என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, November 23, 2026

ரட்சகன் 20

 


அக்‌ஷய்  முன்பே மறுக்கும் மனநிலையில் தான் வந்திருந்தான். ஆனால் நிர்ப்பயாவுக்கான உதவி என்று தெரிந்த பிறகு மறுக்க முடியாமல் அவனுக்குள் சிறு தயக்கம் ஏற்பட்டது. அவன் ஒன்றும் சொல்லாமல் யோசனையுடன் அமைச்சரைப் பார்த்தான்.

 

நிர்ப்பயாவுக்கு அவன் தயங்குவது தவறாகத் தெரியவில்லை. அவனை ஆபத்தில் ஈடுபடுத்தி, அவன் உயிரைப் பணயம் வைத்து, அவளுடைய கணவனைக் காப்பாற்ற அவர்கள் வைக்கும் கோரிக்கை நியாயமாக அவளுக்குத் தோன்றவில்லை. அப்படி நியாயமில்லாத கோரிக்கையை அவனிடம் வைக்கும் படியான நிலைமை வந்து விட்டதே என்று அவள் வருந்தினாள். அவன் மறுத்தாலும் அவள் அவனைத் தவறாக நினைக்க மாட்டாள். அவனுக்கும் குடும்பம் மனைவி, குழந்தைகள், இருக்கிறார்கள். அவளுடைய கண்ணீர் அவர்களுடைய கண்ணீராகவும் மாறுவது சரியல்ல….

 

நிர்ப்பயாவின் முகத்தில் தெரிந்த தர்மசங்கடம் அக்‌ஷயை நெகிழ வைத்தது. அவனால் அவளுடைய மனப்போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்சல்கானை விடுவித்தால் சமூகத்திற்கு விளைய முடிந்த கேடுகளைப் பற்றி யோசித்தவள், இப்போது அவன் இதில் ஈடுபட்டால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் வரக்கூடிய கஷ்டங்களையும் யோசிக்கிறாள் என்பதையும் அவனால் உணர முடிந்தது.

 

இந்தப் பெண்ணிற்கு உதவ முடியாமல் போவதை அவன் விரும்பவில்லை. நிர்ப்பயாவுக்கு உதவுவதை அவன் மனைவி சஹானாவும் வரவேற்பாள். அதற்கு மேல் அவன் யோசிக்கவில்லை. அவன் சொன்னான். “என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.”

 

அவள் கவலையுடன் கேட்டாள். “அவர்கள் நமக்கு அதிக அவகாசம் தர மாட்டார்கள். உடனே அவனை விடுவித்தால் தான் அவரை விடுவிப்பதாகவும் தாமதப்படுத்தினால் விரல்களை வெட்ட ஆரம்பித்து விடுவோம் என்றும் சொல்கிறார்களே?”

 

“கவலைப்படாதீர்கள். அதற்கு ஏற்ற மாதிரி திட்டம் போடுவோம்.”

 

அவன் சொன்னதைக் கேட்டு நிர்ப்பயாவின் கண்கள் நிறைந்தன. நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் அவள் கைகளைக் கூப்பினாள். அமைச்சர் வேண்டுகோள் விடுத்த போது யோசித்த அமானுஷ்யன் நிர்ப்பயாவைப் பார்த்த பின் தான் ஒத்துக் கொண்டான் என்பதை ராஜேஷ்வரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். நிர்ப்பயாவுக்காக அவன் ஒத்துக் கொள்ளக்கூடும் என்பதை உளவுத்துறைத் தலைவர் யூகித்துச் சொன்னது சரி தான். ராஜேஷ்வரும் அக்‌ஷயைப் பார்த்து நன்றியுடன் கைகூப்பினார்.    

 

அமைச்சர் மிகுந்த சினேகத்துடன் அக்‌ஷயின் தோளைத் தட்டிக் கொடுத்தார். “நீங்கள் உதவ ஒத்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே. இது நீங்கள் அவர்களுக்கு மட்டும் செய்யும் உதவியல்ல; எனக்கும், நாட்டுக்கும் கூடச் செய்யும் பேருதவியாக இருக்கும். இந்த விஷயத்தில் எப்போதும் எல்லா உதவியும் எங்கள் பக்கத்திலிருந்து உங்களுக்கு இருக்கும்.”

 

அமைச்சர் உளவுத்துறைத் தலைவரிடமும் சொன்னார். “இனி என்ன செய்வது எப்படி செய்வது என்பதை இவருடன் கலந்தாலோசியுங்கள். இவருக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுங்கள்.”

 

உளவுத்துறைத் தலைவர் தலையசைத்து விட்டு எழுந்தார். அவர் அக்‌ஷயைப் பார்க்க, அக்‌ஷயும் அவருடன் கிளம்பினான். செல்வதற்கு முன் அவன் நிர்ப்பயாவிடம் சொன்னான். “எனக்கு யுவராஜைப் பற்றி உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. அவரைப் பற்றி முழுமையாக நான் தெரிந்து கொண்டால் தான் அவரைத் தப்புவிக்க என்னால் சரியாகத் திட்டமிட முடியும்.”

 

ராஜேஷ்வர் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து அதன் பின்னால் தன்னுடைய தனி அலைபேசி எண்ணை எழுதித் தந்து விட்டுச் சொன்னார். ”நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டுக்கு வந்து நிர்ப்பயாவிடம் பேசலாம். நீங்கள் இருக்கும் இட\த்திலிருந்து அலைபேசியில் அழைத்துச் சொன்னால் போதும், உங்களை அழைத்துப் போகும் ஏற்பாட்டை நாங்கள் செய்கிறோம்.”

 

மூவரும் எழுந்து நின்று அக்‌ஷயை வழியனுப்பி வைத்தார்கள்.

 

உளவுத்துறைத் தலைவருடன்  காரில் செல்லும் போது அக்‌ஷய் அவரிடம் கேட்டான். “கடத்தல்காரர்கள் பேசிய அலைபேசி எண்ணை வைத்து எதாவது கண்டுபிடிக்க முடிந்ததா?”  

 

“அது போலி ஆவணங்களைத் தந்து பெற்ற அலைபேசி எண்ணாக இருக்கிறது. அதிலிருந்து இந்த ஒரே ஒரு அழைப்பு தான் போயிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் எதோ ஒரு எல்லைக் கிராமத்திலிருந்து பேசியிருக்கிறார்கள். கண்டிப்பாக அடுத்த அழைப்பு இதே போல் இன்னொரு போலி எண்ணிலிருந்து வரலாம்….”

 

அக்‌ஷய் கேட்டான். “அப்சல்கானின் இயக்கம் எங்கெல்லாம் இருக்கிறது?”

 

“அதிகமாக இருப்பது பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தான். அடுத்தபடியாக இந்தியாவில். ஈரான், துருக்கி, சிரியாவிலும் அந்த இயக்கத்து ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும் அது எண்ணிக்கையில் குறைவு தான்….”

 

“இந்தியாவில் எங்கே அதிகம்?”

 

“இங்கே அது தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தாலும் ஸ்லீப்பர் செல்களாக கணிசமான ஆட்கள் இருக்கிறார்கள். காஷ்மீரில் அதிகம். அடுத்தபடியாக மும்பையிலும், குஜராத்திலும் கூட இருக்கிறார்கள்….. யுவராஜை அவர்கள் எங்கே எப்படிக் கடத்திக் கொண்டு போய் வைத்திருப்பார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா அக்‌ஷய்?”

 

அக்‌ஷய் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான்.  ”கண்டிப்பாக இந்தியாவுக்குள் வைத்திருக்க வாய்ப்பில்லை. கடத்தியவுடனேயே யுவராஜை இங்கிருந்து கொண்டு போயிருப்பார்கள். விமானத்தில் கடத்துவதற்கு வாய்ப்பில்லை என்பதால் படகிலோ, கப்பலிலோ அவரைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம்.  பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ கடத்திக் கொண்டு போயிருக்க தான் வாய்ப்புகள் அதிகம்…  ஏனென்றால் அந்த இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் அவர்களை மறைமுகமாக ஆதரிக்கின்றன. கடல்வழியாகக் கடத்தல் நடத்தியிருக்கலாம் என்பதால் மும்பையிலிருந்து கராச்சி வழியாக யுவராஜைக் கடத்திக் கொண்டு போயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

 

உளவுத்துறைத் தலைவருக்கு அவனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அவருடைய உளவுத்துறை ஆட்கள் இரண்டு நாட்களாக ஆலோசித்து எட்டிய முடிவை அவன் இரண்டு நிமிடங்களில் எட்டி விட்டான். அமானுஷ்யன் என்ற பெயர் சும்மா வந்ததில்லை என்பது அவருக்கு நேரடியாகவே விளங்கி விட்டது.  

 

அவர் சொன்னார். “எங்கள் உளவுத்துறையும் அப்படித் தான் நினைக்கிறது. எங்கள் ஒற்றர்கள் உத்தேசமாகவாவது யுவராஜை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஓரிரண்டு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள்.  எனக்கு ஒரு சந்தேகம். ஏன் சிரியா ஈரான் துருக்கி போன்ற நாடுகளுக்கு யுவராஜைக் கொண்டு போயிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கவில்லை. அந்த நாடுகளும் கூட அவர்களுடைய இயக்கத்துக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.”

 

“அவர்கள் சொன்னபடி நாம் அப்சல்கானை அவர்களிடம் விடுவித்தால் அவர்களும் யுவராஜை நம்மிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா? அதனால் அருகிலிருக்கும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை விட்டு அதை விட அதிக தூரத்திற்கு யுவராஜைக் கொண்டு போயிருக்கும் வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.”

 

அவன் மிகக்குறுகிய காலத்தில் தெளிவாகப் புரிந்து கொள்கிறான். அவனிடம் குழப்பங்களோ, அரைகுறை அனுமானங்களோ இல்லை. உளவுத்துறைத் தலைவருக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது. அவர் திகார் சிறைக்குச் சென்று அறிந்து வந்த தகவலை அவனிடம் சொன்னார். கடத்தும் ஆலோசனையே அப்சல்கானிடம் இருந்து தான் இயக்கத்தினருக்குப் போய் இருக்கிறது என்ற தகவல் அக்‌ஷயையும் ஆச்சரியப்படுத்தியது.

 

”அவனுடைய வக்கீல் அவனுடைய இயக்கத்து ஆளா?”

 

“அவர் எந்த இயக்கத்திலும், கட்சியிலும் இல்லை. பணம் அதிகமாகக் கிடைத்தால்  அவர் சைத்தானுக்காகக் கூட வாதாடுவார். பலரும் எடுக்கத் தயங்கும் மோசமான குற்றவாளிகளின் வழக்குகளை எந்த விதமான சங்கோஜமும் இல்லாமல் அவர் வாதாட எடுத்துக் கொள்வதால் அவருக்கு  சுப்ரீம் கோர்ட்டில் நல்ல பெயர் இல்லை. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதுமில்லை.”

 

“எனக்கு    அந்த இயக்கத்தைப் பற்றியும் அப்சல்கானைப்  பற்றியும் எல்லா விவரங்களும் வேண்டும் சார். அதை முழுவதுமாகத் தெரிந்து கொண்டால் தான் நாம் இனி என்ன செய்யலாம் என்று திட்டமிட முடியும்.”

 

“நாளைக்கே அனுப்பி வைக்கிறேன்.

 

 

ராஜேஷ்வருக்கு கடத்தல்காரர்களின் அழைப்பு வேறொரு புதிய எண்ணிலிருந்து மறுநாள் இரவு வந்தது. சுற்றி வளைக்காமல் முதல் கேள்வி வந்தது. “என்ன முடிவெடுத்தீர்கள்?”

 

“அப்சல்கானை உங்களிடம் ஒப்படைக்க உள்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.”

 

“நல்லது. எப்போது ஒப்படைக்கிறீர்கள்?”

 

“இதை அரசாங்கம் வெளிப்படையாகச் செய்ய முடியாது என்பதால் ஏதாவது ஒரு நாடகம் அரங்கேற்றித் தான் செய்ய வேண்டியிருக்கும் என்றார். அதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறார். யோசித்துச் சொல்வதாகச் சொல்லி இருக்கிறார். ஏனென்றால் தவறு எதாவது ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை பூதாகரமாக்கி ஆதாயம் தேட முற்பட்டு விடும் என்கிறார்.”

 

“அரசியல்வாதிகள் கேட்கும் கால அவகாசத்தை நம்மால் நம்ப முடியாது ராஜேஷ்வர். அவர்களுடைய லாபத்திற்காக அவர்கள் விரைந்து முடிவெடுத்து வேகமாக இயங்குவார்கள். மற்றதற்கு மட்டும் தான் அவர்கள் கால அவகாசம் கேட்பார்கள்.  காலவரையில்லாமல் கால அவகாசம் எங்களால் தர முடியாது.”

 

“நானும் விரைவாக முடிவெடுத்துச் சொல்லும்படி அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்திற்குள் என்ன திட்டம் என்று சொல்வதாக அவர் சொல்லியிருக்கிறார். அதனால் ஒரு வாரம் பொறுங்கள்.”

 

“ஒரு வாரமெல்லாம் பொறுத்திருக்க முடியாது.  அதிக பட்சமாக நான்கு நாட்கள் தருகிறோம். அதற்குள் எங்களுக்குத் தெளிவான பதில் வேண்டும். அதற்கு மேலும் கால அவகாசம் கேட்டால் எங்களால் தர முடியாது.””

 

“சரி நான் உடனே அமைச்சரிடம் பேசுகிறேன். நான்கு நாட்களுக்குள் ஒரு முடிவெடுக்கச் சொல்கிறேன்.”

 

“நல்லது. எங்களிடம் பேசிக்கொண்டே போலீஸையும் நீங்கள் முடுக்கி விடவில்லை அல்லவா?”

 

“கண்டிப்பாக இல்லை. இன்று காலை கூட டி.ஜி.பி என்னிடம் தொடர்பு கொண்டு ஏதாவது தகவல் இருக்கிறதா என்று கேட்டார். நான் இல்லை என்று சொல்லி விட்டேன்.”

 

“சரி” தொடர்பு துண்டிக்கப்பட்டது.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, November 19, 2026

சதுரங்கம் 45

 


நன்றாக யோசித்த போது அந்த ஆள் தொலைபேசி எண்ணை மாற்றி இருக்க வாய்ப்பில்லை என்பது விமலுக்குப் புரிந்தது. அந்த ஆள் தொலைபேசி எண்ணை மாற்றியிருந்தால், ‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்ற அறிவிப்பு தான் வந்திருக்கும். முக்கியமான ஏதாவது வேலையிலோ, நிகழ்விலோ அந்த ஆள் இருந்திருப்பார். அதனால் தான் ‘ஸ்விட்ச்டு ஆஃப்’ செய்து வைத்திருப்பார்.

 

மார்க்கெட் பகுதியை அடுத்து இருக்கும் ஒரு பூங்காவிற்குச் சென்று அமர்ந்த விமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்தில் சிசிடிவி காமிரா ஏதாவது இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்தான். நல்ல வேளையாக எதுவும் இருக்கவில்லை. அவனுக்கு மிக அருகிலும் ஆட்கள் இல்லை. சற்று தள்ளி இருந்த புல்வெளியில் இரண்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுமார் ஐந்தாறு வயதுச் சிறுவர்கள் இருவர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணிகள் ஏதோ மிக சுவாரசியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால் அவன் சற்று தள்ளி உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்ததைக் கூடக் கவனிக்கவில்லை. அவர்கள் எந்த மொழியில் பேசிக் கொள்கிறார்கள் என்று அவன் கவனித்தான். அது ஹிந்தி தான். தமிழ் அல்ல.

 

விமல் திருப்தியடைந்தான். ஒருவேளை அவன் பேச்சை அவர்கள் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரிய வாய்ப்பு குறைவு. ஆனாலும் அவன் அவர்கள் காதில் விழும்படி பேசப்போவதில்லை. மறுபடி அலைபேசியை எடுத்து கொலையாளியை அவன் அழைத்தான். இப்போது அலைபேசி அடித்தது. விமலின் இதயம் மிகவும் சத்தத்துடன் துடிக்க ஆரம்பித்தது.

 

மறுமுனையில் அலைபேசி எடுக்கப்பட்டாலும் ‘ஹலோ’ என்னும் வார்த்தை கூடக் கேட்கவில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் வந்து விமல் தன் அலைபேசியை உற்றுப் பார்த்தான். இணைப்பில் தான் இருக்கிறான்….

 

“ஹலோ நான் விமல் பேசறேன் சார்” என்றான் விமல். அதற்கும் பதில் இல்லை. விமலுக்கு இதயத்துடிப்பு கூடுதல் வேகம் எடுத்தது. ஆனாலும் கூடுமான வரை தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு, அவன் பல முறை ஒத்திகை பார்த்திருந்ததைச் சொன்னான்.

 

“நர்மதா சொன்ன வீடியோவோட காப்பி என் கிட்ட இருக்கு. எனக்குப் பணம் வேணும்….”

 

அதற்கும் எந்தப் பதில் பேச்சும் மறுமுனையிலிருந்து வரவில்லை. விமல் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. பயமும், கோபமும் மாறி மாறி அவனுக்குள் எழுந்து முடிவில் கோபமே மேலோங்கி நின்றது. ‘இந்த ஆள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்!

 

விமல் கோபத்தை முடிந்தவரையில் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான். “ஏன் ஒன்னுமே பேசமாட்டேங்கறீங்க?”

 

அதற்கும் மறுமுனையில் இருந்து பதில் இல்லை. அவன் சொன்னான். “உங்களுக்கு அந்த வீடியோவை என்கிட்ட இருந்து வாங்கிக்க ஆர்வம் இல்லாட்டி பரவாயில்லை. அதை நான் உங்க எதிர்க்கட்சிக்காரங்க கிட்ட கூட வித்துடலாம். அவங்களும் நான் கேட்கற பணம் தருவாங்க.”

 

முதல் முறையாக குரல் கேட்டது. “பாரு. இப்ப இருக்கற தொழில் நுட்பத்துல எந்த வீடியோலயும் யாரை வேணும்னா மார்பிங் செஞ்சுக்கலாம். அது மக்களுக்கும் தெரியும்.”

 

விமல் அந்த ஆளின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்தான். எதையும் ’மார்பிங் செய்த வீடியோ’ என்று என்னால் சொல்ல முடியும். அதையும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று அந்த ஆள் சொல்லாமல் சொல்கிறார்.

 

“எதிர்க்கட்சிக்காரங்க அதை ஒரிஜினல்னு நிரூபிச்சுக்குவாங்க. அப்படின்னா அவங்களுக்கே வித்துடவா?”

 

“எவ்வளவு வேணும் உனக்கு?”

 

“ஏழு கோடி”

 

”அவள் கூட அவ்வளவு கேட்கலை”

 

“அவள் ஏற்கெனவே பெரிய பணக்காரி. சொத்தும் நிறைய இருக்கு. நான் ஒன்னுமில்லாதவன். உங்களுக்கு இந்தக் காசு பிச்சைக்காசு. கடல்ல இருந்து ஒரு குடம் எடுத்த மாதிரி தான் இது. எந்தக் குறைவும் உங்களுக்கு வந்துடாது. நீங்க நர்மதாவுக்கே பணம் கொடுத்திருக்கலாம். அவளைக் கொன்றிருக்க வேண்டிய அவசியமே உங்களுக்கிருக்கலை.”

 

“ஏன் இப்படி அபாண்டமாய் பொய் சொல்றே. அவள் செத்தது தற்கொலை இல்லைன்னா நீ தான் அவளைக் கொலை செஞ்சிருக்கணும்னு நினைக்கிறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க. அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தற மாதிரி நீ தலைமறைவாயிட்டே. தப்பு செய்யாதவன் ஏன் தலைமறைவாகணும்.”

 

விமலுக்கு ரத்தம் கொதித்தது. நர்மதாவைக் கொன்று விட்டு எவ்வளவு சாமர்த்தியமாக இவன் அவனைக் குற்றம் சாட்டுகிறான். பின் தான் ஒரு உண்மை உறைத்தது. இந்தப் பேச்சையும் விமல் பதிவு செய்து கொண்டிருக்கலாம் என்று அந்த ஆள் நினைத்திருக்கலாம். அதனால் தான் கவனமாகப் பேசுகிறான். 

 

“நான் தப்பு செஞ்சுட்டேன். உங்களுக்கு போன் செய்யறதுக்குப் பதிலா எதிர்க்கட்சி ஆளுங்களுக்குப் போன் செஞ்சிருக்கணும். பரவாயில்லை. இனி அவங்க கிட்டயே பேசிக்கறேன்.”

 

“உனக்கு பணம் கொடுத்தேன்னா நீ மறுபடி மறுபடி கேட்க மாட்டேன்னு என்ன உத்தரவாதம் இருக்கு?”

 

“சார் சத்தியமாய் நான் இந்த ஒரு தடவை தான் கேட்பேன். அதனால தான் ஒரேயடியாய் ஏழு கேட்கறேன். நீங்க தர்ற பணத்துல நான் கடைசி வரைக்கும் தான் வாழ்ந்தாகணும். அதனால தான் கேட்கறேன். ஒரு பொருளுக்கு ஒரு தடவை காசு வாங்கறது நியாயம் .அதுக்கே திரும்பத் திரும்ப கேட்டு உங்களைத் தொந்தரவு செஞ்சா அது அராஜகம். அப்படி செஞ்சா நீங்க என்னைச் சுலபமா தீர்த்துக் கட்டிட முடியும். நான் தனி மனுஷன். எனக்கு எந்த செல்வாக்கோ, ஆள் பலமோ இல்லை. அதை நான் புரிஞ்சு தான் வெச்சிருக்கேன். அதனால பேராசைப்பட்டு உங்களைப் பகைச்சுக்க மாட்டேன்.”

 

“நீ அதையே இன்னொரு காப்பி எடுத்து இப்போ என் கிட்ட பேசின பேரத்தையே நீ முதல்ல சொன்ன மாதிரி மற்றவங்க கிட்டேயும் பேச மாட்டாய்னு என்ன நிச்சயம்?”

 

”அதான் நான் சொன்னேனே. . நீங்களாவது எதையும் சொல்லி அரசியல்ல எப்படியும் தாக்குப் பிடிச்சுக்க முடியலாம். ஆனால் உங்களை ஏமாற்றி நான் பிழைச்சிருக்க வழி இல்லை.”

 

“சரி பணத்தை எப்போ எப்படித் தர்றது?”

 

“நானே போன் செஞ்சு சொல்றேன். ஆனால் ஒன்னு, நான் கண்டிப்பாய் உங்களை ஏமாற்ற மாட்டேன். நீங்க என்னை ஏமாற்ற திட்டம் போட்டு என்னைப் பிடிக்கவோ கொல்லவோ நினைக்கறது எனக்குத் தெரிய வந்தால், அந்த வீடியோ எங்கே போகணுமோ அங்கே போய்ச் சேர்ந்துடும். அது மட்டும் நிச்சயம்.”

 

“உனக்கு நானும் அதையே சொல்றேன். ஒரு வேளை நீ ஏமாற்றப் போகிறாய்னு எனக்குத் தெரிஞ்சா அதுக்கு நீ தர்ற விலை நீ தாங்க முடியாததாய் இருக்கும். இனி எப்போ போன் செய்வாய்?”

 

“ஒரு வாரத்துல போன் செய்யறேன்” என்று சொன்ன விமல் இணைப்பைத் துண்டித்தான்.

 

இப்போதும் அந்தப் பெண்மணிகள் பேசிக் கொண்டு தானிருந்தார்கள். சிறுவர்கள் ஆடிக் கொண்டுதானிருந்தார்கள். யாரும் அவனை உற்றுக் கவனித்ததாய்த் தெரியவில்லை. அவன் எழுந்து மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  சொன்னபடி நர்மதாவின் கொலையாளி பணத்தைக் கொடுத்து வீடியோவை வாங்கிச் செல்வானா, இல்லை பொறி வைத்து அவனைப் பிடிக்க முற்படுவானா என்று தெரியவில்லை. கிடைக்கப் போவது ஏழு கோடியா, இல்லை மரணமா என்றும் தெரியவில்லை. சரியாகத் தான் இதைக் கையாண்டிருக்கின்றானா என்றும் தெரியவில்லை.  மெட்ரோ ரயிலில் செல்லும் போதும், ஓரிடத்தில் இறங்கி அங்கிருந்த ஓட்டலில் அவனுக்குப் பிடித்த அசைவ உணவைத் திருப்தியாகச் சாப்பிட்ட போதும், சாப்பிட்டு முடித்து விட்டு பேருந்தில் அவன் ரிஷிகேசத்திற்குச் சென்று கொண்டிருந்த போதும் அவன் மனதின் ஒரு பகுதி ‘இனி என்ன நடக்கும்?’ என்று கவலைப்பட்டது. அவன் மனதின் இன்னொரு பகுதி ஏழு கோடி பணத்தை எங்கே எப்படி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தது. 


(தொடரும்)

என்.கணேசன்




Monday, November 16, 2026

ரட்சகன் 19

 


உளவுத்துறைத் தலைவர் உள்துறை அமைச்சருக்கு அமானுஷ்யன் நாளை மாலை நான்கு மணி அளவில் வருவதைத் தெரிவித்து விட்டுச் சொன்னார். “அமானுஷ்யனை உங்கள் அலுவலகத்திலோ, வீட்டிலோ சந்திப்பதை விட வேறு எங்காவது சந்திப்பது நல்லது என்று நினைக்கிறேன்.  ராஜேஷ்வர்ஜியும் அவருடைய மகளுடன் ரகசியமாய் அங்கே வருவது நல்லது.”

 

உள்துறை அமைச்சர் யோசித்து வேறு ஒரு நண்பரின் பெயரில் இருக்கும் அவருடைய ரகசிய பங்களா ஒன்றில் இந்த சந்திப்பை வைத்துக் கொள்ள முடிவு செய்து அதை உளவுத்துறைத் தலைவரிடம் தெரிவித்தார். அத்தகவல் ராஜேஷ்வருக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது.

 

ராஜேஷ்வர் தன் மகளுடன் தனி விமானத்தில் தான் டெல்லிக்குச் சென்றார் என்றாலும் வீட்டிலிருந்து விமான தளத்திற்கும், டெல்லி விமான நிலையத்திலிருந்து உள்துறை அமைச்சர் சொல்லியிருந்த ரகசிய பங்களாவுக்கும், வழக்கமான உயர்ரகக் கார்களில் செல்லாமல் அவர்கள் இருவரும் சாதாரண கார்களில் சென்றார்கள். எப்போதும் உடன் செல்லும் பாதுகாவல் வீரர்களும் பாதியாகக் குறைக்கப்பட்டார்கள். உடன் சென்ற பாதுகாவல் வீரர்களும்  சீருடையில் இல்லாமல் சாதாரண உடைகளில் இருந்தார்கள். ராஜேஷ்வர் தன்னுடைய இந்தப் பயணம் ஊடகங்களில் செய்தியாக வர விரும்பவில்லை.

 

ராஜேஷ்வர் நிர்ப்பயாவிடம் அமானுஷ்யனைப் பற்றிச் சொன்ன தகவல்கள் அவளுக்குப் பிரமிக்கும்படியாக இருந்தன. அவள் மனதிலும் ஒரு நம்பிக்கைக் கீற்று பிறந்தது. ராஜேஷ்வர் மகளை நிறைய நம்ப வைத்து பின் அவள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்பதற்காக அமானுஷ்யன் அவர்கள் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் அவளிடம் தெரிவிக்க நினைத்தார். அவனுடைய குடும்பத்தினர் இதுபோன்ற  ஆபத்தான வேலைகளில் இனி ஈடுபட வேண்டாம் என்று தடுப்பதால் அவன் இதற்கு முன் சில வேலைகளை மறுத்திருக்கிறான் என்பதையும் அவளிடம் தயக்கத்துடன் அவர் தெரிவித்த போது அவளுக்கு அமானுஷ்யனின் குடும்பத்தார் மீது குறை காண முடியவில்லை. அவரவர் பாதுகாப்பு அவரவருக்கு முக்கியமே அல்லவா? ஒருவிதத்தில் அவளுடைய கணவனின் உயிரைக் காப்பாற்ற அமானுஷ்யனை ஆபத்திற்கு உள்ளாக்குவது கூட அவளுக்குத் தவறாகவே தோன்றியது. ’இதுவும் சுயநலமே அல்லவா?’ என்று அவளுடைய மனசாட்சி உறுத்தினாலும் அவளுக்கு கணவனைக் காப்பாற்ற வேறு வழி எதுவும் தெரியவில்லை.

 

அக்‌ஷய் உளவுத்துறை அலுவலகமல்லாமல் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு தனி பங்களாவுக்குச்  செல்ல வேண்டியிருக்கும் என்றோ, அங்கே உள்துறை அமைச்சரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. உள்துறை அமைச்சர் உள்ளே இருக்கிறார் என்பதற்கான அறிகுறியே வெளியே தெரியவில்லை. உள்ளே சென்ற பிறகு தான் அவரை அவன் பார்த்து திகைத்தான். அவருடன் வேறு ஒரு நபரும் இருந்தார். முதலில் அவர் தன்னை உளவுத்துறைத் தலைவராக அறிமுகம் செய்து கொண்டார். அவரை அவன் இதற்கு முன் பார்த்ததில்லை. சில வேண்டுகோள்களுக்காகவும், ஆலோசனைக்காகவும் இதுவரை உளவுத்துறையிலிருந்து வேறு அதிகாரிகள் தான் தான் அவனிடம் பேச வந்திருக்கிறார்கள்.

 

இந்த உள்துறை அமைச்சரையும் அவன் சந்திப்பது முதல் முறை தான் என்றாலும், அவர் அவனை நீண்ட கால நண்பனை வரவேற்பது போல் அன்பாக வரவேற்று உட்கார வைத்தார். அவர் அவனை நலம் விசாரித்துக் கொண்டு இருக்கையில் தான் ராஜேஷ்வரும், நிர்ப்பயாவும் உள்ளே வந்தார்கள்.

 

ராஜேஷ்வரை அங்கு பார்ப்பது அக்‌ஷய்க்கு அடுத்த திகைப்பாய் இருந்தது. அமைச்சர் அவனுக்கு அவர்கள் இருவரையும், அவர்களிருவருக்கு அவனையும் அறிமுகம் செய்து வைத்தார். உலகப் பணக்காரர்களில் ஒருவரும், நாட்டின் முதல் பணக்காரருமான ராஜேஷ்வரை யாரும் அறிமுகம் செய்து வைக்க வேண்டியதில்லை. அக்‌ஷய் அவருக்கு மரியாதையாய் வணக்கம் தெரிவித்தான். அவனுடைய கவனம் நிர்ப்பயா மீது தங்கியது.

 

இரண்டு வாரங்களுக்கு முன் உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் அவளைப் பற்றிய கட்டுரையைப் படித்து அவனுடைய மனைவி சஹானா மிகவும் சிலாகித்ததோடு அந்தக் கட்டுரையை அவனையும் படிக்க வைத்திருக்கிறாள். காதலுக்காக அரச பதவியைத் துறந்த இங்கிலாந்து மன்னர் எட்வர்டுக்கு இணையாக அவள் நிர்ப்பயாவைப் புகழ்ந்து சொல்லியிருக்கிறாள்.

 

“தியாகம்னு கூட இதைச் சொல்ல முடியாது அக்‌ஷய். தன்னோட வாழ்க்கையை, தான் விரும்பிய விதத்தில் வாழும் தைரியமாகத் தான் இதைச் சொல்லணும். அதுவும் சில பேர் மாதிரி தான்தோன்றித் தனமாக வாழ ஆசைப்படாமல் ஒரு உன்னதமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு அப்படியே வாழ்ந்து காட்ட எத்தனை பேரால முடியும் அக்‌ஷய்?”

 

மனைவி சிலாகித்துச் சொன்னது சரியாகத் தான் அக்‌ஷய்க்கும் தோன்றி இருக்கிறது. ஆனால் சில நாட்களுக்குள் நிர்ப்பயாவின் கணவன் யுவராஜ் காணாமல் போன செய்தி வந்தது. அது சஹானாவுக்கும் அக்‌ஷய்க்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 

சஹானா வருத்தத்துடன் அவனிடம் சொன்னாள். “கடவுள் ஏன் நல்லவங்களை இப்படி சோதிக்கிறார்? அந்தப் பொண்ணு சொத்து வேண்டாம், பணம் வேண்டாம்னு சொல்லி எளிமையான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாய் இருந்தால், அதற்கும் இப்படி ஒரு தடங்கலா? என்ன நடந்திருக்கும்னு நினைக்கறீங்க?”

 

அவனுக்கும் யுவராஜ் காணாமல் போனது வருத்தமாகத் தான் இருந்தது. “யுவராஜ் கைது பண்ணின ஆட்கள்ல யாராவது அவனை கடத்தியிருக்கலாம்.” என்று அன்றைக்கு அவன் மனைவியிடம் சொன்னான். ஆனால் இன்றைக்கு அவனை வரவழைத்த உளவுத்துறைத் தலைவரோடு உள்துறை அமைச்சர், ராஜேஷ்வர்,  நிர்ப்பயா ஆகியோரும் சேர்ந்து கொண்டது அவன் நினைத்த அளவு எளிமையானதாக அந்தக் கடத்தல் இல்லை என்பதை அக்‌ஷய்க்குப் புரிய வைத்தது. முன்பே அவன் அனுமானித்தது போல பிரச்சினை பெரிதாக இல்லாமல் அவனை அங்கே அவர்கள் வரவழைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மகளின் பிரச்சினையான நேரத்தில் கௌரவம் பார்க்காமல் ராஜேஷ்வர் மகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. எத்தனையோ பேர் அவர்களுடைய வரட்டு கௌரவத்தால் குடும்பத்தினரைக் கஷ்டப்படுத்துவதை அக்‌ஷய் பார்த்திருக்கிறான். இந்த மனிதர் அந்த அளவு மோசமில்லை…

 

நிர்ப்பயாவும் அக்‌ஷயை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தனை திறமை வாய்ந்தவன் பார்க்க சாதாரணமாகத் தோற்றமளிப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சுமார் ஐம்பது வயதை அவன் எட்டியிருக்கக்கூடும் என்றாலும், தலைமுடிகளில் அங்குமிங்கும் சில நரைமுடிகளும் இருந்தாலும் இளமையாகவே அவன் தெரிந்தான். அவனைக் கூர்ந்து பார்த்த போது அவனிடம் ஒருவித அசாத்திய அமைதியும், மிகக் கூர்மையான பார்வையும்  இருப்பதை அவளால் கவனிக்க முடிந்தது. எதுவும் அவனை அசைத்து விட முடியாது போலத் தோன்றியது. அவள் அவனைக் கூர்ந்து பார்ப்பதைப் பார்த்து அவன் சினேகத்துடன் முறுவலித்தான். ஒரு சிறிய புன்னகை அவனை அழகானவனாக்கியது. சினேகத்துடன் புன்னகை பூத்தவனிடம் ஆபத்தானதொரு உதவியைக் கேட்க வந்திருப்பது அவளை உறுத்தியது. அவளும் அவனைப் பார்த்து சோகமாகப் புன்னகைத்தாள்.

 

அக்‌ஷயிடம் உள்துறை அமைச்சர் தான் பேச ஆரம்பித்தார். ராஜேஷ்வருக்குக் கடத்தல்காரர்கள் போன் செய்ததைச் சொன்னார். மிகவும் பழகிய நண்பனிடம் மனம் திறந்து சொல்வது போல், அப்சல்கானை விடுவித்து யுவராஜை மீட்க அவர் தயாராக இருந்ததைப் பற்றியும் சொன்னார். சாதாரண சமயங்களில் இந்த மனிதரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கக் கூட பல மாதங்கள் காத்து இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்ட அக்‌ஷய்க்கு அவர் போன்ற அரசியல் தலைவர்கள் காலத்திற்கேற்ப எப்படியும் மாறுவதை எப்படி அனாயாசமாகச் செய்கிறார்கள் என்ற பிரமிப்பு மேலிட்டது. பேசிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் அவர்களுக்கு இது அவனுடனான முதல் சந்திப்பு என்று சொல்லவே முடியாது.

 

ஆனால் அடுத்ததாக அவர் நிர்ப்பயா அப்சல்கானை விடுவிக்க ஒத்துக் கொள்ளாமல் காரணத்தோடு மறுத்ததைச் சொன்ன போது கூடுதல் பிரமிப்பு ஏற்பட்டது. மனிதர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் கூட சொந்த காரியங்கள் என்று வரும் போது தங்கள் லாபங்களிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பதை அவன் எப்போதும் கண்டு வருகிறான். மற்ற சமயங்களில் அவர்கள் பேசும் நியாயம், அவர்களுடைய சொந்தக் காரியங்கள் ஆக வேண்டியிருக்கையில் காணாமல் போய், சுயநலமும், சுயலாபமுமே பிரதானமாய் மேலோங்குவதையும், அதனால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களைக் காணவும் மறுக்கும்  மனநிலை இயல்பாக இருப்பதையும் அவன் பார்த்திருக்கிறான். முதல் முறையாக வித்தியாசப்படும் அந்தப் பெண்ணை அவன் உண்மையிலேயே மதித்தான்.

 

அமைச்சர் தொடர்ந்து சொன்னார். “அப்சல்கானை விடுவிக்காமலும் யுவராஜைக் காப்பாற்ற முடியுமா என்று நிர்ப்பயா கேட்ட போது, எங்களுக்கு உங்கள் நினைவு வந்தது. சாதாரணமாக யாராலும் முடியாது என்று நினைத்த எத்தனையோ வேலைகள் உங்களால் முடிந்திருக்கின்றன. தீவிரவாதிகளை நீங்கள் அனாயாசமாக இதற்கு முன்பும் சமாளித்திருக்கிறீர்கள். மைத்திரேய புத்தரை சீனாவிலிருந்து இரண்டு முறை காப்பாற்றி இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்…. நீங்கள் மனது வைத்தால் யுவராஜையும் உங்களால் காப்பாற்ற முடியும் என்பது அடியேனின் நம்பிக்கை...”


(தொடரும்)

என்.கணேசன்



https://nganeshanbooks.blogspot.com/2026/11/16112026.html

Thursday, November 12, 2026

சதுரங்கம் 44

 




அலெக்ஸ் சொன்னார். “சிந்திக்கத் தெரிஞ்சவங்களும், அறிவாளிகளும் உங்கப்பாவை தீவிரமாகவே ஆதரிக்கறதைப் பார்க்க முடியுது அர்ஜுன்”

 

“ஆனா அந்த மாதிரி ஆள்க ஓட்டுப்போடப் போவாங்களாங்கறதே கேள்விக்குறி தானே சார்?”

 

“உண்மை தான். ஆனா இப்ப சமீப காலமாய் கொஞ்சம் மாற்றம் தெரிய ஆரம்பிச்சிருக்கு அர்ஜுன். குறிப்பாய் கடந்த ரெண்டு வருஷமாய் உங்கப்பா கட்சியைப் பலரும் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. கிட்டத்தட்ட எல்லாருமே அவர் நேர்மையானவர்னு ஆணித்தரமாய் நம்பறாங்க.”

 

“அப்படி கவனிக்கறதும், நம்பறதும் ஓட்டாய் மாற வாய்ப்பிருக்கா?”

 

அலெக்ஸ் சொன்னார். “அது கேள்விக்குறி தான். போன தடவை ஐம்பது தொகுதிகள்ல உங்கப்பா கட்சி மூனாவது இடத்துல இருந்துச்சுன்னா, இப்பவே தேர்தல் வெச்சா எண்பது தொகுதிகள்ல மூனாவது இடத்துக்கு வரும். உங்கப்பா நிக்கற தொகுதியில் அவர் ஜெயிக்க வாய்ப்பிருக்கு. அவ்வளவு தான் சொல்ல முடியும்.”

 

அப்பா நிற்கும் தொகுதியில் அவர் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது என்பதும், முப்பது கூடுதல் தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதும் அர்ஜுனுக்குப் பெரிய சந்தோஷப்படும் தகவலாகத் தெரியவில்லை. அதை அவன் முகபாவனையில் இருந்தே அலெக்ஸ் புரிந்து கொண்டார்.  

 

அலெக்ஸ் சொன்னார். “உங்கப்பா, உன் தாத்தா பெயரைக் கூட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அளவுக்குப் பயன்படுத்தறதில்லை. பணத்தையோ, செல்வாக்கு இருக்கற ஆள்களையோ கூட அவர் பயன்படுத்தறதில்லை, அர்ஜுன். அப்படியிருந்தும் கூட இந்த அளவு முன்னேறியிருக்கறது லேசுப்பட்ட விஷயமல்ல. இதை நான் அவர் உன் அப்பாங்கறதுக்காகச் சொல்லலை. நிஜமாவே இது அலட்சியமாய் நினைக்கற விஷயமில்லை…”

 

அர்ஜுனுக்கு சித்தப்பா சொன்ன மதிப்பெண் உதாரணம் நினைவுக்கு வந்தது. அதனால் அவனால் அலெக்ஸ் சொன்னதை அலட்சியமாகத் தான் நினைக்க முடிந்தது.

 

ராஜாராமின் தனிபட்ட அலைபேசி இசைத்தது. பெயரைப் பார்த்து விட்டு அவர் உடனே எடுத்துப் பேசினார். அவரை அழைத்திருக்கும் நபர் இன்ஸ்பெக்டர் மதுசூதன் சொன்ன தகவல்களை அப்படியே அவரிடம் சொன்னார். ”…. உங்கண்ணா பையன்கிறதால தான் உங்களுக்குத் தெரிவிக்கறது முக்கியம்னு சொல்றேன்.”

 

ராஜாராம் அமைதியாகச் சொன்னார். “அர்ஜுன் ஒரு தனி மனுஷன். அவன் தன் வேலையைச் செய்யறான். தனி மனுஷனான அவன் மாதிரியே, போலீஸும் அவங்களுக்குக் கொடுத்திருக்கிற வேலையை ஒழுங்காய் செஞ்சா நாம பயப்படவே தேவையில்லை. முதல்ல நம்ம போலீஸ் கிட்ட விமலைக் கண்டுபிடிக்கச் சொல்லு.”

 

“அதுல போலீஸ் திவிரமாய் தான் இருக்காங்க. அவன் அக்கவுண்ட்ல இருக்கற பணத்தைக்கூட பயன்படுத்தாம ரொம்ப எச்சரிக்கையாய் இருக்கான். எல்லா மாநில போலீஸுக்கும் தகவல் அனுப்பிச்சு அவனைப் பிடிக்கறது பெரிய விஷயமில்லை. ஆனால் நாமளே இந்த விஷயத்தை விளம்பரப் படுத்தற மாதிரியாகிடும்னு தான் அதைச் செய்யாமலிருக்கோம். அதனால தான் அவன் பதுங்கியிருக்கிற இடத்தை நம்மால இன்னும் கண்டுபிடிக்க முடியல.”

 

“அவன் பதுங்கியே கடைசி வரைக்கும் இருந்துட்டா பிரச்சனை இல்லை. ஆனா வெளிய வர அவன் தீர்மானிச்சா தான் பெரிய பிரச்சனை. அதை மறந்துடாதே”

 

 

காத்திருப்பது எல்லோருக்கும் முடிந்த காரியம் அல்ல. காரணம், காத்திருக்கும் போது ஒவ்வொரு கணமும் கணக்கிடப்படுகிறது. மறுபடி, மறுபடி காத்திருக்க வேண்டியிருக்கும் போது ஒவ்வொரு கணமும், தாங்க முடியாத கனமாகி விடுகிறது. ’எத்தனை தான் காத்திருப்பது? காத்திருந்தது போதும், ஏதாவது செய், இந்த நிலைமையிலிருந்து தப்பித்துக் கொள்,’ என்று மண்டைக்குள் ஒலிக்கும் ஒலியின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. பின் வேறெதையும் அது யோசிக்க விடுவதில்லை, செய்ய விடுவதில்லை. பின் காத்திருப்பதே சித்திரவதையாகி விடுகிறது. விமல் அந்தச் சித்திரவதையைத் தான் தினமும் அனுபவித்து வருகிறான்.

 

இப்போதெல்லாம் ஆசிரமத்தில் தரப்படும் உணவைச் சாப்பிடும் போது குப்பையைச் சாப்பிடுவது போல் அவனுக்குத் தோன்றுகிறது. பஜனையைக் கேட்கும் போது அது மரண ஓலத்தைக் கேட்பது போல் தோன்றுகிறது. ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்கும் போதோ காய்ச்சிய ஈயத்தைக் காதில் ஊற்றுவது போல் அவனுக்கு இருக்கிறது.  ஆனால் இந்த உணவைச் சாப்பிட்டு, இப்படி பஜனை பாடி, இந்த ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்டு வாழும் வாழ்க்கையைப் பேரானந்தமாக, அவனுடன் அடிக்கடிப் பேசும் துறவி ராஜ்நாத் சொன்ன போது கேட்டு, அவனுக்குக் கண்ணீரே வந்து விட்டது.

 

ராஜ்நாத் அவன் கண்ணீரைப் பார்த்து நெகிழ்ந்து போனார்.                                  “நானும் இதை ஆத்மார்த்தமாய் முதன்முதலில் உணர்ந்த போது உங்களைப் போல் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் சுவாமி. நீங்கள் ஏழரை கோடி சொத்தைத் தர்மத்துக்கு எழுதி விட்டு வந்தவர்.  நானும் எல்லாவற்றையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறேன். எதற்காக நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தோம்? இந்த ஆனந்தத்திற்காகத் தானே?”

 

ராஜ்நாத் கழுத்தை நெறித்து விட விமலின் கைகள் துடித்தன. ‘நானே துக்கம் தாளாமல் அழுகிறேன். இதை ஆனந்தக் கண்ணீர் என்று சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா முட்டாளே”. ஆனால் அதையும் செயல்படுத்த முடிந்த நிலையில் தான் இல்லாததை நினைத்து விமல் மேலும் கண்ணீர் வடித்தான்.

 

“அழாதீர்கள். நாம் பாக்கியசாலிகள். நமக்கு கடவுள் கருணையோடு வழியைக் காட்டியிருக்கிறார்.”

 

இருக்கிற கொடுமைகள் போதாதென்று, சூழ்நிலை புரியாமல் பேசும் இந்த முட்டாளின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலைமையை இனி தாங்க முடியும் என்று விமலுக்குத் தோன்றவில்லை. இனியும் அவனால் காத்திருக்க முடியாது. நர்மதாவைக் கொன்றவனிடம் இனியும் காலம் தாழ்த்தாமல் பேச வேண்டும். இந்த ஆசிரமம், இந்த ஆள், இந்த பஜனை, இந்தச் சொற்பொழிவு, இந்த உப்பு சப்பில்லாத உணவு எல்லாவற்றிலிருந்தும் அவன் தப்ப வேண்டும்.

 

மறுநாளே டெல்லியிலிருக்கும் யோகமாயா கோயில் அவன் கனவில் வந்ததாகவும், போய் யோகமாயாவைத் தரிசித்து விட்டு வர மனதில் ஏக்கம் வர ஆரம்பித்து விட்டது என்றும் சொல்லி விமல் கிளம்பி விட்டான்.   

 

ராஜ்நாத் அவனிடம் சொன்னார். “எனக்கு உங்களைப் பார்க்கையில் பொறாமையாக இருக்கின்றது. நீங்கள் நினைத்தால் உடனே கிளம்பி விடுகிறீர்கள். எனக்கும் உங்களுடன் வர ஆசையாகத் தான் இருக்கின்றது. ஆனால் கால்வலி தான் பயமுறுத்துகிறது. முன்பெல்லாம் நானும் உங்களைப் போல் தான் நினைத்த இடங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படிப் போக முடிவதில்லை. எல்லாம் போன வருடம் ஆரம்பித்த கால்வலி தான்.”

 

அந்தக் கால்வலி எப்படி ஆரம்பித்தது என்ற கதையை ராஜ்நாத் ஆரம்பித்து விடும் முன் விமல் சொன்னான். “நான் யோகமாயையிடம் உங்கள் கால்வலிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.”

 

“உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு…”

 

அதற்கடுத்து அவர் என்ன சொன்னார் என்பது விமலின் காதில் விழவில்லை. அவன் தெருவுக்கு வந்திருந்தான். இந்த முறையும் அவன், செல்லும் வழியில் வேறு உடைக்கு மாறிவிட்டான். ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்திருந்தான். இந்த முறை அவன் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லை. அவன் தலைமுடியை வேறு விதமாகச் சீவியிருந்தான். சென்ற முறையை விடத் தாடி கூடுதலாக வளர்ந்திருக்கிறது.  அதனால் சென்ற முறை அவனைப் பார்த்தவர்களில் யாராவது இப்போது பார்த்தால் கூட அவர்களுக்கு அவனை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவனுடைய  கன்னங்கள் இரண்டும் ஒடுங்கி உள்ளே போயிருந்தன. அந்த ஆசிரம உணவைச் சாப்பிட்டு இன்னமும் அவன் உயிரோடு இருப்பதே ஆச்சரியம் தான். முன்பு சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த விமல் தான் அவன் என்பதற்கான அறிகுறி எதுவுமே இப்போது அவனிடம் இல்லை.

 

இப்போதும் அவன் டெல்லிக்குத் தான் சென்று கொண்டிருக்கிறான். அவன் டெல்லி வாசி ஆகிவிட்டான் என்பதைக் கொலையாளி நம்பவேண்டும் என்று அவன் நினைத்தான். துறவு வேடத்தில் இருக்கலாம் என்றோ ரிஷிகேசத்தில் இருக்கலாம் என்றோ சிறிது சந்தேகமும் எழுவதற்கு அவன் காரணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. ஏனென்றால் பிரச்சினை ஆவது போலிருந்தால்  அவன் தப்பியோடி ஒளிந்து கொள்ள ஒரு பாதுகாப்பு இடம் அவனுக்கு வேண்டும்.

 

டெல்லி சென்று சேர்ந்து மெட்ரோ ரயில் ஏறி சாந்த்னி சௌக் சென்று மார்க்கெட் பகுதிக்குச் சென்று மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் தெருவில் நடந்து கொண்டே கொலையாளிக்குப் போன் செய்தான். ஸ்விட்ச்டு ஆஃப் அறிவிப்பு வந்தது. விமல் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த ஆள் தன் அந்தரங்க அலைபேசி எண்ணை உபயோகிப்பதை நிறுத்தி இருப்பாரோ? வேறு எண்ணுக்கு மாறியிருப்பாரோ? மனம் பதைபதைத்தது. அப்படி மாறியிருந்தால் அந்த ஆளிடம் பேச வேறு என்ன வழி? வழக்கமான பொதுத்  தொலைபேசி அல்லது பொது அலைபேசிஎண்ணில் பேசி அந்த ஆளை எட்டுவது லேசுப்பட்ட காரியம் அல்லவே?


(தொடரும்)

என்.கணேசன்


அடுத்த திங்களன்று (16.11.2026) புதிய நாவலை எதிர்பார்க்கலாம்!