சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 29, 2022

யாரோ ஒருவன்? 100


ஜீம் அகமதின் கூர்மையான அறிவுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எதற்கும் காரணம் பிடிபடவில்லை. ஆஸ்பத்திரியில் சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும் நடந்து கொள்ளும் விதங்களைப் பார்க்கையில் அவர்கள் இருவரும் அரைப்பைத்தியங்கள் ஆகி விட்டார்கள் என்றே தோன்றியது. அவர்களை மகேந்திரன் மகன் கொன்றிருந்தால் அது அவனை ஆச்சரியப்படுத்தியிருக்காது. அவர்கள் இருவருக்கும் உணவில் ஏதாவது மருந்து வைத்து அதன் மூலமாக அவன் அவர்களுக்குப் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தாலும் அதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். அவர்கள் வெளியே தப்பித்துப் போனாலும் அவர்கள் அவனைக் காட்டிக் கொடுக்க முடியாது, அல்லது அவர்கள் சொன்னாலும் அந்தப் பைத்தியக்காரர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்த முடியாது என்ற நிலையை அவன் புத்திசாலித்தனமாக ஏற்படுத்தி விட்டான் என்பதை அவனால் கணிக்க முடிந்திருக்கும். இந்த இரண்டும் மகேந்திரன் மகனால் சுலபமாகச் சாதிக்க முடிந்திருக்கக்கூடிய காரியங்கள். ஆனால் அந்த இரண்டையுமே அவன் செய்யவில்லை.

காட்டுப் பகுதிகளில் மட்டுமே இருக்கக்கூடிய பாம்புகள் தான் அவர்களைக் கடித்திருக்கின்றன என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அவை கடுமையாக கடித்திருந்தால் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து போயிருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள். இது வரை அந்த ஃபேக்டரி பகுதியில் அந்த மாதிரியான பாம்புகள் யாரையும் கடித்திருந்த சம்பவம் ஒன்று கூடப் பதிவாகியிருக்கவில்லை.   பின் எப்படி அவர்களை மட்டும் அந்தப் பாம்புகள் கடித்தன என்றோ அதுவும் அரைப்பைத்தியங்களாக ஆக்க முடிந்த அளவு மட்டும் அவை கடித்திருக்கின்றன என்றோ அனுமானிக்க முயற்சித்து அவன் தோற்றுப் போனான்.

இத்தனைக்கும் மகேந்திரன் மகன் டெல்லியில் அந்தச் சமயத்தில் இல்லை. சற்று முன் தான் அவன் கோயமுத்தூரிலிருந்து டெல்லி வந்து சேர்ந்திருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது. அவன் இங்கே இல்லாத நேரத்தில் வேறு யாரோ அவனுக்கு இந்த மாதிரியான அமானுஷ்யமான முறையில் நடக்க உதவியிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதே அறிவுக்குப் பொருந்தாத விஷயமாகப் பட்டது. ஆனாலும் கூட அப்படித் தான் நடந்திருக்கிறது.

ஜனார்தன் த்ரிவேதி அவர்கள் இருவரையும் டிவி, பத்திரிக்கைக்காரர்கள் மத்தியில் பேச வைத்து மகேந்திரன் மகனை மட்டுமல்லாமல், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் எப்படியெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லி நாட்டின் பிரதமரையே குற்றம் சாட்டி நாட்டு அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அளவுக்கு எல்லாம் யோசித்து வைத்திருந்தது வீணானது. இருவரும் பேச முடிந்த அளவு உடல்நிலை திரும்பியதும் அவர்களை ஆர்வத்துடன் சந்திக்கப் போனவர் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். அவர்கள் இருவரும் தங்கள் அந்தரங்க விஷயங்களைக் கூட எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்று தெரிந்தபின் அவர்களைச் சந்திக்கப் போவதையே தவிர்த்து விட்டார். நடந்த நிகழ்வுகளை எல்லாம் அஜீம் அகமதுக்குத் தெரிவித்து விட்டீர்களா என்று அவன் ஆட்களிடம் அவர் அடிக்கடி கேட்பதாகவும், அஜீம் அகமதுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் சொல்வதாகவும் அவன் ஆட்கள் சொன்னார்கள்.  

கடைசியில் அஜீம் அகமது அவரிடம் பேசுவது என்று முடிவு செய்தான்.


னார்தன் த்ரிவேதியின் அலுவலகத்தில் கட்சித் தொண்டனாக அஜீம் அகமதின் ஆள் இரவு ஏழு மணிக்கு வந்தான். “பாஸ் உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்” என்று தெரிவித்தவன் அஜீம் அகமதுக்குப் போன் செய்து அவன் குரல் கேட்டவுடன் ஜனார்தன் த்ரிவேதியிடம் தன் செல் போனைத் தந்தான்.

ஜனார்தன் த்ரிவேதி பரபரப்புடன் தன் உள் அறைக்குப் போய் அவனிடம் பேசினார். “அஜீம்ஜீ எப்படி இருக்கீங்க?”

“உங்க நட்பு இருக்கிற வரையில் எனக்கு என்ன குறைவு இருக்கமுடியும் த்ரிவேதிஜி” என்று அஜீம் அகமது உருது கலந்த ஹிந்தியில் சொல்ல அவன் குரல் கேட்டவுடனேயே ஜனார்தன் த்ரிவேதி உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பெற்றார்.

“நடந்த சம்பவங்களை எல்லாம் உங்கள் ஆட்கள் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் ஜீ. எல்லாம் நம் கை மீறிப் போய்கிட்டிருக்கு. நரேந்திரன் என்ற சைத்தான் அவன் இஷ்டப்படி எல்லாத்தையும் செய்துகிட்டிருக்கான். சஞ்சயையும், மதன்லாலையும் உங்க ஆட்கள் கண்டுபிடிச்சு ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடனேயே அதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்னு நம்பிக்கையோட போனேன். ஆனால் ரெண்டு பேரையும் வெளியே விட்டால் பேசியே என் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வெச்சிடுவாங்க போலருக்கு. அந்த அளவுக்கு மோசமாயிருக்கு நிலைமை”

“எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். எல்லாமே விசித்திரமாய் இருக்கு. இதுல நமக்குத் தெரியாத ஏதோ ஒன்னு இருக்குஜி. அது தான் புரியல”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “எந்த விசித்திரத்தையும் புரிஞ்சுக்கவும், வழிகாட்டவும் ஒரு ஆள் இந்தியால இருக்கார் அஜீம்ஜீ. ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா அவரை அமாவாசை ராத்திரி தான் நேர்ல சந்திக்க முடியும்”

தொடர்ந்து அவர் காளிங்க சுவாமியைப் பற்றி விரிவாகச் சொன்னார். அஜீம் அகமது இது போன்ற விஷயங்களில் சிறிதும் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் ஜனார்தன் த்ரிவேதி அவருடைய விஷயங்களில் எப்படியெல்லாம் காளிங்க சுவாமி நடப்பதை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார் என்று விவரித்தார். அவர் அடையப் போகும் தோல்வியையும் காளிங்க சுவாமி முன்கூட்டியே சொல்லியிருக்கிறார் என்பதைச் சொல்லி அதற்கு எந்தப் பரிகார பூஜையும் உதவாது என்பதால் தோல்வி நிச்சயம் என்று வெளிப்படையாகச் சொன்னவர் அவர் என்றும் ஜனார்தன் த்ரிவேதி சொன்ன போது அஜீம் அகமதுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

ஜனார்தன் த்ரிவேதி தொடர்ந்து சொன்னார். “அஜீம்ஜீ. அந்த சமயத்துல எத்தனையோ ஜோசியர்கள், சாமியார்கள் எல்லாம் என்னென்னவோ செய்தால் வெற்றி நிச்சயம்னு சொல்லி நான் அத்தனையும் செய்தேன். ஆனால் காளிங்க சுவாமி ஒருத்தர் சொன்ன மாதிரி தான் தேர்தல் முடிவும் இருந்துச்சு.  அதுல எனக்கு அவர் மேல வருத்தம் கூட இருந்துச்சு. இப்ப இங்கே சஞ்சய், மதன்லாலுக்கு பாம்பு கடிச்சது தான் பைத்தியம் பிடிக்க வெச்சிருக்கு. இந்த காளிங்க சுவாமி நூற்றுக்கணக்கான பாம்புகளுடனேயே வாழ்றவர். அவருக்கு பாம்புகள் மேல இருக்கற கட்டுப்பாடும் பாம்புகள் பத்தின ஞானமும் அபாரம். அதனால அவரைப் பாத்தா நடந்திருக்கிறது என்னங்கறதும், இனி என்ன செய்யலாம்கிறதும் தெளிவாய் தெரியும். அதனால நான் அடுத்த அமாவாசை ராத்திரி அவரைப் போய்ப் பார்க்கறதா இருக்கேன். எனக்கு ஒரு வேண்டுகோள். நீங்க இந்தச் சமயத்துல இந்தியா வரணும். நடக்கறது எனக்கு மட்டும் ஒரு சவால் அல்ல. நரேந்திரன் உங்களுக்கும் விடற சவாலா தான் இது இருக்கு.  நீங்க அமாவாசைக்குள்ளே இந்தியா வந்தா நாம சேர்ந்தே காளிங்க சுவாமியை சந்திக்கலாம். பிறகு என்ன செய்யலாம்னு முடிவெடுக்கிறது நமக்கு சுலபமாகும். என்ன சொல்றீங்க”

அஜீம் அகமது இப்போதும் இந்தியா வந்து விட்டாயிற்று என்று சொல்லவில்லை. ”கண்டிப்பாய் வர்றேன் த்ரிவேதிஜி. எனக்கும் உங்க காளிங்க சுவாமியைப் பார்த்துப் பேசி என்ன நடந்திருக்குன்னு தெரிஞ்சுக்கறதுல ஆர்வமா தான் இருக்கு. ஆனா நான் வரப் போறது உங்களைத் தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம். இந்தியா வந்த பிறகு இதே மாதிரி உங்களைத் தொடர்பு கொள்றேன்.”

அஜீம் அகமது பேசி முடித்து விட்டு யோசித்தான். இது போன்ற விஷயங்களில் அவனுக்குப் பொதுவாக நம்பிக்கை இல்லை என்றாலும் கூட எகிப்திலும் இது போன்ற ஒரு ஆசாமியைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அந்த ஆளும் துறவி தான். ஆக சாதாரண அறிவுக்கெட்டாத சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதில் ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகம் என்றாலும் கூட இருக்கும் ஒன்றிரண்டு ஆச்சரியங்களை அலட்சியப்படுத்திவிட முடியாது. ஜனார்தன் த்ரிவேதி விஷயத்தில் கூட ஒவ்வொரு தடவையும் வெற்றியாகட்டும் தோல்வியாகட்டும் சரியாக முன் கூட்டியே சொன்ன, பாம்புகளின் சூட்சுமங்கள் அறிந்த, பாம்புகளுடனேயே வசிக்கின்ற அந்த ஆளை நேரில் சந்தித்து வேண்டிய தகவல்களைத் தெரிந்து கொள்ள அவனுக்கும் ஆர்வமாகத் தான் இருந்தது.

அமாவாசைக்கு இன்னும் மூன்றே நாட்கள் தான் இருக்கின்றன…

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, August 25, 2022

சாணக்கியன் 19

 

ம்பி குமாரன் தன் வாழ்க்கையில் இப்படியொரு அவமானத்தை இது வரை சந்தித்ததில்லை. தோல்வியை விட, தோற்ற விதம் அவனை மிகவும் அவமானப்படுத்தியது. காந்தாரம் அவன் மண். தட்சசீலம் அவன் பிறந்து வளர்ந்த நகரம். அங்கே அவனுடைய எதிரிகள் நுழைந்து வென்று இது தான் உன் பலம் என்று கேவலப்படுத்தி விட்டார்கள். அவன் போருக்குத் தயாராகும் முன்பே அவனை வீழ்த்தி விட்டார்கள்.  கேகய நாட்டு அமைச்சர் இந்திரதத் அவன் இருப்பிடத்திற்கே வந்து அவனை ஒரு குறும்புக்கார வாண்டுப்பயலைப் பார்ப்பது போல் அலட்சியத்துடன் பார்த்ததும், பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் என்று அவனுக்குப் பாடம் நடத்தியதும் அவனை ஆக்ரோஷப்படுத்தியது. இந்திரதத்தின் பேச்சுகள் காதில் நாராசமாக விழுந்தன.  அவன் தந்தை இந்திரதத் சொல்வதெல்லாம் உண்மை என்பது போல அடிக்கடி தலையாட்டியது சித்திரவதையாக இருந்தது. ஆனாலும் கூட முதல் முறையாக ஆம்பி குமாரன் கஷ்டப்பட்டு மௌனம் காத்தான்.

 

அறிவுரைகளின் கடைசியில் இந்திரதத் மென்மையாகச் சொன்னார். “ஆம்பி குமாரனே. உனக்கு ஆசிரியராக இருந்த விஷ்ணுகுப்தருடன் நான் இந்த மண்ணில் கல்வி கற்றவன். அதனால் இந்த மண் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. எனக்குக் கல்வி தந்த இந்த நகருக்குப் படையோடு வர வேண்டியிருந்ததில் இப்போதும் வருத்தத்தை நான் உணர்கிறேன். ஆனால் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்பும் அப்படிச் செய்யாமல் இருப்பது வீரமும் அல்ல விவேகமும் அல்ல என்பதால்....”

 

ஆம்பிகுமாரனுக்கு  இந்திரதத்தின் நாக்கை இழுத்து அறுத்து வீச வேண்டும் என்று தோன்றியது. இந்திரதத் பேசிக் கொண்டே போனார். மறுபடியும் நாகரிக வார்த்தைகளில் வசவுகள்விஷ்ணுகுப்தரின் பெயரைச் சொன்னது அவனுக்கு மனக்கசப்பை மேலும் அதிகப்படுத்தியது. அந்த ஆணவ ஆசிரியரின் நண்பனா இந்த ஆள்…! அவர் குணங்களில் கொஞ்சம் இவரிடமும் இருக்கிறது. அவர் பிடிக்காத ஆட்களிடம் குறைவாகத் தான் பேசுவார். குறைவான பேச்சை அவர் பார்வை ஈடுகட்டி விடும். இந்த ஆள் நிறையப் பேசுகிறார். அவன் அங்கு வருவதற்கு முன்பும் அவன் தந்தையிடம் நிறைய பேசியிருந்தார். அவன் வந்த பின்னும் பேசுகிறார். ஆம்பி குமாரன் இறுகிய முகத்துடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமர்ந்திருந்தான். ஏமாற்றி, கோழைகளைப் போல் திருட்டுத்தனமாக இங்கு வந்து ஆக்கிரமித்து அதை வெற்றி போல காட்டிக் கொள்ளும் இந்த எதிரிகளிடம் அவனுக்கு பேச ஒன்றுமில்லை....

 

ஒருவழியாக பேசி முடித்து காந்தார அரசரை வணங்கி, அவனிடம் தலையசைத்து விட்டு இந்திரதத் விடைபெற்றுக் கொண்டார். அவர் சென்ற பிறகு தந்தையும் மகனும் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தனர். காந்தார அரசர் மகனாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து பின்னர் மெல்லக் கேட்டார். “சின்ஹரன் எங்கே போனான்?”

 

ஆம்பி குமாரன் அந்தப் பெயரைக் கேட்டவுடன் மனம் கொதித்தவனாகச் சொன்னான். “தெரியவில்லை. அவன் இங்கே ஒரு தாசியின் தாசனாக இருந்தான். அவள் இன்று அதிகாலையிலேயே ஊரை விட்டுப் போய் விட்டாள். அவளுடன் அவனும் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. பெண் பித்தன்...”

 

காந்தார அரசர் பெருமூச்சு விட்டார். சின்ஹரன் போன்ற ஒரு மாவீரன் ஒரு பெண்ணின் அடிமையாகி கடமை மறந்து ஆபத்து காலத்தில் ஊரை விட்டு ஓடி விட்டது காந்தாரத்தின் துர்ப்பாக்கியம் தான். ஏற்கெனவே இப்படி ஒரு இளவரசனைப் பெற்றிருக்கும் காந்தாரம் இன்னும் எத்தனை துர்ப்பாக்கியங்களைச் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.

”நம் ஒற்றர்கள் ஏன் இப்படி கேகய நாட்டில் இருந்து படை வருவதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை...” அவர் மெல்ல மகனைக் கேட்டார்.

 

ஆம்பி குமாரன் தர்மசங்கடத்துடன் நெளிந்து விட்டுச் சொன்னான். “சிறுபடை என்பதால் நம் எல்லையை எட்டும் வரை அவர்கள் நோக்கத்தை நம் ஒற்றர்கள் யூகித்திருக்க வாய்ப்பில்லை. …”

 

காந்தார அரசர் கேட்டார். “எட்டிய பின்….?”

 

ஆம்பி குமாரன் மௌனம் சாதித்தான். அவன் ஒற்றர்களுக்கு அதிக வேலையோ முக்கியத்துவமோ தரவில்லை என்பதனை தந்தையிடம் ஒத்துக் கொள்ள அவன் தன்மானம் விடவில்லை.  முக்கியமாக அவனும் காந்தாரத்தின் மீது கேகயம் படையெடுத்து வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போதும் கூட அவனால் நடந்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.  

 

“எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எனக்கு வாக்களித்த நீ என்ன பார்த்துக் கொண்டாய் ஆம்பி குமாரா. கேகய மன்னர் என் நண்பரான படியால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறார். இல்லா விட்டால் நாம் சிறையிலோ அல்லது இடுகாட்டிலோ அல்லவா இருந்திருக்க வேண்டி இருக்கும்?”

 

அவர் குற்றம் சாட்டும் தொனியில் பேச ஆரம்பித்தவுடன் ஆம்பி குமாரன் பொறுமை இழந்தான். இனி இவரிடமும் ஒரு பிரசங்கத்தைக் கேட்க அவன் தயாராக இல்லை. “உங்கள் நண்பரான கேகய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றிப் பேசாதீர்கள் தந்தையே. பெயருக்கு ஒரு தூதனை அனுப்பி எச்சரித்த அவர் அடுத்துச் செய்திருக்கும் காரியம் என்ன? இத்தனைக்கும் நீங்கள் தூதரிடம் எதிர்மறையாக எதையும் சொல்லி அனுப்பியிருக்கவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் வாக்களித்திருப்பதை நம்பாது அவர் படையை அனுப்பி இருக்கிறார். அந்தப் படையாவது முறைப்படி போர் அறிவிப்பைச் செய்து நம்முடன் போருக்கு வந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  அவர்கள் செய்ததில் மரபும் இல்லை. வீரமும் இல்லை….”

 

பொரிந்து தள்ளிய மகனை வேதனையுடன் பார்த்த காந்தார அரசர் சொன்னார். “அதைச் சொல்ல நீ தகுதி உடையவனாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார் மகனே. நீ அவர்களிடமிருந்து பசுமாடுகளைத் திருடிக் கொண்டு வந்ததும், ஆக்கிரமிப்பு செய்ததும் நேர் வழியிலா? அவர்கள் தரத்திலிருந்து சிறிது இறங்கியதற்கே இவ்வளவு வருத்தப்படுகிறாயே. நீ அவர்களுக்கு முன்னோடியாக இருந்தது உனக்குப் புலப்படவில்லையே….”

 

ஆம்பி குமாரன் கோபத்துடன் எழுந்து அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.நிஜங்களை சந்திக்க மறுப்பவன் நிம்மதியாக இருக்க வழியில்லை மகனே” என்று அவர் விரக்தியுடன் முணுமுணுத்தார்.

 

ம்பி குமாரன் அனுப்பிய ஆறு முரட்டு வீரர்கள் சேனாதிபதி சின்ஹரனைத் தேடி வந்த போது சின்ஹரனின் மாளிகையில் அவனுடைய மூத்த சேவகன் மட்டுமே இருந்தான். அவன் பல முறை சொல்லிச் சலித்த பதிலையே இப்போதும் சொன்னான். “அவர் இன்னும் வரவில்லை”

 

ஆம்பி குமாரனின் முரட்டு வீரர்கள் இந்த முறை அந்த வார்த்தைகளை நம்பி திரும்பிச் சென்று விடவில்லை.  மாளிகை முழுவதும் தேடிப் பார்த்து விட்டுத் தான் சென்றார்கள். ஒருவேளை சின்ஹரன் இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பார்கள் என்றே அந்த சேவகனுக்குத் தோன்றியது. செல்வதற்கு முன் அந்த வீரர்கள் அவனிடம் சொல்லி விட்டுப் போனார்கள். ”சேனாதிபதி வந்தால் இளவரசரை உடனடியாகச் சந்திக்கச் சொல் சேவகனே.”

 

ஆம்பி குமாரன் சின்ஹரனைப் பார்த்தவுடன் கொன்று விடும்படி அந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். சின்ஹரனை ஆக்கிரமித்துக் கொல்வது சுலபமல்ல என்பதால் அவர்களில் மூவருடைய குறுவாள்களில் விஷம் தடவப்பட்டிருந்தது. அது அந்தச் சேவகனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அவன் அவர்கள் உத்தேசத்தை அவர்களுடைய பார்வையிலும் நடவடிக்கைகளிலுமே உணர்ந்தான். சேனாதிபதி சின்ஹரன் ஒருவேளை ஆம்பி குமாரனைச் சந்திக்கச் சென்றாலும் உயிரோடு திரும்பி வர வாய்ப்பில்லை…

 

அந்தச் சேவகன் சின்ஹரனிடம் பல ஆண்டுகளாகச் சேவகம் புரிகிறான். எல்லோரும் நம்புவது போல் சின்ஹரன் தாசி மைனிகாவுடன் தட்சசீலத்தை விட்டுப் போயிருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. சின்ஹரன் அந்த தாசியை ஒரு வேசி போல் பார்க்கவில்லை. அவளிடம் காமத்தைப் போலவே உண்மையாகவே அன்பும் சின்ஹரன் வைத்திருந்தான் என்பது அந்தச் சேவகனுக்கும் தெரியும். ஆனால் நாட்டைத் தியாகம் செய்து விட்டு அவளுடன் சின்ஹரன் போகக்கூடியவன் அல்ல. சின்ஹரனைப் போன்ற நல்லவன், மாவீரன் காமத்தாலும் அன்பாலும் பிணைக்கப்பட்டிருக்கலாமே ஒழிய தாய்நாட்டுக்கு எதிராக என்றும் எதையும் செய்யக்கூடியவன் அல்ல என்பதில் அந்தச் சேவகனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஏதோ ஒரு சதியில் சின்ஹரன் சிக்கி இருக்கலாம்…..

 

இந்த எண்ணம் மனதில் வந்த பின் அந்தச் சேவகனால் சும்மா இருக்க முடியவில்லை. அந்தச் சதியிலிருந்து மீண்டு ஒருவேளை சின்ஹரன் திரும்பி வந்தால் இங்கே ஒரு சதி அவனுக்காகக் காத்திருக்கிறது என்பதை சின்ஹரன் அறிய மாட்டான். அவனை எச்சரிக்க வேண்டும். அது முக்கியம்…..

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

இன்று தினமலரில் சாணக்கியன் நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்!

 இன்று (25.08.2022) தினமலர், மதுரை பதிப்பில் சாணக்கியன் நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்! நன்றி: தினமலர்

Wednesday, August 24, 2022

Monday, August 22, 2022

யாரோ ஒருவன்? 99தீபக் தினமும் நாகராஜுடன் வாக்கிங் போவதற்கு ஒரு நாளும் தவறவில்லை. அதிகாலையில் எழுவது அவனுக்கு ஆரம்பங்களில் மிகவும் கஷ்டமாக இருந்த போதும் இப்போது பழகி விட்டது. தினமும் அந்த நேரமானால் அலாரம் இல்லாமலேயே தானாக அவன் விழித்துக் கொள்கிறான். இரண்டு நாட்களுக்கு முன் நாகராஜ் அடுத்த திங்கட்கிழமை  கோயமுத்தூரிலிருந்து போய் விடுவேன் என்று சொன்ன போது ஏதோ ஒரு சோகத்தை அவன் உள்மனம் உணர்ந்தது. அதை அவன் வெளிப்படையாக நாகராஜிடம் சொன்ன போது நாகராஜ் அவனைப் பார்த்து அன்பாய் புன்னகைத்தான்.

தீபக் கேட்டான். “நீங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சா அங்கிள்?”

நாகராஜ் சொன்னான். “முடியப் போகுது

அதை அன்று வேலாயுதத்திடம் சொன்ன போது அவர்அது என்ன வேலைன்னு கேட்டாயா?” என்று கேட்டார்.

தீபக் சொன்னான். “அவர் சில கேள்விகளுக்குச் சரியாய் பதில் சொல்றதில்லை. அதிகமா கேட்டால் இந்த அளவு நெருக்கமாய் இருக்கறதை தவிர்த்துடுவார்

அந்தப் பதில் வேலாயுதத்தை அதிருப்தியடைய வைத்தது. “நீ முன்ன மாதிரி இல்லைஎன்று சொன்னார்.

அந்த சமயத்தில் தர்ஷினியும் இருந்ததால் அவள் தாத்தாவைக் கடிந்து கொண்டாள். “கொஞ்சமாவது நாகரிகம் வேணும் தாத்தா. தனிப்பட்ட விஷயத்தை ஒருத்தர் சொல்ல விரும்பாட்டி துருவி துருவி கேட்கக்கூடாது. இத்தனை வயசாகியும் உங்களுக்கு இது தெரிய மாட்டேன்குதே       

இல்லம்மா. நம்ம பக்கத்து வீட்டுல ஒருத்தன் குடிவர்றான். பாம்பை எல்லாம் வீட்டுக்குள்ளே வெச்சிருக்கான். அவனைத் தேடி யார் யாரோவெல்லாம் வர்றாங்க. திடீர்னு போறேன்னு சொல்றான். ஏன் வந்தான்னும் தெரியல. ஏன் போறான்னும் தெரியல. நாளைக்கு எதோ ஒரு பிரச்சனையாயி யாராவது நம்ம கிட்டே கேட்டா பக்கத்து வீட்டுக்காரங்க நாமளே ஒன்னுமே தெரியாதுன்னு சொன்னா நல்லா இருக்குமா?” என்று வேலாயுதம் சமாளித்தார்.

தீபக் நேற்று தாயிடம் நாகராஜ் அடுத்த திங்கட்கிழமை கோயமுத்தூரை விட்டுப் போய் விடுவான் என்று சொன்ன போது ரஞ்சனி மகனிடம் கெஞ்சினாள். “டேய் அதுக்குள்ளே எப்படியாவது பேசி ஒரே ஒரு தடவை அவரைப் பார்க்க ஏற்பாடு பண்ணுடா. எனக்கு ஒன்னு ரெண்டு கேள்வி மட்டும் அவர்கிட்ட கேட்க வேண்டியிருக்கு

தீபக் சொன்னான். “என்ன கேள்வின்னு சொல்லு. நானே அவர் கிட்ட கேட்டு உனக்கு சொல்றேன்

ரஞ்சனி அதற்குச் சம்மதிக்கவில்லை. “அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. அவர் கிட்ட அப்பாயின்மெண்ட் மட்டும் வாங்கிக் கொடு போதும். நானே அவர் கிட்ட கேட்டுக்கறேன்.”

தீபக் சொன்னான். “அஞ்சு லட்சம் ரெடி பண்ணச் சொன்னேனே. பணம் ரெடியா?”

ரஞ்சனி மகனை முறைத்தாள். தீபக் சிரித்துக் கொண்டே சொன்னான். “சரி சரி. முறைக்காதே. அவர் கிட்ட உனக்காக கெஞ்சி கேட்கறேன்

அன்று காலை வாக்கிங் கிளம்பிய போது இன்றைக்கு எப்படியாவது இது விஷயமாய் நாகராஜிடம் பேசி விட வேண்டும் என்று தீபக் உறுதியாக நினைத்துக் கொண்டான். ’அம்மா பூச்செடிகள் எல்லாம் நிறைய வைத்திருக்கிறார்கள். வேண்டுமானால் அவர்களே வந்து உங்கள் தோட்டத்தில் செடியை நட்டுத் தருவார்கள்என்ற வகையில் முன்பே அவன் சொல்லி வைத்திருந்தது இனி உதவாது. ஊரை விட்டே போகிறவன் இனி அந்த வீட்டில் பூச்செடிகள் வைப்பதில் ஏன் அக்கறை காட்டப் போகிறான்?

எதிர்ப்பட்ட நாகராஜுக்கும், சுதர்ஷனுக்கும் குட்மார்னிங் சொல்லி விட்டு வழக்கம் போல நாகராஜின் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு அவர்களுடன் நடக்க ஆரம்பித்தான். இப்படி விரல் பிடித்து நடப்பது இப்போதெல்லாம் இயல்பான விஷயமாகி விட்டது.

அங்கிள் வீட்டுல எங்கம்மா நச்சரிப்பைத் தாங்கவே முடியல. நீங்க போறதுக்கு முன்னாடி அவங்கள ஒரே ஒரு தடவை பார்த்துப் பேசிடுங்களேன். அவங்களுக்கு எதோ ஒன்னு ரெண்டு கேள்வி கேட்க இருக்காம். அது என்னன்னு சொல்லும்மா. நானே அவர் கிட்ட கேட்டு உனக்குச் சொல்றேன்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க

நாகராஜ் ஒன்றும் சொல்லாமல் நடக்க ஒரு நிமிடம் பொறுத்துப் பார்த்து விட்டு தீபக் சொன்னான். “அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்

நாகராஜ் சொன்னான். “பாரு தீபக். நான் முதல்லயே சொல்லியிருக்கேன். நான் அப்பாயின்மெண்ட் இல்லாம யாரையும் சந்திக்கறதில்லை. ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்கணும்.”

தீபக் உடனே சொன்னான். “நீங்க யாரோ ஒரு அதிகாரியை அடிக்கடி சந்திக்கிறீங்களாம். அந்த மாதிரி இதையும் ஒரு விதிவிலக்கா வெச்சுக்கோங்க அங்கிள். நான் இனி யாருக்கும் உங்க கிட்ட அப்பாயின்மெண்ட் கேட்க மாட்டேன்... இது சத்தியம்

நாகராஜ் புன்னகையுடன் கேட்டான். “யாரோ ஒரு அதிகாரியை நான் அடிக்கடி சந்திக்கிறேன்னு உன் கிட்ட யார் சொன்னது?”

வேலாயுதம் பெயரை தீபக் சொல்லவில்லை. “எப்படியோ எனக்கு தெரிஞ்சுது. அதை விடுங்க. சொன்னது உண்மையா பொய்யா அதை மட்டும் சொல்லுங்க

நாகராஜ் ஒன்றும் சொல்லவில்லை. தீபக் தொடர்ந்து நச்சரித்தான். “அங்கிள். நீங்க ஊரை விட்டு சீக்கிரமாவே போகலைன்னு வெச்சுக்கோங்க. நான் கண்டிப்பா நச்சரிச்சிருக்க மாட்டேன். நீங்க போயிட்டீங்கன்னா நான் வேணாலும் எப்பவாவது ஒரு தடவையாவது உங்கள பாக்கறதுக்குன்னே கூட உங்க ஊருக்கு வருவேன். ஆனா அம்மாக்கு வர முடியறது கஷ்டம். நான் என் அம்மா கேட்டு இது வரைக்கும் செய்யாதது ஒன்னுமேயில்லை அங்கிள். அதனால தான் கெஞ்சிக் கேட்டுக்கறேன்..”

நாகராஜ் பதில் எதுவும் சொல்லாமல் நடக்கவே தீபக் சொன்னான். “சரி அங்கிள். உங்களை என் நிலைமைல வெச்சுக்கோங்க. உங்க அம்மா தினம் உங்கள நச்சரிக்கிறாங்க. உங்களுக்கு உங்கம்மான்னா உயிர். அப்படி இருக்கறப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? அதை மட்டும் சொல்லுங்க

நாகராஜ் சுதர்ஷனிடம் சொன்னான். “எத்தனை சக்தி எனக்கு இருந்து என்ன பிரயோஜனம்? இந்தப் பையனோட வாயை மூட வைக்கிற சக்தி என் கிட்ட இல்லையே சுதர்ஷன், என்ன பண்றது?’

தீபக் சொன்னான். “வேற ஒன்னும் பண்ண வேண்டாம். எங்கம்மா என்னைக்கு எந்த நேரத்துல உங்கள வந்து பாக்கலாம். அதை மட்டும் சொல்லுங்க போதும்

நாகராஜ் சிரித்து விட்டான். ”சரி ஞாயிற்றுக்கிழமை மதியம் மூனு மணிக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு. போதுமா?”

தேங்க்ஸ் அங்கிள். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இன்னும் உங்கள நீங்க போகிற வரைக்கும் நச்சரிக்கவே மாட்டேன். இது சத்தியம்  என்று நாகராஜின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு தீபக் சொன்னான். அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

வேறு விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசினார்கள்.  திடீரென்று சுதர்ஷன் கேட்டான். “தீபக் உன் கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடுவியா இல்லயா?”

“அதுக்கு இன்னும் மூனு நாலு வருஷம் இருக்கு. ஆனா முதல் கல்யாணப் பத்திரிக்கையே அங்கிளுக்குத் தான்…”

“பொண்ணு யாரு. எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு தானே?”

தீபக் லேசான வெட்கத்துடன் தலையசைத்தான்.    

நாகராஜ் கேட்டான். “அவங்க வீட்லயும், உங்க வீட்லயும் சம்மதம் சொல்லிட்டாங்களா?”

“இது பத்தி வீட்டுல எல்லாம் இன்னும் பேசல. ஆனா நாங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டோம்…”

வாக்கிங் முடிந்து நாகராஜின் வீட்டை அவர்கள் நெருங்கி விட்டார்கள். வழக்கம் போல் வேலாயுதம் வெளியில் தெரிந்தார். உற்சாகமாக நாகராஜுக்கு “குட் மார்னிங்” சொன்னார்.

அவன் புன்னகையுடன் “குட் மார்னிங்” சொன்னாலும் அவருடன் பேச நின்று விடாமல் உள்ளே போய் விட்டான். சுதர்ஷனும் அவனைப் பின் தொடர்ந்து உள்ளே போய் விட வேலாயுதம் வெளியே பாய்ந்து வந்து தீபக் வேகமாகப் போய் விடாதபடி அவன் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். “என்னடா இன்னைக்கு ரொம்பவே சந்தோஷமாய் தெரியறே”

“ஒன்னுமில்லை தாத்தா. அம்மா அங்கிளைப் பார்த்து ஏதோ கேட்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. பல நாளா நச்சரிச்சு இன்னைக்கு தான் அங்கிள் கிட்ட அம்மாவுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கினேன். அங்கிள் அம்மாவை ஞாயிற்றுக்கிழமை மதியம் மூனு மணிக்கு வரச் சொல்லியிருக்கார்.”

வேலாயுதம் பிடி தானாகத் தளர தீபக் ”வரேன் தாத்தா” என்று சொல்லி வேகமாக நகர்ந்தான்.

வேலாயுதம் திகைப்புடன் அப்படியே சிறிது நேரம் நின்றிருந்தார். ரஞ்சனிக்கு நாகராஜிடம் கேட்க என்ன இருக்கிறது என்றோ, அதற்கு நாகராஜ் என்ன பதில் சொல்வான் என்றோ தெரியாவிட்டாலும் விளைவுகள் நல்லதாக இருக்காது என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, August 18, 2022

சாணக்கியன் 18


ரப் போகின்ற ஆபத்தை உணராமல் தட்சசீல நகர வாயிற்கதவு அதிகாலை எப்போதும் போல திறக்கப்பட்டது. வாயிற்கதவின் மேல் மாடப்பகுதியில் இரண்டு வீரர்கள் தங்கள் வழக்கமான இடங்களில் நின்று கொண்டிருந்த போதும் அவர்களும் எந்த ஆபத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்று எப்போதும் போல ஒரு நாள் என்ற எண்ணமே அவர்களிடமும், கீழே வாயிற்பகுதியில் நின்று கொண்டிருந்த காவல்வீரர்களுக்கும் இருந்தது.  தட்சசீல நகரத்தின் உள்ளே நுழைய முந்தைய இரவிலிருந்து காத்துக் கொண்டிருந்தோரும், நகரத்தின் வெளியே செல்ல அதிகாலைக்கு முன்பே வந்து காத்திருந்தோரும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் ஆரம்பிக்க வாயிற்காவலர்களின் கவனம் எல்லாம் பயணிகளின் மீதே தங்கியிருந்தது. நகரின் தலைமைக் காவல் அதிகாரி குதிரை மீதமர்ந்து தன் கூர்மையான பார்வையைப் பயணிகள் மீது வைத்திருந்தான். அவர்கள் எல்லோருக்கும் அது வழக்கமான ஒரு சாதாரணமான நாளாய் தான் ஆரம்பித்தது.

 

அப்போது தான் மூன்று மாட்டு வண்டிகள் நகரத்தின் உள்ளேயிருந்து வெளியேற வாயிற்கதவை நோக்கி வந்து கொண்டிருந்தன. பொதுவாக உள்ளே இருந்து வெளியே போவோர் மீது காவலர்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. வருபவர்கள் மீதே அவர்கள் கவனம் மிகுதியாக இருக்கும். புதியவர்களாக இருந்தால் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் வேலை தலைமைக் காவல் அதிகாரிக்கு உண்டு. வருபவர்கள் சரியான அடையாளச்சான்று வைத்திருக்கிறார்களா என்று சோதித்து அவர்களால் நகருக்கு எந்த ஆபத்துமில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய வேலை அவனுடையது. அதனால் அவனும் உள்ளேயிருந்து வெளியேற வந்து கொண்டிருக்கும்  மூன்று மாட்டு வண்டிகள் குறித்து பெரிய அக்கறை காட்டவில்லை. மற்ற காவலர்களும் வெளியே செல்வதற்காக வந்து கொண்டிருக்கும் அந்த மாட்டு வண்டிகள் மீது சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இருக்கவில்லை.

 

வாயிற்கதவை எட்டுவதற்கு சுமார் 120 அடிகள் இருக்கும் போது மாட்டு வண்டிகள் பின்னால் வருபவர்களுக்கு வழிவிட்டு ஓரமாக நின்றன. மூன்றாவதாக இருந்த மாட்டு வண்டியிலிருந்து ஒருவன் அவசரமாக இறங்கி வந்த வழியே ஓடிச் சென்றான். முதல் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவன் கத்தினான். “சீக்கிரம் வா. அதிக நேரம் காத்திருக்க முடியாது.”

 

அந்த ஓடிப் போனவனுக்காக மூன்று மாட்டு வண்டிகளும் காத்துக் கொண்டிருப்பது போல் பார்வையாளர்களுக்குத் தோன்றுவது போலத் தான் காவலர்களுக்கும் தோன்றியது. சிறிது நேரத்தில் வேறு சில வணிகர்கள் நகரை விட்டு வெளியேற வருபவர்கள் போல் வந்தார்கள். மாட்டு வண்டிகள் அருகே வந்ததும் அவர்கள் அந்த வண்டியில் இருப்பவர்களுடன் எதோ பேசிக் கொண்டு நின்றார்கள்.  இதிலும் காவலர்கள் சந்தேகப்படக் காரணமிருக்கவில்லை.   

 

திடீரென்று தொலைவில் ஒரு படை வந்து கொண்டிருப்பதை வாயிற் கதவின் மேல் மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன் கவனித்தான். அவனுக்குத் தன் கண்களை ஒரு கணம் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தவன் பிறகு கத்தினான். “ஆபத்து. ஒரு படை நம் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது

 

மற்ற காவலர்களும், தலைமைக் காவல் அதிகாரியும் ஒரு கணம் சிலையாகி மறுகணம் சுறுசுறுப்பானார்கள் தலைமைக் காவல் அதிகாரி கத்தினான். “வாயிற் கதவை மூடுங்கள்வாயிற்காவலர்கள் வாயிற்கதவை மூடத் தயாராக வாயிற்கதவை ஒட்டி, அகழிக்கு மேல் இருந்த மரப்பாலத்தை எதிர்ப்புற சாலையிலிருந்து பின்னுக்கு இழுத்துக் கொள்ள வேக வேகமாக வாயிற்கதவருகே இருந்த சக்கர வளையத்தைச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

 

ஆபத்து வருகிறது என்றால் முதலில் வாயிற்காவலர்கள் செய்யும் வேலை அது தான். அந்த மரப்பாலம் பின்னுக்கு இழுத்துக் கொள்ளப்பட்டால் யாரும் ஆழமான அந்த அகழியைத் தாண்டி நகருக்குள் நுழைய முடியாது.

 

ஆனால் பெரிய வாயிற்கதவை மூடவும், மரப்பாலத்தை  பின்னுக்கு இழுக்கவும் காவலர்கள் அவசரமாக முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் அதைச் செய்ய விடாதபடி மூன்று மாட்டு வண்டிகளிலிருந்தும் வாள்கள், ஈட்டிகள், ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு பயணிகள், வணிகர்கள் வேடங்களில் இருந்த கேகய நாட்டு வீரர்கள் காந்தார நாட்டுக் காவலர்களைத் தாக்கப் பாய்ந்தார்கள். தலைமைக் காவலனும் மற்ற காவல் வீரர்களும் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக வீரமாகவும், ஆக்ரோஷமாகவும் சண்டையிட்ட கேகய நாட்டு வீரர்கள் தங்கள் படை வரும் வரை காந்தார வீரர்கள் வாயிலை மூடி விடாதபடியும், மரப்பாலத்தை அகழி மேலிருந்து விலக்கி விடாதபடியும் பார்த்துக் கொண்டார்கள்.

 

கேகயப் படை நெருங்கி விட்டதைப் பார்த்த தலைமைக் காவல் வீரன் இன்னொரு வீரனை ஆம்பி குமாரன் மாளிகைக்கு அனுப்பி விட்டு, சேனாதிபதி மாளிகைக்குத் தான் முதலில் விரைந்தான். சின்ஹரன் மாவீரன் மட்டுமல்லாமல் வேகமாகச் செயல்படுபவன். சேனாதிபதி முந்தைய இரவில் வெளியே சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை என்ற செய்தி பேரிடியாய் அவன் மேல் இறங்கியது

 

ம்பி குமாரன் முந்தைய இரவுக் களியாட்டங்களில் களைத்துப் போய் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். அவனுடைய காவல் வீரன் அவனை எழுப்பிச் சொன்ன செய்தி காதிலிருந்து மூளை வரை செல்ல சிறிது நேரம் ஆயிற்று. மூளைக்கு எட்டிய செய்தியை அவனால் உடனே நம்ப முடியவில்லை. “என்ன சொல்கிறாய் வீரனே?” என்று கேட்டு மறுபடியும் தகவல் பெற்றுக் கொண்ட  ஆம்பி குமாரன் அதன் பின் தாமதிக்காமல் துள்ளி எழுந்தான். “சின்ஹரனுக்குத் தகவல் தெரிவித்தாகி விட்டதா?” என்று குறுவாளை இடையில் சொருகிக் கொண்டு, பெரிய வாளைக் கையில் உருவிக் கொண்டு கேட்டான்.

 

சேனாதிபதி நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லையாம்.” என்ற வீரனின் பதில் ஆம்பிகுமாரனையும் திகைக்க வைத்தது. கேகயப்படை தட்சசீலத்திற்குள் நுழைந்த தகவல் மற்ற சிறு படைத்தலைவர்களையும் வீரர்களையும் சென்றடைந்து அவர்கள் அனைவரும் தயாராகி ஒன்று கூடுவதற்குள் கேகய நாட்டுப்படையின் ஒரு பகுதி காந்தார அரசரின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டது. 

 

இந்திரதத் ஆரம்பத்திலிருந்தே இந்த முயற்சியில் வேகமும் காந்தார அரண்மனையை ஆக்கிரமிக்கும் கவனக்குவிப்பும் மட்டுமே  முக்கியம் என்று தன் படைவீரர்களிடம் சொல்லியிருந்தார். ஆம்பிகுமாரன் தயாராகி படை திரட்டுவதற்குள் இது நடந்து விட வேண்டும் என்று கேகயப்படை ஒரே குறிக்கோளோடு வேகமாக முன்னேறியது அவர்கள் வெற்றியை மிக எளிதாக்கி விட்டது. காந்தாரம் போரைத் துவக்குவதற்கு முன்பே கேகயம் அங்கு வெற்றிக் கொடி நாட்டி விட்டது.

 

காந்தார அரசர் முன் வந்து தலை தாழ்த்தி நின்ற வீரன் சொன்னான். “கேகய அமைச்சர் இந்திரதத் தங்களைக் காண அனுமதி கேட்கிறார் அரசே

காந்தார அரசர் விரக்தியுடன் சொன்னார். “தோற்றவர்களிடம் வென்றவர்கள் என்றும் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்று சொல் வீரனே. அவர்களது கைதி அவர்கள் கட்டளை என்னவென்று அறிந்து கொள்ளக் காத்திருப்பதாகச் சொல்

 

வீரன் கண்கள் ஈரமாக அங்கிருந்து தயக்கத்துடன் நகர்ந்தான். சிறிது நேரத்தில் கூப்பிய கரங்களுடன் இந்திரதத் நுழைந்தார். “காந்தார அரசருக்கு இந்த அடியவனின் வணக்கங்கள். இந்தச் சூழலில் தங்களைக் காண்பதில் தங்களை விட அதிகமாக அடியவன் வருந்துகிறேன் அரசரே. ஆனால் தங்கள் மகன் எல்லா அமைதிப் பாதைகளையும் அடைத்து விட்டதால் எங்களுக்கு இந்த வழியிலேயே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது….”

 

இந்திரதத் மிகுந்த பணிவுடன் தலை தாழ்த்தி வணங்கி நிற்க காந்தார அரசர் வருத்தத்துடன் சொன்னார். “நான் அறிவேன் கேகய அமைச்சரே. பிள்ளைகள் சரியில்லாமல் இருக்கையில் முதுமை மனிதனுக்குப் பெரிய பாரமே. அந்த மனிதன் அரசாள்பவனாக இருந்தால் அது அவனுக்குக் கூடுதல் துர்ப்பாக்கியம். அதை விடுங்கள். எங்களை வென்று வந்திருக்கும் நீங்கள் எனக்கு என்ன கட்டளை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் நலமாயிருக்கும்

 

இந்திரதத் சொன்னார். “தயவு செய்து கட்டளை போன்ற பெரிய வார்த்தைகளைத் தாங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அடியவன் தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்கள் நண்பரான எங்கள் மன்னர் உங்களுக்குத் தன் மரியாதை வணக்கத்தை என் மூலம் அனுப்பி இருப்பதுடன் தங்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார் காந்தார அரசே. நட்பு ரீதியாகவும், அமைதி மார்க்கத்திலும் அனுப்பிய செய்திகள் தங்கள் மகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதால் எங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் எடுக்க வேண்டியிருந்த இந்த நிர்ப்பந்த முடிவில் எங்களுக்கும் வருத்தமுண்டு அரசே….”

 

பெருந்தன்மையின் காரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகளில் காந்தார அரசரின் மனம் தங்கவில்லை. அடுத்தவர் கருணையிலும் தயவிலும் கிடைக்கும் மரியாதைகள் மனக்காயங்களுக்கு மருந்தாகி விடுவதில்லை.  கேகய நாட்டின் இந்த அதிர்ச்சி வைத்தியமாவது அவர் மகனை மனம் மாற வைக்குமானால் கடைசி காலத்தை அவர் சிறிது நிம்மதியுடன் கழிப்பார். ஆம்பி குமாரன் மாறுவானா?

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.