சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, February 26, 2010

வாழ்க்கைப் பாடம்


ந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறீர்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, February 22, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-22ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.

அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில்
ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.


அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது. Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
நன்றி: விகடன்

Thursday, February 18, 2010

என்னையே ஏன் சோதிக்கிறாய்?மெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.

அதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். “கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை”

ஆர்தர் அஷே பதில் எழுதினார். “உலகமெங்கும் ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஐம்பது லட்சம் குழந்தைகள் டென்னிஸை முறைப்படி ஆடக் கற்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் திறமை பெறுகிறார்கள். ஐம்பதாயிரம் பேர் களத்திற்கு வருகிறார்கள். ஐந்தாயிரம் பேர் க்ராண்ட் ஸ்லாம் அளவை எட்டுகிறார்கள். ஐம்பது பேர் விம்பில்டன் வரை வருகிறார்கள். நான்கு பேர் அரையிறுதி ஆட்டம் வரையும் இருவர் இறுதி ஆட்டம் வரையும் வருகிறார்கள். அதுவரை வந்து நான் அதிலும் வென்று விம்பில்டன் கோப்பையை என் கையில் ஏந்தி நின்ற போது “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்கவில்லை. இன்று இந்தக் கொடிய நோயின் வலியில் துடிக்கும் இந்த நேரத்தில் “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்பது நியாயமாகாது”

டென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை விளையாட்டிலும் அவர் அடைந்திருந்த தேர்ச்சி நம்மை வியக்க வைக்கிறதல்லவா? இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்?

இதே கருத்தை கம்ப இராமாயணத்திலும் ஓரிடத்தில் இராமன் வாயால் நாம் கேட்கிறோம். காட்டிற்குச் செல்லும் இராமனுடன் காடு வரை வந்த சுமந்திரன் என்ற அமைச்சர் இராமனின் அந்த நிலைக்கு வருத்தப்படும் போது இராமன் சொல்கிறான். “இன்பம் வந்தால் இனிமையானது என்னும் போது துன்பம் வந்தால் மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?”

(இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?)

இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தை ஏற்றுக் கொள்பவன் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் போலவே வாழ்க்கையிலும் இன்பத்தை மட்டுமே வேண்டுதலும் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராத ஆசை.

உலகிற்கு வரும் போது எதையும் நாம் எடுத்து வரவில்லை. பெற்றதெல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது. உலகத்தை விட்டுச் செல்லும் போது அவை அனைத்தையும் விட்டே செல்ல வேண்டி இருக்கிறது. சில சமயம் நாம் இங்கு இருக்கும் போதே சிலவற்றை இழக்க நேரிடுகிறது. விதி பலவந்தமாய் நம்மிடம் இருந்து சிலவற்றைப் பறித்துக் கொள்கிறது. கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொல்வது போல “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா?”

ஆர்தர் அஷெ கூறுவது போல நமக்கு நன்மைகள் வந்து குவிகிற போது யாரும் “எனக்கு மட்டும் இத்தனை தந்தாயே ஏன்” என்று கேட்பதில்லை. பெற்ற நன்மைகளுக்கு நாம் நன்றி கூடத் தெரிவிப்பதில்லை. நன்மைகளைப் பெற்றது நமது சாமர்த்தியத்தால் என்று பெருமைப்படுகிறோம். அப்படி நன்மைகளைப் பெறுவது இயல்பே என்பது போல் நடந்து கொள்கிறோம். ஆனால் தீமைகள் நம் வாழ்க்கையில் நடந்து விட்டாலோ பழி போட ஆட்களைத் தேடுகிறோம். கடவுளிடம் “என்னையே ஏன் சோதிக்கிறாய்?” என்று கேட்கிறோம். ஏதோ உலகில் கஷ்டப்படும் ஒரே மனிதர் நாம் தான் என்பது போல் நடந்து கொள்கிறோம்.

ஆர்தர் அஷெ போல் கடுமையான சூழ்நிலைகளிலும் உண்மையை உணர்ந்து தெளிகிற மனப்பக்குவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும் மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவற்றின் கடுமைகளை நாம் மிகவும் குறைத்துக் கொள்கிறோம். இனி என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.

அந்த மனமாற்றமும் பக்குவமும் அடைவது ஒரு நாளில் அடையக்கூடியது அல்ல. முதலில் மாற்ற முடியாத சிறிய அசௌகரியங்களை முகம் சுளிக்காமலும், முணுமுணுக்காமலும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இந்த சிறிய அசௌகரியங்களால் குடிமுழுகி விடப் போவதில்லை என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த அசௌகரியங்களை உங்களுக்கு சவாலாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொள்ளும் போது பொறுத்துக் கொள்ளுதல் வெற்றி என்று ஆகிவிடுவதால் பொறுத்துக் கொள்ளுதல் எளிதாகிறது. அப்படியே படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நல்லவைகளையே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே என்றாலும் தீயவைகளும் வரக்கூடும் என்பதை உணர்ந்திருங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இது இயற்கையான விதி தான். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். வந்ததை ஏற்றுக் கொண்டு இதை எப்படிக் குறைக்கலாம், அல்லது நீக்கலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். அது நீக்கவோ, குறைக்கவோ முடியாததாக இருக்குமானாலும் அந்த விதியை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றிருக்கும் எத்தனையோ நன்மைகளை எண்ணிப் பாருங்கள். அத்தனை நன்மைகளுக்கு இடையில் இது போன்ற ஓரிரு தவிர்க்க முடியாத தீமைகள் வருவது இயல்பே என்று சமாதானமடையுங்கள்.

இது போன்ற சிந்தனைகள் பலப்படும் போது, உண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Monday, February 15, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-21
ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

”அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.”

இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.

சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.

சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.

நாசா(NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது. அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.

அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.

ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.

எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

-என்.கணேசன்
நன்றி:விகடன்

Wednesday, February 10, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-20

துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது. உதாரணத்திற்கு 1912ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். “கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது”.


அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர். ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.

1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப் போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.

(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)

லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப் பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.

1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man. என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.

முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.

அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது” என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.

எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு “உண்மையில் இப்படி இருக்க முடியுமா?” என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?


மேலும் பயணிப்போம்....

- என்.கணேசன்
நன்றி: விகடன்

Friday, February 5, 2010

வாலியிடம் பேச்சிழந்த இராமன்
கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.

வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.

தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்

(“தம்பிகளை விட தனக்கு உயிர் வேறு இல்லை என்கிற அளவு பாசம் வைத்துள்ள அருட்பெருங்கடலான இராமன் நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் அம்பை எய்துவானா?” என்று கேட்கிறான்).

அந்த அளவு வைத்த நம்பிக்கை பொய்த்த போது, இராமன் மறைந்திருந்து அம்பைத் தொடுத்த போது, அவனுக்கு இராமன் மீது வந்த கோபம் இயல்பானது தானே. தம்பி மனைவியை அபகரித்தது குற்றம் என்ற வாதம் அவனிடம் எடுபடவில்லை. மனித தர்மத்தை விலங்குகள் எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றவன் விட்ட சொற்கணைகள் மிகவும் கூர்மையானவை.

வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ.


(இது வீரம் அல்ல; விதி அல்ல; தர்மம் அல்ல; உன் மண்ணுக்கு நான் பாரம் அல்ல; உனக்கு நான் பகைவனும் அல்ல; அப்படியிருக்கையில் பண்பில்லாமல், இரக்கமில்லாமல் ஏன் இப்படிச் செய்தாய்?)

வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்.

(கொடுத்த வாக்கையும் மரபையும் காத்து உயிர் விட்ட தூயவன் தசரதனின் மைந்தனே! நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா?)

இப்படியெல்லாம் கேட்ட வாலிக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பனின் இராமன் ஊமையாக நின்றான். வால்மீகியின் இராமன் வாலிக்குப் பதில் சொல்கிறான். “ஆம் நான் அப்படித் தான் சேய்தேன். அதில் என்ன தவறு? நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும்?”

ஆனால் கம்பனின் இராமன் உயர் பண்பின் சிகரம். வாலியின் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவன் போல அவன் அப்படி எல்லாம் பேசவில்லை. எதிரில் நின்று போரிடுபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடும் வரத்தை வாலி பெற்றிருந்ததால் தான் மறைந்து நின்று அம்பெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இராமனுக்கு இருந்தது. அதையும் சொல்லி வாதம் செய்யவில்லை கம்பனின் வீரம் மிகுந்த இராமன். கம்பனில் இலக்குவன் தான் வாலிக்கு எல்லா பதிலையும் சொல்கிறான். இராமனுடைய தர்மசங்கடமான மௌனம் இறந்து கொண்டிருந்த வாலிக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.

ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை?


(உன் உயிரை, ஜனகன் பெற்ற அன்னத்தை, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு வந்த தேவியை இழந்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பினால் தான் இப்படிச் செய்தாய் போலும்)

வசை பாடிய வாலி இராமன் இறைவன் என்பதை மரணத்தருவாயில் உணர்ந்து எல்லாமே நீ தான் என்று துதிக்கவும் செய்கிறான்.

மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!தன்னைத் தொழுது இறந்த வாலி இராமன் மனதில் உறுத்தலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியின் மகன் அங்கதனிடம் பொன்னால் செய்த உடை வாளைத் தந்ததைக் கம்பன் இப்படிக் கூறுகிறான்.

தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி “நீ இது பொறுத்தி’ என்றான்.
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்


”நீ இது பொறுத்தி” என்று இராமன் சொல்வது பல பட்டிமன்றங்களில் காரசாரமான விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது. “நீ இதைப் பெற்றுக் கொள்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று சிலரும், வாலியிடம் கேட்காத மன்னிப்பை அங்கதனிடம் கேட்கும் விதமாக “நீ இதைப் பொறுத்துக் கொள்” என்று இரட்டை அர்த்தத்தில் கூறுவதாகச் சிலரும் கூறுகிறார்கள்.

இரண்டாவது விதமாகவே இராமன் கூறியிருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மேலே சொன்ன பாடலில் மூன்றாவது அடியைக் காரணம் காட்டுகிறார்கள். அப்படிச் சொன்னவுடன் ஏழு உலகங்களும் வாழ்த்தின என்றால் அது வெறும் வாளைத் தந்த செய்கைக்காக இருக்காது, இராமன் தன் செய்கைக்காக வருந்தி அந்த சொற்களைச் சொல்லியதாலேயே அவன் பெருந்தன்மைக்கு மெச்சியே ஏழு உலகங்களும் வாழ்த்தி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

(கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடன் தவறாக அம்பை எய்ததால் கிருஷ்ணர் உயிரை விட நேர்ந்தது. அவ்வேடன் துக்கத்துடன் கிருஷ்ணரிடம் மன்னிப்பைக் கோரிய போது கிருஷ்ணர் “இது உன் பிழை அல்ல. இது நான் சென்ற அவதாரத்தில் சம்பாதித்தது” என்று கூறியதாகச் சொல்வார்கள்.)

வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Monday, February 1, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-19

மெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர். (விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா?)

பல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.
1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர்.


அவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.

தொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.

பெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.

மேலும் பயணிப்போம்...

-என்.கணேசன்

நன்றி: விகடன்