சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 29, 2020

சத்ரபதி 131


சில துக்கங்கள் காலத்தினாலும் கரைக்க இயலாதவை. அதை சிவாஜியும் தன் நண்பன் தானாஜி மலுசரேயின் மறைவில் உணர்ந்தான். நாளாக ஆக மனதில் கனம் கூடிக் கொண்டே போனதேயொழிய குறையவில்லை. ’மகன்  திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தவனை நாம் அழைத்து இந்த வேலையை ஒப்படைத்து அவனை மரணத்திடம் தள்ளி விட்டோமே’ என்ற குற்றவுணர்ச்சியும் நண்பனின் மரண துக்கத்தில் சேர்ந்து கொண்டதால் அவன் அதிலிருந்து மீள முடியாமல் மிகவும் வேதனையில் இருந்தான்.

தானாஜி மலுசரேயின் மறைவில் சிவாஜி அளவுக்கே துக்கத்தை உணர்ந்த இன்னொரு நண்பன் யேசாஜி கங்க். அவனுக்கும் நண்பனுடனான மறக்க முடியாத இளமைக்கால நினைவுகள் நிறைய இருந்தன. சிவாஜி முதல் முதலில் வசப்படுத்திய கோட்டையான டோரணாக் கோட்டைத் தலைவனுக்கு தங்கக்காசு முடிச்சுகள் தந்து கோட்டையை வசமாக்கிக் கொள்ள யேசாஜி கங்கும், தானாஜி மலுசரேயும், பாஜி பசல்கரும் தான் போனார்கள். அந்த மூவரில் இருவர் இப்போது உயிரோடு இல்லை. இப்போது சிவாஜியின் இளமைக்கால நெருங்கிய நண்பர்களில் அவன் மட்டுமே உயிருடன் இருக்கிறான். நண்பன் மரண வேதனை அவனையும் துக்கத்தில் ஆழ்த்தினாலும் குற்றவுணர்ச்சியும் சேர்ந்து சிவாஜி படும் வேதனையை அவனால் சகிக்க முடியவில்லை.

யேசாஜி கங்க் சிவாஜிக்கு ஆறுதல் சொன்னான். ”சிவாஜி. வீரமரணம் ஒவ்வொரு வீரனும் வேண்டிக் கொள்வதே அல்லவா? அப்படி இருக்கையில் நீ ஏன் இன்னும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்? அதுவும் வெற்றி தேடித் தந்து விட்டு எதிரியையும் வதைத்து விட்டுத் தான் தானாஜி இறந்திருக்கிறான். நம் நண்பன் பாஜி பசல்கரின் மரணமும் இப்படியே தான் நடந்திருக்கிறது. அவர்கள் இறந்ததற்காக நாம் வருத்தப்படுவது இயல்பு என்றாலும் அந்தத் துக்கத்தை நீட்டித்துக் கொண்டு போவது சரியல்ல. நினைக்க எத்தனையோ நல்ல நினைவுகளைத் தந்து விட்டே நம் நண்பர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். நீ இப்படி வருத்தப்படுவதை அவர்கள் எந்த உலகில் இருந்தாலும் பொறுக்க மாட்டார்கள்….”

சிவாஜிக்கு தானாஜி மலுசரே போருக்குக் கிளம்பும் முன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது. அவனும் கிட்டத்தட்ட இதே தொனியில் அல்லவா பேசி விட்டுப் போனான்.  “நம் நண்பன் பாஜி பசல்கர் எந்த உலகில் இருந்தாலும் உணர்வு நிலையில் நம் முன்னேற்றங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பான் சிவாஜி. இறந்தாலும் மனிதர்கள் தாங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்களிடமிருக்கும் தொடர்பை முழுவதுமாக இழந்து விடுவதில்லை என்று ஒரு சாது சொல்லக் கேட்டிருக்கிறேன். நுண் உணர்வு நிலையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் என்று அவர் சொல்வார். எந்த அளவு அது உண்மை என்று தெரியவில்லை….”

தானாஜி தனக்கும் சேர்த்துத் தான் முன்பே சொல்லி விட்டுப் போயிருக்கிறானோ? நினைக்கையில் சிவாஜியின் கண்கள் ஈரமாயின….

எல்லாத் துக்கங்களுக்கும் மருந்து முழுமனதுடன் ஈடுபடும் செயல்களே என்று திடமாக நம்பிய யேசாஜி கங்க் அடுத்து ஆக வேண்டிய செயல்களை சிவாஜிக்கு நினைவுபடுத்தினான். “சிவாஜி ஔரங்கசீப்புக்கு சவால் விடுக்கும் விதமாக தானாஜி ஆரம்பித்து வைத்த வெற்றியை நாம் தொடர வேண்டும். அடுத்தது புரந்தர் கோட்டையையும் மற்ற கோட்டைகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். மிக முக்கியமாய் நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியம் உள்ளது. இதை நானும் தானாஜியும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசிக் கொண்டோம். இருவருமாகச் சேர்ந்து உன்னிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தோம். அவன் இறந்து விட்டதால் நான் தனியாக உன்னிடம் சொல்ல வேண்டிய நிலைமை உருவாகி விட்டது….”

சிவாஜி ஒரு கணம் சோகத்திலிருந்து ஆர்வத்துக்கு மாறினான். “சொல். என்ன அது?”

“நீ முறைப்படி முடிசூட்டிக் கொள்ள வேண்டும். உன்னை அரசன் என்றே நம் மக்கள் அழைத்தாலும், மற்றவர்கள் புரட்சிக்காரனாகவே நினைக்கிறார்கள். சொல்கிறார்கள்…. அதை நாம் மாற்ற வேண்டும்…. ஒரு நல்ல நாள் பார்த்து முறைப்படி நீ முடிசூட்டிக் கொண்டு மன்னன் என்பதை   உலகத்திற்கு அறிவிக்க வேண்டும்…. இது நம் நலம் விரும்பிகள் பலரும் என்னிடமும், தானாஜியிடமும் தெரிவித்த கோரிக்கை….. நாங்களும் அதையே விரும்புகிறோம்…. நாங்கள் இருவரும் சேர்ந்து ‘சத்ரபதி’ என்ற பட்டத்தையும் கூடத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம்…..”

சிவாஜி மெல்லக் கேட்டான். “பட்டங்களில் என்ன பெருமை இருக்கிறது? அடுத்தவர்கள் அங்கீகரித்து அழைக்கும் பட்டங்களில் நாம் அற்ப திருப்தியை விடக் கூடுதலாக என்ன பெற்று விடப் போகிறோம்?”

”உனக்கு அதில் பெருமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உன்னைச் சார்ந்திருப்பவர்கள் அதில் பெருமையை உணர்கிறோம்….”

சிவாஜி பின்பு ஜீஜாபாயிடம் யேசாஜி கங்க் சொன்னதைத் தெரிவித்த போது அவளும் அவன் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னாள். அவளுக்கு தானாஜியும், யேசாஜியும் தேர்ந்தெடுத்திருந்த சத்ரபதி என்ற பட்டம் மிகவும் பிடித்திருந்தது. ராஜா என்ற பட்டம் வெறும் அரசன், ஆள்பவன் என்ற அர்த்தத்தை மட்டுமே தரும். ஆனால் சத்ரபதி என்ற பட்டம் வித்தியாசமாக இருந்தது. சத்ர என்றால் குடை, பதி என்றால் ஆள்பவன். சத்ரபதி என்றால் ஒரு குடையின் கீழ் மக்களைக் காத்து ஆள்பவன் என்ற பொருள் வரும். அவள் மகன் சிவாஜி வெறுமனே ஆள்பவன் அல்ல. மக்களை ஒரு குடையின் கீழ் பாதுகாத்து ஆள்பவன்….. சிவாஜிக்கு இது மிகவும் பொருத்தம் என்று அவளுக்குத் தோன்றியது. தாதாஜி கொண்டதேவ் உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்தப் பட்டத்தைத் தன் மாணவனுக்குப் பொருத்தம் என்று சிலாகித்திருப்பார் என்று ஜீஜாபாய் நினைத்தாள்.

ஜீஜாபாயும் அதை ஆதரித்துச் சொன்ன பிறகு சிவாஜி யோசிக்க ஆரம்பித்தான். யேசாஜி கங்க் ஒரு தீர்மானமான பதிலை அவனிடமிருந்து பெறாமல் செல்வதாயில்லை. அவன் வற்புறுத்தல் தாங்காமல் சிவாஜி சொன்னான். “சரி யேசாஜி. ஆனால் என் மனதில் நான் இன்னும் அடைய வேண்டிய சில உடனடி இலக்குகள் இருக்கின்றன. அதை நான் சாதித்து முடித்த பின் முடிசூட்டிக் கொள்கிறேன்….”

யேசாஜி கங்க் தன் நண்பனை அன்புடன் அணைத்துக் கொண்டு சொன்னான். “அது சீக்கிரம் நடந்து முடிய நீ உன் அன்னை பவானியிடம் வேண்டிக் கொள்…” சிவாஜி-பவானி கூட்டணியில் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருப்பதை யேசாஜி பார்த்திருந்தவன். அது தொடரும் என்றும் அவன் நம்புகிறான்….

மறுநாள் சிவாஜி நண்பனின் மரணத் துக்கத்திலிருந்து மீளவும், முடிசூட்டுவது குறித்துச் சொல்லி ஆசிகள் பெறவும் அவன் துறவி இராமதாசரிடம் சென்றான். அவர் துறவியானாலும் சமூக அக்கறையும், சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவரும் கூட. ஞானத்திலோ அவர் மிக ஆழமானவர். சிவாஜி பல முறை அவன் தத்துவ ஞானம் குறித்து அளவளாவுவதற்காக அவரைச் சந்தித்திருக்கிறான். இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவரிடம் பேசி விட்டுத் திரும்பும் போதெல்லாம் அவனுடைய மனமும், அறிவும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அந்த நிலை இப்போதும் அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது.

சுவாமி இராமதாசர் சிவாஜியைப் பார்த்தவுடனேயே அவன் முகத்தில் தங்கி இருந்த துக்கத்திற்குக் காரணம் கேட்டார். சிவாஜி காரணம் சொன்னவுடன் அவர் சொன்னார். “சிவாஜி! மரணம் மனிதர்களால் நிச்சயிக்கப்படுவதில்லை. அது விதியால் ஒருவன் பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. யார் எந்த நேரத்தில்  இறக்க வேண்டும் என்று விதி நிச்சயிக்கிறதோ அந்த நேரத்தில் தான் எவரும் இவ்வுலகில் இறந்தாக வேண்டும். நீ போருக்கு அழைத்திருக்கா விட்டாலும், சொந்த வீட்டிலேயே இளைப்பாறிக் கொண்டு தானாஜி அமர்ந்திருந்திருந்தாலும் அந்த நேரத்தில் அவன் இறந்து தான் இருப்பான். மரணத்திற்கு ஆயிரம் காரணங்களை விதி ஏற்படுத்த முடியும். அதனால் விதியின் தீர்மானத்திற்கு நீ உன்னைக் குறை கூறிக் கொள்வது அறியாமையே ஒழிய வேறில்லை….”

சிவாஜி யோசித்தான். மரணம் முன்பே நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் தான் ஏதாவது விதத்தில் நிகழ்கிறது என்றால் அந்த நேரத்தில் தானாஜி சாதாரண விபத்திலோ, ஒரு நோயிலோ இறக்காமல் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தது ஒருவிதத்தில் அவனுக்குப் பெருமையே என்று ஒருவழியாக அவன் மனம் ஆறுதல் அடைந்தது.

பின் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள நண்பனும், நலம் விரும்பிகளும் வற்புறுத்துவது குறித்துச் சொல்லி அதற்கு அவரின் ஆசிகளைக் கேட்டுக் காலில் விழுந்து வணங்கினான்.

ஆசி வழங்கிய இராமதாசர் சிறிது நீர், சிறிது மண், சில கூழாங்கற்கள், சிறிது குதிரைச் சாணம் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு மறுபடி அவரை வணங்கி விட்டு சிவாஜி கிளம்பினான்.

ராஜ்கட் மாளிகையை அவன் அடைந்து இராமதாசர் தந்ததைக் காட்டிய போது ஜீஜாபாய் கோபப்பட்டாள். “என்ன இது?”

(தொடரும்)
என்.கணேசன்

Saturday, June 27, 2020

மனதை ஒருமுனைப்படுத்துங்கள்!

ஆழ்மனசக்தி இரகசியங்கள் 10

மனதை ஏன், எப்படி ஒருமுனைப்படுத்த வேண்டும்? கூர்ந்து கவனிக்கும் கலை, வெற்றியைத் தீர்மானிக்கும் அம்சம், லூயிஸ் அகாசிஸ் கற்றுத்தந்த பாடம், பயிற்சி....

Thursday, June 25, 2020

இல்லுமினாட்டி 55


றுநாள் காலை உணவு வேளையிலேயே ராஜேஷ் போய்ப் பேசி விட்டு வந்தான். மனோகரிடம் அவர்கள் திட்டத்தைச் சொன்னான்.

இரவில் ஒரு காவலாளியைக் கத்தியால் குத்தி விட்டு நம் இருவரையும் தப்பித்துப் போகச் சொல்கிறார்கள். அவன் கையில் கத்தியால் குத்த வேண்டுமாம். அது அவர்களும் இதில் கூட்டு சேரவில்லை என்று காட்டவாம். எந்த நேரம் எப்படி, எப்படித் தப்பிப்பது என்று பக்காவான திட்டம் சொல்லி இருக்கிறார்கள்...” என்று ஆரம்பித்து அந்தத் திட்டத்தை ராஜேஷ் விளக்க ஆரம்பித்தான். அந்தத் திட்டத்தில் மனோகர் மனம் ஒட்டவில்லை. கத்தியால் குத்தியவர்கள் தப்பிக்க அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்ற திட்டத்தில் குறையிருக்கவில்லை. எங்கே எத்தனை பேர் இருப்பார்கள். எங்கே எப்படிப் பதுங்க வேண்டும். எப்போது அவர்கள் வேண்டுமென்றே கவனக்குறைவாக இருப்பார்கள், அப்போது எப்படி அங்கிருந்து போக வேண்டும், எந்த இடத்தில் கூடுதல் கவனம் தேவை, அங்கிருந்து தப்பித்துச் செல்வதெப்படி என்று படிப்படியாகச் சொன்னாலும் மனோகர் அந்தத் திட்டத்தில் அபாயத்தை உணர்ந்தான். கடத்தல் குற்றத்தில் சிக்கியவன் மேல் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற  குற்றத்தையும் சேர்க்க செந்தில்நாதன் போட்டுக் கொடுத்த திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வந்தது

சாதாரணமாகத் தப்பிக்க முயன்று மாட்டினால் கூடப் பரவாயில்லை. கொலை செய்ய முயன்ற குற்றமும் சேர்ந்து மாட்டினால் அது நிச்சயமான ஆபத்து...அதை மனோகர் ராஜேஷிடம் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டி விட்டுச் சொன்னான். ”நான் கொடுத்த பத்து லட்சத்துக்கு இதை விட நல்லத் திட்டத்தை எதிர்பார்த்தேன்...”

ராஜேஷ் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “நீ சொல்வதும் சரி தான். அவர்கள் கண்டிப்பாக நம்மை மாட்டி விட நினைக்க மாட்டார்கள். அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் மேல் தப்பில்லை, அவர்களையும் மீறி நடந்த வேலை என்று காண்பிக்க தான் அதிகமாய் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கும் படுகிறது. நமக்குத் திருப்தி இல்லாத திட்டத்திற்கு நாம் ஒத்துக் கொள்ள வேண்டாம்...”

மனோகர் சந்தேகத்துடன் கேட்டான். “ஒரு வேளை அந்தத் திட்டம் மட்டும் தான் எங்களால் முடியும் என்று அவர்கள் சொன்னால்....?”

ராஜேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். “பணத்தைத் திருப்பித் தர சொல்லி விட வேண்டியது தான்....”

மனோகர் ஆச்சரியத்துடன் கேட்டான். “அதற்கு ஒத்துக் கொள்வார்களா?”

ராஜேஷ் ரகசியமாய்ச் சொன்னான். “நான் ஒரு பெரிய கூட்டத்தில் முக்கியமான ஆள். எங்கள் ஆட்கள் அடிக்கடி எதிலாவது மாட்டி இங்கே வந்து போவார்கள். சிறிது காலச் சிறைவாசம் என்றால் முடித்து விட்டுப் போவோம். அதிகமான காலம் என்றால் கப்பம் கட்டி விட்டு இடையில் சிறிது காலம் வெளியே போய் போவதும் உண்டு. அவசியமான சமயத்தில் தப்பித்துப் போவதும் உண்டு. அதில் பேரம் பேசி வேண்டியதை சாதித்துக் கொள்வது அடிக்கடி நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான். அதனால் இது உண்மையில் ஒரு வியாபாரம் தான். இங்கே பேச்சு வார்த்தையில் இரண்டு தரப்பும் சுத்தமாக இருப்போம். ஒருவன் ஏமாற்றினால் மறுபேச்சு கிடையாது. தீர்த்துக் கட்டவும் எங்களிடம் ஆள் இருக்கிறது. அதே மாதிரி நாங்களும் ஏமாற்ற மாட்டோம். அதனால் அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு திட்டம் ஒன்று சொல்லி நமக்கு அதிருப்தி இருந்தால் தாராளமாக மாற்றி யோசிக்கச் சொல்லி நாம் கேட்கலாம். பணம் வாங்கிய அவர்கள் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். இது எங்களுக்கிடையே இருக்கும் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். அதனால் அதற்கு நீ கவலைப்பட வேண்டாம். இன்றைக்கு மதியமே போய்ப் பேசி விட்டு வருகிறேன்...”

மதியம் ராஜேஷ் வேறொரு திட்டத்துடன் வரும் வரை மனோகருக்கு இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் வேறு திட்டம் தருவார்களா? தந்தால் அந்தத் திட்டம் என்னவாக இருக்கும், அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கும், மாட்டிக் கொள்ளும்படியான அம்சங்கள் எதாவது இருக்குமா, மாட்ட வைத்து விடுவார்களா என்று பல விதமான எண்ணங்கள் வர ஆரம்பித்தன. நேரம் போகப் போக வர ஆரம்பித்த எண்ணங்கள் அவனுக்கே பயங்கரமாக இருந்தன. தன்னையே திட்டிக் கொண்டான். ’யாருடைய ஆள் நீ? விஸ்வத்தின் ஆள் இப்படிப் பயப்படலாமாஉன்னைப் பார்த்து இந்தத் தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சரும் அவர் குடும்பமுமே பயப்பட்டிருக்கிறதே, அப்படிப்பட்ட நீ இப்போது பயந்து நடுங்கலாமா? சிறைத்தண்டனை ஒரு ஆளை இப்படியெல்லாமா கோழையாக்கி விடும்?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டு பலவந்தமாகத் தைரியம் வரவழைத்துக் கொண்டான். ஆனால் ஓரிரு நிமிடங்கள் கழித்து மனம் மறுபடி கவலைப்பட ஆரம்பித்தது.

வழக்கமான நேரம் முடிந்தும் ராஜேஷ் வரவில்லை. நேரம் ஆமை வேகத்தில் நகர்ந்தது…. ராஜேஷ் மிகவும் தாமதமாகத் தான் வந்தான். அவனிடம் மனோகர் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன சொல்கிறார்கள்?”

ராஜேஷ் அவனிடம் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான். “புதிய திட்டம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதில் நானும் உன்னுடன் சேர்ந்து வெளியே போக வழியில்லை

மனோகருக்கு ராஜேஷ் தப்பிப்பதிலோ அங்கேயே இருந்து விடுவதிலோ எந்த விதமான சங்கடமும் இருக்கவில்லை. ஆனால் அதை அப்படியே வெளிப்படுத்தி விட முடியுமா என்ன? அதனால் முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டினான்.

ராஜேஷ் சொன்னான். “அது பரவாயில்லை. எனக்குத் தேவைப்படும் போது நான் போய்க் கொள்வேன். நீ தப்பித்தால் அதுவே எனக்குப் போதும்...”

மனோகர் மனதில் இருந்த பெரிய பாரம் விலகியது. ஆனால் அதை அவன் உடனடியாகக் காட்டி விடாமல் முகத்தில் சிறிது சோகத்தைத் தக்க வைத்துக் கொண்டு தலையாட்டினான். பின் மெல்லக் கேட்டான். “அவர்கள் திட்டம் என்ன?”

நீ நாளை மதியம் மூன்றரை மணிக்குக் கடுமையான வயிற்று வலி இருப்பது போல் நடி. உன்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள். அது நிஜமான வயிற்று வலி தான் என்பறு சொல்வதற்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து பணமும் கொடுத்து விட்டார்கள். ஆஸ்பத்திரியில் உனக்குப் பலத்த காவல் ஆரம்பத்தில் இருக்கும். ஆனால் உனக்கு லேசாக மயக்க மருந்து தந்து சிகிச்சை தருவது போல் அந்த டாக்டர் ஏற்பாடு செய்வார், அப்போது நீ மயக்கத்தில் இருப்பாய் என்பதால் உனக்குக் காவலைக் குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார்கள். உனக்கு மயக்கம் இரவு இரண்டு மணிக்கு மேல் தான் தெளியும் என்று டாக்டர் சொல்வார். ஆனால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலேயே உனக்கு மயக்கம் தெளிந்து விடும். பன்னிரண்டு மணியில் இருந்து ஒன்றரை மணிக்குள் நீ தப்பித்து விட வேண்டும். ஒன்றரை மணிக்குத் திரும்பவும் காவல் பலப்படும். நீ மயக்கம் தெளிவது இரவு இரண்டு மணிக்கு என்று டாக்டர் சொல்வார் என்பதால் அதற்கு அரை மணி நேரம் முன்பே காவல் பலப்பட்டு விடும். ஆக நீ தப்பித்துப் போக உன்னிடம் இரவு பன்னிரண்டு முதல் ஒன்றரை மணி வரை சமயம் இருக்கிறது. காசு வாங்கியவர்கள் நீ வெளியே தப்பித்துப் போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.. ஆனால் நீ திரும்பவும் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.... மாட்டிக் கொண்டால் எந்தக் காரணம் வைத்தும் உன்னைத் தப்பிக்க வைத்தார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்து விடக் கூடாது... அதனால் அங்கிருந்து நீ எங்கே போவாய், எப்படி ஒளிந்து கொள்வாய் என்பதெல்லாம் உன்னைச் சேர்ந்தது....”

மனோகர் தலையாட்டினான். ராஜேஷ் அக்கறையுடன் கேட்டான். “உனக்கு ஒளிந்து கொள்ள ஏதாவது பாதுகாப்பான இடத்தை நான் ஏற்பாடு செய்து தர முடியும். வேண்டும் என்றால் தயங்காமல் என்னிடம் கேள்

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, June 24, 2020

முந்தைய சிந்தனைகள் 59

சிந்திக்க சில விஷயங்கள் என் நூல்களிலிருந்து


என்.கணேசன்

Monday, June 22, 2020

சத்ரபதி – 130தானாஜி மலுசரே சிங்கக்கோட்டைக்குக் கிளம்பிய போது ஜீஜாபாயே ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து “வெற்றி நிச்சயம் மகனே” என்று சொல்லி அனுப்பி வைத்தாள். தானாஜி சிவாஜி தன்னை நம்பி இந்த மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்ததும், அவன் தாய் இப்படி வாழ்த்தி அனுப்பியதையும் தன் வாழ்வின் மிகச்சிறந்த சௌபாக்கியம் என்று நினைத்தான். சிவாஜி தானாஜி அழைத்து வந்த 12000 வீரர்களுடன் தன் மாவல் வீரர்கள் ஆயிரம் பேரையும் அனுப்பி வைத்தான். சிவாஜி பல கோட்டைத் தாக்குதல்களில் பயன்படுத்திய யஷ்வந்த் என்ற பெரிய மலை உடும்பும் ஒரு பெரிய பெட்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.

13000 வீரர்கள் ஒருங்கே சேர்ந்து சென்றால் கண்டிப்பாக ஒற்றர்கள் மூலம் அவர்கள் செல்லும் இடத்தை எதிரிகள் அறிந்து விடக்கூடும் என்பதால் அவர்கள் பல சிறு குழுக்களாகப் பிரிந்து பல வழிகளில் பயணம் செய்தார்கள். ஒரு இரவு அனைவரும் சிங்கக்கோட்டை அருகே சென்று சேர்ந்தார்கள்.

சிங்கக் கோட்டையின் பின்பகுதி செங்குத்தான நீண்ட மலைக்குன்றின் மீது அமைந்திருந்தது. அந்தச் செங்குத்தான மலைப்பகுதி வழியாக எந்தப் படையும் வருவதற்குச் சாத்தியமில்லை என்பதால் பின்பகுதியில் எப்போதும் குறைவான கோட்டைக் காவல்வீரர்களே இருந்தார்கள். சிவாஜியின் ஒற்றர் தலைவன் சொன்னபடியே இரவுக் கேளிக்கைகளின் சத்தங்கள் கோட்டையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தன.

தாங்கள் முன்பே திட்டமிட்டிருந்தபடி தானாஜி மலுசரே ஆயிரம் மாவல் வீரர்களுடன் சிங்கக் கோட்டையின் பின் பகுதிக்குச் சென்றான். மற்ற வீரர்கள் தானாஜியின் சகோதரன் சூர்யாஜி மலுசரேயின் தலைமையில் ஒரு பிரிவும், மாமன் ஷேலரின் தலைமையில் இன்னொரு பிரிவும் கோட்டையின் இரண்டு பிரதான வாசல்களை அடையும்படியான தொலைவுகளில் இரு பக்கங்களிலும் மறைவில் நின்றன.

தானாஜி மலுசரே பெரிய பெட்டியிலிருந்து யஷ்வந்த் என்ற மலை உடும்பை எடுத்தான். அந்தப் பெரிய மலை உடும்பு இது வரை 27 கோட்டைச் சுவர்களை ஏற சிவாஜி படையினருக்கு உதவி இருக்கிறது. பல அடிகள் வரை வளரும் வகை மலை உடும்பு அது. தானாஜி மலுசரே அதை வணங்கி விட்டு பின் அதன் வயிற்றில் உறுதியான கயிறு ஒன்றைக் கட்டி விட்டுப் பின் அதை சிங்கக் கோட்டையின் பின்புற மலைக்குன்றின் மீது ஏற வைத்தான். இரண்டு முறை பாதி தூரம் சென்ற யஷ்வந்த் மலை உடும்பு பின் திரும்பக் கீழேயே வந்தது.

தானாஜியுடன் இருந்த மாவல் வீரன் ஒருவன் “சகுனம் சரியில்லை தலைவரே. இது போல் இது எப்போதும் செய்ததில்லை” என்றான். அவன் இதற்கு முன் சிவாஜியுடன் பல போர்களில் கலந்து கொண்டவன்.

தானாஜி சொன்னான். “தோல்வி ஒன்று தான் அபசகுனம் வீரனே. திரும்பிப் போவது ஒன்று தான் கேவலம். சிவாஜி என்னை நம்பி இந்த மாபெரும் வேலைக்கு அனுப்பி இருக்கிறான். சிறிய காரணங்கள் சொல்லி நான் திரும்புவதற்கில்லை….”

அந்த மலை உடும்பிடமும் தானாஜி சொன்னான். “இது அந்த வீரனுக்குச் சொன்னது மட்டுமல்ல யஷ்வந்த். உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன். இனி உச்சியை எட்டி கெட்டியாகப் பிடித்துக் கொள்வதை விட்டுச் சோம்பல் காட்டினால் அது உனக்கு சோபை தராது சொல்லி விட்டேன்”

மறுபடி மலை ஏற வைத்தபின் யஷ்வந்த் ஒழுங்காக மலை ஏறியது. கோட்டையின் உச்சியை எட்டிய அந்த மலை உடும்பு மிக உறுதியாகக் கோட்டையின் சுவரைக் கவ்விப் பிடித்துக் கொள்ள தானாஜியும், மற்ற மாவல் வீரர்களும் ஒருவர் பின் ஒருவராகச் சத்தமில்லாமல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஏற ஆரம்பித்தார்கள். 

மேலே சென்று சேர்ந்தவர்கள் சத்தமில்லாமல் அங்கேயே பதுங்கிக் கொண்டார்கள். சுமார் முன்னூறு பேர் மேலே சென்ற பிறகு கயிறு அறுந்து போனது.

கயிறு அறுந்து வீரர்கள் கீழே விழுந்த சத்தம் கேட்டு மேலே இருந்த சிங்கக் கோட்டைக் காவல் ஒருவன் வீரன் என்ன சத்தம் என்று எட்டிப் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் அவன் எட்டிப் பார்த்தது தெரிய கீழே இருந்த மாவல் வீரன் குறிபார்த்து அம்பொன்றை விட்டான். அவன் சத்தத்துடன் கோட்டையின் மேல் இருந்து கீழே விழ, வேறு சில வீரர்கள் என்ன ஆயிற்று என்று பார்க்க விளிம்புக்கு வந்தார்கள். கீழே இருந்து சரிமாரியாக அம்புகள் பறந்தன. அந்தக் கோட்டை வீரர்களும் அம்புகள் உடல்களில் தைக்கச் சரிந்தார்கள்.

பின்னால் மிஞ்சியிருந்த கோட்டை வீரர்கள் தீப்பந்தங்களை எரிய வைத்து கோட்டையின் பின்புறத்தை ஒளி வெள்ளத்தில் மிதக்க வைத்து நிலவரத்தை ஆராய முற்பட்டார்கள். ஏற்கெனவே சிங்கக் கோட்டையின் மேல் ஏறி இருந்த தானாஜியும் முன்னூறு மாவல் வீரர்களும் அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

கீழே காத்திருந்த மற்ற இரண்டு பிரிவுகளுக்கு சமிக்ஞைக் குரல் எழுப்பி விட்டு மாவல் வீரர்களில் நூறு பேர் கோட்டையின் இரண்டு வாசற்கதவுகளை உள்ளிருந்து திறந்து விட விரைந்தார்கள். கேளிக்கை விருந்துகளில் பல வீரர்கள் போதையுடன் விழுந்திருந்த போதும் விழிப்பில் இருந்த வீரர்கள் அவர்களுடன் போரிட்டார்கள்.

ஒரு காவல் வீரன் ஓடிப்போய் கோட்டைத் தலைவன் உதய்பானுக்குத் தகவல் தெரிவித்தான். அவனும் போதையில் மயங்கியே உறங்கி இருந்த போதும் தகவல் தெரிந்தவுடன் போதை கலைந்து வீரத்துடன் எழுந்தான்.

உதய்பானும் அவனுடைய வீரர்களும் ஆரம்பத்தில் போதையினால் சரியாகக் கோட்டையைக் காக்கத் தவறி விட்டாலும் வேகமாய் சிறப்பாய் போர் புரியும் கவன நிலைக்கு வந்தார்கள். உதய்பானும், தானாஜியும் பெரும் வீரத்துடன் போராடி தங்கள் எதிரிகளைக் கொன்று குவித்து பின் ஒருவருக்கொருவர் நேரடியாகவே போர் புரிந்தார்கள். மிகத் திறமையாகவும், வீரத்துடனும் போராடிய இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு வீழ்ந்தார்கள்.

தானாஜி மலுசரே உயிரற்றுக் கீழே வீழ்ந்ததும் மாவல் வீரர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். சிங்கக்கோட்டையின் ராஜபுதன முகலாயர்களின் வீரர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. ஆனாலும் கோட்டையின் பீரங்கிகளைக் கொண்டு வெளியே இருந்த மராட்டிய வீரர்களை சிங்கக் கோட்டை வீரர்கள் கொல்ல உள்ளிருந்த மாவல் வீரர்கள் அனுமதிக்கவில்லை. பீரங்கிகளை இயக்காமல் பார்த்துக் கொண்டதுடன் மிகவும் கஷ்டப்பட்டு கோட்டையின் இரு வாசற்கதவுகளையும் எப்படியோ திறந்து விட்டார்கள். சூர்யாஜி மலுசரேயும் ஷேலரும் தங்கள் படைகளுடன் உள்ளே நுழைந்தார்கள்.

தானாஜி மலுசரே இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் சூர்யாஜி மலுசரேயும் ஷேலரும் கொதித்துப் போனார்கள். அண்ணனின் மரணத்திற்குப் பழிவாங்கவும், அவன் ஆத்மா சாந்தியடையவும் ஒரே வழி இந்தப் போரில் சிங்கக் கோட்டையை வெல்வது தான் என்று உடனே தீர்மானித்த சூர்யாஜி குதிரையின் மீதமர்ந்து வாளை ஏந்தியபடி “ஹர ஹர மஹாதேவ்” என்று கர்ஜித்தபடி எதிரிகளை நோக்கி எமனைப் போல் பாய்ந்தான்.

அந்தக் கர்ஜனையில் மராட்டியப் படையில் ஒவ்வொரு வீரனுடைய இதயத்திலும் வீரத்துடிப்பு ஏற்றப்பட்டது.  “ஹர ஹர மஹாதேவ்” “ஹர ஹர மஹாதேவ்” என்ற வீரமுழக்கம் மராட்டிய வீரர்களால் தொடர்ந்து முழங்கப்பட்டது. ஒவ்வொரு முழக்கத்தின் முடிவிலும் எதிரிகள் பலர் கீழே வீழ்ந்தார்கள். சில மணி நேரங்களில் சிங்கக் கோட்டை மராட்டியர் வசமானது. சிங்கக் கோட்டையில் முகலாயர் கொடி இறக்கப்பட்டு சிவாஜியின் கொடி ஏற்றப்பட்டது.

வென்றதும் பெரிய வைக்கோற்போர் குவிப்பில் நெருப்பு பற்ற வைத்து தீ ஜுவாலை ஏற்ற சிவாஜி சொல்லியிருந்தான். அப்படியே சூர்யாஜி மலுசரே ஏற்றி வைத்தான். அங்கே எரிந்த தீ ஜுவாலையைப் பார்த்தவுடன் சிவாஜி பெருமகிழ்ச்சியுடன் ராஜ்கட்டிலிருந்து புறப்பட்டான்.

சிங்கக் கோட்டையை அவன் அடைந்த போது அவன் எதிர்பார்த்த உற்சாகத்தில் அவன் ஆட்கள் யாருமில்லாதது அவனுக்குத் திகைப்பை அளித்தது. அவன் கோட்டையின் உச்சியைப் பார்த்தான். அவன் கொடி தான் அங்கே பறந்து கொண்டிருந்தது. பின் ஏன் இந்த இறுக்கம் என்று எண்ணியபடி உள்ளே நுழைந்தவன் தானாஜி மலுசரேயின் வீழ்ந்த உடலைப் பார்த்தான்.

குதிரையிலிருந்து திகைப்புடனும், பெருந்துக்கத்துடனும் கீழிறங்கிய சிவாஜியிடம் சூர்யாஜி மலுசரே உடைந்த குரலில் சொன்னான். “அரசே. என் அண்ணன் உங்களுக்குச் சிங்கக் கோட்டையை வென்று கொடுத்து விட்டான்….”

கண்களில் நீர் அருவியாய் வழிய நண்பனின் பிணத்தை வாரி எடுத்து தானாஜியின் முகத்தில் நெஞ்சில் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு சிவாஜி துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறினான். “கோட்டை கிடைத்தது. ஆனால் சிங்கத்தை நான் இழந்து விட்டேனே”

(தொடரும்)
என்.கணேசன்

Sunday, June 21, 2020

மனக்கசப்புகளை மறப்பது எப்படி?

மனதை சுட்டெரிக்கும்கடந்த கால நினைவுகளை மறப்பது ஏன் அவசியம்? எப்படி மறப்பது?

Saturday, June 20, 2020

ஆரோக்கியமும் ஆழ்மனமும்

ஆழ்மனசக்தி இரகசியங்கள் 9

நம் ஆரோக்கியத்தில் நம் ஆழ்மனதின் பங்கு என்ன? நாம் ஆழ்மனதின் ஆரோக்கியத்திற்கான வேலையில் எப்படி எல்லாம் குறுக்கிடுகிறோம்? நம் ஆழமனசக்திப் பயிற்சிகள் எப்படி ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன? உடலின் செல்களின் வேலைகள், தீபக் சோப்ரா, டாக்டர் ஓட்டோ வார்பர்க், டாக்டர் ப்ரூஸ் லிப்டன் போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகள்...

Thursday, June 18, 2020

இல்லுமினாட்டி 54


ப்பானில் நடந்த அந்த அரசியல் நிகழ்வு அத்தனை முக்கியமானதல்ல என்ற போதிலும் அவருடைய நண்பர் அகிடோ அரிமாவைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் வாங் வே அதில் கலந்து கொண்டார்அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வாங் வே நண்பர் வீட்டுக்குச் சென்றார். அகிடோ அரிமா நண்பரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். குசல விசாரிப்புகள் கழிந்தவுடன் அகிடோ அரிமா தாழ்ந்த குரலில் நண்பரிடம் சொன்னார். “விஸ்வம் பற்றி தலைமையிலிருந்து ஏதாவது தகவல் அதிகாரபூர்வமாக வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஏன் ஒன்றுமே வரவில்லை.”

தலைமைக் குழுவுக்கே வரவில்லை. அதன் பிறகல்லவா மற்ற உறுப்பினர்களுக்கு வருவதுஎன்று எரிச்சலுடன் வாங் வே சொன்னார்.

அகிடோ அரிமா திகைத்தார். “ஏன்? என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?”

வாங் வே தற்போது உள்ள மூடு மந்திரமான நிலவரத்தைச் சொன்னார். அகிடோ அரிமா கேட்டார். “தலைமைக்குழு உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு பொதுவாகவாவது நிலவரம் கேட்கலாமல்லவா? ஜான் ஸ்மித் போய்க் கேட்டு விட்டு வந்தத் தகவல்கள் எல்லாம் தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொண்டாரல்லவா? அப்படி இருக்கையில் அதன் பின் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று நீங்கள் எல்லாம் கேட்கலாமே?”

நீ சொல்வது சரிதான். ஆனால் மற்ற தலைமைக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மௌனமாகத் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நான் மட்டும் கேட்டால் நன்றாக இருக்காது என்பதால் நானும் கேட்கவில்லை. ஆனால் விஸ்வத்தின் பழைய சரித்திரப்படி அவன் இல்லுமினாட்டியின் தலைவரையே கொல்லக்கூடும் என்றும் என்னேரமும் நான்கைந்து அடுக்கு முழுக்காவல் இருந்தால் ஒழிய அபூர்வ சக்தி பெற்ற விஸ்வத்திடமிருந்து தலைவரைக் காப்பாற்ற முடியாது என்றும் உளவுத்துறை நம்புகிறது....” அவர் தொடர்ந்து தலைவரைக் காப்பாற்ற அமானுஷ்யன் என்ற இந்தியனின் உதவியை இல்லுமினாட்டி நாடியிருக்கிறது என்று சொன்னார்.

ஆரகிள் சொன்னது இதற்குக்கூடப் பொருந்துகிறது பார்த்தீர்களா? இவனும் இமயத்தின் தெற்கில் தான் இருக்கிறான்.” என்று அகிடோ அரிமா வியக்க உடனே வாங் வே  எரிச்சலுடன் சொன்னார். “பிரச்சினையான விஸ்வமும் இந்தியாவில் இருந்து தான் வந்திருக்கிறான். அதை ஆரகிள் சொல்லவில்லை

இந்தியா என்றாலே இந்த சீன நண்பருக்குக் கோபம் வந்து விடுகிறது என்று எண்ணிப் புன்னகைத்த அகிடோ அரிமா கேட்டார். “அந்த அமானுஷ்யன் எப்போது வரப் போகிறான்?”

வாங் வே ஏளனமாகச் சொன்னார். “அவன் வருவது நிச்சயமாகவில்லை. ஆனால் இல்லுமினாட்டி போன்ற ஒரு உச்ச சக்தி இயக்கத்தின் நிலைமை எப்படி ஆகி விட்டது பார்த்தாயா? தலைவரின் பாதுகாப்புக்கு ஒரு தனிமனிதனின் உதவி தேவைப்பட்டு அதற்காக இந்தியா வரை போய் இல்லுமினாட்டி போக வேண்டியிருக்கிறது!”

அகிடோ அரிமா சொன்னார். “அதை நான் தவறாக நினைக்கவில்லை. விஸ்வம் மாதிரி அபூர்வசக்தி படைத்த ஒருவன் கண்ணிமைக்கும் நேரத்தில் இயங்கி ஒரு ஆளைக் கொல்லவும் முடிந்தவன் என்றிருக்கும் போது அதற்கு இணையாக இயங்கிக் காப்பாற்ற முடிந்த ஆளின் தேவையை உணர்ந்து அந்த ஆளை அணுகுவது ஒரு அவமானப்பட வேண்டிய விஷயம் அல்லவே.. இப்போது நமக்கு ஒரு வித்தியாசமான கொடிய நோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குணப்படுத்த உலகில் ஒரே ஒரு டாக்டரால் தான் முடியும் என்றால் நாம் உடனே அந்த டாக்டரிடம் போக மாட்டோமா? அது தவறு ஒன்றும் இல்லையே. அது போலத்தானே இதுவும்...”

வாங் வேக்கு அந்த வாதத்திற்குப் பதில் சொல்ல முடியவில்லைநண்பர் மாறுபட்ட சிந்தனைகளையும் எந்த விதமான தயக்கமும் இன்றிச் சொல்லக் கூடியவர். அது சில சமயங்களில் கசப்பாக இருந்தாலும் சிந்திக்காத கோணங்களில் இருந்தும் எடுத்துச் சொல்ல ஒரு உண்மையான நண்பர் தேவையாக இருக்கிறது. வாங் வே வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தார். “நீ சொல்வதும் சரி தான். அதை விடு. மொத்தத்தில் நமக்கு நிறைய பிரச்சினைகள், மாற்றங்கள் காத்திருக்கின்றன. இதில் கவனமாகக் காய் நகர்த்தி ஜெயிப்பவர்கள் தலைமையில் தான் இல்லுமினாட்டியும் இந்த உலகமும் போய்ச் சேரும்

அவர் அதைச் சொன்ன போதே அவர் கண்கள் ஏதோ கனவு காண்பது போல் மின்னின. சில நாட்களாகவே நண்பர் ஆசைப்படுவதும், ரகசியமாகத் திட்டமிடுவதுமாக இருப்பதை அறிந்திருந்த அகிடோ அரிமா மெல்லச் சொன்னார். “நண்பரே, தலைவர், விஸ்வம் இருவருமே ஆபத்தானவர்கள். மிகுந்த எச்சரிக்கை தேவை!”


க்ரிஷ் அக்ஷயின் தயக்கத்தையோ, யோசிக்க அவகாசம் கேட்டதையோ சிறிதும் தவறாக நினைக்கவில்லைவேற்றுக்கிரகவாசி அவனைத் தொடர்பு கொண்ட போது அவனும் அக்ஷய் போலத் தான் நடந்து கொண்டது அவனுக்கு நினைவிருக்கிறது. வேற்றுக்கிரகவாசி சொன்னதை எல்லாம் கேட்ட போது முதலில் குடும்பத்தினரும், ஹரிணியும் தான் அவனுக்கு நினைவுக்கு வந்தார்கள். அவனுக்கு ஏதாவது ஆனால் அவர்கள் தாங்க மாட்டார்கள் என்ற எண்ணம் தான் முதலில் மேலோங்கி நின்றது. அதையும் மீறி அவனை மனம் மாற வைத்த சக்தி அக்ஷயையும் மாற்றி விடும் என்று நம்பினான்.
                           
எப்படி நம்புகிறாய்?” என்று எர்னெஸ்டோ கேட்டதற்கு அவன்நிகோலா டெஸ்லாஎன்று சொன்னான். அந்த விஞ்ஞானி சொன்ன ஏதோ சித்தாந்தப்படி நம்புவதாக அவன் சொல்கிறான் என்று மட்டும் அவருக்குப் புரிந்ததுஅந்தச் சித்தாந்தம் என்ன, அதை வைத்து எப்படி நீ நம்புகிறாய் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் முயற்சிக்கவில்லை. அதற்கான நேரமோ, பொறுமையோ அவருக்கில்லை. ஆனால் சாதாரண நடைமுறை அறிவுக்கு முரணாக  எல்லாம் நடந்து கொண்டும் கூட அந்த அறிவுஜீவி பல அற்புதமான நிகழ்வுகளைச் சாதித்துக் காட்டியிருக்கிறான் என்று நினைவுபடுத்திக் கொண்ட அவர்என்ன நடக்கிறது என்று பார்ப்போம்என்று விட்டுவிட்டார்.

ஆனால் க்ரிஷ் அவனை மாற்றிய சக்தியையும் நிகோலா டெஸ்லாவையும் நம்பி சும்மா இருந்து விடவில்லை. மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் எல்லாம் செய்து தியான நிலையில் இருந்து கொண்டு அக்ஷயின் மாற்றத்திற்குத் தூண்ட பிரபஞ்ச சக்தியை வேண்டிக் கொண்டிருந்தான். அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று அவன் மனமார நம்பினான். நல்லவர்கள் தங்களால் முடிந்த நல்லதைச் செய்யாமல் இருக்க முடியாது, அதற்கு அவர்கள் மனசாட்சி அனுமதிக்காது என்று க்ரிஷ் நம்பினான். அக்ஷய் மிக நல்லவன். அதனால் தான் அவன் நிழலுலக தாதா ஒருவரின் வளர்ப்பு மகனாக வளர்ந்த போதும் தந்தையின் தொழிலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் உயிரையே பணயம் வைத்து தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி இருக்கிறான். எந்தச் சூழலிலும் அவன் பொறுப்பற்றவன் ஆகவோ, உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பது போலவோ இருந்து விடவில்லை. தன் உயிரைப் பணயம் வைத்து புத்தரின் மறுபிறவியைக் காப்பாற்றி இருக்கிறான். தீமைக்கு எதிர்ப்பும், நன்மைக்கு ஆதரவும் அவன் இரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அப்படிப்பட்டவன் விஸ்வத்தின் கை ஓங்க விட மாட்டான். கண்டிப்பாக உதவுவான்.... இந்தத் திடமான நம்பிக்கையுடன் க்ரிஷ் தன் பங்கு பிரார்த்தனையும், பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இந்த அலைவரிசைகள் கண்டிப்பாக அக்ஷயைச் சிந்திக்க வைக்கும். நல்ல முடிவை எடுக்கத் தூண்டும் என்று அவன் திடமாக நம்பினான்.

உதய் தம்பியிடம் சிந்து பற்றிச் சொல்ல வேண்டும் என்று ஆர்வமாக வீட்டுக்கு வந்தவுடன் தம்பி அறைக்குள் எட்டிப் பார்த்த போது க்ரிஷ்  ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.   அவனை இப்போது தொந்தரவு செய்தால் சண்டைக்கு வருவான் என்ற பயத்தில் உதய் சத்தமில்லாமல் தம்பி அறைக்கதவை மூடி விட்டுத் தனதறைக்குப் போனான். ‘அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் சரி தான். அந்தப் பெண் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைத் தெரிந்து கொள்ளாமல்அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. அவளைப் பார்த்த பிறகு நான் நானாக இல்லைஎன்பதை எல்லாம் இப்போதே ஏன் க்ரிஷிடம் சொல்ல வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் மனதில் வேறு யாராவது இருந்தால் அல்லது அவளுக்குஅந்த அபிப்பிராயமேவராமல் போனால்?... எதற்கும் சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் மனத்தையும் தெரிந்து கொண்டு க்ரிஷிடம் சொன்னால் போதும்என்று உதய்க்குத் தோன்றியது. அதனால் சிந்து பற்றி க்ரிஷிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்று அவன் தள்ளிப் போட்டான்.


(தொடரும்)
என்.கணேசன்