சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 29, 2014

பாவ மன்னிப்பு எவ்வளவு தூரம் சத்தியம்?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி...ஸ்ரீமதி வெங்கட்: நம்மிடம் எந்த கர்ம வினையும் இல்லை எனும் போது, மனிதனுக்கு மறு பிறவி தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டா?


நான்: மறுபிறவியைத் தேர்ந்தெடுப்பது அவரவர் கர்மவினைகளே. கர்மவினைகள் தீரும் போது பிறவி எடுக்க வேண்டிய அவசியமும் முடிந்து விடுகிறது.


கார்த்திகா: உங்களுடைய மிகப் பெரிய பலம் எதுன்னு சொல்வீங்க?? உங்களோட Co-Workers உங்களோட எழுத்துக்கள் அல்லது புத்தகம் பற்றி எதாவது கருத்து சொல்லி இருக்காங்களா... ??


நான்:
உள்ளதை, விருப்பு வெறுப்பைத் தாண்டி, உள்ளபடியே என்னால் பார்க்க முடிவதே என் பெரிய பலம் என்று நினைக்கிறேன். என் தவறுகளையும், பலவீனங்களையும் என்னால் மாற்றிக் கொள்ள சிரமம் இருந்த காலத்திலும் அவற்றை கண்டு கொள்ள மறுத்ததோ, காரணங்கள் கண்டுபிடித்து அவை இயல்பே என்று என்னை ஏமாற்றிக் கொள்ள நினைத்ததோ இல்லை. அதனால் தவறுகளின் போதும், பலவீனங்களின் போதும் உள்ளே ஒரு குரல் அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கும். அந்தக் குரலை மட்டுப்படுத்த மாட்டேன். நாளாவட்டத்தில் அந்தக் குரலின் நாராசம் தாங்க முடியாமல் என் குறைபாடுகள் குறைந்திருக்கின்றன.


என் கூட வேலை பார்ப்பவர்களுக்கு என் ஆங்கில எழுத்துகள் மிகப் பழக்கமானவை. கிட்டத்தட்ட 25 வருடங்களாக எங்கள் வங்கி சிற்றிதழில் எழுதி வந்திருக்கிறேன். தமிழ் அறியாதவர்களுக்கு அவை மிகவும் பிடித்தமானவை. பல இடங்களில் இருந்து போனில் கூட பாராட்டுக்கள் வரும். தமிழ் அறிந்த அலுவலக நண்பர்கள் தமிழில் நான் எழுதிய கதைகளையும், புத்தகங்களையும் ரசித்துப் பாராட்டி உள்ளார்கள்.


கார்த்திகா: நீங்களே உங்களை ஒரு வெற்றியாளராக உணர்ந்தது எப்போது??


நான்: நான் இதற்கு முன்பே பதில் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். என்னை நான் இன்னும் முழு வெற்றியாளனாக உணரவில்லை. சில முயற்சிகளில் திருப்தியும் நிறைவும் அடைந்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இனியும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.


கார்த்திகா:
உங்களுக்கு பிடித்த Magazines என்னென்ன?? உங்களை மிகவும் கவர்ந்த மீடியா Person யார்??


நான்: பிடித்தது என்று சொல்லும்படியான பத்திரிக்கைகள் ஒன்றும் இல்லை. பிடித்த மீடியா person என சோ ராமசாமி அவர்களைச் சொல்லலாம்.


கார்த்திகா: காலையில் எழுந்ததும் நீங்கள் நினைக்கற முதல் விஷயம் என்ன??


நான்: இன்னது தான் நினைப்பேன் என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு மனம் முழுதும் என் வசமில்லை. ஆனால் பெரும்பாலும் முக்கியமாய் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள் நினைவுக்கு வரும்.


கார்த்திகா: Turns U ON/OFF என்று ஒண்ணு இருக்கும்ல.. அப்படி உங்களை உற்சாகப் படுத்தும் ஒரு விஷயம் என்ன?? சோர்வடையச் செய்யும் விஷயம் என்ன??


நான்: என்னை உற்சாகப்படுத்தும் விஷயம் பாசிடிவ் மனிதர்கள், பாசிடிவ் புத்தகங்கள். சோர்வடையச் செய்யும் விஷயம் செய்தே ஆக வேண்டிய பிடிக்காத வேலைகள்.


கார்த்திகா: நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது??


நான்: நான் மட்டுமல்ல எல்லோருமே அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை “நான்” தான்.


கார்த்திகா: So Nice Sir.. "நான்" - அட.. ஆமாம் ல... இது இல்லாம என்னோட நாள் போகாது அப்படின்னு நீங்க சொல்ற விஷயம் எது??

நான்: இப்போதைக்கு கம்ப்யூட்டர் இண்டர்நெட் இல்லாமல் ஒரு நாளும் போவதில்லை.


கார்த்திகா: இப்போ இருக்கற Media ல என்ன changes வரணும் ன்னு நீங்க நினைக்கறீங்க??

நான்:
இப்போது மீடியாவின் நோக்கமும், போக்கும் பொழுது போக்கு அம்சங்களை நோக்கித் தான் அதிகம் இருக்கின்றது. பல நேரங்களில் அது தவறான எண்ணப் போக்கை மனித மனங்களில் விதைப்பதாக உள்ளது. தவறுகளை விதைப்பது எளிது. ஆனால் அறுவடை பயங்கரமானது. அதனால் நல்ல உபயோகமான விஷயங்களை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்வதாக இருப்பது அவசியத் தேவை என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் கெட்ட விஷயங்களையாவது சொல்லாமல் இருக்கலாம்.


ஸ்ரீமதி வெங்கட்: பாவ மன்னிப்பு என்பது எவ்வளவு தூரம் சத்தியம்,அப்போ நம் கர்ம வினை மன்னிக்கப்பட்டு விடுமா?அது தொடராதா?


நான்:
பாவமன்னிப்பு என்பது தன் பாவத்திற்காக மனிதன் மனம் மிக வருந்தி, உருகி மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்மையாகக் கிடைக்கக் கூடியது. அது மனிதன் திருந்த ஒரு வாய்ப்பு. அப்படி உள் மனம் உறுத்தக் கேட்கும் போது அவன் துடிப்பதே அவன் பாவத்திற்கான தண்டனை. அதனால் கர்மவினை அந்த தண்டனையோடு முடிவடைகிறது. மேல் போக்காக, மனம் மாறாமல் இது நடக்குமானால் பாவமன்னிப்பு கிடைக்காது. தன் செயலுக்கான தண்டனையை அவன் பெற்றே ஆக வேண்டும்.


ஸ்ரீமதி வெங்கட்: இன்றைக்கு சயின்ஸ் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் திருப்பதி தோன்றியதை கண்டு பிடித்து இருகின்றனர். ஆனால் கொங்கணர் 1 நூற்றாண்றை சேர்ந்தவர் தானே வள்ளுவர் மனைவி கொக்கு என்ன நினைத்தாயோ கொங்கனா?என்று கேட்பார்?இவர் எப்படி திருப்பதியில் ஜீவ சமாதி அடைந்து இருக்க முடியும்?


கொங்கணர் பற்றிச் சொன்ன இதே ‘கொக்கென்று நினைத்தாயோ?’ என்று கேள்வியை கௌசிகன் என்ற முனிவனைப் பார்த்து ஒரு பதிவிரதை கேட்டு அவர் அவளால் தர்மவியாதன் என்ற கசாப்புக்கடைக்காரனிடம் அனுப்பப்பட்டு அங்கு ஞான உபதேசம் பெற்றார் என்று மகாபாரதத்தில் வருகிறது.


மற்ற விஷயங்களில் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருந்த நம் முன்னோர்கள் வரலாற்றுக் குறிப்புகளில், கால அளவைப் பதிவு செய்வதில், அந்த அளவு சரியாக இருக்கவில்லை. (கல்ஹணரின் ராஜதரங்கிணி தான் ஓரளவு சரியான வரலாற்றுப் பதிவுகளை சரியாகச் செய்த முதல் நூல் என உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கிறார்கள். அது 12 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரத்து வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.)


அதனால் தகவல் பிழைகள் நீங்கள் சொன்னது போலவே இருக்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் சொல்லப்பட்ட செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சிகளின் காலப்பிழையை புறந்தள்ளி விடலாம்.


கார்த்திகா: எளிமையாகவும் அதே சமயம் எல்லார்க்கும் புரியும் படி தெளிவாகச் சொல்லிட்டீங்க Sir.. //அப்படி உள் மனம் உறுத்தக் கேட்கும் போது அவன் துடிப்பதே அவன் பாவத்திற்கான தண்டனை.// Fantastic Sir!

இப்பொழுது எந்த புத்தகம் வாசிக்கிறீர்கள்??

இக்கேள்வியின் பதிலைத் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கோம் Sir..

நான்: Dan Millman எழுதிய The Life You Were Born to Live (A Guide to Finding Your Life Purpose) படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய Way of the Peaceful Warrior எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். இந்தப் புத்தகமும் நன்றாக உள்ளது.

கார்த்திகா: உங்களுடைய பலம் பற்றி ஏற்கனவே சொல்லிடீங்க.. அதே போல உங்க Plus - Minus இது ன்னு எதைச் சொல்லுவீங்க??

நான்: Plus நேர்மை, பல துறைகளில் ஆர்வம், விடாமுயற்சி, சந்தோஷமான மனம்

Minus பல விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாதது, உடல் உழைப்பு, அலைச்சல் உள்ள செயல்களில் சோம்பல், தேவைப்படும் போது கூட அடுத்தவர் மனதை நோகடிக்கிற மாதிரி பேச முடியாதது.


கார்த்திகா: Thanks & Sorry - இதை சொல்லணும் ன்னு நீங்க நினைக்கற Person யாராது இருக்காங்களா??


நான்: Thanks & Sorry – நியாயமாய் இந்த வார்த்தைகளை நான் என் மனைவியிடம் தான் சொல்ல நினைக்கிறேன். என் பல சாதனைகள் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய நேரத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.


கார்த்திகா: இதுவரை நாங்க கேட்ட கேள்விகளுக்கு அழகாகவும் அருமையாகவும் பதில் சொன்னீங்க.. அதில் உங்களுக்குப் பிடிச்ச - நீங்க விரும்பி பதிலளித்த கேள்வி எது?? இப்படி கூடவா கேட்பீங்க ன்னு நினைச்ச கேள்வி எது??


நான்: எல்லாக் கேள்விகளுமே நான் விரும்பி பதில் அளித்த கேள்விகள் தான். வித்தியாசமான எதிர்பாராத கேள்விகள் எனக்குப் புதிதல்ல. அதனால் இப்படிக் கூடவா கேட்பீங்கன்னு நான் எதையும் நினைக்கவில்லை. ஆனால் காலையில் எழுந்தவுடன் என்ன நினைப்பீங்க என்ற கேள்வி சிறிது வேடிக்கையாகப் பட்டது.


கார்த்திகா: இதோ Show முடிவுக்கு வந்துட்டோம்.. அப்படியே நம்ம Session ai Rate பண்ணுங்க sir..

Great!
Good!
OK!
Mokkai!


நான்: இந்த ஷோவை Good! என்றே ரேட் செய்ய வேண்டும். சில கேள்விகள் என் கடந்த வாழ்க்கையை ஒரு பரிசீலனை செய்ய உதவி இருக்கின்றன. கார்த்திகா, உங்களுக்கும் மற்ற பெண்மை டாட் காம் உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எத்தனை கேள்விகளுக்கு என் பதில்கள் திருப்திகரமாய் அமைந்தன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பேட்டி எனக்கு திருப்திகரமாய் இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


கார்த்திகா:
Felt So Honored.. ரொம்ப நன்றி சார். எங்க Show -க்கு வந்ததுக்கு. சின்ன சின்ன கேள்விகளுக்கு கூட ரொம்ப பொறுமையாக, ஆழமாக, தெளிவான பதில் சொன்னீங்க. தகுதியும் திறமையும் இருந்தால் வெற்றி தானாக தேடி வரும் அப்படிங்கறதுக்கு ஒரு முன்னுதராணம் சார் நீங்க. அதே போல் உங்களிடம் இருந்து நாங்க கத்துகிட்டது பொறுமை, நிதானம், விடாமுயற்சி, தெளிவான சிந்தனை. உங்களோட சில நிமிடங்கள் பேசினாலே போதும் எங்களுக்குள்ள ஏகப்பட்ட நல்ல எண்ணங்கள் வித்தாகிறது.

இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்களும் உங்களோட எழுத்துகளும் மிகப்பெரிய உந்துகோலாக அமையும்ன்னு சொன்னால் அது மிகையல்ல சார்.

எங்களோட பெண்மை Friends இப்ப அடிக்கடி சொல்ற ஒரு விஷயம், நாங்கள் NG Replies திரும்ப திரும்பப் படிச்சிட்டு இருக்கோம்ன்னு தான். எங்களுக்கு தெரியாத புரியாத பலவற்றை உங்கள் எழுத்துகள் மூலமாக ரொம்ப எளிமையாகவும் மனசில பதியும்படியும் சொல்லி இருக்கீங்க. On Behalf our Members, Our Sincerest Thanks to you sir!

உங்களோட எழுத்துக்கள் இன்னும் நிறைய வாசகர்ளை சென்றடையவும், இன்னும் உயர்ந்த நிலை அடையவும் எங்களுடைய வாழ்த்துக்கள் சார்.

Many thanks for taking the time out of your busy schedules to talk with us. We look forward to the Opportunity to do so again.. Wishing you all Success in the forthcoming days.. All the Very Best Sir.

Last but Not the Least, I’d like to thank all our friends for your Support & Encouragement throughout Our show.. And This is an outcome of that Only. Esp Sakthi,You’re the one who is ever-ready to listen to my Annoying ques / wacky ideas, even at such late nights. Many Thanks for your Care & Assistance.. Cheers Dears!

And Sir,
Thanks for being a Part of our Penmai's Celebrity Talk Show.. In honor & Gratefulness of Our guest, We've made a Special gift for you..

Yeah, Here Comes a Cute Marble Ganesha & a Coffee Mug cum Pen Stand With Our logo + Your Name!! Hope you like our gift..
நான்: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், அழகான பரிசிற்கும் மிக்க நன்றி கார்த்திகா. நான் பிள்ளையார் பக்தன். எனக்கு பிள்ளையாரையே பரிசளிக்கத் தோன்றியதற்கும், என் பெயரிட்ட Coffee Mug cum Pen Standக்கும் மீண்டும் நன்றி. நல்ல நினைவுகளுடன் உங்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன். Bye.

- என்.கணேசன்

Monday, May 26, 2014

ஆழ்வார்களின் ஆன்மிகமும், அறிவியலும்!


அறிவார்ந்த ஆன்மிகம் - 39

மகாவிஷ்ணுவின் மகத்தான குணங்களில் மயங்கி அவர் நினைவிலேயே ஆழ்ந்து போனதால் அந்த அடியார்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்பட்டார்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவியாழ்வார் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்கள் உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி பாடிய பாடல்கள் அவை.

நாலாயிர திவ்யபிரபந்தம் வெறும் பக்தி இலக்கியமாக மட்டும் அல்ல. அந்தப் பாடல்களில் பக்தியோடு சமூக நோக்கு உண்டு, மனித நேயம் உண்டு, ஆன்மிக ஞானத்தின் சாராம்சம் உண்டு, ஏன் அறிவியல் கூட உண்டு. அவற்றை சிறிது பார்ப்போம்.

ஆழ்வார்களின் பக்தியிலும் பரந்த கண்ணோட்டம் உண்டு. பொய்கையாழ்வார் பாடிய ஒரு பாடல் இது.

''தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் அப்பேர் - தமருகந்தது
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்'' .-                 

எந்த உருவத்தை விரும்புகிறோமோ அது அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறோமோ அது அவன் பெயர். எந்தவிதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்வீர்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரத்தான் ஆகிய இறைவன்என்று சொல்கிறார் அவர். பக்தி தான் ஆழ்வார்களின் அடித்தள நாதம். உருவமோ, பெயரோ, தன்மைகளோ இல்லாத இறைவன் பக்தர்கள் விரும்புகின்ற உருவத்தில், பெயரில், தன்மைகளில் பொருந்தி விடுகிறான் என்று சொல்கின்ற பரந்துபட்ட நோக்கு அவர்களுடையது.

அதே போல இறைவன் தங்களுக்கு என்ன தந்தாலும் அது நன்மைக்கே என்று எண்ண முடிந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுடையதாக இருந்த்து.
           வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
           மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால் 
           மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ 
           ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே! 

என்று பாடினார் குலசேகராழ்வார். வித்துவக் கோட்டு அம்மானே! மருத்துவர் கத்தியால் அறுத்துச் சூடு போட்டாலும் அவர் மீது வெறுப்பு கொள்ளாத, அன்பு குறையாத நோயாளி போல,  நீ உன் மாயத்தால் நீங்காத துன்பத்தைத் தந்தாலும் உனக்கு அடிமையாய் உன் அருளையே எதிர்பார்த்து இருப்பேன்   என்ன அழகான உதாரணம் பாருங்கள்.

எல்லாம் இறைவனே என்று சொல்லி சரணாகதி அடையும் பக்தி ஆழ்வார்களுடையது. தங்கள் தவறுகளையும் பலவீனங்களையும் ஒத்துக் கொள்வதிலும் நீயே வழிகாட்ட வேண்டும் என்று சொல்வதிலும் அவர்களுக்கு சிறிதும் தயக்கம் இல்லை. நம்மாழ்வார் பாடிய அழகான பாடல் ஒன்றில் இந்த உணர்வு மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

இவையன்றே நல்ல இவையன்றே தீய
இவையென் றிவையறிவ னேலும் இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறைவனே
என்னால் செயற்பால தென்?

அவர் சொல்கிறார். “இவை நல்லது இவை கெட்டது என்று எனக்குத் தெரிகிறது என்றாலும் இவற்றை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே இறைவனே! என்னால் செய்ய முடிந்தது என்ன இருக்கிறது. எல்லாம் நீயே அல்லவா?சஞ்சலங்கள் நிறைந்த வாழ்வில் ஒவ்வொரு பக்தனும் அவ்வப்போது புலம்பும் நிலையே அல்லவா இது?  

நாலாயிர திவ்விய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள், உயர்நிலைகளில் இருப்பவர்கள் மட்டுமே அல்ல. எல்லாக் குலத்தவர்களும் அந்தப் பட்டியலில் இருந்தார்கள். அரசர் முதல் கள்வர் வரை   பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். சாதி வித்தியாசம் பார்க்காமல் இருப்பது வைணவக் கருத்துக்களில் பிரதானமாக இருந்தது.


"பழுதிலா ஒழுகலாற்று பலசதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமின் நீர்”  

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிறார். இழிகுலத்தவர்களேயானால் கூட இறைவனின் அடியார்கள் என்றால் அவர்கள் தொழத் தக்கவர்கள் என்ற கொள்கையில் ஆழ்வார்கள் உறுதியாய் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சாதி, மதப் பிரிவினைகள் பெரிதாக இருந்த காலத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நிலை எடுத்திருந்தது ஆழ்வார்களின் சமத்துவத்திற்கான சமூகப் புரட்சி சிந்தனையே அல்லவா?

இனி ஆழ்வார்களின் அறிவியல் சிந்தனையைப் பார்ப்போம்.  ஆண்டாள் பாடுகிறார்.

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

மழைக் கடவுளே…! எதையும் நீ ஒளிக்காதே.. கடலுக்குள் புகுந்து அதிலிருந்து தண்ணீரை முகர்ந்து, பின் ஆகாயம் ஏறி கண்ணன் உருவம் போல் கறுத்து, அழகிய தோளுடைய பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னல் அடித்து, அவனது சங்கு போல் இடி முழங்கி, அவனது சாரங்கம் (வில்) அம்புகளைப் பொழிவதைப் போல உலகம் அனைத்தும் வாழவும், நாங்கள் மார்கழி நீராடவும் பெய்திடுவாய்…!!!

கடலுக்குள் நீர் முகர்ந்து, பின் மேலே போய் கருமேகமாகி இடி மின்னல் போன்ற பக்க விளைவுகளோடு உலகம் வாழப் பெய்யுமாறு மழையை வேண்டுகிற இந்தப் பாடலில் ஆண்டாள் மழை பொழிவது எப்படி என்கிற விஞ்ஞானத்தை, ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, தெளிவாக அறிந்திருந்தது போல் அல்லவா தோன்றுகிறது?

அதே போல இன்னொரு பாடலில் பொய்கையாழ்வார் இப்படிப் பாடுகிறார்.

என்று கடல் கரைந்தது ? எவ்வுலகம் நீறேற்றது ?
ஒன்றும் உணரேன் நான் அன்று அது
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ
படைத்திடந்து உண்டு உமிழ்ந்த பார்.

இதன் விளக்கம் இது தான். “எப்போது கடலைக் கடைந்தாய்? எப்போது உலகை நீர் கொண்டு நிரப்பினாய்? இது எதுவும் எனக்குத் தெரியாது. அன்றொரு நாள் கடலை அடைத்து பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலே படுத்தும் உறங்குகிறாய். இவ்வுலகைப் படைக்கிறாய்; பெயர்த்தெடுக்கிறாய்; அதை உண்டு உமிழ்கிறாய்.

இதில் அடைத்து உடைத்து என்ற வரிக்கு சக்தியை ஒரு புள்ளியில் அடைத்து வெடிக்கச் செய்து பிரபஞ்சம் உருவாக்கிய Big Bang Theory யின் சாயல் இருப்பதாக சில அறிஞர்கள் வியாக்கியானம் செய்கிறார்கள்.

இப்படி ஆழ்வார்களின் அழகான பாசுரங்களில் பக்தி மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் சமூக பிரக்ஞையும் மிக உயர்ந்த அளவில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறதல்லவா?

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 03.12.2013

Saturday, May 24, 2014

காஷ்மீரின் சில காமிரா பதிவுகள்! - 2

காஷ்மீரி உடையில்
குல்மார்கின் பனிக்காட்சிஎங்கெங்கும் பனிமயம் 


நான் என் மகளுடனும், தம்பி, அவன் மகனுடன்
அனந்த்நாக் அருகே உள்ள பாழடைந்த அவந்திபுரம் விஷ்ணு கோயில் தென்னாட்டுக் கோயிலை நினைவுபடுத்துகிறது.இங்கு சிற்பம் சிதைந்தாலும் ஸ்ரீரங்கநாதரின் புன்னகை சிதையவில்லைஎன் குடும்பமும் என் தம்பி குடும்பமும் குதிரைகளில் ...மொகல் கார்டனில் மகள்களுடன்’பேதாப் வேலி’யில் சகோதரனுடன்


காஷ்மீரை பூலோக சொர்க்கம் என்கிறார்கள். மறுக்க முடியவில்லை.

- என்.கணேசன்

Thursday, May 22, 2014

நம் பாவ புண்ணியம் நம் பிள்ளைகளுக்கா?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி

ஸ்ரீமதி வெங்கட்: ஒரு பழ மொழி உண்டு மாதா பிதா செய்தது மக்களுக்கு,சொத்து மட்டும் இல்லை பாவ புண்ணியமும் தான் என்றால் என் கர்ம வினை தீர்க்க நான் ஏன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்? என் மகளுக்கு மகனுக்கு தானே போய் சேர வேண்டும்.இதை என்னிடம் ஒரு mnc வேலை பார்க்கும் ஒருவர் கேட்டார்.. நீங்கள் இதற்கு என்ன சொல்வீர்கள்?


நான்: மாதா பிதா செய்தது மக்களுக்கு என்று சொல்வதில் உண்மை இல்லை. அவரவர் செய்தது அவரவர்க்கு மட்டுமே. பண்ணின பாவ புண்ணியக் கணக்கை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அவரவரே செலவு செய்து தீர்க்க வேண்டும். மாதா பிதா செய்ததற்கு ஏற்றாற் போல் பிள்ளைகள் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இவர்கள் கணக்கை அவர்கள் ஏற்பார்கள் என்பது தவறான அபிப்பிராயம். வால்மீகி திருடனாக இருந்த போது தன் திருட்டுப் பாவங்களையும் தன் குடும்பம் ஏற்கும் என்று நம்பியிருந்து, நாரதர் அவரிடம் “உன் குடும்பத்தினர் ஏற்பார்களா என்று கேட்டுப் பார்” என்று சொன்ன பிறகு போய் மனைவி மக்களிடம் கேட்டாராம். அவர்கள் அதில் தங்களுக்குப் பங்கில்லை என்று கறாராகக் கூற வால்மீகி வாழ்க்கை திசை திரும்பியது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.


ப்ரியா: I have a colleague who is a Maratti. We both share similar interest in reading. So I was just sharing my thoughts with her on "Paraman Ragasiyam". I quoted your lines about that comparison between cooking vessel and our own finger. Just because the vessel bears the brunt of fire, that doesn't make it powerful/greater(Sorry that I'm not quoting your exact words here). That was a fantastic comparison/narration. Hearing that she felt quite intrigued and asked me whether this book will be published/translated in other languages such as Hindi/English? So do you have any plans like that?


நான்:
பரம(ன்) இரகசியம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றும், அப்படி மொழி பெயர்க்கப்பட்டால் Best seller ஆக கண்டிப்பாக இருக்கும் என்று சில வாசகர்கள் என்னிடம் சொன்னார்கள். அதிலும் அர்ஜுன் என்ற ஒரு வாசகரும், சீதாலட்சுமி என்ற மூதாட்டியும் பல முறை தெரிவித்து ஆசைப்பட்டவர்கள். சீதாலட்சுமி அம்மாள் முதலில் இந்திய மொழிகளில் ஒன்றிற்கு பரம(ன்) இரகசியம் மொழி பெயர்ப்பு ஆனாலும் பரவாயில்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரம் வந்தால் மொழிபெயர்ப்பாகலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் என் சில வாசகர்களைப் போலவே அது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியடையும் தருணமாகவே இருக்கும்.


கார்த்திகா:
என்னைக் கவர்ந்த Quotes ஏராளம். இப்போது உடனடியாக நினைவுக்கு வருபவை இவை-


* தீதும் நன்றும் பிறர் தர வாரா. - புறநானூறு


* உன் விவாதமும், பேச்சும் அறிவாளிகளோடு இருக்கட்டும். அதை விட்டு விட்டு முட்டாள்களோடு நீ விவாதம் செய்தால் முடிவில் பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு யார் முட்டாள் என்பது தெரியாமல் போய் விடும். – பெர்னாட்ஷா

 * Envy is ignorance. Imitation is suicide. - Emerson


* I am grateful to all those people who said “no”. It Is because of them I did it myself. –
Anonymous


* The happiest people are rarely the richest, or the most beautiful or even the most talented. Happy people do not depend on excitement and fun supplied by externals, they enjoy the fundamental, often very simple, things of life.Jane Canfield

சித்ரா: "நீங்கள் எழுதிய அமானுஷ்யன்..பரம(ன்) ரகசியம் இரண்டிலும்...அக்க்ஷய்......ஈஸ்வர் ..இருவரும் அசாதாரண திறமை படைத்தவர்கள்......

கதைக்களமும் வேறுமாதிரியானவை..............

அப்படி இருக்கும்பொழுது.....இவ்விருகதைகளிலும் ஒரு சிறிய...யதார்த்தமான.....காதல்..பாசம்..புரிதல் கலந்த..ஒரு பகுதி வருகிறது.......

என்னுடைய கேள்வி.....கதைகளத்திற்கு சிந்திக்கும் பொழுது.......இரண்டின் பாதைகளும்...வேறு வேறு...சிந்தனைகளிலும் கண்டிப்பாக மாற்றம் தேவைபட்டிருக்கும் ............

கதை படித்த எங்களுக்கே சில விசயங்களில் இருந்து வெளியில் வருவதற்கு நாட்கள் ஆகின்றன...நீங்கள் எப்படி நினைவுகளை....மாற்றி எழுதுகிறீர்கள்......

காதலும்....அதிகம் இல்லையென்றாலும் அப்பகுதியும் அதன் சிறப்புடன்..அழகிய பாடல் வரிகளுடன்........செல்கின்றது..


அதே சமயத்தில் ஆன்மிகம்......அமானுஷ்யம் ....அதீத சக்தி.....அனைத்தும் ஒரு நேர்கோட்டில் எப்படி உங்களால் முடிகிறது...

அதன் தாக்கம் இரண்டிலும் ஊடுருவவதில்லையா....


நான்: காதல், பாசம், ஆன்மிகம், ஆழ்மனசக்தி, அமானுஷ்யம் இவை எல்லாமே நான் ஆழமாய் உணரும் விஷயங்கள். ஒரே மனிதன் காதலனாய், மகனாய், பக்தனாய், புதியன கற்பதில் மாணவனாய், வித்தியாச அனுபவங்களை அனுபவிப்பவனாய் இருக்கிறானல்லவா. அந்தந்த இடத்தில் அதற்குத் தகுந்த மாதிரி மாறிவிடுவதை நாம் தினமும் பார்க்க முடிகிறதல்லவா? அப்படித் தான் எழுதுவதும். அந்தந்த அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் போது அதை ஆழமாய் உணர்கிற போது அந்தந்த பகுதிகள் சிறப்பாக வந்துவிடும்.


ப்ரியா: Religion-Spiritualism => Are they always connected/inter-linked??


நான்:
Religion-Spiritualism இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்க முடிந்தது என்றாலும், எப்போதுமே சார்ந்தது என்று சொல்லி விட முடியாது. மதங்களில் ஆழமாக ஈடுபடுபவர்களில் சிலர் ஆன்மிகத்தில் பூஜ்ஜியமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதே போல் ஆன்மிக ஞானம் உள்ளவர்கள் மதங்களிலும், அதன் சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.


கார்த்திகா: உங்களோட எழுத்தில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் ஏது?? உங்களோட எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களுக்கு நீங்கள் உணர்த்த நினைக்கும் விஷயம் எது..??

நான்: என் எழுத்தில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரத்தியேக விஷயத்தையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எழுதுகின்ற கதை அல்லது கட்டுரைக்குத் தகுந்தபடி ஏதோ ஒரு நல்ல செய்தி வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன்.


ஸ்ரீமதி வெங்கட்: முக்திக்கு வழி ஞானமா? பக்தியா?எனக்கு தெரிந்த எல்லோரும் ஞானம் தேவை என்கின்றனர். ஆனால் கண்ணப்ப நாயனாருக்கு இருந்தது ஞானம் என்பதை விட ஒருவித முரட்டு பக்தி மட்டுமே. மேலும் மீரா ஆண்டாள் வெறும் பக்தி மூலம் முக்தி அடைந்தவர்கள். பிறகு ஞானம் எதற்கு? முக்திக்கு வழி ஞானம் என்று சொல்வதின் பொருள் என்ன?


நான்: முக்திக்கு கர்மம், பக்தி, ஞானம் என்று மூன்று வழிகள் உண்டு. அவற்றில் இந்த வழி உயர்ந்தது, அந்த வழி தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. எந்த வழிப் பயணம் நமக்கு ஏற்றது, நம் இயல்பிற்குப் பொருத்தமானது என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எதிலும் முழுமையாகப் போக வேண்டும். இடையிலேயே இளைப்பாறி விட்டால் முக்தி உட்பட நாம் எந்த இலக்கையும் அடைய முடியாது. இலக்கை அடைந்த பின் இறைவன் நீ ஏன் வேறு வழியில் வரவில்லை என்று கேட்க மாட்டான்.


கார்த்திகா: கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் இதை பண்ண மாட்டேன்னு நீங்க சொல்ற ஒரு விஷயம் எது??

நான்: எத்தனை கோடி கொடுத்தாலும் ஈனத்தனம் என்று நான் நினைக்கிற, தரம் தாழ்ந்த, செயல்களைச் செய்ய மாட்டேன். பணம் கண்ணியத்திற்கு ஈடாகாது.(தொடரும்)


Wednesday, May 21, 2014

குருநானக் உபதேசித்த ஆன்மிகம்!


அறிவார்ந்த ஆன்மிகம்-38

சமூகத்தில் ஆன்மிகம் மலிந்து போகும் போதெல்லாம் மகான்கள் பிறந்து வழி காட்டுகிறார்கள். மனித குலத்தைத் திருத்தி நல்வழிப்பாதைக்குத் திருப்புகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தில் (இன்றைய பாகிஸ்தானில்) லாகூருக்கு அருகே அப்படி அவதரித்தவர் தான் குருநானக் என்ற மகான்.

இளமையிலேயே அறநெறியில் மனிதன் வாழ்வதே அவன் இறை மார்க்கத்தில் வாழ்ந்து வருகிறான் என்பதற்கு அடையாளம் என்று நம்பியவர் அவர். மோசடிகளில் எல்லாம் மிகப்பெரிய மோசடி கடவுள் பெயரால் செய்யப்படும் மோசடி என்ற ஆணித்தரமான கருத்து குருநானக்கிற்கு உண்டு. இறைவன் பெருமை உணர்ந்தவர்கள் அறநெறியில் வாழவேண்டுமே அல்லாது ஏமாற்றிப் பிழைக்கலாகாது என்பதை எல்லா விதங்களிலும் உபதேசித்து வந்தார் குரு நானக். அவர் அதை உபதேசித்த விதங்கள் வித்தியாசமானவை.


 ஒருமுறை கயிலாயம், மானசரோவர் வழியாக கர்தார்பூர் என்ற நகருக்கு வந்தார் குருநானக். அங்கே ஒரு போலிச் சாமியார் ஒரு மேசை முன் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல் நடித்து வந்தான். அடிக்கடி கண்திறந்து மேசைமேல் விழும் நாணயங்களை மட்டும் கவனமாக எடுத்து வைத்துக் கொள்வான்! காசை எடுத்து வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அவனுடைய போலித் தியானம் கலையும்.

இதைப் பார்த்த குருநானக் ஒருநாள் அந்த போலிச் சாமியார் கண்மூடி இருந்த நேரத்தில் மேசையையே அப்புறப்படுத்தி விட்டார். கண்திறந்த போலிச் சாமியார், ""என் மேசை எங்கே, என் காசு எங்கே?'' என்று அலறினான்.

""புண்ணியம் செய்த மேசை அல்லவா அது! தன்மேல் விழும் காசை உன்னைப்போல் அது லட்சியம் செய்ததே கிடையாது. எனவே நீ மேலுலகம் போவதற்குள் காசில் ஆசை இல்லாத அந்த மேசை மேலுலகம் போய் விட்டது!'' என்றார் குருநானக். அவன் வெட்கித் தலைகுனிந்தான். "ஆன்மிகம் பணம் சம்பாதிப் பதற்கான வழி அல்ல. அது ஆண்டவனின்  அருள் பெறுவதற்கான மார்க்கம்!'' என்று  அவனுக்கு அறிவுறுத்தி திருத்தினார் குருநானக். 


குருநானக்கின் ஆன்மிகம் உலகியல் நெறிப்பட்டது. எல்லாரும் அவரவர் கடமையைச் செய்வது மிக முக்கியம் என்று சலிக்காமல் கூறுவார். ஒருநாள் அவரது அறவுரைகளைக் கேட்க ஒருவன் வந்தான். அந்த நேரத்தில் அவனது நண்பன் ஒருவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான். "நான் தங்கள் உபதேசத்தைக் கேட்பது நல்லதா? என் நண்பனுக்குப் பணிவிடை செய்வது நல்லதா?''  என்று அவன் கேட்டான் "நோயுற்றிருக்கும் உன் நண்பனுக்குப் பணி விடை செய். அதுவே நீ கடவுளின் அருளைப் பெறச் செய்யும் நல்ல செயல் ' என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் குருநானக். 


""இயன்றவரை எல்லாருக்கும் நல்லதே செய்யுங்கள். எதிரியைக்கூட மன்னியுங்கள். மனத்தாலும் பிறருக்குக் கெடுதல் நினையாதீர்கள்! அன்பே எல்லா மதங்களையும்விட உயர்வான மதம்'' என்றெல்லாம் அவர் சொன்ன உயர்ந்த கருத்துகள் மக்களைக் கவர்ந்தன. 

அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்ற போது, அந்த ஊர் கவர்னரான மாக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். குருநானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு என்பவர் வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். பெரிய விருந்தே அளிக்க உத்தேசித்திருந்த தன்னைப் புறக்கணித்து விட்டு ஏழைத் தச்சன் வீட்டில் தந்த எளிய ரொட்டியையே உண்ட குருநானக் மீது செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது.  ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டு நேரில் சென்று அவன் சீறினான். மக்கள் கவர்னரின் சீற்றத்தை குருநானக் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

”உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்! என்றார் குருநானக். உடனே அவன் தன் வீட்டில் இருந்து  ரெட்டித் துண்டை வரவழைத்தான். அந்த ரொட்டித் துண்டை கையில் எடுத்துப் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிருந்து செக்கச்செவேலென ரத்தம் வழிந்தது. நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம்தான் இது! என்றார் நானக். பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது. கவர்னர் மாக்பாகோ திகைப்படைந்தான். எப்படி சம்பாதிக்க்றோம் என்பது தன் இல்லத்தின் உணவில் கூட பிரதிபலிக்கிறதே என்று புரிந்த அவன் மனம் மாறினான்.. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான். அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்து அதன் படியே வாழ ஆரம்பித்தான்.

ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன் வீட்டுக்குத் தன் சீடர்களுடன் சென்று வாசலில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்ட குருநானக் இனிமையான குரலில் பாடலானார். திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளிவிவரத்தோடு விவரிக்கலாயிற்று! முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போக கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடல் விவரித்தபோது, சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.
மகானே! நான் இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழியை நீங்கள் தான்சொல்ல வேண்டும்! என்று அவன் கதறினான். அவன் பாவங்கள் தொலைய குருநானக் ஒரு வழி சொன்னார்.  அது இதுவரை வேறு எந்த ஞானியும் சொல்லாத புதிய வழி.  யாரையெல்லாம் கொன்றானோ யாரிடமிருந்தெல்லாம் திருடினானோ அவர்களின் வீட்டுக்கெல்லாம் மறுபடி சஜ்ஜன் போய்க் குற்றத்தை ஒப்புக்கொண்டு அங்குள்ளவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே நானக் சொன்ன வழி.

சஜ்ஜன் தான் திருடிய வீடுகளையும் கொலைசெய்த வீடுகளையும் தேடிக் கண்டு பிடித்தான். அங்குபோய் அவன் கண்ணீர் விட்டு,  உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்ட போது அவனை நையப் புடைத்தவர்களும் உண்டு. கோபத்தில்  எட்டி உதைத்து அவமானப்படுத்தியவர்களும் உண்டு. அவன் பதிலுக்குத் தாக்காமல் கண்ணீரோடு அடி வாங்கிக் கொண்ட விதத்தைப் பார்த்து மக்கள் திகைத்தார்கள். மெல்ல மெல்ல ஆசைகளைக் குறைத்துக் கொண்டு ஒரு துறவிபோல் பின்னர் வாழலானான். குருநானக்கின் பெருமை சஜ்ஜனின் செயல் மூலமாக விறுவிறுவென்று பரவலாயிற்று.

இது போன்ற அவர் வித்தியாசமான அறிவுசார்ந்த அணுகுமுறையால் ஒரு அப்பழுக்கற்ற ஓர் உண்மையான மகான் தங்களிடையே வாழ்கிறார் என்பதை உணர்ந்து மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்

இந்து,  இஸ்லாம்,  பௌத்தம்,  சமணம் ஆகிய எல்லா மதத்தவரின் புனிதத் தலங்களுக்கும் குருநானக் பயணம் செய்தார். அனைத்து இடங்களிலும் இறைவன் சத்திய கர்த்தர் என்ற நினைவுடன் வணங்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அனைத்து மதத்தினர்களையும் அவர் ஒன்று சேர்க்கவும், அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் முயன்றார். இதனால் எல்லா மதத்தவரும் குருநானக்கிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.


குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் மனிதனின் வாழ்க்கை முறையைச் சுருக்கமாக கூறுகிறார். அவை-

வாண்ட் சாக்கோ – தன்னிடம் இருப்பதை உண்மையான தேவையில் இருப்போருக்கும், நம்மை விடக் குறைவாக இருப்போருக்கும் பகிர்ந்து கொள்தல் வேண்டும்.

கிராத் கரோ – நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்தலும், சம்பாதிப்பதும் வேண்டும்.

நாம் ஜபோ – இறைவனுடைய திருப்பெயரை ஜபிக்க வேண்டும்.


சீக்கியர்களின் முதல் குருவான அவர் பொய், பித்தலாட்ட வாழ்க்கையை எதிர்த்தார். மனிதர்களுக்கு ஒருவன் தீமை செய்து வாழ்ந்து இறைவனுக்கு உகந்தவனாக மாட்டான் என்ற தீர்க்கதரிசன சிந்தனை அவரிடம் உறுதியாக இருந்தது. இதுவல்லவா அறிவார்ந்த ஆன்மிகம்!


-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 26.11.2013Monday, May 19, 2014

தினமணியில் பரம(ன்) இரகசியம் நாவல் விமர்சனம்

இன்று தினமணியில் வெளியான பரம(ன்) இரகசியம் விமர்சன்ம்


காதல், குடும்பம், பாசம், ஆழ்மன சக்தி, ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியில் ஆராய்ச்சிகள், தத்துவம், சஸ்பென்ஸ் என்று பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கிய கலவை நாவல் இது. இருப்பினும் இந்நாவலில் ஆன்மிக உணர்வே தூக்கலாகத் தெரிகிறது. நாவல் முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் காட்சி தந்து நமது மனதில் நிறைந்து விடுகிறது. அத்துடன் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தில் காண்பதைப் போல நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். இத்துடன் மாமியார்-மருமகள், தாய்-மகன், தந்தை-மகள், பாட்டன்-பேரன், பாட்டி-பேரன் என பல்வேறு கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கணபதியின் கதாபாத்திரமும், ஈஸ்வரின் கதாபாத்திரமும் மானுட மேன்மையை உணர்த்துவதாக உள்ளன. இத்தகைய மனிதர்கள் உலகில் ஆங்காங்கே பிறந்து வளர்ந்தால் உலகமே அன்பு மயமாகத் திகழும். சில மெகா தொடர்களில் ஏராளமான கதாபாத்திரங்களையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டு, சிக்கல்களை விடுவிக்கத் தெரியாத நிலையில் திடுதிடுப்பென சீரியலை முடித்துவிடுவார்கள். அதுபோலன்றி, இந்நாவலின் இறுதி முடிவு வாசகர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவலைப் படிப்பது ஓர் இனிய அனுபவம்.


நன்றி: தினமணி-நூல் அரங்கம் 19-05-2014

Saturday, May 17, 2014

காஷ்மீரின் சில காமிரா பதிவுகள்! - 1


காஷ்மீரின் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. காணும் இடம் எல்லாம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது. நாங்கள் கண்டு களித்தவற்றில் சில காட்சிகளை நீங்களும் கண்டு களியுங்களேன்....

படகு வீட்டில் இருந்து ஷிகாரா என்னும் குட்டிப் படகில் பயணம் செய்கையில் எடுத்தது -தங்கியிருந்த படகு வீடுமிகவும் புகழ் பெற்ற டுலிப் கார்டன்டுலிப் கார்டனில் குடும்பத்தாருடன்சோனாமார்கில் குடும்பத்தாருடன் பனிச்சறுக்கு
சோனா மார்கில் குதிரை சவாரிகடுகு வயலில்சிந்து நதிக்கரையில்(மேலும் சில புகைப்படங்கள் அடுத்த வாரம்)

- என்.கணேசன்


Thursday, May 15, 2014

மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி....

ப்ரத்யுக்‌ஷா: கதாசிரியர்கள் எல்லோரும் "நல்ல எழுத்தாளர்" என்பதை விட "நல்ல entertainer" ஆகா இருக்க வேண்டும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

கதையின் ஓட்டத்தில் ஒரு விஷயம் தேவை அல்லது இதுக் கதைக்குத் தேவையில்லை என்று எவ்வாறு தீர்மானிக்கின்றீர்கள்?


நான்: ஒரு எழுத்தாளன் சொல்கின்ற விஷயங்கள் நல்லதாக இருப்பது மட்டுமல்ல அவை வாசகர்கள் மனதைக் கவரும்படி இருப்பதும் முக்கியம். அப்போது தான் அந்த எழுத்தாளன் நல்ல எழுத்தாளன் ஆகிறான். நல்ல Entertainer ஆக மட்டுமே இருப்பது அந்த எழுத்தாளனுக்குப் பெருமை சேர்க்கிற தகுதி அல்ல என்பது என் கருத்து. அந்தந்த நேரப் போக்கிற்காக மட்டும் எழுதும் எழுத்தாளன் காலப்போக்கில் மதிக்கப்படுவதில்லை, மாறாக மறக்கப்படுகிறான்.


மொத்தக் கதைக்குப் பொருந்துகிற விதத்தில் அமைகிற விஷயம் தேவை, அந்த ஓட்டத்தைத் தடை செய்வதாகவோ, பொருந்தாததாகவோ இருக்கும் விஷயம் தேவை அற்றது. அதை ஒரு நல்ல எழுத்தாளன் எழுதுகிற போதே உணர்ந்து சேர்க்கவோ, அகற்றவோ முடியும்.


ப்ரத்யுஷா: உங்களுக்கு மெயில் மூலமாக, கமெண்ட்ஸ் மூலமாக, போன் கால் மூலமாக எத்தனையோப் பாராட்டுக்கள் வந்ததாக கூறினீர்கள். கேட்டபோது "You deserve it sir" என்றுக் கூறத் தோன்றியது. அதே போல் நேரில் உங்கள் முகத்திற்கு நேராக ஒருவர் பாராட்டும் போது எப்படி உணர்வீர்கள். முகமறியா ஒருவர் பாராட்டுவதற்கும், எதிரில் வந்து ஒருவர் பாராட்டுவதற்கும் வித்தியாசம் இருக்குமே…


நான்: பாராட்டுகள் ஒரு எழுத்தாளனுக்கு உரம் போன்றது. அடுத்த படைப்புகள் மேலும் சிறப்பாக வர உதவும். போனில், மெயிலில், நேரில் என்று எப்படி வந்தாலும் மகிழ்ச்சி தான். நேரில் பாராட்டு வரும் போது அது சற்று மிகையாக இருக்கும் பட்சத்தில் சிறிது தர்மசங்கடம் தான். பொதுவாக பாராட்டுகளில் எனக்கு உரித்தான அளவை மட்டும் உள்ளே எடுத்துக் கொண்டு மீதியை பாராட்டுபவர்களின் அன்பின் வெளிப்பாடு என்று விட்டு விட பழகிக் கொண்டிருக்கிறேன்.


ருத்ரா: மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? ஒரு சில விஷயங்கள் அறிவுக்கு தெரிந்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. அறிவுக்கு தெரிந்த ஒன்றை எப்படி மனதுக்கு உணர்த்துவது?


நான்: ஒரு அளவுக்கு மேல் எதையுமே மிக சீரியஸாக எண்ணாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். ஏன் என்றால் அவ்வளவு சீரியஸாக எண்ண எப்போதுமே அவசியம் இல்லை. நீர்க்குமிழி வாழ்க்கையில் எது சாசுவதம்? எல்லாம் ஒரு நாள் முடியும் என்ற தலைப்பில் ’வாழ்ந்து படிக்கும் பாடங்களில்’ கடைசியாக எழுதிய பாடத்தை, முடிந்தால் படிக்கவும். மன அழுத்தம் தானாக குறையும்.


மனம் தன்னுடைய விருப்பு வெறுப்பைக் கொண்டே சிந்திக்குமே ஒழிய நமக்கு நல்லது கெட்டது வைத்து சிந்திக்காது. அதனாலேயே மனதிற்கு எதையும் புரிய வைப்பதற்கு ஓரளவுக்கு மேல் மெனக்கெடுவது வீண். சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு மனம் ”ஆனால்....” என்று ஆரம்பிக்கும். அதனால் மனம் சொல்லிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் விரைந்து அறிவு சரியாகச் சொல்கிறதை செயல்படுத்தி விட வேண்டும். சொல்வது சுலபம். செயல்படுத்துவது கஷ்டம் தான். ஆனால் அது ஒன்று தான் வழி.


கார்த்திகா: உங்களோட Autograph வாங்கின முதல் நபர் யார்ன்னு சொல்ல முடியுமா? முதலில், உங்ககிட்ட ஒருத்தர் Autograph கேட்கும் போது நீங்க எப்படி Feel பண்ணீங்க..


நான்: ஆழ்மனதின் அற்புதசக்திகள் நூலைக் கொண்டு வந்து என்னிடம் தந்து ஒரு வாசகர் அதில் என் கையெழுத்தைக் கேட்டார். அவர் பெயர் நினைவில்லை. எல்லா முதல் நல்ல அனுபவங்களைப் போலவே அதுவும் இனிமையாகவே இருந்தது. ஆனால் ஆட்டோகிராஃப் கையெழுத்துக்கள் தாள்களில் தங்குவதை விட என் எழுத்துக்கள் வாசகர்களின் மனதில் அதிகம் தங்குமானால் அதுவே அதிக இனிமையானதாகவும், நிறைவானதாகவும் நினைக்கிறேன்.


கார்த்திகா: நீங்கள் நிறைய முறை படித்த ஐந்து புத்தகங்கள் என்ன என்னன்னு சொல்ல முடியுமா??


நான்: நான் அதிக முறை படித்த ஐந்து புத்தகங்கள் இவை-


1) கல்கியின் “பொன்னியின் செல்வன்”

2) Dr.Wane W.Dyer எழுதிய “You’ll see it when you believe it”

3) Deepak Chopra எழுதிய “Ageless Body and Timeless Mind”

4) Eckhart Tolle எழுதிய “A new earth”

5) Christian D Larson எழுதிய “Your forces and How to use them”ப்ரியா:
"Paraman Ragasiyam" book was suggested by my Grandpa(My own Grandpa's friend, to be precise). Apparently he picked the book in Book fair and loved it immensely. I read and true to his words felt really overwhelmed. Coming to the point, while deciding your story plot do you decide the "Target audience" too??


நான்:
கதைக்கரு தேர்வான பின் அதை சுவாரசியமாக சொல்ல முடிந்த அம்சங்கள் அனைத்தையும் நான் அதில் சேர்த்துக் கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட "Target audience" க்காக நான் எழுதுவதில்லை. சிலர் சில பகுதிகளை சிலாகித்து அதிகம் ரசிப்பார்கள். மற்றவர்கள் வேறு சில பகுதிகள் அதிகம் ரசிப்பார்கள். ஆனாலும் மொத்தமாய் அனைத்து தரப்பினரும் ரசிக்க ஏதோ ஒன்று என் நாவல்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றேன்.


கார்த்திகா: எழுத்து - இதை தவிர உங்களுடைய மற்ற பொழுது போக்குகள் என்ன..??

நான்:
ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு படிப்பது தான். கதைகள், இலக்கியம், வரலாறு, வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், ஆன்மிக நூல்கள், மனோதத்துவம், தத்துவம் என்று எல்லாம் படிப்பேன்.

அடுத்ததாக இசை. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி பாடல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பழைய பாடல்கள் கேட்க மிகவும் பிடிக்கும்.

ஒருகாலத்தில் நிறைய திரைப்படங்களும் பார்ப்பேன். இப்போது நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

(தொடரும்)

Monday, May 12, 2014

உண்மையான குரு யார்?


அறிவார்ந்த ஆன்மிகம் - 37

நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும்  குரு ஒவ்வொருவருக்கும் கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்டவராக இருந்தார். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருவரும் சாஸ்திர தத்துவங்களைக் கற்பதும், ஆன்மிக ஞானத்தைப் பெறுவதும் ஒரு குருவின் மூலமே பெற முடியும் என்ற நிலை இருந்தது. இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும் குருவிடம் முறையாகக் கற்றதாக நாம் படிக்கிறோம்.

மகாவிஷ்ணு இராமாவதாரம் எடுத்த போது விசிஷ்டரைக் குருவாக ஏற்றுக் கொண்டு குருகுலவாசம் செய்து கற்றுக் கொண்டதாகவும், குருகுலவாசம் முடிந்த பின்னரும் வசிஷ்டரின் அறிவுரைகளின்படி நடந்ததாகவும் இராமாயணம் கூறுகிறது. இராமருக்கு வசிஷ்டர் வழங்கிய உபதேசங்கள் யோக வாசிஷ்டம் என்ற பெயரில் இன்றும் அறிவுப் பொக்கிஷமாய் நமக்குப் படிக்கக் கிடைக்கிறது.

பகவத்கீதையை வழங்கிய கிருஷ்ணரே இளமையில் குருவிடம் கற்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தை வலியுறுத்த சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் புரிந்தார். மனிதராக அவதாரம் எடுத்த பின்னர் அவன் கடைத்தேறும் வழியை குருவின் மூலமாகவே நாட வேண்டும் என்கிற அளவு குரு முக்கியத்துவம் பெற்றிருந்தார்.

புராணங்கள், இதிகாசங்கள் காலம் கழிந்த பின்னும் நம் பண்டைய பாரதத்தில்  குருசரணமே ஞானத்தெளிவு என்ற நிலைப்பாடு இருந்தது. உதாரணத்திற்கு குருசரணத்தைப் பற்றும் வழிகளை திருமூலர் இப்படி விவரிக்கிறார்

தெரிசிக்கப் பூசிக்க சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபக்தி செய்யுங் குவலயத்தோர்க்குத்
தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே

குருவைத் தரிசித்தல், பூஜித்தல், சிந்தனை செய்தல், அவருடைய கீர்த்தியைப் பாடிப் பரவுதல் அவரது பாதுகைகளக் கும்பிடுவது ஆகியன முக்திதரும் என்று மிக உயர்வாகக் கூறுகிறார்.

வேதவித்து என்று கருதப்பட்ட ஆதிசங்கரர் கூட கோவிந்த பகவத்பாதரின் சீடராக இருந்தார். பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும்எப்போதும் குருசரணம் நினைவாய் நெஞ்சேஎன்று மொழிந்தவர்.

நம் நாட்டில் தொன்று தொட்டு குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே நினைக்கும் வழக்கம் இருந்தது. இறைவன் ஆணையை ஏற்று இந்த உலகிற்கு நலம் செய்வதற்காகப் பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள் என்று நம்பப்பட்டது. பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார்கள் நம் முன்னோர்கள்.

இன்றோ குரு என்ற வார்த்தையும் குருவழிபாடும் கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் 
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர் 
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி 
குருடும் குருடும் குழிவிழுமாறே.

என்று திருமூலர் எச்சரித்ததைப் போன்ற வேடிக்கையான காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். அஞ்ஞானக் குருட்டுத் தனத்தை நீக்க முடியாத தகுதியற்ற குருவினைக் குருவாக ஏற்றுக் கொள்பவர்கள், அந்தக் குருட்டுத் தனத்தை நீக்க முடிந்த உண்மையான குருவினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடிப்பும், பகட்டும் பிடிப்பவனுக்கு நல்லதும், உண்மையும் பிடிக்காது. அது கசக்கவே செய்யும். இப்படி தகுதியும், ஞானமும் இல்லாத குருவும், முட்டாள் சீடனும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஞானமில்லாத இருவரும் குருடர்களே என்பதால் அவர்கள் குருட்டாட்டம் ஆடி கடைசியில் படுகுழியில் விழ வேண்டி இருக்கும்.

முன்பு குருவை எப்படி எல்லாம் பூஜிக்க வேண்டும் என்று சொன்ன அதே திருமூலர் பிற்காலத்தில் இப்படியும் குருக்கள் மழைக்காலக் காளான்களாய் முளைப்பார்கள் என்று  ஞான திருஷ்டியில் உணர்ந்து பாடியது போல் அல்லவா இருக்கிறது.

சரி உண்மையான குரு யார்? எப்படி இருப்பார்?

உண்மையான குரு தன்னையே உயர்த்திப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்.  தன்னை நாடி வந்தவர்களை உயர்த்தப் பார்ப்பார்.

தன்னைக் கடவுளுக்கு இணையாகப் பறை சாற்ற மாட்டார். அவரிடம் படாடோபமும், பகட்டும் இருக்காது. பணிவும், எளிமையும் அவரிடம் இருக்கும். வசிஷ்டர் முதலான மகத்தான வேதகால முனிவர்களும் சரி, ஆதிசங்கரர் முதலான பிற்கால பெரும் துறவிகளும் சரி தங்களைக் கடவுள்களாகச் சொல்லிக் கொண்டதில்லை. பிற்காலத்தில் அவர்கள் சிஷ்யர்கள் அவர்களைக் கடவுள்களாக சித்தரித்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அப்படிச் சொன்னதில்லை. இதை யாரும் மறந்து விடலாகாது.

உண்மையான குரு வசூலில் குறியாக இருக்க மாட்டார். சொல்லப் போனால் பணம் பிரதானமாகும் போது மற்ற எல்லாமே பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஞானமே முக்கியமாக நினைப்பவரே உண்மையான குரு. அவர் தன்னைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்களை ஞான நிலைக்கு உயர்த்துவதில் குறியாக இருப்பார்.

தன்னை நாடி வருபவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்லி மகிழ்விக்கும் மனப்போக்கு உண்மையான குருவிடம் இருக்காது. உண்மை கசந்தாலும் அதை மருந்தாக உட்கொள்ள வைத்து நலமடையச் செய்யும் மகத்தான அக்கறை அவரிடம் இருக்கும்.

தன்னைப் பின்பற்றுவோரின்  எண்ணிக்கையில் அவருக்கு அக்கறை இருக்காது. தன்னைப் பின்பற்றுவோரின் தன்மையிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அக்கறை இருக்கும்.

சொத்துக்கள் சேர்ப்பது, ஆள்பிடிப்பது, சித்துவித்தைகள் செய்து காட்டுவது போன்றவை உண்மையான குருவிடம் இருக்காது.  ஞானத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லாமல் ஒரு உதாரண புருஷராய் அவர் வாழ்ந்து காட்டும் பண்பு இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான குரு ஒரு ஆரம்பம்தான். அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல் தான். அடுத்த நிலைக்கு அவர் மூலம் ஒருவர் சென்று கடந்து போக முடியும். அவர் தன்னிடமே ஒருவரைக் கட்டிப் போட நினைக்க மாட்டார். அவரைக் கடந்து செல்லவும் மகிழ்ச்சியுடன் உதவுவார். 

இதெல்லாம் இக்காலத்தில் உண்மையான குருவை அடையாளம் காண நமக்கு இருக்கும் அளவுகோல்கள். உண்மையான குருமார்கள் நம் புராணங்களிலும், வேதங்களிலும், உபநிடதங்களிலும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை ஆழமாகப் படிக்கும் போது நமக்குப் புலப்படும் உண்மைகள்.

இன்னொரு உண்மையையும் நாம் இங்கே நினைவுகூர்வது நியாயமாய் இருக்கும். உண்மையான தேடலுடன் செல்கின்ற சீடனுக்கு உண்மையான குரு கண்டிப்பாகக் கிடைப்பார். எப்படி தண்ணீரும் எண்ணெயும் சேராதோ அப்படி நல்ல தேடலுடைய மனிதனும், போலி குருவும் சேர முடியாது. உண்மையான தேடலும், நோக்கமும் உள்ளவன் தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே இருப்பான். அதைப் போலி குருமார்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தானாக விலகல் என்பது நேர்ந்து விடும். ஒருசில நேரங்களில் மோசமான குருவிடம் இருந்து கூட ஒரு உண்மைச் சீடன் நல்ல விஷயங்களைக் கற்றுக் கரை தேர்ந்துவிட முடியும். ஆனால் அது விதிவிலக்கே ஒழிய பொதுவாக நிகழ்வதல்ல.

ஒரு குழந்தைக்கு அதன் தந்தையைக் காட்டுபவள் தாய். ஒரு சீடனுக்கு இறைவனைக் காட்டுபவர் குரு. ஏட்டுக் கல்வியை மட்டும் அளிப்பவர் ஆசிரியர். ஞானத்தெளிவை அளிப்பவரே குரு. உண்மையான குரு தன்னை நாடி நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு இருவிதமாக  வழிகாட்டுவார். தகுதி உடையவர்க்கு தகுந்த வழிகாட்டுவார். தகுதி இல்லா விட்டாலும் நோக்கம் உயர்வாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம்  தகுதியை ஏற்படுத்தி பின்பு உயர்ந்த வழிகாட்டுவார்.

உண்மையான குருவின் உபதேசம் ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு மோர் விழுவது போலத் தான். அந்தக் குடத்தில் உள்ள பால் எப்படி இனி பாலாகவே இருந்து விட முடியாதோ அதே போல் அவரது சீடனும் முந்தைய அஞ்ஞான நிலையிலேயே தங்கி இருந்து விட முடியாது. அவரது உபதேசம் மிகப்பெரிய ஞான மாற்றத்தை அவனிடம் கண்டிப்பாக ஏற்படுத்தும்.

எனவே உண்மையான குருவை அறிவுக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு கண்டுபிடிப்போம். அவர் மூலம் நாம் மேலானதொரு நிலைக்குப் பயணிப்போம்.

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி–ஆன்மிகம்-19.11.2013
  

Thursday, May 8, 2014

சித்தர்களின் சக்திகளும், அலைவரிசைகளும்

பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி...


சித்ரா: உங்கள் பரமன் ரகசியம் படித்தபின் எனக்குள் எழுந்த கேள்வி....

அனைத்தும் கற்று அறிந்த குருஜி.....மற்றவர்கள் பேசும்பொழுது அவர்களின் எண்ணங்களை அறிந்து ....புன்னகைத்து....தெளிவாக பதில் சொல்லும் ஒரு..ஞானி.......கலிகாலத்தில் உலகை நல்வழி படுத்துவதற்கு......மானச லிங்கத்தின்...சக்தியை அறிந்து பயன்படுத்தும் ..அறிவு...அதை செயல் படுத்தும் தெளிவு உள்ளவர்......

அச் செயலை ..செயல் படுத்த அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் ..அவர்களின் எண்ணங்கள் தவறு என்பதை...முடிவில்தான் புரிந்து கொண்டார்..என்பதை.....ஏற்றுக் கொள்வதற்கு சற்று கடினமாக உள்ளது......

இதற்கு உங்கள் தரப்பில் ஏதாவது காரணங்கள் ....உண்டா.......

எனக்கு புரிந்தது..அகந்தை உள்ள மனிதன் ..அவன் பெற்ற சக்தி..தவறான வழியில் பயன் படுத்தினால் பயனற்று போகும் என்பது.......

வேறு விளக்கங்கள்....இருந்தால் சொல்லவும்....

என்னுடைய இரண்டாவது கேள்வி......

பரமன் ரகசியத்தின் முடிவில்.....

சித்தர்கள் தங்களுடைய அனைத்து சக்திகளையும் சேர்த்து உருவாக்கிய........பல..ஆண்டுகள் பாடுபட்டு காப்பாற்றிய லிங்கத்தின் சக்திகள்......
மனம் ஒன்றிய பக்தியும்.....நல்லறிவும்.......ஞானமும் உள்ளவர்களின்..

உள்ளங்களில் அச் சக்தி இருக்கும்..எங்கும் செல்வதில்லை.....
அவற்றை கொண்டு நீங்களேதான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்..எந்த அவதாரமும்..நம்மை காப்பாற்றாது......

என்பது..கலிகாலத்தின் விதி இதுதான் ..என்று நீங்கள் சொல்வதாகப் படுகிறது..............

we should be the creator of our destiny......என்று அர்த்தம் கொள்ளலாமா.......


நான்: அகந்தை வரும் போது எதையும் சரியாக கணிக்கும் சக்தி போய் விடுகிறது. அது எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி. அதே போல சக்திகள் கிடைக்கும் போது மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்பதை அறிவாளிகளாலும் சரியாக தீர்மானிக்க முடியாமல் போகிறது. இந்த இரண்டு உண்மைகள் குருஜியின் தவறான தேர்ந்தெடுப்புக்குப் பின்னால் உள்ளன.


சித்தர்கள் தங்கள் அத்தனை சக்திகளையும் தகுதி வாய்ந்த நல்ல மனிதர்களிடம் விட்டுப் போயிருக்கிறார்கள் என்றும் அந்த தகுதி வாய்ந்த மனிதர்கள் அதை உதாசீனப்படுத்திப் பின்வாங்கினால் தீய சக்திகள் ஜெயிக்க அவர்கள் செயலின்மையே காரணமாகி விடும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்தப் பொறுப்பை அவர்கள் அவதாரங்கள் உட்பட யார் மேலும் சுமத்தி விலகி இருக்கக் கூடாது. ஏனென்றால் மகாசக்திகள் அவர்களுக்கு தரப்பட்டுள்ளன. அவர்கள் அதை உபயோகித்து செயல்பட வேண்டிய கலிகாலம் நெருங்கி இருக்கிறது என்பதே நல்ல தகுதி வாய்ந்த மனிதர்களுக்கு பரம(ன்) இரகசியம் விடுக்கும் செய்தி.


காத்யா: ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின் ஆன்மாவின் நிலை என்ன?

2) பித்ருக்களுக்கு நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், ஸ்ரார்த்தம் பற்றிய தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். உண்மையிலே நாம் செய்யும் காரியங்கள் அவர்களைச் சென்று அடைந்து அவர்களை மகிழ்விக்கின்றனவா?


நான்: ஆன்மா பற்றி இந்தக் கேள்விக்கு சுருக்கமாகப் பதில் சொல்வது இயலாத காரியம். எந்த விளக்கமும் மேலும் சில கேள்விகளை எழுப்பாமல் விடாது. இறுதியான மேலும் கேள்வியற்ற ஒரு பதிலைத் தனிமனிதன் தன் மெய்ஞானத் தேடலின் முடிவில் மட்டும் அறிந்து திருப்தியுற முடியும். அப்படியும் சுருக்கமாகச் சொல்லப் போனால் உயிரினங்களின் உடல் அழியும் போது அழிந்து விடாத சூட்சுமமான அம்சம் ஆன்மா என்று சொல்லலாம்.


தர்ப்பணம், ஸ்ரார்த்தம் ஆகியவை எல்லாம் நம் முன்னோர்களை நாம் மறந்து விடாமல் இருக்க அக்காலத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் சம்பிரதாயங்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. அச்செய்கைகளால் அவர்கள் நற்கதி அடைவார்கள் என்பதும், நம்மையும், நம் சந்ததிகளையும் ஆசிர்வதித்து நம்மை மேன்மை அடையச் செய்வார்கள் என்பது இதன் உத்தேசமும் நம்பிக்கையும். இந்த பாவனையில் தவறில்லை. அவர்களை நினைவுபடுத்திக் கொள்வதும், ஆசிகள் பெற எண்ணுவதும் நல்ல உத்தேசமே. ஆனால் தன் செயல்களால் மட்டுமே ஒரு மனிதன் காப்பாற்றப்படவும், வீழ்த்தப்படவும் முடியும் என்று திடமாக நம்புகிறேன். அதனால் இது போன்ற சடங்குகளால் ஒரு மனிதன் இறந்த பின்னால் ஏதாவது பலனடைவான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.


லக்ஷ்மி வாசுதேவ்: என் அறிவுக்கு எட்டியவரை நல்ல மனிதர்கள் நல்ல புத்தகங்கள் எதை கடந்து வந்தாலும் நிச்சயம் மனம் சஞ்சலபட்டுகொண்டே இருக்கின்றது. மனம் பொறுமை இழந்து அல்லல் படுகிறது, கடந்து வந்த தோல்வியை பற்றியெல்லாம் எனகு கவலை இல்லை ஆனால் என்னுடைய எதிர்கால இலக்குகள் குறித்த பயணத்தில் மட்டும் மனம் அளவுகடந்த குழப்பம் அடைகிறது.

என்னுடைய கேள்வி இதுதான்:

· என்னை நோக்கிய(எனக்குள் செல்ல) பயணம் எப்படி இருக்க வேண்டும்?
· எப்படி தன்னம்பிக்கையை என்றும் மனதில் நிலைகொள்ளவைப்பது?
· எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருப்பது எப்படி?
· எப்படி நம் மனதையும்,செயலையும் சுய கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது?
· மனம் சஞ்சலம் அடையாமல்,தொடர் குழப்பம் கொள்ளாமல் தடுப்பது எப்படி?
· கர்ம யோகம் அடைய என்ன செய்ய வேண்டும்?
· குறிக்கோளை நோக்கிய பயணத்திற்கு எது தேவை?
· பிரபஞ்ச சக்தியை நமக்கும் துணையாய் கொள்ளவது எப்படி?


நான்: என்னுடைய கேள்வி இது தான் என்று பதிலுக்கு ஒரு புத்தகமே எழுத வேண்டிய கேள்விகள் பல எழுப்பி இருக்கிறீர்கள்.

உள் நோக்கிய பயணத்திற்கு உண்மையை அறியும் அக்கறை மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும். அந்த வேட்கை எல்லாவற்றையும் விட மேலானதாக இருக்க வேண்டும். பல ஆசைகளோடு அந்த ஆசையும் ஒன்றாக இருந்தால் அது சம்பிரதாயமான சிந்தனை ஓட்டமாக மட்டுமே இருக்க முடியும்.

தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள் பற்றிய கேள்விகளை இன்னொரு வாசகர் கேட்டு பதில் அளித்துள்ளேன். பார்க்கவும்.

மனதைக் கட்டுப்படுத்துவது தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே முடியும். இது நீண்டகால சமாச்சாரம். குறுகிய கால உடனடி விளைவுகள் எதிர்பார்ப்பது கண்டிப்பாக ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். முதலில் சின்னச் சின்ன விஷயங்களில் மனதை ஜெயிக்கப் பாருங்கள். அதில் மிக உறுதியாய் இருங்கள். அப்படியே சிறிது சிறிதாக பெரிய விஷயங்களுக்குப் போங்கள். தோல்விகள் அடிக்கடி வரும். சறுக்கல் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். மறுபடி தொடருங்கள். இது தான் வழி. இதில் குறுக்குவழி இல்லை.

கர்ம யோகம் சித்திக்க ஒவ்வொரு செயலும் ஆழ்ந்த யோசனையுடன் செய்யப்பட வேண்டும். விளைவுக்கு பொறுப்பேற்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் எது முக்கியமோ, எது தேவையோ அதை மட்டும் சிறப்பாக முழு மனதோடு செய்தல் வேண்டும். குறிக்கோளை நோக்கிய பயணத்திற்கும் இதுவே தேவை.


பிரபஞ்ச சக்தியை நமக்கு துணையாக்கிக் கொள்ளும் முன் நமக்குள் இருக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும். அவை நம் வசமான பின் பிரபஞ்ச சக்தி தானாக நம் வசமாகும். நமக்குத் துணையாக செயல்பட ஆரம்பிக்கும்.


ஸ்ரீமதி வெங்கட்: பிராண சக்தி என்றால் என்ன?

சித்தர்கள் எதை எதிர்பார்த்து சிரஞ்சீவியா இருக்காங்க?நமக்கு உதவவா?
நாம் அவர்களை மனதார நினைத்தால் நம்மிடம் வருவாங்கன்னு சொல்றாங்களே?அது உண்மையா?ஒரு சிலர் நம்ம அலை வரிசை அவர் அலை வரிசையுடன் ஒத்து போனால்தான் வருவாங்கணும் சொல்றாங்க?எது உண்மை?

3. நாலு பிரளயம் பார்த்தவர் கக்க புஜண்டர்னு சொல்றாங்க?பிரளயம் என்பது எல்லாத்தையும் தனக்குள் ஐக்கிய படுத்திகொள்வது தானே ?இவர் தனியா எங்கே இருக்க முடியும்?இது சாத்தியமா?

அடுத்து போகர் சீனா காரரா?நான் படித்த இன்னொரு புத்தகத்தில் அவர் காலாங்கி நாதர் சித்தர் ஜீவ சமாதி சீனாவில் பார்க்க போகும்போது ஏற்பட்ட அசம்பவததில் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு vuruvam மாறினார் சொல்றாங்க?அதுவும் உண்மையா?


நான்: பிராணசக்தி என்பது உயிர்சக்தி. (இறந்து போனதை பிராணன் போயிற்று என்று பழைய ஆட்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.)

சித்தர்கள் தங்கள் சக்தியை சிறிதும் வீணாக்காமல் சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்கள். அதனால் அவர்கள் சாதாரண மனிதர்களை விட பல மடங்கு அதிக காலம் வாழ முடியும். சாதாரண மனிதர்கள் உபயோகிப்பதை விட விரயம் செய்யும் சக்திகள் அதிகம். சித்தர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட காலம் வரை இவ்வுலகில் சரீரத்தோடு இருந்து விட்டுப் போகிறார்கள். சிரஞ்சீவியாக இருக்க அவர்கள் ஆசைப்பட்டால் அவர்கள் சித்தர்களாக இருக்க முடியாது. அவர்கள் மனிதர்களுக்கு உதவ சரீரத்தோடு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எந்த நுட்ப நிலையிலும் அவர்களால் சரீரம் இல்லாமலே உதவ முடியும்.


நாம் மனதார நினைக்கும் போதெல்லாம் அவர்கள் வருவதாக இருந்தால் அவர்கள் வேறு எந்த உருப்படியான வேலையும் செய்ய நாம் விட மாட்டோம். அவசியம் இருந்தால் ஒழிய அவர்கள் நம்மிடம் வர மாட்டார்கள். அவர்கள் அலை வரிசையோடு நாம் ஒத்துப் போகும் அபூர்வ தருணம் வந்தால் நமக்கு எத்தனையோ பேருண்மைகளை அவர்கள் அந்த அலைவரிசையிலேயே டிரான்ஸ்ஃபர் செய்து விட முடியும். நாம் உணர்வுகளின் மேல்நிலைக்குப் போய் தூய்மையாகவும் வாழ்ந்தால் எத்தனையோ அலைவரிசைகளில் சித்தர்களிடம் இருந்து செய்திகள் பெற முடியும்.


கக்கபுஜண்டர், போகர் ஆகியோரின் கதைகளைப் படித்தும் கேட்டும் இருக்கிறோம் என்றாலும் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் அளவுக்கு எனக்கும் அனுபவமோ, ஞானமோ போதாது. ஆனால் கூடுவிட்டு கூடு பாய்வது, பிரளயத்தை சந்திப்பது போன்ற சக்திகள் எல்லாம் சித்தர்களுக்கு ஒரு விஷயமே அல்ல. அவர்கள் சக்திகள் அளவிட முடியாதவை என்பதில் சந்தேகமே இல்லை.


(தொடரும்)