சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 28, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-4

அனுபவம் மிக்க மருத்துவரே தடுமாறும் சில மருத்துவப் புதிர்களில் அனாயாசமாக எப்படி எட்கார் கேஸால் பதில் கண்டு பிடிக்க முடிகிறது? என்ற கேள்விக்கு எட்கார் கேஸ் எளிமையாகப் பதில் சொன்னார்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாக எட்கார் கேஸ் சொன்னார். அவற்றை அவர் Akashic Records (ஆகாய ஆவணங்கள்) என்றழைத்தார். அதைப் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் எந்த அறிவையும், தகவலையும் சுலபமாகப் பெற முடியும் என்றார். எட்கார் கேஸ் உபயோகித்த அந்த ஆகாசம் என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். அவர் சொன்ன கருத்தும் நம் நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக, 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு ஸ்ரீ யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி·பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?"

யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார்.

யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி·ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் "இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்" என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.

யுக்தேஸ்வர் சொன்னார். "இப்போது அவன் திரும்புவான் பார்".

அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி·ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.


யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். "அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி·ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி·ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....."

யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி·ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.

யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது "விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்" என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.

சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.

இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.

"நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்"

அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.

எட்கார் கேஸ் சொல்வதையும் யோகானந்தர் சொல்வதையும் பார்த்தால் தொலைக் காட்சியில் விருப்பப்பட்ட சேனல் பார்க்க முடிவதும் வானொலியில் விருப்பப்பட்ட ஸ்டேஷன்களைக் கேட்க முடிவதும் எவ்வளவு இயல்போ இதுவும் அவ்வளவு இயல்பே. நம் மனதை ஒரு ஏண்டனாவாக அமைத்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில் அலைகளாக இருக்கின்ற, நமக்குத் தேவைப்படுகின்ற தகவல்களை ஈர்த்துப் படிக்கும் வித்தையையும் கற்றுக் கொள்ள முடியும் என்கிறது பலரது அனுபவங்கள்

இது பெரிய அற்புதமாகத் தோன்றினாலும் அதீத சக்தி படைத்த அனைவருமே இதை ஆழமாக நம்பியதாகவும், இதை உபயோகித்து இருப்பதாகவும் தெரிகிறது. இன்று ரேடியோவும் தொலைக்காட்சியும் நம்மை எப்படி அதிசயிக்கச் செய்வதில்லையோ அது போல் இதுவும் ஆழ்மனக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களை ஆச்சரியப்படுத்துவதில்லை. இப்படி விண்வெளியிலிருந்து தகவல்களைப் பெறும் வித்தைகளை அறிந்திருந்த வேறு சிலரின் சுவாரசியமான அனுபவங்களையும் பார்ப்போமா?

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

Thursday, September 24, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-3

"என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்" என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.

அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.


எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.

எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.

அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.

அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.

கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."

ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.

பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'

இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.

எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.

1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.

எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?

மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

Monday, September 21, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-2

"அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முன்பு குறிப்பிட்ட டெல்·பை ஆரக்கிள், ·ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை.


ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப் பிரயோகித்தும் நடப்பதை மாற்ற முடியவில்லை. இயேசு கிறிஸ்துவும், முகமது நபியும் பிறப்பதும் முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதாக அந்த மதநூல்கள் சொல்கின்றன.

இதெல்லாம் நிஜம் தான் என்று நம்ப முடியாத பகுத்தறிவு வாதிகள், இது மதவாதிகளின் கட்டுக் கதை என்று சொல்லலாம். மற்றவர்கள் இதெல்லாம் தெய்வ சக்தி அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிறப்பு சக்தி என்று நினைக்கலாம். ஆனால் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் சாதாரண மனிதர்கள் சிலருக்கும் அப்படிப்பட்ட அற்புத சக்திகள் கிடைத்த போது, அது பகுத்தறிவுக்கோ, மற்ற அறிவுக்கோ எட்டாத விஷயமாக அனைவரையும் குழப்பியது.

1967 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி சிகாகோ ரேடியோவில் ஒரு பேட்டியில் ஜோசப் டிலூயிஸ் என்ற 'கிரிஸ்டல் பந்து ஞானி' அந்த வருட இறுதிக்குள் ஒரு பெரிய பாலம் இடிந்து விழும் என்றார். மூன்று வாரம் கழித்து 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓஹையோ நதியின் குறுக்கே இருந்த "வெள்ளிப்பாலம்" இடிந்து விழுந்து பலர் இறந்தனர்.

1968, ஜனவரி எட்டாம் தேதி நாட்டில் பெரிய கலவரம் வரும் என்றார். 1968, ஏப்ரல் ஏழாம் தேதி சிகாகோவில் பெரிய கலவரம் வந்து ஐயாயிரம் மத்திய அரசுப்படையினர் வந்து அடக்க வேண்டியதாயிற்று.

1969, ஜனவரி 16 ஆம் தேதி சிகாகோ நகரின் ஓட்டலின் ஒரு பாரில் நுழைந்து அங்குள்ள சர்வரிடம் சிகாகோவின் தெற்குப்பகுதியில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தைப் பற்றி அன்றைய தினப் பத்திரிக்கையில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று கேட்க அங்குள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். முன்பே அவர் இது போன்ற விஷயங்களில் பிரபலமானபடியால் அன்றைய பத்திரிக்கைகளில் ஒன்றும் வராவிட்டாலும் ரேடியோவிலாவது ஏதாவது செய்தி வருகிறதா என்று ரேடியோவைப் போட்டார்கள். அப்போது இரவு மணி 11. ஆனால் ரேடியோவில் விபத்தைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. அது வரை நடக்கவில்லை என்பதை அறிந்த டிலூயிஸ் உறுதியாகச் சொன்னார். "இந்தப் பகுதியில் கடந்த 25 வருடங்களில் இது போன்ற பெரிய விபத்து நடந்திருக்காது. அப்படிப்பட்ட விபத்து நடக்கும்."

இரண்டு மணி நேரம் கழித்து சிகாகோவிற்குத் தெற்கே இல்லினாய்ஸ், சென்ட்ரல் ரயில்கள் பனிமூட்டத்தின் காரணமாக மோதிக் கொண்டன. 47 பேருக்குப் பலத்த காயம். மூன்று பேர் இறந்தனர். அவர் கூறியது போல அதுவே அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் மிகப்பெரிய விபத்து.

1969, மே 21ல் டிலூயிஸ் "இண்டியானாபோலிஸ் அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும். அதில் 79 பேர் மரணமடைவார்கள். ஏதாவது ஒரு வகையில் 330 என்ற எண் அதில் சம்பந்தப்படும்" என்றார். 1969, செப்டம்பர் 9 ஆம் தேதி அலிகனி ஏர்லைன்ஸ் விமானம் ஒரு தனியார் விமானத்துடன் மோதி 79 பயணிகள் இறந்தனர். விபத்து நேர்ந்த நேரம் மதியம் 3.30.

1968 டிசம்பர் 15 ஆம் தேதி டிலூயிஸ் "கென்னடி குடும்பத்திற்கு தண்ணீர் மூலம் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு பெண் நீரில் மூழ்கியதைப் பார்த்தேன்" என்றார். 1969, ஜூலை 18 ஆம் தேதி மேரிஜோ என்னும் பெண் எட்வர்டு கென்னடியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய சம்பவம் எட்வர்டு கென்னடியின் அரசியல் வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

பொதுவாகவோ, எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும்படியாகவோ சிலர் எதை எதையோ சொல்வதுண்டு. அப்படிச் சொல்வதில் ஏதாவது ஒன்று பலித்து விட்டால் அதை விளம்பரப்படுத்தி நல்வாக்கு சித்தர் என்றோ முக்காலமும் உணர்ந்த மகான் என்றோ பெயர் வைத்துக் கொள்வதுண்டு. உதாரணத்திற்கு "அடுத்த ஆண்டு ஒரு பெரும் ரயில் விபத்து நடக்கும். நாட்டில் எங்காவது குண்டு வெடிக்கும். புதியதாக ஒரு நோய் வந்து மனிதர்களைத் தாக்கும்" என்று நான் சொன்னால் மூன்றில் இரண்டு கண்டிப்பாகப் பலிக்க சாத்தியமுண்டு. உடனே நான் விகடனில் அன்றே இந்த தேதியில் இப்படிச் சொன்னேன் என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படி இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது. ஆனால் டிலூயிஸ் அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே அப்படி சொல்ல முடிந்த விஷயங்கள் அல்ல.

இப்படி நடப்பதை முன் கூட்டியே சொல்லி திகைப்பில் ஆழ்த்திய டிலூயிஸ் ஒரு சாதாரண முடிதிருத்தக் கலைஞர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர். பின்னர் கடற்படையில் சேர்ந்தார். பணியிலிருந்து விலகுவதற்கு முன்பு ஒரு முறை தான் வேலைக்கு செல்லும் கிடங்கில் ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்படுவதாக அவர் உள்ளுணர்வு சொல்ல அவர் அன்று வேலைக்குப் போகாமல் இருந்து விட, உண்மையாகவே அங்கு ஒரு பெரும் விபத்து அன்று நிகழ்ந்தது. அன்று வேலைக்குப் போகாததால் அவர் உயிர் தப்பித்தார். பிறகு இவர் கிரிஸ்டல் பந்தைப் பார்த்து எதிர்காலக் கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த ஆரம்ப உள்ளுணர்வின் பின் இவருடைய எல்லா முன்கூட்டிய கணிப்புகளைக் கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும். எல்லாமே விபத்துக்கள் பற்றியதாகத் தான் இருந்தன.

ஜோசப் டிலூயிஸிற்கு இப்படி விபத்துகளை அறியும் சக்தி கிடைத்ததென்றால் சில மனிதர்களுக்கு திடீரென்று வேறு மாதிரியான அபூர்வ சக்திகள் கிடைத்த நிகழ்ச்சிகளும் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையும் பார்ப்போமா?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

Wednesday, September 16, 2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1

ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.
அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.

இந்த கி.மு, கி.பி நிகழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.....

- என்.கணேசன்

(தொடரும்)

நன்றி: விகடன்

Friday, September 11, 2009

இதுவல்லவோ பெருந்தன்மை!


அந்த இளைஞனுக்குக் கணக்கைத் தவிர வேறொன்றும் தெரியாது. கணக்கில் அவனுடைய சீனியர்களெல்லாம் அவனிடம் வந்து தங்கள் சந்தேகங்களைத் தெளிவித்துக் கொண்டு போவார்கள். பள்ளிப்படிப்பை முடித்த அவனால் கல்லூரிப்படிப்பை முடிக்க முடியவில்லை. காரணம் இரண்டு. ஒன்று வறுமை. மற்றொன்று கணக்கில் காட்டிய ஆர்வத்தை அவனால் ஆங்கிலம், வரலாறு முதலான மற்ற பாடங்களில் காட்ட முடியவில்லை.

அவன் மூளையில் கணித உண்மைகள் அருவியாய் வந்த வண்ணமிருக்க அவற்றை எழுதப் போதுமான காகிதங்கள் வாங்க அவனிடம் பணம் இருக்கவில்லை. (மாதம் சுமார் 2000 வெள்ளைத் தாள்கள் வேண்டியிருந்தது). தெருவில் காணும் காகிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி அதில் எழுதிப் பார்ப்பான். சிலேட்டில் எழுதிப் பார்த்து முடிவுகளை மட்டும் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வான். காகிதங்களிலேயே பென்சிலில் முதலில் எழுதுவது, பின்பு அதன் மேல் பேனாவில் எழுதுவது என்று இருமுறை ஒரே காகிதத்தை உபயோகப்படுத்தினான்.

வேலை தேடி அலைந்த போது பலரிடமும் தான் நோட்டு புத்தகங்களாக சேர்த்து வைத்திருந்த அந்த கணித உண்மைகளைக் காட்டினான். பலருக்கு அவன் கணிதக் கண்டுபிடிப்புகளும், தேற்றங்களும் என்னவென்றே புரியவில்லை. முழுவதும் புரியா விட்டாலும் அந்த இளைஞன் ஒரு மேதை என்று புரிந்த சென்னை துறைமுக டிரஸ்ட் டைரக்டர் ஒருவர் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலையை போட்டுக் கொடுத்தார். மாதம் ரூ.25/- சம்பளம். காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். அந்த இளைஞன் ஸ்ரீனிவாச ராமானுஜன். பின் வேறு சில ஆசிரியர்களும், அறிஞர்களும் முயற்சிகள் எடுத்து ராமானுஜனுக்கு சென்னை பல்கலைகழகத்திலிருந்து மாதாந்திர ஆராய்ச்சித் தொகையாக ரூ.75/- வர வழி வகுத்தார்கள்.

ஆனால் ராமானுஜனின் கணிதக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மேதைகள் இந்தியாவில் அச்சமயம் இருக்கவில்லை. எனவே அவன் தன் தேற்றங்களில் 120ஐ தேர்ந்தெடுத்து கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கணித மேதையான ஜி.எச்.ஹார்டிக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பி வைத்தான். உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல கணித ஈடுபாட்டுடையவர்களூடைய கடிதங்களை தினந்தோறும் பெறும் அந்தக் கணித மேதைக்கு அந்தத் தடிமனான தபாலைப் பிரித்து முழுவதும் படித்துப் பார்க்க நேரமில்லை. சில நாட்கள் கழித்தே கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.

தான் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிவதாகவும், தனக்கு பட்டப்படிப்பு இல்லையென்றும், தான் பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே ராமானுஜன் எழுதியிருந்தார். அவருடைய ஆங்கில நடையும் உயர்தரத்தில் இருக்கவில்லை. ஹார்டியைப் போன்ற ஒரு மனிதருக்கு மேற்கொண்டு படிக்காதிருக்க இது போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனாலும் இணைத்திருந்த தேற்றங்களை மேற்போக்காகப் படித்தவருக்கு அவற்றில் இரண்டு பெரிய முரண்பாடுகளைப் பார்க்க முடிந்தது. சிலவற்றில் மிக அபூர்வமான மேதைமை தெரிந்தது. சில இடங்களில் சமகாலத்தைய கணித முன்னேற்றத்தின் அடிப்படை ஞானம் கூட இருக்கவில்லை. அவர் எழுதிய ஒரு சில தேற்றங்கள் பற்றி முன்பே சிலர் எழுதி வெளியிட்டு விட்டிருந்தனர். அது கூட ராமானுஜனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ராமானுஜனுக்கு கற்றுத் தர ஆரம்பப் பாடங்களே நிறைய இன்னும் இருந்ததை ஹார்டி உணர்ந்தார்.

இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற அந்த மேதைக்கு இந்தியாவில் அடிமட்ட நிலையில் இருந்த ராமானுஜனைப் பொருட்படுத்தாமல் விட எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால் அத்தனை காரணங்களையும், குறைபாடுகளையும் மீறி அந்தத் தேற்றங்களில் ஆங்காங்கே தெரிந்த அந்த அபூர்வமான கணிதப் பேரறிவு ஹார்டியை அசைத்தது. பெரும் முயற்சி எடுத்து ஹார்டி ராமானுஜனை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வரவழைத்தார். ராமானுஜனுக்கு கணிதத்தில் பல அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்து தேற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மீதி சரித்திரமாகியது. ராமானுஜன் என்ற இந்தியக் கணித மேதை உலக அரங்கில் பிரபலமானார்.

தன்னுடைய துறையில் தன்னைக் காட்டிலும் திறமை மிக்கவனாய் ஒருவன் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் முழுத்திறமையும் வெளிப்பட சில அடிப்படைப் பாடங்கள் அவன் கற்பது அவசியம் என்பதை அறிந்து அவனை அழைத்து வந்து அவற்றை கற்றுத் தந்து அவன் பெருமையை உலகறிய வைக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மனம் வேண்டும் என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த இந்த உலகில் அடுத்தவருக்கு இருக்கின்ற திறமைகளை முடிந்த அளவு அமுக்கப் பார்க்கும் மனம் படைத்த மனிதர்களுக்குக் குறைவில்லாத உலகில் இத்தனை சிரமம் எடுத்து இது போல் செய்ய எந்த அளவு பெருந்தன்மை இருக்க வேண்டும்!

தீட்டாத வைரமாய் சோபையிழந்து பிரகாசிக்காமல் போக இருந்த நம் நாட்டு மேதையை அடையாளம் கண்டு பட்டை தீட்டி கணிதம் உள்ளளவும் பிரகாசிக்க வைத்த அந்த மாமனிதருக்கு கணிதத்துறையும் நாமும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

ராமானுஜன் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:-

* ஹார்டியின் சகாவான லிட்டில்வுட் என்ற கணித அறிஞர் ராமானுஜனுக்கு நெருங்கிய நண்பர்கள் எண்கள் தான் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு எண்ணைக் குறித்தும் பார்த்தவுடன் பல சுவையான தகவல்களை கூறும் பழக்கம் ராமானுஜனுக்கு இருந்தது.

* ராமானுஜனும் ஹார்டியும் இங்கிலாந்தில் ஒரு முறை 1729 என்ற எண் உடைய டாக்ஸியில் பயணம் செய்யும் போது அந்த எண்ணைப் பார்த்து ராமானுஜன் கூறினாராம். "இந்த எண்ணுக்கு ஒரு சிறப்பு உண்டு. இருவேறு ஜதை எண்களின் க்யூப்(cube)களின் மிகக்குறைந்த கூட்டுத் தொகை இந்த எண் தான்". பிரமித்துப் போனாராம் ஹார்டி. கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதன் விவரம்: 1729 = (1x1x1)+(12x12x12) = (9x9x9)+(10x10x10) )

* ராமானுஜனுக்கு கணிதத்தில் எத்தனை கஷ்டமான கேள்விகளுக்கும் எப்படி சுலபமாக பதில் கிடைக்கிறது என்று கேட்ட போது அவர் தன் குல தெய்வமான நாமகிரியம்மன் அவற்றிற்கெல்லாம் பதில் தருவதாக ஒரு முறை குறிப்பிட்டார்.

* காசநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பிய ராமானுஜன் தன் கடைசி காலத்தில் உடல்வலியை மறக்க கடைசி வரை நோட்டுப் புத்தகத்தில் எண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். கணிதத்தில் மூழ்கும் போது எல்லாவற்றையும் மறந்து விடும் அவருக்கு கணிதமே வலி நிவாரணியாக அமைந்தது.

- என்.கணேசன்
நன்றி: விகடன்

Monday, September 7, 2009

விட்டதைப் பிடிக்கும் வியாதி

மகாபாரதத்தில் தர்மபுத்திரனைப் போல் தர்மம் அறிந்தவர் யாருமில்லை. எமதர்மனால் முன்பு நச்சுப்பொய்கையிலும் பின்பு சொர்க்கத்திலும் பரீட்சிக்கப்பட்டு தேர்வு பெற்றவன் அவன். தன் தேகத்துடன் சொர்க்கம் போக முடிந்தவன் அவன் ஒருவனே. அப்படிப்பட்டவன் சூதாட்டத்தில் கலந்து போன போது கடைநிலை மனிதன் கூடச் செய்யத் தயங்கும் காரியத்தைச் செய்தான். தன் சகோதரர்களையும், மனைவியையும் பணயம் வைத்து ஆடினான். சூதாட்டம் ஆனானப்பட்ட தர்மபுத்திரனையே அப்படிச் செய்ய வைத்தது என்றால் மற்றவர்கள் விஷயத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கேட்க வேண்டுமா?

சூதாட்டத்தில் பங்கேற்கும் பலரும் விட்டதைப் பிடிக்கும் வியாதியால் பீடிக்கப்படுகிறார்கள். அடுத்த முறை வென்று விடுவோம், விட்டதை எல்லாம் பிடித்து விடுவோம் என்று சூதாட்டத்தைத் தொடர்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி விடுகிறார்கள். அது வரை அவர்களை சூதாட்டம் விடுவதில்லை.

தர்மபுத்திரன் விஷயத்திலேயே சூதாட்ட நாள் நடந்த கடைசி நிகழ்ச்சி பல பேர் கவனத்தை எட்டவில்லை. பாஞ்சாலியின் மானத்தைப் பகவான் காப்பாற்றிய பிறகு நரிகள் ஊளையிட, நாலா பக்கங்களில் இருந்தும் கழுதைகளும், பிணந்தின்னிக் கழுகுகளும் விகாரமாய் கத்த குலநாசம் வரப் போகிறதென்று பயந்து திருதராஷ்டிரன் தர்மபுத்திரன் இழந்ததை எல்லாம் அவனுக்குத் திருப்பித் தந்தான். பாண்டவர்களை இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பிப் போகச் சொன்னான். ஆனால் அப்படிக் காப்பாற்றப்பட்டும் கூட தர்மபுத்திரனுக்குப் புத்தி வரவில்லை. சபையோர் தடுத்தும் கூட கேட்காமல் மீண்டும் ஒருமுறை சகுனியுடன் ஆடி 12 வருடம் வனவாசம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்ற நிபந்தனையுடன் ஆடித் தோற்றான். வியாசர் அவன் கடைசியாக ஆடியதை "கலிபுருஷனால் பீடிக்கப்பட்டவனாய் மறுபடி ஆட உட்கார்ந்தான்" என்கிறார். கடைசியில் கூட விட்டதைப் பிடிக்கும் வியாதி அவனையும் விட்டு வைக்கவில்லை.

இன்றைய காலத்தில் சூதாட்டம் பல ரூபங்களில் நடக்கின்றது. கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் ஆசை பலரையும் படாத பாடு படுத்துகிறது. உழைத்து சம்பாதித்து நாலு காசு சேர்க்க ஆகும் கால அளவு வரை பொறுத்திருக்க பலருக்கும் பொறுமை இல்லை. சூதில் இப்படி ஒரு பேராசையுடன் தான் அனைவரும் நுழைகிறார்கள். பின் சூது அவர்களை விடுவதில்லை. கடைசி வரை தன் தூண்டிலைப் போட்டு அது சபலப் படுத்துகிறது. இனியொரு முறை ஆடு, விட்டதைப் பிடித்து விடலாம் என்று ஆசை காட்டுகிறது.

ஒரு நம்பர் லாட்டரி நம் நாட்டில் எத்தனை குடும்பங்களை நிர்க்கதியாக்கியது என்பது நமக்குத் தெரியும். எத்தனையோ தினக்கூலிக்காரர்கள் தினமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் லாட்டரிக் கடை முன் நிற்பதை சில வருடங்களுக்கு முன் பலரும் பார்த்திருக்கலாம். அன்றைய அனுபவம் அவர்களுக்கு அடுத்த நாளுக்கு உதவியதில்லை. விட்டதைப் பிடிக்கும் வியாதி தினம் தினம் அவர்களை லாட்டரியின் பக்கம் திருப்பியிருக்கிறது.

எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் மிக சௌகரியமாக இருந்தார். அவருக்கு ஷேர் பிசினஸில் ஆரம்பத்தில் சிறிது லாபம் வர பின் அவர் தன்னுடைய சேமிப்பு எல்லாவற்றையும் அதில் போட்டார். சமீபத்திய நிலவரத்தில் அவர் எல்லா பணத்தையும் இழக்க நேரிட்டது. பல வெளிநாட்டு வங்கிகளில் க்ரெடிட் கார்டுகள், கடன்கள் எல்லாம் வாங்கி அதையும் ஷேரில் போட்டார். நண்பர்களிடமும் கடன் வாங்கிப் போட்டார். எல்லாம் இழந்து விட்டார். இழந்த அத்தனையையும் திரும்பப் பெறும் நம்பிக்கையில் கடைசியில் அரசாங்க வேலையையும் விட்டு அதில் கிடைத்த பிராவிடண்ட் ·பண்ட் முதலான தொகைகளைப் பெற்று அதையும் ஷேரில் போட்டு அத்தனையும் இழந்து இன்று மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கிறார். விட்டதைப் பிடிக்கும் வியாதி அவரை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது பாருங்கள்.

அந்த வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் அறிவைப் பயன்படுத்துவதில்லை. அடுத்தவர் அறிவுரையைப் பொருட்படுத்துவதில்லை. அதைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்க
மனம் வைப்பதில்லை.

உண்மையான புத்திசாலித்தனம் இந்த சூதாட்டத்தில் ஈடுபடாமலேயே இருப்பது தான். ஈடுபட்டபின் அதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் விரைவிலேயே அதிலிருந்து மீள்வது தான். இழந்தவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கட்டும் என்று உணர்வது தான். அதை விட்டு அதை மீட்க மீதி இருப்பதையும் பணயம் வைக்கத் துணியாமல் இருப்பது தான். அப்படி மீட்டு விடுவேன் என்று பிடிவாதத்துடன் மீண்டும் அதில் புகுவது புதைகுழியில் கால் வைப்பது போல் ஆபத்தானது. எனவே இந்த வியாதிக்கு ஆளாகாமல் இருப்போமாக!.

- என்.கணேசன்

Tuesday, September 1, 2009

இதுவும் ஒரு சேவை தான்..!


அது முடவர்களுக்குப் புகலிடம் தந்த மருத்துவமனையின் ஒரு பகுதி. பெரிய ஹாலில் கிட்டத்தட்ட இருபது முடவர்கள் படுத்திருந்தார்கள். ஒருவருக்கும் எழுந்து நடமாட முடியாது. அவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கட்டிலிலேயே கழிந்து விடும். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர்கள் அந்தக் கட்டிலில் இருந்து விடுபடுவது மரணத்தின் பிறகு மட்டுமே.

அந்த ஹாலில் ஒரே ஒரு ஜன்னல். அந்த ஜன்னல் அருகே உள்ள மேடான தளத்தில் இருக்கும் கட்டிலில் படுத்திருந்த மனிதர் மட்டுமே ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடியும். அவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியே நடப்பதை சத்தமாகச் சொல்லுவார். அதைக் கேட்கும் போது மற்றவர்கள் வெளி உலகத்தைக் கற்பனையில் காண்பார்கள்.

தெருவில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகள், தோட்டத்தில் மலர்ந்திருந்த மலர்களின் அழகு, சூரியோதயம், சூர்யாஸ்தமனத்தின் காட்சி, தெருவில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் என்று வெளியுலக வாழ்க்கையை ஜன்னல் அருகே உள்ள மனிதர் அழகாக வர்ணிப்பதை மற்றவர்கள் ரசித்துக் கேட்பார்கள். இப்படி அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

அவர்களில் ஜன்னல் அருகே இருப்பவருக்கு அடுத்து தாழ் தளத்தில் இருப்பவருக்கு ஜன்னலோரத்தில் இருப்பவரைப் பார்த்து பொறாமை. 'இவருக்கு மட்டும் கற்பனையில் அல்லாமல் நேராகவே வெளி உலகைப் பார்க்க முடிகிறதே! இந்த ஆள் செத்தால் நாம் அந்த கட்டிலுக்குப் போய் விடலாம். நமக்கும் வெளி உலகை நம் கண்ணால் பார்த்து மகிழ முடியும்' என்று மனதில் புழுங்குவார்.

அவர் ஆசைப்பட்டது போலவே ஒரு நாள் அந்த ஜன்னலருகே இருப்பவர் இறந்து போனார். அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டு அந்தக் கட்டிலுக்குப் பொறாமைக்காரர் மாற்றப்பட்டார். பொறாமைக்காரருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இனிமேல் வெளியே நடப்பதைப் பார்க்கும் பாக்கியம் அவருக்குத் தான். மிகவும் ஆர்வத்துடன் அவர் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். பெரிய சுவர் ஒன்று மட்டுமே வெளியே தெரிந்தது......

சுவர் மறைப்பதால் அங்கிருந்து வெளியே நடப்பது தெரிய வாய்ப்பேயில்லை என்ற போதும் முன்பு அந்த ஜன்னல் அருகே இருந்தவர் தன் கற்பனை வளத்தால் அங்கிருந்த மற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தார்.... மற்றவர் வாழ்க்கைக்கு சுவை ஊட்டி இருந்தார்....

பலருடைய வாழ்க்கையும் அப்படி முடங்கிப் போவதுண்டு. வாழ்க்கை தேக்கமடைந்து நின்று விடுவதுண்டு. புதிதாக எதுவும் நடக்கவோ, எதிர்பார்க்கவோ முடியாத ஒரு பள்ளத்தில் வாழ்க்கை சிக்கிக் கொள்வதுண்டு. அந்த நேரங்களில் சிறிதாவது ஒரு ஆசுவாசத்தையோ, ஒரு சுவாரசியத்தையோ யாராவது தருவார்களேயானால் அதுவும் பெரிய சேவையே.

சிலர் என்றுமே பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். தங்களுடைய பிரச்சினை, மற்றவர்களுடைய பிரச்சினை, நாட்டின் பிரச்னை என்று அவர்கள் ஒரு இடத்தை விட்டுச் செல்லும் போது அங்கு ஒரு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்திச் செல்வார்கள். சிலர் நகைச்சுவையாகவும், நல்ல விஷயங்களைப் பற்றியும், சுவாரசியமான விஷயங்களைப் பற்றியும் கலகலப்பாகப் பேசி ஒரு லேசான மனநிலையை ஏற்படுத்திச் செல்வார்கள்.

எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையையும் நாம் நினைத்தால் ஓரளவாவது அழகுபடுத்த முடியும். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மனதில் நம்பிக்கையூட்ட முடியும். அவர்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் சுலபமாக்கவோ, சுவாரசியமாக்கவோ முடியும். அதற்கு நாம் பெரிதாக சிரமப்பட வேண்டியதில்லை. மற்றவர்களுடைய மோசமான நிலைமையை மாற்ற நமக்கு சக்தியில்லாமல் இருக்கலாம். மற்றவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்க நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால் நாம் மனம் வைத்தால் அவர்களை சிறிது நேரமாவது அவற்றை மறக்க வைக்க முடியும். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசலாம். கலகலப்பான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இதை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அதிலிருந்து மீண்டு மேன்மையான நிலைக்கு வந்திருக்கிற கதைகளை எடுத்துச் சொல்லலாம். நல்ல மனம் இருந்தால் இன்னும் எத்தனையோ வழிகளை நம்மால் கண்டு பிடிக்க முடியும். அப்படி செய்ய முடிவது ஒரு மகத்தான சேவை தான்.

- என்.கணேசன்

நன்றி: விகடன்