்சல்கானுக்கு இணையானவர்கள் இல்லை. மேலும் இருட்ட ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில் இந்த காட்டு மலைப்பகுதியில் போரிட அவர்களில் மாவல் வீரர்களைத் தவிர மற்றவர்கள் பழக்கப்படாதவர்கள்…. வெற்றிக்கான முகாந்திரம் எதுவுமே இல்லாத போது போரிட்டுச் சாக வீரர்கள் தயாராக இல்லை. சரணடைவதே மேல் என்று வீரர்கள் பலரும் முடிவு செய்ய போர் பல இடங்களில் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.


ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து போராடியவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். அவர்களில் ஒருவர் ஷாஹாஜியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்…..

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, May 23, 2019

இருவேறு உலகம் – 137


விஸ்வம் லேசாகத் தலைவணங்கி விட்டு மேடையை விட்டு இறங்கினான். அந்த இல்லுமினாட்டிச் சின்னத்தை அவன் பேச்சு மேடையில் இருந்து எடுத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே அதை அங்கேயே விட்டு வந்தான். உறுப்பினர்கள் கண் பார்வை க்ரிஷ் பேசி முடித்து கூட்டம் முடிவடையும் வரை அந்தச் சின்னத்தில் விழுந்தபடியே இருப்பது தனக்கு அனுகூலம் என்று விஸ்வம் நினைத்தான். க்ரிஷ் பேசப் பேச அந்தச் சின்னம் அவனுக்கு முன்னால் இருந்து கொண்டு விஸ்வத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும்…. கைதட்டல் விஸ்வம் திரும்பவும் வந்து தன் இருக்கையில் அமரும் வரை தொடர்ந்தது. இருவர் வந்து க்ரிஷை மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பேச்சு மேடை முன் அவனை நிறுத்தி அவன் கையைப் பிடித்து மைக்கை உணரவைத்து விட்டு ஒரு நிமிடம்  வேறெதாவது உதவி அவனுக்குத் தேவைப்படுமா என்று கவனித்துப் பார்த்து விட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள்.

க்ரிஷ் மனம் வெறுமையாக இருந்தது. என்ன பேசுவது என்ன சொல்வது என்று பலதை முன்பே நினைத்து வைத்திருந்தாலும் மேடையேறிய கணமே அந்த நினைவுகள் விடைபெற்றது போல வெறுமையே மிஞ்சியது. ஒரு நிமிடம் அவன் மௌனமாக நின்றான். விஸ்வத்துக்கு அவனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கண்களைக் கட்டி காந்தாரி போல பரிதாபமாய் நிற்கிற அவனுக்கு விஸ்வத்துக்கெதிராய் பேச எதுவுமே இருக்க வாய்ப்பில்லை என்று விஸ்வம் முன்பே கணித்திருந்தான். அதை மெய்ப்பிப்பது போலத் தான் க்ரிஷ் மௌனமாய் நின்று கொண்டிருக்கிறான். இந்தக் கேவலம் உனக்குத் தேவையா க்ரிஷ்? என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டான்.

க்ரிஷ் கை பேச்சு மேடையில் இருந்த நெற்றிக்கண் கல்லில் பட்டது. அது என்ன என்று தொட்டுப் பார்த்த போது அந்தச் சின்னத்தை சபைக்குக் காட்டிய விஸ்வம் அதை விட்டுப் போயிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். க்ரிஷ் கை பட்டவுடனே அந்தச் சின்னம் ஒரு முறை ஒளிர்ந்து மறைந்தது. விஸ்வம் திகைத்தான். என்ன இது? அவன் தொட்டாலும் ஒளிர்கிறதே! க்ரிஷின்  கை அந்த நெற்றிக்கண் கல்லில் பட்டவுடனேயே க்ரிஷின் மூடிய கண்கள் முன் ஒரு காட்சி தெரிய ஆரம்பித்தது. பனிமலைக் குகையில் மாஸ்டர் தெரிந்தார். அவருக்குப் பின் சிவனுடைய முகச் சிற்பம் தெரிந்தது. சிவன் யோக நிலையில் இருந்தான். சிவனின் கண்களும், நெற்றிக்கண்ணும் பாதி மூடிய நிலையில் இருந்தன. மாஸ்டரைப் பார்த்ததும் க்ரிஷ் முகம் மலர்ந்தது. தலைதாழ்த்தி அவன் அவரை வணங்கினான். அவர் சாந்தமாய் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கை உயர்த்தி அவனை ஆசிர்வதித்தார்

அந்தக் காட்சி க்ரிஷுக்கு அருகில் ஒரு திரையில் தெரிவது போல் தெரிய விஸ்வம் அதிர்ச்சி அடைந்தான். பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்தான். நல்ல வேளையாக யாருக்கும் அந்தக் காட்சி தெரியவில்லை என்பதை உணர முடிந்தது. சற்று நிம்மதி அடைந்தாலும் அவனைப் பார்த்து மாஸ்டர் புன்னகைத்தது போலத் தோன்றியது எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த ஆள் யோகசக்திகளை அதிகரித்துக் கொண்டு விட்டான் போல் இருக்கிறது. அதனால் தான் அதை எனக்குக் காட்டுகிறான். ’முட்டாளே இந்தக் காட்சிகள் எல்லாம் எனக்குக் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாமே உன் கையை விட்டுப் போய் விட்டது…. ’ மனதிற்குள் சொல்லச் சொல்லத் தான் மாஸ்டருக்குப் பின்னால் தெரிந்த சிவன் சிலையில் நெற்றியில் முக்கோணத் துளை இல்லாமல் நெற்றிக்கண் பாதி மூடிய நிலையில் தெரிந்ததைக் கண்டு திகைத்தான். இந்த ஆள் அதற்குள் சரியாகப் பொருந்துகிற ஒரு நெற்றிக்கண்ணைப் பொருத்தி விட்டானோ? ’எல்லாம் சரி ஐயா உன் சிஷ்யன் இங்கே பேச வாய் வராமல் திண்டாடிக் கொண்டிருக்கிறானே உதவக்கூடாதா? இங்கே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள்’ என்று ஏளனமாக மனதிற்குள் அவரிடம் கேட்டான்.

க்ரிஷ் மெல்ல அந்தச் சின்னத்தைக் கையில் எடுத்து  பேச ஆரம்பித்தான். “இது தான் எனக்கும் முன்னால் பேசிய நம் நண்பருக்குக் கிடைத்த எங்கள் சிவனின் நெற்றிக்கண்  உங்கள் புனிதச் சின்னம் பிரமிடுக்குள் கண் என்று நினைக்கிறேன். மதங்கள் நாடுகளைக் கடந்த ஞானம் ஒன்றாகவே இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அருமையான உதாரணமாய் இருக்கிறது. இந்த ஞானம் நம்மைக் காக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு இதையே சாட்சியாக வைத்து உங்களிடம் பேச விரும்புகிறேன்” என்று தலைதாழ்த்தி அந்தச் சின்னத்தை பேச்சு மேடையிலேயே வைத்தான். அவன் கையில் வைத்திருந்த வரை தொடர்ந்து அந்தச் சின்னத்தில் அந்தக் கண் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் கீழே வைத்தபின் தான் மங்கியது. விஸ்வம் அந்தச் சின்னத்தை அங்கு வைத்து விட்டு வந்ததன் முட்டாள்தனத்தை உணர்ந்தான். ’என்னிடம் இருக்கும் போது எப்போதாவது ஒரு முறை கண்சிமிட்டும் நேரம் மட்டுமே ஒளிர்ந்த இந்தச் சின்னம் இவன் தொடும் போதெல்லாம் மிளிர்கிறதே. இதை இந்த முட்டாள்கள் அவனையே இந்தச் சின்னம் அடையாளம் காட்டுவதாகக்கூட எடுத்துக் கொள்வார்களே…… ஆனால் இவன் ஏதோ மாயா ஜாலம் செய்கிறான். இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் கையால் வாங்கியது நான் தான் என்கிற வகையில் சமாளிக்க வேண்டும்…….’

க்ரிஷ் அமைதியாகத் தொடர்ந்தான். “இந்தியக்கடவுள் சிவனின் நெற்றிக்கண்ணாகவும், உங்கள் இல்லுமினாட்டியின் புனிதச் சின்னமாகவும் இருக்கும் இந்தச் சின்னம் இன்னொரு வகையில் இந்திய ஆன்மீக இயக்கத்தையும், உங்கள் இல்லுமினாட்டியையும் இணைக்கிறது. இணைப்பவர் உங்கள் தவசி அகஸ்டின்…. அந்த வரலாறை எனக்கும் முன்னால் பேசிய நம் நண்பர் அறிவார். அதைச் சொல்ல அவர் மறந்து விட்டிருக்கலாம். ஆனால் பாதி உண்மை நூறு பொய்களை விடப் பயங்கரமானது என்பதால் முழுவதுமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”

விஸ்வம் ஆர்வமானான். ஆனால் அதே ஆர்வம் அருகில் இருந்த சிலருக்கும் ஏற்பட்டிருந்ததை இருட்டிலும் கவனிக்க முடிந்தது  சிறிது எரிச்சலைத் தந்தது. உண்மையில் அவன் பேச்சில் இவர்களுக்கு இவ்வளவு ஆர்வம் ஏற்படக் காரணம் அவன் தொடும் வரை அந்தச் சின்னம் எரிவது தான்….. ஏன் முட்டாள்களா நீங்கள் என்ன பள்ளிக் குழந்தைகளா? கல் ஒளிர்ந்தால் பரவசமாகி விடுகிறீர்கள். அது என்ன பெரிய விஷயமா? அப்படி எரிவதால் துரும்பளவாவது பிரயோஜனம் இருக்குமா? இல்லுமினாட்டி இந்த அளவு மலிவான ஆள்களை எல்லாமா வைத்திருக்கிறது என்று மனதுக்குள் பொரிந்து தள்ளினான். இன்று தன் இயல்பான அமைதியையும் பொறுமையையும் இழந்து விட்டிருப்பது புரிந்தது…… சரி இவன் என்ன சொல்லப் போகிறான் என்று பார்ப்போம் என்று கவனத்தை க்ரிஷ் பேச்சில் திருப்பினான்.

“கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன் உங்கள் இல்லுமினாட்டியின் அகஸ்டின் இந்தியா வந்து யோகக்கலை கற்றது சோம்பேறி இயக்கம் என்று நம் நண்பரால் வர்ணிக்கப்பட்ட அந்த ஆன்மிக மையத்திலாகத் தான் இருக்க வேண்டும்.....”

விஸ்வம் மனதுக்குள் அலறினான். “டேய் டேய் இது என்னடா புதுக்கதையாய் இருக்கு?” இவன் பேசி முடித்தவுடன் மறுப்பு தெரிவிக்கலாமா, இல்லை இப்போதே தெரிவிக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் க்ரிஷ் தொடர்ந்தான்.

”……. பின் அவர் உங்கள் இல்லுமினாட்டிக்காகத் தவமிருந்ததும் அதே சோம்பேறி வழியில் தான்….. அதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை பிறகு விளக்குகிறேன். முதலில் சம்பவங்களைச் சொல்கிறேன். அந்த இயக்கத்தில் உலகிற்கு ஒரு அழிவுகாலம் குறிப்பிட்ட சமயத்தில் வரும் என்றும் காப்பாற்ற ஒரு வழியையும் வழிவழியாக தலைவர் அடுத்த தலைவருக்குச் சொல்லிச் சென்றார்கள். அந்த வகையில் மாஸ்டரின் குரு மாஸ்டருக்கு ஒரு வரைபடத்தை விட்டுச் சென்றார். சற்றுமுன் பேசிய நம் நண்பர் அந்த வரைபடத்தை அறிந்து மாஸ்டருக்கு முன் நண்பர் அதை எடுத்துக் கொண்டு விட்டார். அவர் அந்த இயக்கத்திலிருந்து திருடிச் சென்றது பணம் மட்டுமல்ல அதற்குமுன்பே திருடியது இந்த வரைபடத்தை……”

விஸ்வம் எழுந்து நின்று விட்டான். பக்கத்து சீட்டில் இருந்த உறுப்பினர் அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தார். “கடைசியில் ஒட்டு மொத்தமாக மறுப்பு சொல்ல வாய்ப்பு கொடுப்பார்கள். அப்போது பேசுங்கள். இடைமறித்தால் உங்களுக்குத் தான் கெட்ட பெயர். அவன் சொல்வதாலேயே எதையும் நம்ப மாட்டார்கள். கவலைப்படாதீர்கள்”. விஸ்வம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தான். கூடவே இப்படி எவனோ ஒருவன் நம்மைக் கட்டுப்படுத்தும்படி ஆகி விட்டதே என்ற எண்ணமே அவனைக் கேவலப்படுத்தியது.

“அந்த வரைபடத்தில் ஒரு பனிமலை, மேலே திரிசூலம், அதற்கும் மேலே ஒரு பறவை இருந்தது. வேறு எந்தத் தகவலும் இல்லை. நம் நண்பர் அதைப் பார்த்து எதுவும் புரியாமல் விட்டு விட்டார். இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கலாம் என்று முன்பே யூகித்திருந்த குரு மாஸ்டருக்கு அந்த வரைபடத்தின் நகல் கிடைக்க வேறு வழியும் செய்திருந்தார். அந்த வழியில் அது அவருக்கும் கிடைத்தது. அவருக்கும் வரைபடம் சொல்வது புரியவில்லை. அந்த வரைபடம் காட்டிய பனிமலையில் குகை ஒன்றில் தான் அகஸ்டின் தவம் செய்து கொண்டிருந்தார். அந்தக் குகை மேல் ஒரு திரிசூலம் இருந்தது. அழிவுக்காலம் வரும் போது காப்பாற்றும் வழியாக உங்கள் அகஸ்டின் தவமிருந்த இடத்தை அந்த ஆன்மிக இயக்கம் காட்டியது. அகஸ்டின் தவமிருந்ததோ இல்லுமினாட்டியின் அழிவைக் காப்பாற்ற என்று நீங்கள் நினைப்பது நம் நண்பர் பேச்சில் இருந்து தெரிந்தது. இப்படி அந்த இயக்கம் உலக அழிவின் காலமாகச் சொன்னதும், ஆரகிள் உங்கள் இயக்க அழிவாகச் சொன்னதும் ஒரே காலமாக இருக்கிறது. அதே போல உங்கள் இயக்கத்தை அழிவில் இருந்து காக்க அகஸ்டின் எந்தக் குகைக்கு வந்து தவமிருந்தாரோ அந்தக் குகையை உலக அழிவில் இருந்து காப்பாற்ற உதவும் என்று அந்த இந்திய ஆன்மிக இயக்கம் சொல்லியிருக்கிறது…. இப்படி இரண்டு அழிவுகளுக்கான காலம் ஒன்றாகவும், தீர்வும் ஒன்றாகவும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது… .”

எர்னெஸ்டோ நிமிர்ந்து உட்கார்ந்தார். தன் அருகில் இருப்பவர்கள் க்ரிஷ் பேசுவதை மேலும் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பிப்பதை மட்டும் உணர்ந்த விஸ்வம்  எரிச்சலடைந்தான். க்ரிஷ் தொடர்ந்தான்.

“நம் நண்பருக்கு அந்த இடம் எப்படியோ தெரிந்து அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கப் போன போது இல்லுமினாட்டி தவசி அகஸ்டின் தன் கையால் அந்தச் சின்னத்தைக் கொடுத்து விட்டு இறந்ததாகச் சொல்கிறார். அந்தச் சின்னத்தை வாங்கிக் கொண்ட நம் நண்பர் உங்கள் இல்லுமினாட்டி தவசியின் பிணத்தை மரியாதையுடன் புதைக்கக்கூடச் செய்யவில்லை. தனக்குக் கிடைத்த அந்தச் சின்னத்தோடு வந்து விட்டார். மறுநாள் மாஸ்டரும் அந்த இடம் அறிந்து போன போது தவசியின் பிணத்தைப் பார்த்து இருக்கிறார். அதை வணங்கி, குகைக்குப் பக்கத்திலேயே பனியில் கையால் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார். அப்படிச் செய்ததில் அவர் கைகளில் ஏற்பட்டிருந்த காயத்தை நானே பார்த்தேன். அப்படிப்பட்டவர் நம் நண்பரால் சோம்பேறி என்று வர்ணிக்கப்பட்ட மாஸ்டர்….”

விஸ்வம் க்ரிஷ் பேச்சு ஆபத்தாகப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தான். உடனே எழுந்து “பொய்” என்று கத்தினான்.

(தொடரும்)

என்.கணேசன்


Wednesday, May 22, 2019

Monday, May 20, 2019

சத்ரபதி 73


கிளம்புவதற்கு முன் ஒரு முறை அன்னை பவானி சிலை முன் சிவாஜி சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தித்தான். அவன் நண்பன் யேசாஜி கங்க் வந்து சொன்னான். “அப்சல்கான் கூடாரத்திற்கு வந்து சேர்ந்து விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது சிவாஜி
        
சிவாஜி சொன்னான். “பண்டாஜி கோபிநாத்தை இங்கே வரச் சொல்

சிவாஜிக்காகக் காத்திருந்த அப்சல்கான் சிவாஜிக்குப் பதிலாக பண்டாஜி கோபிநாத் வந்து காலில் விழுந்ததில் எரிச்சலடைந்தான். பண்டாஜி கோபிநாத் அவனுடைய எரிச்சலைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. வளைந்து வணங்கியபடி சொன்னார். “வாருங்கள் பிரபு. உங்கள் வருகையால் எங்கள் பூமி பெருமகிழ்ச்சி கொள்கிறது. நாங்கள் பாக்கியசாலிகள்…. சிவாஜி வந்து கொண்டிருக்கிறார்….. தந்தைக்குச் சமமான உங்களைச் சந்திக்கவிருப்பதில் அவர் நேற்றிலிருந்தே உற்சாகத்தில் இருக்கிறார்…..”
                
அப்சல்கான் பொறுமையின்றி இடைமறித்தான். “சிவாஜியைச் சீக்கிரம் வரச்சொல் கோமாளியே. காத்திருந்து பழக்கப்பட்டவன் அல்ல நான்…..”

தங்கள் உத்தரவு பிரபுஎன்று பாதி வளைந்து வாய் மேல் கை வைத்தபடி பண்டாஜி கோபிநாத் அங்கிருந்து வெளியேறினார்.

ண்டாஜி கோபிநாத் சிவாஜியிடம் தெரிவித்தார். “மன்னா அவன் இடையில் வாள் இருக்கிறது. நிராயுதபாணியாக வர வேண்டும் என்றதை அவன் அனுசரிக்கவில்லைஅவனுடன் சையத் பாண்டாவும், கிருஷ்ணாஜி பாஸ்கரும் இருக்கிறார்கள்….. கிருஷ்ணாஜி பாஸ்கர் இடையிலும் ஒரு வாள் இருக்கிறது. அந்தணரானாலும் அவர் வாள்பயிற்சி பெற்றவர் போலத் தெரிகிறது. சையத் பாண்டாவும் நீண்டதொரு வாளை வைத்துக் கொண்டு அப்சல்கான் பின்னால் நிற்கிறான். அவனே எமன் போலத் தெரிகிறான்……

சிவாஜி சிறிது யோசித்து விட்டுமறுபடி போய் இப்படிச் சொல்லுங்கள் பண்டாஜிஎன்று பேச வேண்டியதைச் சொல்லிக் கொடுத்து விட்டு அங்கே செல்லத் தயாராக ஆரம்பித்தான்.

றுபடியும் சிவாஜிக்குப் பதிலாக பண்டாஜி கோபிநாத் தயக்கத்துடன் உள்ளே நுழைந்ததும் அப்சல்கான் கோபத்துடன் கேட்டான். “மறுபடி என்ன?”

கேள்விக்குறியாய் மறுபடி வளைந்து, வாய் மீது விரல் வைத்து பவ்யத்தையும், பணிவையும் காட்டியபடி தயக்கத்துடன் பண்டாஜி கோபிநாத் சொன்னார். “சையத் பாண்டா தங்களுடன் இருக்கையில் இங்கே வர மன்னர் சிவாஜி பயப்படுகிறார் பிரபு. பேசப்போவது நீங்கள் இருவர். இங்கே யுத்தம் எதுவும் நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில் கூடவே அவர் எதற்கு என்று மன்னர் கேட்கிறார்…. சையத் பாண்டா குறைந்த பட்சம் வெளியிலாவது நிற்கட்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். உங்களுடன் மன்னர் அறிந்த கிருஷ்ணாஜி பாஸ்கர் அவர்கள் இருக்கட்டும் என்று சொல்கிறார். மன்னரும்  அழைத்து வரும் இருவர்களில் ஒருவரைக் கூடாரத்திற்கு வெளியே நிற்க வைத்து விட்டு ஒருவருடன் தான் உள்ளே வருவதாகவும் உறுதி கூறுகிறார்…..”

அப்சல்கான் பொறுமையிழந்தான். “நான் மறுத்தால்?”

தயக்கத்துடன் பண்டாஜி கோபிநாத் சொன்னார். “இந்தச் சந்திப்பு நடைபெறாது பிரபு

அப்சல்கான் திகைத்தான். என்ன இது! எத்தனை சிரமப்பட்டு காடு மலை தாண்டி இவ்வளவு தூரம் வந்தது வீணா? கோபத்தில் கொதித்தவனாகமூடனே சிவாஜி விளையாடுகிறானா?” என்று அப்சல்கான் கேட்டான்.

விளையாடும் மனநிலையில் அவர் இல்லை பிரபு. அவர் அச்சத்தில் சிக்கித் தவிக்கிறார். அவ்வளவு தான். தங்கள் ஒருவரிடமே அச்சப்படும் அவர் தங்களை தந்தையைப் போல் நினைத்து தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் சையத் பாண்டாவையும் அருகில் வைத்துக் கொண்டு உங்களிடம் பேசப் பயப்படுகிறார். உங்களுக்கு சையத் பாண்டா கூட இருந்தால் தான் மன்னர் சிவாஜியிடம் பேசத் தைரியம் வரும் என்றால் அதையும் நான் அவரிடம் தெரிவித்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறேன்…..”

சிவாஜி எதிர்பார்த்த பதில் அப்சல்கானிடமிருந்து உடனடியாக வந்தது. ”உன் மன்னனைப் போல் பேடி அல்ல நான். சையத் பாண்டா கூடாரத்திற்கு வெளியே கூப்பிடு தூரத்தில் இருப்பான். உன் மன்னன் பயப்படாத கிருஷ்ணாஜி பாஸ்கரை என்னுடன் இருப்பார். இனிமேலாவது சிவாஜி இங்கே வருவானா?” அப்சல்கான் ஏளனமாகக் கேட்டான்.

பிரபு. உங்கள் தைரியத்திற்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். கண்டிப்பாக மன்னர் சிவாஜி தங்களைச் சந்திக்க உடனே வருவார். இந்தப் பேச்சு வார்த்தை நன்மையில் முடியட்டும்.” என்று வளைந்து பதில் சொல்லி விட்டு பண்டாஜி கோபிநாத் வேகமாக வெளியேறினார்.

அப்சல்கான் சையத் பாண்டாவை வெளியே நிற்கச் சைகை செய்தான். சையத் பாண்டா வெளியே செல்வதற்கு முன் சொன்னான். “பிரபு. தாங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும். அடுத்த கணம் நான் இங்கு இருப்பேன்.”

அப்சல்கான் அலட்சியமாகச் சொன்னான். “அந்தப் பேடியைச் சமாளிக்க நான் ஒருவன் போதும் பாண்டா. கவலைப்படாமல் செல். என் இடையில் வாள் இருக்கிறது. அதை அந்தக் கோமாளி ஆட்சேபிக்கவில்லை. அவன் கவனிக்கவில்லை போலிருக்கிறது. முட்டாள். சிவாஜியைப் போல் மூன்று பேரை நான் ஒருவனாகவே சமாளிப்பேன்

சிவாஜி இரும்புக்கவசம் அணிந்து கொண்டு அதன் மேல் வெண்ணிறப் பட்டாடை அணிந்து கொண்டான். தலையில் ஒரு இரும்புக் குல்லாய் அணிந்து கொண்டு அதன் மேல் தலைப்பாகை அணிந்து கொண்டான். நான்கு ரம்பப் பற்கள் கொண்ட புலிநகத்தை இடது கை விரல்களில் மாட்டிக் கொண்டு நீண்டதும் வலது கை மணிக்கட்டில் பிச்சுவாக்கத்தி ஒன்றை சொருகிக் கொண்டதும் அவன் போட்டிருந்த நீளமான முழுக்கைச் சட்டையால் வெளியே தெரியவில்லை.

வெளியே ஜீவ மஹல்லாவும் சம்பாஜி காவ்ஜியும் இடுப்பில் ஒரு வாளும், கையில் ஒரு நீண்ட வாளும் வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். சிவாஜி அவர்களுடன் கிளம்பினான். ”ஜீவ மஹல்லா நீ என்னுடன் கூடாரத்திற்குள்ளே வா. சம்பாஜி நீ கூடாரத்திற்கு வெளியே நின்று கொள்.”

இருவரும் தலையசைத்தார்கள். சிவாஜி அமைதியாக நடக்க ஆரம்பித்தான். இருவரும் அவனுடன் நடக்க நடக்க சிவாஜி அவர்களிடம் சொன்னான். “ஜீவ மஹல்லா. கூடாரத்திற்குள்ளே நீ என்னுடன் வந்தாலும் கூடாரத்தின் வெளியே இருந்து என்னேரமும் வரக்கூடிய சையத் பாண்டா உள்ளே வந்த பின் அவன் மேல் தான் உன் முழுக் கவனமும் இருக்க வேண்டும். அதே போல் என் முழுக் கவனமும் அப்சல்கான் மேல் தான் இருக்கும்…. சம்பாஜி நீ என் அழைப்புக்குரல் கேட்டால் ஒழிய என்ன நடந்தாலும் கூடாரத்திற்குள்  வரவேண்டியதில்லை. ஆனால் கூடாரத்திலிருந்து அப்சல்கானோ, சையத் பாண்டாவோ வெளியே வந்தால் அவர்கள் உயிரோடு நிறைய தூரம் போய் விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. இருவருக்கும் புரிந்ததல்லவா?”

இருவரும் புரிந்தது என்று தலையசைத்தார்கள். சிவாஜி அமைதியாகச் சொன்னான். “நம் நால்வர் படை நிச்சயம் வெல்லும் கவலைப்படாதீர்கள்

ஜீவ மஹல்லா திரும்பிப் பார்த்தான். யாருமில்லை. இருப்பது மூன்று பேர் அல்லவா? நான்கு என்று சிவாஜி சொல்கிறானே என்று குழம்பினான்.

சிவாஜி அவன் குழப்பத்தைக் கவனித்து விட்டுச் சொன்னான். “நம்முடன் வரும் அன்னை பவானியை நீ கணக்கில் எடுக்க மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்….”

ஜீவ மஹல்லாவும் சம்பாஜி காவ்ஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இறைவனை வணங்கும் அவர்களுக்கு இறைவனைக் கூட்டாளியாகக் கணக்கில் வைக்க இது வரை முடிந்ததில்லை. அது சிவாஜி போன்ற வெகுசிலருக்கு மட்டுமே சாத்தியம் போல் அவர்களுக்குத் தோன்றியது.

அவர்கள் கூடாரத்தை நெருங்கிய போது கூடாரத்திற்கு வெளியே சையத் பாண்டா தன் நீண்ட வாளுடன் நின்றிருந்தான். சுமார் நூறடிகள் தள்ளி அப்சல்கானின் பல்லக்கும், பல்லக்கு தூக்கிய வீரர்களும் இருந்தார்கள்இந்தப்பக்கம் நூறடிகள் தள்ளி சிவாஜியின் ஏழெட்டு வீரர்கள் நின்றிருந்தார்கள். அவ்வளவு தான்.

சிவாஜி சையத் பாண்டாவைப் பார்த்து லேசாகத் தலையசைத்தான். ஆனால் சையத் பாண்டா சிலை போல் நின்று அவனை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். சிவாஜியின் நடையில் சீரான வேகம் இருந்தது. அவன் சையத் பாண்டாவின் அலட்சியத்தில் சிறிதும் பாதிக்கப்படாதவனாய் கூடாரத்தில் நுழைந்தான். சம்பாஜி காவ்ஜி வெளியே நின்று கொள்ள ஜீவ மஹல்லா சிவாஜியுடன் உள்ளே நுழைந்தான்.

கூடாரத்தில் உள்ளே நுழைந்ததும் சிவாஜி புதிய ஆளாய் மாறினான். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்ற அப்சல்கானின் ஏழடி ஆஜானுபாகுவான உருவத்தில் பயந்து போனவன் போல் சிவாஜி தன்னைக் காட்டிக் கொண்டான். அவன் கால்கள் லேசாக நடுங்குவது போல் அப்சல்கானுக்குத் தெரிந்தது. தைரியம் இழந்த சிவாஜி அதை ஈடுகட்ட ஜீவ மஹல்லாவின் அருகாமையை எதிர்பார்ப்பது போல் அவனைப் பார்த்தான். ஜீவ மஹல்லா அவனுக்கு நெருங்கியே இருந்தான். இருவரும் முன்னேறி வந்தனர்..

கிருஷ்ணாஜி பாஸ்கர் அப்சல்கானுக்கு சிவாஜியை அறிமுகப்படுத்தினார். “பிரபு தங்கள் நண்பர் ஷாஹாஜியின் மகன் மன்னர் சிவாஜி இவர் தான்…. மன்னரே தங்கள் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் பிரபு மேன்மைமிகு அப்சல்கானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்…”


தயங்கியபடியே வந்த சிவாஜியை வேகமாக நெருங்கிய அப்சல்கான் ஆரத்தழுவிக் கொண்டான். தழுவிய போது அவன் மார்பு வரை கூட சிவாஜி எட்டவில்லை என்பது அப்சல்கானுக்கு வேடிக்கையாக இருந்தது. அணைத்தபடியே பக்கவாட்டுக்கு சிவாஜியின் தலையைத் தள்ளியவன் அவன் தலை தன் உடம்புக்கும் கைக்கும் இடையே வந்தவுடன் திடீரென்று அவனுடைய இரும்புக்கரத்தால் சிவாஜியின் கழுத்தை அசுரத்தனமாய் அழுத்த ஆரம்பித்தான்.. சிவாஜி திமிறப் பார்த்தான். திமிற முடியவில்லை. சிவாஜியால் மூச்சு விடவும் முடியவில்லை….. அவன் மயக்கமடையப் போவது போல் உணர்ந்தான்….

(தொடரும்)
என்.கணேசன்