சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 28, 2019

இல்லுமினாட்டி 25


ல்லுமினாட்டியின் உளவுத்துறையில் அனைத்து வகையான பேரறிவாளர்கள் இருந்தார்கள். நவீன அறிவியல் நுட்பங்களின் உச்சத்தைப் பயன்படுத்தும் போக்கும் இயல்பாகவே இருந்தது. உளவுத்துறை இல்லுமினாட்டியின் தலைவருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருந்தது. அவர் இல்லாத பட்சத்தில், அவரை அணுக முடியாதபடி அவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, ஆபத்திலிருந்தாலோ அடுத்தபடியாக உபதலைவருக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது. மற்ற இல்லுமினாட்டி உறுப்பினர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற இந்த உளவுத்துறையை அணுக முடியாது. அவர்கள் மற்ற தனிப்பட்ட அல்லது அரசாங்க உளவு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களையே அணுகுவார்கள். அப்படி இல்லுமினாட்டி உறுப்பினர்கள் கூடத் தொடர்பில் இருக்க முடியாத வலிமையான உளவுத்துறை தலைமையோடு மட்டும் இணைந்ததாக இருந்தது தலைமையின் உச்சப் பலத்தை அதிகப்படுத்துவதாக  இருந்தது. அந்த உளவுத்துறை எல்லாத் தகவல்களையும் இல்லுமினாட்டியின் தலைவரிடமே சமர்ப்பிக்கும். அவர் அந்தத் தகவல்களைப் படித்து விட்டு தலைமைக்குழுவுக்கு மட்டும் அனுப்ப வேண்டுமா, எல்லா உறுப்பினர்களுக்கும் அனுப்ப வேண்டுமா என்று முடிவு செய்து பின் அனுப்புவார். சில மிக ரகசிய ரிப்போர்ட்களை அவர் தன்னிடமே கூட வைத்துக் கொள்ள முடியும். அப்படி முதல் முறையாக ஒரே சமயத்தில் வந்த இரண்டு ரிப்போர்ட்களை எர்னெஸ்டோ தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார்.

முதல் ரிப்போர்ட்விஸ்வம்என்ற பெயரில் இருந்தது. அதில் விஸ்வம் என்ற சக்தி வாய்ந்த மனிதன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறான் என்பதை அவனது பழைய சரித்திரத்தை வைத்து உளவுத்துறையின் துப்பறியும் நிபுணர்களும், மூன்று மனோதத்துவ மேதைகளும் சேர்ந்து கணித்திருந்தார்கள். விஸ்வத்தைப் பற்றிய சின்னச் சின்னத் தகவல்களையும் வைத்துக் கொண்டு மேலும் பல புதிய தகவல்களைப் பெற்றிருந்த துப்பறியும் நிபுணர்கள் அந்தத் தகவல்களை மனோதத்துவ மேதைகளுக்குத் தந்து விஸ்வத்தின் எதிர்கால நடவடிக்கைகளை அனுமானித்திருந்தார்கள். மனிதன் தன் இயல்பான குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின்படியே இயங்குபவன் என்பதால் அந்தக் கணிப்பு பொய்த்துப் போக வழியில்லை

விஸ்வம் தனக்கு எதிரான நிலையை எடுக்கக் கூடியவர்களையும், தன் நோக்கத்திற்குத் தடையாக இருக்கக்கூடியவர்களையும் தன் அமானுஷ்ய சக்திகளைப் பயன்படுத்திக் கொல்லத் தயங்காதவன் என்பது இந்தியாவின் ரகசிய ஆன்மீகத்தின் முந்தைய குருவின் மரணத்திலிருந்தும், தமிழ்நாட்டு முந்தைய முதலமைச்சர் ராஜகுருவின் மரணத்திலிருந்தும் தெரிவதால் கண்டிப்பாக இல்லுமினாட்டியில் அவனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிர்த்தாலும் அதே பாணியைக் கையாள்வதற்கு சாத்தியமிருக்கிறது. அதைச் செய்யுமளவு அவன் புதிய உடல் பலம் பெற்ற பின் அவன் முதல் வேலை இல்லுமினாட்டி தலைவரைக் கொல்வதாக இருக்கலாம்என்று அந்த ரிப்போர்ட் தெரிவித்திருந்தது. விஸ்வத்தின் கடந்த காலச் சரித்திரத்தை, தெரிந்த வரை ஆழமாக ஆராய்ந்த பின்பும் விஸ்வத்தை அழைத்துச் சென்ற கூட்டாளிகளை உளவுத்துறையால் யூகிக்கவும் முடியவில்லை. ஆனால் பெரும்பாலும் ஒருவனாக அல்லது அதிகபட்சமாக இருவராக இருக்கலாம் என்றும் அவனுடைய பழைய வாழ்க்கையில் அந்தக் கூட்டாளி/கள் அதிகமாக அவனுடன் தொடர்பில் இருந்திருக்க வழியில்லை என்று மட்டும் யூகித்திருந்தது.

கிதார் இசையில் வூடு சடங்கு ட்யூனை ஒலிக்க விட்டதைப் பார்க்கும் போது அந்தக் கூட்டாளி/கள் இந்த அமானுஷ்ய சக்திகளின் சம்பந்தம் பெற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்றாலும் அவர்கள் அந்தச் சக்திகளை இதுவரை அதிகம் வெளிப்படுத்தியிருக்காத, யாருக்கும் சக்தியாளர்களாக அறிமுகம் ஆகியிருக்காதவர்களாகவே இருக்கக்கூடும்என்று ரிப்போர்ட் சொன்னது. அப்படி ஒலிக்க வைக்க நுழைந்த ஆள் அல்லது ஆட்களை மருத்துவமனைக் கண்காணிப்புக் காமிராப்பதிவுகளைப் பல முறை நுட்பமாகப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதனால் அந்தக் கூட்டாளிகளும் வலிமையும், ரகசியமும், செயல்திறனும் வாய்ந்த ஆட்களாய் இருக்க வாய்ப்பிருப்பதாகவே உளவுத்துறை சந்தேகப்பட்டது. அதனால் எர்னெஸ்டோ உயிருக்குப் பேராபத்து இருக்கின்றது என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது

விஸ்வத்தின் கூட்டாளி/கள் வெளிப்படையாக முன்னுக்கு வருவதில் தயக்கமிருப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர்கள் நம்பினார்கள். சக்திகள் இருந்தும் இது வரை வெளிப்படுத்தாத கூட்டாளிகள் முன்பு போலவே இனியும் ரகசியமாக பின்னால் இருந்து இயங்கவே வாய்ப்புகள் அதிகம் என்று அவர்கள் கணித்திருந்தார்கள்.

விஸ்வத்தின் உடல் வலிமை தேறுவதற்கு ஆகும் கால அளவை மூளை விஞ்ஞானிகளும், நரம்பியல் நிபுணர்களும் சேர்ந்து ஓரளவு அனுமானிக்க முடியும் என்று அந்த ரிப்போர்ட் சுட்டிக்காட்டியது. மூளை விஞ்ஞானி என்றால் ஜான் ஸ்மித்துக்கு மிஞ்சிய நபர் இல்லை. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் அவர் ஈடுபட்டு விட்டதால் அவரும் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் யாராவதும் சேர்ந்து அந்தக் கால அளவை நிர்ணயிப்பது நல்லது என்றும் அதை உடனடியாகச் செய்வது அதிமுக்கியம் என்றும் அவசரம் என்றும் ரிப்போர்ட் கூறியிருந்தது.

எர்னெஸ்டோ தன் உயிருக்கு என்றுமே பயப்பட்டவரல்ல. எப்போது மரணம் வந்தாலும் மறு உலகம் எப்படியிருக்கும் என்று சென்று பார்க்கிற ஆர்வமுடையவராக அவர் தயார்நிலையிலேயே இருந்தார். ஆனால் அவர் தலைமை வகிக்கும் இல்லுமினாட்டி அழிவை நோக்கிச் செல்வதை அவர் ஏற்றுக் கொள்ள முடியாதவராகவே இருந்தார். அதனால் இல்லுமினாட்டியை ஒரு சரியான தலைமையில் ஒப்படைப்பதற்கு முன் முட்டாள்தனமாக இப்போது உயிரை விடுவதற்கு அவர் விரும்பவில்லை.

அந்த முதல் ரிப்போர்ட்டை அவர் படித்து முடிகையில் இரவு மணி பத்தரை ஆகியிருந்தது. ஜான் ஸ்மித்தை உடனடியாக இந்த நேரத்தில் அழைப்பது அவசியமில்லை என்று நினைத்த அவர் நாளை வந்து சந்திக்கும்படி ஜான் ஸ்மித்துக்குத் தகவல் அனுப்பி விட்டு அந்த இரண்டாவது ரிப்போர்ட்டை எடுத்தார்.

இரண்டாவது ரிப்போர்ட் அமானுஷ்யன்என்ற பெயரில் இருந்தது. தூங்கச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது. பிதோவன் இசையைக் கேட்டபடி ஒயினை அருந்தி விட்டு உறங்கச் செல்ல அதிக நேரமில்லை. என்றாலும் மேலோட்டமாக அந்த ரிப்போர்ட்டைப் படித்து விடலாம் என்று எண்ணியவராக அந்த ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பித்தவர் காலத்தை மறந்தார். இரண்டு மணியளவில் கண்கள் தானாக மூட ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் உறங்கியவர் மறுநாள் அதிகாலை ஐந்து மணியளவில் தானாக முழித்துக் கொண்டு மறுபடி எழுந்து அந்த ரிப்போர்ட்டைப் படித்தார். காலம் மறுபடி மறக்கப்பட்டது. முடிவில் அவருக்கு பிரமிப்பே மிஞ்சியது.

ஜான் ஸ்மித் அவரைச் சந்திக்க வந்த போது அவரிடம் ஏதோ ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது போல் உணர்ந்தார். ஆனால் அது என்ன மாற்றம் என்பதை நிச்சயமாகக் குறிப்பிட்டு அவரால் சொல்ல முடியவில்லை.

எர்னெஸ்டோ அவரிடம் கேட்டார். “ஜான், விஸ்வம் திரும்பவும் அவனுடைய சக்திகள் எல்லாம் உபயோகப்படுத்த அவன் உடல்நிலை எந்த அளவிற்கு சரியாக வேண்டும்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “அவன் உடம்பின் முக்கியமான எல்லா பாகங்களும் பிரச்சினை கொடுக்காத அளவுக்காவது தேற வேண்டும். முக்கியமாக அவன் நரம்புகள் வலிமையாக மாற வேண்டும்.”

மூளை?”

மருத்துவச் சொற்கள் இல்லாமல் அவருக்குப் புரிய வைப்பது எப்படி என்று ஜான் ஸ்மித் யோசித்தார். பின் சொன்னார்அதில் அவன் டேட்டாவை நிரப்பி வைத்திருக்கிறான். ஆனால் தகவல்கள் நரம்பு மண்டலத்திற்குப் போவதும், திரும்பப் பெறுவதுமான வழிகள் தடங்கல் இல்லாமல் போய் வர வைக்க வேண்டும்.”

எர்னெஸ்டோ கேட்டார்இதை எல்லாம் இந்த உடம்பில் அவனால் செய்ய முடியுமா? எந்த அளவு செய்ய முடியும், அதற்கு எவ்வளவு காலம் அவனுக்குத் தேவைப்படும்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “உடல் உறுப்புகள் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இருப்பவை. ஒட்டு மொத்தமாய் எல்லாம் சேர்ந்து இயங்க ஆகிற காலத்தை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு தான் ஓரளவு அனுமானிக்க முடியும்

எர்னெஸ்டோ கேட்டார். “மூளைக்கு நீ இருக்கிறாய். மற்றதெல்லாம் தெரிந்து கொள்ள எத்தனை நிபுணர்கள் வேண்டும்?”

ஜான் ஸ்மித் சொன்னார். “முக்கியமாய் நரம்பியல் நிபுணர் ஆலோசனை வேண்டும். மற்ற பாகங்கள் இருக்கிற நிலைமை ம்யூனிக் ஆஸ்பத்திரி ரிப்போர்ட்களில் இருக்கிறது. அதை வைத்து நாங்களே முடிவு செய்து விடலாம்…”

இதையே உளவுத்துறை ரிப்போர்ட்டும் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்து திருப்தியடைந்த எர்னெஸ்டோ சொன்னார். “அதை உடனே செய்து எனக்கு அவன் எல்லா முயற்சிகளையும் கச்சிதமாகச் செய்தாலும் அவன் உடம்பு அதிகபட்சமாய் எந்த அளவு தேறும், அதற்கு குறைந்த பட்சம் எத்தனை காலம் தேவைப்படும் என்று கண்டு பிடித்துச் சொல். எனக்கு நாளைக்கே தெரிய வேண்டும்.”

(தொடரும்)

என்.கணேசன்