சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 20, 2020

சத்ரபதி 108


லிமை மிக்கவனுக்கும், வலிமை குறைந்தவனுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தங்கள் இருசாராருக்கும் இணையான பலன்கள் ஏற்படுவதாக இருக்காது என்பது காலகாலமாக இருக்கும் நிலை. வலியவன் தனக்குச் சாதகமாக எழுதும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் உரிமை மட்டுமே மெலிந்தவனுக்கு உண்டு. ஆனாலும் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தினால் மற்றவர் பார்வைக்காவது வலியவன் சில சலுகைகள் சேர்த்திக் கொடுப்பான்.  கிடைத்த வரை இலாபம் என்று மெலிந்தவன் நினைப்பான். ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும்.

இது தான் யதார்த்த நிலை என்பதால் சிவாஜி இப்போது சலுகைகளை அதிகபட்சமாகப் பெறுவதான இரண்டாம் கட்டத்திற்கு கவனம் செலுத்தினான். ராஜா ஜெய்சிங்கிடம் அவன் சொன்னான். “அரசே. நான் அமைதி ஒப்பந்தத்திற்கு முழுமனதுடன் தயார் என்றும், நட்புறவையே உண்மையில் எதிர்பார்க்கிறேன் என்றும் சக்கரவர்த்தியிடம் தெரிவியுங்கள். பின்பு இது குறித்து இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி நட்பின் பாதைக்குத் திரும்புவோம்.”

ராஜா ஜெய்சிங் சிவாஜி தில்லர்கானையும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று நினைத்தார். காரணம் முன்பு செயிஷ்டகான் ராஜா ஜஸ்வந்த்சிங்கும் சிவாஜியும் இந்துக்கள் என்பதால் கூட்டு சேர்ந்து சதி செய்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டிய செய்தி நினைவுக்கு வந்தது தான். அப்படி ஒரு குற்றச்சாட்டு வர இந்த முறை வழி ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தவராக அவர் சிவாஜியிடம் சொன்னார். “நீங்கள் தில்லர்கானிடமும் என்னிடம் கூறியதை நேரிலேயே சென்று கூறினால் நன்றாக இருக்கும். இது குறித்து எங்கள் இருவர் சிபாரிசும் சேர்ந்து போனால் சக்கரவர்த்தி உங்களிடம் தாராளம் காட்ட வாய்ப்புகள் அதிகம் என்பதால் தான் சொல்கிறேன்.”

சிவாஜி அவர் சொன்னதற்கும் சரியென்றான். பணிந்து போகும் குணம் அவன் இரத்தத்திலேயே இல்லாததால் பணிந்து போவது அவனுக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. ஒருவரிடம் பேசியாகி விட்டது. இன்னொருவனிடமும் போய் வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த இன்னொருவன் அவனுடைய புரந்தர் கோட்டையைக் கைப்பற்றக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனிடம் அங்கேயே சென்று சிபாரிசு வேண்ட வேண்டும் என்ற போது மனம் மறுத்தது. அன்னையின் உணர்த்துதலை அவன் மறுபடி நினைவுபடுத்திக் கொண்டான். உடைவதை விட பணிவது நல்லது…..

தில்லர்கான்  புரந்தர் கோட்டையைப் பிடிக்க முடியாமல் தலைப்பாகை இல்லாமல் அவன் போராடிக் கொண்டிருக்கையில் ஜெய்சிங்கும், சிவாஜியும் பேச்சு வார்த்தைகள் முடித்து விட்டார்களா என்று கடுங்கோபத்தில் இருந்தான். பல போர்களில் பராக்கிரமம் காண்பித்த அவன் இந்தச் சிறியக் கோட்டையின் கீழ்ப்பகுதியைக் கைப்பற்றுவதற்கே பெரும்பாடு ஆகி விட்டது.

முரார்ஜி பாஜி என்ற படைத்தலைவன் போரில் இரு கைகளை இழந்தும் சரணடைய மறுத்து கடுமையான தாக்குதலைத் தொடுத்து முகலாயர்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னரே உயிரை விட்டான். என்ன மனிதர்களிவர்கள் என்கிற திகைப்பு அவனுக்கு இப்போதும் இருக்கிறது. சிவாஜி இவர்களுக்கு என்ன வசியம் செய்து விட்டிருக்கிறான் என்று அவன் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களது தீவிரத்தை அடக்க முடியாதது அவன் வீரத்திற்கும், திறமைக்கும் சவால் என்று தோன்றியது. இந்தச் சமயத்தில் தான் ராஜா ஜெய்சிங்கிடம் சிவாஜி பேசி முடித்திருப்பதாக அவனுக்குத் தகவல் கிடைத்து ஆத்திரம் அடைந்திருந்தான்.

அந்த நேரத்தில் அவனுடைய வீரன் வந்து தெரிவித்தான். “பிரபு தங்களைச் சந்திக்க சிவாஜி வந்திருக்கிறார்”

தில்லர்கான் சிவாஜியின் வரவை எதிர்பார்த்திருக்கவில்லை. கடுமையான முகத்துடனேயே சிவாஜியைச் சந்தித்த தில்லர்கான் உறுதியாகச் சொன்னான். “இந்தக் கோட்டையில் எங்கள் கொடி பறக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நான் செவி சாய்க்க மாட்டேன் சிவாஜி, அனுமதிக்கவும் மாட்டேன்.”

சிவாஜி புன்னகை மாறாமல் சொன்னான். “பிரபு. அதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறீர்கள்? இந்தக் கோட்டை உங்களுடையது. அதன் சாவியை உங்களிடம் ஒப்படைக்கிறேன். போதுமா?”

தில்லர்கான் திகைத்தான். கடுங்கோபத்தில் எரிமலையாய் வெடித்தவன் அடுத்த அரை மணி நேரத்தில் பனியாய் உருகிப் போனான். சிவாஜியின் பேச்சும், பணிவும், அவன் தந்த மரியாதையும் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டது. கடைசியில் சிவாஜி மிகவும் பணிவு காட்டிச் சொன்னான். “பிரபு. நான் அமைதியையே விரும்புகிறேன். தங்களிடம் நட்புக்கரம் நீட்டவே ஆசைப்படுகிறேன். அதற்கு விலை என்னவானாலும் நான் தரத் தயாராகவே இருக்கிறேன். அதற்காகவே ராஜா ஜெய்சிங் அவர்களைச் சந்தித்தேன். அவரிடமும் இதையே கூறினேன். அடுத்ததாகத் தங்களை நான் காண வந்திருக்கும் உத்தேசமும் அதுவே. நீங்களும், ராஜா ஜெய்சிங் அவர்களும், நான் அமைதியையும், நட்பையும் நாடி வந்திருப்பதைச் சக்கரவர்த்தியிடம் தெரிவித்து அவர் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.”

சிவாஜியைப் போன்ற ஒரு மாவீரன் இவ்வளவு பணிவோடு வேண்டிக் கொண்டதில்  தில்லர்கான் உள்ளம் குளிர்ந்தான். “அரசே. ராஜா ஜெய்சிங் எனக்கும் மூத்தவர். அரசவை அந்தஸ்திலும் பெரியவர். அவரிடம் நீங்கள் பேசியிருப்பதே போதுமானது. அவர் பேச்சுக்கு சக்கரவர்த்தியிடம் மிகுந்த மரியாதை உண்டு. என் பங்குக்கு நானும் சக்கரவர்த்தியிடம் கூறுகிறேன்.” என்று கூறியவன் சிவாஜிக்குப் பட்டாடைகளும், வீரவாளும் பரிசளித்தான்.

அங்கிருந்து திரும்பி வரும் போது ரகுநாத் பந்தின் கண்கள் கலங்கியிருந்தன. சிவாஜி அறியாமல் அவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். இந்த வேண்டுகோள் விடுப்பதெல்லாம் சிவாஜியை எத்தனை துன்பப்படுத்தியிருக்கும் என்பதை அவர் நன்றாக அறிவார்….

பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. பேச்சு வார்த்தைகளின் சாராம்சங்களை அவ்வப்போது ஔரங்கசீப்புக்கு அனுப்பி வைத்த ராஜா ஜெய்சிங் மறுபடியும் சக்கரவர்த்தியிடமிருந்து குறிப்புகள் பெற்று சிவாஜிக்குத் தெரிவித்து கடைசியில் ஒரு வழியாக உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன்படி சிவாஜி தன்னுடைய ஆளுமையில் பன்னிரண்டு கோட்டைகளையும், ஒரு லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் பகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள புரந்தர், கொண்டனா உட்பட இருபத்தி மூன்று கோட்டைகளை முகலாயர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  முகலாயர்களுக்குத் தேவைப்படும் போது சிவாஜி உதவ முன்வர வேண்டும். சிவாஜியின் மகன் சாம்பாஜி முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஐயாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையின் மன்சப்தார் என்று கூறப்படும் தளபதி பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நல்லுறவின் அடிப்படையில் முகலாயச் சக்கரவர்த்தியின் தர்ப்பாருக்கு சிவாஜி ஒரு முறை நேரிடையாக வருகை புரிய வேண்டும்.

சிவாஜிக்கு இந்தக் கடைசி நிபந்தனை பிடிக்கவில்லை. ஆனால் ராஜா ஜெய்சிங் அதற்கு சிவாஜியை வற்புறுத்தினார். “அரசே, நீங்கள் நேரடியாகச் சென்று சக்கரவர்த்தியைச் சந்தித்தால் மட்டுமே அவருக்குத் தங்கள் வார்த்தைகளின் மீது முழு நம்பிக்கை வரும். அதனால் ஒரே ஒரு முறை சென்று விட்டு வாருங்கள். பின் ஒரு முறை செல்ல நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்….”

சிவாஜி ராஜா ஜெய்சிங்கை நம்பியதில் நாலில் ஒரு பகுதியும் ஔரங்கசீப்பை நம்பவில்லை. அங்கே நேரில் சென்ற பின் பாதுகாப்பாய் திரும்பி வர முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தந்தை மற்றும் சகோதரர்களிடம் கூட முறையாக நடந்து கொள்ளாத ஔரங்கசீப் எதிரியான அவனை முறையாக நடத்தி திரும்ப அனுப்பி வைப்பான் என்று நம்புவது முட்டாள்தனமாகவே தோன்றியது.

ராஜா ஜெய்சிங்கிடம் சிவாஜி வெளிப்படையாகவே சொன்னான். “அரசே. உங்கள் சக்கரவர்த்திக்கு என் மேல் முழு நம்பிக்கை வர ஒரு முறை அங்கு தர்பாருக்குச் சென்று வர வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு அவர் மேல் முழுநம்பிக்கை வரும்படி என்ன உறுதிமொழி தருகிறீர்கள்?”


ராஜா ஜெய்சிங் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நான் தங்கள் தயக்கத்தைச் சக்கரவர்த்திக்குத் தெரிவித்து அவரையே தங்களுக்கு மடல் அனுப்பச் சொல்கிறேன்….” 


அப்போதும் சிவாஜி தயங்கினான். அதைக் கண்ட ராஜா ஜெய்சிங் மிக உறுதியாக அவனிடம் சொன்னார். “அரசே. இங்கு பேச்சு வார்த்தைக்கு நீங்கள் வரும் பொருட்டு உங்கள் அமைச்சரிடம் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இங்கு ஏற்படாது என்று நான் உத்திரவாதம் தந்தேன். அதே உத்திரவாதத்தை அங்கு சென்று வருவதற்கும் நான் தருகிறேன். அங்கு என் மூத்த மகன் ராம்சிங் இருக்கிறான். அவன் தன் உயிரைக் கொடுத்தாவது உங்களைப் பாதுகாப்பான். இது நான் தனிப்பட்ட முறையில் தங்களுக்குத் தரும் வாக்கு!”

(தொடரும்)
என்.கணேசன்








3 comments:

  1. Very emotional episode. Sivaji and Jaisingh both great!

    ReplyDelete
  2. சத்ரபதியின் உள்ளுணர்வு எச்சரித்தாலும் விதி வலியது

    ReplyDelete
  3. சிவாஜி தன் இடத்திற்கு வந்ததும் ஔரங்கசீப் "இதான் சரியான சந்தர்ப்பம் என்று ஏதேனும் திட்டம் தீட்டுவானா?"...
    இல்லை பாதுகாப்பாக திரும்ப அனுப்புவானா??

    ReplyDelete