தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Sunday, November 7, 2021
Sunday, October 31, 2021
Sunday, August 1, 2021
Saturday, April 18, 2020
இறைவன் எந்த மதத்தவன்?
இன்று எல்லா மதத்தவரும் இறைவனைத் தங்கள் மதத்தவனாக உரிமை கொண்டாடுகிறார்கள். தங்கள் மதமே இறைவனுக்கு
உகந்த மதம், உண்மையான மதம், சரியான மதம் என்ற அபிப்பிராயம் வாய்விட்டுச் சொல்லா விட்டாலும்
பெரும்பாலானோர் மனங்களில் இருக்கின்றது. அது சரியா? இறைவன் எந்த மதத்தவன்? இந்த மதங்களால்
உரிமை கொண்டாடப்படும் இறைவனின் உண்மையான நிலை என்ன? ஒரு அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான
நியாயமான அலசல்!
என்.கணேசன்
Saturday, March 7, 2020
குழந்தைகளை இழந்து விடாதீர்கள் பெற்றோர்களே!
பதின்ம (டீனேஜ்)
வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களே நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும்.
நேற்று பேருந்தில்
நான் காண நேர்ந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பேருந்தில்
நல்ல கூட்டம். பேருந்தில் ஏறிய பள்ளிச் சீருடை அணிந்த ஒரு சிறுமி சுமார் பத்தாம் வகுப்பில்
படிக்கும் தோற்றத்தில் தெரிந்தாள். அவள் அடிக்கடி சற்று தள்ளி நின்றிருந்த சுமார்
18 வயதிருக்கும் ஒரு பையனைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள். அது நட்பின்
புன்னகை அல்ல. ஏனென்றால் நட்பின் புன்னகை ஓரிரு முறைக்கும் மேல் காரணமில்லாமல் வர வாய்ப்பில்லை.
அவள் கூட்டத்தில் சிறிது சிறிதாக நகர்ந்து வந்து அந்தப் பையன் அருகில் நின்று கொண்டாள்.
அவளருகே இருந்த இருக்கைகள் காலியான போதும் அவள் உட்காரவில்லை. அந்தப் பையனும் அப்படியே.
ஒரு கட்டத்தில் கூட்டம் குறைந்து இருவரும் சேர்ந்து அமர இருக்கை கிடைத்த போது தான்
இருவரும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார்கள். இருவரும் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக்
கொண்டார்கள். அப்போதும் அந்தப் பையன் மட்டுமே யாராவது பார்க்கிறார்களா என்று ஓரிரு
முறையாவது மற்ற பயணிகளையும் பார்த்தான். அந்தச் சிறுமி அவனைத் தவிர வேறு யாரையும் பார்க்கும்
நிலைமையில் இல்லை. அந்தப் பையன் இறங்கும் நிறுத்தம் வந்தவுடன் இறங்கிக் கொண்டான். அதன்
பின் தான் அந்தச் சிறுமி எழுந்து மற்ற பெண்கள் இருக்கும் பகுதிக்கு வந்தாள்.
ஒன்றாகச் சேர்ந்து
அமர்வதும், பேசுவதும் தவறல்ல. ஆனால் அந்தச் சிறுமியின் பார்வையும், சிரிப்பும், நட்பு
எல்லையையும், அவள் வயதையும் மீறியதாக இருந்ததைப் பார்த்த போது இரண்டு பெண்குழந்தைகளின்
தந்தையான எனக்கு மனம் பதறியது. இக்காலத்தில் பொது இடங்களில் எத்தனையோ அவலங்களையும்
அலங்கோலங்களையும் பார்த்த அனுபவம் இருக்கிறது. ஆனால் பள்ளிச் சீருடையில் இருந்த அந்தச்
சிறுமியின் அறியாத வயது தான் என்னை மனம் பதற வைத்தது. அவள் வலியப் போய் அந்தப் பையனிடம்
நடந்து கொண்ட விதம் அந்த வயதிற்கேற்றதாய் இருக்கவில்லை. எல்லாம் பார்க்கையில் அவர்களுக்கு
இது இரண்டாவது அல்லது மூன்றாவது சந்திப்பாக இருக்கலாம் என்று தோன்றியது. இனி சில சந்திப்புகள்
தொடர்ந்தால், தவறான வாய்ப்புகள் கிடைத்தால், எந்தவொரு விபரீதமும் அவர்களுக்குள் நடக்கலாம்
என்பது தெளிவாகவே தெரிந்தது. இதெதுவும் அறியாமல் எங்கோ இருக்கும் அந்தச் சிறுமியின்
பெற்றோர் மீது பச்சாதாபம் தோன்றியது. அந்தச் சிறுமியின் முகத்தில் தெரிந்த அந்தச் சிரிப்பு
எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. அந்தச் சிறுமிக்காகவும், அவளுடைய பெற்றோருக்காகவும்
நான் உணர்ந்த வலி எனக்குள்ளே நேற்றைய தினம் முழுவதும் மெலிதாக இருந்து கொண்டேயிருந்தது.
சினிமாக்களும் சீரியல்களும்
வளர்த்து விட்ட கலாச்சாரச் சீரழிவு இது. இதில் எத்தனையோ வாழ்க்கைகள் பிஞ்சிலேயே கருகி
விடுகின்றன. அதையும் பரபரப்பான செய்திகளாகப் போட்டு ஊடகங்கள் காசு பார்க்கின்றன. இந்தச்
சம்பவங்களின் முடிவில் சம்பந்தப்பட்ட தனிநபர்களும், குடும்பங்களும் படுகின்ற வேதனைகள்
சொல்லி மாளாது. எத்தனையோ துக்கங்கள்... எத்தனையோ
தற்கொலைகள்.... எத்தனையோ சீரழிவுகள்...
பெற்றோர்களே! உங்களில்
பெரும்பாலோருக்குப் பிள்ளைகளே உங்கள் கனவுகளின் எதிர்காலம். உங்களால்
முடியாததை எல்லாம் உங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும், உங்களை
விட சந்தோஷமாகவும், சுபிட்சமாகவும் அவர்கள் நிறைவாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே
அதிகம். எத்தனையோ வீடுகளில் எத்தனை வளர்ந்தாலும், குழந்தை
என்றும் பாப்பா என்றுமே பிள்ளைகளை அழைத்துப் பேசும் வழக்கம் இன்னும் இருக்கிறது. அப்படிப்பட்ட உங்கள் உயிருக்குயிரான குழந்தைகளின் போக்கைத்
தயவுசெய்து அவ்வப்போது கூர்ந்து கவனியுங்கள். பள்ளிக்குச் செல்லும்
அவர்கள் கல்வியோடு வேறு எதைக் கற்றுக் கொள்கிறார்கள், எதில் ஆர்வம் காட்டுகிறார்கள்
என்பதைக் கவனியுங்கள். உங்கள் மற்ற பிரச்னைகளிலேயே மூழ்கிப் போயிருக்காமல் அவர்களின்
நட்புகள் குறித்து அறிந்து வைத்திருங்கள். அவர்கள்
பேச்சின் மூலம் அவர்கள் மனப்போக்கைத் தெரிந்து வைத்திருங்கள். தவறான பாதை
மாற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்து அவர்களையும் உங்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இக்காலத்தில் சினிமாக்கள்,
சீரியல்கள், இணைய தளங்கள், கைபேசிகள் என ஏராளமான கவர்ச்சி வலைகள் அவர்களைக் கவர்ந்திழுக்கின்றன.
அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களை அன்பாலும் நல்ல முன்னுதாரணங்களாலும் நீங்களே அவர்களை
நல்வழிப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் அவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், இலக்குகளையும்
ஏற்படுத்த வேண்டும். இந்தக் கவர்ச்சி வலைகளில் சிக்கி, மனம் தவறி வாழ்க்கையை ஆரம்பத்திலேயே
முடித்துக் கொண்ட சோகக் கதைகள் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். வாழ்க்கையின்
யதார்த்தம் சினிமாக்கள் சொல்லும் கதைகளுக்கு நேர் முரணானது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
நல்ல புத்தகங்கள், விளையாட்டுகள், நல்ல பொழுது போக்குகளில் ஆர்வம் அவர்களுக்கு இருக்கும்படி
பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் ஊக்குவிக்கவும் வேண்டும். அவ்வப்போது அவர்களிடம்
பேச்சுக் கொடுத்து அவர்கள் மனப்போக்கை அறிந்து கொள்ள வேண்டும். மனப்போக்கில் தவறு தெரிந்தால்
அன்பாகவும், அறிவுபூர்வமாகவும் திருத்த முயல வேண்டும். இந்த வழிகளிலேயே அந்தச் சீரழிவுப்
போக்குக்கு எதிர்விசையை நீங்கள் உருவாக்க முடியும்.
இதையெல்லாம் செய்வதற்கு
இன்று உங்களுக்கு நேரமில்லாமல் போனால் எதிர்காலத்தில் நீங்கள் பணமும் சொத்தும் சேர்த்தியிருக்கலாம்.
ஆனால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையைத் தொலைத்திருப்பீர்கள்! அது வேண்டாமே!
(இந்த எச்சரிக்கைச்
செய்தியை நீங்கள் அறிந்த பதின்ம வயதுக் குழந்தைகளின் பெற்றோர்களுடன் தயவு செய்து பகிர்ந்து
கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துங்களேன்!)
என்.கணேசன்
Sunday, September 9, 2018
மத நல்லிணக்கத்திற்கு ஒரு கோயில், ஒரு மசூதி!
மதங்களின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களும், அராஜகங்களும்
ஒரு பக்கம் இருக்க, மதங்களைக் கடந்த பெருந்தன்மைகளும், மரியாதைகளும் கூட அவ்வப்போது
நமக்குப் பார்க்கக் கிடைப்பது தான் இந்த தேசத்தின் மிகப்பெரிய பலம்.
இன்றைய (9.9.2018) பத்திரிக்கையில் இரு செய்திகள் வியக்க
வைக்கும்படி இருந்தன. ஒன்று முஸ்லீம் ஒருவர் விநாயகருக்குக் கோயில் கட்டி வரும் செய்தி.
மைசூரைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் அருகே சிக்கஹொல்லே என்ற அணைக்கட்டுப் பகுதியில் மக்கள்
வணங்கி வந்த விநாயகர் சிலை கடந்த வருடம் திருட்டுப் போய் விட அது அந்தப் பகுதி மக்களைக்
கவலைக்குள்ளாக்கியது. அச்செய்தி பாதித்த மனிதர்களில் ரஹ்மான் என்பவரும் ஒருவர். அந்த
அணைக்கட்டுப் பகுதியின் ஊழியராக முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் அவர் அப்பகுதியில்
சிறிய விநாயகர் கோயில் ஒன்றைக் கட்ட விருப்பம் கொண்டு அதற்காகக் கடும் முயற்சிகள் மேற்கொண்டு
உழைத்து வருகிறார். சிலை தயாராகி விட்டதாகவும், கோயில் கட்டும் பணி முடிவடையும் தருவாயில்
உள்ளது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. அதற்கு ஆகும்
செலவைக் குறித்துக் கேட்ட போது ரஹ்மான் ”இறைவனின் காரியங்களில் கணக்குப் பார்க்க விரும்பவில்லை”
என்று கூறி விட்டாராம்.
மாற்று மதத்தின் கோயிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ரஹ்மான்
ஒரு வித்தியாசமான உதாரண புருஷராகத் திகழும் அதே வேளையில் உத்திரப்பிரதேசத்தின் முசபர்நகர்
அருகே உள்ள நன்ஹெடா கிராமத்தில் இருக்கும் மசூதி ஒன்றை இருபத்தி ஐந்து வருடங்களாக ராம்வீர்
காஷ்யப் என்ற இந்து பராமரித்து வருவதாகவும் அதே பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது.
2013ல் நடந்த மதக்கலவரத்தில் அந்த மசூதியை இடிக்க கலவரவாதிகள் முற்பட்ட போது தடுத்துக்
காத்தவர்களில் அவரும் ஒருவர்.
முஸ்லீம்கள் யாரும் தற்போது அந்தக் கிராமத்தில் இல்லாத போதும்
அதிகாலையில் மசூதியைக் கூட்டிச் சுத்தம் செய்து, மாலையில் மெழுகுவர்த்தி பற்ற வைத்து,
வருடத்திற்கு ஒரு முறை ரம்ஜானுக்கு முன் மசூதிக்கு வெள்ளையடித்து ராம்வீர் காஷ்யப்
தன் சொந்தச் செலவில் பராமரித்து வருகிறார். அந்தக் கிராமத்து வழியாகப் போகும் முஸ்லீம்
வழிப்போக்கர்கள் எப்போதாவது நமாஸ் செய்து விட்டுப் போகிறார்கள்.
“நான் சிறுவயதிலிருந்து பார்த்து வந்த மசூதி அது. வழிபாட்டுத்தலம்
எதுவும் பாழடைந்து இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. எல்லா வழிபாட்டுத் தலங்களையும்
மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப் பட்டவன் நான். நானே மேஸ்திரியாகவும் இருப்பதால்
சிறிய சிறிய ரிப்பேர் வேலைகளையும் செய்து பராமரிப்பது எனக்கு சுலபமாகிறது” என்று அவர்
கூறுகிறார்.
இவர்கள் இருவரும் இந்தத் தேசத்தின் ஆழமான நல்லிணக்கத்தைப்
பிரதிபலிக்கும் உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். ஒரு கலவரமானால் அதைப் பல நாட்கள் செய்தியில்
இருத்தும் மீடியாக்கள் இது போன்ற நிகழ்வுகளை அதிகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க
விஷயம்.
நல்ல விஷயங்களைப் பேசுபவர்கள் இன்று குறைந்து விட்டார்கள்.
ஊடகங்களோ நல்ல விஷயங்களைத் தொடர்ந்து வெளியிட்டால் காசு பார்க்க முடியாதென்று நினைக்கிறார்கள்.
அதனால் ஒரு குடும்பப்பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு கள்ளக்காதலனோடு ஓடினால் அது பத்திரிக்கைகளுக்கும்,
தொலைக்காட்சிகளுக்கும் பல நாள் செய்திகளாகத் தொடர்கிறது. மோசமான விஷயங்களை நீட்டி முழக்குபவர்கள்
நல்ல விஷயங்களை ஒரு நாள் ஒரு பத்திச் செய்தியாகக் கடந்து விடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் பத்திரிக்கைகளில் அதிகம் வராத, தொலைக்காட்சிகளில்
அதிகம் காட்டாத இது போன்ற சம்பவங்களே இந்தத் தேசத்தின் உண்மையான ஆழத்தையும் உயரத்தையும்
காட்டுகின்றன. நம் அடையாளமும் இது தான்.
என்.கணேசன்
Tuesday, May 1, 2018
நினைவுகளின் நரகத்தில் இருந்து நீங்குவது எப்படி?
அடுத்தவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்களை நம்மால் சீக்கிரம் மறக்க முடிவதில்லை. அவர்கள் செய்த துரோகங்களும், பேசிய வார்த்தைகளும் நெஞ்சில் நீங்காத நினைவுகளாய் தங்கி நம் வாழ்க்கையையே நரகமாக்கி விடுகின்றன. அந்த நினைவுகளின் நரகத்திலிருந்து நீங்குவது தான் எப்படி? வாருங்கள் பார்ப்போம். ...
- என்.கணேசன்
- என்.கணேசன்
Monday, July 10, 2017
விமர்சனத்தை எதிர்கொள்வது எப்படி?
சமுத்திரம் அலைகளை இடைவிடாது
உருவாக்குவது போல
சமூகம் விமர்சனங்களை
இடைவிடாது உருவாக்கிக்
கொண்டே இருக்கும்.
அதனால் விமர்சனங்களில் இருந்து நாம் தப்பி
விட முடியாது. இந்த விமர்சனங்கள்
இனிமையானதல்ல என்றாலும்
சந்தித்தே அல்லவா
ஆக வேண்டும். சரியாக விமர்சனத்தை
எதிர்கொள்வது எப்படி? பார்ப்போம்…
Monday, June 5, 2017
முதிய பெற்றோரைப் புரிந்து கொள்ளுங்கள்!
முதுமை சுலபமானதல்ல. முதியவர்களைப் புரிந்து கொள்வதும், கையாள்வதும் கூட எளிமையானதல்ல. ஆனால் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருக்கும் அவர்களைப் புரிந்து கொள்வதும், அரவணைத்துச் செல்வதும் நம் கடமை. அவர்களை எப்படிப் புரிந்து கொள்வது? எப்படி கவனித்துக் கொள்வது? சில அறிவுரைகள் சிந்திக்கவும், நினைவில் வைக்கவும்....
என்.கணேசன்
என்.கணேசன்
Saturday, January 21, 2017
தலை நிமிர வைக்கும் இளைய தலைமுறை!
கத்தியின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி
யுத்தம் ஒன்று இங்கு அரங்கேறியிருக்கிறது.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடலெனக் கூட்டம் கூடிய இளைஞர்கள் காட்டிய கண்ணியமும், பொறுப்புணர்வும்
நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆண்களும், பெண்களுமாய் பெருமளவு கூடிய இடங்களில் ஒரு கண்ணிய
நட்புச் சூழலைப் பார்க்க முடிந்தது. கோவையில் வ உ சி பூங்கா பகுதியில்
திரண்டிருந்த அவர்கள் தாங்கள் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் காட்டிய
அக்கறையும், சில இடங்களில் போக்குவரத்தைச் சீர்ப்படுத்த காவலர்க்கு உதவிய விதமும்,
ஆச்சரியப்படுத்தியது. பலர் குடும்ப சகிதம் வந்து கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்குள் யாராவது சொல்லிலோ, செயலிலோ
அத்துமீற ஆரம்பிக்கையிலேயே அவர்களில் சிலர் அதைக் கட்டுப்படுத்தினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட
இளைஞர்களும் கட்டுப்பட்டார்கள். இதைக் காண மனம் நிறைந்தது. உணர்ச்சிகளின் போராட்டத்தில்
வன்முறை வெடிக்க பல நூறு காரணங்கள் கிடைக்கும். அப்படி இருந்தும் எதுவும்
நிகழ்ந்து விடாமல் இருந்தது நினைக்கவே பெருமையாக இருக்கிறது. சில விஷமிகள் புரளி,
வதந்தி பரப்பி போராட்டம் வெடிக்க முயற்சி செய்த போதிலும் இளைஞர்கள் அதற்கு இடம்
தராமல் அதைப் புறக்கணித்து அமைதி காக்க வழிவகுத்தார்கள் என்ற செய்திகளும்
கிடைத்தன. காவல்துறையும் பொதுமக்களும் தங்களுக்குள் இளையதலைமுறையைப் பாராட்டிப்
பேசிக்கொண்டதை பல இடங்களில் கேட்க முடிந்தது.
இதில் பேரதிர்ச்சி அடைந்தது அரசியல்கட்சிகளாகத்
தான் இருக்கும். பணம், பிரியாணி வகையறாக்களைக் கொடுத்து ஆள் திரட்டி தங்கள்
பொதுக்கூட்டங்களுக்குத் தருவித்துப் பழகிய அவர்களுக்கு தானாகக் கூடிய இளைஞர் படை
அதிர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். சொந்த லாப நஷ்டங்களை வைத்தே அரசியல் பிழைப்பு
நடத்தும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தப் போராட்டத்திற்குத் தங்கள் கட்சி சாயம்
பூச முயற்சித்து தோற்றுப் போனதைப் பார்த்து ரசிக்க முடிந்தது.
இளைஞர்களே உங்களுக்குப் பாராட்டுக்கள்.
தேவை ஒன்று வரும் போது உங்களால் அலட்டிக் கொள்ளாமல் இராணுவ ஒழுங்குடன் விசுவரூபம் எடுக்க முடியும்
என்று காட்டியிருக்கிறீர்கள். சபாஷ். இது போதும், இனி இந்த தேசம் விழித்துக்
கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது!
என்.கணேசன்
Monday, March 28, 2016
எல்லோரும் என்பது யார் யார்?
“எல்லோரும்
சொல்கிறார்கள்”, “எல்லாருக்கும்
தெரியும்”, “எல்லாரும் என்ன
நினைக்கிறார்கள் என்றால்...” முதலான வார்த்தைகளைப் பலரும்
அடிக்கடி பயன்படுத்துவதை அனைவரும் அடிக்கடி கேட்கிறோம். அப்படி எல்லோரும்
சொல்கிறார்கள் என்று ஆரம்பித்துச் சொல்லும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களாய் இருப்பதில்லை என்பதும்,
நல்லெண்ணத்தில் சொல்லப்படுவதாகவும் இருப்பதில்லை என்பதும் நம் அனுபவமாக
இருக்கிறது.
“எல்லாரும் உன்னைப் பற்றி இப்படி நினைக்கிறார்கள்”, ”எல்லாரும் இப்படி
எல்லாம் கேவலமாய் பேசுகிறார்கள்”, ”எல்லாரும் சிரிக்கிறார்கள்” என்று சொல்பவர்கள்
பெரும்பாலும் தங்கள் சொந்தக் கருத்துக்களையே அப்படி நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.
அப்படி இல்லாவிட்டாலும் ஓரிருவர் அல்லது அதிகபட்சமாய் ஐந்தாறு பேர் சொன்னதை ஒட்டு
மொத்த சமூகமும் சொல்வதாக ஒரு தோற்றத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள்.
இப்படி எல்லோர் மனங்களையும், கருத்துக்களையும் அறிந்து அவர்களுடைய
பிரதிநிதிகளாய் நம்மிடம் வந்து
தெரிவிக்கும் சமூக சேவகர்களிடம் நாம் சில கேள்விகள் கேட்கத் தவறி விடுகிறோம்.
எல்லோரும் என்றால் குறிப்பாக யார் யார்?, சுமார் எத்தனை பேர்?, அதையேன் உன்னிடம்
வந்து சொல்கிறார்கள்?, நீ அதைப்பற்றி அவர்களிடம் கருத்துக் கேட்கப் போனாயா
என்றெல்லாம் கேட்டுப் பாருங்கள். உற்சாகம் வடிந்து உஷாராகிப் பின் வாங்கி
விடுவார்கள். அது மட்டுமல்ல, இனி ஒருமுறை அந்த வாசகங்களோடு உங்களை நெருங்க
மாட்டார்கள்.
மற்றவர்
கருத்துகளை அலட்சியம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஓரிருவர்
கருத்துக்களை சமூகத்தின் கருத்தாக எண்ணி அதன்படி நம்மை மாற்றிக் கொள்ள
வேண்டியதில்லை. அப்படி மாற்றிக் கொண்டே போனால் நம் சுயத்தை இழந்து, எவரோ சிலர்
கருத்தின்படி இயங்கும் கைப்பாவையாக நாம் மாறிவிடுவோம். எது சரியோ, எது நம்
தகுதிக்கு உகந்ததோ, அதைச் செய்ய வேண்டும், மாறானதைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும்
என்கிற அளவுகோல் வைத்தே நாம் இயங்குவோமானால் நம் அடையாளத்தையும், மரியாதையையும்
நாம் என்றுமே தக்க வைத்துக் கொள்ளலாம்.
-என்.கணேசன்
Monday, February 18, 2013
அடுத்தவர் குறைகள்!
அதிகாலை காபி
குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து
வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
பார்த்துக் கொண்டே
இருந்த மனைவி சொன்னாள். “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது.
துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”
கணவனும் பார்த்தான்.
ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும்
அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும்
நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி
தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று ஒரு நாள்
பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக
உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள். “அப்பாடா. இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக்
கொண்டு விட்டாளா இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று
தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”
கணவன் அமைதியாகச்
சொன்னான். “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச்
சுத்தம் செய்தேன்”
இப்படித்தான் பல முறை
நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள்
அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை
சந்தேகிப்பதே இல்லை.
ஒருவேளை அடுத்தவரிடம்
உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. அதற்கு
ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை. நம்
குறைகளுக்கோ காரணங்கள் மட்டும் தான் வலுவாக வைத்திருக்கிறோம். அந்தக் காரணங்கள்
இல்லா விட்டால் நாம் பத்தரை மாற்றுத் தங்கம் தான்.
’சோ’வின் யாருக்கும் வெட்கமில்லை படத்தில் ஒரு அழகான பாடல் உண்டு.
“சுட்டும் விரலால்
எதிரியைக்
காட்டி குற்றம்
கூறுகையில்
மற்றும் மூன்று
விரல்கள்
உங்கள் மார்பினைக்
காட்டுமடா.
மூடர்களே பிறர்
குற்றத்தை
மறந்து முதுகைப்
பாருங்கள்
முதுகில் இருக்கு
ஆயிரம்
அழுக்கு, அதனைக்
கழுவுங்கள்”
திருவள்ளுவரும்
அழகாகச் சொல்வார்.
“ஏதிலார் குற்றம்
போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும்
உயிர்க்கு”
அடுத்தவர் குறைகளைக்
காண்பதில் உள்ள ஆர்வத்தை நாம் நம் குறைகளைக் காண்பதிலும் வைத்துக் கொண்டால் இந்த
உலகில் தீமை இருக்க முடியுமா? அடுத்தவர்கள் குறைகளைக் காண்பதில் தான் நமக்கு
எத்தனை அக்கறை? எத்தனை வேகம்? அந்த நேரத்தில் தான் நம் கவனிப்பு எத்தனை கூர்மை
பெற்று விடுகிறது. ஆனால் நம் விஷயம் என்று
வரும் போது அதெல்லாம் காணாமல் போய் விடுகிறது. குறை கூறுபவர்கள் நோக்கத்தில் குறை
காண ஆரம்பித்து விடுகிறோம். இப்படிப்பட்ட சுபாவம் நம்மிடம் இருக்கும் வரை நாம்
குறைகளை நீக்கிக் கொள்ளவோ, திருந்தவோ வாய்ப்பே இல்லை.
அடுத்தவர் திருந்தி
பெரிதாக நமக்கு எதுவும் ஆகப் போவதில்லை. மாறாக குறைகளை நீக்கிக் கொண்டு நாம்
திருந்தினால் நம் வாழ்க்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை. மேலும் நாம் நம்
குறைகளை நீக்கிக் கொண்டு சிறப்பாக வாழும் போது அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற
உத்வேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் நல்ல உதாரணமாகவும் இருப்பதால், குறையுள்ள மற்றவர்களும்
நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு.
எனவே விமரிசனம்
தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழிகாட்டுவோம்.!
-
என்.கணேசன்
Monday, September 10, 2012
ஆசிரியைத் தாய்
இடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற
ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல்
கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. "ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ" (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று
வீசுகிறது). பாட்டைக் கேட்டவுடன்
குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை
எடுத்துக் காண்பிக்கின்றனர். குழந்தைகள்
எல்லாம் மூன்று அல்லது நான்கு வயதிற்குட்பட்டவர்கள். குழந்தைகளுக்கு நிறங்களைக் கற்றுத் தரும்
பணியில் ஈடுபட்டிருந்த அந்த மூதாட்டியின் பெயர் பாட்டூல் ஆபா (ஆபா என்பது
கிட்டத்தட்ட உள்ளூர் மொழியில் 'அத்தை' என்பதற்கு சமமான சொல்). வயது எழுபதானாலும் பாட்டூல் ஆபாவின்
உற்சாகமும் சுறுசுறுப்பும் இருபது வயதினரை பொறாமைப் படுத்தும் அளவில் உள்ளதைக் காண
முடிந்தது. அந்த மழலைப் பள்ளியில் குழந்தைகள் ஆடியும் பாடியும் ஆனந்தமாகக் கல்வி
கற்கிறார்கள். இந்த வித்தியாசமான
சூழ்நிலையில் இருக்கும் கல்விமுறையின் பின்னணியைப் பார்ப்போம்.
கல்வித் துறையில் உலக அளவில் செய்யப்பட்ட பல
ஆராய்ச்சிகள் குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வியின் முக்கியத்துவத்தை
வலியுறுத்துகின்றன. மூன்று வயதாகும் போதே
குழந்தைகளின் மூளை 85% வளர்ச்சி அடைந்து
விடுவதால் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும் கல்வியின் அணுகுமுறை மிக
முக்கியத்துவம் வாய்ந்ததென அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வி கற்பிக்கப்படுவதும், கற்றுக் கொள்வதும் எந்திரத்தனமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில்
அந்தக் குழந்தைகளுக்கு உயிரூட்டமுள்ள விதத்தில் கற்பிக்க முடிந்தால் அது அவர்களின்
பிற்காலக் கல்விக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும் என்பது ஆராய்ந்த அறிஞர்களின்
கருத்து. இதனை கருத்தில் கொண்டு ஆகாகான் அறக்கட்டளை (Aga Khan Foundation) என்கிற சமூக சேவை அமைப்பு சில மேலை
நாட்டு அமைப்புகளின் உதவியுடன் ஏற்படுத்திய புதிய கல்விமுறைத் திட்டத்தின் ஒரு
பகுதி தான் தாய்-ஆசிரியைத் திட்டம். அந்தத் திட்டத்தின் விளைவு தான் அமர்கார்
சேரிப்பகுதியில் நாம் காண முடிந்த அந்த
வித்தியாசமான காட்சி.
அமர்கார் பகுதி மக்களில் பெரும்பாலானோர்
முகமதியர்கள். கிட்டத்தட்ட எல்லா
குடும்பங்களும் நகைகளுக்குப் பயன்படுத்தப்படும்
பலநிறக் கற்களுக்கு மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. மிகவும் பின் தங்கிய அந்தப் பகுதியில் அந்தப்
பள்ளி 1990ல் துவங்கப்பட்டது. சுமார்
பதினைந்து வருடங்களுக்கு முன் பாட்டூல் ஆபாவை முன்-பள்ளி (Pre-school) ஆசிரியையாக்க பள்ளியின் நிர்வாகக்குழு அழைத்த போது அவர்
பெரிதும் தயங்கினார். "நானே
பள்ளிக்குச் சென்றதில்லை. எழுதப் படிக்கத்
தெரியாது. நான் எப்படி ஆசிரியை ஆக முடியும்?"
என்று கேட்டார்.
பள்ளி நிர்வாகக்குழுவோ அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர், அம்மக்களது மரபுவழிகளை நன்கு அறிந்தவர் என்பதால் சிறு
பயிற்சிக்குப் பின் அக்குழந்தைகளுக்கு நெருக்கத்துடன் பாடம் கற்றுத் தரமுடியும்
என்று கணக்கிட்டனர்.
அவர்கள் கணக்கு பொய்க்கவில்லை. குறுகிய காலப் பயிற்சிக்குப் பின் பாட்டூலின்
முதல் பணி அந்த சேரி மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுக்குக் குடும்ப நலத்திட்டம், சுகப்பிரசவ முறைகள், சுத்தம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில்
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது. ஆரம்பத்தில் அவர் பணி சுலபமாக
இருக்கவில்லை. குடும்பக் கட்டுப்பாட்டுத்
திட்டம் பற்றியெல்லாம் அவர்கள் பேசக்கூட தயங்கினர். பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் அவர்கள்
பெரும் தயக்கம் காட்டினர். ஆனாலும்
பாட்டூலின் நட்பான அணுகுமுறை அவர்களை நாளடைவில் மாற்றியது.
பாட்டூல் ஆபா போன்று அங்கு பணியாற்றும் மற்ற
ஆசிரியைத் தாய்களும் ஆரம்பத்தில் கல்வி அறிவு இல்லாமல் வந்து பயிற்சி பெற்ற பின்
குழந்தைகளோடு சேர்ந்து தாங்களும் கல்வி அறிவு பெற்றவர்களே. இந்த வகையில் இத்திட்டம் இரு சாராருக்கும்
பெரும்பலனைத் தருகின்றது. குழந்தைகளும்
வீட்டு, விளையாட்டு சூழ்நிலையில் கல்வி
கற்கின்றனர். அதே போல் அந்த முதியோரும் கல்வியும் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்.
குழந்தைகளை தவறாமல் தினமும் பள்ளிக்கு
வரவழைப்பதே இவர்களுக்கு முதல் முக்கியப் பணி. பள்ளிக்கு வருகை தராதவர்களின் வீட்டுக்குச்
சென்று காரணம் கண்டறியும் அளவு தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார்கள். பெரும்பாலும் வீட்டுப் பெரியவர்களின் சண்டை
சச்சரவுகளே குழந்தைகள் பள்ளிக்கு வராமலிருக்க காரணமாக இருப்பதுண்டு. அவர்களிடம் தனித்தனியாகவும், ஒன்று சேர்த்தும் பொறுமையுடன்
பேசி குழந்தைகளின் எதிர்காலத்திற்குக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி
மீண்டும் குழந்தைகள் தவறாமல் பள்ளிக்கு வரும்படி இந்த ஆசிரியைத் தாய்கள்
பார்த்துக் கொள்கின்றனர்.
குழந்தைகளுக்குக் கல்வியின் அறிமுகத்தையே
அளிப்பவர் இந்த ஆசிரியைத் தாய் என்பதால் இந்த ஆசிரியைத் தாயின் பணி முக்கியத்துவம்
வாய்ந்ததாகிறது.
இன்று
கல்வி என்பது எத்தனையோ குழந்தைகளுக்கு இன்னும் கனவாகவோ, பயமுறுத்தலாகவோ தான் இருக்கின்றது. முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்ற பழமொழி போல ஆரம்பத்தில் அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு அன்பு சேர்த்து
கல்வியை ஊட்டவில்லை என்றால் அதன் விளைவுகள் கடைசி வரை குறைபாடுள்ளதாகவே இருக்கும்.
எனவே இந்தப் புதிய அணுகுமுறை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகப்
பரவினால் அது நல்ல பலனைக் கொடுக்கும்.
பாட்டூல்
ஆபா போன்ற வயதான, அன்பானவர்களுக்கும் இத்திட்டம் வாழ்வில் ஒரு பொருளையும்,
பொருளாதார வசதியையும் கொடுக்கும் அதே நேரத்தில் கிராமப்புறங்களில் கல்வி உட்பட மேலே
குறிப்பிட்ட பல சேவைகள் முழுமையாகப் போய் சேரவும் இது வாய்ப்பை ஏற்படுத்தும்.
அமர்கார்
போன்ற பின்தங்கிய பகுதிகள் நம் நாட்டில் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அறியாமை இருட்டில் மூழ்கித் தவிக்கும் மக்கள்
கூட்டங்களும் எத்தனையோ உள்ளன. மத்திய மாநில அரசுகளும் கூட இத்திட்டத்தை நல்ல முறையில்
அமலாக்கினால் அந்தப் பின் தங்கிய பகுதி மக்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுத்த பேருதவியாய் இருக்கும்.
- என்.கணேசன்
Monday, August 27, 2012
யார் தலைவன்?
ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும்
ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை
ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த அந்தத் தொழிலை தன் கடுமையான உழைப்பாலும்
புத்திசாலித்தனத்தாலும் மிக லாபகரமான கம்பெனியாக வளர்த்திருந்தார். தனக்குப் பின்
அந்தக் கம்பெனியின் நிர்வகிக்க யாரை நியமிப்பது என்று நிறைய யோசித்தார். தன்
பிள்ளைகளில் ஒருவரையோ, இருக்கும் டைரக்டர்களில் ஒருவரையோ தலைமை ஏற்கச்
சொல்வதற்குப் பதிலாக, நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
தன் கம்பெனியில் எல்லாத் துறைகளிலும் அதிகாரிகளாக
இருக்கும் திறமையான இளைஞர்களையும் அழைத்து சொன்னார். “அடுத்த வருடம் நான் சேர்மன்
பொறுப்பில் இருந்து விலக்ப் போகிறேன். உங்களில் தகுதி வாய்ந்த ஒருவரை அந்தப்
பொறுப்பிற்குத் தேர்ந்தெடுத்து என் கம்பெனியின் சேர்மனாக நியமித்து விட்டு ஓய்வு
பெற நினைக்கிறேன்...”
அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி.
அவர் தொடர்ந்தார்.
“உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதை
தரப் போகிறேன். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை. அதை நீங்கள் விதைத்து நீருற்றி
ஒரு வருடம் வளர்க்க வேண்டும். சரியாக ஒரு வருடம் கழித்து, அடுத்த வருடம் இதே
நாளில் ஒவ்வொருவரும் வளர்த்த செடியைக் கொண்டு வர வேண்டும். நீங்கள் கொண்டு வரும்
செடிகளை வைத்து உங்களை எடை போட்டு அதில் சிறந்த ஒருவரை சேர்மனாகத்
தேர்ந்தெடுப்பேன்”
சொல்லி விட்டு அவர்
ஒவ்வொருவருக்கும் ஒரு விதை தந்தார். அந்த
இளைஞர்களில் மிக நல்லவனும், நாணயமானவனுமான ஒரு இளைஞன் அதை மிகுந்த் ஆர்வத்துடன்
தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். நல்ல பெரிய மண்சட்டியை வாங்கி அதில் நல்ல
வளமான மண்ணைப் போட்டு அந்த விதையை விதைத்து நன்றாகத் தண்ணீர் ஊற்றி வந்தான்.
மூன்று வாரங்களான பின்னும் அந்த
விதை முளைக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்றவர்களோ கம்பெனியில் தங்கள் விதைகள்
துளிர்க்க ஆரம்பித்து விட்டது என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சைக்
கேட்ட போது அவனுக்கு கவலையாக இருந்தது. சேர்மன் ஒரு தனித்தன்மை வாய்ந்த விதை
என்றாரே அதை சரியாகப் பராமரிக்காமல் விட்டு விட்டோமோ என்று அவனுக்கு சந்தேகம்
வந்தது. நல்ல உரம் எல்லாம் வாங்கிப் போட்டான். ஆனால் காலம் போன பின்னும் எந்த
மாற்றமும் அவன் விதையில் இல்லை.
கம்பெனியிலோ அவரவர்களின்
விதைகளின் வளர்ச்சியைப் பற்றியதாகவே பேச்சு இருந்தது. அவன் மேலும் பல முயற்சிகள்
எடுத்துப் பார்த்தான். ஆனாலும் பயனில்லை.
ஒரு வருடம் கழித்து அந்த முக்கிய
நாளும் வந்தது. பலரும் நன்றாக செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு
வந்திருந்தார்கள். போட்டி கடுமையாக இருக்கும் போலத் தான் அவனுக்குத் தெரிந்தது.
அவன் ஒருவன் தான் வெறும் சட்டியைக் கொண்டு வந்தவன். பலரும் அவனை இரக்கத்துடன்
பார்த்தார்கள். அவனுக்கு அவமானமாக இருந்தது. எல்லோருக்கும் பின்னால் கடைசியாக
நின்றான்.
சேர்மன் வந்தவர் ஒவ்வொரு
செடியின் வளர்ச்சியையும் பார்த்து பாராட்டிக் கொண்டே வந்தார். வெறும் மண்சட்டியோடு நின்ற அவனைப் பார்த்தவுடன்
அவர் கேட்டார். “என்ன ஆயிற்று?”
அவன் கூனிக் குறுகிப் போனாலும்
நடந்ததைச் சொன்னான். தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளை எல்லாம் சொல்லி, அத்தனை
செய்தும் பலனில்லாமல் போயிற்று என்று ஒத்துக் கொண்டான்.
சேர்மன் அவனையே அடுத்த சேர்மனாக
அறிவித்தார். அவன் உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தார்கள். அவர்
சொன்னார்.
“நான் உங்கள் அனைவருக்கும்
தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள். அவைகள் கண்டிப்பாக செடிகளாக
வளர வாய்ப்பே இல்லை. உங்கள் விதைகள் துளிர்க்காமல் போன போது அதற்கு பதிலாக வேறு
புது விதைகள் போட்டு வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். இவர் ஒருவர் மட்டும் தான்
அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.”
“நீங்கள் அனைவரும்
திறமையானவர்களே. அதில் எனக்கு சந்தேகமில்லை. அந்தத் திறமை இல்லாதிருந்தால்
உங்களுக்கு என் கம்பெனியில் வேலையே கிடைத்திருக்காது. ஆனால் தலைவனாக ஆவதற்குத்
திறமையுடன் இன்னொரு தகுதி கண்டிப்பாக வேண்டும். அவன் எதற்குத் தலைவனாக
இருக்கிறானோ, அதற்காவது உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் தலைமையில்
தான் ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைய முடியும். அப்படிப்பட்ட ஒருவராவது என்
கம்பெனியில் இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இவர் கையில் இந்தக் கம்பெனியை
ஒப்படைத்தால் இந்தக் கம்பெனி கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது.”
அவனிடம் தலைமைப் பொறுப்பைத்
தந்து விட்டு திருப்தியுடன் அவர் ஓய்வு பெற்றார்.
இது ஒரு நிறுவனத்திற்கு
மட்டுமல்ல, கட்சி, அமைப்பு, கூட்டம், நாடு எல்லாவற்றிற்கும் பொருந்தும். அவன்
அரிச்சந்திரனாக எல்லா விஷயங்களில் இருக்கிறானோ இல்லையோ, யாருக்குத் தலைவராக
ஆகிறானோ அவர்களுக்காவது உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருப்பவன் தான்
அவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அவனே தலைவன், அப்படி இருக்க முடியாதவர்கள்
ஏமாற்றுப் பேர்வழிகளே!
- என்.கணேசன்
Monday, June 11, 2012
இன்றைய தேவை கருணைக் கோயில்கள்!
”மனித சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய் மகனே!” என்று இறக்கும் வரை மகனிடம்
அந்தத் தந்தை அடிக்கடி சொல்வார். அந்தத் தந்தை ஒரு சாதாரண ’லஸ்ஸி’ கடையை நடத்தி வந்தவர். ஆனால்
மகன் தேர்ந்தெடுத்த தொழிலோ சூதாட்ட க்ளப். சூதாட்ட க்ளப்பில் ஏராளமான சொத்துக்கள்
சேர்த்த மகனின் மனதில் தந்தை சொன்னது நீண்ட நாளுக்கு ஒரு உறுத்தலாக இருந்தது. மனித
சமூகத்திற்கு நல்லது செய்வதற்குப் பதிலாக மனித சமூகத்தைப் படுகுழியில் தள்ளும்
சூதாட்டம் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறோமே என்ற உறுத்தல் நாளாவட்டத்தில் அதிகமாகவே அந்தத்
தொழிலிற்கு முழுக்குப் போட்ட மகன் சம்பாதித்த பணத்தை தந்தை சொன்னபடி மனித
குலத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்த தீர்மானித்தார். அவர் பெயர் பிக்காபாய்
சாதியா. குஜராத்தில் பாவநகர் மாவட்டத்தில் உள்ள பாலிடானா நகரைச் சேர்ந்தவர்.
என்ன
செய்வது என்று யோசித்த சாதியா ஒரு கோயில் கட்டத் தீர்மானித்து பாதி கட்டியும்
முடித்து விட்டார். அந்த சமயத்தில், 2002ஆம் ஆண்டில், போலீசாரால் கற்பழிக்கப் பட்ட
மனநிலை குன்றிய பெண் ஒருத்தியைப் பற்றி பத்திரிக்கைச் செய்தியில் படித்தார்.
வசிப்பிடம், ஆதரவு இல்லாமல் மனநிலையும் சரியில்லாமல் தெருக்களில் திரியும்
மனிதர்களின் நிலைமை அவரை மனதைப் பெரிதும் பாதித்தது. கோயில் வேலையைப் பாதியில்
நிறுத்திய சாதியா அதை இது போன்ற ஆதரவில்லாமல் மனநிலை குன்றியவர்களின் காப்பகமாகக்
கட்டி முடித்தார். அதைத் தானே பராமரிக்கவும் முடிவு செய்தார்.
கைவிடப்பட்ட
அத்தகைய மனநிலை குன்றிய நபர்களைக் காப்பகத்திற்கு அழைத்து வரும் ரிக்ஷாக்காரர்களுக்கு
ஆரம்பத்தில் நூறு ரூபாய் ஊக்கப் பணமாகவும் கொடுத்தார். இன்று வரை அவரது காப்பகம்
180 நபர்களுக்கு அன்பும் ஆதரவும் கொடுத்திருக்கிறது.
மனநிலை
குன்றியவர்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது மிக மிக கஷ்டமான காரியம். அதற்கு நிறைய
பொறுமையும், அதீத அன்பும் தேவை. பிக்காபாய் சாதியாவிடம் பணத்தைப் போலவே அன்பும்,
பொறுமையும் கூட அதிகமாக இருந்தன. அதிகாலை
ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் அவரது தினசரி வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஆனால்
அனாதரவாக நின்ற மனநிலை குன்றிய மக்களைத் தன் பாதுகாப்பிற்குக் கொண்டு வந்து
அவர்களில் பலரைக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதிலும், பலரை
அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதிலும் கிடைத்த நிறைவைப் பெரியதாக அவர்
நினைத்தார். அவர் காப்பகத்திற்கு வந்த 180 பேரில் 60 பேர் அவர்கள் குடும்பத்துடன்
சேர்ந்து இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை அவர் பெருமையுடன் தெரிவிக்கிறார்.
பல
வருடங்களுக்கு முன் சூரத்தில் நிர்க்கதியாகத் திரிந்த தாரா என்ற பெண்ணை அழைத்து
வந்து அவருடைய காப்பகத்தில் சிகிச்சை செய்ததில் இரண்டு வருடம் கழித்து அந்தப் பெண்
குணமானார். அவருக்கு மராத்தி மட்டுமே தெரியும். மராத்திய மொழி அறியாத சாதியா
அம்மொழி அறிந்த வங்கி அதிகாரி ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணின் சொந்த கிராமம்
பூனாவின் அருகில் இருந்த சதாரா என்ற கிராமம் என்பதை அறிந்தார். கிட்டத்தட்ட இருபது
வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்திருக்கிறார்.
அதே
போல இரண்டு வருடங்களுக்கு முன் தலாஜா என்ற நகரத்தில் நிர்வாணமாக, இடது கை
வெட்டப்பட்ட நிலையில் ஒரு மனநிலை குன்றிய பெண் விழுந்து கிடப்பதாகத் தகவல்
கிடைத்து விரைந்து சென்று அவளை தன் காப்பகத்திற்கு அழைத்து வந்து, அதிர்ச்சி
மனநிலையில் இருந்த அப்பெண்ணிற்கு சிகிச்சை தந்து சில வாரங்களில் அவளைக்
குணப்படுத்தி இருக்கிறார். பின் அந்தப் பெண்ணிடம் விலாசம் பெற்று
குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். கணவருடன் ஷப்னம் என்ற அந்தப்
பெண் நல்ல முறையில் டில்லியில் வாழ்கிறார். ஷப்னம் இப்போதும் அவருடன் போனில்
பேசுவதுடன் காப்பகத்திற்கு வந்தும் போகிறாராம்.
(கடந்த
31-05-2012 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பிக்காபாய் சாதியா பற்றிய கட்டுரை
வந்துள்ளது.)
சாதாரண
கோயில் கட்ட நினைத்து கருணைக் கோயில் கட்டி முடித்த பிக்காபாய் சாதியாவின் தந்தை
இப்போது இருந்திருந்தால் மகனின் சேவையில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில்
சந்தேகமில்லை. 180 பேருக்கு அபயம் கொடுத்து அதில் 60 பேருக்கு மறுவாழ்வும்
ஏற்படுத்திக் கொடுத்த அந்த நல்ல மனிதர் இன்றும் மனிதம் இங்கு மரித்து விடவில்லை
என்பதைக் காட்டி இருக்கிறார்.
கோயில்கள்
அவசியம் தான். ஆனால் ஒரே பகுதியில் ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டிக்
கொண்டே போவதைக் காட்டிலும் பிக்காபாய் சாதியா கட்டியது போல காப்பகங்கள், ஆதரவற்ற
குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்பு இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக்
கூடுதலாகக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடங்கள் போன்ற கருணைக் கோயில்களைக்
கட்டினால் கண்டிப்பாக கடவுளும் அந்த உன்னத இடங்களில் மனமுவந்து வந்து நிரந்தரமாகக்
குடியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
-
என்.கணேசன்
Friday, February 24, 2012
தோற்கிறதா கல்விமுறை?
சமீபத்திய
வங்கிக் கொள்ளையில் தலைவனாக செயல்பட்டு போலீஸ் என்கவுண்டரில் இன்று இறந்து போன
வினோத்குமார் என்ற இளைஞன் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிறது பத்திரிக்கைச்
செய்தி. வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களிலும் மேல் படிப்பு படித்த
இளைஞர்கள் ஈடுபடுவது இன்று அன்றாடச் செய்தியாகி விட்டது. சென்ற ஆண்டு மட்டும்,
டெல்லி போலீஸ் மட்டும், 127 கொலை, கொள்ளைக, கடத்தல் குற்றங்களில் பட்டப்படிப்பு
மற்றும் அதற்கும் மேல்பட்ட படிப்பு படித்த இளைஞர்களை குற்றவாளிகளாகக்
கண்டிருக்கிறார்கள்.
சில
நாட்களுக்கு முன் ஆசிரியை ஒருத்தியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்
கொன்றிருக்கிறான். இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆசிரியரின் தூண்டுதலால் ஒரு மாணவன்
தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற குற்றச்சாட்டு எழுந்து அந்த ஆசிரியரைப் போலீசார்
கைது செய்துள்ளனர். இது போன்ற நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகளில் சர்வசகஜமாகப் போய்
விட்டன.
இது
போன்ற செய்திகளை எல்லாம் படிக்கையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற
கவலை சமூகத்தில் அக்கறை கொண்டவர்களுக்கு எழாமல் இருக்க முடியாது.
ஒரு காலத்தில் கல்வியறிவு இல்லாதவன் மட்டுமே செய்யக்கூடியதாகக்
கருதப்பட்ட ரவுடித்தனம், கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள்
மெத்தப்படித்தவர்களே செய்யும் நிலை வந்து விட்டதே, என்ன காரணம்? படித்தவன்
சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவான் என்று அப்படிச் செய்வதை விதிவிலக்கு
போல எண்ணி பாரதி சபித்தாரே, அந்த விதி விலக்கு இன்று சாதாரண விஷயம் போல ஆகி
விட்டதே என்ன காரணம்?
”தத் த்விதியம் ஜன்மா” என்று சமஸ்கிருதத்தில்
சொல்வார்கள். அதற்கு “கல்வி என்பது இரண்டாம் பிறப்பு” என்பது பொருள்.
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளவாக் கேடின்றால்
எம்மர் உலகத்தும் யாமறியோம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து,
என்கிறது நாலடியார்.
(இந்த ஜென்மத்தைச்
சிறக்கச் செய்யும். எடுத்து, எடுத்து யார் யாருக்குத் தந்தாலும் பெருகுமே தவிர, குறையாது. நம்மை
அடுத்தவருக்கு உணர்த்த உதவும். எல்லா அறியாமையையும் அறுத்து எறியும் சிறந்த
மருந்து – கல்வி)
இப்படிப்பட்ட பெருமை கொண்ட கல்வி இன்று இருக்கிறதா என்றால் இல்லை
என்பதே கசப்பான பதில். இன்றைய கல்வி மதிப்பெண் கல்வியாக மாறி விட்டது. வீட்டிலும்
பள்ளியிலும் மதிப்பெண்களுக்கே அதீத முக்கியவத்துவம். ”எவ்வளவு மார்க்?
எத்தனையாவது ரேங்க்?” என்ற கேள்விகளுக்கான பதில்களிலேயே மாணவர்கள்
அளக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான இலக்குகளுக்காகவே அவர்களை
குடும்பங்களும், பள்ளிகளும் ஓட வைத்துக் கொண்டிருக்கின்றன. மற்றவை எல்லாம்
இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் கூட இல்லை. மற்றவை கணக்கிலேயே இல்லை.
யாருக்கும் ஒழுக்கம் ஒரு விஷயமே அல்ல. பண்பாடு, உயர்குணங்கள் எல்லாம்
அடையாளம் காணப்படுவதுமில்லை, கணக்கிடப்படுவதுமில்லை. இதிலும் குடும்பங்களும்,
பள்ளிகளும் ஒருமித்தே குற்றவாளிகளாக நிற்கின்றன.
ஏகப்பட்ட தகவல்கள் மாணவர்கள் மூளைகளில் திணிக்கப்படுகின்றன. அதற்கான
முயற்சிகள் எல்லா இடங்களிலும் எடுக்கப்படுகின்றன. அந்த மாணவ இதயங்களில் நல்ல
குணங்களையும், தன்மைகளையும் பதிப்பது கல்வியில் அங்கமில்லாமல்
தொலைக்கப்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக தொட்டாற் சிணுங்கிகளும், சகிப்புத்
தன்மையற்றவர்களும், மன அமைதி அற்றவர்களும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தத்
தெரியாதவர்களும் ஆக இளைய தலைமுறையில் நிறைய பேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவர்கள் வேகமாகச் செல்லக்
கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். பெரும் சக்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால் லகான் தான் இல்லை. முறைப்படுத்தவும், சீரான முறையில் எல்லாவற்றையும் கொண்டு
செல்லவும் அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதை அவர்களுக்கு சொல்லித் தராததும்,
அதன் முக்கியத்துவத்தை உணர்த்தத் தவறியதும் மிகப்பெரிய தவறு. அந்தத் தவறுகளின்
விளைவுகளையே நாம் எல்லா இடங்களிலும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் நாம் நாசமாய் போய் விடுவோம்!
-என்.கணேசன்
Monday, January 16, 2012
வேரை மறந்த விழுதே...
உன்னில் என்றும்
தன்னைக் கண்டனள்
தன்னில் அதிகம் உன்னை
உயர்த்தினள்
கண்ணே மணியே பொன்னே
என்று
விண்வரை உன்னை வைத்தே
போற்றினள்.
ஊட்டிய பாலுக்கு விலை
வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை
கணக்கிட்டதில்லை
நீட்டிய போதுன் விரல்
வாசலை நோக்கி
தீட்டிய கத்தியில்
குத்தவள் உணர்ந்தனள்.
தனியாய் பயணம்
கிளம்பிய போதும்
தவியாய் அவள்மனம்
தவித்திட்ட போதும்
விதியாய் எண்ணி
நொந்தனள் தவிர
சதியாய் கண்டுனை
சபித்திட நினைத்திலள்.
தேவைகள் முடிகையில்
உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே
பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன்
நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும்
நெஞ்சினில் இறக்குமோ?
தலையில் ஊற்றிய நீரது
விரைவில்
காலை நனைக்கும்
நினைவில் கொள்வாய்!
நாளை முதுமை உனக்கும்
வருகையில்
பிள்ளை உன்வழி
நடக்கையில் உணர்வாய்!
- என்.கணேசன்
Tuesday, April 26, 2011
அன்பிற்கு இல்லை எல்லை!

கேரள மாநிலத்தில் ஆலப்புழையைச் சேர்ந்த செல்லம்மாவிற்கு வாழ்க்கையில் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காலம் கடந்து நடந்த திருமணம், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் மரணம், உறவினர்களின் உதாசீனம், அதைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த பிறகும் உறவினர்கள் வீட்டை விட்டுத் துரத்தியது என்று எல்லாம் சேர்ந்து அவரை அவரை அறுபதாவது வயதில் முச்சந்தியில் நிறுத்தியது. இனி வாழ வழியில்லை, வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று நினைத்த செல்லம்மா வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்தார். ரயில் தண்டவாளத்தில் ரயிலை எதிர்கொண்டு வாழ்க்கையையும் தன் துக்கங்களையும் முடித்துக் கொள்ளும் முடிவோடு அவர் சென்ற நாள் 2000ஆம் ஆண்டு ஜனவரி 25.
அப்போது தான் ரஜியா பீவி என்ற பெண்மணி அவரைப் பார்த்தார். விரைந்து வரும் ரயிலையும் அதை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த அந்த மூதாட்டியையும் பார்த்த அவர் திடுக்கிட்டுப் போனார். ஓடிச்சென்று செல்லம்மாவை ரயில் செல்லும் பாதையிலிருந்து இழுத்து அவர் காப்பாற்றினார். பிறகு செல்லம்மாவின் சோகக் கதையைக் கேட்டறிந்த ரஜியா பீவியின் மனம் நெகிழ்ந்தது. அங்கிருந்து அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கணவர், நான்கு குழந்தைகளுடன் ரஜியா பீவி வசித்து வந்த வீடோ மிகச் சிறியது. ஆனாலும் மனம் சிறுக்கவில்லை என்றால் யாருக்கும் எங்கும் இடம் இருக்கும் அல்லவா? உற்றார் உறவினரால் துரத்தப்பட்ட அந்த இந்து மூதாட்டிக்கு, ரஜியா பீவி என்ற முஸ்லீம் பெண்ணின் மிகச் சிறிய வீட்டில் தற்காலிக அடைக்கலம் கிடைத்தது.
ஆலப்புழையில் வடக்கு அம்பலப் புழா பகுதியில் ஆறாம் வார்டு பஞ்சாயத்து உறுப்பினரான ரஜியா பீவி செல்லம்மாவைத் தன் தாயாகவே எண்ணிப் பார்த்துக் கொண்டார். ஆனாலும் அந்த வீடு மிகச் சிறியதாகையால் சிரமங்கள் நிறையவே இருந்தன. எனவே ரஜியா பீவி பஞ்சாயத்தின் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றின் மூலம் செல்லம்மாவிற்குத் தனியாக ஒரு சிறிய வீடு கட்டித் தர முனைந்தார். அரசாங்கம் தந்த பணம் போதாமல் போகவே ரஜியா பீவி தன் சொந்த சேமிப்பையும் செல்லம்மாவிற்காக செலவு செய்து வீடு கட்டி முடித்தார்.
மதங்களுக்கிடையே உண்மையில் பிரச்சினை இல்லை என்றாலும் பிரச்சினைகளை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் ரஜியா பீவியின் முயற்சிகளுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜியா பீவியும், அவர் குடும்பத்தினரும் அதைப் பொருட்படுத்தவில்லை. கட்டி முடித்த வீட்டில் செல்லமாவைக் குடியேற்றிய ரஜியா பீவி தினந்தோறும் அங்கு சென்று செல்லம்மாவின் நலம் விசாரிக்கவும், அவருடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றவும் இன்று வரை தவறவில்லை. ஒரு தாயும், மகளும் போல ஒரு இந்துவும், முஸ்லீமும் பத்து வருடங்கள் கழிந்த பின் இன்றும் பாசத்தோடு இருந்து வருகிறார்கள்.
இந்த செய்தி மலையாளத் திரைப்பட இயக்குனர் பாபு திருவல்லா என்பவரை எட்டி அவர் இந்த வித்தியாசமான நேசமுள்ள பந்தத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த பிறகு தான் இவர்கள் நட்பு நாட்டில் பலர் கவனத்தையும் எட்டியது. குறுகிய மனங்கள் சமூகத்தில் பெருகிய இன்றைய காலத்தில் ரஜியா பீவியின் மனதில் கசிந்த அந்த இரக்கமும், அன்பும் அவரை எத்தனை பெரிய உதவி செய்யத் தூண்டியது பாருங்கள். வார்டு உறுப்பினர் பதவியில் எவ்வளவு சம்பாதிக்கலாம் எப்படி சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடும் நபர்களே இன்று அதிகம். அப்படி இருக்கையில் எந்த விதத்திலும் உறவோ, நட்போ, பரிச்சயமோ இல்லாத ஒரு வயதான பெண்மணிக்கு எல்லாமாக ஆகி அபயம் அளித்த அந்த உள்ளம் நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா?
இன்றைய எந்திர உலகில் நான், எனது குடும்பம் என்று அதிக பட்சம் நாலைந்து நபர்களோடு தனிமனித அக்கறை நின்று விடுகிறது. அந்தக் குடும்பத்தில் உடன்பிறப்புகளுக்குக் கூட பெரும்பாலும் இடம் இருப்பதில்லை. வயதான பெற்றோர்கள் கூட பாரமாக கருதப்படும் அவலம் அதிகரித்து வருகிறது. மற்றவர்களுக்கு உதவுவதால் தங்களுக்கு சிறு அசௌகரியம் ஏற்பட்டாலும் அது சகிக்க முடியாத கொடுமையாக நினைக்கும் இயல்பு அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் ரஜியா பீவி போன்றவர்கள் பாலைவனச் சோலையாகவே நமக்குத் தோன்றுகிறார்கள்.
ஒரு காலத்தில் வீடு கட்டும் போது வீட்டின் திண்ணையைப் பெரிதாகக் கட்டுவார்கள். அந்தத் திண்ணை இரவு நேரங்களில் வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி விட்டுப் போவதற்காகவே கட்டப்பட்டது. பல வழிப்போக்கர்கள் விடிந்த பின் அந்த வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போவதும் உண்டு. முன்பின் பழக்கமில்லாத, பார்த்திராத மனிதர்களுக்கும் தங்கள் வீட்டில் ஒரு இடம் ஒதுக்கி விடும் உள்ளம் நம் முன்னோர்களுக்கு இருந்தது என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
‘அதிதி தேவோ பவ” என்று சமஸ்மிருதத்தில் சொல்வார்கள். விருந்தாளியை இறைவனாகவே நினைக்கும் அளவு விருந்தோம்பல் நம் முன்னோரிடத்தில் இருந்தது. திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு ஒரு தனி அதிகாரத்தையே ஒதுக்கி இருக்கிறார். இதெல்லாம் மனிதனின் அன்பின் வெளிப்பாடுகளாக இருந்தன. எல்லோர் நன்மையும் சேர்த்து நினைக்கும் பெரிய மனது அவர்களுக்கு இருந்தது. இன்று கல்வியிலும், சௌகரியங்களிலும் நாம் எத்தனையோ முன்னேறி இருந்தாலும் மனம் என்று எடுத்துக் கொண்டால் நிறையவே நாம் பின் தங்கி அல்லவா இருக்கிறோம்.
ஒரு பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் அன்னை தெரசாவின் தொண்டுகளால் ஈர்க்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டவராக அவரிடம் சொன்னார். “அன்னையே, நானும் ஏதாவது விதத்தில் இது போன்ற தொண்டில் பங்கு பெற விரும்புகிறேன். என்ன செய்யட்டும் சொல்லுங்கள்?”
அன்னை தெரசா ஒரு நல்ல தொகையை நன்கொடையாகக் கொடுக்கச் சொல்வார் என்று எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக அன்னை தெரசா சொன்னார். “நீங்கள் அதிகாலை எழுந்து உங்கள் நகர வீதிகளில் நடந்து செல்லுங்கள். எனக்கு யாருமே இல்லை என்ற துக்கத்தில் அழுந்திக் கிடக்கும் மனிதர்களை நகர வீதிகளில் கண்டால் அவர்கள் துக்கங்களைக் கனிவாகக் காது கொடுத்துக் கேட்டு அவர்களுக்குத் தைரியம் சொல்லுங்கள். உங்களால் முடிந்த உதவிகளையும் செய்யுங்கள். ’நீ தனியன் அல்ல, உன் நலனில் நானும் அக்கறை கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லி உங்களால் அவர்களை ஆசுவாசப்படுத்த முடியுமானால், அவர்கள் இருண்ட மனதில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்த முடியுமானால் அதுவே பெரிய தொண்டாக இருக்கும்”. அன்னையின் அந்த பதில் தன்னை மிகவும் மனம் நெகிழ வைத்து சிந்திக்கவும் வைத்ததாக பின்னர் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் தெரிவித்தார்.
பொதுவாக மனிதர்கள் நினைப்பதெல்லாம் ‘எனக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது அடுத்தவர்கள் பிரச்சினைகளை நினைக்க எனக்கு நேரமேது?’ என்று தான். பிரச்சினையே இல்லாதவன் தான் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்றால் யாருக்கும் யாரும் உதவ முடியாது. ஏனென்றால் இறந்து போன மனிதன் மட்டுமே பிரச்சினை இல்லாதவன். உயிரோடு இருப்பவர்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.
ரஜியா பீவிக்கு பிரச்சினைகள் இருக்கவில்லையா? இருந்தன. அவர் செல்வந்தர் அல்ல. ஒரு பெரிய குடும்பத்தின் தலைவி என்ற நிலையில் அவருக்கு ஆக வேண்டிய எத்தனையோ காரியங்கள் இருந்தன. ஆனாலும் எல்லோராலும் துரத்தப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்ற செல்லம்மா என்ற அந்த மூதாட்டியைப் பார்த்த போது இயல்பாக சுரந்த இரக்கம் அவரை உதவிக்கரம் நீட்ட வைத்ததல்லவா? அங்கே அந்த அன்பில் தான் அவர் இமயமென உயர்கிறார்.
உண்மையான அன்பிற்கு எல்லைகள் இல்லை. அப்படிப்பட்ட அன்பை நான், எனது குடும்பம் என்று சுருக்கி விடுவது மனிதமும் அல்ல. அதையும் மீறி நீட்டிக்கும் போது அது ஏற்படுத்தும் மாற்றங்கள் சாதாரணமானதல்ல. ரஜியா பீவி போல் பேருதவி செய்ய முடியா விட்டாலும் அன்னை தெரசா கூறிய படி வாழ்க்கை சுமையைத் தாங்க முடியாமல் தத்தளிக்கும் மனிதர்களிடம் கனிவான பார்வை, தைரியமூட்டும் வார்த்தைகள், சிறு சிறு உதவிகள் தர முடிந்தால், அந்த சுமைகளின் கனத்தை குறைக்க முடிந்தால் அதுவே மிகப் பெரிய சேவை. அந்த உயர் அன்பே மனிதகுலத்தின் இன்றை மிகப்பெரிய தேவை.
- என்.கணேசன்
- நன்றி: ஈழநேசன்
Subscribe to:
Posts (Atom)








