சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 27, 2020

இல்லுமினாட்டி 38


க்ரிஷுக்குப் போன் செய்து எர்னெஸ்டோ சொன்னார். “க்ரிஷ். நீ செய்து கொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டு விட்டு உனக்கு அனுப்பி இருக்கும் லிங்கில் இருக்கும் தகவல்களைப் படி. ஒன்றரை மணி நேரம் தான் அது உனக்குப் படிக்கக் கிடைக்கும். அதன் பின் படிக்க அந்த லிங்க் வேலை செய்யாது. அதை டவுன்லோடு செய்யவும் முடியாது. நான் ஒன்றரை மணி நேரம் கழித்துக் கூப்பிடுகிறேன். அதற்குள் நீ படித்து முடி.”

க்ரிஷுக்குத் தலைகால் புரியவில்லை. லாப் டாப்பை எடுத்து மெயிலைப் பார்த்த போது அமானுஷ்யன் என்றொரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு அதுவழிச் சென்று படிக்க ஆரம்பித்தான். நேரம் போனதே தெரியவில்லை. எல்லாம் பிரமிப்பாக இருந்தது. இப்படியும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று தோன்றியது. அவன் விஸ்வத்திற்கு அடுத்தபடியாக பிரமித்த மனிதன் இந்த அமானுஷ்யன் தான். க்ரிஷ் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணி 28 நிமிடம் ஆகியிருந்தது. அவனுக்குப் படித்து முடிக்க இவ்வளவு நேரம் தான் ஆகும் என்று இல்லுமினாட்டி அனுமானிக்க முடிந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனைப் பற்றி இல்லுமினாட்டி எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறது என்று வியந்தான். இரண்டு நிமிடத்தில் லாப்டாப் ஸ்கிரீன் வெறுமையாகியது.

அடுத்த நிமிடம் எர்னெஸ்டோ போன் செய்தார். “என்ன க்ரிஷ் படித்து முடித்து விட்டாயா?” அந்த ஆளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

க்ரிஷ் பிரமிப்பு குறையாமல் சொன்னான். “விஸ்வத்தைப் போலவே இந்த ஆளும் என்னைப் பிரமிக்க வைக்கிறார் தலைவரே

எர்னெஸ்டோ புன்னகைத்தார். அமானுஷ்யன் குறித்த முழுக்கதையும் அவனுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருக்கவில்லை. முக்கிய சாராம்சத்தையும், சில முக்கிய இடங்களில் மட்டும் விரிவான நிகழ்வுகளையும் அவனுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதைப் படித்து அவன் பிரமிப்பு அடைந்தது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. அமானுஷ்யனைச் சொல்லும் போது விஸ்வத்தையும் அவன் மறக்காமல் சொன்னது தான் அவரை ஆச்சரியப்படுத்தியது. விஸ்வம், அமானுஷ்யன் வரிசையில் க்ரிஷும் சேர்க்க வேண்டியவனே என்று தோன்றியது.

எர்னெஸ்டோ சொன்னார். “விஸ்வம் தன்னுடைய பழைய மன உறுதியுடன் முயன்றால் ஓரளவு சக்திகளை அந்தப் போதை மனிதனின் உடலில் இருந்து கொண்டும் ஆறு மாதத்திற்குள் மீட்க முடியும் என்று கணக்குப் போடுகிறோம்.   அவனுடைய முதல் எதிரியாக நீ இருந்தாலும், உடனடியாக முடித்துக் கட்ட வேண்டியவனாக என்னைத் தான் நினைப்பான் என்று தோன்றுகிறது. பாதுகாப்பு விஷயத்தில் இல்லுமினாட்டியில் சின்னப் பலவீனம் கூட இருக்காது என்றாலும் விஸ்வம் உங்கள் நாட்டின் ரகசிய ஆன்மிக இயக்க குருவையும், உங்கள் மாநில முதலமைச்சரையும் கொன்ற விதம் என் பாதுகாப்பு அதிகாரிகளைப் பயமுறுத்துகிறது. அவன் சக்திகளை வேகமாகப் பயன்படுத்துபவன் என்பதால் உச்சக்கட்டப் பாதுகாப்பை என்னேரமும் எனக்குத் தந்தாக வேண்டியிருக்கும் என்று சொல்கிறார்கள். அந்த விதமான பாதுகாப்பு ஜெயில் வாசம் போலத்தான் என்பதால் நான் அது தொடர்ந்து இருக்க எப்போதும் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது நம் உளவுத்துறை என்னை மூன்று மாதத்திற்குள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறது. உச்சக்கட்டப் பாதுகாப்பு அல்லது அமானுஷ்யன் போன்ற ஒருவன் என் அருகிலிருக்கும் பாதுகாப்பு...”   

அவர் சில வினாடிகள் நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார். “க்ரிஷ். நான் சாகப் பயப்படவில்லை. நான் எல்லாச் சுகங்களையும் அனுபவித்தாகி விட்டது. இனிப் புதிதாக ஆசைப்பட்டுக் கிடைக்க எந்தப் பெரிய விஷயமும் பாக்கியில்லை. உடலில் ஒவ்வொரு அங்கமும் முந்தைய பலத்தில்  இல்லை. பல விஷயங்களில் சலிப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்த நிலைமையில் மரணம் எனக்குப் பெரிய விடுதலை தான். ஆனால் நான் இத்தனை காலம் தலைமை வகித்த இல்லுமினாட்டியின் அழிவையோ, அது உலகத்தை அழிப்பதையோ பார்க்க விரும்பவில்லை. அப்படி ஒரு நிலைமையில் இல்லுமினாட்டியை விட்டு விட்டுச் சாகவும் நான் விரும்பவில்லை. தகுந்த ஒருவன் கையில் இல்லுமினாட்டியை ஒப்படைத்து விட்டு, ஒரு நல்ல பாதுகாப்பான சூழலில் இல்லுமினாட்டியையும், உலகத்தையும் விட்டுப் போக விரும்புகிறேன். அதனால் அந்த அமானுஷ்யன் பாதுகாவலை நாடச் சம்மதம் தெரிவித்திருக்கிறேன். அவன் வரலாற்றைப் படித்த பிறகு, சாவதற்கு முன் அவனைப் போன்ற ஒரு ஆளை நேரில் பார்த்துப் பழகி விட்டுச் சாகலாமே என்ற ஆவல் தோன்ற ஆரம்பித்திருக்கிறது....”

அவன் கதையைப் படித்த யாருக்கும் அப்படித் தோன்றாமல் இருக்காது என்று க்ரிஷ் நினைத்தான். பெயரும் அவனுக்கு ஏற்ற மாதிரி தான் வைத்திருக்கிறார்கள். அமானுஷ்யன்!

நல்லது தலைவரே. அப்படியே செய்யுங்கள்என்றான் க்ரிஷ்.

எர்னெஸ்டோ சொன்னார். “ஆனால் அவன் இல்லுமினாட்டியின் அதிகாரத்தையோ, பலத்தையோ, பணத்தையோ காண்பித்து வரவழைக்க முடிந்தவன் அல்ல. அவன் மறைவில் இருந்து வெளியே வருவதில் அவனுக்கு நிறைய ஆபத்தும் இருக்கிறது. தலிபான் தீவிரவாதிகள் அவனைப் பழி தீர்க்கத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவன் குடும்பத்தினரும் அவன் புதிய வேலைகளை ஏற்றுக் கொள்வதை ஆட்சேபிக்கிறார்கள்.  அதையும் மீறி அவனை வரவழைக்க வேண்டுமென்றால் அவனிடம் தர்மம், நியாயம், மனிதம் என்று நீ பேசுவது போல் பேசினால் தான் எடுபடும்... இதற்கு முன் அவனிடம் உதவி பெற்றவர்களும் அப்படிப் பேசித்தான் அவனிடம் உதவி வாங்கி இருக்கிறார்கள். அதனால் நீ போய்ப் பேசினால் தான் வேலை முடியும் என்று நினைக்கிறோம்...”

க்ரிஷ் தயக்கத்துடன் கேட்டான். ”என்னால் முடியும் என்று நினைக்கிறீர்களா?”

எர்னெஸ்டோ சொன்னார். ”இல்லுமினாட்டியில் பேசியே ஜெயித்தவன் நீ. உனக்கு ஏன் சந்தேகம் வருகிறது?”

இல்லுமினாட்டியில் பேசி வென்றதில் தன் பங்கை விட மாஸ்டரின் பங்கும், அகஸ்டின் துறவியின் பங்கும் அதிகம் என்று இப்போதும் க்ரிஷ் நினைத்தான். அவனை அதிகம் சிந்திக்க விடாமல் எர்னெஸ்டோ சொன்னார். “அவன் தற்போதும் இருக்கும் விலாசத்தை நான் உனக்கு அனுப்புகிறேன். நீ உடனடியாகச் சென்று அவனைச் சந்திக்க வேண்டும்...”


ந்தச் சர்ச்சின் வரலாறு எனக்குத் தெரிய வேண்டும்என்று சொன்ன விஸ்வத்திடம் ஜிப்ஸி சொன்னான். “இந்த சர்ச்சுக்குப் பெரிய வரலாறு எதுவும் கிடையாது...”

சரி சிறிய வரலாறானாலும் பரவாயில்லை. சொல்விஸ்வம் அவனை விடுவதாக இல்லை.

ஜிப்ஸி சொன்னான். “பழங்காலத்தில் இது ஃப்ரீமேசனின் கோயிலாக இருந்தது. இன்று இல்லுமினாட்டியின் கோயில்களாகச் சொல்லப்படும் முக்கால்வாசிக் கோயில்கள் ஃப்ரீமேசன் கோயில்கள் தான் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். ஃப்ரீமேசன் இல்லுமினாட்டி இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே கொள்கை, சித்தாந்தம், நோக்கம் கொண்டது. பிற்காலத்தில் ஒன்றாகவே இணைந்து இல்லுமினாட்டி என்று அழைக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் வேறு வேறாகத் தான் இருந்தன. அந்தக் காலத்தில் இந்தக் கோயில் இங்கே மிகவும் பிரபலமாக இருந்தது. ஜெர்மானிய தத்துவ மேதை கதே ஃப்ரீமேசனாக இருந்தவர் என்றும், அவருடைய   "Masonic Lodge" என்ற பிரபல கவிதையை இந்தக் கோயிலில் தான் எழுதினார் என்றும் சொல்கிறார்கள். இங்கே நிறைய ரகசியச் சடங்குகள் ஹிட்லரின் ஆட்சிக்காலத்திற்கு முன்பு வரை நடந்திருக்கிறது. ஹிட்லர் தனக்குப் புரியாததையும், தன்னைப் பயமுறுத்துவதையும் ஒழித்துக்கட்டியே தீர்வது என்று செயல்பட்டதால் பாதிக்கப்பட்டதில்  இந்தக் கோயிலும் ஒன்று. இல்லுமினாட்டிக் கோயில் சர்ச் ஆக்கப்பட்டது. முன்பு இல்லுமினாட்டி ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுவர்களில் பைபிள் நிகழ்வுகள் வரையப்பட்டன.  வரைந்த ஓவியன் இல்லுமினாட்டிக்கு ஆதரவாளனாக இருந்திருக்க வேண்டும். பழைய ஓவியங்களின் மேல் புதிய ஓவியங்கள் வரைந்த அவன் முன்பிருந்த ஓவியங்களின் பிரமிடுக்குள் கண் இல்லுமினாட்டி சின்னத்தை மட்டும் முழுவதுமாக மறைக்காமல் லேசாக்கி புதிய ஓவியத்தில் கலந்திருப்பது போல் ஆக்கி விட்டான். அதைத்தான் நீ பார்த்திருக்கிறாய்.”

ஜிப்ஸி சொன்னதைக் கூர்ந்து கவனித்துக் கேட்ட விஸ்வம் “இப்போது இந்த சர்ச்சில் வழிபாடும் நடப்பதில்லை. யேசு கிறிஸ்துவின் சிலை உடைந்திருக்கிறது. ஏன்?”

”இந்த சர்ச் ஆரம்பத்தில் ஹிட்லருக்கு நெருக்கமான ஜெர்மன் எவாஞ்சலிகல் சர்ச் ஆதிக்கத்தில் வந்தது. சில காலம் அவர்கள் வழிபாடு நடத்தினார்கள். பின்   இது ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. அவர்களும் இங்கே சில காலம் வழிபாடு நடத்தினார்கள். பிறகு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் இந்த சர்ச்சை எடுத்துக் கொண்டார்கள். அவர்களும் சில காலம் தான் வழிபாடு நடத்த முடிந்தது. யாரும் தொடர்ந்து இங்கே வழிபாட்டை நடத்த விடாதபடி ஏதாவது பிரச்னைகள், விபத்துகள் எல்லாம் நடந்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பகுதியில் இருந்த கிறிஸ்தவர்கள் பலரும் இடம் மாறினார்கள். கடைசியில் யேசு சிலையும் உடைந்து போனதால் ஏதோ அபசகுனமாக நினைத்து மீதமிருந்த கிறிஸ்தவர்களும் இங்கே வருவதை நிறுத்தி விட்டார்கள். அதிலிருந்து இந்த சர்ச் கேட்பாரில்லாமல் கிடக்கிறது….”

ஜிப்ஸி சொல்லி முடித்தவுடன் விஸ்வம் சுற்றிலும் உள்ள ஓவியங்களை ஒரு முறை பார்த்தான். எல்லா ஓவியங்களிலும் மற்ற பகுதிகள் மங்கி பிரமிடுக்குள் கண் சின்னம் மட்டுமே ஒரு கணம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. ஏதோ இங்கே சரியில்லை என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது.

(தொடரும்)
என்.கணேசன்