சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, December 31, 2021

அமேசான் கிண்டிலில் ‘நீ நான் தாமிரபரணி’ வெளியீடு!

 


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்!


அமேசான் கிண்டிலில் சென்ற மாதம் புத்தம் சரணம் கச்சாமி வெற்றிகரமாக வெளியானதைத் தொடர்ந்து என் முதல் நாவலான “நீ நான் தாமிரபரணி”யும் இப்புத்தாண்டு நேரத்தில் அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. 


லிங்க் - https://www.amazon.in/dp/B09PHS8YMQ


மின்னூலாகப் படிக்க விரும்பும் வாசகர்களும், கிண்டிலில் படிக்கும் வாசகர்களும் இந்த வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி.


அன்புடன்

என்.கணேசன்


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


இந்தப் புரிதலுடன் புத்தாண்டை ஆரம்பியுங்கள்!


 

























அன்பு வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 


Thursday, December 30, 2021

இல்லுமினாட்டி 135



விஸ்வம் அந்த அறையில் பூட்டப்பட்டிருந்த அலமாரியை நோக்கிப் போனான். பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு வளைந்த கம்பியை எடுத்து அந்த அலமாரியின் சாவித்துளையில் நுழைத்தான். இரண்டு நிமிடங்களில் அந்த அலமாரியை அவனால் திறக்க முடிந்தது. அலமாரியில் மூன்று ஒயின் பாட்டில்கள் இருந்தன. இரண்டு இத்தாலிய உயர்ந்த ரக ஒயின் பாட்டில்களும், ஒரு பிரெஞ்சு உயர்ந்த ரக ஒயின் பாட்டிலும் இருந்தன. மூன்று பாட்டில்களும் கார்க் மூடிகளால் மூடப்பட்டிருந்தன.

விஸ்வம் கைகளில் உறை போட்டுக் கொண்டு தான் கொண்டு வந்திருந்த விட்டமின் வி ஜீரோ இருந்த புட்டியை நிதானமாக எடுத்தான். மருத்துவர்கள் ஊசி போடப் பயன்படுத்தும் சிரிஞ்சை எடுத்து அதிலிருந்த விஷத்தை உறிஞ்சி அதை அந்த கார்க்குகள் வழியே மூன்று ஒயின் பாட்டில்களிலும் செலுத்தினான். பின் அந்த அலமாரியை மூடினான். பின் மெல்ல அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். ஹாலில் இன்னும் அந்தப் பாதுகாப்பு அதிகாரி திரும்பியிருக்கவில்லை. வேகமாக ஹாலைக் கடந்து வந்து வரவேற்பறையில் வாசற்கதவருகே வந்து விஸ்வம் எட்டிப் பார்த்தான்.  இப்போது மூவரும் சதாம் உசைன் பேச்சை முடித்துவிட்டு பின் லேடனைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். இப்போதும் அந்தப் பாதுகாப்பு அதிகாரி நின்றிருக்கும் விதம் ஒரு காவலாளியை மறைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது விஸ்வம் வெளியே போனால் இன்னொரு காவலாளி கண்டிப்பாக அவனைப் பார்க்க முடியும்.

வராந்தாவில் மூன்றடி தடுப்புச் சுவர் ட வடிவில் இருந்தது. வராந்தாவில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கா விட்டால் தவழ்ந்து போய் அந்தத் தடுப்புச் சுவர் ஓரம் மறைந்து ஒதுங்கியிருக்கலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான். பின் அந்தப் பாதுகாப்பு அதிகாரி உள்ளே வந்தவுடன் அந்தக் காவலாளிகளை மட்டும் கவனித்துக் கொண்டிருந்து விட்டு  அவர்கள் இருவர் கவனமும் வேறெங்காவது இருக்கையில் பழையபடி பின்பக்கம் ஓடிப் போய் விட்டிருக்கலாம். அங்கே நல்ல வெளிச்சம் இருப்பதால் இப்போது அதற்கு வழியில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக விஸ்வம் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தான். வெளியே போலீஸ் கார் வரும் சத்தம் கேட்டது. மறுபடியும் அந்த அறைக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டிவருமா என்று விஸ்வம் யோசித்துத் தயாராக இருந்தான்.

போலீஸ் கார் எர்னெஸ்டோவின் பங்களா முன் நின்றது. பாதுகாப்பு அதிகாரி வெளியே போனார். காவலாளிகள் இருவர் கவனமும் கூட போலீஸ் கார் பக்கம் திரும்பியது. போலீஸ் காரில் இருந்த உயர் போலீஸ் அதிகாரி நாளையிலிருந்து அங்கிருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அந்தப் பாதுகாப்பு அதிகாரியுடன் பேசுவது மெல்லக் கேட்டது இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த விஸ்வம் வெளியேறி சத்தமில்லாமல் வேகமாகப் பின்பக்கம் ஓடினான். காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்த பின்னர் தான் மூச்சு வாங்கி நின்றான்.  ஆனால் பாதுகாப்பாக உணர்ந்த இந்தக் கணத்திற்கு முந்தைய கணம் வரை பின்னாலிருந்து துப்பாக்கி ரவைகள் என்னேரமும் பாய்ந்து வரலாம் என்று எதிர்பார்த்து தானிருந்தான். ஆனால் நல்ல வேளையாக இந்த முறை விதி அதிகம் சோதிக்கவில்லை. அந்த விதி கடைசி நேரத்தில் காலை வாராமல் இருந்தால் சரி என்று நினைத்தவனாக முகமூடியைக் கழற்றியபடியே  மெல்லப் பின்பங்களாவின் முன் கேட் வந்து வாகனங்களோ ஆட்களோ இல்லாத நேரமாகப் பார்த்து ஏறிக் குதித்து தெருவில் நடக்க ஆரம்பித்தான்.


ர்னெஸ்டோ விஸ்வத்தின் இரண்டாவது கடிதம் மின்னஞ்சலில் வந்ததைத் தெரிவித்த போது இம்மானுவல் திகைத்தான். க்ரிஷ், அக்‌ஷய் சொல்வதைப் பார்த்தால்  அவரை வாஷிங்டனில் கொலை செய்ய அவன் திட்டம் போட்டது போல் இருக்கிறது. ஆனால் அவன் எதிர்மாறாக மிக நல்லவன் போல் முறையாக இப்படி வேண்டுகோள் விடுக்கிறான். உண்மையில் அவன் உத்தேசம் என்ன என்று இம்மானுவல் யோசித்தான்.

எர்னெஸ்டோ சொன்னார். “அவன் என் பர்சனல் மெயில் ஐடிக்கு அனுப்பாமல் தலைமைக்குழு மெயில் ஐடியை தேர்ந்தெடுத்தது ஒரு யதார்த்தமான காரியமாக எனக்குத் தெரியவில்லை”

இம்மானுவலுக்கும் அவர் சொன்ன பிறகு அப்படியே தோன்றியது. “அதற்கு என்ன பதில் அனுப்பப் போகிறீர்கள்?”

“அடுத்த வாரம் புதன் கிழமை ம்யூனிக்கில் அனைத்து உறுப்பினர் கூட்டம் ஏற்பாடு செய்ய வாங் வேயிடம் இப்போது தான் சொன்னேன். அதில் கலந்து கொண்டு பேச விஸ்வத்துக்கும் அழைப்பு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். இரண்டையும் எல்லா உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறேன். முதலில் அவன் வரட்டும். பிறகு பார்ப்போம்”


விஸ்வத்துக்குத் தலைமைக்குழுவின் அழைப்பு மின்னஞ்சலும், வாங் வேயின் அலைபேசி அழைப்பும் அடுத்தடுத்து வந்தன. வாங் வே பரபரப்புடன் சொன்னார். “கிழவர் இப்போது தான் அழைத்துச் சொன்னார். உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறேன்”

விஸ்வம் கேட்டான். “ஏன் வியாழக்கிழமை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கே என்னைப் பேச அழைத்திருக்கலாமே?”

“இது அமெரிக்காவின் இந்தப் பகுதி உறுப்பினர்களுக்கான கூட்டம் தான். அதனால் தான் தனியாக ஒரு அனைத்து உறுப்பினர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய அவர் சொல்லியிருக்கிறார்... உங்கள் திட்டமெல்லாம் எதிர்பார்த்தபடி நடந்து கொண்டிருக்கிறதா?”

“இது வரை நடந்து கொண்டிருக்கிறது. இனி பார்க்க வேண்டும்” என்று சொன்ன விஸ்வம் பேச்சை வளர்த்தாமல் முடித்துக் கொண்டான்.

உண்மையில் அவன் அடுத்த திட்டத்தில் தான் அப்போது ஆழ்ந்திருந்தான். அவன் கணக்குப்படி புதன் இரவு அந்த ஒயின் குடித்து எர்னெஸ்டோ மாரடைப்பில் இறந்து விடுவார். அவர் ஒயின் குடிக்காமல் எந்த இரவையும் கழித்ததாய் சரித்திரமில்லை.  இத்தாலியிலிருந்தும், பிரான்சிலிருந்தும்  ஒயின் தயாரிக்கும் இடங்களிலிருந்தே அவருக்காக மூன்று நாட்கள் முன்பு தான் உயர்ந்த ரக ஒயின் பாட்டில்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவர்கள் விஸ்வத்தின் தாக்குதலுக்குத் தயாராக இருப்பார்களே ஒழிய இந்த விட்டமின் வி விஷயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை அவர் ஒயின் குடிக்காமல் விட்டால் அடுத்தபடியாக அவரை எப்படிக் கொல்வது என்ற திட்டத்தில் இறங்கியிருந்தான்.

வியாழக்கிழமை நடக்கும் இல்லுமினாட்டி கூட்டம் தான் அவரைக் கொல்ல அடுத்தபடியான உகந்த இடம். விட்டமின் வி போல பிரச்னையில்லாத திட்டம் அது அல்ல என்றாலும்  அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது. எப்படியாவது அவரை வாஷிங்டனிலேயே முடித்து விட வேண்டும்.  அந்தக் கூட்டம் நடக்கும் இடத்தின் வரைபடம் அவன் முன் இருந்தது. நிகழ்ச்சி நிரலும் அவனிடம் இருந்தது. அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சாலமன் ஏற்கெனவே தந்திருந்தார். இதில் அவன் செய்ய முடிந்தது என்ன என்று பல வகைகளிலும் யோசனை செய்து கொண்டிருந்தான்.


ர்னெஸ்டோவுடன் கிளம்பும் செவ்வாய் காலையிலிருந்து மாலை வரை  அக்‌ஷய், க்ரிஷுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தான். அவன் க்ரிஷின் சக்திப் பயிற்சிகள் குறித்தும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு சிந்துவை விஸ்வத்தின் ஆள் என்று க்ரிஷ் கண்டுபிடித்த விதமும், முன்பு ஹரிணி கடத்தப்பட்ட போது அவள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்த விதமும் ஆச்சரியமாய் இருந்தன. அக்‌ஷயும் எத்தனையோ சமயங்களில் ஆபத்திலிருந்து தப்பித்தது அவன் அந்தராத்மாவின் குரலால் தான். ஆனால் க்ரிஷுக்குச் சாத்தியப்பட்டிருப்பது மேலான சக்தி சாதனை என்று அவன் நினைத்தான்.

விஸ்வத்தின் தாக்குதல்களிலிருந்து எர்னெஸ்டோவைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றிருக்கும் அவன் விஸ்வத்தின் சக்திகள், அதை அவன் ஏவும் விதங்கள் பற்றியெல்லாம் க்ரிஷ் வாயால் கேட்க ஆசைப்பட்டான். அது வாஷிங்டனில் அவனுக்கு ஏதாவது வகையில் உதவக்கூடும் என்று நினைத்தான். ஏனென்றால் க்ரிஷ் அவனுடைய அலைவரிசை ஆராய்ச்சிகளில் நிறையத் தெரிந்தவனாகவும் சாதித்தவனாகவும் இருந்தான். க்ரிஷ் பொறுமையாக நிகோலா டெஸ்லாவில் ஆரம்பித்து அவனுக்கு மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகச் சொன்னது சக்திப் பிரயோகங்களின் பலவிதப் பரிமாணங்களைப் புரிய வைப்பதாக இருந்தது.  

அவனுக்கு க்ரிஷும் வாஷிங்டன் வந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் வாஷிங்டனுக்கு அவர்களுடன் அவன் வந்தால் அவன் இந்தியாவுக்குப் போகவில்லை என்பதை யார் மூலமாவது விஸ்வம் அறிய வாய்ப்புகள் அதிகம் என்றும், அப்படி அவன் உண்மையைத் தெரிந்து கொண்டால் அது சிந்துவுக்கும், அவன் குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் சொல்லி க்ரிஷ் மறுத்து விட்டான். அதுவும் உண்மை என்பதால் அதற்கு மேல் அக்‌ஷய் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை.

அக்‌ஷய், இம்மானுவல், பாதுகாப்புப் படை சூழ எர்னெஸ்டோ வாஷிங்டனுக்கு செவ்வாய் இரவு கிளம்பினார்.

(தொடரும்)
என்.கணேசன்





Monday, December 27, 2021

யாரோ ஒருவன்? 65



பாம்பாட்டி வேலாயுதத்திற்கு எதையும் விளக்கப் போகாமல் தனக்குள் ஏதோ சிந்தனைகளில் இருந்தான். வேலாயுதம் அவனை மனம் விட்டுப் பேச வைக்க வேண்டும் என்று எண்ணியவராய் ஏளனமாய் சிரித்தார்.  “நாகரத்தினக்கல்லுங்கறதே நம்மாளுங்க காலகாலமாய் சொல்ற கற்பனைக் கதை தானேப்பா. இந்த விஞ்ஞான யுகத்திலயும் அதையெல்லாம் சொல்லிகிட்டு இன்னுமா திரியறீங்க?”

பாம்பாட்டி  “நம்பாட்டி போங்கய்யாஎன்று சொல்லி விட்டு யோசனையுடன் நடக்க ஆரம்பித்தான்.

அவனுடன் நடந்தபடியே வேலாயுதம் சொன்னார். “நம்பக் கஷ்டமாயிருக்குன்னு உண்மையை மறைக்காம சொன்னா நீ கோவிச்சுக்கறியேப்பா. இந்த நாகரத்தினம்னு சொல்றதெல்லாம் உண்மைச் சமாச்சாரம் தானா?”

ஆமா சார். உங்க பக்கத்து வீட்டு மகராஜுக்கு அத்தனை நாக சக்தி எப்படி வந்திருக்கும்னு நினைக்கிறீங்க. அந்த நாகரத்தினங்க குறைந்தது மூனாவது அவர் கிட்ட இருக்கும்

வேலாயுதம் நாகரத்தினம் பற்றி ஏதும் அறியாதவர் போலவே நடித்தபடி அவன் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டார்.  “அப்படியா அது பார்க்க எப்படி இருக்கும்? அது நாகரத்தினம்னு எப்படித் தெரியும்?”

அதோட ஜொலிப்பு சாதாரணமா இருக்காது சார். அது ஒன்னு இருந்தா சுபிட்சம். அது ரெண்டு இருந்தா பணத்தோட அதிகாரமும் இருக்கும். மூனு இருந்தா அமானுஷ்ய சக்திகளும் கிடைக்கும். மகராஜ் சொல்றதெல்லாம் பலிக்குதுன்னா, நாகசக்தி அதிகமாய் இருக்குன்னா நாகரத்தினம் மூனாவது அவர் கிட்ட இருக்கும்

வேலாயுதம் ஆச்சரியம் தாங்க முடிவதில்லை என்பதைப் போலக் காட்டிக் கொண்டு கேட்டார். “அப்படீன்னா நீயும் பார்த்திருக்கியா?”


அவன் கனவில் பேசுவது போல எங்கோ வெறித்துப் பார்த்தபடி சொன்னான். “ரொம்ப காலத்துக்கு முன்னாடி எனக்கே ஒன்னு கிடைக்கறதுக்கு இருந்துச்சு. ஆனால் கடைசி நேரத்துல கைய விட்டுப் போயிடுச்சு. எனக்குக் கொடுப்பினை இல்லை. வேறெதுவும் சொல்றதுக்கில்லை. பழைய கதை பேசி எதுவும் பிரயோஜனமில்லை.”

அவன் அவரிடம் விடைபெறத் தயாரானான்.

சரி பழைய கதை வேண்டாம். புதுக்கதையே பேசுவோம். நீ கொஞ்ச நேரம் முன்னால ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவை மட்டும் உருவாகற நாகரத்தினம். அது அந்த வீட்டுல உருவாகியிட்டிருக்குன்னு சொன்னியே அதைப்பத்திச் சொல்லு

ஒரு கணம் அவன் முகத்தில் பயம் தெரிந்தது. தேவையில்லாமல் அதைப் பற்றி இந்தக் கிழவனிடம் பேசி விட்டோமோ என்று அவன் நினைப்பதும் புரிந்தது. அவனை அதிகம் யோசிக்க விட்டால்  அதை விவரிக்காமல் போய் விடுவான் என்று பயந்த வேலாயுதம் தன் சட்டைப்பையில் இருந்து நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு  அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடிஉட்கார். பேசுவோம்என்றார். அவன் கையில் திணிக்கப்பட்ட நோட்டுக்களைத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டே தயக்கத்துடன் அவர் அருகில் உட்கார்ந்தான்வேலாயுதம் அங்கிருந்து தங்கள் வீடு தெரிகிறதா என்று பார்த்தார். இல்லை. அப்படியானால் அவர் பாம்பாட்டியோடு பேசுவதைப் பக்கத்து வீட்டுக்காரனும் பார்க்க முடியாது. நல்லது...

வேலாயுதம் பரபரப்புடன் அவனைக் கேட்டார். “சொல்லுப்பா. அந்த உருவாகிட்டிருக்கிற நாகரத்தினத்தைப் பத்தி எப்படி உனக்குத் தெரியும்?”

பாம்பாட்டி சிறிது தயங்கிவிட்டு மெல்லச் சொன்னான். “அந்த நாகரத்தினம் உருவாகறப்ப ஒரு வித்தியாசமான மணம் வரும். அந்த மணம் அந்த வீட்டுல இருந்து வந்துது

நான் பக்கத்து வீட்டுல தான இருக்கேன். எனக்கொன்னும் அந்த மாதிரி மணம் வரலையே

அது எல்லாருக்கும் வராது. அதுக்கு பிரத்தியேகமான மூக்கு வேணும்.”

அதான் சொன்னியே மூனு நாகரத்தினமாவது அங்கேயிருக்குன்னு. அதுல இருந்து அந்த மணம் வந்திருக்கலாமில்லயா

பழைய நாகரத்தினங்கள்ல இருந்து ஜொலிப்பு வெளிவருமே தவிர மணமெல்லாம் வராது. அபூர்வமான விசேஷ நாகரத்தினம் உருவாகறப்ப தான் அதுல இருந்து ஒரு வித்தியாசமான மணம் வரும். நாகரத்தினமே அபூர்வமானது தான்னாலும் இப்ப அங்கே உருவாகியிட்டிருக்கிற நாகரத்தினம் ரொம்ப அபூர்வமானது. பெருசு. சுமார் ஆயிரம் வருஷத்துல ஒரு தடவை தான் இப்படியொரு ரத்தினம் உருவாகும். ஒன்னு ரெண்டு நாள்ல அந்த ஆளுக்கு அந்த ரத்தினம் கிடைச்சுடும். அது மட்டும் கிடைச்சா அந்த ஆள் கடவுள் மாதிரியாயிடுவான். அவன் நினைக்கிறது தான் விதின்னு ஆயிடும்...”

வேலாயுதம் திகைத்தார். “என்னப்பா சொல்றே? நம்ப முடியலையே. எல்லாம் மாயாஜாலக்கதை மாதிரி இருக்கே

பாம்பாட்டி சொன்னான். “சில உண்மைகள் மாயாஜாலக் கதைகளை விடப் பிரம்மாண்டமாய் தான் ஐயா இருக்கும். இந்த விசேஷ நாகரத்தினத்தைப் பத்தி பரம்பரைக் கதையாய் எங்க வீடுகள்ல சொல்லிட்டு வருவாங்க. எந்தக் காலத்துல எவனுக்குப் பார்க்கக் கிடைக்குதோ அவன் அதிர்ஷ்டமானவன்னு சொல்வாங்க. அது உருவாகறப்ப அந்தப் பாம்பு அதை உதிர்க்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே மூனு விதமான பூக்களோட மணம் கலந்த ஒரு வாசனை வீச ஆரம்பிச்சுடும்னு சொல்வாங்க. இந்த மாதிரியான ரத்தினம் உருவாகியிட்டிருக்கறப்ப அந்தப் பாம்பு இருக்கிற இடம் ரொம்ப சுத்தமா இருக்கணுமாம். தெய்வீக சூழல் வேணுமாம். அதுக்குத் தனிமை வேணுமாம். வெளியாளுக யாரும் அந்தப் பாம்பிருக்கிற பக்கமே போகக்கூடாதாம்.   இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதெல்லாம் சரிவர அமைஞ்சு அந்த நாகம் உதிர்க்கப்போகிற ரத்தினம் சாதாரணமான ரத்தினமா இருக்காதுன்னு சொல்வாங்க….”

வேலாயுதத்திற்கு இப்போது தான் எல்லாம் மெள்ளப் புரிகிறது. நாகராஜ் அந்த நாகரத்தின வரவுக்காகத் தான் அக்கம் பக்கம் கூடத் திரும்பாமல், யாரிடமும் பேச்சு வளர்த்தாமல், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கிறான். இரவு நேரங்களில் அவன் விசேஷ பூஜைகள் செய்வதும் அதற்காகத் தான் போலிருக்கிறது. விசேஷ தியானம் ஏதோ செய்வதற்காக இன்று காலை வாக்கிங் கூட அவன்  போகவில்லை என்பதை தீபக் சொன்னது நினைவுக்கு வந்தது. இரண்டு மூன்று நாள் வாக்கிங் வர மாட்டான்னு சொன்னதாவும் ஞாபகம். அவரும் சுதர்ஷன் மட்டும் தான் வெளியே போய் வந்ததைப் பார்த்திருக்கிறார்…. பக்கத்து வீடு பெரிய வீடு. தனியாளாக இருந்தும் அத்தனை பெரிய வீட்டை அவன் வாடகைக்கு எடுத்திருப்பது அதனாலேயே இருக்கலாம். வீட்டின் ஒரு பகுதியை அந்த நாகத்திற்காகவே அவன் ஒதுக்கியிருக்கலாம். இவன் சொல்வதும் நடப்பதும் கச்சிதமாக ஒத்து வருகிறதே.

பாம்பாட்டியின் வார்த்தைகள் திரும்பவும் அவர் மனதில் ஒலித்தன. ”ஒன்னு ரெண்டு நாள்ல அந்த ஆளுக்கு அந்த ரத்தினம் கிடைச்சுடும். அது மட்டும் கிடைச்சா அந்த ஆள் கடவுள் மாதிரியாயிடுவான். அவன் நினைக்கிறது தான் விதின்னு ஆயிடும்...”
                                                  
வேலாயுதம் மெல்லக் கேட்டார். “இந்த விஷயம் தெரிஞ்சு யாராவது அந்த நாகத்தை அப்படியே கடத்திட்டாங்கன்னா என்னாகும்?”

பாம்பாட்டி சிரித்தான். “அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. இந்த நேரத்துல அந்தப் பாம்பை நெருங்கறதே ஆபத்து. தூரத்துல இருந்தே விஷத்தைக் கக்கும். ஒரு நிமிஷத்துல உயிர் எடுக்கறமாதிரியான ஆலகால விஷம் அது. உங்க கிட்ட உண்மையைச் சொல்றதுல தப்பில்ல. நான் சும்மா என்னோட பாம்பு ஒன்னை அந்த வீட்டுக்கு அனுப்பிச்சுப் பாத்தேன். அதுவே அங்கே நெருங்க முடியாமல் திரும்பி ஓடி வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்…”

அவனுடைய பாம்பு போன வேகத்தையும், வந்த வேகத்தையும், அவன் அதை அமைதிப்படுத்தின விதத்தையும் மறைந்து நின்று பார்த்த அவருக்கு அவன் சொல்வதெல்லாம் உண்மை என்று இப்போது புரிய ஆரம்பித்தது.

அந்தப் பாம்பு திரும்பவும் அந்த மாதிரி ஒரு ரத்தினத்தை மறுபடி உருவாக்காதா?”

இல்லை ஐயா. அந்த நாகரத்தினத்தை உதிர்த்ததற்கப்புறம் அந்த நாகம் செத்துடும்….”

வேலாயுதம் சிறிது யோசித்து விட்டு ஆர்வமாகக் கேட்டார். “அதுக்கப்புறம் வேறொருத்தன் கைல அந்த நாகரத்தினக்கல் கிடைச்சுட்டா?”

பாம்பாட்டி சொன்னான். “அப்படிக் கிடைச்சுட்டா உலகத்திலேயே அந்த ஆள் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியா இருப்பான்.”

வேலாயுதத்தின் கண்கள் கனவில் மின்னின. உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவர் அறையிலிருந்து சில அடிகள் தொலைவில் தான் இருக்கின்றது. மிகப்பக்கம் தான் அது.


(தொடரும்)
என்.கணேசன்




Thursday, December 23, 2021

இல்லுமினாட்டி 134


வாங் வே விஸ்வத்தின் வேண்டுகோள் மின்னஞ்சலில் வந்ததும் பரபரப்பானார்.  கிழவர் அதைப் பார்த்து விட்டு அவருக்குப் போன் செய்து பேசுவார் என்று எதிர்பார்த்தார்.  ஏனென்றால் இது போன்ற கோரிக்கைகளுக்குப் பதில் அனுப்பும் வேலையை கிழவர் என்றுமே செய்ததில்லை. நேரில் பேசினால் அல்லது கேட்டால் அதற்குப் பதில் எதுவும் சொல்வார் அல்லது உத்தரவு போடுவாரே ஒழிய  எழுத்து மூலம் செய்வதற்கு அவருக்கு உதவியாளரோ, இல்லை வாங் வேயைப் போன்ற ஆளோ வேண்டும். தலைமைக்குழு மின்னஞ்சலுக்கு வந்திருப்பதால் உபதலைவர் அல்லது வாங் வேயிடம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். வாங் வேயின் அவசரம் தலைமைக்குழு உறுப்பினர்களில் மற்றவர்களுக்கு இல்லை என்பதால் அவர்களாக எதுவும் கேட்கப் போவதில்லை. வாங் வேக்கு இரண்டு நாளில் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நேரடியாகக் கேட்டுக் கொள்ளும் பொறுமை இல்லை. அதே சமயத்தில் போன் செய்து அவராகக் கேட்கும் தைரியமும் இருக்கவில்லை.   இதற்கு முன் விஸ்வம் கடிதம் போட்ட போதும் போன் பண்ணி என்ன செய்யலாம் என்று கேட்டவரும் அவர் தான். இப்போதும் கேட்டால் கிழவருக்குக் கண்டிப்பாகச் சந்தேகம் வலுக்கும். சாலமனின் முடிவு தெரிந்த வாங் வே ஆபத்தின் எல்லைக் கோட்டைத் தாண்ட மனமில்லாமல் இருந்தார். எர்னெஸ்டோ நாளை கிளம்புகிறார். அதனால் நாளை அவர் எதுவும் சொல்ல வாய்ப்பில்லை. இன்று மனிதர் எதாவது சொல்லலாம். அவருக்கு வேண்டுமளவு நேரம் இருக்கிறது. இதற்குப் பதில் சொல்வதை விட பிதோவனின் இசை முக்கியம் என்று அவர் நினைத்தாலும் நினைக்கலாம். அவர் நினைத்தது போல பிதோவனின் இசை தான் கிழவருக்கு முக்கியமாகியிருக்க வேண்டும். அவர் வாங் வேயை அழைக்கவில்லை…


விஸ்வம் அந்தப் பங்களாவின் காம்பவுண்ட் சுவரில் எம்பி எர்னெஸ்டோவின் பங்களாவை எட்டிப் பார்த்தான். பங்களாவின் உள்ளே ஹாலில் மெல்லிய விளக்கொன்று மட்டும் எரிந்து கொண்டிருந்தது. மற்ற அறைகள் எல்லாம் இருள் மண்டிக் கிடந்தன. பங்களாவின் வெளியே நாலா பக்கமும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பங்களாவின் முன் கேட்டில் இரண்டு காவலர்கள் இருப்பார்கள் என்றும், தெருவில் இரண்டு காவலர்கள் இருப்பார்கள் என்றும் பங்களாவின் உள்ளே ஒரு சமையல்காரனும், இன்னொரு வேலைக்காரனும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் இருப்பார்கள் என்றும் சாலமன் சொல்லியிருந்தார். ஆனால் நாளை மறுநாள் எர்னெஸ்டோ வந்து சேர்வதால் நாளை இரவே பாதுகாப்பு ஆட்கள் பலர் இங்கே வந்து விடுவார்கள். எர்னெஸ்டோவுடன் இருக்கும் ஆட்கள், இங்கு சேரப்போகும் ஆட்கள் என்று பாதுகாப்பு பலமடங்காகி விடும். கிழவருக்கு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளே சிறைப்படுத்துவது போலத் தோன்றுவதில் தவறில்லை என்று விஸ்வத்துக்குத் தோன்றியது.

இன்னேரம் சமையல்காரனும், வேலைக்காரனும் உறங்கியிருப்பார்கள். பாதுகாப்பு அதிகாரி எப்போதும் விழித்திருப்பார். தலைவர் இல்லாத போது உள்ளே ஒரு பாதுகாப்பு அதிகாரி அவசியமில்லை என்ற போதும் அப்படி ஒரு உயரதிகாரியை ஏன் வீணாக வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது அந்த ஆள் தான் விஸ்வத்துக்குப் பிரச்னை. அவன் அவர் அறியாமல் உள்ளே போய் வர வேண்டும்….

சாலமனிடம் விஸ்வம் கேட்டிருக்கிறான். “அந்த அதிகாரி உள்ளே தூங்கவும் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு என்ன தான் இரவு வேளையில் செய்வார்?”

“கொடுமை தான். வீட்டைச் சுற்றியிருக்கும் கண்காணிப்பு கேமிராக்கள் காண்பிப்பதை கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்ப்பது தான் அவர் வேலை. தலைவர் அங்கே தங்கியிருக்கும் போது அவருடன் இன்னொரு அதிகாரியும் இருப்பார். அவர்கள் இருவர் பார்வையும் அதிலேயே தைத்தபடியிருக்கும். தலைவர் இல்லாத போது அந்தப் பாதுகாப்பு அதிகாரி சிறிது நேரம் அந்தக் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்ப்பார்.  சிறிது நேரம்  மொபைல் பார்ப்பார், உள்ளே நடப்பார், வெளியே வந்து சிறிது நேரம் நிற்பார், பழையபடி உள்ளே போவார்….” என்று சிரித்தபடி சாலமன் சொல்லியிருந்தார்.

அப்படி அந்தப் பாதுகாப்பு அதிகாரி வெளியே வருவதற்காக விஸ்வம்  முகமூடி அணிந்து கொண்டு காத்திருந்தான். ஆனால் எம்பிய நிலையிலேயே அந்த காம்பவுண்ட் சுவரில் இருப்பது சிறிது நேரத்திற்குப் பின் வலிக்க ஆரம்பித்தது. உள்ளே குதித்துக் காத்திருக்கலாம் என்றாலோ பின்பக்கம் இருக்கும்  கண்காணிப்பு காமிரா அந்த அதிகாரிக்குக் காட்டிக் கொடுத்து விடும். அதனால் கீழே இறங்கி அந்தப் பின் பங்களா காம்பவுண்ட் சுவரிலேயே சாய்ந்து நின்ற விஸ்வத்தின் காதுகள் மட்டும் எர்னெஸ்டோ பங்களாவிலிருந்து வரும் ஓசைகளின் மீது கவனமாக இருந்தன. நேரம் மெல்ல ஊர்ந்தது. விஸ்வம் பொறுமையிழக்காமல் காத்திருந்தான்.

எர்னெஸ்டோவின் பங்களா காவலாளிகள் இருவரும் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. இருவரும் பழைய இராணுவ வீரர்கள் என்று பேச்சில் தெரிந்தது. ஈராக்கில் நடந்த போரில் அமெரிக்காவின் சார்பாகப் போரிட்டிருந்த அவர்கள் அந்தச் சமயத்து நிகழ்வுகளை நினைவுகூர்ந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று பங்களாவின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. விஸ்வம் மறுபடி காம்பவுண்ட் சுவரில் எம்பிப் பார்த்தான். அந்தப் பாதுகாப்பு அதிகாரி வெளியே வந்து வராந்தாவில் நின்று சோம்பல் முறித்தார். முன் கேட் காவலாளிகள் அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்கள். அவர் அவர்கள் பேச்சை உள்ளிருந்தே கேட்டிருந்தார் போலிருந்தது. அவர் அவர்கள் அருகில் சென்று ”அங்கேயிருந்த போது சதாம்  உசைனை நேரில் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

விஸ்வம் மறைவாகச் சுவர் ஏறிச் சத்தமில்லாமல் குதித்தான். குதித்தவன் அசையாமல் சுவரோடு ஒட்டி நின்று கவனித்தான். அவர்கள் பேச்சு தடைப்படவில்லை. அதனால் அவர்கள் காதில் அவன் குதித்த சத்தம் விழவில்லை என்பது உறுதியானது. சுவர் ஓரம் போய் நின்று மெல்ல எட்டிப் பார்த்தான். மூவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காவலாளிகள் ஈராக்கில் பொதுமக்களின் ஏழ்மையையும் சதாம் உசைனின் மாளிகைகளின் செல்வச் செழிப்பும் பற்றி விவரமாகச் சொல்ல அந்த அதிகாரி கேட்டுக் கொண்டிருந்தார். விஸ்வம் தான் இருக்கும் இடத்திற்கும் பங்களாவின் வாசலுக்கும் உள்ள தூரத்தையும், அதை அடையத் தேவையான குறைந்தபட்ச நேரத்தையும் மனதளவில் கணக்குப் போட்டான். இருபது வினாடிகளாவது வேண்டும்.

மனதைக் குவித்து உடலுக்குக் கட்டளையிட்டான். “இருபது வினாடிகளில் வாசலை அடைய வேண்டும்.” அவன் கட்டளையைக் கேட்டு உடலின் ஒவ்வொரு செல்லும் தயாராவது போல் கற்பனை செய்து கொண்டான். அவனால் முடியும். ஏனென்றால் சில நாட்களாகவே சர்ச்சுக்குள் ஓடி அவன் பயிற்சி எடுத்திருக்கிறான். இப்போது இருக்கும் ஒரே பிரச்சினை  ஓடும் போது அவர்கள் மூவர் கண்ணிலும் பட்டு விடக்கூடாது என்பது தான்.  அவர்கள் மூவரிடமும் துப்பாக்கி இருக்கிறது. பார்த்து விட்டால் துப்பாக்கி ரவைகளால் அவன் உடம்பைச் சல்லடையாக்கி விடுவார்கள்.

இப்போது பாதுகாப்பு அதிகாரியின் முதுகு தான் விஸ்வத்திற்குத் தெரிகிறது. அவர் திரும்பினால் ஒழிய அவனைப் பார்க்க முடியாது. அவர் உடல் ஒரு காவலாளியை முழுவதுமாக மறைத்திருந்தது.  அதனால் அந்தக் காவலாளியும் ஓடி வரும் விஸ்வத்தைப் பார்க்க முடியாது. ஆனால் பக்கவாட்டில் நின்றபடி அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் காவலாளி கண்டிப்பாக விஸ்வத்தைப் பார்த்து விட முடியும். விஸ்வம் பொறுமையாகக் காத்திருந்தான்.  நல்ல வேளையாகத் தெருக்காவலில் இருந்த காவலாளி ஏதோ கேட்டபடி பங்களா வெளி கேட்டை நெருங்க பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்த காவலாளி அந்தப் பக்கம் திரும்பினான். இது தான் சமயம் என்று விஸ்வம் வாசலை நோக்கி ஓடினான். அவன் அணிந்திருந்த ரப்பர் ஷூ சத்தம் செய்யவில்லை. சத்தம் வராதபடி ஓடி விஸ்வம் பல முறை பயிற்சியும் எடுத்திருக்கிறான். இருபத்தி ஒன்றாவது வினாடியில் விஸ்வம் பங்களாவுக்குள் நுழைந்திருந்தான். அது வரை அந்தக் காவலாளி திரும்பாமல் இருந்தது அவனைக் காத்தது.

விஸ்வத்துக்கு உள்ளே உள்ள அறைகள் மனதளவில் அத்துப்படியாகி இருந்தன. வரவேற்பறை தாண்டி மெல்ல ஹாலுக்கு வந்தான். ஹாலின் மெல்லிய விளக்கு ஒளியில் அவன் அதிகம் நிற்காமல் அதைத் தாண்டி அவன் திட்டமிட்டிருந்த ஒரு மூலை அறையை நோக்கி ஓடினான். அறைக்கதவைச் சத்தமில்லாமல் திறந்து சத்தமில்லாமல் மூடினான். உள்ளே இருள் நிறைந்திருந்தது. ஆனால் இருட்டு என்றுமே விஸ்வத்துக்கு பழைய உடலிலும் சரி, இந்த உடலிலும் சரி  ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. ஐந்தே வினாடிகளில் அவன் கண்கள் அந்த இருட்டிற்குப் பழகியிருந்தன. வெளிச்சத்தில் பார்ப்பது போல் அவனால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.

(தொடரும்)
என்.கணேசன்   



  

Wednesday, December 22, 2021

முந்தைய சிந்தனைகள் 74

 சிந்திக்க வேண்டிய  சில உண்மைகள் என் நூல்களிலிருந்து ....












என்.கணேசன்

Monday, December 20, 2021

யாரோ ஒருவன்? 64


ரு நிமிடம் கழிந்து இரட்டிப்பு வேகத்துடன் பாம்பாட்டியின் பாம்பு வெளியே வந்து சாலையைக் கடந்து பாம்பாட்டி இருக்கும் இடத்தை அடைந்தது. பாம்பாட்டி அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதும் அருகில் வந்த்தும் அந்தப் பாம்பை எடுத்துத் தடவிக் கொடுத்ததும் இருவருக்கும் தெரிந்தது

வேலாயுதம் சொன்னார். “அந்தப் பாம்பே பயந்து போன மாதிரியும் அவன் அதைத் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்தற மாதிரியும் தெரியுதுடா

அவர் சொன்னபடி தான் கல்யாணுக்கும் தெரிந்தது. பாம்பாட்டி திகைப்போடு ஒரு நிமிடம் நின்று நாகராஜ் வீட்டை வெறித்துப் பார்த்துவிட்டு அந்தப் பாம்பை மறுபடி தன் பெரிய துணிப்பையில் போட்டுக் கொண்டு மெள்ளக் கிளம்பினான்.

கல்யாண் தந்தையைப் பார்த்துத் தலையசைத்தான். வேலாயுதம் தலையசைத்து விட்டுக் கிளம்பினார்.   பாம்பாட்டி தெருவின் எதிர்ப்பக்கம் நடக்க ஆரம்பிக்க வேலாயுதம் தங்கள் வீட்டு வரிசையிலேயே அவன் போகும் திசையிலேயே நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் போனவுடன் தெருவை அவசரமாகக் கடந்த அவர் அவனை நெருங்கினார். அவன் அவரைச் சந்தேகமாகப் பார்த்தான்.
                        
வேலாயுதம் அவனைப் பார்த்துக் கனிவாகப் புன்னகைத்து விட்டுக் கேட்டார். “ஏம்ப்பா நீ ரொம்ப நேரமாய் அங்கே உட்கார்ந்து அந்த வீட்டையே பார்த்துகிட்டு இருந்ததைக் கவனிச்சேன். என்னப்பா விஷயம்?”

பாம்பு போய்த் திரும்பி வந்த காட்சியைப் பார்த்தது போல் அவர் காட்டிக் கொள்ளவில்லை

அது உனக்கு அனாவசியம்என்பது போல அந்தப் பாம்பாட்டி மவுனமாக நடந்தான்

வேலாயுதம் அவனுடனே நடந்தபடி கேட்டார். “அந்த வீட்டுக்காரன் கிட்ட அப்பாயின்மெண்ட் வேணும்னா தெருவுல உட்கார்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அஞ்சு லட்ச ரூபாயோடு நீ ஆறு மாசம் காத்திருக்கணும். இது தான் அவனோட இப்போதைய ரேட். உன்னைப் பார்த்தா அத்தனை பணம் வெச்சிருக்கறவன் மாதிரி தெரியல.”

பாம்பாட்டி திகைத்து நின்று விட்டான். ஆனால் அந்த திகைப்பு ஐந்து லட்ச ரூபாய்க்காகவோ, ஆறு மாதக் காத்திருப்புக்காகவோ இருக்கவில்லை. அவனுக்கு அந்த வீட்டிற்குள் ஆள் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சியாக இருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் அந்த வீட்டில் இருக்கும் போது கூடவே மனிதர்களும் இருப்பார்களா!  அவன் சந்தேகத்துடன் அவரைக் கேட்டான். “அந்த வீட்டுல ஆள் இருக்கா?”

வேலாயுதமும் திகைத்தார். நிறைய நேரம் கண்காணித்த சமயத்தில்  வீட்டிலிருந்து யாரும் வெளியேயும் வரவில்லை, யாரும் உள்ளேயும் போகவில்லை என்பதைக் கவனித்து விட்டு அந்த வீட்டில் ஆள் இல்லை என்று நினைத்து தான் இந்தப் பாம்பாட்டி பாம்பை அனுப்பிப் பார்த்திருக்கிறானா? திருட்டுப்பயல் போலிருக்கிறது. அவர் அவனிடம் நட்பு தொனியிலேயே சொன்னார். ”வீட்டில் ஒரு ஆள் இல்ல, ரெண்டு பேர் இருக்கானுக!”.

அவர் தன் சட்டைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் எடுத்து அவன் கையில் திணித்தார்.  “மனுஷங்க ஒருத்தருக்கொருத்தர் உதவிக்காட்டி அப்புறம் வாழ்க்கைல என்ன அர்த்தம் இருக்கு சொல்லு பார்ப்போம்... நீ நிறைய நேரம் அப்படித் தெருவில் உக்காந்திருந்தது ஏனோ என் மனசைப் பாதிச்சுடுச்சு. இத்தனை நேரம் ஏன் அங்கே உட்கார்ந்திருந்தே? இப்ப ஏன் போறே?”

பாம்பாட்டி தன் கையில் திணிக்கப்பட்ட ஐநூறு ரூபாயைத் தடவியபடியே அவரைச் சந்தேகத்துடன் பார்த்தான். வேலாயுதம் அவனை ஊக்குவித்தார். “சும்மா சொல்லு. அந்த வீட்டுல என்ன இருக்குன்னு பார்த்துகிட்டிருந்தே? பாம்பா, பணமா?...”

பாம்பாட்டி மெல்லச் சொன்னான். “பணம் இந்தப் பக்கத்து வீடுங்க எல்லாத்துலயும் இருக்குன்னு தெரியும். அந்த வீட்டுல பாம்பும் இருக்குதுன்னு தெரிஞ்சுது. வெளியே வந்தால் அதைப் புடிச்சுகிட்டுப் போகலாம்னு நினைச்சேன்....”

அவன் உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை என்பது அவருக்கு உடனடியாகத் தெரிந்து விட்டது. பொய் சொல்வதில் தனித்தேர்ச்சி பெற்றிருந்த வேலாயுதத்திற்கு யாராவது பொய் சொல்கிறார்கள் என்றால் நுட்பமாகக் கண்டுபிடித்து விடும் திறமை இருந்தது. ’பாவி ஐநூறு ரூபாய் வாங்கிட்டுப் பொய் சொல்றியேடா!’ என்று மனதிற்குள் அவனைத் திட்டிவிட்டுக் கேட்டார். “பாம்பு இருக்கிறது உனக்கெப்படி தெரிஞ்சுது?”

என் வாழ்க்கையே பாம்புகளைச் சுத்தி தான் இருக்கு. நூறடி தூரத்துக்குள்ள பாம்பு எங்கே இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சுடும். அந்த வீட்டைக் கடக்கறப்ப என்னால பாம்பை மோப்பம் பிடிக்க முடிஞ்சுது. அந்த வீட்டுல ஆளில்லை போல இருக்கு, அதான் பாம்பு உள்ளே குடியிருக்குன்னு நினைச்சேன்...”

புரியுது. அதைப் புடிச்சுட்டுப் போனா உன் தொழிலுக்காகும்னு நினைச்சே. சரிதானே. பின் ஏன் அதுக்கு முயற்சி செய்யாமல் கிளம்பிட்டே?”

பாம்பு வெளியே வரலை. அதனால கிளம்பிட்டேன்...”

அவன் அப்போதும் அந்த வீட்டுக்குப் பாம்பு அனுப்பி அது வேகமாகத் திரும்பி வந்ததை அவரிடம் சொல்லாமல் மறைத்தது அவருக்கு ஆள் அழுத்தக்காரன் என்பதைத் தெரிவித்தது. அவன் ஆர்வமாக அவரிடம் கேட்டான். “அந்த வீட்டுக்காரர் நாகசக்தி படைச்ச ஆள்னு சொன்னீங்களே. ரொம்ப சக்தி இருக்கிறவரோ?”

சக்தி இல்லாம யாராவது ஒரு தடவை அவனைப் பார்க்கறதுக்கு அஞ்சு லட்ச ரூபாய் தருவாங்களா?”

முன்பு அவர் சொல்லியிருந்த போதும் அவன் புத்தியில் உறைத்திருக்காத அந்தத் தொகை அவனுக்கு இப்போது உறைத்தது. அவன் மெல்லச் சொன்னான். “வட இந்தியாவுல மகராஜ்னு  நாகசக்தி படைச்சவர் ஒருத்தர் இருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர் பாம்புகள் கூட விளையாடுவாராம். பாம்புகள் கூடவே தூங்குவாராம். அவர் கிட்ட நாகரத்தினங்கள் இருக்குன்னும் சொல்வாங்க.... சினிமா ஸ்டாருங்க எல்லாம் அவரைப் பார்க்க மாசக்கணக்குல காத்திருப்பாங்கன்னும் சொல்வாங்க. இங்கேயும் அப்படியொரு ஆளா?”

அதே ஆள் தான் இவன். இப்ப இங்கே தான் இருக்கான்என்று வேலாயுதம் சொன்னார்.
                                                 
அதிர்ந்து போன அவன் பீதியுடன் பின்னால் திரும்பி அந்த வீடு இருக்கும் பகுதியைப் பார்த்தான். இப்போது அந்த வீடு கண்பார்வைக்குத் தெரியவில்லை என்றாலும் அவன் உடல் லேசாக நடுங்கியது. அவன் கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். சிறிது நேரம் தெரிந்த குழப்பத்தின் ரேகைகள் பின் நீங்கியது என்றாலும் அவன் முகத்தில் பயம் குறையவில்லை. அங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தவனாக அவன் மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். ஆனால் இப்போது நடையில் வேகம் கூடியிருந்தது.

வேலாயுதத்திற்கு அந்தத் தெளிவும் பயமும் ஆர்வத்தை மேலும் தூண்டின. எதில் இவன் தெளிவடைந்தான்? எதற்கு இவன் பயப்படுகிறான்? அவன் வேகமாக நடப்பது எரிச்சலைத் தந்தது? ஏனிப்படி ஓடுகிறான்? மனதிற்குள் அவனைத் திட்டினார். ’மெதுவா போடா. நான் திரும்ப என் வீட்டுக்குப் போகணும்டா. என்னை நிறைய தூரம் நடக்க வெச்சுடுவே போலருக்கே

இன்னொரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு அவர் சொன்னார். ”ஏம்ப்பா பயப்படறே. அந்த ஆள் பயங்கரமானவனா?”

அவர் கையில் ஐநூறு ரூபாய் நோட்டு இருப்பதைப் பார்த்தவுடனேயே தானாக அவன் நடையில் வேகம் குறைந்தது. ஆனாலும் நாகராஜ் வீட்டுப் பகுதியை ஒரு தடவை பின்திரும்பிப் பார்த்துக் கொண்டான். பின் ஒன்றும் சொல்லாமல் அவர் கையிலிருந்த பணத்தையே பார்க்க அவர் அதை அவனிடம் நீட்டினார். அவன் அதை வாங்கிக் கொண்டபடி சொன்னான். ”அவர் கோபத்தைச் சம்பாதிச்சுடக்கூடாது. அது பேராபத்துசொல்லும் போது அவன் உடல் லேசாக நடுங்கியது.

ஏன் அப்படிச் சொல்றே?” என்று அவர் கேட்டார்.

அவன் சொன்னான். “ஏற்கெனவே ரொம்ப சக்தி வாய்ந்தவர் அவர். இப்ப அவர் சக்தி ரெண்டு மடங்காகப் போகுது.”

வேலாயுதம் சந்தேகத்தோடு கேட்டார். “அதெப்படி சொல்றே?”

அவருக்கு ஒரு விசேஷ நாகரத்தினம் கிடைக்கப் போகுது..... அது சுமாரா ஆயிரம் வருஷங்களுக்கு ஒரு தடவை மட்டும் உருவாகற நாகரத்தினம். அது அந்த வீட்டுல உருவாகியிட்டிருக்கு

வேலாயுதம் ஒரு கணம் மூச்சுவிட மறந்தார். “என்னப்பா சொல்றே?”


  
(தொடரும்)
என்.கணேசன்