சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 20, 2019

இல்லுமினாட்டி 1

”அன்பு வாசகர்களே,

வணக்கம். இல்லுமினாட்டி நாவல் இருவேறு உலகத்தின் இரண்டாம் பாகமாக இருந்த போதிலும் தனி நாவலாகப் படித்தாலும் முக்கியமானவை எதுவும் விடுபட்டு விடாமல் புரிந்து கொள்ளும்படியாக எழுதப்பட்டிருப்பதால் சில பகுதிகளில் பழைய நிகழ்வுகள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால் இருவேறு உலகத்தைப் படித்தவர்களுக்கு அது திரும்பவும் சொல்லப்படுவது போல் தோன்றக்கூடும். அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அந்தப் பகுதிகளைக் கடக்கவும்.

பல தீவிர வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அமானுஷ்யன் அக்‌ஷய் முக்கியக் கதாபாத்திரமாக இல்லுமினாட்டியில் வருகிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியை அந்த வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி புதிய நாவலுக்குப் போகலாம், வாருங்கள்!

அன்புடன்

என்.கணேசன்


வன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அளவுக்கு அதிகமாய் போதை மருந்தை உட்கொண்டு ம்யூனிக் நகரத்  தெரு ஒன்றில் விழுந்து கிடந்த அவனை அந்த அரசு மருத்துவமனையில் இன்று காலை தான் போலீசார் சேர்த்திருந்தார்கள். அவனை அடையாளம் காட்டக்கூடிய ஆவணம் எதுவும் அவனிடம் இருக்கவில்லை. ஆறடி உயரமும், ஒடிசலான உடல்வாகும் கொண்டிருந்த அவன் முகவாய்க்கட்டையில் ஒரு ஆழமான கீறல் இருந்ததுஅந்த மருத்துவமனையின் மருத்துவர் குழு அவன் ஆசியாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், அவன் வயது முப்பதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தது. நீண்ட கால போதைப் பழக்கத்தினால் முன்பே கெட்டிருந்த அவன் உடல்நிலை கடைசியாக உட்கொண்ட அதிக போதை மருந்தால், மருத்துவமனையில் சேர்த்த போதே, அபாயக்கட்டத்தில் தான் இருந்தது.
  
அவனைப் பரிசோதித்த தலைமை மருத்துவர் அவனைச் சேர்த்த போலீசாரிடம் காலையிலேயே சொல்லியிருந்தார். “இவன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இவன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால் தெரிவித்து விடுங்கள்….”

“இவன் இந்த நகரத்தைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்தோ இங்கு வந்திருக்கலாம்…..  இவன் புகைப்படத்தைப் பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் அனுப்பி இவன் இங்கிருப்பதைத் தெரிவிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடியே இப்போது மாலை நாலரை மணிச் செய்தியில் அவன் படம் டிவியில் காட்டப்படுவதை தலைமை மருத்துவர் பார்த்தார். மருத்துவமனையின் விலாசத்தையும், தொலைபேசி எண்களையும் கூடவே தெரிவித்திருந்தார்கள். இதைப் பார்த்து விட்டு யாராவது இங்கு வரலாம். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தபடியே தலைமை மருத்துவர் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

அவரது அறை இரண்டாவது மாடியில் இருந்ததால் தெரு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு ஒரு கருப்புக்கார் அப்போது தான் வந்து நின்றது. ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கியதும், அவனைத் தொடர்ந்து கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்ட ஒரு இளைஞன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு ஆஜானுபாகுவான ஆள் இறங்கினான். அவர் கூர்ந்து பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்திற்குள் போய் விட்டார்கள்.

தலைமை மருத்துவருக்கு அந்தத் தெருக்கோடிக் கட்டிடமே ஏதோ ரகசியங்களும், ஆபத்தும் நிறைந்த இடமாகத் தோன்றியது. இன்று பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் மிக விலை உயர்ந்த கார்கள் வரிசை வரிசையாக அங்கு வந்து சேர்ந்ததை அவர் கவனிக்க நேர்ந்தது. கார்களில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அனைவரும் செல்வந்தர்களாகவும், அதிகாரங்கள் படைத்தவர்களாகவும் தோன்றியிருந்தார்கள்….. இப்போது கண்களைக் கட்டி யாரையோ அழைத்துக் கொண்டு போகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது, நடத்துபவர்கள் யார் என்பதெல்லாம் தெரியவில்லை….

அவர் சிந்தனைகளைக் கலைத்தபடி நர்ஸ் ஒருத்தி அந்த அனாமதேய போதை மனிதனின் ஸ்கேன் ரிப்போர்ட்களை அவர் மேசையில் வைத்து விட்டுப் போனாள். தலைமை மருத்துவர் ஒருவித சலிப்புடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெயர் தெரியாத போதை மனிதன் சாகப்போகிறான் என்றாலும் அவனுடைய எல்லா ரிப்போர்ட்களையும் ஃபைல் செய்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவை தேவைப்படலாம். உறவினர்கள் யாராவது வழக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது. இறந்தும் அந்த மனிதன் பிரச்னையாகலாம்…..

அவர் அவனுடைய எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பிரித்துப் பார்த்தார். அவன் பெயர் தெரியாததால் அந்த எல்லா ரிப்போர்ட்களிலும் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்றே இருந்தது. தலைமை மருத்துவர் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அவர் அந்த ரிப்போர்ட்களைப் படிக்க ஆரம்பித்தார். அந்த பரிசோதனைக் குறிப்புகள் எல்லாமே அவர் முன்பே எண்ணியிருந்தபடி மிக மோசமாகவே இருந்தன. அந்த ஆள் மரணத்தை நெருங்கி விட்டான். இனி அதிகபட்சம் ஓரிரு மணி நேரங்கள் தான் அவன் உயிரோடிருக்கும் வாய்ப்பிருக்கிறது…. அவன் இறந்த பின்னும் யாரும் உறவினர்கள் வரா விட்டால் அவன் பிணத்தை என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். அதில் நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன. எல்லாம் விதிமுறைகளின்படி தான் கவனமாகச் செய்தாக வேண்டும்…..

தலைமை மருத்துவர் அந்தப் போதை மனிதனின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை எல்லாம் தொகுத்து ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவன் இறந்தவுடன் அவனைக் காலையில் சேர்த்து விட்டுப் போன போலீஸ்காரர்களுக்குப் போன் செய்து வரவழைத்து அவர்களிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேச வேண்டும்….

திடீரென்று எங்கிருந்தோ கிதார் இசை லேசாகக் கேட்க ஆரம்பித்தது. அந்தக் கிதார் இசை இனிமையாக இருந்த அதே நேரத்தில் சற்று அமானுஷ்யமாகவும் இருந்தது போல அவர் உணர்ந்தார். சில நிமிடங்களில் நர்ஸ் ஒருத்தி வேகமாக அவர் அறைக்குள் வந்து சொன்னாள். “டாக்டர் அந்தப் போதை மனிதன் எக்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டான் போல இருந்தது. அவனுடைய இதயத்துடிப்பு எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் திடீர் என்று இப்போது அவனுக்கு ஜன்னி வந்தது போல் உடம்பெல்லாம் நடுங்குகிறது…..”

சிலருக்கு மரணத்திற்கு முன்பு அப்படி ஆவது உண்டு என்பதால் தலைமை மருத்துவர் ஆச்சரியப்படவில்லை. அவன் அருகில் யார் இருக்கிறார்கள் என்று அவளிடம் விசாரித்தார். அவள் உதவி மருத்துவர் ஒருவரின் பெயரைச் சொன்னவுடன் அவர் திருப்தியடைந்தார். இப்போது அந்தக் கிதார் இசை தான் அவரைக் குழப்பியது.

“எங்கிருந்து இந்த கிதார் இசை கேட்கிறது?” என்று அவர் நர்ஸைக் கேட்டார். அவள் கண்களை மூடிக் கவனமாக அந்த இசை வரும் இடத்தை யூகிக்க முயன்றாள். முயற்சி செய்தும் அவளுக்கு முடிவாகச் சொல்ல முடியவில்லை. பக்கத்தில் தான் யாரோ வாசிப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்த ‘பக்கத்தை’ உறுதியாக அவளால் சுட்டிக் காட்ட முடியவில்லை…. “சரியாகத் தெரியவில்லை” என்று தயக்கத்துடன் சொல்லி விட்டுப் பிறகு அதற்கு அதிக முக்கியத்துவம் எதுவும் தராமல் அவள் போய் விட்டாள்.

தலைமை மருத்துவர் எழுந்து போய் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வெளியே பார்வைக்குப் படுவது போல் யாரும் கிதார் வாசித்துக் கொண்டிருக்கவில்லை. ஏனோ அவர் தெருக்கோடியில் இருந்த அந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்த்தார். அங்கும் கட்டிடத்திற்கு வெளியே யாரும் தெரியவில்லை. கண்களை மூடி அவரும் கிதார் இசை வரும் இடத்தை அறிய முயன்றார். இந்த மருத்துவமனைக்குள்ளேயே தான் அந்த இசை கேட்பது போல் இருந்தது.

‘இந்த இசை எங்கிருந்து கேட்டால் நமக்கென்ன’ என்பது போல தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர் மறுபடியும் அந்த அறிக்கை தயாரிக்கும் வேலையைத் தொடர்ந்தார். கால் மணி நேரத்திற்குப் பின் எக்ஸ் அருகே இருந்த அந்த உதவி மருத்துவரே வந்தார். ”அவன் பிழைத்துக் கொள்வான் போலிருக்கிறது டாக்டர். அவன் உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது…..”

தலைமை மருத்துவர் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அவர் முன்னால் இருக்கும் ரிப்போர்ட்கள் எதிலும் அவன் பிழைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் ஒரு சதவீதம் கூட இருக்கவில்லை….. அவர் குழப்பத்துடன் மெல்ல எழுந்தார். கிதார் இசை இப்போதும் கேட்டுக் கொண்டு தானிருந்தது.

இருவரும் சேர்ந்து மிஸ்டர் எக்ஸ் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்கையில் தலைமை மருத்துவர் அந்த உதவி மருத்துவரிடம் கேட்டார். “கிதார் இசை எங்கேயிருந்து கேட்கிறது?”

உதவி மருத்துவர் சொன்னார். “இந்த ஆஸ்பத்திரியிலேயே யாரோ வாசிக்கிற மாதிரி தான் தெரிகிறது…. எங்கேயிருந்து என்று சரியாகத் தெரியவில்லை…”

அடுத்த சில நிமிடங்களில் தலைமை மருத்துவர் அந்தக் கிதார் இசை உட்பட அனைத்தையும் மறந்து போனார். மிஸ்டர் எக்ஸின் உடலில் தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் இது வரை அவர் படித்திருந்த மருத்துவத்தைக் கேலி செய்வது போல் இருந்தன. அவர் போன போது அவன் உடலின் வெப்பம் அபாயக்கட்டத்தையும் மீறி அதிகமாக இருந்தது. உடல் அனலாய் கொதித்தது. தர்மாமீட்டர் 106 டிகிரி ஃபாரன்ஹீட் காட்டியது. ஆனால் அதனால் அவன் உடல் எந்தப் பெரிய பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மிகக்குறைவாக இருந்த இதயத்துடிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டு வந்தது. தலைமை மருத்துவருக்கு அவன் உடலில் அசாதாரணமாக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் எதுவுமே அவன் வாழ்க்கையை முடிக்கிற விதமாய்த் தெரியவில்லை….

திடீரென்று அவன் கண் விழித்தான். அவன் கண்கள் அமைதியாக அவர்களைப் பார்த்தன.

தலைமை மருத்துவர் குனிந்து அவனிடம் கேட்டார். “நீ யார்? உன் பெயர் என்ன?”

(தொடரும்)
என்.கணேசன்


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


28 comments:

  1. வணக்கம் -- மீண்டும் ஒரு மர்ம தொடர் கதைக்கு எங்கள் நன்றிகள் - ஆரம்பம் மிக அருமை யாய் பாய்கிறது

    ReplyDelete
  2. Fantastic start ji. Illuminati rocks.

    ReplyDelete
  3. செம அசத்தலான ஆரம்பம் சார். நன்றி.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான ஆரம்பம் அண்ணா.
    இப்போவே அடுத்த வியாழன் எப்போ வரும் என்று ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  5. Marvelous start please keep it up sir

    ReplyDelete
  6. தொடக்கத்திலேயே அமானுஷ்யம். எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  7. கார்த்திக்ராஜாJune 20, 2019 at 9:33 PM

    Paraman Ragasiyam onwards I am not getting bored in a single place of your all novels. Super Sir. Illuminati is another treat for me.

    ReplyDelete
  8. நாவலின் ஆரம்பமே தலையும்..புரியாமல்..வாலும் புரியாமல்... போகிறது....அருமை...அருமை...

    அந்த கண்களை கட்டியவன் கிரிஷாக இருக்குமோ..?
    கிதார் வாசித்தவர் ஜிப்யாக இருக்குமோ..???

    ReplyDelete
    Replies
    1. You are correct. Its Krish who got blindfolded. Illuminaties conference held and Krish gave speech right(part 1). This novel (part 2) starts from there (the nearby place)
      I predict that the hospitalized X is nothing but our Amanushan.

      Delete
    2. My 2nd guess is, the Guitarist is our Ammanushan...

      Delete
    3. கிதார் வாசிப்பவர் ஜிப்சியாக இருக்க வேண்டும்...என தோன்றுகிறது.... ஏனெனில் முதல் பகுதியில் 'ஜிப்சி' கிதார் வாசிப்பதாக சொல்லியிருக்கிறார்...
      மேலும் இறந்த விஸ்வம் மீண்டும் இந்த குடிகாரனின் உடலில் நுழைந்திருக்கலாம்.... இது வெறும் கணிப்பு மட்டும் தான்

      Delete
    4. By considering the age of Mr.X, that may not be Amanushyan. May be some one else. Also, Amanushyan character doesn't use drugs.

      May be guitar guy was Gypsy....

      Delete
  9. அருமை....சஸ்பென்ஸ்....சூப்பர்

    ReplyDelete
  10. ஆரம்பமே அருமை.

    ReplyDelete
  11. Hi Sir, Please tell the book(Illuminati) release date.

    ReplyDelete
    Replies
    1. Oh my god, it's too long to wait. Please release very soon as possible.

      Delete
  12. Can't wait till thursday. Please release the book as soon as possible.

    ReplyDelete
  13. sir u r great waiting January book fare book

    eana thala thalapathi dhoni kohli mathuri amanusiyanum girshumnigalum sernthu kalagurapa antha suspense Thanga mudiyathu

    athanala book varavaraikum wait panren sir

    ReplyDelete
  14. இலுமினாட்டியில் அக்ஷய் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஈஸ்வரும் சேர்ந்தால் அந்த மூவர் கூட்டணி இன்னும் களைகட்டும்.

    ReplyDelete
  15. என்ன ? அமானுஷ்யன் அக்க்ஷய், இல்லுமினாட்டியிலா ?வார்த்தையை படித்தவுடன் பரபரப்பு ஒட்டிக் கொண்டது

    ReplyDelete
  16. Wow ஆரம்பமே எதிர்பார்ப்பை கூட்டுது... சாகப் போனவன் பிழைக்கிறான்... யார் அந்த கிதார் இசைப்பது என ஆவலாக இருக்கு...

    ReplyDelete