சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 26, 2012

அதிசயம் ஆனால் உண்மை!தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு விதி அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1.        ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2.        இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3.        இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4.        இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5.        இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6.        ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7.        இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8.        இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9.        பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10.     லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life  பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை...இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது. 

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார்.  இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதியை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

-என்.கணேசன்

Monday, March 19, 2012

கண்ணதாசனின் வைரவரிகள்!கண்ணதாசன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது
அவரது கவிதைகள் தான். ஈடியணையற்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் அவர். ஆனால் அவரது கவிதைகளைப் போல அவரது மற்ற எழுத்துக்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவையே. அவரது உரைநடைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில வைரவரிகளை இங்கே தொகுத்து தந்துள்ளேன். அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை நறுக்குத் தெறித்தாற் போல அவர் சொல்லும் கருத்துக்களை நீங்களும் ரசியுங்களேன்!

-என்.கணேசன்


 • கல்லிலே நார் உரிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது? ‘அரசியல்என்பது என்னவாம்?

 • அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

 • ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான்.

 • நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

 • தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே!

 • அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன்.

 • சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது.

 • வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா?

 • மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

 • ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையிலே விட்டு விட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவனைக் குறை சொல்வது தான் ஜனநாயகம்.

 • கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்று தான் சொல்லி அனுப்பினார். “நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வாஎன்பதே அது.

 • வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன். ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.

 • அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

 • நாலு நாள் வளர்த்த கோழிக்குக் கூடத் தான் வாழும் வீடு எது என்பது தெரிகிறது. நாட்டுச் சொத்தை நாற்பது வருஷம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே!

 • ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.

 • இன்ன விஷயத்தைத் தான் ரசிப்பேன் என்று பிடிவாதம் செய்யும் ரசிகனுக்காக நான் எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால் இன்னும் நாலு பக்கங்களுக்கு மேட்டர் வேண்டுமென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிற கம்பாஸிடருக்காக எழுதியது மாதிரி தான் இருக்கும்.

 • தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்; ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

 • ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல என்று பொருள்.

 • உங்களுக்குச் சோறு போடுவேன்என்று சொல்வதன் மூலமே, உங்கள் பசியைத் தீர்க்கக்கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத் தான் உண்டு.
- கண்ணதாசன்

Monday, March 12, 2012

வெற்றிக்கு முன் வரும் தடைகள்!ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அவர்கள் இருவரும் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் குறித்த முகாம்களை நடத்தி வந்த போது அதற்குத் தேவையான நிஜக்கதைகள் நிறைய சேகரித்து வைத்திருந்தார்கள். அந்த முகாம்களில் கலந்து கொண்ட பலர் அந்த நிஜக் கதைகளைப் புத்தகமாகப் போட்டால் பலருக்கு உதவியாக இருக்கும் என்று சொல்ல, அதைப் புத்தகமாகப் போடும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. 1991ஆம் ஆண்டு இறுதியில் ஒரு புத்தகமாகத் தொகுத்து நியூயார்க் சென்று பதிப்பகங்களை ஒரு ஏஜெண்டின் துணையுடன் அணுகினார்கள். சிலர் அது போன்ற தொகுப்பு நூல் விலை போகாது என்றார்கள், சிலர் அந்தப் பெயரே சரியில்லை, படிக்கவும் ஆளிருக்காது என்றார்கள், சிலர் பரபரப்பு இல்லாத கதைகள் விற்பனையாகாது என்றார்கள். நேரடியாக சந்திக்க முடியாத பதிப்பகங்களுக்கு அந்த பத்தகங்களை தபால் மூலமாக அனுப்பிப் பார்த்தார்கள். அந்தப் பதிப்பகங்களும் அவற்றைப் பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர்கள் ஏஜெண்டும் கைவிரித்து விட்டார்.

விற்பனை ஆகாது, விலை போகாது என்று திரும்பத் திரும்பக் கேட்க நேர்ந்த ஜேக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்செனும் அந்த அபிப்பிராயங்கள் உண்மையல்ல என்று புரிய வைக்க வேறு வழி கண்டு பிடித்தனர். அந்த நூல் வெளியானால் கண்டிப்பாக ____ பிரதி/கள் வாங்குவேன் என்ற உறுதி மொழிக்கடிதம் ஒன்றை அச்சிட்டு அதில் பெயர், விலாசம் எல்லாம் எழுத இடம் விட்டு தங்கள் முகாம்களுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தந்தனர். 20000 புத்தகங்கள் வாங்க உறுதிமொழிக் கடிதங்கள் சேகரித்த பின் கலிபோர்னியாவில் நடந்த புத்தக விற்பனையாளர்கள் பேரவைக் கூட்டம் ஒன்றிற்குச் சென்று ஒவ்வொரு பதிப்பகத்திடமும் அந்த உறுதிமொழிக் கடிதங்களைக் காட்டிக் கூடப் பேசிப் பார்த்தார்கள். அங்கேயும் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.

130 மறுப்புகளுக்குப் பிறகு ஒரு சின்ன பிரசுரம் அவர்கள் புத்தகத்தைப் பிரசுரிக்க முன் வந்தது. புத்தகங்கள் வெளி வந்தவுடன் முதலில் அந்த உறுதிமொழிக்கடிதம் கொடுத்தவர்களுக்கு நூல்களை அனுப்பி அவர்கள் காசோலைக்காகக் காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே உறுதியளித்த எண்ணிக்கை புத்தகங்களை வாங்கினார்கள். படித்த ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. முதல் புத்தகம் எண்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி பெரும் சாதனை படைக்க அவர்களது மற்ற தொகுப்பு நூல்களும் பிரசுரமாகி பெரும் வெற்றியைக் கண்டன.  

எந்த ஒரு வெற்றியும் தடைகள் இல்லாமல் சந்திக்கப்படுவதில்லை. அதிலும் வெற்றி மகத்தானதாக இருக்கும் பட்சத்தில் அது சந்திக்கும் தடைகளும் பெரிய அளவிலேயே தான் இருக்கின்றன. தடைகள் ஒன்றிரண்டிலேயே மனம் உடைந்து நிறுத்தப்பட்ட முயற்சிகள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றில் எத்தனையோ இன்று வெற்றி கண்டவற்றை விட எத்தனையோ விதங்களில் மேன்மையாக இருந்திருக்கவும் கூடும். அதனால் எத்தனையோ பெரும் திறமைகள் உலகத்தின் பார்வைக்கே வராமல் போய் இருந்திருக்கின்றன என்பது தான் மிகவும் வருந்தத் தக்க உண்மை.

உண்மையான வெற்றி பிரபலத்திலும், எண்ணிக்கையிலும் இல்லை தான். ஆனால் திறமை வெளியே தெரியாமலேயே அமுங்கி விடும் போது உண்மையான தோல்வி ஏற்பட்டு விடுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதனால் உண்மையான திறமை கொண்டிருப்பவர்கள் திறமைக்கு இணையாக தங்களிடம் விடாமுயற்சியையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தடைகளை எதிர்பார்க்காமல் இருந்து விடக் கூடாது. அவற்றை வெற்றியின் பாதையில் கடக்க வேண்டிய மைல்கற்களாகவே கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்தக வெற்றி மட்டுமல்ல எல்லா மகத்தான வெற்றிகளும் இந்த நிஜத்தை அனுசரித்தே நிகழ்கின்றன. ஒரு ரஜனிகாந்த் ஆகட்டும், மைக்கேல் ஜேக்சன் ஆகட்டும், ஐன்ஸ்டீன் ஆகட்டும், ராமானுஜம் ஆகட்டும், இது போல ஒவ்வொரு துறையிலும் சிகரம் எட்டிய எவரே ஆகட்டும் இது போல பல தடைகள் கடந்து மட்டுமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். வெற்றி கிடைத்த பின் கூடும் கூட்டம், புகழ், செல்வம் எல்லாம் பிற்காலத்தையவையே. ஆரம்பத்தில் தனியர்களாகவே அந்த சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள்.

சிக்கன் சூப் கதைகள் வெளியிட அவர்கள் இருவரும் பட்ட ஆரம்ப சிரமங்களைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் சந்தித்த சில மறுப்புகள் நமக்கு அவமானமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் தாங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து முயல வைத்திருக்கிறது. தடைகள் வரும் போது அவர்கள் தயங்கி தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொண்டிருந்தால் இன்று அந்த வெற்றி சரித்திரம் விடுபட்டுப் போயிருக்கும். 

எனவே திறமை உள்ளவர்களே ஆரம்பத் தடைகளுக்குத் தயாராகவே இருங்கள். அவற்றை சந்திக்கும் போது மனம் தளர்ந்து விடாதீர்கள். இது உங்களுக்கு மட்டும் நிகழும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. சொல்லப் போனால் இதுவே நியதி. இதுவே பாதை. இந்த உண்மையை மனதில் அழுத்தமாகப் பதித்து எல்லாவற்றையும் தாக்குப் பிடித்து தொடர்ந்து முயலுங்கள். பல தடைகளைக் கடந்து கடைசியில் கிடைக்கும் வெற்றிக் கனியைப் போல் சுவையானது வேறொன்றும் இல்லை. உங்கள் திறமைகள் வெளிவருவதும், புதைந்து போவதும் வெளிப்புற நிகழ்ச்சிகளாலோ, மற்றவர்களாலோ அல்ல, அதை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலையால் மட்டுமே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

- என்.கணேசன்

Monday, March 5, 2012

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13
ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது.

மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. புனிதக் குரானின் வாசகங்களை உச்சரித்தபடி அவர்கள் செய்த தொழுகை முறையில் பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கு அவரைக் கவர்ந்தது. தொழுகை என்பது தினசரி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த விஷயமாக இருப்பது அவரை வியக்க வைத்தது.

ரயிலில் பயணம் செய்கையில் ப்ளாட்ஃபாரங்களில் கூட குறிப்பிட்ட நேரமானால் சிறிய பாய்களை விரித்து இறைவனுக்காக ஆறேழு நிமிடங்கள் ஒதுக்க முடிந்த இஸ்லாமியர்களின் சிரத்தையை அவரால் சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. ஒரு மதிய வேளையில் ஓட்டலுக்குச் சாப்பிடப் போன போதும் பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் தொழுகை நேரமானவுடன் தொழுகையை ஓட்டலிலேயே ஒரு ஓரத்தில் செய்ய ஆரம்பித்ததையும், இன்னொரு சமயம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது அனுமதி வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி தொழுகையை நடத்தியதையும் தன் நூலில் பால் ப்ரண்டன் குறிப்பிடுகிறார்.

தொழுகை என்பது வழிபாட்டுத்தலங்களில் என்று ஒதுக்கப்பட்டு விடாமல் அந்தந்த நேரங்களில் எந்த இடமானாலும் சரி அந்த இடத்தில் நடத்தப்படும் உறுதியான விஷயமாய் இருப்பது இஸ்லாத்தின் தனித்தன்மையாக பால் ப்ரண்டன் கண்டார். கெய்ரோவில் கண்டது போல் லண்டன், நியூயார்க் போன்ற மேலை நாடுகளில் காணமுடியாதென்பதை ஒப்புக் கொண்டார். இந்த வழிபாட்டு ஒழுங்குமுறையும், உறுதிப்பாடும் இஸ்லாத்திடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் நினைத்தார்.

எகிப்தில் இருந்த நாட்களில் இஸ்லாத்தையும் ஆழ்ந்து படித்த பால் ப்ரண்டன் அவர்களது தொழுகை முறையையும் கற்றுக் கொண்டு கெய்ரோ நகர பழமையான மசூதிகளில் தானும் தொழுதார். இறை சக்தி ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதிருந்த பால் ப்ரண்டனுக்கு அப்படித் தொழுவதில் எந்தத் தயக்கமும் வரவில்லை.

தன்னைப் பின்பற்றுவோர் மனதில் பெருமையான ஒரு இடத்தைப் பெற முகமது நபி தேவையற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் முனையவில்லை என்பதனை இஸ்லாத்தைப் பற்றி விரிவாகப் படிக்கையில் அவர் அறிந்தார். அரேபியாவில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கையில் சிலர் அவரிடம் சென்று “நீங்கள் ஏதாவது அற்புதம் நிகழ்த்தி நீங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று நிரூபியுங்கள்என்று வற்புறுத்திய போது முகமது நபி வானை நோக்கி பார்வையைச் செலுத்தியவராய் இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமேஎன்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.

இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், மேலும் அறிந்து கொள்ளவும் எகிப்து இஸ்லாமியர்களின் தலைவரும், இஸ்லாமிய கல்விக்கூடங்களின் தலைமைப் பேரறிஞருமான ஷேக் முஸ்தபா எல் மராகியை சந்தித்துப் பேசினார். இறைவன் ஒருவனே என்ற இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியக் கொள்கையில் ஆரம்பித்து எல்லா முக்கிய அம்சங்களையும் ஷேக் முஸ்தபா விளக்கினார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறொரு நபர் தேவையில்லை என்பதை இஸ்லாம் நம்புகிறது என்றார் ஷேக் முஸ்தபா.

இஸ்லாம் இறைவனை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறந்த மனத்துடன் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளும், புரிந்து கொள்ளலுமே மூட நம்பிக்கைகளையும், புனிதக் கோட்பாடுகளுக்குத் தங்களுக்குத் தேவைப்படும்படி பொருள் கொள்ளும் போக்கையும், அவ்வப்போது விலக்கி ஒரு மதத்தை கலப்படமற்ற புனிதத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தார் ஷேக் முஸ்தபா.

அவரிடம் நீண்ட நேரம் உரையாடிய போது பால் ப்ரண்டன் இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களைத் தயக்கமில்லாமல் கேட்டார். அவர் கேட்ட முக்கிய  கேள்விகளும் ஷேக் முஸ்தபா சொன்ன பதில்களும் இதோ-

ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

“குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பிற்காலத்திய சில இஸ்லாமிய மகான்களும், அறிஞர்களும் சில அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என்றாலும் அதை குரானில் சொன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில், செய்த நன்மைகளுக்கு வெகுமதியும், செய்த தீமைகளுக்குத் தண்டனையும் கிடைப்பது உறுதி என்பதை குரான் தெரிவிக்கிறது. அல்லா கூறுகிறார். “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.

“இஸ்லாத்தில் மசூதிகள் முக்கியமா?

“இல்லை. மக்கள் பிரார்த்திக்கும் இடங்கள் அவை, வெள்ளிக்கிழமை அன்று பிரசங்கங்கள் கேட்கச் செல்லும் இடங்கள் அவை என்றாலும் இஸ்லாத்தை பின்பற்ற மசூதிகள் அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய முடியும். சுத்தமான தரை இருந்தால் போதும்..... மசூதிகளைக் கட்டுவது பிரார்த்திப்பதில்  சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வளர்த்தவே. அந்த வகையில் தான் மசூதியில் பிரார்த்திப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”

“தினமும் ஐந்து முறைத் தொழுகை என்பது அதிகமில்லையா?என்று பால் ப்ரண்டன் கேட்ட போது ஷேக் முஸ்தபா பொறுமையாக பதில் சொன்னார்.

“இல்லை. தொழுகைகள் இறைவனைப் பிரார்த்திக்கும் கடமை மட்டுமல்ல, அவன் ஆன்மிக முறைப்படி தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும் அவசியமும் கூட. திரும்பத் திரும்ப இறைவனையும், இறைவனது செய்தியையும் சொல்லும் மனிதன் மனதில் இறை குணங்கள் தானாக ஆழப்படுகின்றன. உதாரணத்திற்கு இறைவனிடம் தொடர்ந்து கருணையை வேண்டும் மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்தவனாக இருப்பதால் தானும் கருணையுள்ளவனாக சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கிறான். எனவே தொழுகைக்காகக் குறித்து வைத்திருக்கும் நேரங்களில் தொழுகை செய்வது வற்புறுத்தப்படுகிறது. ஏதாவது அவசர சூழ்நிலை அந்த நேரத்தில் தொழுகை செய்வதைத் தடுக்குமானால் அந்த சூழ்நிலை முடிந்தவுடனேயே தொழுகை செய்ய வேண்டும்.

“நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?

“நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்....

“மெக்காவிற்கு செல்வதன் நோக்கம் என்ன?

“மசூதிக்கு செல்வது எப்படி உள்ளூர் சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கோ அப்படித்தான் மெக்கா செல்வது உலகளாவிய மனிதகுல சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கு. எல்லோரும் இஸ்லாத்தில் சரிசமமானவர்களே. அல்லாவை நம்பி மசூதியில் கூடினாலும் சரி, ஹஜ் யாத்திரையில் கூடினாலும் சரி அங்கு அவர்கள் சமமாகவே கருதப்படுகிறார்கள். மசூதியிலும் சரி யாத்திரையிலும் சரி ஒரு அரசனுக்கருகில் ஒரு பிச்சைக்காரன்  பிரார்த்தனை செய்யலாம். எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருமித்துப் போகும் இடமாகவும் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை அவரவர் நற்செயல்களால் மட்டுமே ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்

உண்மையான இஸ்லாம் உண்மையை அறிய ஊக்குவிப்பதாகவும், கண்மூடித்தனமான பின்பற்றுதலை கண்டிப்பதாகவும் ஷேக் முஸ்தபா கூறி புனித நூலில் வரும் ஒரு வாசகத்தையும் கூறினார். “இறைவன் சொன்னதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படும் போது அவர்கள் நாங்கள் எங்கள் தந்தையர் செய்ததைப் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்.... உங்கள் தந்தையரே அறியாதவர்களாக இருந்தால், வழிநடத்தப்படாதவர்களாய் இருந்தால் என்ன செய்வீர்கள்?” 


உண்மை தானே!

நீண்ட நேரம் தொடர்ந்த அவருடைய விளக்கங்களில் பால் ப்ரண்டனுக்கு இஸ்லாத்தை வித்தியாசமான புதுமையான கோணங்களில் அறியவும், முன்பு கொண்டிருந்த சில தவறான அபிப்பிராயங்களைக் களைந்து கொள்ளவும் முடிந்தது.

(தொடரும்)