சாவித்திரி சொன்ன அந்த முக்கியத் தகவல்
உபயோகமானதாக இருந்தாலும் நடப்பு சூழலில் அவள் சொல்வதற்குப் பொருத்தமான ஆட்கள் ஆளும்
கட்சியிலேயே நிறைய பேர் இருந்தார்கள்.
அவர்களிடம் நூறு கோடிகளில் இருந்து பல்லாயிரம் கோடிகள் வரை பணம் இருந்தது.
பலரும் மிகவும் புத்திசாலித்தனமாக தங்கள் சம்பாத்தியத்தை சட்டரீதியாகவே
தொழில்களில் முதலீட்டாக மாற்றி விட்டிருந்தார்கள். பணம் அளவுக்கு
மீறி இருப்பதால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களில் பலரும்
குழப்பத்தில் இருந்தார்கள். அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துகள், தங்கக் கட்டிகள் என எல்லாமே அவர்களிடம்
கணக்கில்லாமல் இருந்தன. அவர்களில் பலருக்குக் கள்ளத் தொடர்புகளும்
இருந்தன. ஆக, கொலையாளி என்று சந்தேகப்படும்
தகுதியும் வாய்ப்பும் பலருக்கு இருப்பதால் அவர்களில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது
சிரமம் தான் …
கீதா சொன்னாள்.
“விமலுக்குக் கண்டிப்பாய் அந்தக் கொலையாளியைத் தெரிஞ்சிருக்கணும்.
இல்லையா அர்ஜுன்?”
“ஆமா. அவனுக்குத் தெரிஞ்சிருக்கும்னு கொலையாளிக்கும் தெரிஞ்சிருக்கும்.
அதனால தான் விமல் தன் உயிரைக் காப்பாற்றிக்கறதுக்காக தப்பிச்சுப் போயிருக்கான்.
விமலைக் கண்டுபிடிச்சு அவன் கிட்ட
பேசினால் கொலையாளி யாருன்னு நாம கண்டுபிடிச்சுடலாம். ஆனால் அவன்
இருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கறது எப்படிங்கறதை தான் நாம யோசிக்கணும் கீதா”
“நான் சந்திச்ச எல்லா ஆள்களையும் போலீஸும் சந்திச்சுப் பேசியிருக்குன்னு சொன்னாங்க.
என் கிட்ட சொன்ன தகவல்களை அவங்க போலீஸ் கிட்டயும் சொல்லியிருப்பாங்க.
விமலைக் கண்டுபிடிக்க போலீஸுக்கு நம்மளை விட வாய்ப்புகள் அதிகம்…”
“அதனால தான் விமல் அவனோட மொபைல்ல யாரையும் தொடர்பு கொள்ளலை. அவன் கடைசியாய் பேசினது நர்மதா கிட்ட
தான். அவன் கடைசியாய்
பேச முயற்சி செஞ்சதும் அவள் கிட்ட தான். அவள் போன் எடுத்துப்
பேசலைன்னவுடனேயே அவன் விஷயத்தை யூகிச்சிருப்பான். உடனே தலைமறைவாயிருப்பான்.”
அர்ஜுன் சொன்னது போல் தான் நடந்திருக்க வேண்டும்… கீதா சொன்னாள்.
“கோடி ரூபாய் வாட்ச்சும், கருப்பு பென்ஸ் காரும்
யார் கிட்ட இருக்குன்னு சேர்த்துப் பார்த்தால்?”
“ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி கார்ன்னா நாம சுலபமாய் கண்டுபிடிச்சடலாம் கீதா.
ஆனால் பென்ஸ் கார் எல்லாம் இப்ப எல்லார் கிட்டயும் இருக்கு. அது மட்டுமில்லாம, அரசியல்வாதிகள் அவங்க கிட்ட இருக்கறதை
எல்லாம் அவங்க பேர்லயே வெச்சிருக்கறதில்லை. அதெல்லாம் யார் யார்
பேர்லயோ இருக்கும். ஆனா இவங்க தான் அதைப் பயன்படுத்திகிட்டிருப்பாங்க.
ஆயிரம் கோடிகள்ல சொத்துக்கள் இருந்தாலும் இவங்க கணக்கு காண்பிக்கறதே
சில கோடிகள்ல தானே. அதனால இந்த ரெண்டையும் சேர்த்தும் கண்டுபிடிக்க
முடியாது.”
கீதா சிறிது யோசித்து விட்டுச் சொன்னாள். ”அந்தக் கருப்பு பென்ஸ்
கார் ரெஜிஸ்டிரேஷன் நம்பரை வைத்துக் கண்டுபிடிக்கலாமே
அர்ஜுன்? அது நர்மதா வீட்டு சிசிடிவி கேமிரால பதிவாயிருக்கும்.
அதை போலீஸ் வெளியிட மாட்டாங்கன்னே வெச்சிகிட்டாலும், உன் கிட்ட பேசின பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு சிசிடிவி கேமிரால எதாவது ஒரு
நாளாவது பதிவாகி இருக்கலாமே?”
“கண்டிப்பாய் அந்தக் கொலையாளி சரியான ரெஜிஸ்டிரேஷன் நம்பரை அந்தக் கார்ல வெச்சிருக்க
மாட்டான் கீதா. ஏதாவது போலி நம்பர் தான் இருக்கும்.”
“சரி… நர்மதா இறந்த ராத்திரி யாராவது வந்து போனது அவங்க
வீட்டு கேமிரால பதிவாகியிருக்காதா?”
“அதையும் நான் கேட்டேன். போலீஸ்காரங்க அவர் வீட்டு கேமிரா
பதிவையும் பார்த்திருக்காங்க. எதுவும் தெரியலையாம். நர்மதா வீட்டு பெரிய கேட் இடது பக்கமாய் தான் இருக்கு. அவர் வீடு வலது பக்கத்து வீடு. கொலையாளி கவனமா வலது பக்கமாய் போகலை
போலத் தெரியுது. இடது பக்கத்து வீட்டுல சிசிடிவி கேமிரா இல்லை.
நம்ம போலீஸ்காரங்க நர்மதா
வீட்டு கேமிரா ரிப்பேராயிருக்குன்னு இப்ப சொல்றாங்க. அது பச்சைப் பொய்ன்னு தெரியுது. ஆனால் அது
பொய்யின்னு நிரூபிக்க வழியில்லை...”
விமல் வெளிப்பட்டு உண்மையைச் சொன்னால் ஒழிய கொலையாளியைக் கண்டுபிடிக்க
முடியாது என்ற முடிவுக்கே இருவரும் வந்தார்கள். ஆனால் விமல் வெளிப்பட்டு உண்மையைச் சொல்லும்
வரை அவனை விட்டு வைப்பார்களா?
நித்யா சத்தமில்லாமல் வந்து ஏதோ ஒரு சீட்டை அர்ஜுனிடம் நீட்டினாள். பார்க்க
டாக்டர் தரும் மருந்துச்சீட்டு போல் அவனுக்குத் தெரிந்தது.
அர்ஜுன் கேட்டான். “என்னடி
இது?”
“பரண்ல இருக்கிற
அம்மாவோட டிரங்குப் பெட்டில வேறெதாவது கிடைக்குதான்னு தேடிப் பார்த்தேன். இது கிடைச்சுது.”
அர்ஜுன் அந்தச் சீட்டை வாங்கிப் பார்த்தான். டாக்டர்
சாரதா நம்பீசன் என்ற மனநல மருத்துவர் பெயரும், விலாசமும்
மேலே இருந்தன. நோயாளியின் பெயர் பானுமதி வயது 22 என்று இருந்தது. மூன்று
மருந்துகள் அந்தச் சீட்டில் எழுதப்பட்டிருந்தன. ஒரு மாத
காலத்திற்கு எடுத்துக் கொள்ளும்படியான அளவில் மாத்திரைகளுக்கு அவர் எழுதிக் கொடுத்திருந்தார்.
வயது 22 என்றால்
அவன் பிறந்த சமயமாக இருக்க வேண்டும். அண்ணனும் தங்கையும்
யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். மருந்துச் சீட்டு
பழுப்பேறி இருந்தது. அழுத்திப் பிடித்தால் சீட்டு கிழிந்து விடும் போல் தோன்றியது.
அர்ஜுன் இணையத்தில் டாக்டர் சாரதா நம்பீசனைத்
தேடினான். அந்தப் பெயரில் மூன்று மருத்துவர்கள் இருந்தார்கள். மூவரில்
இருவர் மனநல மருத்துவர்கள் அல்ல. ஒரே ஒருவர் தான் மனநல மருத்துவர். அவரும்
பத்து வருடங்களுக்கு முன் இறந்திருந்தார். இணையத்தில்
இருந்த விலாசமும், மருந்துச் சீட்டில் இருந்த விலாசமும் ஒன்று தான்.
அதில் எழுதப்பட்டிருந்த மாத்திரைகள்
எதற்காக என்பதையும் அர்ஜுன் இணையத்தில் தேடினான். டிப்ரஷன்
என்ற மனச்சோர்வு நோய்க்கான மருந்துகள் என்று தெரிந்தது. அவனோடு சேர்ந்து பார்த்துக்
கொண்டிருந்த நித்யா வருத்தத்துடன் சொன்னாள். “அப்படின்னா நீ பிறந்த
சமயத்திலேயே அம்மாக்கு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருந்திருக்கு அண்ணா.”
அர்ஜுன் மெல்லத் தலையசைத்தான். அதனால் தான் அம்மா அவனிடம்
அப்படி இருந்திருக்கிறாள். பெற்றோரின் தற்கொலையால் ஏற்பட்ட பாதிப்பின்
தொடர்ச்சியா, இல்லை வேறெதாவது காரணமா என்பது தெரியவில்லை.
சொல்லப் போனால், இப்போதும் அவள் முழுவதுமாக குணமடைந்து
விடவில்லை. இந்த உளவியல் பிரச்சினை அவளுக்கு இருப்பது தெரியாமல்
அவன் சில நாட்கள் முன்பு வரை அவளை வெறுத்திருக்கிறான். அதை நினைக்கையிலேயே
அவன் மனம் உறுத்தியது.
நித்யா மெல்லக் கேட்டாள். “அம்மாவோட பிரச்சினைகளுக்கு என்ன காரணம்னு நாம
எப்படின்னா தெரிஞ்சுக்கறது?”
அர்ஜுன் யோசனையோடு சொன்னான். “அப்பா கிட்ட கேட்கலாம். ஆனால் அவர் சொல்ல மாட்டார். பழசைப் பற்றிப் பேசிப் பிரயோஜனம்
இல்லைன்னு சொல்வார்.”
“நீ பிறக்கறப்ப கூட்டுக் குடும்பமாய் தானே இருந்துச்சு. அப்படின்னா பாட்டிக்கும் சித்தப்பாவுக்கும் இது பற்றித் தெரிஞ்சுருக்குமே அண்ணா.”
“இந்த விஷயத்துல நாம நேரடியாய் அவங்களக் கேட்க முடியாது நித்யா. அப்படியே
நாம கேட்டாலும் அவங்க
உண்மையைச் சொல்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாரும் சேர்ந்து எதையோ நம்ம கிட்ட மறைக்கற
மாதிரி தான் தெரியுது.”
“ஆமா. பாட்டியும்
அம்மாவும் ஒரே கிராமத்துக்காரங்கங்கற சின்ன விஷயத்தைக் கூட இதுவரைக்கும் நமக்கு யாருமே
சொன்னதில்லை. நீ அத்திவாக்கம் போய் விசாரிச்சிருக்காட்டி அது இப்ப கூட
நமக்குத் தெரிஞ்சிருக்காது.”
அர்ஜுன் யோசனையுடன் சொன்னான். “அந்தச்
சின்ன விஷயம் மூலமாய் நமக்கு எதாவது பெரிய விஷயம் தெரிய வந்துடும்னு பயப்படறாங்களோ
என்னவோ?”
யோசிக்க யோசிக்க அந்த சந்தேகம் அவன்
மனதில் உறுதியானது. அன்று கீதாவைச் சந்தித்த போது அந்த மருந்துச்சீட்டு பற்றி
கீதாவிடம் அர்ஜுன் சொன்னான். அப்போது அவள் சில பெண்களுக்கு முதல் பிரசவத்தின் போது அப்படி
டிப்ரஷன் என்ற மனசோர்வு நோய் வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னாள். “நல்ல வேளை
உங்கம்மா குணமடைஞ்சுட்டாங்க. சிலர் குணமடையாம இருக்கறதுமுண்டுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.”
மருந்து சாப்பிட வேண்டியிருக்காத நிலைமையில்
அம்மா இருக்கிறாள் என்றாலும் ஒரு காலத்தில் ரசித்த பழைய காதல் பாடல்களை மீண்டும் ரசிக்கும்
அளவு அம்மா முற்றிலுமாக மீண்டு வந்துவிடவில்லையே!
(தொடரும்)
என்.கணேசன்


