சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 28, 2019

இருவேறு உலகம் – 125


ந்த நெற்றிக்கண் கல் மாஸ்டர் கையில் மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தின. மாஸ்டர் அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு அந்த குகைக்குள் மீண்டும் நுழைந்தார். அந்தச் சிற்பத்தின் நெற்றியில் பொருத்திப் பார்த்தார். கச்சிதமாகப் பொருந்தியது. இங்கு முதலில் இருந்த கல் தானோ? விஸ்வத்திடமிருந்து இந்தக் கல்லை அந்தப் பறவை எடுத்துக் கொண்டு வந்து விட்டதோ? அந்தப் பறவைக்கும் இந்தத் தவசிக்கும், இந்தச் சிற்பத்துக்கும் என்ன சம்பந்தம்? இத்தனை துல்லியமாக இங்கேயே கொண்டு வந்து வைத்து விட்டுப் போயிருக்கிறதே! இந்தக் கல்லில் ஏதோ சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை உணர்ந்து தான் விஸ்வம் இதைக் கொண்டு போயிருக்கிறான். ஆனால் இந்தக் கல் விஸ்வம் கொண்டு போன கல்லாய் இருக்க வாய்ப்புகள் குறைவு. விஸ்வத்தின் அலைவரிசைகள் இந்தக் கல்லில் சிறிது தங்கியிருந்தாலும் அவர் உணர்ந்திருப்பார்…. மேலும் விஸ்வம் கையில் கிடைத்ததை எந்த விதத்திலும் நழுவ விடுபவன் அல்ல.  இந்தச் சிவனின் நெற்றி வெறுமையாக இருப்பதை சகிக்காத ஏதோ ஒரு சக்தி தான் அந்தப் பறவையின் வடிவில் திரும்ப இங்கு கொண்டு வந்து இன்னொரு கல்லைச் சேர்த்திருக்கிறது. ஏதோ ஒரு அளவில் இல்லாமல் கச்சிதமாக சிற்பத்துக்குப் பொருந்தும்படியாக இந்தக் கல் இருப்பதால் சிற்பம் செதுக்கிய போதே அந்தக் கல்லுடன் அதே போல இன்னொரு கல்லையும் செதுக்கியிருந்தால் மட்டுமே இது சாத்தியம்….. யோசிக்கும் போதே தலை சுற்றியது….. எல்லாம் மாயாஜாலமாகத் தெரிந்தது.

எது எப்படியோ அவர் இந்த நெற்றிக்கண் கல்லை எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. இதன் சக்தி மூலம் ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்றிருந்தால் இதைக் கையில் கொண்டு போனால் தான் நடக்கும் என்று நினைப்பது பேதமையாகப் பட்டது. இறைவனின் சக்திக்கு தூரங்கள் ஒரு பிரச்னைகள் இல்லை. ஏதோ ஒரு பொருளில் மட்டுமே தங்கிப் பயன்படும் என்று நம்புவது மூட நம்பிக்கை. இதற்கென்று ஒரு சக்தி இருந்தால் இது இந்த இடத்திலேயே இருந்து கொண்டு எங்கும் எதையும் நடத்தும். மேலான சக்திகள் மனிதனைப் போல் பிழை செய்வதில்லை. எதையும் செய்யத் தவற விடுவதுமில்லை…… நினைக்கையிலேயே மனம் நம்பிக்கை பெற்றது.. மறுபடி வணங்கி அங்கே சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அந்தத் தவசியின் தவத்தினாலோ என்னவோ சீக்கிரமே ஆழமான தியானம் சாத்தியமானது. ஏகாந்தத்தில் அந்தச் சிவனின் முன்னிலையில் அவரும் யோகநிலையில் லயித்து சில மணி நேரங்கள் அசைவற்று அமர்ந்திருந்தார்.  மனம் எண்ணங்கள் இல்லாமல் வெறுமையாகி பிரம்மம் ஆகியது. அந்த ஒரு கணத்தில் எதை நினைத்தாலும் அது நடந்து விடும் என்பதை அந்தராத்மாவில் உணர்ந்தார். ஆனால் எதையும் நினைக்கத் தோன்றவில்லை. அப்படி நினைத்து அந்தப் பூரண நிறைவில் ஒரு சிறு பகுதியையும் அவர் இழக்க விரும்பவில்லை. அவர், அந்தக்குகை, அந்த சிவன் எல்லாமே ஒரு அலைவரிசையில் கலந்து மனம் காணாமலேயே போயிற்று.

ஒரு பெருங்காற்று வீசிய போது அவர் மனம் விழித்தது. அந்தக் குகையும் சிவனும் அவரும் இப்போதுள்ள இடங்களுக்குத் திரும்ப வந்து அமைந்தது போன்றதொரு உணர்வு. அந்தக் கணத்தில் அவர் முடிவு செய்தார். இனியுள்ள காலத்தை அவர் இங்கேயே கழிப்பார். ஒரே ஒரு முறை வெளியேறி க்ரிஷையும் அவரது இயக்க முக்கியஸ்தர்களையும் பார்த்து விட்டு வரவேண்டும். எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு மீண்டும் வந்து இங்கே ஐக்கியமாக வேண்டும். விஸ்வம் விஷயத்தில் ஆக வேண்டியதை க்ரிஷ் பார்த்துக் கொள்வான். ஒரு முறை விஸ்வம் இனி என்ன செய்வது என்று ஒன்றும் தெரியாதவன் போலக் கேட்ட போது “ஆபரேஷன் க்ரிஷ்” என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. இது அவனுடைய களம். அவனைத் தான் அந்த வேற்றுக்கிரகவாசியும் தேர்ந்தெடுக்கிறான்.  அறிவிலும் சக்திகளிலும் பல மடங்கு உயர்ந்த அந்த வேற்றுக்கிரகவாசி உலகில் தேடி ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால் அவனால் முடியும் என்ற புரிதலில் தான் இருக்க முடியும். இனி அது ஆபரேஷன் க்ரிஷாகவே முழுமையாக இருக்கட்டும். அது சம்பந்தமாகக் களத்தில் இனி எந்தக் காயையும் அவர் நகர்த்தப் போவதில்லை. எது நடக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருக்கிறதோ அது நடந்து விட்டுப் போகட்டும்……

மாஸ்டர் மெல்ல எழுந்தார். கைகூப்பி ஈசனை வணங்கி விட்டு வெளியே வந்தவர் ஒரு புதிய மனிதராக மாறியிருந்தார்….

ம்யூனிக் நகரின் அரண்மனை போன்ற பங்களாவில் பிதோவனின் இசையில் இரண்டு மணி நேரம் ஆழ்ந்திருந்து விட்டு தன் நாளை ஆரம்பித்த எர்னெஸ்டோ அன்று செய்ய வேண்டிய வேலைகளை ஒரு டைரியில் நேற்றே குறித்திருந்தார். அதில் முதல் குறிப்பாக இந்தியா – ஏலியன் – க்ரிஷ் – தகவல்கள் என்று இருந்தது.

அவர் ஒரு எண்ணிற்குப் போன் செய்தார். “அந்தப் பையன் க்ரிஷ்  ஏலியன் சந்திப்பைப் பற்றி யாரிடமாவது பேசியிருக்கானா”

“குடும்பத்தார் கிட்ட கூடச் சொல்லலைன்னு தெரியுது. அந்த மாஸ்டர் கிட்ட சொல்லியிருக்கலாம்னு தோணுது….”

“இஸ்ரோ அதைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்யலையா?”

“வீட்டாள்க கிட்டயே சொல்லாததால அவன் மத்தவங்க கிட்டயும் வாயைத் திறக்க மாட்டான்னு நினைக்கிறாங்க…. அந்த டைரக்டர் அவன் மந்திரி மகன்கிறதால தயங்கறார்”

“நீயே நேர்ல போய் பேசிப் பாரேன்….. இந்த உலகத்துல முக்கியமா ஒன்னு நடந்து அது இல்லுமினாட்டிக்கு முழுசா தெரியலைன்னா அது அவமானம் இல்லையா”

“சரி” என்று சொல்லி விஸ்வேஸ்வரய்யா வைத்து விட்டார். அவர் இந்திய செயற்கைக் கோள் மற்றும் வான் இயல் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு ஆலோசகர். மத்திய மந்திரிகளுக்கு நிகரான அதிகாரத்தை இந்திய அரசு அவருக்குத் தந்திருக்கிறது. பேரறிவாளி. இல்லுமினாட்டியின் உறுப்பினர். இப்போது இஸ்ரோ இறங்கியிருக்கும் இந்த ஆராய்ச்சிக்குப் பரிந்துரை செய்தவர் அவர் தான். இது சம்பந்தமான எல்லா ரிப்போர்ட்களும் அவரிடம் தான் முதலில் தரப்படுகின்றன. அவருக்கு வயது 67. அவருக்கு இந்த விஷயத்தில் இல்லுமினாட்டியின் தலைவரின் தனி ஈடுபாடு ஆச்சரியமாய் இருந்தது. ஏதோ கூடுதலாக இதில் இருக்கிறது. இல்லாவிட்டால் கிழவர் நேரடியாக இதுபற்றி விசாரிக்கச் சொல்ல மாட்டார். அதுவும் பதவி விலகப் போகும் சமயத்தில் அவர் தனிக்கவனம் இதில் வருகிறது என்றால் கண்டிப்பாக மிக முக்கியமானதாக அவர் நினைப்பது ஏதோ இதில் இருக்கிறது….

இல்லுமினாட்டியில் சேர்ந்த நாள் முதலே அவர் எர்னெஸ்டோவைக் கவனித்து வருகிறார். எர்னெஸ்டோ ரகசியம் காப்பதில் கில்லாடி. அவர் என்ன நினைக்கிறார் என்பதை எப்போதும் யாரும் ஊகிக்க முடிந்ததில்லை.  பார்க்க மிக ஓய்வாக இருப்பது போலவும் எதையும் கண்டு கொள்ளாதது போலவும் தெரியும் என்றாலும் அது பொய்யான தோற்றம் தான். அலட்டிக் கொள்ளாத அந்த மனிதர் சத்தமில்லாமல் செயல்படும் போது தான் அந்த அமைதிக்குப் பின்னிருக்கும் கூர்மையும் வேகமும் எதிராளிக்குத் தெரிய வரும். பெரும்பாலும் அவர் கவனம் செல்லும் இடத்துக்கும் மனிதனுக்கும் ஆபத்து உண்டு என்று அர்த்தம். எதற்கோ முடிவு கட்ட நினைக்கிறார் என்று அர்த்தம். இப்போது க்ரிஷ் மீது கவனம் செலுத்துகிறார்…….

விஸ்வேஸ்வரய்யா க்ரிஷைச் சந்திப்பதை அலுவலக ரீதியாக வைத்துக் கொள்வதா, தனிப்பட்ட முறையில் என்றாக்கிக் கொள்வதா என்று யோசித்தார். கடைசியில் க்ரிஷைச் சந்தித்து விட்டு வந்த பின் அவன் சொல்வதை வைத்துத் தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தார். உடனே க்ரிஷுக்குப் போன் செய்து தன்னை இந்திய செயற்கைக்கோள் மற்றும் வானியல் ஆராய்ச்சிகளின் சிறப்பு ஆலோசகராகவே அறிமுகப்படுத்திக் கொண்டு அவனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

மாணிக்கத்தின் போன் அலறியது.   யாரென்று பார்த்தார். அழைக்கும் எண்ணைப் பார்த்ததும் அவர் முகம் வெளிறியது. அவர் முகம் போன போக்கை வைத்தே சங்கரமணி அழைப்பது அந்தக் கடன்காரன் தான் என்பதைப் புரிந்து கொண்டார். அவருக்கும் வயிற்றைக் கலக்கியது. என்ன சொல்லப் போகிறானோ?

மாணிக்கம் அமைதியைக் குரல் அளவிலாவது வரவழைத்துக் கொள்ள பெருமுயற்சி செய்தார். “ஹலோ”

”என்ன மாணிக்கம் என் ஆள் எங்கேன்னு எதாவது தகவல் தெரிஞ்சுதா?”

“இல்லை சார்….. ஆனா நான் எல்லா வகைலயும் முயற்சி செய்துகிட்டுத் தான் இருக்கேன்.”

அமைதியாக, ஆனால் ரத்தத்தைச் சில்லிட வைப்பது போல், கேட்டது விஸ்வத்தின் குரல். “பிடிபட்ட அவன் வாயில இருந்து எல்லா விஷயத்தையும் அவங்க வரவழைச்சா எனக்கு எந்தப் பாதிப்புமே இல்லை. ஏன்னா என்னைப் பத்தி அவனுக்குத் தெரிஞ்சதும் குறைவு. அதை வச்சு என்னை அவங்க கண்டுபிடிக்கறது நடக்கவே நடக்காத காரியம். ஆனா அவனுக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும். அதை அவன் கக்கினா உன் அரசியல் வாழ்வு மட்டுமல்ல மொத்த வாழ்க்கையுமே அஸ்தமனமாயிடும். ஞாபகம் வச்சுக்கோ….”

மாணிக்கத்தின் நாக்கு வரண்டது…. “தெரியும் சார்”

அவன் போனை வைத்து விட்டான். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமையின் தீவிரத்தை மாணிக்கம் நன்றாகவே உணர்ந்தார்.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, February 25, 2019

சத்ரபதி – 61

ங்கள் மாளிகைக்குள்ளேயே தாங்கள் கொல்லப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை எதிர்பார்த்திராத சந்திராராவ் மோரும், அவன் தம்பியும் இறந்து விழுந்ததும் அமைதியாக சம்பாஜி காவ்ஜியும், ரகுநாத் பல்லாளும் அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியே வந்தார்கள். தூரத்தில் ஒரு சேவகன் இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். எங்கோ ஒரு அறையில் பெண்கள் பேசிக் கொண்டிருந்தது மெலிதாகக் கேட்டது.

இருவரும் பேசியபடியே வெளியே வந்தார்கள். மாளிகைக்கு வெளியே காவல் இருந்த வீரர்கள் காதில் அவர்கள் பேசிக் கொண்டே வந்தது காதில் விழுந்தது.

“மன்னர் என்ன சொல்லியும் மறுத்து விடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. …சம்பந்தம் முடியாது என்று ஆனபிறகு இங்கே தங்கி இவர்கள் விருந்தோம்பலைத் தொடர்ந்து பெறுவதில் அர்த்தமில்லை…..”

“அது கௌரவமும் அல்ல. அதனால் இப்போதே கிளம்புவது தான் நல்லது. இந்த மன்னர் பீஜாப்பூர் சுல்தானை விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் இந்த சம்பந்தத்திற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார் என்று நினைக்கிறேன்…..”

“இருக்கலாம். ஆனால் சிவாஜியிடம் இதை நாம் எப்படிச் சொல்வது? அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?”

“சொல்லித் தானாக வேண்டும். என்ன செய்வது?”

இருவரும் வெளியே வந்து விட்டார்கள். ஜாவ்லி காவல் வீரர்கள் காதுபடவே ரகுநாத் பல்லாள் தங்கள் வீரர்களிடம் சத்தமாகச் சொன்னான். “கிளம்புங்கள் வீரர்களே….”

ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் தங்கள் குதிரைகளில் ஏறிக்கொள்ள அவர்களுடைய வீரர்களும் வேகமாகக் கிளம்பினார்கள். அந்தச் சமயத்தில் உள்ளே மாளிகையிலிருந்து பெரும் கூக்குரல் கேட்டது. “அவர்களைப் பிடியுங்கள்….. விட்டு விடாதீர்கள்”

அந்தக் கூக்குரலில் உஷாராகி மாளிகைக்கு வெளியே இருந்த சில வீரர்கள் சிவாஜியின் ஆட்கள் செல்வதைத் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் சிவாஜி தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்த சிறப்பு வீரர்களோடு சேர்ந்து ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் தீவிரமாகவும் வேகமாகவும் போராடி மற்ற வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்வதற்குள் அங்கிருந்து தப்பித்து விட்டார்கள். முழுநிலவின் ஒளியில் இரவு நேரப் பயணத்தில் அவர்களுக்குப் பிரச்சினை இருக்கவில்லை. தயார் நிலையில் இருந்திராத ஜாவ்லி வீரர்கள் அவர்களை நிறைய தூரம் பின் தொடர முடியவில்லை.

எல்லைக்கு அருகே இருந்த அடர்ந்த காடுகளில் சிவாஜி முன்பே வந்துக் காத்திருந்தான்.    திட்டமிடும் போது சிவாஜி பேச்சுத் திறமை மிக்க ரகுநாத் பல்லாளையும், கத்தியை மிக லாவகமாகவும், வேகமாகவும் பயன்படுத்தும் திறமையுள்ள சம்பாஜி காவ்ஜியையும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்திருந்தான். அங்குள்ள காவல் சக்தி வாய்ந்ததல்ல என்பதையும், மாளிகையின் உள்ளே வீரர்கள் குறைவு, சேவகர்கள் தான் அதிகம் என்பதையும் சொல்லியிருந்தான். ”மாளிகையின் உள்ளே யாரும் அவர்களைத் தாக்க முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதனால் வரும் ஆட்கள் மீது சந்தேகம் இருந்தால் ஒழிய அவர்கள் வீரர்களை மாளிகைக்குள் இருத்திக் கொள்வதில்லை. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருங்கள். அது வரை பேசிக் கொண்டிருங்கள். பேசும் போது குழப்புங்கள். ஆசை காட்டுங்கள். எதையாவது செய்து பேச்சை வளர்த்திக் கொண்டே இருங்கள்…… சந்திராராவ் மோருடன் பெரும்பாலும் ஒரு தம்பியும், ஒரு மகனும் தான் இருப்பார்கள். சில நேரங்களில் ஒருவர் கூட, குறைய இருக்கலாம். பேச்சின் போது உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் குடியிலும் வம்புப் பேச்சிலும் பிரியமானவர்கள். உங்கள் சண்டையை ரசிப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கிக் கொன்று விட்டு வந்து விடுங்கள்….. அது இரவு நேரமாக இருந்தால் உங்களுக்குத் தப்புவதும் சுலபமாக இருக்கும். ஏனென்றால் இரவு நேரங்களில் வேலையாட்களின் நடமாட்டமும் மாளிகைக்குள் அதிகம் இராது. உங்கள் வேலை ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் முடிய வேண்டும்…..”

செல்லும் போது அவர்களைத் தங்க வைத்துக் கொள்ள சந்திராராவ் மோர் விரும்பா விட்டால் எதாவது ஆசை வார்த்தைகள் அல்லது குழப்பும் வார்த்தைகள் சொல்லி எதிர்பார்ப்பை வளர்த்து ஓரிரண்டு நாட்களாவது தங்கி விட வேண்டும் என்று எண்ணி வந்தவர்களை சந்திராராவ் மோர் தானாகவே தங்க வைத்ததும், சென்ற நாள் இரவே பேச அழைத்ததும் அவர்கள் வேலையைச் சுலபமாக்கியிருந்தன.

அடர்ந்த காட்டுக்குள் பெரும் படையுடன் தங்கி இருந்த சிவாஜி, ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் அவன் நினைத்ததை விட வேகமாய் வேலையை முடித்துக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைந்தான். காலதாமதம் செய்யாமல் உடனே ஜாவ்லியை நோக்கி அவனுடைய பெரும்படை புறப்பட்டது.

சிவாஜி போட்ட கணக்கின்படியே ஜாவ்லியில் போருக்குத் தயார் நிலையில் யாரும் இருக்கவில்லை. வஞ்சகமாக சிவாஜியின் ஆட்கள் மன்னனையும், மன்னனின் சகோதரனையும் கொன்று விட்டுத் தப்பித்து விட்டார்கள் என்ற செய்தியை ஜீரணிக்கவே அவர்களுக்கு சிறிது சமயம் தேவைப்பட்டது. இனி என்ன செய்வது, கொலைகாரர்களைப் பிடிப்பது எப்படி, அடுத்த மன்னன் யார், என்று அமைச்சர்களும், அரச குடும்பமும் யோசித்து அலசிக் கொண்டிருக்கையில் சிவாஜி படையுடன் புகுந்தான்.  ஜாவ்லி அரச குடும்பத்தினர்கள் வீரர்களே என்பதால் சிறப்பாகவே போரிட்டார்கள் என்றாலும் அரசனில்லாத குறை  போரில் நன்றாகவே வெளிப்பட்டது. ஜாவ்லி வீரர்களும் அரசனே இறந்து விட்ட நிலையில் இந்தப் போர் வீண் தான், தோற்பது நிச்சயம் என்று உணர்ந்திருந்தது போல் இருந்தது. ஒருவேளை ஜாவ்லி சிவாஜியின் கைக்குப் போனால் தங்களுக்கு உயர்வே என்றும், வீரர்களை சிவாஜி மிக நன்றாகவும் திருப்தியுடனும் வைத்துக் கொள்வான் என்றும் வீரர்கள் நம்பினார்கள். அந்த அளவுக்கு சிவாஜி புகழ் அங்கும் பரவி இருந்தது. மன்னனும் இறந்து விட்ட படியால் சீக்கிரமே போர் முடிந்து சிவாஜியுடனேயே சேர்ந்து விடும் எண்ணம் பல வீரர்களுக்கு இருந்தது. இந்தக் காரணங்களால் போர் விரைவிலேயே முடிவுக்கு வந்து சிவாஜியின் ஆளுமைக்கு ஜாவ்லி பிரதேசமும் வந்து சேர்ந்தது. மராட்டியப் பகுதியின் சகாயாத்ரி மலைத்தொடரை ஒட்டிய பிரதேசம் ஒட்டு மொத்தமாய் இப்போது சிவாஜி வசமாகி விட்டது…..

 
ஷாஹாஜி பீஜாப்பூர் சுல்தானைப் பார்த்துச் செல்ல பீஜாப்பூர் வந்திருந்தார். சுல்தான் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்றும் அவரைக் காண விரும்புகிறார் என்றும் தகவல் வந்த பிறகு அவர் சிறிதும் தாமதிக்காமல் கிளம்பி வந்திருந்தார்.

முகமது ஆதில்ஷா மிகவும் மெலிந்து போயிருந்தார். முதுமையின் முத்திரை அவர் மீது நன்றாகவே பதிந்திருந்தது.

“எப்படி இருக்கிறீர்கள் அரசே?” ஷாஹாஜி கவலையுடன் கேட்டார்.

ஆதில்ஷா அவரது கவலையில் மனம் நெகிழ்ந்து போனார். மரணம் நெருங்கும் காலத்தில் உண்மையான அக்கறை பார்க்க அபூர்வமாகவே கிடைக்கிறது….. பலவீனமான குரலில் ஆதில்ஷா சொன்னார். “அல்லா என்னை அழைத்துக் கொள்ள தீர்மானித்து விட்டபடியே தோன்றுகிறது ஷாஹாஜி. நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்……”

“அப்படிச் சொல்லாதீர்கள் அரசே,” ஷாஹாஜி வருத்தத்துடன் சொன்னார்.

”நெருப்பு என்பதால் வாய் வெந்து விடாது. மரணத்தை நினைப்பதாலோ, சொல்வதாலோ மரணமும் நெருங்கி விடாது ஷாஹாஜி. உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பலவீனத்தை உணர்கிறேன். அதனால் சொன்னேன்”

ஆதில்ஷா சொன்னது உண்மையே. மரணம் சொல்லியோ, அழைத்தோ வருவதில்லை. அவருடைய அன்பு மகன் சாம்பாஜிக்கு எப்படி மரணம் வந்தது? மகன் நினைவு மனதில் இப்போதும் பெரும் வேதனையை ஷாஹாஜி மனதில் உருவாக்கியது. அவர் எண்ண ஓட்டத்தை ஆதில்ஷா உணர்ந்தது போல் அவருடைய கையை ஆறுதலாகப் பிடித்தார்.

பலரும் கொல்லத் தயாராக இருந்து பல முயற்சிகள் செய்தும் ஷாஹாஜியின் இரண்டாம் மகன் சிவாஜியைக் கொல்ல முடியாததும், அத்தனை எதிரிகளைச் சம்பாதிக்காத போதும் ஒரே ஒரு முயற்சியில் ஷாஹாஜியின் மூத்த மகன் சாம்பாஜி கொல்லப்பட்டதும் விதியின் விசித்திர விளையாட்டாக ஆதில்ஷாவுக்குப் பட்டது. சமீபத்தில் ஜாவ்லியையும் சிவாஜி கைப்பற்றி விட்டான். விதி இப்போது அவன் வளைத்தபடி வளைந்து கொடுப்பதாகவே அவருக்குத் தோன்றியது……

ஆதில்ஷாவின் ஆறுதலான கைப்பிடியில் ஷாஹாஜியும் நெகிழ்ந்தார். ஆதில்ஷா ஒரு காலத்தில் அவருக்கு மரண தண்டனை விதித்த மனிதர் என்றாலும் முன்பும் பின்பும் மற்ற சமயங்களில் நட்புடனும், பெருந்தன்மையுடனும் தன்னிடம் நடந்து கொண்ட மனிதர் என்பதை ஷாஹாஜியால் மறக்க முடியவில்லை.

“தங்களிடம் கடைசியாக ஒரு வேண்டுகோளை விடுக்கத் தான் அழைத்தேன் ஷாஹாஜி…” ஆதில்ஷா சொன்னார்.

“வேண்டுகோள் என்று சொல்லாதீர்கள் மன்னா. ஆணையிடுங்கள். செய்கிறேன்….”

அந்த வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்த ஆதில்ஷா அவருடைய கையை இறுக்கப் பிடித்துக் கொண்டார். “என் காலத்திற்குப் பிறகு நீங்கள் என் மகனைக் கைவிட்டு விடக்கூடாது ஷாஹாஜி. உங்கள் இளைய மகன் சிவாஜி வெற்றி மீது வெற்றி கண்டு வருகிறான். பேரரசர் ஷாஜஹான் கூட அவனுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறார் என்ற தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன. அதனால் அவனுடன் நீங்கள் சேர்ந்தால் அதைத் தவறு என்று நினைக்க முடியாது. ஆனால் ஒரு நண்பனாக நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் இந்த அரசின் பக்கமே கடைசி வரை இருக்க வேண்டும் என்பது என் ஆசை.”

ஷாஹாஜி சொன்னார். “என் மகன் என் உதவியில்லாமலேயே எத்தனையோ சாதித்து விட்டான் அரசே. இவ்வளவு காலம் தேவைப்படாத என் உதவி அவனுக்கு இனியும் தேவைப்படாது. அவனும் இதுவரை என் உதவியைக் கேட்டதில்லை.  இனியும் அவன் கேட்பான் என்று தோன்றவில்லை. அவன் பிறப்பிலிருந்தே எங்களைப் பிரித்து வைத்த விதி இனி சேர்த்து வைக்கும் அறிகுறியும் இல்லை. அதனால் நான் வாக்குத் தருகிறேன் மன்னா….. கண்டிப்பாக நான் கடைசி வரை உங்கள் அரசின் பக்கமே இருப்பேன்….”


ஆதில்ஷா உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். “நன்றி நண்பரே நன்றி”


(தொடரும்)
என்.கணேசன்

Saturday, February 23, 2019

ஆறறிவு அனைத்துக் காலங்களிலும் நமக்கு இருக்கிறதா?

மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோமே, உண்மையில் எல்லா நேரங்களிலும் நமக்கு ஆறறிவு இருக்கிறது என்றும் ஆறறிவுடன் தான் நடந்து கொள்கிறோம் என்றும் நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமா? சிந்திக்க வைக்கும் ஒரு அலசல் இதோ…



என்.கணேசன் 

Thursday, February 21, 2019

இருவேறு உலகம் – 124



மாஸ்டருக்கு விஸ்வம் போய்க் கொண்டிருந்த மலைப்பகுதியைக் கண்டுபிடிக்க நிறைய காலம் தேவைப்படவில்லை.  காரணம் விஸ்வம் போய்க் கொண்டிருந்த மலைக்குப் பின்புற மலையில் மாங்கனி போல் தனியாகத் தெரிந்த ஒரு பகுதி. அது விஸ்வத்தைத் தாண்டி அவர் பார்வையில் விழுந்திருந்தது. விஸ்வத்தோடு அவன் இணைந்திருந்த காட்சியும் அவர் பார்வையில் இருந்து மறைந்து போனாலும் அந்த மாங்கனி போல் தனியாக நீட்டியிருந்த மலைப்பகுதி அவர் மனத்திரையில் பதிந்திருந்தது. அவர்கள் இயக்கத்தின் பல உறுப்பினர்கள் இமயமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது அங்கு அடிக்கடி பயணிப்பவர்கள்…. சிலரிடம் போனில் பேசியதிலேயே அந்த வித்தியாசமான மலைப்பகுதி எங்கே இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. அதற்குப் பக்கத்து மலை ஏற எங்கே எப்படிப் போக வேண்டும் என்பதை விவரமாகத் தெரிந்து கொண்டு விட்டு அவர் உடனே கிளம்பினார்.  

எவ்வளவு வேகமாகப் போனாலும் அந்தப் பகுதியை அடைய குறைந்த பட்சம் ஒரு நாள் ஆகி விடும் என்பதால் அவர் செல்கையில் விஸ்வம் அங்கே அகப்பட வாய்ப்பே இல்லை. காளி  கோயிலுக்கு முந்தியது போலவே இந்தத் திரிசூலம் இருக்கும் கோயிலுக்கும் விஸ்வமே முந்திக் கொண்டதை நினைக்கையில் கசந்தது. ஆனால் எல்லாக் கசப்பான அனுபவங்களும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் வருகின்றன என்று அவர் நினைவுபடுத்திக் கொண்டார். அந்தக் கசப்பான அனுபவங்கள் இல்லா விட்டால் சில பாடங்கள் படிக்க முடியாது. அந்தப் பாடங்கள் படிக்காமல் அடுத்த ஞானநிலைக்கு உயர முடியாது. எனவே எல்லா கசப்பான அனுபவங்களும் அடுத்த உயர்வுக்கே என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். ஆனாலும் அந்த மனக்கசப்பு குறைந்து விடவில்லை…

அவர் ரிஷிகேசத்தில் இருந்து ஜீப்பில் இருபது மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. அதன் பின் அந்த மலையடிவாரத்தில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மலையேற ஆரம்பித்தார். இப்போதும் உடல் வலிமை மாஸ்டருக்குக் குறைந்து விடவில்லை என்ற போதும் அவரால் விஸ்வத்தின் அளவு மிக வேகமாக மலையேற முடியவில்லை. முடிந்த வரை வேகமாக ஏறினார். பக்கத்து மலை மாங்கனிப் பகுதி அவர் கண்பார்வைக்குச் சரிமட்டத்தில் வர ஐந்து மணி நேரம் தேவைப்பட்டது. மேலும் சில அடிகள் போன பிறகு திரிசூலமும், கருப்புப் பாறையும் கண்ணுக்குத் தெரிந்தது. அதன் மேலே இருந்த பனியை விலக்கி இருக்கிறார்கள்…. பரபரப்புடன் மாஸ்டர் அந்தத் திரிசூலத்தை நோக்கி நடந்தார். அங்கே நெருங்க நெருங்க சக்தி வாய்ந்த ஆன்மிக அலைகளை அவர் உணர ஆரம்பித்தார். யோகிகள் சித்தர்கள் இருந்த இடத்தில் தான் இப்படிப்பட்ட சக்தியலைகளை உணர முடியும். இது வரை திரிசூலம் மேலே நடப்பட்ட ஏதோ சிறு கோயில் பகுதி மட்டுமே என்று நினைத்திருந்த மாஸ்டருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அருகே சென்ற போது அந்தத் திரிசூலத்திற்குக் கீழே குகைத் துவாரம் தெரிந்தது.

அந்தக் குகையிலிருந்து சக்தி அலைகள் முழுவீச்சில் வெளிப்பட்டதை உணர்ந்த மாஸ்டர் மெய்சிலிர்த்து அதன் வாசலிலேயே மண்டியிட்டு வணங்கி விட்டு தான் உள்ளே சென்றார். உள்ளே ஒரு தவசி படுத்த நிலையில் அசைவற்று இருந்தார். அவர் இடது கைப்பிடியில் ஒரு கம்பளித்துணி  இருந்தது. நெருங்கிச் சென்று பார்த்த போது அவர் இறந்து போயிருந்தது தெரிந்தது. அவரது மெலிந்த உடலில் இடுப்பில் ஒரு காவித்துணி மட்டுமே இருந்தது. அந்தத் தவசி ஒரு வெள்ளைக்காரர் என்பதைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. அவர் முகத்தில் அசாதாரணமான அமைதியும் நிறைவும் தெரிந்தது. உயர்வான வாழ்க்கையை முறையாக வாழ்ந்து விட்டுப் போன திருப்தியோ? மாஸ்டர் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

வெளியில் இருக்கும் கடுங்குளிருக்கு  எதிர்மாறாக குகையில் நிலவிய லேசான வெப்பம் இதமாக இருந்தது. உள்ளே ஒளிர்ந்த மங்கலான ஒளி இந்த தவசியின் தவவலிமையின் பலனாகவே இருக்க வேண்டும். அவர் மறைந்தாலும் இந்த மங்கலான ஒளியும், இங்கு நிறைந்திருந்த சக்தி அலைவீச்சும் குறையாமல் இருப்பதே அவருடைய தவ மகிமைக்கு அத்தாட்சி என்று தோன்றியது.  ஒரு வளர்பிறை சப்தமி நாளில் கிடைத்த அந்த வரைபடம் இங்கிருக்கும் ஏதோ ஒன்றுக்காகத் தான் அவர் கையில் கிடைத்திருக்கிறது. இந்த இறந்த மனிதரா, இல்லை இந்தக் குகைக்குள் இருக்கும் ஏதோ ஒன்றா?

மாஸ்டர் அந்தக் குகையை நிதானமாக ஆராய்ந்தார். சிறிய குகை தான். அங்கே பொருட்கள் எதுவுமில்லை. குகைச் சுவரில் ஓரிடத்தில் ஒரு முகம் செதுக்கப்பட்டிருந்தது. நெற்றியில் ஒரு சிறு முக்கோண அளவுக்கு துளை தெரிந்தது. முகத்தில் இருந்த கண்கள் பாதி மூடிய தியான நிலையில் இருந்தன. சிவனின் யோக நிலையைப் பிரதிபலிக்கும் முகம். முகத்தில் பேரமைதி. பெரும் சாந்தம். நெற்றிக்கண் இருக்கும் இடத்தில் துளை ஏன் என்பது தெரியவில்லை. முதலில் இருந்து பின் அது எடுக்கப்பட்டிருக்கிறதோ? விஸ்வம் அதைக் கொண்டு போயிருக்கக்கூடுமோ? மெல்ல அந்த நெற்றித் துளையை விரலால் மாஸ்டர் வருடினார். பெரும் சக்தி வீச்சை விரல் உணர்ந்தது. கண்டிப்பாக நேற்று வரை இந்த இடத்தில் அந்த நெற்றிக்கண் இருந்திருக்க வேண்டும்…..

மாஸ்டர் யோசித்தார். கண்டிப்பாக விஸ்வம் உளியால் தட்டி அதைப் பிரித்து எடுத்துக் கொண்டு போயிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் துளையில் கரடுமுரடு இல்லை. அந்த நெற்றிக்கண் முன்பே பொருத்தி வைக்கப்பட்டு தான் இருக்க வேண்டும். முக்கோண வடிவுக்குள் நெற்றிக் கண் மிகவும் பிரபலமான சக்திச் சின்னம். அமெரிக்க டாலரில் கூட அந்தச் சின்னம் இருப்பதாகவும், அது இல்லுமினாட்டியின் சின்னம் என்றும் யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறார். விஸ்வம் இல்லுமினாட்டிக்குப் பணம் அனுப்பி இருக்கிறான். இப்போது அந்தச் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு போய் இருக்கிறான். அவனுக்காகவே அது காத்திருந்ததோ? இல்லை அவர்கள் இயக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த சின்னத்தை அவன் எடுத்துக் கொண்டு போய் விட்டானா? இரண்டாவது சாத்தியக்கூறை நினைக்கையில் அவர் மனம் பதைத்தது. ’நான் ஏமாந்ததற்கான தண்டனையா இது குருவே’ என்று மனதிற்குள் அவர் கதறினார். மேலும் தேடிப்பார்த்தார். அங்கே வேறு வித்தியாசமான பொருட்களோ வேறு எதாவது சிற்பமோ, சின்னமோ இருக்கவில்லை…. மனம் வேதனையை உணர்ந்தது. சிவனின் யோகநிலை முகச்சிற்பத்தைப் பார்த்தார். நெற்றியில் துளையோடு இருப்பது பெரும் குறையாகப் பட்டது. அவர் முதலில் வந்திருந்தாலும் அந்த நெற்றிக் கண்ணை எடுத்துச் சென்றிருக்க மாட்டார். எடுக்க முடிந்தது என்று தெரிந்தாலும் அந்த சிலையை ஊனப்படுத்திக் கொண்டு போய் எதைச் சாதிக்க முடிந்தாலும் அதைச் செய்ய அவர் மனம் ஒத்துக் கொண்டிருக்காது. அந்த சிவனையும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய மாஸ்டர் அந்தத் தவசியின் சடலத்தை முறையாகப் புதைத்து விட்டுச் செல்வது தான்  அவருக்குத் தரும் மரியாதை என்று நினைத்தார். கையில் இருந்த கம்பளித் துணியை மெல்ல இழுத்தார். கையோடு கம்பளித்துணி வந்தது. ஆனால் அதைத் தொட்டவுடன் அவர் உடல் ஒரு கணம் கூசியது. இது விஸ்வத்தின் கம்பளித்துணி என்று உணர்ந்தார். முன் மனக்கண்ணில் கண்ட காட்சியை நினைவுபடுத்திப் பார்க்கையில் இந்தத் துணி அவன் இடுப்பைச் சுற்றி இருந்ததை அவரால் மறுபடி பார்க்க முடிந்தது. அந்தத் துணியை மடித்து ஓரத்தில் வைத்து அந்தத் தவசியைச் சுமந்து கொண்டு வெளியே வந்தார். தவசி மிக லேசாக இருந்தார். பிணக்கனம் என்று சொல்வது இவர் விஷயத்தில் உண்மையில்லை…..

அந்தத் தவசியின் உடலை குகைக்கு அருகிலேயே இருந்த சற்று தட்டையான அகலமான இடத்தில் பனியை விரல்களாலேயே தோண்டி பள்ளத்தை ஏற்படுத்தி விட்டுப் புதைத்து அந்தப் பனியை மறுபடி மூடினார். உறைபனியைத் தோண்டியதால் அவர் கைகளில் காயமாகி ரத்தம் கசிந்து வெள்ளைப் பனியோடு சிவப்பு நிறமும் கலந்தது. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.  மண்டியிட்டு அவர் வணங்கி நிமிர்ந்த போது மேலே ஒரு கருப்புப் பறவை வட்டமிட ஆரம்பித்தது. மூன்று முறை வட்டமிட்ட பின் அந்தப் பறவை அந்த சமாதியில் அமர்ந்தது. மெய்சிலிர்த்துப் போன மாஸ்டர் கைகளைக் கூப்பினார். அவர் பார்த்த அந்த வரைபடத்தில் பார்த்த பறவை இது தானோ? அந்தப் பறவை ஒரு நிமிடம் அமைதியாக அவரையே பார்த்தது. பின் பறந்து போய் விட்டது. உயர உயரப் பறந்த அது கண்பார்வையில் இருந்து மறையும் வரை மாஸ்டர் பார்த்துக் கொண்டே இருந்தார். அது வந்து போனது ஏதோ ஒரு வகை ஆசிர்வாதம் போல மனம் உணர்ந்தது. மறுபடி பார்வையைக் கீழிறக்கிய போது ஒரு கணம் சிலையாய் அவர் உறைந்தார். அந்த சமாதியின் மேல் முக்கோண வடிவக்கல் இருந்தது. அதன் நடுவே நெற்றிக் கண் இருந்தது. கிட்டத்தட்ட அந்தச் சிவனின் நெற்றிக்கண் பகுதியில் ஏற்பட்டிருந்த துளையின் அளவே அது இருந்தது. அந்தப் பறவை கொண்டு வந்து வைத்து விட்டுப் போயிருக்க வேண்டும். உடலும் மனமும் சிலிர்த்தது…. மாஸ்டர் மெல்ல அந்த நெற்றிக்கண் கல்லைக் கையில் எடுத்தார்.

(தொடரும்)

என்.கணேசன் 

Monday, February 18, 2019

சத்ரபதி 60


ந்திராராவ் மோருக்கு அந்த முட்டாளை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. திமிரைக் காட்டினால் உடனேயே வாளால் வெட்டிச் சாய்க்கலாம். ஆனால் அறியாமையைக் காட்டினால் என்ன தான் செய்வது? அவன் தம்பியைப் பார்த்தான்.

தம்பி ரகுநாத் பல்லாளிடம் சொன்னான். “நீ புரிந்து கொள்வது அதிகமாய் விட்டதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. அதிசாமர்த்தியம் யாருக்கும் நல்லதல்ல”

“ஐயா! நான் தவறாகக் கேட்டிருந்தால் தயவு செய்து மன்னித்தருளுங்கள். இனி ஜாவ்லி உங்கள் முப்பாட்டனுக்குத் தானமாகக் கிடைத்தது பற்றி நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன்…. இரு பக்கத்து முப்பாட்டன்களையும் விட்டு விட்டுப் பேசுவோம். எங்கள் சிவாஜி உங்களுக்கு எந்த விதத்தில் சமமானவர் இல்லை என்று கருதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?”

‘மறுபடியுமா!’ என்று சலித்த தம்பி அண்ணனைப் பார்த்தான். சந்திராராவ் மோர் அந்த முட்டாளிடம் பேசி மன அமைதியை இழக்க வேண்டுமா என்று யோசித்தாலும் அந்த மரமண்டைக்கு இப்போதைய யதார்த்த நிலையைப் புரிய வைத்தே ஆக வேண்டும், இல்லா விட்டால் சிவாஜியை விட நம்மைக் குறைவாக அவன் நினைத்துக் கொண்டது மாறாது என்று நினைத்தபடி சொன்னான். “நான் பிறந்ததில் இருந்தே அரசன். அன்றும் ஜாவ்லியின் அரசன். இன்றும் ஜாவ்லியின் அரசன். ஆனால் சிவாஜி? அவன் பிறந்த போது அவன் விலாசம் என்ன? யோசித்துப் பார். இப்போது எங்கள் இருவருக்கிடையே இருக்கும் ஏற்ற தாழ்வுகள் புரிகிறதல்லவா?....”

ரகுநாத் பல்லாள் கண்களை மூடி ஆழ்ந்து யோசித்து விட்டு, “புரிகிறது மன்னா” என்று சொன்னான்.

“என்ன புரிகிறது சொல்” என்றான் சந்திராராவ் மோர். அவனுக்கு அந்த வித்தியாசங்களை சிவாஜியின் ஆள் வாயால் கேட்டு மகிழ விருப்பமாக இருந்தது.

”நீங்கள் பிறக்கும் போது ஜாவ்லியின் அரசன். இன்றும் ஜாவ்லியின் அரசன். சிவாஜி பிறக்கும் போது அனாமதேயம். இன்றோ உங்களை விட மூன்று மடங்கு பூமிக்கு அரசன். உங்கள் ஆட்சி அன்றும் இன்றும் ஒரே பூமியில் விரிவடையாமல் இருக்கிறது. சிவாஜியின் ஆட்சியோ நாளுக்கு நாள்  விரிவடைந்து கொண்டே இருக்கிறது…. நீங்கள் ஜாவ்லியில் ஆட்சி செய்ய வருடாவருடம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் சிவாஜி யாருக்கும் எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை….”

சந்திராராவ் மோர் இரத்தம் கொதித்தது. அந்த மூடன் கண்ட வித்தியாசங்கள் அவன் இது வரை கண்டிராதவை. காணவும் விரும்பாதவை. அந்த மூடன் புரிகிறது என்று சொன்னவுடனேயே விட்டு விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. சினத்தோடு கேட்டான். ”எனக்கு அதிகமாக இருந்து அவனுக்குக் குறைவாக இருப்பது எதுவும் உன் அறிவுக்கு எட்டவில்லையா?”

“எட்டுகிறது மன்னா. அதைச் சொல்லத் தேவையில்லை என்று விட்டு விட்டேன்”

“பரவாயில்லை சொல் மூடனே. நான் அதைக் கேட்கப் பிரியப்படுகிறேன்.”

ரகுநாத் பல்லாள் ஆழ்ந்த ஞானத்தோடு உணர்ந்தவன் போல் சொன்னாள். “உங்களுக்கு வயது அதிகம். சிவாஜிக்கு வயது குறைவு…. உங்களுக்குப் ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவருக்கு இனிமேல் தான் பிறக்க வேண்டும்.”

சந்திராராவ் மோரின் தம்பி குடி போதையில் தன் கட்டுப்பாட்டையும் மீறிச் சிரித்து விட சந்திராராவ் மோர் கடுங்கோபத்தில் தன் வாள் மீது கையை வைக்க சம்பாஜி காவ்ஜியும் கோபம் கொண்டவனாய் தன் சகாவைக் கடிந்து கொண்டான்.

“மன்னர் உன்னை மூடன் என்று அழைத்ததில் தவறேயில்லை. அவர் என்ன கேட்டார்? நீ என்ன சொல்கிறாய்?”

தன் பக்கமாக சம்பாஜி காவ்ஜி பேச ஆரம்பித்ததும் வாள் மேல் வைத்த கையை விலக்கிக் கொண்ட சந்திராராவ் வந்திருப்பவர்களில் ஒருவனாவது விவரமுள்ளவனாக இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டான். சில சில்லறை விஷயங்களில் நமக்காக நாமே வாதாடுவது சற்று கௌரவக் குறைவாகவே தோன்றுவதால் அடுத்தவர் வாதாடுவது மதிப்பைக் கூட்டும் என்று நிம்மதி அடைந்தான்.

ரகுநாத் பல்லாள் தன் சகா பக்கம் திரும்பினான். “இந்த மன்னரிடம் அதிகம் இருந்து நம் மன்னர் சிவாஜியிடம் அதிகமில்லாததைச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன்…..”

“நீ சொன்னது அவரைக் கோபமூட்டும் விதத்தில் இருப்பதை நீ உணரவில்லையா மூடனே”

“அவர் கேட்டதற்கு நான் பதில் சொல்லா விட்டால் அது அவரை அவமதிப்பது போல் ஆகுமா ஆகாதா? பதில் சொல்லாமல் விட்டால் அது அவரைக் கோபமூட்டாதா முட்டாளே” ரகுநாத் பல்லாளும் கோபத்தோடு கேட்டான்.

”நம் மன்னர் இந்தச் சம்பந்தத்தை எப்படியாவது முடித்து விட்டு வரும்படி அல்லவா நம்மிடம் சொல்லி அனுப்பினார்? நீ பேசுவது அவரைக் கோபமூட்டுவது போல் அல்லவா இருக்கிறது?”

“அவரைக் கோபமூட்டுவது உண்மை. நானல்ல. என்னை ஏன் குற்றம் சொல்கிறாய்?”

“ஒரு சம்பந்தம் உறுதி செய்யப்பட வேண்டுமானால் இனிமையாகப் பேச வேண்டும். பிடித்தமானவைகளையே பேச வேண்டும். அதை விட்டு விட்டு உண்மையைப் பேசுவதாகச் சொல்லி அவருக்கு எதிரானதையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் இந்தச் சம்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படுமா?”

”சரி. உண்மை கோபமூட்டுவதால் அதற்கு எதிரானதையே சொல்கிறேன். மன்னா. நீங்கள் இளைஞர். சிவாஜி முதியவர். உங்களுக்குப் பிள்ளைகள் இனி தான் பிறக்க வேண்டும். சிவாஜிக்குப் பல பிள்ளைகள். சரி தானா”

சந்திராராவ் மோரை விட சம்பாஜி காவ்ஜி கோபத்தின் உச்சத்திற்குப் போய் ரகுநாத் பல்லாள் மீது பாய்ந்து அவன் கழுத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டே சொன்னான். “மூடனே நீ வாயை மூடிக் கொண்டு இரு; அது போதும்…..”

“வாயை மூடிக் கொண்டிருந்தால் சம்பந்தம் எப்படி நடக்கும்? முட்டாளே நீ அதைச் சொல் முதலில்” என்றபடியே ரகுநாத் பல்லாளும் சம்பாஜி காவ்ஜியின் கழுத்தைப் பிடித்துக் கொண்டான்.

தங்கள் முன் இருவரும் சண்டையிடுவதைத் தடுக்க சந்திராராவ் மோரின் தம்பி எழப் போனான். சந்திராராவ் மோர் தடுத்து அமர வைத்துக் காதில் முணுமுணுத்தான். “விடு. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகட்டும். நாம் இவர்களைப் பொழுது போக்குக்காகத் தானே கூப்பிட்டனுப்பினோம். இப்போது தான் பொழுது போக்கு களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. வேடிக்கை பார்.”

தம்பி அதுவும் சரிதான் என்று நினைத்தவனாக அமர்ந்தான். இருவரும் மது அருந்தியபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

சம்பாஜி காவ்ஜி சொன்னான். “தவறாகப் பேசுவதை விட மௌனம் உத்தமம். அதனால் எத்தனையோ காரியம் நடக்கும்”

ரகுநாத் பல்லாள் சொன்னான். “அந்தக் காரியம் நல்லதாகவும், பயனுள்ளதாகவும் இருக்குமா? முக்கியமாய் இந்தச் சம்பந்தம் உறுதிப்படுமா? அதைச் சொல் முட்டாளே”

சம்பாஜி காவ்ஜி கத்தி எடுத்துக் கொண்டு ரகுநாத் பல்லாளின் கழுத்தில் வைத்துச் சொன்னான். “உன்னை ஒழித்தால் அதிலேயே மகிழ்ச்சியடைந்து மன்னர் தன் மகளை சிவாஜிக்குக் கொடுப்பார்”

ரகுநாத் பல்லாளும் தன் கத்தியை எடுத்துக் கொண்டான். “என்னை ஒழிக்கும் வரை என் கை பூப்பறித்துக் கொண்டிருக்குமா?”

சம்பந்தம் பேச வந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கத் தயாரானது சந்திராராவ் மோருக்கு வேடிக்கையாக இருந்தது. சிவாஜியை விடப் பெரிய முட்டாள்களாக அவன் அனுப்பிய ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். நடுநிசியாகி இருந்ததால் மாளிகையில் மற்றவர்கள் அனைவரும் உறங்கி விட்டிருந்தார்கள். இவர்களும் இத்தனை களேபரத்திலும் குரலை மட்டும் அடக்கியே வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் கோபம் பேச்சிலும், முகத்திலும் தெரிந்ததே ஒழிய சத்தம் அறையை விட்டுத் தாண்டவில்லை. குடி போதையில் இருந்த இருவரும் இந்த சூட்சுமத்தைக் கவனிக்காமல் சுவாரசியமாகக் குடித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.

சம்பாஜி காவ்ஜி ”இப்போதும் தவறை உணர மாட்டேன் என்கிறாயே மூடனே. உன்னுடன் பேசுவதும் எனக்கு வெறுப்பாக இருக்கிறது.” என்று சொல்லி விட்டு விலகி எழுந்து நின்றான்.

ரகுநாத் பல்லாள் தானும் எழுந்து நின்றான். “என்னுடைய தவறை நான் உணர்கிறேன். உன்னோடு வந்தது தான் என் தவறு. இங்கு உண்மை பேசியது இன்னொரு தவறு”

“மன்னர் சிவாஜி உன்னை இங்கு அனுப்பியதே தவறு என்பது என் கருத்து. பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவாய் என்று தெரிந்திருந்தால் உன்னை அனுப்பி இருக்க மாட்டார்.”

“சரி முட்டாளே! நீ பேசாமல் காரியம் சாதித்து விடு பார்ப்போம். நான் உன்னுடன் போராடவில்லை. ஆனால் சாதிக்கா விட்டால் உன்னை நான் சும்மா விட மாட்டேன்” என்று சொன்ன ரகுநாத் பல்லாள் தன் கத்தியை மறுபடி உறையில் போட்டுக் கொண்டான்.

சண்டை வெட்டு குத்தில் முடியாததில் சந்திராராவ் மோருக்குச் சிறுவருத்தம். சரி இந்த முட்டாள் பேசாமல் எப்படிச் சாதிக்கிறான் என்று பார்ப்போம் என்று நினைத்தவனாய் அடுத்த வேடிக்கைக் காட்சிக்குத் தயாரானான்.


“இதோ சாதிக்கிறேன் பார்” என்று சொன்ன சம்பாஜி காவ்ஜி  சற்றும் எதிர்பாராத விதமாய் சந்திராராவ் மோர் மீது பாய்ந்தான். சம்பாஜி காவ்ஜியின் ஒரு கை  சந்திராராவ் மோரின் வாயை உறுதியாகப் பொத்தியது. மறு கையிலிருந்த கத்தி அவன் கழுத்தை மின்னல் வேகத்தில் அறுத்தது.. குடிபோதையில் இருந்த தம்பி என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் ரகுநாத் பல்லாள் பாய்ந்து தம்பி வாயை ஒரு கையால் பொத்தி மறு கையால் உடும்பாக உடலை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அண்ணனை ஒழித்துக் கட்டிய கத்தியாலேயே தம்பியின் கழுத்தையும் சம்பாஜி காவ்ஜி வேகமாக அறுத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, February 14, 2019

இருவேறு உலகம் – 123

னிமையில் கடுமையான தவம் மேற்கொள்ளும் தவசிகள் பெரும்பாலும் அடுத்தவர்களின் குறுக்கீட்டை விரும்பாதவர்களாக இருப்பார்கள். ஒருமுறை கலையும் தவத்தை மீண்டும் தொடர, அந்தப் பழைய தவநிலைக்கு மீண்டும் செல்ல, சில சமயங்களில் மிக நீண்டகாலம் தேவைப்படுவதுண்டு. அதனால் அனாவசியமாய் இடைஞ்சல் செய்பவர்களை அந்தத் தவசிகள் கடுமையாய் சபிப்பதும் உண்டு. குகைக்கு உள்ளே இருக்கும் தவசி அப்படி ஏதாவது செய்து விடும் வாய்ப்பிருந்தால் கூட வந்தவர்களில் ஒருவனையே உள்ளே போய் நிலவரத்தைப் பார்க்கச் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் மற்றவர்களும் உள்ளே நுழைந்து பார்ப்பார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. உள்ளே மிக முக்கியமாக இருக்கும் ஏதோ ஒன்றை இவர்கள் அழித்தாலோ, கலைத்தாலோ வந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடும். மாஸ்டரின் குரு ஏதோ ஒரு மிகநல்லது அல்லது சக்தி வாய்ந்தது இங்கு கிடைக்கும் என்ற பொருளிலேயே இந்த இடத்தை மிக ரகசியமாக தன் பிரிய சிஷ்யனுக்குத் தெரிவிக்க முயன்றிருக்கிறார்…. இதையெல்லாம் யோசித்துக் கடைசியில் தானே உள்ளே நுழைவது என்று முடிவு செய்த விஸ்வம் சக்தி அலைகளால் தனக்கு ஒரு தற்காப்பு அரணை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வெளியிலேயே இருக்க சைகை செய்து விட்டு, ஜாக்கிரதையாக உள்ளே நுழைந்தான்.

இமயத்தின் வெளிக்குளிர் அந்தக் குகைக்குள் இருக்கவில்லை. வெளியே இருக்கும் ஒளி நுழைவாயிலிலேயே நின்று விட்டிருந்தாலும் கூட உள்ளே வேறு ஒரு மங்கலான ஒளி தெரிந்தது. அது அந்தத் தவசியின் தவ வலிமையின் ஒளியாகவே இருக்க வேண்டும். அந்தத் தவசி இப்போது அமர்ந்த நிலையில் இருக்கவில்லை. படுத்த நிலையிலேயே இருந்தார். இடுப்பைச் சுற்றி ஒரு காவித்துணி மட்டுமே அவர் உடலில் ஆடையாக இருந்தது. மிக நெருங்கிப் பார்த்த விஸ்வத்துக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்தத் தவசி விஸ்வம் எதிர்பார்த்தது போல இந்தியர் அல்ல. திபெத் அல்லது சீனத் துறவியும் அல்ல. பார்க்க வெள்ளைக்காரர் போலத் தெரிந்தார். தாடியும் தலைமுடியும் சாம்பல் நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாய் இருந்தது. அந்தத் தவசியிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அலைவீச்சு மிகச் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் உடல்நிலையில் மிகப் பலவீனமாக இருந்தார். மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மனிதர் போலத் தெரிந்தார். அவருடைய கண்கள் விஸ்வத்தை வெறித்துப் பார்த்தன. அந்த வெறித்த பார்வையில் கோபமோ, அதிர்ச்சியோ தெரியாததால் அவர் குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் எதிர்பார்த்தவராக இல்லை என்பதும், தவம் விலகிய நிலையில் தான் இருந்தார் விஸ்வத்துக்குப் புரிந்தது. ஓரளவு நிம்மதியடைந்த அவன் தரையில் மண்டி இட்டு அவருக்கு வணக்கம் தெரிவித்தான். ஏதாவது சொல்கிறாரா என்று பார்த்தான். இல்லை.  செய்தி ஏதாவது அவர் கண்களில் தெரிகிறதா என்று பார்த்தான். அதுவுமில்லை. அவர் இடது கை மட்டும் மெல்ல உயர்ந்தது. விஸ்வம் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த கம்பளித் துணியை அது பிடித்துக் கொண்டது. விஸ்வம் தன் வயிற்றுப் பகுதியின் மணிபுரா சக்ராவில் இருந்து சக்தி உருவப்படுவது போல் உணர்ந்தான். வேகமாக அந்தக் கம்பளித் துணியை அவிழ்த்து விட்டுப் பின் நகர்ந்தான். அந்தத் தவசியின் கையில் அந்தக் கம்பளித்  துணி இருந்தது. அதை அந்தக் கையில் இருந்து இழுக்க விஸ்வம் முயன்றான். அந்தக் கம்பளித் துணியின் வழியாக அவனுடைய சக்திகள் வேகமாக இழுக்கப்படுவது போல் உணர்ந்தான். உடனே அந்தக் கம்பளித் துணியிலிருந்து அவன் கைகளை விலக்கிக் கொண்டான். இந்த ஆள் வேண்டுமென்றே செய்கிறாரா இல்லை எல்லாம் தானாக நடக்கிறதா என்பது புரியவில்லை. தன் சக்திகளைக் குவித்து அவரை அறிய முயன்றான். முடியவில்லை. அவர் கண்கள் அவன் மீதிருந்து விலகி அவன் பின்னால் இருந்த ஏதோ ஒன்றில் நிலைத்தது. கண்களில் மின்னல் ஒன்று தோன்றி மறைந்தது. அவர் இறந்து விட்டார்.

விஸ்வம் கடைசியாக அவர் பார்வை நிலைத்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள மெல்லத் திரும்பினான். குகையின் பாறைச்சுவர் தான் இருந்தது. கூர்ந்து பார்த்த போது அந்தச் சுவரில் சிவனின் முகம் செதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது அந்தத் தவசி வழிபட்ட உருவமாகத் தோன்றவே விஸ்வம் ஆச்சரியப்பட்டான். பொதுவாக எல்லா இடங்களிலும் சிவனை லிங்க வடிவில் தான் வழிபடுகிறார்கள். சிவனின் முகம் வழிபடப்படுவது அரிதிலும் அரிது. இமயமலையில் பனி லிங்கங்கள் கூட சில இருக்கின்றன. ஆனால் இப்படி முகம் ஒன்று இருப்பது ஆச்சரியமே. விஸ்வம் அந்தச் சிவனின் முகத்தை ஆராய்ந்தான். நல்ல சிற்ப வேலைப்பாடு. இந்தத் தவசியே செதுக்கியதோ இல்லை வேறு யாரோ ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டதோ தெரியவில்லை. இரண்டு கண்கள் அரைகுறையாக மூடியிருக்க நெற்றிக் கண்ணும் அப்படியே பாதித் திறந்து இருந்தன. அவன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நெற்றிக் கண் ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது. விஸ்வத்தின் ஆச்சரியம் அதிகரித்தது. மிக நெருங்கிப் பார்த்த போது விஸ்வம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனான். காரணம் சிவனின் நெற்றிக் கண்ணைச் சுற்றி ஒரு மெலிதான முக்கோணம் தெரிந்தது. ஒரு முக்கோணத்துக்குள் ஒரு கண். இல்லுமினாட்டியின் சின்னம்…. மெல்ல அந்தச் சிவனின் நெற்றிக் கண்ணைத் தொட்டுப் பார்த்தான் ஒரு சக்தி ஓட்டத்தை அவன் கைகள் உணர்ந்தன. அதே சமயம் அந்த முக்கோணம் லேசாக அசைந்தது. விஸ்வம் அந்த முக்கோணத்தை மேலும் நன்றாக அசைத்துப் பார்த்தான். அந்த முக்கோணம் சிலையில் பொருத்தப்பட்டுத் தான் இருக்கிறது என்பது தெரிந்தது. சற்று பலம் பிரயோகித்து அதை அங்கிருந்து அவன் உருவப் பார்த்தான். உடனே வரவில்லை என்றாலும் இரண்டு நிமிட முயற்சிக்குப் பின்னால் அந்த முக்கோணம் கழன்று அவன் கைக்கு வந்தது. விஸ்வம் பெரியதொரு சக்தி வீச்சை அதில் உணர்ந்தான். வாழ்விலேயே இது வரை அனுபவித்திருக்காத மகிழ்ச்சியையும் விஸ்வம் உணர்ந்தான்.

யோசித்துப் பார்க்கையில் எல்லாம் முன்பே தீர்மானித்திருப்பது போல விஸ்வத்துக்குத் தெரிந்தது. மாஸ்டருக்காக குரு வைத்திருந்த அந்த வரைபடம் அவன் கையில் தான் முதலில் கிடைத்தது.  அவன் தான் இங்கு முதலில் வர முடிந்தது. இறக்கும் முன் அந்தத் தவசியின் பார்வை அந்த பாறைச்சுவர் சிற்பத்தில் விழுந்ததால் தான் அவன் அதைப் பார்த்தான். அவனுக்கு அதன் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பது போலவே அந்தச் சிற்பத்தின் நெற்றிக் கண் ஒளிர்ந்தது. அதனால் தான் அவன் அதைக் கூர்மையாகக் கவனித்தான். அதனால் தான் அந்த முக்கோணம் தெரிந்தது. அது இல்லுமினாட்டியின் சின்னமாகவும் தெரிகிறது என்பதற்காகத் தான் அவன் தொட்டுப் பார்த்தான். அசைந்ததால் தான் அதை வெளியே எடுத்தான். இல்லுமினாட்டியின் தலைவனாக அவன் ஆக வேண்டும் என்பதற்காகவே எல்லாம் நடப்பது போல் தோன்றியது. இந்த்ச் சின்னத்தை அவன் எடுத்துக் கொண்டு போய் அந்த இல்லுமினாட்டி உறுப்பினர்களிடம் காண்பித்து பேச வேண்டிய விதத்தில் பேசினால் அவனே தேர்ந்த்டுக்கப்பட்டவன் என்பதை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன. அவன் தேஜஸை தவ வலிமையால் அதிகப்படுத்திக் கொள்வான். இல்லுமினாட்டியின் தலைவனாக வேண்டிய அத்தனைத் தகுதிகளும் அவனுக்கு இருக்கின்றன. விதியும் அவனுக்கு இந்த அளவுக்கு உதவியிருக்கிறது….. அவன் கண்டிப்பாக அந்த இயக்கத்தின் தலைவன் ஆவான். அவன் உலகத்தின்  விதியை உருவாக்குவான். அவனுக்குள் உற்சாகம் பொங்கியது…..

அந்தக் குகையில் வேறெதாவது வித்தியாசமாக இருக்கிறதா என்று ஒரு முறை சுற்றிப் பார்த்தான். எதுவும் இருக்கவில்லை. கிளம்பத் தயாரான போது அவன் கம்பளித்துணி அந்தத் தவசியின் கைகளில் இருப்பதைக் கவனித்தான். அதை மெல்ல உருவ மறுபடியும் முயன்றான். வரவில்லை. சற்று பலம் பிரயோகித்தான். அப்படியும் வரவில்லை. பின் விட்டு விட்டான். இத்தனை காலம் தவம் செய்த ஆசாமிக்குக் கடைசியில் கிடைத்திருப்பது அவன் கம்பளி தான். இல்லுமினாட்டி சின்னத்தை அவனுக்குக் கொடுத்திருப்பதற்கான சன்மானமாக அது இருந்து விட்டுப் போகட்டும் என்று நினைத்தபடி அங்கிருந்து வெளியே வந்தான்.

வெளியே வந்த போது ஒரு விஷயம் மட்டும் விஸ்வத்தின் மனதை இடித்தது. அந்தக் கருப்புப் பறவை! அந்த வரைபடத்தில் இருந்த கருப்புப் பறவை வானத்தில் தெரிகிறதா என்று பார்த்தான். தெரியவில்லை. திரும்பிக் கீழே செல்கையில் அந்த ஆட்களிடம் அந்தப் பகுதிகளில் ஏதாவது கருப்புப் பறவையை அவர்கள் பார்த்தது உண்டா என்று கேட்டான். ஐந்து பேரில் நான்கு பேர் பார்த்ததில்லை என்றார்கள். ஒருவன் அந்த மலைப்பகுதியில் ஒரே ஒரு முறை மட்டும் பார்த்திருப்பதாகச் சொன்னான். அது எப்போது என்பதை அவன் நினைவு வைத்திருக்கவில்லை. அந்தப் பறவையுடன் இணைத்துச் சொல்லும்படியான சம்பவம் எதுவும் கூட அவன் நினைவில் இருக்கவில்லை.

அந்த வரைபடத்தில் இருந்தது கருப்புப் பறவை தானா இல்லை வேறெதாவதா?

(தொடரும்)

என்.கணேசன்

Monday, February 11, 2019

சத்ரபதி – 59


ந்திராராவ் மோரிடம் சிவாஜியின் தூதுவர்கள் இருவர் வந்திருப்பதாக வீரர்கள் தெரிவித்த போது அவன் தன் சகோதரனிடம் சிவாஜியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தான். காத்திருக்கச் சொல் என்று கட்டளையிட்டு வீரர்களை அனுப்பி விட்டுச் சிரித்துக் கொண்டே சந்திராராவ் மோர் தன் தம்பியிடம் சொன்னான். “சைத்தானைப் பற்றி நினைக்கும் போதே அது எதிரில் வந்து நிற்கும் என்று சொல்வார்கள். இந்தச் சைத்தான் ஆட்கள் அனுப்பியிருக்கிறது பாரேன்…..”

அண்ணனின் நகைச்சுவை உணர்வுக்குத் தம்பி குலுங்கிச் சிரித்தான். “உண்மை அண்ணா. அவனே நேரில் வந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். நாம் அன்று போட்டத் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்.”

“ஆயுள் கெட்டியானதால் ஏதோ வேலை நினைவு வந்து அன்று அவன் போய் விட்டான்….”

“நம் மீது சந்தேகம் வந்து கூட அவன் ஓடியிருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது”

“அப்படிச் சந்தேகம் வந்து அன்று ஓடியிருந்தால் இன்று ஆள் அனுப்பியிருக்க மாட்டான். சரி வா என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று சொன்ன சந்திராராவ் மோர் வந்தவர்களைச் சந்திக்கத் தம்பியுடன் சென்றான்.

அவனை மிகுந்த மரியாதையுடன் வணங்கி விட்டு சிவாஜியின் ஆட்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். “அரசே! நான் ரகுநாத் பல்லாள். இது சம்பாஜி காவ்ஜி. எங்களை ஒரு மிக முக்கிய விஷயமாக மன்னர் சிவாஜி அனுப்பியிருக்கிறார்”

சந்திராராவ் மோர் ஏளனமாக “சிவாஜி எப்போது மன்னன் ஆனான்? பக்கத்தில் இருக்கும் எனக்கு இது தெரியவில்லையே” என்று கேட்டு சந்திராராவ் மோர் வெடிச்சிரிப்புச் சிரிக்க அவன் தம்பியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டான்.

ரகுநாத் பல்லாள் பதில் எதுவும் சொல்லாமல் சந்திராராவ் மோரின் வெடிச்சிரிப்பு முடியும் வரை காத்திருந்து விட்டு  தன் சகாவைப் பார்த்தான். சம்பாஜி காவ்ஜி உடனே சந்திராராவ் மோரைத் தலைவணங்கி விட்டுச் சென்று பலருடன் வந்தான். ஒவ்வொருவர் கையிலும் பெரியத் தாம்பாளத்தட்டுகள் இருந்தன. ஒரு தட்டில் மாங்கனிகள், இன்னொரு தட்டில் வாழைக்கனிகள், மூன்று தட்டுகளில் வித விதமான புஷ்பங்கள், இரு தட்டுகளில் இனிப்பு பதார்த்தங்கள், இரண்டு தட்டுகளில் பட்டுத்துணிகள், ஒரு தட்டில் தங்கக் காசுகள், இன்னொரு தட்டில் வெள்ளிக் காசுகள் இருந்தன. ஒவ்வொருவரும் அந்தத் தாம்பாளத்தட்டுகளை சந்திராராவ் மோர் முன் வைத்து விட்டு தலை வணங்கி விட்டு வெளியேறி விட ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் மட்டும் அங்கிருந்தார்கள். சம்பாஜி காவ்ஜி சொன்னான். “இதையெல்லாம் மன்னர் சிவாஜி அன்புடன் அனுப்பி வைத்திருக்கிறார். தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் மன்னா”

சென்ற முறை சிவாஜி வந்த போது இந்த அளவு பொருட்கள் கொண்டு வந்திருக்கவில்லை. ’இப்போது இத்தனை அனுப்பி அவன் தன் பக்கம் என்னை இழுத்துக் கொள்ளப் பார்க்கிறான். முட்டாள்’ என்று நினைத்துக் கொண்ட சந்திராராவ் மோர் “உங்கள் ’மன்னர்’ சிவாஜி இப்படி என் மீது அன்பு மழை பொழிந்து இத்தனை பொருட்கள் அனுப்பக் காரணம் என்ன என்று நான் அறியலாமா?” என்று ஏளனமாகக் கேட்டான்.

அவன் தம்பி தன் பங்குக்குத் தானும் ஒரு கேள்வி கேட்டான். “சென்ற முறை நேரில் வந்த ‘மன்னர்’ இந்த  முறை நேரில் வராமல் உங்களை ஏன் அனுப்பினார்”

இருவருக்குமாய் சேர்ந்து ரகுநாத் பல்லாள் சொன்னான். “சுபகாரியம் பேசும் போது வெறும் கையுடன் வருவது சரியல்ல. அதுவும் இந்த விஷயத்தை அவர் நேரில் வந்து பேசுவதும் முறையல்ல. அதனால் அவர் வராமல் எங்களை அனுப்பி இருக்கிறார் அரசே”

“என்ன சுபகாரியம்?” சந்திராராவ் மோர் குழப்பத்துடன் கேட்டான்.

“தங்கள் மகளைத் தன் வாழ்க்கைத் துணையாய் மணமுடிக்க சம்மதம் கேட்டு சிவாஜி எங்களை அனுப்பியிருக்கிறார் அரசே” சம்பாஜி காவ்ஜி சொன்னான்.

சந்திராராவ் மோரின் மகள் மிக அழகானவள். அதனால் அவள் அழகில் மயங்கிய சிவாஜி சந்திராராவின் மருமகனாக ஆனால் ஜாவ்லி பிரதேசத்தின் நட்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று எண்ணி ஒரே கல்லில் இரண்டு மாங்கனி பெறும் பேராசையில் இப்போது ஆள் அனுப்பி இருக்கிறான் என்று நினைக்கையில் சந்திராராவ் மோருக்கு சிவாஜியின் விடாமுயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தகுதி இருக்கிறதோ இல்லையோ விடாமல் முயற்சி செய்கிறான் பாவம்!

சந்திராராவ் மோருக்கு எல்லாமே நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. இதைப் பற்றிப் பேசி மகிழ்ந்து இன்றைய பொழுதை சிரித்துக் கழிக்கலாம் என்று எண்ணியவனாக “திருமணம் என்பது யோசித்துச் செய்ய வேண்டிய ஒன்று. நீங்கள் இளைப்பாறுங்கள். பின்பு பேசலாம்” என்று சொல்லி வீரர்களை அழைத்து அவர்கள் இருவரும் தங்க விருந்தினர் அறையை ஏற்பாடு செய்து தரக் கட்டளையிட்டுச் சென்றான்.

விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் போகும் வழியெல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டே போனார்கள். சிவாஜி மாளிகையின் அமைப்பையும், பாதுகாப்பு அம்சங்களையும் பற்றிச் சொன்னதெல்லாம் மிகச்சரியாகவே இருந்தன. வீரர்கள் சென்றவுடன் அவர்கள் இளைப்பாறி விடவில்லை. சாளரத்தின் வழியாக வெளி நிலவரத்தை ஆராய்ந்தார்கள். அவர்களுடன் தாம்பாளத்தட்டுகளுடன் சேவகர்களாய் வந்த வீரர்கள் தொலைவில் தெரிந்த கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.  அவர்களது குதிரைகளும் கூடாரத்துக்கு அருகிலிருந்த லாயத்திலேயே கட்டப்பட்டு இருப்பதையும் கண்டு திருப்தியடைந்த சம்பாஜி காவ்ஜி தூரத்தில் தெரிந்த அவர்களது வீரன் ஒருவனைப் பார்த்துக் கையசைத்தான். அவனும் பதிலுக்குக் கையசைத்தான். அவர்களுக்கும் இவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தாகி விட்டது….

சந்திராராவ் மோர் இரவு நேரத்தில் அவர்கள் இருவரையும் கூப்பிட்டனுப்பினான். இருவரும் சென்ற போது அறைக்கு வெளியே காவலர்கள் யாரும் இல்லை என்பதைக் கண்டார்கள். தொலைவில் ஒரு சேவகன் அரைத்தூக்கத்தில் இருந்தான்.  அறையினுள்ளே சந்திராராவும், அவன் சகோதரனும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். சந்திராராவ் மோர் நகைச்சுவை உணர்வில் இருந்தான். ”வாருங்கள் மன்னர் சிவாஜியின் தூதுவர்களே!”

இருவரும்  அவனையும் அவன் சகோதரனையும் வணங்கி விட்டு எதிரில் அமர்ந்தார்கள். சந்திராராவ் மோர் மெல்ல ஆரம்பித்தான். “சிவாஜி சொல்லி அனுப்பியதை நான் யோசித்தேன். அனுப்பியிருந்த பரிசுப் பொருள்களிலேயே அவனுடைய ஆர்வம் தெரிகிறது. அவன் சொன்னதையும் மறுக்க மனம் வரவில்லை….”

அவர்கள் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட சந்திராராவ் மோர் தொடர்ந்து சொன்னான். ”சிவாஜியின் உயரம் சற்றுக் குறைவு தான் என்றாலும் என் மகளும் அதிக உயரம் இல்லை. அதனால் அது பெரிய பிரச்சினை இல்லை. அந்தஸ்து தான் பெரிய தடையாகத் தெரிகிறது…”.

சொல்லி விட்டு அவர்களை அவன் கூர்ந்து பார்த்தான். அவன் எதிர்பார்த்த ஏமாற்றமோ, வருத்தமோ அவர்கள் முகத்தில் தெரியாதது அவனுக்கு வருத்தமாக இருந்தது. ரகுநாத் பல்லாள் அமைதியாகச் சொன்னான். ”அது ஒரு பெரிய விஷயமல்ல அரசே. சிவாஜியின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்கள் அளவுக்கு நீங்கள் ஆளும் பகுதிகள் இல்லை என்பது உண்மை. அவரிடம் இருக்கும் அளவு கோட்டைகளும் உங்களிடம் இல்லை. அதுவும் உண்மையே. ஆனால் மனிதர்களுக்குத் தரும் மதிப்பை சிவாஜி உடைமைகளுக்குத் தருவதில்லை. அதனால் தான் அவராகவே சம்பந்தம் பேச எங்களை அனுப்பியிருக்கிறார். அது குறித்து நீங்கள் குறை உணர வேண்டியதில்லை”

சந்திராராவ் மோரின் போதை அந்த வார்த்தைகளில் ஒரேயடியாகக் காணாமல் போயிற்று.  எனக்கு சிவாஜி சமமானவன் இல்லை என்று நான் சொன்னால் அவனுக்கு நான் சமமானவன் இல்லை என்று சொல்வதாக இந்த மூடன் எடுத்துக் கொள்கிறானே. என்ன திமிர். சிவாஜி கூட இவ்வளவு திமிராகப் பேசவில்லையே. ஒரு கோப்பை முழுவதும் மதுவை நிரப்பிக் குடித்து விட்டு அவன் தன் தம்பியைப் பார்த்தான்.

தம்பி ரகுநாத் பல்லாளிடம் சொன்னான். “மூடனே. அரசர் சொல்வது சிவாஜி அவருக்குச் சரிசமமானவன் அல்ல என்ற பொருளில்……”

ரகுநாத் பல்லாள் முகத்தில் பெருங்குழப்பம் தெரிந்தது. “அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது என் சிறுமதிக்கு எட்டவில்லை பிரபு. விளக்கிச் சொல்லுங்களேன்….”

“நாங்கள் பரம்பரை பரம்பரையாக மன்னர்கள். எங்கள் தந்தை மன்னர். என் பாட்டன் மன்னர்….” என்று சொல்லி விட்டு ‘புரிகிறதா?’ என்பது போல் அவன் ரகுநாத் பல்லாளைப் பார்த்தான்.

ஆனால் ரகுநாத் பல்லாளோ  இன்னும் புரியாதவனாய் “உங்கள் முப்பாட்டன்?” என்று கேட்டான்.

“அவர் பீஜாப்பூர் சமஸ்தானத்தில் படைத்தலைவராய் இருந்தார். அவர் ஒரு போரில் காட்டிய வீரத்திற்குப் பரிசாக ஜாவ்லி அவருக்கு ஆட்சி புரியக் கிடைத்தது….”

“ஓ! தானமாகக் கிடைத்த பூமியை நீங்கள் பரம்பரை பரம்பரையாக ஆள்கிறீர்கள்! அப்படி சிவாஜியின் முப்பாட்டனுக்கு எந்தத் தானமும் கிடைக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?”

சந்திராராவ் மோர் கடுங்சினம் தாங்காமல் உடல் நடுங்கினான். “மூடனே…. மூர்க்கனே” என்று கூவினான்.


ரகுநாத் பல்லாள் எழுந்து நின்று கைகூப்பினான். “மன்னியுங்கள் மன்னா. புரிந்து கொள்வதற்காக நான் கேட்டது உங்களை இவ்வளவு கோபமூட்டும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை….”

(தொடரும்)
என்.கணேசன்

Saturday, February 9, 2019

முந்தைய சிந்தனைகள் 41

என் நூல்களிலிருந்து சில சிந்தனைத்துளிகள்...











என்.கணேசன்

Thursday, February 7, 2019

இருவேறு உலகம் – 122


விஸ்வம் மாஸ்டரின் சக்தி அலைவரிசைகளில் சிக்க நேரிடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மாஸ்டர் தத்துவார்த்த சிந்தனைகள், ஆன்மீக சிந்தனைகள், ஏமாற்றப்பட்ட சிந்தனைகள் என்று ஏதோ சிந்தனைகளில் ஈடுபட்டிருக்காமல் தன் மனதை உயர்சக்திகளில் முழுமையாகக் குவித்துக் கூர்மைப்படுத்தியிருப்பது புரிந்தது. இல்லா விட்டால் அவனை எட்டியிருப்பது சுலபமில்லை. இப்படித் தான் ஒரு முறை க்ரிஷ் அலைவரிசைகளிலும் விஸ்வம் அகப்பட்டான். ஆனால் அது தற்செயலாக நடந்த ஒரு அசாதாரண நிகழ்வாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் க்ரிஷ் அந்த அளவு வேகமாக அந்தச் சக்திகளை ஆட்கொண்டிருப்பது சாத்தியமே இல்லை. ’அதிவேகமாகச் சக்திகளைப் பெறுவதில் வல்லவனாக இருந்த எனக்கே பல வருடங்கள் தேவைப்பட்டன. இத்தனைக்கும் ஒவ்வொரு சக்தியையும் ஏகாக்கிரதையோடு அடைந்து பெற்றவன் நான். மனதை காதல், குடும்பம், மற்ற விஷயங்கள் என்று சிறிதும் சிந்தனைகள் சிதற விடாத எனக்கே அத்தனை காலம் தேவைபட்ட போது, இவை எல்லாவற்றிலும் ஈடுபாடு இருக்கும் க்ரிஷ் முழு மனதோடு சக்திகளில் ஈடுபட வாய்ப்பே இல்லை. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை. மாஸ்டர் சொல்லிக் கொடுத்த ஆரம்பப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம்….. பாவம்!...” சிந்தனைகள் இப்படியாக ஓடியதில் மாஸ்டர் விஷயத்தில் எச்சரிக்கையும் க்ரிஷ் விஷயத்தில்  நிம்மதியையும் விஸ்வம் அடைந்தான்.

மாஸ்டரின் ஞான திருஷ்டியில் கிடைத்தது ஒருவிதத்தில் பின்னடைவே. மாஸ்டர் உடனே கிளம்பி வரலாம். ஆனால் ஞான திருஷ்டியில் தெரிந்த மலைப்பகுதி எங்கே என்பது துல்லியமாக அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே அவர் கஷ்டப்பட்டு அதிர்ஷ்ட வசமாகக் கண்டுபிடித்தாலும் அவர் இங்கு வந்து சேர கண்டிப்பாக ஒரு நாளுக்கும் மேலாகி விடும். அதற்குள் அவன் வேலையை முடித்து அங்கிருந்து போயிருப்பான்….

இப்போது நடப்பது எல்லாமே தனக்கு சாதகமாக இருப்பதில் விஸ்வத்துக்குத் திருப்தியாக இருந்தது. சட்டர்ஜியின் விலாசம் கண்டுபிடித்த பின் எல்லாமே அவனுக்கு மடமடவென்று நடந்தன. இந்தியா திரும்பி வந்தவுடன் முதல் வேலையாக அவன் சட்டர்ஜியை சிலிகுரி விலாசத்தில் சந்தித்தான். சட்டர்ஜியிடம் தன்னை ஒரு மலை ஆராய்ச்சி நிபுணராக அறிமுகம் செய்து கொண்டான். இமயமலையில் பனி உருகி  ரிச்சர்ட் டவுன்செண்ட் பார்த்த மலைப்பகுதி எது என்று அறிய ஆர்வமாய் இருப்பதாக அவன் சொன்ன போது சட்டர்ஜியின் முகம் கருத்தது. அதைப் பற்றி சட்டர்ஜி பேச விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

சட்டர்ஜி தயக்கத்துடன் சொன்னான். “நானும் டேவிட்சனும் அந்தக் காட்சியைப் பார்க்கலை…… ரிச்சர்டு பார்த்ததாகச் சொன்னதைத் தவிர அப்படி நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை…… அதனால் இதில் நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது…..”

“அது உண்மையோ பொய்யோ நானே நேரில் போய் ஆராய்ந்து தெரிஞ்சுக்க ஆசைப்படறேன். அதனால் அந்த இடத்தை மட்டும் நீங்கள் சொன்னால் உதவியாய் இருக்கும்…..”

சட்டர்ஜி தர்மசங்கடத்துடன் நெளிந்தான். பின் மெல்லச் சொன்னான். “அந்த இடம் ஏதோ சபிக்கப்பட்ட இடம் மாதிரி….. நீங்கள் அங்கே போகாமல் இருப்பது தான் நல்லது”

விஸ்வம் மூடநம்பிக்கைகளை அறவே வெறுப்பவன். இகழ்ச்சியாக அவனை நினைப்பதைக் காட்டாமல் ஆர்வத்தையே காட்டி சட்டர்ஜியிடம் விஸ்வம் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்றீங்க”

”அடுத்த வருஷமே பழையபடி அதே மலைப்பகுதிக்குப் போகணும்னு ரிச்சர்ட் ஆசைப்பட்டான். கூடவே டேவிட்சனும் போனான். எனக்கு என் தங்கை திருமணம் அந்த சமயத்தில் இருந்ததால போக முடியலை. அதனால அவங்க ரெண்டு பேர் மட்டும் போனாங்க. போனவங்க உயிரோட திரும்பலை. அதனால் தான் நான் அது சபிக்கப்பட்ட இடம்னு சொன்னேன். ஒரு பெரியவர் சொன்னார். சில அமானுஷ்ய சம்பவங்களைப் பார்க்க நேர்ந்தால் அதுபத்தி அதிகம் பேசறதோ அந்த இடங்களுக்கு அடிக்கடி போகிறதோ, அது சம்பந்தமான ஆள்களை அடிக்கடி பார்க்கிறதோ நல்லதல்ல. அதெல்லாம் தெய்வீக நிகழ்ச்சிகள். பார்க்கக் கிடைத்ததே புண்ணியம்னு விட்டுடணும். அதை ஆராயப்போகிறது ஆபத்துன்னு அவர் சொன்னார். அவர் சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேரும் அப்படி அடுத்த வருஷம் ஆராயப் போனது தப்புன்னு எனக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு. அது தான் அவங்களைப் பலி வாங்கிடுச்சுன்னு தோணுச்சு….. நானும் கூடப் போயிருந்தா நானும் கூடச் செத்துருப்பேன்னு நம்பறேன். அதனால நான் அதோட அந்த விஷயத்தை விட்டுட்டேன். சொல்லப் போனா மலை ஏறுறதையே விட்டுட்டேன். அது சம்பந்தமான தொடர்புகளை விட்டுட்டேன்…..” சட்டர்ஜியின் குரலில் சோகம் இழைந்தோடியது.

அதைப் பற்றிப் பேசுவதே மரணத்தை விளைவிக்கும் என்றும், ஆராய்ச்சிக்காக நீ போனாலும் மரணத்தை வரவழைத்துக் கொள்வாய் என்றும் அவன் நினைத்தது விஸ்வத்துக்குத் தெரிந்தது. அதிக காலம் கைவசம் இல்லை என்பதால் விஸ்வம் தன் சக்தியால் சட்டர்ஜியை செயல் இழக்க வைத்து அவன் மனதை ஊடுருவி அந்தச் சம்பவ இடத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்தபடியாக அந்த மலைப்பகுதிக்கு தன்னுடன் வந்து அந்தப் பழங்கால குகைக் கோயிலுக்கு மேலே இருக்கும் பனியை விலக்க தகுந்த ஆட்கள் ஐவரைத் தேர்ந்தெடுத்தான். பனி மலையில் ஏற்படும் விபத்துக்களில் ராணுவத்துடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அவர்கள். அவர்களும் ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

அவர்களில் ஒருவன் சொன்னான். “பனி பார்வைக்குத் தான் அழகு. ஆனால் நிஜத்தில் அது ஆபத்தானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பது வேறு. பனியைக் குடைவது வேறு…..”

விஸ்வம் சொன்னான். “தகுந்த தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு கவனமாக வேலை செய்தால் எதுவும் ஆபத்தல்ல.” ஆனால் அவனுடைய தத்துவத்தில் அவர்கள் மனம் மாறவில்லை. பெரியதொரு தொகையைத் தர அவன் ஒத்துக் கொண்ட பிறகு தான் அவர்களும் அந்த வேலைக்கு ஒத்துக் கொண்டார்கள். எந்தத் தொகையும் இப்போதைக்கு விஸ்வத்துக்குப் பெரியதொரு தொகை அல்ல. ரகசிய ஆன்மிக இயக்கத்தில் அவன் எடுத்துக் கொண்ட தொகை அவனிடம் இருக்கிறது. சில நாட்களிலேயே அதற்கு இணையான தொகையை மாணிக்கத்திடமிருந்தும் அவன் வசூல் செய்து விட்டிருந்தான். அரசியல் போல பணம் காய்ச்சி மரம் வேறு இருக்க முடியாது என்பது சொந்த அனுபவத்திலேயே அவனுக்குப் புரிந்தது. அவன் நோக்கம் பணமாக மட்டும் இருந்திருந்தால் அவன் சக்திகளை அது போன்ற வழிகளிலேயே செலவு செய்திருக்கலாம். ஆனால் அவனுக்கு பணம் இலக்கிற்கான ஒரு மார்க்கமே ஒழிய இலக்கே அதுவல்ல. இப்போது கூட பணம் தான் அந்தப் பனிமலையைக் குடைய உதவுகிறது. அந்த அளவில் மட்டுமே அதை அவன் வைத்திருப்பான்…..

கிட்டத்தட்ட அந்தக் குகைக் கோயில் இருக்க முடிந்த பகுதியை எட்டிய போது விஸ்வம் உடன் வந்த ஆட்களை சிறிது இளைப்பாறச் சொல்லி விட்டு தன் சக்திகளைக் குவித்து அமானுஷ்யமான அலைவரிசைகள் அகப்படுகின்றனவா என்று பார்த்தான். சீக்கிரமே அவை அவன் தேடலில் தட்டுப்பட்டன. அந்த அலைவரிசையிலேயே பயணித்து அவை கிளம்பும் மூலத்தை உணர்ந்தான். சுமார் 270 அடிகள் தூரத்தில் அது இருந்தது. அந்த ஆட்களிடம் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான். “அந்த இடத்தைத் தோண்டுங்கள்…”

அவர்கள் உயிரைப் பணயம் வைத்தே அவர் சொன்னதைச் செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் நவீனமானவை. லாவகமாக அதைப் பயன்படுத்தி அவசரப்படாமல் பாதுகாப்பாகவே இருந்து கொண்டு நிதானமாகவே வேலை செய்தார்கள். விஸ்வம் அவசரத்தை மனதில் அவ்வப்போது உணர்ந்தாலும் அமைதி காத்தான். அவர்களில் ஒருவனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் கூட அத்தனை பேரும் அவனைக் காப்பாற்றப் போய் விடுவார்கள்.  விஸ்வத்தின் வேலை நடக்காமல் போய் விடும். இன்று அந்த வேலை நடக்கா விட்டால் பின் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது.  மாஸ்டர் நாளையே இங்கு வர வாய்ப்பிருக்கிறது. இந்த ஞானம் அவனைப் பொறுமையுடன் இருக்க வைத்தது.

இரண்டரை மணி நேரம் கழித்து திரிசூலம் தெரிந்தது. அது தெரியும் வரை அவர்கள் விஸ்வம் எதிர்பார்க்கும் குகைக் கோயில் அங்கு இருக்கும் என்று நம்பி இருக்கவில்லை. திரிசூலத்தைப் பார்த்தவுடன் அவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். சுறுசுறுப்புடன் இயங்கினார்கள். அந்தக் குகைக் கோயில் மேல் இருந்த உறைபனியை நீக்கி விட்ட பின்பு குகையின் பெரிய நுழைவு துவாரம் அவர்கள் பார்வைக்குத் தெரிந்தது. தவழ்ந்த நிலையிலேயே தான் ஒருவர் உள்ளே செல்ல முடியும்…. 

விஸ்வம் பெரும் சக்தி வீச்சை அங்கிருந்து உணர ஆரம்பித்தான். அவர்கள் இனி என்ன செய்வதென்று அவனைக் கேட்டார்கள். எப்போதும் எதையும் முன்கூட்டியே யோசித்து என்ன செய்வதென்று தீர்மானிக்கும் விஸ்வம் முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் முடிவுக்கு வரத் தயங்கினான். அதற்குக் காரணம் இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்