சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, April 27, 2010

இணையற்ற சகோதரன் இலக்குவன்
சிறு வயது முதலே இராமனின் நிழல் போல இணைபிரியாதிருந்தவன் இலக்குவன். இது போன்ற சகோதர பாசத்தின் தீவிரம் எல்லாம் திருமணத்திற்குப் பின் பொதுவாகக் குறையும் என்பார்கள். திருமணத்திற்குப் பின்னும் குறையாமல் இருந்தது இலக்குவனின் சகோதர பாசம். தசரதன் கைகேயிக்குத் தந்த வரத்தால் இராமன் வனம் செல்லக் கிளம்பிய போது “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று சீதை இராமனுடன் கிளம்ப இலக்குவனும் இராமனுடன் செல்லத் தயாராகிறான்.

வனத்திற்குத் தன்னுடன் வர வேண்டாமென்று இராமன் சொன்னதற்கு இலக்குவன் நீயில்லாத இடத்தில் நான் எப்படி இருக்க முடியும் என்று அண்ணனிடம் கேட்கிறான். ”நீர் இருந்தால் தான் மீன் இருக்க முடியும். அதே போல் நானும் சீதையும் நீ இருந்தால் தான் இருக்க முடியும்” என்று கூறுகிறான்.

நீர் உள எனில் உள மீனும் நீலமும்
பார் உள எனில் உள யாவும்; பார்ப்புறின்
நார் உள தனு உளாய்1 நானும் சீதையும்
ஆர் உளர் எனில் உளேம் அருளுவாய் என்றான்.


திருமணமாகி அதிக நாட்கள் ஆகவில்லை. பிரியக் கூடிய காலம் சில நாட்கள் அல்ல. பதினான்கு வருடங்கள். அப்படி இருந்தும் மனைவியை விட்டு அண்ணனைப் பின் தொடர்ந்து இலக்குவன் காட்டுக்குச் சென்றான். அப்படிச் சென்றவன் ஒரு இளவரசனைப் போல் இருந்து விடவில்லை. அவன் செய்த சேவைகள் சாதாரணமானதல்ல. பர்ணசாலை அமைக்கவும், காட்டில் பாதைகள் ஏற்படுத்தவும் அவன் உழைத்ததைப் பார்த்து இராமனே வியந்து போனான்.

”தம்பி நீ என்னோடு இணைபிரியாமல் இருந்தவனாயிற்றே, சாலையமைத்தல் முதலியவற்றை எனக்குத் தெரியாமல் என்றைக்குப் பழகினாய்” என்று கண்ணீர் சொரிய இராமன் இலக்குவனைக் கேட்கிறான்.

என்று சிந்தித்(து) இளையவற் பார்த்(து) “இரு
குன்று போலக் குலவிய தோளினாய்!
என்று கற்றனை நீயிது போல்’ என்றான்:
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்


அது போன்ற பணிகள் மட்டுமல்லாமல் வனவாச காலம் முழுவதும் இராமனுக்கு இலக்குவன் ஒரு சேவகனாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இராமனைக் காண வந்த பரதன் குகனிடம் பேசிக்கொண்டிருந்த போது இலக்குவனைப் பற்றி குகன் பெருமையாகச் சொல்கிறான். “இராமபிரானும், சீதையும் உறங்கும் போது வில்லை ஊன்றிக் கொண்டு இரவெல்லாம் கண்களைக் கூட இமைக்காமல் காவல் காத்து நின்றான்” என்று தெரிவிக்கிறான்.

அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும், வீரன்
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பளவும் நின்றான்! இமைப்பிலன் நயனம் என்றான்.


’இமைப்பிலன் நயனம்’ என்ற இரு சொற்களில் இலக்குவனின் காவலைப் பற்றி கம்பன் சொல்கின்ற நயத்தைப் பாருங்கள்.

மாயப் பொன்மானைக் கண்டு சீதை ஆசைப்பட, இராமன் அதன் பின்னால் சென்று மாயப்பொன்மான் வேடத்தில் இருந்த மாரீசனை வில்லால் வீழ்த்தினான். விழும் முன் இராமன் குரலில் இலக்குவன் பேரைச் சொல்லி அலறிக் கொண்டு மாரீசன் வீழ்கிறான். சீதை அதை இராமனுக்கு வந்த ஆபத்தாகக் கருதி சென்று பார்க்க இலக்குவனைப் பணிக்கிறாள். சீதைக்குக் காவலாக இரு என்று சொல்லி விட்டுச் சென்ற அண்ணனின் வார்த்தைகளை மீற விரும்பாத இலக்குவன் அவளைத் தனியாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. அது தன் அண்ணன் குரலல்ல, இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான்.

அவனைப் போக வைக்க சீதை சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாள். ”அண்ணன் இறந்தால் என்னை நீ அடையலாம் என்று எண்ணித் தான் நீ செல்லாமல் இருக்கிறாய்” என்று குற்றம் சாட்ட நஞ்சாக வந்த வார்த்தைகளின் வலி தாங்காமல் இலக்குவன் போகிறான். போகும் போது ஒரு கோடு கிழித்து ‘எக்காரணத்தைக் கொண்டும் இந்தக் கோட்டைத் தாண்டி வெளியே வராதீர்கள்’ என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விட்டுத் தான் செல்கிறான். ஆனால் இராவணன் தன் சூழ்ச்சியால் அவளை அதையும் தாண்டி வர வைத்து கவர்ந்து செல்கிறான்.

செல்கின்ற போது போகின்ற தடத்தின் அடையாளத்திற்காக தன் ஆபரணங்களை வழியெல்லாம் வீசிக் கொண்டு சீதை செல்கிறாள். அந்த ஆபரணங்கள் சிலவற்றைப் பார்த்த இராமன் இது சீதையுடையது தானே என்று இலக்குவனிடம் கேட்ட போது இலக்குவன் கூறும் பதில் பிரசித்தமானது. “அண்ணியின் குண்டலங்களையோ, கேயூரங்களையோ நான் அறியேன். அவள் காலில் அணிந்திருந்த மெட்டிகளை மட்டும் நான் அறிவேன். தினமும் வணங்குவதால் என்னால் அவற்றை மட்டும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்”

இப்படிப் பட்ட உத்தமனான இலக்குவனைப் பார்த்து அந்த கொடிய வார்த்தைகளைச் சொல்ல சீதைக்கு எப்படி மனம் வந்தது? உண்மையில் இலக்குவன் மனது அவளுக்குத் தெரியாதா? இலக்குவன் சென்று சிறிது நேரத்திலேயே முனிவர் வேடத்தில் வந்த இராவணன் அவளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கேட்டவுடன் சொல்லும் போது கூட இலக்குவனைப் பற்றி இராவணனிடம் மிக உயர்வாகச் சொன்னவளாயிற்றே அவள். என்ன சொன்னால் கிளம்புவான் என்று தெரிந்து கிளப்புவதற்காகவே சொல்லி இருந்தாலும் அந்த வார்த்தைகள் அவனை எப்பாடு படுத்தி இருக்கும்.

அதைப் பற்றி யோசிக்க அசோகவனத்தில் சீதைக்கு நிறையவே நேரமிருந்தது. அப்படி யோசித்த போது தன் கணவன் தன்னை மீட்க வராததற்குக் கூட இலக்குவனிடம் அபாண்டமாகச் சொன்ன வார்த்தைகளாக இருக்குமோ என்று சீதை சந்தேகம் கொள்கிறாள். இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுமளவு அறிவில்லாதவளாக இருக்கிறாளே என்று அவளை இராமன் துறந்தே விட்டானோ என்று சீதை வருந்துகிறாள்.

என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ?


ஆனால் அண்ணியின் வார்த்தைகளை அப்படியே சொல்லி அண்ணன் மனதில் அவள் மேல் வெறுப்பு ஏற்படக் காரணமாக இருப்பவன் அல்லன் இலக்குவன்.

இராமனுக்கும் தன் தம்பி இலக்குவன் மேல் இருந்த பாசம் அலாதியானது. இந்திரசித்துடன் போர் புரிய இலக்குவனை அனுப்பிய போது அவன் மனதில் ஏற்பட்ட வேதனை முன்பு விஸ்வாமித்திரனுடன் இராமனை அனுப்பும் போது தசரதன் மனதில் ஏற்பட்ட வேதனையை ஒத்திருந்தது என்கிறான் கம்பன்.

வான் பெரு வேள்வி காக்க, வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான்.


(மகன் பாதுகாப்பு குறித்து பயந்த தசரதன் மகனுக்குப் பதிலாகத் தானே வரட்டுமா என்று விஸ்வாமித்திரனைக் கெஞ்சியது தெரிந்திருக்கலாம்.)


இந்திரசித்தின் நாகாஸ்திரத்தால் மூர்ச்சையாகி விழுந்த இலக்குவனைப் பார்த்து வால்மீகியின் இராமன் புலம்புகிறான். “தேடிப் பார்த்தால் சீதையைப் போன்ற மனைவி கிடைக்கலாம். ஆனால் இலக்குவனைப் போன்ற மகாவீரனான சகோதரன் எப்படிக் கிடைப்பான்?”

கம்பனின் இராமனும் மூர்ச்சையாகி விழுந்த இலக்குவனைக் கண்டு உருக்கமாகப் புலம்புகிறான். “என்னை ஓய்வெடுக்க வைத்து எனக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து நீ ஓய்வில்லாமல் இருந்தாயே. வெயில் என்று பார்க்காமல் காவலுக்கு நின்று களைத்துப் போனாயே. அந்தக் களைப்புக்காகத் தான் இப்போது உறங்குகின்றாயா? இந்த உறக்கத்தைத் துறந்து எழ மாட்டாயா?”

பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானகத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தித்
துயில்கின்றாயோ? இன்றிவ்வுறக்கம் துறவாயோ?


”தந்தை இறந்த போதும் தைரியமாக இருந்தேன். அரசபதவியைத் துறந்த போதும் கவலையற்று இருந்தேன். நீ இருப்பதால் நான் தனியன் அல்லேன் என்று இருந்தேன். இப்போது நீயும் போய் விட்டாய். எனக்குச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இனி நான் வாழ மாட்டேன். நானும் உன்னுடன் வருகிறேன்”

எந்தை இறந்தான் என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்
வந்தனென் ஐயா! வந்தனென் ஐயா! இனி வாழேன்


இலக்குவன் மூர்ச்சை தெளிந்து எழுந்த போது இராமன் தன் உயிரையே திரும்பப் பெற்றது போல உணர்ந்தான்.

போர் முடிந்து அயோத்தி திரும்பும் வரையில் தன் புதிய மண வாழ்க்கையையும், தன் அரண்மனை வாழ்க்கையின் சௌகரியங்களையும் தியாகம் செய்து அண்ணனின் காவலனாய், ஏவலனாய், நிழலாய் இருந்த இலக்குவன் இணையற்ற சகோதரனே அல்லவா?

-என்.கணேசன்

நன்றி: ஈழநேசன்

Thursday, April 22, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-29

ஆல்ஃபா அலைகளும் எளிய பயிற்சியும்
எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ்
ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.


அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)
நன்றி: விகடன்

Monday, April 19, 2010

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.


யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Wednesday, April 14, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-28

நான்கு வகை மின்னலைகள்
ஆழ்மன சக்திகள் சாத்தியம் என்பதையும், அவை கைகூடத் தடையாக இருக்கும் எந்த மனநிலைகளை நீக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். இனி அவை எப்படி சாத்தியப்படும் என்பதையும் பார்ப்போம்.

நம் மனநிலைகள் மூளையில் சிலவித மின் அலைகளை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகள் எலெக்ட்ரோசெபாலோக்ராஃப் (electrocephalograph - EEG) என்ற கருவியால் அளக்க முடிந்தவை. அவை ஒரு வினாடிக்கு எந்த அளவு ஏற்படுகின்றன என்பதை சிபிஎஸ் (Cycles per second –CPS) என்பதை வைத்து அளக்கின்றனர். அவை நான்கு வகைப்படும்.

பீடா அலைகள் (Beta Waves) – பதினான்கிற்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலைவரிசையிலேயே.

ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) - எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும், அரைத்தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும்.

தீட்டா அலைகள் (Theta Waves) – நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன.

டெல்டா அலைகள் (Delta Waves) – நான்கிற்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளிடம் காணப்படுகின்றன. யோகிகள், சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன.

இந்த நான்கு அலைகளில் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன.

அது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.

அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள் என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.

பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எனவே நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம்.
அந்த சக்தி மட்டத்தில் ஒன்றுபடுகிறோம். அந்த மட்டத்திற்கு நம் உணர்வு நிலையைக் கொண்டு போனோமானால் நாம் அறிய முடியாததில்லை. நம்மால் சாதிக்க முடியாததில்லை.

இதை வைத்தே “தத்துவமஸி” (நீயே அது), அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ப்ரம்மம்), என்ற வேத வாக்கியங்கள் எழுந்திருக்க வேண்டும். Know Thyself (உன்னையே நீ அறிவாய்) என்று பல மதங்களில் பிரதான அறிவுரையாகக் கூறுவதும் உன்னை நீ முழுவதுமாக அறிய முடியும் போது எல்லாவற்றையும் முழுமையாக அறிய முடியும் என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

எத்தனையோ விஷயங்கள் ஆழ்மன அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது மனிதர்கள் விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்கள் விஷயத்திலும் உண்மையாக இருப்பது தான் பேராச்சரியம்.

உதாரணத்திற்கு எறும்புகள் குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியைச் சொல்லலாம். ராணி எறும்பை எறும்புக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி எத்தனை தொலைதூரத்தில் வைத்தாலும் எறும்புகளின் கட்டுமானப்பணிகள் தடைபடாமல் கச்சிதமாக நடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஆனால் தொலைதூரத்தில் இருக்கும் அந்த ராணி எறும்பைக் கொன்று விட்டாலோ அந்த எறும்புகள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போய் விடுகின்றன என்பதையும் அங்குமிங்கும் அலைபாய்கின்றன என்பதையும் ஆராய்ச்சியில் அறிய முடிந்தது. எவ்வளவு தொலைவானாலும் சரி ராணி எறும்பு உயிருடன் இருக்கும் வரை அதனிடமிருந்து எப்படியோ தேவையான கட்டளைகள் மற்ற எறும்புகளுக்குப் போய் சேர்கின்றன என்பது மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா? அப்படி செய்திகள் பரிமாற்றம் ஆவது ஆழ்மன அளவிலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது.

நாம் முன்பு பார்த்த பல ஆழ்மன சாதனையாளர்களும் ஒருவித அரைமயக்க நிலைக்குச் செல்ல முடிந்த போது தான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதைக் கண்டோம். மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன பிராந்தியத்திற்குள் நுழையும் போது தான், ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் சஞ்சரிக்கும் போது தான், எல்லோரையும் பிணைக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்தியைத் தொடர்பு கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு, எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாகவும் அதை ஆகாய ஆவணங்கள் என்றும் எட்கார் கேஸ் சொன்னதை எண்ணிப்பாருங்கள். அதைப் படிக்கும் கலையை அறிந்து கொண்டால் எந்தத் தகவலையும் மிக எளிதாகப் பெற்று விடலாம் என்று அவர் சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் சஞ்சரித்து ஆழ்மன சக்திகளை அடைய முதலடி எடுத்து வைப்போமா?

மேலும் பயணிப்போம்.....

(தொடரும்)

நன்றி: விகடன்

Friday, April 9, 2010

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!


முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

வியாபாரி கேட்டான். “எப்படி?”

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”

“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள்
முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.

ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

Monday, April 5, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 27

தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்

ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை -

அவநம்பிக்கை
அவசரம்
அமைதியின்மை


அவநம்பிக்கை

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப் பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.


இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).


அவசரம்

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மைமனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.

இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

(தொடரும்)
நன்றி:விகடன்

Thursday, April 1, 2010

இருவகை மகிழ்ச்சிகள்மனிதன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியையே தேடுகிறான். மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் செய்கிறான். அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறான். மகிழ்ச்சியே அவன் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவன் மகிழ்ச்சியின் தேடலில் தன்னை இழந்து விடுகிறானா இல்லை, தன்னை இனம் கண்டு கொள்கிறானா என்பது அவன் தேடும் மகிழ்ச்சியின் தன்மையில் தான் இருக்கிறது.

கௌதம புத்தர் மகிழ்ச்சிகளை இருவகையாகப் பிரிக்கிறார். அதை வைத்தே மனிதன் அந்த மகிழ்ச்சிக்காக செல்ல வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும் என்கிறார். “எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நம் நல்ல குணங்கள் குறைந்து தீய குணங்களும், தீய விளைவுகளும் அதிகரிக்கின்றனவோ அந்த மகிழ்ச்சியை மனிதன் விலக்க வேண்டும். எந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் நற்குணங்கள் அதிகரித்து நல்ல விளைவுகளும் ஏற்படுகின்றனவோ அந்த மகிழ்ச்சிக்காக மனிதன் முயல வேண்டும்”

ஒரு குறிப்பிட்ட ஓய்வு மாலை நேரத்தில் மூன்று இளைஞர்கள் தனித்தனியாக மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து கோப்பை கோப்பையாக மது அருந்திக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி வாசலில் அமர்ந்து போகிற பெண்களை எல்லாம் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்தாடிக் கொண்டிருக்கிறான். இந்த மூன்று இளைஞர்களுமே நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் தான் இருக்கிறது.

ஆனால் புத்தரின் அளவுகோலை வைத்து மகிழ்ச்சியை எடை போட்டுப் பார்த்தீர்களானால் முதலாமவன் மகிழ்ச்சி அவன் உடலைக் கெடுக்கிறது, இரண்டாமவன் மகிழ்ச்சி அவன் மனதைக் கெடுக்கிறது, மூன்றாமவன் மகிழ்ச்சி அவனுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த ஒரு நாள் மகிழ்ச்சியால் பெரிதாக எந்த விளைவும் வெளியே தெரியாமல் போகலாம். ஆனால் மூன்று பேரும் தொடர்ந்து பல காலம் அந்த மகிழ்ச்சியிலேயே திளைத்தார்கள் என்றால் ஒரு குடிகாரனும், ஒரு போக்கிரியும், ஒரு கால்பந்தாட்ட வீரனும் உருவாகக் கூடும். மகிழ்ச்சியுடன் காலம் கழித்தவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது அந்த மகிழ்ச்சி எப்படி அவர்களுக்கு ஏற்பட்டது என்பதைப் பொறுத்து தான்.

ஹெர்மன் ஹெஸ்ஸே என்ற இலக்கியத்திற்காக நோபல் பரிசு வாங்கிய ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய “சித்தார்த்தா” என்ற நாவலின் கதாநாயகனான சித்தார்த்தன் தியான முறைகளையும், பல சூட்சும சித்திகளையும் அறிந்தவன். அவன் ஓரிடத்தில் நண்பன் கோவிந்தனிடம் விளையாட்டாகச் சொல்வான். “ தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசம் இருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன?அகத்தை விட்டுப் பறப்பது தானே! நான் என்ற வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே! உயிர்த் துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கின்ற தன் ஏமாற்றம் தானே! எருதுகள் பூட்டி வண்டியடித்து அலுத்தவனும் இதே வழியைத் தானே பின்பற்றுகிறான். ஏதோ ஒரு விடுதியில் நுழைந்து கொஞ்சம் பனை நீரையோ, புளித்த காடியையோ ஒரு மொந்தை போட்டு விட்டால் எல்லாத் துன்ப நினவுகளையும் அதில் மூழ்கடித்துக் கொண்டு விடுகிறான். அப்போது அவனுக்கு சுய உணர்வு போய் விடுகிறது. உயிர்த் துன்பங்களை அவன் அறிவதில்லை.”

அவன் நண்பன் கோவிந்தன் கூறுவான். “குடி வெறியன் ஏதோ ஆறுதல் பெறுவது சரி தான். சற்று நேர அமைதியும் ஓய்வும் கூட பெறலாம். ஆனால் போதை தெளிந்து பார்க்கும் போது எல்லாம் முன்னிருந்தபடியே அவன் பார்க்க நேரிடும். இதனால் அவன் நுண்ணறிவு பெற்று உயர்ந்து விடுவதில்லை. ஒருபடி கூட மேலேறி விடுவதில்லையே”

வாதத்திற்கு என்று பார்க்கும் போது இருவரும் தன்னிலை மறந்து மகிழ்ச்சி பெறுகிறார்கள் என்றாலும் முடிவில் ஒருவன் தன் பழைய நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்தும், மற்றவன் ஒரு படி தாழ்ந்தும் போகிறது தான் புத்தர் சுட்டிக் காட்டுவதும்.

எனவே மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது வாழ்வின் அர்த்தமும், தேவையும் கூட தான். ஆனால் மகிழ்ச்சியின் தரத்தை மட்டும் அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுங்கள். புத்தர் சொன்னது போல முடிவில் ஏதாவது விதத்தில் நீங்கள் உயர்வதும், பயன் பெறுவதும் மிக முக்கியம். அது தான் உங்கள் மகிழ்ச்சியின் வகையை அளக்க உதவும் சரியான அளவு கோல்.

இன்று அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் நாளைய துக்கத்தின் விதைகளாக இருந்து விட அனுமதிக்காதீர்கள். இன்றைய மகிழ்ச்சிகள் உங்கள் தரத்தை குறைத்து விடவும் அனுமதிக்காதீர்கள். அப்போது தான் உங்கள் மகிழ்ச்சிகள் உண்மையான மகிழ்ச்சிகளாக இருக்கும். அந்த மகிழ்ச்சிகள் நாளையும் நீடிக்கும். நாளை உங்களை பச்சாதாபத்தில் ஆழ்த்தாது.

இது தான் மகிழ்ச்சி என்று ஓரிரண்டை மட்டும் வைத்துக் கொண்டு கடைசியில் அலுப்படைந்து போகாதீர்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் உங்கள் தரம் தாழ்ந்து விடாதீர்கள். உங்கள் திறமைகளை நீட்டிக்கும் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள். வாழ்வின் புதிய புதிய பரிமாணங்களைக் கண்டு களியுங்கள். அந்தப் புதியனவெல்லாம் உங்களைப் புதுப்பிப்பதாகவும், புதிய மைல்கல்களை அடைய வைப்பனவாகவும் இருக்கட்டும்.

ஆறறிவை ஐந்து நான்கு என்று குறைத்து விடும் மகிழ்ச்சிகள் உண்மையில் மகிழ்ச்சிகளே அல்ல. மகிழ்ச்சியின் போர்வையில் உங்களைத் துன்பப் படுகுழியில் வீழ்த்த வரும் தூண்டில்கள் அவை. மகிழ்ச்சியில் ஆழ்ந்து கிடக்கும் தருணங்களில் கூட இந்த உண்மையை மறந்து விடாதீர்கள். தூண்டிலா, ஏணியா என்று மகிழ்ச்சியின் தருணங்களிலும் ஒரு முறை விழிப்புடன் கேட்டுக் கொண்டால் அது உங்களுக்குப் பெரிய பாதுகாப்பாகவும், வாழ்க்கைக்குப் பெரிய வழித்துணையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- என்.கணேசன்
- நன்றி ஈழநேசன்