சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 31, 2020

உயர் உணர்வு நிலைகளில் அதிகம் தங்குங்கள்

 (ஆழ்மனசக்தி இரகசியங்கள் 28)

நடை தியானம், மற்ற தியான வகைகள்- தியான காலங்களில் ஆஃபா , தீட்டா லெவல்களில் தங்கும் நேரம் - தேவைப்படும் நேரங்களில் எல்லாம் அந்த அலைவரிசைகளில் செல்வது - நடைமுறை சிக்கல்கள்

Thursday, October 29, 2020

இல்லுமினாட்டி 73ர்னெஸ்டோ ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அக்ஷயை வரவேற்றார். அவனைப் பற்றிப் படித்திருந்ததெல்லாம் அவர் மனதில் அவனை ஒரு கதாநாயகன் போல் ஆக்கியிருந்தன. அவன் பயணம் சௌகரியமாக இருந்ததா என்று அன்போடு விசாரித்தார். இம்மானுவல் அவரைப் புன்னகையோடு கவனித்தான். பலரிடம் ராஜ கம்பீரத்துடன் இடைவெளி விட்டே பழகும் அவர் வெகு சிலரிடம் மட்டும் எந்தப் பந்தாவும் இல்லாமல் எளிமையாக நட்பு பாராட்டிப் பழகுவதையும் அவன் கவனித்திருக்கிறான். அமானுஷ்யன் ஆரம்பத்திலேயே அவருடைய இரண்டாவது பட்டியலில் சேர்ந்து விட்டது புரிந்தது.

அக்ஷய் அரண்மனை போல் இருந்த அந்த பங்களாவில் பல அடுக்குப் பாதுகாப்பு இருந்ததைக் கவனித்து விட்டு உள்ளே வந்திருந்தான். அப்படி ஒரு அதிகார உச்சத்திலும், செல்வச்செழிப்பிலும் இருந்த போதும்  இல்லுமினாட்டியின் தலைவரிடம் இருந்த எளிமையும், நட்புணர்வும்  அவனுக்கும் அவர் மேல் மதிப்பை வரவழைத்தது

இம்மானுவல் எர்னெஸ்டோவிடம் புன்னகையுடன் சொன்னான். “அக்ஷய் ம்யூனிக்கில் கால் வைத்தவுடனேயே நமக்கு விஸ்வத்தின் கூட்டாளியை அடையாளம் காட்டி விட்டான்

திகைப்புடன் பார்த்த எர்னெஸ்டோவிடம் விமான நிலையத்தில் நடந்த சம்பவங்களை இம்மானுவல் விவரித்தான். விஸ்வத்தின் கூட்டாளி மனிதனல்ல என்று நினைப்பதாக இம்மானுவல் அன்று சொன்னது நினைவுக்கு வர இது என்ன புதுக்குழப்பம் என்று எண்ணிய எர்னெஸ்டோ கேட்டார். “அவனை எப்படி நீ விஸ்வத்தின் கூட்டாளி என்று சொல்கிறாய்? புகைப்படம் எடுத்துத் தர அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வேறு யாராவது ஒரு ஆளாக அவன் ஏன் இருக்கக்கூடாது?...”

நானும் ஆரம்பத்தில் அப்படி தான் சந்தேகப்பட்டேன். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு ஆளாக இருந்திருந்தால் இன்னேரம் எங்களிடம் அவன் கண்டிப்பாக மாட்டியிருப்பான். இப்படி சாமர்த்தியமாக மாட்டாமல் போனதோடு அந்த சிசிடிவி கேமிராவையும் வேலை செய்யாமல் போக வைத்ததையும் பார்த்தால் அவன் விஸ்வத்தைப் போலவே கூடுதல் வித்தைகள் கையில் வைத்திருக்கிற ஆசாமி போலத் தான் தெரிகிறது. அதனால் தான் அந்தக் குட்டை மனிதன் அவன் கூட்டாளியாகத் தான் இருக்கும் என்று நான் உறுதியாய்ச் சொல்கிறேன்

எர்னெஸ்டோ அக்ஷயைக் கேட்டார். “அக்ஷய், நீ என்ன நினைக்கிறாய்?”

அக்ஷய் யோசனையுடன் சொன்னான். “எனக்கு அவன் அந்த கேமிராவைச் செயல் இழக்க வைத்தது தான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. மற்ற கேமிராக்களில் விழுவதை அவன் ஒரு பிரச்சினையாக நினைக்கவில்லை. அந்தக் கேமிராக்களில் தலை குனிந்தே வந்திருக்கிறான். எதிலும் கேமிராவை அவன் நேருக்கு நேர் பார்க்கவில்லை. சொல்லப் போனால் என்னைப் புகைப்படம் எடுக்கும் போது தான் நிமிர்ந்து பார்த்திருக்கிறான். அப்படி அவன் நிமிர்ந்து பார்த்து அவன் முகம் தெளிவாக இந்தக் கேமிராவில் பதியும் என்று பயந்து அப்படிச் செய்திருக்கிறான் என்று எடுத்துக் கொண்டாலும் கூட மற்றதும் இடிக்கத் தான் செய்கிறது. பின் எப்படி யாரும் அவனைப் பார்க்கவில்லை. அது வரை மற்றவர்கள் கண்களில் பட்டுக் கொண்டிருந்த அவன் பிறகெப்படி ஒருவர் கண்ணில் கூடப் படவில்லை. வெளியே போவதும் ஏன் எந்தக் கேமிராவிலும் விழவில்லை என்பது தான் குழப்புகிறது. வந்த மாதிரியே அவன் செல்போனைப் பார்த்தபடியே வெளியே போயிருக்கலாமே. ஏன் அவன் அப்படிக் கூட விழவில்லை. இதெல்லாம் பார்க்கையில் அவன் கடைசியாக அந்தக் கேமிராவை ரிப்பேர் செய்ததில் வேறு ஒரு வலுவான காரணமும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எதையோ நாம் தெரிந்து கொள்வதை அவன் விரும்பவில்லை...”

முகம் தெளிவாகத் தெரிவதை அவன் விரும்பவில்லை என்று தான் தோன்றுகிறது. நேராக நிமிர்ந்து பார்த்து புகைப்படம் எடுக்கும் போது அவன் முகம் தெரிந்து விடும் என்பதால் தான் ரிப்பேர் பண்ணியிருக்கிறான்...”

அக்ஷய் சொன்னான். “அது மட்டும் தான் என்று எனக்குத் தோன்றவில்லை. அவன் முகத்தை நான் நேராகப் பார்த்திருக்கிறேன். என்னைப் பற்றி அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் ஒரு தடவை பார்த்த முகத்தை நான் மறக்க மாட்டேன் என்பதையும் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பான். நாம் கண்டிப்பாக அவன் தோற்றத்தைத் தெரிந்து கொண்டு விடுவோம் என்று தெரியாமல் இருக்காது.... கூடுதலாக ஏதோ இருக்கிறது...”

அக்ஷயின் சந்தேகம் அவர்களுக்கும் சரியென்றே தோன்றியது. அவன் சொன்னது போல அவன் அன்று அந்த விமானத்தில் வருவான் என்பது எப்படி விஸ்வத்திற்கும், அவன் கூட்டாளிக்கும் தெரிந்தது? ரகசியமாக அவர்கள் வைத்திருந்த இந்தத் தகவல்களை எல்லாம் விஸ்வமும், அவன் கூட்டாளியும் தெரிந்து வைத்திருப்பது எப்படி?


வாங்  வே தனக்கு வந்திருந்த ஓவியத்தைக் குழப்பத்துடன் பார்த்தார். யாரிந்த ஆள், இந்த ஆளின் புகைப்படத்தை இல்லுமினாட்டியின் உளவுத்துறை உபதலைவன் சாலமன் அவருக்கு ஏன் அனுப்பினார் என்று புரியவில்லை. பார்த்தால் அந்த ஆள் ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்டோ, ரியல் எஸ்டேட் புரோக்கரோ மாதிரி தான் தெரிந்தான்.

சாலமன் தன் வழக்கமான நேரத்தில் போன் செய்து தான் அந்த ஆள் யாரென்று விளக்கினார். “அந்த ஆள் தான் விஸ்வத்தின் கூட்டாளி என்று இம்மானுவல் சந்தேகப்படுகிறான். அமானுஷ்யன் ம்யூனிக் வந்தவுடனேயே அந்த ஆள் அவனைப் புகைப்படம் பிடிக்கப் போய் அமானுஷ்யன் பார்வையில் பட்டு விட்டான்....” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லி முடித்த போது வாங் வேக்குத் திகைப்பாக இருந்தது.

விஸ்வத்தின் கூட்டாளி விஸ்வத்தை விடப் பலமடங்கு கில்லாடியாக இருப்பான் போல் தோன்றியது. அத்தனை பெரிய ம்யூனிக் விமான நிலையத்தில் உள்ளே நுழைந்து அமானுஷ்யனைப் புகைப்படம் எடுத்து விட்டு கேமிராவை ரிப்பேர் செய்து விட்டு, யார் கண்ணிலும் படாமல், அகப்படாமல் தப்பித்துப் போயிருக்கும்  பராக்கிரமத்தை என்னவென்று சொல்வது? அகிடோ அரிமா முன்பே அவரை எச்சரித்திருந்தது நினைவுக்கு வந்தது. விஸ்வத்தையும், அவன் கூட்டாளியையும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் என்று அவர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. ஆனால் பெரிய வெற்றிகள் ஆபத்தில்லாமல் கிடைத்து விடுவதில்லை. தயங்கிப் பின்வாங்கினால் முன்னுக்கு வராமலேயே போய்விடும் நிலைமை இருக்கிறது

இல்லுமினாட்டியில் கடந்த ஒரு வாரத்தில் எர்னெஸ்டோ எடுத்த இரண்டு முடிவுகள் தலைமைக்குழுவில் மற்றவர்கள் சிபாரிசு செய்ததற்கு எதிர்மாறாக இருந்தன. மனிதர் க்ரிஷின் சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. இல்லுமினாட்டியின் பலத்தைப் பெருக்காத மென்மையான அந்த அணுகுமுறை இல்லுமினாட்டியை பலவீனப்படுத்தவும், மற்றவர்களின் பயத்தைக் குறைக்கவும் செய்யும் என்று வாங் வே நம்பினார். இதை அனுமதிக்கக்கூடாது. ஏதாவது வகையில் கிழவரை தலைமைப்பதவியில் இருந்து இறக்க வேண்டும். அது கிழவர் மரணத்தினால் தான் முடியும் என்றால் அதுவும் சரி தான் என்று வாங் வேக்கு அதிகமாகத் தோன்ற ஆரம்பித்தது. அதைச் செய்ய விஸ்வம் தான் சரியான ஆளாகத் தோன்றுகிறான். அதனாலேயே விஸ்வமோ, அவன் கூட்டாளியோ எர்னெஸ்டோவுக்கு முன்பு அவருக்குப் பார்க்கக் கிடைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ஆனால்  அவர்கள் கிடைக்க வேண்டுமே!...

விஸ்வம்  அக்ஷயின் புகைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தான். புகைப்படத்தில் அக்ஷய் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் புகைப்படம் தான் எடுக்கப்படுகிறது என்ற தகவல் அவன் மூளைக்குத் தெளிவாக எட்டி விட்ட அறிகுறி அந்த முகத்தில் தெரிந்தது. யாரிந்த ஆள், ஏன் என்னைப் புகைப்படம் எடுக்கிறான், என்றெல்லாம் யோசித்தபடி கூர்ந்து ஊடுருவுவது போல் அக்ஷய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் பயம் தெரியாதது விஸ்வத்தை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் சின்ன முகச்சுளிப்போ, பரபரப்போ, பாதிப்போ கூட அவனிடம் இல்லை என்கிற செய்தி விஸ்வத்தை ஆச்சரியப்படுத்தியது.

ஜிப்ஸி அக்ஷயை இரண்டு படங்கள் எடுத்திருந்தான். இரண்டுமே மூன்று நான்கு வினாடிகள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்டவை. நின்ற கோலத்தில் இருந்து ஊடுருவிப் பார்க்கும் விதம் வரை எல்லாவற்றிலும் அவனிடம் முழுமையான ஆளுமை தெரிந்தது. விஸ்வத்திற்கு உடனடியாக அந்தப் புகைப்படத்தில் மனதை நிறுத்தி அவனைப் பற்றி எல்லாத் தகவல்களையும் தானாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் இப்போது அதற்கு அவசரமில்லை. அதற்கும் முன் ஆக வேண்டியது நிறைய இருக்கிறது என்று உணர்ந்து அந்த ஆவலை ஒதுக்கி வைத்தான்.

இவனை இப்போது எங்கே அழைத்துப் போகிறார்கள் நண்பா?” என்று ஜிப்ஸியை அவன் கேட்டான்.

எர்னெஸ்டோவின் வீட்டுக்குஎன்று சொன்ன ஜிப்ஸிக்கு ஒரு கணம் இப்போதும் அந்த அமானுஷ்யன் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் பிரமை இருந்தது. என்னவொரு பார்வை?...(தொடரும்)
என்.கணேசன்