சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 23, 2020

இல்லுமினாட்டி 33


டுத்துக் கொண்டிருந்த மனோகர் படபடப்புடன் எழுந்து உட்கார்ந்ததைக் கவனித்த ராஜேஷ் கொட்டாவி விட்டபடி கேட்டான். “என்ன ஆச்சு?”

அவன் கேட்ட பிறகு தான் அவனும் உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பது மனோகருக்குத் தெரிந்தது. உண்மையைச் சொல்லத் தோன்றாமல் மெல்லஏதோ கனவுஎன்று சொல்லி அவன் சமாளித்தான்

நல்ல வேளையாக ராஜேஷ் அடுத்து கேள்வி எதுவும் கேட்கவில்லை. மனோகர் கண்களை மூடிக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டு அசையாமல் சிலை போல் சிறிது நேரம் அமர்ந்து மிகவும் கூர்மையாகத் தன்னை அண்டும் உணர்வுகளைக் கவனித்தான். அவன் முன்பு உணர்ந்ததை மறுபடி உணர முடியவில்லை. சிறைக்காவலர்கள் இருவர் சிரித்துப் பேசும் சத்தம் கேட்டது. பின் பேரமைதி. ஆனால் அந்தப் பேரமைதியிலும் அவனால் கூடுதலாக எதையும் உணர முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து பின் மறுபடியும் அவன் படுத்துக் கொண்டான். முன்பு மெலிதாக உணர்ந்தது விஸ்வத்தின் சக்தி அலைகள் தானா, இல்லை தன்னுடைய கற்பனையா என்ற சந்தேகம் அவனைத் தொற்றிக் கொண்டது. விஸ்வத்தின் சக்தி அலைகள் இவ்வளவு பலவீனமாகத் தீண்டாதே என்று சந்தேகப்பட்டான். க்ரிஷ் அல்லது அவனுடைய மாஸ்டர் போல யாராவது அவனுடன் விளையாடுகிறார்களா என்ற சந்தேகமும் வந்தது. குழப்பத்தில் பல விதமாக யோசித்து சலித்து அப்படியே மனோகர் உறங்கிப் போனான்.

அவனைச் சிறையறையிலிருந்த ரகசியக் காமிரா மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரிக்கு அவனுடைய நடவடிக்கை இது வரை இல்லாத அதிசயமாகப் பட்டது. அவன் நடவடிக்கைகளில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கும்படி முன்பே செந்தில்நாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த அதிகாரி கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு. இந்த நேரத்தில் அழைப்பதா இல்லை அதிகாலையில் அழைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்தவர் பின் அவர் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினார். “மனோகர் சற்று முன் வித்தியாசமாக நடந்து கொண்டான்”

அடுத்த அரைமணி நேரத்தில் செந்தில்நாதன் அங்கிருந்தார். அவர் அந்தக் காமிராப் பதிவைக் கவனமாகப் பார்த்தார். அவருக்கு அது அசாதாரணமாகவே பட்டது. ராஜேஷிடம் அவன் கனவு என்று சொல்லிச் சமாளித்தாலும் அவன் பின் உறங்கவே இல்லை என்பதால் அது பொய் என்பதில் சந்தேகமில்லை. வெளியில் இருந்து பார்வைக்குத் தெரிந்த மாதிரியோ, காதுக்குக் கேட்கிற மாதிரியோ எந்தச் செய்தியும் அவனை எட்டவில்லை என்பது தெளிவு. அப்படியானால் அவர்கள் சந்தேகப்பட்டது போல் அது விஸ்வத்தின் தொடர்பாக இருக்கலாம். உடனடியாக அவர் நேரம் காலம் பார்க்காமல் க்ரிஷை அழைத்தார். அப்போது மணி அதிகாலை 3.15

க்ரிஷ் தூக்கக்கலக்கத்தோடு ”ஹலோ” சொன்னான். அவர் சொன்ன தகவலைக் கேட்ட பிறகு அவனுடைய தூக்கம் விடைபெற்றது. அவனும் அந்தக் காமிராப் பதிவை இரண்டு முறை பார்த்தான். இல்லுமினாட்டிக்குத் தெரிவிக்கும் முன் ஒரு உளவியல் நிபுணர் கருத்தையும் கேட்பது உத்தமம் என்று அவனுக்குத் தோன்றியது.  

காலை 9.10க்கு அந்தக் காமிராப் பதிவை ஒரு உளவியல் நிபுணருக்குக் காண்பித்தான். அவர் நிதானமாகவும், கூர்மையாகவும் அதைப் பார்த்து விட்டுச் சொன்னார். “திடீரென்று எதோ ஞாபகம் வந்து அவன் எழுந்த மாதிரி தெரிகிறது. கணநேரத்தில் அவன் முகம் மலர்ந்ததைப் பார்த்தால் அது நல்ல நினைவு மாதிரி தான் தெரிகிறது.  மறந்து போயிருந்த ஏதோ நல்ல விஷயம் மறுபடி நினைவு வந்தது போல் இருக்கிறது. ஆனால் அது முழுமையாக இல்லை போல் இருக்கிறது. அதனால் தான் அவன் எழுந்து உட்கார்ந்து கண்களை மூடி முழுதாகத் தெரிந்து கொள்ள கவனம் செலுத்துகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த அந்தக் கூடுதல் தகவல் கிடைக்கவில்லை என்பது அவன் முக உணர்ச்சிகளைப் பார்த்தால் தெரிகிறது. அது நினைவுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்து உட்கார்ந்திருந்தது போலத் தோன்றுகிறது.  ஆனால் அது நடக்கவில்லை என்பதால் அந்த ஏமாற்றம் முகத்தில் தெரிகிறது. நினைவுக்கு வந்த தகவல் சரிதானா என்ற சந்தேகம் அல்லது அது சம்பந்தமாகப் புரிந்து கொண்டது சரிதானா என்ற குழப்பம் அவனை அலைக்கழிப்பது போல இருக்கிறதுகடைசியில் அவன் பல முரண்பாடான எண்ணங்களையே யோசித்துக் களைத்து உறங்கப் போன மாதிரி தான் தெரிகிறது…”

அந்த உளவியல் நிபுணருக்கு இந்த நிகழ்வுக்குப் பின்னணியான உண்மைகள் தெரியாதென்பதால் அவர் தன் கருத்துகளைச் சொன்னார். பின்னணி தெரிந்திருந்த க்ரிஷ் அவர் சொன்னதை மாற்றிக் கொண்டு சரியாகவே புரிந்து கொண்டான். மனோகருக்கு நினைவு வந்த விஷயம் அரைகுறையாக இருக்கவோ, அரைகுறையாகப் புரிந்து கொண்டிருக்கவோ வழியில்லை. விஸ்வம் தன் சக்தி அலைகளை அனுப்பி மனோகரைத்  தொடர்பு கொள்ள முயன்றிருக்கலாம். அது மனோகரை எட்டி இருக்கலாம். அதனால் அவன் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்து உட்கார்ந்திருக்கிறான். ஆனால் பழையது போல் முழுமையாக வராததால் அல்லது தொடராததால் மனோகர் ஏமாற்றமடைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது…

அவன் நினைப்பது சரியாக இருந்தால், டேனியலின் உடலில் நரம்பு மண்டலம் எத்தனை தான் பலவீனமாக இருந்தாலும், அதையும் மீறி விஸ்வம் இவ்வளவு சீக்கிரம் பலவீனமாகவாவது மனோகரைத் தன் சக்தியால் தொடர்பு கொண்டான் என்பது ஆபத்தான செய்தி. விஸ்வத்தால் இனி எத்தனை சீக்கிரம், எவ்வளவு தூரம் தன் சக்திகளைத் திரும்பப் பெற முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் இயல்பிலேயே சக்திவாய்ந்த அவர்களது எதிரி தன் ஆற்றலைத் திரும்பப் பெறும் முயற்சியில் முழுமூச்சோடு இறங்கி விட்டான் என்பதற்கு அறிகுறி தெரிந்து விட்டது.  

க்ரிஷ் இந்த அபாயச் செய்தியை உடனடியாக எர்னெஸ்டோவுக்குத் தெரிவிப்பது அவசியம் என்ற முடிவுக்கு வந்தான்.



ர்னீலியஸின் கார் ஒரு சிக்னலில் நின்ற போது தான் யாரோ அவரைக் கூர்ந்து கவனிப்பது போல் உணர்ந்தார். அவருடைய பார்வை இரண்டு பக்கமும் ஊடுருவியது. அங்கே நிறைய வாகனங்கள் நின்றிருந்தன. அவற்றில் ஏதாவது ஒரு வாகனத்திலிருந்து யாரோ அவரைக் கண்காணிக்கிறார்களா? இந்த சந்தேகம் வந்ததும், அந்த சிக்னலிலிருந்து நகர்ந்த பின்னர் அவரை யாராவது பின்தொடர்கிறார்களா என்று கவனிக்க ஆரம்பித்தார். சில வாகனங்கள் பின்னால் இருந்தன. அத்தனையும் அவரைப் பின்  தொடர்வதாக நினைப்பது முட்டாள்தனம்… அவர் வங்கிக்குப் போகும் தெருவில் எப்போதுமே வாகனப் போக்குவரத்து அதிகம். அந்தத் தெருவில் பயணித்தால் அவரைப் பின் தொடரும் வாகனத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டம். எனவே ஓரிடத்தில் அந்தத் தெருவிலேயே தொடர்ந்து செல்லாமல் வலது பக்கம் இருந்த ஒரு குறுக்குத் தெருவில் அவர் காரைத் திருப்பினார். அந்தத் தெருவிற்கு அவர் கார் திரும்பிய போது கூடவே ஒரு வேனும், வேறொரு காரும் மட்டும் தான் திரும்பின. கர்னீலியஸ் அந்த வேனைக் கவனித்தார். அது உணவுப் பொருட்களை வினியோகிக்கும் வேன். அதை ஓட்டிக் கொண்டு வந்த ஆள் சத்தமாக ஏதோ பாட்டைக் கேட்டுக் கொண்டே தலையாட்டியபடி இருந்தான். அந்த இசைப்பிரியன் அவரைக் கண்காணிப்பது போல் தெரியவில்லை. இன்னொரு காரை ஓட்டி வந்த கருப்பினப் பெண்மணி தன் அருகில் அமர்ந்திருந்த ஆளிடம் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தாள்.

                                                                       

கர்னீலியஸ் தன் காரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார். அந்த வேனும், காரும் அவர் காரைத் தாண்டிச் சென்றன. அவர் குறைந்த வேகத்திலேயே சிறிது தூரம் சென்றார். இப்போது எந்த வாகனமும் அவர் காரைத் தொடர்வது போல் தெரியவில்லை. புதிது புதிதாய் வாகனங்கள் அவர் காரைத் தாண்டிப் போயின. ஆனாலும் யாரோ அவரைக் கண்காணிப்பது போன்ற உணர்வு ஏனோ குறையவில்லை. மாறாக அது கூடியது. திடீரென்று, கண்காணிப்பது விஸ்வமாக இருக்குமோ என்று தோன்றிய போது அவர் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று பின் ஓட்டம் எடுத்தது.

(தொடரும்)
என்.கணேசன்


6 comments:

  1. Each episode brings more tension. Very very interesting.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படி எதிர்பாராத இடத்தில் எல்லாம் தொடரும் போட்டால் நாங்க என்ன தான் செய்வது?

    ReplyDelete
  3. இந்த டென்ஷனுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக என் கையில் இருக்கும் தங்களின் இல்லுமினாட்டி புத்தகம் என்னைப் பார்த்து குறும்பாக சிரிக்கிறது..

    ReplyDelete
  4. கர்னீலியஸை கண்காணிக்கும் விஸ்வம்....மனோகரை தொடர்பு கொள்ளமுடியவில்லை எனில்....!!!!

    மனோகருடன் இருக்கும் ராஜேஷ் ஏதேனும் தடையை உண்டாக்கி வைத்திருப்பானோ🤔🤔🤔🤔?

    ReplyDelete
  5. Ohhhh noooooo semmma thrilling

    ReplyDelete
  6. ஒரு வேலை ராஜேஷ் தா அமானுஷ்யனா இருப்பானே...??இல்ல எனக்கு மட்டும் தா இப்படி தோனுதா...???

    ReplyDelete