சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, December 28, 2011

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 12
உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?

“உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி? என்ற கேள்விக்கு டெஹ்ரா பே விரிவான விளக்கம் தந்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவைப் போல எகிப்திலும் இது போன்ற சாகசங்கள் சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. அந்தக் காலத்தில் இன்றைய காலத்தைப் போல பணம், பகட்டு, பொருள் மீது மக்களின் கவனம் அதிகமாய் செல்ல ஆரம்பித்திருக்கவில்லை. ஆத்மஞானத்தை அனைவரும் நம்பினார்கள். அதனால் இது போன்ற சாகசங்கள் குறித்து அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

ஆத்மா உடலல்ல என்பதையும் அது உடலை விட்டும் இருக்கக் கூடிய சக்தி என்பதையும் உடலையும், விழிப்புணர்வையும் இயக்கும் சக்தி என்பதையும் அனைவரும் நம்பினார்கள். உடல் அழிந்து அதன் வேதியியல் அணுக்கள் கார்பன், பொட்டாசியம், ஹைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய வடிவங்களில் திரும்ப மண்ணிற்கே திரும்பச் செல்லும் போது அதை இயக்கிய ஆன்ம சக்தி தன் மூலசக்தியாகிய நாம் முழுவதும் அறியாத, என்றும் நிலைத்திருக்கக் கூடிய, அந்த பெரும் சக்திக்கே திரும்புகிறது. இதை லௌகீகத்தில் மூழ்கி விட்ட இன்றைய மனிதர்கள் உணரத் தவறி விடுகிறார்கள்.

என்னுடைய தந்தை இது போன்ற செயல்களுக்காக என்னை நான் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்தே தயார்ப்படுத்த ஆரம்பித்து விட்டார். அதனால் இன்று என் விருப்பப்படி பல நாட்கள் மண்ணில் புதைந்திருந்து எந்த பாதிப்பும் அடையாமல் திரும்புவது முடிகிறது”.

பால் ப்ரண்டன் சொன்னார். “ஆனால் சந்தேகப்படுபவர்கள் கேட்கிறார்கள்- “மனிதனால் மூச்சு விடாமல் மண்ணுக்கடியில் வழ்வது எப்படி முடிகிறது?என்று

டெஹ்ரா பே பல உதாரணங்களைச் சொன்னார். “கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டிய கடல்களில் முத்து எடுப்பவர்கள் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது நிமிடங்கள் மூச்சு விடாமல் கடலுக்கடியில் தங்குகிறார்கள். தவளை வேகமாக மூச்சு விடக்கூடியது ஆனால் அது தண்ணீருக்கடியில் இருக்கையில் நான்கு மணி நேரம் மூச்சு விடாமல் இருக்க முடிகிறது. வெளியே இருக்க முடிந்த  கடல் ஆமைகளும் அப்படியே சில மணி நேரங்கள் கடலுக்கடியில் இருக்க முடிகிறது. ஆனால் கடல் ஆமையைக் கட்டாயப்படுத்தி தண்ணீருக்குள் அழுத்தி வைத்தால் அது மூச்சு முட்டி இறந்து போகும். காரணம் கடல் ஆமை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் இருக்க முன்னமே தன்னை தயார் செய்து கொண்ட பிறகு தான் அப்படி மணிக்கணக்கில் இருக்க முடியும்....

அப்படியே முதலைகளையும் வவ்வால்களையும் கூட மூச்சு விடாமல் நீண்ட காலத்திற்கு அப்படியே இயக்கமில்லாமல் இருக்க முடிவதை டெஹ்ரா பே விளக்கிய போது பால் ப்ரண்டனுக்கு வியப்பாக இருந்தது.

டெஹ்ரா பே கேட்டார். “விலங்குகளாலேயே முடிகிற விஷயம் மனிதனால் ஏன் முயன்றால் முடியாது? அதை எங்களைப் போன்ற பக்கிரிகள் செய்தும் காட்டி நிரூபித்து இருக்கிறோம். ஆனால் கடல் ஆமையைச் சொன்னது போல நானும் முன்னமே தயாராகி அரை மயக்க நிலைக்குச் சென்றால் தான் அப்படி புதைந்து கிடக்க முடியும். இல்லா விட்டால் நானும் பத்து நிமிடங்களில் மூச்சுமுட்டி செத்து விடுவேன்.

பால் ப்ரண்டன் சற்று யோசித்து விட்டு ஒரு பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டார். அப்படி புதைந்து கிடக்கையில் உங்கள் ஆத்மா உடலை விட்டு வெளியேறுகிறதா? அப்படி வெளியேறி நீங்கள் சொன்னது போல மூலமான பெரும் சக்தியுடன் கலக்கிறதா? அந்த சமயத்தில் என்ன தான் நடக்கிறது?

டெஹ்ரா பே நேர்மையுடன் அந்த நேரத்தில் நிகழ்வது என்ன என்பதை தன்னால் சொல்ல முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். புதைந்த நிலையில் மிக ஆழமான உறக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறோம். நினைவு திரும்பும் போது எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. அந்த மயக்க நிலையில் ஆன்மா நாமறிய முடியாத பயணங்களை மேற்கொண்டு இருக்கக் கூடும். ஆனால் விழிப்புணர்வு முடக்கப்பட்ட அந்த நிலையில் நடப்பது எதுவும் நினைவுக்கு வந்ததில்லை.

பல முறை அப்படி மண்ணில் புதைந்த மனிதனாலேயே கூட அந்த மயக்க நிலையில் ஆன்மாவின் செயல்பாடு என்ன என்பதைச் சொல்ல முடியவில்லை என்பது பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அதைப் புரிந்து கொண்ட டெஹ்ரா பே சொன்னார். “சில யதார்த்த உண்மைகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கிட்டத்தட்ட மரணத்தைப் போன்ற நிலையில் விலகி மறுபடி அந்த உடலில் ஆன்மா சேரமுடிவதே அது மரணமில்லாதது, நிலையானது என்பதற்கு ஆதாரமாக எனக்குத் தெரிகிறது

பால் ப்ரண்டனுக்கு அவருடைய நேர்மை பிடித்திருந்தது. தெரியாததைத் தெரியாது என்று அந்த அளவு சாதனை புரிந்த மனிதரால் சொல்ல முடிந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று எண்ணிக் கொண்டார்.

டெஹ்ரா பே இப்படி உயிரோடு மண்ணில் புதைவதில் இருந்த வெற்றி தோல்விகளையும் மற்ற சாதனையாளர்களை உதாரணம் காட்டி சொன்னார். “நான் சிறுவனாக இருந்த போது எங்கள் நகரத்தில் ஒரு பக்கிரி மண்ணில் புதைந்து பல வருடங்கள் கழித்து குறிப்பிட்ட நாளில் தன்னை எழுப்பச் சொன்னார். அப்படியே பல வருடங்கள் கழிந்து தோண்டி எடுத்த போதும் அவர் உயிரோடு இருந்தார். ஆனால் பேச்சு சக்தி மட்டும் இழந்திருந்தார். ஆறு மாத காலம் கழித்து இறந்து போனார். மூச்சு இல்லாமல் சில நாட்கள் இருப்பது விரத சமயத்தில் வயிற்றைப் பட்டினி போடுவது போல உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி எழும் போது உடலுக்கு அருமையான ஓய்வு கிடைத்திருப்பதால் எத்தனையோ வியாதிகள் கூட குணமாகி இருப்பதைக் கண்டிருக்கிறோம் ஆனால் இப்படி வருடக்கணக்கில் அப்படிச் செய்யும் போது சில அபாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

“எனக்குத் தெரிந்த சையது என்ற 18 வயது பக்கிரி சரியான பயிற்சி பெற்று பல முறை மண்ணில் புதைந்து மறுபடி எழுந்தவன். ஒரு முறை அவன் ஆறு வருடங்கள் மண்ணில் புதைந்து காட்ட முடிவெடுத்து அப்படியே ஒரு பிரத்தியேக சமாதியில் புதைக்கப்பட்டான். அவனுடைய முஸ்லீம் நண்பர்கள் வருடா வருடம் ரம்சான் நோன்பு சமயத்தில் அவன் உடலை எடுத்துப் பார்த்து மறுபடி புதைத்தனர். முதலிரண்டு வருடங்களில் அவன் உடல் நன்றாகவே இருந்தது. மூன்றாம் வருடம் திறந்து பார்க்கையில் அவன் உடல் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

“ஏன் அப்படி ஆயிற்று?பால் ப்ரண்டன் கேட்டார்.

“இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் முன் தகுந்த முன்னேற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். உடலை மென்மையான மெழுகால் பூச வேண்டும். சவப்பெட்டியில் உள்ள தூசிகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இது போன்ற முன்னேற்பாடுகளை சையது செய்யத் தவறி விட்டார். மூன்றாவது வருடம் எகிப்தில் உள்ள சிறிய சக்தி வாய்ந்த பாம்புகளில் ஏதாவது ஒன்று சவப்பெட்டியில் புகுந்திருக்கலாம். இப்படி அரை மயக்க நிலைக்குச் சென்ற உடலில் ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத போது எந்த மைக்ரோப்களும், பூச்சிகளும் தீண்டாமல் இருக்கும். சவப்பெட்டியில் புகுந்த சிறிய பாம்பு சையதின் மூக்கில் நுழைந்திருக்கலாம். அந்த நேரத்தில் சையதின் உடலில் சிறிது ஆக்சிஜன் புகாமலிருக்கும் அளவு கட்டுப்பாட்டை வைக்கத் தவறி இருக்கலாம். அதன் விளைவாக உடல் தன் பாதுகாப்பை இழந்திருக்கலாம். அது புழுக்களும் பூச்சிகளும் படையெடுத்து உடலை உண்ண வழி செய்திருக்கலாம்

சிறிது ஏமாந்தாலும் இதில் எப்படிப்பட்ட அபாயங்கள் எல்லாம் உள்ளன என்பதை உணர்ந்த பால் ப்ரண்டன் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த மம்மிகளின் உடலைப் பாதுகாத்திருந்த விதத்தையும், அவற்றை மிக உறுதியான கற்களால் மூடியிருந்த விதத்தையும் நினைவுகூர்ந்தார்.

டெஹ்ரா பே சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். “நான் புதையுண்டிருந்த சமயங்களில் ரகசிய பைப்கள் வழியாக காற்று வரும்படி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டவர்களின் சந்தேகம் அர்த்தமில்லாதது என்பதை நீங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்

பிறகு பால் ப்ரண்டன் அவரிடம் இது போன்ற அற்புதங்களைச் செய்யும் சிலர் அதற்கு மத ரீதியாக விளக்கம் அளிப்பது பற்றி கேட்டார்.

டெஹ்ரா பே தன் கருத்தை வெளிப்படையாகச் சொன்னார். “இது போன்ற சாகசங்கள் உடலியல் அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு செய்பவை. இதில் ஆழ்மன சக்தியும் சேரும் போது அற்புதங்களாக தோன்றுகின்றன. இதில் மதத்தையோ, மூட நம்பிக்கைகளையோ சேர்த்து விளக்கம் அளிப்பது உண்மை சார்ந்ததாக இருக்காது. அவர்கள் செய்கின்ற அற்புதங்கள் உண்மையானவை என்றாலும் விளக்கங்கள் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதங்களில் இருந்து விடுகிறதை நான் அதிகம் பார்க்கிறேன். அவர்களில் சிலர் தாங்களே இதை நம்புகிறார்கள். பலர் மற்றவர்கள் முன்னால் அசாதாரண மனிதர்களாகவும், கடவுளருள் பெற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்படி செய்கிறார்கள். உள்ளதை உள்ளபடியே பார்க்க வேண்டுமே ஒழிய இதில் கற்பனைகளை சேர்ப்பதையும், மூட நம்பிக்கையை வளர்ப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை

டெஹ்ரா பே ஆன்மாவையும் ஆழ்மனசக்தியையும் நம்பிய அளவிற்கு மதக்கோட்பாடுகளை பெரிதாக நம்பவில்லை. அதில் ஈடுபட்டு உண்மையான தெய்வீக உணர்வுகளை அனுபவித்தவர்கள் ஒருசிலர் இருக்கக்கூடும் என்று ஒத்துக் கொண்ட அவர் தன் ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்ததாகச் சொன்னார்.

இப்படியாக டெஹ்ரா பேயிடம் பேசிய போது பால் ப்ரண்டன் கேட்டறிந்தது எல்லாமே அறிவியல் ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது. எந்த இடத்திலும் டெஹ்ரா பே தன்னை தெய்வீக மனிதராகச் சொல்லிக் கொள்ளவில்லை என்பதோடு எதிலும் கற்பனை கலக்காமல் தெரிந்ததை விளக்கமாகச் சொல்லியும் தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டும் பால் ப்ரண்டன் மதிப்பில் உயர்ந்து போனார்.

அடுத்ததாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்ட சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்போமா?

-என்.கணேசன்

Friday, December 23, 2011

இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 18
இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது!

நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.

கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.

எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, அதில் நடக்க இருப்பதெல்லாம் என்னென்ன என்பதை நாம் அறிய மாட்டோம். எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.  

இப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும், நம் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி நடந்து கொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். நம்மால் செயலாற்ற முடிந்த இந்த ஒரு கணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நாம் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சர் வில்லியம் ஓஸ்லர் (Sir William Osler) தன் மேசையில் நம் மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை எப்போதும் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது

நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் தான் அதிகமாக நம் நிகழ்காலத்தைத் திருடிக் கொள்கின்றன. கடந்த காலத்தில் அப்படியாகி விட்டதே, இப்படியாகி விட்டதே என்று வருத்தப்பட்டும், நாளை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டும் என்ன பயன்? வருத்தப்படுவதால் கடந்தகாலம் மாறி விடுமா? கவலைப்படுவதால் எதிர்காலம் தானாக சிறந்து விடுமா?

காளிதாசரின் இன்றைய தினம் கூட சற்று அகலமான காலம் என்று சொல்லலாம். இன்றில் கூட இன்றைக்குட்பட்ட கடந்த காலம், எதிர்காலம் என்பதும் அடங்கி விடுகிறது. உண்மையில் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் சூட்சுமம் இந்தக் கணத்தில் தான் உள்ளது. இந்தக் கணத்தில் தான் நாம் ஏதாவது செய்ய முடியும். நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான கணம் இந்தக் கணம் தான்.

இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.

தாமஸ் கார்லைல் மிக அழகாகக் கூறுவார். “நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்”. அப்படித்தான் இந்தக் கணத்தை நாம் சிறப்பாக உபயோகித்தால், அப்படியே ஒவ்வொரு கணம் நம் வாழ்க்கையில் வரும் போதும் சிறப்பாக பயன்படுத்தினால், எதிர்காலம் தானாக சிறப்பாய் உருவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

நேற்றைய நிகழ்வுகளில் இந்தக் கணத்தில் ஏதாவது பாடம் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தும். நாளைய நாளின் சிறப்புக்காக திட்டமிட்டு இந்தக் கணத்தில் ஏதாவது செய்வோமானால் அது நம்மை முன்னேற்றும். ஆக இந்த நாளில் இந்தக் கணத்தில் நாம் செய்வதை வைத்துத் தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் நாம் சிறப்பை ஏற்படுத்த முடியுமே தவிர அவற்றைக் குறித்த வருத்தங்களாலும் கவலைகளாலும் அல்ல.  அப்படி செயல்படுவதை விட்டு விட்டு வருத்தங்களாலும், கவலைகளாலும் கழிக்கப்படும் காலங்கள் வீணடிக்கப்படுபவையே.

கடைசி வரை உங்களால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே.
எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனம் வையுங்கள். நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் புலம்பலிலேயே கழித்து விடாதீர்கள். புலம்பலிலும், வருத்தங்களிலும் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர எதுவும் மாறி விடாது, தீர்வும் கிடைக்காது.  தரப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் எப்படி முடிந்த அளவு சிறப்பாக செயல்படலாம் என்று யோசித்து அதன்படி செயல்படுங்கள். மோசமான சூழ்நிலைகளும் சிறிது சிறிதாக மாறி உங்களை மேலான சூழ்நிலைகளுக்குப் போக வழிவிடுவதைக் காண்பீர்கள்.

நமக்கு முழுக்கட்டுப்பாடு இருப்பது இந்தக் கணத்தில் தான் என்பதால் வாழ்க்கையின் வெற்றியின் சூட்சுமம் முழுவதும் இந்தக் கணத்தில் தான் இருக்கிறது. நதி நீரோட்டத்தில் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை காலை நனைக்க முடியாது என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே இருக்கிறது. கால ஓட்டத்திலும் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. நாம் இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொருத்தே இது நமக்கு அனுகூலமாவதும், பயனற்றுப் போவதும் தீர்மானமாகிறது.

காளிதாசர் சொன்னது போல நம் விடியலுக்கான தீர்வு இந்தக் கணத்தில் தான் உள்ளது. மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். ஏதாவது சாதிக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கான பிள்ளையார் சுழியை இந்தக் கணத்தில் போடுங்கள். நாளை செய்யலாம் என்று விட்டு வைப்பவைகளை நாம் என்றுமே செய்வதில்லை. ஏனென்றால் நாளை என்பது நம்மிடம் வருவதேயில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் இந்தக் கணம் மட்டுமே. இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.

-என்.கணேசன்
நன்றி: வல்லமை

Monday, December 19, 2011

மாற்றங்கள்

கருவறையில் இருக்கையிலே
இருட்டறை தான் என்றாலும்
உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
வெளிச்சமும் பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை
இழந்தே நாம் தவித்தோம்.
பிறந்தது இழப்பல்ல
பெற்றது ஒரு பேருலகம்
என்றே பிறகுணர்ந்தோம்.
சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
உறவுகளை நாம் பெற்றோம்
நண்பர்களைக் கண்டெடுத்தோம்
தேவைகளைப் பூர்த்தி செய்ய
அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.

-         என்.கணேசன்
(சமீபத்தில் கோவை தமிழ்ச்சங்கம் நடத்திய 72 மணி நேரக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை)


Wednesday, December 14, 2011

கர்வம் என்றும் முட்டாள்தனமே!


வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 17
கர்வம் என்றும் முட்டாள்தனமே!

வெற்றி மிக இனிமையானது. அதிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேர்கையில் அது கொடுக்கும் பெருமிதம் அலாதியானது. அது தற்செயலாக வராமல் நம் சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் விளைவாக ஏற்படுகிறது என்றால் அந்த பெருமிதமும், மகிழ்ச்சியும் நியாயமானதும் கூட. வாழ்க்கையில் நிறைய முன்னேறிய பிறகு, நிறைய சாதித்த பிறகு அந்த நிறைவு கிடைக்குமானால்  அதை நாம் பாடுபட்டதற்கான உண்மையான கூலி என்றே கருத வேண்டும். ஆனால் சில சமயங்களில் இதனுடன் இலவச இணைப்பாக ஒன்று வரக்கூடும். அது தான் கர்வம். அதை அவ்வப்போதே களையா விட்டால் அது ஒரு படுகுழியில் நம்மை கண்டிப்பாக ஒரு நாள் தள்ளக்கூடும்.

ஒரு அருமையான திருக்குறள் உண்டு.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

(மற்றவர்களுடன் ஒத்து நடக்காமல், தன் உண்மையான வலிமையின் அளவையும் அறியாமல் தன்னையே வியந்து பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பவன் விரைவிலேயே அழிந்து போவான்.)

தன்னை வியந்தான் என்ற சொல்லில் திருவள்ளுவர் கர்வம் பிடித்த மனிதர்களை மிக அருமையாக விளக்கி விடுகிறார். கர்வம் பிடித்தவர்கள் அதிகமாகச் செய்யும் வேலை தங்களை எண்ணி வியப்பது தான். அல்லது அவர்களை வியந்து பேசுபவர்களின் வார்த்தைகளைப் பெருமையுடன் கேட்டுக் கொண்டிருப்பது தான். அவர்களால் இந்தத் திருக்குறளில் சொன்னது போல மற்றவர்களுடன் ஒத்து நடக்க முடியாது, அவர்களின் உண்மையான வலிமையின் அளவும் தெரியாது. ஒரு கற்பனைக் கண்ணோட்டத்திலேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்கள். 

கர்வத்தால் அழிந்தவர்கள் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் அதிகம் பேர் இருக்கிறார்கள். உலகம் இது வரை பார்த்த அத்தனை சர்வாதிகாரிகளும் கர்வம் பிடித்தவர்களே. ஹிட்லர், முசோலினி முதல் இன்றைய கடாஃபி வரை தங்களையே வியந்து ஏமாந்தவர்களே. அவர்களைச் சுற்றிலும் முகஸ்துதி செய்யும் நபர்களை மட்டுமே இருக்க அனுமதித்தவர்களே.  உண்மையான நிலவரத்தை அறியாதது மட்டுமல்ல அதைத் தெரிவிக்க முயன்றவர்களை எதிரிகளாக நினைத்தவர்களாக அவர்கள் இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது. அழியும் கடைசி மூச்சு வரை கற்பனை உலகத்திலேயே இருந்த அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டை விட்டு போயிருந்திருக்கிறது.

உதாரணத்திற்காகத் தான் சர்வாதிகாரிகளை மேற்கோள் சொன்னோமே தவிர அந்த அளவிற்கு போவது மட்டுமே கர்வம் என்ற அர்த்தம் கொள்ளாதீர்கள். எந்த அளவிலும் கர்வம் முட்டாள்தனமே. அது பல நேரங்களில் இருப்பவர்களுக்கு இருப்பதே தெரியாமல் தங்கும் மகிமை வாய்ந்தது. அடுத்தவர்களை எல்லாம் அலட்சியமாக வைப்பது, அடுத்தவர்களின் சாதனைகளைக் கண்டுகொள்ள மறுப்பது, தங்களைத் தவிர யாருமே உயர்வாகத் தெரியாதது போன்ற தன்மைகள் எல்லாம் இருந்தால் கர்வம் அங்கிருக்கிறது என்று பொருள். அதனை உடனடியாகக் களைந்து விடுங்கள்.

ஏனென்றால் கர்வம் உண்மையில் ஒரு முட்டாள்தனமே. ஆழமாக சிந்திக்க முடிந்தவனுக்கு கர்வம் கொள்ள முடியாது. கர்வம் என்பது நம்மை பிறருடன் ஒப்பிடும் போது மட்டுமே எழ முடியும். ஒப்பிடாத போது கர்வம் கொள்ள முடியாது. அடுத்தவர்களை விட நான் திறமையானவன், நிறைய சாதித்தவன், அதிக சக்தி வாய்ந்தவன், அதிகம் வெற்றி கண்டவன், அதிகம் சம்பாதிப்பவன்...என்பது போன்ற எண்ணங்களே கர்வம் எழ அடிப்படையான காரணம்.

அறிவுபூர்வமாக சிந்தித்தால் அந்த ஒப்பீட்டிலும் ஒரு உண்மையை நம்மால் உணர முடியும். ஒருசில விஷயங்களில் ஒருசிலரை விட நாம் நிறையவே முன்னேறி இருக்கிறோம் என்றால் வேறுசில விஷயங்களில் அதே மனிதர்களை விட பின்தங்கி இருக்கிறோம். ஒன்றிற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டால் இன்னொன்றிற்காக நாம் சிறுமைப்பட்டே அல்லவா ஆகவேண்டும்.

அதே போல் ஒரு விஷயத்திற்காக நாம் நம்மை உயர்வாக நினைத்துக் கொண்டால் அதில் நம்மை விடவும் உயர்வாக இருக்கிறவர்கள் கண்டிப்பாக இருப்பார்களே. அப்படியென்றால் கர்வப்பட என்ன இருக்கிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நம்மை விட உயர்ந்தவர்களும் என்றும் இருப்பார்கள், நம்மை விடவும் தாழ்ந்தவர்களும் என்றும் இருப்பார்கள். அப்படி தாழ்ந்தவர்கள் மத்தியில் நாம் உயர்வாகத் தெரிவது இயற்கை. இப்படி பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து ஒப்பிட்டுப் பார்த்து விட்டு கர்வம் கொள்வது அறிவின்மையே அல்லவா?

நம் அறிவுபூர்வமான சிந்தனையை மேலும் நீட்டினால் திறமை, உழைப்பு மட்டுமல்லாமல் நம் முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் காரணமாக விதியின் உடன்பாடும் சேர்ந்திருப்பதை நம்மால் அறிய முடியும். சில சமயங்களில் நம்மை விட அதிக திறமை இருப்பவர்களும், அதிகமாய் உழைப்பவர்களும் நம் அளவு வெற்றியோ, முன்னேற்றமோ காணாமல் இருப்பதை நாம் சர்வசாதாரணமாகக் காணலாம். இப்படி இருக்கையில் கர்வம் கொள்வது அறியாமையே அல்லவா?

கர்வம் என்ற இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு மனிதன் தரும் விலை மிக அதிகம். கர்வம் அடுத்தவரை மதிக்க விடாது; அடுத்தவரை அலட்சியப்படுத்தும். அது மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்காது. அது நல்ல அறிவுரைகளை மதிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ விடாது. அது உள்ளதை உள்ளபடி பார்க்கத் தூண்டாது. அது நண்பர்களை இழக்க வைக்கும்; பகைவர்களை பெருக்கி வைக்கும். மொத்தத்தில் கர்வம் நம் வாழ்க்கையில் நன்மைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி, தீமைகள் அனைத்தும் முந்தி நிற்க வைக்கும். இன்னொரு விதத்தில் சொன்னால் ஒரு மனிதன் அழிவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவன் கர்வம் செய்து முடிக்கிறது.

எனவே தன்னம்பிக்கையோடு இருங்கள். ஆனால் அது கர்வமாக மாறி விட என்றுமே அனுமதிக்காதீர்கள். சாதித்தவற்றில் மகிழ்ச்சி அடையுங்கள். ஆனால்
சாதிப்பதே நீங்கள் ஒருவர் தான் என்ற பொய்யான அபிப்பிராயத்தில் இருந்து விடாதீர்கள். கர்வம் தலை தூக்கும் போதெல்லாம் உங்கள் குறைகளையும், உங்களை விட அதிக உயரம் சென்றவர்களையும் நினைவில் கொண்டு கர்வத்தை விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் எல்லா மேன்மைகளையும் மங்க வைத்து, உங்களை யதார்த்தத்திலிருந்து விலக்கியும் வைக்கும் கர்வத்தை எதிரியாக எண்ணி அப்புறப்படுத்துங்கள்.

- என்.கணேசன்
நன்றி: வல்லமை


Friday, December 9, 2011

நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன்கீதை காட்டும் பாதை 15

நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன்

அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால் அந்த அளவு சூட்சும அறிவு இல்லா விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி ஞான அக்னியால் பரிசுத்தமாகி என்னுடன்
ஒன்றாக ஐக்கியமடைந்தவர்கள் பலர்.

பெரும்பாலானோர் இறைவனை நினைப்பதே ஏதோ ஒரு பொருளுக்கோ, செல்வத்திற்கோ, நிலைக்கோ ஆசைப்பட்டுத் தான். அது எதுவும் தேவை இல்லாத போது அடுத்த தேவை உணரப்படும் வரை இறைவன் வசதியாக மனிதர்களால் மறக்கப்பட்டு விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இறைவனை வழிபட இன்னொரு காரணம் பயம். கும்பிடா விட்டால் ஏதாவது பிரச்னையை உண்டாக்கி விடுவாரோ, தங்களைக் காப்பதை அவர் நிறுத்தி விடுவாரோ என்ற பயமும் சிலருக்கு இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என்று வணங்கி இறைவனை திருப்தியாகவே வைத்துக் கொள்ளும் ஜாக்கிரதை உணர்வின் காரணமாகவும் இறைவனை வணங்குகிறார்கள்.

ஆனால் விட்டு விட வேண்டிய மூன்று குணங்களில் முதலிரண்டாக இவற்றையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த இரண்டும் உண்மையான இறையுணர்வுக்கு உகந்ததல்ல. தேவையாலும், பயத்தாலும் பூஜிக்கப்பட வேண்டியவனல்ல இறைவன். அடுத்ததாக அவர் சொல்வது கோபம். கோபம் இருக்கும் நேரத்தில் அது ஒன்று தான் பிரதானமாக இருக்கிறது. எல்லா நல்ல தன்மைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. சொல்லாலும், செயலாலும் தனக்கே தீங்கு இழைத்துக் கொள்ளும் பலவீனமான நிலையில் இருக்கிற மனிதன் மனதில் எந்த நல்ல விஷயமும் புக முடியாது. அப்படி இருக்கையில் இறையுணர்வு எப்படி உள்ளே புக முடியும்?

இந்த மூன்றையும் விலக்கி விடும் போது இறைவனின் நினைவிலேயே தங்கி விடுவது எளிதாகிறது. இறை ஞானம் என்ற அக்னியால் மற்ற அழுக்குகளும் சுட்டெரிக்கப்பட்டு அகம் பரிசுத்தமாகிறது. அகம் பரிசுத்தமாகும் போது மனிதன் தானாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் சுலோகம் மிகவும் பொருள் பொதிந்தது. மனிதர்கள் எவ்வழியில் என்னை நாடினாலும் அதே வழியில் நான் அவர்களிடம் நெருங்குகின்றேன், பார்த்தனே! ஒவ்வொரு விதத்திலும் மனிதர்கள் பின்பற்றும் வழி எனதே ஆகும்.

இறைவனை ஒவ்வொருவரும் காணும் விதங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அப்படி காணும் விதங்கள் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. கண்ணனை பாரதியார் தாயாக, தந்தையாக, அரசனாக, சற்குருவாக, இறைவனாக, சேவகனாக, சீடனாக, காதலனாக மற்றும் காதலியாகக் கண்ட கவிதைகள் மிகவும் பிரசித்தம். இப்படி ஒருவரே பல விதமாய் இறைவனைக் காண்பது அபூர்வம். பலரும் இறைவனை ஏதாவது ஒரு வழியில் காண்கிறார்கள், வழிபடுகிறார்கள். இந்த வழிகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இறைவன் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே தன் வழிகள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அப்படி அவரவர் நாடிய வழியிலேயே அந்தந்த மனிதர்களை நெருங்குவதாக அவர் கூறுகிறார்.

இதே கருத்து தான் திருவாய்மொழியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவரென அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடைய நின்றாரே.

இறைவன் அவரவர் தன்மைக்கேற்ப நெருங்குவதை இன்னொரு உதாரணம் மூலமாகவும் விளக்கலாம். இறைவன் மின்சாரத்தைப் போன்றவர். மின்சாரம் ஒன்றே ஆனாலும் அது பாயும் மின் கருவிகளுக்கேற்ப விதவிதமான பலனைத் தருகிறது. மின்சாரம் விளக்குகளில் பாயும் போது ஒளியாகிறது, வானொலியில் ஒலியாகிறது, தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் ஆகிறது, சூடேற்றும் கருவியில் உஷ்ணமாகிறது, குளிர்சாதனக் கருவியில் குளிர்ச்சியாகிறது. இப்படி கருவிகளின் தன்மைக்கேற்ப, ஊடுருவும் மின்சாரம் பலனளிப்பது போல இறைவனும் அவரவர் தன்மைக்கேற்ப மனிதர்களை அனுக்கிரகிக்கிறார்.

இறைவனின் நோக்கு விசாலமானது. குறுகிய எண்ணங்களும், கோட்பாடுகளும் அவருடைய அகராதியில் கிடையாது. இதை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் உணர்வதில்லை. அவர்களுடைய வழிபாடுகள் குறித்த சிந்தனைகள் திட்டவட்டமானவை. ஏதாவது ஒரு ஆன்மிக நூலை மேற்கோள் காட்டி அப்படித்தான் இறைவனைக் காண வேண்டும், வணங்க வேண்டும், வழிபாட்டு முறை இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வழி  தான் சிறந்தது, மற்றவை எல்லாமே தாழ்ந்தது என்று மிக கெட்டியாக வழிமுறைகளைப் பிடித்துக் கொள்ளும் இவர்கள் இறைவனைத் தவற விட்டு விடுகிறார்கள்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், வேடுவனான கண்ணப்ப நாயனாரும் இறைவைனை வழிபட்ட முறைகள் சாஸ்திரங்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை அல்லவே. ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாகவும், கண்ணப்ப நாயனாரிடம் இறைவனே "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று சொன்னதாகவும் படிக்கிறோமே. இவர்கள் வழிபட்ட முறைகளை இறைவன் ஏற்றுக் கொண்டதையும், ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொன்னதையும் பார்க்கையில் இறைவனை நாங்கள் அணுகும் முறை தான் சிறந்தது என்று யாரும் சொல்வதில் உண்மையில்லை என்ற முடிவுக்கே அல்லவா நாம் வரவேண்டி இருக்கிறது.

அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். “மனிதர்கள் செயல்களுக்குப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வழிபடுகிறார்கள். ஏனென்றால் இந்த மனித உலகில் செயல்களால் வெகு விரைவில் பலன் கிடைக்கிறது.

முன்பே சொன்னது போல வழிபாடு என்றாலே இறைவனிடம் யாசித்தல் என்பது தான் பொதுவாக இருக்கிறது. அதைக் கொடு, இதைக் கொடு என்று பட்டியல் வைத்துக் கொண்டு தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இறைவன் கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வந்தால் பேரம் பேசும் வேலையும் நடக்கிறது. நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு அதைச் செய்கிறேன்என்று பேரம் பேசுகிறார்கள். இறைவனுக்கு இவர்களிடமும் வேலையாக வேண்டியிருப்பது போன்ற பாவனையில் இறைவனை அணுகுகிறார்கள். இதில் மேல்மட்டம், கீழ்மட்டம் என்றெதுவும் இல்லை. எல்லா மட்டங்களிலும் யாசிக்கும் வேலை தான் நடக்கிறது.

ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக் காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். அந்த நாட்டை நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...என்று இடைவிடாமல் கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். நானே தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல

ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான். பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர் நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின் பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம் கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இதைக்கூட ஸ்ரீகிருஷ்ணர் இழிவாகச் சொல்லாமல் ஒரு தகவலைச் சொல்கிறாற் போலவே சொல்வது கவனிக்கத் தக்கது. பலனை எதிர்பாராமல் செயலைச் செய்யச் சொன்னவர், தன்னை அடையும் வழியில் கூட விருப்பைக் களையச் சொன்னவர், பெரும்பாலானோர் பலனைக் கருதி வழிபடும் விதத்தைக் குறைபாடாகச் சொல்லாமல் அப்படி லௌகீக எதிர்பார்ப்பில் செய்யும் வழிபாட்டுச் செயல்களுக்கு விரைவில் பலன் கிடைப்பதாகச் சொல்கிறார்.

ஏன் லௌகீக செயல்களில் விரைவில் பலன் கிடைக்கிறது தெரியுமா? கேட்டதில் பெரும்பாலானவற்றை இறைவன் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அப்போதும் போதாமல், மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிற்கிற மனிதனுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கிறார். அப்படித் தரவில்லையென்றால் இது மட்டும் கிடைத்திருந்தால் நான் மிகவும் திருப்தியுடன் இருந்திருப்பேன் என்கிற பொய்யான அபிப்பிராயத்திலேயே மனிதன் வாழ்ந்திருப்பான். ஆசைகளை எத்தனை தான் நிறைவேற்றினாலும் புதிது புதிதாக வேறு வேறு ஆசைகள் கிளம்புவதை உணர்ந்து, முடிவில்லாத இந்த ஆசைகள் காட்டும் ஆசையில் மனிதன் சலிப்படைந்து, ஒரேயடியாய் இதை விட்டொழித்து கடைத்தேறத்தான் விரைவில் பலன் தருகிறார்.

இது மனிதன் அனுபவித்து, அறிந்து தெளிய வேண்டிய சமாச்சாரம். தானாகத் தெளிவடைந்தால் ஒழிய இதை விட்டொழிக்க முடியாது. இது கடக்க வேண்டிய பாதையே ஒழிய, ஒதுக்கக் கூடிய பாதை அல்ல. கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களைப் பொக்கிஷம் போல சேர்த்து வைத்துக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்து “இதெல்லாம் மதிப்புடையவை அல்ல, சும்மா குப்பைகளைச் சேர்க்காதீர்கள்என்று பெற்றோர் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து எடுத்து வீசிப்பாருங்கள். ஆத்திரமடைந்து அழுது தீர்ப்பார்கள். ஆனால் வளர்ந்து விட்ட பிறகு அதைத் தானாகவே வெளியே வீசி விடுவார்கள். கிளிஞ்சல்கள் விஷயத்தில் குழந்தைகள் வளர்ந்து விடுபடுகிறார்கள். ஆனால் ஆசைகள் விஷயத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து பக்குவம் பெற்று விடுபடுவதில்லை. அதுவே பொதுவான உலக இயல்பாக இருக்கிறது.

மேலும் பிரார்த்தித்துப் பெறும் பொருள்களை மனிதனால் அளக்க முடிகிறது. அதனால் சீக்கிரம் கிடைத்ததாக மனிதன் உணர்கிறான். ஆனால் பொருளல்லாத மற்ற உயர்ந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் மனிதனால் அளக்க முடிவதில்லை. அதனால் அவற்றைப் பிரார்த்தித்துக் கேட்பவர்களும், கிடைத்தால் உண்மையாக உணர்பவர்களும் வெகு சொற்பமே.

பாதை நீளும்....

-          என்.கணேசன்
-          நன்றி: விகடன்

Monday, December 5, 2011

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16
ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம்.

வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற ஆங்கில மகாகவிஞன் வானவில்லைக் குறித்து எழுதிய ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. பலரும் மேற்கோள் காட்டும் குழந்தையே மனிதனின் தந்தை (The Child is father of the Man) என்ற பிரபல பொன்மொழி இந்தக் கவிதையில் இருந்தே எடுக்கப்பட்டது. அந்தக் கவிதையை அனேகம் பேர் அறிந்திருக்கலாம்.

The Rainbow


My heart leaps up when I behold  
A rainbow in the sky:  
So was it when my life began;  
So is it now I am a man;  
So be it when I shall grow old,
Or let me die!  
The Child is father of the Man;  
I could wish my days to be  
Bound each to each by natural piety.

அந்தக் கவிஞன் சொல்கிறான். “வானவில்லை வானில் பார்க்கும் போதெல்லாம் என் இதயம் சிலிர்க்கிறது. அப்படித் தான் என் வாழ்க்கை ஆரம்பித்த குழந்தைப் பருவத்தில் இருந்தது. வளர்ந்த பிறகு இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இதே போல் என் வயோதிக காலத்திலும் இருக்கட்டும். அப்படி இல்லா விட்டால் நான் இறந்தே போவேனாக! குழந்தையே மனிதனின் தந்தை! இயற்கையின் அழகை ரசிக்கும் பக்தனாக, என் வாழ்நாள் அனைத்திலும் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.

வளர்ச்சி என்பது மரத்துப் போவதல்ல. நம் நுண்ணிய உணர்வுகளையும் ரசனைகளையும் தியாகம் செய்வதல்ல. எனவே வளர்ந்து விட்டதால் அவற்றை இழந்து விட்டதாய் நியாயம் கற்பித்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் ஆகும். வளர வளர இழக்க வேண்டியது நம் முட்டாள்தனங்களையும், அறியாமையையும் தானே ஒழிய ரசனைகளை அல்ல.

மனோதத்துவ மேதை ஆல்ஃப்ரட் ஆட்லர் (Alfred Adler) அவர்களிடம் ஒரு பேட்டியாளர் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் மிகவும் சந்தோஷமான மனிதராக யாரை எண்ணுகிறீர்கள்?

ஆட்லர் அவர்கள் சுற்றுலாத் தளமான ஒரு மலைமுகட்டில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவரைச் சொன்னார். அந்தப் பணியாளர் தினமும் அதிகாலை அந்த மலையேறி மேலே சென்று மாலை கடைசி சுற்றுலாப் பயணியும் கீழே இறங்கிய பின் தான் கீழே வர வேண்டும். மலை முகட்டில் ஒரு சிறிய கேபினில் கெட்டில் வைத்து தேவைப்படுகிறவர்களுக்கு தேனீர் தயாரித்துத் தரும் பணி அவருடையது.

ஆட்லர் அங்கு சென்றிருந்த சமயம் பயணி ஒருவர் மிகவும் குளிர் அதிகமாக உள்ளதென்று சொல்லி அந்த கேபினிற்குள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். அந்தப் பணியாளர் அவரிடம் சொன்னார். “ஐயா இந்த மாலை நேர சூரிய கிரணங்கள் அந்த மேகங்களினூடே தெரிகிற அழகே தனி. கதவை சாத்தி விட்டால் அதை நீங்கள் கண்டு ரசிக்க முடியாமல் போய் விடும்.  நான் எப்போதும் அந்தக் காட்சியைத் தவற விடுவதே இல்லை

ஆட்லர் அந்த பேட்டியாளரிடம் சொன்னார். “அந்த கடுங்குளிரையும் மீறி தினமும் காண்கிற அந்தக் காட்சியை தவற விடாமல் ரசிக்கும் அந்த பணியாளர் தான் மிகவும் சந்தோஷமான ஆள் என்று நினைக்கிறேன். அவர் வாங்கும் ஊதியம் குறைவாகவே இருக்கலாம், அந்த வேலை அடுத்தவர் பார்வைக்கு சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சலிக்காமல் தினமும் ரசிக்க முடிகிற அவர் தான் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான மனிதர் என்று நினைக்கிறேன்”.

தினசரி வாழ்க்கையில் காணக் கிடைக்கிற அழகுகளை ரசிக்க மறந்து விடுவது உண்மையான எந்திரத்தனம். கிட்டத்தட்ட எந்திரங்களாய் மாறி விடுகிற போக்கு தான் வளர்ச்சி என்றால் நாம் வளராமலேயே இருப்பதே சிறந்தது. ஒரு அழகான கதையை, நெஞ்சை அள்ளும் கவிதையை, இனிமையான இசையை, குழந்தையின் மழலையை, இயற்கையின் அழகை ரசிக்க நேரமும் மனமும் இல்லாமல் ஓட்டும் வாழ்க்கையில் என்ன சிறப்பு இருக்கிறது? சதா சர்வ காலம் அதையே ரசித்துக் கொண்டிருப்பது போதுமானது என்று சொல்ல வரவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கையில் அனைத்திற்கும் அவற்றிற்குரிய கவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. ரசனை நம் வயிற்றை நிரப்பி விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால் வயிற்றை நிரப்புவதிலும் பொருள் சேர்ப்பதிலும் மட்டுமே வாழ்க்கை நிறைவு பெற்று விடுவதில்லை.

ஒருவர் ரசனை இன்னொருவருக்கு இருப்பதில்லை. இசையை ரசிக்கும் ஒருவர் அந்த அளவுக்குக் கவிதையை ரசிக்காமல் போகலாம். வர்ட்ஸ்வர்த்தை சிலிர்க்க வைத்த வானவில் அழகு இன்னொருவருக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போகலாம். ஆனால் அந்த நபர் ஒரு குழந்தையின் மழலையையும், குறும்பையும் ரசிக்க முடிந்தவராக இருக்கலாம். இப்படி ஒவ்வொருவர் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ரசனைகளே இல்லாமல் இருப்பவர்கள் குறைவு. இருக்கும் ரசிக்கும் திறனையும் இன்றைய எந்திர வாழ்வில் சிறிது சிறிதாக இழந்து விடுவது மனிதன் தன்னில் ஒரு பகுதியை மரணிக்க வைத்து விடுவது போலத் தான். அதை அனுமதித்து விடாதீர்கள்.

-என்.கணேசன்
நன்றி: வல்லமை

Thursday, December 1, 2011

அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 15
அடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். அதில் “ஒரு தாயிற்கும் தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் கூட அவர்கள் குழந்தைகளில் ஒன்றைப் போலவே எல்லா விதங்களிலும் இன்னொரு குழந்தை இருக்க முடியாதுஎன்று உயிரியல் விஞ்ஞானி ஒருவர் எழுதியிருந்தார். இறைவனின் சிருஷ்டிகளில் தான் என்னவொரு அற்புதம் இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி அற்புதம். கடந்து சென்ற கோடானு கோடி காலங்களிலும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் பிறந்ததில்லை. இனி வரப் போகும் கோடானு கோடி காலங்களிலும் உங்களைப் போன்ற மனிதன் பிறக்கப் போவதில்லை. இறைவனின் படைப்பில் நகல்கள் இல்லை. எல்லாம் தனித்தன்மை வாய்ந்த அசல்களே. ஆனால் மனிதர்கள் அசல்களாக வாழ்ந்து பிரகாசிப்பதற்கு பதிலாக நகல்களாக வாழ்ந்து பொலிவிழந்து போகும் கொடுமை தான் எல்லா இடங்களிலும் அதிகம் நடக்கிறது.

நம்மில் பெரும்பாலோருக்கு வெற்றிகரமான ஆட்களைப் போலவே நடந்து கொள்ள ஒரு உந்துதல் இருக்கிறது. முடிந்தால் அவர்களைப் போலவே ஆகி விடவும் முயற்சிக்கிறோம். (இந்த பொது மனப்பான்மையை உணர்ந்தே எல்லா விளம்பரங்களிலும் சினிமா நடிகர் நடிகையரைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புப் பொருட்களை வெற்றிகரமாக பெருமளவில் விற்பனை செய்கிறார்கள்).

சார்லி சாப்ளினை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் ஏழ்மையிலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்து உலகப்பெரும் பணக்காரராக ஆனவர் அவர். தெருக்கோடி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு காலப்போக்கில் சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சினிமா சந்தர்ப்பம் ஏழை சாப்ளினிற்கு கிடைத்தற்கரிய சந்தர்ப்பம். அதைத் தக்க வைத்துக் கொள்ள முதல் சினிமாவில் அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிரபல சிரிப்பு நடிகரைப் போலவே நடிக்க முயற்சி செய்தார் சார்லி சாப்ளின்.

அந்த சினிமா டைரக்டர் அதைக் கவனித்து சார்லி சாப்ளினை அழைத்து சொன்னார். “நீ அந்த பிரபல நடிகரைக் காப்பி அடிப்பது போல தெரிகிறது. எனக்கு அவரைப் போன்ற நடிப்பு தேவை இருந்திருந்தால் நான் அவரையே என் படத்தில் நடிக்க வைத்திருப்பேன். நீ உன்னைப் போல் நடி. அது தான் என் தேவை. இன்னொன்றையும் நினைவு வைத்துக் கொள். நீ என்ன தான் தத்ரூபமாக அந்த நடிகரைப் போல் நடித்தாலும் நீ அவரின் நகலாகவும், இரண்டாம் தரமாகவும் தான் இருக்க முடியும். நீ உன் நடிப்பில் தான் அசலாகவும், முதல் தரமாகவும் இருக்க முடியும்

அந்த அறிவுரை சார்லி சாப்ளினிற்கு பெரும் ஞானோதயத்தை ஏற்படுத்தியது. அவர் தன் இயல்பான நடிப்பையே அன்றிலிருந்து நடிக்க ஆரம்பித்தார். ஆங்கில சினிமாவில் அவர் ஒரு சகாப்தமாகவே இருந்தார். இன்றும் சினிமா வரலாற்றில் அவருக்குத் தனி இடம் இருக்கிறது. ஆனால் அப்படி அவர் இடம் பிடிக்கக் காரணம் அடுத்தவர் நகலாகும் முயற்சியை ஆரம்பக் கட்டத்திலேயே அவர் கைவிட்டது தான்.  

வெற்றியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. அவர்களிடமிருந்து கடைபிடிக்கவும் நிறையவே இருக்கின்றது. அதற்கென்று யாரும் அவர்களுடைய நகலாகி விட முயற்சிக்கக் கூடாது. ஒருவருடைய நகல் ஆக முயற்சிக்கையில் உங்களுடைய தனித்தன்மையை அழித்தே அதை சாதிக்க வேண்டி இருக்கிறது. அப்படி அந்த தனித்தன்மையை முழுமையாக அழிப்பதும் முடியாத காரியமே. கடைசியில் பாசாங்குகளும், நடிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தன்னம்பிக்கை நம்மை விட்டு விலக ஆரம்பிக்கின்றது. என்ன தான் முயற்சித்தாலும் அடுத்தவராய் மாறி விட முடிவதில்லை. இயற்கை அதற்கு ஒத்துழைப்பதில்லை. அரைகுறையாய் எப்படியோ மாறி நாம் உண்மையில் என்ன என்பதை அறியாமல் வாழ்வது கொடுமையிலும் கொடுமை. மற்றவரைப் போல ஆகவும் முடியாது, நம்மைப் போல இருக்கவும் முடியாது என்ற நிலைமையில் இருப்பது ஒரு நிம்மதியில்லாத நரகம் தான். அடுத்தவர் நகலாக மாற முயற்சிப்பதன் விளைவு இது தான்.

உலக வரலாற்றின் அனைத்து பெரும் சாதனைகளும் தங்கள் தனித்தன்மைகளை தக்க வைத்துக் கொண்டவர்களாலேயே நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. அடுத்தவரிலிருந்து வித்தியாசப்படுவது எல்லா சமயங்களிலும் வரவேற்கப்படுவதில்லை. ஏளனமும், கேலியும், கோபமும், வெறுப்பும் தான் பல நேரங்களில் சமகாலத்து சமூகத்தால் காட்டப்படுகின்றன என்ற போதும் அதில் பாதிக்கப்படாமல் அவர்கள் இருந்திருக்கிறார்கள். சமூகம் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்தெடுக்க முயலும் முயற்சி சிலரிடம் வெற்றி பெறுவதில்லை. அந்த சிலர் தான் சமூகத்தின் அடுத்த மாற்றத்திற்குக் காரணமாகிறார்கள். எனவே உங்கள் தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.

இப்படிச் சொல்கையில் ஒரு மிக முக்கிய கேள்வி பலர் மனதிலும் ஏற்படுவது இயற்கை. “என் தனித்தன்மை எது என்றே எனக்குத் தெரியவில்லையே. நான் அதை எப்படி அறிந்து கொள்வது?. இதற்குப் பதிலை ஒரு சிறிய கட்டுரையில் அடக்கிவிட முடியாது, ஒரு புத்தகமும் கூட போதாமல் போகும் என்றாலும் சில ஆலோசனைகள் உங்கள் தனித்தன்மையை அறிந்து கொள்ள ஆரம்ப விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும்.

பல நேரங்களில் நாம் நம்மை அறியாமல் இருக்கக் காரணம் வாழ்க்கையின் அவசர ஓட்டத்தில் நாம் எந்திரமாக மாறி விடுவது தான். எனவே அந்த ஓட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அது முடியா விட்டாலும் ஒரு நாளில் சிறிது நேரத்தையோ, இல்லை ஒரு வார இறுதியில் சில மணி நேரங்களையோ உங்களை அறிவதற்கு அல்லது அலசுவதற்கு ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள். எல்லாம் உண்மையில் திருப்திகரமாக இருக்கிறதா, மற்றவர்களில் இருந்து எங்கேயாவது வித்தியாசப்படுகிறீர்களா, இல்லை வித்தியாசப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று யோசியுங்கள். அந்த பதிலில் கூட உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம்.

சில சமயம் நம் தனித்தன்மை நம்மை விட மற்றவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவதும் உண்டு. நீங்கள் எதையாவது மற்றவர்களை விட வித்தியாசமாகவும், திறமையாகவும் செய்கிறீர்கள் என்று அவர்கள் நினைத்து பாராட்டினால் அதில் கூட உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம். வித்தியாசமாக எதையாவது செய்தோ, வித்தியாசமாக இருந்தோ அதில் ஒரு நிறைவை நீங்கள் உணர்ந்தீர்களானால் உங்கள் தனித்தன்மையின் நூலிழை உங்களுக்குக் கிடைக்கலாம்.

அப்படிக் கிடைப்பது நூலிழை தான். ஆனால் அதை வைத்து மீதியை நீங்கள் சிறிது சிறிதாக இழுத்துக் கொள்ளலாம். அப்படி உணரும் தனித்தன்மையைக் கௌரவியுங்கள். வளர்த்துக் கொள்ளுங்கள். மெருகேற்றுங்கள். அந்தத் தனித்தன்மை உங்களுக்கு மேலும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.

ஒரு முறை உங்கள் தனித்தன்மையை, திறமையை, வித்தியாசத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்து விட்டால் அடுத்தவரிடம் இருந்து கற்றுக் கொள்வீர்களே தவிர அவர்களின் நகலாக மாட்டீர்கள். அதற்கு அவசியமும் இருக்காது.

மேலும் படிப்போம்....

-என்.கணேசன்