சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 28, 2011

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்- 7
பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்
பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக எகிப்தில் கண்டது அற்புத சக்தி படைத்த ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிகளை. அந்தத் தம்பதிகள் கெய்ரோ நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் பெயர் எட்வர்டு அடெஸ் மற்றும் மேடம் மார்கரைட். எட்வர்டு அடெஸ் தன் மனைவியை ஹிப்னாடிசம் செய்து பல அற்புத செயல்களை நிகழ்த்த வல்லவராக இருந்தார்.
அவர்களை சந்திக்கச் செல்லும் முன் பால் ப்ரண்டன் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரிய அதிகாரியின் மனைவியையும் தன்னுடன் வரச் சொன்னார். அந்தப் பெண்மணி மனைவி இது போன்ற செயல்களை எப்போதும் சந்தேகக் கண்ணால் பார்ப்பவராக இருந்ததால் தாங்கள் காணப்போகும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஏமாற்று வேலை இருந்தால் அவருடைய கூர்மையான பார்வைக்குத் தப்பாது என்று பால் ப்ரண்டன் எண்ணினார்.
எட்வர்டு அடெஸ் அவர்களை வரவேற்று நிறைய நேரம் தங்கள் இருவரைப் பற்றியும் சொன்னார். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதைத் தங்கள் வாழ்வில் கண்டறிந்ததாகச் சொன்னார். மனிதன் தனக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை பகுத்தறிவு என்ற பெயரால் கண்டறியத் தவறுவதாகச் சொன்னார். அவருடைய மனைவி மார்கரைட் அதிகம் பேசாத அமைதியான நபராக இருந்தார்.
எட்வர்டு அடெஸ் ஆரம்பத்தில் தன் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த தனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டதாகவும், தொடர்ந்த பயிற்சியால் இப்போது ஓரிரு நிமிடங்களே தேவைப்படுவதாகவும் சொன்னார்.
அவர் தன் வலது கட்டை விரலை தன் மனைவியின் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவர் சொன்னபடியே மார்கரைட் கண்கள் சொருகி உடனடியாக ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்தார். பால் ப்ரண்டன் எழுந்து சென்று மார்கரைட்டின் கண்ணிமைகளை சற்று விலக்கிப் பார்த்தார். கண்மணிகள் நிஜமாகவே மேலே சென்றிருந்தன. இது அவர் முழு பிரக்ஞையில் இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கவே திருப்தியுற்ற பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிடம் தொடரச் சொன்னார்.
ஆரம்பத்தில் ஓரிரு எளிய ஹிப்னாடிச பயிற்சியாளர்கள் செய்யும் நிகழ்வுகளை செய்து காட்டிய எட்வர்டு அடெஸ் அடுத்தபடியாக பால் ப்ரண்டனிடம் மார்கரைட்டின் கண்களைக் கட்டச் சொன்னார்.
பால் ப்ரண்டன் மார்கரைட்டின் கண்களை டேப் போட்டு ஒட்டி வேறு ஒரு சிவந்த துணியால் நன்றாகக் கட்டியும் விட்டார். என்ன முயன்றாலும் கண்களைத் திறந்து பார்க்க இப்போது வழியில்லை. எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “என்னிடம் ஏதாவது செய்யுமாறு என் காதில் ரகசியமாகச் சொல்லுங்கள். நான் செய்கிறபடியே அவளையும் செய்யச் சொல்கிறேன்.
பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிற்கு மட்டும் கேட்கும்படி காதில் சொன்னார். “வலது கையை உயர்த்துங்கள்
வலது கையை உயர்த்தியபடியே எட்வர்டு அடெஸ் மனைவியிடம் சொன்னார். “நான் என்ன செய்கிறேனோ அப்படியே நீயும் செய்
கண்கள் கட்டப்பட்டிருந்த மார்கரைட்டும் அப்படியே தன் வலது கையை உயர்த்தினார். பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் அந்த அதிசயத்தைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.
அந்த அதிகாரியின் மனைவியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “இப்போது நீங்கள் எதாவது என் காதில் சொல்லுங்கள்
அந்தப் பெண்மணி அவரிடம் ரகசியமாகச் சொன்னார். “இரண்டு கைகளின் விரல்களையும் பின்னி இணைத்துக் கொள்ளுங்கள்
எட்வர்டு அடெஸ் அப்படியே விரல்களைப் பின்னி இணைத்துக் கொள்ள மார்கரைட் ஏதோ நேரில் பார்த்துச் செய்வது போல அப்படியே தன் இரு கைவிரல்களையும் பின்னிக் கொண்டார்.
வியப்பில் ஆழ்ந்த பால் ப்ரண்டன் மற்றும் அந்தப் பெண்மணியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “நீங்கள் இது வரை பார்த்தது ஹிப்னாடிசத்தின் முதல் நிலை. இரண்டாவது நிலையில் ஆழ்மனம் இன்னும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் வேலை செய்யும்.
எட்வர்டு அடெஸ் தன் மனைவியை இரண்டாம் நிலை ஹிப்னாடிசத்திற்குக் கொண்டு செல்லவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மார்கரைட்டின் நெற்றியைத் தொட்டுக் கட்டளையிட்டார். பின் அவரை எழுந்து நாற்காலியில் அமரச் சொல்ல மார்கரைட்டும் அமர்ந்தார்.
அங்கு அலமாரியில் வைத்திருந்த பல புத்தகங்களில் ஒன்றை எடுத்துத் தரும்படி எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொல்ல பால் ப்ரண்டன் எழுந்து அந்த அலமாரியில் இருந்து ஒரு பிரெஞ்சு அறிவியல் புத்தகத்தை எடுத்தார். எட்வர்டு அடெஸ் “அதில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏதாவது ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்என்று சொல்ல பால் ப்ரண்டன் 53ஆம் பக்கத்தில் ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
அடெஸ் மனைவியிடம் “அவர் தேர்ந்தெடுத்த பத்தியை அப்படியே பார்த்து எழுது என்று சொல்லி ஒரு வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் தர மார்கரைட் மூடிய கண்களுடன் அந்தப் புத்தகத்தைப் பார்த்து பின் அந்தத் தாளில் எழுத ஆரம்பிக்க பால் ப்ரண்டனும், அந்தப் பெண்மணியும் பிரமித்துப் போனார்கள். பால் ப்ரண்டன் சென்று மீண்டும் மார்கரைட்டின் கண்கள் முழுமையாகத் தெரியாதபடி கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொண்டார். இரண்டிரண்டு திரைகளால் அந்தக் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது உண்மை தான். ஆனாலும் மார்கரைட் இரண்டு மூன்று சொற்களை எழுதி விட்டு மறுபடியும் அந்தப் பக்கத்தைப் பார்த்து மறுபடி திரும்பி தாளில் எழுதுவது என்று பார்த்து எழுதுபவர்களைப் போலவே நடந்து கொண்டார்.
மார்கரைட் எழுதியதில் ஒரே ஒரு சொல்லில் வந்த ஒரு சிறிய எழுத்துப் பிழை தவிர மீதி எல்லாம் அப்படியே எழுதப்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அந்தப் பத்தியில் இரண்டாவது வரியில் இரண்டாவது சொல்லையும், மூன்றாவது வரியில் மூன்றாவது சொல்லையும் கோடிடச் சொன்னார். கண்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் மார்கரைட் அப்படியே அந்த சொற்களைக் கோடிட்டுக் காட்டினார்.
எட்வர்டு அடெஸ் அந்தப் பத்தியை இடது கையால் எழுதிக் காட்டச் சொன்னார். இயல்பில் வலது கையால் எழுதும் பழக்கம் உடைய மார்கரைட் சிறிதும் தயக்கமில்லாமல் இடது கையால் எழுத ஆரம்பிக்க, வலது கையில் எழுதுபவர்களுக்கு இடது கையால் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்த பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.
(தொடரும்)
-என்.கணேசன்

Monday, July 25, 2011

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 2


வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! 2

முக்கியமானதை முதலில் படியுங்கள்!

வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதே போல “எனக்கு வயதாகி விட்டது. அதனால் நான் இனி படிக்க வேண்டிய அவசியம் இல்லைஎந்த முதியவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. கடைசி மூச்சு வரை நீடிக்கும் இந்த வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கத் தவறினால் தோல்வியின் உரசல்களில் காயப்பட்டு வருந்த நேரிடும்.

வாழ்க்கைப் பள்ளியில் தேர்வு முறை வித்தியாசமானது. சாதாரண பள்ளிகளில் வைப்பது போல தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் வைக்கப்படுவதில்லை. தேர்வுகள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. என்னேரமும் வாழ்க்கை உங்களை பரீட்சித்துப் பார்க்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் தயாராக இருந்து அந்தத் தேர்வில் தேற வேண்டும். எனவே என்னேரமும் பரீட்சிக்கப் படலாம் என்ற உண்மை உணர்ந்து தயார்நிலையில் இருப்பது அறிவுடைமை.

முதலில் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். எதெல்லாம் அவசியத் தேவைகளோ, எதெல்லாம் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு முக்கியமோ அதையெல்லாம் படித்துத் தேறுபவன் எந்தக் காலத்திலும் பாஸ் மார்க் வாங்கி முன்னேறிக் கொண்டே போகலாம். அதைக் கற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டி விடக்கூடாது. அதை விட்டு விட்டு மற்றவற்றை எவ்வளவு அறிந்து வைத்திருந்தாலும் அது யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

ஒரு கர்வம் பிடித்த அறிவாளி ஆற்றில் பயணித்த கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அந்த அறிவாளி ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர். பல விஞ்ஞானக் கோட்பாடுகளை நுணுக்கமாக அவரால் விவாதிக்க முடியும். பல மொழிகளில் அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவன். என்ன தலைப்பை அவருக்குத் தந்தாலும் அவரால் அதைப் பற்றி விரிவாக விளக்க முடியும். அதனால் அவனுக்கு நிறையவே கர்வம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர் அறியாதவற்றைக் கேட்டு அவர் திணறுவதை ரசிப்பார்.

ஒருமுறை அவர் ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆற்றில் பயணித்தார். படகோட்டியைப் பார்த்தாலே படிக்காதவன் என்பது அவருக்குப் புரிந்தது. அவன் தன் படகில் எப்படிப்பட்ட அறிவுஜீவியை அழைத்துக் கொண்டு போகிறான் என்பதை அவனுக்கு அவர் உணர்த்த விரும்பினார். அவனிடம் அவர் அது தெரியுமா, இது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அவனோ பலவற்றின் பெயரைத் தன் வாழ்க்கையில் இது வரை கேட்டறியாதவன். அவன் தெரியாது, தெரியாது என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே வந்தான். இதெல்லாம் தெரியாத உன் வாழ்க்கை வீண் என்பதைப் பல விதங்களில் அந்த அறிவாளி அவனுக்கு உணர்த்திக் கொண்டே வந்தார்.

திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளத்தில் அந்தப் படகு தத்தளித்தது. படகோட்டி அவரைக் கேட்டான். “ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா?

அந்த அறிவுஜீவிக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. வேறொன்றுமே தெரியா விட்டாலும் நீச்சல் தெரிந்த அந்த படகோட்டி நீந்தி உயிர்பிழைத்தான். ஆனால் அது தவிர எத்தனையோ தெரிந்திருந்த அந்த அறிவாளி வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். எத்தனை தெரியும் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு அந்தந்த காலத்திற்குத் தேவையான முக்கியமானவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்பது முக்கியம். அது தெரியாமல் அதைத் தவிர பாக்கி எல்லாமே தெரிந்து வைத்திருந்தாலும் மற்றவர்கள் உங்களை மேலாக நினைக்க அவை உதவலாமே ஒழிய வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட காலத்தை சமாளிக்க அவை உதவாது.

எனவே வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை முதலில் கற்றுத் தேறுங்கள். எதெல்லாம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ அத்தியாவசியமோ அதைத் தேவையான அளவு பெற்றிருங்கள். எந்த குணாதிசயங்கள் வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்கத் தேவையோ அந்தக் குணாதிசயங்களைக் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்று கேட்க நீங்கள் மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தரும் சோதனைகளைக் கூர்ந்து கவனியுங்கள். எதையெல்லாம் உங்களால் சரியாக சமாளிக்க முடியவில்லையோ அதில் எல்லாம் நீங்கள் கற்றுத் தேற வேண்டியது இருக்கிறது.

எந்தக் குறையால் ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை என்று யோசியுங்கள். உடனடி பதிலாக விதி, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், அரசாங்கம் என்று எடுத்துக் கொண்டு பொறுப்பை அந்தப் பக்கம் தள்ள முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குறையை உணருங்கள். நீங்கள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. முன்பு சொன்னது போல சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதை விட்டு விட்டு கல்வி, செல்வம், பட்டம், பதவி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறதால் அனைத்தும் அடைந்து விட்டதாக ஒரு கற்பனை உலகில் இருந்தால் ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன அறிவுஜீவியைப் போல் வாழ்க்கை ஓட்டத்தில் துரும்பாக அலைக்கழிக்கப் படுவீர்கள்.

மேலும் படிப்போம் .....

- என்.கணேசன்

நன்றி: வல்லமை

Wednesday, July 20, 2011

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! - 1


வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! - 1

சீக்கிரமே படியுங்கள்!

வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு உண்மையை நாம் உணர்வதில்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் வரை வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும் தான் திரும்பத் திரும்ப ஒரே வித அனுபவத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.

ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை யார் விரைவாகக் கற்றுத் தேறுகிறானோ அவனே வெற்றிவாகை சூடுகிறான். அவனே வாழ்க்கையில் நிறைவைக் காண்கிறான். அவனே கால மணலில் தன் காலடித் தடத்தை நிரந்தரமாக விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பி வாழ்ந்து மடியும் போது அவன் மட்டுமே வாழ்க்கையை ரசித்து திருப்தியுடன் விடை பெறுகிறான்.

இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வசதி இருக்கிறது. நாம் அடுத்தவர் பாடத்தையும் படித்துத் தேர்ந்து விடலாம். அப்படித் தேர்ந்து விட்டால், ஒழுங்காகக் கற்றுக் கொண்டு விட்டால் நாம் அந்தப் பாடத்தைத் தனியாகப் படித்துப் பாடுபட வேண்டியதில்லை.

உதாரணத்திற்கு ஒரு சாலையில் ஒரு குழி இருக்கிறது. திடீர் என்று பார்த்தால் அது தெரியாது. அந்தக் குழியைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அதில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை. நமக்கு முன்னால் போகும் ஒருவர் அதில் விழுந்ததைப் பார்த்தாலே போதும் பின் எப்போது அந்தப் பாதையில் போகும் போதும் சர்வ ஜாக்கிரதை நமக்குத் தானாக வந்து விடும். இந்தப் பாதையில் இந்த இடத்தில் ஒரு அபாயமான குழி இருக்கிறது. கவனமாகப் போக வேண்டும் என்ற பாடம் தானாக மனதில் பதிந்து விடும். இனி எந்த நாளும் அந்தக் குழி நமக்கு பிரச்னை அல்ல.

ஆனால் ”நான் அடுத்தவர் விழுவதைப் பார்த்தாலும் கற்றுக் கொள்ள மாட்டேன், நானே விழுந்தால் தான் எனக்குப் புரியும்” என்று சொல்லும் நபர் தானாகப் படிக்க விரும்பும் அறிவுக்குறைவானவர். அவர் விழுந்து எழுந்து தான் கஷ்டப்பட வேண்டும். நானே ஒரு தடவை விழுந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன். ஏனோ அப்படியாகி விட்டது. அடுத்த தடவை அப்படியாக வேண்டும் என்பதில்லை என்று ஒவ்வொரு தடவையும் அதே குழி அருகில் அலட்சியமாக நடந்து விழுந்து எழும் நபர் முட்டாள். அவர் கஷ்டப்படவே பிறந்தவர்.

இந்தக் குழி உதாரணம் படிக்கையில் இப்படியும் முட்டாள்தனமாக யாராவது இருப்பார்களா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் நம்மில் பலரும் அப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எத்தனை பேர் சூதாட்டத்தில் பல முறை தாங்கள் சூடுபட்டும் திருந்தாதவர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் பல பேர் சூதினால் சீரழிவதைப் பார்த்த பின்னும எனக்கு அப்படி ஆகாது என்று நினைத்து திரும்பத் திரும்ப சூதாடி அழிந்து போனவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள் புரியும்.

தீயைத் தொட்டுத் தான் அது சுடும் என்று உணர வேண்டியது இல்லை. அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்களைப் பார்த்தும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி படிப்பது தான் புத்திசாலித்தனம்.

ஒவ்வொன்றையும் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் அனுபவித்தே கற்க வேண்டும் என்றிருந்தால் நம் வாழ்க்கையின் நீளம் சில பாடங்களுக்கே போதாது. அதில் நிறைய சாதிக்கவும் முடியாது. நம் வாழ்க்கையில் கிடைக்கும் பாடங்களை முதல் தடவையிலேயே ஒழுங்காகப் படிப்பது முக்கியம். அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்தும் நிறையவற்றை கூர்மையாகப் பார்த்துக் கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்திற்குள் ஒரு முறை நுழைந்து விட்ட பின் தப்பிக்க வழியே இல்லை. எனவே எதையும் புத்திசாலித்தனமாக சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதைத் திரும்பத் திரும்ப படிக்க வேண்டி வராது. அந்தப் பாடம் உங்களுக்குப் பாரமாகவும் இருக்காது.

மேலும் படிப்போம்....

- என்.கணேசன்

- நன்றி: வல்லமை

Friday, July 15, 2011

ஒரு மாபெரும் வெற்றிக்கதை


கொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் தந்தவர்கள் அதிலும் உண்டு. ஆனால் வாழ்க்கையில் பெருமளவு செல்வம் சேர்த்து ஒரு கட்டத்தில் தன் வியாபாரத்தை நிறுத்தி விட்டு சேர்த்த செல்வத்தை எல்லாம் பொது நலத்திற்காக செலவு செய்வதற்காக மீதமுள்ள வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதர் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார் என்றால் அது ஒருவராகத் தான் இருக்க முடியும். அவர் தான் ஆண்ட்ரூ கார்னீஜி (1835-1919).

ஒரு ஏழை கைத்தறி நெசவாளரின் மூத்த மகனாக ஸ்காட்லாந்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னீஜி. தொழிற்சாலைகள் பெருகிய பின் கைத்தறிக்கு வேலை இல்லாத போது கைத்தறிகளை விற்று விட்டு பிழைப்பதற்காக அமெரிக்கா சென்றது அவரது குடும்பம். அப்போது ஆண்ட்ரூ கார்னீஜிக்கு வயது பன்னிரண்டு. அவருடைய தந்தை ஆரம்பத்தில் அமெரிக்காவிலும் தனக்குத் தெரிந்த நெசவு வேலையையும் பின் மேசை விரிப்புத் துணி விற்பனையாளராகவும் வேலை செய்ய, அவர் தாயோ செருப்புத் தைக்கும் வேலையைச் செய்தாள். ஆனாலும் இருவர் சம்பாத்தியமும் அமெரிக்காவில் அவர்கள் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. படிப்பதில் மிகவும் ஆர்வம் இருந்த ஆண்ட்ரூ கார்னீஜியை படிக்க வைக்க அந்தப் பெற்றோர் எவ்வளவோ விரும்பிய போதிலும் அவர்கள் நிதி நிலைமை அமெரிக்காவில் அவர் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. ஆண்ட்ரூ கார்னீஜியைப் பஞ்சாலையில் வாரக்கூலி ஒரு டாலர் 20 செண்ட்ஸ்களுக்கு வேலைக்குச் சேர்த்தார்கள்.

படிக்கத் திறமையும், ஆர்வமும் அதிகமாக இருந்த போதிலும் விளையாட்டுப் பருவத்தில் வேலைக்குப் போக நேர்ந்த அவலத்தை நினைத்து அவர் வருத்தத்தில் ஆழ்ந்து விடவில்லை. புன்முறுவலுடன் அதிகாலைக் குளிரில் எழுந்து காலை ஆறு மணிக்கு வேலைக்குப் போவார். எந்த நிலையிலும் புலம்பிக் கொண்டே இருக்காத நல்ல வேலைக்காரனிற்கு அதற்கு மேலான வேலை விரைவாகவே கிடைக்கும் என்ற அனுபவ உரைக்கு ஏற்ப சிறிது காலத்திலேயே அவருக்குத் தந்தி நிலையத்தில் வேலை கிடைத்தது. வாரம் ஒன்றிற்கு இரண்டரை டாலர் சம்பளத்தில் ஆண்ட்ரூ கார்னீஜிக்கு வேலை கிடைத்த போது அவருடைய பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

தந்திப் பையனின் கையாளாக வேலைக்குச் சென்ற ஆண்ட்ரூ கார்னீஜி தன் சுறுசுறுப்பாலும், கடின உழைப்பாலும், தனக்கு விதிக்கப்பட்ட வேலை தவிர மற்ற வேலைகளை அறிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தாலும் படிப்படியாக முன்னேறினார். தந்தியை இயக்குவோனாக மாதம் ஒன்றிற்கு 25 டாலர் சம்பாதிக்க ஆரம்பித்த போது அவருக்கு வயது பதினாறு. வேலைப் பளுவின் நடுவிலும் நூல்களைப் படித்தல், கட்டுரை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புதல் சொற்பொழிவாற்றுதல் போன்றவற்றில் ஈடுபடவும் செய்தார்.

இவரது சுறுசுறுப்பாலும், திறமைகளாலும் கவரப்பட்டு பென்சில்வேனியா புகைவண்டிச் சாலை செயலாளராக இருந்த ஸ்காட் என்பவர் தங்கள் புகை வண்டிச்சாலையில் தந்தி இயக்கும் வேலைக்கு மாதம் 35 டாலர் ஊதியம் தருவதாகச் சொல்லி அழைத்தார். ஆண்ட்ரூ கார்னீஜி அதை ஏற்றுக் கொண்டு புகைவண்டிச் சாலையில் பணிக்குச் சென்றார். அங்கும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார்.

ஒரு சமயம் விபத்தொன்றின் காரணமாக எல்லாப் பாதைகளிலும் புகைவண்டிகள் ஓடாது நிற்பதாகச் செய்தி வந்தது. அந்தப் புகைவண்டிகள் எல்லாம் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய பொறுப்புடைய ஸ்காட் அவர்களோ அந்த சமயத்தில் அங்கு இல்லை. அவர் வர கால தாமதமானதால் எல்லா புகைவண்டிகளும் முடங்கி அங்கங்கே அப்படியே நின்றிருந்தன. புத்தி கூர்மையால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தாலும் ஸ்காட்டின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு உத்தரவிடுவது தவறு என்பது ஒருபுறம், ஏதாவது சிக்கலாகி புகைவண்டிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் பெரும்பழி வருவதோடு வேலையும் போய் விடும் என்பதும் ஒருபுறமாக அவர் மனதில் சிந்தனைகள் எழுந்தன. ஆனால் ஆளுமைத் திறம் படைத்த கார்னீஜி ஆனது ஆகட்டும் என்று ஸ்காட் அவர்களின் பெயரில் அப்படிச் செய்யுங்கள், இப்படிச் செய்யுங்கள் என்று கற்றை கற்றையாக தந்திகள் அனுப்பி வேலையைத் துவக்கி விட்டார்.

ஸ்காட் அலுவலகத்திற்கு வந்தவுடன் தயக்கத்துடன் நடந்ததைக் கூறினார். ஒன்றும் சொல்லாமல் ஸ்காட் அவர் அனுப்பிய தந்திகளை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்தார். எல்லாமே அறிவு பூர்வமானதாகவும், சமயோசித முடிவுகளாகவும் இருந்தன. பாராட்டிய ஸ்காட் பின்னர் தன் விடுமுறை நாட்களில் ஆண்ட்ரூ கார்னீஜியிடமே தன் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்ல ஆரம்பித்தார். கூடிய சீக்கிரமே ஆண்ட்ரூ கார்னீஜி அந்த புகைவண்டிச் சாலையின் உதவித் தலைவரானார். வருமானமும் பல மடங்கு அதிகரித்தது. பணத்தைக் கவனமாக சேமித்து அதைக் கொண்டு இலாபம் அதிகம் தரும் பங்குகளை அவர் வாங்கி வருமானத்தை மேலும் அதிகமாக்கிக் கொண்டார்.

அக்காலத்தில் பெரும்பாலும் மரப்பாலங்களே அதிகம் இருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் மரப்பாலங்கள் எல்லாம் நீக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் இரும்புப் பாலங்கள் போடப்படும் என்பதைத் தன் தொலைநோக்கறிவால் உணர்ந்த ஆண்ட்ரூ கார்னீஜி தன் முப்பதாவது வயதில் பென்சில்வேனியா புகைவண்டிச்சாலையில் இருந்து விலகி சில கூட்டாளிகளுடன் சேர்ந்து இரும்புத் தொழிலில் ஈடுபட்டார். அவருக்கு 33 வயதான போது இரும்புத் தொழிலில் இருந்தும் மற்ற பங்குகளில் இருந்தும் சேர்ந்து ஆண்டொன்றிற்கு ஐம்பதாயிரம் டாலர்கள் வருமானம் வர ஆரம்பித்தது.

அப்போது இரும்பிலிருந்து எஃகு செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு உடைந்து விடும் போது எஃகு உறுதியானதாகவும், வளையக் கூடிய தன்மை உடையதாகவும் இருந்தது. உடனே எதிர்காலம் இனி எஃகில் தான் இருக்கிறது என்று உணர்ந்த ஆண்ட்ரூ கார்னிஜி எஃகுத் தொழிலில் ஈடுபட எண்ணினார். நல்ல வருமானம் தந்து கொண்டிருந்த இரும்புத் தொழிலை விட்டு புதிய எஃகுத் தொழிலில் ஈடுபட அவருடைய பங்காளிகள் விரும்பவில்லை. ஆனால் ஆண்ட்ரூ கார்னிஜி வேறு கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு தைரியமாக எஃகுத் தொழிலில் இறங்கினார். எத்தொழிலைத் தொடங்கினாலும் அந்த முழுவேகத்தோடு ஈடுபட்ட அவர் திறமை வாய்ந்த ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளமும், பெரிய பதவியும் தந்து அவர்களைத் திருப்தியாக வைத்துக் கொண்டார். சிலருக்கு தன் தொழில் லாபத்தில் பங்கும் தந்து உற்சாகப்படுத்தினார். உயர்வான சரக்கு, மலிவான விலை, அதிகமான உற்பத்திஎன்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்த அவர் உலகப் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை விரைவிலேயே பெற்றார்.

பணம் ஒரு போதை வஸ்து. அதை சுவைத்தவன் பெரும்பாலும் அதற்கு அடிமையாகி விடாமல் இருக்க முடிவதில்லை. அதை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே போவதில் சலித்துப் போவதில்லை. அனுபவித்ததில் திருப்தியும் அடைந்து விடுவதில்லை. ஆனால் ஆண்ட்ரூ கார்னிஜியின் வெற்றிக் கதையில் பெரிய திருப்பமே அவரால் தொழிலிற்கு தன் 65 ஆம் வயதில் முழுக்குப் போட முடிந்தது தான். யாரும் எதிர்பாராத வண்ணம் தன் தொழிலை நல்ல தொகைக்கு விற்று விட்டார். மீதமுள்ள வாழ்க்கையில் சேர்த்த செல்வத்தை பொது நலனுக்காக அறப்பணிகளில் செலவிட ஆரம்பித்தார். நல்ல காரியங்களுக்கு தன் செல்வத்தை வாரி வாரி வளங்கினார். ஆனால் தன் தனிப்பட்ட செலவுகளிலோ கடைசி வரை சிக்கனமாகவே இருந்தார். பத்தில் ஒன்பது பகுதி சொத்தைப் பொது நலனுக்காகவே செலவிட்டு மகிழ்ந்த அவர் தன் 84ம் வயதில் உலகை விட்டுப் பிரிந்தார். அவர் இறந்து விட்ட போதிலும் அவர் ஆரம்பித்து வைத்த அறப்பணிகள் இன்றும் செவ்வனே நடந்து வருகின்றன.

அவருடைய மரணத்திற்குப் பின் அவருடைய உடைமைகளை எடுத்துப் பார்த்த போது அவர் தன் 33 ஆம் வயதில் எழுதியிருந்த ஒரு குறிப்பு இருந்தது. அதில் தம்முடைய தேவைக்கு மேற்பட்ட பொருள்களை எல்லாம் பொதுநலனுக்காக செலவிடுவதாக உறுதி கூறி தன்னுடைய கையொப்பத்தை இட்டிருந்தார். ஆனால் வாழ்ந்த நாள் வரை அந்தக் குறிப்பை அவர் யாருக்கும் காட்டியதே இல்லை. இப்படிப்பட்ட மகத்தான உறுதிமொழியை இளமையிலேயே எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி கடைசி வரை வாழ்ந்தே காட்டினார் என்பது தான் அவர் அடைந்த வெற்றிகளின் சிகரமாக இருந்தது.

- என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Monday, July 11, 2011

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி!




பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 6

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி!

இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், எகிப்தில் முன்னர் நடந்த ஒரு சம்பவத்தையும் பால் ப்ரண்டனுக்கு நினைவூட்டியது.

இங்கிலாந்தில் ஒரு பாதிரியார் ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபட்டு சர்ச்சால் பதவி விலக்கப்பட்டார். ஆனால் ஹிப்னாடிசமும், சில சித்து வித்தைகளும் தெரிந்த அந்தப் பாதிரியார் தனியாக இயங்க ஆரம்பித்தார். அவர் சக்திகளைக் கண்ட சிலர் அவரைப் பற்றி அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் தன் சக்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களிடம் பணம் பறிக்கவும், தரக்குறைவாக நடந்து கொள்ளவும் செய்தார். இதை பால் ப்ரண்டன் போன்ற பலரும் அறிந்திருந்தாலும் அவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஒரு முறை பால் ப்ரண்டன் அவருக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண்மணி ஒரு இரவில் தூக்கத்தில் நடப்பது போல் தெருவில் நடந்து வரக்கண்டார். அவரை நிறுத்தி விசாரித்த போது அந்தப் பாதிரியார் வரச்சொன்னதாகவும், அவரை சந்திக்கச் செல்வதாகவும் சொன்னார். அந்தப் பெண்மணி பேசிய போது அவர் சுயநினைவில் இல்லை ஏதோ வசியத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது பால் ப்ரண்டனுக்குப் புரிந்தது. அந்த இரவு வேளையில் அந்த நபரிடம் செல்வது நல்லதல்ல என்று பால் ப்ரண்டன் சொல்லியும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. அந்தப் பக்கம் வந்த வேறொரு நண்பரின் உதவியுடன் அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட்டார்.

மறுநாள் யோகிகளைப் பற்றிச் சொல்லி தன்னை இந்தியாவுக்கு அனுப்பிய இந்திய நண்பரைக் கண்டு வருத்தத்துடன் இந்தத் தகவலைச் சொன்னார். (சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல் 1 ல் சொல்லப்பட்ட இந்தியர் அவர். http://enganeshan.blogspot.com/2011/05/blog-post_11.html )அவரே ஒரு யோகி என்பதைப் பின்னாளில் பால் ப்ரண்டன் உணர்ந்திருந்தார். பால் ப்ரண்டன் சொன்ன தகவல் அந்த இந்திய யோகியை ஆத்திரப்பட வைத்தது. இது போன்ற ஆசாமிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்று சொன்ன அவர் உடனடியாக ஏதோ மந்திரங்கள் சொல்லி அந்த போலி பாதிரியாரை சபித்தார். இந்தியா வந்து யோகிகளின் சக்திகளைக் கண்கூடாகக் கண்டிருந்த பால் ப்ரண்டன் இது அந்தப் பாதிரிக்கு அபாயமே என்றுணர்ந்தார். பெரியதாக ஒன்றும் செய்யாமல் அந்த பாதிரியாருக்கு புத்திமதி கூறி மிரட்டி ஊரை விட்டே போகும்படி செய்து திருந்த சந்தர்ப்பம் தரலாமே என்று சொன்னார். நீங்கள் உங்கள் வழிப்படி முயற்சி செய்யுங்கள் நான் வழிப்படி முயற்சி செய்திருக்கிறேன் என்று அந்த இந்திய யோகி கூறினார்.

இந்திய யோகிகளின் சக்தியைக் கண்கூடாக இந்தியா வந்திருந்த போது கண்டிருந்த பால் ப்ரண்டன் அந்தப் போலிப் பாதிரியாருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து விரைவாக அந்தப் பாதிரியாரை சந்தித்து புத்தி சொல்லி எச்சரிக்கச் சென்றார். அந்தப் பாதிரியார் தங்கியிருந்த இடத்திற்குப் போன போது உள்ளே இருட்டாக இருந்தது. அந்த இடமே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அங்கு விசாரித்த போது அந்தப் பாதிரியார் தன் சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டு இருந்த போது மின்விளக்குகள் திடீரென்று படாரென்று வெடித்தன என்றும் ஏதோ ஒருசக்தி அந்தப் பாதிரியாரை ஆக்கிரமித்தது போல் இருந்தது என்றும் பயத்தில் அந்தப் பாதிரியார் ஏதேதோ பிதற்றிக் கொண்டு ஏதோ சைத்தான் வந்து விட்டதாகவும், இதெல்லாம் சைத்தானின் வேலை என்றும் கத்திக் கொண்டு கீழே மயங்கி விழுந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். பின் அந்த பாதிரியாரை மருத்துவமனைக்கு விரைவாக அவருடைய சீடர்கள் அழைத்துச் சென்றார்கள்.

பால் ப்ரண்டனுக்கு இது அந்த இந்திய யோகியின் சாபம் செய்த வேலையே என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. அந்த சீடர்களிடம் இது நடந்த நேரத்தைக் கேட்டார். அவர்கள் சொன்ன நேரம் அந்த இந்திய யோகி மந்திரங்களை உச்சரித்து சபித்த அதே நேரம்!. அந்த முட்டாள் சீடர்களில் ஒருவனிடம் அவர்களது குருவின் மயக்கம் தெளிந்தவுடன் தரச் சொல்லி பால் ப்ரண்டன் ஒரு கடிதத்தைத் தந்தார். உடனடியாக அந்த ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்றும் இல்லா விட்டால் போலீசில் புகாரும் தரப்படும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். அந்தப் பாதிரியார் பின் அந்த ஊரை விட்டே போய் ஒரு வருடத்திற்குள் ஒரு கிராமத்தில் இறந்து போனார்.

அதே போல் இங்கிலாந்தைச் சேர்ந்த கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) என்பவர் டுடன்காமென் (Tutankhamen) என்ற கிமு பதினான்காம் நூற்றாண்டின் எகிப்திய சக்கரவர்த்தியின் கல்லறையைத் தோண்டிப் பார்க்கும் பணியை 1923ல் மேற்கொண்டார். அந்தக் கல்லறைக்குள் நிறைய செல்வங்கள் உள்ளன என்றும் அந்த செல்வங்கள் மந்திரங்களால் சபிக்கப்பட்ட சாபங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் எகிப்தில் பெருத்த நம்பிக்கை பரவலாக இருந்து வந்தது. பலரும் கார்னர்வான் பிரபுவை அந்தக் கல்லறையை திறக்கப்போவது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்கள். ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கல்லறையைத் திறந்து பார்க்கும் பணியை மேற்கொண்டார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர் இரண்டே மாதங்களில் ஏதோ விஷக் கொசுக்கடியால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது. அன்றும் அவர் கெய்ரோவில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் தெரியக்கூடிய காரணமே இல்லாமல் எல்லா விளக்குகளும் அணைந்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து மின்சாரம் திரும்பக் கிடைத்த போது அவருடைய நர்சு அவர் பிணத்தைக் காண நேர்ந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இங்கிலாந்தில் கார்னர்வான் பிரபுவின் செல்ல நாய் விசித்திரமாய் குலைத்து விட்டு செத்து விழுந்தது.

(அந்தக் கல்லறையைத் திறக்கும் வேலையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் பல்வேறு கால கட்டங்களில் துர்மரணத்தையே சந்திக்க நேர்ந்தது அல்லது பெரிய இழப்புகளை சந்திக்க நேரிட்டது என்று கூறுகிறார்கள்.அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி வந்த இது போன்ற மரணச் செய்திகள் பத்திரிக்கைகளாலும் மக்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது)

தன் நேரடி அனுபவம் மூலமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கல்லறை தோண்டப்பட்டதன் விளைவுகளின் பதிவுகளைப் படித்திருந்ததன் மூலமாகவும் அறிந்ததை இந்த சமயத்தில் பால் ப்ரண்டன் நினைவு கூர்ந்தார்.

(தொடரும்)

- என்.கணேசன்

Wednesday, July 6, 2011

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் - 5

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?


மீண்டும் அந்த மந்திரவாதியை சில முறை சந்தித்து அவரிடம் இதுபற்றி துருவித் துருவி கேள்விகள் கேட்டார். அந்த மந்திரவாதியோ பிடி கொடுத்து பதில் சொல்லவில்லை. அந்த மந்திரவாதியின் மகனும் பால் ப்ரண்டனிடம் தனியாகக் குறைபட்டுக் கொண்டான். "என் தந்தையிடம் நானும் இந்த வித்தையைக் கற்றுத் தரும்படி பல முறை கேட்டுக் கொண்டேன். அவரோ இது கடினமானது மட்டுமல்ல அபாயகரமானதும் கூட. எழுப்பி விட்ட பூதத்தை அடக்க முடியாமல் போன எத்தனையோ மந்திரவாதிகள் பல பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். எனவே உனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி என்னை சட்டப்படிப்பு படிக்க அனுப்பி விட்டார்"

மகனிடமே அந்த ரகசியங்களை சொல்லாத மந்திரவாதி தன்னிடம் சொல்லாததில் வியப்பில்லை என்று பால் ப்ரண்டன் எண்ணினார். ஆனாலும் இது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் மனதில் எழுந்து கொண்டே இருந்தது. அதைப் புரிந்து கொண்டது போல் ஒரு நாள் அந்த மந்திரவாதி சொன்னார். "உங்களைப் போன்ற மேலை நாட்டினர் புரியாத விஷயங்களை இல்லை என்று ஒரேயடியாக சாதிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறீர்கள். பழங்கால மந்திரவாதங்கள் உண்மையே. உண்மையில் இது போன்ற கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் இருக்கத்தான் செய்கின்றன."

அவராக அந்தப் பேச்சை எடுத்த பின் பால் ப்ரண்டன் அந்த சந்தர்ப்பத்தை விடவில்லை. "உண்மையில் அவை என்ன?"

மந்திரவாதி சொன்னார். "மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் அவையும் உலகத்தில் வாழ்கின்றன. ஒரு காலத்தில் அவற்றைக் காணும் சக்தியைப் பெற்றிருந்த மனிதன் காலப்போக்கில் அந்த சக்தியை இழந்து விட்டான். அவை கண்ணுக்குத் தெரியாத ஆவியுலகில் வசிப்பவை. ஆனால் அவை மனித ஆவிகள் அல்ல. மனிதர்கள் உலகில் வாழ்ந்து முடித்த பின் தான் ஆவியுலகிற்குச் செல்கிறார்கள். ஆனால் அவை அங்கேயே உருவாகி அங்கேயே இருப்பவை. அவற்றின் குணாதிசயங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றிலும் நல்லவை உண்டு. தீயவை உண்டு. தெய்வத்தன்மை வாய்ந்தவையும் உண்டு."

பால் ப்ரண்டனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. "அவற்றை உங்கள் ஆதிக்கத்திற்கு நீங்கள் எப்படிக் கொண்டு வருகிறீர்கள்?"

மந்திரவாதி சொன்னார். "அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஒவ்வொன்றையும் வரவழைக்கவும் கட்டுப்படுத்தவும் முறையான மந்திரங்கள் உண்டு. அவைகளை வந்தமர்த்த சில வடிவங்கள்/எந்திரங்களை வரைய அறிந்திருக்க வேண்டும். அவற்றினுள் சில குறிகளையும், மந்திரங்களையும் எழுத வேண்டும். எல்லாவற்றையும் கற்றுத் தர ஒரு குரு அவசியம். இத்தனையும் அறிய குரு தரும் பயிற்சிகள் எளிமையானவை அல்ல. கடுமையானவை. அதுவும் பொருத்தமானவனா இல்லையா என்றறியாமல் எந்த குருவும் யாரையும் சீடனாக ஏற்றுக் கொள்வதில்லை."

"என்னுடைய குரு என் தந்தையே. எனக்கு இதில் இருந்த ஈடுபாடை அறிந்து, தகுந்தவனா என்று தெளிந்த பிறகு தான் என் தந்தை எனக்கு மந்திர தீட்சையை என் பதினெட்டாம் வயதில் அளித்தார். இருபத்தெட்டு வயது வரை நான் கடும் பயிற்சிகளைச் செய்து, நிறைய படித்து, என்னை சக்தி வாய்ந்தவனாக ஆக்கிக் கொண்ட பின்பே நான் இந்த பூதத்தின் மீது என் ஆதிக்கத்தை ஏற்படுத்தினேன். என் மகன்கள் தங்களுக்கும் சொல்லித் தர வற்புறுத்துகிறார்கள். ஆனால் முக்கியமாக தைரியம் என்ற பண்பு அவர்களிடம் தேவையான அளவு இல்லை என்பதாலேயே நான் மறுத்து வருகிறேன். நான் இறப்பதற்கு முன் யாராவது ஒரு தகுந்த சீடனுக்கு இதை சொல்லித் தந்தே ஆக வேண்டும். அது நான் என் குருவுக்குத் தந்த வாக்குறுதி. அது இந்தக் கலை தொடர நான் செய்ய வேண்டிய கடமை. ஜோதிட வல்லுனரான நான் என் மரணகாலத்தை அறிவேன். அதற்கு முன் என் கடமையை நிறைவேற்றுவேன்."

அந்த மந்திரவாதி இது வரை தன் மந்திரவாதத்தினால் சாதித்த பல செயல்களைச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு தன் சந்தேகத்தை எழுப்பினார். "நீங்கள் அபாயகரமானது என்று முன்பு சொன்னீர்களே. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஆதிக்கத்தின் கீழ் வந்த போதிலும் அந்த பூதங்கள் நம் கைப்பாவை அல்ல. அவை மிக புத்திசாலித்தனமானவை. எப்போது நாம் பலவீனராகவும், கட்டுப்பாடில்லாமலும் மாறுகிறோமோ அவை நம் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போகவும் சாத்தியம் உண்டு. நம் சக்திகளை தீய செயல்களுக்கு உபயோகிப்பதும், நாம் வலிமை இழந்து போவதும் அவை நம்மை எதிர்த்து செயல்பட வழி வகுக்கலாம். அந்த நேரங்களில் அவை நம்மை விவரிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாக்கும். சில நேரங்களில் மரணமே சம்பவிப்பதும் உண்டு"

பால் ப்ரண்டன் கேட்டார். "பண்டைய எகிப்தியர்கள் இது பற்றி ஆழ்ந்த ஞானம் உடையவர்களாக இருந்தார்களா?"

"ஆமாம். பண்டைய எகிப்திய மதகுருமார்கள் அவற்றைப் பற்றி அறிந்திருந்தது மட்டுமல்லாமல் அவற்றை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் ரகசியங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளை அந்த பூதங்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்."

அப்போது பால் ப்ரண்டன் பிரமிடின் உள்ளே தனக்கேற்பட்ட அனுபவங்களைச் சொன்னார். அதற்கு மந்திரவாதி சொன்னார். "உண்மையே. அந்த ஆவிகள் பண்டைய மதகுருமார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. அந்த ரகசியங்களைக் காக்கும் பணியை அவை இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. யார் அந்த ரகசியங்களை அறிய முற்படுகிறார்களோ அவர்களை பயமுறுத்துதல், ஆசை காட்டுதல், கவனத்தை சிதற வைத்தல் போன்ற வேலைகளைச் செய்து அப்புறப்படுத்தி விடும். அவற்றைக் கட்டுப்படுத்த தெரிந்தால் அந்த ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்ட வசமாக அந்த குறிப்பிட்ட பூதங்களை வரவைத்து கட்டுப்படுத்தும் மந்திரங்கள் பண்டைய எகிப்திய குருமார்களுடன் மறைந்து விட்டன. இப்போது அவற்றை அறிந்தவர்கள் யாருமில்லை."

பால் ப்ரண்டன் கேட்டார். "பூதங்களின் உதவியுடன் எதையும் செய்து விட முடியுமா?"

மந்திரவாதி அடக்கத்துடன் ஒப்புக் கொண்டார். "எல்லாவற்றிற்கும் எல்லைகள் உண்டு. பல விஷயங்கள் செய்ய முடியும் என்றாலும் அதற்கும் மேல் முடியாது. இறைவன் ஒருவனே எல்லை இல்லாதவன். முயற்சிகள் செய்ய மட்டுமே எங்களால் முடியும். எது வரை எந்த அளவு முடியும் என்ற கடைசி முடிவு இறைவனிடம் மட்டுமே இருக்கிறது"

(தொடரும்)

- என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்

Friday, July 1, 2011

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 4

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

அக்கால எகிப்திலும் நிஜங்களை விட போலிகள் அதிகமாக இருந்தனர். சக்தி வாய்ந்த சில சித்தர்கள் இருந்தாலும் ஏமாற்று வேலை செய்கிற போலி ஆசாமிகள் நிறைய இருந்தனர். சிலரை எந்த ரகத்தில் எடுத்துக் கொள்வதென்று பால் ப்ரண்டனுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தன் அனுபவங்களை உள்ளது உள்ளபடி அவர் விவரித்திருக்கிறார்.

பால் ப்ரண்டன் சந்தித்த ஒரு மந்திரவாதி அக்காலத்தில் கெய்ரோ நகரில் பிரபலமாக இருந்தார். அவர் பல அற்புதங்கள் செய்து காட்டுபவர் என்று பலரும் சொல்லவே பால் ப்ரண்டன் அவரைக் காணச் சென்றார் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அந்த மந்திரவாதி சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரிடம் அவர் பிறந்த தேதியையும், நேரத்தையும் கேட்டார். பால் ப்ரண்டனுடைய ஜாதகத்தைக் கணித்து அவருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கூறுவதாக அவர் கூறினார்.

பால் ப்ரண்டன் தான் தன்னுடைய எதிர்காலத்தை அறிய அங்கு வரவில்லை எனவும் அவருடைய சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டதால் அதை நேரில் கண்டறிய வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த மந்திரவாதி அவரை விடுவதாக இல்லை. பால் ப்ரண்டனுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டவர் அவருடைய கையையும் ஒரு காகிதத்தில் வைத்து வெளிப்புறத்தை வரைந்து கொண்டு வரைந்ததன் உள்புறத்தில் சில அரபு வார்த்தைகளை எழுதி வைத்துக் கொண்டு ஐந்து நாட்கள் கழித்து வரும்படிக் கூறினார்.

ஐந்து நாட்கள் கழித்து பால் ப்ரண்டன் அவர் சொன்னபடி அவரை மீண்டும் சந்தித்தார். பால் ப்ரண்டனுடைய ஜாதகத்தைக் கணித்திருந்த அந்த மந்திரவாதி அதைப் பற்றி அவரிடம் விளக்கி விட்டு பால் ப்ரண்டனின் கைக்குட்டையைக் கேட்டார்.

பால் ப்ரண்டன் அவர் எதற்குக் கேட்கிறார் என்று விளங்காவிட்டாலும் தன் கைக்குட்டையை அவரிடம் தந்தார். வாங்கிய கையோடு அந்தக் கைக்குட்டையை திரும்பித் தந்த அந்த மந்திரவாதி அதை இரண்டாகக் கிழிக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அவர் சொன்னபடியே தன் கைக்குட்டையை இரண்டாகக் கிழித்தார். ஒரு பகுதி கைக்குட்டையை எடுத்து அதில் ஏதோ எழுதிய அந்த மந்திரவாதி அதை மடித்து ஒரு செம்புத் தட்டில் வைக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே வைத்தார்.

அடுத்ததாக ஒரு காகிதத்தை எடுத்த அந்த மந்திரவாதி அதில் ஒரு முக்கோணத்தை வரைந்து அதனுள் ஏதோ அரபு மொழியில் எழுதினார். பின் அதை பால் ப்ரண்டனிடம் தந்து அதை அந்தக் கைக்குட்டையின் மீது வைக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே வைத்த பின் ஏதோ மந்திரங்களைக் கண்களை மூடிக்கொண்டு அந்த மந்திரவாதி உச்சரிக்க ஆரம்பித்தார். பின் மந்திரங்களை நிறுத்தி அந்த மந்திரவாதி கண்களைத் திறந்த அந்தக் கணத்தில் அந்தக் கைக்குட்டை தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனே அந்த அறையில் புகை சூழ்ந்தது. மூச்சு விடக் கஷ்டமாகி இருவரும் அந்த அறையை விட்டு ஓடினார்கள்.

பால் ப்ரண்டனுக்கு அந்த மனிதர் செய்து காட்டியது மேஜிக்கா, அல்லது அவருடைய உண்மையான சக்தியைத் தானா என்ற சந்தேகம் வந்தது. அவர் அந்த மந்திரவாதியிடம் கேட்டார். "கைக்குட்டையில் எப்படித் தீப்பிடிக்க வைத்தீர்கள்"

அந்த மந்திரவாதி சொன்னார். "என் வசத்தில் உள்ள பூதத்தின் உதவியுடன்"

எகிப்தில் இப்படிப் பலரும் சொல்வதை பால் ப்ரண்டன் கேட்டிருக்கிறார். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை.

அந்த மந்திரவாதி அவரிடம் ஒரு வெள்ளைக் கோழியை மூன்று நாட்கள் கழித்து எடுத்து வரச் சொன்னார். பால் ப்ரண்டனுக்கு உதவும் சக்தியை அவர் ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் இது போல் வெள்ளைக் கோழியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஆட்களின் மேலே தெளிக்கும் பழக்கத்தை கேள்விப்பட்டிருந்த பால் ப்ரண்டன் அருவறுப்புடன் மறுத்தார். காரணம் கேட்டு அறிந்து கொண்ட மந்திரவாதி அப்படியெல்லாம் தான் செய்யப்போவதில்லை என்றும் தைரியமாக ஒரு வெள்ளைக் கோழியை எடுத்துக் கொண்டு வரும்படியும் கூறினார்.

பால் ப்ரண்டனும் அந்த மந்திரவாதி சொன்னபடியே மூன்று நாட்கள் கழித்து வெள்ளைக் கோழியை எடுத்துக் கொண்டு சென்றார். தரையில் போடப்பட்டிருந்த ஒரு கம்பளத்தில் அந்தக் கோழியை வைத்து விட்டு அறையின் மூலையில் புகைந்து கொண்டிருந்த புகையருகே மூன்று முறை பால் ப்ரண்டனை சென்று வரச் சொன்னார். பால் ப்ரண்டனும் அப்படியே செய்தார்.

மந்திரவாதி ஒரு காகிதத்தை எடுத்து அதில் ஒரு சதுரத்தை வரைந்தார். அந்த சதுரத்தை ஒன்பது சிறு சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் எதையோ எழுதினார். பின் எதோ மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். சொல்லிக் கொண்டே வலது கை சுட்டு விரலை கட்டளையிடுவது போல் அடிக்கடி நீட்டினார். பயந்து போன கோழி பறந்து சென்று அறையின் மூலையில் பதுங்கியது. மந்திரவாதியின் மகன் வந்து அந்தக் கோழியை பழைய இடத்திலேயே வைத்து விட்டுச் சென்றான்.

அந்தக் கோழி மீண்டும் பறந்து செல்ல யத்தனிக்கையில் மந்திரவாதி உறுதியான குரலில் கட்டளையிட அந்தக் கோழி அசையாமல் அப்படியே நின்றது. சிறிது நேரத்தில் கோழி நடுங்க ஆரம்பித்தது. மந்திரவாதி மீண்டும் பால் ப்ரண்டனை அந்த சாம்பிராணி புகைக்கு மூன்று முறை சென்று வரச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். அதன் பின்னர் அந்த மந்திரவாதி மந்திரங்களைச் சொல்லியே அந்தக் கோழியை செயலிழக்க வைத்தார். பின் அந்த கோழி இறந்து விழுந்தது.

மந்திரவாதி சொன்னார். "என்னிடம் உள்ள பூதம் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது என்பதற்கு அறிகுறியே இந்தக் கோழியின் மரணம். இந்தக் கோழி சாகவில்லை என்றால் அந்த பூதம் உங்களுக்கு உதவத் தயாரில்லை என்று அர்த்தம். நீங்கள் இந்தக் கோழியை கைக்குட்டை அல்லது காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு போய் நாளை வரை அதைப் பிரிக்காமல் வைத்திருங்கள். பின் இரவு 12 மணியளவில் நைல் நதியில் வீசி விடுங்கள். வீசுவதற்கு முன் ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்ளுங்கள். என்னுடைய பூதம் அதை நிறைவேற்றிக் கொடுக்கும்"

அந்தக் கோழியைத் தொடாமலேயே சாகடித்ததை பெரிய அற்புத சக்தியாக பால் ப்ரண்டன் நினைக்கவில்லை. அப்படி ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதிலும் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தக் கோழியை ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பால் ப்ரண்டன் வீட்டில் வேலை செய்த அரபு வேலைக்காரன் அது என்ன என்று கேட்க அது மந்திரவாதி மந்திரசக்தி பிரயோகித்த கோழியின் சவம் என்று சொன்னவுடன் அவன் அது வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கம் வருவதையே தவிர்த்தான். இது போன்ற மந்திரவாதங்களில் அங்குள்ளோருக்கு இருந்த நம்பிக்கையையும் பயத்தையும் பால் ப்ரண்டன் கவனித்தார்.

மறுநாள் மாலை ஒரு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கையில் மந்திரவாதியின் வீட்டில் நடந்ததைப் பற்றி தன்னுடன் இருந்த எகிப்திய நண்பர் மற்றும் அமெரிக்க நண்பர் ஒருவரிடம் விவரிக்க அவர்கள் இருவரும் அந்த மந்திரவாதியையும் பற்றி கிண்டலாகப் பேசி சிரித்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டலில் அனைத்து மின்விளக்குகளும் அணைந்து போயின. ஓட்டல் உரிமையாளர் என்ன முயற்சி செய்தும் மின் விளக்குகள் எரியாமல் கடைசியில் அவர் மெழுவர்த்திகளைப் பற்ற வைக்க வேண்டியதாகிற்று. உடனே பால் ப்ரண்டனின் படித்த எகிப்திய நண்பர், அது வரை கிண்டல் செய்து கொண்டிருந்தவர், பயந்து போனார். "இது அந்த மந்திரவாதியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இருந்திருந்தாற் போல் விளக்குகள் ஏன் அணைய வேண்டும்?"

பால் ப்ரண்டனுக்கு அந்த மின்வெட்டு சம்பவம் மந்திரவாதியின் வேலை தானா இல்லை தற்செயலாக நடந்ததா என்று தீர்மானிக்க முடியவில்லை. பின் அவர் அந்த மந்திரவாதி சொன்னபடி அந்த மந்திரித்த கோழியை நள்ளிரவில் நைல் நதியில் போட்டு விட்டு வந்தார்.

அவர் வீடு திரும்புகையில் அவரது அரபு வேலைக்காரன் அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்காதது போல ஆச்சரியப்பட்டான். "அல்லாவின் கருணையே கருணை" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்த மக்களுக்கு இது போன்ற மந்திர தந்திரங்களில் இருந்த நம்பிக்கையைப் பார்த்த பால் ப்ரண்டனுக்கு இதெல்லாம் ஆதாரபூர்வமானதா இல்லை மூடநம்பிக்கையா என்றறியும் ஆவல் ஏற்பட்டது.

(தொடரும்)

- என்.கணேசன்
நன்றி: கோவை இமேஜஸ்