தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Showing posts with label சாதனையாளர்கள். Show all posts
Showing posts with label சாதனையாளர்கள். Show all posts
Sunday, December 5, 2021
Sunday, November 21, 2021
Sunday, November 15, 2020
எதையும் முடிக்கும் வரை ஆர்வமிருக்கிறதா?
இல்லை, அரைகுறை முயற்சிகளில் உங்களை வீணாக்கிக் கொள்கிறீர்களா? இது சுயபரிசோதனை நேரம்...
Sunday, November 8, 2020
Sunday, November 1, 2020
சோதனைகளில் ஒளிந்திருக்கும் வாய்ப்புகள்|
கஷ்டகாலங்களில் நம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் இறைவன் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை உதாரணங்களுடன் விளக்கும் காணொளி
Wednesday, May 29, 2019
விடாது துரத்தி விதியை வென்றவர்!
சிகரம் தொட்ட அகரம் - 8
விதி சிலரது வாழ்வில் குரூரமாக விளையாடி விடுவதுண்டு. திறமையும், உழைப்பும்
இருந்தால் முன்னேறி விடலாம் என்ற நியாயமான எதிர்பார்ப்பைப் பார்த்து அது எள்ளி நகையாடுவதுண்டு.
எதிர்மாறான சூழல்களை உருவாக்குவதுண்டு. விபத்துகளை ஏற்படுத்துவது உண்டு. திறமைக்கு
ஏற்ப வரும் வாய்ப்புகளை விதி தட்டிப் பறித்துக் கொள்வதும் உண்டு.
இப்படி விதியால் பாதிக்கப்படும் போது பலர் ஓரளவு போராடிப் பார்த்து கடைசியில்
விதி வலிது என்று புரிந்து வேதனையுடன் பின் வாங்கி விடுவதுண்டு. எத்தனை வலிமையாக விதி
விளையாடினாலும் விதிக்குத் தலைவணங்காமல் கடைசி வரை எதிர்த்துப் போராடி முடிவில் வெற்றி
பெற்றே ஓயும் அபூர்வ மனிதர்களும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர் தான் கரோலி டாகாக்ஸ் என்ற
ஹங்கேரி நாட்டுக்காரர்.
1910ஆம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் பிறந்த கரோலி டாகாக்ஸ் இளம் வயதிலேயே இராணுவத்தில்
சேர்ந்தார். துப்பாக்கி சுடுவதில் அபாரமான திறமை உள்ள அவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில்
போட்டியிட்டால் கண்டிப்பாக தங்கப் பதக்கம் பெறுவார் என்று விளையாட்டு வல்லுனர்கள் கணித்தார்கள்.
அவரும் 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள
தன்னைக் கடுமையாகத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹங்கேரி
நாட்டு சட்டப்படி இராணுவ சார்ஜெண்டுகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தடை இருப்பது
பின்னர் தான் சார்ஜெண்டான அவருக்குத் தெரிய வந்தது. அதனால் 1936 பெர்லின் ஒலிம்பிக்
விளையாட்டில் அவரால் பங்கு கொள்ள முடியவில்லை.
ஒலிம்பிக் விளையாட்டுகள் முடிந்த பின் ஹங்கேரி அரசாங்கம் அந்தத் தடை ஷரத்தை
ரத்து செய்தது. மறுபடியும் கரோலி டாகாக்ஸ் உற்சாகமடைந்து அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில்
கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் மேற்கொண்டார். 1939 ஆம் ஆண்டு ஒரு இராணுவப்
பயிற்சியின் போது கை எறிகுண்டு ஒன்றைக் கையாளும் போது அது அவர் வலது கையிலேயே வெடித்து
விட்டது.
வேறொருவராக இருந்தால் விதியின் இந்தக் குரூரச் செயலில் உடைந்து உருக்குலைந்து
போயிருப்பார்கள். ஆனால் கரோலி டாகாக்ஸ் அவர்களில் ஒருவரல்ல. சில நாட்கள் வேதனைப்பட்ட
அவர் வலது கை போனால் என்ன இடது கை இருக்கிறதல்லவா என்று அதில் பயிற்சிகளை ஆரம்பித்தார்.
ஆனால் வலது கைக்கு கைகூடிய அந்த அசாத்தியத் திறமை இடது கைக்குக் கைகூடவில்லை. ஆனாலும்
கரோலி டாகாக்ஸ் விடாமல் பயிற்சி எடுத்தார்.
சில மாதங்களில் ஹங்கேரியில் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற போது
கரோலி டாகாக்ஸ் அங்கே சென்றார். போட்டியாளர்கள் அவரிடம் வந்து தங்கள் வருத்தத்தைத்
தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிலைமையிலும் வருத்தப்பட்டு ஒதுங்கி விடாமல் துப்பாக்கி
சுடுதல் போட்டியில் உள்ள ஆர்வம் காரணமாகப்
பார்வையாளராக வர முடிந்த அவர் தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் பாராட்டினார்கள்.
கரோலி டாகாக்ஸ் சொன்னார். “நான் பார்வையாளனாக வரவில்லை. போட்டியாளனாகத் தான்
வந்திருக்கிறேன்”
அவர்கள் ஆரம்பத்தில் திகைத்துப் பின் இரக்கத்துடன் அவரைப் பார்த்தார்கள். ஆனால்
அவர் அந்தப் போட்டியில் இடது கையால் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்து சுடுவதில்
முதலிடம் பெற்று அவர்களைப் பிரமிக்க வைத்தார்.
தேசிய அளவில் சாதித்ததை உலக அளவில் ஒலிம்பிக்ஸிலும் சாதித்து விட வேண்டும் என்று
ஆவலோடு 1940 ஆண்டின் ஒலிம்பிக்ஸை எதிர்பார்த்து இருந்தவருக்கு மறுபடி ஏமாற்றம்
1940 மற்றும் 1944 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் இரண்டாம் உலகப்போரின் காரணமாக
நடைபெறவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகளில் இளம் வயதில் வெல்வது எளிது. வயதாக வயதாக வெற்றி
வாய்ப்புகள் குறைவு என்பதே யதார்த்த நிலையாக இருந்தது.
ஆனால் கரோலி டாகாக்ஸ் யதார்த்தவாதி அல்ல. மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளையும்,
12 ஆண்டுகளையும், வலது கையையும் இழந்தும் அவர் ஊக்கத்தையும், தன் லட்சிய தாகத்தையும்
இழந்து விடவில்லை. 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்ஸில் உற்சாகம் குறையாமல்
கலந்து கொண்டார். அதில் தங்கம் பெற்று வெற்றி வாகை சூடினார். அதோடு அவர் விட்டுவிடவில்லை.
அடுத்ததாக 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக்ஸிலும் துப்பாக்கி சுடுதலில்
தங்கம் பெற்று வரலாறு படைத்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி “ஒலிம்பிக் கதாநாயகர்கள்”
என்ற பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்துக் கொண்டது.
சின்னத் தடங்கல் வந்து விட்டாலே விதியை நொந்துப் பின்வாங்கி வாழ்நாள் பூராவும்
புலம்பி நிற்கும் மனிதர்கள் ஒருகணம் கரோலி டாகாக்ஸை நினைத்துப் பார்க்க வேண்டும். எத்தனை
தடைகள் அவருக்கு வந்தன!. ஆரம்பத்தில் சட்டம் சதி செய்தது. பிறகு அவர் திறமைக்கு அடிப்படையான
வலது கையே பறி போனது. பின் உலகப் போர் காரணமாக அவர் பங்கேற்க ஆசைப்பட்ட விளையாட்டுப்
போட்டிகளே நடைபெறாமல் போயின. பன்னிரண்டாண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அந்த மிக நீண்ட
காலத்தில் தாக்குப் பிடித்து நின்று, முழு முயற்சியுடன் பயிற்சிகள் எடுத்து வென்று
காட்டிய அந்த மன உறுதியும், உழைப்பும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியவை அல்லவா?
என்.கணேசன்
Monday, November 6, 2017
அடுத்தவர் கருத்தால் சுருங்கி விடாதீர்கள்!
அடுத்தவர் கருத்துக்கு நாம் பல சமயங்களில் தேவைக்கும் அதிகமாகவே மதிப்பு தருகிறோம். அதுவும் நாம் உயர்வாக நினைப்பவர், மதிப்பவர் என்றால் அவர் கருத்து நமக்குத் தீர்ப்பாகவே தோன்றி விடுகிறது. அவர்கள் பாராட்டினால் ஒன்றைத் தொடர்கிறது. விமர்சித்தால் உடனே விட்டு விடுகிறோம். அது சரிதானா? இந்தக் காணொளியில் பார்ப்போம்.....
என்.கணேசன்
என்.கணேசன்
Monday, December 5, 2016
விதியோடு ஒரு விளையாட்டு!
சிகரம் தொட்ட அகரம் - 6
திறமை இருப்பவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுவதில்லை என்பதைக்
கண்கூடாகப் பார்க்கிறோம். திறமையுடன் உழைப்பும் சேர்ந்து சூழ்நிலையும்
ஒத்துழைத்தால் வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான வெற்றியாளர்கள் அந்த
வகையைச் சார்ந்தவர்களே! நல்ல திறமை இருந்து, விதிவசத்தால் சூழ்நிலைகள் எதிரணியில்
இருந்தாலோ அந்த மனிதர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள் என்பது தான்
யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் பொய்யாக்கி, கடும் மன உறுதியுடன் விதியுடன்
போராடி, வெற்றி காணும் அபூர்வ சாதனையாளர்களும் உண்டு. அப்படிப்பட்ட
சாதனையாளர்களில் ஒருவர் தான் பென் ஹோகன் (Ben Hogan).
ஒரு ஏழை கொல்லனின் மூன்றாவது பிள்ளையாக அமெரிக்காவில் டெக்சாஸில் 1912
ஆம் ஆண்டு பிறந்தவர் பென் ஹோகன். ஏழ்மை மற்றும் பல தனிப்பிரச்னைகள் காரணமாக அவர்
தந்தை பென் ஹோகனின் ஒன்பதாவது வயதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை
செய்து கொண்டார். அதுவும் பென் ஹோகனின் முன்னாலேயே அந்தக் கோர சம்பவம்
நடந்திருக்கிறது. பென் ஹோகனின் தாயார் தையல்காரி. அவர் வருமானம் குடும்பம் நடத்தப்
போதாததாக இருந்ததால் பென் ஹோகன் தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அருகிலிருந்த ரயில்
நிலையத்தில் பத்திரிக்கைகள் விற்கும் வேலை செய்ய வேண்டி வந்தது.
பதினோராவது வயதில் ஒரு கால்ஃப் க்ளப்பில் பந்துகள் பொறுக்கும் எடுபிடி
வேலைக்காரப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த விளையாட்டு அவரை மிகவும் கவர்ந்தது.
அந்த விளையாட்டு வீரர்கள் விளையாடும் நுட்பங்களை அருகில் இருந்து கவனிக்கும்
வாய்ப்பை மற்ற வேலைக்கார சிறுவர்களை விட நன்றாகவே பென் ஹோகன் பயன்படுத்திக்
கொண்டார். சிறுவயதிலேயே தந்தையின் கோர மரணத்தை நேரடியாகப் பார்த்த விளைவால் அதிகம்
யாருடனும் பேசாமல், பழகாமல், தனியாகவே இருந்து வந்த பென் ஹோகன் முழுக் கவனமும்
கால்ஃப் விளையாட்டின் பக்கம் திரும்பியது.
பல நாட்கள் அந்த கால்ஃப் க்ளப் அலுவலகத்திலேயே பழைய தினசரிப்பத்திரிக்கைகளை
விரித்து அதன் மேல் படுத்துக் கொண்டு அதிகாலையிலேயே முதல் ஆளாக எழுந்து விளையாட்டு
வீரர்களுக்கு முன்னதாகவே பென் ஹோகன் தயாராக நின்றிருப்பார். அந்த க்ளப்பிலேயே அந்த
விளையாட்டில் பயிற்சிகள் செய்து 17வது வயதிலேயே ஒரு சிறந்த கால்ஃப் விளையாட்டு வீரராக
அவர் உருவானார்.
ஆனால் ஏழ்மை அவர் வாழ்வில் இருந்து விடைபெற்று விடவில்லை. தொடர்ந்து ஒன்பது
ஆண்டுகள் அவர் மிகவும் சிரமப்பட வேண்டி வந்தது. வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும்
நடந்த பல போட்டிகளுக்குப் போய் வரவே அவரிடம் பணம் இருக்கவில்லை. இத்தனை
சிரமங்களுக்கு நடுவே நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அன்பான மனைவி வாய்த்தது
தான். அவரது மனைவி கணவரின் விளையாட்டுத் திறமையில் அபார நம்பிக்கை வைத்திருந்தார்.
தம்பதியர் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினர். போட்டிகளில் கலந்து கொள்ள ஆகும் செலவுக்கே
அவர்கள் பல தியாகங்கள் செய்து சேமிக்க வேண்டி வந்தது. அவரது 26வது வயதுக்குப் பின்
கிடைத்த வெற்றிகள், அதன் மூலம் கிடைத்த பணம் எல்லாம் ஓரளவு வாழ்க்கையை
சுலபமாக்கின. இரண்டாம் உலகப்போர் நடந்த போது போரிலும் கலந்து கொண்டார். போர்
முடிந்த பின் நடந்த பல போட்டிகளிலும் வெற்றி பெற்று பிரபலமடைந்த அவர் 1948ல் U.S. Open Open Championship ல் வென்று சாதனை படைத்தார்.
ஆனால் விதி மறுபடி அவர் வாழ்வில் விளையாடியது. 1949 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதத்தில் அதிகாலை காரில் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது மூடுபனியின்
காரணமாக ஒரு பாலத்தில் எதிரே வந்து கொண்டிருந்த பஸ்ஸில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் இடுப்பு எலும்பு, கணுக்கால் எலும்பு, விலா எலும்பு எல்லாம் உடைந்து
அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவர் இனி
எழுந்து நடமாடுவதே சிரமம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அது அவர்கள் கருத்தாக
இருந்ததே ஒழிய பென் ஹோகன் கருத்தாக இல்லை. சக்கர நாற்காலியிலேயே மீதிக் காலத்தைக்
கழிக்க விரும்பாத பென் ஹோகன் தனது கால்ஃப் க்ளப்பு (மட்டை)களை மருத்துவமனை
அறையிலேயே ஒரு மூலையில் வைக்கும்படி மனைவியுடம் சொன்னார். தினமும் அதைப்
பார்த்தபடியே தன் மன உறுதியை வளர்த்துக் கொண்ட அவர் கடுமையான பயிற்சிகள் செய்து
நிற்கவும் நடக்கவும் முடியுமளவு முன்னேறினார். 59 நாட்கள் மருத்துவமனையில் இருந்த
அவர் வெளியேறும் போது சக்கர நாற்காலியில் வெளியேறாமல் நடந்தே வெளியேறிய போது
மருத்துவர்கள் பிரமித்தார்கள். பின் தினமும் நடைப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள் செய்ததன் மூலம்
அவர் ஓரளவு மேலும் தேறினார்.
அதோடு நின்றுவிடாமல் மறுபடி கால்ஃப் விளையாட்டுகளில் கலந்து கொள்ள
பென் ஹோகன் விரும்பினார். “என்னால் எதெல்லாம் முடியாது என்று மற்றவர்கள் சொல்லிக்
கொண்டிருக்கையில் அதெல்லாம் முடியும் என்று காட்டுவது எனக்கு முக்கியமாகத்
தோன்றியது” என்று பிற்காலத்தில் கூறிய பென் ஹோகன் கடுமையாக
விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார். உறுதியாக நிற்கவே சிரமப்பட்ட அவர்
விளையாட்டுப் பயிற்சியின் போது என்னேரமும் விழுந்து விடலாம் என்றே தோன்றியதாக ஒரு
பத்திரிக்கைப் பார்வையாளர் தெரிவித்தார். ஆனால் அடுத்த ஆண்டே, அதாவது விபத்துக்கு
16 மாதங்கள் கழித்து, மறுபடி U.S. Open Open Championship ல் அவர்
வென்றது சரித்திர சாதனையாகியது. விளையாட்டு உலகம் பிரமித்தது. 1951 ஆம் ஆண்டு அவர்
வாழ்க்கையை மையமாக வைத்து Follow
the Sun என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
மேலும் இருபதாண்டு காலம் விளையாடி மேலும் இரண்டு U.S. Open Open Championship கோப்பை உட்பட பல கோப்பைகளை உலக அளவில்
வென்று விளையாடிய பென் ஹோகனின் கால்ஃப் விளையாட்டில் மட்டை சுழற்சி முறைகள்
பிற்கால விளையாட்டு வீரர்களுக்குப் பாடங்களாக அமைந்தன. மற்றவர்களுக்கோ அவர் வாழ்க்கையே
பாடமாக அமைந்திருக்கிறது.
1997 ஆம் ஆண்டு மறைந்த அவருக்கு கால்ஃப் விளையாட்டில் இருந்த ஆர்வம்
அதீதமானது. “எப்போது விடியும், விளையாடப் போகலாம் என்று என் இளமைக்காலங்களில் காத்திருப்பேன்” என்றும் “ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய பாடத்தை விளையாட்டின் போது
கற்றிருக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். ”வாழ்க்கைப்
பாதையில் நடக்கும் போதே வழியில் ரோஜா மணத்தை முழுமையாக நுகர்ந்து அனுபவித்து விட
வேண்டும். ஏனென்றால் அதில் திரும்பி வரும் வசதியில்லை” என்று கூறிய அவர் வாசகம் சிந்திக்கத் தக்கது.
”எழுதுவதும், சொல்வதும் சுலபம். எனக்கு வந்த கஷ்டம் போல் வந்தால் தெரியும்” என்ற பாணியில் தங்கள் சாதனைக்குறைவுகளுக்குச் சப்பைக்கட்டு கட்டும்
மனிதர்கள் இந்த மனிதரைப் பார்த்துத் திருந்த வேண்டும். அவருக்கு வாழ்வில் ஒன்றா
இரண்டா பிரச்னைகள்! அந்தப் பிரச்னைகளும் சாதாரணமானவையா? பிரச்னைகளையும்,
சூழ்நிலைகளையும் மீறிச் சாதிக்க நமக்குள்ளே ஒரு அக்னி இருக்க வேண்டும். அந்த அக்னியைத்
தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து கடுமையாக முயற்சிகள் செய்தால் மட்டுமே ஒருவர் தன்
திறமையின் உச்சத்தை எட்டி அதை வெளிப்படுத்த முடியும். ”ஏன் என்னால்
முடியவில்லை” என்பதற்கான காரணங்கள் கண்டுபிடிப்பவர்கள் புலம்பிக் கொண்டிருக்கையில்,
காரணங்களை அலட்சியப்படுத்தி தளர்வில்லாமல் முன்னேறுபவர்கள் சரித்திரம் படைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
-
என்.கணேசன்
Monday, September 12, 2016
முள்பாதையைக் கடந்து முன்னேறியவர்
அகரம் தொட்ட சிகரம்-5
பிரம்மாண்டமான வெற்றியை நோக்கிச் செல்லும் பாதை என்றுமே ராஜ பாதையாக இருப்பதில்லை. வென்ற பின் தாராளம் காட்டும் உலகம் அது வரை வெற்றிப்பாதையின் பயணிகளைப் பெரும்பாலும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தனியாகவே அந்தப் பாதையில் பயணிக்கும் மனிதன் மனம் தளர்ந்து திரும்பி விட சந்தர்ப்பங்களோ ஏராளமாக அமைகின்றன. பிரச்னைகளும், சோதனைகளும், அவமானங்களும் மட்டுமே அவன் சந்திக்கும் யதார்த்தங்களாக இருக்கின்றன. இதில் எல்லாம் தாக்குப்பிடித்து பாதையெல்லாம் நிறைந்திருக்கும் முட்களைப் பார்த்து தயங்கியோ, பின் வாங்கியோ விடாமல் தன் கனவுகளைத் தொடர்பவர்களே சாதித்து மகுடம் சூடுகிறார்கள். அப்படி ஒரு சாதனை புரிந்தவர் தான் புகழ்பெற்ற அமெரிக்க நடிகரான சில்வஸ்டர் ஸ்டலோன்.
1946 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் சதா சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்தவர் சில்வஸ்டர் ஸ்டலோன். பெற்றோரின் சண்டை காரணமாக அவரது வீட்டில் அமைதி என்பதே காணாமல் போயிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்தார்கள். அதனால் அவர் சில காலம் கருணை இல்லங்களில் வாழ வேண்டி இருந்தது. அவர் தாயார் மறுமணம் செய்து கொண்ட பிறகு அங்கு சென்று சில்வஸ்டர் ஸ்டலோன் வாழ்ந்தார். அங்கும் அமைதியான அன்பான சூழல் இல்லை. அதனால் அவர் சென்று படித்த பள்ளிகளில் சக மாணவர்களுடன் சண்டை போட்டார். பள்ளி விதிகளின் படி அனுசரணையாக நடந்து கொள்ளத் தவறினார். அதனால் சில பள்ளிகளில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். கடைசியில் பிரச்னைக்குரிய மாணவர்கள் இருக்கும் சீர்திருத்தப்பள்ளியில் அவர் படிக்க வேண்டி வந்தது.
எப்படியோ படித்து முடித்து நாடகம், நடிப்பு ஆகியவை படிக்க கல்லூரிக்குச் சென்றார். அங்கும் அவர் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நடிகனாகும் கனவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்த சில்வஸ்டர் ஸ்டலோனை யதார்த்த உலகம் கசப்பாக வரவேற்றது. திரை உலகை அவரால் சுலபமாக நெருங்க முடியவில்லை. அதனால் எடுபிடி வேலைகள் உட்பட பல சின்ன வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினார். ஒரு சினிமா தியேட்டரில் வேலை, செண்ட்ரல் பார்க் மிருகக்காட்சி சாலையில் சிங்கங்களின் கூண்டுகளைக் கழுவி விடும் வேலை எல்லாம் செய்து பிழைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலை எதுவும் இல்லாமல், தங்க இடமும் இல்லாமல் நியூயார்க் நகர வீதிகளில் வாழ்ந்திருக்கிறார். வீதிகளில் இருந்த குளிர் தாங்க முடியாமல் நூலகத்தின் உள்ளே அடைக்கலம் புகுந்த அவர் காலத்தைப் போக்க வேண்டி படிக்க ஆரம்பித்து வெற்றிகரமான கதை அம்சங்களை ஓரளவு புரிந்து கொண்டார். இதுவே அவருக்கு பிற்காலத்தில் திரைக்கதை அமைக்க உதவியிருக்க வேண்டும்.
பின்னர் ஓரிரண்டு படங்களில் சின்ன வேடங்கள் அவருக்குக் கிடைத்தன. அவையும் சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் எல்லா விதங்களிலும் வாழ்க்கையில் சுமை கூடிக் கொண்டே போனதே ஒழிய குறையவில்லை. மனைவியின் நகையைத் திருடி விற்றுச் சாப்பிடும் அளவு வாழ்க்கை மிக மோசமானது. அந்தப் பணமும் தீர்ந்து போன போது அவருடன் அவரது நாயைத் தவிர துணையாக யாருமில்லை. அந்த நாயிற்கும் உணவிட முடியாமல் போன போது அவரால் அதைத் தாங்க முடியவில்லை. தன் நாயாவது எங்காவது நல்லபடியாக பிழைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவராக அவர் ஒரு மதுபானக்கடைக்கு வெளியே அந்த நாயை ஒருவரிடம் 25 டாலருக்கு விற்று விட்டார். விற்று விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்ற போது பெருகிய கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரண்டு வாரங்கள் கழித்து குத்துச்சண்டை வீரர் முகமது அலியும், மற்றொரு வீரரும் பங்கெடுத்த ஒரு குத்துச்சண்டையை சில்வஸ்டர் ஸ்டலோன் பார்த்தார். அந்தக் குத்துச்சண்டை அவருள் ஒரு கதைக்கருவை உருவாக்கியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து ராக்கி திரைக் கதையை சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கினார். அதை எடுத்துக் கொண்டு அவர் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக அணுகினார். இதெல்லாம் விலை போகாது, இந்த மாதிரி திரைப்படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள், இதில் என்ன இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்கள் தான் அவருக்குக் கிடைத்தன. ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட பணியில் ஆத்மார்த்தமான நம்பிக்கை வைத்திருந்த சில்வஸ்டர் ஸ்டலோன் இதிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார்.
ஒரு தயாரிப்பு கம்பெனி மட்டும் அவரது திரைக்கதையில் ஆர்வம் காட்டியது. அது அவருக்கு 1,25,000 டாலர்கள் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் சில்வஸ்டர் ஸ்டலோன் ஒரு நிபந்தனை விதித்தார். அந்த திரைப்படத்தில் தானே கதாநாயகனாக நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களிடம் பிரபலமாகாத ஒரு நடிகரை வைத்து அந்தப் படத்தை எடுத்து கையைச் சுட்டுக் கொள்ள அவர்கள் விரும்பாமல் பின் வாங்கினார்கள். ஆனால் அந்தத் திரைக்கதையில் வெற்றிக்கான அம்சம் இருப்பதாக உணர்ந்த அவர்கள் ஒரு பிரபல நடிகரை வைத்து அந்தப்படத்தை எடுத்தால் வெற்றிப்படமாக்கலாம் என்று நினைத்து 2,50,000 டாலர்கள், 3,50,0000 டாலர்கள் வரை தர முன்வந்தார்கள். நாயைக்கூட 25 டாலருக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்திருந்த போதும் சில்வஸ்டர் ஸ்டலோன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் அவரைக் கதாநாயகனாகப் போடும் பட்சத்தில் வெறும் 35,000 டாலர்கள் மட்டுமே திரைக்கதைக்கும், நடிப்பிற்கும் சேர்த்து தருவோம் என்று அவர்கள் சொன்னார்கள். உடனே சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார்.
கிடைத்த பணத்தில் அவர் செய்த முதல் வேலை நாயைத் திரும்பவும் வாங்க முயற்சித்தது தான். எந்த மதுபானக்கடையின் வெளியே தன் நாயை அவர் விற்றாரோ அதே மது பானக்கடையின் வெளியே மூன்று நாட்கள் காத்திருந்து கடைசியில் நாயை வாங்கியவரை அவர் சந்தித்தார். நடந்ததை எல்லாம் தெரிவித்து அந்த நாய்க்கு நூறு டாலர்கள் தருவதாக அவர் சொன்னாலும் அந்த ஆள் திரும்ப நாயை விற்க சம்மதிக்கவில்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏற்றிக் கொண்டே போனாலும் சம்மதிக்காத அந்த ஆள் 15,000 டாலர்களும், ராக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வாய்ப்பும் தந்தால் தான் திரும்ப நாயைத் தருவேன் என்று சொல்லி விட்டார். சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ராக்கி படத்தில் அந்த ஆளும், அந்த நாயும் கூட நடித்திருக்கிறது.
பத்து ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ராக்கி திரைப்படம் முடிவில் சிறந்த திரைப்படம், சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்ற மூன்று ஆஸ்கர்களை வென்றது. மீதி வரலாறாகியது. ராக்கியின் பல தொடர் சினிமாக்கள், ஃபர்ஸ்ஃப் ப்ளட், ராம்போ போன்ற பல திரைப்படங்கள் தந்து புகழ், செலவம் இரண்டிலுமே சிகரங்களைப் பிடித்த சில்வஸ்டர் ஸ்டலோன் வேறுபல விருதுகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் நகரின் வீதிகளில் வசிக்க நேர்ந்த சில்வஸ்டர் ஸ்டலோன் பலநூறு கோடிகளின் அதிபதியாகி அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் கண்கவரும் மாளிகைகளை வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரது மாளிகையை இங்கே பாருங்கள்.

கஷ்ட காலங்கள், முள் பாதைகள் எல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அவற்றைப் பார்க்காமல் சிகரங்களை அடைந்தவர்கள் மிகவும் குறைவு. அவற்றைக் கடக்கையில் தான் நீங்கள் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ள உலகத்தையும் தெளிவாக உணர முடியும். பிற்காலத்தில் உங்களைத் தூக்கி நிறுத்துவது அந்த அனுபவங்களின் வலிமையாகவே இருக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
-என்.கணேசன்
பின்னர் ஓரிரண்டு படங்களில் சின்ன வேடங்கள் அவருக்குக் கிடைத்தன. அவையும் சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் எல்லா விதங்களிலும் வாழ்க்கையில் சுமை கூடிக் கொண்டே போனதே ஒழிய குறையவில்லை. மனைவியின் நகையைத் திருடி விற்றுச் சாப்பிடும் அளவு வாழ்க்கை மிக மோசமானது. அந்தப் பணமும் தீர்ந்து போன போது அவருடன் அவரது நாயைத் தவிர துணையாக யாருமில்லை. அந்த நாயிற்கும் உணவிட முடியாமல் போன போது அவரால் அதைத் தாங்க முடியவில்லை. தன் நாயாவது எங்காவது நல்லபடியாக பிழைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவராக அவர் ஒரு மதுபானக்கடைக்கு வெளியே அந்த நாயை ஒருவரிடம் 25 டாலருக்கு விற்று விட்டார். விற்று விட்டு அந்த இடத்தை விட்டுச் சென்ற போது பெருகிய கண்ணீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரண்டு வாரங்கள் கழித்து குத்துச்சண்டை வீரர் முகமது அலியும், மற்றொரு வீரரும் பங்கெடுத்த ஒரு குத்துச்சண்டையை சில்வஸ்டர் ஸ்டலோன் பார்த்தார். அந்தக் குத்துச்சண்டை அவருள் ஒரு கதைக்கருவை உருவாக்கியது. இரண்டு நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து ராக்கி திரைக் கதையை சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கினார். அதை எடுத்துக் கொண்டு அவர் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக அணுகினார். இதெல்லாம் விலை போகாது, இந்த மாதிரி திரைப்படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள், இதில் என்ன இருக்கிறது என்பது போன்ற விமர்சனங்கள் தான் அவருக்குக் கிடைத்தன. ஆனாலும் தான் எடுத்துக் கொண்ட பணியில் ஆத்மார்த்தமான நம்பிக்கை வைத்திருந்த சில்வஸ்டர் ஸ்டலோன் இதிலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார்.
ஒரு தயாரிப்பு கம்பெனி மட்டும் அவரது திரைக்கதையில் ஆர்வம் காட்டியது. அது அவருக்கு 1,25,000 டாலர்கள் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் சில்வஸ்டர் ஸ்டலோன் ஒரு நிபந்தனை விதித்தார். அந்த திரைப்படத்தில் தானே கதாநாயகனாக நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களிடம் பிரபலமாகாத ஒரு நடிகரை வைத்து அந்தப் படத்தை எடுத்து கையைச் சுட்டுக் கொள்ள அவர்கள் விரும்பாமல் பின் வாங்கினார்கள். ஆனால் அந்தத் திரைக்கதையில் வெற்றிக்கான அம்சம் இருப்பதாக உணர்ந்த அவர்கள் ஒரு பிரபல நடிகரை வைத்து அந்தப்படத்தை எடுத்தால் வெற்றிப்படமாக்கலாம் என்று நினைத்து 2,50,000 டாலர்கள், 3,50,0000 டாலர்கள் வரை தர முன்வந்தார்கள். நாயைக்கூட 25 டாலருக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்திருந்த போதும் சில்வஸ்டர் ஸ்டலோன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியில் அவரைக் கதாநாயகனாகப் போடும் பட்சத்தில் வெறும் 35,000 டாலர்கள் மட்டுமே திரைக்கதைக்கும், நடிப்பிற்கும் சேர்த்து தருவோம் என்று அவர்கள் சொன்னார்கள். உடனே சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார்.
கிடைத்த பணத்தில் அவர் செய்த முதல் வேலை நாயைத் திரும்பவும் வாங்க முயற்சித்தது தான். எந்த மதுபானக்கடையின் வெளியே தன் நாயை அவர் விற்றாரோ அதே மது பானக்கடையின் வெளியே மூன்று நாட்கள் காத்திருந்து கடைசியில் நாயை வாங்கியவரை அவர் சந்தித்தார். நடந்ததை எல்லாம் தெரிவித்து அந்த நாய்க்கு நூறு டாலர்கள் தருவதாக அவர் சொன்னாலும் அந்த ஆள் திரும்ப நாயை விற்க சம்மதிக்கவில்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏற்றிக் கொண்டே போனாலும் சம்மதிக்காத அந்த ஆள் 15,000 டாலர்களும், ராக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வாய்ப்பும் தந்தால் தான் திரும்ப நாயைத் தருவேன் என்று சொல்லி விட்டார். சில்வஸ்டர் ஸ்டலோன் ஒத்துக் கொண்டார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த ராக்கி படத்தில் அந்த ஆளும், அந்த நாயும் கூட நடித்திருக்கிறது.
பத்து ஆஸ்கர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ராக்கி திரைப்படம் முடிவில் சிறந்த திரைப்படம், சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்ற மூன்று ஆஸ்கர்களை வென்றது. மீதி வரலாறாகியது. ராக்கியின் பல தொடர் சினிமாக்கள், ஃபர்ஸ்ஃப் ப்ளட், ராம்போ போன்ற பல திரைப்படங்கள் தந்து புகழ், செலவம் இரண்டிலுமே சிகரங்களைப் பிடித்த சில்வஸ்டர் ஸ்டலோன் வேறுபல விருதுகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் நகரின் வீதிகளில் வசிக்க நேர்ந்த சில்வஸ்டர் ஸ்டலோன் பலநூறு கோடிகளின் அதிபதியாகி அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் கண்கவரும் மாளிகைகளை வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அவரது மாளிகையை இங்கே பாருங்கள்.

கஷ்ட காலங்கள், முள் பாதைகள் எல்லாம் எல்லார் வாழ்விலும் உண்டு. அவற்றைப் பார்க்காமல் சிகரங்களை அடைந்தவர்கள் மிகவும் குறைவு. அவற்றைக் கடக்கையில் தான் நீங்கள் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ள உலகத்தையும் தெளிவாக உணர முடியும். பிற்காலத்தில் உங்களைத் தூக்கி நிறுத்துவது அந்த அனுபவங்களின் வலிமையாகவே இருக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
-என்.கணேசன்
Monday, May 5, 2014
கால்கள் துணையில்லாமல் ஒரு ஆனந்த தாண்டவம்!
பிறப்பில் இருந்தே மூளை முடக்குவாத (Cerebral
Palsy) நிலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைப்
பரிசோதித்த மருத்துவர் 1991 ஆம் ஆண்டு சொன்னது “He will be like a
vegetable”. பிறந்து
பத்து மாதத்தில் அப்படி ஒரு சதைப் பிண்டமாக இருப்பான் என்று கணிக்கப்பட்ட அக்குழந்தை
இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த
இளைஞனாகத் திகழ்கிறார். திருக்குறளிலும், தமிழ் பக்தி இலக்கியங்களிலும் நல்ல
ஈடுபாடு உண்டு. பலவற்றை மனப்பாடமாகச் சொல்லவும், மற்றவர்கள் சொல்வதில் பிழை
திருத்தவும் முடியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ’கலந்தாய்வு/ ஆற்றுப்படுத்துதல்’ உளவியலில் (Counseling
Psychology) முதுகலைப்பட்டம்
பெற்று, தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டத்திற்கு
ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஒரு தாவர
நிலையிலிருந்து வெற்றிகரமான ஒரு சாதனை இளைஞன் நிலைக்கு வந்திருக்கும் திரு K. குமரனின் வெற்றிப் பயணத்திற்கு ஆரம்ப காரணம் குமரனின் குடும்பம். விதி தந்ததை
யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை அல்லவா? அவர்களும் தங்களுக்குத்
தரப்பட்டதை எந்த விதங்களில் எல்லாம் மேம்படுத்த முடியுமோ அப்படி எல்லாம்
மேம்படுத்தினார்கள். குழந்தையின் மூடிய விரல்களைத் திறக்க ஆரம்பித்தது முதல்
ஏராளமான உடல் இயக்கப் பயிற்சிகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்ய குமரனுக்கு உதவி
ஊக்கப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி, அதன் பின் வீட்டில்
இருந்தே கல்வி என கல்வி கற்ற குமரனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பத்தினரும்
அன்பான ஆதரவு கிடைத்தது. மருத்துவ ரீதியாக என்னென்ன செய்ய முடியுமோ அதை அவர்கள்
குமரனுக்கு செய்து கொடுத்தார்கள்.
மற்றவர்கள் என்ன தான்
உதவினாலும் உள்ளே ஒரு தீப்பொறி இல்லா விட்டால் எந்த நல்ல நிலையையும் யாரும் எட்டி
விட முடியாது அல்லவா? குமரனின் வெற்றிக்கும் உள்ளே இருந்த தீப்பொறியும்,
கனவுகளும், அதற்கான அயராத உழைப்புமே மிக முக்கியமாக இருந்தன என்பதை சமீபத்தில்
சென்னையில் குமரனைச் சந்தித்த போது என்னால் உணர முடிந்தது. தன் வாழ்க்கை
அனுபவங்களையும் எண்ணங்களையும் “ஆனந்த தாண்டவம்” என்ற சிறு நூலில்
குமரன் எழுதி இருக்கிறார். தனக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர், மருத்துவர்கள்,
நண்பர்கள் பற்றியும், கிரிக்கெட் முதல் கடவுள் வரை தன் கருத்துகளையும், மாற்றுத்
திறனாளியாக தான் சந்தித்த சவால்களையும் அந்த நூலில் எழுதி இருக்கிறார். அன்பான
குடும்பமும், உயர்ந்தே ஆக வேண்டும் என்ற மனஉறுதியும் இருந்தால் சாத்தியமாகாதது
தான் என்ன?
கால்கள் வலுவிழந்து
போய் தனியாக நிற்கக் கூட முடியாத நிலையிலும் தன் வாழ்க்கையை ஆனந்த தாண்டவமாக
குமரன் சொல்வதைக் கேட்கையில் ஹெலன் கெல்லர் தன் வாழ்க்கையை “ஆனந்தமயமான சொர்க்கம்” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
உறுப்புகள் எல்லாம்
சரியாக இருந்தும் முடங்கிப் போகும் மனிதர்கள் எத்தனை எத்தனை! வாழ்க்கையே எதிர்நீச்சலாக இருந்தாலும்
சளைக்காமல் நீந்திக் கரை ஏறும் குமரன் போன்றவர்கள் அவர்களுக்கு பாடமே அல்லவா?
வாழ்க்கை எல்லா
நேரங்களிலும் சுலபமாக இருப்பதில்லை. சுலபமாக இருக்கும் வாழ்க்கையில் சாதனைகள்
பிறப்பதில்லை. சின்னச் சின்ன
அசௌகரியங்களைக் காரணம் காட்டி, சாதிக்கும் துடிப்பிழந்து போகும் மனிதர்கள்,
குமரனைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையையும் சாதனையையும் எண்ணிப்
பார்த்தால் போதும் புத்துணர்ச்சியும் உத்வேகமும் தானாகப் பிறக்கும்.
தன்னைப் போன்ற
மாற்றுத் திறனாளிகளுக்கு தன் நூலில் அவர் கூறும் அறிவுரை இது தான். “வாழ்க்கைப்
பயணத்தில் அம்மாவும் நானும் எதிர் கொண்ட வலிமிகுந்த அனுபவங்கள் ஏராளம். அதிலும்
எனக்கான உடல் இயக்கப் பயிற்சிகள் நடக்கும் சமயங்களில் சிறுவனான நான் வலி தாங்காமல்
அலறிய தருணங்களை அவர் கடந்து வந்த விதத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என்
கன்னங்களுக்குக் குடை தேவைப்படும் அளவுக்குக் கண்ணீர் வருகிறது. எந்தக்
காரணத்திற்காகவும் பயிற்சிகளைத் தவிர்க்க என்னை அனுமதிக்காத அம்மாவின் கண்டிப்பு
மிகுந்த அன்பு தான் என்னை இந்த நூலை எழுத வைத்திருக்கிறது. ஒரு வேளை வலிக்குப் பயந்து
என் தாய் பயிற்சிகள் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் முதலில் என் தசைகள் இறுக்கம்
அடைந்திருக்கும். அதனால் ஒட்டுமொத்த செயல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கும். இதை
இப்போது நான் காணும் என்னைப் போன்றோருக்கு முடிந்த வரையில் எடுத்துக்கூறி
வருகிறேன். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் அவரவர் குறைகளின் தன்மைக்கேற்ற
பயிற்சிகளைக் கண்டிப்பாகத் தொடர வேண்டும் என அன்புடன் பரிந்துரைக்கின்றேன்”.
மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல்
எல்லோருக்கும் சாதனைகளுக்கான சூத்திரம் இதுவே அல்லவா? தங்களுக்கு இருக்கும்
குறைபாடுகளை நீக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை தொடர்ந்து செய்து கொண்டே
வந்தால், தடையாக நிற்கும் விதியும் விலகி வழி விட்டுத் தானே ஆக வேண்டும்!
-
என்.கணேசன்
Monday, January 6, 2014
ஒரு இலக்கை நோக்கி ஓடியவர்!
சிகரம் தொட்ட அகரம்-2
நிறைய
படிக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், நோபல் பரிசு வாங்க வேண்டும்
என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த ஒரு அறிவு கூர்மை மிக்க பெண்ணை படிக்க
விடாமல், படிப்பை நிறுத்தி, பதினேழு வயதிலேயே திருமணம் செய்து வைக்க வீட்டார்
முடிவெடுத்தால் அந்தப் பெண்ணிற்கு எப்படி இருக்கும்? கல்கத்தாவைச் சேர்ந்த சந்தா
சவேரி (Chanda
Zaveri) என்ற வட இந்தியப் பெண்ணிற்குத் தலையில் இடியே
விழுந்தது போலத் தான் இருந்தது. என்ன சொல்லியும் வீட்டார் கேட்காமல் திருமணம்
நிச்சயித்து விட்டார்கள்.
கனவுகள் மட்டும் இருந்து உலக அனுபவம் அதிகம் இல்லாத
சந்தா சவேரி இந்த திருமண ஏற்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்க
ஆரம்பித்தாள். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கல்கத்தா வீதி ஒன்றில் வெயிலின்
கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்த கரேன் என்ற ஒரு அமெரிக்கப் பெண்ணை
மருத்துவமனையில் சேர்க்க சந்தா சவேரி அந்தப் பெண்ணின் கணவர் டேவிடிற்கு உதவி
இருக்கிறாள். அதன் மூலம் கரேனும் டேவிடும் அவளுக்கு நட்பாகி இருக்கிறார்கள்.
அமெரிக்கா திரும்பும் முன் அமெரிக்கா வந்தால் பாஸ்டனில் வசிக்கும் தங்களைச்
சந்திக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்திலிருந்து தப்பிக்க வழிகளை யோசிக்க ஆரம்பிக்கையில்
சந்தா சவேரிக்கு அந்த அமெரிக்க தம்பதிகளின் நினைவு வந்தது. அவர்கள் ஸ்பான்சர்
செய்தால் அமெரிக்கா செல்ல விசா கிடைக்கும் என்ற எண்ணம் வர அவர்களுக்குப் போன்
செய்து பேசினார். டேவிட் ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பவே, சந்தா சவேரி வீட்டை விட்டு
வெளியேறினார். தன்னிடம் இருந்த வைரத்தோடுகளை விற்று விமான டிக்கெட் வாங்கி அமெரிக்காவில்
பாஸ்டன் நகருக்குப் போனார்.
பட்டப்படிப்பு இல்லாத காரணத்தால் சந்தா சவேரிக்கு நல்ல
வேலை கிடைக்க அமெரிக்காவில் வாய்ப்பு இருக்கவில்லை. ஒரு மூதாட்டிக்குப்
பணிப்பெண்ணாக முதல் வேலையில் சேர்ந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே
அந்த மூதாட்டி இறந்து போனார். 17 வயதேயான சந்தா சவேரிக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அந்த மூதாட்டியின் மகனுக்குப் போன் செய்த
போது அவர் சவக்கிடங்கிற்குப் போன் செய்யச் சொல்லி இருக்கிறார். புதிய தேசம், புதிய
இடம், இது போன்ற இக்கட்டான நிலை எல்லாவற்றையும் எப்படியோ சமாளித்து முடித்த
அவருக்கு சில நாட்களில் இன்னொரு மூதாட்டியிடம் பணி செய்யும் வேலை கிடைத்தது.
முதல் நாளிலேயே அந்த மூதாட்டி அசைவ சமையல் செய்யச் சொல்ல
சந்தா சவேரிக்கு உதறல் எடுத்தது. முட்டை கூட சாப்பிட சுத்த சைவ குடும்பத்தவரான
அவருக்கு அசைவ சமையல் செய்யத் தெரியாது என்று அறிந்த அந்த மூதாட்டி
கடையிலிருந்தாவது வாங்கித் தரச் சொல்லி இருக்கிறார். கடையும் எங்கே இருக்கிறது
என்று தெரியாது என்று கேள்விப்பட்ட மூதாட்டிக்கு கோபத்திற்குப் பதிலாக அந்தச் சிறு
பெண்ணிடம் கருணை பிறந்திருக்க வேண்டும். பலவற்றைக் கற்றுத் தந்து தன் மகளைப் போல
அவளைப் பார்த்துக் கொண்டார். படிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்தவள் என்று
தெரிந்த பின் 30000 அமெரிக்க டாலர் தொகை தந்து மேற்படிப்புக்கு வேண்டிய
அடிப்படைக் கல்வியை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பியும்
வைத்திருக்கிறார்.
படித்து முடித்து வந்த சந்தா சவேரியை டேவிட் தன்
மாமனாரிடம் அறிமுகப்படுத்த அந்தப் பெண்ணிடம் தெரிந்த ஆர்வமும், இலட்சிய தாகமும்
அவரையும் கவர்ந்தது. அவர் சந்தா சவேரியைத் தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டு
தன்னுடன் கலிபோர்னியாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மேற்படிப்பு படித்த சந்தா
சவேரியை அவர் இடையில் இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர் குடும்பத்தாருடனும்
இணக்கத்தையும் ஏற்படுத்தித் தந்தார்.
மேற்படிப்பை முடித்த சந்தா சவேரி அடுத்தபடியாக இரு முறை
(1954 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில்) வேதியியலில் நோபல் பரிசு பெற்ற லினஸ் பாலிங்க்
(Linus Pauling) என்பவரிடம்
உயிர்-வேதியியல் (biochemistry) ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரிய விரும்பினார். ஆனால் லினஸ் பாலிங்க்
தன் ஆராய்ச்சிக் கூடத்தில் அங்குள்ள உபகரணங்களைக் கழுவி வைக்கும் பணியைத் தவிர
வேறு எந்தப் பணியும் இல்லை என்று கூறி விட்டார்.
அமெரிக்காவில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி மேற்படிப்பை முடித்திருந்த
சந்தா சவேரி சிறிதும் யோசிக்காமல் ”சரி, அந்த
வேலையையாவது தாருங்கள். உங்களிடம் ஏதாவது வேலை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறி வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஆராய்ச்சி செய்து முடித்து
விட்டு ஆராய்ச்சியாளர்கள் சென்ற பின் அங்கு சென்று அந்த உபகரணங்களைக் கழுவி சுத்தம்
செய்து கொண்டே தன் கவனிக்கும் திறனால் நிறைய தெரிந்து கொண்டார். அவர் அறிவுத்
திறமையையும், ஆர்வத்தையும் லினஸ் பாலிங்க் கவனித்தார்.
90 வயது ஆகியிருந்த அவருக்கு, தான் இனி அதிக காலம் வாழ மாட்டேன் என்று
தோன்ற ஆரம்பித்திருந்திருந்ததால் சாவதற்கு முன் தன் அனுபவ அறிவை அந்த இளம்
பெண்ணிற்குச் சொல்லிக் கொடுத்து விடத் தோன்றியது. நான்கு ஆண்டுகள் சந்தா
சவேரிக்குக் கற்பித்து விட்டு அவர் காலமானார்.
அவரிடம் கற்றதை அடிப்படையாக வைத்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து B2 Actigen என்ற தோல் சம்பந்தமான
மருந்தை முதன்முதலில் கண்டு பிடித்தார். ஆரம்பத்தில் மூதாட்டிகளுக்குப் பணி விடை
செய்கையில் படுத்த படுக்கையாக இருக்கும் நபர்கள் முதுகெல்லாம் புண்கள் ஆவதைப்
பார்த்து மனம் வருந்தி இருந்த அவர் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளில் தோல்
புண்ணாகாமல் இருக்கும் மருந்துகள்/க்ரீம்கள், தோல் சுருக்கங்கள் இல்லாமல்
இருக்கும் மருந்துகள்/க்ரீம்கள் கண்டு பிடித்தார். அவருடைய கண்டுபிடிப்புகளை அவரே
தயாரித்து விற்பனை செய்யும் Activor என்ற கம்பெனியை ஆரம்பத்தார்.
சிறிது காலம் கழித்த பின் Actiogen என்ற கம்பெனியை லாஸ்
ஏஞ்சல்ஸில் ஆரம்பித்தார். அதன் பின் அவர் தன் வாழ்வில் திரும்பிப்பார்க்க வேண்டி
இருக்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டார். இன்று பல நூறு கோடிகள் வியாபாரம்
நடக்கும் நிறுவனமாக அது உள்ளது.
செல்வந்தர் வீட்டு மகளாய் பிறந்து சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த
பெண் தன் இலட்சியத்திற்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வேலைக்குச்
சேர்ந்த முதல் நாளிலேயே அந்த வீட்டு மூதாட்டி இறந்ததை அபசகுனமாக நினைத்து அவர்
தளர்ந்திருந்தாலும், பணிப்பெண் வேலைகள் தன் அறிவுத் திறமைக்கு உகந்தது அல்ல என்று
நினைத்திருந்தாலும் இன்று நமக்கு அவரைத் தெரியாமல் போயிருக்கும். அவர்
பணிப்பெண்ணாக வேலை பார்த்தது கல்வி கற்று முடியும் வரை மட்டும் அல்ல. மேற்படிப்பு
படித்து முடித்த பின்னும் அந்த வேலையை லினஸ் பாலிங்கின் ஆராய்ச்சிக் கூடத்தில்
அவர் செய்யத் துணிந்தது அவருடைய அறிவு தாகத்தையும், வெற்றிக்காக எந்த உழைப்பையும்
செய்யத் தயங்காத உறுதியையும் காட்டுகிறது.
இன்று
மிகப் பெரிய நிறுவன அதிபராக இருந்த போதும் அவர் தன் ஆராய்ச்சிகளை விடவில்லை.
அதற்கு அவர் இப்போதும் முக்கியத்துவம் தருகிறார். அதே நேரத்தில் எல்லா
நேரமும் ஆராய்ச்சி, வியாபாரம் என்று அதிலேயே மூழ்கி விடாமல் சந்தா சவேரி தனக்கு
மிகவும் பிடித்த ஓவியம் தீட்டுதல், அர்ஜெண்டினாவின் டாங்கோ நடனம் ஆகியவற்றிற்கும்
நேரம் ஒதுக்கிக் கொள்கிறார்.
இலக்கை அடைய செய்ய நேர்கிற எந்த நேரான வேலையும் கீழானதல்ல. ”வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை என்ன ஆனாலும் சரி கண்டிப்பாகச் செய்தே
ஆக வேண்டும் என்று உறுதியாக இருப்பது தான் வெற்றிக்கான ஒரே வழி” என்கிறார் சந்தா சவேரி. ”சூழ்நிலைகளில் அது
சரியில்லை, இது மாற வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் எதுவும்
முடியாது” என்கிறார் அவர்.
அகரத்தில் இருந்து சிகரம் வரை செல்ல
விரும்பும் எவருக்கும் இதுவல்லவோ மிகப் பெரிய பாடம்!
-
என்.கணேசன்
Monday, September 24, 2012
வளமான வாழ்விற்கு வழிகள் பத்து!
முதுமை என்றாலே தள்ளாத வயது என்று
அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. முதுமையோடு முடியாமையை
இணைத்தே அவர்கள் பார்க்கிறார்கள். முதுமை என்றால் உடல் ஆரோக்கியம் இல்லாமல்
இருப்பதும் மன அமைதி இல்லாமல் இருப்பதும் தவிர்க்க முடியாதவை என்று
எண்ணுகிறார்கள். ஆனால் நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் அக்டோபர் நான்காம் தேதி
கண்டு நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட இருக்கும் ஒரு ஜப்பானிய டாக்டர்
இன்றும் தன் மருத்துவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறார், இப்போதும்
புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார், உலக நாடுகளுக்குப் பயணித்து
சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
அந்த டாக்டரின் பெயர் டாக்டர்
ஷிகிகி ஹினோஹரோ (Dr.
Shigeaki Hinohara).
இவர் தன் எழுபத்தைந்தாம் வயதிற்கு மேல் 150 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த
நூல்களில் ’நீண்ட காலம் வாழ்வதும், நன்றாக வாழ்வதும்’
(Living
Long, Living Good) மிகவும் பிரபலமானது. இது பன்னிரண்டு
லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இவர் 75 வயதிற்கும்
மேற்பட்ட வயதானவர்களுக்காக “புதிய முதியோர் இயக்கம்” (New Old People's Movement) என்ற இயக்கத்தை
ஆரம்பித்துள்ளார். இதன் மூலமாக அவர் மக்களை நீண்ட காலம் நலமாய் வாழ
உற்சாகப்படுத்தி வருகிறார்.
மனித
உடலில் கிட்டத்தட்ட 36000 வித்தியாசமான ஜீன்கள் இருப்பதாகவும் அந்த ஜீன்களை
மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். புதிய புதிய
துறைகளில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்டு உடலையும் மனதையும் முதியவர்கள்
இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர். அது புதிய
கலையானாலும் சரி, புதிய விளையாட்டானாலும் சரி புதியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதே
உடல், மன நலத்திற்கு பேருதவி செய்யும் என்கிறார்.
நூறாண்டு
காலத்தையும் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வரும் அவர் வளமான, நலமான, நீண்ட
வாழ்வுக்கு பத்து வழிகளைச் சொல்கிறார். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1) உற்சாகம் முக்கியம்
உண்பதும்,
உறங்குவதும் முக்கியமே என்றாலும் அவற்றை விட அதிக முக்கியம் உற்சாகமாக இருப்பது.
குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் போது சாப்பாடு, உறக்கம் மறந்து போய் விளையாடுவது
போல அதே உற்சாகத்தை வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்முள் ஒரு
பெரும் சக்தியை உணர்வோம் என்கிறார் அவர்.
2) எடை கூடாதீர்கள்
உங்கள்
எடை கூடிக் கொண்டே போகாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள் என்கிறார் அவர்.
சரியான சத்தான உணவுகளை அளவாக உட்கொள்வதும் வயிற்றுக்கு அதிக வேலை கொடுக்காமல்
இருப்பதும் சுறுசுறுப்புக்கும் உடல்நலத்திற்கும் வழி வகுக்கும் என்கிறார்.
3)
திட்டமிடுங்கள்
திட்டமிட்டு வாழுங்கள். அதன்படி
இயங்குங்கள். தினமும் நல்ல விஷயங்களில் ஈடுபாடுடன் இருந்தால், எதிர்பார்க்க ஏதாவது
ஒன்று எப்போதும் இருப்பதுடன் உற்சாகமும் இருக்கும், மனமும் இளமையாக இருக்கும்
என்கிறார் அவர்.
4)
எதையும் அனுபவித்து செய்யுங்கள்
எதைச் செய்கிறோமோ, அதில் முழு
மனதுடன் ஈடுபட்டு அனுபவித்து செய்தோமானால் ஓய்வு பெறும் எண்ணமே எழாது. அறுபது வயது
வரை குடும்பத்திற்காக உழைக்கிறவர்கள், அதற்குப் பின் சமூகத்திற்காகவும்,
மனிதகுலத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். அதையும் அனுபவித்து
செய்தோமானால் நாம் நாலு பேருக்கு உபகாரமாக இருக்கிறோம் என்ற திருப்தியில் தனியொரு
சக்தியையும் நிறைவையும் நாம் உணர்வோம் என்கிறார்.
5)
பெற்றதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
எத்தனையோ கற்கிறோம் என்றாலும் அதனை
அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு உதவும் போது அவர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து நம்
வாழ்க்கையும் சிறப்புற அமைகிறது என்கிறார். அப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது நம்
அறிவையும் புதுப்பித்துக் கொள்கிறோம் அல்லவா?
6) இயற்கைக்கு வாய்ப்பளியுங்கள்
எல்லா வியாதிகளுக்கும் விஞ்ஞான
மருத்துவ உதவியையே நாடாதீர்கள் என்கிறார் இந்த மருத்துவர். விஞ்ஞான மருத்துவத்தில்
எல்லைகள் என்றுமே உண்டு என்கிறார் அவர். இயற்கை அழகுடன் இயைந்து வாழ்தல், செல்லப்
பிராணிகளுடன் மகிழ்தல், இசையில் ஆழ்தல், போன்றவை உடலோடு மனத்தையும்
குணப்படுத்துவன. அதை மருத்துவரும் பரிந்துரைக்க முடியாது, விஞ்ஞான மருந்துகளும் தந்து
விட முடியாது என்கிறார்.
7) நடங்கள், படியேறுங்கள்
உடலுக்கு வேலை கொடுத்து உங்கள் தசைகளை
வலுவாக வைத்துக் கொள்ள முடிந்த வரை நடப்பது, லிப்டில் போவதற்கு பதிலாக படியேறிச்
செல்வது போன்ற சிறிய சிறிய வேலைகளில் பெரிய பலன் உடலுக்குக் கிடைப்பதாக அவர்
சொல்கிறார்.
8) பணம், பொருள்களில் மிதமாக இருங்கள்
உண்மையான சந்தோஷத்தை பணத்தாலோ,
சேர்த்து வைக்கும் சொத்துகளாலோ நாம் அடைந்து விட முடியாது என்பதால் அவற்றில் ஒரு
அளவான, மிதமான மனோபாவம் இருப்பது நல்லது என்கிறார். அவை முக்கியம் என்பதை மறுக்காத
அவர் அவற்றை விட திருப்தி அதிக முக்கியம் என்கிறார்.
9) எதிர்பாராதவற்றையும் பயன்படுத்திக்
கொள்ளுங்கள்
கோடுபோட்டது போல் போவது வாழ்க்கை
அல்ல. எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராதவையே அதிகம் நடக்கின்றன. அவை
எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்றாலும் அவர்றிலும் ஒரு படிப்பினையைப்
பெறுவதும் நம் முன்னேற்றத்திற்காக ஏதாவது விதத்தில் பயன்படுத்திக் கொள்வதும் நம்மை
உயர்த்துவதோடு பக்குவப்படுத்தவும் செய்யும் என்கிறார்.
10) எட்ட முடியாத உயரத்தைக்
குறிக்கோளாக்குங்கள்
சாதாரணமாக எட்ட முடியாத உயரத்தை
குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணிக்கும் போது தான் நம்மிடம்
உள்ள கூடுதல் திறமைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நல்ல ’ரோல்
மாடல்’
ஒருவரையும் வைத்துக் கொள்வது நமக்கு ஊக்கசக்தியாக அமையும் என்று அவர் கூறுகிறார்.
அறுபது வயதில் வாழ்க்கை முடிந்து
விடுவதாகவும் பின் சாகும் வரை எப்படியோ வாழ வேண்டும் என்பதாகவும் நினைப்பவர்கள்
பலர் இருக்க, நூறிலும் ஒரு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, அதன் உற்சாகமும்
குறைந்து விடுவதில்லை என்கிறார் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ. அப்படிச் சொல்பவர் அதை
சாதித்தும் காட்டியவர் என்பதால் அவரிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டு முடிந்த
வரை பின்பற்றினால் நாமும் முதுமையிலும் தளர்ந்து விட மாட்டோம் என்பது நிச்சயம்!.
- என்.கணேசன்
Monday, September 17, 2012
காரியம் பெரிது, வீரியமல்ல!
பண்டிட் மதன் மோகன் மாளவியா
காசி இந்து பல்கலைக்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு
பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள்,
செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை
வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.
ஹைதராபாத்
நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க
அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக்
கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது
வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை
எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா
வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச்
சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.
மதன்
மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின்
செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்” என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில்
அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய
செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில்
உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது
சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.
சிப்பாய்களில்
ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை
இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம்
போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த
நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய்
வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல
அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார்.
அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம்
வாங்கப்பட்டது.
மதன்
மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து
பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
(1916
ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)
மாளவியாவின்
இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக
நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக
நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில்
பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும்.
ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது,
வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே
நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு
இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.
பெரிய
காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும்,
சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம்
வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய்
இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும்,
பின்னடைவுகளையும் பெரிதுபடுத்தும் தன்மை
இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.
தங்களை
முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை
செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள்.
எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும்
நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.
-
என்.கணேசன்
Monday, August 6, 2012
ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள்!
அறிவுரை வழங்க அறிவு
தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க
ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.
அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும்
நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள்
ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக
வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை
வழங்குவாரேயானால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்;
வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக்
கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.
ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட
வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு
அவர் அளித்த பங்கு மிகப்பெரியது. ஆப்பிள் மற்றும் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர்களை
உருவாக்கியவர் அவர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் செயல்முறைகளில்
அவர் முத்திரைகள் எத்தனையோ உண்டு. அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில்
ஒருவராக இருந்தவர். வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தியவர். உச்சாணிக்
கொம்பிலிருந்து ஒருசில முறை அடிமட்டத்திற்கு வந்த போதும் மீண்டும் தன்
திறமையாலும், உழைப்பாலும் முன்னேறி முந்தைய உயரத்தை விட அதிக உயரத்தை எட்டியவர்.
அவர் 2005 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது தன்
வாழ்வில் கற்ற பாடங்களை மூன்று முக்கிய நிகழ்வுகள் மூலமாகச் சொன்னார். அவை
மூன்றும் அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்த நிகழ்வுகள். கொஞ்சம் ஏமாந்திருந்தாலும்
அடிமட்டத்திற்கு ஒருவரை நிரந்தரமாக அனுப்பி வைத்து புதைக்க வல்லவை அவை. ஆனால்
வாழ்க்கையில் தெளிவாகவும், தைரியமாகவும் இருக்க முடிந்ததால் அவற்றை அவர்
உபயோகப்படுத்தி சரித்திரம் படைத்தார். அவர் விவரித்த அந்த வாழ்க்கை நிகழ்வுகளையும்
அதன் மூலமாகக் கிடைத்த பாடங்களைப் பார்ப்போமா?
முதல் நிகழ்வு/பாடம்:
17 ஆவது வயதில் கல்லூரிக்குச் சென்ற
அவருடைய படிப்புக்கு அவர் வளர்ப்புக் பெற்றோர் செலவழிக்க நேர்ந்த தொகை மிகப்
பெரியது. கிட்டத்தட்ட தங்கள் சேமிப்பு முழுவதையுமே அவர்கள் செலவழிக்க வேண்டி
இருந்தது. பணவசதி அதிகம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு இத்தனை
செலவழித்து படித்து எதை சாதிக்கப் போகிறோம் என்ற மிகப்பெரிய கேள்வி ஆறு மாதம்
அலைக்கழித்தது. எந்த விதத்தில் அந்தக் கல்வி அவர் வாழ்க்கையை உயர்த்தப் போகிறது
என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவர் கல்லூரிப் படிப்புக்கு
முற்றுப் புள்ளி வைத்தார். கல்லூரியில் ஒரு பட்டம் பெற வேண்டி பிடித்ததை விடவும்
பிடிக்காததை அதிகமாகப் படித்து கல்வியையும் வாழ்க்கையையும் அவர் சுமையாக்கிக்
கொள்ள விரும்பவில்லை.
கல்லூரிப் படிப்பை விட்ட அவர் பெற்ற
கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர்களின் அறைகளில் தரையில் படுக்க நேர்ந்ததையும்,
கோகோ பாட்டில்களை சேகரித்து திருப்பித்தந்து கிடைத்த பணத்தில் உணவுக்கு செலவு
செய்ததையும், ஹரே கிருஷ்ணா கோயிலில் கிடைக்கும் அன்னதானத்திற்காக ஒவ்வொரு ஞாயிறும்
ஏழு மைல் தூரம் நடந்ததையும் நினைவு கூர்ந்த அவர் அத்தனையையும் மீறி அந்தத்
தீர்மானம் தனக்கு எப்படி நன்மை செய்தது என்பதைச் சொன்னார். பிறகு பிடித்த
விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்த அவர் தனக்குப் பிடித்த கையெழுத்துக் கலை (calligraphy) வகுப்புகளுக்குச்
சென்று அதில் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.
அது பிற்காலத்தில் அவர் வடிவமைத்த முதல்
மேசிண்டோஷ் (Macintosh) கம்ப்யூட்டருக்கு பலவித
எழுத்துக்களை உருவாக்குவதற்கு மிகவும் உதவியது. அந்தக மேசிண்டோஷ் கம்ப்யூட்டர்
எழுத்துக்களையே விண்டோஸ் அப்படியே பின்னர் எடுத்துக் கொண்டதால் இப்போதுள்ள
கம்ப்யூட்டர்கள் அழகான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸின் அன்றைய
எழுத்து வகைகள் தான் உதவியது. மேலும் அவர் தனக்குப் பிடிக்காத கல்லூரிப்
படிப்பிலேயே தங்கி இருந்தால் ஒரு ஊழியராக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து
அடையாளம் இல்லாமல் போயிருந்திருப்பார் என்பதும் உண்மையே.
மனிதன் ஆட்டு மந்தையாக இருந்து
விடாமல் தன் தனித்தன்மையின் படியும் உள்ளுணர்வின் படியும் நம்பிக்கையுடன் இயங்கினால்
அது கண்டிப்பாக அவன் வாழ்க்கைக்கும் உறுதுணையாகவும் மிகவும் உபயோகமாகவும்
இருக்கும் என்பது அவர் முதல் அறிவுரை. அது ஆரம்ப கட்டத்தில் புரியா விட்டாலும்
பிற்காலத்தில் கண்டிப்பாகப் புரிய வரும் என்பது அவர் முதல் அனுபவ அறிவுரை.
(படிக்கிற படிப்பை
நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல பாடம். திறமையும் ஆர்வமும் வேறொன்றாக இருக்கையில்
அதற்கு சம்பந்தமில்லாத படிப்பைத் தொடர்வது வெற்றிக்கு எதிரானது என்பதை அவர்
சொல்வதாக எடுத்துக் கொள்வது முக்கியம்.)
இரண்டாம் நிகழ்வு/பாடம்
தன் 20வது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை
பெற்றோரின் கிடங்கில் ஆரம்பித்த ஸ்டீவ் ஜாப்ஸ் பத்து வருடங்களில் நூறு கோடி ரூபாய்
மதிப்பும், 4000 ஊழியர்களும் கொண்ட நிறுவனமாக உயர்த்தி மாபெரும் வெற்றி கண்டார். ஆனால்
அவர் தான் ஆரம்பித்த நிறுவனத்தை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் திறமையாளர் என்று
எண்ணி நிர்வாகத்தில் சேர்த்த ஒரு நபர் அவருக்கு எதிராக செயல்பட்டு, கம்பெனி
டைரகடர்களையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸை வெளியேற்றி விட்டார். எது
அவர் வாழ்வின் எல்லாமாக இருந்ததோ எதை அவர் மிக மிக நேசித்தாரோ அது அவர் வாழ்வில்
இருந்து பறிக்கப்பட்டது. சில மாதங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர்
விதியையும், வெளியேற்றிய நபரையும் நொந்து கொண்டு முடங்கி விடாமல் இனி என்ன மிஞ்சி
இருக்கிறது என்று யோசித்தார். ஆப்பிள் நிறுவனம் கை விட்டுப் போனாலும் தன்
திறமையும், ஆர்வமும் தன்னிடம் இன்னமும் மிஞ்சி உள்ளது என்று தெளிந்த அவர் அதை
வைத்துக் கொண்டு மறுபடி நெக்ஸ்ட் (NeXT) என்ற நிறுவனத்தைத்
தொடங்கினார். அதையும் பின்னர் (Pixar) என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்த அவர்
அந்த இரு நிறுவனங்களையும் திறம்பட நடத்திய பின் இரண்டாம் நிறுவனத்தின் மூலமாக
டாய்ஸ் ஸ்டோரி என்ற ’கம்ப்யூட்டர் அனிமேஷன்’ திரைப்படம்
எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியைக் கண்டது.
ஒரு கால கட்டத்தில் அவருடைய நெக்ஸ்ட்
நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனமே வாங்கி விட ஸ்டீவ் ஜாப்ஸ் மறுபடி ஆப்பிள்
நிறுவனத்திற்குள் நுழைந்தார். அவர் நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கி இருந்த மிக
முக்கிய தொழில் நுட்ப மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொண்டு புதிய
பரிமாணம் பெற்றது. ஸ்டீவ் ஜாப்ஸ் படிப்படியாக உயர்வையும், உலகப் புகழையும் சந்தித்தார்.
ஆப்பிளில் இருந்து முதல் முறை
வெளியேற்றப்பட்டதை நினைவுகூர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அது பல விதங்களில் நல்லதாகவே
முடிந்தது என்று சொன்னார். எத்தனையோ முன்னேற்றங்களும், மாற்றங்களும் ஆரம்பத்தில்
இருந்து அங்கேயே இருந்திருந்தால் தன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்காது என்கிறார். தான்
காதலித்து மணம் புரிந்த மனைவியின் சந்திப்பு முதல், திரைப்படத் துறை பிரவேசம் வரை
பல நன்மைகளை அதன் மூலம் சந்தித்ததை அவர் தெரிவித்தார்.
மாற்றங்களும்,
இழப்புக்களும் நாம் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் இழக்காத வரை கசப்பாக இருந்தாலும்
கூட மிகப்பெரிய நன்மையையே ஏற்படுத்தும் என்பது அவருடைய இரண்டாவது அனுபவ அறிவுரை.
அதனால் எதை நேசிக்கிறீர்களோ அதை விட்டு விட வேண்டாம் என்றும் எதை நேசிக்கிறோம்
என்று தெரியா விட்டால் அதைக் கண்டுபிடிக்கிற வரை ஒய்ந்து விட வேண்டாம் என்றும்
அவர் கூறுகிறார். அதைக் கண்டு பிடிக்கிற போது அதை இதயம் அறியும், அதன் பிறகு
எல்லாமே முன்னேற்றப் பாதையில் முடியும் என்றும் அந்த சாதனை மனிதர் கூறுகிறார்.
மூன்றாவது
நிகழ்வு/பாடம்
2004 ஆம் ஆண்டு
அவருக்கு ஒரு வித கொடிய கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருக்கும்
குடும்பத்தாருக்கும் பேரிடியாக இருந்தாலும் அவர் முன்பு போலவே அதையும் நல்ல விதமாகவே
எடுத்துக் கொள்ள முடிந்தது பெரும் வியப்பே. தன் சிறு வயதில் படித்த ஒரு வாசகம்
தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் சொன்னார். “ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி
நாள் என்பது போல் வாழ். ஒரு நாள் நீ நினைத்த மாதிரியே அதுவே கடைசி நாளாக அமைந்து
விடும்”. அதன் பின் ஒவ்வொரு நாள்
காலையிலும் இது என் கடைசி நாளாக இருந்தால் இதை நான் செய்வேனா என்பதே எனது
கேள்வியாக அமைந்து விட்டது என்கிறார். பல நல்ல மாறுதல்களுக்கு அந்த கான்சரும்
வழிவகுத்து விட்டதாக அவர் சொல்கிறார்.
மரணம் அருகில்
இருக்கிறது என்று தெரியும் போது வாழ்க்கையின் அனாவசியங்களில் ஈடுபடாமல் ஒதுக்கி
விடுவதும் எது முக்கியம் என்று உணர்கிறோமோ அதில் முழு மனதுடன் ஈடுபடுவதும்
சுலபமாகிறது என்பது அவர் சொன்ன மூன்றாவது பாடம். மரணம் நிச்சயமானது, வாழ்க்கை
குறுகியது என்பதால் முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்புபவன் ஒவ்வொரு
நாளையும் வீணாக்காமல் இருக்க அவர் அறிவுறுத்துகிறார். அந்தக் குறுகிய வாழ்க்கையை
அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்காக வாழாமல் இருக்கும்படியும் இதயபூர்வமாக
உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாக வாழும்படியும் அவர் கூறுகிறார்.
(2005ல் இதை
அவர் குறிப்பிட்டாலும் அக்டோபர் 2011 வரை அவர் உயிர் வாழ்ந்தார். கடைசி நாட்களில்
எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்புக் குடும்பத்துடன் கழித்து
அமைதியாக உயிர் விட்டார்.)
வெற்றியை
பணத்தால் மட்டும் அளக்க முடியாது. மனம் விரும்பிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ
முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி. அப்படி வாழ முடிந்தவன் பணத்தை சம்பாதிக்க
முடியாது என்பது முட்டாள்தனம். மனம் விரும்பிய வாழ்க்கையுடன், பணத்தையும்,
வெற்றியையும் சேர்த்தே ஒருவன் பெற முடியும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு மிக நல்ல
உதாரணம். அப்படிப்பட்ட மனிதர் அன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களுக்கு சொன்ன
இந்த முப்பெரும் அறிவுரைகள் எக்காலத்திலும் எவருக்கும் ஏற்றுக் கொண்டு வாழத்தக்க
அறிவுரைகள். அதை நம் இதயத்திலும், கருத்திலும் ஏற்றுக் கொண்டு பலனடைவோமே!
-என்.கணேசன்
Subscribe to:
Posts (Atom)







